05-02-2015
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இந்தப் படத்தை எப்படி அணுகுவது என்ற ரீதியில் விமர்சகர்களுக்கு மட்டுமே குழப்பமிருக்கும். ஆனால் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவின் தீவிர ரசிகர்களான விடலைத்தனமான விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு பிரச்சினையே இல்லை. அவர்களது விருப்பத்திற்கேற்றபடி படத்தின் முற்பாதியில் இரட்டை அர்த்த ஆபாச வசனங்களும், ரொமான்ஸ் என்கிற போர்வையில் பல நெளிய வைக்கிற காட்சிகளையும் வைத்து அவர்களை திருப்திப்படுத்தியுள்ளார்.
அவர்களாலேயே இந்தப் படம் திரையிட்ட இடங்களிலெல்லாம் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஓடி தயாரிப்புச் செலவில் முக்கால்வாசி பணத்தை மீட்டுக் கொடுத்திருக்கிறது. ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் இன்னும் கொஞ்சம் லேட்டாக ரிலீஸாகியிருந்தால் மிச்சத்தையும் வசூல் செய்திருக்கும். ஆனால் முடியவில்லை. ‘இசை’ ஓடிய தியேட்டர்களில் இப்போது ‘என்னை அறிந்தால்’ ஓடுகிறது. சூர்யா கொடுத்து வைத்தது அவ்வளவுதான்..!
சாதாரண பழி வாங்கல் கதைதான்.. மூளையைப் பயன்படுத்தி எதிரி யார் என்றே தெரியாத அளவுக்கு கதையெழுதி ஒரு பைத்தியம் அளவுக்கு எதிராளியை கொண்டு போய் கெடுக்கும் ஒரு சூழ்ச்சிக்கார இசையமைப்பாளரின் கதை இது.
தான் கோலோச்சிய இசையுலகில் புதிதாக உள்ளே நுழைந்த ‘இசைக்கடல்’ என்னும் சூர்யா 'இசை சக்கரவர்த்தி'யான சத்யராஜை வீட்டில் முடக்கிப் போட.. இதனால் கோபம் கொள்ளும் சத்யராஜ் என்னவெல்லாம் திட்டமிட்டு சூர்யாவை பழி வாங்குகிறார் என்பதையெல்லாம் இங்கே பட்டியலிட்டால் ‘என்னய்யா இது..? அம்புலிமாமா கதை மாதிரியிருக்கு?’ என்பீர்கள்.. அதைத்தான் செய்திருக்கிறார் இயக்குநர்.
'இப்படியெல்லாம் நடக்க முடியுமா..?' 'யாராவது யோசிக்க முடியுமா..?' 'அம்பானியாகவே இருந்தாலும் நடத்திக் காட்ட முடியுமா?' கதைக்காக ஒரு கிராமத்தையே தட்டியெழுப்ப முடியுமா..? என்றெல்லாம் பார்வையாளர்களை யோசிக்கவே விடாத அளவுக்கு தனது சிறப்பான இயக்கத்தினால் இதைச் சாதித்திருக்கிறார் இயக்குநர் சூர்யா.
கூத்துப்பட்டறையில் இருந்து நடிக்க வந்தவர்களை இதில் நடிக்க வைத்ததாக வசனம் வருகிறது. கூத்துப்பட்டறைக்காரர்களுக்கு இதைவிட வேறு வேலையே இல்லையா..? இதற்கெல்லாமா நடிக்க வருவார்கள்..? கூத்துப்பட்டறையின் பெயரே கெட்டது போங்கள்..
சிறப்பானது என்னவெனில் இயக்கமும், நடிப்பும். ஹீரோ சூர்யாவின் நடிப்பு சற்று ஓவர் ஆக்டிங்தான். ஆனால் சில இடங்களில் கிளாஸ் என்று சொல்லும் அளவுக்கு தத்ரூபமாக நடித்திருக்கிறார்.
தனது ஸ்டூடியோ ரிசப்ஷனிஸ்ட்டிடம் நள்ளிரவு நேரத்தில் போன் செய்து ஸாரியை வாபஸ் வாங்கிவிட்டதாகச் சொல்லும் காட்சி ஏ ஒன். அவ்வப்போது வந்து பயமுறுத்தும் 'குழந்தை' சரவணனை விரட்டிச் சென்று நடுரோட்டில் தனியே புலம்பும் காட்சியும்.. இதுவரையில் தனக்கில்லாத குழப்பம் இப்போது ஏன் என்று நிஜமாகவே குழம்பிப் போய் நிற்கும் காட்சிகளும் செமத்தியான நடிப்பு..
புதுமுக ஹீரோயின் சாவித்திரி.. எப்படி இவரை இத்தனை கஷ்டப்பட்டு நடிக்க வைத்தார் என்று தெரியவில்லை.. சமீப காலமாக எந்த ஒரு படத்திலும் புதுமுக ஹீரோயின் இத்தனை அழகாக, உருக்கமாக, உண்மையாக நடித்ததே இல்லை.. வசன உச்சரிப்பைக்கூட மிக அழுத்தமாக உச்சரிக்க வைத்திருக்கிறார். அவருடைய கண்களும், உதடுகளும் தனியே நடித்திருக்கின்றன என்பதையும் சொல்ல வேண்டும்.
ஆனால் இவரையும் வழக்கம்போல உரித்த கோழியாக்கி, பிரியாணி பண்ணுவதை போல ஆபாசப்படுத்தி காட்டியதற்கு இயக்குநருக்கு ஒரு ஷொட்டு. இதில் இவருக்கு அப்படியென்ன சந்தோஷமென்று தெரியவில்லை..?
காதலை கண்டுபிடிக்கிறேன் என்கிற போர்வையில் சூர்யா செய்யும் சேட்டைகளும், பேசும் வசனங்களும் சகிக்க முடியவில்லை. குடும்பத்தோடு உட்காரவே முடியாது. ஆனாலும் ஹீரோயினின் நடிப்பு அசத்தல்..
மைத்துனனை பற்றி புகார் சொல்வதற்காக வீட்டிற்கு வேகமாக ஓடி வரும் சூர்யாவிடம் சைகையிலேயே அமைதி காக்கும்படி, மெதுவாக பேசும்படி சொல்வதும், செய்வதும் ஏ கிளாஸ் ஆக்சன்.. இந்த சிறப்பான இயக்கத்திற்காகவே சூர்யாவுக்கு மேலும் ஒரு ஷொட்டு..!
கிளைமாக்ஸில் தான் கருவுற்றிருப்பதாகச் சொல்லி சொல்லி அழுகின்ற காட்சியும், இதை ஏற்காத மனநிலையில் இருக்கும் சூர்யாவின் மனப்பிறழ்வு நோய்த்தன்மையும் போட்டித் தன்மையுடன் திரைக்கதையில் உழைத்திருக்கின்றன. போதாக்குறைக்கு கூடவே நின்று சத்யராஜ் ஏற்றிவிடும் சூடான வசனங்களும் ‘முடிச்சை சீக்கிரம் அவிழுங்கப்பா’ என்று பார்வையாளர்களையும் கதற விடுகிறது..!
இந்தக் காட்சியின் துவக்கத்திலேயே சத்யராஜை ஹீரோயின் ‘அப்பா’ என்று அழைத்திருந்தால் கதையே முடிந்திருக்கும். இத்தனை தூரம் அழுக வைத்திருக்க வேண்டியதில்லை. சினிமா என்றாலே கொஞ்சம் ஓவராகத்தான் பாசத்தையும், அழுகையையும் காட்ட வேண்டியிருக்கிறது..
பாதிரியார் தம்பி ராமையாவை பார்த்தவுடன் ‘உங்களாலதாண்டா எல்லாம்’ என்று சொல்லி அவரை அடிக்கப் பாயும் காட்சியில் கிளைமாக்ஸ் ரணகளம் துவங்குகிறது. ஆனால் எதன் அடிப்படையில் தம்பி ராமையாவை சூழ்ச்சிக்காரர்களில் ஒருவராக சூர்யா நினைக்கிறார் என்பதே புரியவில்லை. பட்டென்று துவங்கியதுபோல தெரிகிறது.
எதிரி இசையமைப்பாளரின் வீட்டில் இருக்கும் இத்தனை பேரையும் இப்படி விலைக்கு வாங்கிவிட முடியுமென்றால் இந்தியாவின் முன்னணி ஊழல் வழக்குகளையெல்லாம் மிக எளிதாக இது போலவே துப்பறிந்து கண்டு பிடித்துவிடலாம். எல்லாம் கதாசிரியர் சூர்யாவின் உபயம்.
சத்யராஜின் நடிப்பும் படத்திற்கு மிகப் பெரிய பலம்.. மனிதர் எப்போதும் போல கேலி, கிண்டல், நக்கல், கோபம், ஆக்ரோசம், சாந்தம் அனைத்தையும் ஒரு முகத்தில் காட்டுகிறார். கஞ்சா கருப்புவை அவர் போட்டு வாங்குகிற காட்சிகளெல்லாம் சிரிப்பலை.. “எங்க முன்ன மாதிரியே மெதுவா நடந்து வா பார்ப்போம்...” என்று சொல்லி திருப்பியனுப்பி கஞ்சா கருப்பு நடந்து வருவதை ரசித்து பார்க்கும் அந்த சத்யராஜின் நடிப்பும் பிரமாதம்.
வண்டுவின் ரீங்காரம் பற்றி சூர்யா விளக்கமாகச் சொல்லும்போது அமைதியாக கேட்டபடியே ஒரு சின்ன வியப்பை காட்டிவிட்டு வழியனுப்பி வைப்பதெல்லாம் கேரக்டர் ஸ்கெட்ச்சின் பலம்..!
சத்யராஜ் இரண்டு முறை பேசுகிற “தேவடியா” என்கிற வார்த்தையை எப்படி சென்சாரில் விட்டார்கள் என்று தெரியவில்லை. இந்த ஒரு வார்த்தைக்காகவே இந்தப் படத்துக்கு ‘ஏ’ சர்டிபிகேட்டுதான் கொடுத்திருக்க வேண்டும். மற்ற ‘ஏ’ காட்சிகளுக்கும் சேர்த்து ‘டபுள் ஏ’ வழங்கியிருக்கலாம். ஆனால் கொடுக்கவில்லை.. வழக்கம்போல சென்சார் போர்டின் தில்லமுல்லு இதிலும் தெரிகிறது..!
ஒளிப்பதிவும் படத்துக்கு இன்னொரு பக்கம் சபாஷ் போட சொல்கிறது. அந்த கிராமத்து செட்டில் இரவு நேரத்தில் நடக்கும் ஹீரோ-ஹீரோயின் சல்லாப காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் கேமிராமேனின் உழைப்பு படத்திற்கு மிகப் பெரிய பலமாகவே இருக்கிறது. பாராட்டுக்கள்..
இசை சம்பந்தப்பட்ட படம் என்பதால் பாடல்களெல்லாம் சூப்பராக இருக்கும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டால் அதற்கு சூர்யா பொறுப்பில்லை. அவரே இசையமைப்பாளராகவும் உருமாறியிருப்பதால் சுமாராக கேட்டவுடன் மறந்துபோகும் அளவுக்குத்தான் இசையமைத்திருக்கிறார். ஆனால் என்ன..? காட்சிகளையெல்லாம் ரசிக்கும்படி எடுத்திருக்கிறாரே.. போதாதா..?
இந்தப் படத்தின் உருவாக்கத்தின்போது இது இசைஞானி இளையராஜாவுக்கும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் இடையிலான கதையை அடிப்படையாகக் கொண்டது என்றார்கள் திரையுலகத்தினர்.
ஆமாம் என்பவர்கள் சொல்வதற்கு ஆதாரமாக ‘நான் துப்பினால்கூட இசைதான்’ என்று சத்யராஜ் இயக்குநர் அழகம்பெருமாளிடம் பேசுகின்ற பேச்சு.. இது மும்பையில் நடந்த ‘தளபதி’ படத்தின் ரீரெக்கார்டிங்கின்போது மணிரத்னத்திடம் இளையராஜா கோபமாக பேசி நட்பை முறித்துக் கொண்ட சம்பவத்தை காட்டுகிறது என்கிறார்கள்.
அப்போது மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்த அழகம்பெருமாளே இன்றைக்கு சத்யராஜிடம் திட்டுவாங்கும் இயக்குநராக நடித்திருக்கிறார். அப்போது சத்யராஜிடம் வயலின் வாசிக்கும் சூர்யாவை, அழகம்பெருமாள் தன்னிடத்தில் இழுத்து இசையமைப்பாளர் வாய்ப்பு கொடுத்து ஹிட்டாக்குவது.. இளையராஜாவிடம் பியானோ வாசிப்பாளராக இருந்த ஏ.ஆர்.ரஹ்மானை அழைத்து ‘ரோஜா’ படத்தின் வாய்ப்பை கொடுத்து ஓவர் நைட்டில் இந்தியா முழுவதுக்கும் தெரிந்த இயக்குநராக மணிரத்னம் மாற்றிக் காட்டியதை ஒப்பிடுகிறார்கள்.
இதற்கும் மேலாக கஞ்சா கருப்பு சத்யராஜின் பாடல்களை பாடாமல் சூர்யாவின் பாடலை பாடி வாங்கிக் கட்டுக் கொள்ளும் காட்சியில், “என் பாட்டை பாடுடா..” என்கிற சத்யராஜின் வார்த்தைக்காக, ‘பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க’ என்கிற ‘உயிரே உனக்காக’ பாடலை பாடுவதும் திட்டமிடாமல் நடந்ததுதானா..? என்கிறார்கள்.
கோவைத்தம்பி அதுவரையிலும் தனது படங்கள் வெள்ளி விழா அளவிற்கு ஓடுவதற்குக் காரணமாக இருந்த இளையராஜாவுடன் மனஸ்தாபப்பட்டு இந்தப் படத்தின் இசைக்காக மும்பையில் இருந்து இயக்குநர்கள் லட்சுமிகாந்த் பியாரிலாலை அழைத்து வந்து இசையமைக்க வைத்தார். இது இளையராஜாவுக்கு தொடர்பே இல்லாததா என்றும் கேட்கிறார்கள்.
இளையராஜா சம்பந்தப்பட்ட கதை என்பதால்தான் பிரகாஷ்ராஜ் நடிக்க மறுத்து இது சத்யராஜின் கைக்கு போனது என்றார்கள். ஆனால் சத்யராஜோ இந்தக் கதையை 10 வருடங்களுக்கு முன்பாகவே சூர்யா தன்னிடம் சொல்லி நடிக்கச் சொன்னதாகச் சொல்கிறார். ஆக.. அப்போதே சூர்யா இந்தக் கதையில் களமிறங்க முடிவு செய்துவிட்டார் என்பது உறுதி..!
இது உண்மையோ பொய்யோ.. ரஹ்மானின் உருவாக்கத்தில் இளையராஜாவுக்கும் பெரும் பங்கு உண்டு என்பதை உணராதவர்கள் வேண்டுமானால் இளையராஜாவை பொறாமைக்காரராக நினைக்கலாம்.. சொல்லலாம். ஆனால் இளையராஜாவுக்கு அடையாளமே அவர் தமிழ் இசைக்குக் கொடுத்திருக்கும் மகத்தான பாடல்கள்தான். அவருக்கு தன் பின்னால் வரும் மனிதர்களையும், தன்னைத் தாண்டிச் செல்லும் மனிதர்களையும் யோசிக்கவோ, நினைக்கவோ நேரமில்லை என்பதுதான் உண்மையான விஷயம்..!
“இந்த கிளைமாக்ஸ் நன்றாக இல்லை. இன்னும் கொஞ்சம் யோசிச்சு நல்ல கிளைமாக்ஸை வைக்கப் போறேன்..” என்று இறுதியில் சூர்யா சொல்லும் வசனத்தின் மூலம் இந்தக் கதையை சமன் செய்யலாம். ஆனால் சத்யராஜின் இசைக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் இசைக்கும் சமன் செய்ய முடியாது என்பதை முதலில் அவர் அறிந்து கொள்ளட்டும்..!
இசை - தவறான கதையை சிறப்பான நடிப்பில், அதைவிட மிகச் சிறப்பான இயக்கத்தில் சொல்லியிருக்கும் படம்.