மிருதன் - சினிமா விமர்சனம்

21-02-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஹாலிவுட் படங்களில் மட்டுமே இதுவரையில் கையாளப்பட்டிருந்த ஒரு விஷயத்தை முதன்முதலில் தமிழுக்கு அறிமுகம் செய்திருக்கிறார்கள் நடிகர் ஜெயம் ரவியும், இயக்குநர் சக்தி செளந்தர்ராஜனும்..!

ஊட்டியில் டிராபிக் போலீஸில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார் ஜெயம் ரவி. உடன் துணைக்கு கான்ஸ்டபிள் காளி வெங்கட். ஜெயம் ரவிக்கு ஒரு அன்பான தங்கை. பள்ளியில் படிக்கிறாள்.
எங்கோ கொண்டு செல்வதற்காக ஒரு உயர் வேதியியல் திரவம் இருக்கும் டின்னை லாரியில் ஏற்றுகிறார்கள். டின் தவறி விழுந்தவுடனேயே அதன் மூடி விழுந்து டின்னில் இருக்கும் திரவம் தரையில் பாய்ந்து தண்ணீர் மாதிரி ஓடுகிறது. இந்த வேலையைச் செய்பவர்கள் சட்டென்று டின்னைத் தூக்கி லாரியில் வைத்துவிட்டு வேறெதுவும் செய்யாமல் சென்று விடுகிறார்கள்.
இந்த உயர் வேதியியல் திரவத்தை யார் அருந்தினாலும் அது மூளையைப் பாதித்து மனித செல்களை அழித்து அதற்குப் பதிலாக மிருக செல்களை வளர்ச்சியடைய வைக்கும். இதனால் இந்த செல்களுடன் இருப்பவர்களை சோம்பி என்பார்களாம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எந்தவிதமான மனித நினைவுகளும், குணங்களும் இல்லாமல் ரத்தம் குடிக்கும் காட்டேரிகளை போலவே மாறிவிடுவார்கள்..!
இப்படிப்பட்ட அபாயகரமான அந்தத் திரவத்தை ஒரு நாய் வந்து குடிக்கிறது. அது வெறி நாயாக மாறி அந்த நிறுவனத்தின் வாட்ச்மேனை கடிக்கிறது. வாட்ச்மேன் இரவில் தன் வீட்டில் சாப்பிடும்போது திடீரென்று வெறியாகி தனது அம்மாவைக் கடிக்கிறார். அம்மா மருமகளைக் கடிக்கிறார். இப்படி மாறி, மாறி கடியாகி தங்களுக்குத் தாங்களே பலியாகிறார்கள்.
இன்னொரு பக்கம் ஓரிடத்தில் லட்சுமி மேனனை பார்த்தவுடன் அவர் மீது லவ்வாகிறார் ஜெயம் ரவி. அவருடைய அழகைவிடவும், மனிதாபிமான அவரது நடத்தையும் இதற்கு ஒரு காரணமாகிறது. ஆனால் லட்சுமி மேனனுக்கு ஏற்கெனவே ஒரு காதலர் இருப்பது தெரிந்தவுடன் உடனேயே லட்சுமியை தன்னுடைய முன்னாள் காதலியாக்குகிறார் ஜெயம் ரவி.
இந்த நேரத்தில் ஊட்டியில் ஒரே நாள் இரவில் ஊர் முழுவதும் இந்த சோம்பிக்கள் உருவாகத் துவங்க.. ஊரே துவம்சமாகிறது. அந்தக் காலைப் பொழுதில் ஜெயம் ரவியின் தங்கையும் திடீரென்று காணாமல் போயிருக்க.. ஜெயம் ரவி தங்கையையும் தேடுகிறார். ஆனால் அதற்குள்ளாக அவருக்கு கடமை அழைக்கிறது.
ஊர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு போட்டிருக்கிறார்கள். சோம்பிக்களாக மாறிய மக்களை பார்த்தவுடன் சுட்டுத் தள்ளும்படி போலீஸ் உயரதிகாரிகள் உத்தரவு கொடுக்க.. ஜெயம் ரவியும் கையில் பிஸ்டலுடன் வெளியில் வருகிறார். கண்ணில்படும சோம்பிக்களை சுட்டுத் தள்ளுகிறார்.
இந்த வைரஸுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள் மருத்துவர்கள். இந்தக் குழுவில் லட்சுமி மேனனும் உண்டு. இந்தக் குழுவுக்கு பாதுகாப்பு கொடுத்து அவர்களை கோவைக்கு அழைத்துச் செல்ல முடிவெடுக்கிறார்கள் ஜெயம் ரவி.
பல சோம்பிக்களை பரலோகத்திற்கு அனுப்பிவிட்டு ஒரு வேனில் மருத்துவர்களை அழைத்துக் கொண்டு கிளம்புகிறார் ஜெயம் ரவி. வழியிலேயே லட்சுமி மேனனின் வீட்டில் கடத்தி வைக்கப்பட்டிருந்த தனது தங்கையையும் மீட்கிறார். அவளையும் கூட்டிக் கொண்டு செல்லும்போது மேட்டுப்பாளையத்தில் ஊருக்குள்ளேயே நுழைய முடியாமல் போகிறது. அந்த ஊரே சோம்பிக்களால் பாதிக்கப்பட்டு கிடக்க.. படாதபாடுபட்டு அவர்களிடத்தில் இருந்து தப்பித்து கோவை வந்து சேர்கிறார் ஜெயம் ரவி.
ஆனால் கோவை மருத்துவமனைக்குள் நுழைய முடியாத அளவுக்கு வெறி பிடித்த சோம்பிக்களின் அங்கே கூட்டம் நிற்கிறது. தாங்கள் கையில் வைத்திருக்கும் மருந்து பொருட்களை வைத்து அந்த லேப்பில் மருந்து தயாரிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருப்பதால் எப்படியாவது மருத்துவமனைக்குள் நுழைந்துவிடலாம் என்று பார்க்கிறார் ஜெயம் ரவி. இந்த முயற்சியில் வெற்றி பெற்றார்களா..? சோம்பிக்களை முறியடித்தாரா..? என்பதுதான் இந்தப் படத்தின் பிற்பாதியில் இருக்கும் சுவையான திரைக்கதை.
அச்சு அசலாக ஹாலிவுட் பாணியில் அதே கேரக்டர் ஸ்கெச்சுடன் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். எப்போதும் இது போன்ற ஹாலிவுட் படங்களில் உணர்ச்சிப் பெருக்கிற்கு ஒரு செண்டிமெண்ட் கதை இருக்கும். சின்னப் பொண்ணு அல்லது பையன் நிச்சயம் இருப்பார்கள். அப்போதுதான் குழந்தைகளுக்கும் இந்தப் படத்தைப் பார்க்க ஒரு ஆர்வம் இருக்குமாம். அந்தத் தேடுதல் வேட்டையில் கணக்கில்லாமல் ஹீரோ மல்லாடுவார். கடைசியில் ஜெயிப்பார். கூடவே ஒரு குடும்பக் கதையும் இருக்கும். அதில் சென்ட்மெண்ட் காட்சிகளும் அமோகமாக இருக்கும். இதெல்லாம் தப்பில்லமல் இந்தப் படத்திலும் இருக்கிறது.
முதல் பாராட்டு ஜெயம் ரவிக்கு. இந்தக் கதையை வேறு யாரிடமாவது சொல்லியிருந்தால், அவர் இதனை ஏற்றுக் கொண்டிருப்பாரா என்பது நிச்சயம் சந்தேகம்தான். படத்துக்கு படம் புதிய கதையில், புதிய கேரக்டரில் நடிக்க வேண்டும் என்கிற புதிய கொள்கையின்படி ஜெயம் ரவி கையிலெடுத்த இந்த வாய்ப்பிற்கு ஏற்ற பலன்தான் இப்போது தியேட்டர்களில் கிடைத்து வருகிறது.
முற்பாதியில் பாசமான அண்ணனாகவும், போலீஸுக்குள்ளேயே இருந்து கொண்டு அதன் கசடுகளில் இருந்து வெளிவர முடியாமல் தவிக்கும் சின்னச் சின்ன விஷயங்களைக்கூட கச்சிதமாகச் செய்திருக்கிறார் ஜெயம் ரவி. கட்சிக்காரனை அடித்தவுடன் தன்னைக் கடந்து செல்லும் அமைச்சரை பார்த்து பயத்துடன் ‘ஸாரி’ சொல்லும் அந்த ஒரு காட்சியே இதற்கு சான்று..!
பிற்பாதியில் அவருடைய வெறித்தனமான ஆட்டத்திற்கு கையில் கிடைத்த துப்பாக்கியும், சண்டை பயிற்சியும் கை கொடுக்க.. படமாக்கியிருக்கும் விதத்தில் அட்டகாசமான ஹீரோயிஸ படத்தை பார்த்த திருப்தி கிடைக்கிறது.
இத்தனை கூட்டத்தை எங்கேயிருந்து கொண்டு வந்தார்கள்..? ஊட்டியின் பரபரப்பான ஏரியாவில் எப்படி இந்தக் கலவரத்தையும், ஊரடங்கு சட்ட நிலவரத்தையும் படமாக்கினார்கள் என்று தெரியவில்லை. அதேபோல் மேட்டுப்பாளையத்தில் இரவு நேர கலவரத்தை படமாக்கியிருக்கும்விதத்திற்கும் இயக்குநருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் ஒரு ‘ஜே’ போட வேண்டும்..!
இறுதிக் காட்சியே அரை மணி நேரம் நீடிக்கிறது. இதற்குள் இருக்கும் பரபரப்பு,.. டென்ஷன்.. சென்டிமெண்ட் என்று அனைத்தையும் கலந்து இம்மியளவுகூட செல்போனை குனிந்து பார்க்க முடியாமல் செய்திருக்கிறார் இயக்குநர். இவ்வளவு பெரிய கூட்டத்தை கூட்டி அவர்களை சமாளித்து எடுக்க நினைத்ததை கச்சிதமாக அதே உணர்வுடன் எடுத்திருக்கும் இயக்குநர் சக்தி செளந்தர்ராஜனை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை..
தற்கொலை முயற்சியாக தன்னைத் தானே காவு கொடுத்துவிட்டு லட்சுமியை மீட்க வரும்போது ஜெயம் ரவியின் நடிப்பும், அவரையும் சோம்பி தாக்கிய பின்பு ஒவ்வொரு ஸ்டெப்பிலும் அவர் காட்டும் ஆக்சன்களும் பலே.. அதற்கு மேல், கிட்டத்தட்ட படம் பார்க்கும் ரசிகனையும் சேர்த்தே சோம்பியாக்கிவிட்டார்..!
லட்சுமி மேனன் வழக்கம்போல.. கொஞ்சம் மெருகேறியிருக்கிறார். இனிமேல் சின்னப் பொண்ணு கேரக்டரில்கூட அவர் நடிக்க முடியாது. நிரம்பவும் மெச்சூரிட்டியாக இருக்கிறார். “எதுக்கு என்னை காப்பாத்தின..?” என்று கிளைமாக்ஸில் அவர் கேட்கும் கேள்வியும், கிடைக்கின்ற பதிலுமே தியேட்டரில் இந்தப் படத்திற்கு கூடுதல் போனஸாக ‘அச்சச்சோ’ என்று உச்சுக் கொட்ட வைக்கிறது..!
காளி வெங்கட்டின் அவ்வப்போதைய சின்னச் சின்ன கமெண்ட்டுகளில் நகைச்சுவை மிளிர்ந்தாலும் ஒரேயொரு காட்சியில் வரும் ஸ்ரீமன் அனைவரையும் தூக்கி ஓரம்கட்டிவிட்டார். பெஸ்ட் பெர்பார்மென்ஸ்.. அந்தச் சின்னப் பொண்ணின் பேச்சு ஈர்ப்பாக இருக்க.. அதன் பரிதாபமான முடிவும், “எங்கண்ணன் பர்ஸ்ல ஒரு போட்டோ இருக்கு. அந்தப் போட்டோல இருக்குறவங்கள எங்கண்ணனுக்கு ரொம்பப் புடிக்கும்..” என்று கதையை லட்சுமி மேனனிடம் சொல்லும்போதும் அந்தச் சின்னப் பொண்ணு சொல்லும்போது எதிர்பார்த்த அந்த பீலிங்கும் கிடைத்திருக்கிறது..!
படத்தில் ரசிகர்களின் பெருத்த கை தட்டல் கிடைத்த காட்சி, ஆர்.என்.ஆர்.மனோகர் வேனுக்குள் இருந்தபடியே ஜெயம் ரவியிடம், "இதுக்குத்தான் கொஞ்சம் பொலிட்டிக்கல் கனெக்சனும் வேணும்கிறது.." என்று சொல்கின்ற காட்சிதான்..!
பின்னணி இசைக்கு இசையமைப்பாளர் பெரும்பாடுபட்டிருக்க வேண்டும். நொடிக்கு நொடி காட்சியமைப்புகள் மாறுவதால் ஒலியமைப்பு ஏற்றமும், இறக்குமுமாகவே கடைசிவரையில் நீடிக்கிறது. அதேபோல் ஒலி வடிவமைப்பாளருக்கும் இந்தப் படத்தில்தான் அதிக வேலை இருந்திருக்க வேண்டும். அதிகமான துப்பாக்கி சப்தங்களை இந்தத் தமிழ்ப் படத்தில்தான் பதிவு செய்திருப்பார்கள் என்று நினைக்கிறோம்.
லாஜிக்கெல்லாம் இது போன்ற கற்பனை உலக படங்களில் அதிகம் பார்க்க தேவையில்லை என்பதால் அதையெல்லாம் விட்டுவிடுவோம்.. இந்தியா போன்ற ஜன நெருக்கடி மிகுந்த இடங்களில் சோம்பிக்களாக உருவாவது மிக எளிது. சீக்கிரமாகவே அது நடந்தேறும் என்பதால்தான், இத்தனை கூட்டமும் ஒரே நாளில் உருவாகிவிட்டதாக இயக்குநர் வைத்திருக்கிறார் போலும்..! மேட்டுப்பாளையத்திலும், கோவையிலும் ஒரேயொரு போலீஸ்கூட இல்லை போலும். அவர்களுடைய பங்களிப்பும், அரசுத் துறையின் பணியும் என்ன என்பதே தெரியவில்லை. ஹீரோயிஸ படம் என்பதால் எல்லாவற்றையும் ஜெயம் ரவியின் தோளிலேயே சுமத்திவிட்டார்கள். பாவம்.. அவரும் எவ்வளவுதான் தாங்குவார்..? 
இந்த சோம்பிக்களின் கதை போல் உலகத்தில் எங்கேயுமே நடக்க வாய்ப்பில்லை என்பதால்தான் இது போன்ற படங்கள் அதிகமாக விரும்பி பார்க்கப்படுகின்றன. இந்த மெண்ட்டாலிட்டியை மனதில் வைத்துதான் பேய் படங்களெல்லாம் சக்கையாக வசூலை குவிக்கின்றன. இப்போது ‘பேய்’ போய் ‘சோம்பி’ வந்திருக்கிறது. இன்னும் எத்தனை சோம்பிக்கள் வந்தாலும் எடுக்க வேண்டிய விதத்தில் எடுத்தால் அத்தனையும் ஹிட்டாகும். ஏனெனில் பாமர ரசிகனின் கற்பனைக் குதிரையை ஒரு இயக்குநர் தட்டிக் கொடுத்து அவனை இட்டுச் சென்றால்தான் அது கனவுலகம்.. இந்தக் கனவுலகத்தை இப்போது இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன் செம்மையாக செய்திருக்கிறார்.
அதனால்தான் கோவையிலிருந்து ‘சோம்பி’ இப்போது சென்னைக்கு வண்டியேறிருப்பதோடு நிறுத்தியிருக்கிறார்கள். ‘சோம்பி’ சென்னை வந்தால் சென்னை என்ன ஆகும் என்பதை காண ‘மிருதன் பாகம்-2’ வரையிலும் நாமும் காத்திருப்போம்..!

1 comments:

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே படம் பார்த்துட்டு வெளியே வாறவிங்க பக்கத்துல போகலாமா வேணாமான்னும் சொல்லிருங்க.