எல்லாரும் ஜோரா கை தட்டுங்க! - பாகம்-1

30-06-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே...


எல்லாரும் ஜோரா கை தட்டுங்க.. தட்டிட்டீங்களா.. இன்னும் கொஞ்சம் நல்லாத் தட்டுங்க.. டெல்லிவரைக்கும் கேக்க வேணாம்..

வார்டு கவுன்சிலர் தேர்தல்ல நிக்குறதுக்கே ஆள் பலம், படை பலம், இதோட புஜ, கஜ பலம்.. கடைசியா போலீஸ் ஸ்டேஷன் ரெக்கார்டு எல்லாமே ஒரு வேட்பாளருக்குத் தேவைப்படுது. இதுல ஜனாதிபதி தேர்தல்ன்னா.. சும்மாவா..

யாரோ ஒரு அம்மாவைத் தேர்ந்தெடுத்து பெண்களுக்கு வாழ்க்கையில்தான் சம உரிமை கொடுக்க முடியவில்லை.. பாராளுமன்றத்தில்தான் 33 சதவிகிதம் கொடுக்க முடியவில்லை. இதிலாவது 12 ஆண்களுக்குப் பிறகு ஒரு பெண்ணிற்கு வாய்ப்புக் கொடுத்துள்ளோம் என்ற ரீதியில் அறிவிப்பை வெளியிட்டுவிட்டார்கள்.

அந்தம்மா முக்காடு அணிந்து கேமிராக்கள் முன்னிலையில், முக்காலியில் அமர்ந்தபோதே தெரிந்துவிட்டது, ரப்பர் ஸ்டாம்ப்பை கையில் எடுத்தால் ஒரு பத்து இடத்திலாவது குத்தாமல் விட மாட்டார் என்று..

"அந்தம்மா யாரு? அரசியல்வாதியா? என்ன அரசியல் பண்ணிருக்காங்க..? அரசியல்ன்னா என்னன்னாவது தெரியுமா? இந்திய அரசியல்வாதிகளுக்குன்னே உலகத்துல ஒரு தனி மரியாதை இருக்கு.. அது அந்தம்மாவுக்கு இருக்கா..? இல்லையே..? பின்ன எதுக்கு 'பிரதிபா..' 'பிரதிபா..' 'பிரதிபா'ன்னுட்டு ஒப்பாரி வைக்குறானுக எல்லா சேனல்காரனும்..?" என்று சொக்கலால் பீடி குடித்தபடியே நம்ம கபாலி அண்ணேன், கபாலி தியேட்டர் வாசல்ல, ஓசில சரக்கடிச்சு புலம்பிக்கிட்டிருந்தாருங்கோ..

இது எப்படியோ நம்ம அரசியல்வாதிகளின் பாசக்காரப் பயல்களுக்கு.. அதாங்க... பத்திரிகைகாரங்களுக்குத் தெரிஞ்சு போய் "அந்தம்மா யாரு? எவரு? குலம் என்ன? கோத்திரம் என்ன?"ன்னு நோண்ட ஆரம்பிச்சிட்டாங்க.. ஒண்ணொண்ணா வெளில வந்துக்கிட்டிருக்கு..

அதுல இதுவும் ஒண்ணு சாமி.. படிச்சுப் பாருங்க.. இன்னிக்கு 'தினமணி' பேப்பர்ல பத்திரிகையாளர் திரு.அருண்செளரி எழுதிருக்கார்.. இதுக்கும் ஜாதி சாயம் பூசிராதிங்க சாமிகளா.. 'மேட்டர்' என்னன்னு மட்டும் பாருங்க..

"என்னைத் தேர்வு செய்திருப்பது மற்றப் பெண்களுக்கு ஊக்குவிப்பாக இருந்து அவர்களும் அதிகாரம் பெற வழிவகுக்கும்" - இது குடியரசுத் தலைவர் பதவிக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதிபா பாட்டீலின் அடக்கமான ஏற்புரையாகும்.

மகளிர் முன்னேற்றத்திலும், பெண் கல்வியிலும் ஆர்வம் உள்ள சமூகத் தொண்டர், கிராமப்புற பொருளாதார வளர்ச்சி, மகளிர் நலன் ஆகியவற்றுக்காக அயராது பாடுபடுகிறார் என்று பிரதிபா பற்றிய வாழ்க்கைக் குறிப்பில் கூறப்படுகிறது.

மகிளாவிகாஸ் மகா மண்டல் ஆதரவில், "பிரதிபா மகிளா சஹகாரி வங்கி, மகாராஷ்டிரம்" என்ற பெயரில் கூட்டுறவு வங்கியை ஜலகாமில் அவர் தொடங்கியது இதற்கு ஆதாரமாகக் காட்டப்படுகிறது. ஷரம் சாதனா அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர், ஜலகாம் மாவட்டத்தில் உள்ள சர்க்கரை ஆலையின் முதன்மை ஊக்குவிப்பாளர், தலைவர், ஏழை கிராமப்புற இளைஞர்களின் நலனுக்காக பொறியியல் கல்லூரியை நிறுவியவர் என்ற பட்டங்களும் பிரதிபாவுக்கு உண்டு.

மற்றப் பெண்களுக்கு உதவ, தன்னுடைய பெயரிலேயே அவர் தொடங்கிய பிரதிபா மகிளா சஹகாரி கூட்டுறவு வங்கியின் கதையை முதலில் பார்ப்போம்.

அவருடைய வாழ்க்கைக் குறிப்பிலும் பத்திரிகைகளின் செய்திகளும் இந்த வங்கி குறித்து இடம் பெற்றுள்ளது. ஆனால் அந்த வங்கி தொடர்ந்து செயல்பட்டால், முதலீட்டாளர்களின் நலன் முற்றிலும் பாழ்பட்டுவிடும் என்ற எச்சரிக்கையோடு ரிசர்வ் வங்கி அதை இழுத்து மூடிவிட்டது என்ற தகவல் எதிலும் இல்லை.

தன்னைத் தலைவராகவும், தன்னுடைய உறவினர்கள் சிலரை இயக்குநர்களாகவும் கொண்டு 1973-ல் இந்த கூட்டுறவு வங்கியை பிரதிபா பாட்டில் தொடங்கினார். அவர் இயக்குநராகப் பல முறை தொடர்ந்திருக்கிறார். அவருடைய உறவினர்கள் ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் மாறி, மாறி வங்கியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். அந்த வங்கி தொடங்கியது முதல் இழுத்து மூடப்படும்வரை அதன் நிறுவனம், தலைவர் என்ற அந்தஸ்திலேயே பிரதிபா தொடர்ந்து செயல்பட்டார்.

அந்த வங்கி முறையாக நிர்வகிக்கப்படாததால் 1995-ல் ரிசர்வ் வங்கி அதை நலிவடைந்த வங்கிகளின் பட்டியலில் சேர்த்தது. 1994-மார்ச்சில் கிடைத்த ஆய்வறிக்கையின்படி அதன் மூலதன ஆதாரம் வெகுவாகச் சிதைந்துவிட்டதால், அதை மறுசீரமைப்புக்கான வங்கிகளின் பட்டியலில் ரிசர்வ் வங்கி சேர்த்தது.

2002-ல் மீண்டும் அந்த வங்கியின் நிதி இருப்பு, இதர செயல்பாடுகள் குறித்து ஆழ்ந்த ஆய்வை மேற்கொண்டது ரிசர்வ் வங்கி. அதன் நிர்வாக இயக்குநர் பி.பி.மாத்தூர் அந்த ஆய்வுக்குப் பிறகு பின்வரும் நிதி முறைகேடுகளைப் பட்டியலிட்டுள்ளார்.

1. வங்கியின் உண்மையான அல்லது மாற்றத்தக்க செலுத்தப்பட்ட மூலதனம், ரொக்கக் கையிருப்பு ஆகியவற்றின் மதிப்பு மைனஸ் ரூ.197.67 லட்சமாக இருக்கிறது. இந்த வங்கியின் சொத்து மதிப்பு அது செலுத்த வேண்டிய கடனை முழுமையாக அடைப்பதற்கு பற்றாத நிலையில் இருக்கிறது. ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கும் குறைந்தபட்ச மூலனதப் பங்கு அதன் வசம் இல்லை. இது மொத்த டெபாசிட் தொகையின் மதிப்பில் 26% சதவீதம்.

2. வங்கியின் மொத்தச் சொத்து மதிப்புக்கும் அது செலுத்த வேண்டிய கடனுக்கும் உள்ள விகிதாச்சாரத்தைக் கணக்கிட்டால் சொத்தைப் போலவே கடன் 312.4% இருக்கிறது. அதாவது கடனை அடைக்க முற்பட்டால் வங்கியின் மூலதனம் முழுக்கத் தீர்ந்து அது திரட்டியுள்ள டெபாசிட்டுகளிலிருந்தும் ரூ.197.67 லட்சம் தேவைப்படும். அதாவது கால்பங்கு டெபாசிட்டுகளைத் தியாகம் செய்தால்தான், கடனே அடையும் என்ற நிலைமை.

3. அந்த வங்கி அளித்தக் கடனில் 65.8% அளவு வாராக்கடன்களாக, அதாவது திரும்ப வசூலிக்க முடியாத கடனாகப் போய்விட்டது.

4. வங்கி நிர்வாகம் இந்தக் கடன்களைத் திரும்ப வசூலிக்கவோ, அதன் நிதியாதாரத்தை வலுப்படுத்தவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் இந்த வங்கியைத் தொடர்ந்து செயல்பட அனுமதித்தால் இப்போதுள்ள டெபாசிட்தாரர்கள் மட்டுமல்ல. இனி எதிர்காலத்தில் விவரம் தெரியாமல் இதில் முதலீடு செய்யும் டெபாசிட்தாரர்களின் நலனும் பாதிக்கப்படும் என்பதால் வங்கியை உடனடியாக மூடிவிடுமாறு உத்தரவிடப்படுகிறது. வங்கி நடத்துவதற்கு அளித்த உரிமமும் ரத்து செய்யப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி தனது உத்தரவில் கூறியிருக்கிறது.

இந்தக் கூட்டுறவு வங்கியில் பிரதிபாவைத் தவிர, இதர இயக்குநர்கள் அனைவரும் அவருடைய சகோதரர்கள் அல்லது உறவுக்காரர்கள். அதாவது அனைவருமே ஆண்கள். மகளிருக்கு அதிகாரம் வழங்க மூடு திரைக்குள் ஆண்கள் என்று இதை கருதலாம்.

ஒரு குடும்பத்தாரால் நிர்வகிக்கப்படும் இந்த வங்கி தொடர்ந்து மக்களின் பணத்தைத் தவறாகப் பயன்படுத்தி வங்கியை போண்டியாக்கிக் கொண்டிருக்கிறது. இதன் உயர் நிர்வாக அமைப்பைக் கலைக்க வேண்டும் என்று மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கம் தொடர்ந்து அறிக்கை மேல் அறிக்கை மாநில கூட்டுறவுத் துறை, மாநில அரசு, மத்திய அரசு, உள்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு அனுப்பி கொண்டேயிருந்தது.

பிரதிபா பாட்டீலை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றுகூட தனது மனுவில் வலியுறுத்தியிருந்தது. மகாராஷ்டிரத்தில் உரிய அரசு அமைப்புகளுக்கும் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் அப்போதைய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சோனியாகாந்திக்கும்கூட புகார் மனுக்கள் அனுப்பப்பட்டிருந்தது.

03.12.2002-ல் அனுப்பியிருந்த விரிவான புகாரில் வங்கியின் நிர்வாகியும், தலைவருமான பிரதிபா பாட்டீல், வங்கியின் பணத்தைத் திட்டமிட்டு சுயலாபத்துக்குப் பயன்படுத்த, எந்தவித ஜாமீனும் இல்லாமல் தனது உறவினர்கள், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு லட்சணக்கணக்கில் எப்படி கடன் அளித்து வருகிறார் என்று தொழிலாளர்கள் சங்கம் பட்டியல் இட்டிருந்தது.

வங்கியின் நிதி நிலைமை படு மோசமாக இருந்த நிலையிலும் தனது உறவினர்கள் வாங்கிய லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கடன்களுக்குச் செலுத்த வேண்டிய வட்டி, மற்றும் அபராத வட்டி போன்றவற்றை பிரதிபா பாட்டீல் தள்ளுபடி செய்ததையும் சங்கம் தனது புகாரில் சுட்டிக் காட்டியிருந்தது.

பிரதிபாவின் உறவினர்களான அஞ்சலி திலீப் சிங் பாட்டீலுக்கு ரூ.21.86 லட்சமும், கவிதா அரவிந்த்பாட்டீலுக்கு ரூ.8.59 லட்சமும், ராஜ்கெளர் திலீப்சிங் பாட்டீலுக்கு ரூ.2.47 லட்சமும் கடன் தள்ளுபடி அனுமதிக்கப்பட்டது.

அதன் பிறகு அந்த வங்கிக் கணக்குகளை அவருடைய உறவினர்கள் மூடி விட்டனர். இவ்வாறாக இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ரூ.32.93 லட்சம் மக்களுடைய பணம் ஏப்பம் விடப்பட்டது என்று சங்கம் சுட்டிக் காட்டுகிறது.

ஊழியர் சங்கங்களின் புகார்கள் குறித்து வங்கியில் யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. வங்கியின் சட்ட ஆலோசகர் பிரதிபாவின் அண்ணன் திலீப்சிங் பாட்டீல்தான். இந்தக் கடன் தள்ளுபடியில் பலன் அடைந்ததே திலீப்சிங்கின் மனைவிதான். இந்த வகையில் மட்டும் பிரதீபாவும் அவருடைய உறவினர்களும் ரூ.2 கோடி பணத்தை ஏப்பம் விட்டுவிட்டதாக ஊழியர்கள் சங்கம் தெரிவிக்கிறது.

கடன் பெற்ற பிரதிபாவின் உறவினர்கள்

1. திலீப்சிங் என்.பாட்டீல் - அண்ணன் - ரூ.3,09,562

2. திலீப்சிங் என்.பாட்டீல் - அண்ணன் - ரூ.5,62,840

3. ராஜேஸ்வரி கிஷோரி சிங் பாட்டீல் - சகோதரரின் மருமகள்-ரூ.45,82,670

4. கிஷோர் திலீப்சிங் பாட்டீல் - அண்ணன் மகன் - ரூ.51,02,183

5. கிஷோர் திலீப்சிங் பாட்டீல் - அண்ணன் மகன்
உதவ்சிங் தக்டு ராஜ்புத் - உறவினர் - ரூ.43,87,680

6. உதவ்சிங் தக்டு ராஜ்புத்
ஜெயஸ்ரீ உதவ்சிங் தக்டு ராஜ்புத் - உறவினர்கள் - ரூ.42,89,602

7. ரந்தீர்சிங் திலீப்சிங் ராஜ்புத்
உதவ்சிங் தக்டு ராஜ்புத் - உறவினர் - ரூ.21,44,800

8. ஜோதி விஜயசிங் பாட்டீல்
கிஷோர் திலீப்சிங் பாட்டீல் - உறவினர் - ரூ.10,69,893


இப்பச் சொல்லுங்க.. திருமதி பிரதிபா பாட்டீல் அரசியல்வாதியா..? இல்லையா..? ஜனாதிபதி பதவிக்குப் பொருத்தமானவரா..? இல்லையா? யோசிங்க.. யோசிச்சுக்கிட்டே இருங்க..

இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம்

யார் செய்தது குற்றம்..?

29-06-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..


என்றும்போல் அன்றும் அலுவலகத்தில் ஆணி பிடுங்கிக் கொண்டிருந்தேன். நண்பர் ஒருவன் போன் செய்தான். தன் தந்தையை GH-ல் அட்மிட் செய்திருப்பதாகவும், தனக்கு அர்ஜெண்ட்டாக பணம் கடனாக வேண்டும் என்றும் கேட்டான். என் நிலைமையே பரதநாட்டியம் ஆடிக் கொண்டிருக்கிறது என்பதை சற்று நயனமாகவே சொல்லி வைத்தேன். ஆனாலும் மாலையில் GH வந்து அவனைச் சந்திப்பதாகச் சொன்னேன். சொன்னபடியே செல்லவும் செய்தேன்.

அரசு பொது மருத்துவமனையின் எலும்பு முட நீக்கியல் வார்டு. உள்ளே கட்டிலுக்கு கட்டில் காலோ, கையோ தொங்கவிடப்பட்டிருக்க நோயாளிகள் சோகத்துடன் படுத்திருந்தார்கள். என் நண்பனின் தந்தை வீட்டில் குடத்தைத் தூக்கும்போது ஸ்லிப்பாகி கையை ஊன்றியிருக்கிறார். கை முறிந்து போய் விட்டதாம். இப்போது கட்டிலில் படுத்திருந்தார்.

அரசு மருத்துவமனைகளுக்கே உரித்தான வாடை குப்பென்று தூக்க.. வார்டு முழுக்க அனைவரின் முகத்திலும் ஒரு ஏமாற்றம்.. எப்போதடா வீட்டுக்குச் செல்வோம் என்ற பரிதவிப்பு நோயாளிகளைவிட, அவர்களின் அருகில் கையைக் கட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தவர்களின் கண்களில் தெரிந்தது. நண்பரின் தந்தையிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன். கையோடு கொண்டு சென்றிருந்த ஹார்லிக்ஸ் சிறிய பாட்டிலை கொடுத்துவிட்டு என்ன நடந்தது என்று விசாரித்தேன். அவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.

நிகழ்ந்ததை சாதாரண ஒரு நிகழ்வு என்ற ரீதியில் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொண்டு பேசினார். அந்தமட்டிலும் எனக்கு மகிழ்ச்சிதான். பொதுவாக நோயாளிகள் மருத்துவமனை வாசல்வரைக்கும் தெம்பாக பேசுவார்கள். உள்ளே நுழைந்தவுடன் ஆஸ்பத்திரிக்கே உரித்தான முகத்துடன் ஏதோ இனம் புரியாத பயத்திற்கு ஆட்பட்டுவிடுவார்கள்.

இவர் அருமையாக, தெளிவாகப் பேசினாலும் அடிக்கடி எதிரில் இருந்த ஒரு பெட்டையே பார்த்துக் கொண்டிருந்தார். என்ன அங்கே என்பதைப் போல் நானும் திரும்பிப் பார்த்தேன். அங்கே ஒரு இளைஞர் கை, கால்களில் கட்டுப் போட்டு படுத்திருந்தார். வலது கால் தூக்கிக் கட்டப்பட்டிருந்தது. அவரது அருகில் இளம் பெண் ஒருவர் சோகத்துடன் கைகளைக் கட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தார். அவருக்கு அருகில் தரையில் கிராமத்து ஆட்களான ஒரு வயதான தம்பதியினர் அமர்ந்திருந்தார்கள்.

அந்த இளைஞன் பெண்ணிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். அந்தப் பெண்ணோ அதைக் காதில் வாங்காதது போலவே வெறித்தப் பார்வையுடன் தரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இங்கே எனது நண்பனின் தந்தை தன் மனைவியிடம், "போய் என்னன்னு கேளுடி.." என்று கோபப்பட.. நண்பனின் அம்மா அந்த பெட்டை நோக்கி விரைந்தார்.

நண்பரின் தந்தை என்னிடம், "அந்தப் பொண்ணுக்கு கல்யாணமாகி அஞ்சு நாள்தான் ஆச்சு.. பெட்ல படுத்திருக்கிறவன் அந்தப் பொண்ணோட புருஷன்தான்.. நேத்து ராத்திரி பிரெண்ட்ஸ்களுக்கு பார்ட்டி தர்றேன்னு ஹோட்டல்ல நல்லா ஊத்திருக்கானுக.. பைக்ல வீட்டுக்குப் போகும்போது லாரில மோதி அடிபட்டுட்டான்.." என்று சுரத்தமேயில்லாமல் சொன்னார். அதன்பின் அந்தப் பெண்ணை சற்று உற்றுப் பார்த்தபொழுதுதான், கழுத்தில் இருந்த தாலி கயிற்றின் பளபளப்பு தெரிந்தது.

நண்பனின் அம்மா அந்த இளைஞனிடம் பேசுவதும், பின்பு அந்தப் பெண்ணிடம் பேசுவதுமாக இருந்தவர் ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் எங்களிடம் வந்தார். "என்னவாம்..?" என்று நண்பனின் தந்தை கேட்க.. "அவன் அவளை வீட்டுக்குப் போகச் சொல்றான்.. அவ போக மாட்டேங்குறா.. இருந்து தொலையறேன்கிறா.." என்று அலுப்பாகச் சொன்னார். இப்போது அந்தப் பெண் கணவனிடம் முகத்துக்கு நேராக கையை நீட்டி கோபமாகப் பேசுவது தெரிய.. ஒட்டு மொத்த ஹாலும் திரும்பிப் பார்க்கிறது. கணவன் முகத்தைத் திருப்பிக் கொள்ள..

தரையில் அமர்ந்திருந்த வயதானவர் எழுந்து அந்தப் பெண்ணின் தோளைத் தட்டி ஏதோ சொல்ல.. அவரது கையைத் தட்டிவிட்டு அந்தப் பெண் சுவரோமாகச் சென்று சாய்ந்து கொண்டு சொட்டு சொட்டாக வடிந்த கண்ணீரை யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்டாள்.

அந்த வயதானவர் எங்களிடம் வந்து "கூஜா இருக்குமா? மாப்ளைக்கு பால் வேணுமாம்.. வாங்கிட்டு வந்திர்றனே..?" என்று கேட்டார். நண்பனின் மனைவி எடுத்துக் கொடுக்க.. அப்படியே என் நண்பனும் "வாடா.. ஒரு காபி குடிச்சிட்டு வருவோம்.." என்று என்னை வெளியே இழுக்க அந்த முதியவருடன் வெளியில் வந்தோம்.

முதியவரிடம் "என்னங்கய்யா பொண்ணு ஏன் இப்படி கோபப்படுது..?" என்று நண்பன் கேட்க சன்னமான குரலில் பேசத் துவங்கினார் அவர். "என்னத்தைச் சொல்றது தம்பி.. இவன் நல்ல பையன்தான்.. நம்ம ஊர் ஒன்றியச் செயலாளரோட தம்பி.. நாலு ஏக்கர் நிலம் இருக்கு. ரெண்டு, மூணு வீட்டை வாடகைக்கு விட்ருக்காங்க.. நல்ல குடும்பம்தான்.. ஏதோ சேக்காளிகளோட போய் குடிக்கப் போய் இப்படி ஆயிருச்சு. இது அந்தப் புள்ளைக்குப் புரியலை.. 'குடிகாரனை என் தலைல கட்டி வைச்சிட்டியே'ன்னு நேத்துல இருந்து லட்சம் தடவை எங்களைக் கரிச்சுக் கொட்டிட்டா.." என்றவர் தன் ஒட்டிப் போன வயிற்றைத் தடவிக் கொண்டே "ஏன் தம்பி.. இங்கன ஹோட்டல் இருக்குமா? ஏதாவது சாப்பிடணுமே? அவளும் சாப்பிடாம கிடக்கா.." என்றார் பரிதாபமாக.

நண்பன் என்னைப் பார்க்க.. நான் அவனைப் பார்க்க.. நண்பன் என்னிடம், "டேய் இவரை டீக்கடைக்குக் கூட்டிட்டுப் போ.. நான் இவருக்கு ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வரேன்.." என்று சொல்லிவிட்டுப் போனான். கடையில் இரண்டு பால் வாங்கிக் கொண்டு நானும், முதியவரும் காபி குடித்தோம். தன் சொந்தக் கதையை சொன்னார் மனிதர்.

கல்யாணமாகி இருபது வருடம் கழித்து பிறந்த மகளாம் இவர். ஆசையாக அத்தனை ஆண்டுகள் கழித்து பிறந்தவள் என்பதால் எப்போதும்போல செல்லமாகவே வளர்த்திருக்கிறார்கள். தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் படித்துள்ளார். அந்த ஊரிலேயே இந்தப் பெண்தான் அழகு என்பதால் நிறைய பேர் பொண்ணு கேட்டு வந்து தொந்தரவு கொடுக்க.. இவர்தான் உள்ளூர்லேயே கட்டிக் கொடுத்தால் நம்ம கண்ணு முன்னாடியே பொண்ணு நல்லா வாழறதை பார்க்கலாமே என்ற முடிவில் இந்தப் பையனுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார். மாப்பிள்ளை நிஜமாகவே பையன்தான்.. வயது 22. பெண்ணுக்கு வர்ற ஆவணி வந்தா 22-ஆம்.

கல்யாணத்திற்கு இரண்டு அமைச்சர்கள், நான்கு எம்.எல்.ஏ.க்கள் வந்ததால், "பெரிசா குலதெய்வம் சாமி கும்பிட்ட மாதிரி நடந்துச்சு தம்பி.. எல்லாம் எங்க செலவுதான்.. கையை மீறி 2-கிட்ட போயிருச்சு.. அடுத்த வருஷம் முந்திரி தோப்பை மாப்ளை மூலமா ஏலத்துல எடுத்து, கடனை அடைச்சிரலாம்னு நினைச்சேன். என் நேரம்... ஆரம்பத்துலேயே இப்படி ஆயிருச்சு.." என்று புலம்பியபடியே வந்தார்.

பெண்ணிடம் வந்து பாலை நீட்ட அவள் கையில் வாங்கிக் கொள்ளவே இல்லை.. பின்பு தரையில் அமர்ந்திருந்த பெண்ணின் அம்மாவே அதை வாங்கி டம்ளரில் ஊற்றிக் கொடுக்க இதையும் வாங்க புதுப்பெண் மறத்துவிட்டாள். இளைஞன் தன்னைக் கஷ்டப்பட்டு முதுகு வளைத்து எழுந்து கையில் வாங்கி குடித்தான். பார்க்கவே பாவமாக இருந்தது. அந்தப் பெண்ணோ தலையை சுவற்றில் சாய்ந்து கொண்டு உலகமே மூழ்கிவிட்டதைப் போல் நின்றிருந்தாள்.

நண்பன் இப்போது ஹோட்டலிலிருந்து திரும்பி வந்து அவர்களிடம் பார்சலை நீட்ட முதியவர் அதை வாங்கி தன் மனைவியிடம் கொடுத்து சாப்பிடச் சொன்னார். அந்தம்மாவோ அதை எடுத்து பிரித்து தன் மகளிடம் கொடுத்து சாப்பிடச் சொல்ல.. அந்தப் பெண் அசையவில்லை.

பக்கத்து பெட்டில் சுற்றியிருந்த பெண்கள் இருவரும் சாப்பிடச் சொல்லி வற்புறுத்த முடியாது என்று மறுத்து முகத்தைத் திருப்பிக் கொள்ள, அந்த அம்மா அழுகவே ஆரம்பித்துவிட்டார். இப்போது அந்தப் பெண் சுவற்றில் தலையைப் புதைத்துக் கொண்டு அழுக.. மாப்பிள்ளைதான் பாவம்.. பரிதாபத்தில் இருந்தான். தேவையா அவனுக்கு..?

நண்பனின் தந்தை சொன்னார்.. "எதுக்கு இப்படி குடிக்கணும்? குடிச்சிட்டு பைக் ஓட்டணும்? இப்ப யார் அழுகுறது? இவனுகளையெல்லாம்.." என்று பொருமினார். உண்மைதானே..? ஏன் மது அருந்த வேண்டும்? எதற்காக..? நண்பர்கள் தேவைதான். இல்லை என்று மறுக்கவில்லை. அது உடலைக் குழியில் இறக்கும்வரையில் வரும் நட்பாக இருக்க வேண்டும். கொண்டாட்டங்கள் தேவைதான்.. அது வாழ்வின் ஆதாரமான நம் உடலையே பாதிப்பதாக இருக்கக்கூடாது.. திருமணம் என்றாலே பார்ட்டி வைப்பது என்பது பொருளாதாரத்தில் அளவுகோல் இல்லாத குடும்பத்தினர் கையில் வைத்திருந்த வாக்கிங்ஸ்டிக். அது இப்போது கிராமம்வரைக்கும் பரவி.. சாணி தட்டுவோரின் கையில்கூட வந்து உட்கார்ந்துவிட்டது.

'குடி குடியைக் கெடுக்கும்' என்று டாஸ்மாக் கடை வாசலில் எழுதி வைத்திருந்தாலும் குடிப்பவன் குடித்துக் கொண்டுதான் இருக்கிறான். 'எக்கேடு கெட்டாவது செத்துத் தொலைந்து போங்கடா. எங்களுக்கு பணம்தான் முக்கியம்' என்று அரசுகளும் ஒரு முடிவு கட்டிவிட்டன. இதில் சாதாரண பொதுஜனத்தைப் பற்றி யாருக்கு கவலை?

இப்போது இந்த இளைஞனின் அருகில் இருந்து இவனைப் பார்த்துக் கொள்வது யார்? பாட்டிலை எடுத்துக் கொடுத்த டாஸ்மாக் கடைக்காரனா? அல்லது உடன் இருந்து சியர்ஸ் சொன்ன நண்பர்களா? இல்லையே.. சம்பந்தமே இல்லாமல் அவன் மனைவியும், மனைவியின் பெற்றோர்களும்.. இதென்ன கொடுமை..?

இன்றைய இளைய சமுதாயத்தினரை கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்த்து வருகிறது நமது குடும்ப சமூகம். மருத்துவமனையில் யாரையாவது பார்க்கச் சென்றால்கூட 'ஆபீஸில் இருந்து வரும்போது அப்படியே பார்த்திட்டு வந்திரலாம்..' என்றுதான் ஐடியா செய்கிறார்களே ஒழிய.. 'பிள்ளைகளை அழைத்துச் செல்வோம். அவர்களுக்கும் ஆஸ்பத்திரி பற்றிய ஒரு அறிவும், தெளிவும் பிறக்கட்டும்' என்று யாரும் சொல்வதில்லை. செய்வதுமில்லை.

பாருங்கள்.. அந்தப் மாப்பிள்ளை பையனுக்கு இப்போதைய கவலை.. 16,000 ரூபாய் கொடுத்து வாங்கிய செல்போன் காணவில்லையாம். "எந்த இடத்தில் விழுந்திருந்தேன். செல்போனை யாராவது எடுத்தார்களா? யாராவது கேட்டீர்களா?" என்று நினைவு தெரிந்த நேரம் முதல் கேட்டுக் கொண்டேயிருந்தானாம்.. என்ன செய்வது இந்த இளைஞனை..?

உயிர் பிழைத்தது முக்கியம் என்ற நினைப்போ, இப்படி சம்பந்தமில்லாதவர்களை கஷ்டப்படுத்துகிறோமே என்ற குற்றவுணர்வும் அந்த இளைஞனிடம் துளியும் இல்லாமல் இப்படி ஒரு கேள்வியை கேட்டிருக்கிறானே.. அதிலும் அந்தப் பெரியவரை அந்த இடத்திற்கே சென்று தேடச் சொன்னானாம். நண்பனின் தந்தைதான் சத்தம்போட்டு அமைதிப்படுத்தினாராம்.

விளிம்பு நிலை மக்களைக் கை தூக்கிவிடுகிறோம் என்று சொல்லி வரும் அரசுகள் அதே விளம்பு நிலை மக்களை தங்களுடைய முட்டாள்தனத்தால் அதலபாதாளத்திற்குக் கொண்டு சென்று உயிரோடு புதைத்து வருகின்றன. படித்தவர்கள், பணக்காரர்கள் எப்படியாவது தப்பித்துக் கொள்வார்கள். ஆனால் இந்த மக்கள்.. இவர்களுக்கு அப்போதைய சந்தோஷம்தான் ஒரு கண வாழ்க்கை. அதுவே போதும் என்கின்ற அற்ப திருப்தியுடையவர்கள். அதனால்தான் ஜெயிக்கின்ற அரசுகள் அனைத்தும் அவர்களுடைய பணத்தையே சூறையாடி, அவர்களுக்கே கொடுத்து ஆட்சியைக் கைப்பற்றுகின்றன.

டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடினால்தான் என்ன? அரசுக்கு வருவாய் போய்விடும்.. டாஸ்மாக்கில் மட்டும் 4000 கோடி ரூபாய் சுளையாக வருமானமாக வருகிறது என்கிறது அரசு. இது யாருடைய பணம்? மக்கள் பணம்? மக்களுக்கு யார் பணம் கொடுத்தது? அரசு.. அரசுக்கு யார் பணம் கொடுத்தது.. அரசுகளேதான்.. அவர்களே அச்சடித்து அவர்களே கொடுத்து.. பின்பு அவர்களே வாங்கிக் கொள்கிறார்கள்.

தங்க நகைகளை உருக்கும்போது சேதாரமாக சில துளிகள் போய்விடுமே.. அதைப்போல் இங்கே மனித உயிர்கள் போய்க் கொண்டிருக்க அரசுகள் மட்டும் நீடித்து வருகின்றன. அரசுகளுக்குத்தான் முழு பொறுப்பா? ஏன் குடிக்காமலேயே குடிமகன்களால் இருக்க முடியாதா?

முடியும். அதற்கு முதலில் அவனுக்கு ஒரு தெளிவு வேண்டும். குடிப்பதனால் வரக்கூடிய தீமைகள் என்னென்ன என்பது அவன் மூளைக்கு எட்டியிருக்க வேண்டும். குடிப்பழக்கத்தினால் இன்னென்ன நோய்கள் ஏற்படும். மரணம் நிச்சயம்.. குடும்பமே சீரழிந்துவிடும். ஒருவரின் வாழ்க்கை பாதையும் மாறிவிடும்.. அது ஆபத்தானது என்று எந்தப் பள்ளிப் பாடப் புத்தகத்தில் இருக்கவில்லை. 'இதுவெல்லாம் அவுங்கவுங்க வீட்லயே கத்துக்குவாங்க. நாங்க எதுக்கு அதைக் கத்துக் கொடுக்குறோம்.. எல்கேஜிலேயே உங்க பிள்ளை மவுஸ். மானிட்டர்ன்னு கலக்குறான் பாருங்க..' என்று சொல்லி நம் பெற்றோர்களின் மூளையும் மழுங்கடிக்கப்பட்டு வருகிறது.

குடிப்பழக்கத்தின் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு வேண்டும்.. அதை வழங்குவது கல்விதான்.. அந்தக் கல்வி பாடத் திட்டத்திலேயே இது இல்லையென்பதால்தான் சில மாதங்களுக்கு முன் ஈரோடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிலர் டாஸ்மாக் கடையில் ஸ்கூல் யூனிபார்மோடு பீர் குடித்துக் கொண்டிருக்கும் அற்புதக் காட்சி பத்திரிகைகளில் வலம் வந்தது.

இவர்களில் ஒருத்தராவது இப்போது துன்பப்படுகின்ற இந்த இளைஞரைப் போல் வேதனையடைய மாட்டார் என்பது என்ன நிச்சயம்? என்றைக்கோ ஒரு நாள் அப்படியரு சூழல் வரும்போதுதானே யோசிப்பார்கள், இந்த வித்து எங்கிருந்து ஆரம்பித்தது என்று..?

இப்போது அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து இளைஞன் ஏதோ கெஞ்ச ஆரம்பித்தான்.. ஒட்டு மொத்த அறையும் அவர்களைத்தான் வேடிக்கை பார்த்தது. ஒரு நர்ஸ் அவர்கள் அருகில் சென்று, "இந்தா.. ரொம்ப ஓவரா பந்தா காட்டாத.. நீ செய்யாம வேற யார் செய்வா..? நாங்கெல்லாம் செய்ய முடியாது.." என்று சொல்ல அந்தப் பெண் எரித்து விடுவதைப் போல் பார்த்தார். அந்தப் பார்வையின் கொடூரம். அப்பா.. அப்படியரு பார்வை..

காரணம், இப்போது மாப்ளைக்கு 'டாய்லெட்' அவசரம்.. யார் அந்த Tub-ஐ வைப்பது..? யார் பாத்ரூமுக்கு கொண்டு போய் அதைக் கொட்டுவது. மாமியாரோ தள்ளாடுகின்ற வயதில் இருக்கிறார். மாமனாரின் கண்ணாடியோ பூதக்கண்ணாடி.. பாத்ரூம் செல்வதற்குள் எங்காவது நிச்சயமாக மோதிக் கொள்வார். வேறு வழி.. கட்டிய மனைவிதான்.. பின்பு ஊத்திக் கொடுத்த நண்பனா வருவான்..?

ஏதோ ஒரு அருவெறுப்புடன் அந்த டப்பாவை எடுத்து கணவனின் கையில் கொடுக்க அதை அவன் அடியில் வைத்துக் கொண்டு அனைவரையும் பரிதாபமாகப் பார்க்க.. எல்லோருமே முகத்தைத் திருப்பிக் கொண்டோம்.

அந்தப் பையனின் அண்ணன் தனி ரூமுக்காக ஹெல்த் மினிஸ்டரிடம் சிபாரிசு கடிதம் வாங்க காலையில் கோட்டைக்குச் சென்றவன்தான் இன்னும் வரவில்லை. அந்தப் பையனுக்கு அப்பாதான் இருக்கிறார். அம்மா இல்லை. உடன் பிறந்தவர்கள் யாருமில்லை.

கூடி இருக்கும் சுற்றமும், நட்பும் ஆஸ்பத்திரி என்றாலே ஒற்றை இலக்க எண்ணில்தான் வரும். இந்தப் பையனுக்கு அதுகூட இல்லை. 'நாளைக்கு ஊர்ச்சனமே ஓடி வரும்..' என்று விளையாட்டாக தன் புது மனைவியிடம் சொல்லப் போய், "வாயை மூடுரா எருமை.." என்று புது மனைவியின் பாராட்டையும் மதியம்தான் பெற்றானாம் மாப்ளை.. பையன் ப்ளஸ்டூ பெயில்.. இதுவே முரண்பாடுகளின் முதல் புள்ளியாக உள்ளது..

அந்தப் பெண்ணின் கோபம் இதனால்தான் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடியவில்லை. "அந்தப் பையனை அவளுக்குச் சுத்தமா பிடிக்கலயாம் சரவணா.. ரெண்டு பேரும் ஒரே கட்சிக்காரங்கன்றதால முடிச்சிருக்காங்க.. அவ நல்லா படிச்ச பையனைத்தான் கட்டணும்னு ஆசையா இருந்திருக்கா.. கெடுத்திட்டீங்களேன்னு காலைல இருந்து அவ அப்பன், ஆத்தாகிட்ட மல்லு கட்டுறா.. வர்ற, போற நர்ஸ்க எல்லாரும் கூப்பிட்டு, கூப்பிட்டு அட்வைஸ் பண்ணியாச்சு.. ம்ஹ¤ம்.. விட்டா கொலையே பண்ணிருவா போலிருக்கு. அவ்ளோ கோபத்துல இருக்கா.." என்றார் நண்பனின் அம்மா.

பெற்றோர்கள் பார்த்துச் சொல்லும் மணமகனை ஏன் என்று கேள்வி கேட்காமல் மணக்கும் பெண்கள்தான் நம் தமிழ்நாட்டில் அதிகம். அதற்கு இந்தப் பெண்ணும் விதிவிலக்கல்ல. நன்கு படித்த பெரிய குடும்பங்களிலேயே இந்த நிலைமைதான் என்றால், இந்தக் கிராமத்துக் குடும்பத்தில் எப்படியிருக்கும்?

திருமணத்திற்கு பெண்ணின் மனமொப்பிய ஒப்புதல் தேவை என்கிற கருத்து சமுதாயத்தில் எப்போது வலுப்பெறும் என்று தெரியவில்லை. வரும் காலங்களில் இதுதான் ஒரு திருமணத்திற்கான முதல்படியாக இருக்க வேண்டும். பிடிக்காத திருமணங்கள் எவ்வளவுதான் பாசம், பணம், அன்பு, நேசம் இவற்றால் பிளாக்மெயில் செய்து பெவிகால் போட்டு ஒட்டினாலும் பேன் காற்றில்கூட அவை இடிந்துவிடும்.

அந்தப் பெண் அந்த டேபை கையில் எடுத்துக் கொண்டு மறுகையால் தன் முந்தானையை எடுத்த தன் மூக்கையும் பொத்திக் கொண்டு பாத்ரூம் நோக்கிச் செல்ல.. அனைவரும் அவசர அவசரமாக ஒதுங்கி நின்று வழி விட்டார்கள். அந்த ஸ்டைலில் இருந்தது அந்தப் பெண்ணின் நடை. இப்போது பையன் ஒரு சைடாக கஷ்டப்பட்டு படுத்திருக்கிறான். பாத்ரூம் சென்ற மனைவி திரும்பி வந்து துடைத்துவிட்டால்தான், அவனால் நேராகப் படுக்க முடியும். என்ன கொடுமை இது..?

ஏதோ கஷ்டம்.. கஷ்டம்.. என்கிறார்களே.. அவர்களை தயவு செய்து இந்த வார்டுக்குள் வந்து ஒரு பத்து நிமிடம் நிற்கச் சொல்லுங்கள்.. புரிந்து கொள்வார்கள் அவர்கள் அனுபவிப்பதெல்லாம் சர்வ சாதாரணம் என்று.. அப்பாவுக்கு மகனும், கணவனுக்கு மனைவியும், புள்ளைக்கு அம்மாவும் என்று விதவிதமான மனித உறவுகள் இந்த இடத்தில் தலைக்கு மேல் ஒரே ஆறுதலாக ஓடிக் கொண்டிருக்கும் பேன் காற்றில் பறந்து கொண்டிருக்கின்றன.

இன்பத்தையும், துன்பத்தையும் ஒரு சேரத்தான் தருகிறான் ஆண்டவன். இன்பம் வரும்போது குடும்பத்தோடு அதை அனுபவிக்கிறோம். துன்பம் வரும்போது பெரியவர்கள் மட்டுமே எதிர்கொள்கிறோம். துன்பம் என்ற ஒன்றும் நம் பிள்ளைகளுக்கு மிகச் சிறந்த ஆசிரியர்தான் என்பதை நாம் உணர்வதில்லை.

இவர்களில் இந்தச் சம்பவத்திற்கு யாரைக் குற்றவாளியாக்குவது?

குடிப்பது குடிமக்களுக்கு மரணத்தைத் தரும் என்பது தெரிந்திருந்தும் மதுக்கடை பிஸினஸ் செய்யும் அரசாங்கத்தைச் சொல்வதா?

குடிப்பழக்கம் நம் குடும்பத்தையே நடுத்தெருவுக்குக் கொண்டு வந்துவிடும் என்பது பாலபாடமாக இருந்தும் விடாமல் கடையை நோக்கி ஓடுகிறானே இந்த இளைஞனைப் போன்றவர்கள்.. இவர்கள்தான் குற்றவாளியா..?

நல்ல படிப்பு இருந்தும், தங்கள் கண் முன்னாலேயே இருக்க வேண்டும் என்ற முட்டாள்தனமான, மூடத்தனத்தில் பெண்ணின் விருப்பம் இல்லாமலேயே அவளுக்குத் திருமணத்தைச் செய்து வைத்திருக்கும் இந்தப் பெற்றோர்கள் குற்றவாளியா..?

நேரமாகிவிட்டதே என்று கிளம்பி வரும்போது அந்தப் பெரியவர் தன் மனைவியிடம் கல்யாணத்திற்காக அவர்கள் விற்ற கறவை மாட்டைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். "வீட்டுக்கே லஷ்மி மாதிரி இருந்துச்சு.. அதைப் போய் வித்தோம்ல.. அதான் இப்படி..." என்று அவர் சொல்ல அவர் மனைவி 'ஆமாம்' என்பதைப் போல் தலையாட்ட..

இந்த முதியவர்களுக்கு, தங்களது சோகத்தை ஆற்றிக் கொள்ள தங்களது மனதை அமைதிப்படுத்த இதைவிட வேறு வகை ஆறுதல் வார்த்தைகள் இருக்காது என்றே நம்புகிறேன்..

போலி உண்மைத்தமிழன் யார்?

28-06-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

தெரிந்தோ, தெரியாமலோ நான் உங்களிடமோ அல்லது உங்களிடம் நானோ மாட்டிக் கொண்டு உண்மைத்தமிழன் என்ற பெயரில் குப்பை கொட்டி வருகிறேன்.

'போலிகளிடம் ஏமாறாதீர்கள்' என்ற வசனத்தை ஊதுபத்தி வியாபாரத்திலிருந்து காயகல்பம் வியாபாரம்வரையிலும் நான் கேட்டிருக்கிறேன்.. இந்தப் போலி என்ற முகமூடி போட்ட நபர்களால் உங்களில் சிலரைப் போலவே நானும் என்ன பாடுபட்டிருக்கிறேன் என்பதனை இந்தப் பதிவிலும் , தொடர்ந்து இந்தப் பதிவிலும் நீங்கள் படித்திருப்பீர்கள்.

அதன் பின் சிறிது காலம் அமைதியாக இருந்த போலி உண்மைத்தமிழன் கடந்த சில நாட்களாக வீறு கொண்டு எழுந்து முடி வெட்ட வருபவனுக்கு மொட்டையே அடித்து விடுபவனைப் போல் பின்னூட்டங்களைப் போட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறான். நானும் வழக்கம்போல புலம்பித் தள்ளிக் கொண்டிருக்கிறேன்.

என் புலம்பலை கேட்டவர்களில் பலரும் வழக்கம்போல ஆறுதல் சொல்லிவிட்டு, "கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க கண்ணா.." என்கிறார்கள். சிலர் ஆறுதலையும் சொல்லிவிட்டு, இன்னொரு பக்கம் போலியையும் தெரியாத்தனமாக அனுமதித்து விடுகிறார்கள்.

போலியால் நான் வாங்கிய முதல் குட்டு மோதிரக்கையால் கிடைத்ததுதான்.


நண்பர் மிதக்கும்வெளி ஐயாவின் பெரியார் படம் பற்றிய இந்தப் பதிவில் போய் தன் வீரத்தைக் காட்டியிருக்கிறான் போலி. அதுவும் எப்படி பாருங்கள்?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
சுகுணா ஐயா.. இந்த படம் வெளிவரும் முன்பே எனக்கு தெரியும் படம் நல்லா இருக்காது என்று.. துக்ளக்கில் எழுதியிருந்தார்களே? பகுத்தறிவு கோட்டை கட்ட நினைத்து எதையோ கோட்டை விட்டுவிட்டார்கள்..


இதற்குப் பதில் எப்படி வந்திருக்கும் என்று எதிர்பார்த்தீர்கள்? இதோ இப்படித்தான்..

உண்மைத்தமிழன்,
துக்ளக்கைப் படித்துவிட்டு பெரியாரை அளக்க நினைப்பதைவிடவும் கேணத்தனமான விடயம் வேறொன்றுமில்லை. இதுபோல மொக்கத்தனமாக எதையாவது தொடர்ந்து உளறினால் உங்கள் பின்னூட்டங்களை வெளியிடுவது குறித்து நான் நிறைய யோசிக்கவேண்டியிருக்கும்.எனக்கு இது தேவையா..?

கோவையில் நடந்த பதிவர் சந்திப்புக்கு நான் போயிருந்த சமயம் பாலபாரதி, "தலைவா.. அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. விட்டுத் தொலைங்க.. அவன் உங்களோட ரசிகனா இருக்கான். அதான் ரசிகர் மன்றம்னு பிளாக்கர் ஆரம்பிச்சிருக்கான்.. விடுவீங்களா இதைப் போயி.." என்றார்.

அங்கே வந்திருந்த நண்பர்கள் வினையூக்கி, முகுந்த்ராஜ், மா.சிவக்குமார், மோகன்தாஸ் ஆகியோரும் இதையே முன் மொழிந்தார்கள். சரி விட்டுத் தொலைவோம் என்ற நினைப்புடன்தான் கண்டு கொள்ளாமல் இருந்தேன்.

அதே கோவையில் மிதக்கும்வெளி ஐயாவிடமும் அவர் பதிவில் போட்டிருக்கும் போலியின் பதிவுகளை நீக்கும்படி சொன்னேன்.. நான் இப்படிச் சொன்னதையே கோவை சந்திப்பு பற்றிய இந்தப் பதிவில் எழுதியிருக்கிறார்.

மறுபடியும், மறுபடியும் அவருடைய பதிவுகளில் போலி உண்மைத்தமிழன் தலைகாட்ட ஆரம்பிக்க, நிஜமாகவே எனக்கு அவர் மீது வருத்தம் இருந்தது. ஆனால் இன்றுதான் ஐயா ஒரு கேள்வி கேட்டார்.. "எலிக்குட்டி சோதனை என்றால் என்ன?" என்று.. 'அடக்கடவுளே..!' இவரையெல்லாம் என்ன செய்றது..? வேறு வழியில்லாமல் நானும் அதைச் சொன்னேன். "இனிமே பார்த்துக்குறேன் ஸார்.." என்றிருக்கிறார்.

ஆச்சா.. சென்ற திங்களன்று சகோதரி கவிதாவின் இந்தப் பதிவிலும் ஒரு பின்னூட்டம் போட்டுள்ளான் போலி. அதுவும் எப்படி? MNC-யில் பணியாற்றும் பெண்கள் அனைவரையும் இழிவுபடுத்தும்விதமாக..

கவிதா இதைப் படித்துவிட்டு, இது போலி உண்மைத்தமிழன் எழுதியது என்பதையும் தெரிந்து கொண்டு அதை அனுமதித்து, அதற்கு பதிலும் எழுதினார்.

அவரைப் பொறுத்தவரை அது சரி.. "போலியாக இருந்தாலும் அவன் மனதுக்குள் இந்த எண்ணம் இருக்கே.. அதுக்கு நான் பதில் சொல்லிருக்கேன்.." என்று எனக்கு மெயில் செய்தார். நானோ, "அது தப்பும்மா.. இப்போ போலியோட மனசுக்குள்ள நான்தான் இருக்கேன். என் பேரை ரிப்பேராக்கணும்னுதான் உனக்குப் போட்டிருக்கான்.. மொதல்ல டெலீட் பண்ணிரு.. இல்லாட்டி நாளைக்கும் போடுவான்.. உனக்கு ஒரு வேலை கூட வரும்.." என்றேன்.. "சரி.." என்று பெருந்தன்மையோடு டெலீட் செய்தார். இவரிடம் போலியின் IP அட்ரஸ் கேட்டேன். "ஸாரி ஸார்.. அது என்னுடைய பெர்ஸனலுக்கு மட்டும்தான்.." என்றார். சரி என்றுவிட்டுவிட்டேன்.

இது இப்படி.. இன்னொருவர் 'தோழர்' வரவனையான்.. அவரோட இந்தப் பதிவிலேயும் போய் போட்டுட்டான் போலி.. அவர் எப்பேர்ப்பட்ட ஆளு..? "தலைவா அது போலி போட்டதா..? தெரியாமப் போச்சு.. தூக்கிர்றேன்.." என்றவர், போலியை நீக்கிவிட்டு, அடுத்து இந்தப் பதிவில் அனுமதித்துவிட்டார். "என்ன ஸார்..?" என்று நான் சண்டைக்குப் போனவுடன், "ஸாரி ஸார்.. அசுரன், மாமா, ம.க.இ.க. பிடுங்கி, மயிரு என்ற டென்ஷன்ல இருந்தேன்.. அதான்.. இப்ப தூக்கிர்றேன் தலைவா.." என்றார். சொன்னபடியே டெலீட்டும் செய்தார். "சரி.. உங்களுக்குப் போட்டவரைக்கும் சந்தோஷம்தான் சாமி.. அந்த IP நம்பரை மட்டும் கொடுங்க.. மீதியை நான் பார்த்துக்குறேன்.." என்று ஏதோ பெரிய சிபிஐ கார்த்திகேயன் மாதிரி சவுடால் விட்டேன்.

அடுத்த பத்து நிமிடத்தில் IP நம்பர் டீடெயில்ஸை மெயில் செய்தார் வரவனையான். அது இதுதான்.. அவருக்கு கோடானுகோடி நன்றிகள்..

IP Address:
Host: dsl-TN-static-204.247.22.125.airtelbroadband.in
ISP: Btnl-chn-dsl
Entry Page Time : 26th June 2007 13:01:51
Visit Length: 14 mins 54 secs
Browser: MSIE 6.0
OS: Windows XP
Resolution: 1024x768
Location: Tamil Nadu, Chennai, India
Returning Visits: 5


இது சென்னையில் உள்ள Airtel Company-யின் கனெக்ஷன் நம்பர். ஆனால் நான் IP Address கண்டறியும் வலைத்தளங்களில் இதை செக் செய்தால் ஆத்தாடி.. கலிபோர்னியாவுக்கு போய் நிக்குதுங்கோ.. உள்ளூர்லேயே என்னை அடிச்சுப் போட்டாக்கூட கேட்க நாதியில்லை. இதுல கலிபோர்னியால இருந்து ஒரு உடன்பிறப்பாம்.. நம்பவா முடியுது.. தலை சுத்தி உக்காந்திருந்தேன்.

அப்பத்தான் பெங்களூர்ல இருந்து ஒரு அனானி எனக்கு போன் செஞ்சாரு.. "இதெல்லாம் போலி பிராக்ஸி வேலை ஸார்.. IP நம்பரையே மாத்திக் கொடுத்து உங்களை ஏமாத்துறாங்க.. அது நிச்சயம் கலிபோர்னியா நம்பரா இருக்காது. அதே மெட்ராஸ் நம்பராத்தான் இருக்கும்..." என்றவர் சில உறுதியான முன் உதாரணங்களையும் சொல்லி இருந்த மூளையையும் தலைகீழா புரட்டிட்டார்.. அந்த அனானிக்கும் எனது நன்றிகள்..

அடுத்து நம்ம மிதக்கும்வெளி இன்னொரு பதிவைப் போட்டாரு. அது இதுதான். அவரு இருந்ததே வெளியூர்ல.. அங்கன இருந்துக்கிட்டே சென்னைல நடந்த வலைப்பதிவர் கூட்டத்தைப் பத்தி அப்படியே நிசமா பக்கத்துல உக்காந்து எழுதின மாதிரி எழுதியிருந்தாருப்பா. 'புரிஞ்சுக்குங்க'.. அதுலயே என்னைப் பத்தியும் ஒரு பாரால...

"பதினைந்து பக்கங்களுக்குக் குறையாமல் பதிவு போட்டும் பின்நவீனம், மார்க்சியம், மொக்கை, ஜல்லி என்று எந்த பதிவாக இருந்தாலும் பின்னூட்டம் போட்டு கருத்துரிமையைக் காப்பாற்றிவரும் உண்மைத்தமிழன் ஊருக்குச்சென்றுவிட்டதால் சந்திப்புக்கு வரமுடியாது என்று தகவல் தெரிவித்திருந்தார். ஆனால் அவரை சென்னை நந்தனம் சிக்னலில் கைலியுடன் பார்த்ததாக பட்சிகள் தெரிவிக்கின்றன." - இப்படி எழுதிருந்தாரு..

நானும் அதுக்குப் பதிலா ஒரு பின்னூட்டம் போட்டிருந்தேன்.. போட்டுட்டு அவர்கிட்ட போன்ல பேசினா ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாரு. "உங்க போட்டோவோடயே இப்ப கமெண்ட்ஸ் வருதே.. தெரியாதா உங்களுக்கு?" அப்படீன்னு அசலாட்டா சொன்னாரு. "வரவனையான் பதிவுல நேத்து பார்த்தேன்"னாரு.. 'அதெப்படி போட்டோவும் வந்துச்சு.. வர்றதுக்கு சான்ஸ் இல்லையே'ன்னு தலையைப் பிச்சுக்கிட்டிருந்தேன். அதுக்குள்ள மிதக்கும்வெளி ஐயாவோட அதே பதிவிலேயே வந்துட்டான் போலி. இதைப் படிச்சுப் பாருங்க..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
வெளியே மிதக்கும் அய்யா.. என்னை நந்தனம் சிக்னலில் கைலியோடு பார்த்த அய்யா லக்கிலுக் அய்யா தான்.. அவர் பதிவர் சந்திப்பில் இதை எல்லாரிடமும் சொல்லி மானத்தை வாங்கியது இல்லாமல் உங்களிடமும் சொல்லிவிட்டாரா அய்யா.. அவர் நல்லா இருக்கட்டும் அய்யா..


இதைப் படிச்சப்புறம்தான் எனக்கு ஒரு விஷயம் நல்லாத் தெரிஞ்சது.. போலி உண்மைத்தமிழன் கலிபோர்னியால இல்ல.. இங்கனதான் மெட்ராஸ்ல என் பக்கத்துலதான் சுத்திக்கிட்டிருக்கான்னு..

எப்படின்னா மிதக்கும்வெளி ஐயா, தன்னோட பதிவுல "என்னை கைலியோட பார்த்ததா ஒரு பட்சி சொல்லுச்சு.." என்றுதான் எழுதியிருக்கிறார். கமெண்ட்ஸ் போட்ட நான்தான் "பேண்ட் அணிந்திருந்தேன்.." என்று திருத்தினேன்..

ஆனால் இந்த போலி உண்மைத்தமிழன் , தம்பி லக்கிலுக் அனைவரிடமும் உண்மைத்தமிழனை நந்தனம் சிக்னலில் பார்த்ததைச் சொல்லிப் பரப்பியதாக சொல்கிறான்.

இங்கே ஒரு விஷயம். 24-06-2007 ஞாயிறு மதியம் 2.45 மணிக்கு நந்தனம் சிக்னலில் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்தபோது, என்னைப் பார்த்துப் பேசியது தம்பி லக்கிலுக்தான். நான் அப்போதே சொன்னேன், "என்னால் கூட்டத்துக்கு வர முடியாது. எனக்கு ஒரு வேலை இருக்கிறது.." என்று.. "சரி.. முடிந்தால் வரப் பாருங்கள்.." என்று சொல்லிவிட்டுச் சென்றார் லக்கிலுக்.

இப்போது போலி உண்மைத்தமிழன் சொல்வதைப் படித்துப் பார்த்தால் மிதக்கும்வெளி ஐயாவும் வெளியில் சொல்லாமல் இருக்கும்போதே, போலி உண்மைத்தமிழனுக்கு என்னைச் சந்தித்தது லக்கிலுக்தான் என்பதும், லக்கிலுக் அனைவரிடமும் சொல்லி, அனைவருக்கும் அது தெரிந்திருக்கிறது என்றும் சொல்லியிருப்பதைப் பார்த்தால், அந்தச் சந்திப்பிற்கு வந்த பதிவர்களில் யாரோ ஒருவர்தான் இந்தப் போலி உண்மைத்தமிழன் என்று எனக்கு சந்தேகம் வருகிறது.

அன்றைய கூட்டத்திற்கு வந்திருந்தவர்களில் நான் யார் மீது குற்றம்சாட்ட முடியும்? யாருக்கு என் மீது தனிப்பட்ட கோபம் இருக்கிறது என்று எப்படி கண்டுபிடிப்பது?

சரி இவர்களில் ஒருவர் இல்லை என்றால், லக்கிலுக் சொல்லித்தான் அனைவருக்கும் தெரிந்தது என்றால் போலி உண்மைத்தமிழனுக்கும், லக்கிலுக் சொல்லித்தானே இது தெரிந்திருக்க முடியும். அப்படியானால் லக்கிலுக் என்னைச் சந்தித்ததை யாரிடமெல்லாம் சொன்னார் என்பதை கொஞ்சம் வெளிப்படுத்தினால் நான் அவர்களிடம் கேட்க ஏதுவாக இருக்குமே...

மேலும் அந்தச் சந்திப்பிற்கு வந்திருந்த அனைவரிடமும் என்னைச் சந்தித்ததை தம்பி லக்கிலுக் சொன்னாரா என்பதிலும் எனக்கு சந்தேகம் இருக்கிறது. காரணம் திங்கட்கிழமையன்று(25-06-2007) நான் நண்பர் மா.சிவக்குமார் அவர்களிடம் பேசியபோது "லக்கி என்னிடம் எதுவும் சொல்லவில்லையே.." என்றார். ஸோ.. லக்கிலுக் தேர்ந்தெடுத்த சிலரிடம் மட்டும் சொல்லியிருக்கலாம். அந்தச் சிலரில் ஒருவர் இந்த போலி உண்மைத்தமிழன் இருக்கலாம் என்பது எனது கணிப்பு.

"விட்டுத் தொலை சாமி.. காமெடி பண்றானுகய்யா.. புரிஞ்சுக்க மாட்டேங்குறீங்களே. நொச்சா இருக்கய்யா நீரு..." என்று பாலபாரதி சொன்னாலும், நேற்று என் பெரும் மதிப்பிற்குரிய பத்திரிகையாளர், ஆசிரியர் திரு.மாலன் அவர்களின் இந்தப் பதிவில் போலி உண்மைத்தமிழன் விளையாடியதை 'காமெடி' என்று என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. இதனால்தான் இந்தப் பதிவையே நான் போட வேண்டி வந்தது..

திரு.மாலன் அவர்கள் பத்திரிகையியலில் எனது குருவுக்கு குருவானவர். பெரும் மதிப்பிற்குரிய வலைப்பதிவர். அவரிடம் போய் "என்ன உளறுகிறீர்கள்..?" என்று கமெண்ட்ஸ் போட்டால் இதை எப்படி 'காமெடி' என்று ஒத்துக் கொள்வது?

நல்லவேளை.. நான் அந்தப் பதிவில் கமெண்ட் போட்ட போதுதான் போலியின் கமெண்ட்டையும் படித்தேன். உடனேயே பதில் கமெண்ட்டையும் நான் போட்டேன். பின்பு இரவில் திரு.மாலன் அவர்களை போனில் தொடர்பு கொண்டு அந்த போலியின் சார்பாக நான் மன்னிப்பு கேட்டு.. எனக்கு எத்தனை சிரமங்கள்..

இவர்கள் மட்டுமல்ல.. பல பதிவர்களுக்கும் இது போல் பதிவுகளைப் போட்டு அதை அவர்கள் எலிக்குட்டி சோதனை செய்து பார்த்து தடை செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்..

இன்னும் எத்தனை பேரிடம்தான் நான் மன்னிப்பு கேட்பது? கண்டு கொள்ளாமலேயே சென்றுவிடுங்கள் என்றால்.. மாலன் ஸாரிடம் நான் எதுவுமே சொல்லாமல் இருந்தால், அவர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்? நாளைப் பொழுதுகளில் நான் அவரிடம் பேச வேண்டிய கட்டாயம், சந்திக்க வேண்டிய அவசியமும் கண்டிப்பாக இருக்கிறது. அப்போது, "அது நான் இல்லை ஸார்.. போலி.." என்று நான் சொல்ல முடியுமா?

காமெடி செய்வதற்கும் ஒரு அளவு உண்டு.. மிதக்கும்வெளி, வரவனையான், டோண்டு ஸார் என்றால் நண்பர்கள் என்ற ரீதியில் போனில் பேசி தீர்த்துக் கொள்ளலாம். மற்ற எல்லாரிடமும் இதே போல் தினமும் பேச வேண்டும் என்றால் எனக்கு இதுதான் வேலையா..?

எனது கருத்துக்களுக்கு எதிர் கருத்துக்கள் அந்தப் போலியிடம் இருக்கிறது என்றால் அனானியாகவோ, அல்லது வேறு ஒரு பெயரிலோ போட்டுத் தொலைய வேண்டியதுதானே.. எதற்கு எனது முகமூடி..? நான் கோபப்படுவது இதற்குத்தான்..

எனக்குக் கிடைக்கின்ற சொற்ப நேரத்திலேயே பதிவுகள் போட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் நான்.. இந்த லட்சணத்தில் பொழுது விடிந்து, பொழுது போனால் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் சென்று ஒப்பாரி வைக்க வேண்டும் என்றால் எப்படி?

"கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள்.." என்று அண்ணன் மா.சிவக்குமார் திரும்பத் திரும்பச் சொல்கிறார். ஆனால் நட்பே பெரிதென்று நினைக்கும் எனக்கு போலியின் ஒவ்வொரு கமெண்ட்டும், என்னை அனைவரிடமிருந்தும் தூரத்திற்குத் தூக்கிச் செல்வதைப் போல் தெரிகிறது.

அதனால்தான் பல வலையுலக நண்பர்களின் எதிர்ப்பையும், அறிவுரையையும் மீறி இந்தப் பதிவைப் போட்டிருக்கிறேன். வலைத்தமிழர்கள் தங்களைச் சந்தேகப்பட்டுவிட்டேன் என்பதற்காக என்னைத் தவறாக நினைக்க வேண்டாம். சூழல் என்னை அப்படி கேட்க வைத்துள்ளது. நீங்களே ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.. முட்டாள்தனமாக இருந்தால் சிரித்துக் கொள்ளுங்கள். எனக்குக் கவலையில்லை.

ஒருவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்திருந்தால் குண்டு எந்தத் துப்பாக்கியிலிருந்து வந்தது என்பதனைத்தான் முதலில் கண்டுபிடிக்க வேண்டும்.. இப்போது அது யாருடைய துப்பாக்கி என்பதனை தம்பி லக்கிலுக்தான் சொல்ல வேண்டும்.. இது அவருடைய கடமையும்கூட..

"இல்லை.. இல்லை.. வலைப்பதிவர் கூட்டத்துக்கு வந்தவர்கள் யாராவது வெளி நண்பர்களிடம் சொல்லியிருக்கலாம்.. அவர்களில் ஒருவர் உங்களுடைய போலி உண்மைத்தமிழன் இருக்கலாம்.." என்று லக்கிலுக் கருதினால் இது எனது தலையெழுத்து என்று நினைத்துக் கொள்கிறேன்.

ஆனாலும் வலைப்பதிவர்களுக்கு கடைசியாகவும் ஒரு வேண்டுகோள். இது மாதிரியான போலிகளை நீங்கள் அனுமதித்தால், அது அவர்களை ஊக்கப்படுத்துவதைப் போல் ஆகும். இதே IP நம்பரில் இருந்து மேற்கொண்டும் கமெண்ட்ஸ் வந்தால் எனக்குத் தகவல் தெரிவித்தால் என்றென்றும் உங்களுக்கு நன்றியுடையவனாக இருப்பேன்..

நன்றி..

சிறுகுறிப்பு : 24-06-2007 அன்றைய வலைப்பதிவர் கூட்டத்திற்கு நான் வர முடியாததற்குக் காரணம்.. எனக்கு, இந்த உண்மைத்தமிழனுக்கு கடந்த 5 ஆண்டுகளாக அவ்வப்போது 'பிச்சை' போட்டு வரும் பெரியவர் ஒருவர், டைப்பிங் வேலைக்காக என்னை அழைத்திருந்தார். தட்ட முடியவில்லை. அதோடு அந்த வேலைக்காக அவர் கொடுத்த 200 ரூபாய்தான், உண்மைத்தமிழனின் இன்றைய நாள்வரையிலான 4 நாள் சாப்பாட்டுக்காக செலவானது.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்..

அப்துல்கலாம் ஏன் வேண்டும்?

23-06-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..


நமது அடுத்த ஜனாதிபதியாக யார் வர வேண்டும் என்று நாடு முழுவதும் பட்டிமன்றங்கள் பட்டிதொட்டியெங்களும் பறந்து கொண்டிருக்கின்றன. இதில் எனது தரப்பு வாதம் உங்களுக்காக.. சுருக்கமாக..

அப்துல்கலாம் ஏன் வர வேண்டும்?

1. ஜனாதிபதி மாளிகை அரசியல் கூடாரமாகாது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் கூடாரமாக இருக்கும்.

உதாரணம் :

1. சோனியா பிரதமராவதற்கு கலாம் காட்டிய உறுதியான எதிர்ப்பு.

2. 'ஒருவரே இரண்டு பதவிகளில் நீடிக்கலாம்' என்று மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்தது.

இந்த மசோதாவை திரு.கலாம் திருப்பி அனுப்பியது, மக்கள் மத்தியில் அரசியல் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்பதில் எனக்கு ஐயமில்லை.

ஆனால் இரண்டாவது முறையாக வந்தபோது கையப்பமிட்ட செயல், எந்த ஒரு ஜனாதிபதி இருந்தாலும் அதைத்தான் செய்திருப்பார் என்றாலும் எதிர்ப்பு பதிவாகியுள்ளதே.. அந்த எதிர்ப்பில் நம்மைப் போன்ற சாதாரண பொதுமக்களின் கருத்துக்களும் உண்டு என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

2. அரசுகள் சொல்வதையெல்லாம் கண்ணை மூடிக் கொண்டு ஒத்துக் கொள்ளும்
இயந்திரத்தனமான அரசியல்வாதி அல்ல அவர்.

முதல் முறையாக வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தின்போதே தன்னுடன் இத்தனை
பேர்தான் உடன் வர வேண்டும். சம்பந்தப்படாத துறை அதிகாரிகள் யாரும்
வரக்கூடாது என்பதில் இன்றளவும் உறுதியாக இருப்பவர் கலாம்.

3. ஜனாதிபதி என்பவர் எப்போதாவது மக்களிடையே பேசுவார் என்ற நிலைமை
மாறி, 'இன்னைக்கு நம்மாளு என்ன பேசுனாரு..?' என்று நாட்டு மக்களையே பேச
வைத்த பெருமை இவரையே சேரும். இதுவே ஒரு வகை விழிப்புணர்வுதான்.

4. இவருடைய சொந்தங்களும், பந்தங்களும் இன்றுவரையில் எந்தவொரு அதிகாரத்
துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக செய்தியே இல்லை. காரணம், இவருடைய
உறவினர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த விஷயம்.

5. ஜனாதிபதி மாளிகையை ஓய்வெடுக்கும் மாளிகை என்றிருந்த பெயரை சுற்றுலாத்
தளமாகவும் உருமாற்றி நமது மாளிகை, நமது ஜனாதிபதி என்று பொதுவில்
தேசியத்திற்கான அடையாளத்தை மீண்டும் உண்டுபண்ணியவர் கலாம்.

6. அரசுகள், ஆள்வோரிடம் இவருடைய தொடர்பும், பேச்சுவார்த்தையும் மிக மிக
நாகரீகத்தைத் தொட்டிருந்தது. எவ்வித சர்ச்சையும் கிளப்பவில்லை இவருடைய
நடவடிக்கைகள்.

ஜெயில்சிங் ஜனாதிபதியாக இருந்தபோது பிரதமர் ராஜீவ்காந்தியுடன் ஏற்பட்ட
மோதல் பிரசித்தி பெற்றது. டெல்லி பாலம் விமான நிலையத்தில்
ஜெயில்சிங்கை வெளிநாட்டிற்கு வழியனுப்ப வந்த ராஜீவ்காந்தியை, 'போடா
சின்னப் பயலே..' என்று ஜெயில்சிங் கோபப்பட்டு பேசியது பதிவு செய்யப்பட்ட
ஒன்று..

7. யாராக இருந்தாலும் அவருடைய மாளிகை கதவுகள் திறந்திருந்தது என்பது
வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று. தன் வாழ்க்கையில் இவ்வளவு
மக்களை சந்தித்திருக்கும் ஒரே ஜனாதிபதி, இவராகத்தான் இருப்பார்.

8. வெறும் கண்காட்சி தலைவராக அல்லாமல் அரசுக்கு நிஜமான யோசனை
சொல்லும் அளவுக்கு புத்திசாலியாகவும் இருந்தார். அதனால்தான் கடைசி
நேரத்திலும் இந்தியாவில் இரு கட்சி ஆட்சி முறை வேண்டும் என்றார்.

9. கடைசியாக அந்த மாளிகையை காலி செய்யும்போது கையில் இரண்டு
சூட்கேஸ்களை மட்டுமே தனது சொத்தாக எடுத்துக் கொண்டு வரப் போகிறார். இது
ஒன்றிற்கே மறுபடியும் அவர் அங்கே குடியிருக்க வேண்டும்.

1997-ம் ஆண்டு ஜனாதிபதி பதவியிலிருந்து ரிட்டையர்டாகி வீட்டுக்குச் சென்ற
சங்கர்தயாள்சர்மா, '50 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால்தான் மாளிகையை காலி
செய்வேன்' என்று அடுத்த ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் குடி வருவதற்கு முதல்
நாள் அன்றைய குஜ்ரால் அரசை பிளாக்மெயில் செய்து இந்திய நாட்டு மக்களின்
பணத்தை பறித்துக் கொண்டு போனது அநேக இந்தியர்களுக்குத் தெரிந்திருக்க
வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.

காமராஜர் மறைந்த அன்று அவருடைய வீட்டுக்கு விரைந்து சென்ற அமைச்சர்
ராஜாராம், அங்கேயிருந்த பீரோவைத் துழாவிய போது கிடைத்த பணம் வெறும் 300
ரூபாய்தான் என்பதையும் இந்த நேரத்தில் நீங்கள் மறந்துவிடக்கூடாது..

ஆனால் பிரதீபா பாட்டீல் குடியேறிவிட்டால் என்ன ஆகும்?

1. அறிவிக்கப்படாத இன்னொரு பிரதமராக இருப்பார் பிரதீபா.

2. எதிர்க்கட்சிகளின் கோரிக்கை மனுக்கள் உடனுக்குடன் 10, ஜன்பத் ரோட்டிற்கு
பேக்ஸில் அனுப்பப்படும்.

3. எதிர்க்கட்சிகள் எதிர்க்கும் இன்னொரு கட்சியின் தலைமை அலுவலகமாக ஜனாதிபதி
மாளிகை உருமாறும்.

4. அடுத்த தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றால் பதவியேற்க சோனியாவை வீடு
தேடிச் சென்று அழைத்து வருவார் என்பது உறுதி.

5. ஒருவேளை தொங்கு நிலை பாராளுமன்றம் உருவானால் காங்கிரஸ் கட்சியை
எப்பாடுபட்டாவது ஆட்சியில் அமர்த்த உதவுவார். இந்த நோக்கத்தில்தான் இவர்
தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதில் எனக்கு ஐயமில்லை. இப்போது
கலாமைவிட இவர் தகுதி பெற்றவரா என்பதைவிட கலாமைவிட சோனியாவுக்கு
இவர் விசுவாசமானவர் என்ற ஒரு அம்சத்திட்டத்தில்தான் இவர் கொண்டு
வரப்பட்டுள்ளார்.

6. அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பே அவருடைய குடும்பத்தினர் பற்றிய சர்ச்சைகள்
எழும்பி விட்டன. ஜனாதிபதி மாளிகை மட்டும்தான் பத்திரிகையாளர்களின் candid
camera-வில் சிக்காமல் இருந்தது. இனி வரும் காலங்களில் அதுவும் சேர்ந்துவிடும்.

7. அரசியல் சரி.. ஆட்சி நிர்வாகம் சரி.. மக்கள் பணி..? 50 வருடமாக
அரசியல்வாதியாகவே இருந்தவர்களுக்கு இப்போதைய நாட்டு மக்களின் அன்றாடத்
துயரங்களைப் பற்றி என்ன தெரியும்?

8. ஒரு பொம்மை ஜனாதிபதி.. கயிறு அவருடைய கட்சித் தலைவரின் கையில்..
இப்படி ஒரு அவப்பெயரை சம்பாதிக்கப் போகிறார் இந்த பிரதீபா பாட்டீல்.

9. இந்தியாவின் 13-வது ஜனாதிபதியாக ஒரு பெண் அலங்கரித்தார் என்ற பெயரும்,
ஒரு பெண் இந்தியாவில் ஜனாதிபதியாக வருவதற்கே 60 ஆண்டுகள் பிடித்துவிட்டது
என்ற பொருமலும்தான் நமக்கு மிச்சமாகப் போகிறது..

ஜெய்ஹிந்த்!!!

மனம் திறந்த மடல்-பெறுநர் 'மேதகு ஜனாதிபதி திரு.A.P.J.அப்துல்கலாம்'-3

21-06-2007

முதல் பகுதி இங்கே

இரண்டாம் பகுதி இங்கே

'இன்னுமொரு ஐந்தாண்டுகளுக்கு ஜனாதிபதி மாளிகையில் தங்க உங்களுக்கு அனுமதி உண்டா.. இல்லையா,,?' என்று கிட்டத்தட்ட நாட்டில் உள்ள அனைத்து சர்வே கம்பெனிகளும் சர்வே எடுத்து சலித்துப் போனார்கள். 78 சதவிகிதமாமே.. நீங்கள்தான் மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும் என்று 'சரக்கு' அடிக்காமலேயே சொல்லிவிட்டார்கள் இந்தியத் திருமக்கள்.

நீங்களும்தான் இன்னொரு அஞ்சு வருஷமும் டெல்லில இருக்கணும்னு ஆசைப்பட்டீங்க.. ஆசைப்பட்டுட்டா மட்டும் போதுமா? அதுக்கு போஸ்டர் அடிக்கிற வேலையை யார் செய்யறது? போதாக்குறைக்கு கல்யாணமும் ஆகலே.. ஏதோ இந்தியால பொண்ணுகளே இல்லாத மாதிரியும், நாட்டுக்காக தியாகம் செஞ்சுட்ட மாதிரியும் வீணாப் போயிட்டீக.. அப்படி ஆயிருந்தாலும் பொஞ்சாதியோ, புள்ளைகளோ யாரைப் புடிக்கணுமோ அவுகளைப் புடிச்சு ஆக வேண்டிய காரியத்தை பண்ணிருப்பாக.. அதுதான் போச்சா..? உக்காந்த இடத்துல இருந்தே உங்களுக்கெதிரா நீங்களே குழியைத் தோண்டிக்கிட்டீகளே சாமி...

இந்தியாவே அன்னைன்னு ஒருத்தரை சொல்லிக்கிட்டிருக்க நீங்க ஒருத்தர் மட்டும் 'நீங்க பாதி அயல்நாட்டு அன்னைங்கம்மா'ன்னு சொன்னா அவுகளுக்கே கோபம் வராது. அதுலேயும் அவுக சொல்லி, அவுக கட்சிக்காரங்க அல்லாரும் ஓட்டைக் குத்தித்தான நீங்க அங்கன போய் உக்காந்திருக்கீக. இப்ப போய் அப்படி பட்டுன்னு சொல்லலாமா? புடிச்சது முதல் சனியன்.. எம்புட்டு ஆசையா இருந்தாக அன்னை.. புருஷன் உக்காந்த சேர்ல உக்காரணும்னு.. மண்ணை அள்ளிப் போட்டுட்டீகளே.. அந்த ஒரேயரு கோபம்தான்.. இன்னிவரைக்கும் கர்ணனுக்கு கவசகுண்டலம் பறி போன மாதிரி, அவுகளோட ஆதரவு உங்களுக்கு கிடைக்காமயே போயிருச்சு..

உங்களுக்கு கிடைச்ச இரண்டாவது எதிரி கம்யூனிஸ்ட்காரர்கள்தான். கம்யூனிஸ்ட்களுக்கு உங்கள் மீது தீராத கோபமும் உண்டு. தீராத பாசமும் உண்டு. கம்யூனிஸ்ட்கள் நம் வீட்டுத் தந்தைகளைப் போன்றவர்கள். பாசத்தை மனதிற்குள் வைத்துக் கொண்டு கோபத்தை மட்டுமே வெளிக்காட்டுவார்கள்.

நீங்கள் டெல்லியில் குடியேறிய நான்கு மாதங்களுக்கு முன்பு குஜராத்தில் நடந்த கொடுமையிலும் கொடுமையான கலவரத்திற்கு அங்கே ஆட்சி செய்த கொண்டிருந்த பா.ஜ.க. அரசுதான் முதல் காரணம் என்று நாடே சொல்லிக் கொண்டிருக்க, நீங்கள் குஜராத்திற்கு சென்று நரேந்திரமோடியின் நிர்வாகத் திறமையை 'ஆஹா.. ஓஹோ..' என்று பாராட்டிவிட்டு வந்தீர்களே.. அன்றைக்கே 'செங்கொடி' உங்களுக்கெதிராகப் பறக்கத் தொடங்கிவிட்டது.

'போதாக்குறைக்கு அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை எப்பாடுபட்டாவது நிறைவேற்றியே தீர வேண்டும்' என்று துண்டுச் சீட்டெல்லாம் எழுதி 'பிரதமர் பையனுக்கு' அனுப்பி வைத்த கொடுமையையும் செய்திருக்கிறீர்கள். இதனையும் அந்த 'பிரதமர் பையனே', மதிய விருந்துக்கு தன் வீட்டுக்கு வந்த செங்கொடிக்காரர்களிடம் பெருமையாகச் சொல்லப் போக, அது அவர்களின் பொறுமையை சோதித்துவிட்டது.

பேதி மாத்திரையைவிட கொடிய வார்த்தையாக கம்யூனிஸ்ட்கள் உச்சரிக்கும் அமெரிக்காவுடனான இந்த ஒப்பந்தத்தை 'நாட்டு நலன்' அப்படீன்னு சொல்லி நீங்கள் முன் நோக்கி எடுத்துச் சென்றீர்கள்.. அதுவே இன்றைக்கு செங்கொடிக்காரர்கள் உங்களைப் பின் நோக்கி இழுக்க ஒரு காரணமாகவும் போய்விட்டது.

நீங்கள் அப்போதே சுதாரித்திருக்கலாம்.. விட்டுவிட்டீர்கள். அரசியல்ல சுதாரிப்பும், சூதானமும்தான் ஐயா சொத்து..

'டாக்டர் இராஜேந்திரபிரசாத்தைத் தவிர வேறு ஒருவர் இரண்டாவதாக தொடர்ந்து ஜனாதிபதி பதவியில் அமர்ந்ததில்லை. அந்த வழக்கத்தை நாங்கள் இப்போதும் விரும்பவில்லை' என்று ஆட்சிக்கு ஆப்பு வைக்கும் ஸ்டைலில் எப்போதுமே பேசும் மார்க்சிஸ்டு தலைவர் பிரகாஷ்காரத், உங்களுக்காக வாக்களித்த இளைய சமுதாயத்தினரின் நெஞ்சில் கொள்ளிக் கட்டையைத் தேய்த்துவிட்டுப் போனார்.

அது மட்டுமா..? தமிழகத்திற்கும் வந்தீர்கள். 'தமிழய்யாவுக்கு' விருதும் கொடுத்தீர்கள். ஆனால், 'அவரால்தான் நான் இந்த உயர்ந்த பதவிக்கு வந்தேன்' என்று சும்மனாச்சுக்கும்கூட ஒத்தை வார்த்தையை நீங்கள் உதிர்க்கவில்லை. நான் 'அறிவியல்ல விஞ்ஞானியாக்கும்' என்று அவரிடமே காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டீர்கள். அவர் யாரு? சூரியனுக்கே டார்ச் லைட்டான்னுட்டு, 'நான் அரசியல்ல விஞ்ஞானியாக்கும்' என்று சொல்லாமல் சொல்லி 'என் ஓட்டு பெண் குலத்திற்கே' என்று கவிதை பாடி இப்போது உங்களைக் கவிழ்த்துவிட்டார்.

சொந்த மாநிலத்துக்காரர்.. அவரே கை கழுவிய பிறகு என்ன செய்ய என்று கவலையோடு இருந்தீர்கள். தப்பித் தவறிகூட கடைசி மூன்று மாதங்களில் இந்தியாவின் அன்னை உங்களைத் தனிமையில் சந்திப்பதைப் போல் ஒரு சந்திப்பை வைத்துக் கொள்ளவில்லை. நீங்களும் அதை விரும்பலைன்ற மாதிரிதான் எங்களுக்கும் பட்டுச்சு.

அதான் பிரதீபா பாட்டீல்ன்னு ஒரு தாய்க்குலம் அடுத்து உங்க வீட்டுக்கு குடி வர்றாகன்னு தெரிஞ்சவுடனேயே எங்களுக்கு ஒண்ணும் ஆச்சரியமில்ல.

ஆனாலும் இதை அப்படியே விட்டா நான் எதுக்கு இங்க இருக்கேன்னுட்டு எங்க 'அம்மா' இடைல புகுந்தாங்க.. 'ஒருத்தன் கேடி, இன்னொருத்தன் திருடனா இருக்கான்.. நாங்க தனி ஆளுகளாக்கும்..' என்று சொல்லாமல் சொல்லி மூன்றாவது அணி அமைத்தார்கள்.

ஆலோசனைக் கூட்டத்தில் முதலில் தமிழகத்து 'அம்மா' சொல்லிய இன்னொரு கேரளத்து 'அம்மா'வான பாத்திமா பீவியை, கேரளா எல்லை தாண்டி யாருக்குமே தெரியாது. வேண்டாம் என்று முகத்தில் அடித்தாற்போல் முலாயம்சிங் சொல்லிவிட்டார். வேறு யாரும் 'அம்மா'வின் குட்புக்கில் இல்லை. ஏதாவது செய்து குட்டையைக் குழப்பினால்தான் உண்டு என்பதால் அனைவரும் உங்களது பெயரைச் சொல்லித் தப்பித்துவிட்டார்கள்.

பாருங்க.. இவ்ளோ பெரிய நாட்டுல உங்களைத் தவிர வேற யாருமே ஜனாதிபதி பதவிக்குப் பொருத்தமானவரா இல்லைன்னு படிச்ச, பட்டறிவு படைத்த, அனுபவம் வாய்ந்த அந்த மூன்றாவது அணித் தலைவர்களுக்கே தெரியலைன்னா சாதாரண பொது ஜனங்கள் எங்களுக்கு எப்படித் தெரியும் ஸார்..? நீங்களே சொல்லுங்க..

இதுக்கு என்ன ரியாக்ஷன் வருதுன்னு பார்க்குறதுக்காக நீங்களும் 24 மணி நேரம் அமைதி காத்து மறுநாள் அறிக்கை விட்டுட்டீக.. 'எல்லாரும் என்னை தேர்ல உட்கார வைச்சு ஒண்ணா இழுக்கறதா இருந்தா, தேர்ல ஏறி உக்கார்றேன். இல்லாம ரெண்டு பேர் மட்டும் இழுத்து தேர் குடை சாய்ஞ்சு நான் கீழே விழ தயாராயில்லை'ன்னு தேடி வந்த மூன்றாவது அணித் தலைவர்களிடம் சொல்லிவிட்டீர்கள்..

இங்கனதான் ஒண்ண நீங்க இப்பவும் புரிஞ்சுக்கணும்.. இவுகளும் ஏதோ உங்க மேல இருக்குற பாசத்துனால ஓடி வரலே.. ஆளும் கட்சிக்கும், அவுகளுக்கு குடைச்சல் கொடுத்துக்கிட்டே சம்பந்தி முறை கொண்டாடும் கம்யூனிஸ்ட்களுக்கும் மக்கள் மத்தியில் ஒரு கெட்ட பெயரை உருவாக்கணும்னு செய்றதுதான்.. ஏன்னா.. நீங்கதான் தமிழ்நாட்டுல எம்ஜியாருக்கு அப்புறம் அல்லா பொம்பளைங்க மனசுலேயும் இருக்குற ஆம்பளை இல்லையா.. அதான்.. "நாங்க உங்க அப்துல்கலாமை கொண்டு வரணும்கிறோம்.. இவுக வேணாம்கிறாங்க.. பாருங்க.. பாருங்க"ன்னு ஒப்பாரி வைக்கிறதுதான் இது..

'இந்திய அன்னை' இனி நீங்க டெல்லியை காலி செய்ற அன்னைக்குத்தான், உங்க மூஞ்சில முழிக்கிறதுன்னு ஒரே கொள்கைல இருக்காக.. ஸோ அந்த வழி மூடப்பட்டது. கம்யூனிஸ்ட்களோ உங்களை தூக்கிட்டு வந்து அண்ணா யுனிவர்ஸிட்டி ரூம்ல திணிச்சுட்டுத்தான் மறுவேலைன்னு நினைச்சு அம்புட்டு பேரும் ஒண்ணா கும்மியடிச்சிட்டிருக்கா.. ஸோ.. அந்தப் பக்கமும் வழியில்லே..

கூட்டணியை முறியடிச்சு, சிதறடிச்சு ஓட்டைப் பிரிச்சு ஜெயிக்க வைச்சிரலாம்னு உங்ககிட்ட யோசனை சொல்ல.. 'நீங்க அது வேணாம். என் பேர் ரிப்பேராயிரும்'னு மெல்ல சொல்லி நழுவிருக்கீங்க.. இத இப்ப யோசிச்சு என்ன ஸார் புண்ணியம்..? அவனவன் ஒன்றியச் செயலாளரா ஆகுறப்பவே, 'நான் அமைச்சரானா நீதாண்டா என் பி.ஏ.'ன்னு சொல்லியே நாலு பேர்கிட்ட மாசாமாசம் மாமூல் கறந்துக்கிட்டிருக்கான்..

நம்ம தமிழ்நாட்டுல பொறந்து, வளர்ந்துக்கிட்ட இந்தச் சூட்சுமம் கூடத் தெரியாம அடுத்த 5 வருஷ ஜெகஜோதியான லைபை கோட்டை விட்டுட்டீகளே ஐயா..

ஆக மொத்தம் ஜூலை 23-ம் தேதியன்று நீங்க டெல்லியைக் காலி செய்யப் போவது கிட்டத்தட்ட உறுதியாகிருச்சு.

கிளம்பறதுக்கு முன்னாடி சில கோரிக்கைகளை உண்மைத்தமிழன் உங்ககிட்ட வைக்குறான்.. உங்களால் கண்டிப்பாக முடியும்.. நீங்கள் மனம் வைத்தால் நிச்சயம் செய்யலாம்.

முதல் கோரிக்கை : உங்கள் டேபிளில் பல வருடங்களாகத் தூங்கிக் கொண்டிருக்கும் தூக்குத் தண்டனை கைதிகளின் கருணை மனுக்கள் அனைத்திலும், "அனைத்து கருணை மனுக்களையும் ஏற்றுக் கொள்ளலாம்" என்று குறிப்பிட்டு எழுதி அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துவிட்டு, வெளியிலும் சொல்லி விடுங்களேன். ப்ளீஸ்..

இரண்டாவது கோரிக்கை : பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை அரசியல்வாதிகள்தான் திட்டமிட்டு நிறைவேற்றவிடாமல் தடுத்தார்கள்; இப்போதும் தடுக்கிறார்கள் என்று வெளிப்படையாகச் சொல்லுங்கள்.

மூன்றாவது கோரிக்கை : ஆதாயம் தரும் பதவி பற்றிய மசோதாவில் எனக்கு எந்தவிதத்திலும் உடன்பாடில்லை. ஆனாலும் நமது அரசியல் சட்டம் ஜனாதிபதியான எனக்கு என்ன அதிகாரம் என்று சொல்லியிருக்கிறதோ அதற்குக் கட்டுப்பட்டு நான் கையெழுத்திட்டேன். என் மனமொப்ப அதில் கையெழுத்திடவில்லை என்பதை பகிரங்கமாகச் சொல்லுங்கள்..

நான்காவது கோரிக்கை : இதேபோல்தான் பொடா சட்டத்திலும் எனக்கு ஒப்புதல் இல்லை. ஆனாலும் கடமையின் காரணமாக நான் கையெழுத்திட்டேன். அதற்காக இப்போதும் வருத்தப்படுகிறேன். பொடா சிறைவாசிகள் சூழ்நிலைக் கைதியான என்னை எப்போதும் பெருந்தன்மையுடன் மன்னிக்க வேண்டும் என்று பெருந்தன்மையாகப் பேசுங்கள்...

ஐந்தாவது கோரிக்கை : "இன்னுமொருமுறை என்னை மாதிரி அறிவுஜீவிகள், மக்கள் அபிமானம் பெற்றவர்கள் யாருமே இந்த நாட்டில் ஜனாதிபதியாக முடியாது. ஆகவும் இந்த அரசியல்வாதிகள் விடவேமாட்டார்கள்..." இப்படி வெளிப்படையாகச் சொல்லிவிட்டு பிளைட் ஏறுங்கள் சென்னைக்கு..

வருக.. வருக.. என இருகரம் கூப்பி வரவேற்க, வந்தோரை வாழவைத்த, வாழ வைக்கும் தமிழகம் காத்துக் கொண்டிருக்கிறது.

எனக்கும் வேறு வழியில்லை. யாரிடமாவது இப்படிச் சொல்லிப் புலம்ப வேண்டும் என்று நினைத்தேன். புலம்பிவிட்டேன்..

உங்கள் காதுக்கு வந்து சேர்ந்தால் வந்தது என்று சொல்லி ஒரு கடிதம் அனுப்புங்கள். அந்த ஆறுதலாவது எனக்குக் கிட்டட்டும்.

நன்றி..

ஜெய்ஹிந்த்..

(முற்றும்)

இன்றைய அரசியல்-27-06-2007-துக்ளக் கமெண்ட்ஸ்-2

21-06-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

படிச்சு சிரிச்சுக்குங்க.. அம்புட்டுத்தான்..

இன்றைய அரசியல்-27-06-2007-துக்ளக் கமெண்ட்ஸ்-1

21-06-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

படிச்சு சிரிச்சுக்குங்க.. அம்புட்டுத்தான்..

துக்ளக்-27-06-2007-அட்டைப் பட கார்ட்டூன்

21-06-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

படிச்சு சிரிச்சுக்குங்க.. அம்புட்டுத்தான்..


மனம் திறந்த மடல்-பெறுநர் 'மேதகு ஜனாதிபதி திரு.A.P.J.அப்துல்கலாம் அவர்கள்'-2

19-06-2007

முதல் பகுதி இங்கே

சரி.. பரவாயில்லை.. அதை விடுங்க.. காங்கிரஸ்க்கு எப்போதுமே உறுதுணையாய் இருக்கும் உத்திரப்பிரதேசத்தில் இப்போது கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக ஸிங்கில் டிஜிட்டில் எம்.எல்.ஏ.க்களை வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு அங்கு சமாதியாகிப் போன தனது கட்சியின் மேல் தாஜ்மஹால் கட்டப் போகும் கிறுக்குத்தனமான ஆசை வந்துவிட்டது.

முலாயம்சிங்கை எந்த அளவுக்கு நெருக்க முடியுமோ அந்த அளவுக்கு நெருக்கிப் பார்த்தார்கள். சிறுபான்மையினரின் சிற்றன்னை நான்தான் என்று சொல்லி நூறு கோடி ரூபாய் அளவுக்கு 'புண்ணியம்' சேர்த்த துர்காதேவி மாயாவதியின் புண்ணியத்தால் முலாயமை அசைக்க முடியவில்லை.

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருந்த காங்கிரஸ¤க்கு காலம் கை கொடுத்தது. முலாயம் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்கும்படி சுப்ரீம் கோர்ட் அனுமதியளிக்க.. இதைத்தான் எதிர்பார்த்தோம் என்பதைப் போல் மத்திய அரசு குட்டிக்கரணம் போட்டு நிமிர்ந்து நின்றது.

நாளை காலை பல்லு விளக்குகிறோமோ இல்லையோ.. உ.பி. அரசு கலைக்கப்பட்டது என்ற செய்தியைத்தான் கேட்க வேண்டும் என்ற நினைப்பில் நள்ளிரவு மந்திரி சபை கூட்டமெல்லாம் நடந்தது. ஆனாலும் உங்கள் வீட்டுக் கதவு இதற்காகத் திறக்கப்படுமா என்பது இப்போது சந்தேகம் என்று ஆந்தையோ, கழுகோ மன்மோகன்சிங் வீட்டு செக்யூரிட்டிகளிடம் பற்ற வைக்க அப்போதைக்கு உ.பி. அரசு தப்பித்தது.

இதோ இப்போது அங்கே தேர்தலும் நடந்து முடிந்து, கணக்குக் காட்டியிருக்கும் 100 கோடியை நான் வளையல் விற்றுத்தான் சம்பாதித்தேன் என்று 'உண்மை'யைச் சொல்லிய நவீன பில்கேட்ஸ் மாயாவதி தேவியார் ஆட்சிக் கட்டிலில் ஏறிவிட்டார். இனி உ.பி.யை நீங்களும், நானும், மத்திய அரசும், ஏன் இந்திய மக்களும்கூட மறந்துவிடலாம். அதன் தலைவிதி அவ்வளவுதான்..

ஆனாலும் ஒண்ணு ஸார்.. இந்த நான்கரையாண்டு காலத்தில் நீங்கள் மறைமுகமாக செய்த ஒரேயரு நல்ல காரியம்.. ஜனாதிபதி என்ற ஒருவர் இருக்கிறார். அவருக்கும் கொஞ்சூண்டு அதிகாரம் உண்டு என்பதை அவ்வப்போது லேசாக கோடு போட்டு காட்டியிருப்பதுதான். எது நடந்தாலும் அது நன்மைக்கே என்ற இந்தியாவின் முதியவர்கள் முக்கால்வாசிபேர் மூக்கால் சொல்லும் சொல்லுக்கான அர்த்தத்தை இதுவரையில் நீங்கள் கடைப்பிடித்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்..

இரண்டு மாதங்கள் முன்பு பெங்களூருவுக்கு Infosys நிறுவன விழாவில் கலந்து கொள்ள வந்தீர்கள். வந்த இடத்தில் Infosys நிறுவனத்தைப் 'பிடிக்காத' பத்திரிகையாளர்கள், "உங்களுக்கு அடுத்த ஜனாதிபதியாக இன்போஸிஸ் தலைவர் நாராயணமூர்த்தி வரலாமா?" என்று கேட்டார்கள். நீங்களும் பத்திரிகையாளர்களின் 'அறிவு' புரியாமல் "அற்புதம்.. அற்புதம்.. அற்புதம்.." என்று ஏதோ சாய்பாபா ஸ்டைலில் சொல்லிவிட்டீர்கள்.

அந்த 'அற்புதம்' அடுத்த நாளே, இன்னொரு 'அற்புத'த்தை நிகழ்த்திக் காட்டினார். இன்போஸிஸில் நடந்த ஒரு விழாவின் இறுதியில் நாட்டுப்பண்ணை முழங்காமலேயே நிகழ்ச்சியை முடித்துவிட்டார். அத்தோடு விட்டுத் தொலைந்திருக்கலாமே.. அதைவிட்டுவிட்டு இந்தியாவின் மிகப் பெரும் கோடீஸ்வரர் கெட்டப்பில், "இந்த நிகழ்ச்சிக்கு வெளிநாட்டினரெல்லாம் வந்திருக்கிறார்கள். அவர்களுக்குப் புரிகிற மொழியில் ரவீந்திரநாத் தாகூர் தேசிய கீதத்தை எழுதவில்லை. மொழி புரியாமல் இருக்கும் அவர்களை, எதற்காக இரண்டு நிமிடங்கள் ஆடாமல், அசையாமல் நிறுத்த வேண்டும் என்கிற பகுத்தறிவு காரணத்தால்தான் நாட்டுப்பண்ணை இசைக்கவில்லை.." என்று நமக்கே இதுவரையில் தெரிந்திராத ஒரு விஷயத்தைச் சொன்னார்.

மறுபடியும் பூதம் முருங்கை மரம் ஏறிவிட்டது. பத்திரிகையாளர்கள் இதன் பின் உங்களிடம் இந்த நிகழ்ச்சி பற்றிய கருத்தைக் கேட்டுக் கேட்டு சலித்துப் போனார்கள். ஆனாலும் கேள்வி கேட்டவுடன், அதைக் காதில் வாங்காததைப் போல் நகர்ந்தீர்கள் பாருங்கள்.. ஐயா.. செத்தானுங்கய்யா எங்க வெள்ளித்திரை நடிகர்கள்.. பாருங்க.. நாலரை வருஷ டெல்லி வாழ்க்கை, உங்களுக்கு என்னத்தைச் சொல்லிக் கொடுத்திருக்குன்னு..?

இது மட்டுமா..? 'உங்களுக்கு சூனியம் வைச்சே தீருவோம்'னு நம்ம தமிழ்நாட்டுக்காரங்களே கடைசி நேரத்துல நினைச்சிட்டாங்க.

இங்கன பொழுது விடிஞ்சு பொழுது போனா, "உலகத் தமிழர்களின் ஒரே தலைவர்'னு கூப்பாடு போடுற கலைஞரின் பொன்விழா நிகழ்ச்சிக்கு நீங்க கண்டிப்பா வந்தே தீரணும்.. வரலைன்னா நாளைலேர்ந்து கலைஞர் மீனம்பாக்கம் போற ரோட்டுக்கே வரமாட்டார்"ன்னு 'செல்லமா' கொஞ்சி உங்ககிட்ட டேட் வாங்கிட்டாங்க. அத்தோட நிறுத்திட்டு, கடைசியா அதைச் சொல்லித் தொலைய வேண்டியதுதான..? உடனே பட்டுன்னு பிளாஷ் நியூஸ்ல போட்டுத் தள்ள..

இங்க, நம்ம 'அம்மா'வுக்கு தூக்கமே போச்சு.. எங்க ஐயா நீங்க வந்துட்டீகன்னா.. தான் இல்லாத சட்டமன்றத்துல, தான் ஆட்சிப் பீடத்தில் இல்லாத சமயத்துல கருணாநிதியை வாழ்த்திட்டீகன்னா, நம்ம பொழப்பு என்னாகப் போகுதோன்னு சொல்லி என்னென்ன செய்யணுமோ அத்தனையையும் செஞ்சாக.. எப்படியும் அந்தச் சமயத்துல உங்க ஆபீஸ் பேகஸ் மிஷின் எல்லாமே ரிப்பேராயிருக்கும்னு நினைக்கிறேன்.. அம்புட்டு பேக்ஸ் வந்திருக்குமே..?

அவுக நியூஸ்ல உங்களுக்காக டெய்லி அஞ்சஞ்சு நிமிஷம் ஒதுக்கி பவ்யமா வேண்டுகோள் விடுத்ததையும் பார்த்தீங்க.. எப்படியும் வந்து சேரப் போறீங்கன்னுதான் நான் நினைச்சிட்டிருந்தேன்.. திடீர்ன்னு "எங்கயோ வெளிநாடு டூர் போறேன். அன்னிக்கு வர முடியாது.. ஸாரி..."ன்னு ஒத்த வார்த்தையச் சொல்லிப்புட்டு எஸ்கேப்பாயிட்டீங்க.. ம்.. தப்பிச்சீங்க ஸார்.. தப்பிச்சீங்க.. இல்லைன்னு வைங்க.. நாளைப் பொழுதுக்கு ஆட்சி மாறி வேற ஆட்சி வந்து.. நீங்களும் இங்கனேயே அண்ணா பல்கலைக்கழகத்துல வேலை பார்த்திட்டிருக்க.. "ஜனாதிபதி மாளிகைல இருந்தவுக, அண்ணா பல்கலைக்கழகத்துல வேலை பார்க்கலாமா?"ன்னு ஏதாவது ஒரு 'ஒன்றியம்' கோர்ட்ல கேஸ் போட்டு.. அதுக்காக நீங்க கோர்ட்டுக்கு நடக்க ஆரம்பிச்சு.. எம்புட்டு சிரமம் பாருங்க.. தப்பிச்சிட்டீங்க ஸார்.. தப்பிச்சிட்டீங்க..

(தொடரும்)

மனம் திறந்த மடல்-பெறுநர் 'மேதகு ஜனாதிபதி திரு.A.P.J.அப்துல்கலாம்'-1

19-06-2007

இந்தியாவின் முதல் குடிமகன் மேன்மை தாங்கிய திரு.A.P.J.அப்துல்கலாம் அவர்களுக்கு

வணக்கம். நலம்தானே.. நலமாகத்தான் இருப்பீர்கள்.. இருக்கிறீர்கள்.. நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். என்றாலும் உங்களை நலம் விசாரிப்பது இந்தியத் திருநாட்டையே விசாரிப்பது போல.. ஆகவேதான் விசாரித்தேன்..

ஐந்தாண்டுகளுக்கு முன்பாக, நீங்கள் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போகிறீர்கள் என்ற செய்தியைக் கேட்டவுடனேயே நாட்டில் அரசியல் என்றால் என்னவென்று தெரியாத குஞ்சுகள் எல்லாம் கோலாகலமாகிவிட்டன. ஏதோ தங்கள் வீட்டுக் கோழிக்குஞ்சு ஒன்று சாயுபு கடையில் இருந்து தப்பித்துவிட்டதைப் போல் அவர்களுக்கு ஒரு சந்தோஷம்..

ஆனால் உண்மையில் நடந்தது என்ன?

10, ஜன்பத் ரோட்டின் முன்னாள் விசுவாசியும், தன் மாமியாரின் நம்பிக்கைக்குரியவருமான திரு.அலெக்ஸாண்டரை ஜனாதிபதியாகத் தேர்வு செய்யக் கூடாது என்ற இந்தியாவின் திடீர் 'அன்னை'யான, மேல் நாட்டு மருமகள் சோனியாவின் ராஜதந்திரத்தால், 'ஒரு சிறுபான்மை குடிமகன் முதல் குடிமகனாக வர முடியவில்லை..' என்று பத்திரிகைகள் புலம்பித் தள்ளின.

இதற்கு பதிலடி தரும் நினைப்பில், 'பார்.. பார்.. சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவரைத்தான் நாங்களும் தேர்ந்தெடுத்திருக்கிறோம்' என்று சொல்லி அன்னையின் காங்கிரஸ் கட்சியே, உங்களது பெயரை ரகசியமாக அப்போதைய ஆளும்கட்சியான பாஜக வட்டாரத்தில் பரப்பிவிட்டது.

இதில் சிக்கிய பா.ஜ.க., கோழியைத் தாங்கள் பிடித்து சாயுபுவிடம் உரித்துக் கொடுத்து தொடைக் கறியை 'புக்' செய்ய நினைத்து உங்கள் பெயரை அறிவித்துவிட்டார்கள். தங்களது வேட்பாளருக்குக் கிடைத்த திடீர் ஆதரவால் திக்குமுக்காடிப் போன காங்கிரஸ் வேறு வழியில்லாமல் ஒருமித்தக் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து உங்களுக்கு பொக்கேயை அனுப்பிவைத்தது.

நின்றீர்கள்.. ஜெயித்தீர்கள்.. ஜெகஜோதியாக அண்ணா யுனிவர்ஸிட்டியின் இரண்டு பெட்ரூம் கொண்ட அறையில் இருந்து, இருநூறு அறைகள் கொண்ட ஜனாதிபதி மாளிகைக்கு பால் காய்ச்சி குடியேறிவிட்டீர்கள்..

இனி என்ன நடக்கும் என்று எதிர்பார்த்திருந்த என்னைப் போன்ற பாமரனின் கண்களுக்கு நடந்ததெல்லாம் என்ன?

'நாளையில் இருந்து இந்தியாவின் தலைவிதியே மாறப் போகிறது..' என்று ஒரு குரூப்பும், 'அரசியல்வாதிகள் பயந்து போய் இருக்கிறார்கள். அவரவர் எங்கெங்கே பணம் போட்டு வைத்திருக்கிறார்களோ அந்தந்த நாடுகளுக்கே பிளைட் ஏறப் போகிறார்கள்..' என்று இன்னொரு குரூப்பும் அடித்துக் கொள்ளாத குறையாக வார்த்தைகளால் சண்டையிட்டுக் கொண்டன.

வாஜ்பாய் பிரதமராக இருக்கின்றவரையில் உங்களுக்கும் பிரச்சினையில்லை. அவருக்கும் பிரச்சினையில்லை. மக்களுக்குத்தான் பிரச்சினை இருந்தது. 'பொடா' கொண்டு வந்தார்கள். கருமமே கண்ணாக கையெழுத்திட்டீர்கள். நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பேர் கைதானார்கள்.. சிறை சென்றார்கள். வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றது. தீர்ப்புகள்தான் இன்னமும் வந்தபாடில்லை.

அடுத்தத் 'திருடர்களைத்' தேர்ந்தெடுக்க தேர்தல் திருவிழாவும் வந்தது. 'முதல் குடிமகன்' என்ற முறையில் ஜோராக ஓட்டுப் போட ஓட்டுச் சாவடிக்கு வந்தீர்கள். பிளாஷ் மழையில் நனைந்து நீங்கள் ஓட்டளித்த போது, 'அவரை மாதிரியே நாங்களுந்தாம்ப்பூ ஓட்டுப் போட்டோம்..' என்று உங்களை நினைத்தே புல்லரித்துப் போனார் குரும்பபட்டி குடிமகன் ஒருவர்..

தேர்தல் எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் நினைத்தது போலவே அனைவரின் பார்வையும் உங்கள் மீதுதான் இருந்தது. 'அன்னையா? கவிஞரா?' என்றபோது அன்னையின் கட்சி முன்னிலை பெற்றது. அன்னை உங்களைச் சந்திக்க வந்தார். பதவியேற்க தன்னை முன்னிலைப்படுத்தப் போகிறார் என்று நாங்கள் நினைத்தோம்.

"நான் பதவியேற்கப் போவதில்லை. ஆனால் காங்கிரஸ் நிச்சயம் அரியணை ஏறும்.." என்று காங்கிரஸின் அன்னை திடீர் அணுகுண்டை வீசினார். அனைவரும் தலையைப் பிய்த்துக் கொள்ளாத குறை.. அப்படியென்ன வித்தியாசம்? காங்கிரஸ்க்கும், அன்னைக்கும்.. இதுதான் அன்றைக்கு எழுந்த கேள்வி..

வெளியில் மெல்லக் கசிந்த விஷயம் என்னவெனில், தங்களை அன்னை சந்தித்த பிறகுதான் இந்த 'ஞானதோயம்' அவருக்குக் கிடைத்திருக்கிறது. அந்த ஞானதோயத்திற்குத் தாங்கள் அவருக்கு உபதேசித்த ஏதோ ஒரு 'ஸ்லோகம்'தான் காரணம் என்பது பிற்பாடு எங்களுக்குத் தெரிய வந்தது.

'அன்னை அவர்களே.. தாங்கள் அயல் நாட்டில் பிறந்தவர்' என்று மறந்து போயிருந்த 'அன்னை' அவர்களுக்கே லேசாக கோடு போட்டு காட்டியிருப்பீர்கள் என்று நாங்கள் துளிக்கூட நம்பவில்லை ஐயா... ஆனால், அப்படி ஒரு எண்ணத்தை இந்திய-அயல் நாட்டு அன்னையின் மனதில் திணிக்கும் அளவிற்கு உங்களுடைய 'அட்வைஸ்' இருந்தது என்று நினைத்தபோது எங்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி.

இதுவும் கொஞ்ச நாட்கள்தான். இந்தியாவின் சொர்க்கபுரி பீகாரின் 'பெஸ்ட் கண்ணா பெஸ்ட்' புகழ் உச்சத்திற்குப் போய்க் கொண்டிருப்பதாக வடக்கே காஷ்மீரில் இருந்து தெற்கே கன்யாகுமரிவரைக்கும் காற்றோடு காற்றாகப் பரவியிருந்தது.

பொதுத் தேர்தலுடன் நடந்த பீகார் சட்டசபைத் தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. முன்னேற்பாட்டு நடவடிக்கையாக தேர்தலில் தோற்றுப் போய் வீட்டில் இருந்த ஆஜானுபாகுவான பூட்டாசிங், உங்கள் கையெழுத்துடன் ஏற்கெனவே பாட்னா கவர்னர் மாளிகையில் குந்த வைக்கப்பட்டிருந்தார். காங்கிரஸ்க்கும் கவர்னர்களுக்கும் அப்படி ஒரு பொருத்தம். காங்கிரஸ் கட்சிக்கு இப்போது இருக்கும் நிறைய கெட்டப் பெயர்களை உருவாக்கித் தந்தவர்களில் முதன்மையானவர்கள் கவர்னர்கள்தான்.

யாருக்கும் மெஜாரிட்டி இல்லை என்றவுடன் 'பேசிப் பார்ப்போம்..' 'கூப்பிட்டுப் பார்ப்போம்..' 'கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்வோம்' என்று சொல்லி உங்களது ஆட்சியை மாநிலத்தில் அமல்படுத்தினார்கள். தொடர்ந்து குதிரை பேரத்தில் வல்லவர்களான காங்கிரஸாலேயே, நரியையும், மானையும் ஒரே கூட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

லாலுவும், ராம்விலாஸ் பாஸ்வானும் மத்தியில் கேபினட் மந்திரிகளாகி சிரித்துக் கொண்டு, பாட்னா விமான நிலையத்தில் கால் வைத்தவுடன் பரம எதிரிகளாகி கையில் கத்தியில்லாமல் சண்டையிட்டார்கள். எப்பாடுபட்டாவது காங்கிரஸ் தலைமையில் ஆட்சியை அமைத்தே தீர வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறாது என்ற நிலையில் பாஸ்வான் திடீர் குண்டைத் தூக்கிப் போட்டார்.

தான் நிதிஷ்குமாருடன் கூட்டணி சேர்வதாகச் சொல்லி ஆதரவுப் பட்டியலை கவர்னரிடம் கொடுத்தார். கவர்னர் கருமமே கண்ணாக டெல்லிக்குப் போன் செய்து, "என்ன செய்ய?" என்று தன் விசுவாசத்தைத் காட்டினார். 'டெல்லி' என்ன ஓதியதோ தெரியவில்லை.. 'இது நிச்சயமாக குதிரை பேரம்தான்..' என்று சொல்லி சட்டப்பேரவையைக் கலைக்க மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தார்.

இதில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், பாட்னாவில் இருந்து கிளம்பிய இந்த சிபாரிசை அடுத்த அரை மணி நேரத்தில் டெல்லியிலிருந்த மத்திய மந்திரி சபை ஏற்றுக் கொண்டு அர்த்தராத்திரியாகியிருந்த அந்த நேரத்தில் ரஷ்யாவின், பீட்டர்ஸ்பர்க்கில் தூங்கிக் கொண்டிருந்த உங்களை எழுப்பி கையெழுத்துக் கேட்க, "அந்த நேரத்தில் நீங்க என்ன கேட்டிருப்பீர்கள்?" "அவர்கள் என்ன பதில் சொல்லியிருப்பார்கள்..?" என்றெல்லாம் சாதாரண பிச்சைக்காரனாகிய என்னால யோசிக்க முடியல சாமி.. ஆனால் நீங்கள் கையெழுத்துப் போட்டீர்கள். இங்கே எங்களது பணத்தில் 250 கோடி ரூபாய் பணால்...

விஷயம் உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது. அதற்குள் அடுத்த தேர்தல் அறிவிப்பும் வந்து.. தேர்தல் பிரச்சாரமும் துவங்கிவிட்டது. தீர்ப்பும் தொடர்ந்து வந்தது.. "சட்ட சபையைக் கலைத்தது தவறு.. கவர்னர் ரம்மி விளையாடிவிட்டார்.." என்று..! கடைசியில் உங்களது அர்த்த ராத்திரித் தூக்கமும் கெட்டு.. பேரும் கெட்டுப் போனது இது முதல் முறை.

அடுத்து அரசியலில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வருவோம் என்று அநேகமாக எல்லா சுயேச்சைகளும்கூட தேர்தலில் வாக்குறுதி கொடுத்திருந்தார்கள். ஆனால் ஜெயித்த பிறகு சுயேச்சைகளே சினிமா ஹீரோயின்களைப் போல் திடீரென்று மாயமனார்கள். நீங்களாவது குரல் கொடுத்து பெண்களைக் காப்பீர்கள் என்று நினைத்தோம். தங்கள் காதுக்கு இதுவரையிலும் அது வரவில்லை என்ற நினைப்பில் இருக்கிறீர்கள்.

ஒருவரே ஒரு சமயத்தில் இரண்டு ஆதாயம் தரும் பதவிகளை வகிக்கக்கூடாது என்று சொல்லி 'இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் காதல் மனைவி' என்கிற ஒரே தகுதியில் பாராளுமன்றத்தில் நுழைந்த ஜெயாபச்சனுக்கு எதிராக கேள்வி எழுப்பினார்கள் காங்கிரஸார். அது பூமராங்காக அவர்கள் கழுத்துக்கே திரும்பியது.

அதுவும், அவர்கள் கட்சித் தலைவியும் இந்தியாவின் அன்னையுமான சோனியாவின் கழுத்துக்குக் குறி வைத்து வர.. மின்னல் வேகத்தில் ராஜினாமா, தேர்தல் அறிவிப்பு. பின்னர் பிரச்சாரம்.. அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி என்று மீண்டும் எங்கள் பணம் கொஞ்சூண்டு ஸ்வாகாவாகி அன்னையும் வெற்றிகரமாக பாராளுமன்றத்திற்குள் நுழைந்துவிட்டார்.

பொறுப்பார்களா நம்ம அரசியல்வாதிகள்? தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முதலில் சட்டத்தைத் திருத்துவதுதான் தம்முடைய 'வாரிசு அரசியல்வாதிகளுக்கு' நல்லது என்று நினைத்து ஒரு அவசரச் சட்டத்தை இயற்றிவிட்டார்கள். கையெழுத்து கேட்டு உங்களிடம் வந்தபோது மென்மையாக மறுத்து திருப்பி அனுப்பிவிட்டீர்கள். பாராட்டுக்கள். எங்கள் மனதில் எங்கயோ போய்விட்டீர்கள் அடுத்த இரண்டு மாதங்கள் வரும்வரை..

மீண்டும் அதே சட்டம் எந்தத் திருத்தமும் இல்லாமல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உங்கள் டேபிளுக்கு வந்தது. 'எல்லா ஜனாதிபதிகளும் இதைத்தான் செய்வார்கள்' என்று நீங்களும் சொல்லாமல் சொல்லி, அதில் கையெழுத்திட்டு உங்களது மனசாட்சியை சமாதியாக்கி உங்கள் மீது நான் வைத்திருந்த நம்பிக்கைக்கு கருமாதி கொண்டாடிவிட்டீர்கள்.

இந்த நான்கரை வருடங்களாக நீங்களும் ஊர், ஊராக சென்று "மாணவர்களே தூங்காதீர்கள்.. விழித்திருங்கள்.. படியுங்கள்.. கற்றுக் கொள்ளுங்கள்.. கேள்வி கேளுங்கள்.." என்று தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

இதோ நாங்களும் கேள்வி கேட்கிறோம்.. இந்த ஆதாயம் தரும் பதவி தொடர்பான மசோதா நேர்மையானதா? இதனால் யாருக்கு லாபம்? கேடு கெட்ட அரசியல்வாதிகளுக்குத்தானே..

"மாணவர்களையும், மக்களையும் புதிய உலகத்துக்கு அழைத்துப் போகப் போகிறேன். இதற்கு முதல்படியாக கேள்விகளை எழுப்புங்கள்.. வினவுங்கள்.. கேளுங்கள்.." என்றெல்லாம் சொன்ன நீங்கள் வழக்கமான ஜனாதிபதியைப் போல் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி இரண்டாவது முறையாக ஒரு மசோதா ஜனாதிபதியிடம் சென்றால் அவர் கையெழுத்திட்டுத்தான் தீர வேண்டும் என்று சொல்லாமல் சொல்லிக் கையெழுத்திட்டுவிட்டீர்கள். இது சரிதானா?

கேள்வி கேட்க வேண்டிய ஒரு உயரிய நிலையில் இருந்து அதைச் செய்யாமல் இதுநாள்வரையில் உங்களுக்கென்று இருந்த உரிமையையும் இழந்துவிட்டீர்களே..

ஐயா.. அக்னிச் சிறகுகள் தந்த முதல்வரே.. கொண்ட கொள்கை கசாப்புக் கடையில் வெட்டப்படும் கறித்துண்டுகள் மாதிரி வெட்டப்பட்டுக் கொண்டிருக்க.. இவ்வளவையும் தாங்கிக் கொண்டு நீங்கள் அங்கயே இருந்திருக்க வேண்டுமா?

மசோதாவில் கையெழுத்திடாமல் டெல்லியில் இருந்து வெளியேறி இருந்தீர்கள் என்றால், இந்தியாவின் கோடிக்கணக்கான இளைஞர்களின் இதயத்தில் நீங்கள் குடியேறி இருப்பீர்கள்..

ஆனால் இப்போது, இந்தியாவின் இன்னொரு ஜனாதிபதி வந்தார்.. பேசினார்.. போனார்.. என்ற நிலையில் உங்களது பெயரும் எங்களால் எங்களுடைய வாரிசுகளுக்குச் சொல்லப்படும் துர்ப்பாக்கிய நிலைக்கு எங்களைத் தள்ளிவிட்டீர்கள்.

இரண்டாம் பகுதி இங்கே

வருங்கால 'முதல் குடிமகளின்' அரசியல் பயோடேட்டாவருங்கால முதல் குடிமகள்-திருமதி பிரதிபா பாட்டீல்

இந்தியத் தலைநகர் புதுதில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அடுத்த மாதம் குத்து விளக்கேற்றி, பால் காய்ச்சி குடித்தனம் நடத்தக் காத்திருக்கும் திருமதி பிரதிபா பாட்டீலின் பயோ டேட்டா இது :

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவோன் மாவட்டத்தில் உள்ள ஜல்கோவான் என்ற கிராமத்தில் 1934 டிசம்பர் 19-ம் தேதி பிறந்தார் பிரதிபா பாட்டீல். ஜலகானில் உள்ள M.J.கல்லூரியில் M.A.வும், மும்பை சட்டக் கல்லூரியில் L.L.B.யும் படித்தார். படித்து முடிந்ததும் மும்பையில் வழக்கறிஞராகத் தொழில் செய்தார்.

மகாராஷ்டிரா மாநில சட்டப் பேரவை உறுப்பினராக 1962-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இடம் பெற்றார். 1967 முதல் 1972-வரை மகாராஷ்டிரா மாநில சுற்றுலா, சுகாதாரத் துறைகளில் துணை அமைச்சராகவும், 1972 முதல் 1974-வரை சமூக நலத்துறை கேபினட் அமைச்சராகவும், 1975 முதல் 1976-வரை மதுவிலக்கு மற்றும் கலாச்சாரத் துறை கேபினட் அமைச்சராகவும், 1977 முதல் 1978-வரை கல்வி அமைச்சராகவும் பணியாற்றியவர்.

1979 ஜூலையில் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக சரத்பவார் பதவி வகித்தபோது, எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றினார் பிரதீபா பட்டேல்.

1985-ல் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓராண்டுக்குப் பிறகு மாநிலங்களவையின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1986 நவம்பர் 18 முதல் 1988 நவம்பர் 5ம் தேதி வரை அப்பதவியில் இருந்தார். இதே காலத்தில் நாடாளுமன்றத்தின் உரிமைக் குழுத் தலைவராகவும் இருந்தார்.

1988 முதல் 1990 வரை மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பதவி வகித்தார்.

1991-ல் அமராவதி தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மக்களவை உறுப்பினர் பதிவிக் காலம் முடிந்த பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றவர் போல சற்று ஒதுங்கியே இருந்தார் பிரதிபா பாட்டீல். பிறகு, தேர்தல் பிரச்சாரத்தின் போது தீவிரமாக காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

2004 நவம்பரில் கட்சித் தலைமையே அவரை அழைத்து ராஜஸ்தான் மாநில ஆளுநராக நியமித்தது. ராஜஸ்தான் மாநிலத்தின் முதல் பெண் கவர்னரும் இவர்தான்.

கடந்த ஆண்டு ராஜஸ்தானில் முதல்வர் வசுந்தரா ராஜே, மத சுதந்திர சட்ட மசோதா கொண்டு வந்தார். 'மத மாற்றம் செய்வதைத் தடை செய்யவே இந்தச் சட்டம் உதவும்' என்று போப் ஆண்டவர் உள்ளிட்டோரிடமிருந்து இதற்கு எதிர்ப்பு வந்தது. கோப்பு, பிரதிபா பாட்டீலிடம் வந்ததும் இதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்து பரபரப்பை உண்டு செய்தார்.

சமூக சேவையிலும் பிரதிபா பாட்டீலுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. மும்பையிலும், டெல்லியிலும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக விடுதிகளைக் கட்டியுள்ளார். ஏழைகளுக்கான கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். கிராமப்புற இளைஞர்கள், பார்வையற்றோர் ஆகியோருக்கான திட்டங்களில் அதிக ஆர்வம் காட்டியவராம். ஜல்கானில் பெண்களுக்கான கூட்டுறவு வங்கியை நிறுவியுள்ளார்.

பிரதிபா பாட்டீலுக்கு விளையாட்டிலும் ஆர்வம் உண்டாம். கல்லூரிகளுக்கு இடையிலான டேபிள் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற வீராங்கனையாகத் திகழ்ந்துள்ளார்.

பிரதிபா பாட்டீலுக்கு 1965 ஜூலை 7-ம் தேதி திருமணம் நடந்தது. கணவர் டாக்டர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத். சிறந்த கல்வியாளர். இத்தம்பதியினருக்கு ஜோதிரதோர் என்ற மகளும், ராஜேந்திர சிங் என்ற மகனும் உள்ளனர்.

பிரதிபா பாட்டீலின் கணவர் ஷெகாவத்தும் லேசுப்பட்ட ஆளில்லை. அமராவதி மாநகராட்சியின் முதல் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விளையாட்டுத் துறையிலும், கல்வித் துறையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஷெகாவத் 1985-ல் மகாராஷ்டிர மாநில பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜனாதிபதி பதவிக்கான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டவுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் பிரதிபா பாட்டீல்...

அப்போது,

"நாட்டின் மிக உயர்ந்த பதவிக்குப் போட்டியிடும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என்று நான் ஒரு போதும் கனவு கண்டதில்லை. வாய்ப்பை நல்கிய சோனியாகாந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்தவர்களுக்கு நன்றி.

போட்டியிடும்படி என்னை யாரும் நிர்ப்பந்திக்கவில்லை. என்னை எதிர்த்துப் போட்டியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் பைரோன்சிங் ஷெகாவத் பெருமதிப்பிற்குரியவர். அவரை நான் மிகவும் மதிக்கிறேன். அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாது.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களை மேம்படுத்த பாடுபடுவேன். சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை அகற்ற பாடுபடுவேன்.." என்று தனது முதல் பேட்டியில் கூறியிருக்கிறார் பிரதிபா பாட்டீல்.

வருக.. வருக.. 'முதல் குடிமகளே' வருக..

இன்றைய அரசியல்-துக்ளக் கமெண்ட்ஸ்-4

இன்றைய அரசியல்-துக்ளக் கமெண்ட்ஸ்-3

இன்றைய அரசியல்-துக்ளக் கமெண்ட்ஸ்-2

இன்றைய அரசியல்-துக்ளக் கமெண்ட்ஸ்-1

இன்றைய அரசியல்-துக்ளக் அட்டைப்பட கார்ட்டூன்

நான் எந்த ஜாதி..?

11-06-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே...


அபின், கஞ்சா, பிரவுன் சுகர் போன்ற போதை வஸ்துக்களை விடவும், மது என்ற கொடிய அரக்கனை விடவும், பணம் என்னும் மயக்கத்தில் ஆழ்த்தும் பேராசையை விடவும் நம் இளைஞர்களை அதிகம் பீடித்திருப்பது 'ஜாதி' என்கின்ற கொடிய பேய்..

பிரசவம் பார்க்க மருத்துவனைக்குச் சென்ற என் தாய் மருத்துவர் என்ன ஜாதி என்று கேட்டிருப்பாளோ என்று என்னால் நினைக்க முடியவில்லை.

பிறந்தவுடனேயே கையை, காலை உதைத்துக் கொண்டு வீறிட்டு அலறிய நம்மை, முதலில் தூக்கியது எந்த ஜாதிக்காரர் என்பது நம்மைப் பெற்றெடுத்தவளுக்கேத் தெரியாது..

அக்கம்பக்கம் வீட்டார் முறை வைத்து நம்மைத் தூக்கி மகிழும்போதெல்லாம் ஜாதியைக் கேட்டுவிட்டுத்தான் நமது பெற்றோர், நம்மை அவர்களிடம் ஒப்படைத்திருப்பார்கள் என்று நாம் கருத வாய்ப்பே இல்லை..

நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் ஏழை மக்களுக்கு மாத தவணையாக மளிகைப் பொருட்கள் கொடுத்த கடைக்காரர், நம்மிடம் ஜாதியைக் கேட்டுத்தான் கடன் கொடுத்திருப்பார் என்ற கருத்துக்குத் துளியும் இடமில்லை.

தண்ணீருக்காக தெருத்தெருவாக அலைந்தபோது எவனோ ஒரு டிரைவர் ஓட்டி வந்த லாரியில் அடிதடிகளுக்கிடையில் தண்ணீரைப் பிடித்த நம் குடும்பத்தினர், அவ்வளவு கூட்டத்திலும், நெருக்கடியிலும் டிரைவரிடம் ஜாதி கேட்டிருப்பார்களோ என்று நினைக்கவே தோன்றவில்லை.

பள்ளிக்கூடத்திற்குப் போகும்போது, பக்கத்து வீட்டுப் பையனைக் காட்டி "அவன்கூட போய் சூதானமா வந்திரு சாமி.." என்று தெருக்கோடி வரைக்கும் வந்து பயத்துடன் விட்டுவிட்டுப் போன என் அம்மாவுக்கு என் தோழனின் சாதியைப் பற்றிக் கவலையிருந்திருக்காது..

எழுத்துக் கூட்டிச் சொல்லிக் கொடுக்கும் ஆசான்கள் என்ன ஜாதி என்று கேட்டு எனது தந்தையும், அல்லது உங்களது தந்தையும் என்னையும், உங்களையும் பள்ளியில் சேர்த்திருக்க மாட்டார்கள்.

பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் நம் அருகில் அமர்ந்திருந்தவர்களிடம் அவர்கள் என்ன ஜாதி என்று கேட்கக்கூடிய வாய்ப்பே நமக்குக் கிடைத்திருக்காது. அவர்கள் நமது சக மாணவர்கள்.. நண்பர்கள்.. தோழர்கள்.. அவ்வளவுதான்..

ஓடிப் பிடித்து விளையாடும்போதும், காயம்பட்டு சிராய்ப்புடன் அழுகும்போது துணிகளைக் கொண்டுத் துடைத்துவிட்ட நண்பர்களிடம் என்ன ஜாதி என்று என்றைக்குமே நாம் யாரும் கேட்டதில்லை.

எனக்குப் பிடித்த விளையாட்டை விளையாடச் சென்றபோது அரவணைத்துக் கொண்ட நண்பர்கள் அனைவரும் சொன்னது.. "நன்றாக பந்து வீசுகிறாய்.. டீமில் சேர்ந்துவிடு.." என்று.. அவர்களோ, நானோ ஜாதி பற்றிப் பேசிக் கொள்ளவில்லை.

"சாயந்தரம் வீட்டுக்கு வா. எங்கம்மா எனக்கு கணக்குச் சொல்லித் தரும்போது நீயும் கூட இருந்து கேட்டுக்க.." என்று என்னை அழைத்துச் சென்ற நண்பனின் தாய், போகும்போதெல்லாம் சோறு போட்டு, சொல்லிக் கொடுத்தவர் அந்த ஒரு வருடப் படிப்பு முடியும்வரையில் கேட்காத கேள்வி, "நீ என்ன ஜாதி..?" என்பது...

தந்தைக்கு உடல் நலம் சரியில்லை என்று மருத்துவனையில் உடன் இருந்து தாதி வேலைகளைச் செய்து கொண்டிருந்தபோது ஓடி வந்து உதவியர்கள் ஒரு நோயாளியாகப் பார்த்தார்கள் என் தந்தையை.. என் ஜாதியைக் கேட்கவில்லை.

மருத்துவமனையில்தான் எத்தனை மருத்துவர்கள், எத்தனை நோயாளிகள், எத்தனை தாதிகள்.. அத்தனை பேரும் ஒருத்தருக்கொருத்தர் கேட்டுக் கொள்ளாத வார்த்தையும் யார் யார் என்ன ஜாதி என்பதைத்தான்..

தீ விபத்தில் காயம்பட்டு வந்த இளம்பெண்ணைக் காப்பாற்ற, பெட்டில் சேர்த்திருந்த மனைவிக்குத் துணையாக மருத்துவமனையில் தங்கியிருந்த ஒருவர், என் கண் முன்னேயே ஒரு பாட்டில் ரத்தம் கொடுத்து அப்பெண்ணின் உயிரைக் காப்பாற்றினார். அந்தப் பெண்ணும் சரி.. அந்த நபரும் சரி பரஸ்பரம் கேட்டுக் கொள்ளவேயில்லை என்ன ஜாதி என்று..?

பஸ்ஸில் செல்லும்போது உட்கார சீட் கிடைத்தால் அருகில் இருப்பவர் நம்ம ஜாதி இல்லையே என்று சொல்லி யாரும் அமராமல் இருப்பதில்லை.

டாஸ்மாக் கடையில் கூட்டத்தோடு கூட்டமாக 500 ரூபாய் தாளை நீட்டி பாட்டில் கேட்கும்போது, கொடுப்பவன் என்ன ஜாதி என்று எந்த ஜாதிச் சிங்கங்களும் கேட்பதில்லை.

அரை வயிறு சோற்றுக்காக வேறு வழியே இல்லாமல் தன் உடலை விற்க வரும் பெண்ணிடம், எந்த ஆணும் அவளுடைய ஜாதியைக் கேட்ட பின்பு தன் சட்டையைக் கழற்றியதாக நான் கேள்விப்பட்டதே இல்லை.

பண உதவிக்காக 'தனம்' இருப்பவர்களை அணுகும்போது, அவர்களிடம் ஜாதி கேட்டு தங்களது வீட்டுத் தன்மானத்தை யாரும் அடகு வைப்பதில்லை.

தங்களது வசதிக்காக வாகனத்தைத் தேர்வு செய்பவர்கள், அதை இந்த ஜாதிக்காரர் கடைகளில்தான் வாங்குவேன் என்று சொல்லி நான் கேட்டதில்லை.

எவ்வளவு பசியோடு இருந்தாலும் என் ஜாதிக்கார நாயின் ஹோட்டலில்தான் நான் சாப்பிடுவேன் என்று எந்த ஜாதிக்காரனும் சொல்லி நான் கேட்டதில்லை.

என் ஜாதிக்காரனின் பஸ்தான், கார்தான், வாகனம்தான் எனக்கும் என்று எந்த ஜாதிக்கார தறுதலையும் கதறி நான் பார்த்ததில்லை.

எந்தக் கட்சியில் நான் இருந்தாலும் தேர்தலின்போது என் ஜாதிக்காரர்களிடம் மட்டும்தான் ஓட்டு கேட்பேன் என்று எந்தவொரு அரசியல்வாதி சொல்லியும் நான் படித்ததில்லை.

லஞ்சப் பணம் வாங்கும்போது அதைக் கொடுப்பவன் தன் ஜாதிக்காரனா என்று கேட்ட பிறகு பணக்கட்டை உரசிப் பார்க்கும் பழக்கமுள்ள அரசியல்வாதிகளைப் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை..

எனக்குப் பிடித்த மேல்கல்வியைக் கற்கும்போது எனக்குப் பாடம் எடுத்த ஆசிரியர், கடைசிவரையிலும் என்னிடம் கேட்காதது நான் என்ன ஜாதி என்பதுதான்.

எனக்குப் பிடித்த வேலையில் இறங்கியபோது வாய்ப்பளித்தவர்களுக்கு இன்றுவரையிலும் நான் என்ன ஜாதி என்பது தெரியாது..

எனக்குப் பிடித்தத் தொழிலில் இறங்கியபோதும் உற்சாகமூட்டியவர்களும், தொழிலைக் கற்றுக் கொடுத்தவர்களும் என் ஜாதி என்ன என்று என்னைக் கேட்கவேயில்லை.

எனக்குப் பிடித்தத் திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள் பற்றிப் பலரிடம் பேசும்போதும் இந்த ஜாதி பிரச்சினை என்னைச் சுற்றி எழவேயில்லை.

நண்பர்களை விரட்டி விரட்டி சம்பாதித்துக் கொண்டிருக்கும்போது, அனைவருமே "தலைவா.." என்றுதான் சொன்னார்களே ஒழிய "நீ என்ன ஜாதி..?" என்று கேட்கவில்லை.

எனக்குப் பிடித்தமான எழுத்துக்கு ஒரு வடிகால் கிடைக்கிறதே என்று வலைத்தளத்தில் நுழைய முயற்சித்த போது 'அரவணைத்த கைகள்' எழுது கோலைத்தான் கைகளில் திணித்ததே தவிர.. 'என் ஜாதி என்ன...?' என்று கேட்டுத் தயங்கி நிற்கவில்லை.

எனக்குப் பிடித்த வலைத்தளத்தில் முனைப்போடு ஒரு நாள் இறங்கியபோது சொல்லிக் கொடுத்த 'தெய்வத்திற்கு' இன்றுவரை நான் என்ன ஜாதி என்பது தெரியாது..

எனக்குப் பிடித்தமான வகையில் முதன்முதலில் எழுதிய கட்டுரைக்கு முதல் பின்னூட்டமிட்ட அந்த நண்பரும் 'நான் என்ன ஜாதி..?' என்று கேட்டுப் போடவில்லை.

அதற்குப் பதில் போட்ட எனக்கும் அதைக் கேட்கும் எண்ணமில்லை.

எனக்குப் பிடித்தமான முறையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய வலைஞர்கள் அனைவரும், 'நான் என்ன ஜாதி..?' என்று கேட்டு தங்களது பேச்சைத் துவக்கவில்லை.

எனக்குப் பிடித்த வலைத்தளத்தின் மாநாடுகளில் தங்கு தடையில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தபோது என் பெயர்தான் கேட்கப்பட்டதே தவிர, என் ஜாதி என்ன என்ற கேள்வி எங்கும் பிரஸ்தாபிக்கப்படவில்லை.

நான் இந்த ஜாதியைச் சேர்ந்தவன் என்பதால்தான் உனது வலைத்தளத்திற்குள் வருகிறோம் என்று எவரும் என்னிடம் சொன்னதில்லையே..

ஆனால்....

இப்போது....

எனக்கு எப்போதும் பிடித்தமான முறையில் தொடர்ந்து எழுதி வரும்போது, "நான் என்ன ஜாதி..?" என்ற கேள்வியே இப்போதெல்லாம் பதிலாக வருகிறதே..

ஏன்?

என் வாழ்க்கையின் இத்தனை நாட்களிலும் உடன் இருந்தவர்களுக்கும், இருந்து பழகியவர்களுக்குமே இதுவரையிலும் தோன்றாத எனது ஜாதியைப் பற்றிய சந்தேகம், இப்போது வலைத்தளத்தில் எங்கேயிருந்து தோன்றியது என்பது எனக்குத் தெரியவில்லை.

குற்றம் என்னுடைய பிடித்தமானதினாலா அல்லது எனது எழுத்தினாலா?

எனது பிடித்தமானதினால்தான் என்றால் உலகத்தில் உள்ள ஒவ்வொரு ஜாதியினரின் விருப்பமும் ஒரே மாதிரியிருக்கிறதா?

எழுத்தினால்தான் என்றால் அத்தனை ஜாதியினரின் எழுத்தும் ஜாதிக்கு ஜாதிக்கு வித்தியாசமாகத் தெரிந்துவிடுமா?

எனக்குப் புரியவில்லை.

கட்டுரைகளுக்கும், செய்திகளுக்கும், எனது எண்ணங்களுக்கும் பதில் எனது ஜாதிதான் என்றால், எனது ஜாதியைச் சேர்ந்த அனைவரும் ஏன் என்னுடன் இல்லை..?

என் ஜாதியைச் சேர்ந்த பலரும் ஏன் எனது தலைக்கு மேல் அமர்ந்திருக்கிறார்கள்.. நான் கீழே இருக்கிறேன்...?

ஜாதிதான் ஒரு மனிதனின் எழுத்தைத் தீர்மானிக்கிறது என்று இந்த 'ஜாதிச் சிங்கங்கள்' எதை வைத்துச் சொல்கிறார்கள்?

'என்ன ஆதாரத்தின் கீழ் இந்தந்த ஜாதிக்காரர்களுக்கு இப்படித்தான் எழுத்து வரும்' என்று இந்த 'ஜாதிச் சிங்கங்கள்' யோசிக்கிறார்கள்..?

இந்த 'ஜாதிச் சிங்கங்களும்', நானும் ஒரு நாளில் மரித்துப் போனால் அவரவர் வீடுகளில் ஒரு நாள்தானே வைத்திருக்கமுடியும். மறுநாள் தூக்கித்தானே ஆக வேண்டும். இல்லாவிடில் வீடு நாறிவிடுமே..

கொண்டு போக வேண்டிய இடத்திற்குச் சென்றாலும், எல்லா ஜாதிக்கும் ஒரே மாதிரிதானே..

நெருப்பு, ஜாதிக்கு ஜாதி மாறாதே..

ஒரு சொம்பு.. ஒரே சொம்பு.. துணியால் மூடி ஒரு மணி நேரத்தில் கையில் தருவார்கள்.. அவ்வளவுதான்..

அதில் இதுவரையிலும் ஆட்டம் காட்டிய அத்தனை ஜாதித் திமிரும் இருக்கும்.

அப்போது அதைக் கையில் வைத்துக் கொண்டு என்ன செய்வார்கள்..?

யாரிடம் இருக்கிறது நாகரிகம்..?

09.06.2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே...

உலகத்தினர் அனைவருக்குமே நற்பண்புகளையும், நாகரிகத்தையும் கற்றும் கொடுக்கும் வல்லமை தமிழ் கலாச்சாரத்திற்கும், தமிழ் பண்பாட்டிற்கும் உண்டு என்று நமது கலாச்சாரக் காவலர்கள் பலரும் கதறக் கதறக் கூப்பாடு போட்டு, நம்மையும் அந்தக் 'கதை'யால் அழுக வைத்திருப்பது உங்களுக்குத் தெரியும்...

அவர்களது நேரிடை கண்களுக்குத் தெரியாமல் 'இராமர் பாலம்' போன்று சென்னையில் மறைந்திருந்த, "வேஷ்டி கட்டியிருப்பவன் மனிதன் அல்ல" என்கிற விஷயத்தை இந்த இடுகையில் எழுதியிருந்தேன். படித்திருப்பீர்கள்..

இந்த நேரத்தில் நமது துளசி டீச்சர் "உயிரின் விலை" என்கிற தலைப்பில் இந்த இடுகையில் நியூஸிலாந்தில் நடந்த ஒரு மரணத்தைப் பற்றி எழுதியிருந்தார்.

அப்போது படிக்காதவர்கள் அல்லது தவறவிட்டவர்கள் தயவு செய்து அங்கு சென்று அதைப் படித்துவிட்டு, மீண்டும் இங்கு வந்து தொடருங்கள்.. இல்லாவிடில் நான் சொல்லப் போகும் விஷயங்கள் புரியாமல் போகும் அபாயம் உண்டு.

நான் துளசி டீச்சரின் இடுகையில் அது பற்றி ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன். அதன் பின் இரண்டு நாட்கள் கழித்து நமது துளசி டீச்சர், ஒரு மெயிலை எனக்குத் தட்டி விட்டிருந்தார். அதில் இருந்தது ஒரு புகைப்படம். அது இதுதான்.


புகைப்படத்தில் இருப்பவர்கள் யாரெனில், இறந்து போனவரின் வீட்டில் இருந்த மின்சாரத் தொடர்பை நீக்கிய "மெர்க்குரி பவர்" என்ற கம்பெனியின் உயரதிகாரிகள்தான். இறந்து போனவருக்கு தங்களது இறுதி அஞ்சலியைச் செலுத்த வந்திருக்கிறார்கள்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம், என்னவெனில் கீழே இடது புறம் அமர்ந்திருப்பவர்தான் அந்த மெர்க்குரி பவர் கம்பெனியின் CEO. அவருக்குப் பின்னால் நாற்காலியில் அமர்ந்திருப்பவர்கள், அதே கம்பெனியில் வேலை செய்யும் சில எக்ஸிக்யூடிவ்கள்.

இதுவே எனக்கு முதல் ஆச்சரியத்தைத் தந்தது. ஒரு கம்பெனியின் தலைமை அதிகாரி தரையிலும், அவருக்குக் கீழ் பணியாற்றுபவர்கள் நாற்காலியிலும் அமர்ந்திருப்பது ஆச்சரியம்தானே..

இரண்டாவது ஆச்சரியம்.. கொஞ்சம் போட்டோவை உற்றுப் பாருங்கள்.. அவர்கள் அணிந்திருக்கும் பேண்ட்களுக்கு மேல் துண்டு போன்ற துணியன்றை அணிந்திருப்பது தெரியும்.

அதற்குப் பெயர் 'சுலு' என்பதாம். இறந்து போன அந்தப் பெண்மணி, நியூஸிலாந்து நாட்டில் அகதிகளாக வசிக்கும் 'சமோவா' இனத்தைச் சேர்ந்தவராம்.

அவர்கள் இன வழக்கப்படி இறந்து போனவர்களின் வீடுகளுக்கு வருகின்ற அனைவரும், இந்த 'சுலு' என்றழைக்கப்படும் துணியைக் கண்டிப்பாக அணிந்தே தீர வேண்டுமாம். கம்பெனி அதிகாரிகளும் அவ்வண்ணமே அணிந்து கொண்டுள்ளார்கள். இது எனக்கு அடுத்த ஆச்சரியத்தைத் தந்தது.

ஒரு தனியார் நிறுவனம் தன்னுடைய சட்டத் திட்டத்தின்படி ஒரு செயலை செய்துள்ளது. அதன் விளைவாக துரதிருஷ்டவசமாக ஒரு மரணம் நிகழ்ந்துவிட்டது. அந்த மரணத்திற்குக் காரணமாக இருந்தவர்களே, துக்கம் விசாரிக்க முன் வருகிறார்கள். அப்படி வரும்போது அவர்களுடைய கலாச்சாரத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நஷ்டஈடு கேட்டு கோர்ட்டுக்குப் போவோம் என்று சொல்லியிருக்கும் சூழ்நிலையிலும், அந்த நிறுவனத்தினர் இப்படி முன் வந்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம்தானே..

இங்கே நாம்.. உலகத்திற்கே அறிவுரை வழங்கியவர்கள்.. உலகப் பொதுமறையை உலக மொழிகள் அனைத்திலுமே மொழி பெயர்க்க வைத்திருக்கும் சாதனையைப் படைத்தவர்கள்..
தங்களால் பாதிப்படைந்த, மரணமடைந்த குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள நம்முடைய தனியார் அமைப்புகளும், அரசுகளும் என்றைக்காவது முயன்றதுண்டா? சிலவற்றை யோசித்துப் பார்த்தேன்..

50 ஆண்டுகளுக்கு முன்பாக நெய்வேலி நிலக்கரி நிறுவனம் அமைக்க நிலம் கொடுத்தவர்களின் மூன்றாவது தலைமுறை வாரிசுதாரர்கள், இன்னமும் கோர்ட்டில் வழக்குத் தொடுத்து கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள், அப்போது அவர்களுடைய முப்பாட்டனார்கள் அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி தங்களுடைய குடும்பத்தில் ஒருவருக்கு வேலை போட்டுக் கொடுக்கும்படி..

இந்த 50 ஆண்டு காலத்தில் 10 பொதுத் தேர்தல்களும் நடந்து முடிந்துவிட்டன. எத்தனையோ தலைவர்களும் வந்தார்கள், போனார்கள், சிலர் போய் சேர்ந்துவிட்டார்கள். ஆனால் இன்னமும் அந்த அபலை மனிதர்களுக்கு அந்த நிறுவனம் எந்த நிவாரணமும் கொடுக்க முன் வரவில்லை.

நிறுவனம் சொல்கின்ற ஒரே பதில், "இவர்களது கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலை எங்களிடம் இல்லை" என்று.. "கூட்டுகிற வேலை கூடவா இல்லை.." என்று பதில் மனுவில் கேட்டிருக்கிறார்கள் நிலத்தை இழந்த அப்பாவி மக்களின் மூன்றாம் தலைமுறை வாரிசுகள். இதற்கும் இன்றுவரையிலும் பதில் இல்லை நிர்வாகத்திடமிருந்து..

போபாலில் யூனியர் கார்பைடு ஆலையின் விஷ வாயுக் கசிவில் பாதிக்கப்பட்டவர்கள் நஷ்ட ஈட்டைப் பெறுவதற்கு இரண்டு மகாமகம் காத்திருந்து இப்போதுதான் கோர்ட் உத்தரவின் பேரில் நஷ்டஈட்டுத் தொகையை கொஞ்சம், கொஞ்சமாக பெற்று வருகிறார்கள்.

அந்தக் கொடிய சம்பவம் நடந்தபோது யூனியன் கார்பைடு நிறுவனம் அப்போது வெளியிட்ட ஒரு துண்டு அறிக்கையை பெரும்பாலான இந்தியர்கள் இப்போது மறந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அந்த அறிக்கையில், "இந்திய மக்கள் பாவம், புண்ணியம் நிறைய பார்ப்பவர்கள். அந்த வகையில் இதையும் கருதிக் கொள்ளுங்களேன்.." என்று இருந்தது. - இந்தியர்களுக்கு இது தேவைதான்..

நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி சக்கரை ஆலை அமைக்க நிலம் கொடுத்தவர்கள் தங்களது வாரிசுகளுக்கு வேலையும், அரவைக்கு கரும்பு கொடுத்தவர்கள் கொடுத்த கரும்புக்கு பணத்தையும் கேட்டு தங்களால் முடிந்த அளவுக்கு போராட்டம் நடத்திப் பார்த்து ஓய்ந்து போய்விட்டார்கள். இப்போதுதான் அவற்றைப் பரிசீலிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்களாம்..

கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைக்க நிலம் வேண்டும் என்று சிலரிடம் கேட்டும், பலரிடம் மிரட்டியும் நிலத்தை பறிமுதல் செய்த அரசு எல்லோரையும் போல் அள்ளிவிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி நிலத்தை இழந்த மக்கள் இந்த நிமிடம்வரையிலும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அந்த அணுமின் நிலையமே இங்கு அமையக்கூடாது என்று பொங்கி எழுந்திருக்கும் பெருவாரியான மக்களின் ஆரவாரத்தில், இந்த சிறுபான்மை மக்களின் கோஷம் பத்திரிகைகளின் காதுகளை எட்டவில்லை.

15 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை வண்டியூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கட்டிய வீடுகளை வாங்கி முழுப் பணத்தையும் கட்டிய மதுரைத் தமிழர்கள் அனைவருக்குமே இன்றுவரை வீட்டுப் பத்திரம் கொடுக்கப்படவில்லை.

காரணம், அந்த நிலத்தை வாங்கியதற்கும், வீடுகளைக் கட்டி முடித்ததற்கும் இடையிலான காலகட்டம் கூடியதால் வாரியம் வாங்கிய கடன் தொகையின் வட்டி கூடிவிட்டதாம். ஆகவே அந்த வட்டித் தொகையையும் இந்த அப்பாவி மக்கள்தான் கொடுக்க வேண்டுமாம்.. இது எப்படி இருக்கு?

இன்றுவரை அந்த அப்பாவிகளும் ஒவ்வொரு அலுவலகமாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார்கள். யாரும் பதில் சொல்லவில்லை. "கோர்ட்டில் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டார்கள் அதிகாரிகள்.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு துணிகளை நெய்து கொடுத்த நெசவாளர்களுக்கு இன்னமும் பாக்கிப் பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை. காரணம் கேட்டால், "நிறுவனத்தில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே காசில்லை.." என்று கூசாமல் பொய் சொல்கிறார்கள்.

ஆனால் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் முதல்வரையும், அந்தத் துறை அமைச்சரையும் வாழ்த்தி அனைத்துப் பத்திரிகைகளுக்கும் விளம்பரம் கொடுக்க மட்டும் அந்த நிறுவனத்திடம் பணம் கொட்டிக் கிடக்கிறது..

தனியார் பஸ்களில் அடிபட்டு இறந்தவர்களின் வாரிசுகள் நஷ்ட ஈடு கேட்டு பல்வேறு கோர்ட்டுகளில் தொடர்ந்திருக்கும் வழக்குகளே பல ஆயிரத்திற்கும் மேல்.. எந்த பஸ் நிறுவனமும் சாமான்யத்தில் இறங்கி வருவதில்லை.

வாய்தா மேல் வாய்தா வாங்கி.. தற்போது அக்குடும்பத்தில் ஒருவர்தான் உயிருடன் இருக்கிறார் என்ற நிலைமைக்கு வந்த பிறகு, அக்குடும்பத்துடன் இரக்கமாகப் பேசுவதைப் போல் பேசி, முடிந்த அளவுக்கு செத்துப் போனவரின் முழு உடம்பில் தலைக்கு மட்டும் தோராயமாக ஒரு விலை பேசி முடித்து ஒரு படுகொலையை கச்சிதமாக பல ஆண்டுகள் கழித்து செய்து காட்டுகிறார்கள்.


2000-மாவது ஆண்டுகளில் தெருவுக்குத் தெரு பைனான்ஸ் நிறுவனங்கள் வாசலில் உண்டியல் வைத்து வசூல் பண்ணாத குறையாக டெபாஸிட்டுகளை மக்களிடமிருந்து வாங்கி நாமம் போட்டது நமக்குத் தெரிந்த கதை. இதுவரை மூடப்பட்ட அனைத்து நிதி நிறுவனங்களும் மொத்தமாக மோசடி செய்த தொகை 1000 கோடியைத் தாண்டி விட்டது என்கிறார்கள்.

இதில் முக்கால்வாசி தொகை 30 வருடமாக நாயாய், பேயாய் உழைத்த மாதச் சம்பளத்து ரிட்டையர்டு தமிழர்கள் சேர்த்து வைத்த பணம்.. அவ்வளவும் சுருட்டப்பட்டது. "இதோ தருகிறோம்.. அதோ தருகிறோம்.." என்று இன்னமும் பிசாசு மாதிரி இவர்களை அலைய வைத்துக் கொண்டிருக்கின்றன போலீஸ¤ம், அரசும்.

வீட்டைப் பூட்டிவிட்டு ஒரு மாதம் ஊருக்குப் போய்விட்டுத் திரும்பி வந்தால் மின்சார கட்டண பில் தயாராக நமக்கு முன் காத்துக் கொண்டிருக்கும். "நாம்தான் ஊரில் இல்லையே.. பின்பு எப்படி பில்..?" என்று பகுத்தறிவைப் பயன்படுத்தி யோசித்தீர்களானால் தொலைந்தீர்கள் நீங்கள்..

"இதையெல்லாம் போன்ல சொல்ல முடியாது ஸார்.. நேர்ல வாங்க.." என்பார்கள். தண்டத்திற்கு அலுவலகத்தில் லீவு சொல்லிவிட்டு நீங்களும் செல்வீர்கள்.. கணெக்கெடுப்பாளர், செக்ஷன் கிளார்க், கண்காணிப்பாளர், A.O., என்று ரவுண்ட்டாக மீட்டிங் பேசிவிட்டு கடைசியாக இளநிலைப் பொறியாளரிடம் வந்து நிற்கும் உங்களது புகார். அவரும் முதலில் கூலாக, "நீங்க மொதல்ல பணத்தைக் கட்டிருங்க.. அப்புறமா அடுத்த பில்லுல இதை மைனஸ் பண்ணிரலாம்.." என்பார்.

"நான் பணம் கட்ட மாட்டேன். முதல்ல தப்பும் தவறுமா பில் எழுதியிருக்கிறவர் மேல ஆக்ஷன் எடுங்க.." என்று நீங்கள் சொன்னால் அவ்வளவுதான்.. பணத்தைக் கட்டாத காரணத்தால் உங்கள் வீடு இருட்டாகிவிடும். பின்பு நீங்கள் கோர்ட், வக்கீல், பீஸ் அலைந்து திரிந்து ஸ்டே வாங்கி அதைக் கொண்டு போய் அவர்களிடம் கொடுத்து..

நினைத்துப் பார்க்க எப்படியிருக்கிறது நம்முடைய ஜனநாயக ஆட்சி முறை...?

சரி இதை விடுங்கள்.. வந்தாலும் வந்தார்கள்.. ஏன் அந்த 'சுலு' என்ற ஆடையை அணிய வேண்டும்? அணியாமலேயே இருந்திருக்கலாமே..? யார் கேட்கப் போகிறார்கள்..

துக்க வீட்டில் அவர்களுடைய கலாச்சாரத்தை மதிக்கிறார்கள். அடுத்தவர்களுடைய கலாச்சாரத்தை, நம்பிக்கையை மதிப்பதே தொன்மையான நாகரிகம் என்ற உணர்வு அவர்களுக்கு இருக்கிறது..

இங்கே... பெற்றெடுத்த அப்பனும், அவனைப் பெற்றெடுத்த தாத்தாவும் கட்டிய வேட்டி பேரனின் கண்களில் ஸ்பெயின் நாட்டு காளை விளையாட்டில் காளையின் கண்ணில் தெரியும் சிவப்புக் கலர் துணியைப் போல் அகோரமாகக் காட்சியளிக்கிறது.

இதைத் தட்டிக் கேட்க வேண்டியவர்கள் அந்த கிளப் எங்கோ அமெரிக்காவில் இருப்பதைப் போல் இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட திரு.நாராயணன் தமிழக அரசுக்கு புகார் மனு கொடுத்துள்ளார். இதுவரையிலும் அரசிடமிருந்து பதில் இல்லை. இதற்குப் பதில் வரும் என்று எனக்கும் நம்பிக்கையில்லை.

பல்வேறு செய்தி சேனல்களில் கடந்த இரண்டு நாட்களாக சிறப்புச் செய்தியாக இதைக் காண்பித்தபடி இருந்தார்கள். பதிலளிக்க வேண்டிய முக்கியப் பிரமுகர்கள் ஓடி ஒளிந்துவிட்டு, அலுவலக ஊழியரைப் பதிலளிக்கச் சொல்கிறார்கள்.

கலாச்சாரக் காவலர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொண்டவர்கள் வசதியாக தேர்தல் பிஸி என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டார்கள். அவர்களுக்குத் தெரியும்.. அட்சயப் பாத்திரத்திலேயே ஓட்டை போடக்கூடாது என்று..

"எதற்கெடுத்தாலும் நமக்கென்று ஒரு கலாச்சாரம், ஒரு பண்பாடு இருக்கு. அதை மீறக்கூடாது.." என்று சொல்லிக் கொண்டு குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறோம்.

வெளிநாட்டவனிடம் கலாச்சாரமும் இல்லை பண்பாடும் இல்லை. அவன் நாடோடியைப் போல் வாழ்க்கை நடத்துகிறான் என்று சொல்லிக் கொள்ளும் நாம்தான், உண்மையில் நாடோடிகளைப் போல் திரிகிறோம்.

கொள்ளை லாபம் அடிக்கும் தனியார் நிறுவனங்கள், அவர்களிடம் தேர்தல் நிதிக்காக மண்டியிட்டுக் கிடக்கும் அரசுகள்.. அரசுகளின் ஆசியால் தங்களை வளர்த்துக் கொள்ளும் அரசியல்வாதிகள், அரசையும், அரசியல்வாதிகளையும் பகைத்துக் கொள்ளாமல் சமுதாயத்தில் முக்கியப் புள்ளிகளாகத் திகழும் அதிகார வர்க்கத்தினர் இவர்களிடையே கொஞ்சமாவது நம்முடைய குறைகளை காது கொடுத்துக் கேட்க ஆள் இருக்கிறார்களா என்று தேடும் அப்பாவி மனிதர்கள்.. இதுதான் இந்தியா.

ஒரு நிறுவனம் அல்லது அரசு அமைப்புகள் மீது புகார் கூறினால் அதை பரிசீலித்து அதில் தவறு உள்ளதா இல்லையா என்று விசாரித்துச் சொல்லக்கூட இங்கே கோர்ட்டைத்தான் அணுக வேண்டியுள்ளது.

இதே கதை தமிழ்நாட்டின் ஒரு கோடியில் நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

பத்திரிகைகளில் வந்திருந்தால் நான்கு பேருக்கு அது ஒரு துக்கச் செய்தி.. அந்த ஊழியருக்கு எச்சரிக்கை.. அமைச்சரின் அனுதாபம். கூடவே பணத்தைக் கட்டித் தொலைஞ்சிருக்கலாமே என்று ஒரு மிரட்டல்.. வராவிட்டால் அந்தப் பகுதி VAO-வின் உதவியுடன் எறும்போடு எறும்பாக அந்த உடல் புதைக்கப்பட்டிருக்கும். அவ்வளவுதான்..

இருந்தாலும், ஒரு விஷயத்தை நாம் மறக்க வேண்டாம்..

"யாதும் ஊரே; யாவரும் கேளீர்" என்ற உயர்ந்த தத்துவத்தை உலகத்திற்குக் கொடுத்தவர்கள் தமிழர்களாகிய நாம்தான்.