சுட்டகதை - சினிமா விமர்சனம்

31-10-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

படத்தை நேற்றுதான் பார்த்தேன் என்பதால் இன்றைக்கு சற்று தாமதமாக விமர்சனம். பதிவு செய்து வைத்தாக வேண்டிய கட்டாயம் இருப்பதால் எழுதி வைக்கிறேன்..!

படம் முடிந்து 6 மாதங்களாகியும் இதோ வருகிறது.. இதோ வருகிறது என்று சொல்லிச் சொல்லியே களைப்படையச் செய்துவிட்டார்கள்..! தயாரிப்பாளர் ரவிந்தர் சந்திரசேகர் முற்றிலும் புதுமுகமாக சினிமாவில் புதுமை படைக்க விரும்புகிறேன் என்று சொல்லியே அடுத்தடுத்து படங்களுக்கு பூஜை போட்டு தமிழ்த் திரையுலகத்தை திகைக்க வைத்தார்..! முதல் படமான 'நளனும், தமயந்தி'யும் தயாராகி 1 வருடத்திற்கு மேலாகியும் இன்னமும் திரைக்கு வரவில்லை. அதற்கு பின்பு பூஜை போட்டு துவங்கிய சுட்டகதைதான் லிப்ரா புரொடெக்சன்ஸின் முதல் படமாக திரைக்கு வந்திருக்கிறது..!

படம் மொத்தமே 1 மணி 50 நிமிடங்கள்தான்..! வெறும் 19 பேர்தான் வந்திருந்தார்கள்.. அதிலும் இடைவேளைக்கு பின்பு 10 பேர்தான் இருந்தார்கள் உதயம் காம்ப்ளக்ஸ் சூரியனில்..! படத்தின் முடிவு ஏற்கெனவே தெரிந்ததுதான் என்றாலும் படத்தின் தயாரிப்பாளருக்காகவும், இயக்குநருக்காகவும் பார்த்தே தீர வேண்டிய படமாகிவிட்டது..!


கோரமலை என்னும் மலைப் பிரதேச கிராமத்தில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கான்ஸ்டபிள் வேலைக்கு புதிதாக வந்து சேர்கிறார்கள் பாலாஜியும், வெங்கியும்.  அந்த ஸ்டேஷனே பைத்தியக்காரத்தனமான போலீஸ் ஸ்டேஷனாக இருக்கிறது.. எப்போதும் தூங்கி வழியும் இன்ஸ்பெக்டர் நாசருடன்.. வேலையே பார்க்க வேண்டாம் என்ற மனநிலையில் இருக்கும் காவலர்களை வைத்துக் கொண்டு படுஜாலியாக இருக்கிறார்கள்..! இதில் பாலாஜிக்கு கை அரித்தால் அவ்வப்போது திருடும் பழக்கம் உண்டு.. வெங்கியின் வலது காது சுத்தமாக அவுட்டாம்..! ஆனாலும் போலீஸ் வேலை கிடைத்து வந்துவிட்டார்..! 

அதே மலைப்பிரதேசத்தில் இருக்கும் தொங்கபுறா என்னும் ஆதிவாசி மக்கள் கூட்டத்தின் தலைவர் எம்.எஸ்.பாஸ்கர். அவரது மகள் ஹீரோயின் லட்சுமி பிரியா.. திருடர்களான குஞ்சானி சாதிக்கார இளைஞர்களிடத்தில் சிக்குகிறார்கள் பாலாஜியும், வெங்கியும். அந்த நேரத்தில் அவர்களை காப்பாற்றுகிறார்கள் பாஸ்கரும், அவரது மகளும். பார்த்தவுடன் காதலாகி இருவருமே ஹீரோயினை வெட்டியாக காதலிக்கிறார்கள்..!

அதே ஊரில் வசிக்கும் ஜெயபிரகாஷ் காம உணர்வை அதிகப்படுத்தும் வகையிலான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்.. இவரிடத்தில் வந்து மருந்து வாங்கிப் போகும் ஜமீன்தார் சிவாஜி. காட்டுக்குள் வேட்டையாடிக் கொண்டிருக்கும் எம்.எஸ்.பாஸ்கரை தவறிப் போய் சுட்டுக் கொலை செய்கிறார் சிவாஜி.. வெட்டி இன்ஸ்பெக்டர் நாசர் தலைமையிலான டீம் இதனை இன்வெஸ்டிகேஷன் செய்யத் துவங்குகிறது..!

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் கிடைக்கும் துப்பாக்கிக் குண்டை வைத்து சுட்டது ஜமீன்தார் சிவாஜிதான் என்பதைக் கண்டுபிடிக்கிறார் நாசர்.. சிவாஜியின் மனைவியை நேரில் அழைத்து பத்து லட்சம் பேரம் பேசுகிறார். அதே நேரம் காட்டுக்குள் குடிபோதையில் வந்து கொண்டிருந்த பாலாஜி, தான் லவட்டிக் கொண்டு வந்திருந்த இன்ஸ்பெக்டர் நாசரின் கைத்துப்பாக்கியால் ஜமீன்தாரை தற்செயலாக சுட்டுக் கொன்றுவிடுகிறார். முகம் சிதைந்த நிலையில் இருக்கும் அவர் யாரென்று தெரியாமல் குழம்புகிறார்கள்.

பொணத்தை புதைக்கலாமா? எரிக்கலாமா? என்றெல்லாம் சர்ச்சைகள் செய்து முடிவு செய்யாத நிலையில் அவரை சோதனையிடும்போது வீரிய மாத்திரைகள் கிடைக்கிறது. அப்போ இது ஜெயபிரகாஷ்தான் என்று முடிவு செய்து அவரைத் தூக்கி வருகிறார்கள். அதே நேரம் தனது தந்தையை கொலை செய்தவனை கண்டுபிடிக்க வெறியோடு வரும் ஹீரோயினும் இவர்களை பார்த்து பின் தொடர்கிறாள்..! வழியில் கரடியொன்று துரத்திவர தப்பி பிழைத்து ஜெயபிரகாஷ் வீட்டிற்கே வந்துவிடுகிறார்கள். கொலை செய்யப்பட்டது ஜமீன்தார்தான் என்று ஜெயபிரகாஷ் சொல்ல… அந்த நேரம் பார்த்து நாசர் வயர்லெஸ்ஸில் நடந்த கதையையெல்லாம் சொல்லிவிட்டு ஜமீன்தாரை அப்படியே அலாக்காக தூக்கி வரும்படி சொல்கிறார்.. ஹீரோயின் ஜமீன்தாரின் உடலை கேட்க.. ஜெயபிரகாஷ் தனது ஆராய்ச்சிக்காக ஜமீன்தார் உடலை கேட்க.. நாசரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாலாஜியும், வெங்கியும் அல்லல்பட..  எப்படியோ படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள்..!

இது போன்ற சின்ன பட்ஜெட்.. அதிகம் அறிந்திராத முகங்களை வைத்து படமெடுத்தால் அதற்கு மிக வலுவான கதை வேண்டும்.. இல்லாவிடில் மொக்கையில் ஒன்றாகிவிடும்.. இந்தப் படம் அந்த அளவுக்கு இல்லையென்றாலும் படத்தின் முதற்பாதியில் படம் எதை நோக்கிச் செல்கிறது என்றே தெரியவில்லை..! போலீஸ் ஸ்டேஷன் காட்சிகள் அநியாயத்திற்கு ஜவ்வு..! அதிலும் திருடர்களை துரத்தும் காட்சிகள் முழுவதும் வேஸ்ட்டு.. அந்த சண்டை காட்சியும், தொடர்ந்த சண்டை பயிற்சி காட்சிகளும் ரசிக்கும்படியாகவே இல்லை..! நாசரின் நடிப்பு அப்படியே மேடை நாடக நடிப்பு சிற்சில இடங்களில்.. கதையே இல்லையே.. அப்புறம் வேறெதை வைத்து ஒப்பேற்றுவது..?

திரைக்கதையும் சட்டு சட்டென்று காமிக்ஸ் புத்தகங்களுக்குள் போய்விட்டு வெளியே வர.. இதெல்லாம் செங்கல்பட்டை தாண்டியிருக்கும் தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களுக்கு எப்படி புரியும்..? அவர்களுக்கு புரிந்திருந்தால் படம் அபார வெற்றி என்று வசூல் கணக்கையும் சொல்லி வெற்றி விழாவையும் நடத்தியிருக்கலாம்..! 

'மூடர் கூடம்' வரையிலான சில படங்களின் வெற்றிதான் இவர்களின் முதல் தயாரிப்பான 'நளனும் தமயந்தி'யையும் தூக்கி பரணில்போட்டுவிட்டு இந்தப் படத்தை முதலில் கொண்டு வர நினைக்க வைத்தது..! ஆனால் அவைகளில் இருந்த அழுத்தமான கதையும், நகைச்சுவை கலந்த இயக்கமும் இதில் இல்லாமல் போய்.. கடைசியில் படம் பார்ப்பதே காமிக்ஸ் போலாகிவிட்டது..!

எப்போதும் முன் வரிசை ரசிகர்களுக்கு படம் பிடித்தாலே போதும்.. அவர்களின் வரவேற்பை பார்த்தே பின்வரிசை, பால்கனி ரசிகர்கள் திரண்டு வருவார்கள். இடைவேளைக்கு பின்பு தியேட்டரில் இல்லாதவர்கள் முன்வரிசைக்கார ரசிகர்கள்தான்.. சில, பல இடங்களில் சிரிக்க வைத்தாலும் அதுவே மெளத் டாக் மூலமாக பரப்புரை செய்ய வைக்கப் போதுமானதாக இல்லை…

'எலே எலே' பாடல் காட்சியும், டாஸ்மாக் பாரில் ஆடும் பாடல் காட்சியும் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது..! இசையமைப்பாளருக்கு மட்டும் கொஞ்சம் பெயர் கிடைத்திருக்கிறது..! முக்கால்வாசி காட்சிகளை இருட்டிலேயே படம் பிடித்து மிரட்டியிருக்கிறார்கள்.. நம்மூரு தியேட்டர்கள் இருக்கிற லட்சணத்தில் இது போன்ற காட்சியமைப்புகள் ரசிகனை படத்தோட ஒன்றிவிட முடியாமல் செய்யும் என்பதை இனிமேலாவது புரிந்து கொள்ள வேண்டும்..!

பிணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று இருவரும் செய்கின்ற ஆராய்ச்சியில் இந்திய அரசியமைப்புச் சட்டத்தின் விதிமுறைகளையே தொடர்ச்சியாக 15 நிமிடங்களுக்கு பொது அறிவை புகட்டுவதுபோல சொல்கிறார்கள்.. எப்படி ரசிப்பது..? சினிமா என்பது விஷுவல் மீடியம்..! எவ்வளவு முக்கியமான விஷயமாக இருந்தாலும் அது ரசிகனின் மனதில் நிற்பதை போல காட்டுவதுதான் இயக்குநரின் திறமை.. இயக்குநர் சிபு அடுத்தடுத்த படங்களில் தனது திறமையைக் காட்டி ஜெயிக்க வாழ்த்துகிறேன்..!

முதலில் 'வேந்தர் மூவிஸ் ' வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி.. பின்பு மறுத்து.. அதன் பின்பு தமிழ்த் திரையுலகின் மூத்த தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்துமே இந்தப் படத்தை பார்த்த பின்பும் வெளியிட மறுத்துவிட.. கடைசியாக சொந்தமாகவே வெளியிட்டு ஒரு புதிய அனுபவத்தை பெற்றிருக்கிறார் தயாரிப்பாளர் ரவிந்தர் சந்திரசேகர். 

அவரது இந்த முயற்சியின் மூலம் கிடைத்திருக்கும் பாடத்தின் வழியாக.. 'நளனும் தமயந்தி'யும், 'கொலை நோக்குப் பார்வை' என்று தனது அடுத்தடுத்த படங்களை நல்லவிதமாக மார்க்கெட்டிங் செய்து.. எடுக்கவிருக்கும் புதிய படங்களையும் இப்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்றாற்போன்று எடுத்து திரையுலகில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..!

நடிகைகளை செருப்பால் அடிக்க வேண்டும்..! - ஸ்டண்ட் இயக்குநர் ஜாக்குவார் தங்கத்தின் கொதிப்பு..!

30-10-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எல்லாம் நல்லபடியாத்தான் போய்க்கிட்டிருந்துச்சு இயக்குநர் களஞ்சியம் பேச வரும்வரைக்கும்..! 'வலியுடன் ஒரு காதல்'ன்ற படத்தோட இசை வெளியீட்டு விழா.. புதுமுக ஹீரோ. அவரோட அப்பாதான் தயாரிப்பாளர். கெளரி நாயர்ன்ற கேரள பொண்ணு புதுமுகம். சஞ்சீவின்ற புதுமுக இயக்குநர்.. கிராமத்து கதையா இருக்கு.. வழக்கமான காதலாத்தான் தெரியுது. ஆனா எடுத்திருந்த ஒரு பாடல் காட்சியின் காட்சிகள், இயக்குநர் யாருன்னு விசாரிக்கணும் போல இருந்துச்சு..!


வரிசையா வாழ்த்தி பேச வந்தவங்க சொல்லி வைச்ச மாதிரியே, இந்தப் படம் சக்கை போடு போடும்ன்னு வஞ்சகமில்லாமாத்தான் வாழ்த்தினாங்க. களஞ்சியம் ஐயா பேச வந்தாரு.. 


முதல்ல சாதாரணமா எல்லாத்தையும் பேசிட்டு கடைசீல அவரோட தற்போதைய பரபரப்பு மேட்டரை தொட்டாரு.. அவர் அஞ்சலியை வைச்சு எடுத்துக்கிட்டிருந்த படம் பாதில அப்படியே நிக்கிறதையும், அஞ்சலியோட புறக்கணிப்பால படத்தைத் தொடர முடியாம தான் கஷ்டப்படுறதையும் சொல்லி.. இதுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் முனைந்து ஆக்சன் எடுத்து தன்னை மாதிரி தயாரிப்பாளர்களை கஷ்டத்துல இருந்து மீட்கணும்னாரு.. இவர் சொன்னவரைக்கும் சரிதான்..! அடுத்து நடக்க வேண்டியதெல்லாம் தயாரிப்பாளர் கவுன்சில்ல பேச வேண்டிய மேட்டரு..!

இதுக்கப்புறம் ஏற்கெனவே பேசிவிட்டு போயிருந்த ஸ்டண்ட் இயக்குநர் ஜாகுவார் தங்கம் திரும்பியும் வந்து மைக்கை புடிச்சாரு. 



அவருக்கும் களஞ்சியத்துக்கும் இருக்குற பிரெண்ட்ஷிப்பையெல்லாம் சொல்லிட்டு, கடைசீல “அஞ்சலி மாதிரி தயாரிப்பாளர்களுக்கு பிரச்சினை கொடுக்கறவங்களை செருப்பால அடிக்கணும்.. அப்பத்தான் இன்னொருத்தர் இது மாதிரி செய்ய மாட்டாங்க. அஞ்சலி இங்க வந்துதான் ஆகணும். அந்தப் பொண்ணு எப்படி வராம இருக்காங்கன்னு பார்த்திருவோம்.. அப்படி வரலைன்னா இதுவரைக்கும் இந்தப் படத்துக்கு ஆன செலவை முழுசா அவங்ககிட்டேயிருந்து வாங்கிரணும்.. அப்புறம் அது எந்த மூலைல இருந்தாலும் நாங்க அதைப் பத்திக் கவலைப்படப் போறதில்லை..! இப்போ வந்திருக்கிற புது தயாரிப்பாளர் சங்க நிர்வாகம் கேயார் தலைமையில் நல்லபடியா நடக்குது. சீக்கிரமா இதுக்கு ஒரு முடிவு கட்டுவோம்..” என்றார்..!

இதுக்கு பின்னாடி திரும்பவும் மைக்கை பிடிச்ச இன்னொரு தயாரிப்பாளரும், பி.ஆர்.ஓ.வுமான விஜயமுரளி, “ஜாக்குவாரின் வார்த்தைகள் ஒரு புளோல அப்படியே வந்திருச்சு”ன்னு சொல்லி பிரஸ்காரங்களை சமாதானப்படுத்தினார்.. இதெல்லாம் எங்க போய் முடியும்..?

இதே மாதிரி ஏதோவொரு நடிகைக்கும், ஏதோவொரு தயாரிப்பாளருக்கும் பிரச்சினையாகி போய், நடிகர்கள் சங்கத்தை சேர்ந்தவங்க இது மாதிரியான தயாரிப்பாளர்களை செருப்பால அடிக்கணும்னு சொன்னா.. தயாரிப்பாளர்கள் சங்கத்துல இருக்குறவங்க சும்மா விடுவாங்களா..? இத்தனைக்கும் ஜாக்குவார் தங்கமும் நடிகர்கள் சங்கத்துல மெம்பர்தான்..!  அவரே சக நடிகையரை இப்படிச் சொன்னா வெளில இருக்கிறவன் என்னத்த நினைப்பான்..?


இப்போ அஞ்சலி மீதான அவதூறு வழக்குல அவர் ஆஜராகாததினால் அஞ்சலிக்கு பிடிவராண்டு போட்டிருக்காங்க..! இப்படி வழக்கு சிக்கலுக்கு மேல் சிக்கலான நிலையில் அவர் அடுத்து என்ன செய்யப் போறாருன்னுதான் தெரியலை..!  ஏற்கெனவே களஞ்சியம் மேல இருக்குற பயத்துலதான் அஞ்சலி தமிழ்நாட்டுப் பக்கமே வர பயப்படுறாங்கன்னு அவங்க சார்பா சொல்றாங்க..! இந்தப் படத்துல மேற்கொண்டு நடிக்க விரும்பலைன்னா அவங்களே ஒரு பிரஸ் மீட் வைச்சு சொல்லிட்டு இல்லாட்டி நடிகர் சங்கம் மூலமா சொல்லிட்டு கவுரவமா விலகிக்கிறதுதான் நல்லது..! அப்படியும் இதுவரைக்கும் எடுத்த செலவுக்கு அஞ்சலிதான் நிச்சயமா பதில் சொல்லணும்..! வேற வழியில்லை..! அஞ்சலியின் அருகில் நல்ல ஆலோசகர்கள் இல்லை என்று நினைக்கிறேன். எப்பவோ பேசி முடிச்சிருக்க வேண்டிய மேட்டரை இவ்ளோ தூரம் தேவையில்லாமல் இழுத்து.. இது இப்படி செருப்படிவரைக்கும் கொண்டு போய்விட்டிருச்சு..! 

இந்த செருப்படி பேச்சு நாளைக்கு வேறு விதமாக பெப்சி சங்கங்களுக்கு இடையிலேயே பேசப்படும் என்று நினைக்கிறேன்..! ஏன்னா சினிமால ஒரு தப்புக்காக ஒருத்தரை செருப்பால அடிச்சா.. அப்படியே தொடர்ந்து மாத்தி, மாத்தி எல்லா சங்கத்துக்காரங்களையும் அடிச்சுக்கிட்டே இருக்கலாம்.. அத்தனை தப்புகள் உள்ளுக்குள்ளேயே இருக்கு..! இதை ஆரம்பிச்சு வைச்ச ஜாக்குவார் தங்கம் வாழ்கன்னுதான் சொல்லணும்..!

அடுத்த செருப்படி யாருக்குன்னு பார்ப்போம்..!!! 

ஆல்பா, பீட்டா, காமா, ஒமேகா, டெல்டா - இதில் நீங்கள் யார்..?

23-10-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மாற்று சினிமா தேடியலையும் மழலை செல்வங்களே.. உங்களுக்காக இதோ.. இப்போது வரப் போகிறது உயிர்மொழி என்னும் தமிழ்த் திரைப்படம்..!

படத்தின் கதைச்சுருக்கமே இதனையொரு மாற்று சினிமா என்று சொல்லிவிடும்..! படியுங்கள்..!


ஆல்பா, பீட்டா, காமா, ஒமேகா, டெல்டா என 5 குணாதிசயங்களை கொண்ட 5 பேரை பற்றிய கதை இது..!

ஆல்பா - தன்னலம் பார்க்காமல் மக்கள் நலனிலும், மனித குல நலனிலும் அக்கறை கொண்டவன். இந்த 5 பேரில் இவன்தான் தலைவன்போல செயல்படுவான்.

பீட்டா - சுயநலம் மிக்கவன். எதையும் தனக்கே சொந்தமாக்கிக் கொள்ள முயற்சிப்பவன்.

காமா - ஒரு குழப்பவாதி. எதையும் இவன் புரிந்து கொண்டானா என்பதையே யாரும் கண்டுபிடிக்க முடியாது. தானும் புரிந்து கொள்ளாமல் அடுத்தவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்துவான்..

ஒமேகா -  இவன் குழந்தைத்தனம் மாறாதவன். வெளுத்த்தெல்லாம் பால் என நம்புகிறவன்.

டெல்டா - மற்றவர்களைவிட இவன் கொஞ்சம் புத்திசாலி.. அதே நேரம் தான் நினைத்ததை அடையாமல்விட மாட்டான். அதற்காக எந்தக் காரியமும் செய்யத் துணிவான். மொத்தத்தில் ஒரு சைக்கோ போல..!

இந்த 5 பேரும் பார்வையற்ற பெண்ணான பிரியாவை சந்திக்கிறார்கள். இவர்களுக்கு பிரியா மீது காதல். அவளை கவர்வதற்காக பல வேலைகளைச் செய்கிறார்கள். 

இந்த பிரியா யாருடைய காதல் வலையில் விழுந்தாள்..? பார்வை பெற காரணமான சைக்கோ டெல்டா என்ன செய்தான்..? மற்றவர்களின் நிலை என்ன..? என்பதை மிகவும் பரபரப்பாக பல திடுக் திருப்பங்களோடு, காதல் கலந்த திரில்லர் கதையாக உயிர் மொழி படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ராஜா..


இயக்குநர் ராஜாவின் பயோடேட்டாவும் கொஞ்சம் பயமுறுத்துகிறது.. உலகம் முழுவதும் 180 நாடுகளுக்கு மேல் கிளைகள் வைத்திருக்கிற பிரபல விளம்பர நிறுவனமான லோ-வில் பல ஆண்டுகள் விளம்பரப் பட இயக்குநராகவும், தொழில் நுட்பத் துறையிலும் பணியாற்றியவராம்.. இந்த விளம்பரத் துறைக்காக பல்வேறு நாடுகளுக்கும் சென்ற அனுபவம் உள்ளவராம்..!

ஹார்மோன் மூவி மேக்கர்ஸ் மற்றும் மானவ் புரொடெக்சன்ஸ் சார்பில் ஷண்முகப்பிரியா தயாரித்திருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் 45 நாட்களுக்கும் மேல் சென்னை, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் நடந்து முடிந்திருக்கிறது.. இதனுடைய ஆடியோ ரிலீஸ் நடந்து ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்ட நிலையில் தற்போதுதான் பிரஸ் மீட் நிகழ்வுக்கே வந்திருக்கிறது..!

'ஆல்பா'வாக சர்தார்ஜ், 'பீட்டா'வாக சசி, 'காமா'வாக சாம்ஸ், 'டெல்டா'வாக டான்ஸ் மாஸ்டர் பாபி ஆண்டனி, 'ஒமேகா'வாக ராஜீவ் ஆகியோர் நடிச்சிருக்காங்க.. நா.முத்துக்குமாரின் பாடல்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைச்சிருக்காரு. குருதேவ் ஒளிப்பதிவில், பிரவின்-ஸ்ரீகாந்த் எடிட்டிங் செஞ்சிருக்காங்க..!


இந்தப் படம் ரிலீஸான பின்னாடி படம் பார்க்குற ஒவ்வொருவரும் தான் எந்த குணாதிசயம் கொண்டவன் என்பதைப் பொருத்திப் பார்க்கும் சூழல் ஏற்படும். சூழ்நிலைதான் மனிதனுக்கு முக்கியம். அந்தச் சூழல்தான் மனிதனின் குணாதிசயத்தை நிர்ணயம் செய்கிறது அப்படீன்னு இந்தப் படம் சொல்லுதாம்..!


இன்றைய பிரஸ் மீட்டில் இரண்டே வரிகளில் தன் பேச்சை முடித்துக் கொண்ட இயக்குநர் கேள்விகளை கேட்கச் சொன்னார். கதை என்ன..? என்ன சொல்ல வர்றீங்க..? இது மக்களுக்குப் புரியுமா..? என்ற சந்தேகக் கேள்விக்கெல்லாம் படத்தைப் பாருங்க.. அப்புறமா கேளுங்க என்றார் இயக்குநர்..! அப்போ பட ரிலீஸுக்கு அப்புறமாவே பிரஸ் மீட்டை வைச்சிருக்கலாமே..? அப்போ எந்த இயக்குநரும் கைக்கு சிக்க மாட்டாங்களே..! இதையெல்லாம் அவர்கிட்ட கேக்க முடியுமா..? பிரஸ்காரங்க இத்தனை கேள்வியை நோண்டுனதுக்குக் காரணம் போட்டு காட்டிய 2 பாடல்களும்.. ஒரு உணர்ச்சிகரமான காட்சியும்தான்..!

குணா படத்துல கமலஹாசன் ஆஸ்பத்திரி ரூம்ல சுத்தி சுத்தி வந்து தன்னோட கதையைச் சொல்றா மாதிரி.. இதுல ஹீரோயின் பிரியா செம்மொழி பூங்காவையோ சுத்தி சுத்தி தொடர்ச்சியா 3 நிமிஷம் குமுறி குமுறி அழுது.. தன்னோட சோகக் கதையைச் சொல்லியிருக்காங்க.. சிறந்த இயக்கம்.. சிறந்த நடிப்பு.. ரொம்ப உருக்கமாத்தான் இருந்துச்சு.. எதுக்குமே கை தட்டாத, பிரஸ்காரங்க இதுக்குக் கை தட்டினாங்கன்னா பார்த்துக்குங்க..!


ஆனா இந்த ஒரு காட்சியை லீடா வைச்சு ஒரு பாடல் காட்சி துவங்குது.. வெறும் சீக்குவல் சீன்ஸ்களை வைச்சு எடுத்திருக்காங்க.. பரவாயில்லை ரகம்தான்..! அடுத்து காட்டியது ஒரு பிரமாண்டமான பாடல் காட்சி.. முழுவதுமே கிராபிக்ஸ், அனிமேஷனில் செமத்தியான ஒர்க்.. ஒளிப்பதிவு கண்ணைக் கட்டியது..! எக்கச்சக்க செலவாகியிருக்கும்னு தோணுது.. ஆனா பாட்டுதான் புரியலை..! 

இதையெல்லாம் பார்த்துதான் பிரஸ் மக்கள்ஸ் கேள்வி மேல கேள்வி கேட்டாங்க.. செலவு பற்றி கேட்டதுமே, தயாரிப்பாளர்கிட்ட கேட்டுக்குங்கன்னு சொல்லிட்டாரு இயக்குநர். தயாரிப்பாளர் ஷண்முகப்பிரியா, இந்தப் படம் தயாரிச்சு முடிக்கிறதுக்குள்ள பிள்ளையே பெத்துட்டார்ன்னு நடிகர்ஷாம்ஸ் மேடைல சொன்னாரு. (நாட்டுக்கு ரொம்ப அவசியம் பாருங்க..!) 


நேத்தைக்கு மாதிரியே இன்னிக்கும் இந்தப் படத்தோட ஹீரோயின் கீர்த்தி வராதது பிரஸ்காரங்களுக்கு ரொம்ப பெரிய பிரச்சினையாயிருச்சு. ஏன் வரலை.. ஏன் வரலைன்னு கேட்டு குடாய்ஞ்சுட்டாங்க. பிளைட் டிக்கெட் கேட்டாங்க.. ஹோட்டல்ல ரூம் கேட்டாங்க. அந்த அளவுக்கு என்னால வசதி செய்ய முடியலை.. அதுனால நான் வரலைன்னு ஹீரோயின் சொல்லிட்டாங்க என்றார் தயாரிப்பாளர்..!

எனக்கும் இங்க ஒண்ணுதான் புரியலை..! ஷூட்டிங் தொடங்கும்போது ஹீரோயினோட சொந்த ஊர்ல இருந்து வர்றதுக்கும், போறதுக்கும் அவங்க கேக்குறதையெல்லாம் செஞ்சு கொடுக்குறீங்க..! அவங்களை ஹோட்டல்லதான் தங்க வைக்க முடியும்..! அதையும் செய்றாங்க.. இப்போ கடைசீல பிரஸ் மீட்டப்போ மட்டும் அதையே அவங்க கேட்டா.. அது தப்புன்னு ஏன் சொல்றாங்கன்னுதான் எனக்குப் புரியலை..!  இதுல ஹீரோயின் மேலேயே பழி வேற.. படம் முடிஞ்சிருச்சுல்ல.. இனிமே அவங்களுக்கு நாம தேவையில்லை.. படத்துவக்கத்துல வந்து சான்ஸ் கொடுங்கன்னு கெஞ்சுறாங்க.. ஆனா படம் முடியும்போது பாருங்க.. இப்படி வந்து படுத்துறாங்கன்னும் சொன்னாங்க தயாரிப்பாளர்..!

அப்போ ஹீரோயினே காசு போட்டு பிளைட்ல வந்து ப்ரீயா பேசிக் கொடுத்திட்டு யார் வீட்லயாவது தங்கிட்டுப் போகணும்னு நினைக்கிறாங்களா..? தயாரிப்பாளர் பிளைட் டிக்கெட்டுக்கு பதிலா ஹீரோயின்கிட்ட என்ன சொன்னாருன்னு மேடைல சொல்லலை. அதுனால ஹீரோயின் தரப்பு வாதம் என்னன்னே தெரியாம நாம பேசக் கூடாதுல்லையா..? ஆனாலும் மீடியா உலகம் சரண்யா மோகனுக்கு அடுத்து உயிர்மொழி ஹீரோயின்னு டைட்டில் போட்டு நாளைக்குக் கதற வைக்கப் போறாங்க..!

நேத்து கோலாகலம் படத்தின் இசை வெளியீட்டு விழால ஹீரோயின் சரண்யா மோகன் கேரளால இருந்து வரலை.. பிளைட் டிக்கெட் போட்டுக் கொடுத்தும், ஹோட்டல்ல ரூம் ரெடின்னு சொல்லியும் அவங்க வரலைன்னு தயாரிப்பாளர் சொன்னாரு. ஒருவேளை நேத்திக்கு அந்தப் பொண்ணுக்கு வேற படத்தோட ஷூட்டிங் இருந்தா என்ன பண்ணியிருப்பாங்க..? அவங்க தரப்பு நியாயத்தையும் கேக்க வேணாமா..? நேத்துல இருந்து இந்த மீடியாக்காரங்க வறுத்து எடுக்குறாங்கப்பா..! 

சரி விடுங்க.. திரும்பவும் இந்த பதிவின் டைட்டில் மேட்டருக்கே வருவோம்..! ஆல்பா, பீட்டா, காமா, ஒமேகா, டெல்டா - இதெல்லாம் ஸ்கூல்ல படிக்கும்போது வாசிச்சது.. உலகத்தில் இருக்கும் மனிதர்களின் குணாதிசயங்களை வைத்து இந்த ஐந்து பேருக்குள்தான் ஒருவரை கூப்பிட முடியும்னு சொல்றாங்க..! இதுவே வித்தியாசமாத்தான் இருக்கு..! படத்துல காதல் இருக்கு. ஆனா வழக்கமான காதலா இல்லைன்னும் சொன்னாரு இயக்குநர்..! இந்தப் படம் பார்த்த்துக்கப்புறமா ஒவ்வொருத்தரும் தன்னோட குணாதிசயம் எது..? தான் என்ன டைப்பு ஆளுன்னு தனக்குத்தானே கேட்டுக்குவாங்கன்னு அடிச்சுச் சொல்றாரு இயக்குநர்..!

ஸோ.. ஒரு அரிய வாய்ப்பு, மாற்று சினிமா தேடினவங்களுக்கு ஒரு லட்டு காத்துக்கிட்டிருக்கு..! படம் மிக விரைவில் வெளியாகப் போகுது..! படத்தை அவசியம் பாத்திட்டு பேசுங்க மக்களே..!


சினிமா வரிவிலக்கு திட்ட முறைகேடு - உதயநிதி ஸ்டாலினின் அறிக்கை..!

22-10-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழக அரசு சினிமாத் துறையினருக்கு வழங்கி வரும் வரிச் சலுகை தி்ட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதில் நானும் உறுதியுடன்தான் இருக்கிறேன். ஆனால் அத்திட்டம் அமலில் இருக்கின்றவரையில் அது நேர்மையாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் சொல்கிறேன்..! ஒன்று நேர்மையாக வழங்க வேண்டும்.. அல்லது அறவே நீக்க வேண்டும்.. இவை இரண்டையும் செய்யாமல் தனக்குப் பிடித்தவர்களுக்கெனில் உடனடியாகவும், பிடிக்காதவர்களெனில் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி மறுப்பதும் நேர்மையான அரசுக்கு அழகல்ல..!

உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் மூவிஸ் தயாரித்த 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'நீர்ப்பறவை', 'வணக்கம் சென்னை' ஆகிய மூன்று படங்களுக்கும் இந்த வரிச்சலுகை முறைகேடாக மறுக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசு இதற்காக வகுத்திருக்கும் அனைத்துவித விதிமுறைகளையும் இந்தப் படங்கள் மீறாமல் இருந்தும், தயாரிப்பாளர் மு.க.ஸ்டாலினின் மகன் என்ற ஒரே காரணத்துக்காகவே இந்த வரிச்சலுகை அவருக்கு வழங்கப்படாதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது..!

வழக்கம்போல சினிமா துறையினர் கையது வாயது பொத்தி மெளனம் காத்து வருகின்றனர்.. இதுவரையிலும் தயாரிப்பாளர் சங்கத்தில் ஒற்றுமை இல்லை. அதனால் கேட்க முடியவி்ல்லை என்று 'கதை' விட்டவர்கள்.. இப்போது என்ன சொல்வார்கள்.. என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை..!

உதயநிதி ஸ்டாலின் தான் ஒரு பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர் என்ற ரீதியில் இந்த வரிச்சலுகை திட்டத்தினால் தான் எப்படி பாதிக்கப்பட்டேன் என்பதையும், பல விதிமுறைகள் எப்படி அரசினாலேயே மீறப்பட்டு இருக்கின்றன என்பதையும் ஒரு மனுவாக எழுதி தயாரிப்பாளர் சங்கத்தில் சமர்ப்பித்திருக்கிறார்..! 

இதை வைத்து அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை..! பொறுத்திருந்து பார்ப்போம்..!

கீழே உதயநிதி ஸ்டாலின் புகாராக கொடுத்த மனு, போட்டோ காப்பியாக உள்ளது.. இதனை டவுன்லோடு செய்தோ அல்லது விரித்தோ படித்துக் கொள்ளவும்..

நன்றி..!











வரிச்சலுகை பெற லஞ்சமா..? - சீறும் சினிமா இயக்குநர்

22-10-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மையக் கருவாக வைத்து 'அங்குசம்' என்ற பெயரில் படமெடுத்திருக்கிறார் இயக்குநர் மனுக்கண்ணன். இந்தப் படம் வெளியாகும் தயார் நிலையில் இருக்க.. சென்சார் சர்டிபிகேட் பெற்ற பின்பு, வரிச் சலுகைக்காக விண்ணப்பிக்கும்போது அதற்காக லஞ்சப் பணம் வேண்டும் என்று செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ரமணாவின் பி.ஏ. சரத்பாபு கேட்டதாக இயக்குநர் மனுக்கண்ணன் குற்றம் சாட்டியிருக்கிறார். இவரது பேட்டி சென்ற வார நக்கீரனில் வெளிவந்துள்ளது.. அந்தச் செய்தி இங்கே மறுபிரசுரம் செய்யப்படுகிறது..!



தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அரசு இயந்திரங்களில் ஊற்றாகப் பெருக்கெடுத்திருக்கும் லஞ்ச ஊழல் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றிய விழிப்புணர்வு ஊட்டும் விதமாக 'அங்குசம்' என்ற திரைப்படத்தைத் தயாரித்து இயக்கியிருக்கிறார், மனுக்கண்ணன். சமீபத்தில் தணிக்கை அதிகாரிகளால் U சான்றிதழ் வழங்கப்பட்டு, படத்திற்கு வரிவிலக்கு கொடுக்க தணிக்கைக் குழு உற்சாகமாகப் பரிந்துரைத்தபோதும் அந்தப் படத்திற்கு வரிச்சலுகை கிடைக்கவில்லை. என்ன நடந்தது ..? தனக்கு நேர்ந்த அதிர்ச்சி அனுபவங்களை உள்ளது உள்ளபடியே விவரிக்கின்றார் இயக்குநர் மனுக்கண்ணன். 


"என் சொந்த ஊர் வேலூர். நான் எம்.எட்., எம்.பி.ஏ. படித்த பட்டதாரி. மும்பைல, திரைப்பட இயக்கத்திற்கான படிப்பையும் முடிச்சேன். எனக்கு சின்ன வயசில் இருந்தே போராட்ட குணம் அதிகம். கண்முன் நடக்குற தவறுகளை தட்டிக் கேட்பேன். பேனா முனையால் எதையும் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கை உள்ளவன் நான். இந்த நிலையில் துபாயில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளரா வேலை பார்த்தேன். அப்ப 'நக்கீரன்' இதழில் வந்த திருச்சி மாவட்டம் பெரகம்பி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சீனிவாசன், ஊழலுக்கு எதிரா கடுமையா போராடிவரும் தகவல்களைப் படிச்சேன். தகவல் அறியும் உரிமை சட்டத்தையே அவர் அங்குசமா வச்சிக்கிட்டு, அரசாங்க எந்திரம் என்கிற யானையை அவர் எதிர்த்து நிற்பது எனக்குப் பெரிய விஷயமாகப்பட்டது. 

உடனே தமிழகம் திரும்பிய நான் அந்த சீனிவாசனின் கேரக்டரை மையமா வச்சி ஒரு திரைக்கதையை உருவாக்கி, பாடல்கள், ஃபைட்டுன்னு சில சினிமா சமாச்சாரங்களையும் சேர்த்து 'அங்குசம்' என்ற பெயரிலேயே திரைப்படத்தை எடுத்தேன். அந்தத் திரைப்படத்தைப் பார்த்தால் சமூகநீதிக்கு எதிரா குரல் கொடுக்கும் உணர்ச்சி இளைஞர்களுக்கு ஏற்படும். லஞ்சம் வாங்கும் ஆட்களுக்கு கூச்ச உணர்ச்சியை உண்டாக்கி, அவர்களை இந்தப் படம் திருந்த வைக்கும். பாமர மக்கள் இந்தப் படத்தைப் பார்த்தால், நம்ம உரிமையைப் பெற நாம எதற்குக் காசு கொடுக்கணும் என்கிற வேகம் அவர்களுக்குள் தீயா பெருக ஆரம்பிக்கும். 

இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், படத்தின் நிஜ ஹீரோவான சீனிவாசனைப் பேச வைத்தேன். அவர் திருச்சி கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளின் முகத் திரையைக் கிழித்துத் தொங்க விட்டார். அந்த விழாவில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பத்தின நூலை அத்தனை பேருக்கும் இலவசமா விநியோகிச்சோம். அந்த விழாவில் சீமான் போன்றோர் கலந்து கொண்டு சீனிவாசனையும் அங்குசம் படத்தையும் மனதாரப் பாராட்டினார்கள். அந்த விழாவில் சீனிவாசன் பேசியது  உலகம் முழுவதும் இணையத்தளத்தில் அன்றே பரவ, சம்பந்தப் பட்ட மாவட்ட கலெக்டரே சீனிவாசனை அழைத்து அவரது புகாரை நேர்மையான முறையில் விசாரிப்பதாக உறுதியளித்திருக்கிறார் என்பது தனிக்கதை. 

அடுத்து படம் முடிந்து தணிக்கைக்கு அனுப்பினோம். செப்டம்பர் 2-வது வாரம் அந்தப் படத்தை தணிக்கைக் குழு உறுப்பினர்களான நல்லி குப்புசாமி செட்டியார், சங்கரவள்ளி, நிருத்தியா, சதீஷ்குமார் மற்றும் சென்சார் போர்டு அதிகாரி பக்கிரிசாமி ஆகியோர் பார்த்தார்கள். படம் முடிந்ததும்… அதிகாரி பக்கிரிசாமி, "அபாரமா எடுத்திருக்கீங்க. இந்தப் படத்தை ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் மாணவர்களுக்குப் போட்டுக் காட்டணும். இதுக்கு ரெண்டு “யு’ சர்டிபிகேட் கொடுக்க வாய்ப்பிருந்தால் கூட கொடுப்பேன். உடனே வரிவிலக்கு கேட்டு அரசுக்கு அப்ளை பண்ணுங்க"ன்னு பாராட்டினார். நல்லியோ "எங்களுக்குத் தெரியாத பல விஷயங்களை படத்தில் கொண்டு வந்திருக்கீங்க" என மனதாரப் பாராட்டினார். இப்படி தணிக்கைக் குழுவில் இருந்த அத்தனைபேரும் பாராட்டினாங்க. 20-09-2013-ல் தணிக்கை சான்றிதழ் வாங்கினேன். 

சென்சார் போர்டு அதிகாரி சொன்ன மாதிரி அடுத்த நாளே வரிவிலக்குக்கான அப்ளிகேஷனை 10 ஆயிரம் ரூபாய் டி.டி.யோடு போட்டேன். இதைப் பரிசீலித்த வரிவிலக்கு அதிகாரிகள் படம் பார்க்கணும்னு சொல்ல அவங்களுக்கும் படத்தைப் போட்டுக் காட்டினேன். நான்கு அதிகாரிகளுடன் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், எல்.ஆர்.ஈஸ்வரி, நடிகை ராஜேஸ்வரி, பி.வாசு ஆகியோரும் படத்தைப் பார்த்தாங்க. 

படம் முடிந்ததும் சங்கர் கணேஷ் ஓடி வந்து என்னைக் கட்டித் தழுவி, "இப்படிப்பட்ட படம்தான் வரணும். நீங்க பெரிய இயக்குநரா, தயாரிப்பாளரா வளர என் ஆசிர்வாதம்"னு வாழ்த்தினார். எல்.ஆர்.ஈஸ்வரி, ராஜேஸ்வரின்னு எல்லோருமே வாழ்த்தினாங்க. அதிகாரிகளும் கை கொடுத்துப் பாராட்டு தெரிவிச்சிட்டு… "நீங்க பாடல் காட்சியில் காட்டிய தேசத் தலைவர்களில் அம்பேத்கரையும் சேர்த்திருக்கலாமே"ன்னு சொன்னாங்க. "கண்டிப்பா அதையும் சேர்த்துருவேன்"னு உறுதியா சொன்னேன். அடுத்து, அவங்க துறை அமைச்சரான ரமணாவைப் பார்க்கச் சொன்னாங்க. அப்பதான் எனக்கு அந்த அதிர்ச்சியான அனுபவம் கிடைக்க ஆரம்பிச்சது" என ஒரு நிமிடம் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டவர், மேலும் தொடர்ந்தார். 

இதைத் தொடர்ந்து எனது நண்பரான அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தாமோதரனோடு, அமைச்சர் ரமணாவின் கிரீன்வேஸ் சாலை அலுவலகத்துக்கு செப்டம்பர் கடைசி வாரம் போனேன். அமைச்சர் ரமணாவின் அப்பா இரண்டு நாட்களுக்கு முன்புதான் இறந்திருந்தார். துக்க விசாரிப்புக்குப்பின், எக்ஸ் மினிஸ்டர் தாமோதரன் அமைச்சரிடம் என்னை அறிமுகப்படுத்தி, என் படத்துக்கு வரிவிலக்கு தேவைன்னு சொன்னார். அமைச்சரோ, செகரட்டரியேட்ல தன் அஃபிஸியல் பி.ஏ. சரத்பாபுவைப் பார்க்கச் சொன்னார். 

மறுநாள் காலைல, நான் மட்டும் செகரட்டரியேட் போனேன். அமைச்சர் ரமணா உள் அறையில் இருக்க… முகப்பு அறையில் பி.ஏ. சரத்பாபு இருந்தார். நாலஞ்சு பேர் அங்கே இருந்தாங்க. என்னை அறிமுகப்படுத்திக்கிட்டு, அமைச்சர் பார்க்கச் சொன்னது பற்றி அவரிடம் சொன்னேன். "வரி விலக்கா? உங்க படத்துக்கு பட்ஜெட் என்ன...?" என்றார். நான் சுதாரித்துக்கொண்டு "மினி பட்ஜெட் படம் சார்.." என்றேன். சரத்பாபுவோ, "சரி சில ஃபார்மாலிட்டிஸை முடிக்கணும்.." என்றார். "என்ன சார் பார்மாலிட்டிஸ்?" என்றேன். "பெரிய பட்ஜெட் படம்னா 50 லட்சம், சின்ன பட்ஜெட் படம்னா 5 லட்சம் கொடுக்கணும்..." என்றார். நானோ, "சார், நான் லஞ்சம் தவறுங்கிற கான்செப்ட்ல படம் எடுத்திருக்கேன். அப்படியிருக்க நானே பணம் கொடுத்தா சரியா இருக்காது. அதோட தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம் இது.." என்றேன். பி.ஏ.வோ, "அதெல்லாம் இருக்கட்டும்… இங்க ஃபார்மாலிட்டிஸை முடிச்சாதான் வரிவிலக்கு கிடைக்கும். நீங்க சி.எம்.கிட்டயே போனாலும் அவங்க என்னைத்தான் பார்க்கச் சொல்வாங்க. இங்க ஆட்சி வேற, அரசாங்கம் வேற. ஆட்சிக்கு அ.தி.மு.க., தி.மு.க.ன்னு மாறி மாறி யார் வேணும்னாலும் வரலாம். ஆனா அரசாங்கத்தை நடத்துற நாங்க அப்படியே இருப்போம். ஒண்ணு தெரியுமா? இந்தப் பணத்தில் ஒரு பகுதி சி.எம்.மு.க்குப் போகுது. பிறகு துறை மந்திரிக்கும் கொடுத்தாகணும். மந்திரி பரம்பரை பணக்காரர் இல்லை. அவர் ஒரு தடவை தொகுதிக்குப் போனா, ஒரு கோடி வரை அவர் செலவு பண்ணியாகணும். அந்தப் பணத்தை நாங்கதான் கலெக்ட் பண்ணிக் கொடுத்தாகணும். புரிஞ்சுதா..?" என்று பாடமே எடுத்தார். 

நானோ, "என் படத்தில் முதல்வர் கேரக்டரை உயர்த்திச் சொல்லியிருக்கேன். முதல்வரிடம் புகார் போனதும் அவர் நேர்மையா எம்.எல்.ஏ. மேல் நடவடிக்கை எடுக்கிற மாதிரி காட்சிகளை வச்சிருக்கேன். அந்தப் படம் முதல்வர் என்ற கேரக்டரின் இமேஜை பல மடங்கு உயர்த்தும். முதல்வரை உயர்த்தும் ஒரு படத்துக்கு நான் லஞ்சம் தரவேண்டிய அவசியமில்லை. லஞ்சத்தை எதிர்க்கும் படத்துக்கு, லஞ்சம் கொடுத்தா அது எனக்கு அவமானம். வேண்டுமானால் சி.எம். நிதிக்கு 3 லட்சம் தர்றேன்..." என்றேன். சரத்பாபுவோ, "நோ காம்ப்ரமைஸ்..." என்றார். நான் கும்பிடு போட்டு விட்டு வெளியே வந்துவிட் டேன். 

அடுத்து ஒரு ஆளுங்கட்சி பிரமுகர், "இதை கார்டன் கவனத்துக் கொண்டு போகலாம்.." என்றபடி… கார்டனில் வேலை செய்யும் ரவிச்சந்திரனுடன் என்னைப் பேச வைத்தார். அந்த ரவிச்சந்திரனோ, "இதையெல்லாம் நாங்க எப்படி மேடத்தின் கவனத்துக்கு கொண்டு போக முடியும்? அதிகாரிகள் கேட்டதைக் கொடுத்துவிட்டுப் போங்க சார்.." என்றார். அந்த நிமிடமே வரி விலக்கே வேண்டாம்னு முடிவெடுத்துட்டேன். 

மக்களுக்கு விழிப்புணர்வைப் போதிக்கும் படத்தை எடுத்ததுக்கு தண்டனையா நான் வரியையும் கட்டிட்டு படத்தை ரிலீஸ் பண்ணப் போறேன். என் படத்துக்கு வரிவிலக்கு கிடைக்க லைங்கிற தகவல் பல திரைப்புள்ளிகளையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அவர்கள் என்னிடம் துக்கம் விசாரிக்கிறார்கள். இன்னும் என்னால் ஜீரணிக்க முடியாத விஷயம், "லஞ்சத்தை எதிர்க்கவே லஞ்சம் கொடுத்தாகணும் என்பதுதான்..." என்றார் ஆவேசமும் ஆதங்கமுமாக. 

"முடிவாக என்னதான் செய்யப் போகிறீர்கள்...?" என்று மனுக்கண்ணனிடம் கேட்டதற்கு, " நான் வரி செலுத்தத் தயாராக இருக்கிறேன்… எந்த சமரசத்திற்கும் உட்பட மாட்டேன்…  லஞ்ச லாவண்யங்களைத் தட்டிக் கேட்பது போல் திரைக்கதை அமைத்து விட்டு நானே லஞ்சம் கொடுத்து வரிச்சலுகை பெற்றால், அந்த திரைப்படத்தின் நோக்கமும் அது சமுதாயத்தில் ஏற்படுத்தப் போகும் தாக்கமும் அடிபட்டுப் போகும்.." என்றார் தீர்க்கமாக. 

இது குறித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயாரைத் தொடர்பு கொண்டபோது, ”அங்குசம் திரைப்பட விஷயம் இன்னும் எனது கவனத்திற்கு வரவில்லை, அது குறித்து விசாரித்துச் சொல்கிறேன்..” என்றார். 

நன்றி : நக்கீரன் வார இதழ்

ரகளபுரம் - சினிமா விமர்சனம்

19-10-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே முதலீடு செய்வது துறையின் வளர்ச்சிக்கு உதவும்தான்.. அதே சமயம் தங்களுடைய குடும்பத்திற்கென்று கொஞ்சம் சேமித்து வைத்தவிட்டு, சேமிப்புக்கும் மேலாக தங்களது சம்பாத்தியம் இருந்தால்.. அதனை தொழில் ரீதியாக இதில் முதலீடு செய்வதுதான் புத்திசாலித்தனம்.. அண்ணன் கருணாஸ் முன்னதை மட்டுமே இதில் பாலோ செய்திருக்கிறார்.. கடன் வாங்கி.. இருக்கிற பணத்தையெல்லாம் தொழிலில் இறக்கி.. குடும்பத்திற்கு பாதுகாப்பில்லாத சூழலில் ஏன் படத் தயாரிப்புத் தொழிலில் இறங்க வேண்டும்..? கொஞ்சம் யோசித்தால் அவருக்கும் நல்லதுதான்..!

அவரை ஹீரோவாக வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் குறைந்து கொண்டே போனதால், சில படங்களில் ஹீரோவாக நடித்துவிட்ட தகுதியிருப்பதினால்.. அடுத்தடுத்து காமெடி வேடங்களில் மற்ற ஹீரோக்களுடன் சேர்ந்து நடிப்பதற்கு கொஞ்சம் கூச்சப்படுகிறார் போலும்..! தானே தயாரித்து தானே ஹீரோவாக நடிக்கவும் செய்கிறார். தான் ஹீரோ இல்லை.. 'கதையின் நாயகன்' மட்டுமே என்று திருப்பித் திருப்பித் தனது இந்த ஹீரோ வேஷத்துக்கு ஒரு நியாயத்தையும் கற்பித்துக் கொள்கிறார்..! 


பணியில் இருக்கும்போதே இறந்து போன தந்தையினால், கருணை அடிப்படையில் போலீஸ் கான்ஸ்டபிள் வேலை கிடைக்கிறது கருணாஸுக்கு. இயல்பிலேயே பரம சாதுவான கருணாஸுக்கு இந்த வேலை பிடிக்கவில்லையென்றாலும், வீட்டில் இரண்டு தங்கைகள், அம்மா.. வாங்கியிருக்கும் கடன்கள்.. இதற்காக வேண்டாவெறுப்பாக இதனை ஏற்றுக் கொள்கிறார்..! கூடவே காதலும் பிறக்கிறது..! 

இடைவேளையின்போது ஏட்டு டெல்லி கணேஷ் செய்யும் ஒரு சதி வேலையால் 'பிளட் கேன்சர்' என்ற பொய்யான செய்தி கருணாஸுக்கு சொல்லப்படுகிறது.. இதை நம்பி இன்ஸூரன்ஸுக்கு ஏற்பாடு செய்துவிட்டு.. ஒரு தீவிரவாதியை பிடிக்கும் முயற்சியில் தனியே ஈடுபட்டு அதில் இறந்து போனால்.. கிடைக்கின்ற பணம் வீட்டுக்குக் கிடைக்குமே என்ற அற்ப ஆசையில் அதிலும் தீவிரமாக ஈடுபடுகிறார்.. 
கடைசியில் என்ன ஆகிறது என்பதுதான் படம்..!

நிச்சயம் இது கருணாஸுக்கு ஏற்ற கதைதான்..! ஆனால் காமெடி பஞ்சமாக இருப்பதால்.. இங்கிட்டும், அங்கிட்டுமாக ஆங்காங்கே சிரித்துவிட்டு பொறுமையுடன் காத்திருக்க வேண்டியிருக்கிறது..!

"எங்கடி நான் பெத்தெடுத்த என் கருத்த கருவாயன் பிள்ளை..?" என்று அம்மா உமாபத்மநாபன் கேட்கும்போது, நாய் துரத்தியபடியே அறிமுகமாகும் கருணாஸ் படத்தின் கடைசிவரையிலும் ஏதோ ஒரு காரணத்துக்காக ஓடிக் கொண்டேதான் இருக்கிறார்..! குணச்சித்திர நடிகர்களுக்கும், காமெடி நடிகர்களுக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது.. சிரிப்பே வராத அளவுக்கு நடிப்பைக் காட்டினால் அது குணசித்திரம்.. கொஞ்சம் சிரித்தபடியே நடிப்பைக் கொட்டினால் அதே வேலையைச் செய்தால் அவர் காமெடி நடிகர்.. இதில் கருணாஸும் அப்படியே..!

முதல் நாள் வேலைக்குச் சேர்ந்தவுடனேயே போய் பாத்ரூமை கழுவு என்று சப்-இன்ஸ்பெக்டர் சொல்வதற்கும் தலையாட்டிவிட்டுப் போகும் அப்பாவி கான்ஸ்டபிள்.. அடுத்தடுத்து சாகச செயல்களில் ஈடுபட்டு உடனடியாக இன்ஸ்பெக்டர் பிரமோஷன் வாங்கிவிடுவதெல்லாம் இது போன்ற படங்களில் மட்டுமே பார்க்கக் கிடைக்கும் திரைக்கதை.. கொஞ்சம் நம்புங்களேன் என்று அவர்களே சொல்லி நம்மை நம்ப வைக்கிறார்கள்..! கருணை அடிப்படையிலான வேலை என்றாலும் போலீஸுக்கு தேர்வாகி டிரெயினிங்கெல்லாம் போயிட்டு வந்த பின்புதான் இந்த அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் என்பதை மறைமுகமாகச் சொல்கிறார் கருணாஸ்.. அப்புறம் எதுக்கு இந்த பயந்த சுபாவ ஆக்ட்டிவிட்டீஸ்..?

இன்னொரு சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனில் நடத்தும் பூசையை பார்த்தே உச்சா போகிறார் கருணாஸ்.. வாங்கிய கடனுக்காக கடன்காரன் தனது தங்கைகளை கடத்திப் போய்விடுவானோ என்று பயப்படுகிறார்.. ஸ்டேஷனில் மற்ற ஏட்டுக்கள். காவலர்களின் காமெடிக்கு பலியாகிறார்.. வில்லன் தனது குடும்பத்தை கொலை செய்துவிடுவான் என்று பயந்து போய் அவன் தப்பிச் செல்லவும் உதவி செய்கிறார்.. கமிஷனரின் மீட்டிங்கிலேயே குறட்டைவிட்டு தூங்குகிறார்.. இது போன்ற போலீஸ் ஸ்டேஷனை எங்கே பார்க்க முடியும் என்பதை போல... இவர் போன்ற கான்ஸ்டபிளையும் எங்கே  என்று தேடித்தான் பார்க்க முடியும்..!

புதுமுக ஹீரோயின் அங்கனாராய் சுமார் மூஞ்சி.. பெங்களூராம்.. அங்கேயே இருக்க வேண்டியதுதான்.. வழக்கம்போல 2 பாடல்களில் ஆடியிருக்கிறார். கொஞ்சம் டயலாக்குகளை பேசியிருக்கிறார்... அவ்வளவுதான்.. கொடுத்த காசுக்கு நடிக்க வைச்சாச்சு..! கருணாஸின் அம்மாவாக உமா பத்மநாபன்.. நம்பத்தான் முடியலை.. ஆனாலும் ஹீரோயினை தன் வீட்டு மருமகளாக்க மெனக்கெட்டு இவர் உழைக்கும் காட்சிகளில் சிங்கிள் வுமனாக இவரே தாங்கி நிற்கிறார்.. அந்த வித்தியாசமான ஸ்பீடு மாடுலேஷனால் சில காட்சிகளை ரசிக்கத்தான் முடிகிறது..! 

இது போன்ற மீடியம் பட்ஜெட் படங்களுக்கென்றே எழுதப்படாமல் இருக்கும் திரைக்கதை யுக்தியின்படி 3 குத்துப் பாடல்கள்.. இதில் இரண்டு குத்துப் பாடல்களில் அயிட்டம் டான்ஸ் கொடி கட்டிப் பறக்கிறது.. முதல் பாடலைவிட.. இரண்டாம் பாடலில் தங்கத் தலைவி ஷகீலாவின் நடனத்தோடு இருப்பது கொஞ்சம் ஓவர்தான்..! "இதுதான் ஸார் டிரெண்டு.. காசு பார்க்க வேணாமா..? தியேட்டருக்கு வர்ற ரசிகனை கொஞ்சமாச்சும் திருப்திப்படுத்த வேணாமா..?" என்பார்கள்..! எது எப்படியிருந்தாலும் இதனை டிவியில்கூட பார்க்க சகிக்காது என்பது மட்டும் உண்மை..!

3-வது குத்துப்பாடல் 'ஒபாமாவும் இங்கேதான்.. ஒசாமாவும் இங்கேதான்..' என்பது தத்துவப் பாடலாயிருச்சு..! சுடுகாட்டு சிச்சுவேஷனோட அமர்க்களமா பொருத்தமா இருக்குது.. தமிழ்நாட்டில் ஒபாமாவுக்கு ரசிகர் மன்றமும், ஒசாமாவுக்கு தொண்டர்களும் இல்லாத காரணத்தினால் கருணாஸ் தப்பித்தார்.. இதே வார்த்தையை மாற்றிப் போட்டு தமிழகத்தின் இறந்து போன பிரபலங்களை பற்றி வைத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்..? படம் ரிலீஸாகியிருக்குமா..? இதுதான் சென்சார் போர்டின் லட்சணம்..! 

ஸ்ரீகாந்த் தேவாவின் மெலடி இசையைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.. 'ரகளபுரம்', 'அடி தேவலோக ரதியே..' 'சூடாமணி' என்று பாடல்களில் மெலடியையும், குத்தையும் போட்டு கச்சிதமாக வார்த்தைகளை முன்னிறுத்தி.. இசையை பின்னிறுத்தி கேட்க வைத்திருக்கிறார்.. 'அடி தேவலோக ரதியே' பாடல் இனி அதிகமாக டிவிக்களில் ஒலிக்கும் என்று நினைக்கிறேன்..!

திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் புதுமுக இயக்குநர் மனோகர்..! ஹீரோயினிடம் நல்ல பெயர் எடுக்க விரும்பி திருடனிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு கருணாஸ் செய்யும் குட்டி கலாட்டா.. டாஸ்மாக் சரக்கடிக்க வீட்டில் இருந்து குத்துவிளக்கை தூக்கிக் கொண்டு ஓடி வருபவனை கருணாஸ்தான் தனது வேலைக்காக துரத்துகிறார் என்று நினைத்து அவனை வீட்டிற்கு இழுத்து வரும் ஹீரோயின்.. ஜெயிலுக்கு போய் வில்லனை சந்திக்க விரும்பாமல் ஜெயிலில் இருந்து வெளியே வரும் லாரியில் வில்லன் தப்பிச் செல்வதாக டூப்விட. நிசமாகவே அவர்கள் அதில் தப்பிச் செல்லும் காட்சியை இணைத்தவிதம்.. இப்படி சிற்சில இடங்களில் திரைக்கதை சுவாரசியமாகவே இருக்கிறது..!

நான் முன்பே சொன்னதுபோல.. மிகப் பிரயத்தனப்பட்டு கருணாஸ் இந்தப் படத்தைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்.. படத்தை வெளியிட வேண்டிய கடைசிக்கட்ட பணத் தேவைகளுக்காக காமராஜர் அரங்கத்தில் நடிகர் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்ற அன்றுகூட யாரிடமோ 10 லட்சம் கடன் வாங்கி.. அந்தக் கடன் பத்திரத்தில் காமராஜர் அரங்கத்தின் வாசலில் வைத்துதான் கையெழுத்து போட்டு வாங்கினார்.. என் கண்ணால் பார்த்த கொடுமை இது..! தயாரிப்பாளர்களின் இந்தக் கஷ்டத்தையெல்லாம் பார்த்தால் ஏன் இப்படியெல்லாம் படம் எடுக்கணும்ன்னு கேக்கத்தான் தோணுது..!

எங்களுக்குத் தெரிஞ்சது இந்த ஒரேயொரு தொழில்தான் என்பார்கள் நலிந்தாலும் சினிமாவைவிடாத தயாரிப்பாளர்கள்...! இவர்களை பார்த்துதான் புதிய புதிய தயாரிப்பாளர்கள் எப்படியாவது பெயர் சொல்லும் அளவுக்குத் தலையெடுத்துவிட வேண்டும் என்ற வைராக்கியத்தோடு கோடம்பாக்கத்தில் கால் வைக்கிறார்கள்..! அண்ணன் கருணாஸின் இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன். அவ்ளோதான் சொல்ல முடியும்..!

கடைசியாக இன்னொன்று..! கருணாஸை அறிமுகப்படுத்திய இயக்குநர் பாலா, அவர் தேவர் என்றோ.. சாதி பார்த்தோ அறிமுகப்படுத்தவில்லை.. ஏதோ ஒரு நடிப்புத் திறமை இவரிடம் இருக்கிறது என்று நினைத்துதான் உள்ளே இழுத்துவிட்டார். அதைத் தனது திறமையினால் இந்த அளவுக்கு வளர்த்து வந்திருப்பது கருணாஸ்தான்.. பாராட்டத்தான் வேண்டும்.. ஆனால் அதற்காக வளர்ந்து வந்த பின்பு தான் தேவர் இனத்தைச் சேர்ந்தவன் என்றெல்லாம் பேசி ஜாதி முலாம் பூசி.. வெளிச்ச அரசியலுக்கு வர விரும்புவது அவருடைய சினிமா கேரியருக்கு நல்லதல்ல..! 

இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கென் மீடியாவின் லோகாவில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வருகிறார்.. இத்தோடு நிறுத்தியிருக்கலாம்..! படத்தில் இடையில் பெண் வேடமிட்டு கருணாஸ் வில்லனை பிடிக்க அலையும் காட்சியில்.. கருணாலை பெண் என்று நினைத்து பாலியல் நோக்கோடு கடத்திச் செல்லும்போது "நான் தேவன்டா.." என்று கருணாஸ் சொல்ல.. இவரைக் கடத்திச் செல்லும் இரண்டு பேர் "நான் மறவன்.." "நான் கள்ளன்..." என்று சொல்வதெல்லாம்  என்ன மாதிரியான கதையாடல் என்று எனக்குப் புரியவில்லை. சென்சார் போர்டு ஆள் பார்த்து.. ஆடை பார்த்துதான் சென்சார்ஷிப் செய்கிறது என்பதற்கு இதைவிடவும் மிகச் சிறந்த உதாரணம் இருக்க முடியாது..! 

"எல்லாம் காமெடிதான் ஸார்..!" என்று சொல்வதற்கு போயும்.. போயும்.. அந்த ஜாதிதான் உங்களுக்குக் கிடைத்ததா கருணாஸ் பிரதர்..? 



நய்யாண்டி - சினிமா விமர்சனம்

17-10-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்துக்கு ஏன் இத்தனை நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள்ன்னு புரியலை..! சற்குணத்தின் மீது விமர்சகர்களுக்கு கோபம் இருக்க வாய்ப்பே இல்லை. களவாணி, வாகை சூட வா என்று, இரண்டு நல்ல படங்களைத்தான் கொடுத்திருக்கிறார். தனுஷ் மீதும் வருத்தமிருக்க வாய்ப்பில்லை.. அப்புறமும் ஏன்..? முதல் பாதி மட்டுமே இதில் கொஞ்சம் அசுவாரசியமாக இருக்கிறது.. இரண்டாம் பகுதியில் காமெடிக்கு பஞ்சமில்லை..! அப்படியிருந்தும் மவுத் டாக்கில் இந்தப் படத்தைப் பற்றி நெகட்டிவ்வாகவே சொல்லிச் சொல்லி படத்தின் ஓட்டத்தைக் குறைத்திருக்கிறார்கள் பல புண்ணியவான்கள்..! இதனால் யாருக்கு என்ன லாபம்ன்னு தெரியலை..!


1993-ல் ஜெயராம், ஷோபனா நடிப்பில் வெளிவந்த 'மேலப்பரம்பில் யான் வீடு' என்ற மலையாளப் படத்தின் ரீமேக்குதான் இது..! இந்தப் படத்தின் ரீல் அந்து விழுகும் அளவுக்கு மாதந்தோறும் இதனை ஓட்டோ ஓட்டு என்று ஓட்டியிருக்கிறது சூர்யா டிவி.. நான் கடந்த 7 ஆண்டுகளாக சூர்யா டிவியில் இதனை பார்த்திருக்கிறேன்.. இப்போது போய் இதனை ரீமேக் செய்ய வேண்டும் என்று நண்பர் சற்குணத்திற்கு தோன்றியது ஏன் என்றுதான் எனக்குப் புரியவில்லை. அந்த அளவுக்கா கதைப் பஞ்சமாகிவிட்டது தமிழ்ச் சினிமாவில்..!? 

வெறும் 40 லட்சம் ரூபாயில் தயாரிக்கப்பட்ட இந்த மலையாளப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி 2 கோடிக்கும் மேலாக கேரளாவிலேயே வசூலைக் குவித்ததாம்.. ரீமேக் உரிமையாகவே 25 லட்சம் தயாரிப்பாளருக்கு கிடைத்ததாகச் சொல்கிறார்கள்..! அஸ்ஸாமிய மொழியிலேயே இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறதாம்.. படத்தின் இயக்குநர் ராஜசேனன் தனது பல திரைப்படங்களில் தமிழ்நாட்டையும் இணைத்துதான் கதை பண்ணியிருக்கிறாராம்..! இதிலும் அப்படியே..!

ஜெயராம் கேரளாவில் இருந்து பொள்ளாச்சிக்கு வந்து ஒரு தனியார் பார்சல் நிறுவனத்தில் வேலை செய்கிறார்..! அதே ஊரில் இருக்கும் செல்வாக்கான வினு சக்கரவர்த்தியின் வீட்டிற்கு பார்சலை கொடுக்கப் போகும்போது அவருடைய மகள் ஷோபானாவின் அறிமுகம் கிடைத்து.. அது காதலாகி.. கசிந்துருகி.. விஷயம் லீக்காகும்போது.. வழக்கமான தமிழ்ச் சினிமா வில்லன் மாதிரி வினு சக்கரவர்த்தியின் மைத்துனன் கரிகாலன் இதை எதிர்க்கிறார். அவரது எதிர்ப்பிற்காக அவசரம், அவசரமாக ஷோபனாவைத் திருமணம் செய்து கொள்கிறார் ஜெயராம். 

இவருடைய வீட்டில் ஏற்கெனவே 2 அண்ணன்கள் திருமணமாகாமல் கன்னியாகவே காலம் கழிப்பதால் இப்போதைக்கு தான் திருமணம் செய்தது வெளியில் தெரிந்தால் பிரச்சினையாகுமே என்று நினைத்து.. ஷோபனாவை வீட்டு வேலைக்காரியாக தன் வீட்டில் நுழைக்கிறார்..!

ஷோபனாவின் அழகில் மயங்கும் ஜெயராமின் 2 அண்ணன்களும் ஷோபனாவுக்கு காதல் வலை வீச.. இதனையும் சமாளித்து.. ஜெயராமையும் சமாளித்து.. கடைசியாக கர்ப்பத்தின் காரணமாய் ஷோபனா மயக்கமாகும்போதுதான் கிளைமாக்ஸ்.. கர்ப்பத்துக்கு யார் காரணம் என்று அம்மாவும், அப்பாவும் 2 அண்ணன்களை மட்டுமே விரட்டிக் கொண்டிருக்க.. கடைசியில் ஷோபனாவை வீட்டைவிட்டு வெளியே அனுப்புகிறார்கள்.. 

ஷோபனாவின் அண்ணன் என்று சொல்லி கரிகாலனின் கையாள் ஒருத்தன் ஷோபனாவை அழைத்துச் செல்ல, வழியில் கரிகாலன் ஷோபனாவை கடத்துகிறான். ஜெயராம் விஷயம் தெரிந்து ஓடி வந்து சண்டையிட்டு ஷோபனாவை காப்பாற்றி நடந்த கதையைச் சொல்லித் தங்களை ஆசீர்வதிக்கக் கேட்கிறார். இந்த நேரத்தில் வினு சக்கரவர்த்தி வந்து தனக்கு இருக்கும் சொத்துக் கணக்கையெல்லாம் சொல்லிவிட்டு "இந்த வீட்ல வேலைக்காரியா என் பொண்ணு இருக்க வேணாம்" என்று சொல்லி அழைக்கிறார். “ அவ வயித்துல வளர்ற எங்க வீட்டு வாரிசைக் கொடுத்திட்டு, அப்புறமா உங்க மகளைக் கூப்பிட்டுட்டு போங்க..” என்று ஜெயராமின் பெற்றோர் சொல்ல.. எல்லாம் சுபமாகிறது..!

அக்மார்க் 1990-களின் கதையாடல்.. சுவையான திரைக்கதை.. சிறந்த நடிகர்களின் நகைச்சுவையில் இந்தப் படம் ஓடியதில் ஒன்றும் ஆச்சரியமில்லை..!

ஜெயராம் கேரக்டரில் தனுஷ். ஷோபனா கேரக்டரில் நஸ்ரியா. மூத்த அண்ணன் ஜெகதி ஸ்ரீகுமாரின் கேரக்டரில் ஸ்ரீமன்.. இரண்டாவது அண்ணன் விஜயராகவன் கேரக்டரில் சத்யன்..  முன்னதில் வேலைக்கு வந்த இடத்தில் காதல்.. பின்னதில் ஊர்த் திருவிழாவுக்கு வந்த இடத்தில் வேலையே காதல்தான்..! 

இந்தத் தமிழ்ப் படத்தின் முதற்பாதியில் காதலுக்கான காரணத்தைத்தான் அழுத்தமாக பதிவு செய்யவில்லை இயக்குநர். வேலை வெட்டியே இல்லாம, "இன்னிக்கு அவளை பேச வைக்கிறேன்.." "லவ் பண்ண வைக்கிறேன்.." "சிரிக்க வைக்கிறேன்..." என்றெல்லாம் தனுஷ் சொல்வதெல்லாம் ஏதோ மூன்றாம்தர படங்களை பார்ப்பதுபோலாகிவிட்டது.. நஸ்ரியா முதலில் மறுத்து பின் ஏற்க வைக்கும் அளவுக்கான சினிமாத்தனமான காட்சிகளை சற்குணத்தின் படத்தில் பார்த்ததும் மக்கள் பதறிவிட்டார்கள் என்று நினைக்கிறேன்..!

திரைக்கதையில்தான் அழுத்தம் இல்லையே தவிர.. தனுஷ் எப்போதும்போலவே இயல்பாகவே நடித்திருக்கிறார். அவருடைய நடிப்பிற்குப் பஞ்சமில்லைதான்..! கமல்ஹாசனுக்கு பின்பு சமாளிப்புத் திறனில் தனது உடல் மொழியை நன்கு பயன்படுத்துவது தனுஷ்தான்..! ஸ்கூட்டரில் பின்புறம் அமர்ந்தபடியே சூரியின் நக்கலைப் பார்த்து முறைக்கும் அந்த ஒரு காட்சியே அண்ணனின் நடிப்புத் திறனுக்கு சான்று..! 

நஸ்ரியா இந்த ஒரு படத்தின் மூலமாகவே 10 படங்களுக்குக் கிடைத்திருக்க வேண்டிய பப்ளிசிட்டியை பெற்றுவிட்டார் என்றாலும் அந்தத் தொப்புள் காட்சியை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தும் அது கட் செய்யப்பட்டதும்கூட படத்தின் எதிர்ப்புக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்..!

ஆனாலும் பொண்ணு மேல ரசிகர்களுக்கு ஒரு கண்ணு விழுந்திருக்கும். நேரம் படம் போலவே.. நஸ்ரியா வரும் காட்சிகளிலெல்லாம் ஜில்லென்று இருக்கிறது.. அந்த முகம் காட்டும் பல்வேறு எக்ஸிபிரஷன்கள் நிச்சயம் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் என்றே நினைக்கிறேன்..!

சூரி இந்தப் படத்தில் கொஞ்சம் அடக்கியே வாசித்திருக்கிறார்.. இடையிடையே படம் பார்க்கும் ரசிகர்களிடத்திலும் பேசுகிறார். இந்த ஸ்டைலும் நல்லாத்தான் இருக்கு.. சிங்கம்புலியின் பல்லைப் பிடுங்கப் போய்.. அது நஸ்ரியாவை கண்டுபிடிக்கும் அளவுக்கு போவது.. இயக்குநரின் திரைக்கதை யுக்தி.. வேற என்னதான் செய்யறது..? சினிமால முடிச்சை அவிழ்க்குறது எவ்ளோ கஷ்டம்ன்னு கதை டிஸ்கஷன்ல் உக்காந்தாதான் தெரியும்..!

முற்பாதியில் திரைக்கதையில் தொய்வு விழுந்து ரசிக்க முடியாமல் இருந்தபோதும் சற்குணம் வழக்கமான தனது இயக்குனர் திறமையை காட்டாமல் இல்லை..! நஸ்ரியாவின் வீட்டு வாசலில் நின்று பக்திப் பாடல்களை பாடுவது.. முகமூடி போட்டுக் கொண்டு நடனமாடி காட்டுவது.. அவரது வீட்டுக்குள் சென்று அவரது நம்பரை கேட்டு வாங்கி வருவது.. பனை மரத்தில் ஏறி அமர்ந்து இன்னொரு மரத்திற்குத் தாவுவது.. நஸ்ரியாவின் கோபத்தை தணிப்பதற்கு அப்பனும் சேர்ந்து பொருட்களை உடைப்பது.. இப்படியே சற்குணம் தனது இயக்கத்தை நம்பியே முதற்பாதியை எடுத்திருக்கிறார். ஏனெனில் இது மூலக் கதையில்  இல்லாத ஒரு புதுக் கதை..!

ஆனால் இரண்டாம் பகுதி முழுவதுமே ஒரிஜினல் மலையாளப் படத்தின் திரைக்கதை என்பதால் இங்கேதான் காமெடி களைகட்டியிருக்கிறது..! நஸ்ரியாவை பார்த்தவுடன் இரண்டு அண்ணன்களும் நினைக்கும் நினைப்புகளும்.. அதற்காக அவர்கள் எடுக்கும் மெனக்கெடல்களும்.. உம்மணாமூஞ்சிகளைக்கூட சிரிக்க வைத்துவிடும்..! ஸ்ரீமன் தன் தொப்பையைக் குறைத்துக் காட்ட வயிற்றை எம்பிக் காட்ட.. பட்டன் தெறித்து விழும் காட்சி.. சத்யன்  கோவிலில் லவ் லெட்டரை நீட்ட.. அதை வைத்து தீயைப் பற்ற வைப்பது.. பெண் பார்க்கும் இடத்தில் உறவு முறையை மாற்றிச் சொல்லி கலகலப்பாக்குவது என்று நன்றாகத்தான் போனது..! 

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த 'இனிக்க இனிக்க' பாடலில் அந்தக் காட்சி இல்லாமல் போனதில் ஒரு வருத்தம்தான். அது இருந்திருந்தால்தான் என்ன..? ஒண்ணும் குடி முழுகிப் போயிருக்காது..! தேவையில்லாமல் ஒரு பிரச்சினையைக் கிளப்பி தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொண்டுவிட்டார் நஸ்ரியா.. ஒரு அறைக்குள் பேசி முடித்திருக்க வேண்டிய மேட்டரை இப்படி வெளியுலகத்துக்கு கொண்டு வந்திருக்க வேண்டாம்..! 

சரி விடுங்கோ.. முதல் பாதிதான் கொஞ்சம் இழுவை.. இரண்டாம் பகுதியில் படம் ஜிவ்வென்று சிரிப்போடு போகிறது..! 

அவசியம் பாருங்க மக்கள்ஸ்..! 

வணக்கம் சென்னை - சினிமா விமர்சனம்

12-10-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பெரிய இடத்து தயாரிப்பு என்றாலும், புதுமுக இயக்குநர் என்பதால் எதிர்பார்ப்பு இல்லாமல்தான் சென்றோம்.. படமும் அப்படித்தான் இருக்கிறது..!

 

ஏதோவொரு ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கச் சென்னைக்கு வருகிறார் சிவா. அதே நேரம் தன்னுடைய புகைப்படத் துறையின் ஆர்வத்தில், தமிழகத்தையே புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு தமிழகம் வருகிறார் லண்டன்வாசி பிரியா ஆனந்த். இவர்கள் இருவரிடமும் வீடு வாடகைக்கு உங்களுக்குத்தான் என்று சொல்லி நடுத்தெரு நாராயணன் அட்வான்ஸ் பணத்தை வாங்கிக் கொண்டு எஸ்கேப்பாகிவிடுகிறார். இருவருமே ஒரே வீட்டில் தங்க வேண்டி வருகிறது.. 

அந்த அபார்ட்மெண்ட்டிலேயே குடியிருக்கும் லோக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஊர்வசியின் ரப் அண்ட் டைப் கேரக்டரை பார்த்து நாங்க ரெண்டு பேரும் தம்பதிகள் என்று பொய் சொல்லிவிடுகிறார்கள். வீட்டு ஓனர் வந்து தாம்தூம் என்று குதிக்கும்போது வாடகையை கரெக்ட்டா தந்திருவாங்க என்று சொல்லி ஊர்வசி காப்பாற்றுவதால் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை திருப்பி வாங்கி வேண்டும் என்ற காரணத்துக்காக ஒரே வீட்டில் தொடர்ந்து இருக்கிறார்கள். 

இடையில் பிரியா மீது சிவாவுக்கு காதல் வர.. அதே நேரம் பிரியா ஆல்ரெடி ஒரு காதலனுக்காக காத்திருப்பது தெரிய வர.. இவர்களது காதல் ஜெயித்ததா..? அந்த நடுத்தெரு நாராயணன் சிக்கினானா..? கொடுத்த அட்வான்ஸ் திரும்பக் கிடைத்ததா என்பதெல்லாம் மிச்சம் சொச்சக் கதை..!

இதுலேயே உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமே.. இது ரொம்ப ரொம்பச் சாதாரணமான கதைதான்.. எடுத்தவிதமும் ரொம்ப ரொம்ப சாதாரணம்தான்.. ஏதோ ஆங்காங்கே.. அப்பப்போ லைட்டா சிரிக்க வைக்கிறாங்க.. அவ்ளோதான்.. இது மாதிரியான நாடகத்தன்மையுடனான காட்சிகளையும், இயக்கத்தையும் பார்க்கும்போது இயக்குநர் இன்னும் தொட வேண்டிய தூரம் நிறைய இருக்குன்னு தெரியுது..!

லண்டன்ல பெரும் பணக்காரக் குடும்பத்துல பொறந்த பொண்ணு வெறும் 50000 ரூபாய்க்காக இங்க வீட்ல இருக்கேன்னு சொல்றதும்.. தேனில சாதாரண மலையோர குக்கிராமத்துல இருக்குற சிவா.. சென்னைக்கு ஓடி வந்து.. அதுவும் இவ்ளோ பெரிய ரிச்சான வீட்டுல இருக்கிறதும்.. அவங்கம்மா ஊர்ல தையல் மெஷினை வைச்சு ஓட்டிக்கிட்டிருக்கிறதையும் பார்த்தா.. கதை, திரைக்கதையோட ஒட்டவே இல்லை..! 

சிவா வழக்கம்போல அப்படியேதான் நடிச்சிருக்காரு.. என்னது இன்னிக்கு நைட்டே கிளம்புறியா..? என்னது நீயும் ஊருக்கு வர்றியா..? என்று சர்வசாதாரணமாக காமெடியன் கேரக்டர் கேட்பதை போல ரியாக்சன் கொடுக்கும சிவா அண்ணே.. எப்போ ஹீரோவா நடிப்பாருன்னு தெரியலை..! சீக்கிரமா அப்படி மாறினாத்தான் இன்னும் 10 வருஷத்துக்கு கோடம்பாக்கத்துல ரோடு போட முடியும்..! அப்பப்போ சின்னச் சின்னதா சிரிக்க வைக்கிற இந்த வித்தையே போதும்ன்னு நினைச்சா.. ம்ஹூம்.. அவருக்கே இது நல்லதாயில்லை..!

பிரியா ஆனந்த்.. ஹீரோயினின் அறிமுகமே தேவையில்லாத மாதிரி ஒரு காட்சில திடீர்ன்னு அறிமுகமாகுறாரு.. ஷட்டப் என்ற வார்த்தையை படம் முழுக்க அவ்வப்போது சொல்லிக் கொண்டேயிருக்கிறார்.. கோபப்படும்போது மட்டும்தான் நடிப்பை பார்க்க முடியுது..! அவரது அழகை காட்டுற மாதிரி ஒளிப்பதிவாளர் ரிச்சர்டு எந்த ஷாட்டையும் வைக்கலை..! பாடல் காட்சிகளில் டிரெஸ்ஸிங்சென்ஸ் ஓவராகி நம் கவனம் திசை திரும்பியதுதான் மிச்சம்..!

நடுத்தெரு நாராயணனாக சந்தானம்.. இடைவேளைக்கு மிகச் சில நிமிடங்களுக்கு முன்புதான் அண்ணன் என்ட்ரியாகுறார்.. அதே மாதிரிதான்.. 2 வரி.. 3 வரில கமெண்ட் செஞ்சு சிரிக்க வைக்குறாரு.. “உன் வாழ்க்கையே அங்க டான்ஸ் ஆடிக்கிட்டிருக்கு.. இங்க உனக்கு ஃபுல்லு கேக்குதா..?” என்று சின்னச் சின்னதா இவர் கொடுக்குற பஞ்ச்சுலதான் இடைவேளைக்குப் பின்பு உட்காரவும் முடிகிறது..! 

அட்வான்ஸ் வாங்கினது நாராயணன்.. அதைப் பத்தி வீட்டு ஓனரும் கவலைப்படலை.. அவ்ளோ பெரிய குடியிருப்புல சட்டுன்னு யாராச்சும் குடி வந்திர முடியுமா..? வீட்டு ஓனருக்கோ.. குடியிருப்பு அஸோஸியேஷனுக்கோ தெரியாமல் ஒண்ணும் செய்ய முடியாது.. சரி.. லாஜிக் பார்க்க வேணாம்.. விட்ரலாம்..! லண்டன்ல பொறந்து வளர்ந்த பொண்ணு.. இங்க ஒரு பிளாட்ல ஒரு ஆம்பளையோட வீட்டை ஷேர் பண்ணிக்கிறான்னு சொல்லிட்டாலும் ஒண்ணும் தப்பில்லை. இதுல அதை மறைக்கவும் ஒரு ஆண்ட்டியை வைச்சுக்கிட்டு இவங்க படுத்துற பாடு.. தேவையா..? 

ஏற்கெனவே ஒருத்தனை லவ் பண்ணிக்கிட்டிருக்கேன். அவனைத்தான் கல்யாணமும் செஞ்சுக்க போறேன்னு சொல்ற பொண்ணு.. எதுக்காக திடீர்ன்னு டிராக் மாறி சிவாவை விரும்பணும்..? அப்படி முடியுமா..? சிவா எதுக்காக இன்னொருவரின் காதலியை ஒருதலையா காதலிக்கணும்..? அவ்ளோ பெரிய வீட்ல ஒரு பாத்ரூம், டாய்லெட்டா இருக்கப் போகுது..? டபுள், டிரிபுள் பெட்ரூமா இருக்க வேண்டிய வீடு.. இதுல அவங்க டைம் டேபிள் போட்டு பாத்ரூமையும், பெட்ரூமையும் யூஸ் பண்ணிக்கிறாங்கன்னு சொல்றதெல்லாம் டூ மச்சு..! அபார்ட்மெண்ட் வீடு மாதிரி செட் போட்டு எடுத்திருக்காங்கன்னு நல்லாவே தெரியுது.. செட்டுன்றதே போட்டதே தெரியக் கூடாதுன்னு சொல்வாங்க..! இப்படியெல்லாம் குண்டக்க மண்டக்க யோசிச்சா தலைவெடிச்சு செத்துருவன்னு சாபம் விடுவாங்கன்றதால இத்தோட நிறுத்திக்கிறேன்..!

ரிச்சர்டு நாதனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமென்றாலும் இதனாலேயே படம் ஓடிரும்ன்னு என்னால சொல்ல முடியாது.. அந்தத் மலையோர கிராமத்தை படம் புடிச்சதுக்காக மட்டும் மனுஷனை ரொம்பவே பாராட்டணும்..! இசை அனிருத்தாம்.. முதல் 2 பாடல்கள் எதுக்காக வந்துச்சுன்னே தெரியலை.. கடைசி 2 பாடல்களும் ஏன் போட்டாங்கன்னும் தெரியலை.. அந்த அளவுக்கு காட்சிகளுடன் ஒன்றாமல் ஏதோ ஸாங் போட்டாகணுமேன்னு நினைச்சு எடுத்திருக்காங்க போலிருக்கு..! 

படம் முடிஞ்ச பின்னாடி சென்னை கேங்பேங்குன்னு சொல்லி ஒரு பாட்டு ஓடுது.. இதுக்கே எப்படியும் லட்சத்துல செலவு பண்ணியிருப்பாங்கன்னு நினைக்கிறேன். இதுக்குப் பதிலா இதைவிட நல்ல கதையா தயாரிக்க ஸ்டோரி டீமுக்கு டயத்தையும், பணத்தையும் கொடுத்திருந்தா நல்லாயிருந்திருக்கும்..! 

முதல் பட இயக்குநர்.. அதுலேயும் பெண் இயக்குநர்.. பெண் இயக்குநர்களே இப்போ குறைவா இருக்குற சூழல்ல.. இப்படியாச்சும் ஒருத்தர் உள்ளாற வரட்டுமேன்னு நினைச்சீங்கன்னா கிருத்திகா உதயநிதிக்கு மோஸ்ட் வெல்கம் டூ தி கோடம்பாக்கம்ன்னு வாழ்த்துறேன்..! அடுத்தடுத்த படங்கள்ல அவங்க தன்னோட திறமையை மேம்படுத்தி இதைவிடவும் சிறப்பா கொடுக்கணும்னு எதிர்பார்ப்போம்..!

இந்தப் படத்துக்கு வரிவிலக்கு இல்லைன்னு அரசுத் தரப்பு சொல்லியிருக்கிறது பச்சை அயோக்கியத்தனம்.. இத்திட்டம் அமலில் இருக்கின்றவரையில் அதை சரிவர செயல்படுத்த வேண்டியது அரசின் கடமை. ஜெயதலிதா இன்னமும் தனி மனித விரோதத்திலேயே ஆட்சி நடத்துகிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது..! இந்த ஆட்சிக் காலத்தில் இதுவரையில் ரெட்ஜெயண்ட் தயாரிக்கும் படங்களுக்கு வரி விலக்கு கிடைப்பதே பெரும் பிரச்சினையாக இருக்கிறது..! இதையெல்லாம் கோடம்பாக்கத்தில் சங்கம் வைத்திருப்பவர்கள் கேட்க மாட்டார்கள். ஆனால் அடுத்த முறை ஆட்சி மாறி இவரோட அப்பா சி.எம்.மா ஆகிட்டாருன்னா... இதே சங்கத்துக்காரங்க விடியற்காலை நேரத்துலேயே வீட்டு வாசல்ல வந்து நிப்பாங்க.. அப்போ உதயநிதி அவங்ககிட்ட பேச வேண்டியது நிறையவே இருக்கும்ன்னு நினைக்கிறேன்..! 

எனிவே.. நிச்சயம் ஒரு தடவை பார்க்கக் கூடிய படம்தான்..!  நேரமும், வாய்ப்பும் கிடைச்சா பாருங்க தோழர்களே..!

இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - சினிமா விமர்சனம்

08-10-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தொடர்ச்சியாக ஹிட்ட்டித்து வரும் நாயகர்களில் சிவகார்த்திகேயனுடன் போட்டி போட்டு வருகிறார் விஜய் சேதுபதி.. இந்தப் படத்திற்குக் கிடைத்த கிராண்ட் ஓப்பனிங்.. இப்போது கூகிளில் விஜய் சேதுபதியின் அலுவலகத்தை சர்ச் செய்யும் அளவுக்கு கோடம்பாக்கத்தை உசுப்பிவிட்டிருக்கிறது..!

தலைவா படத்துக்கே 2-வது நாளே காத்தாடிய சாலிகிராமம் எஸ்எஸ்ஆர் பங்கஜம் தியேட்டரில் தொடர்ச்சியாக 3-வது நாளாக பகல் காட்சியே முக்கால்வாசி நிரம்பியது என்றால் எப்படியிருக்கிறது..? நம்பத்தான் முடியலை.. ஆனால் படம் எதிர்பார்த்த திருப்தியைத் தரவில்லை என்றாலும், இந்த மவுத்டாக்கை புறக்கணித்துவிட்டு ரசிகர்கள் கூட்டம் பறக்கிறது தியேட்டருக்கு..! எல்லாம் விஜய் சேதுபதிக்காக..!  

ஒரே கதையை நகர்த்துவதற்கு நமது இளையதலைமுறை இயக்குநர்களுக்கு என்ன கஷ்டமோ தெரியலை.. இது போன்ற 4 கதைகளை வைத்து அதனை ஒன்றிணைத்து ஒரே கதையாக்கும்வித்த்தை தொடர்ந்து செய்து கொண்டேயிருக்கிறார்கள். இதுவும் அது போன்றதுதான்..!


இரண்டு காதல் கதைகள்.. இவர்களுக்கு நடுவில் இரண்டு சம்பவங்கள்.. இந்தச் சம்பவத்தில் இந்தக் காதலர்களும் சம்பந்தப்பட்டுவிட.. முடிச்சை எப்படி அவிழ்க்கிறார்கள் என்பதைத்தான் இப்படி நீட்டி, முழக்கி கொண்டு போய் முடித்திருக்கிறார்கள்.

முதல் 1 மணி நேரம் எனக்கு சிரிப்பே வரவில்லை. ஏதோ டயலாக் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள்.. நடித்துக் கொண்டேயிருக்கிறார்கள்.. எப்போதுதான் இவர்கள் சப்ஜெக்ட்டுக்குள் நுழைவார்கள் என்று கொஞ்சம் கோபத்தையும் உண்டு பண்ணிவிட்டது முதல் பாதி..!

பசுபதியின் பஞ்சாயத்தின் இடையிலேயே திடீர், திடீரென்று அவர்களது காதல் கதையைச் சொல்லிக் கொண்டே போவதால் அது முடிந்து இது வந்து.. இது முடிந்து அது வந்து.. என்று இரண்டையுமே பெருமளவுக்கு ரசிக்க முடியாமல் போய்விட்டது..! 

இப்போதைய ஹீரோவுக்கான அடையாளமான ரவுடி கெட்டப்பில் சுமார் மூஞ்சி குமாரு அசத்தலாகத்தான் இருக்காரு.. அந்த மெட்ராஸ் பாஷையை எத்தனை படத்துல பார்த்தாலும், கேட்டாலும் சலிக்கவே மாட்டேங்குது.. ஒவ்வொருத்தரின் மாடுலேஷனிலும் அந்த பாஷை படுற பாட்டை கேட்டா.. இந்த தூயத் தமிழுக்கு முதல் எதிரி நமது மெட்ராஸ் பாஷைதான்னு உறுதியா சொல்லிரலாம்.. 

விஜய் சேதுபதி பின்றாரு.. இன்றைக்கு தேதில வயது முதிர்ந்த பல்லு போன பாட்டிகள்ல இருந்து குமரிகள்வரையிலும் எல்லாருக்கும் இவரை பிடிச்சுப் போச்சு.. இவரது நடிப்பே இயல்பானதாகவே இருப்பதால் இந்த ஈர்ப்பு இவருக்குக் கிடைத்திருப்பது இவருடைய அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும்..! 

அண்ணாச்சியை பார்த்து பயப்படாமல் அவரது அடிப்பொடிகளை டபாய்த்து.. அண்ணாச்சியையும் கலாய்த்து.. தனது வருங்கால மாமனரை நைஸ் பண்ணி.. தனது காதலியைப் பற்றியும், காதலைப் பற்றியும் முதல் ஒரு மணி நேரத்துக்கு அவர் காட்டுகின்ற நடிப்பு ஓகேதான் என்றாலும், நகைச்சுவை சுத்தமாக இல்லையே என்பதுதான் பெரும் குறை.. சீரியஸ் டைப்பு என்பதையும் ஏற்க முடியவில்லை. ரெண்டுங்கெட்டாத்தனமாக போய்விட்டது.. பிட்டு படம் என்று சொல்லி செல்போனில் தனது காதலியின் புகைப்படத்தைக் காட்டும் அலப்பறையில்தான் கொஞ்சம் புன்னகைக்க முடிந்தது..!

கிளைமாக்ஸின் அந்த 20 நிமிட காட்சிகள்தான் படத்தை மொக்கை என்று சொல்லவிடாமல் தடுத்துவிட்டது..!  திரும்பத் திரும்ப நந்திதாவிடம் ஐ லவ் யூ சொல்லிருவியான்னு கேட்டு கேட்டு டார்ச்சர் செய்யும் காட்சிகளில் மட்டுமேதான்யா காமெடி ரகளையே நடக்குது.. சிடுமூஞ்சிகளையும் நிச்சயம் சிரிக்க வைத்துவிடும் காட்சி அது..!

அட்டக்கத்தி நந்திதா.. பார்த்தாலே பக்கத்து வீட்டுக்கார பொண்ணு மாதிரியான பீலிங்தான் வரும்..! ஆனாலும் இது போன்ற அழகு ஹீரோயின்கள்.. ரவுடிகளைத்தான் காதலிக்கணும்ன்றது சினிமா விதின்றதால பொருத்தம் பார்க்காம ஓகே சொல்லித் தொலைய வேண்டியிருக்கு..! அவனை பிடிச்ச மாதிரியும் இருக்கு.. பிடிக்காத மாதிரியும் இருக்குன்னு சொல்லும்போதே கிளைமாக்ஸ் பிடிபட்டுவிடுகிறது.. ஆனாலும் இவரது காதலுக்கான அழுத்தமான காரணம் எதுவும் இல்லாமல் போக.. காதலுக்கு இங்கே வேலையே இல்லை.. ஆனால் காதலை ஏற்றுக் கொள்ளச் சொல்லி சேதுபதி செய்யும் டார்ச்சருக்கான சூழலும், காட்சியமைப்பும் ரகளையானது..!

சுமார் மூஞ்சி குமாருக்கு அடுத்து இன்னொரு ஹீரோ அஸ்வின்.. மார்க்கெட்டிங்கில் வேலை செய்யும் இளைஞர்கள் படும் அவஸ்தையை படம் முழுக்க காட்டியிருக்கிறார்..! மேனேஜர் பாஸ்கரிடமிருந்து தப்பிக்க இவர்கள் ஒரு அறைக்குள் இருந்து கொண்டு செய்யும் அந்த டிராமா படு சுவாரஸ்யமானது..! குடிப்பழக்கத்தினால் காதலை இழந்து.. வேலையை இழந்து.. கடைசியாக இன்னொரு உயிரும் பலியாகப் போகின்ற நேரத்தில் அதனைத் தவிர்க்க வேண்டி நடுராத்திரியில் சேதுபதியைத் தேடும் படலத்தைத் துவங்குகின்றனபோதுதான் ஒரு சீரியஸ் கதையை ஜாலியா சொல்லியிருக்காங்கன்றதே புரிய வருது..!

ஸ்வாதி.. தெத்துப் பல் அழகு என்றாலும் இதில் காட்டியவிதம் கோரமா இருக்கு.. "உன்னை போய் எப்படிடா லவ் பண்ணேன்..?" என்று புலம்பிக் கொண்டே "ஏன் நீ போன் செய்ய மாட்டியா..? பின்னால பாலோ பண்ண மாட்டியா..?" என்று திரும்பத் திரும்ப லவ்வுக்குள் விழுகும் குழப்பமான பெண்..! ஆனால் கடைசியில் இது எல்லாத்துக்கும் சேர்த்துதான் மருத்துவமனையில் அஸ்வினையும் சமாளித்து, போலீஸையும் சமாளித்து அனுப்பி வைக்கிறார்.. நல்ல கதைக்காக காத்திருந்தேன்னு சொல்லிட்டு இப்படி ஒரு கேரக்டர்ல நடிக்கிறது எந்த வகைல நியாயம்ன்னு தெரியலை.. இன்னொரு ஹீரோயின்.. பெரிய அளவுக்கான வேஷமில்லை.. பின்ன எதுக்கு இப்படியொரு டிராமா..?

சுமார் மூஞ்சி குமாருடன் ரொம்ப சுமார் மூஞ்சி குமாரையும் சேர்த்தே பாராட்டணும்.. "பிரண்டு.. லவ் மேட்டரு.. பீல் ஆகிட்டாப்புல.. ஆஃப் அடிச்சா கூல் ஆயிருவாரு.." என்ற டயலாக்கைச் சொல்லிக் கொண்டே சரக்கு தேடியலையும் அந்த போர்ஷனில் கொஞ்சம் கத்திரி போட்டிருந்தால் இன்னும் நல்லாயிருக்கும்.. இந்த ரொம்ப சுமார் மூஞ்சி குமாருக்கும் டயலாக் மாடுலேஷன் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது.. சென்னையிலேயே பிறந்த வளர்ந்தவங்களுக்குத்தான் இது அத்துப்படியாய் வரும்போலிருக்கு..! அண்ணாத்த என்று சொல்லிக் கொண்டே சேதுபதியே சமாளிக்கும்விதத்தில் இந்தப் பையனுக்கு இன்னமும் நல்ல வாய்ப்பு கிடைத்தால் ஒரு ரவுண்டு வருவாருன்னு நினைக்கிறேன்.. வாழ்த்துறேன்..!

அந்தக் கள்ளக்காதல்.. சூரி வரும் போர்ஷனில்.. அவர் கத்தியை வைத்துக் கொண்டு காற்றில் விசுக் விசுக்கென்று சுற்றுவது.. அது லின்க்காகி தப்பியோடுவது.. பேருந்தில் எதிர்பாராமல் சிக்குவது.. எல்லாமே வித்தியாசம்தான்.. ஒரு கேவலமான கள்ளக்காதல் கதையை காமெடிக்குள் திணித்து அதனை சாதாரண விஷயமாக்கி வைத்திருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது..! 

டாஸ்மாக்கில் நடக்கும் கொலை.. அதற்குப் பின் போலீஸ் உள்ளே வர.. அங்கேயிருந்த அனைவருமே போலீஸ் ஸ்டேஷனுக்குள் போக.. அங்கே நடக்கும் சில காட்சிகள் மிக இயல்பானவை.. அதில் ஒரு உருக்கத்தை காட்ட.. ஆக்ஸிடெண்ட் ஆன பெண்ணின் கணவர் அங்கே சிக்கியிருப்பதையும் காட்டி.. இந்தக் கதையினால்தான் கிளைமாக்ஸ்வரையிலும் இருக்க வைக்கப்பட்டோம் என்பதையும் சொல்லியாக வேண்டும்..! 

"காதலிச்சுட்டுப் போன பொண்ணுகளுக்காக பிரே பண்ணுங்கப்பா.." என்று தாத்தா வி.எஸ்.ராகவன் எடுத்துக் கொடுக்க அந்த ஒரு பாடல் மட்டுமே கவனத்தை ஈர்க்கிறது.. மற்றபடி வேற பாடல்களை யார் கேட்டா..? ஒரே நாளில்.. ஒரே இரவில் நடக்கின்ற கதையாகவே சென்றாலும்.. இடையிடையே வரும் பிளாஷ்பேக்குகள் படத்தை இது பற்றிய சிந்தனையே இல்லாமல் கொண்டு போய்விட்டன...

சென்னை பாஷைக்காகவும், லோக்கல் ஏரியாவில் படமாக்கவும் இயக்குநர் கோகுல் நிரம்பவே உழைத்திருக்கிறார் என்பது படத்தைப் பார்த்ததும் புரிகிறது..! 'ரவுத்திரம்' என்ற படத்தை எடுத்தவர் இந்த அளவுக்கு மாறுபட்ட ஒரு கோணத்தில் படம் எடுத்திருப்பதும் வரவேற்கத்தக்கதுதான்..! பாராட்டுக்குரியதுதான்..!

அதே சமயம் திரைக்கதையை இன்னமும் சுவாரஸ்யப்படுத்தி.. இன்னமும் நகைச்சுவையை அள்ளித் தெளித்திருந்தால் இந்த ஆண்டின் அடுத்த காமெடி ஹிட் என்று இதனைச் சொல்லியிருக்கலாம்..! ஜஸ்ட் மிஸ்ஸிங்.. பட் நல்ல மெஸேஜை காமெடியோடு சொல்ல முற்பட்டதினால்.. அந்த மெஸேஜே இதில் காணாமல் போய்விட்டதையும் அவர் உணர்வார் என்றே நினைக்கிறேன்..!

"குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்.. உங்களுடைய அந்த தவறினால் வேறு யாரோ ஒருவருடைய வாழ்க்கை பாழாகும்.." என்கிறார் இயக்குநர்.. புரிந்து கொள்ளுங்கள் வலைத்தமிழ் மக்களே..!

ஒரு முறை பார்க்கலாம்..! 


கசப்புடன் முடிந்த இந்திய சினிமா நூற்றாண்டு விழா - இறுதி பாகம்..!

01-10-2013


முதலில், நான் இப்படித்தான் எழுதுவேன் என்று தெரிந்தும் எனக்கு விழா அழைப்பிதழ்களை வாங்கிக் கொடுத்த தமிழ்த் திரையுலகப் புள்ளிகளுக்கு எனது மனமார்ந்த நன்றி..!

கசப்புடன் முடிந்த இந்திய சினிமா நூற்றாண்டு விழா என்கிற தலைப்பு பொருத்தமில்லாததுதான்.. கசப்புடன் துவங்கிய என்றுதான் இருந்திருக்க வேண்டும்..! இதுதான் உண்மை..!

இந்திய சினிமாவின் நூற்றாண்டை கொண்டாட தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு முழு தகுதியும் உண்டு.. முதல் உரிமையும் உண்டு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எப்படி நடத்தினார்கள் என்பதில்தான் இப்போது அனைவருக்குமே வருத்தம்..


தற்போதைய சேம்பரின் தலைவரான சி.கல்யாண் தெலுங்கு தேசத்துக்காரர். பொருளாளர் கே.எஸ்.சீனிவாசன். கோடம்பாக்கத்துக்காரர்.. செயலாளர்களில் ஒருவரான ரவி கொட்டாக்காரா மலையாளத்துக்காரர்.. இன்னொரு செயலாளர் ஆனந்தா பிக்சர்ஸ் எல்.சுரேஷ் கோடம்பாக்கத்துக்காரர்..! சேம்பரின் தலைவர் பதவி நான்கு தென்னிந்திய மாநிலங்களுக்கும் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மாறி மாறி கிடைக்கும்.. அந்த வரிசையில் தற்போது ஆந்திராவுக்குக் கிடைத்து சி.கல்யாண் தலைவராகியிருக்கிறார்..!

இப்படியொரு விழாவை ஏற்பாடு செய்கிறார்கள் என்கிறபோது சந்தோஷப்பட்ட தமிழ்ச் சினிமாவுலகம் பின்பு துவக்கத்திலேயே இது தங்களது கைகளை மீறிச் செல்கிறது என்பதைப் புரிந்து கொண்டார்கள். அதற்கு முன் இன்னொரு விஷயத்தையும் வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும்..!

இத்தனை கலைஞர்களையும் அழைத்து  பெரிய அளவுக்கு ஒரு நிகழ்ச்சியை நடத்த வேண்டுமெனில் அது சென்னை என்றால் நேரு ஸ்டேடியத்தில் மட்டுமே செய்ய முடியும். வேறு எந்த உள்ளரங்கமும் சென்னையில் இந்த அளவுக்கு பெரியதாகவும், வசதியாகவும் இல்லை.. இந்த ஸ்டேடியம் தற்போது தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆனால் பராமரிப்பு தமிழக அரசின் பொதுப்பணித்துறையிடம்.. சுருக்கமாக தமிழக அரசின் கைகளில்..!

தமிழக அரசைப் பகைத்துக் கொண்டால் இந்த நேரு ஸ்டேடியம் உங்களுக்குக் கிடைக்கவே கிடைக்காது என்பதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.. அதிலும் இப்போதைய காலக்கட்டத்தில் கலைஞர் தொலைக்காட்சியோ, சன் தொலைக்காட்சியோ நேரு ஸ்டேடியத்தில் ஒரு நிகழ்ச்சியை நடத்த வேண்டுமெனில் அது முடியவே முடியாத காரியம்.. அவர்களுக்கும் அது தெரியும்.. அதனால்தான் 'மானாட மயிலாட' நிகழ்ச்சி சிங்கப்பூருக்கும், மலேசியாவுக்கும், துபாய்க்கும் பறந்தது..! ஆனால் தாத்தாவின் ஆட்சியில் இதே நேரு ஸ்டேடியத்தில்தான் நடந்தது என்பதையும் நினைவில் கொள்ளவும்..!

இப்போதைக்கு ஜெயா தொலைக்காட்சியைத் தவிர மற்ற சேனல்கள் இங்கே நிகழ்ச்சி நடத்த கேட்டால், மேலிடத்தில் அனுமதி கேட்பார்கள். தராதீர்கள் என்று சொல்லிவிட்டால், பராமரிப்புப் பணிகளுக்காக இந்த மாதம் முழுக்க அங்கே நிகழ்ச்சி கிடையாது என்று கை விரிப்பார்கள்.. திரும்பி வந்துவிட வேண்டியதுதான்..! இல்லையென்றால் கடைசிவரையிலும் தருவோம். தர மாட்டோம் என்பதையே சொல்ல மாட்டார்கள்.. இது தாத்தாவின் ஆட்சியிலும் தொடர்ந்ததுதான்..! அப்போது ஜெயா டிவி நேரு ஸ்டேடியத்திற்குள் நுழைய முடியவில்லை. இதுவொரு கேவலமான அரசியல்.. 

இந்தப் பிரச்சினையை முதலிலேயே கண்டு கொண்ட சேம்பர்.. அரசை எந்தவிதத்திலும் பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதை ஆரம்பத்திலேயே முடிவு செய்துவிட்டது.. அதற்கேற்ப முதல் அறிமுகக் கூட்டத்திலேயே ஆத்தாவுக்கு ஐஸ் வைத்துதான் அத்தனை வார்த்தைகளும் வீசப்பட்டன..! முதல்வருக்கு நெருக்கமானவரை வைத்து முதலில் முதல்வரை சந்தித்து பேசிவிடுவோம் என்று நினைத்து நடிகர் சிவக்குமாரை வளைத்துப் பிடித்தார்கள். அவர் மூலமாகவே மூலஸ்தானத்தை அடைந்து தங்களது விருப்பத்தை தெரிவித்து அனுமதி வாங்கிவிட்டார்கள்..!

தேதியும் குறித்துவிட்டு 4 நாட்கள் ஷூட்டிங் நடக்காது.. நடத்தக் கூடாது என்று பெப்சிக்கு கடிதமும் எழுதிய பின்புதான் கலை நிகழ்ச்சி வேலையைத் துவக்கியிருக்கிறார்கள். இடையில் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் வேறு வந்து தொலைந்ததால், தயாரிப்பாளர்களாலும் இதில் அதிகம் ஈடுபாடு காட்ட முடியவில்லை..! 

முதலில் நடிகர் சங்கம் தங்களை அழைக்காமல்.. கலந்தாலோசிக்காமல் விழா ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்று குற்றம்சாட்டியது. பின்பு அவர்களை அழைத்து பேசிய பின்புதான் அந்த சர்ச்சை அடங்கியது.. நிகழ்ச்சிக்கு சில நாட்களுக்கு முன்பு ஆத்தா இவர்களை அழைத்து 10 கோடி ரூபாய் கொடுத்ததுதான்  இதில் உச்சக்கட்டமான திருப்பம்..! இதனை எதிர்பார்க்காத சேம்பரும் அத்தோடு இனிமேல் நிகழ்ச்சியை தங்களுடன் இணைந்து நடத்தவது தமிழக அரசும் சேர்த்துதான் என்பதை வெளிப்படையாகச் சொல்லாமல் அனைத்து வேலைகளையும் செய்தார்கள்..!

கலையுலகத்தினரின் முதல் குற்றச்சாட்டே தாங்கள் முறைப்படி அழைக்கப்படவில்லை என்பதுதான்..! நியாயம்தான்.. சென்ற ஆட்சிக் காலத்தில் ஒரு முறை ஜெயலலிதா நேரு ஸ்டேடியத்தில் கலந்து கொண்ட திரையுலகக் கூட்டத்தில் அவர் பேசிய பேச்சுக்கு கைதட்டலே கிடைக்காமல் போனதை அப்படியே நினைவில் வைத்திருந்தாற்போலும்.. அதனால் இந்த முறை, "ஆத்தா கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் முழுவதிலும், கேலரி டிக்கெட்டுகளில் முக்கால்வாசி நாங்கள் சொல்கின்ற ஆட்களுக்குத்தான் தரப்பட வேண்டும்" என்று கோட்டையில் இருந்து வந்த உத்தரவையே சேம்பர் நிறைவேற்றியிருக்கிறது..!

தரைத்தளத்தில் அமரவும் டிக்கெட்டுகளை கோட்டை பிரதிநிதிகள் மொத்தமாக வாங்கிச் சென்றுவிட்டதால் அதுவும் கிடைக்காமல் போய்விட்டது.. அதிகாரிகளும், கட்சிக்காரர்களும் சுரண்டியெடுத்துவிட்டு மிச்சம், மீதத்தை மட்டுமே சேம்பருக்கு விட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.. இதனாலேயே திரைத்துறையைச் சார்ந்தவர்களுக்கே முதல் நாள் மற்றும் இறுதி நாள் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பிதழ் கிடைக்கவில்லை. 

எப்போதும் சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகள் நடந்தால் பெப்சியுடன் இணைந்த சங்கங்களுக்கு அதிகப்பட்சம் 50 அழைப்பிதழ்களாவது அனுப்பி வைப்பார்கள். ஆனால் இந்த விழாவுக்கு பெப்சியுடன் இணைந்த சினிமா சங்கங்களின் நிர்வாகிகளுக்கே அழைப்பிதழ் கிடைக்கவில்லை.. அந்த அளவுக்கு ஆட்சியாளர்களின் அராஜகம் மேலோங்கிவிட்டது..! ஆனால் இரண்டாவது நாள் நடந்த கன்னடம், தெலுங்கு, மூன்றாம் நாள் நடந்த மலையாளம் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பிதழ்கள் தாராளமாக சேம்பரில் கிடைத்தன.. ஆனால் வாங்கிச் செல்லத்தான் ஆட்கள் இல்லை... 

ஆனால் இந்த லட்சணத்தில் தாத்தாவின் அறிக்கைக்கு இப்போது பதிலளித்திருக்கும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.. நிகழ்ச்சியை நடத்தியது சேம்பர்தான் என்றும், அரசுக்கு இதில் சம்பந்தமில்லை என்று முழுப் பூசணிக்காயை சேற்றில் மறைத்திருக்கிறார்.. முன் வரிசையில் யார் யார் உட்கார்ந்திருந்தார்கள்.. தரைத்தளத்திலும், கேலரியிலும் யார் யார் வந்திருந்தார்கள் என்று லிஸ்ட் எடுத்தாலே போதும்.. இந்த விழாவை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் யார் என்பது புரியும்..  தாத்தா ஆட்சி மட்டும் என்னவாம்..? அப்போது அவரது குடும்பம் முன்னிலை வகிக்கும்.. இப்போது ஆத்தாவின் அடிப்பொடிகள் உள்ளே நுழைந்திருக்கிறார்கள் அவ்வளவுதான் வித்தியாசம்..! 

ஒரு சிலர் ரஜினி, கமலை மட்டுமே மையப்படுத்தி இதனை பெரிதுபடுத்துகிறார்கள். அவர்கள் அவமரியாதை செய்யப்பட்டார்கள்.. தாத்தா ஆட்சியென்றால் அவர்கள்தான் தாத்தாவின் இரு புறமும் அமர்ந்திருப்பார்கள் என்கிறார்கள்..! அப்போதும் தாத்தாவை பெருமைப்படுத்தவே அவர்கள் வந்திருப்பதாகவும், வருவதாகவுமே இவர்கள் பேசுகின்ற தொனி சொல்கிறது.. இதிலிருந்தே தெரியவில்லையா..? கலைஞர்களை இந்த அரசியல்வியாதிகள் எந்த அளவுக்கு மரியாதையுடன் அணுகுகிறார்கள் என்று..?!

10 கோடி ரூபாயை வாங்கிவிட்ட காரணத்தினால் அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் சேம்பர் வளைந்து கொடுக்க ஆரம்பிக்க.. இப்போது அவர்களே அனைத்துத் தரப்பில் இருந்தும் பேச்சுக்களை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கின்றனர்..! முதல் நாள் நடந்த ஒரு கூத்தை பாருங்கள்..!

ஸ்டேடியத்தின் இரண்டாவது கேட்டில் இருந்து தனியாக ஒரு பாதை அமைத்து வெயில் படாத அளவுக்கு.. அதில் ரெட் கார்பெட் விரித்து நடிகர், நடிகைகளை வரவேற்பதாக ஒரு ஐடியா. ஒளிபரப்பு பெர்மிஷன் வாங்கியிருந்த ஜெயா டிவியின் கேமிராவும் அந்தப் பகுதியை கவர் செய்து கொண்டிருந்தது..! ஹன்ஸிகா, காஜல் அகர்வால் போன்ற ஹீரோயின்கள் இந்தப் பகுதி வழியாக உள்ளே வந்த பின்பு திடீரென்று இரண்டாவது கேட் வாசலுக்கு வந்த ஒரு அஸிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனர்.. "இங்க எந்த காரையும் நிறுத்தி யாரையும் இறக்காதீங்க.. மெயின் கேட்டுக்கே போயிருங்க.." என்று துரத்திவிட்டார்.. சினிமா பி.ஆர்.ஓ.க்கள் என்ன சொல்லியும் கேட்கவில்லை. ரெட் கார்பெட், ஜெயா டிவி என்று சொல்லியும் பலனலில்லை. 

1-ம் நம்பர் கேட்டில் "எந்த காரையும் உள்ளே விட மாட்டேன்..." என்று அதே ஏ.சி. அடம் பிடிக்க பல நடிகர், நடிகைகள் அங்கேயே இறங்கி கொளுத்தும் வெயிலில் உள்ளே நடந்தே போனார்கள்..! கை நிறைய நடிகர், நடிகைகளின் அடையாள அட்டையை வைத்துக் கொண்டு அவர்களிடம் கொடுக்க காத்திருந்த சினிமா பி.ஆர்.ஓ.க்களுக்கு அந்த வெயிலில் காத்திருந்து மண்டையடியாகிவிட்டது.. பாவம் திரிஷா பொண்ணு.. அந்த வேகாத வெயில்ல இறங்கி நடந்து போனதை பார்த்து எனக்கு மனசே செத்துப் போச்சு..!!! லட்சுமி மேனன், இசையமைப்பாளர் இமான், ஜெயம்ரவி உட்பட பலரும் அப்படியே..! கலைஞர்கள் முதல் கேட்டிலேயே இறங்கிச் செல்கிறார்கள் என்பதையே அறியாத இரண்டாவது கேட்டை கவர் செய்த ஜெயா டிவி கேமிராமேன்கள், கடைசிவரையிலும் யாருமே இல்லாத டீக்கடைல யாருக்குடா டீ ஆத்துறீங்க என்பதை போல காத்திருந்து காத்திருந்து ஏமாந்து போனதுதான் மிச்சம்..!

இதையெல்லாம் சமர்த்தாக செய்த போலீஸார், போலீஸ் உயரதிகாரிகள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் கார்களை மட்டும் உள்ளே செல்ல அனுமதித்தார்கள்.. கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும், ஆடவும் வந்த கலைஞர்களுக்கு உள்ளே கார்களில் செல்ல தடையாம்.. பார்க்க வந்த போலீஸ் அதிகாரிகளின் மனைவிகளுக்கு சல்யூட் வசதியுடன் வாசலில் சென்று இறங்க அனுமதியாம்..! என்ன கொடுமை இது..? இதற்குப் பின் அடுத்த 3 நாட்களும் அந்த பி.ஆர்.ஓ.க்கள் அந்த ஸ்டேடியம் பக்கம் திரும்பி கூட பார்க்கவில்லை..!

பல நடிகர், நடிகைகளும் பாஸ் கேட்டு போன் மேல் போன் செய்ய.. அவர்களுக்காகக் கடைசிவரையிலும் பி.ஆர்.ஓ.க்கள் சேம்பரில் முட்டி மோதியும் கிடைக்கவில்லை. அந்த வெறுப்பில் அவர்களும் தாங்கள் சார்ந்த நடிகர், நடிகையருக்காக மட்டுமே ஸ்டேடியத்திற்குள் கால் வைத்தவர்கள்.. அந்த ஸ்டார்கள் வெளியேறியவுடன்.. அவர்களும் வெளியேறிவிட்டார்கள்..!

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு இந்த கதி என்றால்.. பத்திரிகையாளர்களுக்கு..? சில குறிப்பிட்ட தினசரிகள் மற்றும் வார இதழ்களுக்கு மட்டுமே அனுமதி தந்தார்கள்.. மற்றவர்களுக்கு இல்லை என்று முகத்துக்கு நேராகவே சொல்லிவிட்டார்கள்..! பி.ஆர்.ஓ.க்களிடம் தந்துவிட்டதாக சேம்பரில் தோசையைத் திருப்பிப் போட உண்மையறியாமல் பி.ஆர்.ஓ.க்களை பிய்த்தெடுத்த பத்திரிகையாளர்களும் உண்டு.. பாவம்.. கடைசியில் பத்திரிகைகளின் போட்டியினால் நிகழ்ச்சி பற்றிய செய்தி நமது இதழில் வெளியாக வேண்டுமே என்பதற்காக பல பத்திரிகையாளர்கள் தங்களது கவுரவத்தை எண்ணிப் பார்க்காமல் வந்திருந்து நிகழ்ச்சியை கவர் செய்து எழுதினார்கள்..!

புரோட்டோகால்படி மாநில அமைச்சர்கள், முதல்வர், கவர்னர், பிரதமர், துணை ஜனாதிபதி, ஜனாதிபதி, மத்தியஅமைச்சர்கள் ஆகியோரின் பேச்சுக்களை எந்தத் தொலைக்காட்சியும், பத்திரிகையும் கட்டுப்பாடில்லாமல் வெளியிடலாம் என்பது ஒரு அரசு விதி.. ஜெயா டிவி ஒளிபரப்பு உரிமையை வாங்கி வைத்திருப்பதால் முதல்வரின் பேச்சை ஒளிபரப்ப மற்ற சேனல்களுக்கு அனுமதியில்லை என்று முதலில் சொன்னார்கள். பின்பு கோட்டையில் இருந்து இந்த விதிமுறை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்தப்பட.. சில சேனல்கள் மட்டும் முதல் நாள் வைபவத்தை கடைசி நிமிடத்தில் வந்து ஷூட் செய்தன. அதேபோல கடைசி நாளில் ஜனாதிபதி நிகழ்ச்சியையும் பல சேனல்கள் கவர் செய்து, ஜனாதிபதி அரங்கத்திலிருந்து விடைபெறும்வரையிலும் இருந்து ஷூட் செய்திருந்தன.. ஆனாலும் மற்ற சேனல்கள் ஜெயா டிவியுடன் செய்து கொண்ட எழுதப்படாத ஒரு பரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, தலைவர்களின் மேடை பேச்சுக்களை மட்டுமே ஒளிபரப்பினார்கள்..! 

முதல் நாள் பாஸ் இல்லை என்று சொன்னாலும் ஆத்தா பேசி முடித்தவுடன் பாதி கேலரி காலியாகத்தான் கிடந்தது..! பாஸுடன் வந்திருந்த கட்சிக்காரர்களில் முக்கால்வாசி பேர் அப்போதே எஸ்கேப்பாகிவிட்டார்கள்.. வெளியில் அக்கம்பக்கத்தில் குடியிருப்பவர்கள் தங்களை உள்ளே விடும்படி வாசலில் நின்று கெஞ்சிக் கொண்டிருந்தார்கள்..! அவர்களையெல்லாம் உள்ளே அனுப்பி வைத்து கேலரியை நிரப்பியது போலீஸ்..! இது முதல் நாளில் நடந்தது..! கடைசி நாளிலும் நடந்தது..!

ஆத்தா வரும்.. ஜனாதிபதி வருகிறார் என்பதாலும் செக்யூரிட்டி பிராப்ளம் இருக்கும் என்றெண்ணியே சில கலைஞர்கள் வராமல் தவிர்த்துவிட்டார்கள். அதிலும் நேரு ஸ்டேடியத்தின் கார் பார்க்கிங் பிரச்சினை முதல் நாளே தீயாய் பற்றிவிட்டதால் பரபரப்புடன் கலைஞர்கள் தங்களுக்குள் இதனை பரப்பிவிட.. மறுநாள் தங்களது கார் உள்ளே வர அனுமதிக்க வேண்டும் என்று முன்பேயே சொல்லி தங்களது கார் நம்பரை எழுதிக் கொடுத்து பலர் தப்பித்தார்கள்.. சிலர் விழா ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட கார்களில் வந்து சேர்ந்தார்கள்..!

டிரைவர் வைத்திருந்தவர்கள்கூட நிகழ்ச்சி முடிந்துபோகும்போது கார்களை வரச் சொல்லிவிட்டு கால் மணி நேரம் காத்திருந்து போக வேண்டியிருந்தது.. ஆனால் ஷெல்ப் டிரைவிங் செய்து வந்தவர்களின் நிலைமை அந்தோ கதி..! கார் ஷெட்டில் இருந்து அனுமதிக்கப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார்களில் அவர்களை அரங்கத்திற்கு அழைத்து வந்தார்கள்.. இப்படி ரொம்பவே கஷ்டப்படுத்திவிட்டார்கள் போலீஸார்..! இந்த லட்சணத்தில் போனால் என்ன..? போகாட்டி என்ன என்ற மனநிலையில்தான் கலைஞர்கள் பலரும் வராமல் ஒதுங்கிக் கொண்டார்கள்..!

நிகழ்ச்சி நிரலில்கூட சேனல் ரைட்ஸை வாங்கியிருந்த  ஜெயா டிவியின் மார்க்கெட்டிங் டிபார்ட்மெண்ட் என்ன கேட்டதோ அதையே செய்து கொடுத்திருக்கிறார்கள் போலும்.. தமிழ்ச் சினிமாவின் நூறாண்டு கொண்டாட்டம் எனில் அத்தனையிலும் ஆத்தாவை மட்டுமே முன்னிலைப்படுத்திவிட்டு மற்றவர்களை டம்மியாக்கிவிட்டதும் வேதனையானது..! நிகழ்ச்சிகளிலும் வித்தியாசங்கள் இல்லை.. சொல்லப்பட வேண்டியவைகள் நிறைய இருந்தும் சேனல் ரைட்ஸுக்காக அத்தனையையும்விட்டுவிட்டது சேம்பர்..!

உண்மையாகச் சொல்லப் போனால் இந்தியாவுக்கே கலைத்துறையின் முதல் முன்னோடி தமிழ்நாட்டுக்காரர்தான். கோவைக்காரர்.. வின்சென்ட் சாமிக்கண்ணு.. இவர் ஊர், ஊராகச் சென்று காட்டிய நடமாடும் தியேட்டர் ஒன்றில் ஏசுவைப் பற்றிய படத்தைப் பார்த்துவிட்டு அதன் ஆர்வத்தில்தான் தாதா சாஹேப் பால்கே, 'ராஜா ஹரிச்சந்திரா'வை எடுத்தது சரித்திர நிகழ்வு. அப்படியிருக்க இந்தியாவில் கொண்டாடப்பட வேண்டிய முதல் கலைஞன் நமது தமிழன் வின்சென்ட் சாமிக்கண்ணுதான். ஆனால் சாமிக்கண்ணு பற்றிய தகவல்களை அறிய தமிழர்களாகிய நாமே ஆர்வப்படாததால் வடக்கத்திய லாபி பால்கேவை முன்னிறுத்தி அவரையே இந்திய சினிமாவின் தந்தையாக அறிவித்துவிட்டது.. இவர் பற்றிய கட்டுரையை இந்தத் தளத்தில் படித்துப் பார்க்கலாம்..! இப்போதாவது அறிந்து கொண்டோமே..? அவரைப் பற்றிய செய்திகளைத் தெரிவித்து ஒரு நிகழ்ச்சி செய்திருக்கலாமே என்றால்.. மேடை தொகுப்பாளர்கள் சில வரிகளில் உண்மையான இந்திய சினிமாவின் தந்தையான வின்சென்ட் சாமிக்கண்ணுவின் வாழ்க்கைக் கதையைச் சொல்லிவிட்டு அடுத்தக் கதைக்குத் தாவிவிட்டார்கள்..!

தமிழில் இதுவரையிலும் தேசிய விருது, மாநில அரசு விருது வாங்கியவர்களை அழைத்து கவுரவப்படுத்தியிருக்க வேண்டும்.. இன்னொரு பக்கம் தேசிய விருது, மாநில விருது வாங்கிய படங்களின் கிளிப்பிங்ஸ்களை காட்டியிருக்கலாம். அதில் நடித்த முக்கிய நடிகர், நடிகையரை பேட்டியெடுத்து காட்டியிருக்கலாம்..! சிறந்த படங்களை தொகுத்து வழங்கியிருக்கலாம்.. இங்கே நடந்ததோ  5 நிமிட ஸ்பீடு டிரெயிலர் ஷோ.. 5 நிமிடத்தில் 100 வருட தமிழ்ச் சினிமாவையும் அனாயசமாக தாண்டிச் சென்றுவிட்டார்கள்..!  சிறந்த இயக்குநர்களை பட்டியலிட்டு காட்டியிருக்கலாம்..! பாடல்களை மட்டும் தேர்வு செய்து அதற்கு மட்டும் நடிகைகளை ஆடவிட்டு பார்த்ததில் யாருக்கு என்ன லாபம்..? 

கடைசி நாளில் விருது பெற்றவர்களை ஆத்தா வெளியேறிய பின்பாவது மேடையேற்றி பேச வைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அமிதாப்பச்சன், அபர்ணா சென், ரந்தீர்கபூர், ஜாவேத் அக்தர், பர்வதம்மா ராஜ்குமார், ஸ்ரீதேவி, ரேகா இவர்களெல்லாம் மேடையில் பேசியிருந்தால் எப்படியிருந்திருக்கும்..? யோசித்துப் பாருங்கள்.. ஜெயா டிவியின் நிகழ்ச்சிக்கும் ரேட்டிங் கிடைக்க உதவியிருக்குமே.. எல்லாத்தையும் ஏன் விட்டுத் தொலைத்தார்கள் என்று தெரியவில்லை..!!!

யார் யாருக்கு விருது கொடுத்து கவுரவிக்க போகிறார்கள் என்கிற லிஸ்ட்டை பார்த்தே பலருக்கும் கோபம்..! முக்தா சீனிவாசன் விருது பெற தேர்வு செய்யப்பட்டும் கடைசி நிமிடத்தில் அவருடைய பெயர் இல்லாதது கண்டு கோபமடைந்து வாக் அவுட் செய்துவிட்டதாக கூறுகிறார்கள்.. தமிழ்த் திரைப்பட சாதனையாளர்கள் பட்டியலை யார் தயாரித்தது என்றே தெரியவில்லை.. தற்போது உயிருடன் உள்ள பல பெரிய கலைஞர்களுக்கும் எண்ணிக்கை கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை என்று கொடுத்திருக்கலாம்.. ஆத்தாவை அதிக நேரம் நிற்க வைக்கக் கூடாது என்பதற்காக எண்ணிக்கை குறைக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள்..! என்ன கொடுமை இது..?

எடிட்டர் லெனின், 6 முறை தமிழுக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்த கவிப்பேரரசு வைரமுத்து,  வி.எஸ்.ராகவன், கே.ஆர்.விஜயா, லட்சுமி, ஸ்ரீபிரியா, ராதிகா, விஜயகுமார், ஏவி.எம்.ராஜன், பாரதிராஜா, கே.பாக்யராஜ், விஜயகாந்த், முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்த விசு.. அகத்தியன்.. நாசர், பிரகாஷ்ராஜ், மூத்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், இந்தியாவை தமிழகத்தின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த மணிரத்னம். பாலுமகேந்திரா.. ஊமைவிழிகள் படம் மூலமாக ஒரு டிரெண்ட் செட்டராக விளங்கிய ஆபாவாணன், எண்ணற்ற புதிய இளம் இயக்குநர்கள்.. ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், பிலிம் நியூஸ் ஆனந்தன், பின்னணிப் பாடகிகள் பி.சுசீலா, ஜானகி, ஜேசுதாஸ், நகைச்சுவை அரசன் கவுண்டமணி, இளவரசர் செந்தில், நகைச்சுவைப் புயல் வடிவேலு.. சகலகலாவல்லவர் டி.ராஜேந்தர் மற்றும் பல கலைஞர்கள்.. மூத்த டான்ஸ் மாஸ்டர்கள், மூத்த சண்டை கலைஞர்கள் என்று இன்னமும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.. இவர்களையெல்லாம் கட்சி பேதமில்லாமல் மேடையேற்றி விருது கொடுத்திருந்தால் அதுதான் உண்மையான கலைஞர்களின் விழாவாக இருந்திருக்கும். ஆனால் இது அ.தி.மு.க. கட்சியின் பொதுக்குழு கூட்டம் போல.. அவர்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு.. அவர்களுக்கு காக்கா பிடித்த கூட்டத்திற்கு மட்டுமே விருது கொடுத்த உணர்வைத் தந்ததுதான் வேதனையான விஷயம்..!

இதைப் பற்றியெல்லாம் யாராவது.. எந்த ஹீரோவாவது, எந்தப் படைப்பாளியாவது இனிமேலாவது குரல் எழுப்புவார்களா என்றெல்லாம் நினைத்தால் நாம்தான் முட்டாள்கள்.. அந்த அளவுக்கு தைரியசாலியான ஹீரோக்களும், பிரபலங்களும் இங்கே யார் இருக்கா..?

இப்போது ஒரு உதாரணத்தை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.. 2010-ம் ஆண்டு கேரள அரசு நமது கலைஞானி கமல்ஹாசனை ஒணம் பண்டிகை விழாவை துவக்கி வைக்க வரும்படியும், அதே விழாவில் கமல்ஹாசனின் 50 வருட சினிமா சேவையை பாராட்டி விருது தருவதாகவும் அறிவித்தது..!  கேரளாவின் அப்போதைய முதல்வர் அச்சுதானந்தன். 

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த கேரள நடிகர், நடிகையரின் சங்கமான 'அம்மா'வின் தலைவர் நடிகர் இன்னசென்ட்.. "கேரள அரசின் இந்த முடிவு முட்டாள்தனமானது.. கமல்ஹாசனைவிடவும் நடிப்புத் திறமை வாய்ந்த நடிகர்கள் கேரளாவிலேயே இருக்கிறார்கள்.. அவர்களைத்தானே அழைத்திருக்க வேண்டும்.. விருது கொடுத்திருக்க வேண்டும்.. அதைவிட்டுட்டு கமல்ஹாசனுக்கு கொடுத்திருப்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.. ஆகவே அந்த விழாவில் கேரள நடிகர், நடிகைகள் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள்..." என்று அறிக்கையேவிட்டார்.. 

திருவனந்தபுரம், சந்திரசேகரன் நாயர் ஸ்டேடியத்தில் 2010 ஆகஸ்ட் 22 ஞாயிற்றுக்கிழமையன்று அந்த விழா இனிதே நடைபெற்றது.. கமல்ஹாசன் விருதினைப் பெற்றுக் கொண்டார். ஆனால் கேரள நடிகர்களில் ஒருவர்கூட அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை..! அதுவும் ஒரு மாநிலம்.. அங்கேயும் சக நடிகர்கள்தான்.. திரையில் நடிப்பவர்கள்தான்.. அரசையே எதிர்த்து அறிக்கையே விட்டார்கள்.. புறக்கணித்தார்கள்..! ஆனால் இங்கே..!?

ஆளும் அதிகாரத்தை எதிர்த்து ஒரு வார்த்தை பேசிவிட்டால் தமிழ்ச் சினிமாவில் அவர்களின் நிலைமை கவிழ்ந்துவிடும் அபாயமும் இருக்கிறது.. லேட்டஸ்ட் 'தலைவா' பட விவகாரம் இதனை அனைவருக்குமே உணர்த்திவிட்டது..! இனி யார் தைரியமாக வாயைத் திறப்பார்கள்..? சினிமாவில் இருந்து அரசியலுக்குச் சென்ற எம்.ஜி.ஆர்.. யாரையும் அழித்ததில்லை.. இன்னும் சொல்லப் போனால் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தோற்றத்திற்கு ஒருவகையில் அவரே காரணமாகவும் இருந்திருக்கிறார்..! 

பின்னால் வந்த கருணாநிதியும், ஜெயலிதாவும் சினிமா புகழை வைத்து.. சினிமாக்காரர்களை வைத்து தங்களது புகழை உயர்த்துவதற்கு எதை வேண்டுமானாலும் செய்வதற்கு தயங்கவில்லை... அதே நேரம்.. சமயம் கிடைக்கும்போதெல்லாம் தங்களது ஆட்சி அதிகாரத்தை அவர்களிடத்தில் நிலை நிறுத்திக் காட்டவும் தயங்கியதில்லை.. தாத்தா ஆட்சியில் 'முதல்வன்' பட சிடி தெருத் தெருவாக விற்கப்பட்டதும்.. "பீச்ல சமாதி கட்டுறதை நிறுத்துங்கப்பா..." என்று ஒரு  பொதுக்கூட்டத்தில் பேசிய பின்பு சேரன் மீதும், அமீர் மீதும் எழுந்த பாலியல் புகார்களை பெரிதுபடுத்தி அவர்களை அலைக்கழித்ததும் இதே கேவலமான அரசியல்தான்.. தாத்தாவை பின் தொடர்ந்து ஆத்தாவும் கமல்ஹாசனின் 'சண்டியரின்' பெயர் மாற்றப் போராட்டம் உச்சக்கட்டத்தைத் தொடும்வரையிலும் வேடிக்கை பார்த்துவிட்டு கடைசியாக கமல்ஹாசனை கோட்டைக்கு வரவழைத்து தாசில்தாரிடம் மனு வாங்கவதைப் போல வாங்கி பேசியனுப்பி பெருமைப்பட்டுக் கொண்டது.. 'பாபா' படப்பெட்டியை தூக்கிக் கொண்டு போகுமளவுக்கு பிரச்சனைகள் வந்தபோது "அது சென்சிட்டிவ் ஏரியா.. அதுனாலதான் அதிகமா கை வைக்க முடியலை.. ஸாரி..." என்று சப்பைக்கட்டு கட்டி காவல்துறை பதுங்கியதும் இதே கணக்குதான்..! 

கேரளாவிலும், தெலுங்கிலும், கன்னடத்திலும் அன்றாட அரசியல் நிகழ்ச்சிகளையே டிவிக்களில் கிண்டல் செய்யும் நிகழ்ச்சிகள் இருக்கின்றன.. சினிமாக்களிலும் உரித்தெடுக்கிறார்கள்.. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் சினிமாக்களிலும், டிவி சீரியல்களிலும் கேரக்டர்களின் பெயர்களில்கூட அரசியல்வியாதிகள் பெயர்கள் இல்லாமல் பார்த்துக் கொண்டு ஒருவித பய உணர்வுடனேயே கலைச்சேவையை செய்து வருகிறார்கள் கலைஞர்கள்..! இந்தியா முழுவதும் இந்திய அரசியல் சட்டம் ஒன்று போலத்தான் என்கிறார்கள்.. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் அது இல்லாமல் இருக்கிறது..! இதற்கெல்லாம் வேறு யாராவது 'முதல்வன்' பிறந்து வந்து நியாயம் கேட்டால்தான் உண்டு..!

இங்கே இன்னொரு பிரச்சினையையும் சொல்லியாக வேண்டும்.. "தெலுங்கானா பிரச்சினை உச்சக்கட்டத்தில் இருக்கும்போது இப்படியொரு விழாவுக்கு தெலுங்கு சினிமாக்காரர்கள் போவது சரியில்லை.. தெலுங்கு திரையுலகம் இந்த நூற்றாண்டு விழாவை புறக்கணிக்க வேண்டும்..." என்று தெலுங்கு இயக்குநர் ஒருவர் அறிக்கைவிட்டிருந்தார். ஆனால் இதனை சேம்பர் தலைவர் சி.கல்யாண் தனது செல்வாக்கை பயன்படுத்தி ஒன்றுமில்லாமல் செய்து எப்படியோ தெலுங்குக்காரர்களை அழைத்து வந்துவிட்டார்.  இந்த விஷயத்தை சத்யம் தியேட்டரில் நடந்த 'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் குறிப்பிட்டு பேசிய பாரதிராஜா, "இதேபோல ஈழத் தமிழர் பிரச்சினைக்காக தமிழர்களாகிய நாமும் இந்த விழாவை புறக்கணிக்க வேண்டும் என்று சொல்ல இங்கே ஒருத்தர்கூட இல்லையே.." என்று ஆதங்கப்பட்டுக் கொண்டார். படைப்பாளிகள் சங்கம் உருவான காலத்தில் இருந்தே பாரதிராஜாவும் தமிழ் ஆர்வம் கொண்ட சினிமா பிரபலங்களும் சொல்லி வருவது, "தமிழ்த் திரைப்பட வர்த்தக சபை அமைக்கப்பட வேண்டும்..." என்றுதான்.. 

ஏனெனில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் இருந்து காலப்போக்கில் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்றவைகள் பிரிந்து தங்களது மாநிலத்துக்கென தனித்தனியாக வர்த்தக சபைகளை அமைத்துக் கொண்டார்கள். தமிழில் மட்டுமே இதுவரையிலும் பிரியும் சூழல் ஏற்படவில்லை. இதனையே இயக்குநர் ஆர்.கே.செல்வமணியும் மேடைதோறும் பேசி வருகிறார்.!  சமீபத்தில் 'ஞானக்கிறுக்கன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில்கூட பாரதிராஜாவும், ஆர்.கே.செல்வமணியும் இதையேதான் பேசியிருக்கிறார்கள். கூடவே "ஹீரோக்களுக்கு தட்டிக் கேட்க தைரியம் இல்லை.. கோழைகளாக இருக்கிறார்கள்..." என்று தாக்கியேவிட்டார் பாரதிராஜா. ஆனால் இவரும் இப்போதுவரையிலும் சேம்பரை எதிர்த்தோ, ஜெயலலிதாவை எதிர்த்தோ அறிக்கை எதையும்விடவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவும். 

தற்போது சென்னை அண்ணா சாலையில் ஜெமினி மேம்பாலம் அருகில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டிடமும், தற்போது மேலும் நூறு கோடிக்கும் மேலான தொகையில் புதிதாகக் 3 பிரிவியூ தியேட்டர்களுடன் கட்டப்பட்டு வரும் இன்னொரு கட்டிடமும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு சொந்தமானது..! இதில் வாடகையாகவே மாதந்தோறும் 50 லட்சம் ரூபாய் வருகிறதாம்..! இந்த வர்த்தகத்தை இழந்து தனியாக பிரித்தெடுக்க நான்கு மாநில நிர்வாகிகளுக்கும் மனசில்லை.. இதோடு இது அகில இந்திய திரைப்பட வர்த்தக சபையோடு இணைந்தது என்பதால் அவர்களாலும் சுலபத்தில் கைவிட முடியாத நிலை.. யாரேனும் அரசியல் செல்வாக்கானவர்கள் முனைந்து நின்று சொத்துக்களைப் பிரித்தெடுத்து சுமூகமாகப் பேசித் தீர்த்தால் ஒழிய.. தமிழ்த் திரைப்பட வர்த்தக சபை உருவாகும் வாய்ப்பில்லை. அந்த அளவுக்கு செல்வாக்கானவர் இப்போதைக்கு இங்கே யார் இருக்காங்க..? 

அரசு கொடுத்த 10 கோடி.. ஜெயா டிவி கொடுத்த 5 கோடி.. பி.வி.பி. கம்பெனி தெலுங்கு, கன்னடம், மலையாளத்திற்காக கொடுத்த 12 கோடி.. ஆக மொத்தம் 27 கோடியை முதலிலேயே வசூல் செய்திருக்கும் சேம்பர்.. தற்போது தென்னக சினிமாவில் மிகப் பெரிய சொத்துக்கார சினிமா அமைப்பாக உருவெடுத்திருக்கிறது..!  இது ஒன்றுதான் இந்த விழாவினால் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்குக் கிடைத்திருக்கும் பலன்..!

(முற்றும்)