30-12-2017
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
70 MM Entertainment நிறுவனத்தின் சார்பில் கந்தசாமி நந்தகுமார். டி.என்.அருண் பாலாஜி. திலீப் சுப்பராயன் மூவரும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
ஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் இந்தப் படத்தை வாங்கி வெளியிட்டுள்ளார்.
படத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் மூவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, கார்த்திக் யோகி, சுப்பு பஞ்சு, நாகிநீடு, ரிஷி, மோனிகா, ராமச்சந்திரன், ஜாய் மேத்யூஸ், ராஜ் தருண் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – சரவணன் ராமசாமி, இசை – யுவன் சங்கர் ராஜா, படத் தொகுப்பு – ரூபன், பாடல்கள் – அருண்ராஜா காமராஜ், சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன், மக்கள் தொடர்பு – டிஒன், சுரேஷ் சந்திரா, தயாரிப்பு – கந்தசாமி நந்தகுமார், டி.என்.அருண் பாலாஜி, திலீப் சுப்பராயன், எழுத்து, இயக்கம் – சினிஷ்.
இந்த 2017-ம் ஆண்டின் கடைசி பேய்ப் படம் இதுதான்..!
கொல்லப்பட்ட நபர்களின் ஆவி, பிறிதோர் உயிர்களின் உடலில் ஏறி தங்களை கொலை செய்தவர்களை பழி வாங்கும் அதே கதைதான் இந்த ‘பலூனிலும்’ வந்திருக்கிறது.
சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்கிற கனவோடு இருக்கும் ஜெய்க்கு உடனடியாக ஒரு திகில், மர்மம் கலந்த கதையை உருவாக்க வேண்டிய கட்டாயம்.
அப்போது முகநூலில் ஊட்டியில் இருக்கும் ஒரு மர்ம வீடு பற்றிய செய்தியைப் படிக்கிறார். அந்த வீடு பற்றிய சர்ச்சையான செய்திகள் ஜெய்யைக் கவர்ந்திழுக்கிறது. உடனேயே ஊட்டிக்குச் சென்று அந்த வீடு பற்றிய செய்தியை தெரிந்து, அதையே கதையாக்கலாம் என்கிற முடிவுக்கு வருகிறார்.
இதற்காக தனது மனைவி அஞ்சலி, அண்ணன் மகனான பப்பு, துணை இயக்குநர் நண்பர்களான யோகிபாபு, கார்த்திக் யோகி இவர்களோடு ஊட்டிக்கு வருகிறார்.
அந்த மர்ம வீடு பற்றிய பல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்கிறார். ஆனால் பாதிதான் தெரிகிறது. இன்னும் விசாரிக்க வேண்டு்ம் என்று நினைத்திருக்கும்போது அந்த வீட்டில் பாதிக்கப்பட்டு இறந்து போன ஒரு குழந்தை பேயால், அந்த வீட்டில் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன.
தங்களைத் தவிர வேறு யாரோ அந்த வீட்டில் இருக்கிறார்கள் என்பதை ஜெய்யும், அஞ்சலியும் உணர்கிறார்கள். ஒளிந்து நின்று வேடிக்கை காட்டியதும், அலற விட்டதும்போதும் என்று நினைத்த அந்த குழந்தை பேய், திடீரென்று பப்புவின் உடலில் ஏறிக் கொள்கிறது.
இப்போது வாலண்டியராக அங்கே வரும் சர்ச் பாதர் அந்த குழந்தை பேயின் பூர்வாசிரம கதையைச் சொல்லி திகிலூட்டுகிறார். அந்தப் பேய்க்கும் ஜெய்க்கும் இருக்கும் தொடர்பின் காரணமாகத்தான் அது பப்புவைப் பிடித்திருப்பதாகவும் சொல்கிறார் பாதர்.
30 வருடங்களுக்கு முன்பு இப்போது ஜெய் போலவே இருக்கும் பலூன் விற்கும் இன்னொரு ஜெய் அதே ஊட்டியில் வசித்திருக்கிறார். அதே ஊரில் வசிக்கும் ஜனனி ஐயருக்கு அவர் மீது தீவிரமான காதல். அந்தக் காதலை உடைக்க நினைக்கும் ஜனனியின் அப்பா, ஊர் பெரிய மனிதரான நாகிநீடுவிடம் வந்து உதவி கேட்கிறார்.
அப்போதைய சட்டமன்றத் தேர்தலில் தனக்கு எம்.எல்.ஏ. சீட் இல்லை என்று தலைமை சொல்லியிருப்பதால் கோபத்தில் இருக்கும் நாகிநீடு இந்தப் பிரச்சினையை மதப் பிரச்சினையாக மாற்றி, அதில் குளிர் காய்ந்து எம்.எல்.ஏ. சீட்டை பெறலாம் என்று திட்டம் போடுகிறார்.
இதன்படி ஜனனியை தூக்கிலிட்டு கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக புரளியைக் கிளப்புகிறார்கள் நாகிநீடுவின் ஆட்கள். தொடர்ந்து ஜெய்யின் வீட்டுக்குள் நுழைந்து அவரை உயிரோடு எரிக்கிறார்கள். ஜெய்யின் வளர்ப்பு குழந்தையையும் கிணற்றில் தள்ளி கொலை செய்திருக்கிறார்கள்.
இ்ப்போது இந்தக் கதையைக் கேட்டு ஜெர்க்காகிப் போயிருக்கும் ஜெய்க்கு தான்தான் அந்த பலூன் விற்ற ஜெய்யின் அடுத்த பிறவி என்பது புரிகிறது. இதற்கடுத்த அதிர்ச்சியாக அஞ்சலியை ஜனனியின் பேய் பிடித்தாட்டுகிறது. பலூன் விற்ற ஜெய்யை, கண்ணில் காட்டினால்தான் தாங்கள் போவோம் என்று பிடிவாதம் பிடிக்கின்றன இரண்டு பேய்களும்.
கடைசியில் பேய்கள் பழி வாங்கியதா… அஞ்சலி மற்றும் பப்புவின் உடலில் இருந்து வெளியேறியதா என்பதுதான் இரண்டாம் பாதியில் இருக்கும் திரைக்கதை.
பல ஆங்கிலப் படங்களில் இருந்து இந்தப் படம் தழுவலாக உருவாக்கப்பட்டிருப்பதாக படத்தின் இயக்குநர் சினிஷ் மிக நேர்மையாக டைட்டிலில் அந்தந்த படங்களின் பெயரோடு போட்டிருக்கிறார். இதற்காக இவருக்கு நமது மனமார்ந்த வாழ்த்துகள்.
ஆனாலும் இந்த ‘பலூன்’ படத்தின் அதிகப்படியான காட்சிகளும், திரைக்கதையும் ‘IT’ என்ற ஆங்கிலப் படத்தில் இருந்து சுடப்பட்டவைதான் என்று ஆங்கிலப் படங்களின் ரசிகர்கள் சொல்கிறா்கள்.
முதல் பாதி மிக வேகமாகவும், விறுவிறுப்பாகவும் ஜெட் வேகத்தில் பறக்கிறது. கூடவே சஸ்பென்ஸ், திரில்லருடன் பயத்தையும் கூட்டும் அளவுக்கு இருக்கிறது. போதாக்குறைக்கு யோகிபாபுவின் கவுண்ட்டர் அட்டாக் காமெடியும் கை கொடுக்க நேரம் போவதே தெரியவில்லை.
ஆனால் இரண்டாம் பாதியில் பார்த்து, பார்த்து சலித்துப் போன திரைக்கதையில் எப்படியும் பேய் கொலை செய்யத்தானே போகிறது என்கிற எதிர்பார்ப்புடனேயே படம் அமைந்திருப்பதால் சப்பென்றாகிவிட்டது. அதோடு பலூன் ஜெய் சம்பந்தப்பட்ட கதையில் உயிர்ப்பு இல்லாமல் இருப்பதால் பெரிதாக மனதைத் தொடவில்லை.
ஆனால் அரசியல்வாதி நாகிநீடு இந்தக் காதல் பிரச்சினையை மதம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக்கி அரசியல் செய்ய முனையும்போது, கொஞ்சம் பரபரப்பைக் கூட்டுகிறது.
ஜெய் காதல் காட்சிகளில் மட்டும் நன்றாகவே நடித்திருக்கிறார். ஆனால் பயமுறுத்தப்படும் காட்சிகளில்கூட அப்படியேதான் இருக்கிறார் என்பது நமக்கு சோகமான விஷயம். கிளைமாக்ஸ் காட்சிகளில் தெறி ஸ்டைலில் இரும்புக் கம்பியை தோளில் சுமந்து கொண்டு வந்து வன்முறை வெறியாட்டம் போடும் காட்சியிலும், பலூன் விற்ற ஜெய்யாகவும் இடையிடையே மாறி மாறி வரும் காட்சிகளில் இயக்கம் சூப்பர்ப்..!
ஜெய்க்கு வெறுமனே வசனம் பேசும் காட்சிகள் மட்டுமேதான் ஓகே.. அழுகையுடனும், சோகக் காட்சிகளையும் அவரால் உணர்வுப்பூர்வமாக திரையில் கொண்டு வர முடியவில்லை. சரி. விடுங்க. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்..!
ஜாக்குலினாக நடித்திருக்கும் அஞ்சலி ரொமான்ஸ் காட்சிகளில் கொஞ்சம் பிடிக்க வைத்திருக்கிறார். பேய் பிடித்த நிலையில் ஜனனியின் ஆசையை வெளிக்காட்டும் காட்சிகளில் பயமுறுத்தியிருக்கிறார். அஞ்சலியின் அதட்டல் வாய்ஸும், ஜெய்யின் கரகர வாய்ஸும் ரொம்பவே மேட்ச்சிங்காகத்தான் இருக்கிறது..!
ஜனனி ஐயருக்கு நடிப்புக்குண்டான பெரிய ஸ்கோப் இல்லையென்றாலும் இன்னொரு ஹீரோயினாக இருக்கிறார். யோகிபாபுவும், கார்த்திக் யோகியும்தான் படத்தின் முற்பாதியை தாங்கிப் பிடித்திருக்கிறார்கள். அதிலும் யோகிபாபுவின் தொடர்ச்சியான கவுண்ட்டர் டயலாக்குகள் சிரிப்பை வரவழைக்கவில்லையென்றாலும் படத்தை போரடிக்காமல் ரசிக்க வைத்திருக்கிறது.
இவருக்கும் பப்புவுக்கும் இடையில் நடக்கும் சொற்போர் செமத்தியான ரகளை. பப்புவாக நடித்திருக்கும் ரிஷி அலட்சியமான கேள்விகளாலும், குழந்தைத்தனமான பேச்சினாலும் கவர்ந்திழுக்கிறார்.
காலாவதியாகிப் போன கிணற்றில் இருந்து பலூன் பறந்து வருவது.. பொம்மையின் தலை திரும்புவது.. கதவுகள் மூடுவது.. கிரீச்சென்ற சப்தத்துடன் ஜன்னல்கள் மூடுவது.. நிழல் மட்டுமே தெரியும் அளவுக்கு பேய்கள் ஓடுவது.. கண் வெளிர் நிறத்துடன் இருக்க பேய்கள் கண்களுக்குத் தெரிவது.. கண்ணாடியில் மட்டுமே பேய் தெரிவது.. கட்டிலைத் தூக்கி நிறுத்துவது.. தூக்கியடிச்சிருவேன் பாத்துக்க என்பதுபோல அனைவரையும் தூக்கி வீசுவது.. கிறித்துவ சிலுவைக்கு மட்டுமே பேய்கள் கட்டுப்படுவது.. என்று காலம்காலமான பேய்ப் படங்களின் அடையாளங்களை இந்தப் படமும் தனக்குள் கொண்டுள்ளது.
என்றாலும், ஒரு திகிலையும், விறுவிறுப்பையும் கொண்டு வந்திருப்பதற்கு பின்னணி இசையமைத்திருக்கும் யுவன் சங்கர் ராஜா பெரிதும் உதவியிருக்கிறார். ஒரு டூயட் பாடலுக்கு இசையமைத்த கையோடு படம் முழுக்க யுவனின் மிரட்டல் இசைதான் படத்தின் நடிகர், நடிகையர் கொடுக்காத ஒரு டெம்போவை கொடுத்திருக்கிறது.
ஆர்.சரவணனின் ஒளிப்பதிவும் படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பலம். பயமுறுத்தலுக்கு கேமிராவின் பயணிப்பும் ஒரு காரணியாகக் கிடைத்திருக்கிறது. பாடல் காட்சிகளைவிடவும் பேய்களின் அட்டூழிய காட்சிகளை அழகாக, பயமுறுத்துவது போலவே படமாக்கியிருக்கிறார் இயக்குநர். இதற்கு இன்னொரு பக்கம் படத் தொகுப்பாளர் ரூபனின் கத்தரி பணியும் உதவி செய்திருக்கிறது.
பப்புவை பேய் பிடித்தவுடன் அவன் செய்யும் அதகளத்துடன் பாதருடன் சேர்ந்து செய்யும் போராட்டக் காட்சிகளும் மிரட்டல். கிளைமாக்ஸில் ஜெய்யின் இரண்டுவித அடையாளங்களுடன் பழி வாங்கல் காட்சிகள் இருப்பதையும் புரிவதை போல தொகுத்தளித்திருக்கிறார் தொகுப்பாளர் ரூபன்.
கிளைமாக்ஸில் ராம்ஸின் பின்னணியில் வரும் டிவிஸ்ட்டும், அதைத் தொடர்ந்த இன்னொரு டிவிஸ்ட்டுமாக படத்தை பார்க்க வைத்தாலும், இடைவேளைக்கு பின்பு படம் ஆங்காங்கே தொய்வடைந்துதான் போகிறது.
இந்த பலூன் உடையவில்லை. அதே சமயம் பறக்கவும் இல்லை..!
|
Tweet |