மதயானைக் கூட்டம் - சினிமா விமர்சனம்

25-12-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சுப்ரமணியபுரத்தில் ஆரம்பித்த மதுரை மண்ணின் அரிவாள் கலாச்சாரம், இன்றைக்கு தமிழ்த் திரையுலகில் வருடந்தோறும் வெளிவரும் படங்களில் முக்கால்வாசியை ஆக்கிரமித்திருக்கிறது..! வெறுமனே அரிவாளை மட்டுமே நம்பியெடுத்த படங்களெல்லாம் ஒரு சீவு சீவும் நேரத்திற்குள்ளாகவே தியேட்டரைவிட்டே போய்விட்டன.. ஒன்றிரண்டு திரைப்படங்கள் மட்டுமே அரிவாளையும் தாண்டிய கதையுடன் மனதில் நிற்கின்றன.. லேட்டஸ்ட்டாய் நிற்கப் போவது இந்த மதயானைக் கூட்டம்..!


இத்திரைப்படத்தை இரண்டு கோணங்களில் நாம் அணுகலாம்.. ஒன்று.. தன்னுடைய அண்ணனுக்காக எதையும் இழக்கத் தயங்காத ஒரு தங்கையின் கதை.. இரண்டு.. போடிநாயக்கனூரில் இருக்கும் தேவர் சாதியின் ஒரு பிரிவினரான கள்ளர் இனத்தில், ஒரு குடும்பத்திற்குள் நடக்கும் வெட்டுக் குத்து..! 

எப்படிப் பார்த்தாலும் நம் தமிழ்ச் சமூகத்தில் அதிக ஜாதிப் பிடிப்பாக தங்களைக் காட்டிக் கொள்ளும் தேவர் இனத்தவர்கள்.. எதை இழந்து எதற்காக ஜாதியைத் தூக்கிப் பிடிக்கிறார்கள்  என்கிற கேள்விக்கு ஓரளவேனும் இப்படம் விடை கொடுக்கிறது..! அதுதான் அவர்களுடைய கவுரவம்..!  ஒரே சாதியாகவே இருந்தாலும் தங்களுக்கென்று ஒரு சுயமரியாதைக் கோட்டை அவர்களாகவே போட்டுக் கொள்கிறார்கள். அதைத் தாண்டியோ.. அல்லது சீண்டியோ எவர் வந்தாலும் அவரை அழிப்பது ஒன்றே தங்களது தன்மானத்திற்குக் கிடைத்த வெற்றியாக அவர்கள் கருதுகிறார்கள்.. 

தென்மாவட்டங்களில் கள்ளர்-மறவர் இடையே நடக்கும் அதிகமான சண்டைகளுக்கு இந்த கவுரவம் எனப்படும் சுயமரியாதைதான் முக்கியக் காரணமாக இருக்கிறது..! வேறு சாதியினருடன் மோதல் வரும்போது உயர் சாதி என்று தங்களைத் தாங்களே எண்ணிக் கொள்ளும் இதே சாதியினர்தான்.. சொந்த சாதிக்குள் என்னும்போது சுயகவுரவத்தை பெரிதாக நினைக்கிறார்கள்..!

இனி கதைக்குள் வருவோம்..!

ஜெயக்கொடித் தேவருக்கு இரண்டு மனைவிகள்.. ஒருவர் செவனம்மா என்னும் விஜி சந்திரசேகர். இன்னொருவர் பிரேமா என்னும் அம்மு. செவனம்மாவுக்கு ஒரு மகன் பார்த்தி.. செவனம்மாவின் அண்ணனாக வீரத்தேவர் என்னும் வேல.ராமமூர்த்தி..  ஜெயக்கொடி தேவரின் இரண்டாவது மனைவி மூலம் பிறந்த மகன் பார்த்தி என்னும் கதிர்தான் படத்தின் ஹீரோ.. ஜெயக்கொடித்தேவரின் இரண்டாவது மனைவியின் குடும்பத்தை விஜி இப்போதுவரையிலும் ஏற்கவில்லை. ஜெயக்கொடிதேவரையே தனது வீட்டுக்கு வரக்கூடாது என்று சொல்லி வைத்திருக்கிறாள். 

ஓவியா கேரளாவில் இருந்து போடி மீனாட்சி கல்லூரியில் படிப்பதற்காக வருகிறார். பார்த்த மாத்திரத்திலேயே காதல் கொள்கிறார் கதிர்.. கதிரின் தங்கையும் அதே கல்லூரியில்தான் படிக்கிறாள். முதல் நாளே ராகிங் செய்ததால் ஓவியாவை திரும்பவும் கேரளாவுக்கே அழைத்துச் செல்ல விரும்புகிறார் அவரது தந்தை. இடையில் புகும் கதிர்.. ஓவியா மீதான காதலால் தனது தங்கை மூலமாக தனது வீட்டில் தங்க வைத்து தனது காதலையும் வளர்த்துக் கொண்டிருக்கிறார்..!


ஊர், வெட்டுக் குத்துகளுக்கு பஞ்சமில்லாமல் அடிக்கடி ரத்தத்தில் குளித்துக் கொண்டிருக்கிறது..! தனது மனைவி மற்றும் மைத்துனரிடம் பேசாவிட்டாலும் ஊரில் பெரிய மனிதராகவே வாழ்ந்து கொண்டிருக்கும் ஜெயக்கொடி தேவருக்கும், கவுரவச் சூழல் கொஞ்சம் கொஞ்சமாக இறங்குதளத்தில் இருக்கிறது..! அவருடைய மகளை பெண் கேட்டு வரும் உறவுக்காரர், விஜியின் தூண்டுதலால் பின் வாங்க.. உடனேயே தனது மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து ஜாம், ஜாமென்று கல்யாணத்தை செய்து வைக்கிறார்..! அன்றைய இரவிலேயே எதிர்பாராதவிதமாக ஹார்ட் அட்டாக்கில் அவர் இறந்துவிட.. வீரத்தேவரின் பையன்கள் வந்து ஜெயக்கொடித்தேவரை அள்ளிக் கொண்டு செல்கிறார்கள்..

இரண்டாம் தாரமும், ஹீரோவும் தெருவோரமாக அமர்ந்து தங்களது தந்தையின் துக்கக் காரியங்களை துக்கத்தோடே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். விஷயம் தெரிந்து ஓடி வரும் மகளையும் பார்க்க அனுமதிக்க மறுக்கிறார் வீரத்தேவர்.. எதிர்த்துப் பேசும் முதல் தாரத்து மகனை.. “அவங்க வந்தா நான் சீர், செனத்தி செய்ய மாட்டேன்.. ஊர்ச்சனம் வராது.. உங்கப்பனுக்கு இந்த மரியாதை கிடைக்காது...” என்று சொல்லி வாய் மூட வைக்கிறார்கள்..!

கருமாதியன்று நடக்கும் அசம்பாவிதத்தில் ஒரு கொலை நடந்துவிட.. பதிலுக்குப் பதிலாக ஹீரோவை கொலை செய்ய வீரத்தேவரும் அவரது பிள்ளைகளும் நாயாய், பேயாய் அலைகிறார்கள்.. இதில் ஜெயித்தார்களா இல்லையா என்பதுதான் மீதமிருக்கும் சோகக் கதை..!


கதை மட்டும் இருந்தால் போதும் ஸார்.. என்பவர்களெல்லாம் இந்தப் படத்தையும் ஒரு முறை பார்த்துவிடுவது நல்லது..! கதை ஒரு பிளாட்பார்ம்தான்.. அதில் மச்சு வீடோ, பங்களா வீடோ.. எது கட்டினாலும் அதற்கு சிறப்பான இயக்கம் தேவை.. அது இல்லையேல் நல்ல கதையாகவே இருந்தாலும் படம் ஊத்தல்தான்..! இதில் அந்தச் சிறப்பான இயக்கத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்..

பாலுமகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்.. ஆடுகளம் படத்தின் வசனகர்த்தா.. இந்தத் தகுதிகளோடு மிகச் சிறப்பான முறையில் இதை எடுத்திருக்கும் இவரைவிடவும் முதலில் பாராட்ட வேண்டியது படத்தின் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரை..! இப்படியொரு கதையை கேட்டு, இயக்குநர் மீது நம்பிக்கை வைத்து.. மூன்றாவதாக தனக்குப் பதிலாக ரகுநந்தனை இசையமைக்கச் செய்தும் படத்தை தயாரித்திருக்கும் இவருக்கு ஒரு ஷொட்டு..!

ஜெயக்கொடி தேவரின் மரணத்தில் இருந்துதான் படமே  துவங்குகிறது.. பாண்டிய நாடு படத்திற்குப் பின்பு எழவு வீட்டில் படம் துவங்குவது இதுதான் என்று நினைக்கிறேன்.. 'உன்னை வணங்காத' என்ற வேல்முருகனின் கணீர் குரலில் தமிழ்க் கலாச்சாரத்தின் கால ஓட்டத்தில் காணாமல் போய் சிறிதளவே மிச்சமாக இருக்கும் அந்தக் கரகாட்டக் குழுவினரின்  கதையாடலில்தான் முதல் பாதி முழுவதும் ஜெயக்கொடித் தேவரின் கதை சொல்லப்படுகிறது..! பாடலின் துவக்கத்தில் கள்ளர் சமூகத்தினரின் பெருமையைப் பாடினாலும், போகப் போக படத்தின் கதை, வசனத்தையே அப்பாடல்தான் சொல்கிறது..!

ஜெயக்கொடி தேவரின் குடும்பப் பாரம்பரியம்.. பிள்ளைகள்.. பிரச்சினைகள் என்று அனைத்தும் அடுக்கடுக்காய் வரிசையாய் பாடலின் மூலமாகச் சொல்லப்படும் இந்த உத்தி சூப்பர்ப்..! அவர்களை விலக்கிக் கொண்டு உள்ளே வரும் பெரும் கூட்டம்.. தள்ளாடியபடியே வந்து மாலையணிவிக்கும் ஒரு கூட்டம். என்னதான் பிரச்சினையென்றாலும் சந்தோஷத்திற்கு போகலைன்னாலும் பரவாயில்லை.. சாவுக்கு போய்த்தான் தீரணும் என்பார்கள்.. அந்த சங்கோஜத்துடன் வருபவர்களை விரட்டியடிக்கும் ஒரு கும்பல்.. யார் இறந்தாலும் தங்கள் வீட்டு சாவு போல கட்டிப் பிடித்து அழுகும் பெண்களின் கூட்டம்.. இத்தனை களேபரத்துக்கிடையில் கட்டிய கணவரின் உடலைக்கூட பார்க்க முடியாமல் ரோட்டில் அமர்ந்து விசும்பிக் கொண்டிருக்கும் மனைவி மற்றும் மகன், மகளின் நிலைமை.. என்று அனைத்தையும் கட் டூ ஷாட்டுகளிலேயே சொல்லிக் கொண்டே சென்றிருக்கிறார் இயக்குநர்..! எதுவும் போரடிக்கவில்லை.. மாறாக போகப் போக பயத்தைத்தான் குடுத்தது..!


நல்ல இறுக்கமான திரைக்கதை.. கதையை நகர்த்தும்விதமான வசனங்கள்.. எதையும் மிகைப்படுத்திக் காட்டாத நடிப்பு.. நடிகர்களை எளிமையாக நடிக்க வைத்திருக்கும் இயக்கம்.. எல்லாமே சேர்ந்து இந்தப் படம் சாதாரணமானதல்ல என்று திரும்பத் திரும்பச் சொல்ல வைக்கிறது..! 

முதலிடம் விஜிக்குத்தான். 'ஆரோகணம்' படத்திற்குப் பிறகு இவங்களுக்கு பெயர் சொல்லும் படம் இதுதான்..! இப்போதும் உசிலம்பட்டி, கருமாத்தூர், போடிநாயக்கனூர் இன்னும் தேவர் திருமகள்கள் அதிகம் இருக்கின்ற ஊர்களிலெல்லாம் இவரைப் போன்று ஊருக்கு 5 பேராவது நிச்சயமாக இருப்பார்கள்.. மின்னல்கொடி, பஞ்சவர்ணம், அன்னலட்சுமி, பேச்சியம்மாள் என்று பெயர்கள் மட்டும்தான் மாறியிருக்குமே தவிர.. பிரச்சினைகள் ஒன்றுதான்..!

முதல் ஷாட்டில் இருந்து இறுதிவரையிலும் தான் ஒரு ஏமாற்றப்பட்ட மனைவியாகவே தன்னை மாற்றிக் காட்டியிருக்கிறார் விஜி..! காதுகுத்து நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு வெளியேறும்போது கணவரின் 2-வது குடும்பத்தைப் பார்த்தும் பார்க்காததுபோல் இருப்பதும்.. பேச விருப்பமில்லாமல் பேசிவிட்டுப் போவதும்.. மேடம் பிய்ச்சுட்டாங்க.. அதேபோல வேறு வழியே இல்லாமல், வேறொரு சூழலில் 2வது மனைவியின் வீட்டுக்கே போய் அவரை அழைத்து வருவது.. இன்னொரு மரணத்தை வீடு சந்திக்கும் சூழலில் அவருடைய முகம் காட்டும் சலனமேயில்லாத ஒரு சின்ன ஷாட்.. தனது அண்ணன் தனக்கு பொறி வைக்கிறார் என்பது தெரிந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அண்ணனுக்கு உதவ ஒத்துக் கொள்ளும் அந்த காட்சி.. என்று இந்த அம்மணியின் இந்த கேரக்டர் நிச்சயம் பேசப்படும்.. இவருடைய வாய்ஸை கேட்ட யாரும் சொந்தக் குரல் என்றே ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.. அந்த அளவுக்கு நேரில் பேசுவதற்கும், படத்தில் பார்ப்பதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது..!


வேல.ராமமூர்த்தி.. நம்ப முடியாத ஒரு பிரமிப்பைக் கொடுத்திருக்கிறார்.. தனது தங்கையின் மகன் தன்னை எவ்வளவு அவமானப்படுத்தினாலும் தங்கைக்காக தாங்கிக் கொள்ளும் அந்த உணர்வை தலையைக் குனிந்த நிலையிலும் உடல் மொழியால் வெளிக்காட்டியிருப்பது சிம்ப்ளி சூப்பர்ப்..! முதல் முறையாக நடிக்க வந்தும், பல படங்களில் நடித்த அனுபஸ்தர் போலவேதான் இருக்கிறது இவரது நடிப்பு..! மிக இயல்பாக மீசையை தடவிக் கொண்டே தனது கவுரவத்திற்காக அவர் செய்யும் செயல்கள்.. தூண்டுதல்கள்.. பஸ்ஸ்டாண்டில் ஹீரோவால் தாக்கப்பட்ட பின்பு டிரவுசருடனேயே வீட்டுக்கு நடந்து வரும் அழகு.. விஜியிடம் என்னால தூங்க முடியலை என்று கவுரவத்திற்கும், இயல்புக்கும் இடையில் காட்டும் நடிப்பு.. ஆடுகளம் ஜெயபாலன் போல இதிலும் தமிழ்ச் சினிமாவுக்கு ஒரு நடிகர் கிடைத்திருக்கிறார்..!

முருகன்ஜி.. இந்து இயக்கம் ஒன்றின் தலைவர் என்று நினைக்கிறேன்.. ஜெயக்கொடி தேவராக.. சந்தர்ப்பவசத்தால் மாட்டிக் கொண்டு தவிக்கும் குடும்பத் தலைவராக..  மகளுக்கு பாசமான அப்பாவாக.. கச்சிதமாக இருக்கிறது..! வெறுமனே கோவத்தைக் காட்டுவதிலோ.. அட்ரா அவனை.. வெட்டுடா அவனை என்று கத்துவதிலோ நடிப்பைக் காட்டிவிட முடியாது..! இப்போதெல்லாம் இயல்பான நடிப்புகள்தான் மக்கள் மனம் கவருகின்றன..! இந்தப் படம் அவர்களை நிச்சயம் முழு திருப்தி செய்யும்..!

ஹீரோ கதிர்.. அறிமுகம்.. ஓவியாவின் காதலில் ஆரம்பித்து பாதியிலேயே டெர்ரரிஸ்ட்டாகிவிடும் கேரக்டர் என்பதால்  பாதிக்கும் மேலாக இறுக்கமாகவே இருக்கிறார்..! கிளைமாக்ஸில் மட்டுமே தேவனாக நடித்திருக்கிறார்..! இன்னும் நிறைய வாய்ப்புகள் இருக்கிறதே பார்க்கலாம்..! ஓவியாவுக்கும் நடிக்க பெரிய அளவுக்கு வாய்ப்பில்லை.. சின்னச் சின்ன ஷாட்டுகளிலேயே காட்சியை நகர்த்தியிருப்பதால் இவருடைய பங்களிப்பு படத்துக்கு பெரிதாக எதையும் கொடுக்கவில்லை..! 

ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய படமென்றாலும் தானே இசையமைக்காமல் தென்மேற்குப் பருவக்காற்று ரகுநந்தனை இசையமைக்க வைத்ததுகூட ஒருவகையில் நல்லதுதான்.. பின்னணி இசையே படத்தை இன்னும் கொஞ்சம் தூக்கியிருக்கிறது..! பாடல்களில் 'உன்னை வணங்காத' பாடல் கணீர் ரகம்.. 'கொம்பு ஊதி'யும் இதே சிச்சுவேஷன்தான்.. ஆனால் அது மகிழ்ச்சியானது..! தஞ்சை செல்வியின் குரலில் ஒலிக்கும் 'எங்க போற மகனே' பாடல் அந்த சிச்சுவேஷனுக்கு ஏற்ற வெகு ரம்மியம்.. இந்தக் காட்சி முடிந்த சில நிமிடங்கள் அடுத்த்தாக ஒரு டூயட்டும் ஒலிக்க.. அதுவும் படத்தின் வேகத்தை கொஞ்சமும் குறைக்கவில்லை.. 'கோணக் கொண்டைக்காரி' பாடலும், 'யாரோ யாரோ'வும் மெலடியாக காதுகளை இனிக்க வைத்தன.. இப்படி ஒரு படத்தின் அனைத்து பாடல்களுமே இசையை பின்னுக்குத் தள்ளிவிட்டு வரிகளை முன்னுக்குக் கொண்டு வந்தது இந்தாண்டில் இந்தப் படமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்..!

ராகுல் தருமனின் ஒளிப்பதிவும், கிஷோரின் எடிட்டிங்கும் இயக்குநர் விரும்பியதுபோலவே கிடைத்திருக்கிறது.. பஸ்ஸ்டாண்ட் காட்சிகளை சிறப்பாக்குவதில் இருவருமே போட்டி போட்டிருப்பார்கள் போலிருக்கிறது..!  இயக்குநருக்கு பெரும் உதவி செய்திருக்கிறார்கள்..! பாராட்டுக்கள்..! அவ்வளவு கூட்டத்தைக் கூட்டி.. அத்தனை பேரையும் பிரேமுக்குள் திணித்து.. ஒரு அழகை கொண்டு வந்திருக்கும் ஒளிப்பதிவாளரை நிறையவே பாராட்டலாம்..!

சின்னச் சின்ன விஷயங்களைக்கூட கவனமாக பார்த்து பார்த்து செய்திருக்கிறார் இயக்குநர்.. கள்ளர் குலத்தின் விஷயங்கள்.. அவர்கள் எது, எதற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.. எதை எளிதாக எடுத்துக் கொள்வார்கள் என்பதில் துவங்கி.. சாவுக்கு காரியம் எப்படிச் செய்வார்கள்..? யார், யாரால் பிரச்சினை வரும் என்பதையெல்லாம் திரைக்கதையின் ஒரு உத்தியாக பயன்படுத்தி போரடிக்காமல் கொண்டு சென்றிருக்கிறார்..! ஜெயிலுக்கு போய் வந்தாலே கரகாட்டம்.. தப்பாட்டத்தோடு வரவேற்பு.. கறிக்குழம்பு விருந்து.. என்று ஜெயில் வாழ்க்கையை மறக்கடிக்கும் சூழல்கள்.. செத்த வீட்டில் காரியம் செய்யும் நிகழ்வுகள்.. தாய் மாமனின் சீர்.. அது இல்லையெனில் நடக்கும் பிரச்சினைகள்.. வீட்டின் குடும்பத் தலைவர் போய்விட்டாலும் மனைவிக்கு இன்னமும் பிறந்த வீட்டு சொந்தங்கள் இருக்கின்றன என்பதைக் காட்டும்விதமாக பல சாதிகளிலும் பலவித சாங்கிய முறைகள்.. தேவர்களில் ஒரு பிரிவினர் தங்களது அந்தஸ்தை காட்டும்வகையில் பணத்தாலேயே அடிப்பார்கள்.. அதில் ஒரு சின்ன குறையிருந்தாலும் வம்ச சண்டையாகிவிடும்.. இதிலும் அப்படியொரு சண்டையில் துவங்கும் அனர்த்தம்தான் படத்தின் பிற்பாதி கதை..!

பொதுவாகவே இரண்டாம் மனைவிக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து கிடைக்குமா என்பதைவிட சமூகத்தில்.. அவரவர் குடும்பச் சொந்தங்களில்.. அவரவர் குடும்ப நிகழ்ச்சிகளில் உரிய மரியாதை கிடைக்குமா என்பதைத்தான் மிகப் பெரிய விஷயமாக நினைப்பார்கள்..! அந்த ஒரு விஷயத்தை இதில் முக்கியமாகவும் கையாண்டிருக்கிறார் இயக்குநர்..! இரண்டாவது மனைவியின் வீட்டிற்கு முதல் மனைவி வழி உறவினர்கள் தயக்கத்தோடு வருவதையும்.. உள்ளே வந்தாலும் எதுவும் குடிக்க மறுத்து தயங்குவதையும்..  உறவினரான முதல்  மனைவியின் ஒப்புதல் இல்லாமல் கல்யாணத்துக்கு ஒப்புக் கொள்ளாமல் ஒதுங்குவதும்.. கதிருக்கு உதவி செய்யப் போய் அவருடைய வேறு வழி உறவினரின் வீட்டில் பெண் எடுத்திருப்பதால் அது சிக்கலில் போய் முடிய.. இதனாலேயே கதிர் ஊர் திரும்பி உயிரைப் பணயம் வைக்கும் சூழலை ஏற்படுத்துவதும் திரைக்கதையின் சின்ன சின்ன முடிச்சுகள்தான்.. ஆனால் படத்தின் டெம்போவை எந்தவிதத்திலும் குறையாமல் பார்த்துக் கொண்டவை இவை போன்ற டிவிஸ்ட்டுகள்தான்..! ஸ்டேஷனுக்கு வந்து கையெழுத்து போட்டுவிட்டு போகும்படி இன்ஸ்பெக்டர் அழைப்பதும்.. “வீட்ல வெட்டுக் குத்து நடக்குது.. வந்து காப்பாத்துங்க..” என்று மூத்த தாரத்து மகன் ஸ்டேஷனுக்கு வந்து அழைத்தும் வராமல் தாமதம் செய்யும் போலீஸின் நிலைமை..! கருமாரியை முடித்திவிட்டு தோள் சீலையை தோளில் போட்டுவிட்டு உருமாவையும் கட்டிய பின்பு, "கதைவைச் சாத்துடா..." என்று பதற வைக்கும் அந்த கிளைமாக்ஸின் துவக்கம்.. படம் இத்தனை கொலைகளை கண்ட பின்பும்.. இது எப்படித்தான் என்பதையும் பார்க்கணுமே என்கிற ஆர்வத்தைத்தான் தூண்டிவிட்டது..!

எப்படியும் தாய் மாமனை, மூத்த தாரத்து மகனே போட்டுத் தள்ளப் போகிறான் என்கிற அளவுக்கு திரைக்கதையைக் கொண்டு போய் கடைசியில் அப்படியெதுவும் இல்லாமல் படத்தை முடித்திருப்பது எதிர்பாராதது..! தேவரின கதையில் பெண்களுக்கும் பங்குண்டு என்பதை இதில் நடக்கும் மைத்துனரின் மகன் கொலையில்.. கொலையானவரின் மனைவி.. "கொன்னவனை பிணமா இங்க கொண்டு வந்து போடு.. அப்புறமா இவரைத் தூக்கிட்டுப் போ..." என்று கூக்குரலிடுவதும்.. கிளைமாக்ஸில் "இவனைப் போட்டுத் தள்ளிட்டு வா மாமா.. வெளில காத்திருக்கோம்.." என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டுப் போவதும் சினிமாத்தனம் அல்ல.. உண்மையில் நடப்பதுதான்..! கேள்விப்படாதவர்களுக்குத்தான் இது அதிர்ச்சியாகவும், இயல்பை மீறிய செயலாகவும் இருக்கும்.. தென் மாவட்ட மக்களிடம் கேட்டுப் பாருங்கள்.. உண்மையைச் சொல்வார்கள்..!

ஒரு ஆண் செய்கின்ற தவறு.. அது பெண்களாலா..? அல்லது ஆண்களின் திமிர்த்தனத்தாலா என்பதையெல்லாம் இந்தச் சமூகம் இன்னமும் தோண்டாமல்.. பழியை மட்டும் மிக எளிதாக இன்னொரு பெண்ணின் மீது சுமத்தி.. பெண்ணுக்கு பெண்தான் எதிரி என்பதை மட்டும் காலம்காலமாக போதித்து வருகிறது..! தேவர் சமூகத்தில் இரண்டு மனைவிகள் என்பது சர்வசாதாரணம்..! மிக அதிகமும் அவர்களிடத்தில்தான்..! இரண்டு மனைவிகளால் வாழ்க்கையைத் தொலைத்த கணவர்களும் அதிகம்.. மனைவிகளும் அதிகம்.. இவர்களைவிட இவர்களது குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் எப்போதும்..! 

இப்படி பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்துப் பிள்ளைகளின் சோகக் கதையாக இதனை எடுத்துக் கொண்டால், நான் முன்பே சொன்னதுபோல, அது இப்படம் பற்றிய மூன்றாவது கோணமாகவும் இருக்கும்..! தவறான கருத்தைத் திணிப்பது வேறு.. நடந்த விஷயங்களை கொஞ்சம் நேர்ப்பட.. நேர்மையாக சொல்வது வேறு.. இதன் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இந்தக் கதையை என்னளவில் நேர்மையாகவே கொடுத்திருப்பதாகத் தோன்றுகிறது..!  வாழ்த்துகளும், பாராட்டுகளும் அவருக்கு..! 

தமிழ்ச் சினிமா ரசிகர்கள் நிச்சயமாக பார்த்தே தீர வேண்டிய படம்தான்..!


என்றென்றும் புன்னகை - சினிமா விமர்சனம்

23-12-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

குடி, குடியைக் கெடுக்கும் என்ற விளம்பரத்தை மட்டும் துவக்கத்தில் காட்டினால் போதாது.. ஒரு திரைப்படத்தில் இத்தனை முறைதான் பாட்டிலை காட்ட வேண்டும்.. இத்தனை முறைதான் குடிப்பதுபோல் காட்சிகள் இருக்க வேண்டும் என்று வரைமுறைப்படுத்தினால் நல்லதோ என்று நினைக்கிறேன்.. இந்த வாரம் வெளிவந்த பிரியாணியிலும் குடிதான் முதலிடம்.. இதிலும் குடிதான் முதலிடம்..! என்னவோ போங்க.. நாடு குட்டிச் சுவராயிருச்சு..!


ஜீவா, வினய், சந்தானம் - இணை பிரியாத பள்ளிப் பருவத்து நண்பர்கள்.. விளம்பரக் கம்பெனி வைத்திருக்கிறார்கள்.. எப்போதும் குடிக்கிறார்கள்.. வேலையில் இருக்கும்போதும குடிக்கிறார்கள்.. இல்லாதபோதும் குடிக்கிறார்கள். குடிப்பதற்கு ஏதும் காரண, காரியங்கள் இல்லை..! 

தன்னுடைய சின்ன வயதில் தனது தாய் தன்னைவிட்டு ஓடிப் போனதை இன்னமும் ஜீரணிக்க முடியாமல் இருக்கிறார் ஜீவா. அந்தச் சிறிய வயதில் அவரது அப்பா நாசர் கோபத்தில் சொன்ன “இந்தப் பொம்பளைங்களே இப்படித்தான் . நம்பவே கூடாது..” என்ற வார்த்தையை இன்னமும் மறக்க முடியாமல் வேத வாக்காகவே வைத்திருக்கிறார்..!  சோகத்தை மறக்க ஊட்டியில் இருந்து சென்னைக்கு குடியேறுகிறார் நாசர்.. வந்த இடத்தில் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய எண்ண.. அந்தப் பெண்ணை பார்த்தவுடன் ஜீவா பிடிக்கவில்லை என்கிறார்.. ஆத்திரப்படுகிறார்.. கோபப்படுகிறார்.. அந்தப் பெண் திரும்பிச் சென்றுவிட.. இதுக்காகவே அப்பா நாசருடன் பேசாமலேயே தனது வாழ்க்கையைத் கழிக்கிறார் ஜீவா..!

மூன்று பேருமே தங்களது வாழ்க்கையில் திருமணமே செய்யக் கூடாது என்று சத்தியம் செய்து கொள்கிறார்கள். இந்த நேரத்தில் விளம்பரப் படம் தயாரிப்பில் உதவ பெரிய நிறுவனத்தில் இருந்து திரிஷா மூவரையும் சந்திக்கிறார்..! திரிஷாவின் கவனிப்பில் கொஞ்சம், கொஞ்சமாக தன்னை அறியாமலேயே இழந்து கொண்டிருக்கிறார் ஜீவா..!  இப்போது செய்து கொடுத்த சத்தியத்தை மீறும் சந்தர்ப்பம் நண்பர்களான வினய், சந்தானத்திற்கு ஏற்படுகிறது.. அவர்களுடைய திருமணத்திற்குக்கூட செல்லாமல் அவர்களைப் புறக்கணிக்கிறார் ஜீவா..! அவர்கள் ஏன் அதை மீறினார்கள்..? என்பதுவும், திரிஷா-ஜீவா கதை என்ன ஆனது என்பதும்தான் மிச்சம் மீதிக் கதை..!

ஜீவாவுக்கு நிச்சயமாக இது வெற்றிப் படம்தான்..! இந்தக் காலத்து விடலைப் பசங்களுக்கேத்தாப்புலேயே திரைக்கதை அமைச்சிருக்காங்க..! யூ டியூபில் புகழ் பெற்ற வீடியோக்களை காப்பியடிச்சு சில சீன்களை வைச்சிருக்காங்க..! பாடல் காட்சியில் வரும் காரின் முன் சீட்டில் சந்தானம் ஒரு போலி ஸ்டீரியங்கை பிடித்து மோதுவது போல் பாவ்லா காட்டுவது.. தண்ணியடித்துவிட்டு சாய்ந்தபடியே நடப்பது போன்ற காட்சி.. வீட்டின் மாடியில் கைப்பிடியில் அமர்ந்திருக்கும் ஜீவா தவறி கீழே விழுகப் போய் திரிஷாவின் கைப்பிடியில் தப்பிக்கும் காட்சி.. இது போதாதென்று பல பத்திரிகைகளில் வெளிவந்த மொக்கை ஜோக்குகளை வைத்தும் கொஞ்சம் அலப்பறையைக் கூடுதலாக்கியிருக்கிறார்கள்.. பாராட்டுக்கள்..! காப்பின்னாலும் அதையும் ரசிக்கிற மாதிரி சுட்டிருக்காங்களே.. வாழ்த்தலாம்..!

ஜீவாவுக்கு ஏற்ற கேரக்டர்.. நண்பர்களுடன் அட்டூழியம் செய்வதைவிடவும் திரிஷாவை காதலிப்பதை தன் மனம் ஏற்காத ஈகோவுடன் திரியும் அந்த ஜீவா தன் பணியை கச்சிதமா செஞ்சிருக்காரு..! நாசருடன் பேச மறுத்திருக்கும் காட்சியின் அழுத்தம், நாசரின் நோய் பற்றி தெரிந்தவுடன் உடனேயே அந்த ஈகோ காணாமல் போவதுதான் கொஞ்சம் லாஜிக் இடிக்குது. மற்றபடி பாசத்தையும், அன்பையும், நேசத்தையும் குழைத்துக் கொடுத்திருப்பதால் அந்தப் பகுதி டச்சிங்காகவே இருந்த்து..!

வினயைவிடவும் சந்தானம் இதில் மீண்டும் கொஞ்சம் ஸ்கோர் செய்திருக்கிறார்.. 5.10 மேட்டரை மாற்றி அது போலவே வேறு வசனத்தை மின்னல் வேகத்தில் எடுத்துக் காண்பித்திருக்கும் இயக்குநருக்கு ஒரு ஷொட்டு..! எப்போதும் போலவே அடையாளப்படுத்தியே கிண்டலடிப்பது.. மறைமுக இரட்டை அர்த்த ஆபாச வசனங்கள்.. குடி புகழ் பாடுவது என்பதெல்லாம் இருந்தாலும் திருமணத்திற்குப் பிந்தைய சந்தானத்தின் காட்சிகள்தான் பார்க்கும்படி இருந்தது..!

திரிஷா எப்போதும்போலவே நடிக்கிறார்..! மென்மையான நடிப்புக்கு திரிஷாவைவிட்டால் வேறு ஆளில்லைதான்..! பீல்டுக்கு வந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் அம்மணியை இன்னமும் அவுட்டாக்க முடியாததற்கு இதுதான் காரணம் போலும்..! ஜீவாவுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்து ஜெயித்தும்விட்டார்கள். பாராட்டுக்கள்..! ஆண்ட்ரியாவுடனான மோதல்.. பின்பு பேசுவது.. தான் ஒரு நடிகை என்பதை சுவிட்சர்லாந்தில் போய் காட்டுவது.. அப்போதும் ஜீவா எடுத்தெறிந்து பேசி வெளியேற்றுவது.. இப்போது திரிஷா ஜீவாவுக்கு சப்போர்ட்டாக பேசப் போய் அப்போதுதான் முதல் முறையாக திரிஷா மீது ஒரு கவனமும் ஈர்ப்பும் ஜீவாவுக்கு வருவதுபோல் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர்.. அவர் நினைத்ததே நடந்தேறிவிட்டது..! வெரிகுட்.. ஆண்ட்ரியாவின் சிக் அழகு.. விளம்பரப் பட முகம்.. அதனை வெளிக்காட்டும்விதமான படப்பிடிப்பு.. இவருக்கு ஒரு ஹிட்டான படம் கிடைக்கவில்லை என்பது மட்டுமே உண்மை..!  மலையாளத்தில் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.. தமிழில்தான்.. ம்ஹூம்..!

மதியின் ஒளிப்பதிவு முதல் காட்சியில் இருந்தே பளீச் ரகம்..! எந்த இடத்திலும் எதையும் இருட்டடிப்பு செய்யாமல் எடுத்திருக்கிறார்கள்..! இதுவே செம கலராக இருக்கிறது..! ஹாரிஸ் ஜெயராஜின் இசை.. இந்தப் படத்தின் இடையில் சுவிட்சர்லாந்தின் ஒரு கடையில் இளையராஜா பாடல் சிடி இருப்பதை போல் காட்டி, 'காதலின் தீபம் ஒன்று' பாடலின் ஒரு வரியை ஒலிக்கச் செய்திருக்கிறார்கள்.. இதுதான் இசையமைப்பு..! ஹாரிஸுக்கு தெரிந்தால் நல்லது..!

விட்டுவிட்டு கொண்டாடினாலும்... கொண்டாட்டம் மனதைவிட்டு அகலாமல் பார்த்துக் கொள்ளும் திரைக்கதையில், காமெடி என்னும் சரவெடியை அவ்வப்போது கொளுத்திக் கொண்டு ஒரு தீபாவளியை காட்டியிருக்கிறார் படத்தில்..! 

நிச்சயமாக ஒரு முறை பார்க்கலாம்..!

கடவுள் வந்திருந்தார் - நாடக விமர்சனம்

22-12-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பாட்டையா பாரதிமணி ஐயாவை எனக்கு கடந்த 5 ஆண்டுகளாகவே தெரியும்.. பல முறை அவரது வீட்டிற்குச் சென்று இந்த இந்திய திருநாட்டுக்காக அவர் ஆற்றிய அரும் பெரும் தியாங்களையும், சேவைகளையும்.. எண்ணற்ற சூரங்களையும் அவருடைய இயல்பான பேச்சில் கேட்டு கேட்டு அவர் மீது எப்போதும் மாறானதொரு காதலில் இருக்கிறேன்..!  

இந்த நாடகத்தை முதன்முதலாய் அரங்கேற்றிய அன்று அலுவலகச் சூழல் காரணமாய் போக முடியாமல் போய்விட்டது. இதற்கே பாட்டையா ரொம்பவே கோபித்துக் கொண்டார்.. அன்றைக்குவரையிலும் என்னைப் பார்த்து சொல்லாத ஒரு கோப வார்த்தையை வீசி என்னை கொன்றுவிட்டார். அன்றைக்கே முடிவெடுத்துதான்.. அடுத்து கடவுள் வந்திருந்தார் நாடகம் எங்கே போட்டாலும் கடவுளுக்கு முன்பாக நாம் சென்றுவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். நேற்றைக்குத்தான் அந்த பாக்கியம் கிடைத்தது..!


முந்தைய தினம், நீண்ட கால அரசுப் பணியில் இருந்து ரிட்டையர்ட் ஆனதுகூட ஞாபகமில்லாமல் அலுவலகத்துக்குப் புறப்படும் சீனிவாசனின் வேட்கையில் இருந்துதான் நாடகம் துவங்குகிறது..! ரிட்டையர்ட் பெர்ஸன்களுக்கு இப்போதெல்லாம் வீடுகளில் என்ன மரியாதை கிடைக்கிறது என்பதை 1975-களிலேயே நமது வாத்தியார் சுஜாதா தெரிந்து வைத்திருந்தார் போலும்..! முதல் காட்சியே தற்காலத்திய உண்மையையும் எடுத்துரைக்கிறது..!

மேல் வீட்டில் குடியிருக்கும் சுந்தர்,  தனது காதல் நிறைவேறுவதற்காக லஞ்சமாக சீனிவாசனுக்கு கொடுக்கும், ‘எதிர்கால மனிதன்’ புத்தகத்தை வாசிக்கத் துவங்குகிறார்.. இங்கேதான் கதையும் துவங்குகிறது..! அந்தப் புத்தகத்தில் இருக்கும் எதிர்கால மனிதனே ‘ஜோ’ என்ற பெயரில் சீனிவாசனின் முன் நிற்கிறான்.. ஆனால் அவன் அவரது கண்களுக்கு மட்டுமே தெரிகிறான்..  மகளும், மனைவியும் வெளியில் போய்விட.. வீட்டுச் சுவற்றுடன்தான் பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சீனிவாசனுக்கு ஜோ நண்பனாகிறான்.. அனைத்து விஷயங்களையும் பேசப் பேச.. ஜோவை தன்னுடைய நண்பனாகவே கருதுகிறார் சீனிவாசன்..! பேசும் விஷயங்கள் அத்தனை..! அப்படி இருக்கின்றன..!!! பிள்ளை பெற்றுக் கொள்வது பற்றி வேடிக்கையாக இவர் கேட்க ஜோவின் பதிலும், இதற்கு சீனி சொல்லும் பதிலும் செம காமெடி..!

ஜோவுடன் சீனிவாசன் பேசுவது வீட்டினருக்கு விபரீதமாகத் தெரிகிறது.. புத்தகம் கொடுத்த சுந்தருக்கும் பயத்தை அளிக்கிறது.. ஒருவேளை பைத்தியமோ என்று நினைக்கிறார்கள். “இங்கதான் நிக்குறான்.. தலைல லைட்டு எரியுது.. என்கிட்ட பேசுறான்..” என்றெல்லாம் சீனி சொல்வது சித்தப் பிரமையின் முதல் படியாகவே தெரிகிறது குடும்பத்தினருக்கு..! சீனி, ஜோவுடன் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார்.. “ஒரு மணியடித்தால் வர வேண்டும். இரண்டு மணியடித்தால் போய்விட வேண்டும்...” என்று..! எல்லாம் சரியாகிவிடும் என்ற நினைப்பில் மனைவியும், மகளும் இருக்கும்போது மகளின் நிச்சயத்தார்த்த நாள் குறுக்கே வருகிறது.. 

தான் ஆசைப்பட்ட காதலி தனக்குக் கிடைக்காமல் போகலாமா என்ற ஆதங்கத்தில் சுந்தர் வீட்டிற்கு வரும் சிறுமியை உசுப்பிவிட.. அவளோ சொல்லித் தந்ததுபோல மணியை எடுத்து அடித்துவிட.. உள்ளே வருகிறான் ஜோ.. பிறகென்ன..? அதகளம்தான்.. இந்தக் காட்சியின் பரபரப்பு அரங்கத்தில் பல பக்கங்களிலும் தொற்றியிருந்ததை கண்கூடாகப் பார்க்க முடிந்தது..! சீனிவாசன் ஒரு பைத்தியம்தான் என்பதை பெண் பார்க்க வந்தவர்களும், பக்கத்து வீட்டுக்கார்ரும் சேர்ந்தே முடிவு செய்ய.. போலீஸும் உள்ளே வருகிறது.. பின்பு மருத்துவரும் வருகிறார்.. மந்திரவாதியும் வருகிறான்.. யாருமே அவரை நம்பாததால்  எப்படியாவது தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு வருகிறார் சீனி.

மேல் வீட்டு சுந்தருக்காக மட்டும் ஜோ, தனது வித்தையைக் காட்ட அவன் மட்டுமே நம்புகிறான்.. நம்பியவன் இதனை வைத்து வேறு விதமாக சீனிவாசனைத் திசை திருப்ப.. இப்போது சீனிவாசனந்தாவாக உருமாறுகிறார் சீனிவாசன்..! பக்திப் பரவசமாகி, தானே கடவுளாகிறார்.. அருள் பாலிக்கிறார்.. மந்திர வித்தைகள் செய்கிறார்.. காசும், பணமும் கொட்டுகிறது..! அப்போது நம்பாதவர்களெல்லாம் இப்போது அவரிடம் ஏதோ இருக்கிறது என்று நம்புகிறார்கள்..! எல்லா வேஷமும் ஒரு நாள் கலையத்தானே வேண்டும்.. அடுத்து வேறொரு உலகத்துக்கு சீன் போட போக வேண்டியிருப்பதால் ஜோ, சீனிவாசனிடம் விடைபெற்றுச் செல்கிறான்.. தனது வேடத்தைக் கலைத்துவிட்டு நிஜமாகவே ஓய்வெடுக்க விரும்பியிருக்கும் சீனி, சுந்தரிடம் மட்டும் இதைச் சொல்ல.. சுந்தர் அதையும் தடுத்து தற்காலிகமாக முன்பு பெற்றிருந்த நம்பிக்கையை இப்போதும் தொடரும்படியாகவே செய்கிறான்..! 

ஆனால், ஜோ போனவன் போனவன்தான்..! மீண்டும் ஒரு முறை அவரால் அற்புதங்களை நிகழ்த்த முடியாது என்பது தெரிந்தாலும், அதைச் செய்யும் வேளை இனிமேல் சீனிவாசனுக்கு வரவே வராது என்பதால் அவர் எப்போதும் கடவுளாகவே கருதப்படுவார் என்பதோடு கதை முடிகிறது..!  ஜோ-வும், சீனிவாசனும் பேசும் சில வசனங்களும், இறுதியில் தனது வேஷத்தைக் கலைக்கத் துடித்து சீனிவாசன் சுந்தரிடம் பேசும் வசனங்களும்தான் மிகச் சிறப்பானவை. இந்தக் காலத்துக்கும் ஏற்றாற்போல கச்சிதமாக பொருந்துகிறது.. உண்மை என்னும் கடவுளை நாம் எப்போதும் உணர்வதில்லை என்பதை வாத்தியார் சுஜாதா கச்சிதமாக சொல்லியிருக்கிறார்..!  இதனை சினிமாவாகக்கூட எடுக்கலாம்..! 

நம்ம பாட்டையா பாரதிமணி 2 மணி நேரம் வாழ்ந்து காட்டியிருக்கிறார்..! பல நாடகங்களில் நடித்து அனுபவப்பட்டிருப்பதால் எந்த இடத்தில் நிறுத்தி, நிதானமாக பேசிவிட்டு பாய்ச்சல் காட்ட வேண்டுமோ அதையெல்லாம் கச்சிதமாகச் செய்திருக்கிறார். “லவ்வுன்னா என்ன..?” என்ற மனைவியின் கேள்விக்கு பட்டென்று திரும்பி “உனக்கும் எனக்கு இந்த 25 வருஷமா இல்லாதது..” என்று சொல்லிவிட்டு மகளிடம் திரும்பி, “நீ படிம்மா” என்று சொல்லும் வேகம்தான் நாடக அனுபவம்.. இது எல்லோருக்கும் வந்துவிடாது..!  நிச்சயத்தார்த்த தினத்தன்று உள்ளே வரும் ஜோவிடம் பேசியபடியே சம்பந்தியிடமும், பக்கத்து வீட்டுக்காரரிடமும் மாறி மாறி பேசும் அந்த லாவகம்.. ஏற்ற இறக்கம்.. மரியாதையான பேச்சு.. அடுத்த நொடி சலிப்பாக திட்டுவது என்று பாட்டையா ஒரு ஜலதரங்கமே வாசித்திருக்கிறார் அங்கே..! வெல்டன்.. வெல்டன்..! இந்த 77 வயதில் இப்படி 2 மணி நேரம் உட்கார்வதும், நிற்பதும்.. வசனங்களை மனப்பாடமாகச் சொல்வதும், நிறைவாக நடிப்பதும் ஒருவருக்கு முடிகிறதென்றால் அவர் ஏதோ பாக்கியம் செய்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.. அந்த அளவுக்கு பாரதிமணி ஐயாவுக்கு உடல் ஆரோக்கியத்தைக் கொடுத்திருக்கும் ஆண்டவனுக்கு நன்றி..! 

மனைவியாக கவிஞர் பத்மஜா.. “கத்திரிக்காயை நறுக்கிக் கொடுங்க..” என்று கேட்பதில் துவங்கி.. “ரிட்டயர்டாகிட்டீங்கள்லே.. இனிமே வீட்ல என்ன செய்யப் போறீங்க..?” என்று கேட்டு அனத்துவதில் ஆரம்பித்து.. சுந்தரை கரித்துக் கொட்டிவிட்டு பின்பு சமயத்துக்கேற்றாற்போல் வேலை வாங்கவும் செய்யும் ஒரு  அக்மார்க் நம்ம பக்கத்து வீட்டு மாமி..! சுந்தராக நடித்த ராம்குமாரின் பாடி லாங்குவேஜும், டயலாக் டெலிவரியும் அந்தக் கேரக்டரை ரசிக்க வைத்தது.. ஜோவாக நடித்த ஸ்ரீதர், மகளாக நடித்த வைஷாலி..  மாப்பிள்ளையாக நடித்த நம்ம தினேஷ் தம்பி.. தினேஷின் அப்பாவாக நடித்த நபர்.. போலீஸ் இன்ஸ்பெக்டர்.. என்று பலரும் தங்களது கேரக்டரை அப்படியேதான் பிரதிபலித்திருக்கிறார்கள்..! 

என்ன.. இதிலொரு சின்ன விஷயம்.. நாடகத்தில் ஆங்காங்கே.. அடுத்த வசனத்தை யார் துவக்குவது என்பதான சின்ன லேப்ஸ் சீஸன் இருந்தது.. இது அடுத்தடுத்த அரங்கேற்றங்களில் தீர்க்கப்பட்டு விடும் என்று நினைக்கிறேன். இவர்கள் இப்போதுதானே களத்தில் இறங்கியிருக்கிறார்கள்..? வாழ்த்துவோம்.. பாராட்டுவோம்..!

நாடகம் நடந்த இடம் ஒரு வெளிப்புற இடம் என்பதால் முதல் காட்சியில் பாட்டையா பேசத் துவங்கியவுடனேயே மீனம்பாக்கத்தில் இருந்து புறப்பட்ட ஒரு விமானம் நேராக பாட்டையாவின் தலைக்கு மேலாகச் சென்று டென்ஷாக்கிவிட்டது.. இதேபோல சாப்பிட்டுக் கொண்டே நாடகம் பார்க்கலாம் என்கிற முறை, இது போன்ற தொழில் முறை நாடகக்காரர்களுக்கு ஒத்து வராது என்றே நினைக்கிறேன்..!  நாடகம் நடந்து கொண்டிருக்க.. சர்வசாதாரணமாக மக்கள்ஸ் எழுந்து சென்று சுண்டல், வடை, பிரைட் ரைஸ் என்று ஆர்டர் செய்து பேசிக் கொண்டிருக்க.. நாடகத்தின் மீதான கவனம் என்று பொதுவாக யாருக்குமே இல்லாமல் போய்விட்டது.. அரங்கத்தின் இன்னொரு மூலையில் மதுபானங்களும் சப்ளை செய்யப்பட்டதால்... பல கிளப் உறுப்பினர்கள் கிளாஸும், சோடாவுமாக மிக்ஸிங்கில் மும்முரமாக இருந்தனர்.. சிலர் ஊற்றிய வேகத்தில் சவுண்டாக பேசியபடியே இருக்க..  நாடகம் பார்க்கும் மூடே இல்லாம போயிருச்சு..!

போதாக்குறைக்கு சவுண்ட் சிஸ்டம் முற்றிலுமாக சொதப்பிவிட.. நாடகம் நடந்த இரண்டே கால் மணி நேரமும் ஸ்பீக்கர் பக்கத்தில் நின்றபடியேதான் நாடகத்தை பார்த்தேன். தூரத்தில் போய் உட்கார்ந்தால் வசனங்கள் சுத்தமாகக் கேட்கவில்லை..! என்ன செய்றது..? ஆனால் என்னைப் பார்த்தவுடன் பாட்டையா.. “வாடா” என்று வாஞ்சையோடு அழைத்த பாசத்தில் அத்தனை கால் வலியும் காணாமலேயே போனது..! இன்னொரு முறையும் வேறு சிறந்த சபா அரங்கத்தில் இந்த நாடகத்தை பார்க்க வேண்டும் என்று உறுதி பூண்டுள்ளேன்..! வெகு சீக்கிரமாக அது நடக்க வேண்டும் என்று என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..! நாடகம் முடிந்தவுடன் தனது குழுவினர் அனைவரையும் மேடையேற்றி ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தி வைத்த அந்த பாங்குதான், பாட்டையாவை தனித்தே அடையாளம் காட்டுகிறது..!

இந்த நாடகத்தை பூர்ணம் விஸ்வநாதன் குழுவினருக்கு பின்பு குருகுலம் ஸ்டேஜ்காரர்களும் நடத்தியதாக கேள்விப்பட்டேன். யார் நடத்தியிருந்தால் என்ன..? வாத்தியாரின் எழுத்தை எங்கே ரசித்தாலும் அதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்கிறது..! அப்போதைய அவருடைய எழுத்துக் குறும்பை இதிலும் 2 காட்சிகளில் அப்படியே வைத்திருக்கிறார்கள்..!  நன்று..!  ஒரு மணியடித்தால் வரும் எதிர்கால மனிதன்.. எந்தக் காலத்திலும் திரும்பிப் போகாமலிருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் வாத்தியார் எழுதியிருக்கலாமே என்ற எண்ணம், இந்த நாடகத்தின் பாதியிலேயே எழுந்தது..! இதுதான் வாத்தியார் எழுத்து..! 

பாட்டையாவுக்கும் அவர் தம் குழுவினருக்கும் எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும் உரித்தாகட்டும்..!

பிரியாணி - சினிமா விமர்சனம்

20-12-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஆல் இன் ஆல் அழகுராஜாவுக்கு முன்பாகவே இதனைக் கொண்டு வந்திருக்கலாம்..! கார்த்தியின் மார்க்கெட்டுக்கு மிகவும் உதவியாக இருந்திருக்கும்..! இப்போது திரும்பவும் ஒரு வெற்றியைக் கொடுத்திருக்கிறார் என்கிற சின்னப் பெயர்தான் கிடைத்திருக்கிறது.. இந்தப் படத்தின் மீது நம்பிக்கை வைத்து சொந்தமாகவே ரிலீஸ் செய்திருக்கும் ஞானவேல்ராஜாவின் திறமைக்கு ஒரு பாராட்டு..!

வெங்கட்பிரபுவின் மங்காத்தா எப்படி சூப்பர் டூப்பர் ஹிட்டோ அதில் 60 சதவிகிதத்தை இந்தப் படம் பூர்த்தி செய்திருக்கிறது..! இப்போதைய ரசிகர்களுக்குப் பிடித்தளவில் காக்டெயிலுடன் கொஞ்சம் லெமன் சோடாவையும் கலந்து கொடுத்து பித்தத்தையும் சமாளித்திருக்கிறார் இயக்குநர்.


அலுவலக வேலையாக ஆம்பூர் செல்லும் கார்த்தியும் பிரேம்ஜியும் சரக்கடித்தவுடன் பிரியாணி சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற ஆர்வத்துடன் கதை தேடி அலைகிறார்கள்.. கிடைத்த கடையில் கூடவே ஒரு பெண்ணும் கிடைக்கிறார்.. அந்த பெண்ணுடன் கெஸ்ட் ஹவுஸுக்கு உடன் செல்கிறார்கள். அது தங்களைச் சுற்றிப் பின்னப்பட்ட ஒரு சதி என்பதை அறியாமலேயே மேலும், மேலும் போதையில் இறங்க.. விழித்துப் பார்க்கும்போது ஒரு கொலை குற்றவாளியாக இருக்கிறார்கள் இருவரும்.. தாங்கள் கொலை செய்திருக்க மாட்டோம் என்று அவர்கள் நம்பினாலும் சந்தர்ப்பமும், சூழ்நிலையும், சாட்சிகளும் அவர்களுக்கெதிராக இருக்க.. போலீஸாரிடமிருந்து தப்பித்து கொலையாளியைக் கண்டுபிடிக்கிறார்கள்..! இதுதான் கதை..!

திரைக்கதையில்தான் அமர்க்களப்படுத்தியிருக்கிறார் வெங்கட்பிரபு.. முதல் காட்சியில் இருந்தே பிரேம்ஜியை வாரி விடுவதிலும், ஹன்ஸிகாவின் காதலுடனேயே படத்தைத் துவக்கியிருப்பதும்.. காதலின் மோதல்,, ஊடல்.. பின்பு கூடல்.. என்று பாடல் காட்சிகளுக்கும், திரைக்கதைகளுக்கும் வேலையே வைக்காமல் அப்படியே நூல் பிடித்ததுபோல சென்று இடைவேளையில் வரும் அந்த டிவிஸ்ட்டுடன் நிமிர்ந்து உட்கார வைத்துவிட்டார்..!

சின்ன வயதில் இருந்தே பிரேம்ஜிக்கு செட்டாகும் பெண்களையெல்லாம் தன்வசப்படுத்தும் கார்த்தியின் ஜாலித்தனம் ஹன்ஸிகாவரையிலும் வந்து நிற்க.. மேலும் மேலும் பிரேம்ஜியை நோகடிக்கும் காட்சிகளெல்லாம் சிரிப்பாய் சிரிக்கிறது..! அதிலும் ஆம்பூரில் மாயாவை காரில் பிக்கப் செய்து போகும்போது பேசும் வசனங்கள் ஷார்ப்னெஸ்..! நீங்க காரை பத்திதான பேசுறீங்க என்ற பிரேம்ஜியின் சந்தேகமும்.. அதே வசனம் அப்படியே உல்டாவாக மாறி கார்த்தி கேட்பதுபோல வருவதும் வெங்கட்பிரபுவின் ஸ்பெஷலாட்டி..!

இடைவேளைக்குப் பின் செத்துப் போனவரை உயிருடன் இருப்பதாக காட்டி.. இவர்களை யாரோ கடத்திச் சென்றுள்ளதாக பிளானை மாற்றுவதும் சூப்பர் திரைக்கதை.. வெறும் காட்சிகளுக்காக மட்டுமில்லாமல் திரைக்கதைக்காகவே கைதட்டல் இந்த இடத்தில் கிடைத்தது..! உமா ரியாஸை ஆட்டுவிப்பது ராம்கிதான் என்பதுபோலவே கதையைக் கொண்டு சென்று, கடைசியில் அதுவும் இல்லை என்று இன்னொரு கிளைமாக்ஸை திணித்ததில்கூட விறுவிறு சுவாரஸ்யம்..!

அக்காவுக்குக் கல்யாணம்.. அது நிற்கப் போகிறது.. மாமா கத்திக்குத்தில் ஆஸ்பத்திரியில் வாசம்.. குடும்பத்தினர் மீது தாக்குதல்.. என்று சென்டிமெண்ட்டைகூட ஒரு அளவாக வைத்துக் கொண்டு ஆக்சன் படலத்தை பிற்பாதியில் நச் என்று கொடுத்திருக்கிறார் இயக்குநர்.. மாயாவை டிரெயினில் தள்ளிவிடும் காட்சி எதிர்பாராதது..! உமா ரியாஸின் என்ட்ரியும், அவரது காட்சிகளுமே படத்தின் டெம்போவை இன்னும் கொஞ்சம் உயர்த்தியிருக்கிறது..! 

லாஜிக் மிஸ்டேக்கெல்லாம் பார்க்கவே கூடாது என்றாலும் சம்பத்தின் வருகைதான் கொஞ்சம் மொக்கைத்தனமாக இருந்துவிட்டது.. இவ்ளோ பெரிய கேஸ்ல சர்வ சாதாரணமா “ஒரு கேஸ் விஷயமா விசாரிக்க வந்தேன்..” என்று சொல்லி சம்பத் என்ட்ரி ஆவது கேலிக்கூத்தாகிவிட்டது..! சி.பி.ஐ. சோதனை மற்றும் விசாரணையையும் சேர்த்திருந்தால் படம் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாகியிருக்கும்..! சம்பத்துக்கும் கூடுதல் வேலை கிடைத்திருக்கும்..! பிரேமின் ஊடுறுவலை சம்பத் கண்டுபிடிப்பதெல்லாம் பட், பட்டென்று கதையை முடிக்கும்விதமாகவே முடிந்துவிட்டது..!

கார்த்திக்கு ஒரே மாதிரியான கேரக்டரில் இது 5-வது படமென்று நினைக்கிறேன்..! இப்படியே போனால் மோகனுக்கு ‘மைக்’ போன்று கார்த்திக்கு ‘பேக்கு’ என்றாகிவிடும்.. அடுத்தப் படத்திலாவது கெட்டப்பை மாற்றியாவது அல்லது பாலா போன்ற இயக்குநர்களிடம் சிக்கிவிட்டு திரும்ப வருவது அவரது நடிப்பு கேரியருக்கு நல்லது..! இந்தக் கேரக்டருக்கு கார்த்தி கச்சிதம் என்பதும் உண்மைதான்..! வழியல்.. அவியல்.. பொங்குதல்.. எல்லாமே அவங்கப்பா மாதிரியேதான் இருக்கு..! 

ஹின்ஸிகாவுக்கு அதிகம் வேலையில்லை என்றாலும் கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார்.. டப்பிங் வாய்ஸ் கொடுத்த அம்மணிக்கு ஒரு ‘ஓ’ போடணும்..! பாடல் காட்சிகளில் கொஞ்சம் ரம்மியமாகத் தெரிகிறார்.. இவர் போன்ற நடிகைகளை ஹீரோக்களின் பெருமைக்காகவே நடிக்க வைக்கிறார்கள். மற்றபடி ஹன்ஸிகாவால் எந்தப் படமும் ஓடவில்லை என்பதும் உண்மை..! சம்பளம் பல லட்சங்களில் ஏன் அள்ளிக் கொடுக்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை..!

பிரேம்ஜிதான் படத்தின் டாக் ஆஃப் தி மேன்..! கார்த்திக்கு அத்தனை ஈடு கொடுத்திருக்கிறார்.. ஆம்பூருக்கு வரும் 3 பொண்ணுகளை பார்த்து வழியத் துவங்கி.. அந்த மூன்று பேரையுமே கார்த்தி உஷார் செய்துவிட்டார் என்பதையறிந்து கொதிக்கும் காட்சியில் மனுஷன் பாவம்.. உண்மையான கேரக்டர் போலும்..! அனுபவித்து நடித்திருக்கிறார்..! சரவெடி டயலாக்குகளை சர்வசாதரணமாக பேசிவிட்டு கைதட்டலை வாங்கிச் செல்கிறார்..! இப்படியே கொஞ்சம் மோல்டு செய்தால் வேறு பாணியிலான நகைச்சுவைக்கும் இவர் தேறலாம்..!

யுவனுக்கு இது 100-வது படமாம்.. சொல்லிக்கலாம்.. பட்.. வேறு எதுவும் சொல்வதற்கில்லை..! பின்னணி இசையில் மட்டுமே ரீங்காரம்.. இப்போதெல்லாம் அதிக டூயட் காட்சிகளை மாண்டேஜ் ஷாட்ஸ்களாகவே எடுப்பதன் அர்த்தம் இசை போணியாகவில்லை என்பதுதான்..! இக்கால ரசிகர்கள் புரிந்து கொண்டால் நல்லது..!

அவ்வளவு பெரிய கோடீஸ்வரர் ஒரே நாளில் ஒரேயொரு கேள்வி கேட்டதற்காகவே கார்த்தியை தன்னுடைய மருமகனாக்க விரும்புவது.. சம்பத்தின் சி.பி.ஐ. என்ட்ரி.. அத்தனை போலீஸ்காரர்களையும் அடித்து வீழ்த்திவிட்டு கார்த்தி தப்பிப்பது.. திரும்பவும் அதே கெஸ்ட் ஹவுஸுக்கு வந்திறங்கும் கார்த்தி, எந்தப் பிரச்சினையுமில்லாமல் அறைக்குள் செல்வது.. காரில் தப்பித்துச் செல்லும் சில காட்சிகள்.. செல்போனை டிரேஸ் செய்தாலே பிடித்திருக்கும் சூழல் உண்டு என்றாலும், அதனைத் தவிர்த்திருப்பது.. இவ்வளவு பெரிய கேஸாகியும் கார்த்தியின் நண்பர்களைவிட்டுவைத்து வேடிக்கை பார்ப்பது.. ஜெயபிரகாஷுக்கு கீழே வேலை பார்க்கும் பிரேம், சி.பி.ஐ.க்கு உளவு வேலை செய்வது.. இவரே மெயின் வில்லனாக பின்னால் மாறுவது.. என்று பல பல பிரச்சினைகளும், கேள்விகளும் படம் முடிந்த பின்பு கிளம்பினாலும் படம் பார்க்கும்போது ஒரு இனம் புரியாத என்ட்டெர்டெயிண்ட்மெண்ட் சூழலுக்குள் சிக்கியிருப்பதாகவே தோன்றியதால் படத்தின் ஓட்டம் மிகவும் ரசிக்க வைத்தது..!

டாஸ்மாக் கடை.. தண்ணி, சரக்கு.. பெண்களை லெக் பீஸ் என்றே அழைப்பது.. காமம் வழிந்தோடிய பாடல் காட்சிகள்.. இரட்டை அர்த்த ஆபாச வசனங்கள் என்று பலவும்  இருப்பதால் உண்மையில் இந்தப் படத்திற்கு A சர்டிபிகேட்டுதான் கிடைச்சிருக்கணும்.. இத்தனை போராடியும், எதிர்த்தும் U/A-வாவது கொடுத்தார்களே என்கிறபோது சென்சார் போர்டையும் பாராட்டியே தீர வேண்டும்..! 

ம்.. அவசியம் பார்க்க வேண்டிய படமில்லை. பட்.. ச்சும்மா ஒரு ஜாலிக்கு வேணும்ன்னா பார்த்துக்கலாம்..!

சென்னை சர்வதேசத் திரைப்பட விழா - 2013 - முதல் நாள்..!

13-12-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

11-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று கோலாகலமாகத் துவங்கியது..! வழக்கம்போல உட்லண்ட்ஸ் காம்பளக்ஸில் காலை மற்றும் மதியக் காட்சிகள் மட்டும் திரையிடப்பட்டன. வெட்டி ஆபீஸராக இருப்பதால் கடந்த 2 வருடங்களாக போக முடியாமல் இருந்த நான் இந்த வருடம் முழுமையாக கலந்து கொள்வது என்று முடிவெடுத்து எனது வேலை தேடும் படலத்தை 10 நாட்களுக்கு மட்டும் ஒத்தி வைத்துள்ளேன்..!

9.30 மணிக்கு வளசரவாக்கத்தில் இருந்து கிளம்பி 10.45 மணிக்குத்தான் உட்லண்ட்ஸ் தியேட்டருக்குள் நுழைய முடிந்த்து..! எங்கிருந்துதான் இத்தனை பேர் கிளம்பி வருகிறார்கள்.. செல்கிறார்கள் என்று தெரியவில்லை. பல இடங்களில் டிராபிக் ஜாம்.. சாலிகிராம்ம் அருகே கேப்டனின் மகன் நடிக்கும் சகாப்தம் படத்தின் துவக்க விழா அவர் வீட்டுத் தெருவிலேயே நடந்ததால் அந்த இடத்தில் ஒரு முறை டிராபிக் ஜாம். அதைத் தாண்டினால் வடபழனி டிப்போ அருகில்.. பின்பு அம்பேத்கார் சிலை அருகே.. பின்பு கோடம்பாக்கம் பாலம் ஏறி இறங்கிய பின்பு.. அதையும் தாண்டினால் பாம்குரோவ் அருகில்.. அதுக்கப்புறம்தான் உச்சக்கட்ட கடுப்பு.. போயஸ் ஆத்தா கிளம்பப் போவுதுன்னு சொல்லி அப்படியே ஸ்டாப் பண்ணிட்டாங்க.. கிட்டத்தட்ட 15 நிமிஷம் கழிச்சதுத்தான் லைன் கிளியராச்சு.. என்ன கொடுமை இது..? இனிமே பொறந்தாலும் சி.எம்.மாதாங்க பொறக்கணும். அப்போதான் கரெக்ட் டயத்துக்கு எல்லா இடத்துக்கும் போய்ச் சேர முடியும்..!

பார்த்தவுடன் கை குலுக்கி 'வாங்க லூட்டி சரவணன்' என்று வாஞ்சையாக அழைத்து கேண்டீனுக்கு அழைத்துச் செல்லும் இயக்குநர் ஏ.ஜெகந்நாதன் ஸார், இவ்வுலகிலேயே இல்லை.. ஆனாலும் உட்லண்ட்ஸின் படிகளில் என் கால் பட்டவுடன் இவர் நினைவு சட்டென்று எனக்குள் எழுந்தது..! இதுதான் நல்லவர்களின் சக்தி..! "மதியம் என்னோடதான் லன்ச்.. எங்க இருந்தாலும் மதியம் கேட்ல நிக்கணும்..." என்று உரிமையோடு கண்டிப்புடன் சொல்லி போன் அடித்து அழைத்து சாப்பிடக் கூட்டிப் போகும் 'வேதம்புதிது' கண்ணன் ஸாரும் இன்றைக்கு கனடாவில்.. "அடுத்து எந்தப் படம் நல்லாயிருக்கும்..? சிம்பொனியா..? உட்லண்ட்ஸா..? நம்பி உக்காரலாமா..?" என்று லேசாக கண்ணடித்து கேட்டுச் சிரிக்கும் ஐயா எஸ்.பி.முத்துராமனையும் காணவில்லை..! பழைய தோஸ்த்துகளில் இயக்குநர் தம்பி சுலைமானை மட்டுமே இன்றைக்கு பார்த்தேன்..! 

இந்தச் சோகத்துக்கிடையில் இலக்கியச் சுடர் அண்ணன் செ.சரவணக்குமார்தான் இந்தாண்டு எனக்குக் கிடைத்திருக்கும் புதிய கம்பெனி..! காலையில் பார்த்த முதல் படம் The Disciple. பின்லாந்து நாட்டு படம்.. 1939-ல் கதை நடக்கிறதாம்..! 


பால்டிக் கடல் பகுதியில் ஒரு தீவில் இருக்கும் கலங்கரைவிளக்கத்திற்கு உதவியாளராக  அனுப்பப்படுகிறான் 13 வயது Karl. ஏற்கெனவே அங்கே குடும்பத்துடன் பணியாற்றிவரும் பொறுப்பாளர் Hasselbond. முரட்டுத்தனமானவர். சில நேரம் நேர்மையாகவும், பல நேரங்களில் கண்டிப்பு மிகுந்தவராகவும் இருக்கிறார். தனது மகன் Gustaf Hasselbond-ஐ கப்பல் பணியில் சேர்க்கும் முடிவில் இருக்கிறார் ஹஸ்ஸல்பாண்ட். புதிதாக வேலைக்கு வரும் கார்ல் மிகவும் சிரமப்பட்டு ஹஸ்ஸல்பாண்டிடம் நன்மதிப்பைப் பெற்று கப்பல் பணிக்குச் செல்ல ஆயத்தமாகிறான். முதலில் கார்லுடன் நட்புணர்வுடன் இருக்கும் கஸ்டப் கடைசி நிமிடத்தில் பொறாமை கொள்கிறான்.. 

ஏற்கெனவே தனக்கு ஒரு மகன் இருந்து அவன் இறந்து போனதால் அந்த சோகம் தீராமல் இருப்பதாக அடிக்கடி சொல்கிறார் ஹஸ்ஸல்பாண்ட். சிறுவர்களின் பொறாமை சண்டை ஒரு பக்கம்.. மனைவியின் பியானோ இசையில் மயங்கும் மேலதிகாரியை பார்த்து கோபப்படும் ஹஸ்ஸல்பாண்ட் பியானோவை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட.. மனைவி பேக்கப் செய்து தயார் நிலையில் இருக்க.. குடும்பம் குழப்பத்தின் உச்சத்தில் வரும்போது அந்த லைட் ஹவுஸையே தீ வைத்து எரிக்கிறாள் மிஸஸ் ஹஸ்ஸல்பாண்ட்.. தீக்காயங்களுடன் ஹஸ்ஸல்பாண்ட் சென்றவுடன் இவர்களும் வேறு இடம் பார்க்கத் தயாராகும் சூழலுடன் படம் நிறைவடைகிறது..! சென்ற ஆண்டுக்கான அகாடமி அவார்டு பட்டியலில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்காக இந்தப் படமும் போட்டியிட்டதாம்..! ஜெயிக்கவில்லை..! 

சில இடங்களில் நன்றாக இருப்பதுபோல தெரிந்தாலும் ஒட்டு மொத்தமாக ஒரு சுமாரான படமாகத்தான் எனக்குத் தெரிந்தது..! படத்தில் நிறைய குறியீடுகள் இருப்பதாக செ.சரவணக்குமார் சொன்னார்.. இதையெல்லாம் பார்த்து புரிஞ்சுக்குற அளவுக்கு நமக்கு அறிவு இல்லை என்பதால் மிச்சம், மீதியை அவர் விரைவில் எழுதும்போது படித்துக் கொள்ளுங்கள்..!  

மதியம் அடையாள அட்டை வாங்க கியூவில் நிற்கும்போது கவித்துவ எழுத்தாளர் அண்ணன் ரோசாவசந்தை சந்தித்தேன். சென்ற ஆண்டு சந்தித்தது.. ஒவ்வொரு வருடமும் சில நண்பர்களை இப்படித்தான் சந்திக்க முடிகிறது..! சாப்பிடப்போகும்போது அண்ணன்கள் ஜாக்கி சேகரும், நித்தியும் வந்து சேர்ந்தார்கள்.. ஜாக்கி இந்த ஆண்டு வரவில்லையாம்.. ரொம்ப வருத்தமாகச் சொல்லிவிட்டுப் போனார்..! ஏதோ 'வேலை' ரொம்ப 'டைட்'டா இருக்காம்..! அதுனாலயாம்..!  எனது பிளாக்கில் இருக்கும் நித்தியின் விளம்பரத்தைப் பார்த்து எங்கிருந்தோ யாரோ ஒருத்தர் போன் செய்து பிஸினஸ் பற்றி விசாரித்ததாகச் சொன்னார் நித்தி..! ஆனா கமிஷனை பத்தி மூச்சேவிடலை..! புத்திசாலி பிள்ளைகப்பா..!


மதியம் பார்த்த படம் No. சிலி நாட்டுத் திரைப்படம். அந்நாட்டின் புகழ் பெற்ற சர்வாதிகாரி பினாச்சோடின் கொடுங்கோல் ஆட்சியைப் பற்றி இதுவரையிலும் சுமார் 15 படங்களுக்கும் மேலாக இதே உலக சினிமா நிகழ்வுகளில் பார்த்திருக்கிறேன். இது 16 என்று நினைக்கிறேன்..!

1973-ல் இருந்து கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சியை நடத்தி வந்த பினாச்சோட் உலக நாடுகளின் வற்புறுத்தல் மற்றும் தென் அமெரிக்க அண்டை நாடுகளின் அறிவுறுத்தல் காரணமாக ஜனநாயகமான வழியில் மறைமுமாக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்துடன் 1988-ம் ஆண்டு ஒரு கருத்துக் கணிப்புக்கு ஒத்துக் கொண்டிருக்கிறார்.

அதாகப்பட்டது அடுத்த 8 ஆண்டுகளுக்கு தானே தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியாக பணியாற்ற மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். தனக்கு பாராளுமன்றம் கட்டுப்பட வேண்டும் என்ற ரீதியில் அவரது கோரிக்கை இருந்த்து. இதில் யெஸ் - நோ என்ற இரண்டு ஆப்சன்கள் மட்டுமே இருந்தன. இதுதான் இந்தப் படத்தின் களம்..!

படத்தின் ஹீரோ சவீந்திரா ஒரு விளம்பர நிறுவனத்தில் வேலை பார்ப்பவர். இந்த கருத்துக் கணிப்புக்காக அப்போதைய அரசு தொலைக்காட்சியில் இரு தரப்பினருக்கும் சம அளவிற்கு பிரச்சாரம் செய்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டன. 27 நாட்கள்.. 15 நிமிடங்கள்.. இது தரப்பும் தங்களது பிரச்சாரத்தை செய்து கொள்ளலாம் என்பதே அந்த தேர்தல் சுதந்திரம். இதனைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த பினோச்சேடின் எதிர்த் தரப்பு இதற்காக சவீந்திராவை அணுகுகின்றன. அவர் இதற்கு ஒப்புக் கொள்ளும் நேரத்தில் இவருடைய பாஸ் லூகோவோ தனது பிஸினஸுக்காக யெஸ் தரப்பை ஆதரிக்க வேண்டிய சூழல் வருகிறது..!

இந்தக் கருத்துக் கணிப்பில் தான் ஜெயிக்க வேண்டிய பினோச்சாட் செய்த உள்ளடி வேலைகள்.. பயன்படுத்திய ராஜதந்திரம்.. சாமதான தண்டல்கள்.. அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி செலுத்திய வன்முறைகள்.. கைதுகள்.. சித்ரவதைகள் என்று அனைத்தையும் அப்போதைய காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோ தொகுப்புகள் மூலமாக ஆங்காங்கே இடையிடையே காட்டி ஒரு டாக்குமெண்ட்ரி போலவே எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்..! முடிவில் பினோச்சேடை வீட்டுக்குப் போகச் சொல்லி 55.98 பேரும், அவருக்கு ஆதரவாக 44.02 பேரும் வாக்களிக்க.. ஒரு சர்வாதிகாரம் சிலி நாட்டில் இப்படித்தான் முடிவுக்கு வந்துள்ளது..! இதைத்தான் உள்ளது உள்ளபடியே இப்படத்தில் காண்பித்திருக்கிறார்கள்..!

இந்தப் படத்தைப் பார்க்கும்போது எனக்கு தோன்றுவது இதுதான்..  இப்படி பினாச்சோட் ஆட்சியில் நடந்த சித்ரவதைகள்.. அரசியல் கொலைகள்.. ராணுவ அத்துமீறல்களை வெளிப்படையாக படம் போட்டுக் காண்பித்தது போன்று வடஎல்லை, தென்எல்லை போராட்டம்.. மொழிவாரி மாகாணப் பிரிப்பு.. ராஜாஜி காலத்து இந்தித் திணிப்பை எதிர்த்த போராட்டம்... காமராஜர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டம்.. பக்தவச்சலம் காலத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டம்.. கீழ்வெண்மணி படுகொலை.. இம்மானுவேல் சேகரன் படுகொலை.. அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் உதயகுமார் படுகொலை.. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் ராமதாஸ் நடத்திய சாலை மறியல்..  ஆத்தா ஆட்சியில் வீரப்பன் வேட்டை என்ற பெயரில் மலைவாழ் மக்களை கொன்று குவித்த வரலாறு.. ஆத்தாவின் சொத்துக் குவிப்பு வழக்கு.. தாத்தா மீதான சர்க்காரியா கமிஷன்.. தாமிரபரணி ஆற்றில் நடந்த படுகொலைகள்.. 2 ஜி கேஸ்.. ஈழப் பிரச்சனை.. முள்ளிவாய்க்கால் படுகொலைகள்.. இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்..!!! 

நமக்கு இதுக்கெல்லாம் கொடுப்பினை இல்லவே இல்லை. ஆனால் நாமதான் வெட்கமில்லாமல் சொல்லிக்கிட்டே இருக்கோம். உலகத்திலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியான்னு..!?  ஜெயலலிதா, கருணாநிதி,  ராஜீவ்காந்தி, ஈழம், சோனியா காந்தி, சிதம்பரம், ராகுல்காந்தி ஒரு பெயரைக்கூட ஒரு திரைப்படத்திலும் வெளிப்படையாக வைத்து விமர்சனம் செய்யக்கூட உரிமையில்லாத இந்த நாட்டில்தான் ஜனநாயகம் வாழுதாம்..!  நல்லா வாழுங்கடே..!

நம்பி வந்துட்டீங்க..! ஏமாத்தக் கூடாதுல்ல..!!!

8-12-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எனக்கும், சோதனைகளுக்கும்தான் நெருங்கிய தொடர்புண்டு என்பது உங்களுக்கும் தெரிந்ததுதானே..? நேற்றைக்கு வந்த சோதனை இது..!

பிரசாத் லேப்பில் 'தகராறு' படம் பார்த்த கொதிப்போடு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். சாலிகிராமம் பஸ்ஸ்டாண்டு அருகில் வந்தபோது எனது டூவீலர் பஞ்சரானதுபோல தெரிந்தது..! தூக்கித் தூக்கியடித்தது.. இரவு 10 மணி.. மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது.. வழியில் இருந்த ஒரு டூவீலர் கடையில் வண்டியை நிறுத்தி “பஞ்சர்.. சரி செய்ய முடியுமா?” என்றேன்.. சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த கடைக்கார நபர், “இல்லீங்க.. வீட்டுக்குப் போகணும்.. லேட்டாயிருச்சு... விட்ருங்க..” என்றார்.. சற்று தூரத்தில் இருந்த இன்னொரு கடையில் இருந்த பையன், “ஓனர் ஏர் கம்பரஸரை ஆஃப் பண்ணிட்டுப் போயிட்டாரு. நான் போட்டா திட்டுவாரு ஸார்.. காலைல வாங்களேன்..” என்றான்.. 'என்னடா இது சோதனை'ன்னு வழக்கம்போல அந்த கம்னாட்டி முருகப் பயலை திட்டிக்கிட்டே வண்டியை தள்ளிக் கொண்டே நடந்தேன்..! 

வழியெங்கும் பூட்டப்பட்ட கடைகள்தான்.. சரி. ஆபத்துக்கு பாவமில்லை என்று வண்டியை ஓட்டலாம் என்று நினைத்தேன். சென்ற மாதம்தான் டியூப் மாற்றியது நினைவுக்கு வந்து தொலைக்க, வேறு வழியில்லாமல் தலைவிதியே என்று மீண்டும் தள்ளினேன்.. 'பேம் நேஷனல்' தியேட்டரின் பின்பக்க சாலை அருகே வந்தபோது இதுக்கு மேல முடியாது என்பது போல தோன்றியது.. ஏதாவது ஒரு கடையில் நிறுத்திவிட்டு ஆட்டோ புடிச்சு வீட்டுக்கு போயிட்டு காலைல வந்து எடுத்துக்கலாம் என்று நினைத்து அருகில் இருந்த கடைகளில் கேட்டேன்.. “வேணாம் ஸார்.. ஏதாவது காணாம போனா பிரச்சினையாயிரும்...” என்றார்கள்..!

சரி.. வேறென்ன செய்றது என்று யோசித்தபோது தனது டாடா நானோ காரில் பந்தாவாக சென்று கொண்டிருந்தார் நமது அழகு அறிவிப்பாளரும் சக பதிவருமான சுரேகா.. தொண்டை கிழிய கத்திப் பார்த்தேன். 'அண்ணே.. சுரேகா.. யோவ்..' என்றெல்லாம் சுதியிறங்கி பார்த்தேன். அவரோ நாலு பக்கக் கண்ணாடியையும் ஏற்றிவிட்டுக் கொண்டு  தனக்கு முன்னால் ஸ்கூட்டியில் போய்க் கொண்டிருந்த ஒரு அம்மணியை, வைத்த கண் வாங்காமல் பார்த்தபடியே தனது காரில் பாலோ செய்து போய்க் கொண்டேயிருந்தார். போயே விட்டார்..! 

மேலும் மழை வலுக்க.. இன்னும் கொஞ்ச தூரம் தள்ளுவோம் என்று சொல்லித் தள்ளியபடியே வந்தால் வலது புறம் ஒரு சின்ன கடையில் ஒரு  டூவீலருக்கு பஞ்சர் போட்டுக் கொண்டிருந்தார்கள்.. கடைக்காரர் அருகில் நின்று கொண்டிருந்தார். வேலையாள்தான் பஞ்சர் ஓட்டிக் கொண்டிருந்தார்.. 

நானும் என் வண்டியை நிறுத்தி, “ஸார் பஞ்சர்..” என்று சொல்லி முடிப்பதற்குள்ளாக கடைக்காரர் புயலாய் சீறினார்.. “நேரமில்லீங்க.. முடியாதுங்க.. நாங்க வீட்டுக்குப் போகணும்..” என்றார்..  பொசுக்கென்றது எனக்கு..! “இல்லங்க.. வீடு ரொம்ப தூரம்.. மழை வேற பெய்யுது..” என்றேன். “அதுக்கு நாங்கென்ன செய்றது..?” என்றவர் தொடர்ந்து ஏதேதோ சொல்லியபடியே உள்ளே போனார்.. நான் மறுபடியும் உள்ளே சென்று “காசு வேண்ணாலும்கூட தர்றேன் ஸார்..” என்றேன்.. “இல்லங்க.. எனக்கு டைமாச்சு.. நான் சீக்கிரம் வீட்டுக்குப் போகணும். உங்க அவசரத்துக்கெல்லாம் நாங்க வேலை செய்ய முடியாது...” என்று சொல்லிவிட்டு வேகமாகத் தன் வேலைகளை பார்க்க ஆரம்பித்துவிட்டார்..

'சரி.. இதுக்கு மேல பேச முடியாது.. போகலாம்...' என்று நினைத்து வண்டியை எடுக்கப் போன சமயத்தில் “அண்ணே.. இருண்ணே..” என்றார் பஞ்சர் போட்டுக் கொண்டிருந்தவர்.. பட்டென்று தலையை நிமிர்ந்து பார்த்த கடைக்காரரிடம்.. “நம்மளை நம்பி வந்துட்டாரு.. 'போ'ன்னு சொன்னா எப்படி..? நாளைக்கு இவரும்தான நமக்கு கஸ்டமரா வருவாரு.. ஏதோ ஒரு நாளைக்கு ஆத்திர, அவசரத்துக்கு செய்றதுல என்னங்க..?” என்றார்.. அவ்வளவுதான் கடைக்காரருக்கு வந்ததே கோபம்..!

எழுந்து வந்து ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார்..! அனைத்தையும் கேட்டபடியே பஞ்சர் ஒட்டி முடித்தவர்.. “நீங்க வேண்ணா இப்ப கிளம்புங்க.. நான் கடையைப் பூட்டிட்டு சாவியை கொண்டாந்து, வீட்ல கொடுத்துட்டு போறேன்..” என்றார்.. கடைக்காரர் என்னையும், அவரையும் முறைத்துவிட்டு, சாவியை கீழே விட்டெறிந்துவிட்டு தனது பைக்கை எடுத்துக் கிளம்பினார்..!

பஞ்சர் ஒட்டியவர் என்னிடம். “நீங்க உக்காருங்க.. 10 நிமிஷத்துல முடிச்சுத் தர்றேன்” என்று பதமாகச் சொல்லிவிட்டு வேலையில் மூழ்கினார். 2 நிமிடங்களில் மீண்டும் பைக்கில் வந்த கடைக்காரர் பஞ்சர் ஒட்டியவரிடம், “இங்க பாரு.. இன்னிக்கு லேட்டா வீட்டுக்குப் போறோம்னு நினைச்சுட்டு.. காலைல லேட்டா மட்டும் வந்தன்னு வையி.. நாளைக்கே வேற ஆளை போட்டுட்டு போயிக்கிட்டே இருப்பேன்.. பார்த்துக்க..” என்று மிரட்டிவிட்டு போக.. பஞ்சர் ஒட்டியவர் ஒரு ரியாக்ஷனைகூட காட்டாமல் தனது வேலையைத் தொடர்ந்தார்..!

“இந்தாளு இப்படித்தாங்க.. சீக்கிரமா வீட்டுக்குப் போகணும்.. வீட்டுக்குப் போகணும்னு பறப்பாரு.. நமக்குக் கஸ்டமர் முக்கியமில்லையா..? அதெல்லாம் தெரியாது.. முசுடு.. முணுக்குன்னா கோபம் வந்திரும்..” என்றார். கிடைத்த இடைவெளியில் அவரைப் பற்றி கேட்டபோது, “இங்க வேலைக்கு சேர்ந்து 2 வருஷமாச்சு.. வர்ற கஸ்டமர்கிட்ட வாங்குற காசுல மூணுல ஒரு பங்கு எனக்கு.. மிச்சம் அவருக்கு.. சில நாள் 500 ரூபாகிட்ட நமக்கு வரும். பல நாள் 100 கூட வரும்.. ஆனா அதையும் உடனே தர மாட்டாரு.. வீக்லி வீக்லி வாங்கிக்கன்னுவாரு.. சில தடவை மாசாமாசம் கணக்கு வைச்சு தர்றேம்பாரு.. அவர் சொல்றதுதான் கணக்கு.. எப்படியோ நம்ம வண்டியோடுது..” என்றார் பெருமூச்சுடன்..!

“நீங்களே இது மாதிரி தனியா கடை வைச்சிரலாமே...” என்றேன்.. “வைச்சிருந்தேன் ஸார்.. பாழாய்ப் போன குடி.. குடிச்சு குடிச்சே அத்தனையையும் அழிச்சிட்டேன்.. கடையும் போச்சு.. இனியும் நமக்குக் காசு கொடுக்க ஆளில்லை.. அதான் கிடைச்ச வேலைக்கு வரலாம்னு வந்துட்டேன்..” என்றார்..  

எல்லாரும் தண்ணில டியூப்பை அமுக்கி காத்து லீக் ஆகுதான்னு செக் செய்வாங்க.. இவர் கையை வைச்சு தடவித் தடவியே கண்டுபிடிச்சாரு.. லீக்கை அடைச்சப்புறம் காத்தடிச்சு அதை மட்டும் தண்ணில வைச்சு செக் செஞ்சாரு.. சொன்ன மாதிரியே 10 நிமிஷத்துல முடிச்சவுடனே 100 ரூபா கொடுத்தேன்.. “இல்ல ஸார் 50 ரூபாதான்...” என்றார்.. “பரவாயில்லங்க.. உங்க ஓனர் கத்தப் போறாரு. கொடுத்திருங்க...” என்றேன்.. தயக்கத்தோடு வாங்கிக் கொண்டார்..!

அவரும் கடையைப் பூட்டிக் கொண்டு கிளம்ப.. நானும் கிளம்பினேன்.. “ஓனர் வீடு எங்க இருக்குங்க..?” என்றேன் சாதாரணமாக.. “கோயம்பேடு ஸார்..” என்றார்.. “உங்க வீடு..?" என்றேன்.  வெஸ்ட் கே.கே. நகர் ஸார்..” என்றார்.. எனக்குத் துணுக்கென்றது..! “என்னங்க.. இந்த மழைல கோயம்பேடு போயிட்டு திரும்பவும் நீங்க வரணுமா..? எதுக்கு இந்த வேலை..? சொல்லியிருந்தா வண்டியைகூட விட்டுட்டு ஆட்டோ பிடிச்சு போயிருப்பனே...” என்றேன் அதிர்ச்சி தாங்காமல்..!

“அட விடுங்க ஸார்.. நம்மளை நம்பி வந்துட்டீங்க.. உங்களை ஏமாத்தக் கூடாதுன்னு நினைச்சேன். அவ்ளோதான்.. நீங்க கிளம்புங்க..” என்று கேஷுவலாகச் சொல்லிவிட்டு வேகமாக தனது சைக்கிளை மிதித்துக் கொண்டு மழையில் நனைந்தபடியே கிளம்பினார்..!

வீட்டிற்கு வரும் வழியெல்லாம் நினைத்தேன்.. நேற்று இரவு தூங்கும் முன்பும் நினைத்தேன்.. இன்று காலையும் நினைத்தேன். ஏன் இப்போதுகூட நினைக்கிறேன்.. “நம்பி வந்துட்டீங்க.. ஏமாத்தக் கூடாதுன்னு நினைக்கிறேன்..”னு நான் யாருக்காச்சும் ஏதாவது செஞ்சிருக்கனான்னு..???

யோசிச்சுக்கிட்டேயிருக்கேன்..!!! விடை கிடைச்சா பின்னூட்டத்துல சொல்றேன்..! 

தகராறு - சினிமா விமர்சனம்

8-12-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

"மெளன குரு' படத்திற்குப் பின்பு 50 கதைகள் கேட்டும் பிடிக்காமல் போய் கடைசியாக இந்தக் கதைதான் என்னை இம்ப்ரஸ் செய்தது. அதுதான் 2 வருடங்கள் காத்திருந்து அடுத்த படம் பண்ணியிருக்கேன்..." என்று இதன் ஹீரோ அருள்நிதி கூறியிருக்கிறார். கதை சொல்லும்போது இந்தப் படத்தின் மெயின் டிவிஸ்ட்டை மட்டும் பில்டப்பாக இயக்குநர் கூறியிருப்பார்ன்னு நினைக்குறேன்..! அதான் அருள்நிதி தம்பீ பீலாயிட்டாப்புல போலிருக்கு..! 


ஒரு ஊர்ல 4 திருடனுங்க.. அவங்க ஒரு நாள் ராத்திரி குடியிருந்த கோவிலான டாஸ்மாக்குல சரக்கடிச்சிட்டு வீட்டுக்குக் கிளம்பும்போது.. அதுல ஒருத்தனை யாரோ கொலை பண்ணிர்றாங்க.. அதே நாள்ல இன்னொரு இடத்துல ஒரு போலீஸ் கான்ஸ்டபிளையும் யாரோ போட்டுத் தள்ளிடறாங்க..! இந்த 2 கொலைகளையும் யார் செஞ்சதுன்னு போலீஸ் ஒரு பக்கம் தேட.. தங்களோட உயிர் நண்பனை எவன் கொன்னான்னு நண்பர்கள் கூட்டமும் ஒரு பக்கம் தேடுது.. கடைசீல யார் கொன்னதுன்றதுதான் கிளைமாக்ஸ்..!

காட்சிக்கு காட்சி டாஸ்மாக் சரக்குதான்.. அநேகமா இந்த வருஷம் வந்த படங்கள்லேயே இந்தப் படம்தான் அதிக சரக்குகளை காட்டியிருக்கும் படம்ன்னு நினைக்கிறேன்..! இப்படியே போனா.. நாளைய.. வருங்கால சமுதாயம்.. நம்ம தமிழர்கள் குடியே கதின்னு கெடந்தாங்கன்னு நம்ம தலைமுறையைப் பத்திப் பேசப் போறாங்க..! ஏன்னா ஒரு காலத்திய சூழலை அடுத்தத் தலைமுறைக்குக் காட்டுறது சினிமாதானே..? அதுவே இந்த லட்சணத்துல இருக்கே..? யாருக்கு இங்க அக்கறை இருக்கு..? யதார்த்தத்தைக் காட்டுறோம்ன்னு சொல்லிட்டு டாஸ்மாக்கையே காட்டிக்கிட்டிருந்தா எப்படி..? எடுக்குறதுக்கு கதையா இல்லை..?

இதுல இதுக்கு மதுரை மண்ணோட பேக்கிரவுண்ட் வேற..! ஏதோ மதுரைல இருக்கிறவனுங்க அத்தனை பேரும் கத்தி, அரிவாளோடதான் திரியறானுங்க நினைப்பு..? அதோட "மதுரைக்கார பொண்ணுகன்னா ச்சும்மா நினைச்சியா..? எங்களையும் ஏமாத்தினா சீவிருவோம்"ன்னு பொம்பளைங்களேயும் சேர்த்தே தெருவுக்கு இழுத்து வைச்சிருக்காங்க..! இப்போ மதுரை மண்ணுக்கு யார்தாங்க அத்தாரிட்டி..!? ஆக மொத்தம்.. சென்னைல மட்டும்தான் மக்கள்ஸ் ஒழுக்கமா வாழுறாங்கன்னு கோடம்பாக்கமே சொல்லுதுன்னு நினைச்சுக்க வேண்டியதுதான்..!

பீரோ புல்லிங் கொள்ளையர்கள்.. ஒரு வீட்ல கொள்ளையடிச்சிட்டு போயிட்டாங்க. பாடல் காட்சில அதே திருடர்கள் அதுக்கு முன்னாடியே வேற கொள்ளை கேஸ்ல பிடிபட்டு  ஜெயிலுக்கு போயிட்டு திரும்பி வந்திருக்கிறதா காட்டுறாங்க.. இப்போ கொள்ளையடிச்சா மட்டும் அவங்களை தேடவே தேடாதா..? அவங்களை கண்டு பிடிக்கவே முடியாதா..? மதுரைல போலீஸ்ன்னு ஒண்ணு என்ன செய்யுதுன்னே தெரியாம கெடக்கு இந்தப் படத்துல..? அவ்வளவு லாஜிக் ஓட்டை..!

அருள்நிதி, பவண்ஜி, சுலில்குமார், முருகதாஸ் இவங்க நாலு பேரும்தான் அந்த திருடனுங்க..! நடிப்பெல்லாம் நல்லாத்தான் இருக்கு..! நட்புக்காக உயிரையே கொடுப்பேன்னு சொல்ற ஹீரோதான், முன்பாதில நட்பையே விட்டுட்டு ஹீரோயின் பின்னாடி சுத்துறாரு..  ஹீரோயின்கிட்ட பேசுறதுக்கே பயப்படுற ஹீரோதான்.. "எனக்கு நட்புதான் முக்கியம்.. நீ வேண்ணா வேற ஆளை பார்த்துக்க"ன்னு கடைசீல சொல்றாரு..! என்னமோ உதைக்குதேன்னு இயக்குநர் யோசிக்க வேணாம்..?

பூர்ணாவின் கேரக்டர் ஸ்கெட்ச்சுதான் படமே..! திருடன், அயோக்கியன்னு தெரிஞ்சும் காதலிக்கிறதுதானே, இப்போ தமிழ்ச் சினிமால பேஷன். அதையேதான் இந்தப் பொண்ணும் செஞ்சிருக்கு..! ஏண்டா என்னை லவ் பண்ண வைச்சிட்டு இப்போ வேணாண்ற என்ற அந்த கோபத்தில் நியாயம் உண்டுதான்.. விரட்டி விரட்டி காதலிக்கும் ஹீரோ.. திடீர்ன்னு டிராக் மாறிட்டா.. அது மாதிரி ஹீரோயின்களால் உடனேயே டிராக் மாற முடியாது என்பதை இந்தப் படத்துல அழுத்தமா சொல்லியிருக்காரு இயக்குநர்..!

அந்தக் கொலைகளைச் செய்த்து யார்ன்னு கண்டுபிடிக்கத்தான் 3 டைப் திரைக்கதைகள் படத்துல வருது.. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒரு பக்கம் என்கவுண்ட்டர் செய்ய பிளானிங்கோட இருக்குறது.. பூர்ணாவோட அப்பா ஒரு பக்கம்.. இன்னொரு பக்கம் லோக்கல் தாதாவை வீட்ல வைச்சு சாத்துனதால.. அவனோட எதிர்ப்பு.. இப்படி 3 பக்க விரோதத்தில் யார்தான் செஞ்சதுன்னு யோசிக்க வைச்சு கிளைமாக்ஸ்ல சரியான சமயத்துல சஸ்பென்ஸை உடைக்கிறாரு இயக்குநர்..! அந்தக் கடைசி 10 நிமிஷம் படம் ஓகே..! 

பூர்ணாவை தமிழ்த் திரையுலகம் இன்னமும் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது புரிகிறது..! மெச்சூர்டான கேரக்டர்களையும் அவரால் செய்ய முடியும் என்பதை இனிமேலாச்சும் புரிஞ்சுக்கிட்டு இதைவிட நல்ல கேரக்டர்களை கொடுத்து வாழ வைக்கலாம்..!

அருள்நிதி 'மெளனகுரு' ஸ்டைலிலேயே இதிலும் நடித்திருக்கிறார். இதற்கடுத்த படங்களில் தனக்கென்று தனி பாணியை உருவாக்கிக் கொண்டால் நலமாக இருக்கும். அடுத்தடுத்து ஒரே பார்மெட் எனில் மக்களுக்கு சலிப்பாகிவிடும்..! யதார்த்தமான.. புரிந்து கொள்ள முடியாத ரவுடித்தனம் எனில் இயக்குநர்கள் இப்படித்தான் ஹீரோக்களை தேர்வு செய்கிறார்கள்..! அது அந்த இயக்குநருக்கு ஒரு படம்.. ஆனால் ஹீரோக்களுக்கு வரிசையா தொடர்ந்து வருதே..!? ரொம்பப் போரடிக்குது..! 

மதுரையை சல்லடை போட்டு சலித்து எடுத்திருக்கம் தில்ராஜின் ஒளிப்பதிவில் அருள்தாஸ் ஆட்களுடன் சண்டையிடும் காட்சி செம பரபரப்பு...!  மதுரையை லாங் ஸாட்டிலேயே காட்டி அவ்வப்போது கதைக்களம் அதுதான் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்..!  

டாஸ்மாக் பாரை தள்ளிக் கொண்டு போக முயலும் மயில்சாமி.. பக்கெட் நண்பரான பாவா லட்சுமணன்.. பூர்ணாவின் தாயான சிந்தியாவின் லொட.. லொட பேச்சு.. ஜெயபிரகாஷின் எடுறா அரிவாளை என்ற வீரப் பேச்சு.. அருள்தாஸின் கன்னியமான ரவுடி பேச்சு.. 2 கொலைகள் நடப்பதையும் டைட்டில் கார்டிலேயே வெறும் வசனத்தாலேயே நகர்த்தியிருக்கும்விதம்.. இப்படி சிலவைகள் ரசிப்பதுபோல இருந்தாலும்.. மதுரை போலீஸ் என்னதான் செய்யுது என்ற கேள்விக்கு விடையே இல்லாததால்  திரைக்கதை நொண்டியடிப்பதையும் சொல்லத்தான் வேண்டும்..!

எழுதி, இயக்கியிருக்கும் கணேஷ் விநாயக் புதுமுகம் என்பதால் வாழ்த்தி வரவேற்போம்.. அடுத்தடுத்த படங்களில் டாஸ்மாக்கே இல்லாமல் படம் எடுத்து தனது பாவத்தை அவர் நிவர்த்தி செய்வார் என்றும் நம்புகிறேன்..! 

கல்யாண சமையல் சாதம் - சினிமா விமர்சனம்

8-12-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ரொம்பத் தைரியந்தான் இந்த அய்யர்வாள்களுக்கு..! படத்தில் சம்பந்தப்பட்ட அத்தனை பேருமே அய்யர்வாள்கள்தான் என்பதால் இப்படிச் சொல்ல வேண்டியிருக்கிறது..! கத்தி மேல் நடப்பது போன்ற கதை..! கொஞ்சம் தடுமாறினாலும் பிட்டு படக் கதையாக மாறிவிடும்.. ஆனால் கொஞ்சமும் தடுமாற்றமில்லாமல், திரைக்கதையை நேர்த்தியாக நெய்து பட்டுத் துணி போல போர்த்தி எடுத்திருக்கிறார் இயக்குநர் ஆர்.எஸ்.பிரசன்னா..!


முதலில் இயக்குநர் பிரசன்னாவுக்கும், அவருக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர்களுக்கும் எனது நன்றி..! இப்படியொரு கதையை இது மாதிரியான கெட்டப்பில் எடுப்பதற்கு இந்தத் தயாரிப்பாளர்களுக்கு வந்திருக்கும் தைரியம் அசாத்தியமானது.. அடுத்தது நடிகர் பிரசன்னா..! கொஞ்சம்விட்டால் தனக்கென்று தனியாக பட்டப் பெயர் வைத்து பெயரை கெடுத்துவிடுவார்கள் என்பது தெரிந்திருந்தும் துணிந்து ஹீரோவாகியிருக்கிறார் என்றால் இவரது தைரியத்திற்கு ஒரு 'ஓ' போடுவோம்..!

ஹீரோ பிரசன்னாவுக்கும், ஹீரோயின் லேகாவுக்கும் திருமணம் நிச்சயமாகிறது.. ஆனால் கல்யாணம் 8 மாதங்கள் கழித்துதான்..! இடைப்பட்ட காலத்தில் பொண்ணும், மாப்பிள்ளையும் இணைய ஊடகங்கள் வழியாகவும், நேரிலும் சந்தித்து காதலை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாள் ஹீரோயினின் பேர்த்டே பார்ட்டியில் இருவரும் சரக்கடித்து ஓவராகிப் போக.. நாளைய கணவர்தானே என்று நாயகியும்.. நாளைய மனைவிதானே என்று நாயகனும் விரும்பி இணைந்து கட்டிலுக்குப் போக.. திடீரென்று நாயகனுக்கு 'முடியாத' நிலை ஏற்படுகிறது.. அப்போதைக்கு அதனை ஈஸியாக எடுத்துக் கொள்ளும் நாயகி.. "டேக் இட் ஈஸி.. டாக்டர்கிட்ட செக்கப் பண்ணிக்க.. சரியாப் போயிரும்.." என்று நாயகனிடம் சொல்லிவிட்டுப் போகிறார்..!

'முதல் முயற்சி'யிலேயே 'வெற்றி' கண்ட கட்டுக் கதைகளை நிறைய கேட்டிருக்கும் ஹீரோ தனக்கு ஏதோ பிரச்சினை என்றெண்ணி சித்த மருத்துவர்கள், ஜோதிடர்கள்.. அலோபதி மருத்துவர்கள்.. கடைசியா மனநிலை மருத்துவர்வரைக்கும் முயல்கிறார்.. இடையில் 'இந்த' விஷயம் வருங்கால மாமனாருக்கே தெரியவந்து அவரும் வந்து அட்வைஸ் செய்கிறார்..! 

திருமண ஏற்பாடுகள் நடக்கும் நிலையில் இதன் கூடவே ஒரு சின்ன ஈகோ பிரச்சினையை பெரிசாக்கும் அளவுக்கு பிரச்சினைகளும் தொடர்கின்றன..! இதையெல்லாம் கடந்து எப்படி அவர்களது திருமணம் கல்யாணத்தில் முடிகிறது என்பதுதான் படம்..! 'கல்யாண சமையல் சாதம்' என்று டைட்டில் வைத்துக் கொண்டு கடைசிவரையிலும் ஒரு சோற்று பருக்கையைக்கூட கண்ணில் காட்டவில்லை என்பதும் இந்தப் படத்தின் இன்னொரு ஸ்பெஷல்..!

பிரசன்னாவின் வயதுக்கேற்ற கேரக்டர் என்பதால் பெண் பார்க்க வரும் முதல் காட்சியில் இருந்து இறுதிவரையிலும் அந்த ஸ்டைலிஸ் நடிப்பு மிகையில்லமல் பார்த்துக் கொள்கிறார். மருத்துவர்களைச் சந்திக்கும் அந்த நேரத்தில் ரிசல்ட் கேட்டு தவியாய் தவிக்கும் அந்த தவிப்பில் நம்மையும் சிரிக்க வைத்துவிடுகிறார்..!  பிரசன்னாவின் இடம் அப்படியேதான் இருக்கிறது என்பதை ஊகிக்க முடிகிறது..! 

லேகா வாஷிங்டன்.. ம்ஹூம்.. ஹீரோயினாக தேறாது என்று சிம்புவாலேயே கழட்டிவிடப்பட்டவர் எப்படி இங்கே என்றுதான் தெரியவில்லை..! சிம்பு சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்..! ஹீரோயின் முகம் இல்லையென்றாலும், சின்னச் சின்ன ஷாட்டுகளிலும், ரொமான்ஸ் காட்சிகளிலும் பிடிக்க வைத்திருக்கிறார்..! பெற்றோர்களுக்குத் தெரியாமல் பிரசன்னாவிடம் கண்ணாலேயே பேசுவது.. கெஞ்சுவது.. மிரட்டுவது என்று வரும்கால கணவர்களுக்குப் பிடித்தமான வகையில் இவரது நடிப்பு சூப்பர்..!

டெல்லிகணேஷ், உமா பத்மநாபன், கீதா ரவிசங்கர், உஷா, காத்தாடி ராமமூர்த்தி, நானு என்று படத்தில் ஒரு அன்னிய முகம்கூட தென்படவில்லை. அத்தனையும் அய்யர்கள்தான்..! குலதெய்வம் கோவிலில் திருமணம் என்று சென்ற பிறகும்கூட அங்கேயும் வேறாள் யாரையும் இவாள் காட்டவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்..!

உமா பத்மநாபனின் சிடுசிடு முகமும், அந்த வேக நடிப்பும்தான் ரொம்ப பேமஸ்.. இதிலும் அது போலவே சில இடங்களில் ரசிக்க வைத்திருக்கிறார். மகளிடமே அது பற்றி கேட்டுவிட்டு சாதாரணமாக செல்லும் காட்சியில் காமெடி இயல்பாகவே வந்திருக்கிறது..! டெல்லி கணேஷ் இன்னொரு பக்கம்.. ஹிண்டு பேப்பருக்கு நடுவில் நடிகைகளின் போட்டோவை வைத்து பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் ஒண்ணும் தெரியாத அப்பாவி பிராமின் அப்பா..! இதையே கடைசிவரையிலும் மெயின்டெயின் செய்து கடைசியாக ஒரு நாய்க்குட்டியே இப்போதைக்கு துணை என்ற ரீதியில் இருப்பவராகக் காட்டியிருப்பது என்னவொரு குறியீடு..!? காபி ஷாப்பில் மருமகனுக்கு கிளாஸ் எடுக்கும் காட்சியில் மாமனாரையும் மறந்து ஒரு ஆம்படையானாக காட்சியளிக்கிறார் டெல்லிகணேஷ்..! 

இந்தப் படம் காமெடி படமல்ல.. ஆனாலும் காமெடிதான் பிரதானம்.. அப்படித்தான் இயக்கம் இருக்கிறது.. இயக்குநர் ஆர்.எஸ்.பிரசன்னா வெகு இயல்பான வகையில் நடிப்பிலேயே காமெடியை கொண்டு வந்திருக்கிறார். சீரியஸான காட்சிகளில்கூட 'அந்த' பிரச்சினையைத் திணித்து கடைசியில் அதனை ஹீரோயின்கூட யூஸ் பண்ணும் அளவுக்கு வைத்திருப்பது இயக்கத்தின் திறமையைக் காட்டுகிறது.. வெல்டன் இயக்குநர் ஸார்..!

ஒரு பாடல் காட்சியில் பேஸ்புக்கின் பக்கங்களை வைத்தும்.. புகைப்படங்களை வைத்தும் வித்தியாசப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது..! பின்னணி இசைதான் ரொம்பவே அகோரம்..! 

இரட்டை அர்த்த வசனங்களை நான் விரும்புபவனல்ல.. ஆனாலும் இந்தப் படத்தில் 'அந்தப்' பிரச்சினையைத் தொட்டுத் தொட்டு வரும் வசனங்கள்தான் படத்தை வெகுவாக ரசிக்க வைக்கிறது என்பதையும் சொல்லியாக வேண்டும்.. பல இடங்களில் வசனங்கள் குத்து மதிப்பாக 'அதனையே' சுற்றி சுற்றி வருவதால் தியேட்டரில் ஆண்கள் வாய் விட்டுச் சிரிக்கிறார்கள்.. பெண்கள்தான் பாவம்.. சிரிக்கவும் முடியவில்லை.. சிரிக்காமலும் இருக்க முடியவில்லை என்ற கதி..! எனக்கு முன்பான வரிசையில் இருந்த ஒரு குடும்பத்தில் பெண்கள் சிரிப்பதை தடுக்கப் பார்த்தும் முடியாமல் சிரிக்க.. ஆண்கள் சிரிக்கவே கூடாது என்ற வைராக்கியத்தில் இருந்தும் முடியாமல் வழிந்ததையும் பார்க்க நேர்ந்தது..! இதுதான் இந்தப் படத்தின் மிகப் பெரிய குறை..! 

குடும்பம், குடும்பமாகச் சென்று பார்க்க முடியாத வகையில் இந்தப் படம் இருந்தாலும்.. பரவாயில்லை தனித் தனியாகச் சென்றாவது பார்த்து விடுங்கள் என்று சொல்ல வைத்திருப்பதே இந்தப் படத்தின் தனிப்பட்ட வெற்றிக்கு அடையாளம்..! 

'கல்யாண சமையல் சாத'த்தை தனியா போய் சாப்பிட்டுப் பாருங்க ..!

ஈகோ - சினிமா விமர்சனம்

06-12-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஈஸ்வர்-கோமதி என்கிற ஹீரோ-ஹீரோயினின் பெயரைச் சுருக்கி அதை வைத்தே படத்தின் பெயரையும் குறிப்பிட்டு வித்தியாசப்படுத்தியிருக்கிறார்கள். இந்த வகையில் இயக்குநருக்கு எனது பாராட்டுக்கள்..!


ஈகோ என்னும் தன்மான கெளரவம் யாருக்கிடையில் இருக்கும்..? இருக்க வேண்டும்..? காதலர்கள்.. தம்பதிகள்.. வேலை செய்யும் இடத்தில் சக வேலையாட்களிடம்.. உற்றார், உறவினர்களிடம்.. நண்பர்களிடத்தில்... என்று தங்களுக்குத் தெரிந்த சிலரிடம் மட்டுமே சிலருக்கு வரும் கெளரவப் பிரச்சினைக்கு பெயர்தான் ஈகோ என்று நான் தெரிந்து வைத்திருக்கிறேன்..!

ஒரு திருடனுக்கும், பறி கொடுத்த பெண்ணுக்கும் இடையில் ஈகோ வருமா..? சரி.. கதை அதுவல்ல.. காதலர்களுக்குள் ஏற்படுகின்ற ஈகோ என்று சொன்னால்.. ஸாரி.. அப்படியொரு கதையே படத்தில் இல்லை..!

ஆனால் படத்தின் பிளாட்.. அடித்தளம் ரொம்ப, ரொம்ப சுவாரசியமானது..!  4 திருடர்கள்.. அதில் ஹீரோ, அவரது நண்பனான 2 திருடர்கள் மட்டும் பெரும் தொகையுடன் எஸ்கேப்பாக.. மீதி 2 திருடர்கள் அவர்களைத் தேடுகிறார்கள். அவர்களிடமிருந்து தப்பிக்கும் நோக்கில் டிரெயினில் மறைந்திருக்கும் நேரத்தில் ஹீரோயினிடம் சிக்குகிறார்கள். ஹீரோயினின் மோதிரத்தை வேறொருவன் திருடப் போய்.. அதை ஹீரோ மீட்டு வருவதற்குள் டிரெயின் போய்விடுகிறது..! கூடவே ஹீரோவின் பணப்பையும்தான்..!

மோதிரத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு தன்னுடைய பணப் பையை வாங்கிச் செல்ல ஹீரோயினின் ஊருக்கு தன் நண்பனுடன் வருகிறார் ஹீரோ. ஹீரோயின் தன் காதலனைச் சந்திக்கப் போவதாக தன் வீட்டில் லெட்டர் எழுதி வைத்துவிட்டு ஓடியிருப்பதால் அந்த வீடு கொதிப்பாக இருக்கிறது. இவர்கள் மிகச் சரியாக கையில் மோதிரத்துடன் போய் நிற்க.. இந்த ஹீரோதான் மகளின் காதலன் என்று ஹீரோயினின் வீட்டார் நினைத்து.. முதலில் அடிக்கப் பார்த்து.. பின்பு போனில் அழும் மகளின் பிடிவாதத்துக்காக திருமணத்துக்கு ஒத்துக் கொள்கிறார்கள். நேரில் வந்து பார்க்கும் ஹீரோயின் டிரெயின் திருடனை தவறுதலாக தனது காதலனாக தன் குடும்பத்தினர் நினைத்துவிட்டார்களே என்று குழம்புகிறாள்..! முழு நீள நகைச்சுவை தர்பாரே நடத்த வேண்டிய அருமையான இடத்தில்.. சொதப்பலான நடிப்பு.. சொதப்பலான இயக்கம்.. சொதப்பலான திரைக்கதையால் மொத்தமாக கோட்டைவிட்டுவிட்டார்கள்..!

முதல் ரீலில் இருந்து பேசுகிறார்கள்.. பேசுகிறார்கள்.. பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். எனது பதிவினைப் போலவே பக்கம், பக்கமான வசனங்கள்..! ஹீரோவைவிடவும் அதிகமாக இம்சித்திருப்பது ஹீரோவின் நண்பனாக நடித்திருக்கும் பாலாதான்..! அவர் பாவம் என்ன செய்வார்..? இயக்கியிருப்பது இயக்குநர்தானே..!? அவரைத்தான் குற்றம் சொல்ல வேண்டும்..!

கேரக்டர் ஸ்கெட்ச்சில் இப்படியொரு லூஸுத்தனமான பேமிலியை வேறெந்த படத்திலும் பார்க்கவே முடியாது..! அரிவாள் துணையில்லாமல் அந்த வீட்டு ஆம்பளைங்க நடமாட மாட்டாங்க போலிருக்கு.. வீட்டுப் பொம்பளைங்க்கூட நீங்க ஜெயிலுக்குப் போனாலும் பரவாயில்லை.. இவங்களை வெட்டித் தள்ளுங்கன்னு சொல்றாங்க..! என்னதான் காமெடி படம்ன்னாலும் எவ்வளவுதான் இடியைத் தாங்குறது..?

ஹீரோவும், நண்பனும் ஹீரோயினின் வீட்டில் இருந்தாக வேண்டும் என்ற திரைக்கதையின்படியே நண்பன் பாலா டயலாக்கை அள்ளி வீசிக் கொண்டேயிருக்க.. அது அத்தனைக்கும் அந்தக் குடும்பத்தினர் எதிர் டயலாக்கை அள்ளி வீசுவதும்.. போதாக்குறைக்கு அந்த வீட்டின் வாண்டுகள்கூட கொலை பண்ணிட்டு கடைசியா இந்த நாய்க்குத்தான் எலும்பை போடுவோம் என்று சொல்வதெல்லாம் காமெடியில்கூட ஒத்துக் கொள்ள முடியாதது..! 

உங்க பொண்ணோட லவ்வர் நான் இல்லை.. மோதிரத்தைக் கொடுத்திட்டு என்னோட பணப் பையை வாங்கிட்டு போக வந்திருக்கேன்னு சொல்லிட்டாலே அங்கேயே கதை முடிஞ்சிருக்கும்..! வாசல்ல இருந்து வீட்டுக்குள்ளாற போறதுவரைக்கும் அந்த காமெடியன் பாலா பேசுற டயலாக்குகள் இருக்கே.. உஷ்.. முடியலை.. இன்னும் ஷார்ப்பா எடிட் செஞ்சிருக்கலாம்.. ஒரே டயலாக்கை 3, 4 தடவை திருப்பித் திருப்பிப் பேசுறாங்க மை லார்ட்..!

ஹீரோயின் திரும்பி வந்த பின்னாடி என்னோட லவ்வர் இவன் இல்லை.. புரிஞ்சுக்குங்கப்பா என்று ஹீரோயின் கெஞ்சுவதை ஏதோ டிஸ்கவரி சேனல் பார்க்குற மாதிரி பீலிங்கோட மொத்த பேமிலியும் கேக்குறதையும், பேசுறதையும் பார்த்தா.. திரைக்கதைய ரூம் போட்டு யோசிக்கும்போது இன்னும் கொஞ்ச நாள் சேர்த்து வாடகையைக் கட்டிருக்கலாம்னு தோணுது..! 

அப்படியிருந்தும் மகளின் மன்னிப்பு குரலை போனில் கேட்டவுடன் அப்பா கல்யாணத்துக்கு ஒத்துக் கொள்வது..! ஹீரோவிடம் மன்னிப்பு கேட்பது.. ஹீரோயினை ஒதுக்கித் தள்ளிவிட்டு ஹீரோவுடன் கல்யாணம் என்று சொல்வது.. பணத்தை பீரோவில் இருந்து எடுத்து வரச் சொல்வது.. அப்பா என்று பாசத்துடன் அழைத்தவுடன் குடும்பமே பாசத்தைக் கொட்டுவது.. லவ்வரை பார்த்தவுடன் ஹீரோயின் ஓடிச் சென்று கட்டிப் பிடித்துக் கொள்வது.. அவர்களுக்குள் ஏற்படும் சின்னச் சண்டை பெரிதாகி இருவரும் பிரிவது.. அதற்கடுத்து ஹீரோ-ஹீரோயின் காதலை வெறுமனே போட்டோக்களை காட்டியே முடித்துவிடுவது.. என்று சிற்சில இடங்களில் சின்ன சின்ன டிவிஸ்ட்டுகள் நன்றாகத்தான் இருந்தன..!

ஆனால் இதனை ரசிக்க வைப்பதற்கான இயக்கம் இல்லாததால்  படம் ஒட்டு மொத்தமாய் பார்த்தால் ஏதோ மேடை நாடகத்தைவிடவும் சுமாராக இருந்த்து போன்ற பீலிங்குதான் வருகிறது.. போதாக்குறைக்கு இந்தப் படத்தோட பின்னணி இசையை கேட்டீங்கன்னா அப்படியே அசந்திருவீங்க..! அப்படியொரு தெய்வீக ராகம்..! தெருவோரத்துல நடக்குற வள்ளி திருமண நாடகத்துலகூட இதைவிடநல்லா போடுவாய்ங்கப்பா..! என்னவொரு டிராஜடி..! 

இயக்குநர் சக்திவேலுவும், கேபிள் சங்கரும் வசனங்கள் என்று போட்டுக் கொண்டதால் இருவரில் யாரைத் திட்டுவது என்றே தெரியவில்லை..! முக்காலே மூணு வீசமாக இருக்கும் இரட்டை அர்த்த வசனங்களை முற்றிலும் தவிர்த்திருக்கலாம்..! சிற்சில இடங்களில் மட்டுமே வசனத்தால் நகைக்க முடிந்தது..! 2 மணி நேர படத்தில் நான் சிரித்தது “யோவ், சும்மா இருய்யா டுபாக்கூர் போலீஸு...” என்று ஹீரோயின்  தனது மாமாவை பார்த்துச் சொல்லும்போதுதான்..! 

சுமாரான முகம் ஹீரோவுக்கு..! அதைவிட சுமாரான முகம் ஹீரோயினுக்கு..! இவர்களுக்கு ஹீரோயினின் நண்பன் பாலா பரவாயில்லையோ என்று தோன்றுகிறது..! ஹீரோயின் இழுத்து இழுத்து வசனத்தை பேசும்போது பார்க்கவே பாவமாக இருக்கிறது..! இன்னும் கொஞ்சம் டிரெயினிங் கொடுத்திருக்கலாம்..! 

டூயட் பாடல் காட்சிகளை படத்தின் நீளம் கருதி கட் செய்திருக்கிறார்கள்.. 2 பாடல்களை மட்டுமே விட்டு வைத்திருக்கிறார்கள். படத்தையே பல முறை டிரீம் செய்ததாக தயாரிப்புத் தரப்பினர் கூறினார்கள்..! அப்படி, இப்படி செய்தும் படத்தில் இதைத்தான் தேற்ற முடிந்தது எனில், முழுமையாக பார்க்க நேர்ந்திருந்தால் என்னவாகியிருக்கும்..? தப்பித்தோம்..!

சில நல்ல, இயக்கத் திறனுடன் கூடிய படங்களை பார்த்துத் தொலைத்துவிட்டதால், இது போன்ற அரை சதவிகித இயக்கத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லையோ என்று நினைக்கிறேன்..! வேறு வழியில்லை..! ஸாரி இயக்குநர் சக்திவேல் ஸார்..! அடுத்த முறை வெற்றி பெற வாழ்த்துகிறேன்..!

போறவங்க போய்க்குங்க..!

ஜன்னல் ஓரம் - சினிமா விமர்சனம்

01-12-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தானே கதை எழுதி, தானே திரைக்கதை எழுதி, தானே வசனம் எழுதும் படங்களை மட்டுமே தான் இயக்குவேன் என்பதை மட்டும் செய்யாமல் இது போன்ற சிறந்த அயல்மொழி கதைகளை நம் மொழிக்கு படமாக்குவது இயக்குநர்களுக்குப் பெருமை சேர்க்கும் விஷயம்.. அந்த வகையில் இந்த 'ஜன்னல் ஓரம்' என்ற நல்லதொரு படம் கிடைத்ததால் நம் தமிழ்ச் சினிமாவுக்கும் தற்போது பெருமைதான்..!  பாராட்டுக்கள் இயக்குநர் கரு.பழனியப்பனுக்கு..!


2012-ல் மலையாளத்தில் வெளிவந்து டாப் டென் படங்களில் முதலிடத்தைப் பிடித்த 'ஆர்டினரி' படத்தின் தமிழ்ப் பதிப்புதான் இந்த 'ஜன்னல் ஓரம்'..!  ஒரிஜினலில் குஞ்சக்கோ போபன் நடித்த கேரக்டரில் விமல்.. பிஜூ மேன்ன் கேரக்டரில் பார்த்திபன்.. ஆனி அகஸ்டின் கேரக்டரில் பூர்ணா.. ஷ்ரத்தா சிவதாஸ் கேரக்டரில்  மணிஷா யாதவ்..! 

இந்தப் படத்தில் நடித்திருக்கும் விமல், பார்த்திபன், விதார்த் மூவரையும் பாராட்டியே தீரவேண்டும்..! ஏனெனில் மூவருமே தனித்தனி ஹீரோக்களாக தற்போது நடித்து வருகிறார்கள். இந்தச் சூழலில் இது போன்று ஒன்றிணைந்து நடிக்க வருவதென்பது தமிழ்ச் சினிமாவின் ஆரோக்கியமான போக்கிற்கு வழி செய்வது போலாகும்..!  

பழனி டூ பண்ணைக்காடு பேருந்து. இதுதான் படத்தின் களம்..! இந்த மார்க்கத்தில் பயணிக்கும் அரசுப் பேருந்தின் டிரைவர் பார்த்திபன். நடத்துனர் விமல். இரவில் பண்ணைக்காடு வந்து சேரும் பேருந்து, மறுநாள் காலை 8 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு பழனிக்கு வந்து சேரும்.. இரவில் டிரைவரும், நடத்துனரும் அங்கேயே தங்கியிருந்து மறுநாள் காலை பேருந்தை இயக்கி வருவார்கள்.. இதற்காக அங்கேயே ஒரு வீட்டை கெஸ்ட் ஹவுஸாக ஆக்கியிருக்கிறார்கள்..!

ஒரே பேருந்து.. ஒரே ஓட்டுநர், நடத்துனர்.. தினமும் வேலைக்குச் சென்று திரும்பும் அவ்வூர் மக்கள்.. என்று அவர்களுக்குள் இருக்கும் அன்னியோன்யத்தை முதல் ஷாட்டிலேயே அறிமுகப்படுத்துகிறார் இயக்குநர்..! தேவையற்ற பில்டப்புகள் ஏதுமில்லாமல் சாதாரணமாகவே துவங்குகிறது படம்..!

டிரைவர் பார்த்திபன் சரக்கடித்துவிட்டுதான் பேருந்தை ஓட்டுவார்.. கொஞ்சம் ஜொள்ளு பார்ட்டி.. வண்டியை விட்டு இறங்கியவுடன் கட்டிங் சாப்பிட்டே தீருவார்.. டீக்கடைக்காரரின் பெண்ணை டைம்பாஸுக்காக லவ்விக் கொண்டிருக்கிறார்.. தனது சர்வீஸில் முதல் டூட்டியாக இந்த ரூட்டில் பார்த்திபனுடன் சேரும் விமலுக்கு ஏர்செல்லின் விற்பனை பிரதிநிதி மணிஷா யாதவின் மீது காதல்.. ஊர்ப் பெரியவர் ராஜேஷின் வீட்டில் தங்கியிருக்கும் பூர்ணாவுக்கும், ராஜேஷின் மகனுக்கும் காதல்.. திருமணம் நடக்கப் போகிறது..! விதார்த் ராஜேஷின் வீட்டில்தான் வசிக்கிறார்.. ஊரில் அனைவரின் வேலைகளையும் தட்டாமல் செய்யும் ஒரு ஆள்.. காலையில் மலைவிட்டு இறங்கும்போது நெற்றியில் திருநீறு பட்டையோடு பக்திப் பழமாக திகழும், கிருஷ்ணமூர்த்தி, கடைசியாக மலையேறும்போது நிஜமாகவே ‘மலை’யேறியே வருகிறார்.. இவருடைய தண்ணி அலம்பல் சுவாரசியமானது..!

ஒரு நாள் தண்ணியடித்து மட்டையான நிலையில் இருக்கும் பார்த்திபனுக்கு, பதிலாக பஸ்ஸை ஓட்டும் விமல், கல்யாணத்திற்காக ஊர் திரும்பும் ராஜேஷின் மகன் மீது மோதி விடுகிறார்.. அந்த நேரத்தில் எதிரில் வரும் வேன் டிரைவரிடம் ராஜேஷ் மகனை ஒப்படைத்துவிட்டு பார்த்திபனும், விமலும் தப்பிக்கிறார்கள். ராஜேஷ் மகனின் பை மட்டும் இவர்கள் வசம் வருகிறது..! திருமணத்திற்கு வந்துவிடுவான் என்று பெற்றவர்கள் காத்திருக்க.. பக்கத்தில் இருக்கும் மலையில் பிணம் கிடந்ததாக போலீஸ் வந்து சொல்கிறது..! ஏதோ ஒருவகையில் மரணம் என்று அனைவருமே சொல்லிக் கொண்டிருக்க.. விமல் குற்றவுணர்ச்சியில் தத்தளிக்க.. தன்னுடைய தங்கையின் திருமணம் விரைவில் நடக்கவிருப்பதால் போலீஸ் சர்ச்சையில் சிக்கிக் கொள்ள மறுத்து பார்த்திபன் தயங்கி நிற்க..! ஒரு நாள் மணிஷா யாதவால், ராஜேஷ் மகனின் பையில் இருக்கும் காதல் கடிதங்கள் அந்த ஊருக்கே அம்பலமாகிறது..! 

சர்ச்சைகள் விமல், பார்த்திபனை சுற்றிச் சுற்றி வர.. விமல் ஜெயிலுக்குப் போவதுவரையிலும் நடந்துவிடுகிறது அதகளம்.. அந்த இரவில் ராஜேஷ் மகனைத் தூக்கிச் சென்ற வேன் டிரைவரை பிடித்தால்தான் உண்மை தெரியும் என்பதால் பார்த்திபன், விமல் இருவரும் டிரைவரைத் தேடிப் பிடிக்க அதற்கடுத்து நடப்பவைகள்தான் டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்..! 

சின்ன கதை.. படம் நெடுகிலும் கேரக்டர்கள் மூலமாகவே சட்டு சட்டென கதை மாறும்விதம்.. அழகான லொகேஷன்கள்.. இனிப்பான பாடல்கள்.. மிக நகைச்சுவையான வசனங்கள்.. என்று படம் மிக ஈர்ப்பாகவே இருக்கிறது..! 

வழக்கம்போல பார்த்திபன்தான் தனது டைமிங்சென்ஸ் வசனத்தில் காட்சிகளை ரசிக்க வைக்கிறார்..! அவரும் சிங்கம்புலியும் பேசுகின்ற வசனங்களும், கட்டிங் போடுவது தொடர்பானவைகளும் அசத்தல்.. விமல்கூட அழகாக டயலாக்குகளை பேசியிருக்கிறாராப்பா..! ஆச்சரியம்..! அதிலும் கொஞ்சம் கூடுதலாக நடிக்கவும் செய்திருக்கிறார்.. "லெட்டரை கொடு" என்று மணிஷா யாதவிடம் விமல் கோபப்படும் காட்சிகளில் இருக்கும் விமலை, வேறெந்த படங்களிலும் நீங்கள் பார்த்திருக்கவே முடியாது.. எல்லாம் இயக்கத்தைப் பொறுத்ததுதான்..! 

அண்ணன் கரு.பழனியப்பனின் படம் என்றாலே பொதுவாக பொது அறிவு வசனங்கள் நிறையவே இருக்கும்.. ஆனால் இதில் ஒரேயொரு இடத்தில் மட்டுமே பார்த்திபன் மூலமாக பேச வைத்திருக்கிறார்.. மற்றபடி வசனங்கள்தான் இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம்..! 

விதார்த், பூர்ணா, மணிஷா யாதவ்.. அவரவர் கேரக்டர்களை அளவோடு செய்திருக்கிறார்கள்.. விதார்த்தின் கிளைமாக்ஸ் அவதாரம் எதிர்பார்க்காதது. ஆனால் இந்த கேரக்டர் அவரது நடிப்பு கேரியரிலும் ஒரு வித்தியாசமானதும், முக்கியமானதுமாகும்..! ஆனாலும் மணிஷா யாதவிற்குப் பதிலாக கிளைமாக்ஸில் பார்த்திபனுடன் கடலை போடும் மோனிகாவையே நடிக்க வைத்திருக்கலாம்..! உல்டா பண்ணிட்டாரு டைரக்டரு..! 

வித்யாசாகரின் இசையில் 'என்னடி என்னடி' பாடலும், 'உன்னைப் பார்க்காம' பாடலும் முணுமுணுக்க வைக்கின்றன..! நீண்ட நாட்கள் கழித்து நல்லதொரு மெலடி பாடல்கள் தமிழ்ப் படத்தில்..!  

டெப்போவில் இருந்து மெக்கானிக் சந்தானபாரதி வந்து ரிப்பேரை தொடங்கும்போதே வெளிப்படும் காமெடியையும் தாண்டி ஏதோவொன்று அப்போதே நடக்கப் போவதை உணர்த்தும்விதமாக காட்சியமைப்பும், பின்னணி இசையும் தொடர்ந்து 10 நிமிடங்களுக்கு வருவதை படம் பார்ப்பவர்கள் நிச்சயம் உணரலாம்..! வெல்டன் வித்யாசாகர் ஸார்..!

தமிழ் வணிகச் சினிமா நோக்கத்தில் சில காட்சிகள் திணிக்கப்பட்டிருப்பதை பார்த்து கொஞ்சம் சங்கடப்பட வேண்டியிருக்கிறது..! மேலும், பார்த்திபன்-டீக்கடைக்காரப் பெண் காதல் சாதாரணமாக இருப்பதும்.. விதார்த்தின் முடிவுக்குப் பிறகு ஊர்க்காரர்கள் சட்டென சகஜ நிலைமைக்கு திரும்புவதும்..  ஜீப் சர்வீஸை புறக்கணித்துவிட்டு மக்கள் பேருந்தில் பயணம் செய்வது தொடர்பான சர்ச்சையில் உடனுக்குடன் காட்சிகள் மாறி, பார்வையாளனின் மனநிலையைச் சட்டென மாற்றுவதும்.. பார்த்திபனின் அழுத்தமில்லாத சில நடிப்பு காட்சிகளும், எப்போதும் சீரியஸ் படங்கள் என்றாலே எதிர்பார்க்கும் அழுவாச்சி காவிய நடிப்புகள் இதில் இல்லாததும்.. படத்தின் இறுதியில் ஏதோவொன்று மிஸ்ஸிங் என்பது போலவே சொல்கிறது..!

அப்படியிருந்தும் படத்தை நிச்சயம் ஒரு முறையாவது பார்க்கலாம் என்று சொல்வதற்கு ஒரேயொரு காரணம்தான்.. அது பழனி டூ பண்ணைக்காடு என்கிற கதைக்களம்..! ஒரு புதிய அனுபவத்தையும், ஒரு சிறுகதையையும் வாசித்த திருப்தியை இந்தப் படம் எனக்கு அளித்திருக்கிறது..!

ஒரு முறை நிச்சயம் பார்க்கலாம்..! 

நவீன சரஸ்வதி சபதம் - சினிமா விமர்சனம்

30-11-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

குடியின் தீமையைப் பற்றி விளக்கப் படமாக எடுக்க வேண்டிய படம்..! பெரும் தயாரிப்பாளர் ஒருவர் கையில் சிக்கிவிட்டதால் பெரும் பாடமாகவே எடுத்துக் காண்பித்திருக்கிறார்கள்..!


ஹீரோவாகி அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தைப் பிடிக்கத் துடிக்கும் ராஜ்குமார்.. அடுத்த எம்.பி.யாகி இன்னமும் பணத்தை சம்பாதிக்கத் துடிக்கும் சத்யன்.. சொர்ணாக்கா மாதிரியான ஒரு மனைவியிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் விடிவி கணேஷ்.. ரகசிய வியாதி மருத்துவராக திகழும் ஜெய்.. இவர்கள் நால்வரும் நண்பர்கள்.. நால்வருக்கும் ஒரு ஒற்றுமை.. மெகா குடியர்கள்..! 

குடியின் தீமைகளைப் பற்றி இவர்களை வைத்தே ஒரு நாடகம் நடத்த ஆசைப்படுகிறாராம் சிவபெருமான். ஆகவே ஜெய்யின் கல்யாணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு.. ராஜ்குமாரின் புதிய பட ஷூட்டிங் துவங்கும் ஒரு வாரத்திற்கு முன்பு.. பேச்சுலர்ஸ் பார்ட்டி கொண்டாட்டத்திற்காக பாங்காங் புறப்படுகிறார்கள் நண்பர்கள். 

அங்கே வைத்து அவர்களை கடத்தும் சிவபெருமான், ஆளில்லாத ஒரு தனித் தீவில் அவர்களை கொண்டு போய்ச் சேர்க்கிறார்..! மிதமிஞ்சிய குடியால் அந்த இடத்திற்கு எப்படி வந்து சேர்ந்தோம் என்பதுகூட தெரியாதவர்களாக இருக்கிறார்கள் அவர்கள்.. அங்கிருந்து தப்பிச் செல்ல அவர்களுக்கு 2 முறை வாய்ப்புகள் கொடுக்கிறார் சிவன்.. அவர்கள் அதனை மிஸ் செய்துவிட.. 6 மாதங்கள் கழிந்த நிலையில் அவர்கள் செய்த பாவம், புண்ணியத்தை சீர்தூக்கிப் பார்த்து.. கடைசியாகவும் ஒரு வாய்ப்பு தருகிறார். அதில் அவர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று தப்பி வருகிறாகள். இப்போது அவர்களது நிலைமை ஊரில் எப்படி என்பதுதான் கடைசி ரீல் கிளைமாக்ஸ்..!?

முதலில் கதையின் அடிப்படையே தவறானது.. குடிகாரர்களையே திட்டிக் கொண்டிருக்கும் இயக்குநர், குடியைத் திறந்து வைத்திருக்கும்.. அனுமதித்திருக்கும் அரசுகளை பற்றி ஒரு வார்த்தைகூட இதில் சொல்லவில்லை..! டாஸ்மாக் கடைகளே இல்லையெனில் இங்கே குடிகாரர்களே இருக்க மாட்டார்களே.. பிறகெதற்கு இந்த அறிவுரையெல்லாம்..? வீண்தானே..? அரசை நேரடியாக திட்டி படமெடுத்தால் படம் வெளியில் வந்துவிடுமா..? வராதே..? வரலைன்னா எப்படி போட்ட காசை எடுக்கிறது..? எப்படி இயக்குநருக்கு சான்ஸ் கிடைக்கிறது..? அதுனால.. இளிச்சவாயர்கள் யாரு குடிகார மட்டைகள்தான்.. அவர்களா வீடு தேடி வந்து கேக்கப் போறாங்க..? உதைக்கப் போறாங்க..? உன்னை இல்லடா.. அவன.. அவன இல்லடா.. இன்னொருத்தனை என்று கை காட்டிவிட்டுத் தப்பிக்கலாம் இல்லையா..? அப்படித்தான் ஏதோ குடிக்கு எதிரான கதையாக ஒரு பில்டப் விட்டு... கொஞ்சம், கொஞ்சம் காமெடிகளை வைத்து படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள்..!


முற்பாதி முழுவதிலுமே இவர்களைப் பற்றிய அறிமுகத்திலேயே கழிந்துவிடுகிறது..! அதிலும் கொடுமையோ கொடுமை சிவலோகத்தின் தற்போதைய செட்டிங்ஸ்..! எடுத்திருப்பது நல்ல கருத்துள்ள, அறிவுரை சொல்லும் படமாம்..! ஆனால் காட்சியமைப்போ நகைச்சுவையாக இருக்கிறது.. எது மனதில் நிற்கும்..? 

சிவலோகத்தில் வரவேற்பு என்று பெயர் எழுதப்பட்ட பகுதி.. லேப்டாப்புடன் வரவேற்பு பெண்..! முருகன் ஐபாடில் பாட்டு கேட்கிறார். நாரதரை மொபைலில் கூப்பிடுகிறார் பார்வதி.. சிவன் ஆப்பிள் மேக் கம்ப்யூட்டர் முன் பேஸ்புக்கின் முதல் பக்கத்தை ஓப்பன் செய்த நிலையில் காத்திருக்கிறார்.. நாரதர் வெயிட் தூக்க முடியாததால் வீணையைத் தூக்கிக் கடாசிவிட்டு கிடாருடன் வருகிறார்..! இவர்களது பேச்சுக்கள் எல்லாம் பாதி ஆங்கிலமும், பாதி தமிழுமாக கலாய்க்கிறார்கள்..! இப்படி எல்லாமே காமெடியாகவே இருந்து தொலைக்க.. இவர்கள் சொல்வதை மட்டும் சீரியஸாக நாம் கேட்க வேண்டும் என்கிறார்கள்..? என்ன கொடுமை சரவணா இது..?

விடிவி கணேஷின் சின்னச் சின்ன கடிகள்தான் படத்தை பிற்பாதியில் காப்பாற்றுகின்றன. இப்படி தனித்தீவில் மாட்டிக் கொண்ட பின்பும் ஜாலியாகத்தான் பொழுதைக் கழிக்கிறார்கள்.. இங்கேயும் கள்ளைக் குடித்து ஆட்டமோ ஆட்டம் ஆடுகிறார்கள்..! குடியினால்தான் இப்படி தனித் தீவில் மாட்டிக் கொண்டு அல்ல்ல்படுகிறோம் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்யும் காட்சிகள் இல்லாததால் எல்லாமே திராபையாக தெளிவில்லாமல் தெரிகிறது..!

2-வதாக கிடைத்த வாய்ப்பை கணேஷ் விட்டுவிடும்போதுதான் திடீரென்று ஞானதோயம் வந்து டயலாக் பேசி இனிமேல் குடிக்க மாட்டோம் என்று சத்தியம் செய்து கொள்கிறார்கள்..! இதனால் என்ன ஆகிவிடப் போகிறது என்றுதான் தெரியவில்லை. படத்தை முடித்தாக வேண்டிய கட்டாயம் இருந்ததால் 3-வதாக ஒரு ஆப்ஷனை கொடுத்து அவர்களைக் காப்பாற்றிவிட்டார்கள்..!

சித்த மருத்துவர் கோவை காமராஜ் கேரக்டரில் நடித்திருக்கும் சித்ரா லஷ்மணனுக்கு மிகப் பொருத்தமான கேரக்டர். ஒருவகையில் இவரும் சேலம் சிவராஜ் போலவேதான் தெரிகிறார்..! அவருடைய டயலாக் டெலிவரியே சிரிப்பை மூட்டுகிறது..! அதிலும் கடைசியில் அவரது மனைவியை அறிமுகப்படுத்தும் காட்சி செம கலகலப்பு..! ஆனால் படத்தில் முதல் சிரிப்பு வந்த காட்சியே ஹீரோயின் வீட்டில் அனைவரும் ஜெய்யின் பேட்டியை பார்க்க டிவி முன் அமர்ந்திருப்பதுதான்..! 

அதேபோல் தலையில் தேங்காய் விழுந்து அடிபட்டவுடன் சரஸ்வதி சபதம் டயலாக்குகளை அள்ளி வீசும் கணேஷின் காமெடியும் சிரிப்பை மூட்டியது..! கணேஷ் இதற்கடுத்து செய்யும் அனைத்துமே சரவெடி.. தியேட்டரில் இவருக்காகவே ஒரு கூட்டம் வருகிறது போலும்..! மனுஷன் டயலாக்குகளையும் அள்ளி வீசுகிறார்.. "ஏழாம் அறிவு படத்துலேயே போதி தர்மனை பத்தி சொல்லியிருக்காங்க..." என்று சொல்வதற்கு "சூர்யா எனக்கு டிக்கெட் கொடுக்கலப்பா..." என்று சீரியஸாகவே பதில் சொல்லும் இடம் செம செம..! சித்தப்பா, மாமா கேரக்டருக்கு மிகப் பொருத்தமானவர்தான்..!

ஜெய் வழக்கம்போல.. துள்ளி விழுகும் காதலர்.. கண்டவுடன் காதலாக.. பாடலைக் கேட்டவுடன் காதலாக இதில் மலர்கிறது.. காதலியை பார்த்து பேசி.. ஒரு அக்ரிமெண்ட்படி 2 வருடமாக பின்னாடியே அலைந்து திரிந்து காதலை ஓகே செய்ய வைப்பதும்கூட காதலர்களுக்குப் பிடித்தமான காட்சிகள்தான்..! 


ஹீரோயின்தாம்பா அழகு.. கொஞ்ச நேரமே வந்தாலும் நிவேதா தாமஸ் அழகாக நடித்திருக்கிறார்.. சத்யன், அவரது அப்பாவான சுவாமிநாதன்.. நடிகராக ராஜ்குமார்.. சிவபெருமானாக சுப்பு பஞ்சு.. நாரதராக மனோபாலா.. பார்வதியாக தேவதர்ஷிணி என்று ஆர்ட்டிஸ்டுகளை கச்சிதமாக பொறுக்கியெடுத்து நடிக்க வைத்து  வேலை வாங்கியிருக்கிறார்.. இட்ஸ் ஓகேதான்..!

பிரேமின் இசையும், பாடல்களும் ஒலிக்கின்றன.. ஆனால் பாடல்கள்தான் மனதில் நிற்கவில்லை..! ஒளிப்பதிவாளர் ஆனந்திற்கு ஒரு தனி ஷொட்டு.. கடல் பகுதியை மிக அழகாக காட்டியதற்கு..!  ஒரு புறம் கடலைத் தாண்டி சென்று மறுபுறம் மீண்டும் கடலுக்கே திரும்பி வந்து நிற்கும் காட்சியில் ஒரு பயத்தை கேமிரா மட்டுமே காட்டியிருக்கிறது.. நடிகர்கள் காட்டவில்லை..! பாங்காங் போய்தான் எடுத்தார்களா என்று தெரியவில்லை..! விமான நிலையத்தின் உட்புறம் மற்றும் சாலையில் செல்லும் காட்சிகள் மட்டுமே இருந்தன.. கிளப் டான்ஸுகளை இங்கேயே எடுத்திருக்கும் வாய்ப்புகள் உண்டு. 

இதற்குப் பெயர் பொருத்தம்கூட இல்லை.. 'நவீன திருவிளையாடல்' என்றுதான் பெயர் வைத்திருக்க வேண்டும்..! ஆனால் அப்படியொரு படம் சமீபத்தில் வெளிவந்துவிட்டதால் 'சரஸ்வதி சபத'த்தை கையில் எடுத்தார்களாம்..! தலைப்புக்காகவே இடையில் திடீரென்று சரஸ்வதிக்கு கோபம் வந்து, சிவனுடன் மோதுவதைப் போல ஒரு சப்ஜெக்ட்டை திணித்திருக்கிறார்கள்..! வெட்டி வேலை..! வேறு பெயராவது வைத்துவிட்டுப் போயிருக்கலாம். இனிமேல் தயவு செய்து இது மாதிரியான நல்ல படங்களின் தலைப்புகளை, வேறு யாருக்கும் கொடுத்து பெயருக்கு இருக்கும் ஒரு மரியாதையைக் கூட கெடுக்காதீர்கள் என்று தயாரிப்பாளர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்..!

ஒரு சீரியஸான சப்ஜெக்ட்டை காமெடியாகவே சொல்ல முனைந்திருப்பதால் இது  மக்கள் மனதில் நிற்குமா என்பது சந்தேகமே..? ஏனெனில் 2 மணி 20 நிமிடங்கள் ஓடும் இதனைவிடவும், ஒவ்வொரு தியேட்டரிலும் இடைவேளையில் நுரையீரல் பஞ்சு போன்ற மென்மையானது என்ற கர்ண கொடூரக் குரலுடன் ஒலிக்கும் அந்த 1 நிமிட விளம்பரப் படமே மக்கள் மனதை பெரிதும் தொடுகிறது... 

தமிழ்ப் படம் படத்தில் அமுதனிடமும், பின்பு வெங்கட்பிரபுவிடமும் இணை இயக்குநராகப் பணியாற்றிய சந்துரு இயக்கியிருக்கிறார். காமெடிகளை இன்னமும் கொஞ்சம் மெருகேற்றி இயக்கியிருக்கலாம்.. முதல் படம் என்பதால் வாழ்த்தி வரவேற்போம்..! 

ஒரு முறை பார்க்கலாம்..!