அதிதி - சினிமா விமர்சனம்

28-06-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


2007-ம் வருடம் ‘Butterfly on a Wheel’ என்ற பெயரில் இங்கிலாந்து-கனடா கூட்டுத் தயாரிப்பில் ஒரு படம் வெளியானது. அப்போதைய ஜேம்ஸ்பாண்ட் பியர்ஸ் பிரான்ஸன், அந்தப் படத்தில் ஒரு வில்லத்தனமான கேரக்டரை செய்திருந்தார். படத்தின் கதையும் மிக மிக வித்தியாசமானதுதான்..
இதே கதையை அனுமதி பெற்றார்களா இல்லையா என்பது இப்போதுவரையிலும் தெரியாது.. ஆனால் 2010-ம் ஆண்டு ‘காக்டெயில்’ என்ற பெயரில் மலையாளத்தில் தயாரித்து வெளியிட்டார்கள்.  கதைக்கான இடத்தில் ஒரிஜினல் கதாசிரியரான William momssey-யில் பெயர் இடம் பெற்றிருந்தது. அருண்குமார் இயக்கியிருந்தார். ஜெயசூர்யா, அனூப் மேனன், சம்விருதா சுனில், பகத் பாஸில், இன்னசென்ட், மம்முகோயா மற்றும் பலர் நடித்திருந்தனர். படம் சூப்பர் டூப்பர் ஹிட்..
இப்போது 2014-ல் இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை மலையாளத் தயாரிப்பாளர்களிடமிருந்து பெற்று தமிழாக்கம் செய்திருக்கிறார்கள் ‘அதிதி’ என்ற பெயரில்.. ‘அழகிய தமிழ் மகன்’ படத்தின் இயக்குநரும், சிறந்த வசனகர்த்தாவுமான இயக்குநர் பரதன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.


அழகான, அமைதியான இல்லற வாழ்க்கையில் இருக்கும் ந்ந்தா மற்றும் அன்ன்யாவின் வாழ்க்கையில் நிகேஷ்ராம் மின்னலாய் நுழைகிறார். கையில் துப்பாக்கி. அவருடைய செல்போனின் மறுமுனையில் தம்பதிகளின் ஒரே மகளின் உயிர். இனி நிகேஷ் சொல்வதைத்தான் இந்த்த் தம்பதிகள் கேட்க வேண்டும்.. மறுத்தால் மகளின் உயிர் போய்விடும்.. தம்பதிகள் மகள் மீது உயிரையே வைத்திருக்கிறார்கள். நிகேஷ் கேட்பதையெல்லாம் செய்கிறார்கள்.. சொல்கிறார்கள்.. தருகிறார்கள். இறுதியில் என்னாகிறது என்பதுதான் படம்..!
காக்டெயிலாக வந்தபோதே கேரளாவில் பலத்த அதிர்ச்சியை உண்டாக்கியது.. கணவன் மீது அதிருப்தியில் இருக்கும் ஒரு மனைவி இப்படியெல்லாம் செய்ய நினைப்பாளா என்கிற பட்டிமன்றம் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் நடந்தது.. மோசமான மனநிலையுடன் நடத்தப்படும் எக்ஸ்பிரிமெண்ட்டாக மட்டுமே இந்தக் கதையை எடுத்துக் கொள்ள முடியும்..! இந்தக் கதையை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது.. ஒருவகையில் முட்டாள்தனமானதும்கூட..!
கணவனைத் திருத்த எத்தனையோ நேர்மையான வழிகள் இருக்க.. இப்படியொரு குறுக்கு வழியை.. அதிலும் வாழ்க்கையில் ரிஸ்க் வைத்து விளையாடும் இந்த்த் திரைக்கதை விளையாட்டு சினிமாவுக்காகவே உருவாக்கப்பட்டது என்பதை மட்டுமே ஒத்துக் கொள்ள வேண்டும்..!
மலையாள ஜெயசூர்யா கேரக்டரில் தமிழில் நிகேஷ்ராம். அடக்கமான, ஆக்ரோஷமான, அழுத்தமான கேரக்டரை பதிவு செய்திருக்கிறார். படத்தின் பிஸினஸுக்காக வேறு யாரையாவது நடிக்க வைத்திருக்கலாமே என்றால்கூட யோசிக்க முடியவில்லை. அப்படியொரு அட்டாச்மெண்ட்டில் இருக்கிறார் அந்தக் கதாபாத்திரத்தில்..!
லெப்ட்ல திருப்புடா என்று ஆங்காரமாக ஒலித்த குரலுடன் கிளைமாக்ஸில் ந்ந்தாவின் உள் மனசு விகாரத்தை போட்டுடைக்கும் அந்த உடைஞ்சு போன மனசையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பாவம் என்பது போல் தோன்றும்.. வெல்டன் இயக்குநர்..!
நந்தா பல படங்களில் நடித்தும் இன்றைக்கும் ஒரு லெவலுக்கு வர முடியாமல் தவிக்கும் நடிகர்.. திரைக்கதைதான் இந்தப் படத்தில் பிரதானம் என்பதாலும், திரைக்கதை ஓட்டைகளை கேரக்டர்களின் நடிப்பினால் பில்லப் செய்ய முயற்சித்திருப்பதாலும் ஆங்காங்கே விழும் தொய்வுகளினால் இவரையும் ரசிக்க முடியவில்லை. ஆனால் முயன்றிருக்கிறார்.
அனன்யா. வாயாடியாக இருந்தவர் இதில் கொஞ்சம் அடக்கமாக நடித்திருக்கிறார். கூடுதலான நடிப்பாக கிளைமாக்ஸில் மட்டுமே வார்த்தைகளை வீசியிருக்கிறார். இதே மாதிரி நான் தப்பு செஞ்சிட்டு வந்தா நீ என்ன செஞ்சிருப்ப என்ற கேள்விக்கு ந்ந்தாவின் பதில் தெரிந்த்துதான்.. இதே கேள்விதான் மறுபடியும் படத்தின் கிளைமாக்ஸிலும் ரேவதி, நிழல்கள் ரவியிடம் கேட்பார்..!
மலையாளத்தில் இன்னசென்ட் செய்த கேரக்டரில் தமிழில் தம்பி ராமையா… தவியாய் தவிக்க வைத்திருக்கிறார். காரில் செல்லும்போது நிகேஷ் பற்றி பிட்டு பிட்டு வைப்பதெல்லாம் திரைக்கதைக்கு உதவிய கதை..! ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பாட்டிலை வீறாப்பாக வாங்கிவிட்டு பின்பு திருப்பிக் கொடுக்க அல்லல்லபட்டு.. நொந்து நூடுல்ஸாகி ஊர் திரும்பும் அந்த கேரக்டரை செவ்வனே செய்திருக்கிறார்.. பாட்டில் பிரியர்கள் நிச்சயம் இந்தக் காமெடியை ரசிப்பார்கள்..
ஆங்கிலத்தில் இல்லாத ஒரு திரைக்கதை தமிழில் உண்டு. கிளைமாக்ஸில் நிகேஷ்ராமின் தற்போதைய நிலைமையைச் சொல்லவும் ஒரு கதையைத் திணித்திருக்கிறார்கள். அது மனதை வருடுகிறது என்றாலும் கனமில்லாமல் இருக்கிறது..!
வசனகர்த்தா பரதனுக்குத் தனியே சொல்லித் தர வேண்டியதில்லை. பல இடங்களில் வசனங்களே படத்தில் டென்ஷனை கூட்டுகிறது.. தம்பி ராமையா பேசியிருக்கும் படாபடா வசனங்களை கேட்பதற்காகவே இன்னொரு முறை படத்தை பார்த்தாக வேண்டும் போலிருக்கிறது..! வெல்டன் பரதன் அண்ணே..!
இசைதான் பாடாய் படுத்திவிட்டார்கள்..! பின்னணி இசையும், பாடல்களின் இசையும் நம்மை ரசனையில் ஆழ்த்தவில்லை.. இந்தப் படத்திற்கு குத்துப் பாடல்கள் தேவையே இல்லை.. ஆனாலும் வைத்திருக்கிறார்கள். அழகாய் படமாக்கியிருக்கிறார் இயக்குநர். எடிட்டிங் பின்னியிருக்கிறார்கள்.. இது போன்ற திரில்லர் படங்களில் அதுதானே முக்கியம்.. அந்த வேகத்தையும், காட்சிகளின் திருப்புதல்களையும் எடிட்டிங்கில் கச்சிதமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்..
முன்பே சொன்னதுபோல தமிழ்ச் சினிமாவுக்கு இதுவொரு புதுமையான பார்மெட். ஹீரோயின் சப்ஜெக்ட் படமே வரலியே என்று நினைப்பவர்களுக்காக வித்தியாசமான ஹீரோயின் சப்ஜெக்ட்டாக இந்தப் படம் வந்திருக்கிறது என்று சொல்லலாம்..! ஆனால் தமிழுக்கே உரித்தான முன்னணி ஹீரோக்களுடன் இந்தப் படம் வெளிவந்திருந்தால் ரிசல்ட் நிச்சயம் வேறு மாதிரியாக அமைந்திருக்கும்..!

சைவம் - சினிமா விமர்சனம்

28-06-2014

எ்ன் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஆர்யா, விஜய், விக்ரம் என்று பெரிய ஸ்டார்களை வைத்து படம் இயக்கிக் கொண்டிருந்த இயக்குநர் விஜய், "இது எனக்காக நானே தயாரித்து இயக்குகிற படம்..." என்று சொல்லித்தான் ஆரம்பித்தார். "தெய்வத் திருமகள்' படத்தில் நடித்த சாராவை மனதில் வைத்துதான் இந்தக் கதையை எழுதியிருக்கிறேன்.." என்றார் விஜய். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமே என்று தோன்றுகிறது..!
சீரியல் டைப் கதை.. இப்படியொரு அடக்கமான குடும்பம், அகிலத்தில் எங்கே இருக்கிறது என்று தேடித்தான் கண்டறிய வேண்டும். செட்டியார் வம்ச அரண்மனை போன்ற வீடு.. செட்டியார் குலத்தைத்தான் திரையில் காட்டியிருக்கிறார்கள்.

வெளியூர்களில் வாழும் மகள்கள், மகன்கள், மருமகள், மருமகன்கள், பேரன்கள், பேத்திகள் அனைவரும் ஊர்த் திருவிழாவுக்காக வருகிறார்கள். கோவிலுக்கு சாமி கும்பிட வந்த இடத்தில் ஒரு சின்ன அசம்பாவிதம் நடைபெற்றுவிட.. அதற்குப் பரிகாரம் கேட்கிறார்கள். "நீங்கள் செய்கிறேன் என்று சொன்ன ஒரு கடனை செய்யவில்லை. அதனால்தான் இப்படி நடந்துவிட்டது.. அது என்னவென்று தெரிந்து அதனை நிவர்த்தி செய்யுங்கள்..." என்கிறார் குருக்கள்..
யோசித்துப் பார்த்தவர்களின் நினைவில் அவர்கள் வீட்டிலேயே வளரும் 'பாப்பா' என்கிற சேவல் நினைவுக்கு வருகிறது. அந்தச் சேவல் கருப்பசாமி கோவிலுக்கு நேர்த்திக் கடனுக்காக வாங்கியது. ஆனால் இன்னமும் அதைச் செய்யாமல் இருக்கிறோம் என்பதை உணர்ந்து, சேவலை பலி கொடுக்கத் தயாராகிறார்கள்.
அந்த நேரத்தில் அந்த பாப்பா என்ற சேவல் காணாமல் போய்விட.. வீடே அல்ல்லோகப்படுகிறது.. ஆள், ஆளாக்கு தேடுகிறார்கள். வீட்டின் சூழல் மாறுகிறது.. மோதல்கள் நடக்கின்றன.. பரஸ்பரம் பேச்சுக்கள் குறைகின்றன.. எதையோ இழந்தது போல் ஆகின்றனர்.. அந்தச் சேவல் கடைசியில் கிடைத்ததா இல்லையா என்பதுதான் கதை..!
ஒரு சிறுவன் எப்படி அசைவத்தில் இருந்து சைவத்துக்கு மாறினான் என்பதுத்தான் கதைக் கருவாம்.. இந்தப் படத்தின் முடிவை பார்த்துதான், ஒரு சிறுவன் நிஜ வாழ்க்கையில் சைவத்துக்கு மாறியதாக டைட்டிலில் கார்டு போட்டிருக்கிறார்கள். அந்தச் சிறுவன் இயக்குநர் விஜய்தான்..!
அப்பாவின் பேச்சுக்குக் கட்டுப்படும் மகன்கள்.. குடும்பத்தினர்.. தப்பு செய்தால் தோப்புக் கரணம் போடும் பழக்கமுள்ள வீடு.. சாதாரணமான நாளன்றே மீன் வறுவல்.. ரத்தக் குளியல்.. கெடா குழம்பு என்று அசைவத்தில் அனைத்தையும் ருசிக்கும் வீடு அது. இப்படி எல்லாவற்றையும் செய்துவிட்டு அந்த பாப்பாவுக்காக அத்தனை பேரும் அப்பாவுக்கு எதிராக மாறுகிறார்கள் என்பதை ஒரேயொரு பாடல் காட்சியில் நகர்த்தியிருப்பது படத்தை சீரியல் டைப்புக்கு மாற்றிவிட்டது..!
ஒரு சேவலுக்காக ஊர் முழுக்க சண்டையிழுத்து வைத்து, ரகளை செய்தவர்கள் சாதாரணமாக கிடைத்துவிட்டது என்றவுடன், மனம் மாறுவது ஏன் என்பதற்கான அழுத்தமான காரணம் சொல்லப்படாமல் சப்பென்றாகிவிட்டது..!
சாராவுக்கு அந்தச் சேவல் மீது ஏற்பட்டிருக்கும் இனம் புரியாத பாசம் முக்கியமா..? குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் குழப்பம் தீர படைக்க வேண்டிய நேர்த்திக் கடன் முக்கியமா..? குடும்பத்தினர் எதை முக்கியம் என்பார்கள்..? ஒட்டு மொத்தக் குடும்பத்தினருக்காக கடைசியில் நேர்த்திக் கடனை தீர்க்க விடாமல் செய்வதெல்லாம் அக்மார்க் பீம்சிங் காலத்து கதை..!
சாராவைத் தேடி பாப்பா ஸ்கூலுக்கு வருவது.. துபாய் சிறுவனைக் காட்டிக் கொடுக்காமல் சாரா, தன் மேல் பழியைப் போட்டுக் கொள்வது.. பெரிய மனுஷித்தனமாய் பெரியப்பா, பெரியம்மாவிடம் போய் பேசுவது.. தாத்தாவிடம் சண்டையிழுப்பது என்பதெல்லாம் சாராவுக்காக வரிந்து கட்டிக் கொண்டு எழுதியிருக்கும் திரைக்கதை போல தெரிகிறது..!
பாஷா-துவாரா இருவருக்குமிடையேயான ஈர்ப்பை சுட்டிக் காட்டியிருக்கும்விதம்.. இதனால் ஏற்படும் மோதல்கள் சட்டென்று அந்தக் குடும்பத்தின் விரிசலை சுட்டிக் காட்டுவது திரைக்கதையின் ஓட்டை போல தெரிகிறது.. இத்தனை பாசமானவர்கள் ஏன் அதற்காக அந்த அளவுக்கு சண்டையிட்டுக் கொள்ள வேண்டும்..? சொந்தம்தானே..? பின்னால் பார்த்துக் கொள்வோம் என்று விட்டிருக்கலாமே..?
பாகப்பிரிவினை ரங்கன் மாதிரி ஜார்ஜுக்கும் ஒரு வலுவான சென்டிமெண்ட் காட்சியைக் கொடுத்து பிழிய வைத்திருக்கிறார். இந்தக் காட்சியில் அவரது மனைவி செய்யும் அழுகை நடிப்பு காமெடி பிளஸ் சென்டிமெண்ட் ஆக்சன்..!
துபாய் சிறுவனாக நடித்த ரஹிலின் நடிப்பு பிரமாதம்.. காட்சிக்குக் காட்சி எப்படித்தான் அந்த கோப முகத்தை வைத்திருந்தானோ தெரியவில்லை. "பாப்பா இருக்குமிடம் தெரியும்..." என்று சொல்லி ஒவ்வொருவரிடத்திலும் வாங்கிக் கட்டிக் கொள்ளும் காட்சியில் தியேட்டரே அதிர்கிறது..
ஊர் கண்மாயை 'பீச்' என்று சொல்லி ஜார்ஜ் டபாய்க்க.. அங்கே ரஹிலின் ஆக்சன்கள் அபாரம்.. அதேபோல் பாப்பாவைத் தேடுவதை போல நடிக்கின்ற காட்சியில் அனைவருமே ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.
நாசர் டிபிகல் அப்பா.. எப்போதும் நடிப்பில் ஏ ஒன்.. இதில் சோடையில்லை.. ஆனால் அழுத்தமில்லாத திரைக்கதையால், சாதாரணமாகவே நடித்திருக்கிறார். "இது யார் செஞ்சது..?" என்ற அந்தக் கம்பீர குரலுக்கு ஏற்றாற்போன்ற சம்பவங்கள் இல்லாமல் மொக்கையாகிவிட்டதால் அதுவும் வீணான உணர்வே வருகிறது..!
சாராவின் மெழுகு முகமே ரசிக்க வைக்கிறது.. பாப்பாவை கண்டு பிடித்துவிடுவார்களோ என்று ஒவ்வொரு முறையும் பதட்டத்துடன் பார்க்கும் காட்சியும்.. ரஹூலை பார்த்தவுடன் சல்யூட் அடித்தபடியே இறுகிப் போகும் முகமும் ரசிக்கத்தான் வைக்கிறது..
அது யாரு தேன்மொழியாக நடித்திருக்கும் சுசித்ரா..? அழகு முகம்.. எங்கேயிருந்து பிடித்தாரோ தெரியலையே..? ஹீரோயினாக நடித்திருக்க வேண்டியவர்.. கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக கொண்டு வந்திருக்கிறார்கள்.. காத்திருப்போம்..!
பல இடங்களில் வாய் விட்டுச் சிரிக்க வைத்தும், சில இடங்களில் லேசாக கண் கலங்க வைக்கவுமாக படம் மெதுவாக நகர்வதுதான் படத்தின் மைனஸ் பாயிண்ட். மிகச் சரியாக இரண்டு மணி நேரத்தில் படத்தை முடித்திருப்பதும் ஒரு நல்ல விஷயம்..
நீரவ்ஷாவின் கேமிராவில் கிராமத்து மண்ணை அழகாக படம் பிடித்திருக்கிறார்கள். அந்த யாருமற்ற தெருக்கள்தான் இன்றைய உண்மையான கிராமங்கள்.. அந்த மாட மாளிகைகள் வாழ்ந்து, கெட்டவர்களின் கதைகளைச் சொல்கின்றன..
ஜி.வி.பிரகாஷின் இசையில் நா.முத்துக்குமாரின் வைர வரிகளை கேட்டவர்களும், ரசித்தவர்களும் கொடுத்து வைத்தவர்கள்.. காட்சிப்படுத்தலில்தான் இங்கே அழகிருந்தது.. இசை வரிகளை அமிழ்த்துப் போட.. காட்சிகளே கண்களைக் குளிர வைத்தன..!
ஒரு சின்ன நெருடலான காட்சிகூட இல்லாமல் கச்சிதமான ஒரு குடும்பப் படமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் விஜய். படத்திற்கு பாராட்டுக்களும், வசூலும் நிறைய குவிய வேண்டும். இது போன்ற படங்களை அதிகம் ஊக்குவித்தால்தான் நமக்கும் கொஞ்சமேனும் நல்ல படங்கள் கிடைக்கும்.
பாசில் படம் பார்த்த திருப்தியை இந்தப் படம் நிச்சயம் உங்களுக்குக் கொடுக்கும்.. நம்பிச் செல்லலாம்..!

மறுக்கப்பட்டது கல்வியா? இல்லை..எங்கள் உரிமையா..?? இந்திய அரசே பதில் சொல்..!

24-06-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஈரோடு ஈழ அகதிகள் முகாமைச் சேர்ந்த நந்தினி என்ற பெண் ப்ளஸ் டூவில் நல்ல மதிப்பெண் எடுத்தும் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் தவிக்கிறார். இது குறித்து திரைப்பட இயக்குநர் வ.கவுதமன் வெளியிட்டுள்ள அறிக்கை இது :

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1170 மதிப்பெண் எடுத்து, மருத்துவம் படிக்க விரும்பி, கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த இலங்கை அகதிகள் ஈரோடு முகாமைச் சேர்ந்த ஈழ மாணவி நந்தினிக்கு கல்வி நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்திய  குடியுரிமை இல்லாததால் கலாந்தாய்விற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.



1990-ல் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த தம்பதியினர் அல்லிமலர்-ராஜா. அவர்களின் மகள் நந்தினி 1995-ல் தமிழகத்திலுள்ள முகாமில் பிறந்தவர். தனது பத்தாம் வகுப்பில் 489 மதிப்பெண் பெற்று தனியார் மெட்ரிக் பள்ளியில் இலவசமாக மேல்நிலைக் கல்வியை பெற்றுள்ளார். 

அரசு பொதுத்தேர்வில் 1170 மதிப்பெண்ணும் , மருத்துவ படிப்பிற்கான தகுதி மதிப்பெண் 197.33 பெற்றுள்ளார்.  மருத்துவம்தான் தனது கனவு என்று கூறி சென்னை இலங்கை மறுவாழ்வுத்துறை ஆணையரிடம் விண்ணப்பம் அளித்துள்ளார். 

கிட்டத்தட்ட 2000-ம் ஆண்டுவரை இலங்கை அகதிகளுக்கு என்று இருபது இடங்கள் மருத்துவப் படிப்பிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது.  அதன் அடிப்படையில்தான் 1996-ம் ஆண்டு மதிப்புமிகு உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் மகள் ஸ்டேன்லி மருத்துவ கல்லூரியில் பயின்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஐந்து இடங்களாக குறைக்கப்பட்டு, 2005 -ம் ஆண்டுகளில் மத்திய அரசாங்கம் முழுவதுமாக நீக்கியுள்ளது. இதனால் நந்தினி போன்ற பல மாணவ-மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். திபெத்திய அகதிகளுக்கு மருத்துவப் படிப்பிற்கு அனுமதிக்கும்போது இலங்கை தமிழ் அகதிகளுக்கு மட்டும் உரிமை மறுக்கப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. 

தமிழ் மண்ணில் பிறந்து இன்றுவரையிலும் அகதியாக வளரும் வாழும் எம்மாணவி நந்தினிக்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும். இதற்கு மரியாதைக்குரிய தமிழக முதலைமைச்சர் விரைந்து தீர்வு காணவேண்டும். இலங்கையில் முள்வேலி முகாம்களை போன்று தமிழகத்திலும் முகாம்களில்வாடும் எம்தமிழ் உறவுகளுக்கு அடிப்படை உரிமைகளும் கல்வியும் கிடைக்க வேண்டும். இதற்கு இந்திய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விரைவில் பதிலளிக்க வேண்டும். எங்கள் தமிழ் சொந்தங்களின் அடிப்படை உரிமையும் வாழ்வாதாரமும் காக்கப்பட வேண்டும். இதற்கு அனைத்து தமிழின உணர்வாளர்களும், அனைத்துக் கட்சித் தலைவர்களும் வேற்றுமை கலைந்து ஒன்றுபட்டு போராட வேண்டும்என்று கேட்டுக் கொள்கிறேன். 

நந்தினியின் கல்விக்கும், தனி மனித உரிமைக்கும் தமிழர்கள் அனைவரும் ஒன்றினைந்து குரல் கொடுக்க வேண்டும். பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தாயுள்ளத்தோடு, முதன்மையாக கவனத்தில் கொண்டு நந்தினி போன்ற மாணவர்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
வ. கவுதமன்
திரைப்பட இயக்குநர்  

பெற்றவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்.. தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்கு தமிழ்நாட்டு மக்களுக்குரிய முழு தகுதியும், உரிமையும் இல்லையா..? 

என்னதான் செய்து கொண்டிருந்தார்கள் ஒவ்வொரு ஆட்சியாளர்களும்..? 

நம்மை நம்பி வந்து நம்மை அண்டிப் பிழைத்த நமது சகோதரர்களுக்கு நாமே துரோகம் செய்யலாமா..?

திபெத்திய அகதிகளுக்கு ஒரு நீதி..? தமிழ் ஈழ மக்களுக்கு ஒரு நீதியா..? இது அநீதி இல்லையா..?

அனைத்துக் கட்சிகளும் ஒருமித்தக் குரலில் போராடி இந்த நந்தினிக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பைப் பெற்றுத் தர வேண்டும். இது அவர்களின் கடமை..!

வடகறி - சினிமா விமர்சனம்

23-06-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
ஒரு சாதாரணமானவனுக்கு ஒரு நாளில் ஒரு சோதனை ஏற்பட்டால் அதிலிருந்துவிடுபட அவன் என்ன பாடுபடுகிறான் என்பதுதான் கதை.. இதனை மையமாக வைத்து சமீப ஆண்டுகளில் பல படங்கள் வந்துவிட்டன. அதிலும் இதுவும் ஒன்று..!

ஜெய் ஒரு சாதாரணமான மெடிக்கல் ரெப். இந்த அளவுக்குப் படித்திருந்தும் கதைப்படி கொஞ்சமும் காமன்சென்ஸ் இல்லாதவர். பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதுகூட தெரியாத தத்தி.. செல்போனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றுகூட தெரியாத அறிவிலி.. இப்படித்தான் கேரக்டர் ஸ்கெட்ச் செய்திருக்கிறார்கள்.
ஒரு பழைய காலத்து செல்போனை வைத்து அதனை எப்படி மியூட் செய்வது என்றுகூட தெரியாமல் இருக்கிறார்.. இவருக்கு வடகறி என்ற பெயரில் ஒரு பிரெண்ட். அவரால்தான் ரூட் மாறுகிறார் ஜெய். இப்படியே இந்த ஓட்டலுக்கு போனை வைச்சிருந்தீன்னா ஒரு பிகர்கூட திரும்பிப் பார்க்காது என்று சொல்லிச் சொல்லியே உசுப்பேத்தி விடுகிறான் நண்பன் வடகறி..!
சம்பாதிக்கும் பணம் தன்னை வளர்த்த அண்ணன் குடும்பத்தின் செலவுக்கும் தேவைப்படுவதால் அந்த மாதம் கொரிய மாடல் போனை வாங்கித் தொலைக்கிறார் ஜெய். அதன் ஒலி, அபாய சங்கு, ஆலயமணியைப் போல ஒலிப்பதும் பெரும் பிரச்சினையாகி சிக்கலாகிறது ஜெய்க்கு. இந்த நேரத்தில்தான் டீக்கடையில் டீ குடிக்கப் போயிருக்கும்போது ஒரு ஐ போன் ஜெய்யின் கண்ணில் படுகிறது. மனசாட்சி பெண்டுலம் போல இரண்டு பக்கமும் ஆடினாலும், சைத்தானின் பங்களிப்பு பெரிதாக இருந்த்தால் அந்த ஐ போனை லவட்டிவிடுகிறார் ஜெய். இதிலிருந்துதான் கிரகம் பிடிக்கிறது நம்ம ஹீரோவுக்கு..
இந்த ஐ போனை வைத்து காதலுக்கும் அடி போடுகிறார். காதலியும் சிக்குகிறார். இந்த நேரத்தில் மனசாட்சி உறுத்திக் கொண்டேயிருக்க.. மக்கள் திலகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை மானசீக தெய்வமாக்க் கொண்டிருக்கும் ஜெய்யின் அண்ணன் திருடுவது பாவத் தொழில் என்று போதிக்க.. மனம் திருந்தி அந்த ஐ போனை திருப்பிக் கொடுக்க முடிவெடுக்கிறார்.
அந்த ஐ போனை வைத்திருந்த ரவிபிரகாஷ் ஒரு மாபெரும் திருடன். போலி மருந்துகளின் தயாரிப்பாளர். உண்மையான மருந்துகளை ரவிபிரகாஷுக்கு சப்ளை செய்தவன் ரவி பிரகாஷை தேடோ தேடென்று தேடிக் கொண்டிருக்க.. இவனிடமே வந்து சிக்குகிறார் ஜெய்.
அடித்து, உதைத்து, மிதித்து சரக்கு எங்கே என்று ஜெய்யிடம் கேட்க.. தான் ரவிஷங்கர் இல்லை.. சதீஷ் என்கிறார் ஹீரோ. நம்ப மறுக்கும் டீம், சரக்குகளை எடுத்து வர அப்போதைக்கு ஹீரோவை ரிலீஸ் செய்கிறது..
ஹீரோ சரக்குகளை எடுத்துக் கொடுத்தாரா..? இல்லை.. போலீஸில் போய் சொல்லித் தப்பித்தாரா என்பதுதான் மிச்சம் மீதிக் கதை..!
ஜெய் இன்னொரு விமலாக உருவாகிவிட்டார். இன்னும் எத்தனை நாளைக்கு இதே தோற்றம்..? இதே கேரக்டர் ஸ்கெட்ச்..?  குரலில்கூட கொஞ்சமும் மாற்றமில்லை.. சந்தோஷத்திற்கும் அதே வாய்ஸ்தான்.. சோகத்திற்கும் அதே வாய்ஸ்தான்..!
ஹீரோயினான ஸ்வாதிக்கு படபட கேரக்டர்.. காதலிக்கும்வரைக்கும் விட்டுவிட்டுப் பேசுபவர், அதற்குப் பிறகு நேரெதிராக பொரிந்து தள்ளுகிறார். ஜெய் ஏகப்பட்ட பிரச்சினைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்க அந்த நேரத்திலும் காதலைப் பற்றியும், தன்னைச் சந்திக்காத்து பற்றியுமே பேசி டென்ஷனை கூட்டுகிறார். அடி வாங்கி சிவந்து போயிருக்கும் கன்னத்தைப் பார்த்து “அது யாரோட லிப்ஸ்டிக்..? எவ கொடுத்தா..?” என்று ஸ்வாதி கேட்கும் அந்தக் காட்சியில் சீரியஸை மறந்து சிரிக்க வைத்துவிட்டது இயக்கம்..
வடகறி என்ற கேரக்டரில் எஃப்.எம். பாலாஜி.. அவர் இருக்கும் காட்சிகளிலெல்லாம் பேசிக் கொண்டேயிருக்கிறார். அதில் ஒரு சிலவை புன்னகைக்க மட்டுமே வைக்கிறது. நகைச்சுவைக்கு வசனத்தையும் தாண்டி ஒன்று வேண்டுமாம்..
கனடாவின் தேசிய அழகி சன்னி லியோனுக்குக் கொடுத்த காசுக்கு இங்கேயிருக்கும் நாகுவையோ, ரகசியாவையோ புக் செய்து ஆட வைத்திருக்கலாம்.. அப்படி இப்படி நடந்து போனதெல்லாம் நடனமாம்.. இதெல்லாம் வெட்டிச் செலவு இல்லையா..? இந்தப் படத்தின் மூலம் தோல்வி கிடைத்தால் தயாரிப்பாளர் வருத்தப்படவே கூடாது.. ரசிகர்களையும் திட்டவே கூடாது.. எல்லாம் இவர்களே இழுத்துக் கொண்டதுதான்..!
முதற் பாதியைவிடவும், பிற்பாதியில் விறுவிறுப்பு கூடியிருந்தாலும் ஜெய் மாதிரியான எப்போதும் ஒரே மாதிரியான முகபாவத்துடன் இருப்பவர்களை வைத்து என்னதான் செய்வது..? அந்த ரவிபிரகாஷ் யார் என்கிற சஸ்பென்ஸ் உடையும் இடத்தில் ‘அட’ போட வைத்திருக்கிறார் இயக்குநர். நல்லதொரு இயக்கம். சிற்சில காட்சிகளை பார்க்கும்போது இயக்குநரை வெகுவாகப் பாராட்ட வேண்டும் போல தோன்றுகிறது.
ஜெய்யின் அண்ணனாக நடித்திருக்கும் அருள்தாஸின் நடிப்பும், கேரக்டரும் ரசிக்க வைக்கிறது.. 100 ரூபாயை ஜெய்யிடம் கொடுத்துவிட்டு போகும்போது, மனைவி காய்கறி வாங்க காசு கேட்டவுடன் தம்பிகிட்ட கேட்டிருக்கேன்.. கொடுடா என்று சொல்லிவிட்டு எஸ்கேப்பாவது அல்டிமேட் ஹஸ்பெண்ட்ஸ் லைப்.. சம்பளம் வாங்கியவுடன் அதில் பாதிக்குப் பாதியை வாங்கி தனது மனைவியிடம் கொடுத்துவிட்டு அப்பாவியாய்.. இனிமே சம்பளத்தை வாங்கிட்டு அண்ணிகிட்டயே கொடுத்திரு என்று பாசத்துடன் சொல்லிவிட்டுப் போகும்போது அண்ணனா வில்லனா என்று கேட்கத் தோன்றுகிறது.
கஸ்தூரியின் அந்த ஒரு நிமிட பொறுமல் நடிப்பை ஒத்துக் கொள்ளலாம்.. படத்தில் இருந்த ஒரேயொரு நடிப்பு காட்சியும் இதுதான் என்று..! எம்.ஜி.ஆர். போட்டோவை வைத்துக் கொண்டு மக்களை ஏமாத்துறது எப்படி என்று கேட்டு ஜெய்யை மூளைச் சலவை செய்யும் அந்தக் காட்சிதான் படத்தோட டர்னிங் பாயிண்ட்.. அருள்தாஸுக்கு பேர் சொல்லும் படம் இது..!
விவேக் ஷிவா-மெர்வின் சாலமன் என்ற இரண்டு இரட்டையர்கள் இசையமைத்திருக்கிறார்கள். சன்னி லியோன் ஆடும் அந்த ஒத்தைப் பாடலைத் தவிர வேறு பாடல்கள் சகிக்க முடியவில்லை. ரசிக்கவும் முடியவில்லை..! இயக்குநருக்கு மிகப் பெரிய உதவிக்கரம் எடிட்டர் பிரவீன்தான்.. பாராட்டுக்கள்..!
ஜெய் உடனடியாக போலீஸுக்கு போயிருந்தால் இந்தப் பிரச்சினை அன்றைக்கே, அப்போதே முடிந்திருக்கும்.. அதைவிடுத்து தானே திடீரென்று சூப்பர் மேன் ஹீரோவாக அவதாரமெடுப்பது போல மருந்துகளை திருடி குப்பை மேட்டில் போட்டு.. பத்திரிகைகளுக்கு தகவல்களைக் கொடுத்து.. பத்திரிகைகளில் பப்ளிஷ் ஆக வைத்து..  கடைசியில் ரவிபிரகாஷை வெளிக்கொணர ஒரு டிராமாவை போட்டு.. ஆவ்.. என்று கொட்டாவிவிட வைக்கிறது இந்தத் திரைக்கதை..
எழுதி, இயக்கிய புதுமுக இயக்குநர் சரவணராஜன் பாதிக் கிணறைத் தாண்டியிருக்கிறார். அடுத்தடுத்த படங்களில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்..!

நேற்று இன்று - சினிமா விமர்சனம்

23-06-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
ஒரு சில இயக்குநர்களின் பேச்சை நம்பி அவர்களை பெரியவர்களாக நினைத்துவிடக் கூடாது என்பதை இந்த இயக்குநரும் நிரூபித்திருக்கிறார்.
சாமி, எஸ்.ஜே.சூர்யா வரிசையில் இந்தப் படத்தின் இயக்குநர் பத்மாமகனும் தீவிரமாகச் செயல்பட்டு தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கிறார்..!

கற்பனைக் கதை என்று சொல்லப்பட்டாலும் நிஜத்தில் வீரப்பனின் வனவேட்டையில் இருந்துதான் கதை துவங்குகிறது.. வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட பின்பு, வேறொருவரை வேட்டையாட ஒரு அதிரடிப் படையை காட்டுக்குள் அனுப்புகிறது போலீஸ் தலைமை. டேவிட் என்ற போலீஸ் இன்ஸ்பெக்டர், வீரப்பனைத் தேடி காட்டுக்குள் போனவர், வீரப்பனுக்கே இன்பார்மராக தன்னை மாற்றிக் கொண்டு 20 போலீஸ்காரர்களின் சாவுக்குக் காரணமாகிவிட்டார். அவரை உயிருடனோ, அல்லது பிணமாகவோ கொண்டு வர வேண்டும் என்பதுதான் இந்த 5 பேர் கொண்ட அதிரடிப் படையினருக்குக் கொடுக்கப்பட்ட அஸைன்மெண்ட்..
இவர்கள் காட்டுக்குள் நுழைந்ததும் நடந்த கதையும் நேற்றைக்கு நடந்தவைகள்.. இன்றைக்கு தாமினி என்னும் பெண் சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் தனித்து காரில் பயணம் செய்கிறாள். வழியில் கார் மக்கர் செய்துவிட அருகில் ஒர்க் ஷாப் வைத்திருக்கும்  விமலிடம் கபினி அணைவரையிலும் தன்னை டிராப் செய்யும்படி சொல்கிறாள். முதலில் மறுக்கும் விமல், பத்தாயிரம் ரூபாய் தருகிறேன் என்று சொன்னவுடன் ஒத்துக் கொண்டு கிளம்புகிறார்.
இந்த இரண்டு டிராவல்களையும் அவ்வப்போது இணைத்து ‘நேற்று, இன்று’, ‘நேற்று இன்று’ சப் டைட்டில்ஸ் போட்டு படத்தை சதையும், கூத்துமாக நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
வீரப்பன் வேட்டை என்கிற விஷயத்தில் அடிப்படை புரிதல்கூட இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கும் படம் இது..! போலீஸ் கடைசியாக வீரப்பனை சுட்டுக் கொன்றவுடன் மீடியாக்களிடம் என்ன சொன்னார்களோ அதை வைத்துதான் வீரப்பன் கதையை நகர்த்தியிருக்கிறார்கள். வீரப்பனின் வதத்தையும் படமாக்கியிருக்கிறார்கள்.
அதே போலீஸ் சொன்னதுபோலவே வீரப்பன் லட்சணக்கணக்கில் பணம் சம்பாதித்து சில குறிப்பிட்ட இடங்களில் புதைத்து வைத்திருந்தார் என்பதையும் கதையில் பயன்படுத்தியிருக்கிறார்.. வீரப்பன் கூடவே ஒரு போலீஸாக இருந்து டேவிட் துப்பறிந்து தகவல் சொல்லி கடைசியில் அது சொதப்பலாகி, வீரப்பனிடமிருந்து தப்பிவிட்டதாகக் கற்பனை கதையைக் காட்டியிருக்கிறார்கள். அதையும் கொஞ்சமாச்சும் நம்புற மாதிரியிருக்க வேண்டாமா..? வீரப்பன் வரலாற்றை படிக்காமலேயே, தெரிந்து கொள்ளாமலேயே, ச்சும்மா மேலோட்டமாக தெரிந்து அதையே படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.
இதில்தான் எத்தனை எத்தனை சரசங்கள்.. சல்லாபங்கள்.. ஏன் இந்த செக்ஸுவல் எக்ஸ்ப்ரிமெண்ட்..? காட்டுக்குள்ளேயே இருக்கும் அருந்ததி ஒரு விபச்சாரப் பெண்ணாம். “நான் விபச்சாரின்னு எப்படி கண்டு பிடித்தீர்கள்?” என்று அருந்ததி கேட்டதற்கு “கால் விரல்களில் கடைசி விரல்கள் இரண்டும் ஒன்றோடென்று உரசிக் கொண்டிருந்தால் அவர்கள் இந்த வேலையைத்தான் செய்வார்கள் என்று சாமுத்திரிகா லட்சணம் கூறுவதாக” பதில் சொல்கிறார்கள் படத்தில். நாட்டு மக்களுக்கு அவசியமான பொது அறிவுதான்..!
வந்த வேலையை விட்டுவிட்டு இந்தப் பெண்ணை போகின்ற இடங்களுக்கெல்லாம் கூடவே அழைத்துச் சென்று சல்லாபிக்கிறதாம் தமிழக போலீஸின் சிறப்பு அதிரடிப் படை.  அதிலும் சல்லாபத்திற்கு காண்டம் வேண்டுமே என்பதை அந்தப் பெண்ணே ஒரு கதை சொல்லி ஞாபகப்படுத்துகிறாள்.. நல்லாயிருக்குய்யா கதை..!
ஒரு பாக்கெட் இல்லை.. கை நிறைய பாக்கெட்டுகளை அள்ளி நீட்டி “படுக்க வாடி” என்கிறார் தமிழக போலீஸின் சிறப்பு அதிரடிப் படையின் கேப்டனான அந்த வயதானவர். ஆஹா.. அபாரமான திரைக்கதை.. அடுத்தடுத்து அந்த 5 பேரில் 4 பேர் அந்தப் பெண்ணுடன் சுகிக்கிறார்கள். ஒரு முறை அல்ல.. பல முறை.. தொடர்ந்து கூடவே அழைத்துப் போகிறார்களாம்..
இந்தக் கதையில் இத்தனை காம நெடி என்றால் அடுத்த விமல்-தாமினி கதையிலும் இதேதான்.. விமல் எப்போதுமே வுமனைசராம்.. தண்ணி பார்ட்டியாம்.. வண்டியை எடுக்கும்போதே சரக்கடித்துவிட்டுத்தான் கிளம்புகிறார்.  தாமினி காரில் உட்காரப் போகும்போது பின் சீட்டில் இருந்து ஒரு பெண் எழுந்து “நேத்து ராத்திரி கம்பெனி கொடுத்ததுக்கு காசு கொடுய்யா..” என்கிறார் விமலிடம். தாமினியை காட்டி, “இந்த கிராக்கியை எங்க பிடிச்ச..?” என்கிறாள் அந்தப் பெண். இத்தனைக்கு பிறகும் தாமினி இவரோடு கபினிக்கு புறப்படுகிறாராம்..!
இதோட விட்டுச்சா சனியன்..? தாமினியின் கார் ஒரு பக்கம் நிக்குது. அங்க போய் அதை ரிப்பேர் பண்ணாமல்.. கபினி நோக்கி கார் செல்கிறதாம்.. வழியில் ஒரு இரவில் ஹோட்டலில் தங்கப் போகிறார்கள்.. கபினி அணைக்கட்டுப் பகுதி எங்கே இருக்கு..? யாராச்சும் பொது அறிவு தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா..!
கர்நாடகா பகுதியில் இருக்கும் அந்த ஹோட்டலில் கேரளத்து பெண்ணொருவர் வெறும் ஜாக்கெட், பாவாடை அணிந்து ரிசப்ஷனில் உட்கார்ந்து மலையாளம் பேசுகிறாராம்..! என்னவொரு யோசனை பாருங்க இயக்குநருக்கு..?
இப்போ விமல் தாமினியை மடக்கணும்னு அந்த ரிசப்ஷனிஸ்ட்கிட்ட சொல்லியே ரூம் கேக்குறார். தாமினி தான் மட்டுமே அந்த ரூம்ல இருக்க வேண்டும் என்று சொல்ல விமல் மீண்டும் மீண்டும் டிரை செய்கிறார். அத்தனையும் பக்கா ‘டிரிபுள் ஏ’ ரகம். கடைசியில் தாமினி மடியாமல்.. ஹோட்டல் ரிசப்ஷனிஸ்ட் மடிந்துவிடுகிறாள். ‘நேத்து ராத்திரி யெம்மா’ பாட்டை போட்டுவிட்டு ஆடுகிறார்கள்.. சரசமாடுகிறார்கள்.. சல்லாபம் செய்கிறார்கள்..
தாமினியிடம் காசு இல்லாமல் தவிக்கும் சூழல் வர விமல் வெளிப்படையாகவே கேட்கிறார். “கபினியில் கொண்டு போய் இறக்கி விடுகிறேன். ஆனால் அதற்குப் பரிகாரமாக என்னுடன் மூன்று தடவை படுக்க வேண்டும்…” என்கிறார். ஆஹா.. நெத்தியடியான வசனம். இதெல்லாம் உலக சினிமால காட்ட வேண்டிய படம். தாமினி இதுக்கும் ஒத்துக்குறாராம்..! வழில மனசு வெறுப்பாகி தாமினியும் குடித்துவிட்டு விமலுடன் சேர்ந்து ஒரு குத்தாட்டம் போடுகிறார்..!
இங்கே அருந்ததிக்கு ஒரேயொரு கருப்பு பனியன்தான் கடைசிவரையிலும் காஸ்ட்யூம்.. கடைசிவரையிலும் உடன் வரும் ஒரு பெண்ணுக்கு தங்களுடைய பேண்ட் சட்டையை அணியக் கொடுப்போம் என்ற எண்ணமே இல்லை.. சரி. இயக்குநரிடம்தானே இதனைக் கேட்க வேண்டும்..?
வீரப்பன் பதுக்கி வைத்த பணம் இந்த அதிரடிப் படையிடனரிடம் சிக்க தாங்களே பங்கு போட்டுக் கொள்ள நினைக்கிறார்கள். இந்தக் கூட்டணியில் ராபர்ட் மட்டும் சேர மறுக்கிறார். இவரே ஒரு சூழலில் கன்னிவெடியில் சிக்கி அபாயத்தில் இருக்கும்போது அதிரடிப் படை தோழர்களே இவரை கைவிட்டுவிட்டுச் செல்கிறார்கள்.. அந்தச் சமயத்தில் டேவிட் வந்து ராபர்ட்டை காப்பாற்றுகிறான்.
டேவிட் நடந்த கதைகளைச் சொல்ல இவர் மீது தவறில்லை என்பதை உணர்ந்த ராபர்ட் டேவிட்டை தங்களது டீமிடம் அழைத்துச் செல்ல அங்கே நடக்கும் துப்பாக்கிச் சூட்டில் டேவிட் கொல்லப்படுகிறான். மொத்த டீமும் டேவிட் உடலை அங்கேயே புதைத்துவிட்டு கேம்ப்புக்கு கிளம்புகிறது.. வழியிலேயே தன்னுடைய பங்கு பணம் களவாடப்பட்டதை அறிந்து பரணி டீம் மேட்டுகளுடன் சண்டையிட.. இவர்களது சொத்துப் பிரச்சினை,  உயரதிகாரியின் பார்வைக்குச் செல்கிறது.
இங்கேதான் திடீர் திருப்பம்.. இதுவரையில் இவர்களுடன் செக்ஸ் சல்லாபம் செய்து.. கூத்தடித்த பெண்ணான அருந்ததி, ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியாம்.. இவர்களை வேவு பார்க்க போலீஸ் தலைமையே அனுப்பி வைத்த பெண்ணாம்.. அப்படி போடு அருவாளை..!! தமிழக காவல்துறையினர் அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டிய படம் இந்த ‘நேற்று இன்று’ என்பதற்கு இதைவிட பெரிய காரணம் ஏதும் சொல்லமுடியாது..!
இன்னொரு பக்கம் விமலுடன் வந்த தாமினிதான் டேவிட்டின் தங்கச்சியாம்.. இந்த டேவிட்டின் தங்கச்சிக்காக பரணியின் பங்காக கிடைத்த பணத்தை எடுத்து டேவிட்டின் கல்லறை அருகிலேயே மறைத்து வைத்திருப்பதை கடிதமாக எழுதியனுப்பியிருக்கிறார் ராபர்ட். அதைத்தான் தாமினி எடுக்க வந்திருக்கிறாராம்..
பணத்தை எடுத்துவிட்டு விமலுக்கு தேங்க்ஸ் சொல்லும் தாமினியிடம் மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்துகிறார் விமல். “3 முறை படுக்கணும்..” என்று..! “அது இப்போ எனக்குத் தேவையில்லை..” என்று சொல்லி பணத்தையும் கொடுத்துவிட்டு முன் சீட்டில் இடத்தையும் பிடிக்கிறார் தாமினி.. அதாவது விமலை காதலிக்கிறாராம் தாமினி.. இது எப்படி இருக்கு..?
விமல் இது போன்று இன்னும் ஒரு படத்தில் நடித்தால் போதும்.. டோட்டல் இமேஜ் காலிதான்..! ஏதோ வித்தியாசம் தேவைதான்.. ஆனால் ஒரிஜினல் கேரக்டரே காணாமல் போகுமளவுக்கு இந்த அளவு ரிஸ்க் இவருக்குத் தேவைதானா..?
உருப்படியாய் நடித்திருப்பது அருந்ததியும், தாமினியும்தான்.. அந்தச் சின்ன கருப்பு பனியனில் எந்த அளவுக்கு கவர்ச்சியைக் கொட்ட வேண்டுமோ அத்தனையையும் காட்டியிருக்கிறார் அருந்ததி.. பெரிய நடிகைகளை பேச பயப்படும் வசனங்களை பயப்படாமல் பேசி நடித்திருக்கிறார். இதனாலேயே தான் கவனிக்கப்படலாம் என்று நினைத்துவிட்டார் போலும்..!
தாமினியாக நடித்திருக்கும் மனோசித்ராவுக்கும் ரொம்பவும் தைரியம்தான்.. அவரையே செக்ஸ் அப்பீலாக பார்க்க வைத்திருப்பதுதான் கொஞ்சம் சங்கடமாக இருந்தது.. இந்தப் புயலில் சிக்கினால் மீள்வது கடினம் என்பதை புரிந்து கொண்டால் சரி..
டேவிட்டாக சில நிமிடங்களே வந்தாலும் கச்சிதமான கேரக்டர் பிரசன்னாவுக்கு. இவர் மட்டுமே இந்த செக்ஸ் அப்பீல் கேஸில் தப்பிவிட்டார்… ஹரீஷுக்கும், ரிச்சர்டுக்கும் இடையில் இருக்கும் பனிப்போருக்கும் ஒரு சல்லாபமே காரணமா இருக்கிறது என்பதை பார்க்கும்போது இயக்குநரின் செக்ஸ் பற்றுதல் நம்மை புல்லரிக்க வைக்கிறது..!
மலையாள சினிமாக்களில் தமிழர்களை ‘பாண்டி’ என்று சொல்லி கேவலப்படுத்துவதாக பலரும் இப்போது புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். சம்பந்தமேயில்லாத கர்நாடக பகுதியில், கேரளத்து பொண்ணு இப்படி அரைகுறை டிரெஸ்ஸில் தண்ணியடித்துவிட்டு. ரூம் போட வந்தவுடன் சல்லாபிக்கும் அளவுக்கு இருக்கிறாள் என்று காட்டுவது கேரளத்து மக்களை கேவலப்படுத்துவது போலாகாதா..? என்னவோ போடா மாதவா..?
நேரடியாக செக்ஸ் படங்கள் எடுப்பது ஒரு வகை.. ஆனால் மறைமுகமாக அதையே மையக் கருவாக வைத்து படம் பார்க்கும் விடலைகளை தியேட்டருக்கு இழுப்பதும், காமத்தை போதிப்பதுமே திரைப்படம் அல்ல.. இதில் திணிக்கப்பட்டிருக்கும் செக்ஸ் காட்சிகளுக்காக இந்தப் படத்துக்கு 4 ஏ சர்டிபிகேட்டுகள் தரப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சட்டப்படி ஒன்றுதான் கொடுக்கப்பட்டாக வேண்டும் என்பதால் அதுதான் கிடைத்திருக்கிறது.
இந்தப் படத்தின் இயக்குநர் பத்மாமகன் ஏற்கெனவே இயக்கிய ‘அம்முவாகிய நான்’ திரைப்படத்திலும் செக்ஸ்தான் படத்தின் அடிப்படை கருவாக இருக்கும். இதுவும் இப்படியே..! “இந்தப் படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுத்துவிட்டார்கள்.. நான் எதையும் கட் செய்ய மறுத்துவிட்டேன்.. பரவாயில்லை கொடுங்க என்று சொல்லி வாங்கிக் கொண்டேன்..” என்றெல்லாம் பெருமையாகவே பேசினார் இயக்குநர் பத்மாமகன். இதைக்கூட போனால் போகிறதென்று விட்டுவிடலாம்.. ஆனால், “இந்தப் படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை…” என்பதை ஏதோ தேசியக் குற்றம்போல புலம்பியதைத்தான் ஏற்க முடியவில்லை..!
இது மாதிரியான திரைப்படங்களுக்கு எதற்காக தியேட்டர்கள் கிடைக்க வேண்டும்..? ஏன் இது மாதிரியான திரைப்படங்களை ரசிகர்களின் பார்வைக்குக் கொண்டு போக வேண்டும்..?
இதனை பார்க்காமல் இருப்பதும் நல்லதுதான்..!

உயிருக்கு உயிராக - சினிமா விமர்சனம்

‘உயிருக்கு உயிராக’ என்று டைட்டிலை பார்த்து படத்துக்குப் போனால் அது காதலுடன் நாட்டு நடப்பையும் சேர்த்து சொல்லுது..!

காதலையே வெறுத்து ஒதுங்கியிருக்கும் தங்களது மகன் கார்த்திக்கை காதலிக்க வைத்து அவனது வாழ்க்கையில் ஒளியேற்ற நினைக்கிறார் அப்பா பிரபு. இதற்காக உலகத்தில் எந்த அப்பனும் செய்யாத சாதனையாக பேப்பரில் தன் மகனுக்கு காதலிக்க பெண் தேவை என்று சொல்லியே விளம்பரம் செய்கிறார்.
இதனைப் பார்த்துவிட்டு வரும் பல மாணவிகளில் மருத்துவம் படிக்கும் பிங்கியை கார்த்திக்கின் பெற்றோர்களுக்குப் பிடித்துப் போய்விடுகிறது. ஆனால் கார்த்திக்கிற்கு காதலையும் பிடிக்கவில்லை. பிங்கியையும் பிடிக்கவில்லை.
நண்பனின் பிறந்த நாள் பார்ட்டியில் கார்த்திக்கின் கிட்டாரை ஒரு பிரெண்ட் எடுத்துப் பயன்படுத்த அவனை ரத்தம் வருமளவுக்கு அடித்து விடுகிறான் கார்த்திக். அடிபட்டவனோ போலீஸ் துணை கமிஷனரின் மகன். இதனால் போலீஸ் கார்த்திக்கை பிடித்துப் போய்விடுகிறது.
அப்போது ஸ்டேஷனுக்கு வரும் பிங்கி தனது செல்வாக்கால் கார்த்திக்கை விடுவிக்கிறாள். அப்போதுதான் பிங்கி தமிழக கவர்னரின் பேத்தி என்பது கார்த்திக்கும், அவனது பெற்றோர்களுக்கும் தெரிய வருகிறது. இதன் பின்பும் கார்த்திக் பிங்கியை நேசிக்காமலேயே இருக்கிறான்.
இந்த நேரத்தில் கார்த்திக்கின் செமஸ்டர் எக்ஸாமிற்கான ஹால் டிக்கெட் கிடைக்காமல் போகிறது. இது பெரிய இடத்து விவகாரம் என்று கல்லூரி முதல்வரும், தாளாளரும் சொல்லிவிட.. தான் காதலிக்க மறுத்த்த்தால் பிங்கிதான் தனது தாத்தாவின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இதனைச் செய்திருக்கிறாளோ என்றெண்ணி அவளைத் தேடி உத்தராஞ்சலுக்கே ஓடுகிறான் கார்த்திக்.
அங்கே பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இருந்த கவர்னரை பார்த்து கார்த்திக் காரசாரமாகக் கத்த.. கவர்னரின் பாதுகாவலர்களால் கடுமையாகத் தாக்கப்படுகிறான் கார்த்திக். அப்போது அவனை காப்பாற்றும் பிங்கி, அவனுக்கு தன் மேல் காதல் இல்லை என்றும் தான்தான் அவன் மீது காதல் கொண்டிருப்பதாகவும் தாத்தாவிடம் சொல்லி அவனை விடுவிக்கிறாள். ஹால் டிக்கெட்டையும் பெற்றுத் தருகிறாள்.
இப்போது தாத்தாவிடம் பிங்கி சொல்வதுதான் கார்த்திக்கின் காதல் வெறுப்புக்கான எபிஸோடாக திரையில் தெரிகிறது.
பிளாஷ்பேக்கில் கார்த்திக்கின் அண்ணனா சூர்யாவை அவனுடன் படிக்கும் பிரியா காதலிக்கிறாள். கல்லூரியில் கொடுத்த ஒரு பிராஜெக்ட்டுக்காக வித்தியாசமான ஒரு ஆராய்ச்சியில் இறங்கியிருக்கிறான் சூர்யா. அதன்படி ஒருவரின் ஆழ்மனதில் என்ன நடக்கிறது என்பதை அவர் நினைக்கும்போது அது காட்சி வடிவத்தில் கம்ப்யூட்டர் திரையிலும் தெரியுமாம்..
இது போன்ற ஆராய்ச்சிக்கு துணையாக வந்த ப்ரியாவை சூர்யா ஏற்க மறுக்க.. அவள் அழுது கூட்டம் கூட்டி அவமானப்படுத்துகிறாள். அப்போது அந்த ஆராய்ச்சியின்படி ப்ரியா தன்னை காதலிப்பதை உணர்ந்துதான் சூர்யா அவளை புறக்கணிப்பதாகத் தெரிய வர.. அப்போதைக்கு சமாதானக்கொடியை பறக்க விடுகிறார் ஆசிரியர். இதனால் காதலர்கள் இருவரும் ஹேப்பி..
சூர்யா-பிரியா கல்யாணத்துக்கு சூர்யாவின் பெற்றோர் சம்மதம் தெரிவித்த நிலையில் திடீரென்று சூர்யாவிடம் வரும் பிரியா, கோடீஸ்வர மாப்பிள்ளை ஒருவன் தன்னை திருமணம் செய்ய ஆசைப்படுவதாகவும், இதனையே தனது பெற்றோரும் விரும்புவதால் காதலை விட்டுத் தந்து ஒதுங்கிப் போய்விடும்படி கேட்கிறாள்.
எதிர்பாராத இந்த அதிர்ச்சியனால் சூர்யா நொறுங்கிப் போகிறான். அண்ணன் சூர்யாவின் மீது மிகுந்த பாசம் கொண்ட கார்த்திக் இதைக் கேட்டு கோப்ப்படுகிறான். சூர்யாவின் பெற்றோர் பிரியாவின் பெற்றோரைப் பார்த்து நியாயம் கேட்க..  அவர்கள் இவர்களை கேவலமாகப் பேசிவிட பிரச்னையாகிறது.
இந்த நிலையில் திடீரென்று மனம் மாறும் பிரியா,  சூர்யாவை மணக்க சம்மதிக்கிறாள். இந்த நேரத்தில் சூர்யா ஒரு புராஜக்ட் விஷயமாக கல்லூரி மூலமாக மலேசியா போக, பிரியாவுடன் உடன் செல்கிறாள். நல்லவள் போல் நடித்த ப்ரியாவின் முகம் அங்க, கிழிகிறது. தந்திரமாக சூர்யாவை மயக்கி.. அவன் குளிக்கப் போன சமயமத்தில் லேப்டாப்பில் இருந்த அவனது புராஜக்டை அழித்துவிட்டு.. அவனது பாஸ்போர்ட்டை கிழித்தெறிந்துவிட்டு தனது பொருட்களை எடுத்துக் கொண்டு சென்னைக்கே ரிட்டர்ன் ஆகிறாள்.
அவளைத் தேடிய சூர்யா ப்ரியா காணாமல் போய்விட்டதாக போலீஸுக்கு போக.. போலீஸ் அவனது பாஸ்போர்ட்டை கேட்கிறது. பாஸ்போர்ட் இல்லாத காரணத்தினால் அவனை கைது செய்கிறாள். அதே நேரம் இங்கே பிரியாவின் ஏற்பாட்டினால் சூர்யாவின் பெற்றோரையும், அவனது தம்பியையும் போலீஸ் கைது செய்து லாக்கப்பில் அடைக்கிறது..  குடும்பத்தையே புகைப்படம் எடுத்து கேவலப்படுத்துகிறார்கள்.
சூர்யா மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரக பெண் அதிகாரி மூலமாக தப்பித்து அவசரமாக ஊர் திரும்புகிறான். அங்கே தனது பெற்றோரை மீட்டு வீட்டுக்கு அழைத்து வருகிறான். ஆனால் காலையில் பேப்பரில் அவனது குடும்பப் புகைப்படம் வெளியாகியிருக்க. இதனைப் பார்த்து நொந்து போய் தற்கொலை செய்து கொள்கிறான். இந்தக் கொடூரமான பிளாஷ்பேக்கினால் இப்போது கார்த்திக் காதல் மீதே வெறுப்பாக இருப்பது தெரிகிறது.
செமஸ்டர் தேர்வு எழுதி வெற்றி பெற்ற பின்பு கல்லூரியிலேயே பிளேஸ்மெண்ட்ஷிப் நடக்கிறது. பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருக்கும் அதிகாரிகள் முன்பாக சிறந்த மாணவர்கள் தங்களது பிராஜெக்ட்டை செய்து காட்ட.. அதில் கார்த்திக் வித்தியாசமான ஒன்றை முன் வைக்கிறான்.
ஒரு நாட்டின் செயற்கைக் கோள்களை இன்னொரு நாட்டின் செயற்கைக் கோள் தாக்கி தகவல் தொழில் நுட்ப தொடர்பை துண்டித்து அதன் மூலம் பொருளாதார பேரழிவை உண்டு பண்ணும் வருங்கால போர் முறையை தடுக்க, விண்வெளி ராணுவம் என்ற கருவியை கார்த்திக் கண்டு பிடித்ததாகச் சொல்கிறான்.
இதனைப் பார்த்துவிட்டு அமெரிக்கா மற்றும் வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் கோடிக்கணக்கில் சம்பளம் தருவதாகச் சொல்லி கார்த்திக்கை தங்களது நாட்டுக்கு அழைக்க.. கார்த்திக்கின் தந்தை பிரபு அதை மறுத்து தனது மகன் சொந்த நாட்டுக்காக மட்டுமே உழைப்பான் என்று சொல்லி தனது தேச பக்தியை பறை சாற்றுகிறார். இந்த புகழோடு கூடவே பிங்கியின் உண்மையான காதலையும் உணர்ந்து அவளை ஏற்றுக் கொள்வதும்தான் கிளைமாக்ஸ்..!
‘மண்ணுக்குள் வைரம்’, ‘மருதுபாண்டி’, ‘வெள்ளையதேவன்’, ‘ராஜபாண்டி’, ‘பாண்டித்துரை’, ‘சாமுண்டி’, ‘மறவன்’, ‘வண்டிச்சோலை சின்ராசு’, ‘குருபார்வை’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கும் மனோஜ்குமார் 10 வருடங்கள் கழித்து இயக்கியிருக்கும் படம் இது.
நாயகர்களில் சரண் ஷர்மாவுக்குத்தான் அதிக ஸ்கோப்.. ஆனால் இடைவேளையில் வரும் சஞ்சீவ் அழுத்தமாக நடித்து மனம் கவர்ந்திருக்கிறார்.. நாயகிகளில் அறிமுக நாயகி பிரீத்திதாஸ் நடிக்கவும் செய்து கொஞ்சம் உடலை எக்ஸ்போஸ் செய்தும் செவ்வனே தனது அறிமுகத்தை நிறைவு செய்திருக்கிறார்.. பாடல் காட்சிகளில் அழகாக காட்சியளிக்கிறார். பிரியாவாக வரும் நந்தனா சிநேகாவுக்கு தங்கச்சி போன்ற முகம். ஏற்கெனவே கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். ஆனால் இதில் கொஞ்சம் வில்லியாக நடித்தாலும் சஞ்சீவிடம் சண்டையிட்டு கல்லூரியையே கூட்டும் அந்தக் காட்சியில் கத்திக் கூப்பாடு போட்டிருக்கிறார். நல்ல நடிப்பு..
இளைய திலகம் பிரபுவின் அனுபவ அப்பா நடிப்பு பற்றிச் சொல்லவே வேண்டாம். இவரிடம் பெர்மிஷன் கேட்டு செய்தார்களா? அல்லது கேட்காமலேயே செய்தார்களா என்று தெரியவில்லை. சஞ்சீவ் கண்டுபிடித்த மனதில் இருக்கும் பிடித்த விஷயம் பற்றிய ஒரு காட்சியில் பிரபு அந்த கருவியை தன் தலையில் மாட்டியவுடன் அவருக்கு அவர் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கும் விஷயம் என்று கணினித் திரையில் ஓடுவது ‘சின்னத்தம்பி’ படத்தின் ‘போவோமா ஊர்வோலம்’ பாடல் காட்சி.. படத்தின் சுவைக்காக சேர்த்திருந்தாலும் இதுவும் ஒரு ட்விஸ்ட்டுதான்.. அம்மாவாக ஸ்ரீரஞ்சனி. குறையே வைக்கவில்லை..
‘அநாதை இல்லம்’ என்பதற்கு பதில் ‘உறவுகள் இல்லம்’ என்றும் ‘இலங்கை அகதிகள் முகாம்’ என்பதற்கு பதில் ‘ஈழத்து சொந்தங்கள் இல்லம்’ என்றும் சொல்ல வேண்டும் என்ற கருத்தெல்லாம் நன்றாகத்தான் இருந்தது. வசனங்களில் அதிகம் எல்லை மீறாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் ஆட்டக்காரி நாகு கேரக்டர்தான் இடிக்கிறது. இவர் அறிமுகப்படுத்திதான் நாம் அப்துல்கலாமை தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன? என்ன கொடுமை சரவணா இது..? இது மட்டும் அப்துல் கலாமுக்குத் தெரிஞ்சா.. அவ்ளோதான்..!
இசையமைப்பாளர் சாந்தகுமாரின் பாடல்கள் ஜிலீர் ரகம். ‘எனக்கு தெரியாமல் எங்கிருந்தாய்’ பாடல் கேட்பதற்கும், பார்ப்பதற்கும் ஓகேதான். பின்னணி இசை  பரவாயில்லை. அழுவாச்சி நேரங்களில் அதிகம் நம்மை சோதனைப்படுத்தாமல் விட்டிருக்கிறார்கள். பாடல் காட்சிகளை படமாக்கியவிதமும், பாடல்களும் இந்த இயக்குநருக்குள் இன்னமும் இளமை கொப்பளித்துக் கொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது..
காதல், நட்பு, குடும்பம் என்பதை முன்னிறுத்தி சென்றிருக்க வேண்டிய படம்.. இடையிடையே படத்தின் தயாரிப்பாளர் என்ற ரீதியில் எஸ்.ஆர்.எம். கல்லூரியையும், அதன் நிறுவனர் பச்சைமுத்துவையும் முன்னிறுத்திப் போக.. கடைசியாக படம் அந்தக் கல்லூரிக்காக எடுக்கப்பட்ட பிரச்சார படமோ என்கிற கேள்விக்குறியோடு நின்றுவிட்டது இந்தப் படத்தின் துரதிருஷ்டம்..!
இந்த விளம்பர யுக்தி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்தப் படம் காதலர்களால் நிச்சயமாக பார்க்கப்பட வேண்டிய படமாக இருந்திருக்கும்..!

எழுத்தாளர் ஜெயமோகனுக்கெதிராக பெண்ணியச் செயல்பாட்டாளர்களின் கண்டனக் கூட்டறிக்கை..!

ஜெயமோகனின் பாலியல் நிந்தனைக்கெதிராக பெண்ணியச் செயல்பாட்டாளர்களின் கண்டனக் கூட்டறிக்கை!

வணக்கம்

எழுத்திற்கென்றொரு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது. பேராசான் கார்ல்மார்க்ஸ் போன்றோர் தங்களது எழுத்தின்மூலமாக மனிதகுலத்தின்சிந்தனைப்போக்கையும் வரலாற்றையும் மாற்றியமைத்தார்கள். அத்தகைய சக்திவாய்ந்த எழுத்தானது அடிப்படைவாதிகளது இருப்பிற்கான களமாக அமைந்துவிடும்போது, அந்தச் சமூகமே சீரழிந்துபோகும் கெடுவாய்ப்பு இருக்கிறது. அந்த இழிநிலையை நோக்கி தமிழிலக்கியம் நகர்ந்து கொண்டிருக்கிறதோ என்ற அச்சங்கலந்த ஐயம், அண்மைக்காலமாக சில இலக்கியவாதிகளது பொறுப்பற்ற பேச்சினால் ஏற்பட்டிருக்கிறது. அவர்களுள், ஜெயமோகன் செய்துவரும் இலக்கிய மேட்டிமைத்தனங்கள் சொல்லுந்தரமற்றவை.

அதிகாரத்தரப்பை உயர்த்திப்பிடித்தல், சிறுபான்மையினரைத் தரந்தாழ்த்துதல்,பிறமதங்கள்பால் சகிப்புத்தன்மையற்று இந்துத்துவத்தை முன்னிலைப்படுத்தல், இடதுசாரி சிந்தனையாளர்கள்பால் காழ்ப்புணர்வைக் கொட்டுதல், வரலாற்றைத் தன் நிலைப்பாடுகளுக்கியைந்தபடி திரிபுபடுத்துதல் இவற்றோடு ஆணாதிக்கத்தின் தடித்தனமும் அவரது எழுத்துக்களில் புரையோடிக்கிடக்கிறது. காலாகாலமாக ஆண்களே இந்தச் சமூகத்தை வழிநடத்திச் செல்லும் மேய்ப்பர்கள் என்ற ஆண்மையவாதத்திலிருந்தபடி தொடர்ந்து பெண்களுக்கெதிரான நச்சு வார்த்தைகளை இறைத்துவருகிறார். 

எழுத்துரு மாற்றம் இன்னபிற விடயங்களில் தனது “மேலான” கருத்துக்களைச் சொல்லி சர்ச்சைகளின்மூலம் “மஞ்சள் ஒளி வட்ட“த்தில் இருந்துகொண்டே இருக்கப் பிரியப்படுகிற அவரது மனச்சிக்கலைப் புரிந்துகொள்கிறோம். ஆனால், எழுதும் பெண்கள்மீது அவரால் பிரயோகிக்கப்படும் கருத்து வன்முறையை இனியும் புறந்தள்ளிக் கடந்துசெல்வதற்கில்லை.

‘பெரிதினும் பெரிதினை’த் தேடுவதாகத் தன்னைக் குறித்துச் சொல்லிக்கொள்ளும் ஜெயமோகன், தமிழிலக்கிய வாசகர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட ஆர்.சூடாமணி இறந்தபோது எழுதிய அஞ்சலிக் கட்டுரையில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.

“சூடாமணியின் கதைகளில் இலக்கியமதிப்பு மிகக்குறைவு என்றே நான் எண்ணுகிறேன். சூடாமணியை இன்றைய நிலையில் வாழும் இலக்கியகர்த்தாவாக அணுகமுடியாது. தமிழ்ச்சிறுகதை, நாவல் ஆகியவற்றின் பரிமாணத்தில் அவருக்குப் பங்கேதும் இல்லை”எனக் கூறியதன் மூலம், தமிழின் முன்னோடிகளுள் ஒருவரான சூடாமணியின் இலக்கியப் பங்களிப்பையே தடாலடியாக நிராகரித்திருக்கிறார். மேலும், அவருக்கு ‘கலைமகள் பாணி எழுத்தாளர்’என்று பெயர் சூட்டிக்குறுக்குகிறார். (பார்க்க: ஆர்.சூடாமணி, நவம்பர் 02, 2010) இங்ஙனம் எழுதுவதன் மூலமாக தமிழிலக்கியத்தின் அறிவித்துக்கொள்ளப்படாத தர நிர்ணயக் கட்டுப்பாளராக தன்னைத்தான் நியமித்துக்கொண்டிருக்கிறார். ஒரு வாசகனாக, படைப்பாளியாக அவ்விதம் சொல்வதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது என்ற ஜனநாயகத்தின் அடிப்படையில் அதைப் பொறுத்துக்கொண்டோம்.

கேரள இலக்கிய ஆளுமைகளுள் ஒருவரான மாதவிக்குட்டி என்கிற கமலா தாஸ் மறைந்தபோது, அவரைக் குறித்து எழுதப்பட்ட அஞ்சலிக் கட்டுரையில், (பார்க்க:  அஞ்சலி: கமலா சுரையா, ஜூன் 01,2009)  “இளவயதுத் தோழனின் விந்துவின் வாசனை பற்றிய வர்ணனைகள் அவரைப் புகழ்பெறச் செய்தன”என்று சற்றும் கூச்சமின்றி எழுதுகிறார். மேலும், மாதவிக்குட்டியின் மகன் மாத்ருபூமி ஆசிரியராக இருந்த காரணத்தினாலேயே அவர் மிகையாகப் புகழப்பட்டார் என்றும் எழுதுகிறார். 

அவர்பாலான தன்னுடைய அசூசை வெளித்தெரிந்துவிடக் கூடாதென்பதற்காக சற்றே புகழ்ந்துவிட்டு, “கமலாவின் பிரச்சனைகளின் ஊற்றுமுகம் ஒன்றுதான். அவர் அழகி அல்ல. கறுப்பான, குண்டான கிட்டத்தட்ட அவலட்சணமான பெண். தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் முனைப்பும் தணியாத விளம்பரவெறியும் கொண்டவர் கமலா” என்கிறார். ‘மாதவிக்குட்டி தனது தோற்றம் குறித்துக்கொண்டிருந்த தாழ்வுணர்ச்சியினால், தாளாத காம இச்சை கொண்டிருந்தார் என்பதை அவரது சுயசரிதை வழி அறியமுடிகிறது’ என்றும் கீழ்மைப்படுத்துகிறார். 

ஆக,படைப்பு முதற்கொண்டு பெண்களின் அனைத்துச் செயற்பாடுகளும் அவர்களது தோற்றம் மற்றும் உடலையே அடிப்படையாகக் கொண்டவை என்பதை ஜெயமோகன் நிறுவமுற்படுகிறார். மேலதிகமாக, தமிழ்கூறும் நல்லுலகில் அறியப்பட்ட படைப்பாளியாக இருக்கக்கூடிய ஜெயமோகனின், அழகு பற்றிய வரைவிலக்கண இலட்சணமும் நமக்குத் தெரிந்துபோகிறது. இந்தப் பாரதத் திருநாட்டில் விசித்திரமான நடத்தைகளோடும் பேச்சுக்களோடும் உலவும் சில ஆண் இலக்கியவாதிகளை எவ்வுணர்ச்சி செலுத்தியது என்பதைக் குறித்து ஜெயமோகன் ஏன் எந்தக் கருத்தையும் முன் வைக்கவில்லை என்பதை, அவரது உள்ளொளிதான் அவருக்கும் நமக்கும் விளக்கிச் சொல்ல வேண்டும். 

இத்தகைய நவீன மனுக்களின் ஆசாடபூதித்தனங்கள், பக்கச்சாய்வுகள் பொதுவெளியில் அம்பலப்படுத்தப்படவேண்டியவை. 
பெண் படைப்பாளிகள்மீது இவருக்கு ஆழமான வெறுப்பு இருப்பதை அவர் எழுத்துப்பூச்சினால் என்னதான் மறைக்கமுயன்றாலும் அவரையும் மீறிக்கொண்டு அந்த வெறுப்புணர்வு வெளிப்பட்டுவிடுகிறது. 

“பெண்-1, பெண்களின் காதல்” (அக்டோபர் 22, 2012) என்ற கட்டுரையில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.

“இன்று இளம் வாசகிகளில் கணிசமானவர்கள் நம்முடைய அசட்டுப்பெண்ணியர்களால் ஆரம்பத்திலேயே பார்வை திரிக்கப்பட்டு இலக்கியத்திற்குள் நுழையவே முடியாதவர்களாக ஆகிவிட்டிருக்கிறார்கள். உண்மையான இலக்கிய அனுபவம்
என்றால் என்னவென்றே தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.”

“இங்கே பெண்ணியம் பேசும் பெண் எழுத்தாளர்கள் பலரை நான் கவனித்து வருகிறேன். பொருட்படுத்தும் அளவுக்கு அடிப்படை வாசிப்புள்ள எவரையுமே நான் பார்த்ததில்லை. அவர்களிடம் ஒரு எளிய விவாதத்தை முன்னெடுக்கக்கூடத் தோன்றியதில்லை. அவர்களால் ஒரு சிறு சலசலப்புக்கு அப்பால் பொருட்படுத்தும் இலக்கிய ஆக்கங்கள் எதையுமே உருவாக்க முடியாமல் போனமைக்குக் காரணம் இதுவே. 
இவர்கள் பேசும் பெண்ணியம் என்பது இலக்கியவாசகனின் எதிர்பார்ப்பு என்ற சவாலைச் சந்திக்கமுடியாமல், தங்கள் சொத்தைப் படைப்புக்களைப் பொத்திக்கொள்ள உருவாக்கிக்கொள்ளும் ஒரு எளிய தற்காப்புமுறை மட்டுமே”

“இந்தச் சல்லிக்குரல்களை முழுக்கத் தூக்கிவீசிவிட்டு வரும் உண்மையான படைப்பூக்கமும் அதற்கான படைப்புத்திமிரும் கொண்ட பெண்ணெழுத்தாளர்களுக்காகத் தமிழ் காத்திருக்கிறது.”

எத்தனை வன்மம், காழ்ப்புணர்வு, ஒவ்வாமை இருந்தால் இப்படி எழுதமுடியும்! ஒருவருக்குள் இத்தனை மன இருட்டும் வெறுப்புணர்வும் மறைந்திருப்பது அதிர்ச்சியூட்டுவதாயிருக்கிறது. பெண்ணியம் என்ற சொல்லின் பொருள், ‘ஆண்கள்மீதான வெறுப்பு’ என்ற தவறான புரிதலையே ஜெயமோகனும் கொண்டிருக்கிறார். அதனால்தான் அந்தச் சொல் மீது இத்தனை செருப்படி விழுகிறது. 

மேலும்,‘தமிழ் காத்திருக்கிறது’என்று மொழிவதன் மூலம் அவர் சொல்ல எண்ணுவது ஒன்றுதான்: இங்கு எழுதிக்கொண்டிருக்கும் பெண்களுள் யாருமே குறிப்பிடத்தக்க அளவில் எழுதவில்லை, அவர்கள் அடையாளமற்றவர்கள், ஆகவே, தமிழிலக்கியத்தில் பங்குதாரர்களாக உரிமை கொண்டாடும் பாத்தியதை அற்றவர்கள் என்பதையே அவர் தன் ஆணித்தரமான வாதங்கள் மூலம் மீண்டும் மீண்டும் நிறுவ முயற்சிக்கிறார். மேலும், ஒன்றைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் அதை உண்மையென நம்பவைக்கும் உத்தியை, ‘பெண்களுக்கு ஆழமான வாசிப்பு கிடையாது’என்று சொல்வதன் மூலம் இன்றுவரை அவர் செய்துவருகிறார். எழுதுகிற பெண்களது வாசிப்பின் ஆழத்தை ஜெயமோகன் போன்ற இலக்கியப் பிதாமகர்களிடத்தில் அடிக்கடி சென்று நிரூபித்துச் சான்றிதழ் பெற்றுவருவதன் சாத்தியங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம்.

திருவாளர் ஜெயமோகன் சில முடிந்த முடிவுகளைக் ண்டிருக்கிறார். அவர் இரவும் பகலும் எழுதிக்கொண்டிருக்கிற காரணத்தால், தலையைத் தூக்கி அவற்றை மீள்பரிசீலனை செய்ய அவருக்கு நேரம் இருப்பதில்லை. ‘ஐஸ்வர்யா ராயும் அருந்ததி ராயும்’ (டிசம்பர் 08, 2010) என்ற கட்டுரையில் பெண் வெறுப்புத்தாரை கீழ்க்கண்டவாறு பொழிகிறது.

“ஐஸ்வர்யா ராயை நான் ஒருமுறை சந்தித்திருக்கிறேன். அரைமணி நேரம் பேசிக்கொண்டிருந்தேன். அழகான பெண். அழகான பெண்கள் வழக்கமாக இருப்பதுபோல அல்லாமல், புத்திசாலியும்கூட”என்கிறார்.

ஆக, அழகான பெண்கள் எல்லோரும் முட்டாள்கள் என்ற முடிந்த முடிவினை அவர் கொண்டிருக்கிறார். இவரைத்தாம் தமிழ் வாசகப் பரப்பு இலக்கியகர்த்தா என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறது என்ற நிலை அவமானகரமானது. அதே கட்டுரையில், “அருந்ததி போராளி அல்ல, வெறும் ஊடகப் பிரமை மட்டுமே!”என்று சொல்கிறார். புக்கர் பரிசு பெற்ற அருந்ததிராயின் நாவல் ஆழமற்றதும் இந்திய வாசகர்களுக்கு ஏமாற்றமளித்ததும் என்கிறார். அது ஒரு படைப்பினை விமர்சனம் செய்யும் உரிமையின்பாற்பட்டது. ஆனால், அருந்ததி ராய் என்ற பெண் மீது, அந்த ‘ஊடகப் பிரமை’மீது ஜெயமோகன் கொண்டிருந்த காழ்ப்புணர்வானது ‘எனது இந்தியா’ (ஜூலை 02, 2012) என்ற கட்டுரையில் மிகக் கேவலமாக வெளிப்பட்டிருக்கிறது.

“அடிப்படையான வரலாற்றுணர்வோ சமநிலையோ இல்லாத அருந்ததி போன்ற குருவிமண்டைகள் ஊடகங்களில் இன்று பெறும் அதீத முக்கியத்துவம் மிக மிக ஆச்சரியமானது” என்கிறார் ஜெயமோகன். அருந்ததிராயின் நாவல்மீது, அவர் மேலைத்தேய ஊடகங்களால் அளவுக்குமீறித் தூக்கிப்பிடிக்கப்படுகிறார் என்ற விமர்சனத்தின்மீது எங்களிற் சிலருக்கும் உடன்பாடு உண்டு. 

ஆனால், ஒருவரை, அவரது தோற்றத்தினை முன்வைத்து இகழும் அற்பத்தனத்தை எக்காரணங்கொண்டும் மன்னிக்க முடியாது. நொண்டி என்றும், குரூபி என்றும், குருவி மண்டை என்றும், சல்லிக்குரல்கள் என்றும் சக மனிதரை வசைபாடுவது அருவருப்பின் உச்சம். அதையொரு அறியப்பட்ட படைப்பாளி செய்வதென்பதும் அதைச் சகித்துக்கொண்டு, ‘என்றாலும் அவர் நன்றாக எழுதுகிறார்’என்று சிலர் குழைந்து பின் செல்வதும் மனச்சாட்சிக்கு விரோதமான செயலாகும். படுகொலைகளுக்கும் மனக்கொலைகளுக்கும் அப்படியொன்றும் பெரிய
வித்தியாசங்கள் இல்லை.

ஆக, இவரது பெண்வெறுப்பு தமிழகத்தையும் தாண்டி அகில இந்தியாவெங்ஙணும் விரிந்துபரந்துசெல்கிறது. அண்மையில், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களால், ஆனந்த விகடனில், ‘நம்பிக்கை நட்சத்திரங்கள்’என்று சுட்டப்பட்ட படைப்பாளிகளது பட்டியலைக் குறித்து ஜெயமோகன் கீழ்க்கண்டவாறு தன் “மேலான“ கருத்தினை வெளிப்படுத்தியிருக்கிறார்.

“பட்டியலில் உள்ள ஆண்படைப்பாளிகளில் அனைவரும் சிறப்பாக எழுதக்கூடியவர்கள்தான். இன்னும் அதிகமாக அவர்களிடம் எதிர்பார்க்கிறேன். ஆனால், பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பலவகை உத்திகள் மூலம் ஊடகப்பிம்பங்களாக ஆனவர்கள். பலரை ஏன் எழுத்தாளர்கள் அல்லது கவிஞர்கள் என்று சொல்கிறார் நாஞ்சில் என்றே புரியவில்லை.  இது ஒரு முக்கியமான அம்சம். இன்று ஆண்கள் எழுதித்தான் நிற்கவேண்டியிருக்கிறது. பெண்களுக்கு பெண்களாக தங்களை முன்வைத்தாலே இடம் கிடைத்துவிடுகிறது. கொஞ்சம் பெண்ணியமும் பீரிட்டால் பெரும்பாலானவர்கள்  ‘எதுக்கு வம்பு, காலங்கெட்ட காலத்திலே?’என்று ஜகாவாங்கிவிடுவார்கள்.”

–‘நாஞ்சில் நாடன் பட்டியல்’(ஜூன் 09,2014)

எழுதுகிற பெண்களை இதைவிடக் கேவலப்படுத்திக் கீழிறக்க முடியாது. பெண்ணியம் பீறிடுகிறதோ இல்லையோ, ஜெயமோகனுள் படிந்து கிடந்த பெண்வெறுப்பு மேற்கண்ட வாசகங்களில் பீறிட்டுப் பாய்ந்திருக்கிறது. இது சகித்துக்கொள்ள இயலாத இழிவுபடுத்தல், அவமானம், எழுந்தமானத்தில் கருத்துரைக்கிற அறிவீனம், பெண்களது தன்மானம்மீது விழுந்திருக்கும் ஆணாதிக்கத்தின் மிலேச்சத்தனமான அடி. பெண்களால் எழுதப்பட்ட அனைத்துப் படைப்புக்களையும் ஜெயமோகன் வாசித்துவிட்டாரா? என்ற கேள்விகளெல்லாம் ஒருபுறமிருக்கட்டும்.

‘உத்திகள் மூலம் ஊடகப்பிம்பங்கள் ஆனவர்கள்’என்பதன் பொருள்தான் என்ன? உத்தி என்பது உடலைக் குறிக்கிறதா? வளைந்து நெளிந்து செய்யும் சாகசங்களையும் சமரசங்களையும் குறித்ததா? இத்தகைய இழிவுபடுத்தலுக்கு, பாலியல் நிந்தனைக்கு பதிலடி கொடுக்கும்முகமாக ஜெயமோகன்மீது பொதுநல அவதூறு வழக்குக்கூடத் தொடுக்க இயலும்.

சர்ச்சைகள்மூலம் என்றென்றைக்குமாகத் தனது இருப்பினை ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும் ஜெயமோகன், வழக்கம்போல கேள்வியும் பதிலுமாக அடுத்த பதிவில்-‘பெண்களின் எழுத்து’ (ஜூன் 11,2014)- வந்து சப்பைக்கட்டு விளக்கமொன்றை அளித்திருக்கிறார். 

“இந்த ஆண் எழுத்தாளர்களில ஒருத்தர்கூடவா முக்கியமில்லை? ஒருத்தரோட பேட்டியோ படமோ எங்கியாவது வந்திருக்கா? பலரோட முகமே இந்த ஸ்டாம்பு சைஸ் போஸ்டரிலதான வந்திருக்கு. ஏன்?”என்று தனது பாலினம் சார்ந்து ‘தர்க்க’ரீதியாகக் கேள்வியெழுப்புகிறார். ஜெயமோகன் தன்னால் வாங்கப்படும் சஞ்சிகைகளை வாசிக்கிறாரா அன்றேல் எழுதியநேரம் போக அவற்றின்மீது படுத்து உறங்கிவிடுகிறாரா என்பதை அவர்தான் தெளிவுபடுத்தவேண்டும்.

“செய்திகளை அவங்களேகூட திறமையா உருவாக்கிக்கிறாங்க” என்கிறார். பெண்கள்தான் எத்தகைய சூழ்ச்சிக்காரிகளாகவும் விளம்பர மோகிகளாகவும் இருக்கிறார்கள்! நெடுந்தொடர்களில் வரும் (அபத்தமான) வில்லிகளைக் காட்டிலும் படுபயங்கரமானவர்களாயிருக்கிறார்கள் இந்தப் பெண் படைப்பாளிகள்!

“சில பக்கங்களுக்கு பிழையில்லாமல் தமிழ் எழுதக்கூட தெரியாதவர்கள் பலர். உட்கார்ந்து பத்துப் பக்கம் தொடர்ந்து எழுதக்கூட பொறுமையற்றவர்கள்”என்கிறார். பெண் படைப்பாளிகள்மீது காழ்ப்புணர்வுகொண்டு எழுதிய குற்றச்சாட்டுக் கட்டுரையிலேயே எழுத்துப் பிழை விட்ட புத்திசாலி, பெண்படைப்பாளிகளுக்கு இலக்கண வகுப்பெடுப்பதை காலக்கொடுமையன்றி வேறென்னவெனச் சொல்வது? 

எழுதுகிற பக்க எண்ணிக்கையில் இல்லை இலக்கியம்; அது அதன் செறிவிலும் சாரத்திலும் அழகியலிலும் வடிவத்திலும் இருக்கிறது என்பதை காலந்தான் அவருக்குக் கற்பிக்கவேண்டும். ஆயிரம் பக்கக் குப்பைகளை எழுதி காடழித்து மழைவீழ்ச்சியைக் குறைப்பதைப் பார்க்கிலும், காலத்தால் அழியாத ஒரேயொரு கவிதையை எழுதி வரலாற்றில் நிற்பவர் மேல்.

பெண்ணியவாதிகள்மீது இவருக்கு இருக்கும் எரிச்சலை, அண்மையில் வலையேற்றிய தன்னிலை விளக்கக் கட்டுரையிலும் வெளிப்படுத்துகிறார். 

“இந்தப் பெண்களில் பலர் எழுதும் அசட்டுப் பெண்ணியப்படைப்புகளை பெண்ணியமென்பதற்காக அங்கீகரிக்க வேண்டுமென்றால், இதேபோல மாக்ஸியம், சூழியல் என எதையாவது வைத்து எழுதப்படும் எல்லாப் பிரச்சாரக் குப்பைகளையும் அங்கீகரிக்க வேண்டியதுதானே?”என்கிறார்.

பெண்ணெழுத்தையும் சேர்த்து ஆணே எழுதிக்கொண்டிருக்க அனுமதியாது அலையலையாக எழுதக் கிளம்பியிருக்கும் பெண்களைக் குறித்த ஆற்றாமையாகவும் பதட்டமுமாகவே ஜெயமோகனின் கோபத்தைக் கொள்ளவேண்டியிருக்கிறது.

“உண்மையிலேயே இவ்விசயத்தில் விவாதிக்க நினைப்பவர்கள் தமிழில் கிருத்திகாவுக்குப் பின் பெண்கள் எழுதிய எந்த இலக்கியப்படைப்பில் அவர்கள் முக்கியமான வாசக அனுபவத்தை அடைந்தனர் என்று எண்ணிப் பார்க்கட்டும். பெண்கள் எழுதிய எந்தப் படைப்பு சென்ற முப்பதாண்டு காலத்தில் தமிழில் பேசப்பட்டது என்பதைக் கணக்கிடட்டும்”என்று அறைகூவல் விடுத்திருக்கிறார்.

ஆக, கடந்த முப்பதாண்டு காலத் தமிழிலக்கியம் ஆண்களால் மட்டுமே நிறைக்கப்பட்டிருக்கிறது என்ற அடிமுட்டாள்த்தனமான வாதத்தினைச் செய்திருக்கிறார். அம்பை போன்று தமிழில் பெண்ணியச் சிந்தனைகளுக்குத் தமது படைப்பின்வழி வித்திட்டவர்களுக்கும், அந்த முப்பதாண்டு காலப் பகுதியில் எழுதிக்கொண்டிருந்த, எழுதிக் கொண்டிருக்கும் இதர பெண் படைப்பாளிகளுக்கும் தமிழிலக்கியச் சரித்திரத்தில் இடமில்லை என்று சொல்கிறார்.

அவர்களெல்லோரும் ஆணாதிக்கத்தின் துர்க்கந்தத்தில் கற்பூரம்போல கரைந்து போயிருக்கிறார்கள். இவ்வாறு தொடர்ந்து சொல்லிவருவதன் மூலமாக, இலக்கியத்தில் பெண்களுக்குப் பங்கில்லை, அவர்கள் தொடர்ந்தும் அடையாளமற்றவர்களாகவே நீடித்திருக்கிறார்கள் என்ற வாசக மனப்பிம்பத்தைக் கட்டியெழுப்ப ஜெயமோகன் பெரிதும் முயன்றிருக்கிறார். 

தமிழிலக்கிய வரலாற்றின் பாதையில், கண்களில் பட்டை கட்டப்பட்ட குதிரையின்மீதேறி ஆண் சார்புச் சாட்டையோடு விரைந்து வந்துகொண்டிருப்பது ஜெயமோகனாகவன்றி வேறு எவராக இருக்கவியலும்?

நாஞ்சில் நாடனது சர்ச்சையைக் கிளப்பிய பட்டியலில் இடம்பெற்றிருந்த ‘வகை மாதிரி’களில் ஒருவராகவே இந்தக் கண்டனக் கூட்டறிக்கையில் ஜெயமோகன் மையமாக வைக்கப்பட்டிருக்கிறார். ஆனால், தமிழிலக்கியச் சூழலிலும் இணையவெளியிலும் ஆணாதிக்கவாதிகளும் கலாச்சாரச் சாட்டையேந்திய காவலர்களும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள் என்பதற்குப் பல உதாரணங்களைக் காட்ட முடியும்.

மாற்று அரசியற் கருத்துக்களை முன் வைக்கும் பெண்களது ஒழுக்கங் குறித்து கேள்வியெழுப்புவதன் மூலமும், அவர்களைக் குறித்து அவதூறுகளைப் பரப்புவதன் மூலமும், பாலியல் ரீதியான வக்கிரச் சொல்லாடல்கள் மூலமும் பெண்களைப் பின்னடிக்கச் செய்வதே அவர்களது அரசியல் விவாதமாக இருந்துவருகிறது. தனிமனிதத் தாக்குதல்களில் பதிப்பாளர்களோ(சிலர்) அன்றேல் இலக்கியவாதிகளோ (சிலர்) சளைத்தவர்களல்ல என்பதைக் கண்கூடாகக் கண்டுவருகிறோம். 

அவர்களிற் சிலர் குழுவாகச் சேர்ந்துகொண்டு பெண்களுக்கெதிரான தங்களது எள்ளல்களை,  இழிவுபடுத்தல்களை, அவதூறுகளை ‘நிறுவனமய’ப்படுத்தி வருகிறார்கள். இக்கூட்டறிக்கையின் கனதி மற்றும் விரிவஞ்சி அவர்களது பெயர்களை விலக்கியிருக்கிறோம்.  இனி வருங்காலத்தில் அத்தகையோரின் நிலைப்பாடுகள் குறித்து தொடர் உரையாடல்களை நிகழ்த்தவுள்ளோம். 

ஆக மொத்தத்தில், ஜெயமோகனால் ‘கண்டுபிடிக்கப்பட்ட’ வார்த்தையொன்றில் சொல்வதானால், இணையம் ஒரு விரிந்த ‘வசைவெளி’யாக மாறிவருகிறது. துரதிர்ஷ்டவசமாக அந்த வார்த்தையைக் கண்டுபிடித்தவரே அதனைப் பிரயோகிப்பவருமாயிருக்கிறார். இலக்கியத்தில் அறம் என்றும், அழகியல் என்றும், உள்ளொளி என்றும் சொற்களை வைத்து சிலம்பாட்டம் ஆடினால் மட்டும் போதாது; சகவுயிரை மதித்தலே மனித விழுமியங்களில் முதன்மையானதாகும் என்பதை முதலில் ஜெயமோகன் உணர்ந்துகொள்ளவேண்டும்.

இந்த ஆணாதிக்க சமூகத்தில் குடும்பம் என்ற பாரபட்சங்கள் நிறைந்த அமைப்பினுள் இருந்தபடி எழுதுவதென்பது எத்தனை சிரமத்திற்குரியது என்பதை, அறிவின்பாற்பட்டுச் சிந்திக்கும் அனைவரும் அறிவர். எனினும், அதற்காக பெண்கள் தங்கள் எழுத்தின்மீது மென்சாய்வு காட்டுங்கள் என்று கோரவில்லை; விமர்சனங்களில் கருணைகூர்ந்திடுங்கள் என்று கையேந்தி நிற்கவில்லை. இத்தகைய அவதூறுகளை, இழிவுபடுத்தல்களை சகவுயிரிகளாகிய எங்கள்மீது செய்யாதீர்கள் என்பதே எங்களது வேண்டுகோள். 

எத்தனையோ நூற்றாண்டுகளாக பெண்ணடிமைத்தனம் என்ற ஈயக்குண்டை எங்கள் கால்களில் இழுத்தபடி நகரமுடியாமல் நகர்ந்துகொண்டிருக்கிறோம். இந்நிலையில், படைப்பாளிகள் என்ற முகமூடியை அணிந்தபடி உங்கள் பிற்போக்குவாத எச்சிலை இங்கு வந்து கொட்டாதீர்கள் என்றே நாங்கள் சொல்கிறோம். உங்களைக் குறித்த மிகை பிம்பங்களைக் கட்டியெழுப்ப ஆயிரக்கணக்கிலான வழிகளுண்டு. அவற்றையெல்லாம் விடுத்து, உங்கள் ஆணாதிக்க ‘அறிவாயுதங்களை’ எங்கள் மீது கூர்தீட்டிப் பார்க்க முற்படாதீர்கள்.

ஜெயமோகனது மேட்டிமைத்தனத்திலிருந்து முகிழ்த்தெழும் அபவாதங்களைத் தட்டிக் கேட்கும் பொறுப்பு, பெண்களைப்போலவே சக ஆண் எழுத்தாளர்களுக்கும் உண்டு. எனினும், அவர்களிற் பலர் அதைக் கண்டுகொள்ளாதது போலவே கடந்து செல்கிறார்கள். அல்லது, அவரது நிலைப்பாட்டினையே அவர்களும் கொண்டிருந்து அவரது வார்த்தைகளில் உள்ளுக்குள் மகிழ்கிறார்கள். ஒவ்வொரு படைப்பாளியும் தத்தம் மனச்சாட்சியைக் கேள்வி கேட்கவேண்டிய நேரமிது. சக எழுத்தாளர், நண்பர், முன்னுரை எழுதித் தருகிறவர், விருதுகளுக்குப் பரிந்துரைத்தவர், பரிந்துரைக்கவிருக்கிறவர் என்ற சமரசங்களையெல்லாம் பின்தள்ளி மனச்சாட்சியின் குரலுக்கு செவிமடுத்து எழுபவரே மனிதர்! அவரே உண்மையான படைப்பாளி!

தன் இருப்பின் மூலவேர் ஆட்டங்கண்டுவிடுமோ என அஞ்சி எல்லோரையும் சந்தேகிக்கும், தன் வீரத்தை அடிக்கடி பறையறைவித்துக்கொள்ளும், பாதுகாப்பு வளையத்தை இறுக்கமாக்கும் சர்வாதிகாரியின் சஞ்சல மனநிலையையே ஜெயமோகன் தற்போது கொண்டிருக்கிறாரோ என ஐயுறுகிறோம். நூற்றாண்டுகளாக ஆணாதிக்கம் என்ற சகதியினுள்ளிருந்து வெளிவரப்  போராடிக் கொண்டிருக்கும் பெண்களுக்கு எதிரான ஜெயமோகனின் காழ்ப்புணர்வுச் சாடல்களுக்கு எதிராக, இந்த அறிக்கையினூடாக எமது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்ஙனம்

அம்பை

குட்டி ரேவதி

சுகிர்தராணி

தமயந்தி

கவிதா முரளிதரன்

சே.பிருந்தா

அ.வெண்ணிலா

சல்மா

பெருந்தேவி

தமிழச்சி தங்கபாண்டியன்

மோனிகா

ஜீவசுந்தரி பாலன்

உமா சக்தி

தர்மினி

கவிதா சொர்ணவல்லி

வினோதினி சச்சிதானந்தம்

கவின்மலர்

மயு மனோ

சக்தி ஜோதி

தமிழ்நதி

லிவிங் ஸ்மைல் வித்யா

ஸ்வாதி ச.முகில்

ஆர்த்தி வேந்தன்

நறுமுகைதேவி

முபீன் சாதிகா

பாரதி செல்வா

ரமா இன்பா சுப்ரமணியம்

ஷஹிதா

கொற்றவை

பரமேஸ்வரி

சபிதா இப்ராஹிம்

ச.விஜயலட்சுமி

உமா மோகன்

ஹேமாவதி

பிரசாந்தி சேகரம்

நாச்சியாள் சுகந்தி

ஜீவசுந்தரி பாலன்

பத்மஜா நாராயணன்

கீதா இளங்கோவன்

பாலபாரதி

சி.புஷ்பராணி

பானுபாரதி

பவானி தர்மா

இளமதி

கிர்த்திகா தரன்

நிலவுமொழி செந்தாமரை

சு.தமிழ்ச்செல்வி

நந்தமிழ்நங்கை

கல்பனா கருணாகரன்

சி.மீனா

ஜென்னி டாலி

ப்ரியம்வதா

இந்திராகாந்தி அலங்காரம்

தமிழ்ப்பெண் விலாசினி

கு.உமாதேவி

தேனம்மை லஷ்மணன்

அப்துல் ஹக். லறீனா

கீதா நாராயணன்

ஃபாயிஸா அலி

பெண்ணியம் இணையத் தளக் குழு(தில்லை, கேஷாயணி, 
சுகந்தி,வெரோனிக்கா, சரவணன்)

லதா சரவணன்

ஜீவலக்ஷ்மி

ஷில்பா சார்லஸ்

அகல்யா பிரான்ஸிஸ்

ராஜ் சுகா

சசிகலா பாபு

சுபாஷினி திருமலை

நிவேதா உதயன்

கோதை, சாந்தி

பிறேமா

நிலா லோகநாதன்

(எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், செயற்பாட்டாளர்கள்)

பிற்குறிப்பு: 

இந்தக் கண்டனக் கூட்டறிக்கையோடு உடன்படுகிற ஆண் படைப்பாளிகள், கலைஞர்கள் இந்தப் பதிவின் கீழ் தமது ஒப்புதலைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முண்டாசுப்பட்டி - சினிமா விமர்சனம்

16-05-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

குறும்படங்களெல்லாம் முழு நீள சினிமாக்களாக உருப்பெற்று வெற்றி பெற்ற வரிசையில் அடுத்தது இந்தப் படம்தான்..! ஒரு சின்ன விஷயத்தை வைத்து இரண்டரை மணி நேர நகைச்சுவை கதம்பமாக கொடுத்திருப்பதற்கு முதற்கண் இயக்குநருக்கு எனது இதயங்கனிந்த நன்றிகள்..! குறும்படமாக நாம் தொலைக்காட்சியில் பார்த்தபோது இருந்த வீரியத்தைவிட பல மடங்கு பெரிய திரையில் தெரிகிறது.

  

சத்தியமங்கலம் அருகேயுள்ள முண்டாசுப்பட்டி என்ற கிராமத்தில்தான் படம் துவங்குகிறது. சுதந்திர காலக்கட்டத்திற்கு முன்பு அந்த ஊருக்கு வரும் ஒரு பிரிட்டிஷ்காரர் அவ்வூர் மக்களை புகைப்படமெடுக்கிறார். அப்படி புகைப்படமெடுத்த நேரத்தில் ஒரு பெண்மணி இறந்து போகிறார். தொடர்ந்து அந்த ஊரில் கொள்ளை நோய் என்ற அம்மை அசுர வேகத்தில் பரவி பலரும் இறந்து போகிறார்கள். இதெல்லாம் ‘தெய்வக் குற்றம்’ என்று நம்புகிறார்கள் மக்கள்.

அந்த ஊரின் காவலனான சாமி சிலையை ஒரு நாள் நள்ளிரவில் கள்வர்கள் திருடுகிறார்கள். அதனைத் தடுக்க மக்கள் போராடும் நேரத்தில் விண்ணில் இருந்து பறந்து வரும் விண் கல் ஒன்று அந்தக் கொள்ளையர் கூட்டத்தின் தலைவனைத் தாக்க அவன் ஸ்தலத்திலேயே மாண்டு போகிறான். உடனேயே அந்தக் கல்லை பீடத்தில் வைத்து ‘விண் சாமி’ என்று வணங்கத் துவங்குகிறார்கள்.

மீண்டும் ஒரு நாள் அந்த பிரிட்டிஷ்காரர் அவ்வூருக்கு திரும்ப வந்து புகைப்படமெடுக்க.. அவரை கல்லால் அடித்து விரட்டுகிறார்கள் மக்கள். அதிலிருந்து அந்த ஊரில் இருக்கும் யாரும் தங்களை புகைப்படமெடுக்க அனுமதிப்பதில்லை. ஆனால் ஒரு மனிதர் இறந்து பின்பு அவருடைய நியாபகமாக அப்போது மட்டும்... பிணத்தை மட்டும்.. புகைப்படமெடுக்க அனுமதிக்கிறார்கள்.

இந்தச் சூழல் இப்படியே இருக்க.. பக்கத்தில் இருக்கும் சத்தியமங்கலத்தில் ‘ஹாலிவுட் ஸ்டூடியோ’ என்ற பெயரில் போட்டோ ஸ்டூடியோ வைத்திருக்கிறார் ஹீரோ விஷ்ணு விஷால். துணைக்கு காளி. 

சத்தியமங்கலம் அருகேயுள்ள பள்ளியொன்றில் பிளஸ் டூ படிக்கும் மாணவிகளை புகைப்படம் எடுக்கும் பெரிய ஆர்டர் இவர்களுக்குக் கிடைக்கிறது. ஒழுக்கமாக புகைப்படம் எடுக்க வந்த ஹீரோ, அங்கே படித்துக் கொண்டிருக்கும் கலைவாணி என்கிற ஹீரோயின் நந்திதாவைப் பார்த்த்தும் புத்தி பேதலித்துப் போகிறார். தமிழ்ச் சினிமா கலாச்சாரத்தின்படி பார்த்தவுடன் காதல் கொள்கிறார். ஆனால் ஹீரோயின் புகைப்படம் எடுக்க வராமல் எஸ்கேப் ஆகிறார். 

எடுத்த புகைப்படங்களை அனைத்து மாணவிகளுக்கும் கொடுக்கத் திரும்பவும் பள்ளிக்கு வரும் ஹீரோவுக்கு, அங்கே ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. “ஹீரோயினுக்கு அடுத்த வாரம் கல்யாணம். அவ இனிமே ஸ்கூலுக்கு வர மாட்டாள்..” என்கிறாள் அவளது தோழி. பேஸ்தடித்துப் போன நிலையில் பிக்காலியாகிறார் ஹீரோ.

இப்படியே விட்டால் கதையை நகர்த்த வேண்டுமே..? முண்டாசுப்பட்டி ஊரில் இருந்து ஒருவர் புகைப்படமெடுக்க அவர்களை வருந்தி, வருந்தி அழைக்கிறார். கிடைக்கிற வேலையை பார்ப்போம் என்ற எண்ணத்தில் அங்கே செல்லும் நமது புகைப்படக் கலைஞர்களுக்கு இரண்டு அதிர்ச்சி காத்திருக்கிறது. 

ஒன்று.. அந்த ஊர் தலைவரின் உயிர் இழுத்துக் கொண்டிருக்கிறது. இன்னமும் சாகவில்லை. அவர் சாகும்வரையில் காத்திருந்து, செத்தவுடன் அவரை புகைப்படமெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை. இரண்டாவது அதிர்ச்சி ஹீரோவுக்கு மட்டும் இனிக்கிறது.. ஹீரோயின் அந்த இழுத்துக் கொண்டிருக்கும் தலைவரின் பேத்தி..! ஹீரோயினை பார்த்தவுடன் ஹீரோ அந்த ஊரிலேயே டேரா போடும் மூடுக்கு வந்துவிடுகிறார். 

இன்னொரு பக்கம் பக்கத்து ஊர் ஜமீன்தாரரான ஆனந்த்ராஜ் பழைய காலத்து சிலைகளையும் புராதனப் பொருட்களையும் கடத்தி விற்பனை செய்வதில் விற்பன்னர். அவரிடத்தில் முண்டாசுப்பட்டி மக்களிடம் முன்னொரு காலத்தில் கல்லடி வாங்கி ஓடிய பிரிட்டிஷ்காரரின் மகன் வருகிறார். தன்னுடைய அப்பா அந்த ஊரில் இருந்து வரும்போது அங்கேயிருந்த கோவிலின் சாமி கல்லின் ஒரு பகுதியை கொண்டு வந்தார். அதனை இப்போது சோதனை செய்து பார்த்ததில் அதில் பல அரிய காணக் கிடைக்காத தனிமங்கள் இருப்பது தெரிகிறது. அந்த விண் கல்லை களவாடிக் கொடுத்தால் அதற்காக 80000 பவுண்டுகள் கொடுப்பதாக ஆசை காட்டுகிறார். ஆனந்தராஜும் இதற்கு ஒத்துக் கொள்கிறார்.

முண்டாசுப்பட்டியில் ஊர்த் தலைவர் ஒரு வழியாக இறந்துபோக புகைப்படமெடுக்கும் படலம் நடக்கிறது. இந்தப் புகைப்படத்தை பிராசஸ் செய்யும்போதுதான் அது தெளிவாக எடுக்கப்படவில்லை என்பது இருவருக்கும் புரிகிறது. என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார்கள். கடையில் தீ வைக்கவும் முயல்கிறார்கள். அதுவும் பலனளிக்கவில்லை. கடைசியாக ஆபத்பாந்தனாக வருகிறார் முனீஸ்காந்த் என்கிற ராம்தாஸ்.

கோடம்பாக்கத்தில் மிகப் பெரிய நடிகனாக வலம் வர வேண்டும் என்கிற ஒற்றைக் குறிக்கோளோடு அலைந்து கொண்டிருப்பவர். அவரை சினிமாவுக்காக புகைப்படம் எடுக்கும்போது திடீரென்று ஒரு யோசனை வர.. பாரதிராஜாவிடமிருந்து போன் வருவதுபோல செட்டப் செய்து ஒரு படத்தில் பிண வேடத்தில் நடிக்க ஆள் வேண்டும் என்று பாரதிராஜா கேட்பதாக முனீஸ்காந்திடம் பற்ற வைக்கிறார்கள். அவரும் நான்தான் அந்த வேடத்தில் நடிப்பேன் என்று ஒற்றைக் காலில் நிற்க.. அவரை பிணமாக நடிக்க வைத்து அந்தப் புகைப்படத்தை கொண்டு போய் முண்டாசுப்பட்டிக்காரர்களிடம் கொடுக்கிறார்கள்.

ஹீரோயினின் பார்வை பட வேண்டும் என்பதற்காகவே சாப்பிடும்போது அவரை அடிக்கடி கூப்பிட்டு, கூப்பிட்டு தொல்லைபடுத்திய இவர்களுக்கு ஆப்படிக்க அப்போதுதான் வீட்டுக்குள் வருகிறார் முனீஸ்காந்த். “சித்தப்பா” என்ற கதறலோடு உள்ளே வந்து அவருடைய புகைப்படத்தை பார்த்தே கதறுபவர் அங்கே சாப்பிட்டு கொண்டிருக்கும் ஹீரோவையும், காளியையும் பார்த்ததும் அதிர்ச்சியாகிறார். அடுத்த நொடியே அந்தப் புகைப்படத்தில் இருப்பது தான்தான் என்பதையும் தெரிந்து கொள்ள..

பாதி சாப்பிட்டிலேயே தப்பிக்க நினைத்து பைக்கை பத்துகிறார்கள். அவர்களது பைக் சைக்கிளைவிட மெதுவாகச் செல்ல ஹீரோயினின் தம்பியாலேயே பிடிபடுகிறார்கள். வீட்டு முன்பாக கட்டிப் போடப்பட்ட நிலையில் இருக்கும் இவர்களைப் பார்த்து பரிதாபப்படும் ஹீரோயின், அவர்களின் கட்டுக்களை அவிழ்த்துவிட்டு பைக் சாவியையும் கொடுத்து தப்பியோடும்படி சொல்கிறாள்.

ஆனால் ஹீரோ முடியாத மனநிலையில் இருக்கிறார். மறுநாள் காலையிலும் அவர்கள் அதே ஊரில் இருக்க.. பஞ்சாயத்து கூடுகிறது.. அவ்வூர் வழக்கப்படி ஏற்கெனவே கோவிலின் விண்ணு சாமியைக் களவாட வந்தவனின் கையை உடைத்து அனுப்பியதுபோல இவர்களுக்கும் நடக்க ஆகம காரியங்கள் நடக்கின்றன. 

ஆனால் உத்தரவு கொடுக்க வேண்டிய கோவில் மணி, காற்றடித்தும் அடிக்காமல் அதற்குள் தொங்கிக் கொண்டிருந்த இரண்டு பல்லிகள் ராஜதந்திர முயற்சியாக தடுக்க தெய்வம் இதற்கு உத்தரவு தரவில்லை என்று சொல்லி.. இவர்களுக்கு வேறு மாதிரியான தண்டனையைக் கொடுக்கச் சொல்கிறார்கள்.

“ஊரின் ஒரு இடத்தில் கிணற்றை இருவருமே தோண்ட வேண்டும். தண்ணீர் வந்த பின்புதான் ஊரைவிட்டே போக வேண்டும்...” என்கிறார் ஊர்த் தலைவரான ஹீரோயினின் அப்பா. காளி தப்பிக்க நினைக்க ஹீரோ, ஹீரோயினின் நினைவில் அதற்கு மறுக்கிறார். உடன் இருந்த பாவத்திற்காக காளியும் கிணற்றைத் தோண்டிக் கொண்டேயிருக்க.. இப்போது ஹீரோயினிடம் தன்னுடைய காதலைப் பற்றிச் சொல்லியே விடுகிறார் ஹீரோ. ஹீரோயினுக்கு ஏற்கெனவே படிப்பை பாதியில் நிறுத்தியது பிடிக்கவில்லை.. மாப்பிள்ளையையும் பிடிக்காமல் இருக்கிறது. இந்தச் சூழலில் இந்த லவ் புரோபஸலை ஏற்பதா வேண்டாமா என்கிற குழப்பத்திற்கு ஆளாகிறாள்.  ஹீரோவும் ஹீரோயின் இல்லாமல் ஊரைவிட்டு வெளியேறப் போவதில்லை என்கிற கொள்கையில் இருக்கிறான்.

ஹீரோ எப்படி ஹீரோயினின் கரம் பிடிக்கிறான் என்பதும், அந்தக் கிராமத்தில் இருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதும்தான் மிச்சம் மீதிக் கதை..!

முதல் பாராட்டு இயக்குநருக்கு. முதல் முறையாக பெரிய திரையில் இயக்குநராக அறிமுகமாகுபவர்களுக்கு காட்சியமைப்புகளிலேயே நகைச்சுவையைக் கொண்டு வரும் கலை அத்துப்படி என்றால் நிச்சயம் அவர்கள் கவனிக்கத்தக்கவர்கள். அந்த வகையில் இந்தப் படத்தின் இயக்குநரையும் வெகுவாகப் பாராட்ட வேண்டும். காட்சிகளிலேயே நகைச்சுவையை அள்ளித் தெளித்திருக்கிறார்.

ஹீரோ விஷ்ணு விஷால் தொடர்ந்து இது போன்ற கதைகளின் நாயகனாக நடித்து வெற்றி பெற வேண்டும்.. வழக்கமான காதலனாக.. காதலிக்கு ஏங்கும் ஆண்மகனாக.. இயல்பைத் தொலைத்துவிடாமல் நடித்திருக்கிறார். டயலாக் டெலிவரியிலும் கச்சிதம்.. இவருக்குத் துணை நின்ற காளியின் மைண்ட்வாய்ஸ் டயலாக்குகள் பல கைதட்டல்களை அள்ளினாலும் சிலவைகள் கொஞ்சம் சலிப்பைத் தந்ததென்னவோ உண்மை.

படத்தில் மெச்சத் தகுந்த கண்டுபிடிப்பு முனீஸ்காந்த்தாக நடித்த ராம்தாஸ்தான்.. மனிதர் இத்தனை நாளாய் எங்கேயிருந்தார் என்று தெரியவில்லை. இவர் வருகின்ற காட்சிகளெல்லாம் காமெடி பட்டாசுகள்தான்.. தன்னுடைய புகைப்படத்தை பார்த்துதான் தான் அழுகிறோம் என்பதை உணர்ந்தவுடன் அவர் காட்டும் முகபாவனையில் துவங்கிய காமெடி கடைசிவரையிலும் இவர் வருகின்ற காட்சிகளிலெல்லாம் கை தட்ட வைக்கிறது.. 

சாமி கல்லைத் தேடி பழைய பள்ளிக்கூடம் பக்கம் இவரை அனுப்பச் சொல்லி யாரும் சொல்லாமலேயே பார்வையாலேயே புரிந்து கொண்டு தவிக்கிறார் பாருங்கள்.. அவருடைய ஆக்சனிலேயே சிரிப்பினால் நமக்கு பொறை ஏறுகிறது. கிணத்துக்குள் மாட்டிக் கொண்டுகூட இவரால் இப்படியெல்லாம் பேசி சிரிக்க வைக்க முடிகிறதெனில் ஒரு ரவுண்டு வருவதற்குத் தகுதியானவர் என்றே இவரைச் சொல்லலாம்.

நந்திதாவின் குளோஸப் ஷாட்டுகளே அவரது அழகை பறைசாற்றுகிறது. பெரிய அளவுக்கு ஸ்கோப் இல்லையென்றாலும் கொடுத்ததை நிறைவாகவே செய்திருக்கிறார். ‘அட்டக்கத்தி’போல் இங்கேயும் அல்வா கொடுத்துவிடுவாரோ என்றெல்லாம் நினைக்க வைத்து கொஞ்சம் அலைக்கழித்திருக்கிறது இவரது கேரக்டர் ஸ்கெட்ச்.. பாடல் காட்சிகளில் இவரை இன்னமும் அழகாக்க் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.வி.ஷங்கர். படத்தின் துவக்கத்தில் வரும் காட்சிகள் ஒளிப்பதிவில் மெருகேற்றப்பட்டிருந்தாலும் கொள்ளை அழகு.. 

ரொம்ப நாள் கழித்து என்றாலும் ஆனந்த்ராஜின் நடிப்பை அவரே ஸ்கிரீனில் பார்த்தால் சொக்கித்தான் போவார். பழைய கல்லை கொண்டு வந்து கொடுத்து நடிக்கும் ஆளை பரேடு எடுக்கும் ஒரு காட்சியிலேயே மனிதர் சிரிக்க வைத்துக் கொல்கிறார். பூனை சூப் கொடுக்கும் ஆள் அந்தத் துப்பாக்கியை தள்ளிவைத்துவிட்டு கப்பை வைப்பது மிக யதார்த்தமான நகைச்சுவை. 

கிளைமாக்ஸில் ஆனந்த்ராஜின் வீட்டிற்குள் வந்து சிக்குவதும்.. பின்பு தப்பிக்க முயல்வதும், கல்லைக் கடத்துவதும் அக்மார்க் காமெடிகள்.. பூனை சூப் எதற்கு என்று கேள்விப்பட்டு காளி சொல்லும் அந்த டயலாக்குதான் படத்தின் ஒட்டு மொத்த கைதட்டலையும் வாங்கிவிட்டது..!

படம் 1982-களில் நடப்பதால் அதற்கேற்றாற் போன்ற காட்சிகள் அமைக்க வேண்டும் என்பதால் அதிகமாக வெளிப்புறக் காட்சிகளை அமைக்காமல் பார்த்துக் கொண்ட இயக்குநருக்கும், முடிந்த அளவுக்கு சிறப்பாக அக்கால கிராமத்தினை கண் முன்னே கொண்டு வந்த கலை இயக்குநருக்கும் பாராட்டுக்கள்..

இவ்வளவு நல்ல படத்தில் திருஷ்டிப் பொட்டாக இருந்தது ஊரில் இருக்கும் பெட்டிக்கடைக்காரரின் மனைவி சம்பந்தப்பட்ட காட்சிகளும், அந்த ஊர் சாமியாரின் கதையும்தான்.. இதனைத் தவிர்த்திருக்கலாம். அல்லது திரைக்கதையை மாற்றியிருக்கலாம். ஆனாலும் அந்தச் சாமியாரை வைத்தே படத்தை முடிக்க வைத்திருப்பதும், கிளைமாக்ஸில் ஊர் மக்களை திரும்பி ஓட வைக்க விஷ்ணு செய்யும் செயலும் திரைக்கதையின் வெற்றியைச் சொல்கிறது..

மூட நம்பிக்கைகள்.. சாமி குத்தம்.. விண் கல்லு.. சாமியார்.. தலித் மக்கள் பிரச்சினை என்று பலவும் இருந்தாலும், இது எதனையும் தப்பு என்றும், சரி என்றும் சொல்லாமலேயே படத்தின் மையக்கரு இதுவல்ல என்பதாகச் சொல்லி படத்தை நிறைவு செய்திருக்கிறார் இயக்குநர்.

கிடைத்த ஒரு வாய்ப்பில் சுடுகாட்டில் குடியிருப்பவரின் வழிகாட்டுதலில் விண்ணு சாமி கல்லை ஒளித்து வைப்பதும், பின்பு அது கையில் கிடைத்தவுடன் அதனை அந்த தலித்திடமே கொடுத்து கொண்டு போய்க் கொடுக்கச் சொல்ல.. “நான் இதைத் தொடவே கூடாதுன்னு சொல்வாங்க.. நான் கொண்டு போனா பிரச்சினையாயிருமே...?” என்று அவர் சொல்கிறார். “இது கோவிலுக்குள்ள இருக்கிறவரைக்கும்தான் சாமி.. இப்போ வெறும் கல்லுதான்.. தூக்கிட்டுப் போ..” என்கிறார் விஷ்ணு. இந்த அளவுக்கு சென்சாரில் விட்டதே பெரிய விஷயம்.

ஷீன் ரோல்டனின் பாடல்கள் இசையைவிடவும், பின்னணி இசை சூப்பர்.. காமெடி காட்சிகளுக்கேற்றாற் போன்று மெல்லிய இசையைத் தவழவிட்டு வசனங்களை இறுதிவரையிலும் கேட்க வைத்து கைதட்டல் வாங்க வழிவகை செய்திருக்கிறார். நன்றிகள் ஸார்..!

குறும்பட இயக்குநர்களுக்கு என்ன தெரியும்.. என்ன தெரியும் என்றெல்லாம் கேட்பவர்களுக்கு வரிசையாக பதில் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள் அந்த இயக்குநர்கள். கடைசியாக ரமேஷின் சூப்பரான இயக்கத்தில் ‘தெகிடி’ படமும் ஹிட்டானது. இப்போது இந்தப் படமும் உறுதியான ஹிட்டுதான்.. 

படத்தின் தயாரிப்பாளரான திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சி.வி.குமாரின் தன்னம்பிக்கைக்கு நமது வாழ்த்துகள்..! 

முண்டாசுப்பட்டி அவசியம் பார்க்க வேண்டிய படம்.. மிஸ் பண்ணிராதீங்க மக்களே..!