05-02-2016
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்கிற பெயரை வைத்திருக்கும் இந்தியாவில்தான் மனித உரிமை மீறல்கள் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. ஜனநாயகம் என்கிற பெயரில் இங்கே நடக்கும் பண நாயகத்தையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகைகளையும் இந்த மறைமுகமான சர்வாதிகாரம் விட்டுவைக்கவில்லை.
காலத்திற்கு ஒவ்வாத அரசியல் சட்டங்கள்.. அதை நடைமுறைப்படுத்த சாத்தியமில்லாத வழிமுறைகள்.. ஏட்டில் மட்டுமே கடைப்பிடிக்க முடிந்த சட்ட கருத்துக்கள்.. ஏற்க முடியாத அரசியல் சட்ட பிரிவுகள்.. பக்குவமில்லாத அதிகாரிகள்.. மேலதிகாரிகளின் சொற்களுக்கு கீழ்ப்படிவதைத் தவிர வேறெந்த செயலும் செய்யத் தெரியாத கீழமை அதிகாரிகள்.. நீதி கேட்கும் அளவுக்கு இன்னமும் வளராமல் இருக்கும் இந்த இந்தியச் சமூகம்.. இது எல்லாவற்றுக்குமான மறுக்க முடியாத ஒரு உதாரணம்தான் இந்த ‘விசாரணை’ திரைப்படம்.
தற்போது கோவையில் வசிக்கும் மு.சந்திரகுமார் என்கிற தமிழ் இளைஞர் இருபதாண்டுகளுக்கு முன்பாக வேலை தேடி ஆந்திராவிற்கு சென்றிருக்கிறார். அங்கே குண்டூரில் இருக்கும் ரோட்டோர இரவு நேர ஹோட்டலில் சர்வராக வேலை செய்திருக்கிறார்.
திடீரென்று ஒரு நாள் இவரையும், இவரது நண்பர்களையும் சந்தேகக் கேஸில் இழுத்துச் சென்ற ஆந்திர போலீஸ் சட்ட விரோதமாக தொடர்ந்து 15 நாட்கள் போலீஸ் ஸ்டேஷன் லாக்கப்பில் வைத்து அடித்து, உதைத்து சித்ரவதை செய்திருக்கிறது.
அந்தப் பகுதியில் நடைபெற்ற ஒரு திருட்டு வழக்கில் இவர்களுக்கு சம்பந்தம் உண்டா என்பதை விசாரிக்கத் துவங்கி, கடைசியாக ஏதாவது ஒரு குற்றத்தை ஒத்துக் கொள்ளுங்கள் என்று அவர்களை சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தியிருக்கிறது.
மொழி தெரியாத அந்த சிற்றூரில், உதவிக்குக்கூட ஆட்கள் இல்லாத நிலைமையில் தங்களை தாங்களேதான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற நிலைமையில் உண்ணாவிரதமெல்லாம் இருந்து போராடியிருக்கிறார் சந்திரகுமார்.
கடைசியாக ஏதொவொரு திருட்டு கேஸில் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தியிருக்கிறார்கள். அந்த்த் திருட்டு வழக்கிலும் தான் திருடவில்லை என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லி, நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு தமிழகம் வந்து சேர்ந்திருக்கிறார் சந்திரகுமார்.
தன்னுடைய ரத்தச் சரித்திரமான இந்தக் கதையை ‘லாக்கப் – ஒரு சாமான்யனின் அனுபவங்கள்’ என்கிற பெயரில் புத்தகமாக எழுதி வெளியிட்டிருக்கிறார். இந்தக் கதையைத்தான் இயக்குநர் வெற்றி மாறன் ‘விசாரணை’ என்கிற பெயரில் படமாக்கியிருக்கிறார்.
படத்தின் முதற்பாதிவரையிலும் சந்திரகுமாரின் கதையும், பிற்பாதியில் இயக்குநர் வெற்றி மாறனின் அற்புதமான, புத்திசாலித்தனமான வேறொரு புதிய திரைக்கதையும் இணைந்து படத்தை வெற்றிப் படமாக்கியிருக்கின்றன.
சந்திரகுமாரின் கதையில் ஹோட்டல் என்பதை மட்டும் மளிகைக் கடையாக மாற்றியிருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். மற்றபடி கதைக் களனை சந்திரகுமாரின் புத்தகத்தில் வாசித்ததுபோலவே படமாக்கியிருக்கிறார்.
சந்திரகுமாராக நடித்திருக்கும் ‘அட்டக்கத்தி’ தினேஷிற்கு நிச்சயம் இது புதுமையான அனுபவமாக இருக்கும். தான் செய்யாத குற்றத்தை ஏன் ஒத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஒற்றை கேள்வியே தினேஷை வெற்றி பெற வைத்திருக்கிறது. எத்தனை அடி, உதை வாங்கியும் தான் குற்றம் செய்யவில்லை என்பதை நிரூபிக்க படும் அவரது போராட்டமும், இந்தப் போராட்டத்தை பார்த்து அசந்து போகும் காக்கி உடைக்காரர்களின் இரும்பு மனசையும் தெளிவாக படமாக்கியிருக்கிறார் வெற்றி மாறன்.
அவருடைய நண்பர்களாக நடித்தவர்களும், படாதபாடு பட்டிருக்கிறார்கள். இது போன்ற கதைகளில் நடிப்பதற்கெல்லாம் எதையும் தாங்கும் இதயம் வேண்டும்தான். நடிப்பின் மீதான ஒரு ஆர்வம் இருந்தால் மட்டுமே இது போன்ற படங்களில் பங்கெடுக்க முடியும். தினேஷ் மற்றும் அவரது நண்பர்களாக நடித்தவர்கள்.. படத்தின் பிற்பாதியில் அரசியல் புரோக்கராக இருந்து கடைசியில் சந்தர்ப்ப சூழ்நிலையில் குற்றவாளியாகி நிற்கும் கிஷோர்வரையிலும் அனைவருமே நடிப்பில் உருக்கியிருக்கிறார்கள்.
புத்திசாலித்தனமாக நீதிமன்றத்தில் ஒரு புதிய திரைக்கதையை அமைத்து.. கிஷோரை தமிழ்நாட்டுக்குக் கடத்திக் கொண்டு வர சென்னையில் இருந்து வரும் இன்ஸ்பெக்டர் சமுத்திரக்கனி தனது மொழி பெயர்ப்புப் பணியினால் இந்த நால்வரையும் விடுவிக்க.. பதிலுக்கு அவர்களிடம் ஒரு உதவி கேட்டு.. அவர்கள் மூலமாகவே கிஷோரை கடத்தி வருவதெல்லாம் ஒரு சுவையான திரைக்கதை.
“அப்போ நாங்க கிளம்புறோம் ஸார்..” என்கிற தினேஷின் சந்தோஷ குரலும், “ஸ்டேஷனை கிளீன் பண்ணிக் கொடுத்திட்டு போறீங்களா..?” என்கிற மென்மையான குரலிலேயே “செஞ்சுட்டு போங்க..” என்கிற அதிகாரத் திமிரையும் லேசாக காட்டியிருக்கும் சமுத்திரக்கனியின் குரலும் படத்தின் பல இடங்களில் நடித்திருக்கின்றன. இவர்கள் அப்படியே போயிருக்கலாமே என்கிற பச்சாபத குரல்கள் படத்தின் முடிவில் ரசிகர்களிடம் எழுகின்றன. இதுதான் இயக்குநர் வெற்றிமாறனுக்குக் கிடைத்திருக்கும் வெற்றி.
‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ என்கிற இரண்டு குறிப்பிடத்தக்க வெற்றி படங்களைக் கொடுத்துவிட்டு சில வருடங்களுக்குப் பிறகு இப்படியொரு படத்தைக் கொடுத்திருக்கும் வெற்றிமாறன் தமிழ்ச் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநராக இனியும் இருப்பார். நடுவில் சில படங்களுக்கு கதைகளும், சில படங்களைத் தயாரிக்கவும செய்தார். வருடத்திற்கு ஒரு படம் செய்திருக்கலாம்தான். ஆனால் குவான்டிட்டியைவிடவும் குவாலிட்டிதான் முக்கியம் என்பதை போல நல்ல கதையைத் தேர்வு செய்திருக்கும்விதம் அவருக்குள் இருக்கும் ஒரு சிறந்த இயக்குநரை அடையாளம் காட்டுகிறது.
படத்தில் போலீஸ் சம்பந்தப்பட்ட அனைத்துவித சம்பாஷனைகளும், குறியீடுகளும், பேச்சுக்களும் இடம் பிடித்து படத்தை போலீஸ் சம்பந்தப்பட்ட திரைப்பட லிஸ்ட்டில் இதனையும் நிலை நிறுத்திவிட்டது.
போலீஸ் கமிஷனரின் ஒரு உள்ளடி வேலை. ஆளையும் பிடிக்கணும். அவனை வைச்சு துட்டும் சம்பாதிக்கணும் என்கிற அவரது பண வெறிக்காக உயிரை பணயம் வைத்து ‘ஐயா.. ஐயா..’ என்று சொல்லியபடியே சட்ட விரோதச் செயல்களைச் செய்யும் இன்ஸ்பெக்டர் சமுத்திரக்கனிக்கு கடைசியில் கிடைப்பதென்ன..? இவரும், தினேஷும் செய்த தவறுகள்தான் என்ன..?
யாரோ ஒருவன் சம்பாதிக்க.. அப்பாவிகள் இதற்குக் காரணமேயில்லாமல் பலியாவதெல்லாம் எந்த வகையான சமூக அமைப்பியல் என்று புரியவில்லை. வெற்றி மாறன் இதைத்தான் இறுதியில் நமக்கு புள்ளி வைத்து விளக்கியிருக்கிறார்.
சமுத்திரக்கனியின் நடிப்பு இந்தப் படத்தில் உச்சம் என்றே சொல்ல வேண்டும். கிஷோரை கட்டித் தொங்கவிட்ட பின்பு வேகவேகமாக வந்து அவரைக் கீழேயிறக்கிவிட்டு உதவி கமிஷனரிடம் போனில் ‘ஐயா.. ஐயா’ என்று சொன்னபடியே அவருக்கு பதில் சொல்கின்ற அந்தக் காட்சியில் கிழிந்து தொங்குகிறது இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டம்.
படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு கேரக்டர் இயக்குநர் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஈ.ராம்தாஸ். நல்லவரா, கெட்டவரா என்கிற சின்ன சந்தேகம்கூட வராத அளவுக்கு வார்த்தைகளை மயிலிறகில் தேய்த்து, தேய்த்து தடவுவது போல பேசியே கழுத்தை அறுத்திருக்கிறார்.
அதிலும் “எந்த உயிரும் சும்மா போக்க் கூடாது. அது போறதுக்கும் ஒரு காரணம் இருக்கணும்..” என்று தத்துவமெல்லாம் பேசிவிட்டு அவரே முதல் பொலியை போட்டுவிடும் காட்சிகளெல்லாம் மிக மிக யதார்த்தமான படமாக்கல். ராம்தாஸ் அண்ணே.. பாராட்டுக்கள்..
காதலுக்காக ஆனந்தியை வைத்து இரண்டே இரண்டு காட்சிகள் இருந்தாலும் அதுவும் படத்தில் ஒரு சந்தேகக் கேள்வியை எழுப்புகிறது. அந்தக் காட்சியிலும் காதலுக்கு மொழி தேவையில்லை என்பதை காட்டி அந்தக் காட்சியை சுவையாக்கியிருக்கிறார் வெற்றிமாறன்.
காதலே இல்லாததால் பாடல்களும் இல்லாமல்.. ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையும் படத்தோடு இயைந்து, இணைந்து செல்வதால் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் படத்தை ரசிக்க முடிந்திருக்கிறது. சாதனை படத் தொகுப்பாளர் டி.ஈ.கிஷோரின் கடைசியான படம் இதுவே என்பதால் அவருக்கு ஒரு ஷொட்டு. மிகச் சிறந்த எடிட்டிங்.. 2 மணி நேரம் போனதே தெரியாத அளவுக்கு படம் பார்க்கும் ரசிகனை அப்படியே சீட்டில் அமர்த்திவிட்டார்கள் இயக்குநரும், எடிட்டரும்..!
இந்தப் படம் வெளிநாடுகளில் விருது பெற்றிருப்பதில் ஆச்சரியமில்லைதான். ஏனெனில் தமிழ்ச் சினிமாவில் இதுவரையில் இல்லாதவகையில் உலக சினிமாக்களுக்கே உரித்தான கிளைமாக்ஸ் காட்சி இந்தப் படத்தில் இடம் பிடித்திருப்பது பாராட்டுக்குரியது.
சமுத்திரக்கனி மற்றும் தினேஷின் கதி என்ன ஆனது என்பதை காட்சிகளாக சொல்லாமல் வசனத்தாலேயே சொல்லி முடித்திருப்பது மிகச் சிறப்பு. இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத் திறமைக்கு பெருமை சேர்க்கும் காட்சி இது..!
அதே நேரத்தில் படம் சொல்லியிருக்கும் உண்மைகளும் ஏராளம்..!
வரையறுக்கப்படாத அதிகாரம் கைக்குக் கிடைத்துவிட்டால் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை இந்தப் படத்தில் வரும் சென்னை போலீஸ் கமிஷனர் செய்து காட்டுகிறார். நாம் பார்க்கிறோம்.. அவ்வளவுதான்..!
24 மணி நேரத்திற்கும் மேலாக மேலாக ஸ்டேஷன் லாக்கப்பில் யாரையும் வைத்திருக்கக் கூடாது என்கிற உச்சநீதிமன்றத்தின் ஆணையை எந்த மாநில போலீஸாரும் கேட்பதேயில்லை. கண்டு கொள்வதும் இல்லை. நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றால்கூட வேறு ஏதாவது ஒரு வழக்கில் கைது செய்து வேறொரு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் வைப்பதெல்லாம் இங்கே சர்வசாதாரணம்.
தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக தங்களுக்குப் பிடிக்காதவர்களைக்கூட பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களைக் குற்றவாளியாக்கி கோர்ட், வழக்கு என்று அலையவிடுவதுகூட காக்கி சட்டையைப் போட்டுக் கொண்டு மிருக குணத்தோடு இருக்கும் சில போலீஸ்காரர்களுக்கு கை வந்த கலை.
இப்போதுகூட நெல்லையில் அரசு துறை கான்ட்ராக்ட்டுகளில் பங்கெடுக்கிறார்கள் என்கிற கோபத்தில் ஆளும் கட்சியினர் சிலர் போலீஸுக்கு தூபம் காட்ட.. அந்த கான்ட்ராக்டர்களை மடக்கிப் பிடித்து காலில் சாக்கைக் கட்டி இரும்பு ராடை வைத்து அடித்து காலையும், கையையும் உடைத்து ஆஸ்பத்திரியில் படுக்க வைத்திருக்கிறார்கள் இரும்பு இதயம் கொண்ட நெல்லை போலீஸார்.
இதேபோல் பட்டப்பகலில் அரிவாளை காட்டி நகை பறித்த ஒரு திருடனை பிடித்தவுடன் மாறு கால், மாறு கை வாங்கி இப்போதும் படுத்த படுக்கையாக்கியிருக்கிறது நமது காவல்துறை. இவர்களது இந்தக் கொடூரத்துக்கெல்லாம் எந்த விசாரணையும், தண்டனையும் இல்லை என்பதுதான் இந்தியாவின் துரதிருஷ்டம்.
போலீஸுக்கு தூபம் போடுவதும்.. பாம்புக்கு பால் வார்ப்பதும் ஒன்றுதான் என்பார்கள். எந்த வகையிலும் போலீஸிடம் நட்பு கொண்டிருந்தாலும் அது நமக்கு ஆபத்தானது என்பதற்கு நிறைய உதாரணங்களை நமது தமிழகமும், இந்தியாவும் கண்டிருக்கிறது.
தங்களுக்கு அவ்வப்போது உளவு சொல்லி வந்தவரையே பொய் வழக்கில் கைது செய்து சித்ரவதை செய்து சாகடித்தது தமிழக போலீஸ். தமிழகத்தையே உலுக்கிய சிதம்பரம், அண்ணாமலை நகர் போலீஸ் ஸ்டேஷனில் கற்பழிக்கப்பட்ட பத்மினி என்கிற பெண், அந்த போலீஸ் ஸ்டேஷனை தினமும் காலையில் சுத்தம் செய்யும் வேலை செய்து கொண்டிருந்தவர்தான். அந்த ஸ்டேஷன் போலீஸ்காரர்களுக்கு திடீரென்று கிளம்பிய போலீஸ் வெறிதான்.. அவர்களை அத்தனை வெறியாட்டம் ஆட வைத்தது.
சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதாகவும், குற்றங்களை தடுப்பதாகவும சொல்லிக் கொண்டு அத்தனை அநியாயங்களையும் செய்து வருவதும் இதே காவல் துறையினர்தான். கேஸை முடிக்க வேண்டும் என்பதற்காக “யாராவது சில அப்பாவிகளை பிடித்து அவர்கள் தலையில் குற்றத்தைச் சுமத்தி கேஸை முடித்து வை…” என்கிறார் ஆந்திர டிஎஸ்பி.
“குற்றவாளியாக்கப்பட்ட ஒருவன் கொலை செய்யப்பட்டான் என்பதை ஒட்டுக் கேட்டுவிட்டார்களோ என்கிற அச்சத்தில் அப்பாவிகள் 4 பேரை என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ளச்” சொல்கிறார் சென்னை கமிஷனர். மாநிலங்கள் வேறு, வேறாக இருந்தாலும் போலீஸ் டிரஸ்ஸும், அவர்களது உத்தரவுகளும் ஒன்றுதான்..!
ஜே.கே.திரிபாதி சென்னை போலீஸ் கமிஷனராக இருந்தபோது ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டார்கள் என்று சொல்லி வட மாநில இளைஞர்கள் 5 பேரை நடுஇரவில் அவர்களது வீட்டிலேயே வைத்து சுட்டுக் கொன்றது சென்னை மாநகர போலீஸ். அவர்களை உயிருடன் பிடிக்க ரொம்ப நேரம் ஆயிருக்காது. ஆனால் போலீஸுக்கு அது தேவையில்லை. சாகப் போவது வெளி மாநிலத்து உயிர்கள்தானே..? அதிலும் கேட்பாரே இல்லாத சமூகத்தின் அடித்தட்டு மக்கள்தானே..? என்ன வந்துவிடப் போகுது.. சமாளித்துவிடலாம் என்கிற அதிகாரத் திமிர்தான் அவர்களை இப்படியெல்லாம் ஆட்டம் ஆட வைக்கிறது..!
மனித உரிமை மீறல்கள் பற்றி நமது மக்களும் பெரிதாக கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். ஆனால் தங்களுக்கென்று ஒரு அநியாயம் நேரும்போதுதான் இந்த மனித உரிமையைப் பற்றியே பேசுவார்கள். கவலைப்படுவார்கள்.
வெகுஜன மக்களின் இந்த கண்டு கொள்ளாமைதான் இந்தியாவைப் பிடித்திருக்கும் மிகப் பெரிய சாபக் கேடு. அதற்கு இது போன்ற திரைப்படங்கள்தான் மிகச் சிறந்த மாற்றாக வந்திருக்கின்றன. இவைகளை ஒரு முறையேனும் பார்த்து, இந்தச் செய்திகளை நமது வருங்கால சந்ததிகளின் காதுகளில் போட்டு அவர்களை எச்சரிக்கையுடன் இருக்கும்படி சொல்ல வேண்டியது நமது கடமை.!
நம் ஒவ்வொருவருக்கும் சகோதரனாக இதைத்தான் இயக்குநர் வெற்றிமாறனும் சொல்லியிருக்கிறார். தயவு செய்து கேளுங்கள்..!
விசாரணை – தமிழ்ச் சினிமாவில் ஒரு உலக சினிமா..!
|
Tweet |
4 comments:
இதுவரையில் படம் குறித்த எந்த யோசனையுமில்லை...தங்களது விமர்சனம் படித்த பின் தவறவிட கூடாத அரிய திரைக்காவியங்களில் இதுவுமொன்றென்பது புலப்படுகிறது!!நாளை உடனே பார்க்க வேண்டும்...!
பதிவே அற்புதமா இருக்கு கண்டிப்பா படம் பாக்கணும்.....
பதிவே அற்புதமா இருக்கு கண்டிப்பா படம் பாக்கணும்.....
excellant review mr.saravanan
movie is also good
2 months back this book review was published in dinamalar
Post a Comment