பிச்சைக்காரன் - சினிமா விமர்சனம்

10-03-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

விஜய் ஆண்டனியின் தொடர்ச்சியான 4-வது வெற்றி இது. ஆச்சரியமாக இருக்கிறது. இவருடைய நடிப்பு கேரியர் மேலே, மேலே உயர்ந்து கொண்டே போவதை பார்க்கின்றபோது விஜய் ஆண்டனியிடம் இசைத் திறமை மட்டுமில்லாமல் கதையைத் தேர்வு செய்யும் திறமையும் தனக்கு எது வரும், எது வராது என்பதை நன்கு தெரிந்து கொண்ட ஒரு நடிகர் என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

உங்களுடைய தாயாருக்கு உடல் நலம் சரியில்லை என்றால்.. அதற்காக என்ன செய்வீர்கள்..? அதிகப்பட்சமாக எந்த அளவுக்கு உருகுவீர்கள்..? அம்மாவை எந்த அளவுக்குத் தாங்குவீர்கள்..? எப்படியெல்லாம் காப்பாற்ற துடிப்பீர்கள்..? மருத்துவம் உட்பட அனைத்தும் கைவிட்டுவிட்ட சூழலில் உங்களுக்கு இருப்பது நம்பிக்கையும், பிரார்த்தனையும் மட்டும்தான். அந்த பிரார்த்தனையை ஒரு நிமிடம் கண்ணை மூடியும் செய்யலாம். பரிகாரமாகவும் செய்யலாம்.

பரிகாரம் என்றால் எப்படி..? உங்களுடைய ஒரு நாள் பொழுது எந்தவிதத்திலும் கெட்டுவிடாமல் பாதுகாக்கும்படியான பரிகாரம்தானே..? இதையும் மிஞ்சிய பரிகாரம் என்றால் என்ன செய்வீர்கள்..? சொல்வீர்கள்..? அப்படி இதுவரையிலும் யோசிக்கவே முடியாத ஒரு விஷயத்தை மிக அழகான திரைக்கதையில், அழுத்தமான இயக்கத்தில் கொண்டு வந்து காட்டியிருக்கிறார் இயக்குநர் சசி.



பொள்ளாச்சியில் டெக்ஸ்டைல் மில்களை நடத்தி வரும் 900 கோடி ரூபாய் அளவிற்கான சொத்துக்களை கொண்ட குடும்பத்தின் ஒரே வாரிசு ஹீரோவான அருள் செல்வகுமார் என்கிற விஜய் ஆண்டனி. வெளிநாட்டில் தன் படிப்பை முடித்துவிட்டு ஊருக்குத் திரும்புகிறார். மில்லின் நிர்வாகத்தை தன் கையில் எடுத்து நடத்த ஆயத்தமாக இருக்கிறார்.

அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக ஆலைக்குள் ஏற்பட்ட விபத்தினால் அவரது அம்மா தீபா ராமானுஜம் தலையில் அடிபட்டு கோமா நிலைக்குத் தள்ளப்படுகிறார். நிலைகுலைந்து போகிறார் விஜய். எப்படியாவது தன் அம்மாவைக் காப்பாற்ற துடிக்கிறார். அலோபதி மருத்துவர்கள் கைவிட்டுவிட.. ஆயுர்வேத மருத்துவத்திற்கு வருகிறார்கள். அவர்களால் தங்களால் முடிந்ததை செய்துவிட்டு ‘மேலே’ கை காட்டிவீட்டுச் செல்கிறார்கள்.

அப்போதுதான் அவரது வாழ்க்கையைப் புரட்டிப் போடும்விதமாக ஒரு சாமியார் வருகிறார். "ஒரு மண்டலம்.. அதாவது 48 நாட்கள் தான் யார் என்பதை வெளியில் சொல்லாமல் பிச்சையெடுத்து சாப்பிட்டு இறைவனை வேண்டினால் நீ நினைத்தது நடக்கும்..." என்கிறார் சாமியார். முதலில் தயங்கும் விஜய்.. பின்பு அப்பா இல்லாத நிலையில் தன்னை இத்தனை தூரம் ஆளாக்கி ஒரு பெரிய நிறுவனத்தையே நடத்தும் அளவுக்கு உயர்ந்திருக்கும் தனது தாயை அப்படியே விட்டுவிட அவருக்கு மனசில்லாமல் பிச்சையெடுக்க முடிவெடுக்கிறார்.

தனது நண்பனிடம் மில் நிர்வாகத்தை ஒப்படைத்துவிட்டு சென்னை வருகிறார். பிச்சைக்காரர்களை கூர்ந்து கவனித்து அவர்களது நடை, உடை பாவனைகளை அனுமானித்து அவர்களைப் போலவே ஆகி.. மிகக் குறுகிய காலத்தில் பிச்சையெடுக்கும் கும்பலில் ஒருவராக மாறுகிறார் விஜய்.

இந்த நேரத்தில் ஏற்கெனவே அவருக்கு பெண் பார்ப்பதற்காக காட்டியிருந்த புகைப்படத்தில் இருந்த ஹீரோயின் சாட்னா டைட்டஸை எதிர்பாராதவிதமாக சந்திக்கிறார் விஜய். தான் யார் என்பதை சொல்லாமலேயே அவரிடம் பழகுகிறார். இழுத்து மூடிவிடும் நிலையில் இருக்கும் சாட்னா நடத்தி வரும் பீட்சா சென்டரை, தொடர்ந்து நடத்த ஆலோசனை சொல்லி.. பல ரெபிசிகளையும் செய்து கொடுக்கிறார் விஜய்.

இன்னொரு பக்கம் விஜய்யின் பெரியப்பா முத்துராமன் அந்த டெக்ஸ்டைல் மில்லை குறைந்த விலைக்கு வாங்கிவிட திட்டமிட்டு மில்லை விற்பனை செய்யச் சொல்கிறார். விஜய்யும் அது புரியாமல் முதலில் “ஓகே” என்று சொல்ல விற்பனைக்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

இந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக ஒரு பெரிய ரவுடியின் ஆட்களுடன் விஜய் மோத வேண்டி வர.. இது தொடர் கதையாகி விஜய்யை தீர்த்துக் கட்ட அந்த ரவுடியே வந்துவிடும் அளவுக்கு போகிறது.

நடுவில் திடீரென்று மனம் மாறிய விஜய் மில்லை விற்க வேண்டாம் என்று சொல்லிவிட.. பெரியப்பா முத்துராமன் கோபப்படுகிறார். ஆத்திரப்படுகிறார். விஜய்யை கொல்ல திட்டமிடுகிறார்கள். இன்னொரு பக்கம் அந்த ரவுடியும் விஜய்யை கொல்ல திட்டமிடுகிறார். 48 நாட்கள்வரையில் போராடி தனது தாயிற்காக எடுத்த சபதத்தை முடிப்பேன் என்று வைராக்கியத்துடன் போராடுகிறார் விஜய். அது முடிந்ததா இல்லையா என்பதுதான் சுவையான திரைக்கதை..!

‘555’ படத்திற்குப் பிறகு இந்தப் படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் சசி, தனது திறமையான இயக்கத்தினால் 2000-மாவது இயக்குநர்களின் பெருமையைக் கட்டிக் காப்பாற்றியிருக்கிறார். வசனங்கள் பலவும் சாட்டையடியுடன் சுவாரஸ்யமாகவும், ரசிக்கும்விதமாகவும் எழுதியிருக்கிறார்.

சாமியாரிடமே ‘பிச்சை’ என்கிற வார்த்தையை உச்சரிக்க தயங்குவதை வார்த்தைகளில் சொல்லாடலின் மூலம் தெளிவுபடுத்தியிருப்பது, அந்த ‘பிச்சை’ என்கிற வார்த்தைக்கும் ஒரு பெருமையைக் கொடுத்திருக்கிறது.
இயக்கத்தில் சசி குறைவில்லாமல் செய்திருக்கிறார். ஒவ்வொரு பிரேமிலும் ஒருவர்கூட ச்சும்மா நிற்கவில்லை. நடக்கவில்லை. அத்தனையையும், அத்தனை பேரையும் நடிக்க வைத்திருக்கிறார். வெல்டன் ஸார்..

பிச்சைக்காரர்களின் இன்றைய யதார்த்தமான வாழ்க்கை.. அவர்களது நோக்கம்.. பசி, பிணி, ஒற்றுமை.. தொழிலில் அவர்கள் காட்டும் ஈடுபாடு என்று அனைத்தையும் கற்றுத் தேர்ந்த மாணவன் போல திரையாக்கம் செய்திருக்கிறார் இயக்குநர்.

முத்துராமனின் கேரக்டர் ஸ்கெட்ச்.. அவரது கஞ்சத்தனம்.. "உங்களை எப்படி தூங்க வைக்குறதுன்னு எனக்குத் தெரியாதா...?" என்று சொல்லியபடியே அவரது மனைவி ரூபாய் நோட்டுக்களை படுக்கையின் அருகில் வைத்து எண்ணுவது..  இவரது கார் டிரைவருக்கும் இவருக்குமான நட்பு.. அவ்வப்போது டிரைவரை போட்டுச் சாத்துவது..

விஜய் போக்குவரத்து போலீஸிடம் சிக்கியபோது உண்மையைச் சொல்லி அவரை டென்ஷனாக்குவது.. "என் காசை பிச்சையாகூட வாங்கிக்க மாட்டியா..?" என்று ஹீரோயின் கேட்க அதை கொட்டும் மழையில் மண்டியிட்டு பிச்சைபோல வாங்கிக் கொள்ளும் விஜய்யின் ஆக்சன்.. திரைக்கதையின் வசதிக்காக என்றாலும் நேரத்தைக் கணக்கிட்டு டென்ஷனாக்கும் அந்த கிளைமாக்ஸ் பரபரப்பு.. என்று பல காட்சிகளும், வசனங்களும் சுவாரஸ்யம்...!

2 நிமிடங்களுக்கு முன்பாக சட்டையைப் பிடித்திழுத்த இன்ஸ்பெக்டர், விஜய் யாரென்று தெரிந்தவுடன் இப்போது கையைப் பிடித்து மன்னிப்பு கேட்கும்போது,, "பணக்காரனா இருக்கிறதை நினைச்சா எனக்கு இப்பத்தான் அருவருப்பா இருக்கு.." என்று விஜய் பேசும் டயலாக்.. கச்சிதம்..

நட்ட நடு ரோட்டில் மோகன்ராமின் பணக்காரத் திமிருக்கு ஹீரோ கொடுக்கும் பதிலடி.. இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் அத்தனை ஏழை, நடுத்த வர்க்கத்தினரும் சொல்லத் துடிப்பவைதான். அத்தனை உண்மைகளையும் பட்டவர்த்தனமாக போட்டு உடைத்திருக்கிறார்.

இதேபோல் இந்தியாவில் லஞ்சம் குறைந்து ஊழலும் இல்லாமல் போக வேண்டுமெனில் முதலில் 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுக்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று யோசனையை முன் வைக்கும் இயக்குநர் சசிக்கு நமது அன்பு முத்தங்கள்..! 

விஜய் ஆண்டனியின் மென்மையான முகத்திற்கும், பேச்சுக்கும் இது போன்ற கதைகள் லட்டு போல..! கதையை உணர்ந்து, தனது கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார். பெத்த அம்மாவாகவே இருந்தாலும்.. ஒரு பெரிய கோடீஸ்வரன் இந்த அளவுக்கா இறங்கி போவான் என்கிற லாஜிக் பேச்சை உடைக்க அந்த பாடல் காட்சியின் மாண்டேஜ் காட்சிகளே போதுமானது. கொஞ்சமும் எதார்த்தம் மாறாமல் தனது தாயன்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய்.

காதலிக்கு உண்மை தெரிந்து அவரிடம் மன்னிப்பு கேட்க போய் திரும்பி வந்தும், காதலி உண்மை தெரிந்து அவரைத் தேடி வந்து பணம் கொடுத்து.. அதை பிச்சைக்காரனை போல வாங்கவும் தயங்காத அந்த நடிப்பில் ரசிகர்களை நிஜமாகவே நெஞ்சைத் தொட்டுவிட்டார் விஜய்.

படத்துக்கு படம் புதிய, புதிய ஹீரோயின்களை அறிமுகம் செய்து வரும் விஜய் ஆண்டனிக்கு இதிலும் அப்படியே. சாட்னா டைட்டஸ். அப்படியொரு அழகு. முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்டுக்கு சிரமம் வைக்காமல் வசனத்தை பேசி நடித்திருக்கிறார். அழகு மட்டும் போதாதுதான்.. நிறைய நடிக்கவும் செய்திருக்கிறார். இல்லை என்று மறுப்பதற்கில்லை.

அந்த ரவுடிக் கும்பல் பிச்சைக்காரனிடம் அடி வாங்கியதை வெளியில் சொல்லிவிட வேண்டாம் என்று இன்னொரு கூட்டாளியை தாஜா செய்தும் விஷயம் லீக் ஆவதும்.. அது தொடர்பான காட்சிகளும் செம கலகலகப்பு. இத்தனை காமெடியையும் இயக்குநர் சசியால் கொண்டு வர முடியும் என்பதும் ஆச்சரியமாகத்தான் உள்ளது..!

பிச்சைக்காரனிடம் அடி வாங்கியதால் அடியாளின் பெயர் ரைட்டில் இருந்து லெப்ட் ஆவதும்.. இதனாலேயே அந்த லெப்ட் கடைசி நேரத்தில் தனது தலைவனை காலை வாரிவிடுவதும் அதிரடியான டிவிஸ்ட்டு.

முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் பிரசன்னா குமாரின் ஒளிப்பதிவும் படத்திற்குக் கிடைத்த ஒரு பலம்.  விஜய் ஆண்டனியே இசையமைத்திருக்கிறார். "குத்துப் பாடல்கள் இந்தப் படத்திற்கு தேவையில்லை என்பதால் வைக்கவில்லை..." என்று பிரஸ்மீட்டில் சொல்லியிருந்தார். இந்த நல்ல முடிவுக்கு இயக்குநர் சசிக்கும், விஜய்க்கும் சேர்த்து ஒரு பூங்கொத்தை பரிசாக அளிக்கலாம்..!

மாண்டேஜ் காட்சிகளாக டூயட்டுகளை படமாக்கியிருக்கும்விதத்தில் இயக்குநர் சசி, திறமையில் தான் இன்னமும் குறைந்துபோய்விடவில்லை என்பதை அவரது பழைய சகாக்களுக்கு உணர்த்தியிருக்கிறார்.

பிரார்த்தனை என்பது உள்ளன்போடு செய்யும்போது அதன் விளைவுகள் நிச்சயம் பலனளிக்கும் என்பார்கள். அதை இந்தப் படத்தின் கதை உறுதி செய்கிறது.

எத்தனையோ கோமா ஸ்டேஜ் நோயாளிகள் பல நாட்கள், மாதங்கள், வருடங்களுக்கு பின்புகூட கண் திறந்திருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான இடைவெளி அவ்வளவுதான்.. ஆனால் பிரார்த்தனை கைகூடும் என்று உறுதியாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சசி.

ஒரு மனைவி கோமாவில் இருந்து மீண்டு வர வருடத்தில் 6 மாதங்கள் பிச்சையெடுத்து வாழ்ந்தும், மீதி 6 வருடங்கள் வேலை செய்தும் வரும் ஒரு அப்பாவி கணவன் பற்றிய கதையைப் படித்துதான் இந்தக் கதையை உருவாக்கியதாக இயக்குநர் சசி கூறியிருக்கிறார். ஒரு உண்மைக் கதையில் இருந்து எடுக்கப்பட்ட இந்த உண்மைக் கதை நிச்சயம் உணர்வுப்பூர்வமானது.. உண்மையானது..!

"இனிமே யாராவது பிச்சை கேட்டா இருந்தா கொடு.. இல்லைன்னா ‘இல்லை'ன்னு சொல்லு.. ஆனா அவங்களை காக்க வைக்காத.." என்று கோமாவில் இருந்து மீண்ட அந்தத் தாய் படத்தின் இறுதியில் தனது மகனிடம் சொல்கிறார். மகனும் தான் செய்தது தவறுதான் என்று சொல்லி மன்னிப்பு கேட்கிறார்.

இது அந்த மகனுக்கு மட்டும் சொன்னதல்ல.. படம் பார்க்க வந்த அத்தனை பேருக்கும் சொல்லப்பட்டதுதான்.. நாமும் புரிந்து கொண்டோம்..

இயக்குநர் சசிக்கு நமது நன்றிகளும், பாராட்டுக்களும்..!

0 comments: