30-03-2010
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
வீட்டில் முதன்முதலாக நடக்கப் போகின்ற திருமணம்.. ஆசைஆசையாக முதன்முதலில் கட்டிய வீட்டின் கிரஹப்பிரவேசம்.. குழந்தையின் முதல் பிறந்த நாள் விழா.. இப்படி நமக்கு சந்தோஷத்தை அள்ளிக் கொடுக்கிற நாளில் அது அமங்கலமாகி முடிந்தால் உங்களுக்கு எப்படி இருக்குமோ அப்படித்தான் எனக்கும் அன்றைய நாளில் இருந்தது..!
நானும், தண்டோராவும், கேபிள் சங்கரும், சூர்யாவும் சந்திக்கின்றபோதெல்லாம் ஏதாவது ஒரு அமைப்போ, சங்கமோ வலைப்பதிவர்களுக்காக அமைத்தால் நன்றாக இருக்குமே.. எப்போது செய்யலாம்.. எப்படி செய்யலாம்.. என்று பகிர்ந்து கொண்டிருக்கிறோம். அது சாத்தியமாகாமல் மனதிற்குள்ளேயே கிடந்தமைக்கு முக்கியக் காரணம் அவரவர்க்கு இருந்த சொந்த வேலைகள்.
எந்தவொரு முயற்சியின் வெற்றியின் பின்னாலும் ஒரு வெறியான பொறி இருந்திருக்க வேண்டும். இருக்க வேண்டும். அது யாருக்கு எப்படி கிடைத்தது என்பது பற்றியெல்லாம் தெரியாது. ஆனால் எனக்கு வந்தது கடந்த 20-ம் தேதியன்று சென்னையில் நடந்த இண்டிபிளாக்கர் கூட்டத்தில்.
அந்தக் கூட்டத்தில் நான் கலந்து கொண்டபோது அங்கு வந்திருந்த பதிவர்களின் கூட்டத்தையும், அவர்கள் நிகழ்ச்சியை நடத்திய பாங்கையும், எதிர்காலத்தை மனதில் வைத்து அவர்கள் ஆரம்பித்திருக்கும் அமைப்பையும் யோசித்தபோது(இத்தனைக்கும் அவர்கள் இந்தியா முழுமைக்குமான ஆங்கிலப் பதிவர்கள்) பிரமிப்பாக இருந்தது.
இத்தனை தூரம்.. தமிழ்.. தமிழ் என்றெல்லாம் மாநிலம் முழுவதும், பதிவுகள் முழுவதும் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கின்ற நம்மால் ஏன் இது போல் செய்ய முடியாது.. அவர்களும் நட்பை வளர்ப்பதையும், தொடர்வதையும், எழுத்து ஆர்வத்தை தூண்டுவதையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இந்த அமைப்பினை நடத்துவதாகச் சொன்னார்கள். நல்ல விஷயம்தானே.
அமைப்பு என்கிறபோது யார் நடத்துகிறார்கள் என்கிற கேள்விக்கு ஒரு விடை கிடைத்துவிடுகிறது. தனி நபர்கள் இது போன்று மிகப் பெரும் அளவுக்கு நடத்திவிட முடியாது. அதற்காக சில தனி நபர்களின் பணத்திலேயே நிகழ்ச்சியை நடத்திவிட்டு அதனை பின்னாளில் விமர்சனம் செய்கின்றபோது இரு தரப்பாருக்குமே மனஸ்தாபங்கள் ஏற்பட வாய்ப்புண்டே.
அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீடு திரும்பியவுடனேயே அண்ணன் தண்டோராவுக்கு போன் செய்து அமைப்பு பற்றிய பேச்சைத் துவக்கினேன். இடைமறித்த அவர், "அண்ணே.. நானும் அந்த மூட்லதான் இருக்கேன். இப்பத்தான் கேபிள்கிட்ட பேசினேன்.. அடுத்த வாரம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னோடியா ஒரு நிகழ்ச்சியை அறிவிச்சிரலாம்.. நீங்களும் போஸ்ட் போடுங்க.." என்றார்.
மட்டற்ற மகிழ்ச்சி. நானே அது பற்றிப் பேசலாம் என்று போனை போட.. அவரும் அதையே சொல்கிறார் என்றால் ஏதோ ஒன்று இருவருக்குள்ளும் பொறியாக இருந்திருக்கிறது என்பதை நினைத்து சந்தோஷப்பட்டேன்.
கவனிக்க.. சங்கம் அமைக்க ஆலோசனைகளையும், கருத்துரைகளையும் கேட்கத்தான் இந்தக் கூட்டத்தை கூட்டுகிறோம் என்று பதிவில் எழுதியிருந்தார் தண்டோரா அண்ணன். கேபிளும் அதையேதான் முன் மொழிந்திருந்தார். நானும் எனது பதிவில் இன்னும் கொஞ்சம் விரிவாக கேள்விகளையும் கேட்டு இதற்கெல்லாம் பதில் கிடைக்க வேண்டும். வாருங்கள் என்று அழைத்திருந்தேன். சங்கம் அமைக்கலாமா வேண்டாமா என்பது பற்றிய ஆலோசனைக்கு அல்ல.. சங்கத்தை அமைப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஆலோசனைக்காகத்தான்..
அடுத்தது அந்த டிராப்ட் பேப்பர். தண்டோரா அண்ணனிடம் "நான் ஒரு டிராப்ட்டை வடிவமைப்பு அனுப்புகிறேன். பாருங்கள்.. பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.. ஏதேனும் திருத்தம் இருந்தால் திருத்திக் கொள்ளலாம்.." என்றேன். கேபிளிடமும் இதையே சொன்னேன். சரி என்றார்கள். ஆனால் என் நேரம் பாருங்கள்.. என் அப்பன் முருகன் இடையில் புகுந்து விளையாடிவிட்டான்.
நான் அனுப்பிய பாண்ட் தண்டோரா அண்ணன் சிஸ்டத்தில் ஓப்பன் ஆகவே இல்லை.. கேபிளுக்கும் இதே கதிதான்.. சரி.. சூர்யாவிடமாவது கருத்துக் கேட்கலாம் என்று சொல்லி அவருக்கும் அனுப்பி வைத்தேன். அவரும் இதையேதான் சொன்னார்.. நேரமும் கடைசி நாள் என்பதாகிவிட்டதால் "நீங்க பிரிண்ட் அவுட் எடுத்திட்டே வந்திருங்க.. பார்த்துக்கலாம்.." என்று தண்டோரா அண்ணனும், கேபிளும் சொல்ல.. எடுத்து வந்தேன்.
அதில் இருந்த வாசகங்கள்.. கருத்துக்கள்.. கேள்விகள்.. அனைத்தும் நானே என் சொந்த புத்தியில் எழுதியவைதான்.. பிரிண்ட் அவுட்டாகத்தான் தண்டோராவும், கேபிளும் மற்றவர்களும் பார்த்தார்கள்.
நான் முதலில் மைக்கை பிடித்தவுடனேயே தெளிவாகச் சொன்னேன். "சங்கம் ஆரம்பித்தால் என்னென்ன செய்ய வேண்டும்..? எப்படியெல்லாம் செயல்பட வேண்டும்..? யார், யாரெல்லாம் இருக்க வேண்டும்..? அதற்கான அரசு வழிமுறைகள் என்னென்ன..? அதை நாம் எப்படி பின்பற்றுவது.. இதைத்தான் இந்தக் கேள்விகளில் கேட்கப்பட்டிருக்கிறது. பதிவர்கள் தயவு செய்து இந்தக் கேள்விகளுக்கு தங்களது ஆலோசனைகளையும், கருத்துக்களையும் தெரிவிக்குமாறுதான்" நான் கேட்டுக் கொண்டேன்.
"நமக்காக ஒரு அமைப்பை ஆரம்பிக்கலாமா? வேண்டாமா?" என்று நான் கேட்பதாக இருந்தால், எதற்கு இப்படி ஒரு வில்லங்கத்தை தட்டச்சு செய்து கொண்டு வர வேண்டும்..? ஒரு அமைப்பு நமக்கு வேண்டும் என்று நினைத்துதான் நான் அதனை கொண்டு வந்து கொடுத்தேன். இதில் என்ன தவறு இருக்கிறது..? அமைப்பு ஆரம்பிக்கலாமா வேண்டாமா என்பதுதான் அன்றைய அஜெண்டா என்றால் கடைசி நேரத்தில் அண்ணன் ஞானி கேட்டதுபோல் கையைத் தூக்கும்படி நான் முதலிலேயே கேட்டிருப்பனே..?
மேதகு சிவராமன் எங்களது பதிவுகளைப் படித்ததாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் என்ன, எப்படி படித்தார் என்று எனக்குத் தெரியவில்லை.
அமைப்பைத் துவக்க ஆலோசனைக்காகத்தான் அழைத்திருந்தோம். அமைப்பாக உருவெடுக்க எங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதை ஒரு வரியில் சொல்லி முடித்திருக்கலாம். தேவையில்லாமல் நாங்கள் ஏதோ திட்டமிட்டே முன்பே சதி வேலை செய்து அமைப்பை உருவாக்கிவிட்டு பின்பு வெறும் கண்துடைப்புக்காக அவர்களை அழைத்ததாக கதையைத் திரித்துவிட்டார் மேதகு சிவராமன்.
வலையுலகத்திற்கு அமைப்பு எதற்காக இப்போது தேவை என்று இந்த மேதகுதான் கேட்டார். வெறும் இரண்டு பேர் மட்டுமே சேர்ந்து ஒரு அமைப்பை உருவாக்கி மாதந்தோறும் ஒரு திரைப்படத்தினை காட்டும்போது, கிட்டத்தட்ட உலகம் முழுவதும் 5000 வலைப்பதிவர்கள் இயங்கி வரும் இந்தத் தமிழ்ச் சூழலில் அவர்களை வைத்து ஒரு அமைப்பாக்கி என்னவெல்லாம் செய்யலாம் என்று ஏன் இந்த பின்னவீனத்துவ ஐயாவுக்குத் தோணவில்லை என்பது எனக்குப் புரியவே இல்லை.
எதற்குத் தேவை என்று கேட்டதற்குக்கூட நான் ஒரு இடத்தில் பதில் சொன்னேன்..
அமைப்பை உருவாக்கி அதன் மூலம் இணையத்தில் எழுதும் ஆர்வமுள்ளவர்களை நாம் வலையுலகத்திற்குள் இழுக்கலாம்.
அவர்களுக்கு வலையுலகத்தை அறிமுகப்படுத்தலாம்.
ஒரு அலுவலகம் அமைத்து அங்கே வலையுலகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்களுக்கு நாமே சொல்லிக் கொடுத்து அவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம்.
மாநகராட்சி பள்ளிகள், மற்றும் கல்லூரிகளுக்கு அமைப்பின் சார்பாக வலைப்பதிவர் பட்டறையை நடத்தலாம்.
வலையுலகத்திற்குள் பலரும் வருவதால் அவர்களுக்கு நிச்சயமாக பலன்கள் கிடைக்கும். நட்புகள் கிடைக்கும்.. இதனால் எனக்குக் கிடைத்ததுபோல் நல்லவைகளும் நிச்சயம் நடக்கும்..
என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னேன்.
இதையெல்லாம் தனி நபர்களாக இருந்து செய்கின்றபோது பல்வேறு விமர்சனங்களும் பணச்சிக்கல்களும் ஏற்படக்கூடிய சூழல் உண்டு. ஒரு அமைப்பின்கீழ் என்றால் உடனடியாக எங்கே வேண்டுமானாலும் அனுமதி கிடைக்கும்.. ஏன் ஸ்பான்ஸர்ஷிப்கூட உடனடியாக கிடைக்கும். அதனை வைத்து நாம் நடத்த வேண்டியவைகளை பெரிய அளவில் பேர் சொல்லக் கூடிய அளவுக்கு நடத்தலாமே.. தனி நபர்களாக இருக்கின்றபோது இது எந்த அளவுக்குச் சாத்தியம் என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்..
ஒரு அமைப்பின் கீழ் இருந்தால் நாளை எந்தவொரு அதிகார வர்க்கத்திடமும் நாம் தைரியமாகப் பேசலாம். குரல் கொடுக்கலாம். தனி நபர்களாக போய் பேசுவதற்கும், அமைப்பின் பெயரில் போய் பேசுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.
இனி வரும் காலங்களில் அரசும், ஆட்சி நிர்வாகமும், அரசியல் சட்டமும் வலையுலகத்தினரை பத்திரிகையாளர்களில் ஒருவராக அங்கீகரிக்காவிட்டால் பலவித பிரச்சினைகள் பதிவர்களுக்குத்தான் ஏற்படப் போகிறது. ஏற்கெனவே சுப்ரீம் கோர்ட் வழக்கொன்றில் "வலைத்தளங்களில் யார் என்ன எழுதினாலும் அதற்கு அவரே பொறுப்பு.. அது குற்றச்சாட்டாக இருந்தாலும், அவதூறாக இருந்தாலும், வெளியில் இருந்து எடுத்துக் கையாண்டதாக இருந்தாலும் சரி.. அவர்தான் பொறுப்பேற்க வேண்டும்.." என்று தீர்ப்பு சொல்லியுள்ளது.
இது எப்படி இருக்கிறது எனில், ஒரு பத்திரிகையில் ஒரு அரசியல்வாதியை ஊழல்வாதியாக எழுதியிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தச் செய்தியை நீங்கள் உங்களது பதிவில் காப்பி செய்து வெளியிட்டீர்களேயானால் அந்த ஊழல் அரசியல்வாதி உங்கள் மீது வழக்குத் தொடர்ந்தால் அந்த அரசியல்வாதி ஊழல் செய்தார் என்பதை நீங்கள்தான் நிரூபித்தாக வேண்டும். அந்தப் பத்திரிகையில் இருந்ததை நான் காப்பி செய்தேன் என்று சொல்லி ஜகா வாங்க முடியாது.
இதே செய்தி பத்திரிகையில் வந்திருந்தால் கட்டுரையை எழுதிய கட்டுரையாளர் நமது நிருபர் என்று எழுதியிருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.. அப்போது அது பத்திரிகையின் ஆசிரியரைத்தான் தாக்கும். ஆனால் எந்தவொரு அரசியல்வாதிகளும் இப்போதைய நிலையில் பத்திரிகைகளுக்கு நோட்டீஸ் கொடுத்து மறுப்பு அறிக்கை போடச் சொல்வதோடு விட்டு விடுவார்கள். ஆனால் நமக்கு என்ன பாதுகாப்பு..?
அதற்காக "அதையெல்லாம் ஏன் எழுதுற.. போய் நாலு சினிமா விமர்சனம் எழுதிட்டு போய்க்கிட்டே இரு"ன்னு சொல்லாதீங்க.. யோசித்துப் பாருங்கள்.. எதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்றுதான் இதனை சொல்கிறேன். அதற்காக இதுவே முக்கியக் காரணமும் அல்ல.. முக்கியக் காரணங்கள் நான் மேலே சொன்னவைகள் மட்டுமே..
ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம், மீன்பாடி ஓட்டுநர்கள் சங்கம், டிரைகிளீனர்ஸ் சங்கம் என்று அவர்கள்கூட ஒரு அமைப்பை வைத்துக் கொண்டு தங்களது தொழிலுக்கு எந்தவிதத்தில் யாரால் பங்கம் வந்தாலும் அதனை எதிர்த்துக் குரல் கொடுக்கிறார்கள் அமைப்பின் சார்பில்.. யாரும் தனி நபராகக் குரல் கொடுப்பதில்லை. நமக்குத்தான் பிரச்சினையே இல்லையே.. நாமதான் ஜம்முன்னு மகாராஜா மாதிரி இருக்கோம்னு சொன்னால் எப்படி..?
கிட்டத்தட்ட 7 அல்லது 8 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வலைப்பதிவுகள் அறிமுகமாகி அதில் தலைநகரான சென்னையில் மட்டும் முகம் தெரிந்து வெறும் 60 பதிவர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்..? சென்னையில் இருக்கின்ற வார்டுகளின் எண்ணிக்கையே நூற்றுக்கும் மேல்..
பலரும் வாசிக்கிறார்கள்.. ஆனால் எழுதத் தயங்குகிறார்கள். அவர்களை நாம் எப்படி இழுப்பது..? இப்படி பொதுச் சேவை செய்வதற்கு யாருக்கு, எத்தனை பேருக்கு இங்கு இப்போது நேரம் இருக்கிறது..? நாம் மட்டுமே போதுமா..? நாம் இந்த இடத்தில் இருந்து விலகும்போது நமக்குப் பின்பாக ஒரு ஐயாயிரம் பேராவது சென்னையில் இருக்க வேண்டாமா..? நாம் நினைத்தால் முடியும்.. மனம் வைத்தால் முடியும்..
அமைப்பை உருவாக்குவோம்.. சந்தா உருவாக்குவோம்.. அவரவர் முடிந்த அளவுக்கு பணத்தைக் கொடுப்போம்.. நிதியினை மேம்படுத்துவோம்.. அதனை முறைப்படி பராமரிப்போம். பத்திரிகைகளில் விளம்பரம் கொடுப்போம். வலைப்பதிவுகளை ஆரம்பிக்க நினைப்போர், எழுத நினைப்போர் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். அழையுங்கள் என்று நாம் அவர்களை அழைப்போம்.
அழைப்பு விடுத்தவர்களை சங்க அல்லது அமைப்பின் அலுவலகத்தில் ஒரு நாளில் பயிற்சி கொடுத்தனுப்புவோம்.. அவர்களது சந்தேகங்களை தீர்த்து வைப்போம்.. மாதத்தில் 15 நாட்களில் ஒரு நாளைக்கு ஒருவர் என்றால்கூட மாதம் 15 பேர், வருடத்திற்கு 180 பேரை நமது அலுவலகத்தின் வாயிலாகவே நாம் உருவாக்கலாமே..?
இதன் பின் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஏதாவது தனியார் கல்லூரியில் அமைப்பின் சார்பில் பேசி பட்டறைகளை நடத்தினால் எத்தனை பேரை நாம் வலையுலகத்திற்குள் இழுக்க முடியும்..?
இதற்கு முதலில் என்ன தேவை..? ஒரு அலுவலகம்.. போதுமான கணினிகள்.. சொல்லித் தருவதற்கு ஒரு நபர்.. முதலில் அமைப்பில் இருப்பவர்கள் முறை வைத்து சொல்லித் தருவோம். பின்பு இதற்கென்றே தனியாக ஒருவரை சம்பளத்திற்கு நியமித்து செய்வோம்.. ஏன் முடியாது..?
எடுத்த எடுப்பிலேயே ஏன்.. எதுக்கு.. என்று கேள்வி கேட்டுக் கொண்டேயிருந்தால் அடுத்தக் கட்டத்திற்கு எப்படிச் செல்வது..?
இப்படியே மாதந்தோறும் நமக்கு நாமே ஒரு திரைப்படத்தைப் பார்த்து ஒப்பேத்திவிட்டு.. சென்னை வரும் பதிவர்களுக்கு வரவேற்பு கொடுத்து அவர்களை மனம் குளிரவைத்து அனுப்பிவிட்டு டாட்டா.. பை.. பை.. சொல்லிவிட்டுச் செல்வதில் யாருக்கு என்ன புண்ணியம்..?
ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப்களில் சமூக சேவைகளையும் செய்கிறார்கள். அதோடு தங்களுக்கிடையிலான குடும்ப உறுப்பினர்களையும் அறிமுகப்படுத்தி குடும்பமாக பழகுகிறார்கள். நாம் என்றைக்காவது இதனைச் செய்திருக்கோமா..?
இரண்டாண்டுகளுக்கு முன்பெல்லாம் எந்தவொரு பதிவர் சந்திப்பிலும் "எங்க வேலை பார்க்குறீங்க..?" அப்படீன்ற கேள்விக்கு மட்டும் சரியான பதில் கிடைக்கவே கிடைக்காது.. ஏதோ ஒரு கம்பெனின்னு மட்டும்தான் சொல்வாங்க.. "வீடு எங்க இருக்கு?"ன்னு கேட்டாலும் அதுக்கும் அதுதான் பதில் கிடைக்கும். அப்போதிருந்த சூழல் அப்படி.. ஆனால் இன்றைக்கு அப்படியல்ல..
இரண்டு மாதங்களுக்கொரு முறை அமைப்பின் சார்பில் எங்கேயாவது அனைத்துப் பதிவர்களும் குடும்பத்தினருடன் கலந்து கொள்ளலாம்.. பரஸ்பரம் குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் தெரிந்து கொள்ளலாம்.. தனி நபர்களாக இருந்து இதனை எப்படிச் செய்ய முடியும்..?
இது எதுவுமே வேணாம்.. ச்சும்மாவே இருப்போம் என்றால் என்ன மயித்துக்கு, என்ன எழவுக்கு.. என்ன வெங்காயத்துக்கு.. பின்னவீனத்துவத்தையும், இலக்கியத்தையும், அரசியலையும், சினிமாவையும் எழுதணும்.. அதையும் எழுதாம விட்டுட்டு அவங்கவங்க சோலியைப் பார்த்துட்டுப் போகலாமே..? எதுக்காக அங்க வாங்க. இங்க வாங்கன்னு சொல்லிக் கூப்பிட்டு பெட்ரோலையும் வேஸ்ட் பண்ணி.. நேரத்தையும் ஏன் நாம வீணாக்கணும்..? நாம செத்த பின்னாடி நூறு பேரு இரங்கல் தெரிவிச்சு பதிவு மட்டும் போட்டுட்டு அதை நம்ம பிள்ளைககிட்ட காட்டிட்டு அமைதியா இருக்கவா..?
மெஜாரிட்டியாக ஆரம்பிக்கலாம் என்பது தெரிந்த பின்பு "நான் அதனை எதிர்க்கவில்லை. ஏன் முன்பே பிளான் செய்தீர்கள் என்பறுதான் கேட்டேன்.." என்று இடக்கு மடக்காக கேள்வி கேட்டு மீண்டும் பிரச்சினையைத் திரித்ததும் 'மேதகு' பார்ட்டிதான்.. அந்தப் படபடப்பில், அனைவருமே நண்பர்களாக இருந்ததினாலும் யாரையும் கண்டித்துப் பழக்கமில்லாத காரணத்தினாலும் எனக்கும், கேபிளுக்கும் வேறு வழியே இல்லாமல் மீட்டிங்கை முடிக்க வேண்டியதாகிவிட்டது.
இத்தனையும் செய்துவிட்டு "இப்போது நீங்கள் அமைப்பை ஆரம்பித்தால் நிச்சயம் நான் சேருவேன்" என்று சொல்கின்றவரை என்னவென்று சொல்வது..? பின்பு எதற்காக இவ்வளவு பெரிய வெட்டி ஆர்ப்பாட்டம்..? இந்த அறிவுஜீவித்தனமான பேச்சுக்களுக்கெல்லாம் இந்த அர்த்தராத்திரியில் கண் முழித்து பதில் சொல்லித் தொலைய வேண்டியிருக்கிறது..
இதிலும் சினிமா பி.ஆர்.ஓ.க்கள் மாதிரி கதை ஒன்றையும் சொல்கிறார் மேதகு சிவராமன்.. அவர் கீழே இறங்கி வந்தபோது தண்டோராவும், கேபிளும் அங்கே இல்லவே இல்லையாம்.. எப்படி இருப்பார்கள்..? யாருக்காவது பேசுவதற்கு மனசு வருமா..?
பந்தல் கட்டி, தோரணம் அமைத்து தாலி கட்டுற நேரத்துல பொண்ணை இழுத்துக்கிட்டு ஓடுறவன், சொல்லிட்டுப் போறதுக்கு மாப்பிள்ளை சொந்தங்களையே காணோம்னு புலம்பினானாம்.. இப்படித்தான் இருக்கு இது..
எனக்கும் அங்கே இருப்பதற்கு மனசில்லைதான். ஆனால் டிவிஆர் ஸார், "கண்டிப்பா டீ வாங்கிக் கொடுத்தே ஆகணும்.." என்று வற்புறுத்தியதால் கடைக்கு வந்து நிற்க வேண்டியதாகிவிட்டது.
கேபிள் மற்றும் தண்டோரா, சூர்யா, அகநாழிகை வாசுதேவன், பலாபட்டறை இவர்களுடன் நானும் இரவு பத்தே கால் மணிவரையில் அந்தப் பகுதியில்தான் இருந்தோம்.
ஏதோ எழுதுவதற்கு ஒன்றுமே இல்லை என்று பக்கத்தை நிரப்பும் பத்திரிகை பாணியில் மேதகு சிவராமன் எழுதியிருக்கும் இந்தக் குற்றச்சாட்டை படித்துப் பார்த்தபோது ழான்சத்தார் ஏன் முன்பே செத்துப் போனார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது..
இதில் இன்னுமொரு காமெடி அருமைத் தம்பி அதிஷா. ஆதரித்துப் பேசிய அனைவரையும் குறுக்குக் கேள்வி கேட்டு அமைப்பை உருவாக்க எதிர்ப்புக் குரல் கொடுத்துக் கொண்டேயிருந்தவர், கடைசியில் வீட்டிற்குப் போகும்போது கேபிளிடம் "நானும் சேர்கிறேன்" என்றாராம்.
நான் கடையருகே பார்த்தபோது அதிஷாவிடம் பேசினேன். "நீ பத்திரிகையாளர் சங்கத்தில் சேர்ந்துவிட்டாயா..?" என்றேன். "ஆமாண்ணே.. சேரப் போறேன்.." என்றார். "அங்க ஏன் சேரப் போற..?" என்றேன். "முதல்வர் வீடு கொடுக்கப் போறாரு.. எனக்கு வீடு வேணும்.. அதுக்காக சேரப் போறேன்.." என்றார். "சந்தோஷம்.. அதே மாதிரி நாம ஒரு அமைப்பா சேர்ந்து நாலு பேருக்கு உதவி செய்யலாமே.. இதை ஏன் எதிர்க்குற..?" என்று கேட்டேன்.. "ஏன் இப்படியே செய்யலாமே..?" என்று திருப்பிப் பதில் சொன்னார். "அப்ப உனக்கு ஒரு நியாயம்.. எனக்கு ஒரு நியாயமா..?" என்று என் தொண்டைவரையில் கேள்வி எழுந்தது.. ஆனாலும் அப்போதைய நாகரிகம் காரணமாக அடக்கிக் கொண்டேன். இப்போது இங்கே எழுதிவிடத் தோன்றுகிறது. எழுதிவிட்டேன்.
இவருக்கு வீடு கிடைக்கிறது என்பதற்காக இவர் ஒரு அமைப்பில் உறுப்பினராகச் சேரலாமாம். ஆனால் நாம் யாராவது ஒருத்தருக்கு ஒரு நூறு ரூபாய் உதவி செய்வதற்குக்கூட அமைப்பை உருவாக்கக் கூடாதாம்.. ம்ஹும்.. தாங்க முடியவில்லை..
எப்படியிருப்பினும் அமைப்போ, அல்லது சங்கமோ, அல்லது அஸோஸியேஷனோ எதுவோ ஒன்று அரசு அங்கீகாரத்துடன் அமைப்பதாக முடிவாகிவிட்டது. இந்த அளவுக்கு பதிவர்கள் கொடுத்த ஒத்துழைப்புக்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றிகள்..
மீண்டும் சந்திப்போம்..
|
Tweet |