கணிதன் - சினிமா விமர்சனம்

28-02-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

குற்றங்களின் ஒவ்வொரு வகையாக பார்த்துப் பார்த்து தமிழ் சினிமாவில் கதை செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் போலி கல்விச் சான்றிதழ்களால் பாதிக்கப்படுபவர்கள் பற்றி எடுக்கப்பட்டிருக்கும் படம் இது.

ஹீரோ அதர்வா பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு அந்த வேலைக்குப் போகாமல் தன்னுடைய விருப்பதற்கேற்ப ஒரு பத்திரிகையாளராக வேண்டி தற்போதைக்கு ஸ்கை டிவியில் பணியாற்றி வருகிறார். ஆனால் இவருடைய லட்சியம் பி.பி.சி.யில் பணியாற்ற வேண்டும் என்பதுதான். இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
ஒரு நைட் கிளப்பில் ஸ்டிங் ஆபரேஷனின்போது ஹீரோயின் கேத்தரின் தெரசாவை பார்க்கிறார் அதர்வா. பி.பி.சி.யில் பணியாற்றுவதாக உடன் வரும் நண்பன் உதார்விட.. அதையே கேத்தரின் உண்மை என்று நம்பி அதர்வாவைக் காதலிக்கத் துவங்குகிறார். இவரும்தான்.. ஆனால் கடைசியில் பார்த்தால் கேத்தரின் ஸ்கை டிவியின் ஓனரான மனோபாலாவின் மகள் என்பது தெரிகிறது.
உண்மை தெரிந்ததும் அதர்வா தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைத்து வருந்தும் கேத்தரினை, தன்னுடைய பி.பி.சி. கனவைச் சொல்லி சமாதானம் செய்கிறார் அதர்வா. பி.பி.சி.யில் இருந்து மூன்றாவது முறையாக நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வருகிறது. செல்கிறார். தேர்வாகிறார். தனது உண்மை சான்றிதழ்களை அவர்களிடத்தில் சோதனைக்காக கொடுத்துவிட்டு வருகிறார். கூடவே சோதனையும் வந்துவிடுகிறது.
அதர்வா தன்னுடைய சான்றிதழ்களை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் காட்டி அதன் மூலமாக சொந்தமாகத் தொழில் துவங்க கடன் பெற்றதாகவும், அந்தக் கடனை அவர் திருப்பித் தராமல் தலைமறைவாகிவிட்டாரென்றும் சொல்லி காவல்துறை அவரை கைது செய்கிறது. இந்தத் திடீர் திருப்பத்தால் அவரது குடும்பமே அதிர்ச்சியாகிறது.
தான் எந்த வங்கியிலும் கடன் வாங்கவில்லை என்று அதர்வா சொன்னாலும் அவருடைய புகைப்படம், வீட்டு முகவரி, கையெழுத்து என்று அனைத்துமே பக்காவாக வங்கியில் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதால் போலீஸ் சொல்வதுதான் உண்மை என்றாகிறது. அதர்வா மட்டுமல்ல.. வேறு சில அப்பாவிகளும் இதில் மாட்டிக் கொள்கிறார்கள். இதில் ஒருவர் ஜெயிலுக்கு போகும் வழியில் போலீஸ் வேனில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள.. இது மீடியாவில் பெரும் பரபரப்பாகிறது.
நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று விடுதலையாகி வெளியே வரும் அதர்வா.. உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க திட்டம் தீட்டுகிறார்.. அதேபோல் இந்த நவீன ரக கொள்ளைகளை செய்து வரும் கும்பலும் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்க எண்ணுகிறது. இதில் யார் வென்றது..? யார் தோற்றது..? என்பதுதான் இரண்டாம் பாதியின் சுவையான திரைக்கதை.
அதர்வா சென்றடையத் துடிக்கும் ஹீரோயிஸத்திற்கேற்ற கதை. தனி ஒருவனாக துப்பறியும் வேலையில் இறங்கி அதீ தீவிர சாகஹசம் செய்யாமல் புத்திசாலித்தனமாக திட்டமிடுதலின் மூலமாகவே தனது இலக்கை அடைய முயற்சித்திருக்கிறார். தன் மூலமாக ஒரு சாதாரணமான மிடில் கிளாஸ் மாதவனை திரையில் காண்பித்திருக்கிறார்.  அந்த வகையில் அதர்வாவுக்கு ஒரு ‘ஜே’ போட வேண்டும்..!
கேத்தரின் தெரசா அழகுக்கும், நடனத்திற்கும், கிளாமருக்கும் ஊறுகாய் போல பயன்படுத்தப்பட்டிருக்கிறார். இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் அம்மணி..!
அதர்வாவின் அப்பாவான ‘ஆடுகளம்’ நரேனின் பரிதவிப்பும், போலீஸ் ஸ்டேஷனில் அவர் படும்பாடும்.. இனிமேல் ஜென்மத்திற்கும் போலீஸ் ஸ்டேஷன் பக்கமே போகக் கூடாது என்று நடுத்தர வர்க்கத்தினரை முடிவெடுக்கச் செய்யும் அளவுக்கு இருக்கிறது. தத்ரூபம்..! அம்மாவும், பிள்ளையும் அப்பாவுக்கு போக்குக் காட்டும் காட்சிகள் கலகலப்பு..!
அதர்வாவின் நடனத் திறமை ‘யப்பா சப்பா’ பாடலில் தெறிக்கிறது. பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவும், இசைக்கேற்ற நடனமும், இவைகளுக்கேற்ற ஒளிப்பதிவுமாய் காட்சிகளில் இருந்து கண்ணை அகற்ற மறுக்கும்விதமாய் படமாக்கியிருக்கிறார்கள். பாராட்டுக்கள்..!
டிரம்ஸ் சிவமணியின் இசையில் காதைக் கிழிக்கும் பின்னணி இசையைவிடவும், பாடல்கள் கேட்கும் ரகம்.. ஆனாலும் பின்னணி இசையை கொஞ்சம் வடிகட்டியிருக்கலாம்..!
ஒரு திரைக்கதையாக பார்க்கப் போனால் இப்படியெல்லாம் ஒரு போலீஸ் இருக்க முடியுமா என்றும்.. இப்படியெல்லாம் ஒரு பத்திரிகையாளர்கள் இருக்க முடியுமா என்றெல்லாம் கேள்வியெழுப்ப வைத்திருக்கிறது.
மீடியா என்று தெரிந்தும் போலீஸ் இப்படி தைரியமாக கை வைப்பதெல்லாம் நினைத்தே பார்க்க முடியவில்லை. இதேபோல் ரவுடிகளின் கும்பல் ஏதோ மாநகராட்சி பாத்ரூமுக்கு வருவதுபோல ஹாயாக தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்குள் நுழைந்து அதகளம் செய்வதெல்லாம் ரொம்பவே டூ மச் இயக்குநர் ஸார்..!
பத்திரிகை அலுவலகம் மற்றும் பல்வேறு அலுவலகங்களுக்குள் நுழையும் போலீஸ் குற்றம்சாட்டப்பட்டவர்களை அடித்து, இழுத்துச் செல்வதெல்லாம் முடியுமா என்றும் யோசிக்க வைக்கிறது.
எடுத்த எடுப்பிலேயே சிறப்பு நீதிமன்றத்தைக் காட்டுகிறார்கள். இதற்கான பார்மாலிட்டியை எல்லாம் இயக்குநர் எப்படி மறந்தார்..? சட்டென்று வழக்கு வேகம் பிடித்து நகர்ந்து முடிவுக்கே வந்துவிடுவதெல்லாம் சூப்பர் பாஸ்ட் திரைக்கதையாக இருக்கிறது..!
ஏட்டு பாக்யராஜின் உதவியோடு தனியாக இவர் புலனாய்வு செய்வதும்.. அதர்வாவின் தாக்குதலில் இறந்து போனவர்களை பற்றி போலீஸ் எதையும் விசாரிக்காமல் இருப்பது பற்றியும் இயக்குநர் அப்படியே விட்டுவிட்டது ஏனோ..?
கருணாகரன், பாக்யராஜின் எதிர்பாராத முடிவும், தொடர்ச்சியான வில்லனின் அசுர வதமும் அதர்வா என்னும் ஹீரோவுக்காக செய்யப்பட்டிருக்கிறது..  வில்லனின் கோட்டைக்குள் அதர்வா வந்துவிட்டு தகவல்களை திருடுவதும்.. முடியாமல் ஹார்டுடிஸ்க்கையே கழட்டிக் கொண்டு செல்வதும்.. தொடர்ச்சியாக கேத்தரின் தெரியாமல் வந்து அப்பாவியாய் மாட்டுவதும்.. செமத்தியான காட்சிகள்.. விறுவிறுப்பும், எதிர்பார்ப்பும் கடைசி சில நிமிடங்களில் இயக்குநரின் அருமையான இயக்கத் திறமையால் படத்தை சபாஷ் போட வைத்துவிட்டது..!
கள்ள நோட்டு போலவே இப்போதெல்லாம் படிக்காமலேயே காசை விட்டெறிந்தால் டாக்டரேட் பட்டம்கூட வீடு தேடி வந்து விடுகிறது. இந்த அளவுக்கு திருடர்கள் அதிகமாகிக் கொண்டே போகும் நேரத்தில் இது போன்ற விழிப்புணர்வு பார்வை நமக்கு அவசியம் தேவைதான்.
நமக்குத் தெரியாமலேயே நம் பெயரைச் சொல்லி கடன் வாங்கி நம்மை கடனாளியாக்கும் பல சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்திருக்கின்றன. இந்தப் படம் அதை நமக்குத் சொல்லி நம்மை எச்சரித்துள்ளது. இதற்காகவே இயக்குநருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்..!
அதர்வாவின் கேரியரில் இதுவும் ஒரு முக்கியமான படமே..!

ஆறாது சினம் - சினிமா விமர்சனம்

28-02-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஏமாற்றத்தைவிடவும் துரோகத்தைத்தான் மனித மனங்கள் தாங்குவதில்லை. அதிலும் காதல் துரோகங்கள் என்றால் இன்னும் அதிகமான துயரத்தையும், விளைவுகளையும் தருகின்றன. அப்படியொரு துரோகத்தின் விளைவுதான் இந்தப் படத்தின் கதைக் கரு.
2013-ம் வருடம் மலையாளத்தில் கதாசிரியரும், இயக்குநரான ஜீத்து ஜோஸப் கதை எழுதி இயக்கிய ‘மெமோரீஸ்’ என்கிற மலையாளப் படத்தின் ரீமேக்குதான் இது. கிளைமாக்ஸுக்கு பின்னான காட்சியொன்றைத் தவிர மற்றவையெல்லாம் அப்படியேதான் நேர்பட படமாக்கப்பட்டிருக்கிறது.

மதுரையில் திறமையான போலீஸ் அதிகாரியாக துடிப்புடன் பணியில் இருக்கும் அஸிஸ்டெண்ட் கமிஷனர் அருள்நிதி மாட்டுத்தாவணி ரவி என்னும் ரவுடியை பிடிக்கச் செல்கிறார். அங்கே நடக்கும் துப்பாக்கிச் சண்டையில் ரவியின் மனைவி தற்செயலாக குண்டு பாய்ந்து இறந்து போகிறார். ரவியையும் என்கவுண்ட்டர் செய்வதற்கு முன்பு மேலிட உத்தரவின் பேரில் சுடாமல் உயிருடன் பிடிக்கப்படுகிறான் ரவி.
ரவி சிறையில் இருந்து வெளியில் வந்தவுடன் அருள்நிதியின் வீட்டிற்கு வந்து அருள்நிதியின் கண் முன்பாகவே அவருடைய மனைவி மற்றும் மகளை சுட்டுக் கொலை செய்கிறான். அவனையும் அருள்நிதி கொல்கிறார். ஆனாலும் தான் காதலித்து மணந்த மனைவியையும், குழந்தையையும் பறி கொடுத்த நிகழ்வு அருள்நிதியை தூங்கவிடாமல் செய்கிறது. அவர் கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கு அடிமையாகிறார்.
அவரைத் தாங்கி நிற்கும் அம்மாவின் பேச்சைக் கேட்க நினைத்தும் மதுவின் மயக்கமும், அவர் கண்ணெதிரே நிகழ்ந்த படுகொலையும் அவரை துக்கத்தில் ஆழ்த்துகிறது. அவரால் குடியில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறார். இந்த நேரத்தில் அவரது தம்பியும் சொத்தைப் பிரித்துக் கொடுக்கும்படி கேட்டு வாங்கிச் செல்கிறார்.
இப்படி குடும்பத்தில் குழப்பம்.. குடியினால் அவதி என்று இவர் பிரச்சனைகளில் இருக்க.. மதுரையில் தொடர்ச்சியாக 3 ஆண்கள் காணாமல் போகிறார்கள். ஒரு வெள்ளிக்கிழமையன்று காணாமல் போகும் அவர்கள், சரியாக ஞாயிற்றுக்கிழமையன்று தமிழகத்தின் பரமத்தி வேலூர், போடி நாயக்கனூர், சிவகங்கை, ஆகிய வேறு,. வேறு ஊர்களில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்படுகிறார்கள்.
மதுரையின் போலீஸ் கமிஷனரான ராதாரவி.. இந்த வழக்கை எடுத்து விசாரிக்கும்படி அருள்நிதியை கேட்கிறார். முதலில் முடியவே முடியாது என்று மறுப்பவர்.. சில உறுதிமொழிகளுக்கு பின்பு ஏற்றுக் கொள்கிறார். விசாரிக்கத் துவங்கியதுமே மூன்று கொலைகளுக்குமே ஒரேயொரு தொடர்பு இருக்கிறது என்பதை கண்டறிகிறார்.
அந்த்த் துப்பினை வைத்து குற்றவாளியை நெருங்குகிறார். அதே சமயம் 4-வது நபரும் கடத்திச் செல்லப்பட்டு தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்டுக் கிடக்க.. பதற்றம் மதுரையைத் தொற்றுகிறது. இந்த நேரத்தில் கொலையானவர்களின் மனைவிமார்களை அழைத்து விசாரிக்கிறார் அருள்நிதி. அதில் மிகப் பெரிய உண்மை தெரிய வர.. கொலையாளியும் யாரென்று தெரிகிறது. இன்னும் ஒருவரை அவன் கொலை செய்யத் திட்டமிட்டிருப்பதும் தெரிய வருகிறது.
கடைசி ஆளை கொலை செய்வதற்கு முன்பாக கொலையாளியைப் பிடிக்க அருள்நிதி முயல்கிறார்.. அது முடிந்ததா இல்லையா என்பதுதான் இந்த சுவாரஸ்யமான திரைக்கதையின் முடிவு.
‘ஆறாது சினம்’ என்கிற தலைப்பு மிக கச்சிதமான பொருத்தம். அந்த மனநிலை பாதிக்கப்பட்ட கொலையாளியின் மனதைத் தைத்த அந்த துரோகத்தின் விளைவிற்கு இதைவிட பொருத்தமான பெயர் வேறென்ன சொல்ல முடியும்..?
‘மெளன குரு’விற்கு பிறகு அருள்நிதியின் நடிப்பிற்கு உத்தரவாதம் அளித்துள்ள கேரக்டர் இது. தன்னிரகத்துடனும்.. கழிவிரக்கத்துடனும் தன்னைத் தானே நொந்து கொண்டு மதுவின் மயக்கத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது ஒவ்வொரு பேச்சும், ஆக்சனும் அந்தக் கேரக்டர் மீது ஒருவித பரிதாப உணர்வை கூட்டிக் கொண்டேதான் செல்கிறது. இடையிடையே செல்லும் அம்மா-மகன் பாச உணர்வு காட்சிகள் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டிருப்பதும் இந்தச் சோகக் காவியத்திற்கு உரம் ஊட்டியிருக்கின்றன.
போலீஸ் யூனிபார்மில் குடிப்பதுபோல காட்சிகள் வைத்தால் பிரச்சினை வரும் என்றெண்ணியே அதனை முற்றிலும் தவிர்த்து அன்-யூனிபார்மிலேயே அருள்நிதி விசாரணையில் இறங்குவதாக்க் காட்டியிருக்கிறார்கள். யூனிபார்ம் ஊழியர்களுக்கான அரசு நடத்தைவிதிகளின்படி இதுதான் சரி.
கொஞ்சம், கொஞ்சமாக போலீஸின் துப்பறியும் பணி அருள்நிதி அந்த வேலைக்குள் இழுத்துப் போடுவதை மெதுவான திரைக்கதையில் மெது, மெதுவான காட்சிகளின் மூலமாகச் சொல்லியிருக்கிறார்கள். இதுவே இடைவேளைக்கு பின்னான ரன் வேக திரைக்கதைக்கு பெரிதும் உதவியுள்ளது.
5 பெண்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் அடுத்தடுத்து வந்தாலும் அனைத்துமே கச்சிதமாக நறுக்கப்பட்ட காட்சிகளாக இருப்பதால் அவையும் சுவாரஸ்யமாகவே இருக்கின்றன. கிளைமாக்ஸ்வரையிலும் வில்லனின் முகத்தைக் காட்டாமல் மறைத்து அந்தக் கையையும், நொண்டியபடியே செல்லும் காலையும் காட்டியே ஏகத்துக்கும் ஒரு பில்டப்பை கூட்டியிருக்கிறார் கதாசிரியர். அருமை.. 5-வது நபராக வரும் அந்த திடீர் டிவிஸ்ட்டு எதிர்பாராதது.
‘தூங்கா நகரம்’, ‘சிகரம் தொடு’ படங்களின் இயக்குநரான கெளரவ் இதில், வில்லனாக அறிமுகமாகியிருக்கிறார். கிளைமாக்ஸில் மட்டுமே முகத்தைக் காட்டினாலும் அந்த உடல் மொழி பயமுறுத்துகிறது என்பதையும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் சின்னச் சின்ன மாண்டேஜ் காட்சிகளில் முகம் காட்டியிருக்கிறார். ஒரு பாடல் காட்சியில் வலம் வருகிறார். இத்தனை அழகான, காதல் மனைவியையும், சின்னக் குழந்தையையும் இழந்துவிட்டு அதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டு வலம் வர முடியுமா என்கிற கேள்வியை இயக்குநர் நம்மிடம் கேட்கிறார். என்ன சொல்வது..?
இன்னொரு ஐஸ்வர்யாவும் படத்தில் வருகிறார். மதுரையின் தினகரன் ரிப்போர்ட்டராக.. டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் டெக்கானில் வேலை பார்த்துவிட்டு கடைசியாக ‘தினகரனில்’ வந்து சேர்ந்திருப்பதாக ஒரு காட்சியில் சொல்கிறார். நம்ப முடிகிறதா..? யாராச்சும் இப்படி வருவாங்களா..? இயக்குநர் விஷயத்தை தலைகீழாக மாற்றியிருக்கிறார்.
ராதாரவியின் வார்த்தைகளில் விரியும் அருள்நிதியின் அந்த சோகக் கதையைக் கேட்டுவிட்டு, ஐஸ்வர்யா தத்தா அழுது கொண்டே செல்வது போல காட்சியை வைத்து இது தமிழ்ப் படம்தான் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
படத்தின் துவக்கக் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் மின்னுகிறது ஒளிப்பதிவு. அரவிந்த்சிங்கின் கைவரிசையில் பாடல் காட்சிகள் மட்டும் சடலங்களை காட்டும் காட்சிகளில் ஒரு பரபரப்பும், அட்மாஸ்பியர் ஆச்சரியங்களும் ஷாட்டுகளை பார்க்கும்போது ஏற்படுகின்றன.
தமனின் பின்னணி இசை திகிலையும், சஸ்பென்ஸையும் கலந்து கட்டி அடிக்கிறது. பாடல் காட்சிகளிள் மாண்டேஜ் காட்சிகளே மனதைக் கவர்வதால் பாடல்களை கவனிக்க நேரமில்லைதான்.
எந்தக் கதையாக இருந்தாலென்ன.. திரைக்கதை சுவாரஸ்யமாகவும், பிரமாதமாகவும் இருந்தாலே போதும். படத்தை ஓட வைத்துவிடலாம் என்பார்கள். அந்த வகையில் இந்தப் படம் தானாகவே ஓடும் என்று எதிர்பார்க்கலாம். இரண்டாம் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு முதல் பாதியிலும் இருந்திருந்தால் இன்னும் நன்றாகவே இருந்திருக்கும்..!
ரோபோ சங்கர் கேரக்டரின் ஸ்கெட்ச்.. சார்லியுடன் அவர் பேசும் பல கவுண்டர் டயலாக்குகள்.. சீரியஸான அந்த காட்சிகளை காமெடியாக்கி ‘என்னத்த’ என்பது மாதிரியான உணர்வை ஏற்படுத்துகின்றன என்ற ஒரேயொரு குறையைத் தவிர, திரைக்கதையில் வேறு எதையும் சொல்ல முடியாது.
படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும் தவறில்லாமல் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் அறிவழகன் தனது சிறப்பான இயக்கத்தினால் அப்படி நடிக்க வைத்திருக்கிறார். இதனால்தான் இந்த அளவுக்காச்சும் படத்தினை ரசிக்க முடிந்திருக்கிறது. அவருக்கும் நமது பாராட்டுக்கள்.
நடிகர் அருள்நிதி அடுத்தடுத்து இதேபோல் தனக்கேற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தால் அவரும் ஒரு இரண்டாம் வரிசை நடிகர் பட்டியலில் நிரந்தரமாக இடம் பெற வாய்ப்புண்டு..!
ஆறாது சினம் – சஸ்பென்ஸ் திரில்லர் விரும்பிகளுக்கேற்ற படம்..!

மிருதன் - சினிமா விமர்சனம்

21-02-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஹாலிவுட் படங்களில் மட்டுமே இதுவரையில் கையாளப்பட்டிருந்த ஒரு விஷயத்தை முதன்முதலில் தமிழுக்கு அறிமுகம் செய்திருக்கிறார்கள் நடிகர் ஜெயம் ரவியும், இயக்குநர் சக்தி செளந்தர்ராஜனும்..!

ஊட்டியில் டிராபிக் போலீஸில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார் ஜெயம் ரவி. உடன் துணைக்கு கான்ஸ்டபிள் காளி வெங்கட். ஜெயம் ரவிக்கு ஒரு அன்பான தங்கை. பள்ளியில் படிக்கிறாள்.
எங்கோ கொண்டு செல்வதற்காக ஒரு உயர் வேதியியல் திரவம் இருக்கும் டின்னை லாரியில் ஏற்றுகிறார்கள். டின் தவறி விழுந்தவுடனேயே அதன் மூடி விழுந்து டின்னில் இருக்கும் திரவம் தரையில் பாய்ந்து தண்ணீர் மாதிரி ஓடுகிறது. இந்த வேலையைச் செய்பவர்கள் சட்டென்று டின்னைத் தூக்கி லாரியில் வைத்துவிட்டு வேறெதுவும் செய்யாமல் சென்று விடுகிறார்கள்.
இந்த உயர் வேதியியல் திரவத்தை யார் அருந்தினாலும் அது மூளையைப் பாதித்து மனித செல்களை அழித்து அதற்குப் பதிலாக மிருக செல்களை வளர்ச்சியடைய வைக்கும். இதனால் இந்த செல்களுடன் இருப்பவர்களை சோம்பி என்பார்களாம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எந்தவிதமான மனித நினைவுகளும், குணங்களும் இல்லாமல் ரத்தம் குடிக்கும் காட்டேரிகளை போலவே மாறிவிடுவார்கள்..!
இப்படிப்பட்ட அபாயகரமான அந்தத் திரவத்தை ஒரு நாய் வந்து குடிக்கிறது. அது வெறி நாயாக மாறி அந்த நிறுவனத்தின் வாட்ச்மேனை கடிக்கிறது. வாட்ச்மேன் இரவில் தன் வீட்டில் சாப்பிடும்போது திடீரென்று வெறியாகி தனது அம்மாவைக் கடிக்கிறார். அம்மா மருமகளைக் கடிக்கிறார். இப்படி மாறி, மாறி கடியாகி தங்களுக்குத் தாங்களே பலியாகிறார்கள்.
இன்னொரு பக்கம் ஓரிடத்தில் லட்சுமி மேனனை பார்த்தவுடன் அவர் மீது லவ்வாகிறார் ஜெயம் ரவி. அவருடைய அழகைவிடவும், மனிதாபிமான அவரது நடத்தையும் இதற்கு ஒரு காரணமாகிறது. ஆனால் லட்சுமி மேனனுக்கு ஏற்கெனவே ஒரு காதலர் இருப்பது தெரிந்தவுடன் உடனேயே லட்சுமியை தன்னுடைய முன்னாள் காதலியாக்குகிறார் ஜெயம் ரவி.
இந்த நேரத்தில் ஊட்டியில் ஒரே நாள் இரவில் ஊர் முழுவதும் இந்த சோம்பிக்கள் உருவாகத் துவங்க.. ஊரே துவம்சமாகிறது. அந்தக் காலைப் பொழுதில் ஜெயம் ரவியின் தங்கையும் திடீரென்று காணாமல் போயிருக்க.. ஜெயம் ரவி தங்கையையும் தேடுகிறார். ஆனால் அதற்குள்ளாக அவருக்கு கடமை அழைக்கிறது.
ஊர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு போட்டிருக்கிறார்கள். சோம்பிக்களாக மாறிய மக்களை பார்த்தவுடன் சுட்டுத் தள்ளும்படி போலீஸ் உயரதிகாரிகள் உத்தரவு கொடுக்க.. ஜெயம் ரவியும் கையில் பிஸ்டலுடன் வெளியில் வருகிறார். கண்ணில்படும சோம்பிக்களை சுட்டுத் தள்ளுகிறார்.
இந்த வைரஸுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள் மருத்துவர்கள். இந்தக் குழுவில் லட்சுமி மேனனும் உண்டு. இந்தக் குழுவுக்கு பாதுகாப்பு கொடுத்து அவர்களை கோவைக்கு அழைத்துச் செல்ல முடிவெடுக்கிறார்கள் ஜெயம் ரவி.
பல சோம்பிக்களை பரலோகத்திற்கு அனுப்பிவிட்டு ஒரு வேனில் மருத்துவர்களை அழைத்துக் கொண்டு கிளம்புகிறார் ஜெயம் ரவி. வழியிலேயே லட்சுமி மேனனின் வீட்டில் கடத்தி வைக்கப்பட்டிருந்த தனது தங்கையையும் மீட்கிறார். அவளையும் கூட்டிக் கொண்டு செல்லும்போது மேட்டுப்பாளையத்தில் ஊருக்குள்ளேயே நுழைய முடியாமல் போகிறது. அந்த ஊரே சோம்பிக்களால் பாதிக்கப்பட்டு கிடக்க.. படாதபாடுபட்டு அவர்களிடத்தில் இருந்து தப்பித்து கோவை வந்து சேர்கிறார் ஜெயம் ரவி.
ஆனால் கோவை மருத்துவமனைக்குள் நுழைய முடியாத அளவுக்கு வெறி பிடித்த சோம்பிக்களின் அங்கே கூட்டம் நிற்கிறது. தாங்கள் கையில் வைத்திருக்கும் மருந்து பொருட்களை வைத்து அந்த லேப்பில் மருந்து தயாரிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருப்பதால் எப்படியாவது மருத்துவமனைக்குள் நுழைந்துவிடலாம் என்று பார்க்கிறார் ஜெயம் ரவி. இந்த முயற்சியில் வெற்றி பெற்றார்களா..? சோம்பிக்களை முறியடித்தாரா..? என்பதுதான் இந்தப் படத்தின் பிற்பாதியில் இருக்கும் சுவையான திரைக்கதை.
அச்சு அசலாக ஹாலிவுட் பாணியில் அதே கேரக்டர் ஸ்கெச்சுடன் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். எப்போதும் இது போன்ற ஹாலிவுட் படங்களில் உணர்ச்சிப் பெருக்கிற்கு ஒரு செண்டிமெண்ட் கதை இருக்கும். சின்னப் பொண்ணு அல்லது பையன் நிச்சயம் இருப்பார்கள். அப்போதுதான் குழந்தைகளுக்கும் இந்தப் படத்தைப் பார்க்க ஒரு ஆர்வம் இருக்குமாம். அந்தத் தேடுதல் வேட்டையில் கணக்கில்லாமல் ஹீரோ மல்லாடுவார். கடைசியில் ஜெயிப்பார். கூடவே ஒரு குடும்பக் கதையும் இருக்கும். அதில் சென்ட்மெண்ட் காட்சிகளும் அமோகமாக இருக்கும். இதெல்லாம் தப்பில்லமல் இந்தப் படத்திலும் இருக்கிறது.
முதல் பாராட்டு ஜெயம் ரவிக்கு. இந்தக் கதையை வேறு யாரிடமாவது சொல்லியிருந்தால், அவர் இதனை ஏற்றுக் கொண்டிருப்பாரா என்பது நிச்சயம் சந்தேகம்தான். படத்துக்கு படம் புதிய கதையில், புதிய கேரக்டரில் நடிக்க வேண்டும் என்கிற புதிய கொள்கையின்படி ஜெயம் ரவி கையிலெடுத்த இந்த வாய்ப்பிற்கு ஏற்ற பலன்தான் இப்போது தியேட்டர்களில் கிடைத்து வருகிறது.
முற்பாதியில் பாசமான அண்ணனாகவும், போலீஸுக்குள்ளேயே இருந்து கொண்டு அதன் கசடுகளில் இருந்து வெளிவர முடியாமல் தவிக்கும் சின்னச் சின்ன விஷயங்களைக்கூட கச்சிதமாகச் செய்திருக்கிறார் ஜெயம் ரவி. கட்சிக்காரனை அடித்தவுடன் தன்னைக் கடந்து செல்லும் அமைச்சரை பார்த்து பயத்துடன் ‘ஸாரி’ சொல்லும் அந்த ஒரு காட்சியே இதற்கு சான்று..!
பிற்பாதியில் அவருடைய வெறித்தனமான ஆட்டத்திற்கு கையில் கிடைத்த துப்பாக்கியும், சண்டை பயிற்சியும் கை கொடுக்க.. படமாக்கியிருக்கும் விதத்தில் அட்டகாசமான ஹீரோயிஸ படத்தை பார்த்த திருப்தி கிடைக்கிறது.
இத்தனை கூட்டத்தை எங்கேயிருந்து கொண்டு வந்தார்கள்..? ஊட்டியின் பரபரப்பான ஏரியாவில் எப்படி இந்தக் கலவரத்தையும், ஊரடங்கு சட்ட நிலவரத்தையும் படமாக்கினார்கள் என்று தெரியவில்லை. அதேபோல் மேட்டுப்பாளையத்தில் இரவு நேர கலவரத்தை படமாக்கியிருக்கும்விதத்திற்கும் இயக்குநருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் ஒரு ‘ஜே’ போட வேண்டும்..!
இறுதிக் காட்சியே அரை மணி நேரம் நீடிக்கிறது. இதற்குள் இருக்கும் பரபரப்பு,.. டென்ஷன்.. சென்டிமெண்ட் என்று அனைத்தையும் கலந்து இம்மியளவுகூட செல்போனை குனிந்து பார்க்க முடியாமல் செய்திருக்கிறார் இயக்குநர். இவ்வளவு பெரிய கூட்டத்தை கூட்டி அவர்களை சமாளித்து எடுக்க நினைத்ததை கச்சிதமாக அதே உணர்வுடன் எடுத்திருக்கும் இயக்குநர் சக்தி செளந்தர்ராஜனை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை..
தற்கொலை முயற்சியாக தன்னைத் தானே காவு கொடுத்துவிட்டு லட்சுமியை மீட்க வரும்போது ஜெயம் ரவியின் நடிப்பும், அவரையும் சோம்பி தாக்கிய பின்பு ஒவ்வொரு ஸ்டெப்பிலும் அவர் காட்டும் ஆக்சன்களும் பலே.. அதற்கு மேல், கிட்டத்தட்ட படம் பார்க்கும் ரசிகனையும் சேர்த்தே சோம்பியாக்கிவிட்டார்..!
லட்சுமி மேனன் வழக்கம்போல.. கொஞ்சம் மெருகேறியிருக்கிறார். இனிமேல் சின்னப் பொண்ணு கேரக்டரில்கூட அவர் நடிக்க முடியாது. நிரம்பவும் மெச்சூரிட்டியாக இருக்கிறார். “எதுக்கு என்னை காப்பாத்தின..?” என்று கிளைமாக்ஸில் அவர் கேட்கும் கேள்வியும், கிடைக்கின்ற பதிலுமே தியேட்டரில் இந்தப் படத்திற்கு கூடுதல் போனஸாக ‘அச்சச்சோ’ என்று உச்சுக் கொட்ட வைக்கிறது..!
காளி வெங்கட்டின் அவ்வப்போதைய சின்னச் சின்ன கமெண்ட்டுகளில் நகைச்சுவை மிளிர்ந்தாலும் ஒரேயொரு காட்சியில் வரும் ஸ்ரீமன் அனைவரையும் தூக்கி ஓரம்கட்டிவிட்டார். பெஸ்ட் பெர்பார்மென்ஸ்.. அந்தச் சின்னப் பொண்ணின் பேச்சு ஈர்ப்பாக இருக்க.. அதன் பரிதாபமான முடிவும், “எங்கண்ணன் பர்ஸ்ல ஒரு போட்டோ இருக்கு. அந்தப் போட்டோல இருக்குறவங்கள எங்கண்ணனுக்கு ரொம்பப் புடிக்கும்..” என்று கதையை லட்சுமி மேனனிடம் சொல்லும்போதும் அந்தச் சின்னப் பொண்ணு சொல்லும்போது எதிர்பார்த்த அந்த பீலிங்கும் கிடைத்திருக்கிறது..!
படத்தில் ரசிகர்களின் பெருத்த கை தட்டல் கிடைத்த காட்சி, ஆர்.என்.ஆர்.மனோகர் வேனுக்குள் இருந்தபடியே ஜெயம் ரவியிடம், "இதுக்குத்தான் கொஞ்சம் பொலிட்டிக்கல் கனெக்சனும் வேணும்கிறது.." என்று சொல்கின்ற காட்சிதான்..!
பின்னணி இசைக்கு இசையமைப்பாளர் பெரும்பாடுபட்டிருக்க வேண்டும். நொடிக்கு நொடி காட்சியமைப்புகள் மாறுவதால் ஒலியமைப்பு ஏற்றமும், இறக்குமுமாகவே கடைசிவரையில் நீடிக்கிறது. அதேபோல் ஒலி வடிவமைப்பாளருக்கும் இந்தப் படத்தில்தான் அதிக வேலை இருந்திருக்க வேண்டும். அதிகமான துப்பாக்கி சப்தங்களை இந்தத் தமிழ்ப் படத்தில்தான் பதிவு செய்திருப்பார்கள் என்று நினைக்கிறோம்.
லாஜிக்கெல்லாம் இது போன்ற கற்பனை உலக படங்களில் அதிகம் பார்க்க தேவையில்லை என்பதால் அதையெல்லாம் விட்டுவிடுவோம்.. இந்தியா போன்ற ஜன நெருக்கடி மிகுந்த இடங்களில் சோம்பிக்களாக உருவாவது மிக எளிது. சீக்கிரமாகவே அது நடந்தேறும் என்பதால்தான், இத்தனை கூட்டமும் ஒரே நாளில் உருவாகிவிட்டதாக இயக்குநர் வைத்திருக்கிறார் போலும்..! மேட்டுப்பாளையத்திலும், கோவையிலும் ஒரேயொரு போலீஸ்கூட இல்லை போலும். அவர்களுடைய பங்களிப்பும், அரசுத் துறையின் பணியும் என்ன என்பதே தெரியவில்லை. ஹீரோயிஸ படம் என்பதால் எல்லாவற்றையும் ஜெயம் ரவியின் தோளிலேயே சுமத்திவிட்டார்கள். பாவம்.. அவரும் எவ்வளவுதான் தாங்குவார்..? 
இந்த சோம்பிக்களின் கதை போல் உலகத்தில் எங்கேயுமே நடக்க வாய்ப்பில்லை என்பதால்தான் இது போன்ற படங்கள் அதிகமாக விரும்பி பார்க்கப்படுகின்றன. இந்த மெண்ட்டாலிட்டியை மனதில் வைத்துதான் பேய் படங்களெல்லாம் சக்கையாக வசூலை குவிக்கின்றன. இப்போது ‘பேய்’ போய் ‘சோம்பி’ வந்திருக்கிறது. இன்னும் எத்தனை சோம்பிக்கள் வந்தாலும் எடுக்க வேண்டிய விதத்தில் எடுத்தால் அத்தனையும் ஹிட்டாகும். ஏனெனில் பாமர ரசிகனின் கற்பனைக் குதிரையை ஒரு இயக்குநர் தட்டிக் கொடுத்து அவனை இட்டுச் சென்றால்தான் அது கனவுலகம்.. இந்தக் கனவுலகத்தை இப்போது இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன் செம்மையாக செய்திருக்கிறார்.
அதனால்தான் கோவையிலிருந்து ‘சோம்பி’ இப்போது சென்னைக்கு வண்டியேறிருப்பதோடு நிறுத்தியிருக்கிறார்கள். ‘சோம்பி’ சென்னை வந்தால் சென்னை என்ன ஆகும் என்பதை காண ‘மிருதன் பாகம்-2’ வரையிலும் நாமும் காத்திருப்போம்..!

சேதுபதி – சினிமா விமர்சனம்

20-02-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

2010-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதியன்று நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில், தாமிரபரணி ஆற்றுப் பாலத்தின் அருகே பட்டப் பகலில், ஆழ்வார்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனின் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல், மர்ம நபர்கள் சிலரால் வெடிகுண்டு தாக்குதல், மற்றும் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

போலீஸ் விசாரணையில் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டாலும் கொலைக்கான காரணத்தை அறிந்தபோது படு டிவிஸ்ட்டாக இருந்தது. உண்மையில் கொலையாளிகள் கொலை செய்ய நினைத்தது அப்போதைய கடையம் நகர போலீஸ் ஸ்டேஷனின் சப்-இன்ஸ்பெக்டரான சிவசுப்ரமணியத்தை.. அவருக்கு வைத்த குறியில் தவறுதலாக வெற்றிவேல் மாட்டிக் கொள்ள, இவரை போட்டுத் தள்ளிவிட்டார்கள்.

கொலைக்கான காரணம்.. உயிர் தப்பிய சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியம், கொலைக் கும்பலின் தலைவனான கந்தசாமியின் தங்கையான சிவகாமியை மணந்தவர். திருமணம் முடிந்து சில மாதங்கள் கழித்து தனது மனைவிக்கு படிப்பு இல்லை என்று கூறி சிவசுப்ரமணியம் சிவகாமியை அவருடைய தாய் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கும் போட்டார்.

இதனை எதிர்த்து அவர் மனைவியும் வழக்கு தொடுத்தார். கூடுதலாக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவன் சிவசுப்ரமணியன் மீது சிவகாமி போலீஸில் புகார் கொடுக்க சிவசுப்ரமணியன் அப்போது பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன் பிறகு பல்வேறுவிதமான பேச்சுவார்த்தைகள், கட்டப் பஞ்சாயத்துகள் பலவும் செய்து சிவசுப்ரமணியம் இறங்கி வரவில்லை. சிவகாமியுடன் குடும்பம் நடத்தவும் மறுத்துவிட்டார். இதனால் சிவகாமியின் குடும்பத்தினர் அவர் மீது ஆத்திரம் அடைந்துள்ளனர்.

இதற்கிடையில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றி பெற்று மீண்டும் சப்-இன்ஸ்பெக்டர் பணியில் சேர்ந்தார் சிவசுப்ரமணியன். அதே நேரம் தன் தங்கை வாழாவெட்டியாக வீட்டில் இருப்பதை பார்க்கச் சகிக்காத அந்த பாசமலர் அண்ணன் கந்தசாமி, மாப்பிள்ளை சிவசுப்ரமணியனை கொலை செய்ய முடிவெடுத்திருக்கிறார். இதற்கு அப்போது ஆழ்வார்குறிச்சியில் வசிக்கும் இவர்களுடைய உறவினரான ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரத்திடம் ஆலோசனை கேட்டிருக்கிறார்கள்.

சிவசுப்பிரமணியன் அடிக்கடி அம்பாசமுத்திரம் கோர்ட்டுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் கடையம் திரும்பி வருவார். இதனை ஒரு மாதமாக கண்காணித்து வந்த டீம், அப்படி அவர் திரும்பி வரும் வழியில் ஆழ்வார்குறிச்சியில் போட்டுத் தள்ள ஸ்கெட்ச் போட்டிருக்கிறது.

சம்பவம் நடந்த அன்று அம்பை தாலுகா அலுவலகத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி ஒரு சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார்குறிச்சியை நோக்கி வந்து கொண்டு இருப்பதாக இந்தக் கும்பலுக்கு தகவல் கொடுத்திருக்கிறார் இன்பார்மர். ஹெல்மெட் போட்டிருப்பதால் அவர்தான் சிவசுப்ரமணியம் என்று நினைத்து இன்பார்மர் இந்தத் தகவலைச் சொல்ல.. கொலையாளி டீமும் பொறுமையாக காத்திருந்து வெற்றிவேலை படுகொலை செய்தார்கள்.

வெடிகுண்டுகளை வீசியதால் வெற்றிவேலின் கால் துண்டாகிவிட்டது. அரிவாளால் அவருடைய கழுத்தில் வெட்டியும் அவர் உடனடியாக சாகவில்லை. ரத்தம் வடிய வடிய நடுரோட்டில்  உயிருடன் துடியாய் துடித்துக் கொண்டிருந்தார்.


அப்போது அந்த வழியே அப்போதைய தி.மு.க. அமைச்சர்கள் பன்னீர்செல்வம், டி.பி.எம்.மைதீன்கான், நெல்லை கலெக்டர் ஜெயராமன் ஆகியோர் காரில் வந்தார்கள். இந்த்த் தாக்குதலை பார்த்தவுடன் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேலின் அருகிலேயே வராமல் தள்ளிப் போய் நின்று கொண்டு ஆம்புலன்ஸுக்கு போன் செய்துவிட்டு காத்திருந்தார்கள் அமைச்சர் பெருமக்கள். அரை மணி நேரம் கழித்து ஆம்புலன்ஸ் வந்து வெற்றிவேலை தூக்கி மருத்துவமனைக்குக் கொண்டு போனாலும் அதிகப்படியான ரத்தப் போக்கினால் அவருடைய மரணத்தைத் தடுக்க முடியவில்லை.

விஷயம் அறிந்து ஓடி வந்த டிவி சேனல் கேமிராமேன்கள் இதனை பொறுப்பாக வீடியோ எடுத்து வெளியிட்டுவிட.. அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் இது மிகப் பெரிய அரசியல் சர்ச்சையாகிவிட்டது. அமைச்சர்களும், கலெக்டரும் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேலை கவனிக்காமல், அவரைத் தூக்கக்கூட நினைக்காமல், கையைக் கட்டிக் கொண்டு ஓரமாய் நின்றிருந்தது மனிதாபிமானற்ற செயல் என்று குற்றச்சாட்டு எழுந்தது.. சென்ற 2011 சட்டமன்றத் தேர்தலின்போது அப்போதைய ஆளும் கட்சியான தி.மு.க.வுக்கு எதிராக அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் கோபத்தைக் கிளப்பிய சம்பவம் இதுதான்..!

இதே கதைக் கருவோடு சென்ற ஆண்டு இயக்குநர் கே.எஸ்.தங்கசாமியின் இயக்கத்தில் எட்டுத்திக்கும் மதயானை என்ற திரைப்படம் வெளியானது நினைவிருக்கலாம்.

இந்த உண்மைச் சம்பவம்தான் இந்த சேதுபதி படத்தின் துவக்கக் காட்சியும், மையக் கருவும்கூட..

கதையின் களமான மதுரையின் பிரபலமான தாதா வாத்தியார் என்றழைக்கப்படும் எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி. இவருடைய மகளை ஒரு சப்-இன்ஸ்பெக்டருக்கு திருமணம் செய்து வைக்கிறார். தற்போது ஒரு பிள்ளை இருக்கும் நிலையில் கணவனுக்கும், மனைவிக்கும் இடையே ஈகோ மோதல் எழுகிறது. பிரச்சினை பெரிதாகி தான் இனியும் கணவருடன் வாழ முடியாது என்று சொல்லி மகள் அழுது கொண்டே அப்பாவிடம் வந்துவிட.. தனது மகளை கை நீட்டி அடித்துவிட்டானே என்ற கோபத்தில் அப்பாவான வேல.ராமமூர்த்தி, தனது மகள் தாலி அறுந்தாலும் பரவாயில்லை.. மருமகனை போட்டுத் தள்ளும்படி தனது அடியாட்களுக்கு உத்தரவிடுகிறார்.

ஒரு நள்ளிரவில் ஒரு ஆற்றுப் பாலத்தில் வாத்தியாரின் மருமகனுக்காக காத்திருக்கிறார்கள் கொலையாளிகள். ஆனால் அங்கே வருவது வேறொரு சப்-இன்ஸ்பெக்டர். இவர்தான் வாத்தியாரின் மருமகன் என்று நினைத்து அவரைப் போட்டுத் தள்ளுகிறது கும்பல். இந்தக் கொலை நடக்கும் பகுதி ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டர் கடமை தவறாத வீரரான நமது ஹீரோ விஜய் சேதுபதி.

இந்தக் கொலை வழக்குக்காக இரவு, பகல் பாராமல் உழைத்து கொலையாளிகளை நெருங்கியபோது கொலையின் சூத்தரதாரி வாத்தியார்தான் என்று அவருக்குத் தெரிய வர.. மாநகர கமிஷனரின் உத்தரவுப்படியே வாத்தியாரை கைது செய்கிறார் விஜய் சேதுபதி.

அவரை ரிமாண்ட்டுக்கு கொண்டு போகும் முன்பாக இரண்டு நாட்கள் காரில் வைத்தே சுற்ற வைத்து பின்புதான் கோர்ட்டுக் கொண்டு வருகிறார்கள் போலீஸார். இதனை தனக்கு நேர்ந்த மிகப் பெரிய அவமானமாக கருதும் வாத்தியார், விஜய் சேதுபதியை வில்லனாக நினைக்கிறார். இதேபோல் விஜய் சேதுபதியும் அந்தக் கூட்டத்தை வேரறுக்க நினைக்கிறார்.

இந்த நேரத்தில் ஒரு சாதாரண செயின் திருட்டு வழக்கில் இரண்டு பள்ளிச் சிறுவர்களை விசாரிக்கிறார் விஜய் சேதுபதி. அவர்களை பயமுறுத்துவதற்காக துப்பாக்கியை கையில் வைத்து மிரட்டுகிறார் சேதுபதி. இந்தச் சமயத்தில் ஒரு பையன் தப்பித்து ஓட முயற்சிக்க அந்தக் கணம் நிகழ்ந்த குழப்பத்தில், சேதுபதியின் கையில் இருந்த துப்பாக்கி வெடிக்க அதிலிருந்து குண்டு பாய்ந்து இன்னொரு சிறுவனின் கழுத்தில் பாய்கிறது.

பையன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் உயர் போலீஸ் அதிகாரிகள் இது குறித்து விசாரிக்கிறார்கள். பையனின் உயிருக்கு ஆபத்து இல்லையென்றாலும், அவன் இறந்து போனால் விஜய் சேதுபதி கைது செய்யப்படலாம் என்கிற நிலைமை வருகிறது. இதற்கிடையில் துப்பாக்கியில் குண்டு லோடு செய்யப்படாலும், அது சுடுவதற்கு தயாராகும் நிலையில் இல்லாமல்தான் லாக்கரில் வைத்திருப்பார்கள். இப்போது எப்படி தன் கையில் இருந்த துப்பாக்கி வெடித்தது என்று சேதுபதி யோசித்து விசாரணையில் ஈடுபடுகிறார்.

அப்போது தன் ஸ்டேஷனில் இருக்கும் சில காவலர்களே வாத்தியாரின் தூண்டுதலில் இந்தச் சதி செயலுக்கு துணை போயிருப்பதை அறிந்து கோபமாகிறார் சேதுபதி. இந்த நேரத்தில் தேசிய மனித உரிமை கமிஷனும் தீவிரமாக இந்தக் கேஸை விசாரிக்க.. பெரும் மனக் குழப்பத்தில் இருக்கிறார் சேதுபதி.

சேதுபதியை எப்படியும் மறுபடியும் பணியில் சேர விடாமல் தடுக்கும் முயற்சியில் வாத்தியார் வேல.ராம்மூர்த்தி ஈடுபட.. அதை முறியடிக்கும் வேலையில் சேதுபதியும் மும்முரமாகிறார். இறுதியில் யார் ஜெயித்த்து என்பதுதான் மிச்சம், சொச்சமான திரைக்கதை.

நடிப்பென்று பார்த்தால் விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கு பிடித்தமான வகையில் அவரது அனைத்துவித நடிப்பையும் செதுக்கியிருக்கிறார் இயக்குநர்.

முறுக்கு மீசை, அவ்வப்போது அந்த மீசையை அவர் தடவிவிடும் ஸ்டைல்.. மனைவியை என்ன பொண்டாட்டி என்று அவ்வப்போது அழைப்பது, அவருடன் சரசமாடுவது.. ச்சும்மா சண்டையிடுவது.. பிள்ளைகளை தைரியமானவர்களாக வளர்ப்பது.. ஸ்டேஷன் காவலர்களிடத்தில் அதிகாரி போல ஆணையிடாமல் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது.. அதே சமயம் தனது கெத்து குறையாமல் நடந்து கொள்வது.. மூர்த்தி என்ற அந்த புதிய சப்-இன்ஸ்பெக்டரின் பேக்குத்தனமான பதிலை ரசித்தாலும் வெளிப்படுத்திக் கொள்ளாமல் அவருக்கு பயிற்சி கொடுப்பது என்று அனைத்திலுமே புத்தம் புதிய விஜய் சேதுபதியை வெளிப்படுத்தியிருக்கிறார். வெல்டன்..

தான் சந்திக்க விரும்பாதவர்கள் பற்றியே கேட்க விரும்பாமல் தவிர்ப்பதும்.. சக காவல்துறை அதிகாரியிடம் மென்மையாக பேசத் துவங்கி பின்பு கோபத்தில் அடிப்பதும்.. கமிஷனரிடமே பொடி வைத்து பேசுவதும்.. மூர்த்தியிடம் தனது அடுத்தடுத்த பிளான்களை போட்டு வாங்கி தெரிந்து கொள்வதுமாய் திரைக்கதையிலும், வசனத்திலும் மிகுந்த பிரயத்தனப்பட்டு உழைத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.. இயக்குநர் டீமுக்கு நமது பாராட்டுக்கள்..!

ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டராக சக காவலர்களிடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதாக சிற்சில காட்சிகளில் விஜய் சேதுபதி காட்டினாலும், அடி உதவுவது போல அண்ணன், தம்பி உதவமாட்டான் என்பதை காவலர்கள் மீதே காட்டுவதெல்லாம் நம்மை பயமுறுத்துகிறது.

வீட்டிற்கு ரவுடிகள் வந்திருக்கும் சூழலில் போனிலேயே தன் மகனிடமும், மனைவியிடமும் அதைச் செய்.. இதைச் செய் என்று சொல்லி அந்த நிலைமையைச் சமாளிக்கும்விதம் சூப்பர். அருமையான திரைக்கதை. அழகான இயக்கம். அந்தப் பதட்டமான நேரத்தில் நமக்கும் சேர்த்தே படபடப்பை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.

30 வயதாகிவிட்ட மூப்பு முகத்தில் தெரிந்தாலும் ரம்யா நம்பீசனும் ஒரு அழகுதான். கணவருடன் கொஞ்சல்.. உரசல்களுடன் குடும்பத் தலைவிக்கு எடுத்துக்காட்டாகவும் இருக்கிறது இவரது கேரக்டர் ஸ்கெட்ச்.

கணவனை தன் காலில் விழுந்து ஸாரி சொல்ல வைத்திருக்கும் இடத்தில் இப்போதைய இளைஞிகளுக்கு ஒரு ரோல் மாடலாய் ஆகிவிட்டார் ரம்யா.. ஆனாலும் இருவருக்குள்ளும் ஏன் அப்படியொரு முறைப்பு.. கோபதாபம்.. என்பதற்கான காரணத்தை இயக்குநர் சொல்லவே இல்லையே..? மாமியார் வீட்டுடன் சேதுபதிக்கு ஏதும் பிரச்சனையோ..? ஏதோ சில வசனங்கள்.. சில காட்சிகளை தயாரித்தும் நீக்கிவிட்டார்கள் போலிருக்கிறது. அதுதான் இந்தக் குழப்பம்.

பிள்ளைகள் இரண்டுமே அழகு.. வயதுக்கு மீறிய பேச்சும், நடத்தையும் இப்படியொரு பண்பட்ட குடும்பம் நன்றாக இருக்க வேண்டுமே என்கிற எண்ணத்தை ரசிகனுக்குள் புகுத்துவதற்காகவே அநியாயத்திற்கு பேமிலி செண்டிமெண்ட்டை கொட்டியிருக்கிறார் இயக்குநர். இதுவே முழு படத்தையும் ஒரு ஆக்சன் படமாக ரசிக்க முடியாமலும் செய்திருக்கிறது. குடும்பத்தின் காட்சிகளை வெகுவாகக் குறைத்திருக்கலாம்.

படு பயங்கர வில்லனாக வருவார் என்று பார்த்தால் அசால்ட்டு சேது போல அலட்சியமாக பேசியே வில்லத்தனம் செய்திருக்கிறார் வாத்தியாரான எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி. இனிமேல் உன்னுடைய எல்லாத்தையும் நான்தான் எழுதப் போறேன் என்கிற வாத்தியாரின் பேச்சில் விரோதம் மட்டுமே தெரிகிறது. கோபம் மிஸ்ஸிங்கே ஸார்..!

இவருடைய மாப்ளையாக நடித்திருக்கும் அவருடைய ஆக்சன் பெர்பெக்சன். விஜய் சேதுபதியே ஒரு காட்சியில் இவனை முறைக்கச் சொல்லாதய்யா. எனக்கு சிரிப்பு வருது என்கிறார். இந்த வசனத்திற்கு தியேட்டரே அதிரும்வண்ணம் கைதட்டல் கிடைத்துள்ளது. நல்ல நடிப்பு சாமி இவருக்கு..!

நிவாஸ் பிரசன்னாவின் இசையைவிடவும் பின்னணி இசைதான் தூக்கல். அதிலும் அந்த தீம் மியூஸிக் ரசிப்பு.. விஜய் சேதுபதியின் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். ஆனாலும் சவுண்டை கொஞ்சம் குறைத்திருக்கலாம். பாடல்களில் மழை தூறல் ரசிக்க வைத்தாலும் மற்றவைகள் மாண்டேஜ் காட்சிகளாகவே வந்திருப்பதால் இன்னொரு முறை கேட்டால்தான் சாத்தியம். வேல.ராமமூர்த்திக்கு வைத்திருக்கும் தீம் பாடல் அவருடைய இமேஜை துளியும் உயர்த்தவில்லை..

ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணின் கைவண்ணம் அனைத்து காட்சிகளிலும் தெரிகிறது. பாடல் காட்சிகளில் சூப்பர். சண்டை காட்சிகளிலும் அனல் தெறிக்கிறது. போலீஸ் அடி எப்படியிருக்கும் என்பதை மையமாக வைத்தே சண்டை காட்சிகளை அமைத்திருப்பார்கள் போலிருக்கிறது. ஒவ்வொரு அடியும் அப்படி விழுகிறது. சவுண்ட் மிக்ஸிங் செய்த டி.உதயகுமாருக்கு இந்த நேரத்தில் ஒரு சபாஷை தெரிவித்துக் கொள்கிறோம்.

இயக்குநர் சு.அருண்குமாரின் முந்தைய படமானபண்ணையாரும் பத்மினியும்மிக அருமையான குடும்பப் படம்இப்போது இந்தப் படத்தில் அதற்கு நேர்மாறான கதையைத் தேர்வு செய்து இயக்கியிருக்கிறார்.

இப்போதுதான் விசாரணை என்றொரு திரைப்படம் வெளிவந்து போலீஸ் துறையில் இருக்கும் கருப்பு ஆடுகளையும், சாதாரண பொதுமக்கள் அவர்கள் கையில் கிடைத்தால் என்ன ஆகும் என்பதையும் வெட்டவெளிச்சமாக்கிவிட்டது அந்த விசாரணை திரைப்படம். இந்த நேரத்தில் நியாயமான போலீஸை வெளிப்படுத்திக் காட்டும் விதமாய் இந்தப் படத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்.

இது விசாரணை படத்திற்கு முன்பே வந்திருந்தால்கூட கொஞ்சம் ரசித்திருக்கலாம். ஆனால் டூ லேட்டாக இப்போது வந்திருப்பதால் நல்ல போலீஸ் கதையை நம்மால் முழுமையாக ரசிக்க முடியவில்லை.

தமிழ் சினிமா ரசிகர்களின் மனப்பான்மையில் நல்ல போலீஸ் கதை இனிமேல் எந்தக் காலத்திலும் செட்டாகாது. அந்த அளவுக்கு காவல்துறையினர் அட்டூழியத்தை, அக்கிரமத்தை, அநியாயத்தை, அராஜகத்தை, மனித உரிமை மீறலை தியேட்டருக்கு வரும் ரசிகர்களும் அனுபவித்துதான் இருக்கிறார்கள்.

ஆக.. இந்த கதைக் கருவை மனதில் கொண்டு இந்தப் படத்தைப் பார்ப்பதென்பது மகா கொடுமையான விஷயம். முந்தின காலங்களை போல இப்போது போலீஸ் விசாரணையை நியாயம், அநியாயமாக பார்ப்பதெல்லாம் இல்லாத காரணத்தினால் முந்தைய போலீஸ் படங்களுடன் இதனை ஒப்பிட்டு பேசவும் முடியாத நிலைமை..!
மழை தூறலாம் என்கிற ஒரு பாடலில் போலீஸார் படும் கஷ்டத்தையும், அவர்களின் பிரச்சினைகளையும் அழகாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர். அதுமட்டுக்கும் அவருக்கு நமது நன்றிகள்.

ஆனால் அடுத்த சில நிமிடங்களில் மருத்துவமனை வாசலில் வந்து போராடும் மக்களை என்ன ஏன் என்றுகூட கேட்காமல் அடித்து, துவைத்து, விரட்டும் சேதுபதியின் கேரக்டரை பார்த்தவுடன் வந்துட்டாருய்யா வில்லன் என்கிற பீலிங்குதான் ஏற்படுகிறது..!

இதே நல்ல இன்ஸ்பெக்டர்தான் குற்றவாளியை பிடித்தவுடன் சட்டத்திற்கு விரோதமாக 2 நாட்கள் தங்களது கஸ்டடியில் வைத்து அவரை காரிலேயே ஊர், ஊராகக் கடத்திச்  சென்று அவரை அவமானப்படுத்துவதாகச் சொல்லி சட்டத்தை ஏமாற்றுகிறார். கிளைமாக்ஸ் காட்சி மிக, மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அப்பட்டமான ஒரு மனித உரிமை மீறலை செய்கிறார் இன்ஸ்பெக்டர் சேதுபதி.

இப்படியாப்பட்டவர்களை இப்படித்தான் செய்யணும் என்றால் அதுக்கெதுக்கு காக்கி சட்டை போட்டிருக்கும் போலீஸ்..? போலீஸுக்கும், ரவுடிகளுக்கும் வித்தியாசம் வேண்டாமா..? ஒரு ஹீரோயிஸ படமென்றாலும் அவர் சாதாரண பொதுஜனமாக இருந்து இதைச் செய்தால்கூட ஒத்துக் கொள்ளலாம். ஆனால் காக்கியுடை அணிந்த ஒரு பொறுப்பான போலீஸ் ஆபீஸராக இருப்பவர் இதனை செய்துதான் அந்த ஊரில் சட்டத்தை நிலை நாட்ட முடியும் என்றால் பின்பு சட்டமெல்லாம் எதற்கு..? நீதிமன்றங்கள் எதற்கு..?  யார், யார் சட்டவிரோதமாக நடப்பதாக போலீஸுக்கு தெரிகிறதோ.. அவர்கள் அனைவரையும் பெட்ரோல் ஊற்றி எரித்துவிடலாமே..? என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!

இதில் சில என்கவுண்டர்களும் அநியாயமான முறையில் நியாயப்படுத்தப்பட்டிருக்கின்றன. குற்றத்தை ஒத்துக் கொண்டார்கள் என்பதற்காக அவர்களை நீதிமன்றத்தின் முன் கொண்டு வராமல் ஒரு இன்ஸ்பெக்டரே படுகொலை செய்யலாமா..? இப்படித்தான் இவர் செய்கிறார் என்றால் இவர் நல்ல இன்ஸ்பெக்டர் இல்லையே..?

இவர் செய்தால் தப்பில்லை. ஆனால் தவறு செய்தும் மாட்டிய ஸ்கூல் பையன் குண்டடிபட்டு ஆஸ்பத்திரியில் இருக்கும்போது மனித உரிமை கமிஷன் முன்பு குற்றவாளிபோல சோகத்துடன் ஆஜராகிறார் விஜய் சேதுபதி. இதனாலேயே அந்த நேரத்தில் இவர் மீதான பரிதாப உணர்வு வரவேயில்லை.

இந்த சிறுவன் சம்பந்தப்பட்ட விஷயத்தில்கூட இன்னொரு உண்மைச் சம்பவம் ஒளிந்திருக்கிறது.

2004-ம் வருடம் ஜனவரி 7-ம் தேதியன்று சென்னை நீலாங்கரை போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட வெட்டுவாங்கணி பகுதியில் கோவில் உண்டியல் ஒன்று உடைக்கப்பட்டது.

காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டதும் அதே பகுதியைச் சேர்ந்த தமீம் அன்சாரி என்னும் 14 வயது சிறுவன் மீது சந்தேகம் வந்து அவன் போலீ்ஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துச் செல்லப்பட்டு கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டுள்ளான்.

சித்ரவதையின் உச்சக்கட்டமாக அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரான புஷ்பராஜ் தன்னுடைய துப்பாக்கியை காட்டி அன்சாரியை மிரட்டியிருக்கிறார். மேலும் அவன் கண் முன்பாகவே ஒரு குண்டினை துப்பாக்கியில் போட்டு லோடு செய்து அன்சாரியை சுடுவதுபோல மிரட்டியிருக்கிறார். இந்தச் சூழலில் திடீரென்று புஷ்பராஜ் நிஜமாகவே சுட்டுவிட, அந்தக் குண்டு அன்சாரின் கழுத்துப் பகுதியில் பாய்ந்து பின் கழுத்து வழியாக வெளியேறியது.

ரத்த வெள்ளத்தில் கிடந்த அன்சாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு கா்ப்பாற்றப்பட்டார். இந்தச் சம்பவத்திற்காக விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டது. தேசிய மனித உரிமை ஆணையமும் இந்த வழக்கை விசாரித்து தமிழக போலீஸை கடுமையாக விமர்சித்தது. இருந்தும் என்ன புண்ணியம்..?

இந்தக் கொடுமையை செய்த இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் காக்கி உடை பாசத்தின் காரணமாய் போலீஸ் உயரதிகாரிகளின் துணையோடு சட்டத்தின் முன்பிருந்தும் தப்பிவிட்டார். சாதாரண அபராதத் தொகையுடன் தப்பிக்கக் கூடிய வகையில் அவர் மீது இ.பி.கோ. செக்சன் 388-ன் படி சாதாரண காயம் ஏற்படுத்தும்படி நடந்து கொண்டதாக கூறி வழக்கு பதிவு செய்தார்கள்.

இந்தச் சம்பவத்தை உல்டா செய்யும்படியாக சிறுவர் சம்பந்தமான திரைக்கதையை இயக்குநர் ஏன் இஙகே வைத்தார் என்று தெரியவில்லை. ஒருவேளை அந்த இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் செய்ததை நியாயப்படுத்துகிறாரோ என்னவோ..?


திரைக்கதையின்படி பார்த்தாலும் சில லாஜிக் மீறல்கள் இருக்கின்றன. அதே ஊரில் இருக்கும் இன்னொரு ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டர் வாத்தியாருக்கு துணை போகிறார் என்பதை கமிஷனரிடம் சொல்லி அவரையும் பதம் பார்த்திருக்கலாமே..? நீதிபதிகளும் லஞ்சம் வாங்குகிறார்கள் என்கிற உண்மை ஒரு பக்கம் இருக்கட்டும். எந்த ஊர் நீதிபதிகள் சாட்சிகளின் வீட்டுக்கே சென்று விசாரிக்கிறார்கள்..? இந்த அளவுக்கு கமிஷனரின் சப்போர்ட், விஜய் சேதுபதிக்கு இருக்கும்போது அவர் எதற்கும் கவலைப்படத் தேவையே இல்லையே. அவர் நினைத்திருந்தால் தன் வீட்டுக்கும், தனக்கும் போலீஸ் பாதுகாப்பை கேட்டே பெற்றிருக்கலாம்..

மருமகனான சப்-இன்ஸ்பெக்டரை எரித்த வழக்கு என்ன ஆனது..? கமிஷனர் சட்டைப் பாக்கெட்டில் இருக்கிறார் என்றால் இந்த வழக்கிலேயே வாத்தியாரை காலி செய்திருக்கலாமே..? ஆனால் இன்ஸ்பெக்டர் பொறுப்பை எடுத்துக் கொண்டு வந்த பின்பு, அதை ஒரு படத்தின் ஹீரோவாக செய்திருப்பதெல்லாம் ரொம்பவே டூ மச்..!  ஹீரோயிஸம் தேவைதான்.. ஆனால் இந்த அளவுக்கு தேவையா இயக்குநர் ஸார்.?

விஜய் சேதுபதிக்கு இந்த ஹீரோயிஸ கேரக்டர் நிச்சயம் ஷூட் ஆகும்தான். ஆனால் வேறு கதை, திரைக்கதையில்..!


சேதுபதியின் மீசை முறுக்குதான். ஆனால் கம்பீரம் குறைவு..!