கங்காரு - சினிமா விமர்சனம்

27-05-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
‘உயிர்’, ‘மிருகம்’, ‘சிந்து சமவெளி’ என்று ராத்திரி 10 மணிக்கு மேல் பார்க்க வேண்டிய கதையில் படமெடுத்து கோடம்பாக்கத்தை குறி வைத்துத் தாக்கியவர்களுக்கு பிளாட்பார்ம் போட்டுக் கொடுத்த இயக்குநர் சாமியை அவரது சொந்தத் தாயே வறுத்தெடுத்த்தால் இந்த முறை தாய் மீது சத்தியமாக சாத்வீகமான படத்தை எடுத்து என்னுடைய கதைத் திறமையை நிரூபிக்கிறேன் என்று சொல்லி களத்தில் குதித்திருக்கிறார்.
ஒருவன் திருந்தி வாழ முற்பட்டால் இந்த சமூகம் அதற்கு வழிவிடாது என்கிற பேச்சை துடைத்தெறிந்திருக்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இயக்குநர் சாமியின் இந்த நல்ல பிள்ளை வேடத்திற்கு மேடை போட்டுக் கொடுத்து கூடவே தோள் கொடுத்து படத்தில் ஆர்மோனியமும் வாசித்திருக்கிறார் தயாரிப்பாளர். இதற்காக இவருக்கு ஒரு பூச்செண்டை பரிசளித்துவிடுவோம்.
பாசமலர் என்ற ஒரேயொரு படமே ஆதி தமிழனுக்கும், இனி கடைசிவரை இருக்கப் போகிற அக்மார்க் தமிழனுக்கும் அண்ணன்-தங்கை பாசம் என்றால் என்னவென்று எடுத்துக்காட்டும் படமாக இருக்கப் போகிறது. இதன் அடித்தளத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பாசம் அபரிமிதமானால் என்ன விளைவு கிடைக்கும் என்பதை இக்காலத்திற்கேற்றாற்போல கொஞ்சம் மாற்றி கொடுத்து நம்மை உஷார்படுத்தியிருக்கிறார் இயக்குநர் சாமி.

கொடைக்கானலில் டீக்கடை நடத்துகிறார் ஹீரோ அர்ஜூனா. படிக்காதவர். அதற்கேற்றார்போலவே நடந்து கொள்கிறார். சாதாரணமானவர் இல்லை என்பது அவரது நடை, உடை, பாவனையிலேயே தெரிகிறது. ஆனால் தங்கை பிரியங்கா மீது பாசமானவர். உயிரானவர்.  தங்கை சொல்மிக்க மந்திரமில்லை என்று வாழ்பவர்.
அர்ஜூனா ராஜ்கிரணுக்கு தம்பி மாதிரியே சாப்பிடுகிறார். குடிக்கிறார். முரடனாகத் தெரிகிறார். இவரையும் வர்ஷா என்னும் ஒரு அல்வா துண்டு காதலிக்கிறது. இந்த வர்ஷாவின் அக்கா ஊரில் பலான தொழில் செய்கிறார். ஊரையே வளைத்துப் போட்டு வைத்திருக்கும் இவரது அக்கா, தங்கை வர்ஷாவையும் கல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த் தொழிலில் ஈடுபட வைத்து ஹைடெக் டெக்னாலஜியில் தொழிலை வளர்க்க முனைகிறார். ஆனால் வர்ஷாவோ மறுக்கிறார்.
அர்ஜூனாவின் தங்கை பிரியங்கா. தனது அண்ணன் மீது அவரளவுக்கு பாசமாக இருக்கிறார். அண்ணன் எல்லை மீறும் போதெல்லாம் கண்டிக்கிறார். தண்டிக்கிறார்.
ஊரில் ‘மாமா’ வேலை பார்க்கும் காலாபவன் மணிக்கு இந்த பிரியங்கா மீது ஒரு தலைக்காதல். அடைய வேண்டும் என்று நினைக்கிறார். பிரியங்காவை தூக்க முயற்சித்தபோது செய்தியறிந்து வரும் ஹீரோ அவரை அடித்து துரத்த.. பகையாகிறது.
பிரியங்காவுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணமிடுகிறார் இவர்களது குடும்ப நண்பரான முருகேசன் நாடார் என்னும் தம்பி ராமையா.  பிரியங்காவின் ‘தல’ பைத்தியத்தை தெரிந்து கொண்டு ‘தல’ படத்தின் டிவிடிக்களை வீடு தேடி வந்து கொடுத்து பிரியங்காவையும் காதல் வலைக்குள் விழ வைக்கிறார் ஒரு காதலர். தம்பி ராமையாவின் சமாதானத்தில் இத்திருமணத்திற்கு அர்ஜூனா ஒத்துக் கொள்ள திருமணம் நிச்சயமாகிறது.
திடீரென்று மாப்பிள்ளை இறந்துவிட ஸ்தம்பிக்கிறது வீடு. கதறியழும் பிரியங்காவை சமாதானப்படுத்துகிறாள் வர்ஷா. இப்படியே விட்டுவிட முடியுமா என்ன..? அடுத்த மாப்பிள்ளையை ரெடி செய்கிறார் தம்பி ராமையா. அந்த மாப்பிள்ளையும் திருமண பத்திரிகையெல்லாம் அடித்த பின்பு கரண்டு கம்பியில் சிக்கி உயிரை விடுகிறார்.
இனிமேல் இந்த ஊரில் இருந்தால் பிரியங்காவிற்கு மனம் ஆறாது என்று சொல்லி தன் ஊருக்கு அழைத்துச் செல்கிறார் இவர்களை சின்ன வயதில் இருந்தே தெரிந்து வைத்திருக்கும் ஆர்.சுந்தர்ராஜன். அங்கே சுந்தர்ராஜனின் மைத்துனர் ஒருவர் வலம் வந்து கொண்டிருக்கிறார்.  இவர் மனைவியை இழந்தவர். இளம் வயதுக்காரர். இது போதாதா தம்பி ராமையாவுக்கு.. இங்கேயும் தம்பி ராமையா மீண்டும் கல்யாணப் பேச்சை எடுத்து சீக்கிரமாக கோவிலில் திருமணத்தை நடத்தி வைத்துவிடுகிறார்.
இதன் பின்பு திடீரென்று ஒரு நாள் பிரியங்காவின் கணவரை யாரோ ஒருவன் தாக்கிவிட அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். பதறும் அர்ஜூனின் குடும்பத்தினருக்கு இப்போது சந்தேகம் வருகிறது. யாரோ வேண்டுமென்றே செய்கிறார்களோ என்ற எண்ணத்தில் போலீஸில் புகார் தெரிவிக்கிறார்கள்.
போலீஸ் விசாரணையில் கலாபவன் மணி, வர்ஷாவின் அக்கா, ஜீப் டிரைவர்கள் என்று பலர் மாட்டியும் உண்மை தெரியாமல் இருக்கிறது. இதற்கு முன் பலியான இரண்டு மாப்பிள்ளைகளுமே கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் இப்போது எழுகிறது. மருத்துவமனையில் இருக்கும் பிரியங்காவின் கணவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. என்றாலும் கொலைகாரன் அவரைத் தேடி வரலாம் என்று இரு தரப்பினருமே காத்திருக்கிறார்கள்.
முன்னர் நடந்தது கொலைகளா..? யார் அந்த கொலைகாரன்..? எதற்காக பிரியங்காவின் கணவனை கொலை செய்ய முயன்றான் என்பது சஸ்பென்ஸ். இதை கண்டிப்பாக நீங்கள் தியேட்டருக்கு சென்றுதான் பார்த்து தெரிந்து கொண்டாக வேண்டும்.
அண்ணன்-தங்கை பாசக் கதையை ஒரு சைக்காலஜிக்கல் திரில்லராக கொடுத்திருக்கிறார். இடைவேளைக்கு முன்பான ஒரேயொரு காட்சியில் இதற்கான லின்க் கிடைக்கிறது என்றாலும் கொஞ்சம் உற்றுக் கவனித்தால்தான் அது புரியும்.
சாமியின் இயக்கத்தைப் பற்றி குறையே சொல்வதற்கில்லை. இதற்கு முன்பான படங்களிலெல்லாம் கதைகள் வில்லங்கமாக இருந்தாலும் நடிப்பில் குறையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இயக்கத் திறமையைக் காட்டியிருந்தார். இதிலும் அப்படியே..!
நடிப்பில் அனைவரையும் தூக்கிச் சாப்பிட்டிருப்பது காலாபவன் மணிதான். என்னவொரு எகத்தாளம்.. துள்ளல்.. டயலாக் டெலிவரி.. என்று தனக்குக் கிடைத்த காட்சிகளிலெல்லாம் தனி ஸ்கோர் செய்திருக்கிறார் மணி. இவராலேயே இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளையெல்லாம் வெகுவாக ரசிக்க முடிந்த்து.
ஹீரோ அர்ஜூனாவுக்கு இது புதிய களம். முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு எதுவும் தெரியாத முரடன்போல பேசவும் வேண்டும். நடிக்கவும் வேண்டும் என்றால் கஷ்டம்தான். கஷ்டத்தோடு கஷ்டமாகத்தான் நடித்திருக்கிறார். கிளைமாக்ஸில்தான் ஒட்டு மொத்த நடிப்பையும் காட்டி தனது பெயரை பதிவு செய்திருக்கிறார்.
பிரியங்கா என்னும் தமிழ்ப் பெண் சமீபமாக பல படங்களில் நல்லவிதமாகவே நடித்து புகழ் பெற்றிருக்கிறார். இதிலும் அப்படியே..! அண்ணனுடன் மோதும் சண்டையிலும், அண்ணனிடம் அடி வாங்கியவனிடம் மன்னிப்பு கேட்டு வரச் சொல்லி திட்டுவதிலும்,  இறுதியில் உண்மை தெரிந்து அதிர்ச்சியான நிலையிலும் விட்டுக் கொடுக்காமல் பேசுவதிலும் ஒரு தங்கையாக அந்தக் கேரக்டரின் நிஜத்தை உணர்த்தியிருக்கிறார். பாராட்டுக்கள்.. சிறந்த நடிகை என்று பெயரெடுக்க என்ன செய்ய வேண்டுமோ அதை இந்தப் படத்தில் செய்திருக்கிறார்.
வர்ஷா அஸ்வதி என்னும் இன்னொரு ஹீரோயின் ஒரு கண் லேசாக மூடியிருந்தாலும் அதுவே கவர்ச்சியாகத்தான் இருக்கிறது. இடைவேளைக்கு பின்பு ஜில்லிஸான குரலில் “என் ஏத்தத்துக்கும் என் இறக்கத்துக்கும் என்னா குறை?” என்று கேட்டு பாடும் பாடல் காட்சியில் நடன அசைவுகளால் அசர வைத்திருக்கிறார்.  இயக்கம் சிறப்பாக இருப்பதினால் இவரது நடிப்பும் கவனத்தை ஈர்க்கிறது.
முருகேச நாடாராக தம்பி ராமையா. முதல் சில காட்சிகளிலேயே வர்ஷாவின் அக்கா கடைக்கு வந்தவுடன் பேசும் வசனங்கள் அக்மார்க் சாமி வசனம் மாதிரியே இருக்கே.. படமும் அப்படியா என்கிற சிறிய சந்தேகத்தை காட்டியது. பின்பு போகப் போக பாசத்தைப் பிழிந்தெடுத்து கொன்றுவிட்டார் தம்பி ராமையா. ஆர்.சுந்தர்ராஜனிடம் சின்னப் பிள்ளைல இருந்து என் பிள்ளைக மாதிரி வளர்த்திருக்கேன் ஸார். இப்போ நீ யாருன்னு கேக்குறானே என்று கேட்டு அங்கலாய்க்கும் காட்சியில் உச்சுக் கொட்ட வைத்திருக்கிறார்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும், இயக்குநர் சாமியும்கூட அரிதாரம் பூசியிருக்கிறார்கள். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிதான் பிரியங்காவின் கணவராக நடித்திருக்கிறார். அளவோடு நடித்திருக்கிறார். நிச்சயமாக நீங்க இனிமேலும் நடிப்பைக் கொட்டலாங்ஙகண்ணா..! காட்டுங்கண்ணா.. நடிங்கண்ணா..!
இயக்குநர் சாமி இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்து இன்னொரு நடிகரின் வாய்ப்பில் ஆப்படித்திருக்கிறார். ஆனால் இன்ஸ்பெக்டர் கெத்து குறையாமல் பேசியிருப்பதை பார்த்தால் இவரும் அடுத்து நடிக்கப் போகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது..!
ராஜரத்னத்தின் ஒளிப்பதிவில் கொடைக்கானல் மலைப்பகுதியின் வனப்பு தென்படுகிறது. குறையொன்றுமில்லை என்று சொல்லும் அளவுக்கு பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவின் உழைப்பு இருக்கிறது. வர்ஷா பாடல் காட்சியில் அபாரம் என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது ஒளிப்பதிவும், நடன இயக்கமும்.
இது எல்லாவற்றையும் மீறி குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது இன்னொன்று அது படத்தின் எடிட்டிங். எடிட்டர் மணிகண்டன் சிறப்பாக செய்திருக்கும் படத் தொகுப்பினால், படம் எந்த இடத்திலும் தொய்வில்லாமல் செல்ல உதவியிருக்கிறது. கிளைமாக்ஸ் சண்டை காட்சியில் பரபரப்பைக் கூட்டியிருப்பதில் பெரும் பங்கு எடிட்டிங்கிற்குத்தான்.. ஒரேயொரு பாடல் காட்சியிலேயே ஹீரோவின் இளமைப் பருவக் கதையைச் சொல்லி படத்தின் நீளத்தைக் குறைத்து அனுமதித்திருக்கும் இயக்குநருக்கு நமது நன்றிகள்..! ‘நச்’சென்று சுருக்கமாக இருந்தது.
இந்த உலகத்தில் அனாதையாய் வளர்ந்த ஒருவனின் வாழ்க்கை எப்படியெல்லாம் தடுமாறும் என்பதை இந்தப் படத்தின் ஹீரோவின் கேரக்டர் ஸ்கெட்ச் மூலமாக உணர்த்தியிருக்கிறார் இயக்குநர். தெளிவான கதை.. அளவான காட்சிகள்.. நிறைவான இயக்கம்.. என்று அனைத்திலுமே ‘கங்காரு’ சிறப்பானதுதான். இது போலவே இனியும் சாமியின் படங்கள் சாமியாடினால் நல்லது..!

ஓ காதல் கண்மணி - சினிமா விமர்சனம்

18-04-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு வெற்றிப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இந்தியாவின் இயக்குநர் மணிரத்னம்.  
‘தில்ஸே’, ‘குரு’, ‘ராவணன்’, ‘கடல்’  என்று வரிசையான தோல்விகளுக்குப் பின்னர் இனி தனக்கான கதைகளைத் தயார் செய்யாமல் சமூகத்திடமிருந்தே பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து ஒரு நல்ல கதையைத் தேர்வு செய்திருக்கிறார். இதுதான் இந்தப் படத்தின் மூலம் அவருக்குக் கிடைத்திருக்கும் முதல் வெற்றி..!

சென்னை மேற்கு மாம்பலத்தில் இருந்து மும்பை வந்திருக்கும் வீடியோ கேம் புரோகிராம் எழுதும் பொறியாளர் ஆதி என்னும் துல்கர் சல்மான். கோவையின் மிகப் பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்து பெற்றோர்களின் பிரிவினால் பாதிக்கப்பட்டு திருமணம் செய்யவே கூடாது என்று கொள்கையுடனும், பாரிஸில் போய் செட்டிலாகணும் என்கிற ஆசையுடனும் இருக்கும் தாரா என்னும் நித்யா மேன்னும் தற்செயலாக சந்தித்துப் பேசுகிறார்கள்.
பார்த்தவுடன் இருவருக்கும் பிடித்துப் போகிறது. சேர்ந்து வாழ நினைக்கிறார்கள். அதன்படியே வாழ்கிறார்கள். ஒரு கட்டத்தில் இரு வீட்டாருக்கும் இது தெரிந்து அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்ய..  இருவர் மனதிலும் ஊசலாட்டம். கல்யாணம் செய்யலாமா வேண்டாமா என்று..?
இந்த நேரத்தில் அவர்கள் தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாள தம்பதிகளான பிரகாஷ்ராஜ்-லீலா சாம்சன் அன்னியோன்யத்தையும், அன்பையும், பாசத்தையும் பார்த்த பின்பு இவர்களது மனதிலும் ஒரு மாற்றம்.. அது என்ன என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்..!
கொஞ்சம் ‘மெளன ராகம்’.. கொஞ்சம் ‘அலை பாயுதே’.. இது இரண்டையும் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்தால் வருவது இந்த ஓ காதல் கண்மணிதான்..!
‘லிவிங் டூ கெதர்’ என்ற ‘திருமணத்திற்கு முன்பே சேர்ந்து வாழ்தல்’ என்கிற விஷயத்தை அடிப்படையாக்க் கொண்டதுதான். ஆனால் கடைசியில் அதை நியாயப்படுத்தவில்லை இயக்குநர். முற்றிலுமாக மறுக்கவும் இல்லை.
இன்றைய இளைய சமுதாயம் கொஞ்ச நாள் சேர்ந்து வாழ்ந்து பார்ப்போம். பிடித்தால் திருமணம் செய்து கொண்டு தொடர்வோம். இல்லையேல் தொடர்பை முறித்துக் கொண்டு வேறு ஆள் தேடுவோம் என்ற முற்போக்கு சிந்தனையோடு வலம் வந்து கொண்டிருப்பதை நாடே அறியும். இது தவறா சரியா என்கிற கேள்விக்கு அனைவருமே, இது தனி நபர்களின் சுதந்திரம் என்கிற எண்ணத்திலேயே பதில் சொல்கிறார்கள். இது அவரவர் விருப்பம் என்கிறார்கள்.
இந்தியா போன்ற குடும்பமே முக்கியம் என்று சொல்லிப் பழக்கப்பட்ட நாட்டில் உலகமயமாக்கல் என்கிற ஒரேயொரு அந்நிய ஆதிக்கத்தினால் முதலில் தகர்க்கப்பட்டது நமது பொருளாதாரமல்ல.. நமது குடும்பம் என்கிற சமூக அமைப்புதான். எவரும், எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்கிற சுதந்திரத்தை இந்த கட்டற்ற கருத்துச் சுதந்திரம்தான் கொடுத்திருக்கிறது. இதனால் பாதிக்கப்படப் போவது அடுத்த தலைமுறையைச் சேர்ந்த நமது மக்கள்தான் என்பதை மட்டும் அனைவருமே வசதியாக மறந்து போய்விடுகிறார்கள்.
படத்தின் திரைக்கதையைப் பொறுத்தமட்டில் படத்தின் கதையில் இருந்து ஒரு நொடிகூட வழுவாமல் ஒரே நேர்க்கோட்டில் செல்கிறது.
நித்யா மேனனை பின் தொடர்ந்து வந்து காதலிப்பதாக சொல்லும் ஒருவனை அவன் தன்னை டார்ச்சர் செய்வதாகச் சொல்லி விரட்டியடிக்கிறாள். ஆனால் இந்தச் சம்பவத்தைப் பார்த்து பயந்து போய் நித்யா மேன்னிடம் டிரெயின் வருகிறது என்று சொல்லி எச்சரிக்கை செய்யும் துல்கர் சல்மானை சுமாரான 100 அடி தூரத்தில் இருந்து பார்த்தவுடனேயே நித்யாவுக்கு துல்கர் மீது ஒரு கவன ஈர்ப்பு வந்துவிடுகிறது.
சில நாட்கள் கழித்து ஒரு சர்ச்சில் இருவரின் பொதுவான நண்பர்களின் திருமணத்தில் சந்திக்கும்போது சட்டென்று ஈர்க்கப்பட்டு பேசி, செல்போன் நம்பரை உடனுக்குடன் பகிர்ந்து கொண்டு பேசத் துவங்கிவிடுகிறார்கள்.
இது இருவரது தரப்பிலும் காதலின் செயல்பாடாகவே சொல்லப்படுகிறது. அது டூயட்டுடன் சில இளமை துள்ளல் காட்சிகளுக்குப் பின்னர் மெல்ல மெல்ல நகர்ந்து காமத்திற்கு சென்று நிற்கும்போது அதையும் இருவருமே மிக எளிதாக எடுத்துக் கொண்டு ‘கல்யாணத்திற்கு முன்னால பிடிச்சவரோட உடலுறவு வைச்சுக்குறதுல்ல தப்பில்லை’ என்று மிக எளிதாக சொல்லிவிட்டு அந்த உடன்படிக்கைக்கு உடன்படுகிறார்கள்.
ஆனால் இதற்கான களம் எங்கே என்பதுதான் இந்தப் படத்தின் மையக் கரு. பிரகாஷ்ராஜின் மனைவியான லீலா சாம்சன் மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர். வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது சில நேரங்களில் வீடு எங்கேயிருக்கிறது என்பது தெரியாமல் மறந்துபோய் அல்லல்படுவார்.  மனைவிக்காக வீட்டில் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்யும் பிரகாஷ்ராஜின் செயல்கள் இவர்களுக்கு தியாகமாக தெரியவில்லை. அதே சமயம் கேலியாகவும் தெரியவில்லை. அவர் விருப்பம் அவருக்கு. அதனால் செய்கிறார் என்றுதான் நினைக்கிறார்கள்.
பிரகாஷ்ராஜின் திருமணமும் காதல் திருமணம்தான். வேறொருவன் கொடுத்த காதல் கடித்த்தை லீலாவிடம் பிரகாஷ்ராஜ் கொடுக்க.. அதில் கையெழுத்து இல்லாததால் பிரகாஷ்ராஜ்தான் தன்னை காதலிப்பதாக நினைத்து சரியென்று தலையாட்டி.. பின்பு குழப்பம் தெளிந்து இருவரும் திருமணம் செய்து கொண்டதாகச் சொல்கிறார். இதில் முன்னெடுத்திருப்பது காதல்தான். பின்புதான் திருமணம்..
இதைக் கேட்ட பின்பும் இளம் காதலர்களுக்கு திருமணம் என்ற பந்த்த்தின் மீதான ஈர்ப்பு வரவில்லை. திடீரென்று மும்பை வரும் அண்ணன், அண்ணியை சமாளிக்க வேண்டி இரவு முழுவதுமான ‘கலவி’யினால் டயர்டாகி தூங்கிக் கொண்டிருக்கும் நித்யாவை வம்படியாக எழுப்பி வீட்டைவிட்டு அனுப்புகிறார் துல்கர். ஆனால் இதனைக் கண்டுபிடிக்கும் அவரது அண்ணி ‘கல்யாணத்தைப் பண்ணிட்டு அப்புறமா என்ன வேண்ணாலும் பண்ணுங்க’ என்று சொல்லிவிட்டுப் போவதும் படத்தில் இருக்கிறது.  இதனையும் காதலர்கள் எப்பவும்போல ஈஸியாகத்தான் எடுத்துக் கொள்கிறார்கள்.
கர்ப்பம் தரித்துவிட்டோமோ என்கிற பயத்தில் நித்யா பயப்படுவதைக் காட்டிலும் துல்கர்தான் அதிகம் பயப்படுகிறார். இதில் சிக்கிவிடுவோமோ.. வீட்டாருக்குத் தெரிந்து விடுமோ என்கிறார். சேர்ந்தும் வாழலாம். ஆனால் ஊருக்கும் சொல்லக் கூடாது என்றால் எப்படி..? இதில் எங்கேயிருக்கிறது சுதந்திரம்..? இது முழுக்க முழுக்க ஏமாற்றுத்தனம். இதையும் அழகாகப் பதிவாக்கியிருக்கிறார் மணிரத்னம். மருத்துவமனையில் துல்கர் படும் பதட்டமும், அதிர்ச்சியும், ஓட்டமும் பரபரப்பை ஏற்படுத்துவதைவிடவும் சிரிப்பலையைத்தான் ஏற்படுத்தியது.
லீலா தொலைந்து போகுதல்.. அதைத் தொடர்ந்து இருவரும் இணைந்து தேடுவது.. அந்தத் தேடுதலில் இவர்கள் இருவரும் மட்டுமே ஈடுபட்டிருக்க.. எங்கேயிருந்து திருமண பந்தத்தின் மீதான ஒரு ஆர்வமும், பாதுகாப்புணர்வும் இந்த இளம் காதலர்களுக்கு ஏற்பட்டது என்பதை இயக்குநர்தான் ‘விம்’ போட்டு நமக்கு விளக்க வேண்டும்..!
பிரகாஷ்ராஜின் கஷ்டத்தையும் இவர்களின் அன்பையும் பார்த்து மனம் மாறிவிட்டார்கள் என்றால் அதுதான் இல்லை.. இந்த அலைச்சலே இவர்களுக்கு ஒருவித பயத்தைக் கொடுக்கிறது. ‘நான் தொலைந்து போனால் நீயும் இதேபோல தேடுவியா?’ என்கிறார்கள். ‘கண்டிப்பாக தேடுவேன். என் கூடவே இருந்திரேன்’ என்கிறார் துல்கர். கிட்டத்தட்ட ‘மெளனராகம்’ படத்தின் கிளைமாக்ஸில் டிரெயினுக்குள் நின்றபடியே ரேவதி சொல்லும் மைண்ட் வாய்ஸ்தான் இது..
சர்ச்சுக்குள் நடக்கும் திருமணத்தின்போது நன்கு படித்த மேன்மக்கள் இப்படி முதன் முறையாக சைகையாலேயே அறிமுகப்படுத்திக் கொண்டு செல் நம்பர்வரையிலும் பரிமாறிக் கொள்வதெல்லாம் மணிரத்னம் படங்களில் மட்டுமே நடக்கும்.. பார்த்தவுடன் நம்பரைக் கொடுத்துவிடும் அளவுக்கு நித்யாவுக்கு துல்கர் மீதிருந்த ஈர்ப்புதான் காதல் என்பதை அவர் கடைசியிலாவது சொல்லியிருக்கலாம். 
அலுவலகம் வந்தவுடன் புராஜெக்ட் என்னாச்சு என்ற அதிகாரியின் கேள்விக்குப் பதிலாக துல்கர் செய்து காட்டும் அந்த மோனோ ஆக்டிங் ரசனையானது. ரசிக்கும்படியாக இயக்கம் செய்யப்பட்டுள்ளது. அதைவிட அந்தக் காட்சியில் எடிட்டிங் மிக பிரமாதம்.. ஒரு சிறிய சிராய்ப்புகூட இல்லாமல் கோர்த்திருக்கிறார் எடிட்டர். ஆனால் இது நிஜமான அளவில் சாத்தியம்தானா என்று தியேட்டரைவிட்டு வெளியில் வந்துதான் யோசிக்க முடிந்தது. இதுதான் இயக்குநரின் சாமர்த்தியம்..!
தமிழ்ச் சினிமாவுக்கே உரித்தான சில சில சென்டிமெண்ட் காட்சிகள் எல்லா காலங்களிலும் உண்டு. அதில் மணிரத்னமும் தப்பிக்கவில்லை. பிரகாஷ்ராஜ் லிவிங் டூ கெதருக்கு சம்மதிக்கவில்லை. முடியாது என்று மறுக்கிறார். ஆனால் நித்யா மேன்ன் பிரகாஷின் மனைவி லீலாவுடன் அமர்ந்து கர்நாடக சங்கீத்த்தை பாடியவுடன் பட்டென்று மனம் மாறி ஒத்துக் கொள்கிறார்.
ஒருவிதத்தில் பார்த்தால் எப்படி என்பீர்கள்..? ஆனால் பிரகாஷ்ராஜ் பார்வையில் பார்த்தால் தான் இதுவரையில் ஒரு கணவனாகவே பராமரித்து வந்த தன் மனைவிக்கு அவளுக்குப் பிடித்தமான வகையில் இன்னொரு பெண்ணும் வீட்டில் இருந்தால் தன் மனைவிக்கு வசதியாக இருக்குமே என்று எண்ணியிருக்கலாம். ஆனால் இந்த வசதிக்காகவே கடைசியில் லீலாவை பார்ப்பதும், கண்டுபிடிப்பதும் நித்யா என்றே திரைக்கதையில் காட்சிகள் அமைந்திருக்கின்றன. நல்ல முறையில் பேலன்ஸ் செய்திருக்கிறார் இயக்குநர்.
இறுதிக் காட்சியில் இவர்களுடைய தேடுதல் வேட்டையின்போது ஏற்படும் சின்னச் சின்ன சண்டைகள்.. என்கிட்ட வேணும்னே சண்டை போடுற..? நாளைக்கு நான் கிளம்பறதா வேண்டாமா..? என்னை போன்னு சொல்றியா..? இல்ல வேணாம்ன்னு சொல்றியா..? என்ற சின்னச் சின்ன வசனங்களாலும், அந்த மழைக் காட்சி.. படபடக்கும் அவர்களுடைய தேடுதல் பார்வைகள்.. இவைகளுடே பம்பரமாக இயக்கியிருக்கும் இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத் திறம் நிச்சயமாக பெருமைக்குரியது.. இயக்கத்தில் தான் இன்னமும் சளைத்தவனில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் மணிரத்னம்.
எப்பாடுபட்டாலும் திருமண ஒப்பந்தத்தை முறிக்காதே என்பதற்கு அடையாளமாக வாழ்கிறார் பிரகாஷ்ராஜ். தன்னை காதலித்த மனைவி இப்போது தனக்கு மிகப் பெரும் தொந்தரவாக இருக்கிறார் என்றாலும், அவரை விட்டு பிரிய மனமில்லாமல் இப்போது தான் மனைவியாகி அந்த வீட்டில் அவர் வளைய வரும் காட்சிகளும், பேசும் உணர்ச்சிமிக்க நெஞ்சைத் தொடும் வசனங்களும் அருமை. இப்படியொரு காதலுடன் வாழும் தம்பதிகள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்றாலும், இவர்களைப் பார்க்கும் தம்பதிகள் ஒரு நிமிடமாவது தங்களை பரிசோதித்துக் கொள்வார்கள் என்று உறுதியுடன் நம்பலாம்.
பிரகாஷ்ராஜின் நடிப்பை பற்றிச் சொல்லவே தேவையில்லை. மற்ற படங்களில் காட்டும் மிகையுணர்ச்சி நடிப்பையும், அலங்கார, ஆர்ப்பாட்டமான தோற்றத்தையும் இதில் விட்டொழித்துவிட்டு சாதாரண மிடில் கிளாஸ் கணபதியாக ஆர்ப்பரித்திருக்கிறார். நன்று..
இவருக்கு ஜோடியான லீலா சாம்சன். கச்சிதமான பொருத்தம். “ஒரு நாள் உன்னையும் மறந்திருவனா கணபதி..?” என்று வருத்தமும் இல்லாமல் சோகமும் இல்லாமல் அந்த நோயாளி போன்று கேட்கும்போது உச்சுக் கொட்ட வைத்துவிட்டார். இவருக்குக் கிடைத்திருக்கும் நறுக், நறுக் வசனங்களும் இவரது கேரக்டர் ஸ்கெட்ச்சை சுவாரசியப்படுத்துகின்றன.
‘வாயை மூடிப் பேசவும்’ படத்தில் அறிமுகமான துல்கர் சல்மான் துள்ளலான நடிகராக இருக்கிறார். கார்த்திக்கை ஞாபகப்படுத்துகிறார். அவரது அப்பாவின் குரல். ஆனால் கொஞ்சம் மென்மையானதாக இருக்கிறது. முதல் காட்சியில் இருந்து இறுதிவரையிலும் அவருடைய பரபரப்பு, முக அழகு, ஷாட் பை ஷாட் காட்டியிருக்கும் எக்ஸ்பிரஷன்ஸ் அனைத்துமே ஒரு யூத்தின் அட்டகாசமாகவே இருக்கிறது..!
சர்ச்சுக்குள் உட்கார்ந்து கொண்டு பேசத் துவங்கி, நித்யாவுடனான உறவுக்கு ஓகே வாங்கும் கட்டம்வரையிலும் இவருடைய அராஜகத்திற்கு ரசிகைகள் நிச்சயம் திரண்டிருப்பார்கள். நித்யா போன்ற நடிப்பு ராட்சஸிக்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார்.
முன்பு நேரம படத்தில்தான் ஒரு ஹீரோயினின் சின்னச் சின்ன முக பாவனைகள்கூட மிக அழகாக்க் காட்சிப்படுத்தப்பட்டிருந்த்து. இதில் நித்யா மேன்னும் அந்த வகைதான். லைவ் ரிக்கார்டிங் என்றாலும்கூட சின்னச் சின்ன வசனங்களை அலட்சியமாக போகிறபோக்கில் சொல்லிவிட்டுப் போகும்போதுகூட அவருடைய முகத்தில் தெரியும் நடிப்பு ரசிக்க்க்கூடியதாகவே இருந்த்து.
ஹீரோயினை டூயட்டுக்கும், குத்துப்பாட்டுக்கும் மட்டுமே பயன்படுத்தி வரும் தமிழ்ச் சினிமாவில் மணிரத்னம் போன்ற இந்த படைப்புகள் மூலம்தான் ஹீரோயினையும் கொஞ்சம் நடிக்க வைங்கப்பா என்று மற்ற இயக்குநர்களுக்கு நாம் உரிமையோடு சொல்ல்லாம்.
மிக இயல்பான கச்சிதமான நடிப்பு. தன்னிடம் பொய் சொல்லிவிட்டு தன்னுடைய அம்மாவை பார்த்து அவருடைய மிரட்டலை எதிர்கொண்டு வந்திருக்கும் துல்கரின் மேல் கோபம் கொண்டு படபடவென்று கோபத்தில் வார்த்தைகளை கொட்டியபடியே சாலைகளில் நடந்தபடியே ஓடியபடியே பேசுகின்ற பேச்சுக்களும், நடிப்பும் ஏ ஒன். சிறிது நேரத்தில் சுற்றுப்புறத்தை மறந்துபோய் படத்தில் லயிக்க வைத்துவிட்டது இந்தக் காட்சியில் ஹீரோ, ஹீரோயின் இருவரின் நடிப்பும்..!
அக்னி நட்சத்திரம் படத்தில் பாடல் காட்சிகளில் வெரைட்டியாக ஒளிப்பதிவு செய்து கைதட்டல் வாங்கிய பி.சி.ஸ்ரீராம் இதிலும் அப்படியேதான் செய்திருக்கிறார். மும்பையின் அழகை அழகாகவே படமாக்கியிருக்கிறார். எத்தனை கோணங்கள்.. எத்தனை பார்வைகள்.. எத்தனைவிதமான சிச்சுவேஷன்கள்.. மழை, காற்று, வெயில், மாலை நேர வெயில்.. காலை நேர உதயம் என்று விதம்விதமாக ஒவ்வொரு காட்சியின் தன்மைக்கும் ஏற்றவகையில் காட்சிப்படுத்தி படமாக்கியதால் படத்தில் கேமிராமேனின் பங்களிப்பும் கணிசமானதாக இருக்கிறது..
இயக்குநரே அதிகமாக ஸ்கோர் வாங்கிக் கொண்டு போகிறார் என்றாலும் சூப்பரான இயக்கம் என்றால் அதில் கணிசமாக எடிட்டரின் பங்களிப்பும் இருந்தாக வேண்டும். இதில் இருக்கிறது.  பாடல் காட்சிகளில் குறிப்பாக பறந்து செல்ல வா பாடல் காட்சியில் ஒளிப்பதிவாளருடன் போட்டியிட்டிருப்பவர் எடிட்டரும்கூடத்தான். சின்னச் சின்ன ஷாட்டுகளை மிக அழகாகத் தொகுத்து நீண்ட நெடிய ஷாட்டுகளை இணைத்து கச்சிதமாக ரசிக்க வைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர். கிளைமாக்ஸிலும் எடிட்டரின் கைவண்ணம் அதிகம்.
வேறெந்தப் படத்திலும் இல்லாத அளவிற்கு இப்படத்தில்தான் பின்னணி இசையை  குறிப்பிடத்தக்கவகையில் கவனப்படுத்தி இசையமைத்திருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். அதை மறுப்பதற்கில்லை. முற்பாதியில் துல்கர்-நித்யா சந்திப்பின்போதெல்லாம் இடையிடையே வரும் பின்னணி இசை ரசனையானது. கேட்பதற்கும், அந்தச் சிச்சுவேஷனுக்கும் இனிமையாக இருந்தது.. ரஹ்மானின் பாடல்களெல்லாம் வழக்கொழிந்துபோய் காலமாகிவிட்டதால் இந்தப் படத்தின் பாடல்களையும் குறிப்பிட்டுச் சொல்வதற்கில்லை. எல்லாம் ஒரு காலம் என்று பெருமூச்சு விட வேண்டியதுதான்..!
முதற்பாதி மின்னல் வேகத்தில் பறந்து சென்றாலும், பிற்பாதி மட்டுமே சில நேரங்களில் ஜவ்வாக இழுத்து நின்று தேங்குவதுதான் ஒரேயொரு குறை. சில இடங்களில் வசனம் புரியாத அளவிற்கு ஒலிக்கலவை செய்திருப்பதும் இதற்குக் காரணம். உதாரணம், நித்யாவின் அம்மா துல்கரின் அண்ணன் வீட்டிற்குச் சென்று பெண் கேட்கும்போது அண்ணன் போனில் துல்கரையும், பிரகாஷ்ராஜையும் அழைத்து பேசுகின்ற காட்சி.. பல வசனங்கள் காதுகளில் நுழையாமலேயே போய்விட்டது..!
சுருக்கமாகச் சொல்லப் போனால் இந்தப் படத்தில் லிவிங் டூ கெதர் என்னும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் கலாச்சாரத்தை இயக்குநர் மணிரத்னம் ஆதரிக்கவில்லை; ஊக்கப்படுத்தவில்லை. மாறாக அது இன்றைய சமூக வாழ்க்கைக்கு பாதுகாப்பில்லாதது. இதனால் இரு தரப்பினருமே பாதிக்கப்படுவார்கள். அதில் அன்பு இருக்காது. பாசம் இருக்காது. நேசம் இருக்காது. பரிவு இருக்காது.. மாறாக உடல் இன்பம் மட்டுமே முதன்மையான தேடலாக இருக்கும் என்பதை தன்னுடைய பாணியில் ரத்தினச் சுருக்கமாக எடுத்து வைத்திருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.
ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாத்தும் அவரவர் விருப்பம். ஆனால் தன்னுடைய கொள்கையை வெள்ளித்திரையில் மட்டுமே வெளிப்படுத்துவேன் என்று சொல்லும் மணிரத்னம் இந்தப் படத்தின் மூலம் இது தொடர்பான தனது கொள்கையை தனது தனி மனித உரிமையைப் பயன்படுத்திச் சொல்லியிருக்கிறார்.
மணிரத்னம் இதற்கு முன் இயக்கி தோல்வி கண்ட படங்களின் கதைகளெல்லாம் பல்வேறு இடங்களில், கதைகளில் இருந்து எடுக்கப்பட்டவை. அவைகளின் படமாக்கலில் செய்நேர்த்தி இருந்தாலும் மக்களிடமிருந்து அன்னியப்பட்ட கதையாக இருந்த்தினால் மணிரத்னம் அவ்ளோதானா என்றுகூட கேள்விகள் எழுந்தன. ஆனால் இந்த முறை இந்த மண்ணில் இருந்தே.. இப்போதைய மக்களின் வாழ்க்கை முறையில் இருந்தே ஒரு கதையைச் சுரண்டி எடுத்துக் கொடுத்ததினால் படம் வெற்றியாகி இயக்குநர் மணிரத்னம் மீண்டும் கவனிப்பிற்கு உள்ளாகியுள்ளார்.
மற்ற இயக்குநர்களும் இதனைக் கவனத்தில் கொண்டால் நல்லது. ஏனெனில் இந்த மண்ணில் இதுபோல் எடுக்கப்படாத கதைகள் லட்சணக்கணக்கில் உள்ளன. ஒரு உண்மையான படைப்பாளிக்குத்தான் அந்தக் கதை கண்ணில் தெரியும். எடுத்துக் கொடுங்கள். பார்க்கத் தயாராக இருக்கிறோம்..!
ஓ காதல் கண்மணி – டபுள் ஓகே கண்மணி..!

காஞ்சனா-2 - சினிமா விமர்சனம்

18-04-2015
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
ஒரு திரைப்படத்தின் அடுத்த பாகம் என்று சொல்லும்வகையிலான திரைப்படமாக தமிழில் இதுவரையிலும் ‘சிங்கம்’ படம் மட்டுமே வந்துள்ளது.
ஆனால், படத்தின் பெயரை மட்டும் வைத்துக் கொண்டு கதையின் தொடர்ச்சியாக வேறு நடிகர்களை வைத்து எடுக்கப்பட்ட ‘பில்லா’ படத்தின் தொடரில் மூன்றாவது கதையும் வெளியாகிவிட்டது.
இப்போது ‘முனி’, ‘காஞ்சனா’, ‘காஞ்சனா-2’ என்று வரிசையாக ஒரே ஹீரோ, ஒரே கதையமைப்பு என்ற ரீதியில் சீரிஸ் படங்களை எடுத்து பயமுறுத்தி வருகிறார் இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ். இது முதல் திரைப்படமான ‘முனி’ திரைப்படத்தின் தொடர்ச்சியான பாகமாக இல்லாமல்.. ஒரே மாதிரியான கதையாடல் கொண்ட திரைப்படங்களாக  உருவாகியிருக்கின்றன. 

தமிழகத்தின் முன்னணி டிவி சேனல்கள் இரண்டுக்கும் கடும் போட்டோ போட்டி. யார் முதலிடத்தைப் பிடிப்பது என்றும், டி.ஆர்.பி. ரேட்டிங்கில் முந்துவது யார் என்றும் மோதிக் கொள்கிறார்கள். இதுநாள்வரையில் முதலிடத்தில் இருந்த கிரீன் டிவி இப்போது இரண்டாமிடத்திற்குப் போகிறது.
இது பொறுக்க முடியாத கிரீன் டிவி நிர்வாகியான சுஹாசினி தனது டிவியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களை அழைத்து இது குறித்து பேசுகிறார். “எதிர் டிவி பக்தி சம்பந்தமான நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஒளிபரப்பித்தான் முதலிடத்தைப் பிடித்திருப்பதால் நாமும் அதுபோல சென்ஸிட்டிவ்வான, மக்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் ஒரு விஷயத்தை தயாரிப்போம். நிச்சயம் முதலிடத்தை திரும்பவும் பிடிப்போம். அவர்கள் பக்தி என்றால் நாம் பேயை பற்றி எடுப்போம்..” என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
சுஹாசினி இதற்கு ஓகே சொல்ல.. அதே டிவியில் தயாரிப்பாளராக இருக்கும் டாப்ஸியின் தலைமையில் ஒரு டீம் பேய் இருப்பதாக செட்டப் செய்யும் நிகழ்ச்சிக்காக ஈ.சி.ஆர். ரோட்டிற்குச் செல்கிறார்கள். அதே டிவியில் கேமிராமேனாக பணியாற்றுகிறார் ஹீரோ ராகவா லாரன்ஸ். டாப்ஸியின் மீது ஒரு கண் வைத்து உள்ளுக்குள் காதலில் உருகிக் கொண்டிருக்கிறார். டாப்ஸி என்பதால் பேய் என்கிற விஷயத்தைத் தாண்டியும் இந்த தொடருக்கு கேமிராமேனாக பணியாற்ற ஒப்புக் கொண்டு இவர்களுடன் செல்கிறார்.
போன இடத்தில் கடற்கரை மணலில் படமெடுக்கும்போது டாப்ஸியின் கையில் ஒரு தாலிக் கயிறு சிக்குகிறது. அது கைக்கு வந்தவுடன் அந்த வீட்டில் பல விபரீதச் செயல்களும் நடைபெறுகிறது.
இதனால் மன உறுத்தலுக்கு உள்ளாகும் டாப்ஸி இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஒரு மாந்திரீகரிடம் செல்கிறார். அவர் இந்தப் பிரச்சினையை தற்காலிகமாக முடித்து வைத்தாலும் இதில் டாப்சி சந்தேகப்பட்டு தாலியைக் கேட்க.. “மீண்டும் அதே இடத்தில் சென்று தோண்டிப் பார்…” என்கிறார் மந்திரவாதி.
டாப்ஸி தேவையில்லாமல் மீண்டும் அந்தத் தாலியைத் தோண்டியெடுக்க. இந்த முறை தாலிக்குச் சொந்தக்காரியான அந்த பேய் என்னும் ஆத்மா தனது பழி வாங்கும் வேட்டையைத் துவக்குகிறது. பேய் இருக்கிறது என்று சொல்லி செட்டப் செய்து மக்களை ஏமாற்ற நினைத்து நிகழ்ச்சியைத் துவக்கியவர்களுக்கு நிஜமாகவே பேயுடன் இருக்க வேண்டிய சூழலும். பேயுடன் அல்லல்படும் நிலைமையும் ஏற்படுகிறது.
டாப்ஸியும், இவரைக் காதலிக்கும் ராகவா லாரன்ஸும் பேய்க்குரியவர்களாகிவிட.. கடைசியில் என்னாகிறது என்பதுதான் படமே…!
கோவை சரளா, ரேணுகா, மனோபாலா, மயில்சாமி, முத்துக்காளை, நெல்லை சிவா, ஸ்ரீமன், நித்யா மேனன், ஜெயபிரகாஷ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் என்ற நட்சத்திரப் பட்டாளத்தை வைத்துக் கொண்டு எப்படியெல்லாம் நகைச்சுவையில் கில்லி விளையாடலாம் என்பதை செய்து காட்டியிருக்கிறார் இயக்குநர் ராகவா லாரன்ஸ்.
ராகவா லாரன்ஸுக்கு முந்தைய படங்களை போலவே அதே கேரக்டர் ஸ்கெட்ச். பேய் என்றால் பயம்.. பயம்.. அப்படியொரு பயம்.. வீட்டு படுக்கையறை முழுவதிலும் பேயோட்டும் தாமிர பட்டயங்களாகவும், எலுமிச்சை பழங்களாகவும், குங்குமக் கறையாகவும் மாற்றி வைத்திருக்கிறார்.  படுக்கையில் அனைத்து சாமிகளையும் வரைந்திருக்கும் போர்வைகளை அடுக்கியிருக்கிறார். இந்த வரிசையில் கடைசியாக நித்தியானந்தாவும் உண்டு.
முதல் பாதியில் வரும் பயந்தாங்கொள்ளி லாரன்ஸைவிடவும பிற்பாதியில் வரும் குழந்தை முதல் பாட்டிவரையிலான லாரன்ஸே கவனிக்கப்படுகிறார். நித்யா மேனனை காதலிக்கும் மொட்டை சிவா கேரக்டரில் அதிகம் ரசிக்கப்படுகிறார் என்றே  சொல்லலாம்.
டாப்ஸி என்றொரு நடிகைக்கு இத்தனை அழகாக நடிக்கத் தெரியுமா என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது இந்தப் படம். இயக்கம் சரியாக இருந்தாலே நடிப்பு தானாகவே வரும் என்பார்கள். அந்த வரிசையில் ராகவா லாரன்ஸின் தப்பு பண்ணாத இயக்கம் டாப்ஸியை நடிக்கத் தெரிந்த நடிகையாக்கிறது. கொஞ்சம் கிளாமருடனும், திகில் காட்சிகளில் பயமுறுத்தியும், பயந்த காட்சிகளிலும் பயப்பட்டும் ரசிகர்களையும் இதன் கூடவே டிராவல் செய்ய வைத்திருக்கிறார் டாப்ஸி.
ஒரே நாளில் வெளியான இரு படங்களிலும் அதகளம் செய்திருக்கிறார் நித்யா மேனன். ‘ஓ காதல் கண்மணி’க்கு நேர் எதிரான ஒளிப்பதிவு இருந்தும் திரையில் அசத்துகிறார் நித்யா மேன்ன். நடிப்பில் குறை வைக்கவில்லை. உடல் ஊனமுற்றவராக த்த்ரூபமாக அப்படியே உரித்து வைத்திருக்கிறார். லாரன்ஸின் படம் என்றாலே இப்படித்தான் இருக்கும் என்பது தெரிந்தும் இதில் தனது கேரக்டர் பிடித்து நடித்திருக்கிறார் என்றால் நித்யா மேன்னுக்கு ஒரு சபாஷ் சொல்ல வேண்டும்.
கோவை சரளாவும், ரேணுகாவும் டாப்ஸியிடம் மாறி மாறி மாத்து வாங்கும் காட்சியில் தொடர்ச்சியாக தியேட்டரில் சிரிப்பலை.. கொஞ்சம் ஓவரோ என்றும் சொல்ல தோன்றுகிறது. இன்னமும் இந்த இடுப்பில் தாவி உட்காரும் மேனரிசத்தைக் கைவிடவில்லை லாரன்ஸ்.. இதனை அடுத்தப் பாகத்தில் தவிர்த்தால் நல்லதுதான்..!
ஒரு சில காட்சிகளே என்றாலும் மொட்டை ராஜேந்திரனின் சிற்சில வசனங்களும் கை தட்டலை அள்ளுகின்றன. தவிர்க்க முடியாத வில்லனாகிக் கொண்டே செல்கிறார் ராஜேந்திரன். வாழ்த்துகள். பாராட்டுக்கள்.
குழந்தைகளும் சேர்ந்து ரசிக்கும்படிதான் எடுத்திருக்கிறோம் என்றார் ராகவா. படத்தின் பிற்பாதி காட்சிகளில் சில பயமுறுத்தல்கள் குழந்தைகளையும் பயமறுத்தியிருக்கும். அந்த அளவுக்கு ஆடியிருக்கிறார் ராகவா லாரன்ஸ். கடைசி பாட்டும், டான்ஸும் பேய்க்கும் சேர்த்தே வெறியை ஏற்றியிருக்கிறது.
ஒலிக்கலவை என்பது அனைத்தையும் சம அளவில் வைத்திருப்பது என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்தப் படத்தில் காதைக் கிழித்து தோரணம் கட்டிவிட்டது ஒலி. இதைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்..!
காமெடி, பேய் படம் என்பதால் லாஜிக்கெல்லாம் பார்க்கவே தேவையில்லை என்பதால் அனைத்தையும் ஓரங்கட்டிவிடலாம். இசையின் இரைச்சலையும் தாண்டி பாடல் காட்சிகளில் கண்ணுக்குக் குளிர்ச்சியாக ஆடியிருக்கிறார்கள் டாப்ஸியும், ராகவா லாரன்ஸும், முதல் பாடலில் அத்தனை நீளமான கானா வரிகள் தேவைதானா..? காதிலேயே நுழையவில்லை.. ஆனால் ஆட்டம் மட்டும் அசத்தலானது..
ராஜவேலு ஒளிவீரனின் ஒளிப்பதிவு பாடல் காட்சிகளிலும் இரவு நேர காட்சிகளிலும் தனியாகவே தெரிகிறது. லாரன்ஸ் சின்னப் பொண்ணு போல ரெட்டை சடை போட்டுக் கொண்டு ஆடும் ஆட்டத்திலெல்லாம் ஒளிப்பதிவும் சேர்ந்தே பயமுறுத்தியிருக்கிறது..!
இறுதியில் அடுத்த பாகமும் ரெடி என்று ஸ்டில்ஸ் போட்டிருப்பது ராகவா லாரஸன்ஸின் தன்னம்பிக்கையை காட்டுகிறது..! ஆவியும், பேயும் ஒரு முறையாவது கண்ணுக்குப் படாமல் இருக்கும்வரையில் இது போன்ற படங்களின் மவுசுக்குக் குறையே வராது..!
முனி வரிசையில் அடுத்த வெற்றி இந்தப் படம்..!

துணை முதல்வர் - சினிமா விமர்சனம்

13-04-2015
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
மிக நீண்ட இடைவெளிக்குப் பின்பு இயக்குநர் திலகம் கே.பாக்யராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி முதன்மை கேரக்டரில் நடித்திருக்கும் படம்.
இப்போதைய யூத்துகளுக்கேற்றாற்போல் என்னாலும் படம் எடுக்க முடியும் என்பதைக் காட்டுவதற்காகவே திரைக்கதையை அவசரமாக அமைத்திருக்கிறார் போலிருக்கிறது..! எல்லாம் விழலுக்கு இழைத்த நீர்தான்..!

ஊரிலேயே பெரிய படிப்பு படித்தவர்கள் பாக்யராஜூம், ஜெயராமும். 5, 3-ம் வகுப்புகள்வரையிலும் படித்து முன்னேறியவர்கள். பங்காளிகள்.. பாக்யராஜ் தன்னுடைய தங்கையை டீச்சருக்கு படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இவருடைய மனைவி ஸ்வேதா மேன்ன். 5 வயதில் ஒரு பையன். ஜெயராமுக்கு சந்தியா ஜோடி.
அந்த ஊரில் போக்குவரத்தெல்லாம் பரிசல் மூலமாகத்தான். சாலை வசதியே இல்லை. பிரசவத்திற்காகவும், அவசர மருத்துவ சிகிச்சைக்காகவும் பரிசல் மூலமாகச் சென்றவர்கள் திடீர் வெள்ளத்தில் மூழ்கி இறந்து போன சோகங்கள் அந்தக் கிராமத்தில் இன்னமும் பசுமை மாறாமல் இருக்கின்றன.
சட்டப் பேரவைத் தேர்தல் வருகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் ஊருக்கு பாலம கட்டித் தருகிறோம் என்று சொல்லி ஓட்டை வாங்கிக் கொண்டு ஜெயித்த பின்பு ஊர்ப் பக்கமே வராமல் இருந்த அரசியல்வியாதிகள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் ஊர் மக்கள். இந்த முறை தங்களது கிராமப் பகுதியைச் சேர்ந்த ஒருவரையே நிறுத்துவது என்று முடிவெடுக்கிறார்கள்.
ஜெயராம், பாக்யராஜை கை காட்ட பாக்யராஜ் வேட்பாளராகிறார். பாலம் கட்டுதல்.. பள்ளிகள் இல்லாத்து.. மருத்துவமனைகள் வராத்து ஆகிய முக்கிய கோரிக்கைகளை முன் வைத்தே பாக்யராஜ் தேர்தலில் வெற்றி பெற்று விடுகிறார்.
முதன்முதலாக சென்னைக்குள் கால் வைக்கும் அவருக்கு அப்போதைய அரசியல் சூழ்ச்சிகள் புதிதாக இருக்கின்றன. சம அளவிலான எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் பாக்யராஜின் ஒரு ஓட்டு ஆதரவில்தான் புதிய ஆட்சியே அமையும் என்கிற நிலைமை. கா.கா.தே.கா. என்கிற கட்சிக்கு தனது ஆதரவைக் கொடுத்து துணை முதல்வர் பதவியையும் பெறுகிறார் பாக்யராஜ்.
சட்டப் பேரவையின் முதல் நாளிலேயே ஆளும் கட்சியினரால் அவருக்கு பிரச்சினை ஏற்பட இனி எனது ஓட்டு எதிர்க்கட்சிக்குத்தான் என்று சொல்லி எதிரணிக்குத் தாவுகிறார். ஆட்சி நித்திய கண்டம் பூரண ஆயுசு மாதிரி ஆகிறது. துணை முதல்வரை இரு தரப்புமே வலைவீசித் தேட.. அவரோ தனது கிராமத்திற்கு பாலம் கட்டுவது மட்டுமே தனது லட்சியம் என்கிறார்.
இவ்வளவு அப்பாவியாய் இருக்கிறாரே என்ற நினைப்பில் இரு கட்சியினரும் அவரை மிரட்டுகிறார்கள். பாக்யராஜ் இறந்துவிட்டால் இடைத்தேர்தல் வரும். அதில் தங்களது கட்சிக்காரரை நிறுத்தி ஜெயித்துவிடுவோம் என்று இரண்டு முக்கிய கட்சிகளுமே சவால்விட.. பாக்யராஜ் இப்போது யோசிக்கிறார்.
இடைத்தேர்தல் வந்தால் கிராமத்திற்கு கேட்பதையெல்லாம் செய்து தருவார்களே என்கிற எண்ணத்தில் தான் இறந்துவிட்டதாக ஒரு செட்டப்பை செய்யச் சொல்லி விளையாடுகிறார். ஜெயராமின் தூண்டுதலிலும், ஒத்துழைப்பிலும் இது சரியாகவே நடந்தேறுகிறது..
தேர்தல் நாளுக்குள் அந்த ஊருக்கு பாலம், மருத்துவமனை, பள்ளிக்கூடம் மூன்றுமே கட்டி முடிக்கப்பட்டுவிட்டால்.. தேர்தல் நாளன்று தனது வனவாசத்தை முடித்துவிட்டு ஊருக்குள் வந்து தான் உயிருடன் இருப்பதைச் சொல்லிவிட நினைக்கிறார் பாக்யராஜ். அது முடிந்ததா இல்லையா என்பதுதான் மிச்சம், மீதிக் கதை.
திரைக்கதை மன்ன்ன் என்று பெயரெடுத்தவர் பாக்யராஜ். அதெல்லாம் ஒரு காலம் என்று சொல்ல வைத்திருக்கிறது இந்தப் படம்.
பாக்யராஜ் தனியாக ஒரு கட்சியை நடத்தியிருக்கிறார். அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளிலும் இருந்திருக்கிறார். பத்திரிகை ஆசிரியராகவும் இருந்து வருகிறார். இத்தனையாண்டு கால பொது வாழ்க்கைக்கு பின்பும் இப்படியொரு கதையை தேர்வு செய்ய இவருக்கு எப்படி மனது வந்தது என்று தெரியவில்லை..
பொதுமக்கள் தங்களுடைய கிராமத்தின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க அரசுகளை அணுகும் முறையை இதற்கு முன்பு சேரனின் தேசிய கீதமும் இப்படித்தான் ஆராய்ந்த்து. ஆனால் தோல்வியடைந்த்து.. காரணம் அரசியல்வாதிகளின் உண்மை முகத்தைக் காட்டாமல் மூடி மறைத்து சொன்னதுதான். இதேதான் இந்தப் படத்திற்கும்..!
தங்களுடைய கிராமத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாவிட்டால் ஓட்டு போடவே மாட்டோம் என்று எச்சரித்தை பல கிராமங்கள் தங்களுடைய தேவையை பூர்த்தி செய்திருக்கின்றன. மேலும் இப்போதைய நிலைமையில் அவரவர் சார்ந்த கட்சியினர் அதே ஊரில் இருந்தால் தங்களது கட்சியினை வளர்க்க அவர்கள் கையிலெடுப்பதும் மக்கள் நலன்தான்.
அப்படியிருக்க. இப்படி ஒரு இடைத் தேர்தலை திட்டமிட்டு வரவழைத்து அதன் மூலமாக பாலம் கட்டி, பள்ளிக்கூடம் கட்டி, மருத்துவமனை அமைக்கிற கதையெல்லாம் முடிகிற விஷயமா..? தேர்தல் கமிஷனின் விதிமுறைகளின்படி தேர்தல் நடைபெறும் தொகுதியில், தேர்தல் நடைபெறும் காலக்கட்டத்தில் எந்தவொரு அரசு திட்டமும் மேற்கொள்ளக்கூடாது. எத்தனை தேர்தல் பிரச்சாரங்களில் ஊர், ஊராகச் சுற்றியிருக்கும் பாக்யராஜ் எப்படி இதனை சுலபத்தில் மறந்து போனார் என்று தெரியவில்லை.
திரைக்கதையில் அரதப்பழசான அவருடைய டிரேட் மார்க் விஷயமும் ஒன்று உண்டு. அதனை முற்றிலும் தவிர்த்திருக்கலாம். இப்போதைய இளைஞர்களும், பெண்களும் இதையெல்லாம் தாண்டி எங்கயோ போய்விட்டார்கள். எதற்கு இந்த வீணான ஜொள்ளு வேலை..?
புதிய இயக்குநரின் இயக்கத்தில் அனைவருமே நன்றாகவே நடித்திருக்கிறார்கள். பாக்யராஜின் நடிப்புதான் சில இடங்களில் சகிக்கவில்லை. அவர் கோபப்படும் காட்சிகளெல்லாம் காமெடியாக இருக்கின்றன.  நெகிழ்ச்சியான சம்பவங்களில்கூட அப்படியொரு பீலிங் வரவேயில்லை என்பது மகா கொடுமை.
ஸ்வேதா மேன்ன் மாதிரியான ஒரு நடிகை தமிழில் கிடைக்கவே மாட்டார்கள். எனவேதான் வசதியாக மலையாளத்தில் இருந்து இறக்குமதி செய்திருக்கிறார்கள். கொஞ்சம் கவர்ச்சியும், கூடுதலாக கிளாமரும் காட்டி படத்தின் தேவையை பூர்த்தி செய்திருக்கிறார். கேரளத்து சேச்சியல்லோ பாடல் காட்சியில் ஒரு கிறக்கமாக ஆடி ரசிகர்களையும் கிறங்க வைத்திருக்கிறார்.
ஜெயராம் காமெடி செய்திருக்கிறார். அல்லது செய்ய முயற்சித்திருக்கிறார். ஹோட்டல் அறையில் எதிர்க்கட்சியை சேர்ந்தவருடன் அறையைவிட்டு வெளியேற மாட்டேன் என்று அடம் பிடிக்கும் காட்சியைத்தான் மிகவும் ரசிக்க முடிந்தது.. இப்படி அவ்வப்போது ஏதாவது ஒரு சில காட்சிகளில் தன்னையும் அறியாமல் சிரிக்க வைத்து, கை தட்டவும் வைத்திருக்கிறார் இயக்குநர். காதல் சந்தியா ஜெயராமுக்கு ஜோடி. ஒட்டவில்லை. ஆனாலும் நடித்திருக்கிறார். பாக்யராஜின் தங்கை கேரக்டரில் நடித்த பொண்ணுக்கு ஒரு ஷொட்டு. திரைக்கதையின் ஓட்டையில் இவரது போர்ஷன் சுவையில்லாத்தாக இருந்தாலும் நடிப்பில் குறை வைக்கவில்லை.  
படம் முழுவதும் தர்மபுரி மாவட்டத்தில் ஒகனேக்கல் அருகிலிருக்கும் கிராமங்களில் படமாக்கியிருக்கிறார்கள். கேமிராமேனுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் வேலையைக் கொடுத்திருக்கலாம்.  கேரளத்து சேச்சி பாடல் மட்டுமே முணுமுணுக்க வைத்த்து. ஸ்வேதா, சந்தியாவை வைத்தே ஒரு கிளப் டான்ஸும் உண்டு.
படம் முழுவதுமே கொஞ்சம் எரிச்சலை கொடுத்த விஷயம்.. ஒரே விஷயத்தை இரண்டு, மூன்று முறைகள் திருப்பித் திருப்பிச் சொல்வதுதான். வசனமே இல்லாமல் காட்சியமைப்பிலேயே படத்தை நகர்த்திச் செல்லும்விதத்தை இப்போது பல இயக்குநர்கள் செய்து வரும் நிலையில் இப்படி சீரியல் டைப்பில் வசனங்களை எழுதி கொலை, கொலையாக செய்தால் எப்படி..?
படத்தின் மையக் கருவே நம்பகத் தன்மை இல்லாததாக இருப்பதால்தான் படமும் ரசிக்க முடியாதபடிக்கு போய்விட்டது. அதிலும் கிளைமாக்ஸ் காட்சி அரதப்பழசு. காட்சிகளை வேக, வேகமாக முடிப்பதற்கேற்றாற்போன்று திரைக்கதையையும் வசதியாக எழுதி வைத்துக் கொண்டு இயக்கியிருக்கிறார்கள். இதனாலேயே படம் உப்புச் சப்பில்லாத ஒரு சாம்பாராக மணக்கிறது..!
துணை முதல்வர் – அந்தப் பதவியை அலங்கரிக்கவில்லை..!

நண்பேன்டா - சினிமா விமர்சனம்

04-04-2015
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 3-வது படம் இது. இயக்குநர் எம்.ராஜேஷின் சீடர் ஏ.ஜெகதீஷ் இயக்கியிருக்கும் முதல் படம்.
வழக்கமான காதல் கதைதான். ஆனால் திரைக்கதையில் பல திடீர் திருப்பங்களுடன், இடைவேளைக்கு பின்பு நகைச்சுவை ததும்ப அமைக்கப்பட்டிருக்கும் காட்சித் தொகுப்புகளால் படத்தினை பெருமளவு ரசிக்க முடிகிறது.


தனக்கு ஆதரவளிக்கும் அம்மா.. வழக்கமான அப்பா. மகனை வேலைக்கு அனுப்பி வைக்கத் துடிக்கிறார். ஆனால் மகனான ஹீரோவுக்கு அது பிடிக்கவில்லை. அவருக்குப் பிடித்தது ஊர் சுற்றுவது.  அதுவும் சொந்த ஊரான தஞ்சாவூரில் இருந்து திருச்சிக்கு வந்து அங்கே குடி கொண்டிருக்கும் தனது ஆருயிர் நண்பன் சிவக்கொழுந்து என்னும் சந்தானத்தின் சம்பளத்தை காலி செய்துவிட்டு செல்வதுதான் தலையாய பணி.
அப்படியொரு ரெகுலர் பணியினைச் செய்ய திருச்சிக்கு வரும் உதயநிதியின் கண்ணில் படுகிறார் கனவுக்கன்னி ரம்யா என்னும் நயன்தாரா. திருச்சியில் இருக்கும் ஒரு வங்கியில் துணை மேலாளராகப் பணியாற்றும் இவரை பார்த்தவுடன் வழக்கமான ஹீரோ போல் காதலில் விழுகிறார்.
ஒரு பொண்ணை ஒரே நாள்ல மூணு தடவை தற்செயலா பார்த்தீன்னா அது கண்டிப்பா உனக்கான பொண்ணுதான் என்று ஹீரோவின் அம்மாவே போனில் ஏற்றிவிட.. திருச்சியிலேயே நிரந்தரமாகத் தங்கிவிட முடிவெடுக்கிறார். சந்தானத்தின் ஹோட்டலிலேயே துணை மேலாளராகப் பணியில் சேர்ந்தாலும் முழு நேரப் பணியாக ரம்யாவின் மனதில் இடம் பிடிக்க அலைந்து கொண்டிருக்கிறார்.
மிகுந்த சிரமப்பட்டு காதலுக்கு ஓகே வாங்கும் நேரத்தில் நயன்தாரா சொல்லும் ஒரு சோகக் கதையைக் கேட்டு நக்கலாக சிரித்துவிட காதல் புட்டுக் கொள்கிறது. அதே நேரம் அதே ஊரில் ஸ்கார்பியோ சங்கர் என்னும் மாபெரும் ரவுடி ஒருவரும் இருக்கிறார். அவருடைய ஸ்கார்பியோ கார் வாங்க கடன் கொடுத்த்து நயன்ஸின் வங்கிதான். டியூ கட்டாத்தால் காரை தூக்கி வருகிறார்கள். தன்னுடைய உயிருக்கு உயிரான காரை தூக்கிச் சென்றதால் வங்கிக்கே வந்து நயன்தாராவிடம் சண்டையிட்டுவிட்டுச் செல்கிறார் சங்கர்.
இதே நேரம் திருச்சியில் ஒரு போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக வந்து சேர்கிறார் கருணாகரன். இவர் உதயநிதி மற்றும் சந்தானத்தின் பால்ய காலத்து தோழர். இவர்களால் வதைக்கப்பட்டு வளர்ந்தவர். சமயம் கிடைத்தால் இருவரையும் தூக்கி உள்ளே வைக்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நேரத்தில் தற்செயலாக ஏற்பட்ட ஒரு நிகழ்வில் சங்கர் கத்திக்குத்துப்பட்டு இறந்துவிட அந்த இடத்தில் இருந்த உதயநிதி மற்றும் சந்தானத்தின் மீது கொலை பழி விழுகிறது. இதுதான் சமயம் என்று இன்ஸ்பெக்டர் கருணாகரன் இவர்களை கைது செய்து சிறையில் அடைக்கிறார்.
இவர்கள் இந்த வழக்கிலிருந்து தப்பித்தார்களா..? உதயநிதி-நயன்ஸ் காதல் என்ன ஆனது..? என்பதெல்லாம் மிச்சம் மீதிக் கதையில் தெரிந்து கொள்ளலாம்.
முதல் காட்சியே ஜெயிலில் இருந்து உதயநிதி தப்பித்தலில் இருந்தே துவங்குகிறது. இவர்களுக்கு ஏன் இந்த நிலைமை என்று இப்போதைய சினிமாக்களின் பார்முலா போலவே ஆரம்பிக்கும்போதே படத்தின் நிலைமை நமக்குத் தெரிந்துவிடுகிறது.
இடைவேளைவரையிலும் கதை செல்லும் பாதை நம் கண்ணுக்கே தெரியவில்லை. காதல் இருக்கா இல்லையா என்கிற குழப்பத்திலேயே நாம் இருப்பதால் கதைக்குள் ஆழமாகச் செல்ல முடியவில்லை. போதாக்குறைக்கு பிரேம் பை பிரேம் நயன்ஸின் பிரமாண்டமான அழகு வேறு நம்மை ஆட்கொணர்வதால் என்ன செய்வது என்று தெரியாமல் ரசிகர்கள் திக்குமுக்காடுகிறார்கள்.
இடைவேளைக்கு பின்புதான் இயக்குநர் அடித்து ஆடியிருக்கிறார். ராஜேந்திரனின் கொலைச் சம்பவத்திலேயே 3 டிவிஸ்ட்டுகளை சொருகிவைத்துவிட்டு அதனை சமயம் பார்த்து வெளிப்படுத்தும்விதமும், இதற்கு இடைவேளைக்கு முன்பாகவே நயன்தாரா மூலம் ஒரு இணைப்புக் காட்சியை வைத்திருக்கும்விதத்தைப் பார்த்தால் திரைக்கதை இலாகாவினர் ரொம்பவே தங்களது மூளையைக் கசக்கிப் பிழிந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
இடையிடையே வரும் பாடல் காட்சிகள் படத்தின் வேகத்தைக் குறைத்தாலும் நயன்ஸ் இருப்பதால் யாரும் எழுந்து போகாமல் இருக்கிறார்கள். இதுவே இயக்குநருக்குக் கிடைத்த வெற்றிதான்.
உதயநிதி இந்தப் படத்தில் ஒரு காமெடியான சண்டையும் போட்டிருக்கிறார். தமாஷா இருக்குது என்று நாமளே சொல்லிக் கொள்ளலாம். இதிலும் அவருக்கு நயன்ஸ்தான் உதவியிருக்கிறார். பாடல் காட்சிகளில் நன்கு ஆடியிருக்கிறார். ஆனால் நடிப்புதான் காமெடியைத் தாண்டி வர மறுக்கிறது. இதை கொஞ்சம் தாண்டிவிட்டாரென்றால் வேறு ஜர்னலிலும் சென்று ஒரு ரவுண்டடிக்கலாம்.. மனசு வைப்பாரா உதயநிதி ஸ்டாலின்..?
நயன்ஸை பத்தி என்னவென்று சொல்வது..? வயதானாலும் அழகு இவருக்கு மட்டும் கூடிக் கொண்டே செல்கிறது. பாடல் காட்சிகளில் காட்டும் நளினமும் நயனமும் இவருக்கு மட்டுமே உண்டு என்றே சொல்ல வைத்திருக்கிறது. தன்னுடைய சோகத்தைச் சொல்லியும் அதை மதிக்காமல் சிரிக்கிறார்களே என்கிற கோபத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் நிஜமாகவே உச்சு கொட்ட வைத்திருக்கிறார். காதலை ஏற்றுக் கொள்வதை வெளிப்படுத்தும் போதும் பின்பான காட்சியில் அதை மறுதலிக்கும் காட்சியிலும் நடிப்பைக் கொட்டியிருக்கிறார். இவருக்கு சரியான போட்டியாளராக இருந்திருக்க வேண்டிய உதயநிதி சரி பாதியாக மட்டுமே காட்சியளிக்கிறார் என்பது சோகமானதுதான்..!
சந்தானத்தின் அலப்பறை காமெடி இதில் மிஸ்ஸிங் என்றாலும் சில சில இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார். ஹோட்டலுக்கு தள்ளிட்டு வருபவர்களை அவர் அடையாளம் கண்டு கொண்டு விரட்டியடிக்கும் காட்சிகளும், ஷெரீனுடனான காதல் காட்சி எபிசோடுகளும் அமர்க்களம்..! இது ஷெரீன்தானா.. பப்ளிமாஸ் மாதிரி குஷ்புவுக்கு போட்டியாக வந்திருக்கிறார்.
ஷெரீனின் அப்பாவாக பட்டிமன்றம் ராஜா, உதயநிதியின் அப்பா சாயாஜி ஷிண்டே, அம்மா ரஞ்சனி, ஸ்கார்பியோ சங்கராக நடித்திருக்கும் நான் கடவுள் ராஜேந்திரன்.. சூஸன், ஹோட்டல் அதிபர் சித்ரா லட்சுமணன், கருணாகரன், மனோபாலா என்று பல நட்சத்திரங்கள் அணி வகுத்து அமர்க்களப்படுத்தியிருந்தாலும் நகைச்சுவை படமென்பதால் அனைவருமே மிக எளிதாக மறந்து போகிறார்கள்.
பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவில் அத்தனை நட்சத்திரங்களுமே அழகாகத்தான் இருக்கிறார்கள். நயன்ஸின் அழகை இன்னும் கொஞ்சம் கூட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். விவேக் ஹர்ஷனின் எடிட்டிங்கினால் படத்திற்கு ஒரு இறுக்கமான சூழல் இடைவேளைக்கு பின்பு கிடைத்திருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜின் இசை மட்டும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. நடனத்தை சிறப்பாக அமைத்திருந்தாலும் இசை மட்டும் ஒட்டவில்லை என்பது வருத்தமான விஷயம்.
இயக்குநர் ஜெகதீஷின் முதல் படம் என்பதால் அதிகமாக குறைகளை சொல்லி அலட்சியப்படுத்தாமல், நிறைகளை நிறையவே சொல்லி ஊக்கப்படுத்துவோம். நகைச்சுவை நடிகர்களை போலவே நகைச்சுவை இயக்குநர்கள் கிடைப்பதும் அரிது. இவருடைய மிகப் பெரிய பலமே நல்ல வசனங்கள்தான். உதயநிதி-சந்தானம் காம்பினேஷனில் வசனத்திற்கென்று ஒரு போட்டியே வைத்திருக்கிறார்கள் இந்தப் படத்தில். அத்தனையும் கடுகு தாளித்தல் ரகம்..! பாராட்டுக்கள் இயக்குநருக்கு..!
இந்த வாரத்திய நகைச்சுவை படம் இது ஒன்றே ஒன்றுதான் என்றாலும் படம், பொழுது போக்கிற்கு ஒரு கியாரண்டி என்றே சொல்லலாம்..!

கொம்பன் -- சினிமா விமர்சனம்

03-04-2015
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
டாக்டர் கிருஷ்ணசாமி என்னும் அரசியல்வாதி கொளுத்திப் போட்ட வெடியினால் இந்தப் படத்தைப் பார்க்கும் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. ஆனால் டாக்டர் எதிர்பார்த்த காட்சி ஒன்றுகூட படத்தில் இல்லை என்பதுதான் அவருக்கு ஏமாற்றமான செய்தி.
இராமநாதபுரம் மாவட்டத்தில் வீட்டுக்கு வீடு அரிவாளை பெருமைக்குரிய விஷயமாக வைத்திருக்கிறார்கள். அரிவாளை பயன்படுத்தாமலேயே வைத்திருக்கும் ஆண்களை இளக்காரமாகப் பார்க்கும் ஒரு சமூகக் கலாச்சாரமும் இந்தப் பகுதி மக்களிடையே இருக்கும் குணம். இது வழி, வழியாக வந்து கொண்டேயிருக்கிறது..
இப்படிப்பட்ட ஒரு பிரதேசத்தில் மூன்று கிராமங்களைச் சேர்ந்தே ஒரே இனத்தைச் சேர்ந்த மக்களுக்குள் நடக்கும் அக்கப்போர் மற்றும் சண்டை சச்சரவுகள்தான் படமே..!

பெத்த தாயையும், பொறந்த மண்ணையும் எவன் கேவலப்படுத்தினாலும் தூக்கிப் போட்டு மிதிப்பேன் என்று சொல்லும் கொம்பையா பாண்டியன் என்னும் கார்த்திக்கு முன் கோபம் கூடவே பொறந்தது. சில வார்த்தைகளை நல்லவிதமாக சொல்லிவிட்டு பதில் மரியாதை அதேபோல கிடைக்காவிட்டால் உதைத்து ‘கச்சேரி’யைத் துவக்குவது இவரது வழக்கம்.
இப்படியாகப்பட்டு பல சண்டைகளில் பங்கெடுத்து தனது வீரத்தைக் காட்டியிருப்பதால் குளத்தூர் முன்சீப் கோர்ட்டில் இவர் மீது பல வழக்குகள் பெண்டிங். அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் பெற்று இன்னமும் அடங்காத காளையாக தனது தாய் மாமன் தம்பி ராமையாவுடனும், ஊர்க்கார பெரிசு வேல ராமமூர்த்தியுடனும் சுற்றி வருகிறார் கார்த்தி.
மூன்று ஊர்களுக்கும் பொதுவான அரச நாட்டின் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு வர ஆசைப்படுகிறார் மாரிமுத்து. இவரது மாமனாரான குண்டன் ராமசாமி என்னும் சூப்பர் சுப்பராயன் அநியாயமாக ஊர் நிலங்களை மிரட்டி, உருட்டி வாங்கி சொத்து சேகரித்து வைத்திருக்கும் ஒரு மகா திருடன். தனது மருமகனை பஞ்சாயத்து தலைவராக்க பல வேலைகளைச் செய்கிறார். ஆனால் அனைத்தும் கார்த்தியால் முறியடிக்கப்படுகிறது. போதாக்குறைக்கு குண்டன் ராமசாமியின் மகனையும் அடித்துவிட்டு அதன் பலனையும் அறுவடை செய்யக் காத்திருக்கிறார் கார்த்தி.
இந்த நேரத்தில் பாழாய்ப் போன காதலும் அவருக்கு குறுக்கே வருகிறது. ரதி போன்ற அழகுடன் பார்த்தவுடனேயே தூக்கிச் செல்ல வேண்டும் என்று நினைக்க வைக்கும் தோற்றத்துடனும் இருக்கும் லட்சுமி மேனனை பார்த்தவுடன் டிபிகல் சினிமா ஹீரோவாகிறார் கார்த்தி.
இவரது காதலை அரசல்புரசலாகத் தெரிந்து கொண்ட அண்ணன் கருணாஸ் இவர்களது காதலை வாழ வைக்க பெண் கேட்டுச் செல்கிறார். பெண்ணின் அப்பாவான முத்தையா என்னும் ராஜ்கிரண் தன்னுடைய ஒரே பெண் என்பதால் மாப்பிள்ளையை பற்றி தீர விசாரித்த பின்புதான் கல்யாணம் என்று சொல்லி தானே களமிறங்கி சிஐடி வேலை பார்க்கிறார்.
நாலு தெருவும், நாப்பது மரங்களும் மட்டுமே இருக்கும் அந்த ஊரில் வருங்கால மாமனாரின் இந்த விசாரிப்பு கார்த்தியின் காதுகளுக்குச் செல்கிறது. இதனை மரியாதைக் குறைவாகவே எடுத்துக் கொள்கிறார் கார்த்தி. ஆனாலும் கல்யாணம் கச்சிதமாக நடக்கிறது. அன்றைக்கும் மாப்பிள்ளை கார்த்திக்கு மாமனார் மீது மரியாதை இல்லாமலேயே இருக்கிறது.  கல்யாணத்திற்கு பின்பு மாமனார் இவர்கள் வீட்டுக்கே வந்துவிட இதுவும் கார்த்திக்கு பிடிக்காமல் போய் குத்தலும், குடைச்சலுமாக குடும்பம் நடத்துகிறார்.
இந்த நேரத்தில் கார்த்திக்கும்,  ராஜ்கிரணுக்கும் வீட்டில் நடக்கும் ஒரு அக்கப்போர் வாய்ச்சண்டையில் இருந்து தாவி கைகலப்பாகிறது. மாமனாரின் மண்டையை பதம் பார்த்துவிடுகிறார் மாப்பிள்ளை. இதனால் கோபித்துக் கொள்ளும் அம்மா கோவை சரளா மருமகள், ராஜ்கிரணுடன் அவர்களது ஊருக்கே போய்விடுகிறார்.
இடையில் லட்சுமியையும், ராஜ்கிரணையும் குண்டன் ராமசாமியின் ஆட்கள் தாக்க.. அவர்களை பதிலுக்குத் தாக்கிவிட்டு தப்பிக்கிறார் ராஜ்கிரண். இந்த வழக்கில் ராஜ்கிரண் ஜெயிலுக்கு போக அங்கேயே அவரை தீர்த்துக் கட்ட ஏற்பாடு செய்கிறார் குண்டன் ராமசாமி.
இப்போது மாமனார் தன் மீது வைத்திருக்கும் பாசத்தின் உண்மைத்தனம் அறிந்து நெகிழ்ந்துபோகும், மருமகன் கார்த்தி மாமனாரை காப்பாற்றத் துடிக்கிறார். செய்தாரா இல்லையா என்பதுதான் மீதிக் கதை.
ஒரு மாமனாருக்கும், ஒரு மருமகனுக்கும் இடையில் நடக்கும் பனிப்போர்தான் படத்தின் மையக்கரு. டாக்டர் கிருஷ்ணசாமி கவலைப்பட்டதுபோல படத்தில் எந்த காட்சியும் இல்லை. இரண்டு சமூகத்தினரின் கதையும் இல்லை. ஒருவேளை இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு மாமனார்-மருமகன் மோதலில் இருக்கும் வீடுகள் சிலவற்றில் அமைதி திரும்பலாம்.
இந்தப் படத்தை பார்க்காமலேயே படத்தின் வசனங்கள் மற்றும் காட்சிகளையெல்லாம் வெளியில் சொல்லி ஒரு பரபரப்பை ஊட்டிய கிருஷ்ணசாமி இந்தப் படத்தை இந்நேரம் பார்த்திருப்பார். என்ன நினைத்திருப்பாரோ தெரியாது.. ஆனால் நிச்சயம் அவரது மாமனாரை ஒரு நிமிடமாவது நினைத்துப் பார்த்திருப்பார் என்று நினைக்கிறோம்.
கேரக்டர் ஸ்கெட்ச்சுகளை மிகக் கவனமாகக் கையாண்டு உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் முத்தையா. தந்தையில்லாத.. தந்தை அருமை தெரியாமல் தாயையும் மதிக்கத் தெரியாமலேயே வளர்ந்து விட்ட மகன் கார்த்தி. தன்னை எதிர்த்து ஊரில் யாரும் பேசத் தயங்கும் நேரத்தில் தான் எதிர்ப்பேச்சு பேச முடியாத சங்கடத்தில் இருப்பதால் காரணமேயில்லாமல் மாமனாரின் மீது வன்மம் கொள்ளும் கேரக்டர் கார்த்தியுடையது.
அசப்பில் பருத்தி வீரனை ஞாபகப்படுத்தினாலும் அதனில் இருந்தும் சிறிது மாறியிருக்கிறார். தனது ஊர்ப் பெருமையையும், தனக்கான மரியாதையையும் கேட்டு வாங்கும் குணமுடையவர்.. கோர்ட்டில் தனது பங்காளிகளுக்காக நீதிபதியிடம் முன்பே பேசி வைத்து வழக்கை தள்ளி வைக்கச் சொல்லும் அளவுக்கு வளைந்து கொடுத்து போகவும் தயாராகவே இருக்கிறார்.
லட்சுமியை பார்த்தவுடன் காதல் கொள்ளும் இளைஞனும், இன்னமும் முரட்டுத்தனத்தைவிடாமலும், புரிந்து கொள்ளாத குணத்துடன் மூர்க்கத்தைக் காட்டும் கொம்பனுமாக வாழ்ந்திருக்கிறார் கார்த்தி. அவரது இயல்பான ஏற்ற இறங்க மாடுலேஷனும் அவ்வப்போது களத்தில் குதித்து அவரை பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறது.
இவருடன் ஆக்ரோஷமாக மல்லுகட்டாமல் பொண்ணைக் கொடுத்திருப்பதால் பக்குவமாக அவளது குடும்பத்தைப் பாதுகாக்கத் துடிக்கும் மாமனார் ராஜ்கிரணும் வாழ்ந்திருக்கிறார். ‘மூன்றரை அடி டன் உடம்பு’ என்று தன்னை மாப்பிள்ளை கிண்டல் செய்வதை கேட்டும் கண்டு கொள்ளாமல் போய் வருவதை சகஜமாக ஏற்றுக் கொண்டவர்.. தன் மகளை தாக்கியதைக் கண்டவுடன் மாப்பிள்ளையை அடிக்கப் பாயும் அந்த ரணகளத்தில் தியேட்டர் மரண அமைதியைக் காட்டியது. இப்படியொரு மாமனார் கிடைக்க வேண்டும் என்று நினைக்குமளவுக்கு ரசிகர்களை கவர்ந்திழுத்திருக்கிறார் ராஜ்கிரண்.  
பார்த்தவுடன் காதல் வெறியைக் கிளப்பிவிடும் அளவுக்கு அழகியான லட்சுமி மேனன் இதில் இன்னும் கொஞ்சம் மெருகேறியிருக்கிறார். ‘பை பை’ போன்ற பாடல்கள் இதில் இல்லையென்றாலும் இருக்கின்ற டூயட்டுகளிலேயே பாவாடை, தாவணியில் சொக்க வைக்கிறார். கார்த்தியுடனான நெருக்கத்தில் கொஞ்சம் ஜில்.. ஜில்லைக் கூட்டியிருக்கிறார்.
சப்போர்ட்டிங் கலகலப்புக்கு தம்பி ராமையாவும், எடுத்தெரிந்து பேசும் மகனை விட்டுக் கொடுக்காமலும், அதே சமயம் கேள்வி மேல் கேட்கும் அம்மாவாக கோவை சரளா பின்னியிருக்கிறார்.  ராஜ்கிரணுடன் லட்சுமி அவர் ஊருக்கே கிளம்பியவுடன் தானும் செல்வதாகச் சொல்லி ஒரு வீர வசனத்தை உச்சரித்துவிட்டுப் போகும் அழகே.. அழகு..!
குண்டன் ராமசாமியாக சூப்பர் சுப்பாராயன் பயமுறுத்துகிறார். போதாக்குறைக்கு அவரது மகன்கள் இருவருமே பயங்கரமாக பயமுறுத்தியிருக்கிறார்கள். கிளைமாக்ஸில் இவர்களது அபார அட்டூழியத்துடன் ராஜ்கிரண் கருப்பசாமி வேடத்தில் ஊரைச் சுற்றி வர ஓடி வரும்போதும் அந்த அலற வைக்கும் பின்னணி இசையுடன் இவர்களது மோதலும் கலந்து கடைசி 25 நிமிடங்கள் படம் பரபர ஓட்டம்தான்..!
இவரது உயிரை எடுக்க குண்டன் தயாராய் இருக்க.. கேட்டதைக் கொடுக்கும் கருப்பசாமி வேடத்தில் இருக்கும் ராஜ்கிரண் ‘என் உசிர்தான வேணும். வந்து எடுத்துக்க..’ என்று சொல்லி கையை விரித்துக் காட்டி நிற்கும் காட்சியும், தண்ணீர்பட்டவுடன் பட்டென்று கருப்பசாமி நினைவுக்கு வந்து ராஜ்கிரண் ஈட்டியாய் பாய்ந்து செல்லும் காட்சியும் அபாரமான இயக்கம்..!
இதில்லாமல் காட்சிகளை வகைப்படுத்தியிருப்பதில் இயக்குநரின் பங்களிப்பை பாராட்டியே தீர வேண்டும். முத்தையாவின் அறிமுகக் காட்சியில் குல தெய்வக் கோவில் வழிபாட்டிற்கு அழைக்கும்போது, ‘அங்கே சாதியைத்தான் முன் நிறுத்துகிறீர்கள். நான் வர மாட்டேன்’ என்று மறுக்கும் காட்சியில் இவரது கதாபாத்திரச் சிறப்பு தெரிகிறது.
லட்சுமி ராஜ்கிரணுடன் ஊர் திரும்பிய பிறகு வீடு தேடி வரும் கார்த்தியை பற்றி லட்சுமி மேன்ன் ராஜ்கிரணுடன் பேசும்பேச்செல்லாம் பக்குவமான ஒரு மனைவியை படம் பிடித்துக் காட்டுவதை போல இருந்தது. இவர்களது சந்தை சண்டையை இந்தக் காட்சியின் இடையூடாக காட்டி திரைக்கதையின் வேகத்தைக் கூட்டியிருப்பதில் இயக்குநர் திரைக்கதை ஆக்கத் திறமையும் தெளிவாகிறது.
பொதுவாக தமிழ்ச் சினிமாவில் முதலிரவு காட்சியை மட்டும் ரசனையோடு படமாக்கித் தொலைவார்கள். ஆனால் இதில் இரண்டாவது நாள்தான் நடப்பதாக காட்சிப்படுத்தி வித்தியாசப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
வேல்ராஜின் அபாரமான ஒளிப்பதிவிற்கு அந்த கிளைமாக்ஸ் காட்சியே ஒரு சாட்சி. அந்த மண்ணின் மனம் மாறாமல், கலாச்சாரம் குறையாமல் கேமிராவில் படம் பிடித்திருப்பதெல்லாம் அந்த ஊரின் அழகைத்தான்..!
ஜி.வி.பிரகாஷின் இசையில் சந்தேகமேயில்லாமல் ‘கருப்பு நிறத்தழகி’ பாடல் சூப்பர்ஹிட். மேலும் ‘கம்பிக்கார வேட்டி’யும், ‘அப்பப்பா’ பாடலும் இன்னொரு பக்கம் ஒரு முறையேனும் கேட்க வைத்திருக்கின்றன. கிளைமாக்ஸ் காட்சியில் பின்னணி இசை அபாரம். அந்தக் காட்சியை தடதடக்க வைக்கும் அளவுக்கு கொண்டு போயிருப்பது ஜி.வி.பிரகாஷ்தான்.
இது இயக்குநர் முத்தையா வாழ்ந்து அனுபவித்த கதையோ என்று நினைக்கத் தோன்றுகிறது. வசனங்கள் அனைத்துமே அந்த மண்ணில் இருந்து சுரண்டி எடுக்கப்பட்டவையாகவே இருக்கின்றன. உன் மண்ணில் எது இருக்கிறதோ அதைத்தான் உன்னால் எடுக்க முடியும் என்பார்கள். அது போலவே யதார்த்தவாதமாக மனம் முழுவதும் ஒரு மூர்க்கத்தனத்தை தனக்குள் வைத்திருக்கும் ஒரு கூட்டத்தின் கதையை தோராயமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
இதில் நமக்கு இருக்கும் ஒரேயொரு வருத்தம்.. படத்தின் ஹீரோவான கொம்பன், தான் செய்யும் வன்முறை சார்ந்த செயல்கள் அனைத்துமே தவறானவை என்று ஒரு நொடிகூட நினைத்துப் பார்க்காத அளவுக்கு இருக்கும் திரைக்கதையும், வசனங்களும்தான். படத்தின் இறுதியிலாவது அது போன்ற காட்சிகள் வரும் என்று எதிர்பார்த்து ஏமாந்துவிட்டோம். இப்படியொரு சமூகம் தன்னை வருத்திக் கொண்டு தனது அடுத்த தலைமுறையையும் பாழ்படுத்தி வருகிறது என்பதை இயக்குநர் அழுத்தந்திருத்தமாகச் சொல்லியிருக்க வேண்டும்.  வன்முறையை எதற்காகவும், எப்படியும், யார் பயன்படுத்தினாலும் அது பயங்கரம்தான். இரண்டு பக்கமும பதம் பார்க்காமல் விடாது.
முன்னதான இவரது படமான ‘குட்டிப்புலி’ மகன்-அம்மா பாசக் கதை. இதில் அதே சமூகத்தைச் சேர்ந்த மாமனார்-மருமகன் பாசப் போராட்டம். இனிமேல் இது போன்று சமூகம் சார்ந்த கதைகளை முன்னிறுத்தாமல் நகரத்திற்கு வந்து எடுக்கப்படாமல் இருக்கின்ற கதைகளை எந்தவித அடையாளமும் இல்லாமல் எடுத்துக் காட்டி புகழடையும்படி இயக்குநரைக் கேட்டுக் கொள்கிறோம்.
எப்படியிருந்தாலும், இந்தக் கொம்பன் அனைவரையும் கவர்ந்திழுத்திருக்கிறான் என்பதில் சந்தேகமில்லை..!