சேது பூமி - சினிமா விமர்சனம்

07-02-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ராமநாதபுரம் மண்ணின் கதை என்று விளம்பரப்பட்டு திரைக்கு வந்திருக்கும் படம் இது. படத்தின் தலைப்பும் அதைத்தான் சொல்கிறது..!

ராமநாதபுரம் மாவட்டத்தின் முதுகுளத்தூர் நகரம்தான் கதையின் களம். ஹீரோவான தமன் சென்னையில் ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்கிறார். தமனை சீனாவுக்கு அனுப்ப அவரது நிறுவனம் முடிவு செய்கிறது. வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்பது தமனின் நீண்ட நாள் கனவு.
வீட்டாரிடம் சொல்லிவிட்டு சீனாவுக்குக் கிளம்புவோம் என்று நினைத்து சொந்த ஊரான முதுகுளத்தூருக்கு வருகிறார் தமன். இவரது அப்பாவான கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் அந்த ஊரிலேயே மிகப் பெரிய செல்வாக்கான நபர். ஆனால் மத வேறுபாடில்லாமல் அனைவரிடமும் பழகக் கூடியவர்.
தமனின் அம்மா அவரை வெளிநாட்டுக்கு அனுப்ப மறுக்கிறார். ஆனால் அப்பா சென்று வரட்டுமே என்று பச்சைக் கொடி காட்டுகிறார். இந்த நேரத்தில் திடீரென்று ஹீரோயின் சமஸ்கிருதி ஷெனாய், தமனின் கண்ணில் பட்டுவிட வழக்கம்போல அவருக்குள் காதல் பூக்கிறது.
பூத்த காதலை சொல்லிவிட ஹீரோயினின் பின்னாலேயே செல்கிறார் தமன். அவரோ பிறந்த உடனேயே தாயை இழந்தவர். தந்தையின் அரவணைப்பிலேயே வளர்ந்தவர் என்பதால் தான் திருமணமாகி சென்றுவிட்டால் தன் தந்தையை பார்க்க யாருமில்லையே என்கிற எண்ணத்தில் ‘வீட்டோடு மாப்பிள்ளை என்றால் கழுத்தை நீட்ட சம்மதம்’ என்கிற கொள்கையில் இருக்கிறார்.
ஒரு பக்கம் ஹீரோவின் நச்சரிப்பு அதிகமாகிக் கொண்டே போக.. விஷயத்தை வெளிப்படையாகச் சொல்லாமல் காதலை மறுக்கிறார் ஷெனாய். மேலும், மேலும் தமன் வற்புறுத்துகிறார். கடைசியில் காதல் கைகூடவில்லை என்கிற வருத்தத்திலேயே சீனாவுக்கு கிளம்ப ஆயத்தமாகிறார் தமன்.
இந்த நேரத்தில் ஏற்கெனவே அதே ஊரில் பணம் சம்பாதிப்பது மட்டுமே வேலை என்று இருக்கும் சேரன்ராஜுக்கும், தமனின் அப்பாவுக்கும் இடையில் ஆற்றில் மணல் அள்ளும் விவகாரம் தொடர்பாக மோதல் ஏற்படுகிறது. போலீஸின் சித்து விளையாட்டில் இருவருக்குள்ளும் முட்டிக் கொள்ள.. இடையில் தமன் தலையிடுகிறார். இதனால் சேரன்ராஜுக்கும் தமனுக்கும் இடையில் முன் விரோதம் அதிகமாகிறது.
தமன் வெளிநாடு செல்லும் தினத்தன்று சேரன் ராஜின் ஆட்கள் அவரை கொலை செய்ய முயற்சிக்க செய்தியறிந்து ஓடி வரும் ஹீரோயின் தன் கழுத்தில் அரிவாள் வெட்டினை தாங்கிக் கொண்டு ஹீரோவை காப்பாற்றுகிறார். நிலைமை உயிரையெடுக்கும் அளவுக்கு இருப்பதை அறியும் தமன், தனது சீன பயணத்தை ரத்து செய்கிறார். உள்ளூரிலேயே இருக்கலாம் என்று முடிவு செய்கிறார்.
ஹீரோயினின் தாய் மாமனான இயக்குநர் கேந்திரன் முனியசாமி, சேரன்ராஜிற்கு அடிமை போல் இருப்பவர். சேரன்ராஜை யாராவது தவறாகப் பேசினால் ஏன், எதற்கு.. யார்.. எவர்.. என்றெல்லாம் பார்க்காமல் அடித்துவிடுபவர்.. சேரன்ராஜுக்கும் தமனுக்குமான சண்டையில் முதலில் தமனை எதிர்க்கும் முனியசாமி.. கடைசியில் தமன் தனது அக்காள் மகளை காதலிப்பதை அறிந்து சந்தோஷப்படுகிறார். அவர்களை சேர்த்து வைக்க நினைக்கிறார்.
இந்த நேரத்தில் திடீரென்று கேந்திரன் முனியசாமி கொல்லப்படுகிறார். இந்தக் கொலைப் பழி தமன் குடும்பத்தினர் மீது விழுகிறது. தன் குடும்பத்தின் மீது விழுந்த பழியைத் துடைக்க கேந்திரனை கொலை செய்தவனை கண்டு பிடிக்க முயல்கிறார் தமன்குமார். கண்டறிந்தாரா.. இல்லையா.. என்பதுதான் மீதமான திரைக்கதை.
மண்ணின் கதை என்று சொல்லிவிட்டு தமிழகத்திற்கே பொதுவான விஷயங்களையே படத்தில் சம்பவங்களாக நிகழ்த்தியிருக்கிறார்கள். இந்தக் கதை பொதுவாக எல்லா ஊர்களிலும் நடப்பதுதான். வழக்கமான ஹீரோயிஸ கதையில் நெகிழ்ச்சியூட்டும் ஒரேயொரு கிளைக் கதையாக தாய் மாமனுக்கும், ஹீரோயினுக்குமான உறவு அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கேரக்டரில் நடித்திருக்கும் இயக்குநர் கேந்திரன் முனியசாமிதான் படத்தின் பலமே. அவருடைய கதை சொல்லும் இடமும், மாமாவுக்கும், அவருக்குமான நட்பும், பேச்சு வழக்கங்களும் இடைவேளைக்கு பின்னான திரைக்கதையில் சற்று சுவாரஸ்யப்படுத்தியிருக்கின்றன. பாராட்டுக்கள் இயக்குநர் ஸார்..
ஹீரோ தமனுக்கு இது மூன்றாவது படம். நடிப்பைக் கொட்டும் அளவுக்கு அழுத்தமான காட்சிகள் இல்லையென்றாலும் கோபம், ஆவேசம், சண்டை காட்சிகள், நடனம், காதல் காட்சிகளில் ஒரு ஹீரோவாக தன் பெயரை பதிவு செய்திருக்கிறார். சேரன் ராஜிடம்  “கொலை செய்தவன் யாருன்னு எனக்குத் தெரியும். நான் பார்த்துக்குறேன் விட்ரு..” என்று பொங்கிவிட்டு வரும் காட்சியில் அழுத்தமான நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.
ஹீரோயின் சமஸ்கிருதி ஷெனாய் முன்பே ‘காடு’ படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். இதிலும் அப்படியே.. மலையாளத்து பெண்டிருக்கு எங்கேயிருந்துதான் இப்படி அழகும், நடிப்பும் சேர்ந்து கிடைக்கிறதோ தெரியவில்லை.. ‘வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க வேண்டும்’ என்று தன்னை பெண் பார்க்க வந்த கூட்டத்திடம் தன்மையாக தலையைக் குனிந்த நிலையில் சொல்கின்ற காட்சியில் பட்டென்று மனதுக்கு நெருக்கமாகிறார்.
தமனிடம் காதல் இல்லை என்று சிறிவிட்டு பின்பு இருக்கும் காதலை மறைக்க முடியாமல் தவிக்கும் காட்சியிலும் அவரது கண்களும், உதடுகளுமே நடித்திருக்கின்றன. அதேபோல் தமன் மீது தனக்கு விருப்பமில்லை என்பதை நாகரிகமான மொழியில் சொல்லிவிட்டுப் போகும் காட்சியில் யதார்த்தமான நடிப்பைக் கொட்டியிருக்கிறார். இன்னும் அழுத்தமான காட்சிகள் கிடைத்திருந்தால் இவருக்கும் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். கிடைத்த இடங்களில் தனது பெயரை பதிவு செய்திருக்கிறார் ஷெனாய்.
கொஞ்சம் காட்சிகள் வந்தாலும் ரிலாக்ஸ் செய்ய வைத்திருக்கிறார் சிங்கம்புலி.  தமனின் அப்பாவைக் காட்டிலும், ஹீரோயினின் அப்பாவாக நடித்திருக்கும் ராஜலிங்கத்தின் நடிப்பு ரசிக்கக் கூடியது.
நகர்ப் புறங்களில் பணக்காரர்களும், போலீஸாரும் எப்படி கூட்டணி வைத்து கொள்ளையடிக்கிறார்கள் என்பதை இந்தப் படமும் தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறது.
முத்துராமலிங்கத்தின் ஒளிப்பதிவு குறிப்பிடத்தக்க ஒன்று. வானம் பார்த்த பூமி என்பதாலும் பாடல் காட்சிகளில் அதிகம் வெளிப்புறப் படப்பிடிப்பில் சுட்டெரிக்கும் வெயிலை கட்டுக்குள் வைத்து படமாக்கியிருக்கிறார்.
பாரதி – மோனிஷ் என்கிற அறிமுக  இரட்டை இசையமைப்பாளர்களின் இசையில் ‘ஏண்டி சண்டாளி…’ பாடலும், ‘நீயாச்சு நானாச்சு’ பாடலும் தாளம் போட வைக்கின்றன. இதேபோல, ‘என் தாய போல’ பாடலும், பாடல் காட்சியும் மனதைக் கவர்கிறது.
நீண்ட நாட்கள் கழித்து கிராமியத்தனத்தோடு வந்திருக்கும் படம். ஒரு கட்டத்திற்கு மேல் வழக்கமான தமிழ்ச் சினிமாவைப் போல மாறிப் போனதால் அதிகம் ஈர்க்கவில்லை. ஆனால் இடைவேளைக்கு பின்னான சில காட்சிகள் படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கிறது. படத்தின் கிளைமாக்ஸ் எதிர்பாராதது.. கொலைக்கான காரணமாக இயக்குநர் வைத்திருக்கும் திரைக்கதை நிஜமான சம்பவம்..! பாதி வசனத்திலேயே காட்சிகளை நகர்த்தியிருப்பதால்தான் அதிகம் ஒன்ற முடியவில்லை..!
இயக்கத்தைவிடவும் நடிப்பில்தான் இயக்குநர் கேந்திரன் முனியசாமி வெற்றி பெற்றிருக்கிறார்..! இன்னமும் இதேபோல் படங்களை எடுக்க தான் தயாராக இருப்பதாக இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஹபீப் சொல்கிறார். இதுவே அவரது பெருமைக்குரிய படம்தான். நிச்சயமாக அவர் சொல்லிக் கொள்ளலாம்.

0 comments: