நன்றி..! நன்றி..!! நன்றி..!!!

25-12-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


நன்றி.. நன்றி.. நன்றி..!!!

இப்படி எத்தனையோ நன்றிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்..

ஒரு மணி நேரம் எனது வலைத்தளம் திறக்கப்படவில்லையென்றவுடன் என்னுடைய கவலையைவிடவும் சக பதிவுலக நண்பர்கள் பலரும் தங்களுக்கேற்பட்ட துன்பம்போல பதறியடித்து விசாரித்த பண்பு இழந்ததை மீட்டே தீர வேண்டும் என்கிற வெறியையே எனக்குள் ஏற்படுத்தியது..

எனது வலைத்தளம் ஏதோ ஒரு மால்வேர் வைரஸை பரப்புகிறது என்றார்கள். முடக்கினார்கள். மிகச் சரியாக 25 நாட்கள் கழித்து இன்றைக்குத்தான் எனது தளம் எனக்கு மீள கிடைத்திருக்கிறது.. மிக்க மகிழ்ச்சி..

பதிவுலக நண்பர்கள்.. பார்வையாளர்கள்.. ரசிகர்கள்.. என்று அத்தனை தரப்பிலுமிருந்தும் விசாரணைகளையும், ஆறுதல்களையும், ஆலோசனைகளையும் பெற்று அத்தனையிலும் மனம் நெகிழ்ந்து போயிருக்கிறேன்..!

பின்னூட்டமிடாவிட்டாலும் பின் தொடர்பவர்கள் இத்தனை பேரா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு முன்பின் அறிந்திராதவர்களெல்லாம் தொலைபேசியில் அழைத்து விசாரித்தபோது நாம் கவனிக்கப்பட்டுதான் வந்திருக்கிறோம் என்று நினைத்து சோர்வடைந்த மனம் அதிலிருந்து மீண்டது.

மீண்டு வருவேன் என்ற நம்பிக்கையுடன் நான் இருந்தாலும், மீள வைப்போம் என்ற உறுதியுடன் இருந்த வலையுலக நண்பர்கள் அத்தனை பேருக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள்..!

சோதனையைக் கொடுத்தாலும் இறுதியில் நல்லது செய்வான் என்கிற எனது நம்பிக்கையை பொய்யாக்காமல் தனது கடமையைச் செய்திருக்கும் என் அப்பன் முருகனுக்கும் ஒரு ஸ்பெஷல் நன்றி..!

மீண்டும் இது போன்ற சம்பவம் நிகழாதவண்ணம் தடுக்க சைட்பாரில் இருந்த பலவற்றையும் நீக்கிவிட்டேன்.. இப்போது இருப்பவைகள் பிளாக்கரின் உதவிகள்தான் என்பதால் வைரஸ்கள் அண்டாது என்று நினைக்கிறேன்..!

இருந்தபோதிலும் நண்பர்களே.. பதிவுகளை கொஞ்சம் இடைவெளிவிட்டுத் தொடரலாம் என்கிற ஒரு கட்டாயம்..

ஆகவே.. அவசரம் எதுவுமில்லாத சூழலில் ஒரு மாதம் கழித்து மீண்டும் வலையுலகில் சந்திப்போம்..

எழுதுவதில்தான் தற்காலிக நிறுத்தம்.. பின்னூட்டங்கள் இட அல்ல. அது வழமை போலவே செயல்படும்..!

பதிவுலக நெஞ்சங்களுக்கு மீண்டும் ஒரு நன்றியைக் கூறி தற்போதைக்கு விடைபெறுகிறேன்..!

உண்மையுடன்,

உண்மைத்தமிழன்

இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்-01-12-2009

01-12-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..
!

இட்லி

திருமண வாழ்த்துக்கள்

வலையுலகின் பழம்பெரும்புள்ளி ஒருவர் போனவாரத் திங்கட்கிழமையன்று சம்சார சங்கீதத்தில் தலையைக் கொடுத்து குடும்பஸ்தராகிவிட்டராம்.

அழைப்பு வரும் அளவுக்கு நான் ஒரு முக்கியப் புள்ளியாகவோ, அவருடைய நெருங்கிய நண்பராகவோ 'இப்போது' இல்லாத காரணத்தினால் விஷயத்தை கேள்விபடமட்டுமே முடிந்தது. அன்னார் பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ என் அப்பன் 'செந்திலாண்டவனை' வேண்டிக் கொள்கிறேன்..


பதிவுலக நண்பர் லவ்டேல்மேடிக்கு வாழ்த்து


திடீரென்று சென்ற மாதம் நண்பர் லவ்டேல்மேடி தொலைபேசியில் அழைத்துப் பேசினார். தன்னுடைய திருமணம் ஈரோட்டில் நடைபெறப் போகிறதென்றும், அவசியம் வர வேண்டும் என்றும் தன்னுடைய அழகான கொங்குத் தமிழில் கேட்டுக் கொண்டார். "முருகன் அனுமதித்தால் நிச்சயம் வருவேன்" என்று சொல்லியிருந்தேன். வழக்கம்போல வேலைகள் இருந்து தொலைந்ததால் செல்ல முடியவில்லை. நண்பர் லவ்டேல்மேடியும் அவர்தம் மனைவியும் எல்லாச் செல்வங்களையும் பெற்று நீடுழி வாழ என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்.


ஸ்பெஷல் தோசை

CEO-வின் வலையுலக வருகை


ஏதோ சினிமா தயாரிப்பாளர் என்றால் வெறும் பிஸினஸ் மட்டுமே செய்யத் தெரிந்தவர் என்றும், சிலர் அந்த பிஸினஸ்கூட தெரியாமல் காலைவிட்டு தவிப்பவர்கள் என்றும் கருத வாய்ப்புண்டு. ஆனால் இப்போதெல்லாம் தயாரிப்பாளர்களே மிகச் சிறந்த கிரியேட்டர்களாக இருக்கிறார்கள். என்ன.. அவர்களே அதைச் சொன்னால் ஒழிய மற்றவர்களுக்குத் தெரிவதில்லை.

அந்த வரிசையில் முதல் நபராக மோசர்பேர் நிறுவனத்தின் செயல் தலைவர் திரு.தனஞ்செயன் அவர்கள் சிறந்ததொரு கிரியேட்டிவ் இயக்குநராக செயல்பட்டு வருகிறார். மோசர்பேர் நிறுவனத்தில் கதை சொல்லச் சென்றவர்களைக் கேட்டால் 'கதை', 'கதை'யாகச் சொல்வார்கள் அங்கே கிடைத்த வரவேற்பை பற்றி.. "அப்படிப்பட்ட திறமைசாலி தனஞ்செயன்.." என்கிறார்கள்.

அதனால்தான் மோசர்பேரின் படைப்புகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் தரம் மிகுந்ததாக இருக்கிறது என்கிறார்கள். அந்த திறமைமிக்க தனஞ்செயன் ஸார், நமது வலையுலகிலும் கால் பதித்திருக்கிறார். ஆனால் ஆங்கிலத்தில். தமிழ் தட்டச்சு தெரியாததால் தற்போதைக்கு ஆங்கிலமே என்கிறார். அவருடைய வலைத்தள முகவரி இது www.dhananjayang.blogspot.com.

விரைவில் தமிழ் தட்டச்சு செய்து நமது ஜோதியில் கலக்க வரும்படி அவரை அன்போடு அழைக்கிறேன்.


சாதா தோசை

இயக்குநர்கள் சங்க குளறுபடிகள்

தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் வீதிகளில் பாலையும், தேனையும் ஆறாக ஓட வைப்போம் என்கிற நம்மூர் அரசியல்வியாதிகளின் வீராவேச அறிக்கைக்கு ஒப்பாக பலவித முழக்கங்களை வெளியிட்டு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பதவியில் அமர்ந்தனர் இன்றைய நிர்வாகிகள்.


உறுப்பினர் கட்டணத்தை ஐம்பதாயிரத்தில் இருந்து குறைக்கவே முடியாது என்பதோடு, "உறுப்பினர் அட்டை இருந்தால்தான் இனிமேல் திரைப்படங்களை இயக்கவே முடியும்" என்று பெப்ஸியின் உதவியோடு கிடுக்குப்பிடியும் போட்டது புதிய நிர்வாகம்.

அதற்குள் முத்துக்குமாரின் மரணம், தொடர்ந்து ஈழப் போராட்டம், தலைவர் பாரதிராஜாவின் அரசியல் ஈடுபாடுகள், ஊர், ஊராக தேர்தல் பிரச்சாரம் என்று இயக்குநர்கள் சங்கம் பிஸியாகி ஒரு வருடம் ஓடிப் போய்விட்டது.

பிரச்சார அறிமுகக் கூட்டத்திற்கு வந்த இயக்குநர்கள், பிரபலங்களில் சிலர் பிரச்சாரத்திற்கு வர மறுத்து எஸ்கேப்பானார்கள். காரணம் சீமானும், ஆர்.கே.செல்வமணியும் இணைந்து அ.தி.மு.க.வுக்கு ஓட்டு கேட்போம் என்கிற அளவுக்கு இறங்கியதுதான்.

இந்தக் களேபரத்தில் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை மறந்துவிட்டதாக துணை இயக்குநர்களுக்கு கோபமோ கோபம்..
கடந்த 8-ம் தேதி இயக்குநர்கள் சங்கப் பொதுக்குழுவில் நடந்த காரசார விவாதத்தில் இதுவே பெரும் நேரத்தைச் சாப்பிட்டுவிட.. மதியானம் சாப்பிட்ட பிரியாணி பலருக்கும் சுவைக்கவே இல்லை.

இதில் பரபரப்பான விஷயமாக வேல்முருகன் என்னும் நடிகர் கம் இயக்குநர், சங்கம் செய்யத் தவறிய கடமைகளை பட்டியல் போட்டு பிட் நோட்டீஸாக வந்திருந்த இயக்குநர்களுக்கு இஷ்யூ செய்தார்.முதலில் அதனைத் தடுத்துப் பார்த்த நிர்வாகிகள் பின்பு விட்டுவிட்டார்கள். ஆனால் கடைசியில் ஒரு வரி தீர்மானம் ஒன்றை நெருங்கிய தோழர் ஒருவரின் மூலம் கொண்டு வந்து கையைத் தூக்கிக் காண்பித்த ஆதரவுக் கரங்களின் மூலம் வேல்முருகனை சங்கத்தை விட்டு நீக்கியது சூப்பர் சினிமா ஆண்ட்டி கிளைமாக்ஸாகிவிட்டது.

இந்த விவகாரத்தினால் அரசியல் கட்சிகளின் பொதுக்குழுவைப் போல காட்சியளித்தது பிலிம் சேம்பர் வளாகம்..
பாவம் அந்த வேல்முருகன். இப்போது ஒரு திரைப்படத்தை இயக்கி வரும் வேளையில் அவருடைய கலையுலக வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைப்பதுபோல் ஆகிவிட மனிதர் நொந்து நூடூல்ஸாகிவிட்டார்.

சென்ற தேர்தலின்போது நாளைய இயக்குநர்கள் அணி என்கிற பெயரில் தனியாக அணி சேர்த்தவராயிற்றே.. சும்மா விடுவாரா வேலு..?
இப்போது துணை இயக்குநர்களிடத்தில் தன்னை நீக்கியது செல்லாது என்ற தனது கோரிக்கைக்கு ஆதரவு கையெழுத்து வாங்கியவர், தன்னிடம் விளக்கம் கேட்காமல் சங்கத்தை விட்டு நீக்கியது செல்லாது என்று நோட்டீஸ்விட்டு கோர்ட்டிற்கும் சென்றுவிட்டார்.

'வாய்தா வாங்கியே ஆளை வெறுப்பாக்கிவிடுவது' என்கிற கொள்கையில் நிர்வாகிகளும், 'ஜெயித்தே தீருவேன்' என்கிற வைராக்கியத்துடன் அப்பாவி இயக்குநரும் மல்லுக் கட்டத் துவங்கியிருக்கிறார்கள். இது தொடர்பாக இனிமேல் நிறைய வேடிக்கைகள் கிடைக்கும். காத்திருங்கள்.

ஊத்தப்பம்

எழுத்தாளர்கள் சங்கக் கூட்டத்தில் விவேக்கின் ஆப்செண்ட்


'ஆத்துல எதை போட்டாலும் அளந்து போடணும்'பாங்க.. 'வார்த்தைய விட்டுட்டு அப்புறமா திண்டாடக்கூடாது'ன்னு அதுக்கும், இதுக்கும் முடிச்சுப் போச்சு பேசுறாங்க இப்போ..

நடிகர் சங்கக் கூட்டத்துல வீராவேசமா பேசுன நகைச்சுவை நடிகர் விவேக்கின் நிலைமை இப்ப அப்படித்தான் இருக்கு. ஒரு காலத்துல அவரோட பேட்டியே இல்லாத பத்திரிகைகளே இல்லை என்கிற நிலைமை இருந்தது. ஆனா இப்போ அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பத்திரிகைக்காரங்க பின்லேடன் ரேஞ்சுக்கு அவரைத் தள்ளி வைச்சிருக்கிறதால மனுஷன் தவியாய் தவிக்கிறார்.

"விவேக் எந்தக் கூட்டத்துக்குப் போனாலும் அவர் பேச வரும்போது டான்னு எந்திரிச்சு வெளிய போயிரணும்.." என்பது பத்திரிகையாளர்களின் கூட்டுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு. அதை இப்பவரைக்கும் பாலோ பண்ணிக்கிட்டே வர்றாங்க..


சமீபத்துல அண்ணா பிறந்த தின நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி தமிழ்நாடு திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு கூட்டத்தை நடத்தினார்கள். நல்ல படிப்பாளி. பேச்சாளர் என்பதால் விவேக்கையும் அழைத்திருந்தார்கள். விவேக்கின் பெயரும் அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருந்தது.

இந்த விழாவுக்கு இரண்டு நாட்கள் முன்பாகத்தான் 'நல்வரவு' என்கிற படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் விவேக்கை பாய்காட் செய்து பத்திரிகையாளர்கள் காட்டிய எதிர்ப்பை நேருக்கு நேராக பார்த்து அதிர்ச்சியாகிப் போனார் எழுத்தாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளரும், பெப்ஸியின் தலைவருமான திரு.வி.சி.குகநாதன்.


"நம்ம நிகழ்ச்சிலேயும் இதே மாதிரி நடந்துட்டா அப்புறம் அண்ணா பேருக்கே அசிங்கமாயிருமே.." அப்படீன்னு யோசிச்சு அப்படி, இப்படின்னு நாசூக்கா பேசி விவேக்கை அந்த பங்ஷனுக்கு வராம பண்ணிட்டாங்க..

பாவம் விவேக்.. இந்த உலகத்துல உண்மை பேசினா எவன் நம்புறான்..? இவர் ஏன் அந்தக் கூட்டத்துல அவ்ளோ உண்மைகளை வெளிப்படையா பேசணும்.. தேவையா இவருக்கு..?


பொங்கல்

எஸ்.ஏ. ராஜ்குமார் இசைக்காகவே ஓடிய படம் எது..?


நூறாவது நாள் விழாவைப் போல ஆடம்பரமாகவும், கலகலப்பாகவும் நடந்தேறியது 'யார் கண்ணன்' இயக்கி வெளிவரவிருக்கும் 'பெளர்ணமி நாகம்' திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா.


பேசிய அனைவருமே படத்தின் நாயகி முமைத்கானை பாராட்டித் தள்ளிவிட்டார்கள். "ஷாட் ரெடி என்றதுமே துள்ளிக் குதித்து ஓடி வந்த முமைத்கானை பார்த்து எனக்கே ரொம்ப பொறாமையா இருந்துச்சு.." என்றார் நளினி.

"ரீரிக்கார்டிங்கில் படத்தை பார்த்தபோது முமைத்கானின் உழைப்பு எவ்வளவுன்னு தெரிஞ்சுச்சு.. முமைத்கானுக்கு எனது சல்யூட்" என்றார் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார்.

கூடவே, "நானும் இதுவரைக்கும் 50, 60 படத்துக்கு மியூஸிக் போட்டிருக்கேன். என் மியூஸிக்குக்காகவே ஓடுன படங்களே 20, 25 இருக்கும்.." என்றார்.
இது நான் இதுவரையில் கேள்விப்படாத விஷயம்.. இது உண்மையா? பொய்யா என்று தெரியவில்லை..

எந்தத் திரைப்படம் எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசைக்காகவே ஓடியது..?


ரவா தோசை

சின்னத்திரை பரிசளிப்பு சர்ச்சை


அரசு விருதுகள் என்றால்தான் சர்ச்சைகள் கிளம்பும். கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது தனியார் கொடுக்கும் விருதுகளும் பிரச்சினையைக் கிளப்பியிருக்கின்றன. பிரச்சினை வந்திருப்பது சின்னத்திரையின் அரசிக்கே என்பதுதான் இன்னும் கொஞ்சம் கூடுதலான விஷயம்.


சின்னத்திரை நடிகரான விஷ்வாவும், விவெல் என்கிற நிறுவனமும் இணைந்து ஒரு பரிசளிப்பு நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்தன. டெலிகாஸ்ட் செய்ய சன் டிவியை அணுக சன் டிவியும் ஒத்துக் கொண்டது. கூடவே தன்னுடைய வழக்கமான கிரிமினல்தனமான கண்டிஷன்களையும் போட்டது சன் டிவி.

தான் ஆரம்பித்த விளம்பர நிறுவனத்தை உயர்த்த வேண்டிய கட்டாயமிருப்பதால் விஷ்வா எல்லாவற்றுக்கும் ஒத்துக் கொண்டார்.
தான் மட்டும் தனியே சென்றால் ஏவிஎம்மில் நடிப்பவர்கள் மட்டுமே வருவார்கள் என்பதை உணர்ந்து சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பையும் ஒரு பார்ட்னராக சேர்த்துக் கொண்டார் விஷ்வா.

சன் டிவியின் உத்தரவின்பேரில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளாக பார்த்து அதில் ஒவ்வொரு சீரியலுக்கும் ஒரு விருது என்று தலப்பாகட்டு கட்டுவதைப் போல் அள்ளிக் கொடுத்தார்கள் விருதுகளை.


இதுவெல்லாம் தெரியாமல் விழாவுக்கு போய் பரிசை வாங்கிக் கொண்டு வீடு போய்ச் சேர்வதற்குள் ராதிகாவுக்கு போன் மேல் போன் வந்துவிட்டதாம்.

அவருடைய சீரியலில் தற்போது நடித்து வரும் கலைஞர்களிடம் ஏன் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று ராதிகா விசாரிக்க.. "நேரில் வந்தால்தான் பரிசு தருவோம்னு விஷ்வா சொன்னாரு. அது எங்களுக்கு பிடிக்கலை. அதுனால வரலை.." என்று நேர்மையாக அவர்கள் சொன்ன பதில் 'அரசி'யை கலக்கிவிட்டதாம்.


"இதென்ன கூத்து..? நேர்ல வந்தாத்தான் பரிசுன்னா அப்புறம் அதுக்கென்ன மரியாதை கிடக்கு.. கொண்டுபோய் குப்பைல போடு"ன்னு சொல்லி பரிசைத் திருப்பிக் கொடுத்தோட இல்லாம ஒரு அறிக்கையையும்விட்டு செம நோஸ்கட் கொடுத்திட்டாங்க ராதிகா.

இப்ப கடுப்புல இருக்குறது விஷ்வா மட்டுமில்ல.. சன் டிவியும் சேர்ந்துதான். எங்க பேரையும் சேர்த்து கெடுத்துட்டீங்களேன்னு விஷ்வா மேல சன் டிவியும் பாய.. ஒரே நேரத்தில் அத்தனை கடியையும் தாங்கிக்கிட்டு ஓடிக்கிட்டிருக்காரு அண்ணன்.


விஷ்வா தரப்பில் கேட்டால் வில்லங்கத்தை திருப்பிப் போட்டுச் சொல்கிறார்கள். "அரசி'க்கு மொத்தம் ஆறு விருதுகள் கேட்டிருந்தாங்க.. நாங்க சன் டிவியோட கலந்து பேசி ஒண்ணு கொடுக்கலாம்னு முடிவு செஞ்சு கொடுத்தோம். அந்தக் கோபத்துலதான் ராதிகா இப்ப மாத்தி பேசுறாங்க"ன்னு வெளிப்படையா சொல்ல முடியாம புலம்புறாங்க..

பெரியதிரைலதான் பிரச்சினைன்னு சின்னத்திரைக்கு வந்தா.. இங்கேயுமா..?

மசால் தோசை

ராதிகா சவுத்ரிபேஸ்புக்கில் தற்செயலாக பார்த்த இவரை அவர்தான் இவரா.. இவர்தான் அவரா என்று நானும் ஆரம்பத்தில் குழம்பித்தான் போனேன்.

கடைசியில் அவரே எழுதியிருப்பதை பார்த்துதான் இவர்தான் முன்னாள் நடிகை ராதிகா சவுத்ரி என்று தெரிந்தது.


அமெரிக்காவில் இருக்கிறாராம். கணவர், குழந்தையுடன் மிக மகிழ்ச்சியாக இல்லற வாழ்க்கையில் இருக்கும் இவர், பார்ட்டி பிரியர் போலிருக்கிறது.. பார்ட்டிகள் புகைப்படங்களை தனது பேஸ்புக்கில் அள்ளி வீசியிருக்கிறார்.

ஏதோ சமர்த்தா இருந்தா சந்தோஷம்தான்.


இடியாப்பம்

'முதல் முதல் முதல்வரை' -

கெய்ரோ விழாவில் பரிசு
சில திரைப்படங்கள் தியேட்டர்களுக்கு வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல் இருக்கும். ஆனால் விருதுகள் பட்டியலில் மட்டும் தவறாமல் இடம் பிடித்து விடும். ஏன்... எதற்கு.. எப்படி என்பதுதான் நமக்குத் தெரியாது. இப்படித்தான் இந்தத் தமிழ்த் திரைப்படமும் கெய்ரோவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் பரிசு பெற்றுள்ளது. ஆச்சரியம்தான்..

இதிலென்ன ஆச்சரியம்.. கோவாவில் நடைபெறும் சர்வேதேச திரைப்பட விழாவில் தமிழ்த் திரைப்படவுலகின் சார்பில் 'பசங்க', 'அச்சமுண்டு அச்சமுண்டு' ஆகிய இரண்டு திரைப்படங்கள் மட்டுமே கலந்து கொள்ள தேர்வாகியுள்ளன. மற்றவைகள்..?

இதுதான் இப்படியென்றால்.. திரைக்கு வருவதற்கு முன்பேயே 'ரெட்டைச்சுழி' திரைப்படமும், அட்டர் காப்பியான 'யோகி'யும் துபாய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகிவிட்டதாம்.

ம்ஹும்.. ஒண்ணும் புரியலை..


வெண்பொங்கல்

பெண்களின் கருத்து சுதந்திரம் எதுவரை..?


பெண்களுக்கான கருத்து சுதந்திரத்தின் அளவு என்ன என்பது நம்ம நாட்டைப் பொறுத்தவரையில் சொல்லவே முடியாது.. குஷ்பூ ஒரு முறை தெரியாத்தனமாக என்னோட ஒப்பீனீயன்னு ஒண்ணைச் சொல்லி அது பட்டபாடு சொல்லி மாளாது.. இன்னமும் அந்த சுதந்திரத்துக்கான பரிசை அனுபவிச்சுக்கிட்டுத்தான் இருக்காங்க..


இங்க பாருங்க.. பிரிட்டன் கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்காமின் மனைவி விக்டோரியா தனது குடும்ப வாழ்க்கையை அக்குவேறு, ஆணிவேறாக பத்திரிகைகளில் பிய்த்துத் தள்ளியிருக்கிறார்.

அவர் இரவு நேரத்தில் ஆடையில்லாமல்தான் படுக்கையில் தூங்குவாராம்.. தினம்தோறும் உறவு(தனது கணவருடன்தான்) வைத்துக் கொள்வாராம். அருகில் பெக்காம் இருந்தால் 'அது' இல்லாமல் ஒரு நாளும் இல்லையாம்.. "அப்போதுதான் கணவன், மனைவி பந்தம் நீடிக்கும்.. குறையே தெரியாது.. பிரச்சினைகளே உருவாகாது.." என்கிறார் இந்த அனுபவசாலி.


இது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் இது உலகம் முழுக்க இருக்கும் கணவன், மனைவிகளுக்கும் பொருந்துமே.. இது மாதிரி நம்ம நாட்டு பெண்கள்ல யாராவது ஒருத்தராவது பேட்டி கொடுக்க முடியுமா..? முடியாதுல்ல.. அப்புறமென்ன கருத்து சுதந்திரம்.. பெண் சுதந்திரம்னு கதை விட்டுட்டு.. அடப் போங்கப்பா..


சட்னி

அமீரின் மரியாதை பறந்து போச்சு..!


நான்காண்டுகளாக தலையில் தூக்கி வைத்திருந்த கிரீடத்தை ஒரே நாளில் இழந்திருக்கிறார் இயக்குநர் அமீர். 'ராம்' மற்றும் 'பருத்தி வீரன்' என்று அவருடைய படைப்புத் திறமையைப் பார்த்து உச்சுக் கொட்டிய தமிழ்த் திரையுலகம் இப்போது வேறுவிதமாக அமீரைப் பார்த்து சிரிக்கிறது.


நடிகர் சிவக்குமாரின் வீட்டு சமையல்கட்டுவரையிலும் சென்று வரும் அளவுக்கு பழக்கத்தில் இருந்த அமீர் 'பருத்திவீரன்' படத் தயாரிப்பு விஷயத்தில் அதன் தயாரிப்பாளரும் கார்த்தியின் மாமா முறையான ஞானவேலுவுக்கு சப்போர்ட் செய்து சிவக்குமாரின் குடும்பமே மாறிவிட்டதை பார்த்து அப்போதே கடுப்பாகத்தான் இருந்தார்.

போதாக்குறைக்கு 'பருத்தி வீரன்' வெளியீட்டின்போது தயாரிப்பாளர் செய்த உடும்புப்பிடியால் தேள் கொட்டினாலும் கத்த முடியாத அளவுக்கு சங்கடத்திற்கு ஆளானார் அமீர். அமீரின் இந்தக் கோபமே அவரை அரிதாரம் பூச வைத்தது என்கிறார்கள் திரையுலகப் பத்திரிகையாளர்கள்.

'யோகி' திரைப்படத் துவக்கத்தில் இருந்தே அப்படியொரு கதை தமிழ் சினிமாவில் இதுவரையில் சொல்லப்படவே இல்லை என்றும், இந்தக் கதையை சுப்ரமணியசிவா தன்னிடம் சொன்னபோது இது தனக்காகவே உருவாக்கப்பட்டதுபோல் தெரிந்தது என்றும் உணர்ச்சி பொங்க பேட்டியளித்திருந்தார்.


அமீர் மீதிருந்த மரியாதையினால் 'யோகி'யை பார்க்க ஆவலோடு காத்திருந்த திரையுலக் கூட்டம் முதற்பாதியிலேயே படம் சுட்ட கதை என்பதைப் புரிந்து கொண்டு இடைவேளையிலேயே 'செல்'லடித்து பேசித் தீர்த்துவிட்டார்கள்.

இவ்ளோ பெரிய இயக்குநர் காட்சிக்கு காட்சி காப்பியடிக்கும் முயற்சிக்கு எப்படி ஒத்துக் கொண்டார் என்பதுதான் இப்போதைக்கு தமிழ்ச் சினிமாவுலகில் ஹாட்டாபிக்.

படத்தின் இயக்குநரான சிவா 'கதை, இயக்கம்' என்று தன் பெயரையும், 'திரைக்கதை, வசனம், தயாரிப்பு' என்னுமிடத்தில் அமீர் தன் பெயரை போட்டுக் கொண்டதும்தான் நகைப்புக்குரியதாகிவிட்டது.

காப்பியடிக்கப்பட்ட மூலப்படமான ஸோட்ஸி 2004-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு 2005-ம் ஆண்டு சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருதையும் பெற்றிருந்ததினால் முக்கால்வாசி திரையுலகப் புள்ளிகள் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டார்கள்.

இப்போது நடந்திருக்கும் இந்தக் கூத்தில் தமிழ்த் திரையுலகம் பற்றிய வெளியாட்களின் எள்ளி நகையாடல்களுக்கு மிகவும் இடம் கொடுக்கப்பட்டுவிட்டது என்று வருத்தப்படுகிறார்கள் திரையுலகப் புள்ளிகள்.


படத்தின் திரையிடல் நாளன்று நடத்தப்பட்ட பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் அமீரிடம் இது பற்றி பத்திரிகையாளர்கள் மாறி, மாறி கேள்விகள் கேட்டபோது சற்றும் சளைக்காமல் அமீர் "அது காப்பி செய்யப்பட்டதல்ல.. அந்தப் படத்தை நானோ சிவாவோ இதுவரையில் பார்த்ததே இல்லை.. அது நிச்சயம் சிவாவின் கதைதான்.." என்று திரும்பித் திரும்பி 'ரீல்' வீட்டது பத்திரிகையாளர்களையும் கொஞ்சம் வருத்தப்பட வைத்துவிட்டதாம்.


"அமீரை மட்டுமே குத்தம் சொல்லாதீங்கப்பா. இன்னும் 'ரேணிகுண்டா', 'மாத்தி யோசி' படங்கள் வரட்டும்.. அப்புறமா மொத்தமா யார், யாரைத் திட்டுறதுன்னு முடிவு பண்ணி அர்ச்சனையை ஆரம்பிங்க"ன்னு வடபழனி பக்கம் 'டாக்' இருக்கு சாமியோவ்..

இத்தனை நாட்கள் கதைக்கருவைத்தான் காப்பியடித்தார்கள்.. இப்போது முக்கால் படத்தை காப்பியடித்திருக்கிறார்கள். இனி முழு படம் மட்டுமே பாக்கி.


சாம்பார்

இத்தாலி பிரதமரால் நம்ம மானம் போகுது..!


வயசானா என்ன..? ஆடக்கூடாதுன்னு சட்டம் இருக்கா..? பிரதமர்ன்னா என்ன இதுக்கெல்லாம் ஆசையிருக்காதா என்ன..? நம்ம ஊர்ல நடக்காத அதிசயமெல்லாம் அசலூர்ல அவுத்துப் போட்டு ஆடுதுங்க சாமிகளா..


இத்தாலில ஒரு பிரதமர் இருக்காரு. பேரு சிலிலியோ. வயசு 77தான். இந்த வயசுலேயும் மனுசன் கொஞ்சம் 'அப்படி', 'இப்படி' இருக்கத்தான் செய்றாரு. இந்த பிரதமரோட 'சேட்டை' தாங்காம இவரோட வொய்ப் இப்பத்தான் டைவர்ஸ் வாங்கிட்டுப் போயிட்டாங்களாம். அவ்ளோதான் 'அவுத்துவிட்ட காளை' மாதிரி அண்ணன் ஆயிட்டாரு.

இத்தாலில அதிகாரப்பூர்வமான பிரதமர் வீட்டுக்கே அழகிகளை கூட்டிட்டு வந்து கூத்தடிக்கிறாராம் மனுஷன். சமீபத்துல அடோரியா அப்படீன்ற 35 வயசு பொண்ணுகூட உல்லாசமா இருந்திருக்காரு.. இதுல என்ன பிரச்சினைன்னா பிரதமரோட கம்பெனி கொடுத்ததுக்கு பின்னால ஒரு டீலிங் இருந்துச்சாம். அந்த டீலிங்கை மேட்டர் முடிஞ்சவுடனேயே நம்ம 'குல' வழக்கப்படி பிரதமர் மறந்துட்டாராம்.அடோரியா அதை ஞாபகப்படுத்தி கேட்டதுக்கு அவரை மிரட்டி, அடிக்காத குறையா திட்டி அனுப்பிட்டாராம் பிரதமர். அதுக்கு முன்னாடி மறக்காம அடோரியாவோட உள்ளாடை மொதக்கொண்டு அல்லாத்தையும் உருவிட்டுத்தான் வெளிலவிட்டாராம் நம்மாளு..

ரெண்டு புல் நைட்டுக்கும் கொடுக்க வேண்டிய காசு 2000 டாலர்தானாம்.. அதையே கொடுக்க முடியலைன்னா.. என்னாத்துக்கு..? ச்சே.. ச்சே.. ச்சே.. எந்த ஊர்ல இருந்தாலும் நம்ம மானத்தை வாங்கிப் புடுறாங்கப்பா.. காசு கொடுக்க வக்கில்லைன்னா எதுக்கு இந்த ஆட்டம் ஆடணும்..? நம்ம மானம் போகுதுல்ல.. என்ன நான் சொல்றது..?


வடை

பத்து பத்து

சில திரைப்படங்களை அவற்றின் தரம் கருதி பார்க்காமல் விட்டுத் தொலைத்திருக்கலாம். ஆனால் அவற்றில்கூட நல்ல நடிப்பும், இயக்கமும் நமக்குத் தெரியாமலேயே இருந்திருக்கும்..'பத்து பத்து' என்கின்ற திரைப்படத்தை 'மேற்படி மேட்டர்' படம் என்றே நான் இத்தனை நாட்களாக கருதி வந்தேன். சமீபத்தில்தான் ஜீ தமிழ்த் தொலைக்காட்சியில் அந்தப் படத்தினை பார்த்தபோது 'ஆ' என்று வாய் பிளக்க வேண்டியதாகிவிட்டது.


பல இடங்களில் 'பலே' போட வைத்திருக்கிறார்கள். சில இடங்களில் கத்திரி போட்டிருக்கலாம் என்று ஓரக்கண்ணில் பார்க்க வைத்திருக்கிறார்கள். சிற்சில இடங்களில் இயக்கத்தில் நல்ல ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.

சோனாவும், வயசுப் பையனும் கட்டித் தழுவுவதைப் பார்த்துவிடும் கணவனான தலைவாசல் விஜய் அந்த இடத்தில் காட்டுகின்ற எக்ஸ்பிரஷன்.. சிம்ப்ளி சூப்பர்ப்.. அட்டகாசம்.. மனுஷன் ஜமாய்த்திருக்கிறார். கூடவே சோனா உன்னால என்ன செய்ய முடியும் என்ற நினைப்பில் காட்டும் முகபாவனை.. சூப்பர் இயக்கம்..


படம் முழுக்கவே ஒருவித விறுவிறுப்போடுதான் போனது. அதிலும் அந்த சடாமுடி திருடன் இன்ஸ்பெக்டரான வாசுவிற்கு தண்ணி காட்டுகிற சீனெல்லாம் கலக்கல்.. ம்ஹும்.. இனிமே இது மாதிரியான படங்களையும் விட்டுறக்கூடாதுன்னு நினைக்க வைச்சிருச்சு இந்தப் படம்.


கேசரி

படித்ததில் பிடித்தது


'பட்டிக்காடா பட்டணமா' என்கிற மற்றுமொரு மாதவன் படத்தில் இதே சிவாஜி-ஜெயலலிதா ஜோடி நடித்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் காலத்தில் பெரிய ஹிட் பாடலாகக் கருதப்பட்ட 'கேட்டுக்கோடி உறுமிமேளம்' என்கிற பாடல் இந்தப் படத்தில்தான் இடம் பெற்றது.

இந்தப் பாடலைப் பற்றி ஒரு சுவையான தகவல் உண்டு. பாடலுக்கான கம்போஸிங் ஏவி.எம். ஸ்டூடியோவில் நடந்து கொண்டிருந்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதினார். "கேட்டுக்கோடு உறுமிமேளம்" என்கிற பல்லவியைத் தந்துவிட்டு கவிஞர் அடுத்த வரியை யோசித்துக் கொண்டிருந்தார்.

மாதவன் படப்பிடிப்புக்காக செட்டுக்கு போயிருந்தார். பாடலின் முதல் வரியை மாதவன் படப்பிடிப்பில் இருந்த ஜெயலலிதா அவர்களிடம்கூற உடனே அவர் "போட்டுக்கோடி கோ கோ தாளம்" என்று அடுத்த வரியைச் சொன்னார்.


உடனே மாதவன் ஓடி வந்து கண்ணதாசன், எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரிடம் செல்வி ஜெயலலிதா கூறிய வரிகளை கூறியுள்ளார். கவிஞர் கண்ணதாசனுக்கு ஈகோ பிரச்சனை என்றுமே இருந்ததில்லை. ஆகவே நன்றாக இருக்கிறது என்று கூறி உடனே அதனை ஏற்றுக் கொண்டுவிட்டார்.

அது மட்டுமன்றி உடனே பாடலின் மற்றப் பகுதிகளையும் மளமளவென்று முடித்துக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார் கவிஞர். படம் வெளியானதும் இந்தப் பாட்டு பெரிய ஹிட் ஆனது அனைவரும் அறிந்த கதை.


(தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் வரலாறு - இரண்டாம் பாகம் என்கிற நூலில் இயக்குநர் முக்தா சீனிவாசன் எழுதியிருப்பது.)


பார்த்ததில் பிடித்தது