07-02-2016
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
1990-களின் நாயகனான பிரசாந்த் மட்டுமே இப்போது கோடம்பாக்கத்தில் லைம்லைட்டில் இல்லை. இவருடன் களமிறங்கிய மற்றவர்களெல்லாம் இன்னமும் தீவிரமாய் இயங்கிக் கொண்டிருக்க சில, பல காரணங்களால் நடிப்புக்கு இடைவெளி விட்டிருந்த பிரசாந்த், விட்ட இடத்தை பிடிக்க வேண்டுமாய் ஒரு சிறந்த படத்தோடு திரும்பி வர எத்தனிக்கு இப்போது இந்த ‘சாகசம்’ படத்தில் மீண்டு வந்திருக்கிறார்.
2012-ம் ஆண்டு தெலுங்கில் திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், இலியானா நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான ‘ஜூலை(Julai)’ படத்தின் தமிழ் ரீமேக்குதான் இந்த ‘சாகசம்’ திரைப்படம்.
மிக்க் குறுகிய காலத்தில் மிகப் பெரிய அளவுக்கு பணத்தைக் கொள்ளையடிக்க திட்டம் போடுகிறார் வில்லன் கோட்டா சீனிவாசராவ். இதற்காக வங்கிகள் கொடுக்கும் வட்டியைவிடவும் 2 சதவிகிதம் வட்டியை கூடுதலாக தருவதாக தனது பைனான்ஸ் நிறுவனத்தின் சார்பில் விளம்பரம் தருகிறார். மாநிலம் முழுவதும் கூட்டம் கூடுகிறது.. காசை அள்ளுகிறார். ஒரே வாரத்தில் தமிழகத்தின் மொத்த வசூல் 1500 கோடி. இது அத்தனையையும் ஒரே நாளில் அள்ளிக் கொண்டு போக புத்திசாலித்தனமாக இன்னொரு திட்டம் தீட்டுகிறார் கோட்டா.
இன்னொரு வில்லனான சோனு சூட்டின் ஆட்கள் மூலமாக பைனான்ஸ் நிறுவனத்தைக் கொள்ளையடித்து பணம் திருடு போய்விட்டதாகச் சொல்லி அதில் பாதியை பங்கு போட்டுக் கொள்ள நினைக்கிறார் கோட்டா. திட்டத்தை செயல்படுத்தும் தினத்தன்றுதான் ஹீரோவான ரவியின் மூலமாக பிரச்சினை ஏற்படுகிறது.
வீட்டுக்கு ஒரே பையனாகி பொறுப்பில்லாமல் இருப்பதுபோல இருந்தாலும் எல்லா பிரச்சினைகளை பற்றியும் தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார் ரவி என்கிற பிரசாந்த். “25000 ரூபாய் கொடுத்தால் அதை ஒரே நாளில் ஒரு லட்சம் ரூபாயாக மாற்றிக் காட்டுகிறேன்…” என்று சவால் விடுகிறார் அப்பாவான நாசரிடம். அப்பாவும் கொடுக்க அதை வாங்கிக் கொண்டு கர்ண சிரத்தையாக கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட கிளப்புக்கு கிளம்புகிறார் பிரசாந்த்.
வழியில் மழை பெய்து கொண்டிருந்ததால் வில்லன் கோஷ்டி வந்த காரில் லிப்ட் கேட்டு கிளப்புக்கு வந்து சேர்கிறார் பிரசாந்த். சூதாட்டம் மும்முரமாக போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் டிஜிபியே நேரில் ரெய்டுக்கு வருகிறார். இதில் இவர்கள் மாட்டிக் கொள்ள.. அப்போது மேலும் சில கிளப்புகளில் சூதாட்டம் நடப்பதாக டிஜிபிக்கு போனில் செய்தி வருகிறது.
இங்கேதான் பிரசாந்த் சுதாரிக்கிறார். டிஜிபியை கிளப், கிளப்பாக அனுப்பிவிட்டு போலீஸ் கண்ட்ரோல் ரூம் பக்கத்தில் இருக்கும் டிபி வங்கியை கொள்ளையடிக்க யாரோ திட்டம் போடுகிறார்கள் என்று நினைத்து அதனை டிஜிபியிடம் சொல்கிறார் பிரசாந்த்.
டிஜிபியும், பிரசாந்தும் வங்கிக்கு வர அதற்குள்ளாக சோனு சூட்டின் ஆட்கள் வங்கியைக் கொள்ளையடித்து கிரேன் உதவியோடு மொத்த பணத்தையும் சுருட்டி டிரெயிலரில் வைத்து கொண்டு செல்கிறார்கள்.
பிரசாந்த் போலீஸ் உதவியோடு அதைத் தடுத்துவிடுகிறார். நிராயுதபாணியாய் சோனு சூட்டும், அவரது காதலியும் தப்பிப் போக அவரது கூட்டாளிகள் இறந்து போகிறார்கள். பணத்தைத் தூக்கி வந்த டிரெயிலரும் குப்பை மேட்டில் வந்து சிக்கிக் கொண்டு தீயில் கருகுகிறது. இதனால் பணமும் தீயில் எரிந்துவிட்டதாக செய்திகள் வருகின்றன.
வில்லனின் கோபப் பார்வை இப்போது பிரசாந்த் மீது இருப்பதால் அவரை கொஞ்ச நாளைக்கு வேறு ஊரில் சென்று தங்கும்படி டிஜிபியே இவரது வீட்டிற்கு வந்து அட்வைஸ் செய்கிறார். அவருடைய ஆலோசனையின்படி பிரசாந்த் ஒரு விபத்தில் இறந்துவிட்டதாக செய்தியை ஏற்படுத்தி கொடுக்கிறார் டிஜிபி. மேலும் அவரது ஏற்பாட்டின்படி கோவையில் துணை கமிஷனராக இருக்கும் தம்பி ராமையாவின் வீட்டிற்கு விருந்தாளியாக வருகிறார் பிரசாந்த்.
வந்த இடத்தில் ஹீரோயின் நர்கீஸ் பக்ரியைப் பார்த்துவிடுகிறார். வழக்கமான காதல் பொங்கிவிட.. மூன்று டூயட்டுகளுக்கு வழி பிறக்கிறது. ஒரு பக்கம் பணத்தைத் தேடி போலீஸ் அலைய.. வில்லன் சோனு சூட் நாட்டைவிட்டு தப்பியோட நினைக்க.. அதற்குள்ளாக அவனது அடியாட்கள் மூலமாய் பிரசாந்த் உயிருடன் இருப்பது தெரிய வர.. சோனு சூட்டுக்கும் பிரசாந்துக்குமான கட்டிப் பிடி மோதல் துவங்குகிறது..
இறுதியில் யார் வெற்றி பெற்றது..? எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதை இரண்டரை மணி நேர சுவாரஸ்யமான திரைக்கதையில் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..!
மிக நீண்ட இடைவெளிக்கு பின்பு அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திபடுத்த வேண்டி மிக கச்சிதமான ஒரு கதையைத் தேர்வு செய்து அதில் நடித்திருக்கும் பிரசாந்துக்கு ஒரு ஷொட்டு..!
பிரசாந்த் வழக்கம்போல ஒரு கமர்ஷியல் ஹீரோ என்ன செய்வாரோ அதையேதான் செய்திருக்கிறார். வயதானாலும் இன்னமும் தான் ஒரு இளைஞன் என்பதை நிரூபிப்பதற்காகவே சண்டை காட்சிகளிலும், நடனக் காட்சிகளிலும் பிரயத்தனப்பட்டு நடித்திருக்கிறார். சமயங்களில் தம்பி ராமையாவை வசனத்திலேயே வாரிவிடும் காட்சியிலும், அப்பா நாசரிடம் மல்லுக் கட்டும் காட்சியிலும் ரசிக்க வைத்திருக்கிறார். ஆனால் இந்த ஜொள்ளுதான் பிரசாந்துக்கு வழக்கம்போலவே வரவேயில்லை. ஹீரோயினுடனான கெமிஸ்ட்ரிக்கு ஹீரோயினும் கொஞ்சம் நன்றாக இருந்தால்தானே சொல்ல முடியும்.. இந்தப் படத்தின் மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட் ஹீரோயின்தான்..!
டப்பிங் வாய்ஸ் தெளிவாகத் தெரியும் அளவுக்கு வாயசைத்து நடித்திருக்கிறார் நர்கீஸ் பக்ரி. தமிழ் தெரிஞ்ச ஹீரோயின்களுக்கு இவங்க என்னைக்கு வாய்ப்பு கொடுக்குறாங்களோ அன்னிக்குத்தான் ஹீரோவுக்கும் கெமிஸ்ட்ரியோட, பயலாஜியும் ஒர்க் ஆகும்..! இதில் ஹீரோயினைவிடவும் ஹீரோயினின் சித்தியாக வரும் ஹேமாவின் அழகுதான் வாலிப வயோதிகர்களை அதிகம் கவர்ந்திழுத்திருக்கிறது..!
வில்லன் சோனு சூட்.. கோட்டா சீனிவாசராவ் இருவரும் ஒருவரையொருவர் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். வில்லன் ஹெவியாக இருந்தால் மட்டுமே ஹீரோ பேசப்படுவார் என்கிற கருத்தின்படி இதில் சோனு சூட்டின் நடிப்பால்தான் பிரசாந்த் சில இடங்களில் ரசிக்கப்படுகிறார்.
படத்தின் வேகமான திரைக்கதையில் நடிப்பும், பாட்டும், நடனமும்.. சண்டை காட்சிகளும் தொடர்ந்து கொண்டேயிருக்க.. படம் முடிஞ்சிருச்சா என்கிற பீலிங்குதான் இறுதியில் தோன்றுகிறது. அவ்வளவு வேகம்..!
ஒளிப்பதிவாளர் ஷாஜி குமாரின் கலர்புல்லான ஒளிப்பதிவுக்கு ஒரு நன்றி. பாடல் காட்சிகளை இவரால்தான் அதிகம் ரசிக்க முடிந்தது. இந்த இடத்தில் பாட்டு வருதா இல்லையான்னு பாரு என்று தியேட்டரில் பந்தயம் கட்டி ஜெயிக்கலாம் என்கிற அளவுக்கு பாடல் காட்சிகள் கச்சிதமாக அதே இடத்தில் வருகின்றன. இதெல்லாம் எந்தக் காலம் என்று போட்டியே வைக்கலாம்..!
எஸ்.எஸ்.தமனின் பாடல்களில் காதில் விழுந்த வரிகளை வைத்து எதையும் சொல்ல முடியவில்லை. ஆனால் நடனத்திற்கேற்ற இசைதான்..
திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் தியாகராஜனுக்கு பாராட்டுக்கள். கோட்டா, சோனு சூட் இடையே நடக்கும் வார்த்தை விளையாட்டு.. வில்லன், ஹீரோ பேசும் பேச்சுக்கள் என்று பல இடங்களில் புத்திசாலித்தனமான வார்த்தைகளை பயன்படுத்தி காட்சிகளை அடுத்தடுத்து நகர்த்திக் கொண்டு போயிருக்கிறார்கள்..!
அனுராஜ் வர்மா என்கிற புதிய இயக்குநர் இயக்கியிருக்கிறார். பாராட்டுக்கள். ரீமேக் படம் என்பதாலும் ஏற்கெனவே பார்த்தவைகளையே மறுபடியும் பதம் பார்த்திருப்பதாலும் பெரிய அளவுக்கு குற்றம், குறை சொல்ல வாய்ப்பே இல்லாமல் படத்தை இயக்கியிருக்கிறார்.
கமர்ஷியல் படம் என்று முன்பேயே சொல்லிவிட்டதால் இதற்கு பூதக்கண்ணாடி தேவையில்லைதான்.. இருந்தாலும் பிரசாந்துக்கு அந்த வங்கிக் கொள்ளை எப்படி திடீரென்று தோன்றியது..? லிப்ட் கொடுத்த காரில் இருந்த ஆயுதங்களை பார்த்தாலும் இப்படியொரு யோசனை யாருக்காவது வருமா..? ஒரு டி.ஜி.பி.யே கிளப்புக்கு ரெய்டுக்கு வருவாரா..? போலீஸ் துணை கமிஷனராக இருக்கும் தம்பி ராமையாவின் கேரக்டர் ஸ்கெட்ச் இப்படியா காமெடியா இருக்க வேண்டும்..? இதற்கு டி.ஜி.பி.யே உடந்தையாக இருக்கப் போகிறார் என்பது குப்பை மேட்டின் அருகேயே பிரசாந்தை வீட்டுக்கு துரத்தும் டி.ஜி.பி.யின் செய்கையிலேயே தெரிந்துவிட்டது. பின்பு எதற்கு இத்தனை நீள சஸ்பென்ஸ்..? இது போன்ற பல லாஜிக் மேட்டர்களையெல்லாம் ஓரம்கட்டிவிட்டு ஜாலியாக ரசித்துவிட்டு வரலாம் என்றால் இந்தப் படம் ஓகேதான்..!
|
Tweet |
0 comments:
Post a Comment