முரசொலி மாறனின் தலையீடு - கருணாநிதியின் ஒப்புதல் - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!

30-03-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தி.மு.க. அரசு பத்திரிகையாளர்களை மிரட்டுவதும், வேண்டாத செய்திகளை வெளியிடும் பத்திரிகையாளர்களை வழக்குப் போட்டு மிரட்டுவதும், பிறகு சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர்கள் அரசிடம் பணிந்ததும் அந்த வழக்குகளை குப்பைத் தொட்டிக்கு அனுப்புவதும் நாம் பார்த்து பழகிப் போன ஒரு விஷயம். ஆனால், இது போன்ற நடவடிக்கைகளெயெல்லாம் 1969-ம் ஆண்டிலேயே கருணாநிதி நடத்தியிருக்கிறார் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்..

வர்கீஸ் என்ற ஐ.சி.எஸ். அதிகாரி தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்ற பிறகும் அவர் தமிழ்நாடு அரசின் திட்ட ஆலோசகராகவும், விஜிலென்ஸ் பிரிவின் ஆணையராகவும் பணியாற்றி வந்தார்.

அவரின் மகன் ஓபல் காரை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்ததில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக பிராட்வே டைம்ஸ் என்ற நாளிதழ் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.

இந்தச் செய்தியை அடுத்து வர்கீஸ், தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்புகிறார். அந்தக் கடிதத்தில் தனது மகன் கார் இறக்குமதி செய்ததில் சரியான நடைமுறைகள்தான் பின்பற்றப்பட்டன என்றும், அதில் எவ்விதமான முறைகேடுகளும் இல்லை என்றும், பிராட்வே டைம்ஸ் பத்திரிகை, அதிகாரிகளை மிரட்டுவதற்காகவே இது போன்ற செய்திகளை வெளியிட்டு வருவதாகவும், அதனால் அந்தப் பத்திரிகை மீது அரசு அவதூறு வழக்குத் தொடர வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

தன் மீது இந்தப் பத்திரிகை இப்படியொரு செய்தியை வெளியிடுவதற்கும் தனிப்பட்ட காரணம் ஒன்று உண்டு என்றார் வர்கீஸ். அது என்னவெனில், இந்த பிராட்வே டைம்ஸ் பத்திரிகையின் உரிமையாளர் மேத்யூ செரியன் தி.மு.க. கட்சியினருக்குத் தெரிந்தவர்தான். அதிலும் முரசொலி மாறனுக்கு மிகவும் நெருக்கமானவர். முரசொலி மாறன் தேர்தலில் நிற்கும் காலங்களில் அவரது பிரச்சார உபயோகத்திற்காக தனது கம்பெனி கார்களை வழங்கி உதவிடும் அளவுக்கு நண்பர்தான் மேத்யூ செரியன்.

ஆனால் வர்கீஸ் மீது இந்த செரியனுக்கு என்ன கோபம் எனில், பிராட்வே டைம்ஸ் பத்திரிகையை அச்சிடும் நிறுவனம் தாம்ஸன் அண்ட் சன்ஸ். இதுவும் செரியனுக்குச் சொந்தமானதுதான். இந்த அச்சகத்தில் சில காலங்கள் தமிழக அரசின் பாட நூல் வெளியீட்டுக் கழகத்தின் சார்பில் வெளியிடப்படும் தமிழக அரசின் பள்ளிப் பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு வந்தன.

ஒரு கட்டத்தில் தாம்ஸன் நிறுவனம் செய்த குளறுபடியால் புத்தகங்கள் அச்சிடுவதில் தாமதமும், முறைகேடுகளும் நடந்திருக்கின்றன. இதனால் அப்போதைய தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த வர்கீஸ், இந்த தாம்ஸன் அண்ட் சன்ஸ்  நிறுவனத்திற்கான பாட நூல் அச்சிடும் கான்டிராக்ட்டை ரத்து செய்துவிட்டு இந்நிறுவனத்தையும் கறுப்புப் பட்டியலில் வைத்துவிட்டார். இதனால் லம்பமாக அரசிடம் இருந்து வரும் பணத்தினை இழந்துவிட்டார் செரியன். இந்தக் கோபத்தில்தான் இப்படியொரு அபாண்டமான புகாரை செரியன் தன் மீது எழுப்பியிருப்பதாக வர்கீஸ், அரசிடம் கடிதம் மூலம் புகார் கூறினார்.

இந்தக் கடிதம் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியின் பார்வைக்கு வைக்கப்பட்டது. செரியன் மீதும், அந்தப் பத்திரிகை மீதும் வழக்குத் தொடர கருணாநிதியால் உடனுக்குடன் அனுமதியும் அளிக்கப்படுகிறது. ஆனால் இந்த வழக்கு செரியனுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க உதவப் போகிறது என்று அப்போது வர்கீஸுக்குத் தெரியவில்லை.

வழக்குத் தொடரப்பட்டு நீதிமன்றம் பிராட்வே டைம்ஸ் பத்திரிகைக்கு சம்மன் அனுப்பிய பின்புதான், இந்த விஷயத்தில் பரபரப்பான காட்சிகள் அரங்கேறியுள்ளன.

அந்தப் பத்திரிகையின் அதிபரை முதலமைச்சரான கருணாநிதியின் செயலாளர் தொடர்பு கொண்டு, முதலமைச்சரிடம் வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ளும்படி ஆசிரியரின் சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தால் வழக்கு வாபஸ் பெறப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இதனையேற்று செரியனும் அரசுக்கு ஒரு கடிதத்தை எழுதுகிறார். அந்தக் கடிதத்தில் வர்கீஸ் மற்றும் அவரது மகன் பற்றி ஏற்கெனவே வெளியிட்ட செய்திக்கு எவ்வித வருத்தமும் தெரிவிக்காமல் “பிராட்வே டைம்ஸ் பத்திரிகை சிறிது காலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், இப்போது எனது பத்திரிகைக்கும், முன்னேற்ற நோக்கங்கள் கொண்ட உங்கள் அரசுக்கும் இடையில் நெருங்கிய உறவு நிலவுவதாலும் எங்கள் மீதான வழக்கை அரசு வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும்..” என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்படுகிறது. இக்கடிதத்தைப் படித்த கருணாநிதி அக்கடிதத்திலேயே “அரசுத் தரப்பு வழக்கை வாபஸ் பெறலாம்” என்று எழுதி உத்தரவிடுகிறார்.

ஆனால் பிராட்வே டைம்ஸ் பத்திரிகையின் அதிபரான செரியன் எழுதிய அக்கடிதத்தில் மன்னிப்புக் கேட்பது போன்ற எந்தத் தொனியும் இல்லை. மாறாக, தான் வெளியிட்ட கட்டுரைக்கு நியாயம் கற்பிப்பதாகவே இருந்தது.

மேலும் பிராட்வே டைம்ஸ் பத்திரிகை மீது வழக்குத் தொடர்வதற்கு முன்பு அரசுத் தரப்பில் விரிவாக நடந்த ஆலோசனை.. சட்டத் துறை அமைச்சருடனான ஆலோசனை என்று எதுவுமே வாபஸ் பெறும்போது பின்பற்றப்படவில்லை. அவசர கதியில், அவதூறு வழக்கு வாபஸ் பெறப்பட்டது முதல் மாங்காய் என்றால் இரண்டாவது மாங்காயாக, அதே வேகத்திலேயே, அந்நிறுவனம் பாடநூல் நிறுவனத்தின் புத்தகங்களை அச்சிடும் ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் கறுப்புப் பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டது. இந்த நீக்கத்திற்கு அடிப்படையாகக் கருதப்பட்டது மேத்யூ செரியனின் அக்கடிதம்தான்.

இந்த விவகாரத்தில் மொத்தமாகப் பார்த்தால், எதற்காக கருணாநிதி இவ்வளவு முனைப்பாக வழக்கை வாபஸ் பெறுவதிலும், அந்நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்கவும் முனைப்புக் காட்டினார் என்ற கேள்வி எழும். இங்கேதான் முரசொலி மாறன் வருகிறார்.

“மாறன்தான் அரசு இந்த வழக்கை வாபஸ் பெற்று, கறுப்புப் பட்டியலில் இருந்து அந்த நிறுவனத்தை நீக்க வேண்டும் என்பதில் மிகுந்த முனைப்புக் காட்டி தன்னிடம் வலியுறுத்தினார்..” என்பதை கருணாநிதியே சர்க்காரியா கமிஷனில் அளித்த தனது வாக்குமூலத்தில் ஒத்துக் கொண்டார்.

இவ்வாறு மாறன் கருணாநிதிக்கு நெருக்கடி கொடு்த்தது வெறும் நட்பினால்தானா என்றால் இல்லை. பிராட்வே டைம்ஸ் நிறுவனம் தேர்தல் சமயங்களில் மாறனுக்கு தன்னுடைய கார்களை இலவசமாக வழங்கி உதவி செய்திருக்கிறது என்பதும் சர்க்காரியா கமிஷன் விசாரணையில் தெரிய வந்தது.

இவ்வழக்கில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம். ஒரு தனியார் நிறுவனம் அரசின் கான்ட்ராக்டைப் பெற்று பாட நூல் தயாரிக்கும்போது முறைகேடுகளில் ஈடுபட்டு அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்துகிறது.

அவ்வாறு நஷ்டம் ஏற்படுத்திய நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் வைக்க ஒரு நேர்மையான அதிகாரி அரசுக்குப் பரிந்துரை செய்து அவ்வாறே அந்நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் வைக்கிறார்.

அந்த அதிகாரியைப் பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக அந்தப் பத்திரிகை அவரைப் பற்றிய அவதூறான செய்தியை வெளியிடுகிறது. அப்பத்திரிகை மீது வழக்குத் தொடுக்க வேண்டும் என்று, அதனால் பாதிக்கப்பட்ட அதிகாரி அரசுக்குப் பரிந்துரை செய்ததன் அடிப்படையில் வழக்கும் தொடுக்கப்படுகிறது.

வழக்குத் தொடுக்கப்பட்ட பின்னர் முதலமைச்சரின் மருமகனான முரசொலி மாறன், முதல்வர் மீதான தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, அந்த வழக்கை வாபஸ் பெற வைத்ததோடு ஊழலில் ஈடுபட்ட அந்த நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்கவும் உதவுகிறார்.

கருணாநிதியின் இந்த நடவடிக்கைகளைப் பற்றிக் குறிப்பிடும் நீதிபதி சர்க்காரியா, “இவ்வழக்கில் வரக் கூடிய நியாயமான முடிவு என்னவெனில், சரியான நடைமுறையைப் பின்பற்றாமல் குறுக்கு வழியில் செல்லவும், தம்முடைய சட்டத் துறை அமைச்சரின் கருத்தை முரட்டுத்தனமாக ஒதுக்கிவிட்டுச் செல்லவும், தொடர்புடைய மற்ற இரண்டு அமைச்சர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கும் வாய்ப்பைத் தர மறுக்கவும், மாறனின் அலுவல் சார்பற்ற தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக கருணாநிதி, செரியனுக்கு உதவும் நோக்கத்திற்கு தூண்டப்பட்டுள்ளார்” என்று கூறியுள்ளார்..!

நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர் : 31-03-2011

எம்.ஜி.ஆர்.-கருணாநிதி-மு.க.முத்து-சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!

29-03-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

1976-ம் ஆண்டு அப்போதைய தி.மு.க. அரசினை டிஸ்மிஸ் செய்த பின்பு, பிரதமர் இந்திராகாந்தியால் கருணாநிதியின் ஊழல்கள் பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட இந்த சர்க்காரியா கமிஷன், கருணாநிதியின் சொந்த, பந்தங்கள், வியாபாரங்கள், பத்திரிகைகள், திரையுலகத் தொடர்புகள், கட்சிப் பணிகள், அரசின் செயல்பாடுகள் என்று அத்தனையையும் அலசி ஆராய்ந்திருக்கிறது.

அதன் ஒரு பகுதியாக கருணாநிதி தனது மூத்த மகன் மு.க.முத்துவை ஹீரோவாக நடிக்க வைத்து தயாரித்த பிள்ளையோ பிள்ளை படத்தைப் பற்றியும், அதன் தயாரிப்பு நிறுவனமான அஞ்சுகம் பிக்சர்ஸ் பற்றியும் சர்க்காரியா கமிஷன் விசாரித்தது..!

எம்.ஜி.ஆரின் அசுர வளர்ச்சியைப் பார்த்து பயந்துதான், அவருக்குப் போட்டியாக தனது முதல் மனைவி பத்மாவதியின் மகன் மு.க.முத்துவை கதாநாயகனாக நடிக்க வைத்து 'பிள்ளையோ பிள்ளை'(பொருத்தமான பெயர்தான்) என்ற திரைப்படத்தைத் தயாரித்தார் கருணாநிதி.

இந்த முஸ்தீபுக்கு கருணாநிதி வருவதற்கு, 1971 தேர்தலில் அவர் பெற்றிருந்த மிகப் பிரம்மாண்டமான வெற்றியும் ஒரு காரணம். 184 தொகுதிகளில் தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெற்றிருந்தன. இந்த நிலையில் கட்சியில் தனக்கு ஈடு கொடுக்கும் சக தலைவராக இருக்கும் எம்.ஜி.ஆரை சீண்டிப் பார்க்கவும், முயற்சி செய்தாவது அவரை வீழ்த்தவும் வழி வகை தேடினார் கருணாநிதி.

எம்.ஜி.ஆருக்கு இருக்கும் திரையுலகச் சக்கரவர்த்தி என்ற இமேஜை இந்த வயதிலும் உடைக்க முடியாத நிலையில் வேறு யாராவது வந்துதான் இதனைச் செய்ய வேண்டும் என்ற நிலைமை. இப்போதைக்கு அந்தத் திறமை யாருக்கும் இல்லை என்பதால் எப்படியாவது கோடம்பாக்கத்தில் எம்.ஜி.ஆருக்கு ஒரு போட்டியை உருவாக்கிவிட வேண்டும் என்று துடித்திருக்கிறார் கருணாநிதி.


இதற்கு முன்பாகவே கருணாநிதிக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையில் மறைமுகமான முட்டல், மோதல்கள் துவங்கிவி்ட்டன. எம்.ஜி.ஆர். மன்றங்களின் நிர்வாகிகள் பலரும் ஆங்காங்கே போலீஸாரால் கைது செய்யப்பட்டுவதும், மிரட்டப்படுவதும் நடந்து வர இதெல்லாம் ராமாவரம் தோட்டத்தை கொஞ்சம் அசைக்கத்தான் செய்திருந்தன.

இந்த நேரத்தில் 1970-ல் நடந்த இன்னொரு விஷயத்தைத் தெரிந்து கொள்வோம். இப்போது கருணாநிதி மக்களுக்காக தானமாக கொடுக்க முன் வந்திருக்கும் அந்த கோபாலபுரம் 4-வது தெருவில் இருக்கும் வீடு அப்போது அடமானத்தில் இருந்திருக்கிறது.. அசலையும், வட்டியையும்கூட கட்ட முடியாமல் அந்த வீடு ஏலத்துக்கும் வந்திருக்கிறது.

 

இதையறிந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரும் மிகக் குறைந்த சம்பளத்தில் எங்கள் தங்கம் படத்தில் நடித்துக் கொடுத்ததாக தற்போது அ.தி.மு.க.வினரும், பழைய சினிமா பத்திரிகைகளும் கூறுகின்றன. இந்தப் படத்தில் கிடைத்த லாபத்தின் மூலம்  மேகலா பிக்சர்ஸ் பல லட்சங்கள் லாபம் சம்பாதித்தது. கருணாநிதியும் தன் வீட்டை மீட்டிருக்கிறார். இந்த மேகலா பிக்சர்ஸின் தயாரிப்பாளர் முரசொலி மாறன்..!

இவர்கள் இருவருக்குமான மறைமுகமான மோதல் குறித்து சோ ராமசாமி, தனது கலையுலக அனுபவங்கள் புத்தகத்தில் எழுதியிருப்பதைப் படித்தால் சிரிப்புதான் வருகிறது.

இந்த 'எங்கள் தங்கம்' படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கின்போது காலையிலேயே ஸ்டூடியோவுக்கு வந்துவிட்ட எம்.ஜி.ஆர். மேக்கப் அறையைவிட்டு வெளியே வரவில்லையாம்.. நீண்ட நேரம் கழித்து வெளியில் வந்தவரும் மேக்கப் போடாமல் உட்கார்ந்து கொண்டாராம்.. பின்பு ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் ஏறி ஸ்டூடியோவை ரவுண்ட் அடிக்க ஆரம்பித்தாராம்..! அங்கே கொஞ்ச நேரம், இங்கே கொஞ்ச நேரம் என்றெல்லாம் போய்க் கொண்டேயிருந்தாரம். அவருடைய காம்பினேஷனில் நடிக்க வேண்டிய சோ தைரியமாக எம்.ஜி.ஆரிடம் போய் “என்ன ஸார்..? என்னாச்சு..? இன்னிக்கு ஷூட்டிங் இருக்கா? இல்லையா?” என்று விசாரித்தபோது எம்.ஜி.ஆர். சரியாகப் பதிலேதும் சொல்லாமல் ஒப்பேற்றியிருக்கிறார்.

அத்தோடு அன்றைய இரவில் எம்.ஜி.ஆர். வேறொரு படத்தின் ஷூட்டிங்கிற்காக வெளிநாடு போக வேண்டிய நிலைமை. இன்றைக்கு எம்.ஜி.ஆரைவிட்டுவிட்டால் பிறகு ஒரு மாதம் கழித்துதான் பிடிக்க முடியும் என்ற பரபரப்பு..!

படத்தின் இயக்குநர்களான கிருஷ்ணன்-பஞ்சுவாலேயே நிலைமையை சரியாக்க முடியவில்லை. எம்.ஜி.ஆருடன் பேசவும் முடியவில்லையாம். காரணம்.. எம்.ஜி.ஆருக்கு உரிய ஊதியம் செட்டில் செய்யப்படவில்லை..! அத்தோடு படத்தில் நடித்தவர்களுக்கும் பணப் பாக்கியாம்.. எம்.ஜி.ஆர். எப்போதும் தனது படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கில் படத்தில் நடித்தவர்களையும், தொழிலாளர்களையும் அழைத்து யாருக்காவது பணம் பாக்கியிருக்கிறதா என்று விசாரித்து அதனைத் தீர்த்துவைத்துவிட்டுத்தான் கேமிரா முன் வந்து நிற்பாராம்.. அன்றைக்கு அவருக்கே இந்த சோதனை..

அன்றைய மாலையில் இனி பணம் வர வாய்ப்பில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்த பின்பே வேறு வழியில்லாமல் சோவுடனான காட்சிகளை முடித்துக் கொடுத்துவிட்டு பறந்தாராம் எம்.ஜி.ஆர். இதனை நியாபகப்படுத்தும் சோ.. கருணாநிதிக்கும், எம்.ஜி.ஆருக்குமான உறவு நீண்ட நாள் நீடிக்காது என்பதை அன்றைக்கே தான் உணர்ந்து கொண்டதாகக் கூறுகிறார்.

எங்கள் தங்கத்தின் மூலம் கிடைத்தப் பணத்தில் இருந்து எம்.ஜி.ஆருக்கு கொடுக்க வேண்டிய பாக்கியை கருணாநிதி கொடுத்தாரா, இல்லையா என்று தெரியாது..

ஆனால் அரசியல் களத்தில் எம்.ஜி.ஆரை தான் முந்த நினைத்து அதில் ஒரு பகுதியாக அவருக்குப் போட்டியாளை உருவாக்க முனைந்திருக்கிறார். அந்த ஐடியாவின்படி இந்த வயதில் தான் நடிக்கப் போனால் தனது மனைவிகளே பார்க்க மாட்டார்கள் என்று நினைத்து தனது மகன் மு.க.முத்துவுக்கு அரிதாரம் பூசி அழைத்து வந்திருக்கிறார் கருணாநிதி.  அதுலேயும்  எம்.ஜி.ஆரின் தலைமையிலேயே துவக்க விழாவும், 1972-ல் படத்தின் முதற் காட்சி வெளியீட்டு விழாவையும் நடத்தியிருக்கிறார்.

படத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய மு.க.முத்து “தனக்கு வழிகாட்டி, குருநாதர் எல்லாமே எம்.ஜி.ஆர்.தான்..” என்று பேசியிருக்கிறார். சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானமும் இதில் கலந்து கொண்டிருக்கிறார்.

சிலம்புச் செல்வர் பேசும்போது, “துரோணரை ஆசானாகக் கொண்டு ஏகலைவன் வில் வித்தையில் தேர்ச்சி பெற்றது போல, எம்ஜிஆரை ஆசானாகக் கொண்ட முத்துவும் அவரைப் போல புகழையும், சிறப்பையும் பெற வாழ்த்துகிறேன்...” என்று வாழ்த்தியிருக்கிறார்.

எம்.ஜி.ஆர். வாழ்த்திப் பேசும்போது, “என்னை ஆசானாக ஏற்றுக் கொண்டிருப்பதாக தம்பி முத்து பேசினார். அதைக் கேட்டு பெருமைப்படுகிறேன். ஆனால் முத்து ஒருநாள்கூட என்னிடம் நடிப்புக்காக வந்ததில்லை. ஏகலைவன் மானசீகமாகக் குருவை எண்ணி வித்தையில் தேர்ந்தான் என்பது போல என் படங்களைப் பார்த்து அதன்படி நடிக்க விரும்புகிறார் முத்து என்று எண்ணுகிறேன். ஒவ்வொருவரிடமும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. அதில்தான் செல்ல வேண்டும். முத்து தனக்கென்று தனி வழியை நடிப்பதற்கு வகுத்துக் கொண்டு நடிகராக வளர வேண்டும் என்று  வாழ்த்துகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

எம்.ஜி.ஆர். பேசியதைக் கூர்ந்து கவனித்தால் மு.க.முத்து பற்றிய அவரது எண்ணத்தை சுலபமாக ஊகிக்க முடிகிறது. உண்மையில் எம்.ஜி.ஆரை இமிடேட் செய்துதான் மு.க.முத்து அந்தப் படத்தில் தனது முழு திறமையையும் காட்டியிருந்தார்.

வண்ணத் திரைப்படமான இந்தப் படத்தில் முத்துவுக்கு எம்.ஜி.ஆர். போல இரட்டை வேடம். எம்.ஜி.ஆர் போலவே நடை, உடை பாவனையுடன் சண்டையும் போட்டிருக்கிறார். சண்டைப் பயிற்சியாளர்கூட எம்.ஜி.ஆரின் ஆஸ்தான பயிற்சியாளரான ஷியாம் சுந்தர்தான்..

பொதுவாக எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் அவர் அறிமுகமாகும் காட்சியே சற்று ரகளையாக இருக்கும். அப்போதுதான் அவரது ரசிகர்களுக்குப் பிடிக்கும். அது போலவே இந்தப் படத்திலும் அதேபோல் "உயர்ந்த இடத்தில் இருப்பவன் நான். ஓய்வில்லாமல் உழைப்பன் நான்' என்று பாடியவாறுதான் அறிமுகமானார் முத்து.

படத்தை இயக்கியவர்கள் கிருஷ்ணன்-பஞ்சு இரட்டையர்கள். கவிஞர் வாலியின் பாடல்களுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அமர்க்களமாக இசையமைத்திருந்தார்.

"ஏழையின் சிரிப்பில் இறைவன்
இருப்பதைச் சொன்னான் தலைவன்
அண்ணனவன் சொல்லிய சொல்லை
நான் எந்நாளும் மறந்தது இல்லை'

"மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ
நீ  மூவேந்தர் வழிவந்த மன்னவனோ'

"மீனாட்டம் கண் கொண்ட மீனாட்சி
கோபங்கள் கூடாது காமாட்சி'

"வெள்ளை மலரில் ஒரு வண்டு
அள்ளித் தருதே சுகம் இங்கு'

போன்ற பாடல்களை டி.எம்.எஸ்., சுசீலா ஆகியோர் பாடியிருந்தார்கள். மு.க.முத்துவுக்கு ஜோடி லட்சுமி..!

இந்தப் பாடல்களில் “மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ?” என்ற டூயட் பாட்டு வரிகளைக் கேட்ட எம்.ஜி.ஆருக்கு ஏதோ ஒரு ஜெர்க் ஆகிவிட்டது. ஏனெனில் இந்தப் பாடலுக்கு மிகப் பொருத்தமானவன் தான்தான் என்பது எம்.ஜி.ஆரின் எண்ணம். இதனை எழுதியவர் எம்.ஜி.ஆர். வளர்த்தெடுத்த வாலிதான்..

இந்தப் படம் வந்து ஒரு மாதம் கழித்து வாலிக்கு ராமாவரம் தோட்டத்தில் இருந்து அழைப்பு வந்ததாம்.. போனவரை எம்.ஜி.ஆர். சாப்பிடச் சொல்லி வற்புறுத்தி சாப்பிட வைத்திருக்கிறார். சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது “ஏன்யா.. என் படத்துக்குப் பாட்டு எழுதும்போதெல்லாம் அந்த மூன்று தமிழ் தோன்றியதும்ன்ற வரி உனக்குத் தோணலையா?” என்று வாலியிடம் நேருக்கு நேராகக் கேட்டேவிட்டாராம் எம்.ஜி.ஆர்..!

கண்ணதாசனோடு சில காலம் பிணக்கில் இருந்தபோது தனது படத்தின் முழுப் பாடல்களையுமே வாலிக்குக் கொடுத்து அவரை முன்னுக்குக் கொண்டு வந்தது எம்.ஜி.ஆர்.தான். அப்படி வாழ்வளித்த எம்.ஜி.ஆருக்கு இந்தப் பாடல் கிடைத்திருந்தால் பொருத்தமாகத்தானே இருந்திருக்கும். வாலி அப்போதே உடனுக்குடன் கலர் மாற தெரிந்து வைத்திருந்திருக்கிறார்..!

படத்திற்கு வசனகர்த்தா வேறு யார்.. கருணாநிதிதான்..! "கணையாழி உனக்கு, கசையடி எனக்கா'  என மு.க.முத்து, மற்றொரு முத்துவிடம் கேட்கும் வசனம் படத்தில் பிரபலமான வசனமாம்.

தனது மருமகனான முரசொலி செல்வத்தைத் தயாரிப்பாளராக வைத்து, அஞ்சுகம் பிக்சர்ஸின் சார்பில் தயாரித்து 1972-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதியன்று இந்தப் படத்தை ரிலீஸ் செய்தார் கருணாநிதி. படம் படு தோல்வி..!

'பிள்ளையோ பிள்ளை' படத்துக்கான மொத்த தயாரிப்புச் செலவே 15 லட்சம் ரூபாய்தான். ஆனால், படத்தைத் தயாரித்த அஞ்சுகம் பிக்சர்ஸின் மொத்த முதலீடே 10 ஆயிரம் ரூபாய்தான்.. பிறகு எப்படி 15 லட்சம் ரூபாய் செலவில் திரைப்படம் எடு்க்க முடியும்? அதுதான் கருணாநிதி.

இந்தப் படத்தைத் தயாரிப்பதற்காக 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் வெளியில் இருந்து கடனாக வாங்கப்படுகிறது. மீதம் உள்ள 14.23 லட்சம் ரூபாய் விநியோகஸ்தர்களிடமிருந்து வசூல் செய்யப்பட்ட அட்வான்ஸ். ரஜினியின் எந்திரன் படத்துக்குக்கூட இப்படி போட்டி போட்டுக் கொண்டு அட்வான்ஸ் கொடுத்திருப்பார்களா என்பது சந்தேகமே..?

ஒரு புதிய நடிகர் நடிக்கும் படத்தை, அதுவும் எம்.ஜி.ஆருக்குப் போட்டியாக, எம்.ஜி.ஆரை காப்பியடிக்கும் ஒரு புதுமுக நடிகரின் படத்தை வாங்குவதற்காக 14 லட்சத்து 23 ஆயிரம் ரூபாயை அட்வான்ஸாக கொடுப்பார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

இந்த 14 லட்சத்து 23 ஆயிரத்தில் பாதிக்கும் மேற்பட்ட தொகையை ராசி அண்ட் கோ, கிரெசன்ட் மூவிஸ், மற்றும் சேது பிலிம் டிஸ்டிரிபியூட்டர்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள்தான் வழங்கியுள்ளன. இந்த மூன்று நிறுவனங்களிலும் அஹமது யாசின் என்கிற கட்டுமான கம்பெனி நடத்துபவர் பங்குதாரராக இருந்தார் என்பது யதேச்சையான நிகழ்வாகக் கருத முடியாது.

அதிலும், சென்னையில் உள்ள அண்ணா மேம்பாலத்தைக் கட்டுவதற்கான கான்ட்ராக்ட் அப்போது இவரிடம்தான் வழங்கப்பட்டது என்பதும் யதேச்சையான நிகழ்வல்ல. 

சரி.. எப்படித்தான் இது நடந்தது..? இதை சம்பந்தப்பட்ட சாட்சி அஹமது யாசின் வாயாலேயே கேட்போமா..?

“சாதாரண சமயமாக இருந்தால், ‘பிள்ளையோ பிள்ளை’ திரைப்படத்திற்கான விநியோக உரிமைகளை வாங்குவதற்கு நான் முன் வந்திருக்கவே மாட்டேன். இருப்பினும், அப்போது சென்னையில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தில் கூட்டுப் பங்குதாரராகவும் இருந்தேன்.

எனது நிறுவனம் தமிழக அரசுக்காக அண்ணா மேம்பாலம் கட்டும் முக்கிய ஒப்பந்தத்தை நிறைவற்றிக் கொண்டிருந்தது. வேறு சில ஒப்பந்தங்களை நிறைவேற்ற முயன்று கொண்டிருந்தது.

அந்த வியாபாரத்தில் குறிப்பிட்ட சில சலுகைகளுக்காக சென்னைக்குத் தெற்கிலுள்ள பகுதிகளுக்கு இத்திரைப்பட விநியோகஸ்தர் உரிமையை வாங்கிக் கொள்ளுமாறு நான் அப்போதைய ஆட்சியாளர்களால் வற்புறுத்தப்பட்டேன். அப்படத்திற்கான விநியோக உரிமையை வாங்கிக் கொண்டு கருணாநிதியை திருப்திப்படுத்துவதைத் தவிர வேறு மாற்று வழியேதும் எனக்கு இல்லை..”

- இப்படித்தான் அந்த அஹமது யாசின், சர்க்காரியா கமிஷன் முன்பு வாக்குமூலம் அளித்திருந்தார்.

இதையெல்லாம் தெரிந்துதான் “மகன் ‘பிள்ளையோ பிள்ளை’ என நடிக்கிறான். அப்பன் ‘கொள்ளையோ கொள்ளை’ என அடிக்கிறான்” என்று எம்.ஜி.ஆர். காலத்திலேயே அ.தி.மு.க.வினர் கோஷம் எழுப்பியுள்ளனர்.

தற்போது கருணாநிதியின் கதை, வசனத்தில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள 'இளைஞன்' படத்தை தயாரிக்க லாட்டரி அதிபர் மார்ட்டின் முன் வந்த செயலை நீங்கள் இதோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். கருணாநிதி அன்றைக்கே அப்படித்தான் இருந்திருக்கிறார்..

இந்த நேரத்தில் மீண்டும் ஒரு மலரும் நினைவு..!

கடந்தாண்டு ஜூலை 13-ம் தேதியன்று கோவையில் நடந்த கட்சிப் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசும்போது, “ஸ்டார் இன்ஷூரன்ஸ் என்கிற நிறுவனம், துபாயை தலைமையிடமாகக் கொண்ட, இ.டி.எ. ஸ்டார் குரூப் என்ற மிகப் பெரிய, சர்வதேச நிறுவனத்தைச் சார்ந்ததாகும். இதன் தலைமையிடம்தான் துபாய். ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான், இதை இயக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த இ.டி.எ. குழுமம்தான்,  700 கோடி மதிப்பிலான புதிய தலைமைச் செயலக வளாகத்தை கட்டிக் கொண்டு இருக்கிறது. இந்தக் குழுமத்தினுடைய மற்றொரு நிறுவனம்தான், ஜெனிக்ஸ் எக்சிம். மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர், ஆ.ராசாவின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய அரசுக்கு 1 லட்சத்து 90 ஆயிரம் கோடிக்கு மேல், இழப்பை ஏற்படுத்திய, 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டைப் பெற்ற, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தில், ஜெனிக்ஸ் எக்சிம் நிறுவனத்துக்குப் பங்கு உண்டு.

1970-களிலிருந்து கருணாநிதியுடன் நெருங்கிய தொடர்புள்ளது இ.டி.எ. குழுமம். இந்தக் குழுமத்தைச் சேர்ந்ததுதான், கிரசென்ட் ஃபிலிம்ஸ் என்ற திரைப்பட விநியோக நிறுவனம். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு போட்டியாக, தனது மகன் மு.க.முத்துவை வைத்து, கருணாநிதியால் தயாரிக்கப்பட்ட, ‘பிள்ளையோ பிள்ளை’ என்ற திரைப்படத்தை வெளியிட்டது இந்த கிரசென்ட் ஃபிலிம்ஸ் நிறுவனம்தான்!

பல்வேறு திட்டங்களின் கீழ், ஸ்டார் குழுமத்துக்கு கொடுக்கப்படும் அரசுப் பணம், அதாவது உங்கள் பணம், துபாயில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமையிடத்துக்குச் செல்கிறது!” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

இப்போது உங்களுக்கு முழுவதும் விளங்கியிருக்குமே..!

நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர் - 31-03-2011, மாலைமலர், சில இணையப் 
                பத்திரிகைகள்

பூச்சி மருந்து தெளிப்பதிலும் கருணாநிதியின் ஊழல் - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை..!

 29-03-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சர்க்காரியா கமிஷனின் விசாரணையில் வெளியான கருணாநிதியின் ஊழல்களில் அடுத்தது இந்த பூச்சி மருந்து ஊழல்..! தாத்தா தனது ஊழலை பைசா கணக்கில் ஆரம்பித்துதான் இப்போது லட்சம் கோடியில் வந்து நின்றிருக்கிறார்..! என்னவொரு கடின உழைப்பு..! இதற்காகவே தாத்தாவை தனியாக வாழ்த்த வேண்டும்..! இனி படியுங்கள்..!

முந்த்ரா முதல் ஸ்பெக்ட்ரம் வரை - பகுதி 17

கிராமங்களில் வயல்களில் உள்ள பயிர்களைப் பூச்சிகள் தாக்காமல் இருப்பதற்கு பூச்சி மருந்து தெளிப்பதைப் பார்த்திருப்பீர்கள்.. அதுபோல, ஒரு பூச்சி மருந்து தொடர்பான விவகாரத்தைத்தான் நீதிபதி சர்க்காரியா விசாரித்தார். இந்தப் பூச்சி மருந்து தெளித்ததில், பூச்சிகள் செத்ததோ இல்லையோ.. நேர்மையும், நியாயமும் செத்துப் போனதென்னவோ உறுதி..!

1970-ம் ஆண்டு மத்திய அரசு விமானம் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் தி்ட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. அதிகமாக பூச்சித் தாக்கும் பகுதிகளில் விமானம் மூலமாக பூச்சி மருந்தை தெளித்து, அதன் மூலம் விவசாயத்தை வளர்க்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இத்திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது..

இதற்காக ஒரு ஏக்கருக்கு 7 ரூபாயை மத்திய அரசு செலவிடும் என்றும், அதற்கு மேலாகும் செலவுகளை மாநில அரசே ஏற்க வேண்டும் என்றும் திட்டமிடப்படுகிறது. திட்டமெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா, தமிழ்நாட்டில் அந்தத் திட்டம் பட்டபாடு இருக்கிறதே..!

இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட உடனேயே களத்தில் இறங்குகிறார் தி.மு.க.வின் திருச்சி மாவட்டச் செயலாளரும், தி.மு.க.வின் மூத்தத் தலைவருமான அன்பில் தர்மலிங்கம். பொதுப்பணித் துறை காண்ட்ராக்டர் ராஜகோபால் என்பவர் அன்பிலுக்கு நெருக்கமாகிறார். உடனே ராஜகோபாலுக்கு தொழில் அபவிருத்தி ஆகிறது. தன்னுடைய தொழிலை அபிவிருத்தி செய்வது மட்டுமில்லாமல், அன்பில் தர்மலிங்கம் தன்னை அபிவிருத்தி செய்து கொள்ளவும் உதவிகள் செய்கிறார் ராஜகோபால்.


மத்திய அரசு விமானம் மூலம் பூச்சி மருந்து என்ற திட்டத்தை அறிவித்த உடனேயே அன்பிலை சந்திக்கிறார் ராஜகோபால். “அண்ணே.. இந்த விமானக் கம்பெனிக்காரங்க பூச்சி மருந்து தெளிக்கிறதுல நிறைய சம்பாதிக்கிறாங்க.. நாம இதுல தலையிட்டா கமிஷன் வாங்கலாம்..” என்று யோசனை தெரிவிக்கிறார். கரும்பு தின்ன யாருக்குத்தான் கசக்கும்? அன்பில் உடனடியாக ஆமோதிக்கிறார்.

மருந்துத் தெளிப்பு விமான கம்பெனிகளோடு பேச்சுவார்த்தையைத் தொடங்க உத்தரவிடுகிறார் அன்பில். கம்பெனி பிரதிநிதிகளை அழைத்து ஒரு ஏக்கருக்கு எத்தனை ரூபாய்க்கு மருந்து தெளிக்க இயலும் என்று கேட்கிறார்கள்.. ஒரு ஏக்கருக்கு 7 ரூபாய்க்கே தெளிக்கலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள். மத்திய அரசு நிர்ணயித்த விலையிலேயே மருந்து தெளித்தால், அப்புறம் அன்பில் எப்படி சம்பாதிப்பது?

அதனால் பூச்சி மருந்துத் தெளிப்புக் கம்பெனிகள் ஏக்கருக்கு 9 ரூபாய்க்கு மருந்து தெளிப்பதாக கொட்டேஷன் கொடுக்க வேண்டும் என்றும், அதில் ஒரு ஏக்கருக்கு 40 பைசா கமிஷனாகக் கொடுக்க வேண்டும். ஒப்பந்தம் அவர்களுக்குத்தான் என்பதற்கு தாங்கள் கியாரண்டி என்றும் பேசப்படுகிறது. அது மட்டுமல்ல.. கமிஷன் முன் பணமாக உடனடியாகக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் பேசப்படுகிறது. கம்பெனிகளுக்கும் இதில் லாபம்தானே? உடனடியாக ஒப்புக் கொள்கிறார்கள்.

சரி.. கமிஷன் வாங்குவதென்று முடிவாகிவிட்டது. எப்படி வாங்குவது..? அந்தக் கம்பெனிகளும் கொடுக்கும் பணத்துக்கு ரசீது வேண்டுமென்று கேட்கிறார்கள். நூதனமான யோசனை ஒன்று தோன்றுகிறது அன்பிலுக்கு. அதன்படி, பொன்னி ஏஜென்சீஸ் என்று ஒரு நிறுவனத்தைத் தொடங்குகிறார். மருந்து தெளிக்க ஆர்டர் பெறும் விமானக் கம்பெனிகள் அந்த பொன்னி ஏஜென்ஸியோடு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.

அதாவது பொன்னி ஏஜென்ஸீஸ் அரசிடமிருந்து ஒப்பந்தம் பெற்றுத் தருவதற்காக விமானக் கம்பெனிகளிடமிருந்து ஒரு ஏக்கருக்கு 40 பைசா வீதம் கமிஷன் பெறுவதென்று ஒப்பந்தம் போடப்படுகிறது. இந்த ஏற்பாட்டின்படி 75 ஆயிரம் ரூபாய் முன் பணமாக அன்பில் தர்மலிங்கத்திற்குக் கொடுக்கப்படுகிறது. இந்தப் பணம் கொடுக்கப்படுகையில் அன்பில் தர்மலிங்கம், தி.மு.க.வின் திருச்சி மாவட்டச் செயலாளர். அவ்வளவுதான்..

எல்லாம் நன்றாகத்தான் நடந்து கொண்டிருந்தது. இவர்களே பங்கு பிரித்துக் கொண்டால், விவசாயத் துறைக்கென்று ஒரு அமைச்சர் இருப்பாரே..? அவரைக் கவனிக்காமல் கோட்டைவிட்டு விட்டார்கள். அங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது..

இந்த விவகாரத்தைக் கேள்விப்பட்ட அப்போதைய விவசாயத் துறை அமைச்சர் திருமதி சத்தியவாணி முத்து உடனடியாக விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் அனைவரும் 1970 ஜூன் 4-ம் தேதியன்று தன்னைச் சந்திக்க வேண்டுமென்று உத்தரவிடுகிறார்..

அவ்வளவுதான்.. அன்பில் தர்மலிங்கத்துக்கும், ராஜகோபாலுக்கும் கிலி ஏற்படுகிறது. இந்த அம்மையார் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டால் என்ன செய்வது என்று பதறுகிறார்கள். உடனடியாக விமானக் கம்பெனி நபர்களை அழைத்து சத்தியவாணி முத்துவிடம் பேச்சுவார்த்தை நடத்துகையில் ஏக்கருக்கு 9 ரூபாய்க்குக் குறைவாக மருந்து தெளிக்க இயலாது என்று உறுதியாகக் கூறிவிடுமாறு சொல்கிறார்கள்.

சத்தியவாணி முத்துவோடு மீட்டிங் நடக்கிறது. சத்தியவாணிமுத்து ஒரு ஏக்கருக்கு 8.25 ரூபாய்க்கு மேல் முடியாது என்று உறுதியாக நிற்கிறார். விமானக் கம்பெனிகள் 9 ரூபாய் என்பதில் உறுதியாக நிற்கின்றன. கம்பெனி பிரதிநிதிகளின் பிடிவாதத்தைப் பார்த்து எரிச்சலடைந்த சத்தியவாணிமுத்து, “8.25 ரூபாய்க்கு மருந்து தெளிக்க முன் வருபவர்கள், விவசாயத் துறை இயக்குநரை சந்திக்கலாம். மற்றவர்கள் செல்லலாம்” என்று கூட்டத்தை முடித்துக் கொள்கிறார். இந்த விஷயத்தை கோப்பிலும் பதிவு செய்கிறார்.

“வேலையை முடித்துக் கொடுக்கிறேன்..” என்று அட்வான்ஸ் லஞ்சத்தை பெற்றுக் கொண்ட அன்பிலுக்கு திருடனுக்குத் தேள் கொட்டியதைப் போல இருந்தது. உடனடியாக முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கிறார். “என்ன தலைவரே..! இந்த அம்மா இப்படித் தொந்திரவு பண்ணுது..” என்று வத்தி வைக்கிறார். கருணாநிதிக்கு வந்ததே கோபம்..!

நான் முதலமைச்சராக இருக்கும்போது இந்த அம்மையாருக்கு என்ன இப்படியொரு துணிச்சல்.. என்று நினைத்து தலைமைச் செயலாளராக இருந்த ஈ.பி.ராயப்பாவை அழைக்கிறார். உடனடியாக ஒரு ஏக்கர் 9 ரூபாய்க்கு பூச்சி மருந்து தெளிக்க ஆணை வெளியிடுமாறு உத்தரவிடுகிறார்.

ராயப்பாவும் அப்படியே அவர் உத்தரவை நிறைவேற்றுகிறார். ராயப்பாவைவிட பணியில் மூத்தவர்கள் எட்டு பேர் காத்திருக்கும்போது ராயப்பாவை தலைமைச் செயலாளர் ஆக்கியவர் கருணாநிதி. இதுபோல சீனியாரிட்டியை மதிக்காமல் தலைமைச் செயலாளரை நியமிப்பதை இன்றுவரை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் கருணாநிதி.

அதற்கடுத்து இது தொடர்பாக நடந்த கூட்டத்தில், அந்தக் கோப்பை பார்வையிட்ட சத்தியவாணி முத்து, 9 ரூபாய்க்கு எதிர்ப்புத் தெரிவித்து தான் எழுதிய குறிப்பு, கோப்பில் இருந்து காணாமல் போனது கண்டு அதிர்கிறார். அதன் பிறகு அவர் மீதும் கப்பல் கட்டுமானத்தில் ஊழல் புகார் எழுந்தது தனிக் கதை.

ஒரு பாகம் முடிந்த நிலையில் ஊழலின் அடுத்த பாகம் அடுத்த நிதியாண்டில் தொடங்குகிறது. 1971-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வான அன்பில் தர்மலிங்கம் இப்போது விவசாயத் துறை அமைச்சராகிறார். இந்த முறை நேரடியாக தானே விமானக் கம்பெனிகளிடம் பேச்சுவார்த்தையைத் தொடங்குகிறார்.

“போனவாட்டி ஒரு ஏக்கருக்கு 40 காசு கொடுத்தீங்க.. இப்போ விலைவாசி ஏறிப் போச்சு.. அதனால ஒரு ஏக்கருக்கு 1 ரூபா கமிஷனா கொடுத்திருங்க.. உங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 11 ரூபாய் தர்றோம்..” என்று பேரம் பேசுகிறார் அன்பில். விமானக் கம்பெனிக்காரர்கள், “அவ்வளவு தர முடியாது.. ஒரு ஏக்கருக்கு 80 காசுகள் கமிஷனாகத் தருகிறோம்.. அதற்கு ரசீது தாருங்கள்..” என்று கூறுகிறார்கள்.

இதற்கு ஒப்புக் கொண்ட அன்பில், ராஜகோபால் இந்த விவகாரத்தில் நிறைய உள்குத்து செய்வதாக சந்தேகிக்கிறார்.. இதனால் ராஜகோபாலைக் கழற்றிவிட முடிவு செய்து விவசாயத் துறை செயலாளராக இருந்த வேதநாராயணனை அழைக்கிறார். “நீங்கள் நேரடியாக கம்பெனிகளிடம் பேசுங்கள். முதலமைச்சர் ஒரு ஏக்கருக்கு 1 ரூபாய் கமிஷன் வேண்டும் என்று விரும்புகிறார். 90 காசுக்குக் குறைய மாட்டார். மேலும் 25 சதவிகித கமிஷன் முன்னதாகவே கொடுக்கப்பட வேண்டும்..” என்றும் கூறுகிறார்.

இதன்படி விஷயம் விமானக் கம்பெனிகளுக்குச் சொல்லப்படுகிறது. எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் எதுவும் கையெழுத்து ஆகாமலேயே பணியைத் தொடங்க அவர்கள் பணிக்கப்படுகிறார்கள். அதன்படியே பணியைத் தொடங்குகிறார்கள்.

இப்போது புதிய சிக்கலாக கடந்தாண்டு செய்த வேலைக்கு உரிய தொகை வந்து சேரவில்லை என்றும், அதை முதலில் பைசல் செய்ய வேண்டும் என்றும் கம்பெனிகள் போர்க்கொடி தூக்குகின்றன. மேலும் முன் பணத்தைத் தவிர கமிஷன் தொகையும் கருணாநிதியின் கைக்கு வரவில்லை. விடுவாரா அவர்..? கடும் கோபமடைந்த கருணாநிதி, 12.09.1971 அன்று அன்பில் தர்மலிங்கத்தை  அமைச்சர் பதவியில் இருந்து  நீக்கிவிட்டு ப.உ.சண்முகத்தை வேளாண் அமைச்சராக்குகிறார்.

அடுத்ததாக கருணாநிதி பிறப்பித்த உத்தரவு. கம்பெனிகள் ஏக்கருக்கு 90 பைசா என்று ஒப்புக் கொண்டபடி கொடுக்கவில்லை. அதனால், அவர்களுக்குச் சேர வேண்டிய தொகைகள் அனைத்தையும் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி நிறுத்தி வைக்கவும் உத்தரவிடுகிறார். இந்த உத்தரவை கருணாநிதியின் செயலாளர் வைத்தியலிங்கம் நிறைவேற்றுகிறார். கம்பெனிகள் அரண்டுபோய், வேளாண் துறை அமைச்சர் ப.உ.சண்முகத்தைச் சந்தித்தபோது, அவர் தனக்கு எதுவும் தெரியாதென்று முதலமைச்சரைக் கை காட்டுகிறார்.

கம்பெனிக்காரர்களுக்கு இக்கட்டில் சென்று மாட்டிக் கொண்டோம் என்பது புரிகிறது. வேறு வழியின்றி 1,17,273 ரூபாயை வசூல் செய்து கருணாநிதியின் செயலாளர் வைத்தியலிங்கத்திடம் கொடுக்கிறார்கள். அவர் அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டு விவசாயத் துறை செயலாளருக்கு கம்பெனிகளுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிட்டார்.

சர்க்காரியா கமிஷனில் நடந்த வழக்கு விசாரணையின்போது சாட்சியம் அளித்த கருணாநிதியின் அப்போதைய செயலாளர் வைத்தியலிங்கம், தனது சாட்சியத்தில், “என்னைப் பொறுத்தவரையில் குற்ற நோக்கிலோ, உள் நோக்கம் கொண்டோ, தெரிந்தோ எனது சொந்த ஆதாயத்துக்காகவோ இந்தப் பணத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை.. நான் செய்ததெல்லாம் அந்தப் பணத்தை முதலமைச்சரிடம் சேர்ப்பிக்கும் தீங்கில்லாத ஒரு கருவியாக இருந்ததுதான்..” என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஊழலைப் பற்றி குறிப்பிட்ட நீதிபதி சர்க்காரியா, “முதலமைச்சர், வேளாண்மைத் துறை அமைச்சர் ஆகியோரின் வாய் மொழி உத்தரவுகளால்தான் இது நடந்துள்ளது. மோசடியை அடிப்படையாகக் கொண்ட இந்த முறையற்ற தந்திரங்களினால் விமான கம்பெனிக்காரர்கள் முதலில் கவரப்பட்டு மீள முடியாத சிக்கலில் மாட்டிவிடப்பட்டு வழிக்குக் கொண்டு வரப்பட்டனர். முதலமைச்சர், வேளாண்மைத் துறை அமைச்சர் ஆகியோர் லஞ்சமாகப் பணம் பறிக்க, அவர்களது கோரிக்கைகளுக்கு இவர்கள் பணிய வேண்டியதாயிற்று..” என்று குறிப்பிடுகிறார்..

சமீபத்தில் அன்பில் தர்மலிங்கம் சிலை திறக்கப்பட்டதையொட்டி கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், “என்னையும், உன்னையும் சிலை வடிவில் நின்று சிரித்த முகத்துடன் அன்பில் அழைக்கின்றார்..! எதையும் உரிமையுடன் உணர்வு கலந்த உணர்வு நட்புடன் கணமும் பிரியாமல் கண்ணின் கருவிழி போல என்னையும், என் நட்பையும், எம் கழகத்தையும் காத்து நின்ற காவலன்..” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பூச்சி மருந்து தெளிப்புத் திட்டத்தில் இறந்தது பூச்சிகளா? நேர்மையும், உண்மையுமா..?

நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர் 27-03-2001

லஞ்சம் பெற்று சட்டத் திருத்தம் செய்த கருணாநிதி - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!

27-03-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'குமுதம் ரிப்போர்ட்டர்' வாரப் பத்திரிகையில் 'இந்தியாவை உலுக்கிய ஊழல்கள்' என்கிற தலைப்பில் 'தஞ்சை ஆச்சிமுத்து' என்பவர் தொடர் கட்டுரை எழுதி வருகிறார்.

இதில் இந்தியாவின் மிக முக்கிய ஊழல்களான முந்த்ராவில் ஆரம்பித்து ஸ்பெக்ட்ரம்வரையிலும் பட்டியலிடப் போவதாக அறிவிப்பு வந்திருந்தது. அந்த வரிசையில் தற்போது சர்க்காரியா கமிஷன் பற்றிய கட்டுரைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன..

தனி நபருக்காக கையூட்டு பெற்றுக் கொண்டு சட்டத்தையே மாற்றியமைக்க முடியும் என்பதை அண்ணாவுக்குப் பிறகான தி.மு.க. ஆட்சியில் முதல்வரான கலைஞர் கருணாநிதி செய்து காண்பித்திருக்கிறார் என்று சர்க்காரியா கமிஷன் குற்றம் சாட்டியிருப்பதை குறிப்பிட்டு எழுதியிருக்கிறார் கட்டுரையாளர்.

சென்னை அண்ணா சாலையில் இருக்கும் பழைய அலங்கார் தியேட்டர் பில்டிங் தனக்கு வேண்டிய வரதராஜ பிள்ளை என்பவருக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக முரசொலி மாறன் மற்றும் ப.உ.சண்முகம் மூலமாக கையூட்டுப் பெற்றுக் கொண்டு சட்டமன்றத்தில் ஒரு அவசரச் சட்டத்தை இயற்றி அதன் மூலம் கருணாநிதி பண ஆதாயம் அடைந்திருப்பதை சர்க்காரியா கமிஷன் வெளிப்படுத்தியுள்ளது. அதன் முழு விபரம் இங்கே..

கடந்த கால வரலாறுகளைத் தெரிந்து வைத்துக் கொள்வது நமது வாரிசுகளுக்கும் நல்லதாச்சே. அவசியம் படியுங்கள் தோழர்களே..!

முந்த்ரா முதல் ஸ்பெக்ட்ரம்வரை - பகுதி - 16

'சர்க்காரியா' என்ற பெயரைக் கேட்டால் இன்றும் தி.மு.க.வினருக்கு கிலி எடுக்கும். அப்படி பயமுறுத்தும் அளவுக்கு அது யார் சர்க்காரியா என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதா? அவர் ரஞ்சித்சிங் சர்க்காரியா..! உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற திறமையான, நியாயமான நீதிபதி..!

1975 ஜூன் 15 இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள். அன்றுதான் இந்திராகாந்தியால் நாட்டில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 1976-ல் தி.மு.க. அரசை இந்திராகாந்தி டிஸ்மிஸ் செய்கிறார். அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டவுடன் உச்சநீதிமன்ற நீதிபதி சர்க்காரியா தலைமையில் தி.மு.க. அரசின் ஊழல்களை விசாரிக்க ஒரு விசாரணை கமிஷனை அமைத்தார் இந்திராகாந்தி.

நீதிபதி சர்க்காரியா ஒரு நீண்ட விசாரணையை நடத்தி தனது அறிக்கையை சமர்ப்பிக்கிறார். இந்த விசாரணை அறிக்கையும் மற்ற ஊழல் விசாரணைகளைப் போலவே கிடப்பில் போடப்பட்டது. ஆனாலும், அன்றைய தி.மு.க. ஆட்சி நிர்வாகம் எப்படி இருந்தது என்பதையும் அந்த விசாரணை அறிக்கை தெளிவாகத் தெரிவிக்கிறது.

தி்.மு.க. ஆட்சி நடத்திய லட்சணம் தெரிந்துவிடும் என்பதற்காக அந்த அறிக்கையின் நகல்கள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. நெருக்கடி நிலையின் அத்துமீறர்களை விசாரிப்பதற்கென்று அமைக்கப்பட்ட ஷா கமிஷனின் அறிக்கையை இந்திராகாந்தி இது போலத்தான் ஒரு நகல் விடாமல் அழித்துவிட்டதாகத் தெரிகிறது. முன்னாள் ஜனதா கட்சித் தலைவர் செழியனின் முயற்சியால் அந்தப் புத்தகம் இப்போது புதிய வடிவில் கிடைக்கிறது. ஆனால் சர்க்காரியா கமிஷன் அறிக்கைக்கு அந்த பாக்கியமெல்லாம் இல்லை. ஏறக்குறைய அனைத்து நகல்களுமே அழிக்கப்பட்டுவிட்டது.

தி.மு.க.வின் ஆட்சியில் அதிகாரிகள் நடவடிக்கை குறித்து சர்க்காரியா இவ்வாறு கூறுகிறார்..

"சில முதுநிலை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தாங்கள் தவறாக நடக்கிறோம் என்று தெரிந்தே கடமையில் இருந்து தவறியுள்ளார். அமைச்சர் வாய் மொழியாகப் பிறப்பித்த கட்டளைகளை நிறைவேற்றியதைத் தவிர வேறு வழி ஏதும் தங்களுக்கு இல்லை” என்று அவர்கள் கூறியுள்ளனர். அமைச்சர் சார்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தி லஞ்சம் வாங்கித் தரும் ஆளாக தங்களைப் பயன்படுத்திக் கொள்வதை அவர்கள் அனுமதித்துள்ளனர்.

அரசு அதிகாரிகள் அமைச்சரின் நல்லெண்ணத்தைப் பெற வேண்டும் என்பதற்காக முறை தவறிச் செயல்பட்டிருக்கிறார்கள். அசட்டையாகவும், மெத்தனமாகவும் அஞ்சிச் சாகும் கோழைகளாகவும் உள்ள இத்தகைய அரசு அதிகாரிகளால் அதிகார வர்க்கம் முழுவதும் நேர்மை கெட்டுவிடுகிறது. அதனால் அவர்களிடம் பரிவு எதுவும் காட்ட வேண்டியதில்லை.." என்று காட்டமாகக் குறிப்பிடுகிறார்.

சர்க்காரியா நடத்திய விசாரணையில் மற்றொரு முக்கிய விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். வழக்கமாக விசாரணை கமிஷன்களுக்கென்று ஒரு அளவுகோல் உண்டு. அந்த கமிஷனை அமைத்த ஆட்சியாளர்கள் என்ன விரும்புகிறார்களோ அவ்வாறே அறிக்கை கொடுப்பதற்கு வசதியாக நீதிமன்றங்களில் கடைப்பிடிக்கப்படும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் குற்றம் நிரூபிக்கப்பட்டது என்ற அளவுகோலைப் பின்பற்றாமல் தங்கள் இஷ்டத்திற்கு விசாரணையை நடத்துகிறார்கள்.

ஆனால் சர்க்காரியா, ஒரு குற்றவியல் நீதிமன்றத்தில் கடைப்பிடிக்கப்படும் அனைத்து நடைமுறைகளையும் தவறாமல் கடைப்பிடித்தார். பூர்வாங்கமான ஆதாரங்கள் பல குற்றச்சாட்டுக்களில் இருந்தும், சந்தேகத்திற்கு இடமில்லாவகையில் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என்று பல குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார்.

இவ்வளவு சிறப்பாக விசாரணை நடத்தி, கொடுக்கப்பட்ட அறிக்கை அரசியல் காரணங்களுக்காக குப்பைத் தொட்டியில் போடப்பட்டது. நெருக்கடி நிலைக்குப் பிறகு, தி.மு.க.வோடு காங்கிரஸ் கூட்டணி சேர்ந்தது. இதனால் இந்த விசாரணைக் கமிஷனின் பரிந்துரையை குப்பையில் போட்டார் இந்திராகாந்தி.


அப்போதைய நிலைமைக்கும், இப்போதைய நிலைமைக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் என்ன தெரியுமா..? தி.மு.க., இந்திராகாந்தியுடன் கூட்டணி வைத்ததால், சர்க்காரியா விசாரணையை கல்லறைக்குள் புதைத்து கொடுத்த வாக்கைக் காப்பாற்றினார் இந்திரா. இன்றும் தி.மு.க. காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருக்கிறது. ஆனால் ஸ்பெக்ட்ரம் விசாரணையில் தி.மு.க.வுக்கு காங்கிரஸ் அந்த அளவுக்கு உதவி செய்யவில்லை. மீனுக்குத் தலையையும், பாம்புக்கு வாலையும் என்பது போல உதவி செய்கிறோம். ஆனால் செய்ய மாட்டோம் என்று தண்ணி காட்டிக் கொண்டிருக்கிறது. அவர் இந்திரா. இவர் தந்திரா இல்லையா..?

உச்சநீதிமன்றம் என்ற ஒன்று மட்டும் இல்லாவிட்டால் ஸ்பெக்ட்ரம் விசாரணையும், சர்க்காரியா கமிஷன் அறிக்கை புதைக்கப்பட்ட அதே கல்லறையில் புதைக்கப்பட்டிருக்கும்.

புதைக்கப்பட்ட அந்த சர்க்காரியா கமிஷன் அறிக்கை..!

உங்களுக்கு பரம்பரைக் கட்டிடம் ஒன்று இருக்கிறது.. அந்தக் கட்டிடத்தில் பல ஆண்டுகளாக ஒருவர் குடியிருக்கிறார். அந்தக் கட்டிடத்தில் வைத்து அவர் தொழில் செய்வதால், அவருக்கு மாதந்தோறும் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது. ஆனால் உங்களுக்கு அவர் வருடத்துக்கு 10 ஆயிரம் ரூபாய்தான் வாடகை தருகிறார் என்றால் ஒப்புக் கொள்வீர்களா..? இதே கதைதான் சென்னை அண்ணா சாலையில் இருந்த க்ளோப் தியேட்டரின் கதையும்..

அண்ணா சாலை எல்.ஐ.சி. அருகே ஒரு பெரிய கட்டிடம் இருக்கிறதல்லவா? அது, முதலில் குளோப் தியேட்டராக இருந்து நியூ க்ளோபாக மாறி, பிறகு அலங்கார் தியேட்டராக மாறி இப்போது வணிக வளாகமாக ஆகியிருக்கிறது..

அந்தக் கட்டிடம் குஷால்தாஸ் என்பவரின் பரம்பரைச் சொத்தாகும். அந்தக் கட்டிடத்தை வரதராஜபிள்ளை என்பவர் 25 ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்திருக்கிறார். குத்தகை கட்டணமாக குஷால்தாஸுக்கு ஆண்டுதோறும் 5000 ரூபாய் கொடுக்கிறார் வரதராஜன். ஆனால் தியேட்டர் நடத்துவதால் வரதராஜனுக்கு வாரந்தோறும் 8000 ரூபாய் வருமானம் வருகிறது. அதாவது ஆண்டுக்கு 4,14,000 ரூபாய் வரதராஜப் பிள்ளைக்குக் கிடைக்கும்.

இந்த வருமானத்தைப் பார்த்தும், எதிர்ப்பு தெரிவிக்காத குஷால்தாஸ், குத்தகை முடிவடைந்ததும் குத்தகையை புதுப்பிக்க விரும்பவில்லை என்று தெரிவிக்கிறார்.. வாரம் 8000 ரூபாய் வருமானம் பார்க்கும் வரதராஜபிள்ளை விடுவாரா? கட்டிடத்தை எனக்கே விற்றுவிடுங்கள் என்று அடிமாட்டு விலைக்குக் கேட்கிறார். இதனால் குஷால்தாஸ் வழக்கு தொடுக்கிறார். இந்த வழக்கு பல்வேறு விசாரணைகளுக்குப் பிறகு உச்சநீதிமன்றத்துக்குச் செல்கிறது. ஊச்சநீதிமன்றம், குஷால்தாஸுக்கு ஆதரவாகத் தீர்ப்பளிக்கிறது. அது மட்டுமில்லாமல், ஆறு வார காலத்திற்குள் இடத்தைக் காலி செய்து உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடுகிறது.


கட்டிடத்தின் மீதிருந்த ஆசையால் சட்டத்தையே மாற்ற நினைத்த வரதராஜன், தி.மு.க. அரசின் அதிகார மையங்களை அணுகுகிறார். அப்போதெல்லாம் அமைச்சர்களும், அதிகார மையங்களாக இருந்தார்கள். முக்கிய அதிகார மையமாக முரசொலி மாறன் இருந்தார்.


சர்க்காரியா கமிஷனில் அளிக்கப்பட்டுள்ள சாட்சியங்களின்படி வரதராஜப் பிள்ளை முதலில் முரசொலி மாறனை அணுகுகிறார். அவர் அமைச்சர் ப.உ.சண்முகத்தை சந்திக்குமாறு அறிவுறுத்துகிறார். ப.உ.சண்முகம், சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு ஒரு லட்சம் ரூபாய் ஆகும் என்று தெரிவிக்கிறார். முதல் தவணையாக 40 ஆயிரம் ரூபாய் ப.உ.சண்முகத்துக்கு கொடுக்கப்படுகிறது.

அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்த வரதராஜப் பிள்ளையிடம் ஒரு லட்சம் ரூபாய் கேட்டால் வெறும் 40 ஆயிரம்தான் கொடுத்திருக்கிறீர்கள்.. சட்டத்தைத் திருத்த மேலும் 60 ஆயிரம் ரூபாய் தேவைப்படும் என்று கருணாநிதி கூறியதாகவும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால் வரதராஜப் பிள்ளை தன்னிடம் 60 ஆயிரம் இல்லை என்றும், 30 ஆயிரம்தான் மேற்கொண்டு தர முடியும் என்றும் சொல்கிறார். அதை ஏற்றுக் கொண்ட கருணாநிதி 30 ஆயிரம் ரூபாயை ஒரு பழுப்பு நிறக் கவரில் வைத்து பெற்றுக் கொண்டதாகவும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுவாகவே மந்த கதியில் செயல்படும் அரசு இந்திரம் இந்தப் பணத்தைப் பெற்ற பிறகு மின்னல் வேகத்தில் செயல்பட்டது. உடனடியாக சட்டப் பேரவையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. எம்.எல்.ஏ.க்களுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் கொடுக்கப்பட வேண்டிய வரைவுச் சட்டம் முதல் நாள்தான் கொடுக்கப்படுகிறது.

இதைப் பற்றி அப்போது எம்.எல்.ஏ.வாக இருந்த டாக்டர் ஹெண்டே, சர்க்காரியா கமிஷன் முன் சாட்சியம் அளித்தார். அவசரம், அவசரமாக சட்டம் கொண்டு வரப்பட்டு தபாலில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பினால் தாமதமாகும் என்று ஒரு அதிகாரி விமானத்தில் டெல்லி சென்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று வந்தார்கள். இந்தச்சட்டத் திருத்தத்தின் மூலம் ஒரிஜினல் உரிமையாளரிடம் சேர வேண்டிய சொத்து ஆட்டையைப் போட்டவருக்கு வந்து சேர்ந்தது. இத்தோடு இந்தக் கொடுமை முடியவில்லை..

இந்தச் சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் வரதராஜப் பிள்ளை நிலத்தை தான் நிர்ணயிக்கும் விலைக்கு தனக்கே விற்க வேண்டும் என்று மீண்டும் நீதிமன்றங்களை அணுகுகிறார். ஆனால் உயர்நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்ததையடுத்து உச்சநீதிமன்றம் செல்கிறார். அங்கே வழக்கு நிலுவையில் இருக்கும்போதே மீண்டும் தி.மு.க.வின் அதிகார மையத்தை அணுகுகிறார்.

அவரது விருப்பத்தின்படி, மீண்டும் இரண்டாவது முறையாக சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. இது பற்றிக் குறிப்பிடும் சர்க்காரியா, “முதல் திருத்தத்தின் விளைவாக தனது நோக்கம் ஈடேற முடியாத வரதராஜ பிள்ளைக்காகவே இந்த இரண்டாவது திருத்தமும் செய்யப்பட்டது என்பதை இது வெளிப்படையாகக் காட்டுகின்றது” என்று கூறுகிறார்.

இந்த விசாரணையி்ன முடிவில், நீதிபதி சர்க்காரியா, “இந்தச் சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வந்து விவாதித்து நிறைவேற்றுவதில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியும், உணவு மற்றும் வருவாய்த் துறை அமைச்சர் ப.உ.சண்முகமும், சட்டத் துறை அமைச்சர் மாதவனும், வரதராஜப் பிள்ளைக்கு மறைமுகமாக உதவ வேண்டும் என்ற தீய நோக்கத்துக்காக உத்தரவிட்டிருக்கின்றனர்” என்று கூறுகிறார்.

சட்டமன்றத்தையும், சட்டம் இயற்றும் அதிகாரத்தையும் தனி நபரின் நலனைக் கருத்திக் கொண்டு தி.மு.க.வினர் எப்படியெல்லாம் தங்கள் இஷ்டத்திற்கு வளைத்திருக்கிறார்கள் என்று பார்த்தீர்களா..?

இந்தக் கதை இன்றுவரை தொடர்கிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு கிரவுண்டு நிலங்கள் மகாபலிபுரம் அருகே என்று அறிவித்தபோது மார்க்சிஸ்ட் கட்சியினரின் எதிர்ப்பையும் மீறி அது நிறைவேற்றப்பட்டது.

சர்க்காரியா கமிஷன் விசாரணையில் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்காக ஆஜரானவர் பிரபல வழக்கறிஞர் சாந்திபூஷன். ஆனால் தற்போது  உச்சநீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணை ஒழுங்காக நடைபெறுவதற்கும்,
கருணாநிதியின் குடும்பத்தினர், சி.பி.ஐ.யால், விசாரிக்கப்படுவதற்கும் காரணமான முக்கியமான வழக்கை தாக்கல் செய்து அதில் வாதிட்டுவருவது இதே சாந்திபூஷனின் மகன் பிரசாந்த் பூஷன்தான் என்பது காலத்தின் கோலம்தானே..?

நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர் - 24-03-2011

இனி நான்..!

ஷா கமிஷன் அறிக்கைகூட தற்போது மிகப் பெரும் புத்தகமாக அச்சிடப்பட்டு மக்கள் பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் சர்க்காரியா கமிஷனின் அறிக்கை தற்போது சட்டப் பேரவை நூலகத்தில்கூட கிடைக்கவில்லை என்றுதான் நான் விசாரித்த மூத்த பத்திரிகையாளர்கள்கூட சொல்கிறார்கள்..

இந்தக் கட்டுரையில் கட்டுரையாளர் விவரிக்காமல் விட்டுப் போன விஷயம் ஒன்று.. அது கருணாநிதி கொண்டு சட்டத் திருத்தத்தின் வாசகங்கள் என்ன என்பதுதான்..! நானும் இதனை மேற்கொண்டு விசாரித்துப் பார்த்தேன்.

அதாவது, "15 வருடங்களுக்கும் மேலாக ஒரே இடத்தை அனுபவித்து வரும் ஒருவர், அதே இடம் விற்பனைக்கு வரும்போது அதனை வாங்குவதற்கு முதல் உரிமையுள்ளவர் என்றும், இடத்தின் உரிமையாளர் இடத்தை விற்பதாக முடிவெடுத்தால், முதலில் அதன் தற்போதைய குத்தகைதாரர் அல்லது அதனை அனுபவித்து வருபவருக்கே விற்க வேண்டும். அவர் வாங்க மறுத்தால் மட்டும்தான், வெளி நபர்களுக்கு விற்க வேண்டும் என்பதாக இருந்தது" என்கிறார்கள்..

இதில் வரதராஜ பிள்ளைக்காகச் சேர்க்கப்பட்ட இரண்டாவது சட்டத் திருத்தத்தில்தான் "குத்தகைதாரர் அல்லது அனுபவித்து வருபவர் கேட்கும் விலைக்கே இடத்தை விற்க வேண்டும்..' என்கிற வாசகங்கள் சேர்க்கப்பட்டது" என்கிறார்கள். 

'நெஞ்சுக்கு நீதி'யை தலைகீழாகப் புரட்டிப் பார்த்துவிட்டேன்.. சர்க்காரியா கமிஷனின் இந்தக் குற்றச்சாட்டுக்களை பொய் என்று சொல்லி எந்த ஆதாரத்தையும் தாத்தா அதில் வைக்கவில்லை. ஆகவே, அந்த 'நெஞ்சுக்கு நீதி'யை நம் 'நெஞ்சுக்கு அநீதி'யாக்கி நடந்த உண்மைகளை உணர்ந்து கொள்வோம்..!

அண்ணா நாமம் வாழ்க..!

பெரியார் நாமம் வாழ்க..!

சட்டப்படி குற்றம் - கிளைமாக்ஸில் சொதப்பிய எஸ்.ஏ.சி.

26-03-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நேற்று, வெள்ளிக்கிழமை ரிலீஸான படங்களில் அதிக எதிர்பார்ப்புடன் வந்த படம் இது. ஆளும்கட்சி மட்டுமல்லாமல் எதிர்க்கட்சிகள்கூட ஆவலுடன் எதிர்பார்த்த திரைப்படமும் இதுதான். தொல்.திருமாவளவன் இத்திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு புகார் மனு கொடுக்கும் அளவுக்கு இருந்தது இந்தப் படத்தின் எதிர்பார்ப்பு..!

நேர்மையான போலீஸ் அதிகாரியான சுபாஷ்சந்திரபோஸை தனது வீட்டிற்கு அழைத்து அவமானப்படுத்துகிறார் தொகுதி எம்.பி. தனது செருப்பை எடுத்து வரும்படி சொன்ன எம்.பி. மீது கோபம் கொண்ட போஸ், அதே செருப்பால் எம்.பி.யை நாலு சாத்து சாத்திவிடுகிறார்.. கோபம் கொண்ட எம்.பி., போஸின் குடும்பத்தையே வேரறுத்துவிட.. போஸ் போலீஸ் வேலையில் இருந்து ஒதுங்குகிறார்..

நேருக்கு நேராக எம்.பி.யுடன் மோதி ஜெயிக்க முடியாது என்பதை உணர்ந்த போஸ், இதேபோல் அரசியல்வியாதிகளால், அதிகார அமைப்புகளால் பாதிக்கப்பட்ட இளைஞர்களையும், இளைஞிகளையும் திரட்டி அவர்கள் மூலமாக ஊழல்வியாதிகளையும், அரசியல்வியாதிகளையும் ஒழித்துக் கட்ட முடிவெடுக்கிறார். இதனை எப்படிச் செய்து முடிக்கிறார் என்பதுதான் படமே..!

தான் எடுத்த பிளாக்பஸ்டர் மூவியான சட்டம் ஒரு இருட்டறையின் மறுவடிவம்தான் இந்த சட்டப்படி குற்றம் என்று தொடர்ந்து பல மாதங்களாகச் சொல்லி வந்தார் எஸ்.ஏ.சி. தனது மகனான இளைய தளபதி விஜய்க்கு ஆளும் கட்சியின் ஆசி பெற்ற வாரிசுகள் கொடுத்த தொல்லையைக் கண்டு மனம் குமுறிய பின்புதான் திடீரென்று சட்டம் ஒரு இருட்டறைக்கு உயிர் கொடுத்து சட்டப்படி குற்றத்தைத் துவக்கினார்.

உள்ளபடியே இந்தக் காலக்கட்டத்தில் தமிழ்நாட்டுக்கு மிக அவசியமான திரைப்படம்தான் இது.. தற்போதைய அரசியல் சூழலை அக்குவேறு ஆணிவேறாக அர்த்தப்படுத்தியிருந்தாலும், இது அத்தனைக்கும் யார் காரணம் என்று குறிப்பிடும்போது மட்டும் சொதப்பிவிட்டார் எஸ்.ஏ.சி. என்ன காரணமோ? பயமா? அல்லது மரியாதையா என்று தெரியவில்லை..!

நித்தியானந்தா-ரஞ்சிதா மேட்டரும் ஒரு கிளைக் கதையாக வருகிறது..! சென்ற தேர்தலில் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட கதையும் வருகிறது..! ஆ.ராசாவின் ஸ்பெக்ட்ரம் ஊழலை உரித்துத் தொங்கவிட்டிருக்கிறார். "ராசா.. ராசா.. ராசா.." என்று ராசாவின் பெயர் இடைவேளைக்குப் பின்பு பல முறை திரையரங்கில் ஒலிக்கிறது..!

ஆ.ராசாவுக்கு எஸ்.ஏ.சி. வழங்கியிருக்கும் தண்டனை ஆயுட்காலம் முழுவதும் சிறைதான்.. சிறைக்குள்ளேயே செத்தால்கூட பொணத்தை வெளியே கொண்டு வரக் கூடாது. அதையும் சிறைக்குள்ளேயே புதைத்துவிடுங்கள் என்கிறார்..!


உயர்நீதிமன்ற நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், போலீஸ் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள் என்று 40 பேரை காட்டுக்குள் கடத்தி வர வைக்கிறார் போஸாக நடித்திருக்கும் சத்யராஜ்.. கடத்தப்பட்டு வருபவர்களிடம் தங்களின் சோகக் கதையைக் கூறி, நாடு இன்றைக்கு இருக்கும் நிலைமையை எடுத்துச் சொல்லி தாங்கள் நடத்தவிருக்கும் புதிய சுதந்திரப் போராட்டத்திற்கு அவர்களிடத்தில் உதவி கேட்கிறார்..

ஒரு நீதிபதி ஒத்துக் கொள்ள.. அவருடைய தலைமையிலேயே அரசியல்வியாதிகளுக்கு எதிராக தனது போராட்டத்தைத் துவக்குகிறார் சத்யராஜ். இதற்கு இன்னுமொரு போலீஸ் அதிகாரியும் ஒத்துழைப்பு கொடுக்க முதலில் அரசியல்வியாதிகளின் அல்லக்கைகள் மானாவாரியாக சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.

பின்பு.. மக்கள் சொத்துக்களை சுருட்டி வைத்திருக்கும் அரசியல்வியாதிகளின் மேல் போலீஸ், நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்க வைக்கிறார். அரசியல்வியாதிகள் அனைவரும் அடுத்த இரண்டு நாட்கள் இடைவெளியில் அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் தாங்கள் முறைகேடாக சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் ஒப்படைக்காவிட்டால் அனைவரும் கூண்டோடு சமாதிதான் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.

மந்திரி பிரதானிகளும், எம்.எல்.ஏ.க்களும் கட்சித் தலைவரிடம் போய் இது பற்றி முறையிட.. அவர் தன் சோகத்தைப் புலம்புவதுதான் படத்தின் ஹைலைட்.. “நான் இதுவரைக்கும் எவ்வளவோ நல்ல பேர் சம்பாதிச்சு வைச்சிருந்தேன். அத்தனையும் குழி தோண்டி புதைச்சுட்டீங்க. உங்களையெல்லாம் எவ்ளோ நம்பியிருந்தேன். கடைசில என் குடும்பத்துல இருக்குறவங்களே எனக்குத் துரோகம் பண்ணிட்டாங்க..” என்று முழு பிளேட்டையும் மாற்றிப் போட்டுப் பேச.. அதுவரையிலும் படத்தின் மீதிருந்த மரியாதை இந்த இடத்தில் பட்டென்று உடைந்துபோனது.

வெறும் குரலை மட்டுமே காட்டும் அந்தக் காட்சியில் அந்தத் தலைவர் யார் என்பது தெளிவாகத் தெரிந்து தியேட்டரில் கை தட்டல்கள் ஒலித்தன என்றாலும், எஸ்.ஏ.சி.யின் இந்தச் சறுக்கல் யாருமே நினைத்துப் பார்க்காதது...!

இதுதான் இப்படியென்றால் படம் முழுக்கவே ஒருவித முழுமையற்ற இயக்கம்தான் தென்படுகிறது. ஏனென்று தெரியவில்லை. உண்மையாகவே எஸ்.ஏ.சி.தான் இயக்கம் செய்தாரா? அல்லது வேறு யாராவது செய்தார்களா என்றும் சந்தேகம் வருகிறது..!

முதல் காட்சியிலேயே நமக்கு டவுசர் கிழிந்துவிட்டது.. தூக்குத் தண்டனை கைதியை தூக்கு மேடைக்கு அழைத்துப் போகிறார்கள். நல்ல காலை நேரம். சர்வசாதாரணமாக ஜெயிலர் ஒரு காவலரை அழைத்து சூர்யாவை கூட்டிட்டு வா என்கிறார். ஏதோ கல்யாண மண்டபத்துக்கு அழைத்து வருவதைப் போல சூர்யா என்னும் விக்ராந்தை தூக்கு மேடைக்கு அழைத்து வருகிறார்கள். முகத்தில் கருப்புத் துணி மூடி கழுத்தில் கயிற்றை மாட்டிவிட்டு ஜெயிலர் வீலை இழுக்கச் சொல்லும்போது சுவரை உடைத்துக் கொண்டு ஜீப்பில் உள்ளே வருகிறார்கள் போராளிகள்..!

இந்தக் காமெடியை கடைசியாக நான் பார்த்தது 'ராஜாதிராஜா' படத்தில்தான் என்று நினைக்கிறேன். எம்புட்டு நாளாச்சு.. கொன்னுட்டாரு எஸ்.ஏ.சி...! இதுதான் இப்படியென்றால்.. விக்ராந்த் தானே கயிற்றைக் கழட்டிவிட்டு, கருப்புத் துணியைக் கழட்டி வீசிவிட்டு வந்தவர்களுடன் ஓடுகிறாராம்..!

கிட்டத்தட்ட 30 வருட திரையுலக அனுபவம் வாய்ந்தவர் எஸ்.ஏ.சி. ஏன் இப்படி..? அத்தோடு போலீஸ் அதிகாரிகளை அறிமுகப்படுத்தியதில் பலவித குழப்பங்கள்.. சுரேஷை முதலில் போலீஸ் கமிஷனர் என்று சொல்கிறார்கள். பின்பு அஸிஸ்டெண்ட் கமிஷனர் என்கிறார்கள். ஒரு போலீஸ் அதிகாரிகூட உருப்படியாக பேசவில்லை. அத்தனையும் சொதப்பல் வசனங்கள்..!

பேரன்களின் அசுர வளர்ச்சி.. திரைப்படத் துறையில் அவர்களின் ஆதிக்கம்.. பொது இடங்களில் அவர்களின் அத்துமீறல்.. தினகரன் பத்திரிகை எரிக்கப்பட்ட சம்பவம்.. தயாநிதி அழகிரி ஒரு நடு இரவில் பார்க் ஓட்டலின் பாரில் முன்னாள் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் நட்ராஜுடன் மோதியது என்று பலவற்றையும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்..

ராதாரவி நீதிபதி கேரக்டரில்.. அவர் வாசிக்கின்ற தீர்ப்பு வாசகங்கள் மிக காமெடி.. அதைவிடக் காமெடி அசுர வேகத்தில் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு சொல்வது..! நிச்சயமாக தற்போதைய சூழலில் அது போன்று நடத்தவே முடியாது. ஆனாலும் இயக்குநரின் ஆசை போலும்..!


செந்தமிழன் சீமான், ஆ.ராசாவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்திக் கேள்வி கேட்கும் வழக்கறிஞர். ராசாவை திட்டும் சாக்கில் அனைத்து அரசியல்வியாதிகளையும் ஒரு கை பார்க்கிறார்..! அண்ணனின் இந்த வக்கீல் என்ட்ரி, கடைசி நேரத்தில் திணிக்கப்பட்டதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

மெயின் வில்லனாக ஏ.வெங்கடேஷ்.. விக்ராந்தின் கதையில் தோல்வியடையும் நேரத்தில் “ஸ்வீட் எடுடா” என்று கொண்டாடுவது தாத்தாவை மறைமுகமாக குத்திக் காட்டுகிறது என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்..!

'ஊமை விழிகள்' படத்தின் 'ராத்திரி நேரத்து பூஜையில்' பாட்டை  ரீ்மிக்ஸ் செய்து கொலை செய்திருக்கிறார் விஜய் ஆன்ட்டனி. கொத்து புரோட்டா போடுவதைப் போல பல சினிமா பாடல்களை இணைத்து இன்னொரு ஜூகல்பந்தியையும் நடத்தியிருக்கிறார். மற்றபடி படத்துக்கு இவர் எந்தவிதத்திலும் உதவவில்லை..!

காட்டுக்குள் இத்தனை இளைஞர்களையும் திரட்டிக் கொண்டு போய் அமர்த்தி தனியே டிரெயினிங் கொடுப்பதை கற்பனையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை என்றாலும் வீரப்பன் கதையைக் கொஞ்சம் தொட்டுத் தொட்டு அதனை நம்பும்படியாக ஆக்கியிருக்கிறார் இயக்குநர்..


சத்யராஜ் சேகுவேரா ஸ்டைலில் உருமாறியிருக்கிறார். நீண்ட வருடங்களாக அவர் எதிர்பார்த்திருந்த வேடம். இப்போதுதான் சிக்கியிருக்கிறது. ஏதோ தன்னால் முடிந்த அளவுக்கு எடுபட்டிருக்கிறார்..! குவார்ட்டரை கொடுத்துவிட்டு புல் அடித்த போதையில் ஆடும்படி சொன்னால் எப்படி ஆடுவார்..? அப்படித்தான் இருக்கிறது அவரது நடிப்பு..! ஆனாலும் தாத்தாவை திட்டுவதுபோல் வரும் ஒரு வசனத்தை உச்சரித்திருக்கும் தைரியத்திற்கு ஒரு சபாஷ்..! ஆனாலும் வெளிப்படையாக என்றைக்கு அவர் தனது முகமூடியைக் கழட்டப் போகிறார் என்று தெரியவில்லை. பார்ப்போம்..!

காட்சியமைப்புகளில் இருக்கும் உருப்படியில்லாத தன்மையும், நாடகத்தனமான வசன உச்சரிப்புகளும் படத்தின் தொய்வுக்கு மிக முக்கிய காரணமாக உள்ளன. ஒருவேளை என்னைப் போன்ற அரசியல் விமர்சகர்களுக்கு வேண்டுமானால் இத்திரைப்படம் பிடித்தமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். மற்றவர்களுக்கு..? நிச்சயமாக இத்திரைப்படம் சட்டம் ஒரு இருட்டறையோ, நான் சிகப்பு மனிதனோ இல்லை.. அவைகளில் இருந்த ஒரு விறுவிறுப்பு, இதில் இல்லாமல் போனது என்னவோ உண்மைதான்..!


நான் படம் பார்த்த மாலை நேரத்தில் சாலிகிராமம், எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் தியேட்டரைவிட்டு சற்றுத் தள்ளி காரை நிறுத்திவிட்டு தியேட்டர் மேனேஜரை அழைத்து மதியம் படம் பார்க்க வந்தவர்கள் பற்றியும், ரிசல்ட் பற்றியும் காரில் இருந்தபடியே அக்கறையுடன் விசாரித்துவிட்டுப் போனார் எஸ்.ஏ.சி.. அதேபோல் இரவு காட்சி முடிந்தவுடனும் அவருடைய உதவியாளர்கள் வெளியில் வந்தவர்களிடம் படம் பற்றி விசாரித்துக் கொண்டிருந்ததையும் காண முடிந்தது..!

எப்பாடுபட்டாவது இத்திரைப்படத்தை தேர்தலுக்குள் கொண்டு வந்தாக வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டிருக்கிறார் எஸ்.ஏ.சி. அந்த ஒரு விஷயத்திற்காகவும், இந்த நேரத்தில் திரையுலகில் யாருக்குமே தோன்றாத அளவுக்குத் தைரியத்துடன் ஆளும் கட்சியை நேரடியாகவே தாக்கி ஒரு திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டிருக்கும் எஸ்.ஏ.சி.க்கு எனது சல்யூட்..!

நிச்சயமாக ஒரு முறை பார்க்கலாம்..!

கருணாநிதியை மிஞ்சிய ஜெயலலிதா..!

25-03-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

முதல்வர் கருணாநிதியும், ஜெயலலிதாவும் நேற்று வேட்பு மனு தாக்கலின்போது, தங்கள் சொத்து மதிப்பையும் தாக்கல் செய்துள்ளனனர். கடந்த தேர்தலின்போது இவர்கள் இருவருக்கும் இருந்த சொத்து மதிப்பு இப்போது மூன்று  மடங்கு உயர்ந்துள்ளது.

முதல்வர் கருணாநிதி தனது சொத்து விவரங்களில் தன் பெயரில் உள்ள பணம் கையிருப்பு அசையும், அசையா சொத்துக்கள், தன் மனைவியர் தயாளு, ராஜாத்தி ஆகியோரின் பெயரில் உள்ள சொத்துக்கள் ஆகியவற்றை காட்டியுள்ளார்.

ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் அளவுக்கு கடன் இருப்பதாகவும் கருணாநிதி கூறியுள்ளார். இந்த கடனை ராஜாத்தி மற்றும் கனிமொழியிடம் இருந்து வாங்கியுள்ளாராம். கடந்தாண்டு வருமான வரித்துறைக்கு வழங்கிய கணக்கின்படி, கருணாநிதிக்கு 37 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் வருமானம் வந்துள்ளது. தயாளுக்கு 64 லட்சத்து 37 ஆயிரம் ரூபாயும், ராஜாத்திக்கு ஒரு கோடியே 67 லட்சத்து 94 ஆயிரம் ரூபாயும் வருமானம் கிடைத்துள்ளது. மற்ற அசையும், அசையா சொத்துக்களையும் சேர்த்து மொத்தமாக 50 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து கணக்கு காட்டப்பட்டுள்ளது.

ஆனால் ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு, 51 கோடியே 40 லட்சத்து 67 ஆயிரத்து 979 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நகைகளையும் தனது சொத்தாக குறிப்பிட்டுள்ளார் ஜெயலலிதா. ஆனால், அவற்றின் மதிப்பை குறிப்பிடவில்லை. போயஸ் தோட்ட இல்லம், ஐதராபாத், கோடநாடு சொத்துக்கள் பற்றியும் தனது சொத்துப் பட்டியலில் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதாவிடம் இருக்கும் சொத்துக்கள் என்னென்ன..?

ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களின் மொத்த மதிப்பு, 51 கோடியே 40 லட்சத்து 67 ஆயிரத்து 979 ரூபாய். 
 
அசையும் சொத்துக்கள்

1. கையிருப்பு ரொக்கம்- 25,000 ரூபாய்

2. பல்வேறு வகையான வங்கி நிரந்தர வைப்புத் தொகை, சேமிப்பு கணக்கு டிபாசிட், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் டிபாசிட் மொத்தம் 2 கோடி ரூபாய் மதிப்பில் உள்ளது. இவை சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்து நீதிமன்றப் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளது.

3. பாண்டுகள், கம்பெனிகளில் பங்கு முதலீடு-50,000 ரூபாய். இவையும் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றப் பொறுப்பில் உள்ளது.

4. சொந்தமான வாகனங்களில் மொத்த மதிப்பு 8.35 லட்சம் ரூபாய்.

5. நிறுவனங்களில் முதலீடுகள் விவரம்:

* ஸ்ரீ ஜெயா பப்ளிகேஷன்ஸ்-8.5 கோடி ரூபாய்.

* சசி எண்டர்பிரைஸஸ்-75 லட்சம் ரூபாய்.

* கோட நாடு எஸ்டேட்-1 கோடி ரூபாய்.

* ராயல் வேலி புளோரிடெக் எக்ஸ்போர்ட்-65 லட்சம் ரூபாய்

உட்பட நிறுவனங்களில் முதலீட்டின் மொத்த மதிப்பு 10.9 கோடி ரூபாய்.

அசையும் சொத்துக்களின் மொத்த மதிப்பு 13 கோடியே 03 லட்சத்து 27 ஆயிரத்து 979 ரூபாய்.

அசையாச் சொத்துக்கள் :

* ஆந்திர மாநிலம், குத்துபுல்லாபுர் மாவட்டம், ஜிடிமேட்லா கிராமத்தில் 14.5 ஏக்கர். வாங்கிய தேதி: 10.06.1968 மற்றும் 25.10.1968. வாங்கிய போது நிலத்தின் மதிப்பு 1,78,313 ரூபாய் (ஜெ., மற்றும் அவரது தாயார் பெயரால் வாங்கப்பட்டது). தோராயமான இன்றைய சந்தை மதிப்பு 11.25 கோடி ரூபாய்.

* செய்யூர் கிராமத்தில் 3.43 ஏக்கர். வாங்கியபோது நிலத்தின் மதிப்பு 17,060 ரூபாய். வாங்கிய தேதி: 16.12.1981. தோராயமான இன்றைய சந்தை மதிப்பு ஐந்து லட்சம் ரூபாய்.

*  79 போயஸ் கார்டன், சென்னையில் 1.5 கிரவுண்ட். வாங்கிய தேதி: 30.07.1991. வாங்கியபோது மதிப்பு: 10.2 லட்சம் ரூபாய். தற்போதைய சந்தை மதிப்பு: 3.24 கோடி ரூபாய்.

* 8-3-1099 மற்றும் 8-3-1099-ஏ, ஸ்ரீநகர் காலனி, ஹைதராபாத் என்ற முகவரியில் 651.18 சதுர மீட்டர் கட்டிடம். வாங்கிய தேதி: 11.02.1967. வாங்கிய போது மதிப்பு: 50 ஆயிரம் ரூபாய் (ஜெ., மற்றும் அவரது தாயாரால் வாங்கப்பட்டது). தற்போதைய சந்தை மதிப்பு: 3.5 கோடி ரூபாய்.

* ஜி.ஹெச்.18, தரைத்தளம், பர்சன் மேனர், சென்னையில் 180 சதுர அடி. வாங்கிய தேதி: 3.4.1990. வாங்கியபோது மதிப்பு: 1,05,409 ரூபாய். தற்போதைய சந்தை மதிப்பு: நான்கு லட்சம் ரூபாய்.

* எண்: 213-பி, செயின்ட் மேரிஸ் ரோடு, மந்தவெளி, சென்னையில் 1206 சதுர அடி. வாங்கிய தேதி: 10.07.1989. வாங்கிய போது மதிப்பு: 3,60,509 ரூபாய். தற்போதை சந்தை மதிப்பு: 35 லட்சம் ரூபாய்.

* 81 போயஸ் கார்டன், சென்னையில் 10 கிரவுண்ட். வாங்கியபோது மதிப்பு 1,32,009 ரூபாய் (ஜெ., மற்றும் அவரது தாயாரால் வாங்கப்பட்டது). தற்போதைய சந்தை மதிப்பு: 20.16 கோடி ரூபாய்.

அசையாச் சொத்துக்களின் தற்போதைய சந்தை மதிப்பு மொத்தம் 38 கோடியே 37 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்.

நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றப் பொறுப்பில் உள்ளது என கூறப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு குறிப்பிடப்படவில்லை.

இந்தப் பட்டியலின்படி ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களின் மொத்த மதிப்பு 51 கோடியே 40 லட்சத்து 67 ஆயிரத்து 979 ரூபாய்.

கருணாநிதியின் சொத்து மதிப்பு :

தி.மு.க., தலைவரும், முதல்வருமான கருணாநிதியின் சொத்து பட்டியல் விவரம் வருமாறு :

கருணாநிதி பெயரில் ரொக்கமாக 15 ஆயிரம் ரூபாய். அவரது மனைவி தயாளு பெயரில் 30 ஆயிரம் ரூபாய், மற்றொரு மனைவி ராஜாத்தி பெயரில் 2 லட்சம் ரூபாய் உள்ளது.

வங்கிக் கணக்குகளில் வைப்பு நிதியாக கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் 4 கணக்குகள் உள்ளன. இதில் 5 கோடியே 13 லட்சத்து 49 ஆயிரத்து 152 ரூபாய். அடையாறு கரூர் வைசியா வங்கியில் 13 லட்சத்து 74 ஆயிரத்து 664 ரூபாய், கர்நாடகா வங்கியில் 39 லட்சத்து 62 ஆயிரத்து 995 ரூபாய். ராயப்பேட்டை இந்தியன் வங்கியில் 10 ஆயிரத்து 958 ரூபாய். சென்னை மகாலிங்கபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 11 ஆயிரத்து 135 ரூபாய். கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் 11 லட்சத்து 39 ஆயிரத்து 441 ரூபாய். ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கியில் 13 லட்சத்து 15 ஆயிரத்து 180 ரூபாய் என, மொத்தம் 5 கோடியே 91 லட்சத்து 63 ஆயிரத்து 5,256 ரூபாய். 22 பைசா வங்கிக் கணக்கில் பணம் வைத்துள்ளார்.

அஞ்சுகம் பதிப்பகம் என்கிற பங்குதாரர் நிறுவனத்தில் 50 சதம் பங்குகள் 78,330 ரூபாய். இந்த நிறுவனத்திற்கு சென்னை, 180/93, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் சொந்தான கட்டடம் மற்றும் நிலம். 15, கோபாலபுரம் 4-வது குறுக்குத் தெருவில் அஞ்சுகம் அம்மாள் அறக்கட்டளைக்கு செட்டில்மென்ட் செய்யப்பட்ட 6 ஆயிரத்து 162 சதுர அடி மனை மற்றும் அதில் உள்ள கட்டடம்.

அறக்கட்டளை சொத்து ஆயுட் காலம் அனுபவ பாத்தியம் உள்ளது. தஞ்சை மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் (சர்வே எண் 29, 30/2, 31/2ஏ) 14.30 ஏக்கர் நிலம். இதற்கான மதிப்பு 4 கோடியே 92 லட்சத்து 56 ஆயிரத்து 855 ரூபாய். இதன் மூலம் அவரது பெயரில் 10 கோடியே 84 லட்சத்து 20 ஆயிரத்து 380 ரூபாய்.

திரைப்படம் எடுப்பதற்காக மும்பையில் உள்ள மோசர்பேர் நிறுவனத்திடம் 10 லட்சம் ரூபாய் முன் பணம் வாங்கிய வகையில் கருணாநிதிக்கு கடன் உள்ளது. வருமான வரியாக 37 லட்சத்து 34 ஆயிரத்து 20 ரூபாய் கட்டியுள்ளார்.

அசையும் சொத்து மதிப்பில், மனைவி தயாளு பெயரில் கலைஞர் "டிவி' நிறுவனத்தின் பங்குதாரர் என்ற வகையில், 6 கோடி ரூபாய் உட்பட 15 கோடியே 39 லட்சத்து 85 ஆயிரத்து 363 ரூபாய்.

அசையா சொத்துகள் 5 லட்சத்து 22 ஆயிரத்து 635 ரூபாய். இது தற்போதைய நடப்பு சந்தையின் தோராய மதிப்பாக 5 லட்சத்து 51 ஆயிரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போன்று துணைவியார் ராசாத்தி பெயரில் அசையும் சொத்துகள் 20 கோடியே 62 லட்சத்து 61 ஆயிரத்து 924 ரூபாய். அசையா சொத்துகள் 3 கோடியே 8 லட்சத்து 35 ஆயிரத்து 318 ரூபாய். இதற்கு தற்போதைய நடப்பு சந்தையின் தோராய மதிப்பு 3 கோடியே 14 லட்சத்து 38 ஆயிரத்து 628 ரூபாய்.

ராசாத்தி தனது மகள் கனிமொழியிடம் இருந்து, பற்றில்லாக் கடனாக வாங்கிய ஒரு கோடியே ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 503 ரூபாய் கடன் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி, ஜெயலலிதா இருவருக்கும் இடையில் 1 கோடி ரூபாய்தான் வித்தியாசம் என்றாலும், ஆத்தா ஆட்சியில் இல்லாத நிலையிலேயே.. 10, 12 பேரப் பிள்ளைகள் இல்லாத சூழலிலேயே முறையான கணக்குக் காட்டுவதில்  தாத்தாவை தோற்கடித்திருப்பதைப் பார்த்தால் தாத்தா விட்டுப் பிடிக்கிறாரோ என்று தோன்றுகிறது. எப்படியிருந்தாலும் இந்த ஒரு விஷயத்திலாவது கருணாநிதியைத் தோற்கடித்ததற்காக ஜெயலலிதாவை பாராட்டுவோம்..!

தற்போது இருப்பவரும், அவருக்கு மாற்றாகச் சொல்லப்படுபவரும் நிச்சயம் ஏழைகள் அல்ல.. குபீர் பணக்காரர்கள்.. திடீர் செல்வந்தவர்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்புகள் அனைத்தும் அவர் ஆட்சிக் காலத்தில் இருந்தபோதுதான் உயர்ந்துள்ளது என்பது கண்கூடு. அவர் வாங்கியிருக்கும் சொத்துக்களின் விபரங்களும் அதைத்தான் காட்டுகிறது..!


தாத்தா கருணாநிதியோ தனது பேரன்கள் சம்பாதிக்க வழி வகை செய்துவிட்டு, அந்தப் பேரன்கள் மூலமாகவே தனது பங்குத் தொகையை வாங்கி கோடீஸ்வரராகியிருக்கிறார்..! ஆனாலும் மேடைக்கு மேடை தான் ஒரு சமானியன் என்று பொய்யை வேறு புளுகிக் கொண்டிருக்கிறார்..! காந்தி கணக்குக் காட்டுவதற்காக மோசர்பேர் நிறுவனத்திடம் இருந்து 10 லட்சம் ரூபாய் கடனாக வாங்கியிருப்பதாகச் சொல்லியிருக்கிறார். அது கதை, வசனம் எழுதுவதற்காக இருக்கும் என்று நினைக்கிறேன்..! எழுத முடியலைன்னா திருப்பிக் கொடுக்க வேண்டியதுதானே..? சில சினிமாக்காரர்கள் மாதிரி, அட்வான்ஸை திருப்பிக் கூட மாட்டேன்ற பிச்சைக்காரத்தனம் என்னத்துக்கு? மானத்தை வாங்குறாருய்யா தாத்தா..!

ஜெயலலிதாவோ முதல் முறையாக ஆட்சி பீடத்தில் ஏறும்போது சரஸ்வதி சபதத்தில் பிச்சையெடுக்கும் கே.ஆர்.விஜயாவை போல் இருந்தவர்.. அந்த ஆட்சி முடிவதற்குள்ளாக திருவிளையாடல் சாவித்திரி போலாகிவிட்டார்..! ஆனால் மக்களாகிய நாம்தான் பிச்சையெடுத்த கே.ஆர்.விஜயாவைப் போலாகிவிட்டோம்..! அவர் ஒருவரின் சொத்துப் பட்டியல் மட்டும்தான் இது. மற்றபடி அவரைச் சூழ்ந்திருக்கும் மன்னார்குடி மாபியா கும்பலின் சொத்துக்கள் முழுவதையும் பட்டியலிட்டிருந்தால் அதைப் பார்த்து நமக்கு நெஞ்சே வெடித்திருக்கும். நல்லவேளையாக ஆத்தா நமக்கு அந்த சோதனையைத் தராமல் விட்டு வைத்திருக்கிறார்..

என்ன இருந்தாலும் நம்ம அப்பன் முருகன், இவ்வளவு நல்லவர்களை நமக்குத் தலைமை தாங்கக் கூடிய தலைவர்களாக நம் தலையில் கட்டியிருக்கக் கூடாது..!

என்னவோ போடா முருகா..! நம்மளால இப்படி புலம்பத்தான் முடியுது..!

நிழல் அமைச்சர்கள்? பின்னி எடுக்கும் பி.ஏ-க்கள்!

24-03-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழகத்தின் தலைமைச் செயலகத்தில் ஏதோ ஒரு பிரிவில் ஒரு வேலை ஆக வேண்டுமென்று வருபவர்கள் அனைவரும் பார்க்க விரும்புவது அந்தந்தத் துறைகளின் அமைச்சர்களை அல்ல. அவர்களது பி.ஏ.க்களைத்தான். ஒரு அமைச்சரின் பி.ஏ.வின் நட்பு உங்களுக்குக் கிடைத்திருந்தால் தலைமைச் செயலக வளாகத்தில் நிச்சயம் நீங்கள் ஹீரோதான்..!

அவரன்றி ஒரு அணுவும் அசையாது என்பதைப் போல பி.ஏ.க்கள் சொல்லாமல் பல அமைச்சர்கள் கிஞ்சித்தும் திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள். அந்த அளவுக்கு பி.ஏ.க்கள் வைத்துதான் சட்டம் என்ற நிலைமைக்குப் போனதற்குக் காரணம் மிகச் சரியான முறையில் கமிஷனை வாங்கி நியாயமாக தங்களிடம் மறைமுகமாக ஒப்படைப்பார்கள். டீலிங்கை கச்சிதமாக பேசி முடிப்பார்கள். எந்தத் தவறு செய்தாலும் அமைச்சர்களுக்குப் பதிலாக தாங்களே முன் வந்து பொறுப்பேற்றுக் கொள்வார்கள்... என்று இந்த பி.ஏ.க்களின் தியாக உள்ளத்தால்தான் பல அமைச்சர்களின் வண்டியும் ஓடிக் கொண்டிருக்கிறது.

அது போன்று இந்த தி.மு.க. ஆட்சியில் பவர்புல்லான பி.ஏ.க்கள் பற்றிய ஒரு சர்வேயை இந்த வார ஜூனியர்விகடன் அம்பலப்படுத்தியுள்ளது. அது பற்றிய கட்டுரை இதோ..!


தமிழக அமைச்சர்களில் சிலர் அதிகார பந்தா காட்டுவார்கள், சிலர்  மௌன சாமியாக இருந்து பலே காரியங்கள் செய்வார்கள். இன்னும் சிலரின் அத்துமீறல்கள், அடாவடிகள் அவ்வப்போது வெளிச்சத்துக்கு வரும். ஆனால், எல்லா நேரத்திலும் இவர்களை எல்லாம் தாண்டி, இவர்களின் நிழலாக ராஜ தர்பார் நடத்தும் பேர்வழிகள் உண்டு. இந்த நிழல்கள், உண்மையில் அதிகாரம் படைத்த அமைச்சர்கள்போல வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் பொதுவான பெயர் - உதவியாளர்கள்! 

அமைச்சர்கள் ஒவ்வொருவருக்கும் சீனியர், ஜூனியர், ஸ்பெஷல் பி.ஏ-க்கள் நியமிக்கப்படுவார்கள். தவிர, பொலிடிக்கல் பி.ஏ-வும் உண்டு. இப்படிப் பல அந்தஸ்​துகளில் எத்தனை பி.ஏ-க்கள் இருந்தாலும், ஒவ்வோர் அமைச்சருக்கும் ஒருவர்தான் பவர்புல்! இவர்களின் கொட்டம்தான் கோட்டையில் எதிரொலிக்கும். எல்லா ஆட்சிக் காலத்திலும் இதுதான் நிலை. இருந்தும், இப்போது எல்லை மீறி... சிவப்பு விளக்கு காரில் அமைச்​சர்களைப் போலவே பயணப்படுகிறார்கள் இவர்கள்!

நிழல் அமைச்சர்களின் வண்டவாளங்கள் பற்றி விசாரிக்கப் போனால், தலைமைச் செயலகமே நாறு​கிறது. இவர்களின் ரிஷிமூலம், நதிமூலம் தேடிப் போனோம்.

வேளாண்மை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் சிறப்பு உதவியாளர் சண்முகம், சட்டத் துறை அமைச்சர் துரைமுருகனின் சிறப்பு உதவியாளர் சண்முகம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் சிறப்பு உதவியாளர் சண்முகம், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனின் சிறப்பு உதவியாளர் சந்திரசேகரன், உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் சிறப்பு உதவியாளர் சுப்ரமணியன், கதர்த் துறை அமைச்சரின் சிறப்பு உதவியாளர் மாதன், இந்து அறநிலையத் துறை அமைச்சர் பெரியகருப்பனின் முதுநிலை உதவியாளர் கிருஷ்ணா, வணிக வரித் துறை அமைச்சர் உபயதுல்லாவின் முதுநிலை உதவியாளர் சுருளிவேலு, வருவாய்த் துறை அமைச்சரின் சிறப்பு உதவியாளர் முனியாண்டி... இவர்கள் எல்லாம் ஓய்வு பெற்ற பின்பும் பதவி நீட்டிப்பில் ஒட்டிக்கொண்டு அமைச்சர் அலுவலகங்களில் வலம் வருகிறார்கள்.

கோபால்

சர்வ வல்லமை படைத்த பி.ஏ-க்களில் இவருக்கே முதலிடம் என்கிறார்கள். இவர் அழகிரிக்கு நெருக்க​மானவர். ஆகவே, எல்லா அமைச்சர்களுமே இவரைப் பார்த்து நடுங்குகிறார்கள். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சிறப்பு உதவியாளர்.
 
அமைச்சரின் தந்தை தங்கப்பாண்டியன் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது, அவரிடம் ஜூனியர் பி.ஏ-வாக இருந்தார் கோபால். 'இந்தக் கோப்பில் கையெழுத்துப் போடுங்க...’ என்று சொல்லும் அளவுக்கு கோபால் இருக்கிறார் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள் அவருடைய செல்வாக்கின் வீரியம்!

கட்சிக்காரர்கள் யாராவது அமைச்சரைப் பார்க்க வந்தால் 'கோபாலைப் பார்த்துவிடுங்கள்’ என்​பார். அமைச்சரே சில சமயம் தனக்கு நெருக்கமானவர் ஒருவருக்கு சிபாரிசு செய்திருந்தாலோ, வேறு காரியங்​களை செய்ய நினைத்தாலோ... உடனே, கோபால் கட்டையைப் போடுவார். அந்த ஸ்டைலே தனி. ''இல்லைங்க... இது முடியாது. 'அ’னா சொல்லிட்டார்!'' என்று கோபால் சொன்னால் அடுத்த நிமிடம் தங்கம் தென்னரசு ஆஃப் ஆகிவிடுவார். 'உண்மை​யில் அழகிரி சொல்லியி​ருக்க மாட்டார். அவர் பெயரைப் பயன்படுத்தியே அமைச்சரை ஆட்டிப் படைக்கிறார் கோபால்’ என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

கோபாலை அவ்வளவு சீக்கிரத்தில் யாருமே நெருங்கிவிட முடியாது. காரணம், இவருக்கும் ஒரு நந்தி உண்டு. பட்டப்   பெயர்​தான். அவர், அமைச்சரின் டபேதார் கோபி. அலுவலக உதவியாளர் பதவியில் இருக்கும் இவர்தான் கோபாலுக்கு எல்லாமும். கோபியைப் பார்த்தால்தான் கோபாலைப் பார்க்க முடியும்.

தமிழகத்தில் எந்தப் பள்ளியில் ஆசிரியர் இடம் காலியானாலும், உடனடியாக கோபால் பார்வைக்கு வந்துவிடும். இவர் யாருக்கு போஸ்டிங் போடச் சொல்கிறாரோ அவருக்குதான் லாட்டரி அடிக்கும். இவர் அனுமதி இல்லாமல், பள்ளிக் கல்வித் துறை இயக்குநரோ, மற்ற அதிகாரிகளோ எந்த மாறுதல் உத்தரவிலும் கையெழுத்துப் போட்டது கிடையாது. விடுமுறை நாட்களிலும் இவரது அலுவலகம் பிஸியாக இருக்கும். மாறுதல் உத்தரவுகள் டைப் ஆகிக் கொண்டேயிருக்கும்!

இளங்கோவன்

மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் பி.ஏ.    இளங்​கோவன். ''அடுத்த தி.மு.க. ஆட்சியில் ஐயாதான் மின்சாரத் துறை அமைச்சர்...'' என்று  உடன்​பிறப்புகள் வர்ணிக்கிறார்கள்.

ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் மின்சார வாரியத்தில் நிர்வாக மேற்பார்வையாளராக வேலைக்கு சேர்ந்த இளங்கோவன், 1996-ல் ஆற்காடு வீராசாமி அமைச்சரானபோது அவரது பி.ஏ-வாகப் இடம் மாற்றப்பட்டார். எப்படி வந்தது இந்த செல்வாக்கு? இவர், தயாளு அம்மாளின் உறவினர்! இது ஒன்று போதாதா..?

இளங்கோவனின் கண் அசைவு இல்லாமல், மின்சார வாரியத்தில் ஒரு கோப்புகூட நகராது. இவரின் பரிமாற்​றங்கள் எல்லாம் வங்கிக் கணக்கில்தான் அரங்கேறும்!

மின்சார வாரியத்தின் சேர்மனாக சி.பி.சிங் வந்தவுடன், ராதா இன்ஜினீயரிங் நிறுவனத்தின் டெண்டரை ரத்து செய்து, மின்சார வாரியத்தின் ஊழியர்கள் மூலம் பணிகளை மேற்கொண்டதால், வாரியத்துக்கு மாதம்  3 கோடி லாபம் என்று மகிழ்ச்சியுடன் அறிவித்தார். அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் ராதா இன்ஜி​னீயரிங் நிறுவனத்துக்கு டெண்டர் போனது​தான் கொடுமை. இதற்குப் பின்னால் இருந்தது இளங்​கோவனின் கையாம்.

மீட்டர், கேபிள், ஒயர், டிரான்ஸ்ஃபார்மர் என்று மின்சார வாரியத்தில் எந்தக் கொள்முதல் நடந்தாலும், அமைச்சர் முடிவு எடுக்கிறாரோ இல்லையோ... இளங்​கோவன்தான் அதிகாரம் படைத்தவர். மின் உற்பத்திக்காக தமிழகத்தில் இருக்கும் அனல் மின் நிலையங்களுக்கு பொருட்கள் கொள்முதல் செய்யப்படும். இதுபற்றி தொழிற்சங்கங்கள் சொல்லும் கதைகள் பலே ரகம். மேட்டூரில் இவருக்கு வேண்டப்பட்ட ஒருவர் பினாமியாக இருக்கிறார். கான்ட்ராக்டரான அவர் மூலம்தான் நிறைய விஷயங்கள் நடக்கின்றனவாம். தலைமைப் பொறியாளர் ஒருவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாகப் புகுந்து சோதனை செய்தனர். உடனே, இளங்கோவன் தலையிட... ஒதுங்கிக் கொண்டதாம் போலீஸ்.

'இவர் திரைப்படங்களையும் எடுத்திருக்கிறார்; புதிய படங்களையும் தயாரித்து வருகிறார்’ என்றும் கோட்டையில் சொல்கிறார்கள். சினிமாவிலும் நடிகராக அவதாரம் எடுத்திருக்கிறார்.

இன்னொரு விஷயம்... ஆற்காட்டாருக்கு நெருக்கமாக இருந்ததாலோ என்னவோ, பத்மநாபன் என்ற ஒரு பி.ஏ-வை முதல்வர் அலுவலகத்தில் சொல்லி அங்கு இருந்து அப்புறப்படுத்தினாராம். சென்னை அண்ணா சாலையில் இருக்கும் ஒரு முக்கியமான ஹோட்டலையும் இளங்கோவன் பினாமி பெயரில் வாங்கி இருப்பதாகவும் கோட்டை வட்டாரம்     கிசுகிசுக்​கிறது.

தற்போது நடக்கவுள்ள நன்னி​லம் தொகுதியின் தி.மு.க. வேட்பாளரும் இவரே. தொகுதிக்கு ஸீட் கேட்டு இவர் செய்த அலப்பறைகள் பயங்கரம். நன்னிலம் தொகுதியில் இளங்கோவன் போட்டியிட வேண்டும் என்று 40-க்கும் மேற்பட்டவர்கள் பணம் கட்டினார்கள். எல்லாமே இவருடைய கைங்கர்யம்​தான்! நேர்காணலின்போது மட்டுமே பல லட்சங்​களை வாரி இறைத்துத் தனது பரிவாரங்களைப் பறை சாற்றி வேட்பாளராகவும் ஆகிவிட்டார்.  அடுத்தது தி.மு.க. ஆட்சிதான் என்றால் இவர்தான் மின்துறை அமைச்சர் என்று இப்போதே அறிவாலயத்தில் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

சண்முகம்

இவர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் சிறப்பு உதவியாளர். கருணாநிதியின் மகள் செல்வியின் மருமகனான டாக்டர் ஜோதிமணியின் தங்கை கணவர்தான் இந்த சண்முகம். 1996-2001 தி.மு.க. ஆட்சியில் அப்போதைய அமைச்சர் பொன்முடியின் சீனியர் பி.ஏ-வாக இருந்தவர். (அமைச்சரின் நிழலாக டி.எம்.எஸ்., டி.எம்.இ., குடும்ப நலத் துறை விவகாரங்களைக் கவனிப்பவர் உதவியாளர் சீனிவாசன்.)

பணம் காய்க்கும் மரமாக விளங்கும் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம், எய்ட்ஸ் ஆகிய துறைகள் மீதுதான் இவருக்குக் கண் அதிகம். சென்னை ராயப்பேட்டையில் இவருக்குத் தனியாக அலுவலகமும் உண்டு. இவரது மனைவியின் தங்கையான உமாதான், அந்த அலுவலகத்தின் மேலாளர். காலையில் இருந்து இரவுவரையிலும் அந்த அலுவலகம் களைகட்டும். அதோடு, கல்லாவும்தான். காலையில் ஒப்பந்தக்காரர்களின் கூட்டம் நெரித்தால், மாலையில் மாறுதல் கேட்டு வரும் ஊழியர்கள் ஊர்வலம் நடக்கும்.

தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழத்தின் துணை மேலாளர் ஆனந்தன், முன்னாள் அமைச்சர் பிச்சாண்​டியிடம் சீனியர்     பி.ஏ-வாக இருந்த முருகன்... ஆகிய இருவரும்தான் சண்முகத்துக்கு எல்லாமே.

சமீபத்தில் 100-க்கும் மேற்பட்ட லேப் டெக்னிஷியன் நியமனம் நடை​பெற்றது. இதில் வேண்டப்பட்டவர்களுக்கு எல்லாம் பதவிகள் நியமித்து இருப்பதாகச் சொல்கிறார்கள். தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தில், ரத்தம், சிறுநீர் ஆகியவற்றை ஆய்வு செய்யும் செமி ஆட்டோ அனலைசர் டெண்டர் சில நாட்களுக்கு முன்பு வெளி​யிட்டார்கள். இந்தக் கொள்முதல் குளறுபடியால், சர்ச்​சைகள் உருவாகின.

472 செமி ஆட்டோ அனலைசர் கொள்முதல் செய்யும் டெண்டரில், ரோபினிக் இந்தியா பிரைவேட் லிமிடெட், டிரான்சியா பயோ மெடிக்கல் லிமிடெட் உள்ளிட்ட சில நிறுவனங்கள் பங்கேற்றன. டெக்னிக்கல் விஷயத்தில் சில நிறுவனங்கள் தேர்வு பெற்ற பிறகும், அவர்களுக்கு ஆர்டர் கிடைக்கவில்லை. திடீரென்று அவசரமாக ஒரு விதியைச் சேர்த்தார்கள். 'கடந்த ஐந்து ஆண்டுகளில் 30 அனலைசர் சப்ளை செய்திருக்க வேண்டும்’ என்று புதிய விதிமுறையைப் புகுத்தினார்களாம். அதற்குக் காரணம் ரோபினிக் இந்தியா லிமிடெட் நிறுவனம் தமிழக அரசுக்கு சில மாதங்களுக்கு முன்பு, 30 அனலைசர்களை சப்ளை செய்திருந்தது. இந்த நிறுவனம் சண்முகத்துக்கு வேண்டப்பட்டதாம்.

இப்படி திடீரென்று புகுத்தப்பட்ட விதிமுறையால் மத்திய அரசின் சுகாதாரத் துறையின் பாராட்டுகளைப் பெற்ற டிரான்சியா பயோ மெடிக்கல் லிமிடெட் நிறுவனம் உள்ளிட்ட சில நிறுவனங்கள், டெண்டரில் தேர்ச்சி பெறாமல் போனதற்குக் காரணமே இவர்தானாம். இந்த விவகாரம் முதல்வர் வரையில் புகாராகப் போனது.

ஜீவானந்தம்

அமைச்சர் பொன்முடியின் சிறப்பு உதவியாளர். ஏற்கெனவே இருந்த ரவி கார்த்திக் ஓரங்கட்டப்பட்ட பிறகு, அமைச்சரின் தற்போதைய நிழல் இவர்தான். சுரங்கத் துறை உதவி இயக்குநர் முதல் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர்வரை அனைத்துத் துறை அதிகாரிகளும் இவரின் பாக்கெட்டில் அடக்கம்.

விழுப்புரம் மாவட்டத்தில் தலையாரிப் பணிக்கு ஆட்கள் எடுத்தார்கள். ஏழை ஒருவர் அந்தப் பணிக்கு சேர முயற்சிகள் எடுத்தார். அவருக்கு சென்னை கலெக்டர் சிபாரிசு செய்தார். உடனே, 'கோபித்துக் கொள்ளாதீர்கள், அமைச்சரின் உதவியாளர் ஜீவானந்தம் பரிந்துரை செய்தால் மட்டுமே போட முடியும்’ என்று சொல்ல... போன் துண்டிக்​கப்பட்டது.

சண்முகம்

வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் கூடுதல் சிறப்பு உதவி​யாளர். அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே பணி​யாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டார். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு மீண்டும் வேலை கிடைத்தது.

முருகேச பூபதி சிறப்பு உதவியாளராக இருந்த வரையில் இவர் வைட்டமின் விவகாரங்களில் தலையிடவில்லை. முருகேசபூபதி கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்ட பிறகு, முழு அதிகாரம் படைத்த அமைச்சரின் நிழலாகச் செயல்படுகிறார்.

வேளாண்மை விரிவாக்கப் பணியாளர் நியமனம், மாறுதல், மாவட்டங்களில் வேளாண்மை இயக்குநர் மாற்றம் இப்படி வேளாண்மைத் துறையின் அனைத்து மாறுதல்களுக்கும் இவர்தான் தளபதி.

சண்முகம் மற்றும் உமாபதி

அமைச்சர் துரைமுருகனின் நிழல்கள். சண்முகம், பொதுப்பணித் துறை​யில் இருந்து ஓய்வு பெற்றவர். துரைமுருகன், பொதுப்பணித் துறை அமைச்சர் ஆனவுடன் சண்முகத்துக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது.

வன்னியர் இனம் என்றால் தனி மரியாதை. அவர்களுக்குக் கொடுக்கப்படும் சலுகைகளை இவர்தான் முடிவு எடுப்பார். பொதுப்பணித் துறை பறிபோனதும் டம்மியாக இருந்தார். வீட்டு வசதி வாரியத்தின் வக்கீலாக இருந்த வழக்கறிஞர் வீரசேகரன் மீது பல குற்றச்சாட்டுகள் வந்து, முதல்வர் கருணாநிதியே எச்சரித்தார். அதன் பிறகு மீண்டும் வீரசேகரன் வீட்டு வசதி வாரிய வக்கீலாகப் பணிபுரிவது, சண்முகத்தின் கடைக்கண் பார்வை கிடைத்ததால்தான்.

உமாபதி சிறைத் துறையில் பரோல், டெண்டர் விவகாரங்களில் டி.ஐ.ஜி. துரைசாமியுடன் கூட்டணி அமைத்து வலம் வருகிறார். அமைச்சர் அலுவலகம் மற்றும் அமைச்சர் வீட்டு செலவுகளை இவர் கவனிப்​பார்.

வீரபாண்டி ஆறுமுகத்தின் உதவியாளராக இருந்த முருகேசபூபதி, கோவை வேளாண்மைப் பல்கலைக்​கழகத்தின் துணை வேந்தராக ஆனார். ஆற்காடு வீராசாமியின் உதவியாளர் இளங்கோவன் நன்னிலம் தொகுதியில் வென்று, ஒருவேளை அமைச்சராகக்கூட ஆகலாம்.

எப்படிப்பட்ட மலை முழுங்கி மகாதேவன்கள் பி.ஏ-க்களாக இருக்கிறார்கள் என்று பாருங்கள்!

நன்றி - ஜூனியர்விகடன் - மார்ச் 27, 2011

திருத்தம் செய்தது ஆ.ராசாவா? சுப்ரீம் கோர்ட்டில் கேள்வி!

23-03-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சுப்ரீம் கோர்ட்டில் சென்ற வாரம் நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை சம்பந்தமாக இன்றைய ஜூனியர்விகடனில் வெளிவந்திருக்கும் கட்டுரை இது :

வரும் மார்ச் 31-ம் தேதி, சி.பி.ஐ. டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் குற்றப்பத்திரிகை தாக்கலாக இருக்கிறது. இது தேர்தல் காலம் என்பதால், தேர்தல் அறிக்கை மாதிரி, இந்தக் குற்றப் பத்திரிகை அறிக்கையையும் மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். 'இந்த ஊழலில் 22 ஆயிரம் கோடிகள்தான் அரசுக்கு இழப்பு!’ என்று சி.பி.ஐ. சொன்னாலும், ஊழலில் கை மாறிய பணம் எவ்வளவு என்பதுதான் முக்கியக் கேள்வி!
 

2-ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு நிலவரத்தை சி.பி.ஐ-யும், இதே ஊழலில் வெளிநாட்டு முதலீடுகள் குறித்து அமலாக்கப் பிரிவும், தகவல்களை உச்ச நீதிமன்றத்திடம் தெரிவிக்கின்றன. இந்த அமைப்பு​களுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் பாலமாக மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலை மத்திய அரசு நியமித்து உள்ளது.

கடந்த 15, 16 தேதிகளில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர, அங்கு ஆஜரானார் கே.கே.வேணுகோபால். விசாரணை அறிக்கையை சீல் வைத்த கவரில் வழங்கியதோடு, அதில் உள்ள விவரங்களை இலைமறைவு காயாகப் படித்து... ஒவ்வொன்றாக நீதிபதிகளுக்கு விளக்கினார்.

தெஹல்கா பத்திரிகை, 'ஆ.ராசா மற்றும் அவர் சம்பந்தப்பட்ட கம்பெனி​களைப் பட்டியலிட்டு, இவர்கள் மீதான விசார​ணையை அமலாக்கப்பிரிவு தாமதப்​படுத்தி வருகிறது’ என்றும், 'நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகம், அமலாக்கப் பிரிவு இயக்குநர் மாத்தூர் மூலமாக வழக்கின் விசாரணையைத் தாமதப்​படுத்துவதாக’வும் தங்களுக்கு வந்த ஒரு கடிதத்தை ஆதாரமாக வைத்து ஒரு கட்டுரை வெளியிட்டது. இதனை, வேணுகோபால் நீதிபதிகள் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

மேலும், 'இந்த வழக்கில் தொடர்புள்ள மகேஷ் ஜெயின், ராஜேஷ் ஜெயின், தௌலத் ஜெயின் போன்றவர்களிடம் விசாரணை நடத்தவில்லை’ என்று எழுதி இருப்பதையும் சுட்டிக் காட்டினார். அப்போது, 'ஜெயின் சகோ​தரர்களுக்கு எந்தெந்த தேதிகளில் சம்மன் அனுப்பப்பட்டன, அவர்களிடம் எந்தெந்த நாட்கள் விசாரணைகள் நடத்தப்பட்டன?’ என்ற தகவல்களையும் தாக்கல் செய்தார். அதன் பிறகு, ''இப்படிப் பொய் பிரசாரம் செய்யும் பத்திரிகைகள் மீதும் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். புலனாய்வுத் துறைகளுக்கு மட்டுமல்ல, பிரணாப் முகர்ஜியின் படத்தைப் போட்டு, அவருடைய இமேஜுக்கும் இது பாதிப்பை         ஏற்படுத்​துகிறது...'' என்றும் கூறினார்.

இந்த சமயத்தில் பிரசாந்த் பூஷண், ''எனக்கு இதே மாதிரியான கடிதம் வந்தது!'' என்றார். உடன் நீதிபதி சிங்வி, ''சுப்ரீம் கோர்ட்டுக்கும் இந்தக் கடிதம் வந்துள்ளது. இது தெற்கே இருந்து எழுதப்பட்ட கடிதம் மாதிரியாக இருக்கிறது. இதில் ஸ்ரீ என்கிற வார்த்தையில், 'ஹெச்’ எழுத்து இல்லை. தெற்கேதான் 'ஹெச்’ சேர்க்க மாட்டார்கள். இது போன்ற கடிதத்தை வைத்து, அந்தப் பத்திரிகை கட்டுரை எழுதியது தவறு. இது அவமதிப்புதான். ஆனால், இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப் போவதில்லை. அதே சமயம், புலனாய்வு அமைப்பு​களின் நலனைக் கருத்​தில்​கொள்வோம். இப்​போது உடனடியாக இதில் கருத்து சொல்ல முடியாது. முதலில் உங்கள் விசாரணையை முடித்து, குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யுங்கள். அதன் பின்னர்தான், நீங்கள் எந்த அளவுக்கு விசாரணையை சரியாக மேற்கொண்டீர்கள் என்று சொல்ல முடியும்!'' என்​றார்.

பின்னர் அமலாக்கப் பிரிவும், சி.பி.ஐ-யும் விசாரணையில் மேற்கொண்​டுள்ள விவரங்களை கே.கே.வேணுகோபால் எடுத்துவைத்தார்.

''ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற 31 நிறுவனங்களில் 26 நிறுவனங்களிடம் விசாரணை முடிந்துள்ளது. மற்றவர்களுக்கும் சம்​மன் சென்றுள்ளது...'' என்று கூறிவிட்டு இந்த கம்பெனிகளுக்கு வந்த முதலீடுகள் மற்றும் வெளிநாடுகளில் மேற்கொண்ட பணப் பரிமாற்றம் குறித்த விவரங்களையும் சுட்டிக்​காட்டினார்.

அப்போது, நிறுவனங்களின் பெயரைச் சொல்லாமல், ஒரு சில புள்ளி விவரங்களை நீதிபதிகளிடம் ஒப்படைக்க​ப்பட்ட ரகசிய ஆவணங்​களில் உள்ள பக்கத்தின் எண்களை மட்டும் சொல்லி கோடிட்டுக் காட்டினார். இதில் ஒரு நிறுவனம், 100 கோடியை இடைத்​தரகர் ஒருவருக்குக் கையூட்டாகக் கொடுத்திருப்பதை      நீதிபதி​களின் கவனத்துக்குக் கொண்டு சென்றார்.

மேலும், ''ஆ.ராசாதான் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் மையம். அவர் மீதும் மற்ற இரு அதிகாரிகள் மீதுமான விஷயங்களுடன் குற்றப் பத்திரிகை வருகிற 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்யப்படும். அடுத்தடுத்து ஆதாயம் அடைந்த ஒவ்வொரு நிறுவனம் மீதும் தனித் தனியாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்...'' என்றார். அநேக​மாக ஆ.ராசாவுடன் சேர்த்து ஷாகித் பால்வாவின் ஸ்வான் டெலிகாம் மற்றும் சினியுக் போன்ற நிறுவனங்கள் மீது குற்றப்​பத்திரிகை தாக்கல் செய்யப்படலாம் என்றே தெரிகிறது.

இந்தக் குற்றப் பத்திரிகையின் முக்கிய சாட்சியாக இருக்கப் போகிறவர், அப்போ​தைய சொலிசிட்டர் ஜெனரலும் தற்போ​தைய அட்டர்னி ஜெனரலுமான ஜி.இ.வாஹன்வதி. ஸ்வான் டெலிகாமுக்கு உரிமங்கள் கொடுக்கப்பட்ட விவகாரமும் நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டது.


''டெலிகாமில் உரிமம் பெற்ற ஒரு நிறுவனம், மீண்டும் ஒரே வட்டாரத்தில் ஒருங்கிணைந்த உரிமங்களைப் பெற அனுமதி இல்லை. ஏற்கெனவே, உரிமங்களைப் பெற்றிருந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் (10 சதவிகிதத்துக்கும் மேலாக) ஸ்வான் டெலிகாமின் பங்குகளையும் பெற்றுள்ளது. இது தொலைத் தொடர்பு விதிமுறைகளுக்கு விரோத​மானது. இந்தப் பங்குகளில் முந்தைய நிலையில் இருந்து சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஸ்வானும் ரிலை​யன்ஸும் கூறியுள்ளது.

இது பிரதமர் அலுவலகத்துக்கு வர, நிறுவனத் துறை அமைச்சகத்திடம் அனுப்பி உண்மையைக் கண்டறிய ஆலோசனை கூறியுள்ளது. ஆனால், தொலைத் தொடர்புத் துறை அமைச்சர், சொலிசிட்டர் ஜெனரலுக்கு ஃபைலை அனுப்பினார். சொலிசிட்டர் ஜெனரல் ஜி.இ.வாஹன்வதி, 'எல்லாம் சரிதான்...’ என்று சொல்லாமல், ஸ்வான் நிறுவனத்தின் பங்குகளை முழுமையாக ஆய்வு செய்த பின்னர் அனுமதிக்கும்படி கூறியிருக்கிறார். ஆனால், ஆ.ராசா தரப்பு இதைக் கருத்தில் கொள்ளவில்லை.

டெலிகாம் நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்ட தேதிகள்(கட் ஆஃப் டேட்), சம்பந்தப்பட்ட பத்திரிகை செய்தி அறிவிப்பு(பிரஸ் ரிலீஸ்) போன்றவை வெளியிடுவதற்காக, சொலிசிட்டர் ஜெனரலின் சட்ட ஆலோசனைக்குப் போயிருக்கிறது. இதில் சொலிசிட்டர் ஜெனரல் 'அப்ரூவ்ட்’ என்று எழுதி கையெழுத்திட்டதில், 'திருத்தம்’ என்று மாற்றி அதில் கடைசி 'பாரா’ ஒன்றும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது...''  என்றார்.

இந்தத் திருத்தங்கள் சம்பந்தப்பட்ட எழுத்தும் ஒன்றாக இருந்துள்ளது. இத்​தோடு, சொலிசிட்டர் ஜெனரல் பேனாவின் மையும், திருத்தம் செய்து எழுதியவரின் மையும் வேறுபட்டு உள்ளன. இது​போன்ற விவரங்கள், ஹைதராபாத் தடயவியல் மையத்தில் சோதனைகளுக்கு அனுப்​பப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதில்  ஆ.ராசாவின் பங்கு என்ன       என்ப​தையும் விசாரித்து வருவதாக சி.பி.ஐ. அறிந்துள்​ளது.

இதன்படி விண்ணப்பங்கள் கோரும் கடைசி நாள் தேதியை... அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 25-ம் தேதியாக மாற்றியது, தகுதியற்ற நிறுவ​னங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்து அவர்களுக்கு உடந்தையாக இருந்து பணம் செலுத்த வேண்டிய தேதியை முன்கூட்டியே சொல்லித் தயாராக​  வைத்தது போன்றவை அடங்கும். இப்படிப்பட்ட வில்லங்கங்கள் எல்லாம் குற்றப் பத்திரிகையில் பதிவாகும் எனத் தெரிகிறது.

பொது நல வழக்கின் மனுதாரரான பிரசாந்த் பூஷண், ''2-ஜி விசாரணையை மேற்கொள்ளும் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவு விசார​ணையை மேற்​பார்வையிட முன்னாள் அதிகாரிகள் அடங்கிய கமிட்டி ஒன்றை ஏற்படுத்த வேண்டும்!'' என்று கோரினார். இதனை கே.கே.வேணுகோபால் கடுமையாக     எதிர்க்​கவே, உச்ச நீதிமன்றமும் கைவிட்டது.

''சி.பி.ஐ. அதிகாரிகள் வார விடுமுறைகூட எடுத்துக் ​கொள்ளாமல் 20, 22 மணி நேரங்கள் விசாரணையிலும், ரெய்டுகளிலும் பணியாற்றி வருகின்றனர். அப்படிப்​பட்டவர்களை நம்பாதது போல, இது போன்ற கமிட்டி​யை திடீரென்று ஏற்படுத்தினால், சி.பி.ஐ. டீமின் மனதை இது புண்படுத்தும்...'' என்றார் கே.கே.வேணுகோபால்.

எப்படியோ, எத்தனையோ கேள்விகளுக்கு விடை கிடைக்கும் நாள் நெருங்கி வருகிறது!

நன்றி : ஜூனியர்விகடன்-மார்ச் 27, 2011