என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
ஏதோ ஒரு புள்ளியில் எதையோ ஒன்றினை பார்த்த மாத்திரத்தில் அது நீங்கள் சந்தித்த ஒருவரையோ அல்லது அவரது பிம்பத்தையோ பிரதிபலித்தால் அவர் நிச்சயம் உங்களுக்கு ஸ்பெஷல்தான்..
அந்த ஸ்பெஷல் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.. ஆனால் மனிதர்களுக்கிடையில் இது வேறு, வேறாகத்தான் நிச்சயம் இருக்கும்.. அப்படித்தான் எனக்கும் யாரோ, யாரையாவது பார்த்து மெல்லிய புன்னகையை வீசினால்கூட கடந்த இரண்டு நாட்களாக மாலா ஜெயராம் என்ற இந்த பேஸ்புக் தளத்தின் தோழியையே ஞாபகத்திற்கு கொண்டு வருகிறது.
இவருக்கு மரணமா என்று கேள்விப்பட்ட அனைத்து நண்பர்களையும் ஒரு சேரத் தாக்கியது அந்தக் கேள்வி.. நட்பு வட்டத்தில் சுலபத்தில் மறக்க முடியாத அளவுக்கு இருந்தது அவரது ஈர்ப்பு.. இதற்கு முழு முதற் காரணம் அவரது இயல்பான சிரிப்பு.. எப்போதும் சிரித்த முகம்.. இது ஒன்றே மலர் வளையங்களோடு முதல் முறையாக மாலாவை பார்க்க வந்திருந்த நண்பர்களை திகைக்க வைத்துவிட்டது.
பேஸ்புக் இணையத் தளத்தில் நான் உள்ளே நுழைந்ததில் இருந்தே மாலா ஜெயராம் என்கிற பெயரை பலருடைய முகப்புப் பக்கத்தில் பார்த்திருக்கிறேன். பார்த்தவுடன் ஈர்த்தமைக்குக் காரணம், புகைப்படத்தில் தென்பட்ட அவரது அளவான புன்னகை..
எந்தப் பக்கம் திரும்பினாலும் நட்பு வட்டத்தில் அவரது பெயர் இருக்கவே ஏதோ ஒரு நாளில் நானும் அவருடைய பேஸ்புக் தளத்தில் நண்பராக இணைந்தேன்.
இரண்டு நாட்கள் கழித்து மாலாவும், அவரது தோழிகளான சுஜாதா தாராகேசன், லலிதா அபிமன்யூ மூவரும் இணைந்து சென்னைகாகா(chennaigaga.com) என்ற பெயரில் ஒரு கண்காட்சி நடத்துவதாக பேஸ்புக்கில் படித்தேன்..
இது பற்றி அன்றைக்குத் தற்செயலாக பேஸ்புக்கில் ஆன்லைனில் இருந்தவரிடம் நான் கேட்டபோது “நீங்களும் வாங்களேன்” என்று அழைப்பு விடுத்தார். என்னால் முதல் நாள் செல்ல முடியவில்லை. கனிமொழி இந்தக் கண்காட்சியைத் திறந்து வைத்தார். மறுநாள்தான் நான் சென்றிருந்தேன்.
பேச்சைத் துவக்கியதில் இருந்தே சிரிப்புதான். பேஸ்புக் லின்க் மூலமாக எனது வலைத்தளத்தைப் படித்திருக்கிறார் போலும். “நீங்கதான் அந்த சரவணனா..?” ஒரு சிரிப்பு.. “போட்டாவுல ஒரு மாதிரி இருக்கீங்க. நேர்ல ஒரு மாதிரியாயிருக்கீங்க..?” - ஒரு சிரிப்பு.. “எப்படி ஆபீஸ் வேலையும் பார்த்திட்டு இவ்வளவையும் பொறுமையா டைப் பண்றீங்க..?” - ஒரு சிரிப்பு.. “நிறைய டைப் செஞ்சிருக்கீங்களே..? டைப் பண்ண ஆள் வைச்சிருக்கீங்களா..?” - ஒரு சிரிப்பு.. இப்படி பேச்சுக்கு பேச்சு சிரித்தபடியே இருக்க.. என்னுடைய குறை காதுக்கு அது பெரிய குறையாகவே போனது..
“மேடம்.. நீங்க மொத்தமா சிரிச்சு முடிங்க.. அப்புறமா நாம பேசலாம்..” என்றேன். “ஐயோ.. இல்ல.. இல்ல. நான் எப்பவுமே இப்படித்தான் பேசுவேன்..” என்றார் மீண்டும் அதே புன்னகையோடு.
கொஞ்சம் தமிழும், நிறைய ஆங்கிலமும் சரளமாக வந்து விழுந்து கொண்டிருந்த அவரது பேச்சைவிட அவரது ரசனையான புன்னகையே பிரதானமாக இருக்க.. கிடைத்த 10 நிமிட இடைவெளியில் கொஞ்சம் வலையுலக வரலாற்றையும், திரட்டிகள் பற்றியும், நமது பதிவர்கள் பற்றியும் சொன்னேன். அத்தனைக்கும் அவருடைய ஆமோதிப்பு அவரது புன்னகைதான்.
அன்றைக்கு நிறைய கூட்டம் இருந்ததால் தொடர்ந்து பேச முடியாமல் போய் “திரும்பவும் சந்திப்போம் மேடம்” என்று சொல்லி வந்துவிட்டேன்.
சில நாட்கள் கழித்து “hi liked your tamil blog” என்று சின்னதாக ஒரு மெஸேஜை அனுப்பியிருந்தார். இது எனக்கே அதிர்ச்சிதான்.. நம்ம பிளாக்கையெல்லாம் காஸ்மாபாலிட்டன் வட்டாரத்தில் இருக்கும் இவர் எங்கே படிக்கப் போகிறார் என்று நினைத்திருந்த நேரத்தில் அவரது இந்த மெஸேஜ் என்னைத் திகைக்க வைத்தது..
பதிலுக்கு நானும் நன்றி தெரிவித்துவிட்டு நமது வலையுலகத் திரட்டிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு “இங்கு சென்றால் எனது வலைத்தளங்களைப் போலவே இன்னும் நிறைய தளங்கள் இருக்கின்றன. நிறைய படிக்கலாம்” என்று குறிப்பிட்டு மெஸேஜ் செய்தேன். இதற்கும் நன்றி தெரிவித்து உடனுக்குடன் பதில் வந்தது..
அதன் பின்பு தினம்தோறும் இரவு நேரத்தில் பேஸ்புக்கில் ஆன்லைனில் வருவார். அவர் அழைக்காவிட்டாலும் நம்ம குசும்பு, நம்மளை விட்டுப் போகுமா..?
நான் ஏதாவது புதிய பதிவு எழுதினாலும் அதனுடைய லின்க்கை அவருக்கு அனுப்புவேன். “படிக்கிறேன்” என்று சிம்பிளாக பதில் வரும்.. அன்றைக்கோ அல்லது அடுத்த நாளோ “படித்தேன்” என்று மட்டும் சொல்லி மறக்காமல் சிரிப்பானை போட்டிருப்பார்..
நானும் விடாமல் வேறு ஏதாவது சொல்வார் என்று எதிர்பார்த்து பதிவுகளின் லின்க்கை அனுப்பிக் கொண்டேயிருந்தேன். சில நாட்கள் கழித்து ஒரு நாள் ஆன்லைனில் வந்த உடனேயே “பார்த்துட்டேன்” என்று என்னை முந்திக் கொண்டு ஒரு பின்னூட்டத்தை போட்டு என்னைச் சிரிக்க வைத்து விட்டார்.
அன்றைக்கு இன்னும் கொஞ்ச நேரம் சாட்டிங்கில் பேசினோம். அவருக்கு ஆர்ட், மற்றும் சுற்றுலா, டிஸைனிங், ஹாலிவுட் சினிமாக்கள் மட்டுமே ஆர்வம் போலும்.. “இது பற்றிய பிளாக்குகள் இருந்தால் கொடுங்கள். படிக்கிறேன்” என்றார்.
எனக்குச் சுற்றுலா என்றவுடன் துளசி டீச்சரைத் தவிர வேறு யாரையும் நினைவுக்கு வரவில்லை. ஆகவே துளசி டீச்சரின் தளத்தின் முகவரியைக் கொடுத்தேன்.. ஹாலிவுட் சினிமாக்களுக்கு நமது பட்டர்பிளை சூர்யா, ஹாலிவுட் பாலாவின் லின்க்கை கொடுத்தேன். “படிக்கிறேன்” என்றார்.
இன்னும் இரண்டு நாட்கள் கழித்து “உங்க பிளாக்கை படிச்சு முடிக்க முடியலை.. ரொம்ப நீளம்..” என்று ஆங்கிலத்தில் ஒரு மெஸேஜ் அடித்துவிட்டு மறக்காமல் சிரிப்பானை போட்டிருந்தார்.. வழக்கம்போல், “அதுதாங்க என் ஸ்டைல்..” என்றேன்.. இதுக்கும் ஒரு சிரிப்பானை போட்டுவிட்டுப் போனார்.
இன்னும் சில நாட்கள் கழித்து.. “கொடுத்த லின்க்கையெல்லாம் படிச்சீங்களா?” என்று ஒரு மெஸேஜை தட்டிவிட்டேன். “நேரம் இல்லை.. நான் பெரும்பாலும் மொபைல்லயே நெட் யூஸ் பண்றதால முழுசையும் படிக்க முடியறதில்லை” என்று குறைபட்டுக் கொண்டார்..
அப்படியும் நான் விடாமல் “கொஞ்சம் அரசியல் தளங்களையும் பாருங்க..” என்று சொல்லி வினவு, மக்கள் சட்டம் சுந்தர்ராஜன், வால்பையன், டோண்டு இவர்களின் முகவரியைக் கொடுத்தேன். “ஐயோ பாலிடிக்ஸா..? ஐ கேட் பாலிடிக்ஸ்.. எனக்குச் சுத்தமா தெரியாது..” என்று அவசரமாகச் சொல்லிவிட்டு மறக்காமல் சிரிப்பானை போட்டிருந்தார்.
அவ்வப்போது பேஸ்புக்கில் சந்திக்கின்ற நேரங்களில் அவருடைய மெஸேஜ்கள் சிரிப்பான்கள் இல்லாமல் வந்ததில்லை.. ஒரு நாளின்போது, “நீங்க ரொம்பக் கஷ்டப்படாதீங்க. நான் பேஸ்புக்ல நீங்க கொடுக்குற லின்க் மூலமா உங்க பிளாக்கை தொடர்ந்து வாசிச்சுக்கிட்டேதான் இருக்கேன்..” என்று ஆங்கிலத்தில் சொல்லியிருந்தார். சரி.. நமக்கு இப்படியும் ஒரு வாசகர் கிடைத்திருக்கிறாரே என்று நினைத்து அல்ப சந்தோஷத்தில் திளைத்து மூழ்கியிருந்தேன்.
நேற்று காலை சக பதிவர் தேனம்மை லட்சுமணன் பேஸ்புக்கில் போட்டிருந்த ஒரு செய்தியின் மூலம்தான் அந்த புன்னகை தாரகையின் மரணச் செய்தி கிடைத்தது.. நம்ப முடியாத அதிர்ச்சி.. அவருக்கா இது..? ஏன்.. எதற்கு என்று ஒரு மணி நேரமாக திகைப்பில் மூழ்கிப் போனேன்..
அவர் ‘தினத்தந்தி' பத்திரிகை அதிபர் சிவந்தி ஆதித்தனின் மூத்த மகள் என்கிற செய்திகூட நேற்று கலைஞர் செய்திகள் சேனலில் ஓடிக் கொண்டிருந்த ஸ்கிரால் நியூஸை பார்த்துதான் தெரிந்து கொண்டேன்.. இது இன்னுமொரு அதிர்ச்சி..
அவருடைய பேஸ்புக் தளத்திலும், அவருடைய நட்பு வட்டாரத்திலும் அவருடைய பேக்கிரவுண்டு பற்றி ஒரு சின்ன க்ளூகூட இல்லாததுதான் மிகப் பெரிய விஷயம். அவருக்கு வயது 47 என்பதுகூட பத்திரிகைகளில் பார்த்து நம்ப முடியாததுதான்.
எப்போது வேண்டுமானாலும் மரணம் வரலாம்தான். ஆனால் வந்த பின்புதான் தாங்க முடியவில்லை. இரண்டு நாட்கள் ஒரு வேலையும் செய்ய விடாமல் தடுக்கிறது ஏன்.. ஏன்.. ஏன்..? என்ற கேள்வி.
டச்சஸ் கிளப் என்கிற பெயரில் இயங்கும் பெண்களுக்கான டூர்ஸ் கிளப்பில் மிக முக்கிய உறுப்பினரான மாலா ஜெயராம் கிட்டத்தட்ட அனைத்து டூர்களுக்கும் சென்று வந்திருக்கிறார். சமீபத்தில் தென்ஆப்ரிக்கா, நியூஸிலாந்து, என்று போய்விட்டு வந்து ரஷ்யாவுக்கு 24-ம் தேதியன்றுதான் கிளம்பியிருக்கிறார்கள். ஆகஸ்ட் 2 அன்று திரும்புவதாகத் திட்டம்..
ரஷ்யாவில் உலக அதிசயமாக இந்தாண்டு வெயில் கொளுத்தியெடுப்பதாக பத்திரிகைகளில் தொடர்ச்சியாக செய்தி வந்து கொண்டிருக்கிறது. மாஸ்கோவில் தங்கியிருந்த மாலாவுக்கு அந்த வெயில் சட்டென ஒத்துக் கொள்ளாத நிலையில் உடல் நிலை கெட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். கடும் வெப்பம் அவரது நுரையீரலையும் பாதித்ததினால், நள்ளிரவு 2 மணிக்கு மருத்துவமனையில் இறந்திருக்கிறார்.
Off to Russia என்ற ஒரேயொரு வாக்கியத்தை மட்டுமே பேஸ்புக்கில் தன்னுடைய முகப்புத்தகத்தில் கடைசியாக பதிவு செய்திருக்கும் மாலா, இப்போது ரஷ்யாவையும் தாண்டி பயணித்துவிட்டார்..
ஏதோ ஒரு இனம் புரியாத ஈர்ப்பு அவரது புன்னகையின் மீதும், அவரது அன்பான பேச்சின் மீதும்.. நம்மையெல்லாம் ஒரு மனிதராக நினைத்து கூப்பிடுவதே பெரிய விஷயம் என்று நினைக்கின்றபோது நாலு வார்த்தைகள் பேசியதும், எனது வலைத்தளத்திற்கு தான் ஒரு ரெகுலர் வாசகர் என்று சொன்னதும் என்னைப் பெருமைப்படுத்திய விஷயம்..
அது இத்தனை சீக்கிரமாகவா உடைய வேண்டும்..?
மரணத்திற்கு மட்டுமே ஜாதி, இன, மொழி, வர்க்க ஏற்றத்தாழ்வுகள் தேவையில்லை.. யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் மரணத்தைத் தருவதில் காலமோ அல்லது முருகனோ தவறுவதேயில்லை.. ஆனாலும் நாம் அனைவருமே அதனால் பாதிக்கப்பட்டுத்தான் இருக்கிறோம்..
கோமகன் வீடாக இருந்தாலென்ன? குடிசை வீடாக இருந்தால் என்ன? தாயின் மரணத்திற்கு மகள் சிந்தும் கண்ணீரும், மகனின் துயரத்திற்காக தந்தை சிந்தும் கண்ணீரும் ஒன்று போலத்தான்.. வித்தியாசமே இல்லை.. இன்று மதியம் 2 மணிக்கு மாலா ஜெயராமின் வீட்டிலும் நான் இதைத்தான் பார்த்தேன்.
அண்ணா சாலையின் தேவர் சிலை இருந்த பகுதியில் இருந்து அவருடைய வீடு வரையிலும் இருந்த போஸ்டர்களில் மாலா தென்பட்டார். அதே புன்னகையோடு..
கொண்டாட்டங்களுக்கு மட்டுமே வர்க்கப் பேதங்கள் உண்டு.. ஆனால் துக்கங்களுக்கு அது இல்லை.. பெற்றோர் தாங்கள் இருக்க பிள்ளைகள் மரணிப்பது மிகப் பெரும் கொடுமை என்பார்கள். மாலாவின் தாயார், தன் தலையில் அடித்துக் கொண்டே அவரது உடலைச் சுற்றி வந்தபோது ஒரு கணம் சட்டென என் கண்கள் கலங்கிப் போய்விட்டன. மாலாவின் டீன் ஏஜ் மகளும், மாலாவின் உடலை தூக்கிச் சென்ற பின்பும் தனது அப்பாவை சுடுகாட்டுக்கு செல்லவிடாமல் தடுத்து அவரை இறுக்கக் கட்டியணைத்துக் கொண்டு நின்றதை எப்படித்தான் வெளிப்படுத்துவது..?
எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இந்த வயதில் எனக்கு இருக்கிறது என்றாலும், சில சமயங்களில் அதனை உடைத்துப் போட்டு வேடிக்கை பார்க்கிறான் முருகன்.
மரணங்கள் இயல்புதானே என்று நமக்கு நாமே என்னதான் சமாதானம் செய்து கொண்டாலும், எப்படியாவது எதையாவது சொல்லி வெளிப்படுத்தினால்தான் இப்போது எனது மனம் சாந்தியாகும் என்ற நிலை..
நான் இன்னும் பல வருடங்கள் இந்த வலைத்தளத்தில் எழுதலாம்.. புதிய, புதிய புனைப் பெயர்கள் கிடைக்கலாம்.. இன்னும் பல நட்பு வட்டங்கள் உருவாகலாம்.. பாலோயர்ஸ் கிடைக்கலாம்.. வாசிப்பவர்கள் பழக்கமாகலாம்.. ஹிட்ஸ்கள் கிடைக்கலாம்..
ஆனால் அந்தப் புன்னகை..?
இணைப்பு : http://www.dailythanthi.com/article.asp?NewsID=584031&disdate=7/31/2010
|
Tweet |