25-09-2013
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
தமிழ்நாட்டில் சினிமாவும், அரசியலும் இரண்டறக் கலந்திருப்பது இந்தியாவுக்கே தெரிந்த விஷயம்.. வெறுமனே 10 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்திருக்க மாட்டார் ஆத்தா என்பது நமக்கும் தெரிந்ததுதான்.. காரணத்தோடுதான் கொடுத்திருக்கிறார்.. தான் நினைத்தது போலவே தாத்தாவை போலவே தனக்கும் திரையுலகப் பாராட்டு விழாவை தமிழகத்து மக்கள் செலவிலேயே மிக மகிழ்ச்சியாக நடத்தி முடித்து பெருமிதப்பட்டுவிட்டார்.. வருத்தப்பட்டு நிற்பது திரைக்கலைஞர்கள்தான்..! நிசமான கலை விழா என்று நினைத்து ஏமாந்திருப்பதோ நாம்தான்..!
முதல் நாள் 21-ம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு இசைக் கச்சேரி.. 4 மணிக்கு முதலமைச்சர் தலைமையில் விழா துவக்கம் என்று அழைப்பிதழில் போடப்பட்டிருந்தது..! ஏதோ சந்திர கிரகத்தில் இருக்கும் போயஸ் கார்டனில் இருக்கும் ஆத்தா, சனி கிரகத்தில் இருக்கும் நேரு ஸ்டேடியத்திற்கு வருவதை போல வழியெங்கும் போஸ்டர்கள்.. தட்டிகள்.. பாராட்டுரைகள்.. எக்கச்சக்க எழுத்துப் பிழைகளுடன் வாழ்த்துப் பாக்கள்.. இதில் ஒரு சிலர் ரோட்டின் ஓரமாகவே இசைக் கச்சேரியே நடத்திக் கொண்டிருந்தார்கள்..
எந்த நாளும் இல்லாத திருநாளாக இந்த முறை அழைப்பிதழ் இருந்தால்தான் டூவீலரை பார்க்கிங்கே செய்ய முடியும் என்று கூறிவிட்டார்கள்.. எப்படியாச்சும் உள்ள போயிரலாம்ன்னு நினைச்சு வண்டியோட வந்தவங்கதான் பாவம்.. நடுரோட்ல வண்டியை நிறுத்தவும் இடமில்லாமல்.. போகவும் மனசில்லாமல் தவியாய் தவித்துக் கொண்டிருந்தார்கள்..!
3 மணிக்கு விழா என்பதால் 2 மணிக்கே உள்ளே விடுவார்கள் என்று அவசரமாகப் போனால் 3 மணிக்குத்தான் உள்ளே அனுமதி என்றார்கள். அரங்கின் உள்ளே சென்றபோது எம்.எஸ்.விஸ்வநாதன் ஜம்மென்று மேடையில் சேரில் அமர்ந்திருந்தார். இன்னிசை கச்சேரி ஆரம்பிப்பதற்கான முஸ்தீபுகள் நடந்து கொண்டிருந்தன.. எல்லாரும் மைக்கை தட்டி சரி செய்து கொண்டிருந்தனர்.. என்ன நடந்ததோ தெரியலை.. சில நிமிடங்களில் எம்.எஸ்.வி.யின் காதில் எதையோ சொல்ல.. முகம் வாடிப் போனது அவருக்கு.. பிரிய மனமில்லாமல் மேடையைவிட்டு கீழேறிங்கி பி.ஆர்.ஓ.க்கள் கை காட்டிய 4-வது வரிசையில் அமர்ந்தார்.. மேடையில் இருந்த இசைக் கருவிகளும், மைக்குகளும், சேர்களும் நிமிடத்தில் காலியாக...... கச்சேரி இல்லை என்றானது..!
மேடையின் கீழே இடது புறத்தின் முதல் வரிசையில் அமைச்சர்கள்.. இரண்டாம் வரிசையில் மாவட்டச் செயலாளர்கள்.. ஆளும் கட்சிப் பிரமுகர்கள், மூன்றாம் வரிசையில் அரசு அதிகாரிகள் என்று அமர்ந்திருக்க.. வலது பக்கம் சினிமாக்காரர்களுக்கென்று ஒதுக்கியிருந்தார்கள். அங்கேதான் ஏகப்பட்ட குளறுபடி..! 56 பேர்களுக்கு ஆத்தா விருது கொடுத்தார். விருது பெற்றவர்கள் மேடையில் இருந்து இறங்கி முதல் மூன்று வரிசைகளில் வந்து அமந்து கலை நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டும் என்பதால் அதை காலியாகவே வைத்திருக்க பெரும் பிரயத்தனம் செய்தார்கள்.. ஆனாலும் அது முடியாமலேயே போனது..!
இயக்குநர் சிகரம் கே.பி. வந்து முதல் வரிசையின் ஓரத்தில் போய் அமர.. அவருக்கு அருகே 3 இருக்கைகள் போடப்பட்டு அது காவலும் காக்கப்பட்டது.. ஜெயலலிதா வருவதற்கு சில நிமிடங்கள் முன்பாக சசிகலாவும் அவருடைய உறவினர் இருவரும் வந்து அதில் அமர்ந்தார்கள். சசிகலா உள்ளே வரும்போது ஒரு அமைச்சர்கூட எழுந்திருக்கவில்லை. யாரும் அவரை கண்டு கொள்ளவும் இல்லை.. ஆனாலும் அம்மாவைவிடவும் கம்பீர நடை.. யாரையும் சட்டைகூட செய்யவில்லை. ஒரே சீரான பார்வையுடன் சீட்டில் அமர்ந்தவர்.. பக்கத்தில் இருந்தவர் பக்கம்கூட கடைசிவரையிலும் திரும்பவில்லை..! யாருடனும் பேசவில்லை. பிற்பாடு ஜெயலலிதா கீழிறங்கி வந்து அமர்ந்தபோது அவருடைய பக்கத்தில்கூட போகவில்லை. ஜெயலலிதா வெளியேறிய பின்பும் இருந்தும் நிகழ்ச்சிகளை கண்டுகளித்துவிட்டு கமல், ரஜினி பேசிய பின்பே எழுந்து போனார்..
விஜய் வந்தபோது அரங்கத்தில் ஒரு சின்ன கைதட்டல்கூட இல்லை.. அதுவரையிலும் அரங்கத்தில் அனுமதிக்கப்பட்டவர்கள் அனைவருமே அதிமுக கட்சித் தொண்டர்கள் என்பதாலோ என்னவோ தெரியவில்லை. ஆச்சரியமாகத்தான் இருந்தது..! பி.ஆர்.ஓ.க்கள் காட்டிய இடத்தில் அமைதியாக, அடக்கமாக 3-ம் வரிசையில் அமர்ந்தார் விஜய். அவருக்கு அருகில் குட்டி பத்மினி மட்டுமே போய் பேசிக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்தில் தல அஜீத் ஷாலினியுடன் உள்ளே வர அவரை மேடைக்கு இடது பக்கம் கூட்டம் அதிகம் உள்ள பகுதியில் தள்ளிவிட்டார் அரசு பி.ஆர்.ஓ. சினிமா பி.ஆர்.ஓ.க்கள் விஜய் பக்கம் அஜீத்தை அழைத்துச் செல்ல முயற்சித்தும், அரசு பி.ஆர்.ஓ. உறுதியுடன் இருக்க.. அஜீத் பிரச்சனை வேண்டாம் என்று அங்கேயே அமர்ந்து கொண்டார்..!
ஜெயலலிதா மேடைக்கு வருவதற்கு முன்பாகவே அவரிடத்தில் விருது பெற இருப்பவர்களை மேடைக்கு அழைத்துக் கொண்டிருந்தார்கள். பலரும் போய் அமர்ந்து கொள்ள.. இந்த நேரத்தில்தான் மகள் ஐஸ்வர்யாவோடு ரஜினி வேகமாய் உள்ளே வந்தார்.
வந்தவரை அப்படியே மேடைக்கு அழைத்தார்கள். மேடையேறினார்.. மேடையில் இருந்த ஏவி.எம்.சரவணனுக்கு வணக்கத்தைச் சொல்லிவிட்டு முன் வரிசையில் அவரருகில் அமர்ந்தார். மேடையில் முதல் வரிசையில் இருந்த இருக்கைகளில் உட்கார இருப்பவர்களின் பெயர்கள் எழுதப்பட்டு ஒட்டப்பட்டிருந்தது. ரஜினி அதனை கவனிக்கவில்லை.. சில நொடிகளில் ஒருவர் ரஜினியிடம் வந்து, அவருக்கான இடம் பின்னால் இருப்பதாக சொல்ல.. ஒரு நொடிகூட தாமதிக்காமல் பின்னால் சென்று கடைசி வரிசையில் கடைசி ஆளாக அமர்ந்து கொண்டார்..! நடிகர் சங்கத்தின் சார்பாக சரத்குமார், இயக்குநர்கள் சங்கத்தின் சார்பாக விக்ரமன், தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக கேயார், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக ரோகிணி பன்னீர்செல்வம், அபிராமி ராமநாதன், பிலிம் சேம்பர் தலைவர், செயலாளர், பொருளாளர் இவர்களுடன் ஏவி.எம்.சரவணன், சிவக்குமார் ஆகியோரும் மேடையில் முதல்வருடன் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர்.
ஜெயலலிதா மேடைக்கு வந்து அமர்ந்த பின்பும் விருந்தினர்கள் கீழே வந்து கொண்டேயிருந்தார்கள்..! சீப் செகரட்டரி பேசிக் கொண்டிருக்கும்போதுதான் கமல் உள்ளே வந்தார். மேடையேறியவரை மேடையில் இருந்த செக்யூரிட்டிகள் எங்கயாவது உட்காரலாம் என்று கை காட்ட.. முதல் வரிசையில் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் அருகில் சென்று அமர்ந்தார்.. இவருக்கு பின்பு இசைஞானி இளையராஜா வந்தார். அவரும் மேடையேறினார். பின்பு ஸ்ரீதேவி.. மேடையின் கடைசி வரிசையில் அமர்ந்தார்..!
அரங்கத்தின் 4 இடங்களில் பெரிய ஸ்கிரீன் வைத்து நிகழ்ச்சிகளை திரையிட்டார்கள்.. ஆத்தாவை சீக்கிரமாக அனுப்பி வைக்க வேண்டும் என்ற அரசு கொள்கையின்படி தமிழ்ச் சினிமாவின் வரலாற்றை எண்ணி 4 நிமிடங்களில் முடித்து வைத்தார்கள். ரன் வேகத்தில் ஓடியது அத்தனையும்.. ஒரு ஆளுக்கு ஒரே ஒரு காட்சி மட்டுமே.. ஒரேயொரு பாடல் வரி மட்டுமே.. பராசக்தியின் “கோவிலில் குழப்பம் விளைவித்தேன்.. கோவில் கூடாது என்பதற்காக அல்ல.. அது கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக் கூடாதே என்பதற்காக..!” என்ற வசனம் முழுமையாக ஒளிபரப்பானதுதான் ஆச்சரியமான ஒன்று..
வீடியோவில் பெருளவுக்கு எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் மட்டுமே புகழ்ந்து தள்ளியிருந்தார்கள்.. வாகை சந்திரசேகர் நடிப்பில் 'ஊமை விழிகள்' பாடலின் ஒரு வரி.. 'முந்தானை முடிச்சு'வில் கே.பாக்யராஜின் ஒரு சின்ன ஷாட்.. 'புலன் விசாரணை' படத்தின் விஜயகாந்தின் சண்டை காட்சியின் சின்ன ஷாட்.. விஜய்யின் 'தலைவா' படத்தின் சண்டை காட்சியின் சிங்கிள் ஷாட்.. என்று எல்லாமே சின்ன சின்னதாகவோ கண் இமைக்கும் நேரத்தில் வந்து போனது.. கலைஞர் கருணாநிதியின் புகைப்படமும் இடையில் காண்பிக்கப்பட்டது.. ஆனால் அத்தனையும் வேஸ்ட்டு.. யாரால் இதையெல்லாம் ஞாபகம் வைத்திருக்க முடியும்..?
தமிழ்த் திரையுலகம் சார்பாக சாதனையாளர் விருது பெற்றவர்கள் பட்டியல்தான் ரொம்ப நீளம்.. எஸ்.எஸ்.ராஜேந்திரன், கமலஹாசன், சிவக்குமார், ரஜினிகாந்த், பிரபு, விவேக், ஏவி.எம். சரவணன், பிரசாத் ஸ்டியோ அதிபர் ரமேஷ் பிரசாத், ஆனந்தா பிக்சர்ஸ் எல்.சுரேஷ், இயக்குநர்கள் மகேந்திரன், பி.வாசு, அபிராமி ராமநாதன், தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, திரைப்பட வெளியிட்டாளர் ஜோகர், கோவை எலைட் தியோட்டர் அதிபர், இயக்குனர் சி.வி.ராஜேந்திரன், இசைஞானி இளையராஜா, தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, சரோஜாதேவி மற்றும் நடிகைகள் மனோரமா, எம்.என்.ராஜன், ராஜஸ்ரீ, சாரதா, காஞ்சனா, கிருஷ்ணகுமாரி, செளகார் ஜானகி, ஜெயசுதா, ஜெயபிரதா, மீனா, சிம்ரன், திரிஷா, வயலினிஸ்ட் என்.ராமசுப்பிரமணியம், பின்னனி பாடகியர் - எல்.ஆர்.ஈஸ்வரி, ஜமுனா ராணி, எம்.எல்.ராஜேஷ்வரி, கவிஞர் புலமைப்பித்தன், வசனகர்த்தா ஆரூர்தாஸ், ஒளிப்பதிவாளர் என்.எஸ்.வர்மா, பட தொகுப்பாளர்கள் பாபு, விட்டல், நடன இயக்குனர்கள் சுந்தரம் (அவர் சார்பாக ராஜூசுந்தரம் விருதை பெற்றுக் கொண்டார்.) தாரா, ஒளிப்பதிவாளர் கண்ணன், ஓப்பனை கலைஞர் மாதவராவ், ஸ்டன்ட் மாதவன், ஆடை வடிவமைப்பாளர் கொண்டையா, தொழில் நுட்ப கலைஞர் சாமிகண்ணு, ஸ்டில் கேமிரா சங்கர்ராவ், டப்பிங் கலைஞர்கள் - காளை, கே.ஆர்.அனுராதா ஆகியோரும் விருதுகளைப் பெற்றனர்.
விருது கொடுத்தபோது அதிகமாக யாருடனும் பேசாமல் சிரிப்பை மட்டுமே உதிர்த்துவிட்டு நின்றார் ஆத்தா.. எஸ்.எஸ்.ராஜேந்திரனிடமாவது நாலு வார்த்தை பேசி நல்லாயிருக்கீங்களான்னு கேப்பாங்கன்னு பார்த்தா.. ஒரு கும்பிடு.. அவ்வளவுதான்.. பாவம்.. எஸ்.எஸ்.ஆர்.. சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருப்பதைவிட இது அவரை மிகவும் கஷ்டப்படுத்தியிருக்கும்ன்னு நினைக்கிறேன்..!
ஒரு சில எடிட்டர், ஒளிப்பதிவாளர்கள் மட்டுமே ஆத்தாவிடம் விடாப்பிடியாக பேசிவிட்டுத்தான் அகன்றார்கள். கமலுக்கும், ரஜினிக்கும் ஒரு பார்வை. அவ்வளவுதான்..! மனோரமாவும், சரோஜாதேவியும் பாசத்தோடு ஆத்தாவின் கைகளை முத்தமிட.. செளகார் ஜானகியின் கன்னத்தைத் தடவி பாசத்தோடு பேசினார் ஆத்தா..!
விருது கொடுத்த பின்பு அனைவரையும் புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க அழைத்தபோது யாருக்கும் ஆர்வமில்லாமல் அப்படியே இருந்தார்கள். மறுபடியும் மைக்கில் உட்கார்ந்திருப்பவர்களெல்லாம் எழுந்து நின்று பின் வரிசைக்கு வருமாறு அழுத்தமாகச் சொல்ல இப்போதுதான் ரஜினி, கமல், இளையராஜா எல்லோருமே எழுந்து வந்து ஒட்டி நின்று வேண்டா வெறுப்பாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துத் தொலைத்தார்கள்..!
ஏற்கெனவே தனக்கென்று ஸ்பெஷலாக வைக்கப்பட்டிருந்த மைக்கில் தனது பேருரையைத் துவக்கினார் ஆத்தா..!
"இந்த இனிய மாலைப்பொழுதில் இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தினை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து, எனக்கு முகவரி தந்த திரைப்படத்துறையை சார்ந்த உங்களிடையே உரையாற்றுவதிலும், திரைப்படத்துறையில் சாதனை படைத்துள்ள 59 பேர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவிப்பதிலும் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
சினிமாவிற்கு முதலில் வடிவம் கொடுத்தவர்கள் பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த லூமியர் சகோதரர்கள் என்றாலும், இந்தியாவில் முதன் முதலில் பேசாப் படத்தை தயாரித்து வெளியிட்டப் பெருமை இந்திய சினிமாவின் தந்தை என்றழைக்கப்படும் தாதா சாகிப் பால்கேயையே சாரும். இவர் தயாரித்த ‘‘ராஜா அரிஷ்சந்திரா’’ படம் 1913-ம் ஆண்டில் வெளிவந்ததன் அடிப்படையில், இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை நாம் இங்கே கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
இதனைத் தொடர்ந்து, ‘‘கீசக வதம்’’ என்ற ஊமைத்திரைப்படம் நடராஜ முதலியாரால் தயாரிக்கப்பட்டு 1916-ம் ஆண்டு வெளிவந்தது. பின்னர், இந்தி மொழியில் ‘‘ஆலம் ஆரா’’ என்ற பேசும் படம் தயாரிக்கப்பட்டு திரையிடப்பட்டது. தமிழ்மொழியில், முதல் பேசும் படமாக ‘‘காளிதாஸ்’’ திரைப்படம் 1931-ம் ஆண்டு திரையிடப்பட்டது. ஊமைப்படங்களாக ஆரம்பித்து, பேசும் படங்களாகவும், வண்ணப்படங்களாகவும் மாறி, இன்று பலர் போற்றும் அளவுக்கு, சினிமாத்துறை பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது.
முந்தைய காலங்களில், நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், ஒரு திரைப்படம் 100 நாட்கள் ஓடியது என்றாலே அது மிகப்பெரும் வெற்றி; மிகப்பெரும் சாதனை என்று கருதப்பட்டது. நூறு நாட்கள் முடிந்தபின் வெற்றி விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டு, நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் என அத்திரைப்படத்தில் பங்குபெற்ற அனைவருக்கும் நினைவுப்பரிசுகளும், கேடயங்களும் வழங்கப்படும். ஒரு சினிமா படம், நூறு நாட்கள் ஓடினாலே, மிகப்பெரும் சாதனை, என்று கருதப்படும்போது, இந்திய சினிமா இன்று நூறு ஆண்டுகள், நிறைவு செய்துள்ளது என்பது, பிரமிக்கத்தக்க, பிரம்மாண்டமான சாதனை. இது நம் அனைவரையுமே மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துகிறது.
உதவிய பிரபலங்கள்
இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு உதவிய பிரபல திரைப்படத்தயாரிப்பாளர்களும், திரைப்படங்களை தயாரிக்கும் ஸ்டூடியோக்களையும் நிறுவியவர்களுமான, தாதாசாகிப் பால்கே, ஏ.வி.மெய்யப்ப செட்டியார், நாகி ரெட்டி, சக்கரபாணி, எஸ்.எஸ்.வாசன், ஸ்ரீராமுலு நாயுடு, எம்.எம்.ஏ. சின்னப்ப தேவர், மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம், எல்.வி.பிரசாத், பி.ஆர்.பந்தலு, வி.சாந்தாராம்; பிரபல திரைப்பட இயக்குனர்களான சத்யஜித் ரே, பிமல் ராய், வேதாந்தம் ராகவைய்யா, ஏ.பீம்சிங், கே.சங்கர், விட்டலாச்சாரியா, ப.நீலகண்டன், ஏ.சி.திருலோகச்சந்தர், கிருஷ்ணன்-பஞ்சு, யோகானந்த், பி.புல்லைய்யா, ஏ.பி.நாகராஜன்; தன்னுடைய கதைகளின் மூலம் தமிழ்நாட்டில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய பேரறிஞர் அண்ணா; திரைப்படங்களின் மூலம் மக்களுக்கு நல்ல கருத்துகளைப் பரப்பி, மக்கள் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்திருக்கும் எம்.ஜி.ஆர்.; பிரபல திரைப்பட நடிகர்களான தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், என்.டி.ராமா ராவ், அக்கினேனி நாகேஸ்வர ராவ், உதயகுமார், ராஜ்குமார், பிரேம்நசீர், சத்யன், கே.ஏ.தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ், திலீப் குமார், ராஜ்கபூர், தேவ்ஆனந்த், பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், பிரான், எஸ்.வி. சுப்பைய்யா, எஸ்.வி.ரங்கா ராவ், ரேலங்கி, கும்மிடி வெங்கடேஸ்வர ராவ்; பிரபல நாடக நடிகர்களான டி.கே.எஸ்.சகோதரர்கள், விஸ்வநாத தாஸ், எஸ்.வி.சஹஸ்ரநாமம்;
பிரபல திரைப்பட நடிகைகளான கண்ணாம்பா, பி.பானுமதி, டி.பி.மதுரம், டி.ஆர்.ராஜகுமாரி, பண்டரிபாய், நர்கிஸ், சுரைய்யா, மதுபாலா, பத்மினி, சாவித்ரி, தேவிகா, வைஜயந்தி மாலா, ஜமுனா, சரோஜாதேவி, அஞ்சலிதேவி, சவுகார்ஜானகி, கிருஷ்ணகுமாரி, சூரியகாந்தம், டி.பி.முத்துலட்சுமி; பிரபல ஒளிப்பதிவாளர்களான மாருதி ராவ், பிரசாத், மார்கஸ் பார்ட்லே, ஏ.ராமமூர்த்தி, வின்செண்ட், சுந்தரம், வர்மா; பிரபல நிழற்பட கலைஞர்களான நாகராஜ ராவ், வெங்கடா சாரி, ஸ்டில் சாரதி; பிரபல நடன இயக்குநர்களான கே.என்.தண்டாயுதபாணி பிள்ளை, சோஹன்லால், ஹிராலால், ஏ.கே.சோப்ரா, தங்கப்பன், சின்னி சம்பத், பி.கோபாலகிருஷ்ணன், பசுமர்த்தி கிருஷ்ணமூர்த்தி, வெம்பட்டி சத்யம்; பிரபல இசையமைப்பாளர்களான ஜி.ராமநாதன், நவுஷாத், சங்கர்-ஜெய்கிஷண், கே.வி.மகாதேவன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, இளையராஜா, ஹேமந்த்குமார், சி.ராமச்சந்திரா, மதன் மோகன், லக்ஷ்மிகாந்த் பியாரேலால், ஆதிநாராயண ராவ்; பிரபல பாடலாசிரியர்களான பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கண்ணதாசன், மருதகாசி, வாலி; பிரபல பின்னணிப்பாடகர்களான டி.எம்.சவுந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி.பி.ஸ்ரீனிவாஸ், முகமது ரபி, கிஷோர் குமார், கண்டசாலா, ஏ.எம்.ராஜா; பிரபல திரைப்பட பின்னணி பாடகிகளான பி.லீலா, ஜிக்கி, லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே, கீதா தத், பி.சுசீலா, எஸ்.ஜானகி, ஜமுனா ராணி, எல்.ஆர்.ஈஸ்வரி போன்ற எண்ணற்றோரின் பங்கு மகத்தானது.
அரசியலிலும், பொது வாழ்விலும், மொழி மாறுதல்களிலும், வட்டார வேறுபாடுகளை மக்களிடையே எடுத்துச்சென்றதில், திரைப்படங்களுக்கு முக்கியப்பங்கு உண்டு என்றாலும், அரசியலில் திரைப்படத்தின் ஆதிக்கம் என்றவுடன், நம் நெஞ்சங்களில் முதலில் நிற்பவர் எம்.ஜி.ஆர்.தான். மனிதன் நாகரிகமடைந்து உருவாக்கிய படைப்புகளிலேயே உன்னதமான கலைப்படைப்பு சினிமா என்று சொன்னால் அது மிகையாகாது. சினிமா கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, இசை, இலக்கியம், ஓவியம், நாட்டியம், நாடகம் என, பல கலைகள் மக்களின் மனதை மகிழ்விக்கவும், வளப்படுத்தவும், பலப்படுத்தவும் பயன்பட்டன. இந்த கலைகளோடு, அவ்வப்போது கண்டுபிடிக்கப்படும் நவீன அறிவியல் யுக்திகள் மற்றும் கலைகளும் சினிமாவில் பயன்படுத்தப்படுகின்றன. அதனால்தான், வேறு எந்த கலை வடிவத்தையும் விட எளிதாக மக்களை ஈர்க்கும் வலிமை திரைப்படத்திற்கு இருக்கிறது.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், திரைப்படம் இன்று மனித வாழ்க்கையில் இன்றியமையா இடத்தைப்பெற்றுள்ளது என்று கூறலாம். புராணக்கதைகளையும், இந்திய விடுதலைக்காக போராடியவர்களின் வரலாற்றினையும், பகுத்தறிவு சிந்தனையையும் மக்களிடையே எடுத்துச்சென்ற பெருமை சினிமா துறையையே சாரும். உலகின் நெடுந்தூரம் சென்று காணமுடியாத அற்புதங்களை, இருந்த இடத்திலிருந்து காண திரைப்படம் வழி வகுத்துள்ளது. பலருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க உறுதுணையாக திரைப்படத்துறை உள்ளது. மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு, பல்வேறு துறைகளில் திரைப்படம் உதவி செய்கிறது. அரசின் நிகழ்ச்சிகளை, ஆக்கப்பணிகளை, மக்கள் நலத்திட்டங்களை, மக்களிடையே எடுத்துச்செல்ல திரைப்படங்கள் பெரிதும் உதவுகின்றன.
இப்படிப்பட்ட இன்றியமையாத்தன்மை வாய்ந்த திரைப்படத்துறையில் நானும் பணியாற்றியிருக்கிறேன் என்பதை நினைக்கும்போது, எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. திரைப்படங்கள் மக்களை நல்வழிப்படுத்துவதற்காகவே அமைய வேண்டும் என்ற எனது விருப்பத்தினை இந்த தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்கும் போதெல்லாம் திரைப்படத்துறையினருக்கு, பல்வேறு சலுகைகளை அளித்திருக்கிறேன். குறைந்த முதலீட்டில் திரைப்படம் எடுக்கும் சிறு தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில், அந்தத்திரைப்படத்திற்கான மானியத்தொகையையும், திரைப்படங்களின் எண்ணிக்கையையும் உயர்த்தியது; தயாரிப்பாளர்களின் அலைச்சலை குறைக்கும் வகையில், ஒற்றைச்சாளர முறையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது; சிவாஜி கணேசனின் பெயரில் ‘சிவாஜிகணேசன் விருது’ தோற்றுவிக்கப்பட்டது; திரைப்படத் தொழிலாளர்கள் பணிபுரியும்போது உயிரிழந்தாலோ, ஊனமுற்றாலோ, அவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது; பெண்களை உயர்வாக சித்தரிக்கும் கதையம்சம் கொண்ட திரைப்படத்திற்கு, அரசு விருது வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது;
‘சிறந்த திரைப்பட ஒப்பனைக்கலைஞர்’ ஒருவருக்கும், ‘சிறந்த திரைப்பட தையற் கலைஞர்’ ஒருவருக்கும் விருது வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது; பின்னணிக்குரல் கொடுப்பவர்களுக்கு விருது வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது; சிறந்த நகைச்சுவை நடிகை, சிறந்த குணசித்திர நடிகர், சிறந்த குணசித்திர நடிகை ஆகியோருக்கு புதிய விருதுகள் தோற்றுவிக்கப்பட்டது; சட்டத்திற்கு புறம்பாக திருட்டு வீடியோக்கள் எடுக்கப்படுவதை, தடுக்கும் வகையில், ‘காணொலி திருட்டு தடுப்புப்பிரிவு’ எனும் ஒரு தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது; திருட்டு வீடியோ தொழிலில் ஈடுபட்டு குற்றம் இழைப்போரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வழிவகை செய்தது என, அடுக்கிக்கொண்டே போகும் அளவுக்கு பல்வேறு திட்டங்கள் எனது ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டன.
மேலும், சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு, கடந்த ஆண்டு, அரசு சார்பில் ரூ.50 லட்சம் மானியம் வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில், 2013-2014-ம் கல்வியாண்டு முதல் ‘அனிமேஷன் அண்டு விஷுவல் எபக்ட்ஸ்’ எனும் புதிய பாடப்பிரிவு தொடங்கப்படவும்; அதற்கென 41 பணியிடங்களை தோற்றுவிக்கவும் ரூ.9 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து நான் உத்தரவிட்டேன்.
அங்குள்ள ‘பிரிவியூ தியேட்டர்’ நவீன வசதிகளுடன் ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வருகிறது. திரைப்படத்துறையினர் நலவாரியத்தில் அதிகளவில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக எனது ஆட்சியில் திரைப்படத்துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது.." என்றார்.
நிகழ்ச்சி முடிந்து கீழே இறங்கி வந்தார் ஆத்தா. இந்த நேரத்தில் ரஜினியும் என்ன ஸ்பீடு..? என்ன ஸ்பீடு..? மின்னல் வேகத்தில் பறந்து வந்து வலது பக்க முன் வரிசையில் கே.பி.யின் பக்கத்தில் அமர்ந்து கொண்டார்..! பின்பு கேமிராக்கள் அவரை மட்டுமே சுற்றிச் சுற்றி வர.. எப்படியோ உள்ளே வந்து விஜய்யின் பக்கத்தில் அமர்ந்திருந்த விக்ரம் அப்போதுதான் கேமிராவின் கண்களுக்கு பட்டு பெரிய ஸ்கிரினீல் தெரிந்தார்..
கூட்டத்தில் நசுங்கிப் போய் உட்கார்ந்திருந்த தல அஜீத் வரவேயில்லை என்றே பலரும் நினைத்துக் கொண்டிருந்தனர். கேமிராக்களும் அவர் பக்கம் போகாமலேயே இருந்தது..! ஆத்தாவும் கீழே வந்து அமர.. கலை நிகழ்ச்சிகள் தொடங்கின..! முதலில் பள்ளி குழந்தைகளின் நடனத்தில் 'அம்மா, அம்மா' என்ற பாடலுடன் கூடிய டான்ஸ்.. வந்திருந்த ரத்தத்தின் ரத்தங்களின் கைதட்டல் பலமாகவே இவர்களுக்குக் கிடைத்தது..! அடுத்தது முரசு டான்ஸ்.. நாசர் இதில் ராஜா போல் ஆக்ட்டிங் கொடுக்க நடிகைகள் மாறி மாறி வந்து பல பாடல்களுக்கு ஆடிவிட்டுச் சென்றனர்.. 'மன்மத லீலையை வென்றார் உண்டோ..?' 'சின்னக்குட்டி' என்றொரு பாடல்.. 'ரோசாவே' என்றொரு பழைய பாடல்.. 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே' என்ற பாடல்.. என்று இவைகளுக்கு நாசருடன் விமலும், விஜய் சேதுபதியும் இணைந்து ஆடியிருந்தார்கள். நடிகைகள்தான் யாரென்று தெரியவில்லை..! பின்பு 'சந்திரலேகா'வின் முரசு டான்ஸுக்கு வரலட்சுமி அம்சமாக ஆடி முடித்தார்..
இது முடிந்ததும் ஆத்தா, ஆத்துக்கு கிளம்பினார்.. அரங்கத்தில் அனைவருமே அப்பாடா என்று ரிலாக்ஸானார்கள்.. முன் வரிசையில் இருந்த அடிமை மந்திரிகள் அனைவரும் அம்மாவை வழியனுப்ப வெளியே போக.. அவர்களும் சேர்ந்தே போய்விட்டார்கள் என்றெண்ணி பின் வரிசை கூட்டமெல்லாம் முந்திக் கொண்டு முன் வரிசையில் போய் உட்கார்ந்து கொண்டது.. உடனேயே விருந்தினர்களுக்கு சிற்றுண்டியும் கொடுக்கப்பட துவங்க.. இவ்வளவு நேரம் காணாமல் போயிருந்த கமல் மீண்டும் அரங்கத்தில் நுழைந்தார்.. கே.பி. எழுந்து செல்ல.. அந்த இடத்தில் கமல் அமர்ந்து கொள்ள.. பிளாஷ் வெளிச்சத்தில் தமிழ்த் திரையுலகின் இரண்டு முதல்வர்களும் நனைந்தார்கள்..!
தொகுத்து வழங்கிய ஜெயா டிவியின் அறிவிப்பாளர்களின் சொதப்பல் வர்ணனையை ரசிக்கவே முடியவில்லை..! சத்யராஜ் மேடைக்கு வந்து எம்.ஜி.ஆர். பாடல்களை பற்றி பேசிவிட்டுப் போனார்.. இந்த நேரத்தில் மந்திரிகள் அனைவரும் மீண்டும் உள்ளே நுழைய.. திடுக்கிட்ட செக்யூரிட்டிகள்.. முதல் வரிசையில் இருந்தவர்களிடம் கெஞ்சி கூத்தாடி அவர்களை பின்னாடி அனுப்பிவைத்தார்கள். புரோட்டாகால்படி அமைச்சரவையில் இரண்டாமிடம் தேனி பன்னீர்செல்வத்திற்கு. மூன்றாமிடம் நத்தம் விஸ்வநாதனுக்காம்.. இருவரும் அப்படித்தான் அடுத்தடுத்து அமர்ந்திருந்தார்கள்..!
மறுபடியும் டான்ஸ் ஆரம்பிச்சது.. 'நான் ஆணையிட்டால்'.. 'நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க'.. 'தங்கப் பதக்கத்தின் மேலே'.. 'ஆடலுடன் பாடலைக் கேட்டு'.. 'நாணமோ இன்னும் நாணமோ', 'நீங்க நல்லா இருக்கோணும்' போன்ற பாடல்களுக்கு ஓவியா, லஷ்மிராய், ரமேஷ்கண்ணா, விமல் உட்பட பலரும் ஆடினார்கள்..! அடுத்து தமிழ்ச் சினிமாவின் சாதனையாளர்கள் வரிசையில் பலரையும் வீடியோவில் காட்டும்போது ஜெயல்லிதாவையும் காட்டித் தொலைத்தார்கள்..! அதில் மிக்ஸி கிரைண்டரை இலவசமாக கொடுப்பதையும் காண்பித்தார்கள்.. என்னவொரு டெடிகேஷன் நம்ம இயக்குநர்களுக்கு..?
சந்தானத்தின் வருகைக்கு அப்படியொரு கைதட்டல்..! இந்தப் பெயரையும், புகழையும் அடுத்தடுத்து அவர் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.. ஆர்யாவுடன் இணைந்து மேடைக்கு வந்த சந்தானம், ஒரு டிக்டாக் நடத்திவிட்டுச் சென்றார்..!
அடுத்து ஸ்டண்ட் ஷோ.. பாடி லைட்டிங் ஸ்டைலில் செய்த இந்த ஒன்றுதான் தமிழ் கேட்டகிரியில் உருப்படியானது என்று நினைக்கிறேன்..! தொடர்ந்து நடிகர் விவேக் தியாகராஜ பாகவதராக வர, அவரை செல்முருகன் பேட்டியெடுத்தார்.. கலகல பேட்டி.. ஆனாலும் அநியாயத்திற்கு அம்மா புராணம்.. 'அம்மா உணவகம்'.. 'அம்மா தண்ணீர்' என்று இரண்டுக்கும் பெருமளவுக்கு விளம்பரம் செய்து கொடுத்திருக்கிறார் விவேக். அநேகமாக இவர் பேசியவைகள் ஜெயா டிவியில் தொடர் விளம்பரமாக வரவும் வாய்ப்புண்டு..! அரசியல் தவிர்த்து இந்த நிகழ்ச்சியும் நன்றாகத்தான் இருந்தது..!
தொடர்ந்து ஸ்டண்ட் சிவாவும், அவரது மனைவியும் இணைந்து ஒரு ஸ்டண்ட் ஷோவை மேடையில் செய்து காட்டினார்கள்.. எதுக்கு இத்தனை ஸ்டண்டுகள் என்று பின்புதான் தெரிந்த்து.. அடுத்து விஜய்யை மேடையேற்றினார்கள்.. அரங்கம் அதிர வரவேற்கப்பட்டார்.. ஸ்டண்ட் நடிகர்கள் பற்றி மிக உருக்கமாகவும், அம்மாவை வாழ்த்தியும், புகழ்ந்தும் பேசித் தள்ளினார்.. அடுத்து 'ஜில்லா' வருதுல்ல..!!!?
மீண்டும் டான்ஸ்.. டான்ஸ்.. டான்ஸ்.. கார்த்தியும் ஹன்ஸிகாவும் சேர்ந்து ஆடிய 'உத்தமபுத்திரன்' படத்தின் 'யாரடி நீ மோகினி' பாட்டுக்கு டான்ஸ் சூப்பர்.. அடுத்து காஜல் அகர்வாலும் வந்து ஏதோவொரு பாட்டுக்கு ஆடிவிட்டுப் போனார்.. தொடர்ந்து மேடையேறிய சூர்யாவை லிங்குசாமி பேட்டியெடுத்தார்.. சிங்கம்-2 படத்தின் அந்த பஞ்ச் டயலாக்கை பேசி காட்டினார் சூர்யா.. அதையே தெலுங்கிலும் பேசி காட்டினார்.. "கார்த்தி ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க தான் அதில் வில்லனாக நடிக்கணும். ஆனா கிளைமாக்ஸ்ல அடியெல்லாம் வாங்க மாட்டேன்.. இது என்னோட ஆசை.." என்றார் சூர்யா.. தமிழில் இதுவரையிலும் வந்த படங்களிலேயே அவருக்குப் பிடித்த 10 படங்களைப் பட்டியலிட்டார். ஸாரி.. எனக்கு மறந்து போச்சு..!
அம்பிகா, ராதா, லிஸி, சுஹாசினி, ரோகிணி, ஊர்வசி - இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து 'மண்வாசனை' படத்தின் 'பொத்தி வைச்ச மல்லிகை மொட்டு' பாட்டுக்கு இப்படியும், அப்படியுமாக கை, கால்களை ஆட்டி அபிநயம் பிடித்துவிட்டு டான்ஸ் ஆடிவிட்டதாக சொல்லி எஸ்கேப்பானார்கள்..!
தொடர்ந்து கே.எஸ்.ரவிக்குமார் மேடையேறி கமல்ஹாசன் பற்றிய வீடியோவை அறிமுகம் செய்தார்.. கமலின் அத்தனை நவரசங்களையும் அழகாக தொகுத்திருந்தார்கள். சூப்பர்.. இது முடிந்தபோது கமல் கண் கலங்கியிருக்க.. ரஜினி கமலின் கையைப் பிடித்து பலமாகக் குலுக்கினார்..! மேடையேறிய கமல்ஹாசன், "சினிமாவில், நான் 50 வருடங்களாக இருந்தாலும் இன்னும் சின்ன குழந்தைதான். குழந்தையாக இருந்தபோது சிவாஜியின் மடியிலும், எம்.ஜி.ஆரின் தோளிலும் வளர்ந்தவன். நான் ஜெயிக்காமல் இருக்க முடியுமா? சினிமாவில் எனக்கு இரண்டு குருக்கள் இருக்கிறார்கள். ஒருவர், சிவாஜி. இன்னொருவர், கே.பாலசந்தர். இந்திய சினிமா நூற்றாண்டு கொண்டாடும் இந்த வேளையில், என்னை வளர்த்த தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த தலைமுறையினர் எங்களைவிட பெரிய அளவில் வளர வேண்டும்" என்றார் கமல்ஹாசன்.
பி.வாசு மேடையேறி ரஜினி பற்றிய வீடியோவை அறிமுகம் செய்தார். கூடவே ரஜினி பற்றிய இரண்டு விஷயங்களை தெரிவித்தார். 'சந்திரமுகி' படத்தின் ஷூட்டிங் முடிந்து வேறொரு இடத்திற்கு ஷிப்டாகும்போது மைசூரில் இருந்து 7 மணி நேரம் பயணம் செய்து வேறொரு இடத்திற்கு ரஜனியை அனுப்பிவிட்டாராம். இவர் பின்னாடி வேறொரு காரில் வந்து அந்த ஊரின் ஹோட்டலில் ரூம் கேட்ட போது "அட்வான்ஸ் யாரும் கொடுக்கலை. அதுனால நாங்க ரூம் புக் செய்யலை"ன்னு ரிசப்ஷன்ல சொன்னாங்களாம்.. நமக்கு முன்னாடி வந்த ரஜினி எங்கன்னு தேடினப்போ வெளில வந்த கார்லேயே கண்ணாடியை இறக்கிவிட்டுட்டு கர்சீப்பை முகத்துல போர்த்திக்கிட்டு படுத்திருந்தாராம்.. இதைப் பார்த்து கோபப்பட்டு போய் ரிசப்ஷன்ல பி.வாசு கத்தினாராம்.. "நாங்கெள்லாம் யாருன்னு நினைச்ச.. நான் யாருன்னு தெரியுமா? பி.வாசு"ன்னு சொல்லும்போது பின்னாடி வந்து நின்ன ரஜினி, "வாசு ஸார்.. நாம யாருன்னு நாமளே சொல்லக் கூடாது. அவங்கதான் சொல்லணும்"ன்னு சொல்லி பேச்சை கட் செஞ்சாராம்.. "இப்படி நிறைய விஷயத்தை ரஜினிகிட்ட நான் கத்துக்கிட்டேன்"னாரு வாசு.. "இப்போ வேட்டையனை மேடைக்கு அழைக்கிறேன்"னு சொல்ல 'வேட்டையன்' ரன் ஸ்பீடில் அரங்கம் அதிரும் கைதட்டலோடு மேடையேறினார்..!
ரஜினி பேசும்போது, "இந்த விழாவை மிக சிறப்பாக நடத்தியதற்காக, முதல்-அமைச்சருக்கு என் நன்றி. என் திரையுலக அண்ணன் கமல்ஹாசனுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி. அன்றும் சரி, இன்றும் சரி, நான் கமல் ரசிகன். இரண்டு பேரும் சேர்ந்து ஏழு, எட்டு படங்கள் நடித்தோம். கமல் இஷ்டப்பட்டு நடித்தார். நான் கஷ்டபட்டு நடிச்சேன். இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை கொண்டாடும் இந்த வேளையில், சாதாரண ஆளாக இருந்த என்னை சினிமாவில் பெரிய ஆளாக்கிய கே.பாலசந்தருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வளர்த்த தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு நன்றி.
சமூகத்தில் இவ்வளவு பெரிய ஆளாக என்னை மதிக்கிற அனைவருக்கும் நன்றி. அது, சினிமா எனக்கு கொடுத்த பிச்சை. 38 வருஷமா சினிமால இருக்கேன். நடிப்பதை தவிர எனக்கு வேறு ஒண்ணும் தெரியாது. வேறு ரெண்டு, மூணு விஷயத்துல இறங்கி, என்னால் ஜெயிக்க முடியவில்லை. ஆனால், கமல் அப்படி அல்ல. நிறைய விஷயங்கள் தெரிந்தவர்.
சினிமாவில் வில்லனாக இருந்த என்னை காமெடியாக நடிக்க வைத்தவர், கே.பாலசந்தர். 'ஆறில் இருந்து அறுபதுவரை' படத்தில், என்னை சோகமாக நடிக்க வைத்தவர், எஸ்.பி.முத்துராமன். 'முள்ளும் மலரும்' படத்தில் இயல்பாக நடிக்க வைத்தவர், மகேந்திரன். 'பாட்ஷா' படத்தின் மூலம் என்னை எங்கேயோ கொண்டு போனவர், சுரேஷ் கிருஷ்ணா. 'முத்து', 'படையப்பா', 'கோச்சடையான்' ஆகிய படங்களில் கே.எஸ்.ரவிகுமார், ‘சந்திரமுகி’யில் பி.வாசு இவர்கள் எல்லாம் மறக்க முடியாதவர்கள். இவர்கள் எல்லோரும் என்னை உயரத்தில் தூக்கிக் கொண்டு போய் வைச்சுட்டு, போயிட்டாங்க. இப்போ நான் மட்டும் தனிமைல நிக்குறேன். 'டாப்'பில் இருப்பவர்களுக்கு இதுதான் பிரச்சினை. நான் கூட அப்பப்போ நினைச்சுக்குவேன்.. இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் சிவாஜிராவ்ன்னு..!
சினிமாவில் ஜாம்பவான்களாக இருந்த தாதா சாகேப் பால்கே, சாந்தாராம், எஸ்.எஸ்.வாசன், ஏவி.மெய்யப்ப செட்டியார், நாகிரெட்டி, சக்ரபாணி இவர்கள் எல்லாம் போட்ட சாப்பாட்டை இப்போது நாம் வேறுவிதமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். சினிமா இப்போது எவ்வளவோ முன்னேறினாலும், 'சந்திரலேகா' மாதிரி ஒரு படத்தை எடுக்க முடியுமா? 'அவ்வையார்' படத்தை நான் பத்து வயதில் பார்த்தேன். அந்த பிரமிப்பு இன்னும் இருக்கிறது. எம்.ஜி.ஆர். நடித்த 'அடிமைப்பெண்', 'நாடோடி மன்னன்', சிவாஜி நடித்த 'திருவிளையாடல்', 'சரஸ்வதி சபதம்' ஆகிய படங்கள் எல்லாம் காவியங்கள். அந்த காவியங்களை படைத்து அமரர்களாகிப்போன மகான்களின் பாதங்களுக்கு புஷ்பாஞ்சலி செலுத்துகிறேன். அதேபோன்ற இன்னொரு மகான், கமல்ஹாசன். 'அபூர்வ சகோதரர்கள்', 'தசாவதாரம்' ஆகிய படங்களை அவரை தவிர, வேறு எந்த நடிகராலும் நடிக்க முடியாது.
சினிமா, ஒரு வித்தியாசமான தொழில். இதில் தயாரிப்பாளர்கள்தான் எப்போதுமே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சினிமாவில் வெற்றி பெற்றவர்கள் வாழ்க்கையில் தோற்று இருக்கிறார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் சினிமாவில் தோற்று இருக்கிறார்கள். இது, ஒரு மாயாபஜார். அபூர்வமான உலகம். நான், 38 வருஷமா சினிமாவில் இருக்கேன். கமல், 55 வருஷமா சினிமாவில் இருக்காரு. நம் வாழ்நாளில் பார்க்க முடிகிற மிக திறமையான நடிகர் கமல். இப்போது வந்திருக்கிற இளம் நடிகர்களிடம் நான் கேட்டுக்கொள்வது, பொருளாதார ரீதியாக உங்களை உயர்த்திக் கொள்ளுங்கள். அதுக்கப்புறம் நீங்க என்ன செய்யணும்னு நினைக்கிறீங்களோ அதைச் செய்யுங்க..." என்றார் ரஜினி..!
கமலும், ரஜினியும் பேசி முடித்துவிட்டு அப்படியே மேடையில் இருந்து கிளம்பிவிட முன் வரிசை அடிமை மந்திரிகளும் கிளம்பினார்கள்.. தல அஜீத்தும் கிளம்பிச் சென்றார்.. அவர் வெளியே போகும்போதுதான் பலரும் பார்த்து அட வந்திருக்காரா என்று ஆச்சரியப்பட்டார்கள். பின்னாலேயே ஓடிச் சென்ற சிலர் அவரை மேடைக்கு அழைக்க.. 'வேண்டாம்' என்று பட்டென்று சொல்லிவிட்டு ஷாலினியோடு நடையைக் கட்டினார்..!
இதற்குப் பின்பும் தொடர்ந்து டான்ஸ்.. டான்ஸ்.. டான்ஸ்.. எல்லாமே சினிமா பாடல்கள்.. ஒரு சில வரிகள் மட்டும்தான்.. ஒரே ஆள் 3 பாடல்களுக்கு தொடர்ச்சியாக ஆடி களைத்துப் போனார்கள்..! அடுத்து ஒரு நாடகம்.. அரதப் பழசான கதை.. செம போர்.. இதுவும் அம்மா புராணம்.. 'நேசம் புதுசு' இயக்குநர் வேல்முருகன் எழுதி இயக்கியது..! வரதட்சணை பற்றியது.. மனோபாலா, சீரியல் நடிகை கெளதமி, சிங்கம்புலி நடித்தது.. அப்போதே 11 மணியானதால் இதோடு கிளம்பிவிட்டேன்..!
புகைப்படங்கள் உதவிக்கு நன்றி : நக்கீரன்.காம் மற்றும் பல்வேறு இணையத்தளங்கள்