ஆறாவது அறிவு யாருக்கு இருக்கு..?

28-06-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மனித நேயத்தில் மனிதர்களை மிஞ்ச ஆளில்லை என்றுதான் நாமே நம்மைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். பணம், புகழ் இவை இரண்டையும் பெறுவதற்கு சக மனிதர்களையே பலிகடாவாக்கும் உன்னத செயலில் ஈடுபட்டிருக்கும் நமக்கு ஒன்றுமறியாத அப்பாவி விலங்குகள் மீது மட்டும் இரக்கம் வருமா என்ன..?

சில தினங்களுக்கு முன்பாக நண்பர் ஒருவரின் வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தபோது நேஷனல் ஜியாக்ரபிக் சேனலை பார்க்க வேண்டிய கட்டாயம் வந்தது.

பச்சைப் பசேல் என்ற புல்வெளி எங்கும் பரந்து விரிந்திருக்க ஒரு தினுசாக இருந்த சில வேட்டை நாய்கள், தங்களது வழக்கமான ஸ்டைலில் பாய்ந்தோடி வந்துகொண்டிருந்தன.

தூரத்தில் ஒரு மாடு தன் பசியைப் போக்க புல்லைத் தின்று கொண்டிருந்தது. இன்றைக்கு இதுதான் இரை என்பதை வேட்டை நாய்களும், இன்றைக்கு இவர்களால்தான் உனக்கு சாவு என்று இறைவன் தீர்மானித்துவிட்டான் என்பதாலும் இரண்டும் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டன.

மாடு ஓடத் துவங்கியது.. நாய்களும் விரட்டத் துவங்கின. எண்ணிக்கை அதிகமாக இருந்ததினாலும், பசி என்கிற வெறியோடு இருந்ததாலும் மாட்டை மிக எளிதாக சுற்றி வளைத்து தாக்கத் தொடங்கின. மாடோ தனக்கிருந்த ஒரே ஆயுதமான கொம்பை வைத்து முட்டி மோதித் தள்ளிப் பார்த்தது.. ஆனாலும் முடியவில்லை.

எப்படியும் ஆள் சரண்டராகிவிடும் என்ற நம்பிக்கையில் முழு பலத்தையும் உபயோகிக்காமல் மாட்டை களைப்படைய வைக்க வேண்டும் என்ற குயுக்தியில் வேட்டை நாய்கள் சுற்றி, சுற்றி சும்மா விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தன.

இந்த நேரத்தில்தான் அதுவரையில் தூரத்தில் இருந்து படம் பிடித்துக் கொண்டிருந்த நமது கேமிராகாரர்கள் அந்த மாட்டின் மிக அருகில் சென்று தங்களது ஜீப்பை நிறுத்தினார்கள்.

மாடு என்ன நினைத்ததோ தெரியவில்லை.. விருட்டென்று ஜீப்பின் மிக அருகில் வந்து உரசியதுபோல் நின்று கொண்டது. வேட்டை நாய்கள் சற்று தள்ளிப் போய் நின்று கொண்டன. என்னதான் காடாக இருந்தாலும், அவர்களுடைய ராஜ்ஜியமாக இருந்தாலும், மனிதர்களை கண்டால் சிறிது பயம் இருக்கத்தான் செய்கிறது.

எனக்குள் ஒரு சந்தோஷம்.. ஆஹா.. மாடு தப்பிச்சிருச்சு.. பாவம்.. பொழைச்சுப் போகட்டுமே என்று.. ஜீப்பில் இருந்த கேமிராமேனும் மற்றவர்களும் அந்த மாட்டைத் தொட்டுப் பார்த்து, தடவிக் கொடுத்து தங்களது பாசத்தைக் கொட்டினார்கள்.

வேட்டை நாய்களோ சுற்றுமுற்றும் பார்த்து கண்ணுக்கெட்டிய தூரம்வரை எந்த இரையும் கண்ணுக்குத் தெரியாததால், இன்றைக்கு இதைவிட்டால் தங்களுக்கு பிரியாணி இல்லை என்பதை புரிந்து கொண்டுவிட்டன.

மெதுவாக ஜீப் நகரத் துவங்கியது.. மாடும் புரிந்து கொண்டு ஜீப்போடு ஓடத் துவங்கியது.. வேட்டை நாய்களும் பின்னாலேயே ஓடத் துவங்கின..

திடீரென்று ஜீப் மிக அசுர வேகத்தில் வேட்டை நாய்களின் பக்கமே திரும்பிப் போக மாடு யோசிக்க அவகாசமே இல்லாமல் மறுபடியும் நாய்களின் கூட்டத்தில் சிக்கிக் கொண்டது..

இப்போது எனக்கு சுத்தமாகப் புரியவில்லை. எதுக்கு இப்படி சுத்தி சுத்தி வந்து படம் எடுக்கிறானுக.. மாட்டைக் கூட்டிட்டு வேற இடத்துக்கு போயாவது தொலையலாமே என்று அப்பாவியாய் நினைத்துக் கொண்டேன்..

இப்போதும் நாய்கள் மாட்டை ரவுண்ட் கட்டி கடிக்கத் துவங்க.. மாட்டின் உடலிலிருந்து ரத்தம் சிந்தத் துவங்கியது. கேமிரா நாய்களின் ஆக்ரோஷத்தைக் காட்டியபடியே இருக்க..

திடீரென்று அந்த இடத்தை நோக்கி சீறியது ஜீப்.. நாய்கள் சிதறி ஓடத் துவங்க.. மாடு சற்று ரிலாக்ஸாகி மீண்டும் ஜீப்பின் அருகே வந்து நின்று கொண்டு மூச்சு வாங்கியது.

என்னமோ, நம்மூர் போலீஸ் கலவரத்துல செய்ற மாதிரி விரட்டுற மாதிரி விரட்டி, அடிக்கிற மாதிரி அடிக்கிற கதையால்லா இருக்குன்னு நினைச்சேன்.

அதேதான்.. மறுபடியும் ஜீப் மாட்டை விட்டுவிட்டு வேகமாக பின்புறமாகச் செல்லத் துவங்க.. மாடும் ஜீப்பின் கூடவே ஓடத் துவங்க.. ஜீப்பின் வேகத்திற்கு மாடால் ஓட முடியவில்லை. பாவம் ஏற்கெனவே கடிபட்டு அரை உயிர் போய் பரிதாபத்தில் இருந்தது. அதற்குள்ளாக பின்னால் விரட்டி வந்த நாய்களின் ஆக்ரோஷ வேகத்தில் கீழே படுத்தேவிட்டது.

ஜீப் இப்போது நின்றுவிட்டது. கேமிரா திரும்பி கூட்டத்தைக் காட்ட.. வாய் திறந்த நிலையில் அனத்தக்கூட முடியாத பாவத்துடன் மாடு படுத்திருக்க நாய்களின் கோரப் பற்கள் அதன் வயிற்றைக் கிழித்துக் கொண்டிருக்க.. கொஞ்சம், கொஞ்சமாக அந்த மாடு தன் உயிரை இழந்து கொண்டிருந்த கொடூரம் நடந்து கொண்டிருந்தது.

இப்போதுதான் புரிந்தது இப்படியொரு விரட்டி கொலை செய்யுதல் போன்ற காட்சிகளை எடுக்க வேண்டி இவர்களே அந்த மாட்டிற்கு சிறிது நேர உயிர்ப்பிச்சை கொடுத்து பின்பு தங்களது படப்பிடிப்பிற்காக அதனை பலி கொடுக்கிறார்கள் என்று..

இயல்பாக நடப்பதைப் படம் பிடித்து காட்டுவது சரிதான் என்றாலும், தங்களது சுயலாபத்துக்காக இப்படியெல்லாமா விலங்குகளை வதைப்பது?

கொடுமைடா சாமிகளா.. ஏதோ ஆறாவது அறிவுன்னு ஒண்ணு இருக்கு. அதுதான் விலங்குக்கும், மனுஷனுக்கும் இருக்குற ஒரே வித்தியாசம்னு சொன்னாங்க.. இதுல அந்த ஆறாவது அறிவு யாருக்கு இருக்குன்னு எனக்குத் தெரியல..

நினைத்தேன் எழுதுகிறேன்!-18-06-2008

18-06-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சில நாட்களுக்கு முன் தற்செயலாக ‘கலைஞர் டிவி’ பார்த்தேன். திரைப்பட காமெடி காட்சிகளின் தொகுப்பு.

நான் பார்த்தபோது கவுண்டமணி, தனது சகா செந்திலிடம் தனது மனைவி அனுஜாவை அப்போதைக்கு மறந்து தொலைத்துவிட்டு, பக்கத்து வீட்டு ஷர்மிளியின் அழகை வர்ணித்து ஜொள்ளு விட்டுக் கொண்டிருந்தார். செந்திலின் வழக்கமான சதியால் அனுஜாவின் கையில் சிக்கி விளக்கமாத்தால் அடியும் வாங்குகிறார்.

இந்தக் காட்சி அனைத்து கல்யாணமான தமிழக ஆண்களுக்கும் ரொம்பவே பிடித்தமான பொழுது போக்கு. மனைவியிருக்க இன்னொரு பெண்ணை ரசிப்பது போல் ரசித்து மனைவியை வெறுப்பேற்றுவதாக வெளியில் சொல்லி மகிழ்வது பரம்பரை பழக்கமாகிவிட்டது.

அதே சமயம் திருமணமான பெண் வேறொரு ஆணை இதேபோல் ஜொள்ளுவிட்டு கணவனிடம் மாட்டிக் கொள்வதைப் போல் சினிமா காட்சிகளை நான் பார்க்கவில்லை.

ஒருவேளை கதை, வசனம் எழுதுபவர்கள் அனைவரும் ஆண்கள் என்பதாலேயே இந்தக் கூத்து தொடர்கிறதோ..?

நிற்க..

தொடர்ந்த விளம்பரத்திற்குப் பிறகு வந்த காட்சி ‘பசுபதி மே/பா ராசாக்காபாளையம்’ என்கிற திரைப்படத்தில் இருந்து ஒளிபரப்பானது. விவேக் இன்ஸ்பெக்டராக வந்து ‘மூன்று முகம்’ அலெக்ஸ் பாண்டியனை காப்பியடித்துக் கொண்டிருந்தார்.

திடீரென்று வெறும் ஜாக்கெட்டும், பாவாடையும் மட்டுமே அணிந்திருந்த ஒரு பெண் கையில் காபியுடன் வந்து தரிசனம் தந்தார். விவேக்கின் பொறுப்பான பேச்சு அப்புறம் இளிப்பான பேச்சாகிப் போனது..

இந்தப் பெண் வருகின்ற காட்சிகளிலெல்லாம் சேலை அணியாமல்தான் காட்சி தந்தார். ஒருவேளை தயாரிப்பாளருக்கு பண முடையாகி, சேலை வாங்கக்கூட காசில்லாமல் போயிருக்குமோ என்னவோ.

சினிமாவில் பெண்களை அசிங்கமாகக் காட்டுகிறார்கள் என்று பலரும் கொடி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களெல்லாம் நிஜமாகவே போராட வேண்டுமெனில், முதலில் இது மாதிரி ‘துணிந்து’ நடிக்க வருகின்ற பெண்களுக்கு எதிராகத்தான் போராட வேண்டும்.

“எவ்ளோ காசு கொடுத்தாலும் இது மாதிரி நடிப்பதற்கு முடியாது.. நான் மாட்டேன். மொதல்ல உன் அம்மா, அக்கா, தங்கச்சி, பாட்டி இவுங்களை கூட்டிட்டு வந்து இதே மாதிரி நடிக்க வை.. பாக்குறேன்.. அப்புறமா நான் நடிக்கிறேன்..” என்று எந்த துணை நடிகையாவது சொல்வார்களா என்று தெரியவில்லை. சொன்னால்தான் ஒருத்தராவது திருந்துவார்கள்.

உடன் நடித்த சின்ன கலைவாணர் விவேக்கிற்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. செலக்டிவ் அம்னீஷியாவோ..?

---------------------------------------------------------------

மிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் இருப்பது என் போன்ற வறுமைக்கோட்டைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு நன்கு தெரிகிறது.

மிகவும் கஷ்டப்பட்டு போராடி எனது கம்ப்யூட்டரை மீட்டுக் கொண்டு வந்தேன். ஆனால் பிரயோசனமில்லை. எப்போதும் அலுவலகம் முடிந்து இரவு வீடு திரும்பிதான் வலையுலகத்திற்குத் தேவையானதை டைப் செய்வேன்.

கடந்த 1 மாதமாகவே வீட்டில் பவர் வோல்ட்டேஜ் கம்மி.. எனது வீடு single phaseதான். வீட்டு ஓனர் தன்னுடைய வீட்டு கனெக்ஷனுக்கு மட்டும் ஜாக்கிரதையாக three phase போட்டு இரண்டு ஏஸி மெஷின்களை மாட்டியிருக்கிறார். தெருவில் வீட்டுக்கு வீடு டிவி போல், ஏஸி மெஷின்களும் அலங்கரிப்பதால் மின் சப்ளை குறைவு என் போன்ற single phase வீடுகளில் தலைவிரித்தாடுகிறது.

நேற்று கம்ப்யூட்டரை ஆன் செய்ததிலிருந்து அடுத்த ஒரு மணி நேரத்தில் மட்டும் 40 முறை சிஸ்டம் தானாகவே ரீஸ்டார்ட் ஆனது.. “பதிவர் கூட்டத்தில் கசமுசா” என்று தலைப்பிட்டு ஒரு வரி எழுதியது மட்டும்தான் அந்த ஒரு மணி நேரத்தில் நான் செய்தது. எனக்கே வெறுப்பாகி ஹார்ட்டிஸ்க் கிராஷ் ஆகிவிடும் அபாயம் இருப்பதால் அப்படியே ஆ·ப் செய்துவிட்டேன்.

மின்துறை அமைச்சர் தமிழ்நாட்டில் மின் தடையே இல்லை என்கிறார். ஒரு வேளை அவர் வீட்டில் மட்டும் தங்குத் தடையின்றி கிடைப்பதால் மற்றவர்களையும் அப்படி நினைத்துவிட்டாரோ என்னவோ..? என்ன செய்வது 40 வருஷமா அரசியல்வாதியாக இருப்பவர்களுக்கு மக்களின் நிலைமை பற்றி என்ன தெரியும்..?

---------------------------------------------------------------








'தசாவதார'த்தை கரும்பைப் பிழிந்து சாறு எடுத்த கதையாக பிழிந்து எடுத்துவிட்டார்கள் வலைப்பதிவர்கள். ‘சிவாஜி’க்கு கூட இந்த ‘கதி’ ஏற்படவில்லை.

தன்னுடைய இரண்டரை வருட உழைப்புக்கு நல்ல மரியாதை கிடைத்திருப்பதாக வலைப்பதிவுகளில் தனது படத்திற்குக் கிடைத்த ‘நல்ல’ - ‘நல்ல’ விமர்சனங்களைப் படித்த பிறகும், கமலஹாசன் அடக்கமாகப் பேசியிருக்கிறார். பாராட்டத்தான் வேண்டும்.

இடையில் நமது ‘தடாலடி’யாரும் உணர்ச்சிவசப்பட்டு இரண்டரை வருட உழைப்பை 3 மணி நேரம் மட்டும் பார்த்துவிட்டு வெறும் 5 நிமிடத்தில் திட்டுகிறார்களே என்று கோபப்பட்டு பொங்கிவிட்டார்.

இதில் 'பைத்தியக்காரனின்' பதிவு நான் எதிர்பார்த்தது போலவே படத்தின் அரசியலை ஆராய்ந்து சூட்டைக் கிளப்பியிருக்கிறது. 'பைத்தியக்காரன்' இதை எழுதாமல் இருந்திருந்தால்தான் ஆச்சரியம்.. அவரவர் பாடு அவரவருக்கு..

இனி அடுத்தது 'குசேலன்'தான்.. பாராட்டையோ அல்லது திட்டுதலையோ கொஞ்சம் மட்டுறுத்தி வையுங்கள்.. அடுத்த மாதம் நிச்சயம் தேவைப்படும்.






---------------------------------------------------------------

ஞ்சாயத்து பேசும் அளவுக்கு நான் ஒன்றும் பெரியவனல்ல. ஆனால் அப்படியொரு வாய்ப்பு கிடைத்தது. பேசுவதற்கு அல்ல. பார்வையாளனாக..

எனக்குத் தெரிந்த குடும்பம் ஒன்றில் திருமணமாகி 2 ஆண்டுகளே ஆகியிருந்த தம்பதிகளுக்குள் கருத்து-மோதல். தம்பதிகள் இருவரும் பிரிந்தே தீருவோம் என்று கங்கணம் கட்டி பஞ்சாயத்துவரை இழுத்து வந்துவிட்டார்கள். ஒருவேளை வார்த்தைகள் முற்றி அடிதடிவரை போனால் உடன் அடி வாங்க ஒரு ஆள் வேண்டுமே என்பதற்காகவோ எனக்கு ஸ்பெஷல் அழைப்பு வந்திருந்தது.. சும்மா போவோமே என்றுதான் போனேன்..

சினிமாவில் ஆலமரத்தடி பஞ்சாயத்தையே பாரத்து பார்த்து சலித்துப் போயிருந்த எனக்கு இந்த வீட்டுப் பஞ்சாயத்து புது அனுபவம். வீட்டுப் பெண்களெல்லாம் சமையல்கட்டிலும், நடுவீட்டிலும் ஒண்டி கொண்டு நிற்க.. கணவனும், மனைவியும் ஆளுக்கொரு ஜன்னல் அருகே நின்று ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டு நின்றிருந்தார்கள்.

“இருவருக்குள்ளும் என்ன பிரச்சினை?” என்று பெரியவர் ஒருவர் கேட்க சீறித் தள்ளிவிட்டார் அந்தப் பெண். “இதுக்கா உங்களைக் கூப்பிட்டோம்..? முதல்ல அத்து விட்டுட்டு மறுவேலை பாருங்க..” என்றார். “என்ன காரணம்னு சொல்லும்மா.. பேசித் தீர்த்துக்கலாம்..” என்று அழுகாத குறையாகக் கேட்டார் பெண்ணின் அம்மா. “அதெல்லாம் சொல்ல முடியாது.. எனக்கு இவர் வேணாம்..” -- இது பெண்ணின் தீர்மானமான முடிவு.

“பொம்பளைக்கே இவ்ளோ இருந்தா ஆம்பளை எனக்கு எவ்ளோ இருக்கும்? வேணாங்க.. அத்து விட்ருங்க.. பெரிய இவளா இவ..?” - இது மாப்பிள்ளை..
“என்ன இவ.. இந்த அவ, இவ பேச்செல்லாம் அன்னிக்கே முடிஞ்சு போச்சு.. மரியாதை கொடுக்கணும்..” சீறினார் பெண்.

இரு வீட்டுப் பெரிசுகளும் பிரச்சினை என்ன என்று தெரிந்தால் தீர்த்து வைக்கலாம் என்று நினைக்கிறார்கள். பிடியே கொடுக்கவில்லை இருவரும்.

“ச்சீ.. போ..”
“ச்சீ.. போ..”
“போன்னா போ..”
“எனக்கென்ன ஆயிரம் பேர் வருவாளுக..”
“போய் அவளையே கட்டிக்க.."
"அதுக்குத்தான போய்த் தொலைன்றேன்..”
“போறேன்.. உன்னை எவன் கட்டுவான்னு பாக்குறேன்..”
“அதை நான் பாத்துக்குறேன்.. முதல்ல நீ என் கண்ணு முன்னாடியே நிக்காத.. ஓடிப் போயிரு..”

இப்படியேதான் மாற்றி, மாற்றி பேசினார்களே ஒழிய, பிரச்சினை என்ன என்பதை சொல்லவேயில்லை..

இந்த சண்டை காரணமாக கடந்த ஒரு வருஷமாகவே இருவரும் அவரவர் பிறந்த வீட்டில் குடியிருந்திருக்கிறார்கள். பரஸ்பரம் இருவரும் இணைந்தே விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு போனால் வழக்கு ஈஸியாகிவிடும் என்ற வழக்கறிஞரின் ஆலோசனைப்படியே இந்த பஞ்சாயத்து கூட்டமாம்..

கூடவே, அந்தப் பெண் கொண்டு வந்த சீர், செனத்தியையெல்லாம் ஒன்றுவிடாமல் 40 பக்க நோட்டு ஒன்றில் எழுதி வைத்திருந்த மாப்பிள்ளை அதை படித்துக் காட்டி “அத்தனையையும் வீட்டில் தனியறையில் பூட்டி வைத்திருப்பதாகவும் வந்து பார்த்து அள்ளிக் கொள்ளலாம்” என்றார்.

காலையிலிருந்து மாலைவரை பேச்சுவார்த்தையை இழுத்தும் இரண்டு விஷயங்கள் மட்டும்தான் தம்பதிகளின் வாயில் இருந்து வெளியே வந்தது.

அந்தப் பெண் கருவுற்றிருந்தபோது சரியாகச் சாப்பிடாமல் போய் கரு கலைந்துவிட்டது. அந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே அல்சர் நோய் இருந்ததால் சரியாகச் சாப்பிடும்படி ஆபீஸில் இருந்து தினமும் போன் மேல் போன் போட்டு சொல்வானாம் மாப்பிள்ளை. அப்படியிருந்தும் அந்தப் பெண் சாப்பிடாமல் போக கரு கலைந்துவிட்டதாம்.

தனது முதல் வாரிசை செத்துப் போகும்படி செய்தது தனது மனைவிதான் என்று கணவனுக்கு அடக்கமாட்டாத கோபம் போலிருக்கிறது.. மனைவியோ “நீ என்ன சொல்றது..? பிள்ளையை எப்படி பெத்துக்கறதுன்னு எனக்குத் தெரியாதா..? நீ யார்ரா?” என்றே கேட்டுவிட்டாள்.

முடிந்தது.. அத்துவிட்டார்கள்.. எதுக்கு கோர்ட், கேஸ்..? பத்து ரூபாய் பத்திரமொன்றில் இருவரும் ஒருமித்தக் கருத்துடன் பிரிவதாக நான்கு சாட்சிகள் கையெழுத்துடன் பத்திரத்தில் எழுதி இருவரும் கையொப்பமிட்டார்கள்.

மாப்பிள்ளை அதுதான் கடைசி முறை என்பதால் தனது மனைவியை மிக அருகில் போய் ஒரு முறை முறைத்துவிட்டு(நான்கூட அடிச்சுரப் போறானோ என்று பயந்திருந்தேன்) விருட்டென்று வெளியேறினான்..

பெண்ணோ மிக அலட்சியமாக பார்த்துவிட்டு கட்டிலில் அமர்ந்து சன் மியூஸிக் சேனலை பார்க்கத் துவங்கினார்.

கூட்டம் கலையத் தொடங்கி நான் வெளியே வந்தவுடன், அந்தப் பெண்ணின் தாயார் கண்ணீரோடு “கல்யாணத்துக்கே ஒண்ணே முக்கா லட்சம் ரூபா செலவாச்சு.. இருந்த வயக்காட்டையும் வித்துதான் செலவு செஞ்சேன்.. பாவி மக எதைப் பத்தியும் கவலைப்படாம ‘அத்து விடு’.. ‘அத்து விடு’ன்றாளே.. என்னத்த செய்றது..?” என்று புலம்பிக் கொண்டிருந்தார்.

ம்ஹ¥ம்.. நம்மிடையே எந்த அமைப்பில் தவறு என்று புரியவில்லை.

(தொடர்ந்தும் வருவேன்)

நினைத்தேன் எழுதுகிறேன்!

13-06-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே!

பெண் சுதந்திரம், பெண் உரிமை என்று இந்தியாவில் நாம் பல ஊடக வழிகளில் முழங்கிக் கொண்டிருந்தாலும் காதல், திருமணம், குடும்ப வாழ்க்கை, குழந்தை பெறுதல் என்ற நிலைகளில் ஆண்களின் முடிவே இறுதி முடிவாக இருக்கின்றது. இதில் அவ்வப்போது மீறல்கள் நிகழும்போதுதான் அப்படியொரு கோணமும் இருக்கிறதா என்று நினைக்கத் தோன்றும்.

அது மாதிரியானவொரு உணர்வை பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் மனைவி ஷெர்ரி பிளேர் எழுதிய ஒரு புத்தகத்தின் சில பகுதிகளை தமிழ் மொழி பெயர்ப்பில் படிக்கும்போது தெரிந்தது..

ஷெர்ரி சொல்கிறார்..

“3 குழந்தைகளுக்குப் பிறகு கருத்தரிக்க வாய்ப்பில்லை என்று அலட்சியமாக இருந்துவிட்டேன். இதனால் 4-வது குழந்தை உண்டாகிவிட்டது. அப்போது அதனைக் கலைக்க எனக்கு மனமில்லை.. பெற்றுக் கொண்டேன்.

பின்பு ஈராக்குடன் போர் துவங்கிய சமயத்தில் ஒரு மாநாட்டுக்காக பிளேருடன் ‘பால்டிமோர்’ நகருக்குச் சென்றிருந்தபோது கைவசம் ‘காண்டம்’களை கொண்டு செல்லவில்லை. அதனால் அப்போதும் கரு உண்டாகிவிட்டது. ஏற்கெனவே 4 குழந்தைகள் உள்ளன என்பதால் இந்த முறை நான் யோசித்தேன்.

என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்தபோது அந்தக் கரு தானாகவே கலைந்துவிட்டது. இதுவும்கூட நல்லதுதான் என்று நினைத்தேன். இதை பிளேரிடம் சொன்னேன்.

பிளேரோ இதனை உடனடியாக மீடியாக்களிடம் சொல்லும்படி என்னிடம் சொன்னார். “ஏன்..?” என்றேன்.. “ஈராக் மீது போர் தொடுத்துள்ள காரணமாக மக்களின் பார்வை நம் மீது தீவிரமாகப் பதிந்துள்ளது. நீ இதனை வெளியில் சொன்னால் அவர்களின் பார்வை திசைதிரும்பும். அதற்காகத்தான்..” என்றார்.

அவருடைய அரசியல் விளையாட்டிற்கு என்னையும், குடும்பத்தையும் பயன்படுத்த நினைத்தது குறித்து நான் அதிர்ச்சியும், கோபமும் அடைந்தேன். இதனால் நான் அப்படி நடந்து கொள்ள முடியாது என்று பிளேரிடம் திட்டவட்டமாக மறுத்துவிட்டேன்..”

- இப்படி எழுதியிருக்கிறாராம் ஷெர்ரி பிளேர்..

படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. சம உரிமை என்பதை வெறும் பேப்பர் வடிவத்தில் மட்டுமல்ல.. பேச்சிலும் எழுத்திலும் வேண்டும் என்பதை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்.

அதிலும் ஷெர்ரி போன்றவர்கள் முழு மனதுடன் முன் வந்து கணவர் எவ்வளவு பிரபலமானவராக இருந்தாலும் தனக்கென்று ஒரு உரிமை உண்டு என்பதனை வெளிக்காட்டியிருக்கிறார். இதனைப் பாராட்டியே ஆக வேண்டும்.

இவர் என்றில்லை.. சமீபத்தில் இன்னொருவரும் இப்படி பொரிந்திருக்கிறார்.

பெயர் Marie-Dominique_Culioli. பிரான்ஸ் நாட்டின் தற்போதைய அதிபர் சர்கோஸியின் முதல் மனைவி. இவருக்கும் சர்கோஸிக்கும் இடையிலான உறவால் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மேரி சொல்கிறார்.

“சர்கோஸியின் இரண்டாவது மனைவியான செசிலியா எனது நெருங்கிய தோழி. நான் அவரை முழுமையாக நம்பினேன்.. அவர் எனக்கு குடும்ப நண்பியாக இருக்கிறார் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் சர்கோஸிக்கு செசிலியா மீது காதல் இருந்தது எனக்குத் தெரியாமல் போய்விட்டது.

ஒரு நாள் அவளுடைய கணவருடன், சர்கோஸி, நான் என்று நால்வரும் சுற்றுலாவுக்கு போயிருந்தோம். அப்போது நான் வெளியே போய்விட்டு அறைக்குத் திரும்பும்போது கதவருகே சர்கோஸியின் செருப்பு இருந்ததைப் பார்த்தேன். அதோடு அறையினுள் இருந்து சப்தமும் கேட்டது. புரிந்து கொண்டேன்.

சர்கோஸிக்கு அவள் மீதான காதல் தாறுமாறாக இருந்ததினால் நான் அவரை விட்டுப் பிரிய வேண்டியதாகிவிட்டது. இப்போது சர்கோஸியைகூட நான் மன்னித்துவிடுவேன். ஆனால் செசிலியாவை மன்னிக்கவே மாட்டேன். அவள் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டாள்..”
என்கிறார்.

மிக சமீபத்தில்தான் இப்படி பேட்டியளித்திருக்கிறார் மேரி.

எது எப்படியிருந்தாலும் ஒரு நாட்டின் உச்ச பதவியில் இருப்பவரின் தனிப்பட்ட வாழ்க்கை முறையை சம்பந்தப்பட்ட பெண்களே வெளிப்படையாக பேச முன்வருவதை நினைத்து கை தட்டத்தான் தோன்றுகிறது.

இதே பிரான்ஸ் நாட்டின் அதிபராக சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மித்தரண்ட், கேன்ஸர் நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

அவர் இறந்த பின்பு அவருடைய மனைவி பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தார்.

அப்போது, “நாங்க முன்னாடி குடியிருந்த தெருவுல ஒருத்தியை விட்டு வைச்சதுல்ல உங்க பிரஸிடெண்ட்.. அவருடைய வாழ்க்கையில எத்தனை பொம்பளைங்க வந்தாங்க, போனாங்கன்னு எண்ணவே முடியாது.. என் பிரெண்ட்டுன்னு ஒருத்தியை அறிமுகப்படுத்தி வைச்சா போதும்.. அவ்வளவுதான்.. எப்படித்தான் கவிழ்ப்பாரோ தெரியாது.. அடுத்த ஒரு மாசத்துக்கு அவகூடதான் சுத்துவார்..” என்று தைரியமாக சொல்லியிருந்தார்.

அப்போதே எனக்கு மிக, மிக ஆச்சரியத்தை அளித்திருந்தது இந்த பேட்டி.

நம் இந்தியாவில் பிரபலமானவர்களின் அத்துமீறல்கள், கொடுமைகளைப் பற்றி அவருடைய குடும்பத்தினர் தெரிவிக்கும் உண்மைகள் மிக, மிக குறைவுதான்.. குடும்பமே முக்கியம் என்ற ஒரு கொள்கையாட்சி சூழலில் வாழ்ந்து வரும் இந்தியாவில் இந்தக் குறைவு என்பது ஆச்சரியமில்லைதான்.

அம்பேத்கார் உடல் நலம் குறைவில்லாமல் இருந்தபோது அவருக்கு பணிவிடை செய்ய வந்த நர்ஸ் ஒருவர், திடீரென்று குழந்தை பெற்று தனது குழந்தைக்கு அம்பேத்கார்தான் தந்தை என்று சொல்லி அந்தக் காலத்திலேயே பரபரப்பை ஊட்டினாராம். அம்பேத்கார் இதை உடனேயே மறுத்திருக்கிறார்.. - இப்படி ஒரு செய்தியையும் ஒரு பத்திரிகையில் சில காலத்திற்கு முன்பு படித்திருக்கிறேன்..

அடுத்தாற்போல் தமிழக முன்னால் முதல்வர் திருமதி ஜானகி ராமச்சந்திரன் தனது அன்பு கணவர் திரு.எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களைப் பற்றி, “அந்த பொம்பளை பேச்சைக் கேட்டு இவரு பாம்பா சீறுராரு” என்று விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது 'வார்த்தைச் சித்தர்' வலம்புரிஜானிடம் வருத்தப்பட்டது பதிவாகியிருக்கிறது.

இலட்சிய நடிகர் திரு.எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்களைப் பற்றி அவருடைய முன்னாள் மனைவி விஜயகுமாரி அளித்திருந்த பேட்டியும் சர்கோஸி மேட்டர்போல்தான் இருந்தது.

இது ஒன்று மட்டுமே பெண் உரிமை இல்லை என்பது தெரியுமென்றாலும், இந்த விஷயத்தில் நம் பெண்கள் சீற வேண்டியவைகள் நிறைய உண்டு என்பதைச் சுட்டிக் காட்டத்தான் வேண்டும்.
-----------------------------------------------------------
டந்த ஒரு மாத காலமாக இஸ்ரேல், பிரேசில், பிரான்ஸ் பட விழாக்கள் நடந்தேறிவிட்டன. டைப் செய்வதற்கு வாய்ப்பில்லாமல் எனது வீட்டு கம்ப்யூட்டர் படுத்துவிட்டது. CPU-வை மட்டும் தூக்கிச் சென்ற பொறியாளர் கடந்த 60 நாட்களாகத் தண்ணி காட்டிவிட்டார்.

முன்பெல்லாம் ரேஷன் கடையில்தான் கூட, குறைய என்ற குற்றச்சாட்டுக்கள் இருக்கும். இப்போது கம்ப்யூட்டர் வன்பொருள் வல்லுநர்கள் மீதுதான் இந்தக் குற்றச்சாட்டு பரவலாகப் பதிந்துள்ளது.

நான் முன்பு ஒரு முறை விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தும்போது சிஸ்டத்திற்கு பாஸ்வேர்டு கொடுத்திருந்தேன். பின்பு அதனை மறந்துவிட்டேன்.. அதனால் உள்ளே நுழைய முடியாமல் தவித்தேன்.

வெறும் வாயாலேயே சினிமா கதைகளை ஓட்டிக் கொண்டிருந்த கொடுமையான காலம் அது. சிங்கிள் டீயைக் குடித்து காலம் தள்ளிக் கொண்டிருந்த என்னிடம், “300 ரூபாய் கொடுத்தால் அதை சரி செய்து தருகிறேன்..” என்று வன்பொருள் வல்லுநர் ஒருவர் சொன்னார். நானும் அப்போது என்னிடமிருந்த சில புத்தகங்களை எடைக்கு எடை போட்டுவிட்டு கிடைத்த பணத்தைக் கொடுத்தேன்.

“ரொம்ப கஷ்டமான வேலை ஸார்.. தூக்கிட்டுப் போய்தான் பாக்கணும்..” என்று சொல்லி சி.பி.யூ.வைத் தூக்கிச் சென்றார் அவர். 5 மணி நேரம் கழித்து மீண்டும் என்னைத் தொடர்பு கொண்டு “சிஸ்டம் ரெடியா இருக்கு ஸார்.. வந்து எடுத்துக்குங்க..” என்றார். ‘300 ரூபாய் தண்டமாச்சே..’ என்று முருகனைத் திட்டியபடியே சிஸ்டத்தைத் தூக்கிக் கொண்டு வந்தேன்.

இது நடந்து நான்கு நாட்கள் கழித்து வேறொரு கம்ப்யூட்டர் பொறியியல் நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். அவரிடம் நடந்ததை சொன்னபோது விழுந்து, விழுந்து சிரித்தார். “ஏன் இவ்வளவு அப்பாவியா இருக்கீங்க..? சி.பி.யூ. டப்பாவை கழட்டிட்டு அதுல இருக்கிற பேட்டரியை கழட்டி மறுபடியும் திருப்பி போட்டு, சிஸ்டத்தை ஆன் செஞ்சா பாஸ்வேர்ட் கேட்காதே..” என்றார். எனக்கு பகீரென்றது...

அப்போதிலிருந்தே சிஸ்டத்தில் ஏதேனும் கோளாறு என்றால் நான்கைந்து பொறியாளர்களிடம் அட்வைஸ் கேட்டுவிட்டுத்தான் எதையும் செய்வது வழக்கம். அப்படியும் இந்த முறையும் சுத்தமாக ஏமாந்துவிட்டேன்.

ஹார்டு டிஸ்க் பூட் ஆகாமல் போய்விட அதை மாற்ற 2000 ரூபாய்க்கு 80 ஜி.பி. புது ஹார்டு டிஸ்க் வாங்கிக் கொடுத்தேன். “உடனேயே மாற்றித் தருகிறேன்” என்று சொல்லி எடுத்துப் போனவர், “உங்க மதர்போர்டு இந்த புது ஹார்டு டிஸ்க்கோடு செட் ஆகலே ஸார்..” என்று சொல்லிவிட்டு என்னைக் கேட்காமலேயே பென்டியம்-3 மதர் போர்டை போட்டு அஸெம்பிள் செய்துவிட்டார்.

கூடவே நான் போட்டு வைத்திருந்த டிவிடி ரைட்டரை எடுத்துவிட்டு சிடி ரைட்டரை மாத்திப் போட்டு, 2 மாதம் கழித்து வீட்டில் வந்து வைத்துவிட்டுப் போயிருக்கிறார். கூடவே பில்லும்தான்.. 5000 ரூபாய் தர வேண்டுமாம்..

தாங்காதுடா சாமி.. “எனக்கு பழைய டேமேஜா இருந்த சிஸ்டமாவே மாத்திக் கொடுத்திருப்பா”ன்னு கத்திக்கிட்டிருக்கேன்.. கட்டப் பஞ்சாயத்து நடந்திட்டிருக்கு.. முடிஞ்சவுடனேதான் விமர்சனமெல்லாம் எழுதணும்..

----------------------------------------------------------

ன்று காலை ஸ்பெஷல் ஷோவில் ‘தசாவதாரம்’ படம் பார்த்தேன்.. ‘சிவாஜி’ படத்தையும் இதேபோல் முதல் நாளே பார்த்திருந்தும் விமர்சனம் எழுதாமல்விட்டேன். அதேபோல் இப்போதும் இருப்பதுதான் நல்லது என்று என் மனது சொல்வதால், கமலின் ‘தசாவதாரத்தைப்’ பற்றி சொல்வதற்கும், எழுதுவதற்கும் ஒன்றுமில்லை.

மீண்டும் சந்திப்போம்.

பதிவர்கள் டுபுக்கு-பாஸ்டன் பாபாவுடன் ஒரு சந்திப்பு

12-06-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே!

'டுபுக்கு' என்ற வார்த்தையை என் சின்ன வயதில் கேட்டது. 'வாயைத் தொறந்தால் பொய்யைத் தவிர வேற எதையுமே பேச மாட்டான்' என்று என் பள்ளிக்காலத் தோழன் ராமச்சந்திரனை அடையாளம் காட்டி, சக மாணவர்கள் பேசியது எனக்கு இன்றைக்கும் நினைவிருக்கிறது.

அநேகமாக பள்ளிகளில் பேசிய இது போன்ற அர்த்தமுள்ள சிறார் வார்த்தைகளை, பின்னாளில் கேட்கின்ற போது ரொம்பத்தான் மனம் அதில் லயித்துப் போகிறது..

நான் வலையுலகில் நுழைந்த காலக்கட்டத்தில் வலைப்பதிவர்களின் பெயர்கள் சற்று காமெடியாகவும், சற்று வில்லங்கமாகவும் இருக்கும் என்பது தெரியும் என்றாலும், இந்த அளவுக்கு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. காரணம் 'டுபுக்கு'.

நண்பர், தோழர் டுபுக்கு எனது பதிவிற்கு வருகை தர துவங்கியதில்தான் அவருக்கும், எனக்குமான தொலைதூரத் தொடர்பும் துவங்கியது. பெயர், ஊர் தெரியாமல் எழுத்தால் மட்டுமே அறிமுகமாயிருந்த நண்பர் டுபுக்கு திடீரென்று சென்ற வாரம் சென்னையில் பிரசன்னமாகியிருந்தார்.

வருவதற்கு முன்பே ஒரு பதிவினை இட்டிருந்தார். நானே கிட்டத்தட்ட மறந்து போயிருந்தேன் அந்தப் பெயரை.. மறுபடியும் ஞாபகப்படுத்துவதைப் போல் இருந்தது அவரது அழைப்பு. 'சந்திப்போம்' என்ற உணர்வோடு முன்கூட்டியே தெரியப்படுத்தியிருந்தேன். 'வருக.. வருக..' என்று அழைத்திருந்தார்.

திடீரென்று இரண்டு நாட்கள் முன்பாக செல்போனில் அழைத்தார். எனது ‘நிலைமை’ தெரியாததால் பாவம்.. பேசுவதற்குள் திணறிவிட்டார். 4, 5 முறை சொன்ன பிறகுதான் ‘டுபுக்கு’ என்ற பெயர் எனது ஓட்டைக் காதில் ஏறியது.. நானே மன்னிப்பு கேட்டு பேசினேன்.. “அவசியம் வரணும்.. உங்களை சந்திக்கணும்..” என்றார்.. “இடம் எங்கே..?” என்றேன்.. “சிட்டி சென்டர்..” என்றார்.. “அதுதான் எங்கே..?” என்றேன்.. “எனக்கே தெரியாது பாஸ்.. அன்னிக்கு போன் பண்ணுங்க.. சொல்றேன்..” என்றார்.

அடுத்து கொஞ்ச நேரத்தில் டோண்டு ஸார் போன் செய்து "சிட்டி சென்டர் எங்கே இருக்கிறது?" என்றார். ["இஸ்ரேலை பத்தி தெரியுது.. குஜராத்ல பகல்லேயே கிராமத்துல லைட் எரியறது நங்கநல்லூர்ல இருந்தே தெரியுது.. பிராங்க்ளினை தவிர மத்த ஜனாதிபதியெல்லாம் வேஸ்ட்டுன்னு தெரியுது.. ஊருக்குள்ளேயே இருக்குற சிட்டி சென்டர் எங்கன்னு தெரியல.. கொடுமை.."] “விசாரிச்சு சொல்றேன் ஸாரு”ன்னு சொல்லிட்டு விசாரிச்சேன். ஐநாக்ஸ் தியேட்டர் பில்டிங்குதான்னு சொன்னாங்க.. நமக்கு ‘குல தெய்வக் கோவிலை’ அடையாளம் காட்டினாத்தானே எல்லாமே தெரியுது.. மறுபடியும் டோண்டு ஸாருக்கு போனை போட்டு சொன்னேன்.. “வந்தர்றேன்..” என்றார்.

ஜூன் 7-ம் தேதி சனிக்கிழமை மாலை அலுவலகத்திலிருந்து கிளம்புகின்ற சமயம் பார்த்து வழக்கம்போல என் அப்பன் முருகன் தனது விளையாட்டைக் காட்டிவிட்டான். “ஒரு அர்ஜண்ட் வொர்க்.. நைட்டோட நைட்டா முடிச்சாகணும்..” என்று சொல்லி ஒரு கத்தை பேப்பரை கையில் திணித்தார்கள்.. நானும் வழக்கம்போல மனதுக்குள் முருகனைத் திட்டித் தீர்த்தேன்.

இருந்தாலும், போயே ஆக வேண்டும் என்ற உணர்வு மேலோங்கியிருந்ததால், 2 மணி நேர பெர்மிஷன் சொல்லிவிட்டு கிளம்பினேன்.

சிட்டி சென்டர் வந்தவுடன் டோண்டு ஸாருக்கு போன் செய்தேன். மிக இரைச்சலுடன் “4-வது மாடிக்கு வாங்க..” என்றார். தியேட்டரில் இருக்கிறார்களோ என்ற சந்தேகத்துடன் 4-வது மாடியில் கால் வைத்தபோதுதான் தெரிந்தது அது Food Court Ground என்று..

குழந்தைகள் ஒரு பக்கம் கம்பி வலைகளுக்குள் கவலையே இல்லாமல் விளையாடிக் கொண்டிருக்க அவர்களை அழைத்து வந்திருந்த பெற்றோர்கள் ஒரு புறம் அதைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தார்கள்.

எங்கே இருக்கிறார்கள் என்று அந்தப் பக்கம், இந்தப் பக்கம் என நோட்டம் விட்டபோது டோண்டு ஸார் மட்டும் பளிச்சென தெரிந்தார். அருகில் சென்றேன்.. சுற்றிலும் ஒரு பத்து பேர் அமர்ந்திருந்தார்கள்.

கருப்பு பனியனில் அம்சமான கலரில், தோற்றத்தில் அழகாக இருந்தார் டுபுக்கு. ‘ஹாய் கோபி’க்குப் பிறகு வலையுலகில் இருக்கும் அழகான ‘கோபியன்’ இவர்தான் என்று நினைக்கிறேன்..

இரண்டு டேபிள்களில் சுற்றிலும் அமர்ந்திருந்தார்கள் நண்பர்கள். எனக்கு இப்போது நினைவில் இருப்பது சிலர்தான்.. மற்றத் தோழர்கள் கோபித்து கொள்ளக்கூடாது.. சட்டென்று நினைவிற்கு வர மறுக்கிறது..

கில்லி பிரகாஷ¤ம், பாஸ்டன் பாபாவையும் உடனேயே அடையாளம் தெரிந்தது.. நண்பர் விக்கியும் இருந்தார். கில்லி கொஞ்சம் மெலிந்திருந்தார்.. பாவம்.. ஏனோ தெரியவில்லை.. பாபா சென்ற வருடம் பார்த்ததைவிடவும் சற்று அழகு குறைவாக இருந்தார். வயது ஏறியதாலோ..?

என் அருகில் நண்பர் சிமுலேஷன். இவரது பெயர் மட்டும்தான் சட்டென்று நமீதா பெயரைப் போல் மனதில் ஒட்டிக் கொண்டது. ஏன் என்றுதான் தெரியவில்லை.

கில்லியார் எனது சுஜாதா பதிவைப் பற்றிச் சொல்லி “அன்னிக்கே நான் போன் பண்ணணும்னு நினைச்சேன்..” என்றார்.. ஏன் பண்ணவில்லை என்பதற்கு காரணம் சொல்வார் என்று எதிர்பார்த்தேன்.. சட்டென்று எஸ்கேப்பாகிவிட்டார். பட்டென்று கையில் ஒரு ஜூஸ் டம்ளரை கொடுத்து உபசரித்தார் சிமுலேஷன்.

இவரும் சுஜாதா பதிவைப் பற்றியே பேசினார். “சுஜாதா மறைவு தொடர்பான செய்திகளில்தான் உங்களைப் பற்றியே கேள்விப்பட்டேன்” என்றேன்.. “நான் அதிகமா எழுதறதில்ல. ஆனா உங்க பதிவை படிச்சுக்கிட்டேதான் இருக்கேன்..” என்றார்.

டுபுக்குவுடன் மீட்டிங்கில் மற்ற பதிவர்கள் மிக பிஸியாக இருந்தார்கள். நேருக்கு நேராக அமர்ந்து மீட்டிங் பேசிக் கொண்டிருந்தார் டோண்டு ஸார்.. அவரை விட்டுட்டுத் திரும்ப முடியுமா? மனுஷன் விடுவாரா அவரு..?

இன்னொரு பதிவர் வளைத்து, வளைத்து புகைப்படங்களை எடுத்துத் தள்ளினார். இங்கே பாபாவும், கில்லியும் சப்ஜெக்ட் டூ சப்ஜெக்ட்டாகத் தாவிக் கொண்டிருந்தார்கள். நான் வழக்கம்போல காதில் விழுந்ததை மட்டும் கேட்டுவிட்டு மற்ற நேரத்தில் வழக்கம்போல ‘சர்வே’ எடுத்துக் கொண்டிருந்தேன்.

என் பின்புறத்தில் காதலர்களான இருவர் ஒரு ஜூஸை யார் வேகமாக உறிஞ்சுவது என்ற போட்டியில் ஈடுபட்டிருக்க.. அந்தச் சத்தமும் என் காதைத் தொட லேசாகத் திரும்பிப் பார்த்தேன். வழக்கம்போல நம்மாளு தோத்துட்டான்..

இப்போது பேச்சு எங்கெங்கோ சுற்றி அரசியல் பற்றி வந்து நின்றது.. காமராஜர், தியாகி ஜெபமணி, பற்றி கில்லியார் எடுத்துவிட அது ராஜீவ்காந்தி கொலை வழக்கு, சி.பி.ஐ. விசாரணை பற்றியெல்லாம் சுற்றிக் கொண்டு சென்றது.

நண்பர் விக்கி எனது குறும்படம் பற்றிப் பேசினார். “அதை ஏன் இன்னமும் வலையேற்றவில்லை..?” என்றார். எனது பிரச்சினையை சொன்னேன். “என்கிட்ட கொடுங்க.. நான் பண்ணித் தரேன்..” என்றார். “பாலாவும் இதையேதான் சொல்லிருக்கார். கொண்டு போய் கொடுக்க நேரமில்லாம இருக்கேன். அதான் பிரச்சினை.. இந்த மாசத்துக்குள்ள எப்படியும் ஏத்திரலாம்..” என்றேன்..

மேற்கொண்டு பேச வேண்டுமெனில் காதில் ஸ்பீக்கர் வைத்துக் கத்தினால்தான் கேட்கும் என்ற நிலைமை.. அவ்வளவுக்கு குழந்தைகளின் கூச்சலும், ஆர்வமும் அதிகரித்திருந்தது.

நண்பர் சிமுலேஷன் சீக்கிரமே விடைபெற்று சென்றார். டுபுக்குவும் இதற்கு மேல் இங்கேயிருந்து கத்த முடியாது என்று சொல்லி “இடத்தை மாத்துவோம்..” என்றார். அதுவரையில் அவருடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தையில் இருந்த டோண்டு ஸாரும் அதனை ஆமோதிக்க கூட்டம் அங்கிருந்து கலைந்தது.

டோண்டு ஸார், தன்னுடைய வயதை குறைத்துக் காட்ட வேண்டி ஒரு அடையாளத்துக்காக ஹாரிபாட்டர் புத்தகத்தைக் கையோடு கொண்டு வந்திருந்தார். எங்கே போனாலும் கையில் ஒரு புத்தகத்தை வைத்திருப்பது இவருடைய வழக்கமாம். “நேரத்தை வீணாக்கக் கூடாது..” என்றார். “என்னதான் பிலிம் காட்டினாலும் 65 வயசானது ஆனதுதான்.. அதை மாத்த முடியாது..” என்றேன்.. சிரித்துக் கொண்டார்.

கீழே இறங்க வரும்போதுதான் கவனித்தேன்.. ஒரு மூலையில் ஒரு கனிவான, மிக, மிக அழகான யுவதி கண்களில் சொட்டு, சொட்டாக நீர் வடிய செல்போனில் யாருடனோ பேசியபடியே அழுது கொண்டிருந்தார். அடப்பாவே.. வர வேண்டியவர் வராமல் ஏமாற்றிவிட்டாரோ என்னவோ?

எஸ்கலேட்டரில் நான் அதிகம் ஏறியவனில்லை. கொஞ்சம் பயம்தான் இன்னிக்கிவரைக்கும். பாதுகாப்பிற்காக முன்னால் டோண்டு ஸாரை போக விட்டு பின்னால் பயத்துடன் கால் வைத்து இறங்கினேன்.. அது ஏன் இங்கே மட்டும் சட்டென்று கால் வர மறுக்கிறது..? புரியவில்லை.

கிரவுண்ட் ப்ளோரில் மெயின் ஹாலில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ‘ஹோலி குரான்’ என்று எழுதப்பட்டிருந்த ஆங்கிலப் புத்தகத்தை பாபாவும், மற்றவர்களும் ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். வழக்கம்போல வாங்காமலேயே டாட்டா சொல்லிவிட்டு வந்தார்கள்..

ரோட்டிற்கு வந்தவுடன் பீச்சிற்கு போகலாம் என்று முடிவெடுத்தோம். அப்போது டோண்டு ஸாருக்கு போன் வர.. அப்போதே நினைத்தேன் “வீட்டம்மா கூப்பிடுறாங்க.. கிளம்புறேன்”னு சொல்வார் என்று.. அதேதான்.. ஒரு வார்த்தையைகூட மாற்றாமல் இதையே சொல்லிவிட்டு கிளம்பினார்.. இந்த வயசுல அவர் நிம்மதியா இருக்காருன்னா, அதுக்கு இதுதான் காரணம்னு நான் நினைக்கிறேன்.. வாழ்க அவர் வீட்டுக்காரம்மா..

கில்லியார் புகைத்த சிகரெட் அந்தக் கால மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் அசோகனின் உதடுகளில் புகைந்து கொண்டிருக்குமே அதுபோல, அப்படியொரு நீட்டமாக இருந்தது.. “கல்யாணமாயிருச்சுன்னு சொல்றீங்க.. அப்புறமெதுக்கு இது?” என்ற எனது வேண்டாத அட்வைஸை அவரிடமும் செய்தேன்.. “விடணும்தான் பாக்குறேன்.. முடியல.. முன்னாடி நிறைய.. இப்ப கொஞ்சம் 3 பாக்கெட்டுதான்.. விட்டுறலாம்.. நீங்க ஒண்ணு..” என்று என்னிடமே நீட்டினார். தேவைதான் எனக்கு..!

கில்லியுடன் கொஞ்ச நேரம்.. பாபாவுடன் கொஞ்ச நேரம்.. டுபுக்குவுடன் கொஞ்ச நேரம் என்று பேசியபடியே கடற்கரையை அடைந்தோம். வலைப்பதிவர்களின் தற்போதைய பாராளுமன்ற இடமான, அதே காந்தி தாத்தா சிலையின் பின்புறம் சிமெண்ட் பெஞ்சுகளில் தஞ்சமடைந்தோம்..

பேச்சு சூடு பிடித்தது.. பேச்சுகள் என் அறிவுக்கு அப்பார்ப்பட்டதாக இருந்ததால் கொஞ்ச நேரம் மெளனமாக இருந்து வேடிக்கை பார்த்தேன்..

நான் அதிக கமெண்ட்டுகள் போட்டதாக கில்லியார் குற்றம் சுமத்திய போதுதான் ஏதோ ஒரு சான்ஸ் கிடைச்சதேன்னு வாயைத் தொறந்து, “அது இந்த லக்கிலுக் பய, சுகுணா திவாகர் கல்யாணத்திற்குப் போய்ட்டு வந்து எழுதிய பதிவுல, ஒரு ஜாலிக்காக 100 கமெண்டு போடப் போய் அது தொற்றிவிட்டது..” என்றேன்..

இடையில் திடீரென்று விக்கி எழுந்து தன் பேண்ட், பாக்கெட்டுகளைத் துழாவு, துழாவென்று துழாவினார். அவருடைய பைக்கின் சாவி தொலைந்து போய்விட்டதாகச் சொன்னார். தேடிப் பார்த்தும், தடவிப் பார்த்தும் கிடைக்காததால் ஒருவேளை வண்டியிலேயே விட்டிருக்கலாம் என்று தனக்குத்தானே ஆறுதல்பட்டு அமைதியானார்.

பேச்சு சினிமா பக்கம் திசை திரும்பியது.

டுபுக்கு சினிமா பிரியர் போலிருக்கிறது.. நிறைய ஹிந்தி, தெலுங்கு படங்களைப் பற்றிப் பேசுகிறார்... “தெலுங்கு திரைப்படங்கள் நிறைய வித்தியாசமான திரைக்கதையோடு வருகின்றன..” என்கிறார்.

மலையாள சினிமாவில் பிரியதர்ஷனின் ஆதிக்கம் குறைந்தது பற்றி பாபா பேசினார். “பிரியதர்ஷன் ரீமேக் படங்களாத்தான் பண்றார்.. அவர் சமீபமா எடுத்த மலையாளப் படங்கள் எதுவும் நல்லாப் போகலை..” என்றார்.. அவருடைய சூப்பர்ஹிட் பேவரைட் படமான 'சித்ரம்' திண்டுக்கலில் 100 நாட்கள் ஓடியதை நான் சொன்னேன். “மலையாளப் படங்களை தமிழ்நாட்டு பெண்களிடமும் கொண்டு சென்ற படம் ‘சித்ரம்’தான்..” என்றேன். "தலைவர் ரஜினிக்குப் பிறகு எனக்குப் பிடிச்சது மோகன்லால்தான்.." என்றார் பாபா.

“பொம்மரிலு’ படத்தை பார்த்துவிட்டு ‘சந்தோஷ் சுப்பிரமணியத்தை’ பார்க்க முடியவில்லை..” என்றார் டுபுக்கு. “காட்சிக்கு காட்சி அப்படியே டப் செய்திருக்கிறார்..” என்றேன் நான். “அதுவும் நல்லதுதான்.. தமிழுக்கு ஏத்தாப்புல மாத்துறேன்னு எங்கனயாச்சும் கை வைச்சிருந்தா படம் விளங்கிருக்கும்” என்றார் பாபா. பாபாவின் இக்கருத்துக்கு அமோக ஆதரவு கூட்டத்தில். எனக்கும் இது சரியென்றே பட்டது.

'சிவாஜி'யை 'தசவாதாரம்' பீட் செய்துவிடுமா என்று திடீர் கருத்துக் கணிப்பும் கேட்கப்பட்டது. “பிளாக் டிக்கெட் இருக்கின்றவரையில் பீட் செய்தே தீரும். அதனால்தான் அதிகமான தியேட்டர்களில், அதிக பிரிண்ட்டுகள் போடப்பட்டு வருகின்றன..” என்று பாபா புள்ளிவிவரத்தோடு சொன்னார்..

ஆத்மார்த்த நடிகைகளை ரசிப்பதினால் தங்களது இல்லத்தரசிகளிடமிருந்து வரும் எதிர்ப்புகளை எப்படி சமாளிப்பது என்று குடும்பஸ்தர்களான டுபுக்குவும், பாபாவும் பரஸ்பரம் தங்களது வேதனைகளையும், தாங்கள் சந்தித்த சோதனைகளையும் பரிமாறிக் கொண்டார்கள்.. இதை அவர்களே சொல்லித் தொலைத்தால் நல்லது..

அதிலும் இந்த மாதிரியான நேரத்தில் மனைவிமார்கள் அமைதியாக இருந்தாலும், தங்களுடைய வாரிசுகள் எக்குத்தப்பாகப் பேசி மாட்டிவிடுவதைப் பெருமையாகப் பேசிக் கொண்டதைக் கேட்டபோது என் செல்போனில் டேப் செய்யும் வசதி இல்லாததை நினைத்து கடுப்பாகிவிட்டது மனம்.

டுபுக்கு ஸார் சொன்ன ‘அந்த’ மேட்டரை அப்படியே சொல்லலாம்னு பார்த்தா.. அடுத்த தபா வந்தா நம்மளை பார்ப்பாரான்னு சந்தேகமா இருக்கு.. அதுனால வேணாம் விட்டுர்றேன்..

பாபாவும் தன் பங்குக்கு தனது சோகம் ஒன்றை சொன்னார். அதையும் சொல்ல முடியாத சோகம் எனக்கு..

பேச்சு இப்போது வீட்டு வாடகை, நிலம் வாங்குவது என்பதற்கு வர.. “இப்போது சென்னையில் 2000 ரூபாய் வாடகைக்கு ஒரு கக்கூஸ், பாத்ரூம்கூட கிடைக்காது..” என்றேன்.. எல்லாம் ‘அவர்களால்தான்’(தனிப்பதிவு காத்திருக்கு) என்றேன்.

“இந்த வீட்டு வாடகைப் பிரச்சினை பரங்கிமலையிலிருந்து பாஸ்டன்வரைக்கும்கூட இருக்கு..” என்றார் பாபா. அவரும் அதே பிரச்சினையால் தினமும் 3 மணி நேரம் கூடுதலாக டிராவல் செய்வதாகச் சொன்னார்.. என்ன கொடுமை பாபா இது?

பேச்சுக்கள் அப்படியே தொடர்ந்து போய்க் கொண்டிருக்க.. பாபாவுக்கு போனில் அழைப்புகள் வந்தபடியே இருந்தன. டுபுக்குவும் கிளம்ப வேண்டிய சூழல் வந்துவிட்டதை உணர்ந்து "விடைபெறலாம்" என்றார்.

நாளைய சந்திப்புக்கு வரும்படி அவரை அழைத்தார் பாபா. நானும்தான்.. “நேரமிருந்தா வர்றேன்.. ஏற்கெனவே திட்டமிட்ட ஒரு நிகழ்ச்சி இருக்கு..” என்றார் டுபுக்கு. “வரப் பாருங்க” என்றேன்.. ஆனால் நானே மறுநாள் போக முடியவில்லை என்பது ஒரு சோகம்..

நான் அலுவலகத்திற்கு மீண்டும் சென்று பணி செய்ய வேண்டியிருந்ததால் கில்லியாரை ஏற்றிச் செல்ல எனது மெர்சிடிஸ் பென்ஸிற்கு கொடுத்து வைக்கவில்லை. “அடுத்த முறை போலாம் ஸார்..” என்று சொல்ல கில்லியார் நகரப் பேருந்தைத் தேடிப் போக.. இந்தப் பக்கம் பாபா நடந்தே போக முடிவு செய்து விடைபெற்றார். “நாளை சந்திக்கிறேன்” என்று சொல்லிவிட்டு பை சொன்னேன்..

நண்பர் டுபுக்கு மற்றும் விக்கியுடன் பேசியபடியே வண்டிகளை எடுப்பதற்காக மீண்டும் சிட்டி சென்டருக்கு வந்தோம். இப்போதைக்கு இறுதியாக ஒரு முறை டுபுக்குவுடன் பேசி விடைபெற்றேன்.

விக்கி “சாவியை நான் தேடிக் கொள்கிறேன்.. பை..” என்று சொல்லிவிட்டுப் போனார்.

டுபுக்குவும் நண்பர்களுடன் கிளம்பிச் செல்ல.. நானும் அலுவலகம் திரும்ப அவசரமாக இருந்ததால் உடன் திரும்பிவிட்டேன்.

அலுவலகம் திரும்பியவுடன்தான் யோசித்தேன்.. விக்கிக்கு என்ன ஆச்சோ? கூடப் போய் கொஞ்சம் பார்த்திருக்கலாமே என்று..

“அறிவு எப்பவுமே எனக்கு மட்டும் லேட்டாத்தான் வேலை செய்யுது..”

என்ன செய்யறது..?

நண்பர் விக்கி மன்னிப்பாராக..!

நினைத்தேன் எழுதுகிறேன் - கர்நாடக, ஆந்திரத் தேர்தல் முடிவுகள் சொல்லும் பாடம்

02-06-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


தேர்தல்கள் என்பதே முகமூடிக் கொள்ளைதான் என்பது பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்சத்தில் நமக்குத் தெரிய வந்தாலும், நமது அரசியல்வாதிகள் அதனை சோடியம் லைட் வெளிச்சமாக்கி "நிலா காயுது.. அதைப் பார்க்கத்தான் உங்களுக்கு சோடியம் லைட் வசதியெல்லாம் செஞ்சு கொடுத்திருக்கோம்" என்று தமது புகழ் பாடி பிச்சையெடுத்து பெருமாளாகும் வைபவம் என்பது நமக்குத் தெரியும்.

ஆனால் இனிமேல் வரக்கூடிய தேர்தல்கள் அனைத்துமே அரசியல் கட்சிகளுக்கு அவர்களுடைய நிலையை அவர்களுக்கே உணர்த்துகின்ற ஒரு அனுபவமாகத்தான் இருக்கும் என்பதனை கர்நாடக மக்களும், ஆந்திரப் பிரதேச மக்களும் நடத்திக் காட்டியிருக்கின்றனர்.

முதலில் கர்நாடகத்தை பார்ப்போம்..

முன்பெல்லாம் 'கழைக்கூத்தாடிகள்' என்பவர்கள் ரோட்டோரமாக கயிற்றின் மீது பிடி இல்லாமல் நடந்தும், சாய்வான கயிற்றில் இருந்து பிடிமானமில்லாமல் மேல் நோக்கி நடந்தும் சர்க்கஸ் வித்தை காட்டி நெளிந்து போன தகர டப்பாவைக் குலுக்கி அதன் மூலம் தங்களது வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்தார்கள்.

இந்த வித்தையையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிடும்படியாக ஒரு அப்பாவும், இரண்டு மகன்களுமாக கர்நாடகாவில் சென்ற சட்டமன்ற காலத்தில் நடத்திய கூத்து இந்தியாவில் பிரசித்தி பெற்றுவிட்டது. “இப்படியொரு அப்பனுக்கு இப்படித்தான் பிள்ளை பிறப்பான்” என்ற தமிழ் கூற்றுக்கு நிஜமான உதாரணத்தை திருவாளர் தேவகவுடாவின் மகன் குமாரசாமியை சொல்லலாம்.

செய்து கொண்ட ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு போவது அரசியல்வாதிகளுக்கு தண்ணி பட்ட பாடுதான் என்றாலும், அதனை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வரி, வரியாக மாற்றி மாற்றி பேசியதுதான் கர்நாடக வெகுஜன மக்களை கடுப்படுத்திருக்கிறது என்பது அம்மாநிலத் தேர்தல் முடிவுகளில் இருந்து தெரிகிறது.

மதசார்பற்ற ஜனதா தளம் 28 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் அது ஜாதி ரீதியாக பெற்ற வாக்குகள்தான் என்று சொல்லலாம். பெருவாரியான ஒக்கலிகர் சமுதாய மக்களின் வாக்குகளால்தான் அக்கட்சிக்கு இப்போது மூச்சு கொஞ்சமாச்சும் இருக்கிறது.

இந்த ஜாதி பெல்ட்டை உடைப்பது என்பது இன்னொரு ஜாதியினரால்தான் முடியும்.. அந்த வகையில் தேவேகெளடா தான் சாகின்றவரையிலும் தன் பெயரில் இருக்கும் ‘கெளடா’ என்கிற பெயரை நீக்க மாட்டார் என்கின்றபோது அந்த பெல்ட் அவருக்குத்தான் என்பதிலும் சந்தேகமில்லை.

தேர்தலுக்குத் தேர்தல் காசு, பணம் புழங்குவதும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.. இத்தேர்தலிலும் ஓட்டுப் போடவிருக்கும் மக்களுக்குக் கொடுப்பாதற்காக வைத்திருந்த அன்பளிப்பு பணத்தை அதிகாரிகள் அள்ளிக் கொண்டு போன பாதகமும் நடந்திருக்கிறது..

இப்போது மாநிலத்தில் ஆட்சிக்கும் வர முடியாமல் போனதால் நிச்சயம் அப்பணம் மத்திய ஆட்சியாளர்களால் பறி கொடுத்தவர்களிடமே திரும்பிப் போகும் என்பதில் எனக்கு ஐயமில்லை.

தேர்தலுக்குத் தேர்தல் வாக்காளர்கள் கூடுகிறார்களோ இல்லையோ சாமியார்களும், ஜோதிடர்களிடம் கருத்து கேட்பவர்களும் கூடிக் கொண்டேதான் செல்கிறார்கள்.

படுத்துக் கொண்டே ஜெயிப்போம் என்ற நிலையில் இருந்த தங்களை நிஜமாகவே படுக்க வைத்த மக்களிடம், எழுவதற்கு என்ன வழி என்று காங்கிரஸ்காரர்கள் ஜோதிடர்களிடம் சென்று மண்டியிட்டு காத்திருந்தார்கள்.

"எதிரிகளை சம்ஹாரம் செய்ய இப்போது துர்காதேவிதான் வர வேண்டும். அவளுடைய அம்சம்தான் உங்களது கட்சியின் ராசிக்கு வந்திருக்கிறது.. யாராவது இரண்டு பெண் தேவிகளைப் பிடித்து அவர்களை ஏவி அப்பன், பிள்ளைகளான அரக்கர்களை கொல்லுங்கள்" என்று எவனோ ஒரு ஜோல்னாப் பை ஜோஸியக்காரன், வாங்கின காசுக்கு வஞ்சகமில்லாமல் ஒப்பாரி வைத்திருக்கிறான்.

"நிச்சயம் ஜெயிப்போம்.. எங்கள் துர்கா கை விடமாட்டாள்" என்ற கோஷத்தோடு குமாரசாமிக்கும் எதிராகவும், அவருடைய அண்ணன் ரேவண்ணாவுக்கு எதிராகவும் இரண்டு பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தி வைத்து “சூலாயுதத்தால் பிளவுபடப் போகிறார்கள் அண்ணன், தம்பிகள்..” என்று ரதத்தில் வந்தபடியே கர்ஜித்தார் மும்பையிலிருந்து வந்து போர்க்களத்தில் குதித்த கிருஷ்ணா.

தம்பி குமாரசாமி போட்டியிட்ட ராம்நகர் தொகுதியில் கர்நாடகத்தின் முன்னாள் ‘மிஸ்டர் கிளீன்’ முதல்வரான ராமகிருஷ்ண ஹெக்டேயின் மகள் மம்தா நிச்சானியை நிறுத்தியது ஜோதிடர் தயவுடைய காங்கிரஸ் கட்சி.

அதே போல் அண்ணன் ராவண்ணாவை எதிர்த்து அனுபமா என்ற பெண்ணை வேட்பாளராக நிறுத்திவைத்துவிட்டு, ஜோதிடரைவிடவும் நகத்தைக் கடித்துக் கொண்டு முடிவுக்காகக் காத்திருந்தது.

அப்பன்,. பிள்ளைகள் மட்டும் சாதாரணப்பட்டவர்களா..? முதல்வராக ஆட்சியில் இருக்கும்போதே திருநள்ளாறுக்கு ஓடோடி வந்து சனீஸ்வரனுக்கு லஞ்சம் கொடுத்து "எப்படியாவது இன்னொரு இரண்டரை வருஷத்துக்கு எக்ஸ்டென்ஷன் வேண்டும்" என்று பெட்டிஷனை போட்டு அழுது புலம்பிய குடும்பம் அது..

இந்தச் சம்பவத்தால் சனீஸ்வரன் கொஞ்சம் உச்சி குளிர்ந்து போய்விட்டான் போலிருக்கிறது.. குமாரசாமி 47,000 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தாவைத் தோற்கடித்தார். ரேவண்ணா 28 யிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அனுபமாவைத் தோற்கடித்து ஜோதிடரை தலைமறைவு நிலைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள்.

இப்போது சனீஸ்வரன் ஜோதிடரை பிடித்தானா அல்லது கிருஷ்ணாவை பிடித்தானா என்பதை அவனே வந்து சொன்னால்தான் தெரியும்.

பாரதீய ஜனதா கட்சி ஏழு நாட்கள் ஆட்சியிலிருந்து முதுகில் குத்திய நம்பிக்கைத் துரோகத்தால் பதவி விலகியபோதே முடிவு கட்டிவிட்டது கர்நாடகாவைக் கைப்பற்றியே தீருவது என்று.. அன்றைக்கே "அடுத்த முதல்வர் எடியூரப்பாதான்" என்று தெளிவுபடச் சொல்லிவிட்டது அக்கட்சி.

அக்கட்சியின் இன்னொரு பிரபலம் ஆனந்தகுமார் அவ்வப்போது எடியூரப்பாவுக்கு இடைஞ்சல் கொடுத்து வந்தாலும், தலைமையின் உருமலால் தேர்தல் வேலைகளில் சுணக்கம் காட்டுவது, லீவு எடுப்பது என்று சின்னச் சின்ன அழுவாச்சி வேலைகளில் மட்டும் ஈடுபட்டு தனது எதிர்ப்பை காட்டி வந்தார்.

காங்கிரஸிலோ வழக்கம்போல தொண்டர்களைவிட தலைவர்களின் எண்ணிக்கை அதிகமானதால் யாரை முதல்வர் பதவி வேட்பாளராக அறிவிக்கலாம் என்ற பிரச்சினைக்குள்ளேயே ஜன்பத் ரோடு ‘ஆத்தா’ தலையைக் கொடுக்கவில்லை.

இருக்கின்ற தலைவர்களையெல்லாம் வாரிப் போட்டுக் கொண்டு ஆளுக்கொரு ரதத்தில் பவனி வர வைத்தது. ஆனால் வாக்காளர்கள் சுதாரிப்பாக இருந்தது அவர்களுக்குத் தெரியவில்லை.. கடைசி நிமிடத்தில் முதல்வர் பதவிக்கு கார்கேயும், தரம்சிங்கும், கிருஷ்ணாவும் அடித்துக் கொள்ளப் போகும் கண்றாவிக்கு நம்ம எடியூரப்பாவே மேல் என்று நினைத்து ஓட்டுக்களைக் குத்திவிட்டார்கள்.

துர்கையம்மன் தோற்று கிங்கிரர்கள் வெற்றி பெற இப்போது கிருஷ்ணாவின் புலம்பல் வேறு மாதிரியிருக்கிறது.. “என்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்காததுதான் கர்நாடக மக்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் காங்கிரஸ் தோற்றுவிட்டது” என்று வருத்தப்படுகிறார்.

இருக்காதா பின்ன..? மும்பையின் கவர்னர் என்கின்ற எவ்ளோ பெரிய பதவியை ஒரு நொடியில் தூக்கிப் போட்டுவிட்டு, ஓடோடி வந்தவரை இப்படி நட்டாற்றில் விட்டால் அவர் என்ன செய்வார்? பாவம்..

பாஜகவுக்கோ தென் இந்தியாவில் முதன் முறையாக கால் ஊன்றிவிட்டோமே என்பதில் முதல் மகிழ்ச்சி. மெஜாரிட்டிக்கு சற்றுக் குறைவாக, எளிதில் ஆளைத் தூக்கிப் போகும் அளவுக்கான எண்ணிக்கையில் சுயேச்சைகள் ஜெயித்தது இரண்டாவது மகிழ்ச்சி.

இந்த இரண்டாவது மகிழ்ச்சியை வைத்துத்தான் தனது கட்சி எதிரிகளை வரும் 5 வருட காலமும் எடியூரப்பா சமாளிக்கப் போகிறார். “கட்சிக்கு முழு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. அடுத்த தேர்தலில் நாம் எவரையும் தூக்கும் நிலைக்கு ஆளாகாமல் இருக்கும்படி ஜெயிக்க வேண்டும். அதற்காக இன்னும் உழைக்க வேண்டும்” என்று வழக்கம்போல மந்திரி பதவி கிடைக்காதவர்களுக்கு ஆறுதல் சொல்லி தனது பாட்டை துவக்கிவிட்டார் முதல்வர் எடியூரப்பா.

மொத்தத்தில் இந்த கர்நாடகத் தேர்தலில் அம்மாநில மக்கள் அளித்த தீர்ப்பு. ஒன்று “நிலையான ஆட்சியைத் தர முடியுமெனில் வா.. இல்லாவிடில் போ..” என்பதாகத்தான் நான் நினைக்கிறேன். ஆக.. இது ஒன்றுக்காகவே கர்நாடக மக்களை வாழ்த்தியே தீர வேண்டும்.

அடுத்தது ஆந்திரா.

“அடைந்தால் மகாதேவி.. இல்லையேல் மரணதேவி” என்ற ‘மகாதேவி’யின் வசனத்தை மாற்றிப் போட்டு “தனித் தெலுங்கானாவை அடைந்தே தீருவேன்” என்று மந்திரியாக இருந்த அனுதினமும் சூளுரைத்துக் கொண்டிருந்தார் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவர் திரு.சந்திரசேகர்ராவ்.

“தனித்தெலுங்கானாதான் தனது உயிர்.. மற்றதெல்லாம் பிண்டங்கள்” என்று 'ஜன்பத் ரோடு அம்மா'விடம் தெளிவாகச் சொல்லிவிட்டுத்தான் மந்திரி பதவியை வாங்கிக் கொண்டார். ஆனால் “காங்கிரஸ் அமைச்சர்களைப் போல பதவிக்குக் கட்டுப்பட்டு இனிமேல் அடங்கியிருப்பார்” என்று ஜன்பத் ரோட்டு அம்மா நினைத்துவிட்டார்.

இங்கே தொகுதி மக்கள் “ஓட்டு போட்டோமே.. தனி வீடு என்னாச்சு?” என்று துளைத்தெடுக்க.. மேலேயும் கேட்க முடியாமல், வீட்டுக்கும் வர முடியாமல் தவித்து ஒரு நிலையில், பதவியையே ராஜினாமா செய்துவிட்டுத் தனது தியாகத்தை பறை சாற்றினார் சந்திரசேகர்ராவ்.

ஆனால் மக்களோ இந்தத் தேர்தலில் அதற்கும் ஆப்பு வைத்துவிட்டார்கள். “உனக்கு காரியத்தை நிறைவேற்றும் தகுதி இல்லை” என்று சொல்லி ஏற்கெனவே இருந்த 4 மக்களவைத் தொகுதிகளில் 2 தொகுதிகளை மட்டுமே திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள். அதேபோல் ராஜினாமா செய்த 16 சட்டமன்றத் தொகுதிகளில் 7 தொகுதிகளை மட்டுமே தெலுங்கானா மக்கள் திருப்பிக் கொடுத்துள்ளனர்.

இதுவும் ராவ்காருக்கு ஒரு எச்சரிக்கைதான். இனிமேலும் ஒழுங்கா இல்லைன்னா இதுவும் கிடைக்காது என்பது.. ராவ்காரோ கட்சித் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யலாமா என்று யோசித்து வருகிறராம்.

கர்நாடகாவில் பெற்ற தோல்வியால் துவண்டு போயிருந்த காங்கிரஸ் ஆந்திராவில் கிடைத்த திடீர் வெற்றியால் கொஞ்சுண்டு வாயைத் திறந்து சிரிக்கிறது.. 1 மக்களவைத் தொகுதியையும் 6 சட்டசபைத் தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சி கைப்பற்றி மூச்சு விட்டுள்ளது.

ஆனாலும் மத்தியில் இருக்கும் காங்கிரஸ்வாதிகளுக்கு தேர்தல் பயம் என்ற வியாதி இப்போதே வந்துவிட்டதை உணர்கிறேன்.. அதுதான் பெட்ரோல், டீஸல் விலை ஏற்றத்திற்காக மூன்று முறை கூடியும் முடிவெடுக்க முடியாமல் காபி, பிஸ்கட் மட்டும் சாப்பிட்டுவிட்டு கலைந்து போயிருக்கிறார்கள்.

அடுத்தாண்டு வர வேண்டிய மக்களவைத் தேர்தலை இந்தாண்டு நவம்பர் அல்லது டிசம்பரில் நடத்தி விடலாமா என்ற யோசனையை முன் வைத்திருக்கிறார்கள் மூத்த மந்திரிகள்.

எத்தனை களம் கண்டவர்கள் அவர்கள்..? அவர்களது கணிப்பின்படி விலைவாசி உயர்ந்தது.. உயர்ந்ததுதான். இறங்கவே இறங்காது..

அடுத்தாண்டு இறுதிவரையிலும் தேர்தலுக்காகக் காத்திருப்பது என்றால் அது நமக்குத் தற்கொலை முயற்சிதான்.. அதற்குள்ளாக பொதுமக்களின் கோபம் கொப்பளித்துவிடும்.. துப்புகிற துப்பில் நமக்கு கண்ணைத் திறக்கக் கூட இடமிருக்குமா என்பது சந்தேகம்தான் என்பதை நாசூக்காக ஜன்பத் ரோடு வீட்டம்மாவின் காதில் போட்டிருக்கிறார்கள்.

ஆனால் 'அம்மா'வோ சிதம்பரத்தை மலை போல் நம்பியிருக்கிறார். சிதம்பரமோ சிதம்பரம் ஆண்டவனை உயிர் போல நம்பியிருக்கிறார். இனிமேல் சிதம்பரம் ஆண்டவன் ஏதாவது ஆசி வழங்கி அதிசயம் நடத்தினால்தான் 2 ரூபாய் இட்லியின் விலை குறையும்.

ஆனால் பிரதமர் என்றழைக்கப்படும் மன்மோகன்சிங்கும், சிதம்பரமும் 2 ரூபாய் இட்லியையெல்லாம் சாப்பிடும் பழக்கமில்லாததால் நீங்களும் நானும் அடுத்தத் தேர்தல் வரை காத்திருந்து நமது கோபத்தைக் காட்ட வேண்டியதுதான்..

வேறென்ன செய்வது..?.