நண்பர் பெயரிலிக்கு ஒரு பணிவான பதில்

02-04-2008


என் இனிய வலைத்தமிழ் மக்களே..


ஆறிப் போய்விட்டது என்று நினைத்திருந்த ஒரு விஷயம், என் வீட்டுக்குள்ளே புகுந்து அப்பிராணியாக சமர்த்துக் குட்டியாகப் படுத்திருக்கும் விஷயம் எனக்கு இன்றைக்குத்தான் தெரிந்தது.

எனது முந்தைய கேள்வி-பதில் பதிவில் நான் எழுதிய ஒரு கேள்வி-பதிலில் 'பிரெஞ்சு வீராங்கனை'யின் பதிவை தமிழ்மணம் நீக்கியது பற்றிய எனது கருத்தை தெரிவித்திருந்தேன்.

அதற்கு நண்பர் பெயரிலி தனது தளத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதனை நான் அன்றைக்கே படித்தேன். புரியவில்லை. பிரிண்ட் அவுட் எடுத்து கையில் வைத்தும் படித்துப் பார்த்தேன் அப்போதும் சிலது மட்டும் புரியவில்லை.

சரி.. அப்படியே விட்டுவிடுவோம். அதுதான் முடிந்துவிட்டதே என்றெண்ணி விட்டுவிட்டேன்.

இடையில் வலைப்பதிவர் சந்திப்பு என்று நமக்குத் தேவையான பிரச்சினைகள் இருந்தன என்பதனால் அதை கண்டு கொள்ளவில்லை.

ஆனால் பதிவர் பெயரிலி, அந்தப் பதிவை எனது பதிவோடு சங்கிலி போட்டுக் கட்டி வைத்திருப்பதை இன்று மதியம்தான் தற்செயலாகப் பார்த்தேன்.

ஒருவேளை நான்தான் படிக்காமல் இருக்கிறேனோ என்ற அர்த்தத்தில் அவர் செய்திருக்கலாம். அல்லது எனது பதிவைப் படிப்பவர்கள் அவர் தரப்புக் கருத்தையும் படிக்கட்டுமே என்பதற்காக அவர் எழுதியிருக்கலாம்.

எப்படியிருந்தாலும், இது எனது கவனத்திற்கு வராததால் நான் பதிலளிக்க ஆர்வமில்லாமல் இருந்தேன். இப்போது அவரே தொடர்பு ஏற்படுத்தி வைத்திருப்பதால் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு வந்துள்ளது.

மேலும்... எனக்கு இன்று வந்த ஒரு சுட்டி, நண்பர் பெயரிலியின் தற்காலிக எழுத்து நிறுத்தத்திற்கான காரணத்தை எனக்கு உணர்த்தியது. மிக்க வருத்தமடைந்தேன்.

இந்த நேரத்திலும் அவருக்கு சிரமத்தைத் தர வேண்டுமா என்ற எண்ணம் எனக்குள் இருந்தாலும், இப்போதுவிட்டால் இனி எப்போதும் அதற்கு பதிலளிக்க முடியாது என்பதனால் இப்பதிவில் பதில் அளித்துள்ளேன்.

அதற்கு முன்பாக நண்பர் பெயரிலிக்கு ஒரு விஷயம்..

தைரியமாக இருங்கள்.. அனைத்து அராஜகங்களுக்கும் ஒரு முற்றுப் புள்ளி கண்டிப்பாக உண்டு. அது நிச்சயம் நமக்கும் கிடைக்கும்.(கவனிக்கவும்.. 'நமக்கு' என்றுதான் சொல்லியுள்ளேன்)
ஏனெனில் எனக்கும் உங்களைப் போல அப்படியொரு இணைப்புத் தளம் உண்டு. கூகிளாண்டவரிடம் சொல்லித் தேடிப் பாருங்கள்.. கிடைக்கும்.

இனி நண்பர் பெயரிலி எனக்காக எழுதிய கட்டுரை இதோ..

"அய்யா உண்மைத்தமிழரே

உங்கள் அறிவின் எல்லையை அடிக்கடி நீங்கள் காட்டி அறியத் தருவது இது முதற் றடவை அல்ல.. ஆதலினால், விட்டுவிடலாம்.

ஆனால்,

/அங்கே, இங்கே என்று கை வைத்து கடைசியில் சிவனின் தலையிலேயே கை வைத்ததைப் போல் ‘வீராங்கனை’ பெயரிலியின் தலையில் கை வைக்கப் போய் அது இந்த நடவடிக்கையில் போய் முடிந்துவிட்டது. ‘அவர்களெல்லாம் சக பதிவர்கள்தானே.. ஒரு எச்சரிக்கையாச்சும் விடுவோமே’ என்ற எண்ணம்கூட அப்போதெல்லாம் தமிழ்மண நிர்வாகிகளுக்கு வரவில்லை. ஆனால் அவர்களின் அடிமடியில் கை வைத்தவுடன் கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது./

இப்படியான உங்கள் கருத்துக்களையெல்லாம் தமிழ்மணத்தின் செயற்பாடாக நீங்கள் முன்வைப்பது எவ்விதத்திலே நியாயம்?

குறிப்பிட்ட பதிவுகளைப் பெயரிலி நீக்காது, வேறு யாராவது நீக்கியிருந்தாலும் இதே கருத்தைத்தான் எழுதியிருப்பீர்களா?

நீங்கள்தான் சென்னைப்பதிவர் பட்டறையிலேயே, பெயரிலி எழுதும் இழவைத் தவிர, மீதி ஈழத்தமிழர் எழுதுவதெல்லாம் புரிந்துகொள்ளமுடிகின்றது என்றவராச்சே. இப்போதும் நான் இங்கே எழுதியது புரியவில்லை என்று தப்பித்துக்கொள்ளலாம்.

அதே போல,

/ஏன் உங்களையே சம்பந்தமில்லாமல் சொந்த பெயர்களிலும், அனானியாகவும், அதர் ஆப்ஷனிலும் திட்டவில்லை? ”அது தான் பெயரிலி!” :-)))))))))/

இப்படியான கருத்துகளை ஒருவர் போகிறபோக்கிலே விதைக்கிறார்.

சூரமணி தொடக்கம் இணையத்திலே எழுதும் எல்லா ஜில்ஜில் ரமாமணிவரையான அநாமதேயத்தும் பெயரிலிதான் என்று சும்மா சொல்லிவிட்டுப்போவார். மக்கள் கையைக் கொட்டுவார்கள். தட்டுக ்கழுவி, கொடுந் தமிழீழத்து அதிகார வர்க்கத்து அராஜகப் பெயரிலியிலே பழியைப் போட்டாலே போச்சு. இதெல்லாம் நீங்கள் அனுமதித்து விட்டுப் போவீர்கள். அப்போதும் இந்தப ்பதிவு நீக்கப்படவில்லையே? :-(

அண்ணன் வவ்வால், நேற்று மேட்ரிஸ் பெயரிலி பற்றி உங்களைப் போலவே எழுதின கருத்துக்குப் பெயரிலி எழுதுன கருத்தினையும் இதுவரை விடவில்லை. பெயரிலியோ தமிழ்மணமோ நீக்கவில்லையே.

மாலன் தொடக்கம் மாயா வரைக்கும் எத்தனையோ பதிவர்களோடு பெயரிலி "சண்டை போட்டுக் கொண்டு"தான் இருக்கிறான்.

இதுவரை எப்பதிவுமே நீக்கப்பட்டதாகத் தெரியவில்லையே. பெயரிலி என்ற பெயரில்லாமலே தமிழ்மணத்திலே பதிவு நீக்கப்படும்போதுங்கூட, தமிழ்மணத்திலே வேறெவரையும் தாக்காமல், தட்டுக ்கழுவி ஆணீயப் பித்தளைப் பெயரிலியையே தாக்கினார்கள். அப்போதெல்லாங்கூட அவர்களின் பதிவுகள் நீக்கப்படவில்லையே.

சென்ற மார்ச் மாதம் தமிழ்மணத்திலேயிருந்து சிலர் நீங்கியபின்னர், பெயரிலியையே குறிவைத்துத் தாக்கி இரவுக் கழுகு தொடக்கம் இத்தனை சென்னை_சிங்கப்பூர்ப ்பதிவுகள் வந்தன. அப்போதுகூட அப்பதிவுகள் நீக்கப்படவில்லையே.

இத்தனைக்கும் அதே காலகட்டத்திலே சென்னை வலைப்பதிவர்கள் ஒரு நிகழ்ச்சியின்போது சந்திக்கையிலே ஒரு திராவிடப் பதிவர் என்று சொல்லிக்கொள்ளும் பதிவர், "இங்கே எங்களுக்குள்ளே இரவுக் கழுகாரும் இருக்கின்றார்" என்று சொல்லியதற்கு நேரடியான நம்பிக்கையான சாட்சியம் என்னிடமுண்டு.

ஆனால், அதைப் பற்றியெல்லாம் நான் எழுதவில்லையே. தனிப்பட்ட விதங்களிலே தமிழ்மணத்துள்ளும் வெளியேயும் அறிந்த, நேரடியாக உணர்ந்த எத்தனையோ விசயங்களையெல்லாம் பெயரிலியை உன்னதப்படுத்த இழுப்பதானால், இழுக்கலாம்.

ஆனால், தனிப்பட்ட வகையிலேயும் தொழில்முறையிலே தமிழ்மணத்துள்ளும் நிகழ்ந்தவற்றையெல்லாம் இங்கே எந்நிலையும் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியின்றி விரும்பவில்லை.

இன்றைக்கு அராஜகம், அதிகாரம் என்றெல்லாம் கையைக் கொட்டும் சுட்டும் பேர்வழிகளெல்லாம், இப்படியாகப் பெயரிலி அநியாயத்துக்கு தமிழ்மணத்திலே இருக்கும் ஒரே காரணத்துக்காக அடிவாங்கியபோது எங்கேயிருந்தார்கள்?

உங்களையோ மற்ற திராவிடக் கொள்கைகளைக் கொல்லவென்றே அவதாரம் எடுத்தவர்களையோ நான் பெரிதும் கொள்கையடிப்படையிலே மதிப்பதில்லை.

அதனால், கவலையில்லை. தோழர் ஸ்டாலினுக்கும் ராஜாவனஜுக்கும் கொஞ்சமாவது நியாயமிருக்க வேண்டாமா?

இத்தனை திட்டித் தட்டித் தள்ளுகின்றவர்கள், எப்போதாவது ஜடாயு போன்றோர், போலி சல்மா விடயத்திலே ஐய்பி கொடுத்தார்கள் என்று சொல்லிக்கொண்டு, பெயரிலியைப் போட்டு இலங்கைத ்தமிழன் என்றதை நேரடியாகவே சுட்டி அடித்துக் கொண்டிரூந்தபோது, அடியை வாங்கு என்று buffer zone-இலேயே விட்டுவிட்டுப் போய் அவன் பின்னாலேயே ஒளிந்து கொண்டதும் நடந்தது.

சரி, அதைத்தான் விடுங்கள். இப்படி எதுக்கெடுத்தாலும், தமிழ்மணம், பூங்கா என்றால், பெயரில்லாமலே பெயரிலிதான் என்று திட்டித ்தள்ளுகின்றவர்கள், எப்போதாவது, தமிழ்மணம், பூங்காவிலே வந்த பெயரிலி செய்த நல்ல விசயத்துக்குப் பெயரிலியைப் பாராட்டியதுண்டா?

இல்லையே, அதை மட்டும் கவனமாகக் கொண்டுபோய், ஒன்றுமே பேசாமல், வெளிக்கு நாமே எல்லாம் என்று காட்டிக்கொண்டவர்களுக்கு அல்லவா சொரிந்துவிட்டுப ்போனார்கள்! போகிறார்கள்!!

சரி, அண்ணன் வவ்வால் மாதிரியாக இப்பின்னூட்டத்தை நீங்களும் ஒளித்துவிடுங்கள்.

நிற்க;

பெயரிலியின் பதிவிலே தமிழ்மணப்பட்டையை எத்தனை நாட்களாகக் கண்டு கொண்டிருக்கின்றீர்கள்?

பெயரிலியின் இடுகைகளைப் பெயரிலி தூக்கித் தமிழ்மணத்திலே இப்போதெல்லாம் போடுவதில்லை.

தமிழ்மணத்திலே என்ன நடந்தாலும், பெயரிலிதான் என்று ஆகுவதாலே, பட்டையைக் கழட்டியே வைத்திருக்கிறான். யாரவது, வம்புக்குத் தூக்கிப்போடும் அநாமதேயம் போட்டால் உண்டு.

தமிழ்மணத்திலேயிரூந்து என் பதிவினை நீக்கும் நோக்கமில்லை; அதே நேரத்திலே, தமிழ்மணத்துக்கு - இப்படியான அறைகுறையான புரிதல் உள்ள உங்களைப் போன்றவர்களின் எதேச்சைத்தனமான கருத்துத் தாக்குதல் - இருக்கும்வரைக்கும் நானாக அனுப்பவும் உத்தேசமில்லை.

வாழ்க நீர் எம் man.."

நண்பர் பெயரிலியின் இந்த கேள்வியறிக்கைக்கான எனது பதில் இதோ :

//அய்யா உண்மைத்தமிழரே,உங்கள் அறிவின் எல்லையை அடிக்கடி நீங்கள் காட்டி அறியத் தருவது இது முதற் றடவை அல்ல.. ஆதலினால், விட்டுவிடலாம்.//

நண்பர் பெயரிலியாரே.. நான் எனது முந்தைய அறிவின் எல்லையைக் காட்டியது எதில், எப்போது என்பதைக் கொஞ்சம் சொன்னால், உங்களது பார்வையில் எனது அறிவின் எல்லை எது என்பதனை நானறிந்து இனிமேல் தங்களிடம் அது போன்ற எனது பலவீனமான அறிவின் எல்லையைக் காட்டாமல் ஒளித்து வைத்துக் கொள்வேன்.

//ஆனால், /அங்கே, இங்கே என்று கை வைத்து கடைசியில் சிவனின் தலையிலேயே கை வைத்ததைப் போல் ‘வீராங்கனை’ பெயரிலியின் தலையில் கை வைக்கப் போய் அது இந்த நடவடிக்கையில் போய் முடிந்துவிட்டது. ‘அவர்களெல்லாம் சக பதிவர்கள்தானே.. ஒரு எச்சரிக்கையாச்சும் விடுவோமே’ என்ற எண்ணம்கூட அப்போதெல்லாம் தமிழ்மண நிர்வாகிகளுக்கு வரவில்லை. ஆனால் அவர்களின் அடிமடியில் கை வைத்தவுடன் கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது./இப்படியான உங்கள் கருத்துக்களையெல்லாம் தமிழ்மணத்தின் செயற்பாடாக நீங்கள் முன்வைப்பது எவ்விதத்திலே நியாயம்?//

முதலில் எனக்குத் தெளிவான ஒரு பதிலை தமிழ்மண நிர்வாகிகளிடமிருந்து வாங்கிக் கொடுங்கள்..

'வீராங்கனை'யின் பதிவு எதற்காக தமிழ்மணத்திலிருந்து நீக்கப்பட்டது..?

லக்கிலுக்கின் இடுகை நீக்கப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்து அவரும் பதிவொன்றை போட்டதாலா..?

அல்லது

அவரது முந்தைய செயற்பாடுகளால் ஏற்கெனவே அவர் மீது 'கண்' வைத்திருந்த தமிழ்மணம் நிர்வாகிகள் அன்றைக்கு எதேச்சையாக தளத்தை நீக்கும் முடிவைச் செய்ய எத்தனித்த போது லக்கிலுக் தனது பதிவைப் போட்டுவிட்டாரா..?

இதனால் மேற்கொண்டு நடவடிக்கையை நிறுத்த விரும்பாமல் தமிழமணம் நிர்வாகம் உடனே அதைச் செயல்படுத்தியதா..?

நீங்கள் தொடர்ந்து இது பற்றி எழுதிக் கொண்டேயிருப்பதால் இது போன்ற கேள்விகள் பல திசைகளிலும் விரிந்து சென்று கொண்டேயிருக்கின்றன. வேறு வழியில்லை சிரமத்திற்கு மன்னிக்கவும்.

இந்த விஷயத்தில் என்னுடைய புரிதல் என்னவெனில், உங்களுடனான வீராங்கனையின் மோதலுக்குப் பிறகுதான், அவரை நீக்கும் முடிவை தமிழ்மணம் நிர்வாகம் எடுத்துள்ளது என்பதே.

இதில் லக்கிலுக்கை சம்பந்தப்படுத்த வேண்டாம். அவருடைய இடுகையை நீக்கும்போது தவறுதலாக தளமே நீக்கப்பபட்டு விட்டதாக தமிழ்மணம் நிர்வாகமே சொல்லிவிட்டதால் அது தேவையற்றது.

அப்படியானால் இந்த... என்னுடைய புரிதலுக்கேற்ப என்னுடைய ஆதங்கமும் மிகச் சரியானதுதானே..

ஏனெனில், "உங்களுடனான மோதலில், 'வீராங்கனை' உங்களை ஒருமையில் நிந்தித்தும், விளித்தும், 'திட்டுதல்' என்பதற்கான அர்த்தமுள்ள வார்த்தைகளை உபயோகித்தும், 'அசிங்கம்' என்று சொல்லி நாம் நடுவீட்டில் பேசாமல் நமக்குள்ளேயே தொண்டைக்குள் முழுங்கும் வார்த்தைகளை சரளமாக வீசியும் அதகளம் செய்ததால்... பெயரிலியான நீங்கள் தமிழ்மணம் நிர்வாகத்தில் இருக்கின்ற 12 பேரில் ஒருவர் என்கின்ற அதிகாரத்தில் உங்களுடைய நிர்வாகக் குழுவில் பிராது கொடுத்து அவரை நீக்கும்படி தூண்டியிருக்கிறீர்கள். அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு 'வீராங்கனை'யின் தளம் நீக்கப்பட்டது" என்று நான் நினைத்தேன். இதனால்தான் அப்படி எழுதினேன்.

//குறிப்பிட்ட பதிவுகளைப் பெயரிலி நீக்காது, வேறு யாராவது நீக்கியிருந்தாலும் இதே கருத்தைத்தான் எழுதியிருப்பீர்களா?//
இதற்கு என்ன அர்த்தம் என்று எனக்குப் புரியவில்லை.

ஆனாலும், 'தமிழ்மணம் நிர்வாகக் குழுவில் பெயரிலி இல்லாது இருந்து, வேறு யாராவது நீக்கியிருந்தாலும் இதே கருத்தைத்தான் எழுதியிருப்பீர்களா?' என்பதுதான் இதற்கு அர்த்தமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

நான் நினைத்த மேலே கண்ட வாக்கியங்கள் உண்மையெனில், எனது பதில் இதுதான்..

ஆமாம்.. நிச்சயம் இதைத்தான் எழுதியிருப்பேன்.

//நீங்கள்தான் சென்னைப்பதிவர் பட்டறையிலேயே, பெயரிலி எழுதும் இழவைத் தவிர, மீதி ஈழத்தமிழர் எழுதுவதெல்லாம் புரிந்துகொள்ளமுடிகின்றது என்றவராச்சே. இப்போதும் நான் இங்கே எழுதியது புரியவில்லை என்று தப்பித்துக்கொள்ளலாம்.//

சாமி.. சத்தியமா நான் அங்கன உங்களைப் பத்தி என்ன எழுதினேன்னு எனக்குத் தெரியல.. ஞாபகமும் இல்ல..

உள்ள பூந்து தேடித் பார்த்து ஓய்ஞ்சு போயிட்டேன்..

நீங்களாச்சும் நான் என்ன எழுதினேன்னு எடுத்துப் போட்டீங்கன்னா.. அதனை என்ன வகையான வாக்கியமாக அமைத்திருந்தேன் என்பதனை உங்களுக்குப் புரிய வைப்பேன்.

//அதே போல,/ஏன் உங்களையே சம்பந்தமில்லாமல் சொந்த பெயர்களிலும், அனானியாகவும், அதர் ஆப்ஷனிலும் திட்டவில்லை? ”அது தான் பெயரிலி!” :-)))))))))/
இப்படியான கருத்துகளை ஒருவர் போகிற போக்கிலே விதைக்கிறார். சூரமணி தொடக்கம் இணையத்திலே எழுதும் எல்லா ஜில்ஜில் ரமாமணிவரையான அநாமதேயத்தும் பெயரிலிதான் என்று சும்மா சொல்லிவிட்டுப் போவார். மக்கள் கையைக் கொட்டுவார்கள். தட்டுக ்கழுவி, கொடுந் தமிழீழத்து அதிகார வர்க்கத்து அராஜகப் பெயரிலியிலே பழியைப் போட்டாலே போச்சு. இதெல்லாம் நீங்கள் அனுமதித்து விட்டுப் போவீர்கள். அப்போதும் இந்தப ்பதிவு நீக்கப்படவில்லையே? :-(//

நண்பரே, அந்த கமெண்ட்டை அப்போதே நான் நீக்கிவிட்டேன். நீங்கள் பார்க்கவில்லை போலும்.

வலையுலகில் ஏதோ உங்களை மட்டுமே அம்மையார் திட்டியிருப்பது போலவும், மற்றவர்களை எல்லாம் தொட்டிலில் போட்டு தாலாட்டியது போலல்லவா பேசுகிறீர்கள்..?

பாட்டு என்றால், எப்பேர்ப்பட்ட பாட்டுக்களையெல்லாம் நாங்கள் பாராட்டுக்களாக வாங்கியிருக்கிறோம் தெரியுமா உங்களுக்கு?

எனக்கு கிடைத்த பட்டப் பெயர் 'காளையடிக்கப்பட்ட காளை'. இனவிருத்தி செய்யத் தகுதியில்லாத, சக்தியில்லாத காளை மாடாம் நான்..

இந்தப் பெண்தான் ஐரோப்பிய கண்டத்தில் பெரியாரின் பகுத்தறிவைப் பரப்பி கிழக்கே உதிக்கும் சூரியனை மேற்கே கொண்டு வரப் போகிறாராம்.

நான் மட்டுமல்ல.. எத்தனையோ பேர் அங்கே அறிவுரை சொல்லப் போய் புண்ணாகிப் போய் வந்திருக்கிறார்கள்.
காயம்பட்டது நீங்கள் ஒருவர் மட்டுமே அல்ல, என்பதனையும் கொஞ்சம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

//அண்ணன் வவ்வால், நேற்று மேட்ரிஸ் பெயரிலி பற்றி உங்களைப் போலவே எழுதின கருத்துக்குப் பெயரிலி எழுதுன கருத்தினையும் இதுவரை விடவில்லை.//

இந்தக் கேள்வியை வவ்வாலிடம் தள்ளிவிடுகிறேன்.

மேலும் எனக்கும் வவ்வால்ஜிக்கும் இடையில் இப்போது terms சரியில்லை. மேற்கொண்டு அவரை நான் இங்கே விவாதிக்க முடியாமைக்கு மன்னிக்கவும்.

//பெயரிலியோ தமிழ்மணமோ நீக்கவில்லையே. மாலன் தொடக்கம் மாயா வரைக்கும் எத்தனையோ பதிவர்களோடு பெயரிலி "சண்டை போட்டுக்கொண்டு"தான் இருக்கிறான். இதுவரை எப்பதிவுமே நீக்கப்பட்டதாகத் தெரியவில்லையே.//

நானும் ஒத்துக் கொள்கிறேன். ஆனாலும் புரியாத ஒன்று. ஏன் சண்டை போட வேண்டும்? அமைதியாகவே உரையாடலாமே..?

//பெயரிலி என்ற பெயரில்லாமலே தமிழ்மணத்திலே பதிவு நீக்கப்படும்போதுங்கூட, தமிழ்மணத்திலே வேறெவரையும் தாக்காமல், தட்டுக ்கழுவி ஆணீயப் பித்தளைப் பெயரிலியையே தாக்கினார்கள். அப்போதெல்லாங்கூட அவர்களின் பதிவுகள் நீக்கப்படவில்லையே.//

உண்மைதான். ஆனால் இதிலும் ஒரு விஷயம்.. தமிழ்மணம் நிர்வாகிகளில் உங்களை மட்டுமே தாக்கினார்கள் என்ற கூற்றை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன்.

12 பேரையுமே தாக்கி எழுதப்பட்ட 'மகாபாரதக் கதை'களையெல்லாம் நான் படித்திருக்கிறேன். அதை யார் எழுதியது என்பது உங்களுக்கே தெரியும். சொல்ல வேண்டியதில்லை.

ஆனால் இப்போது நீங்கள் மட்டுமே உரையாடலுக்கு, அனைவருடனும் முன் வந்து கொண்டிருப்பதால் கூடுதல் கவனம் பெற்றிருக்கிறீர்கள். அவ்வளவுதான்..

அதோடு இந்தத் 'தட்டுக் கழுவி', 'ஆணியப் பித்தளை' போன்ற பட்டங்களை யார் கொடுத்தார்கள் என்று எனக்குத் தெரியாது.

ஆனாலும், அவர்களையெல்லாம் முருகனிடம் விட்டுவிடுங்கள். அவன் பார்த்துக் கொள்வான்.

//சென்ற மார்ச் மாதம் தமிழ்மணத்திலேயிருந்து சிலர் நீங்கிய பின்னர், பெயரிலியையே குறிவைத்துத் தாக்கி இரவுக் கழுகு தொடக்கம் இத்தனை சென்னை_சிங்கப்பூர் ்பதிவுகள் வந்தன. அப்போதுகூட அப்பதிவுகள் நீக்கப்படவில்லையே.?//
யார் இடையில் விலகிக் கொண்டார்கள் என்பது எனக்குத் தெரியாது.

ஒரு விஷயம் நண்பரே..

எல்லாப் பதிவர்களும் அனைத்துப் பதிவுகளையும் படித்துக் கொண்டிருப்பது முடியாது. இணையத்தில் அது சாத்தியமில்லை. உங்களுக்கே தெரியும்..

எங்களது கண்களுக்கு பட்ட அனைத்தையும் முடிந்தவரை படித்துதான் வருகிறோம். ஆனாலும் மீறிப் போனது இருக்கலாம்.. அல்லவா..? இதோ உங்களுடைய இந்தப் பதிவைப் போல..

//இத்தனைக்கும் அதே காலகட்டத்திலே சென்னை வலைப்பதிவர்கள் ஒரு நிகழ்ச்சியின்போது சந்திக்கையிலே ஒரு திராவிடப் பதிவர் என்று சொல்லிக் கொள்ளும் பதிவர், "இங்கே எங்களுக்குள்ளே இரவுக் கழுகாரும் இருக்கின்றார்" என்று சொல்லியதற்கு நேரடியான நம்பிக்கையான சாட்சியம் என்னிடமுண்டு. ஆனால், அதைப் பற்றியெல்லாம் நான் எழுதவில்லையே.//

இந்த 'இரவுக்கழுகு' யார் என்பது இங்கே, இந்த விஷயத்திற்கு எவ்வளவு முக்கியம் என்று எனக்குத் தெரியவில்லை.

இந்தப் பெயரை நான் கேள்விப்பட்டதோடு சரி.. மேற்கொண்டு எதுவும் தெரியாது.. இதற்கும் 'வீராங்கனை'யின் தள நீக்கத்திற்கும், எந்தவிதத்தில் சம்பந்தம் என்று எனக்குப் புரியவில்லை.

ஒரு வேளை என் பார்வைக்கு வராத தளங்களில் ஏற்பட்ட மோதல்களால் இது நடந்திருக்குமானால் நான் என்ன செய்ய முடியும்?

'வீராங்கனை'யின் பதிவுகளை நீக்க வேண்டும் என்று சொல்லி நான் ஒரு பதிவை எழுதியிருந்தேன். அதன் அடிப்படையில் மட்டுமே இப்போது உங்களிடம் உரையாடுகிறேன் என்பதைக் கவனித்தில் கொள்ளவும்.

//தனிப்பட்ட விதங்களிலே தமிழ்மணத்துள்ளும் வெளியேயும் அறிந்த, நேரடியாக உணர்ந்த எத்தனையோ விசயங்களையெல்லாம் பெயரிலியை உன்னதப்படுத்த இழுப்பதானால், இழுக்கலாம். ஆனால், தனிப்பட்ட வகையிலேயும் தொழில்முறையிலே தமிழ்மணத்துள்ளும் நிகழ்ந்தவற்றையெல்லாம் இங்கே எந்நிலையும் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியின்றி விரும்பவில்லை.//

அர்த்தம் புரியாத காரணத்தால் கேள்வி இங்கே Pass செய்யப்படுகிறது.

//இன்றைக்கு அராஜகம், அதிகாரம் என்றெல்லாம் கையைக் கொட்டும் சுட்டும் பேர்வழிகளெல்லாம், இப்படியாகப் பெயரிலி அநியாயத்துக்கு தமிழ்மணத்திலே இருக்கும் ஒரே காரணத்துக்காக அடிவாங்கியபோது எங்கேயிருந்தார்கள்?//

நண்பரே, 'வீராங்கனை'யின் பதிவை நீக்கியதை வரவேற்று எழுதிய நான், "அதனை முன்பே செய்திருக்கலாமே.. பெயரிலி என்ற சக்தி வாய்ந்த நபருடன் மோதிய பின்பு, சிறிது கால தாமதத்திற்குப் பிறகு நடவடிக்கை எடுத்திருக்கிறீர்களே என்று கவலை+ஆதங்கம் பட்டிருக்கிறேன்..
இதில் குற்றம்சாட்டும் அர்த்தம் இல்லை. அப்படி எடுத்துக் கொள்ளாதீர்கள். குற்றம் என்றால் நடவடிக்கை எடுக்கத் தகுந்த விஷயம்.

//உங்களையோ மற்ற திராவிடக் கொள்கைகளைக் கொல்லவென்றே அவதாரம் எடுத்தவர்களையோ நான் பெரிதும் கொள்கையடிப்படையிலே மதிப்பதில்லை. அதனால், கவலையில்லை.//

இதனை முன்பேயே படித்துத் தொலைந்திருந்தாலும், சூடு, சொரணையில்லாமல்தான் இந்தப் பதிலை உங்களுக்கு எழுதுகிறேன்.

இதிலிருந்தே நான் எப்பேர்ப்பட்ட முட்டாள் என்பதனை தாங்கள் அறிந்து கொள்ளலாம்.

//தோழர் ஸ்டாலினுக்கும் ராஜாவனஜுக்கும் கொஞ்சமாவது நியாயமிருக்க வேண்டாமா? இத்தனை திட்டித் தட்டித் தள்ளுகின்றவர்கள், எப்போதாவது ஜடாயு போன்றோர், போலி சல்மா விடயத்திலே ஐய்பி கொடுத்தார்கள் என்று சொல்லிக்கொண்டு, பெயரிலியைப் போட்டு இலங்கைத ்தமிழன் என்றதை நேரடியாகவே சுட்டி அடித்துக் கொண்டிரூந்தபோது, அடியை வாங்கு என்று buffer zone-இலேயே விட்டுவிட்டுப் போய் அவன் பின்னாலேயே ஒளிந்து கொண்டதும் நடந்தது.//

இப்படியும் ஒரு கொடுமையா..? வருந்துகிறேன் நண்பரே..

//சரி, அதைத்தான் விடுங்கள். இப்படி எதுக்கெடுத்தாலும், தமிழ்மணம், பூங்கா என்றால், பெயரில்லாமலே பெயரிலிதான் என்று திட்டித ்தள்ளுகின்றவர்கள், எப்போதாவது, தமிழ்மணம், பூங்காவிலே வந்த பெயரிலி செய்த நல்ல விசயத்துக்குப் பெயரிலியைப் பாராட்டியதுண்டா? இல்லையே,//

அப்படி உங்களைத் திட்டியவர்கள் யார் என்று எனக்குத் தெரியாததால் நான் பதில் சொல்ல முடியாது..

எனக்குத் தெரிந்து 'வீராங்கனை'க்கும் முன்பே, ஒரே ஒருவர்தான் உங்களைத் திட்டிக் கொண்டிருந்தார். திருவாளர் 'கருப்பு'தான் அவர்.

அவர் ஏன் உங்களைத் திட்டுகிறார் என்பது தமிழ்மணத்தை வெறுமனே வாசிப்பவர்களுக்குக்கூட தெரியும்.

ஸோ.. இதற்கு நீங்கள் வருத்தப்பபடுவதற்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்..?

தங்களுடைய கை வண்ணத்தில் மலர்ந்ததுதான் தமிழ்மணத்தின் 'பூங்கா' என்பது உண்மையானால் நான் பெரிதும் மகிழ்ச்சசியடைகிறேன். வாழ்த்துகிறேன்.

மீண்டும் ஒரு புதிய வடிவோடு வெகு சீக்கிரம் அதைக் கொண்டு வாருங்கள். கூடவே எனது ஒரேயொரு பதிவு, அதில் இடம் பெற்றிருந்தது. அதற்காக ஒரு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

//அதை மட்டும் கவனமாகக் கொண்டுபோய், ஒன்றுமே பேசாமல், வெளிக்கு நாமே எல்லாம் என்று காட்டிக் கொண்டவர்களுக்கு அல்லவா சொரிந்துவிட்டுப ்போனார்கள்! போகிறார்கள்!!//

இதற்கும் என்ன அர்த்தம் என்பது புரியாததால் விட்டுவிடுகிறேன். மன்னித்து விடுங்கள் நண்பரே..

//சரி, அண்ணன் வவ்வால் மாதிரியாக இப்பின்னூட்டத்தை நீங்களும் ஒளித்துவிடுங்கள்.//

இந்தப் பதில் எனக்கு பின்னூட்டமாக வரவேயில்லை நண்பரே.. வந்திருந்தால்தானே ஒளித்து வைப்பதற்கு?

//நிற்க; பெயரிலியின் பதிவிலே தமிழ்மணப் பட்டையை எத்தனை நாட்களாகக் கண்டு கொண்டிருக்கின்றீர்கள்? பெயரிலியின் இடுகைகளைப் பெயரிலி தூக்கித் தமிழ்மணத்திலே இப்போதெல்லாம் போடுவதில்லை. தமிழ்மணத்திலே என்ன நடந்தாலும், பெயரிலிதான் என்று ஆகுவதாலே, பட்டையைக் கழட்டியே வைத்திருக்கிறான். யாரவது, வம்புக்குத் தூக்கிப ்போடும் அநாமதேயம் போட்டால் உண்டு.//

எதற்கு இந்தக் கோபமெல்லாம்..?

இவ்வளவு தூரம் அறிவுக்கூர்மையுடன் பதில் சொல்லும் தகுதியுள்ள நீங்கள், இது போன்ற முட்டாள்தனமான அடக்குமுறைகளுக்கெல்லாம் பயந்து ஓதுங்கிப் போவது நியாயமல்ல..

நீங்கள் தயங்காமல் முன் வந்து உங்களைத் தமிழ்மணத்திலே எங்களுடன் இணைய வேண்டும் என்றே விரும்புகிறேன்.

//தமிழ்மணத்திலேயிரூந்து என் பதிவினை நீக்கும் நோக்கமில்லை; அதே நேரத்திலே, தமிழ்மணத்துக்கு - இப்படியான அறைகுறையான புரிதல் உள்ள உங்களைப் போன்றவர்களின் எதேச்சைத்தனமான கருத்துத் தாக்குதல் - இருக்கும்வரைக்கும் நானாக அனுப்பவும் உத்தேசமில்லை.வாழ்க நீர் எம் man//

'அரைகுறை' என்று தாங்கள் எழுதியிருப்பதுகூட என்னை நோக்கி வீசப்படும் வசவு போன்ற இகழ்ச்சிப்படுத்தும் வார்த்தைகள்தான்.. புரிந்து கொள்ளுங்கள்.

இவ்வளவு நேரம் உங்களை யாரோ தாக்கினார்கள்.. திட்டினார்ரகள்.. என்றெல்லாம் புலம்பும் நீங்கள், அடுத்தவருக்கும் இதையே செய்யலாமா..? யோசித்துப் பாருங்கள்..

தமிழ்மணத்தை விட்டு விலகும் முடிவையோ அல்லது இணையாதிருக்கும் முடிவையோ நீங்கள் எடுக்க வேண்டாம். தயவு செய்து வாருங்கள்.. இணையுங்கள்.. அளவளாவுவோம்.. பகிர்வோம்..

நம் முன்னே.. நாம் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம்.. நாம் எவ்வளவு தூரம் சென்றாலும் நம் அருமை மொழியை, மக்களை, உடன் பிறந்தாரையும் அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் உண்டு. இது உலக நியதி.. அந்தக் கடமையை நாம் முழுமையாகச் செய்ய வேண்டும்.

இதற்காகவாவது தாங்கள் தமிழ்மணத்தில் மீண்டும் எழுத வர வேண்டும் என்றழைக்கிறேன்.

முடிக்கும் முன்பாக ஓரிரு வார்த்தைகள்..

மேலே, நீங்கள் எடுத்து பதிவாக போட்ட புகைப்படம்தான் தற்போது எனது மானிட்டரின் டெஸ்க்டாப் படமாகக் காட்சியளிக்கிறது.

அந்தப் பதிவிலேயே நான் 'அழகு' என்று ஒரேயொரு வார்த்தையில் ஒரு பின்னூட்டம் போட்டிருந்தேன். உங்களுக்கு ஞாபகமிருக்கும் என்று நினைக்கிறேன்.

நேசங்களும், பாசங்களும் என்றென்றைக்கும் என் உள்ளத்தில் யாருக்காகவும் காத்திருக்கிறது.

புரிந்து கொள்ளுங்கள்..

என் அப்பன் முருகன் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் என்றென்றைக்கும் அருள் பாலிக்க வேண்டிக் கொள்கிறேன்.


வாழ்க வளமுடன்.



மார்ச்-30-காந்தி சிலை-பதிவர் சந்திப்பு

01-04-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பதிவு எழுதுவதே எனக்கு சோதனையான விஷயம். அதிலும் ஒரு நாளைக்கு நான்கைந்து பதிவுகளையும் போட்டு, குறைந்தபட்சம் 100 பின்னூட்டங்களையும் இட வேண்டுமெனில் நான் சோத்துக்குச் சிங்கியடிக்காமல், கவலைப்பாடு இல்லாதவனாக இருக்க வேண்டும்.

அப்படிப்பட்டவர்களையும் வலையுலகில் பார்த்து, பார்த்து நான் விட்ட பெருமூச்சுதான் நிறைய பேரை வெளிநாட்டுக்குத் துரத்தியிருக்கிறது என்று நினைக்கிறேன்.

வலையுலகில் இதுபோல் கும்மாங்குத்தாக ஒட்டு மொத்தமாக பின்னூட்டங்களைப் போட்டுத் தாக்கும் பதிவர்கள் முக்கால்வாசி பேர் வெளிநாடுகளில்தான் வசிக்கிறார்கள். வளைகுடா நாடுகளில்.. அதிலும் துபாய், அமீரகத்தில்தான் அதிகம் என்று நினைக்கிறேன்.

பின்னூட்டங்கள் போடுவதிலும்கூட ஒரு நுணுக்கம் வேண்டும். அது என்னைப் போன்ற அரைகுறைகளுக்குத் தெரிவதில்லை. படித்தவுடனேயே குபீர் சிரிப்பை வரவழைப்பது எப்படி என்பதை வலையுலக ‘வருத்தமில்லாத வாலிபர் சங்கத்தினரிடமும்’, ‘பாவையர் சங்கத்தினரிடமும்’ இன்ன பிற சங்கத்தினரிடமும்தான் கேட்க வேண்டும். மற்றவர்கள், ‘வந்தால் ஏதோ ஒண்ணு போட்டுக்கோ’ என்ற ரகம்தான்..

அப்படி நான் பொறாமைப்பட்ட நபர்களில் முக்கியப் புள்ளிகளான அபிஅப்பாவும், குசும்பனும் நேரில் வருகிறார்கள் என்பதால் கண்டிப்பாகத் இந்த நிகழ்வைத் தவிர்க்கக்கூடாது என்று நினைத்து, மார்ச்-30 சென்னை மெரீனா கடற்கரை காந்தி தாத்தா சிலை அருகே நடந்த வலைப்பதிவர் கூட்டத்திற்கு நானே, நேரில், நிஜமாகவே ஆஜரானேன்.

வழக்கம்போல என் அப்பன் முருகப் பெருமான் கொடுத்த கொடுஞ் சோதனைகளையெல்லாம் அவன் தயவாலேயே முறியடித்து, மாலை 4 மணியளவில் காந்தி தாத்தா சிலை அருகே சென்றடைந்தேன்.

ஏற்கெனவே சொல்லியிருந்ததைப் போல இந்த மீட்டிங்கிற்கு முன்னதாக ஒரு மணி நேர ‘வலையுலக டியூஷனு’க்கு வருவதாகச் சொன்ன புதிய பதிவர் ஒருவர் தாமதிக்க.. அங்கே.. இங்கே.. என்றெல்லாம் கண்களை ஓடவிட்டு.. பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தேன்.

காந்தி தாத்தா சிலையருகே முன்பே சொல்லி வைத்தாற்போல் ஒரு குஜராத்தி குடும்பம்.. ஏதோ ‘பொண்ணு பார்க்கின்ற வைபவம்’(நாடு ரொம்ப முன்னேறிருச்சு) போல் தெரிந்தது.. அப்போதுதான் அறிமுகம் ஆகி.. ஒருவருக்கொருவர் கட்டித் தழுவிக் கொண்டார்கள்..

தத்தமது பிள்ளைகளை அறிமுகம் செய்து வைத்தார்கள். பெண்ணோ அம்சமாக அந்தக் கால ‘டிம்பிள் கபாடியா’ போல் சிக்கென்ற உடையில் ‘சிக்கன’மாக இருந்தார். பையன் ‘எதிர்நீச்சல்’ மாது போல் இருந்ததுதான் கொடுமை.. சரி.. எதையோ பேசி முடித்துக் கொண்டால் நல்லதுதான் என்று நினைத்து வேறு பக்கம் பார்த்தேன்.

‘எங்கெங்கு காணினும் கடலையடா’ என்ற நோக்கில், எதற்கும் அஞ்சாத கழகக் கண்மணிகள் எதிர்காலத்தை மும்முரமாக முத்துக் குளித்துத் தேடிக் கொண்டிருந்தார்கள். எங்கே, எதை என்று மட்டும் கேட்காதீர்கள் ப்ளீஸ்..

மணலில் இறங்கி கொஞ்ச தூரம் நடந்தால் பார்க்க இரண்டு கண்கள் போதாது என்ற நிலைமை.. மூஞ்சியை எங்க வைச்சிருக்காங்கேன்னே தெரியலடா சாமி.. அந்த போஸ்ல உக்காந்திருந்து வயித்தெரிச்சலை கொட்டுறானுக..

இதுக்குத்தான் காந்தி தாத்தாகூட கடலை பார்த்து நிக்காம ‘போங்கடா.. பொசக்கெட்ட பயலுகளா’ன்னுட்டு செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைப் பார்த்து திரும்பிட்டாரு போல..

சரி.. இதுக்கு மேல போனா நமக்கு ராத்திரி சாப்பாடும் உள்ள இறங்காது என்பதால் அப்போதைக்கு வயிற்றுக்குப் பசியாற்ற சுண்டல் வாங்கிவிட்டுத் திரும்பினேன்.

அப்போது, கனஜோராக ‘வலையுலக வசிஷ்ட மாமுனி’ மா.சிவக்குமார் கையில் ஹெல்மட்டோடு அசத்தலாக எதிரில் வந்தார். படிக்கட்டுக்களில் அமர்ந்திருந்த தம்பி வினையூக்கியை கை காட்டினார். “என்ன ஸார்.. நாங்களே இப்பத்தான் வர்றோம்.. அதுக்குள்ள நீங்களா சாப்பிடுறீங்க?” என்றான் தம்பி வினையூக்கி. ‘வயிறுன்னு ஒண்ணு இருக்குதே’ன்னேன்.. வசிஷ்டரும் தன் பங்குக்கு சுண்டலை வாங்கிக் கொண்டு வந்தார்.

தாத்தாவின் சிலைக்குப் பின்புறமிருந்த அரைவட்ட பெஞ்சில் அமர்ந்தோம். சாப்பிடக்கூடவிடல தம்பி வினையூக்கி. “பக்கம், பக்கமா எழுதுறீங்களே” என்று வழக்கமான பொறாமையையே காட்டினான் தம்பி..

அவனுக்கு என் மீது ஒரு கோபம்.. அவன் கதையை மட்டும் படிக்கிறேன். கமெண்ட்டு மட்டும் போட மாட்டேங்கிறனேன்னு.. தப்புதான்.. ஆனா என்னமோ.. கதையும், கவிதையும் மட்டும் இந்த மரமண்டைக்குள்ள ஏறவே மாட்டேங்குது.. தம்பி அரசியல் எழுதினா முதல் பின்னூட்டம் நான்தான போடுவேன்.. அதையும் சொல்லிப்புட்டேன்.

நம்ம ‘முனிவர்’ வழக்கம்போல ‘புன்னகை மன்னன்’ என்ற இயற்பெயரைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் எதற்கெடுத்தாலும் புன்னகையை சிந்தியபடியே இருந்தார்.

இந்த நேரத்தில் சிவபூஜையில் புகுந்த கரடியாக, பாலபாரதி சீடர்கள் லக்கி, நந்தா படை சூழ வந்தார்.

பாலபாரதி முதலில் வழக்கம்போல் கொஞ்சினார். பின்பு உடனேயே “ங்கொய்யால..” என்றார். இதற்கான வாய்ப்பைத் தந்தவர் நண்பர் பைத்தியக்காரன்.

கையில் ஒரு புத்தக பையுடன் வந்திருந்தார் பைத்தியக்காரன். அந்தப் பையைப் பார்த்தவுடன் பாலபாரதிக்கு பிரஷர் எகிறிவிட்டது. “எனக்குத்தான்.. நான்தான்..” என்றெல்லாம் ஏதேதோ சொல்லி பைத்தியக்காரனை எக்கச்சக்க டென்ஷனாக்கி கத்திக் கொண்டிருந்தார். கடைசியில்தான் தெரிந்தது.. அது குசும்பனுக்குக் கொடுக்கப்பட வேண்டிய புத்தகப் பரிசு என்று..

இன்னும் நிறைய புத்தகங்களை வாங்கச் சொல்லியிருந்தாராம் பாலா. ஆனால் கொண்டு வரப்பட்டதோ கொஞ்சம்தான் என்பதால் கொஞ்சம் மூட்அவுட்..(சுண்டலையும், மீன் ரோஸ்ட்டையும் இதே மாதிரி சண்டை போட்டு எல்லாருக்கும் வாங்கிக் குடுத்திருந்தா நல்லாயிருந்திருக்கும்)

இடையில் எனது இரண்டு பக்கமும் உட்கார்ந்திருந்த முனிவரும், வினையூக்கியும் எதையோ சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒண்ணும் இப்ப ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது.. ஆனா.. ‘டோண்டு ஸார்..’ ‘டோண்டு ஸார்’ என்று சொன்னது மட்டும் லேசா நினைவுக்கு வருது..

தம்பி லக்கிலுக் அன்றைய வலையுலக அரசியல் சூழ்நிலைகளை பளிச்சென்று சிம்பாலிக்காக காட்டுவதைப் போல் ‘தமிழ்மணம்’ என்று பெயர் பொறிக்கப்பட்ட டீ ஷர்ட்டை அணிந்து வந்திருந்தான். “என்னடா? நக்கலுக்கா..?” என்றேன்.. “இல்ல.. இல்ல..” என்று கட்சிக்காரன் மாதிரியே முழு பூசணிக்காயை சோற்றில் புதைத்தான்..

லக்கியைப் பார்த்தவர்கள் அனைவருமே இதைத்தான் முதலில் கேட்டார்கள். கடைசிவரையிலும் அனைவரிடமும் கூசாமல் இதையேதான் திருப்பித் திருப்பிச் சொன்னான்.. நிறைய டிரெயினிங் போலிருக்கு..

பாலாவும், லக்கியும், பைத்தியக்காரனும் அப்போது எங்களை அம்போவென்று விட்டுவிட்டு டீ குடிக்கக் கிளம்பிச் சென்றார்கள். மாட்டினோம் ஜென்டிலாக வந்தமர்ந்த கே.ஆர்.அதியமானிடம்..

மனிதர் ஆல் இண்டியா ரேடியோ விவிதபாரதி ஸ்டேஷனைப் போல் Non Stop-ஆக பேசிக் கொண்டே போகிறார்.. எடுத்த எடுப்பிலேயே ‘பார்ப்பான் யார்? பார்ப்பனீயம்னா என்ன?’ என்று பேச்சைத் துவக்க.. எனக்கு அந்த மாலை வெயில்லேயே குளிர் காய்ச்சல் வரும்போல இருந்தது.

ஏதாவது புரியறாப்புல இருந்தா நாம பேசலாம்னு நினைச்சா.. ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் மாதிரி ஸ்பீடை கூட்டிக்கிட்டே போயிட்டாரு அதியமான். புரியணும்னா ‘பெரியவர்’ வந்து டிரான்ஸ்லேட் செஞ்சாத்தான் புரியும்ன்ற மாதிரி இருந்துச்சு..

நல்லவேளை நான் வாய் மட்டுமே பார்த்தேன். தம்பி வினையூக்கி ஒரு ரெண்டு நிமிஷம், நந்தா ஒரு ரெண்டு நிமிஷம்.. ‘முனிவர்’ ஒரு நாலு நிமிஷம்னு சமாளிச்சுப் பார்த்தும் முடியாமல் இருந்தச் சூழலில்.. நல்லவேளையாக பாலா, முருகன் மாதிரி திரும்பி வந்து எங்களை காப்பாற்றினார்..

ஆனாலும் அவரிடமும் அதியமான் ‘அந்த’ மேட்டரை எடுத்துவிட.. பாலாவும், அதியமானும் கொஞ்ச நேரம் வேகமாக பேசிக் கொண்டார்கள். ‘அதெல்லாம்’ இங்க எதுக்கு? மறுபடியும் யாராச்சும் சூட்டைக் கிளப்பி போஸ்ட் போட்டு.. நமக்குப் பிரச்சினையாயிரும்.. விட்ருவோம்..

தம்பி நந்தாவிடம் ‘பாப்லோ நெரூதா பற்றி வலைச்சரத்தில் எழுதியிருந்த பதிவைப் படித்தேன். நன்றாக இருந்தது’ என்று சொன்னேன். பின்னூட்டம் போட்டிருக்கலாமே என்று தம்பி நினைப்பானோ என்னவோ, என்று நினைத்து.. அதற்கொரு தோதான பொய்யைச் சொல்லி அப்போதைக்குத் தப்பித்தேன்.

அடுத்தப் பதிவராக நித்யகுமாரன் வந்தார். புதிய பதிவர் இவர். நிறைய கவிதைகள் எழுதத் துடிக்கும் ஆர்வமுள்ளவர். அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தேன்.

தொடர்ந்து குப்புச்சாமி செல்லமுத்து வந்தார். “பதிவுகள் எழுதறதில்லை ஸார்.. ஆனா நிறைய படிக்கிறேன்..” என்றார்.. “நீங்களும் எழுதுங்கள்” என்றேன்.. ஏனோ மனிதர் தயங்குகிறார். அரசியல் தளங்களை மட்டுமே படித்திருப்பார் போலும்..

பின்பு NHM நாகராஜன் வந்தமர்ந்தார். பாலா அறிமுகப்படுத்தி வைத்தார். ஒரு மாதத்திற்கு முன்பாக பாலாவிடம் புலம்பியதையே இவரிடமும் புலம்பினேன்..

“என்னுடைய inscript method-ஐ இதில் சேர்த்து கொடுங்கள்” என்றேன். நாகராஜ் பாலாவிடம் கேட்க.. பாலா, “நான் செஞ்சு பார்த்தேன் தல.. ஒண்ணும் ஒர்க்அவுட் ஆகலே.. நீங்களாச்சு.. அவராச்சு..” என்று சொல்லி என்னைக் கை காட்டி, கை கழுவிவிட்டார். “இன்னும் 3, 4 நாள்ல முடிச்சுத் தர்றேன்..” என்றார் நாகராஜ். கொஞ்சம் நிம்மதி வந்தது எனக்கு..

“ஏன் இது விண்டோஸ் 98-ல வொர்க் ஆக மாட்டேங்குது.. நான் அதுதான் வைச்சிருக்கேன். அதையும் கொஞ்சம் மாத்திக் கொடுங்களேன்” என்றேன்.. கேட்டு முடிப்பதற்குள் தலையாட்டி மறுத்த நாகராஜ். “நோ ஸார்.. அது பெரிய வேலை.. மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கணும்.. நீங்க XPக்கு மாறிருங்க..” என்று திட்டமாகச் சொல்லிவிட்டார்.

பாலபாரதிக்கு போன் மேல் போன் வந்தபடியே இருந்தது.. “காந்தி சிலைக்குப் பக்கத்துல..” என்று 30 முறையாவது சொல்லியிருப்பார். பரவாயில்லை.. ஸ்கூல்ல படிக்கிறப்ப தாத்தா பேரை சரியாச் சொல்லாம விட்டிருப்பாரு போல.. அதான் முருகனா பார்த்து இப்படியொரு தண்டனையைக் கொடுத்திட்டான்னு நினைக்கிறேன்.

ஜ்யோவ்ராம் சுந்தரும், ஆடு மாடு என்ற பதிவரும் வந்தார்கள். இப்போதுதான் நேரில் பார்க்கிறேன் என்பதோடு அவர்கள் வேறொரு முற்போக்கு, பின்னவீனத்துவ கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டதால் தொடர்ந்து பேச முடியவில்லை.

இடையிடையே லக்கிலுக்கின் போனில் குசும்பன் வந்து “நான் கிண்டில இருக்கேன்.. சைதாப்பேட்டைல இருக்கேன்.. எப்படி வரணும்?” என்று கேட்டு கொண்டிருந்தார். தம்பியும் மகா பொறுமைசாலியாக பதில் சொல்லிச் சொல்லிக் களைத்துக் கொண்டிருந்தான்.

அடுத்த விருந்தினரான அபி அப்பாவும் எடுத்த எடுப்பிலேயே “பாண்டிச்சேரில இருந்து கிளம்பிட்டேன்..” என்று சொல்ல.. “நீங்க எங்க இருந்து வேண்ணாலும் கிளம்புங்க சாமி.. ஆனா யாருன்னு மொதல்ல சொல்லிட்டு அப்புறமா பேசுங்க..” என்று கெஞ்சிக் கொண்டிருந்தான் லக்கி.

இதே மாதிரி, கூட்டத்திற்குள் வந்து சேரும்வரை அபி அப்பா படுத்திய பாட்டை லக்கிலுக் ஜென்மத்தில் மறக்க மாட்டான் என்று நினைக்கிறேன்.

கடைசியாக அதையும் சொல்லிச் சொல்லிப் புலம்பினான்.. “பாண்டிச்சேரில ஒரு அபி அப்பா.. ஈ.ஸி.ஆர். ரோட்டுல ஒரு அபி அப்பா.. கிண்டில ஒரு அபி அப்பா.. சைதாப்பேட்டைல ஒரு அபி அப்பா.. எத்தனை பேரய்யா நாம கூப்பிட்டோம்..” என்ற புலம்பல் வேறு..

ஆனாலும் ஒவ்வொரு போன் கால் இறுதியிலும் மறக்காமல் அந்த கேன் விஷயத்தை லக்கி ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தது வேறு விஷயம்.

வலையுலக நக்கல் மன்னன் குசும்பன் திடீரென்று பிரசன்னமானார். பெல்லி டான்ஸ் பதிவில் பார்த்ததுக்கும் நேரில் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. இதையேதான் லக்கியும் சொன்னான். பெல்லி டான்ஸ் பதிவில் நான் சத்தியமாக குசும்பனை மட்டுமே பார்த்தான் என்பதையும் இங்கே சொல்லிக் கொள்கிறேன்.

குசும்பன் அநியாயத்திற்கு அழகாக இருந்ததையும் சொல்லித் தொலைய வேண்டும். இந்த மாதிரி நக்கல் பிடிச்ச ஆசாமிகளெல்லாம் எதுகை, மோனையா இருப்பாங்கன்னு நினைச்சா.. இங்க அது, ஏறுக்கு மாறால்ல இருக்கு.

குசும்பன் என்னிடம் இதையே மாத்திக் கேட்டார்.. “நீங்க ஏன் ஸார் இப்படி அநியாயத்துக்கு நல்லவரா இருக்கீங்க?” என்று.. “இல்லைன்னா இங்கன குப்பை கொட்ட முடியாது சாமி..” என்று லெக்சர் அடித்து ஓய்ந்தேன். ‘அஞ்சாதே விமர்சனக் கட்டுரையும், சுஜாதா பற்றிய கட்டுரையும் நல்லாயிருந்தது ஸார்’ என்றார்.

ஆங்காங்கே அமர்ந்திருந்த அனைவரும் பக்கத்த்தோடு பக்கம் பேசிக் கொண்டிருக்க.. ‘வசிஷ்ட மாமுனிவர்’ நான் முன்பே எனது முந்தையப் பதிவில் சொல்லியிருந்ததைப் போல தனது வசூலைத் துவக்கினார்.

தமிழ்99 தட்டச்சின் மாதிரி வடிவத்தை பிரிண்ட் செய்து கொண்டு வந்திருந்தார். அனைத்துமே கருப்புக் கலரில் இருந்தன. ஒரு பேப்பரில் இரண்டு பிரதிகளை ஒட்டியிருந்தார்கள்.

முனிவர் அனைவரிடமும், “இந்தாங்க.. வைச்சுக்குங்க..” என்று கையில் திணித்துவிட்டு கடைசியில் தட்சணையை கறாராக வசூலித்துவிட்டார். என்னிடம் 100 ரூபாய் கேட்பேன் என்று சொல்லியிருந்தார். ஆனால், நான் ஒன்று மட்டுமே வாங்கிக் கொண்டு எஸ்கேப்.. அந்த மட்டுக்கும் சந்தோஷம்.

குசும்பனும், பதிவர் சந்தோஷ¤ம் மிக நெருக்கமாகிப் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் வட்டம் பெருகியது.. தள்ளித் தள்ளி உட்கார்ந்திருந்த அதியமான் திடீரென்று பாலாவிடம் எதையோ கேட்கப் போய்.. அங்கேயிருந்தால் மறுபடியும் மாட்ட வேண்டுமே என்பதற்காக வரப் போகும் சுனாமியை அறியாமல் வேறிடத்தில் போய் அமர்ந்தேன்.

வந்தது சுனாமி.. ஒன்றல்ல இரண்டு. முதல் சுனாமி ‘பெரியவர்’. அவர் வருவதற்கு ஒரு நிமிடம் முன்புதான் தம்பி லக்கிலுக், “இன்னும் ஸார காணலியே..” என்று சொல்லிக் கொண்டிருந்தான். அவ்ளோ பாசமாம்..

‘பெரியவர்’ வந்தமர்ந்த வினாடிகளில் அவருக்கு போன் வந்தது. ஈரோட்டிலிருந்து வால்பையன் அழைத்தார்.. போன் என் கைக்கு வர வால்பையனுடன் நான் போனில் பேசினேன். “நேரில் நிச்சயம் சந்திக்க வேண்டும்..” என்று சொன்னேன்.. என்னைத் தொடர்ந்து அதியமானும் பேசினார்.

சுண்டல், கடலை விற்ற பையன்களுடன் முன்பே ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்றை செய்திருந்தோம். கால்மணி நேரம் கழித்து வாங்கிக் கொள்கிறோம் என்று.. ஆனால் திடீரென்று எனக்கு பசிப்பதைப் போல் தோண.. பின்னால் வந்து நின்ற ஒரு பையனிடம் கடலை கேட்டேன். அவ்வளவுதான்.. முன்பு ஒப்பந்தம் செய்த பையன்கள் சண்டைக்கு வந்து மல்லுக்கட்டி நின்றார்கள்.

வலையுலக மக்கள் பேசுவதே கேட்காத நிலையில் இப்போது இவர்களும் ஆளாளுக்கு பேச பாலா எரிச்சலாகிவிட்டார். தம்பி வினையூக்கி ஒரு வழியாக சமாளித்து, “ஒவ்வொருவரும் 4 பொட்டலங்களைக் கொடுத்துவிட்டுப் போங்க..” என்று சமரசம் செய்யப்பட்டு கடலை விநியோகம் நடந்தது. பில்லில் கொஞ்சம் நானும், பாதியை பெரியவரும் சேர்ந்து கொடுத்தோம்.

பெரியவர் என்னிடம், “என்ன எழுதியிருந்தீங்க முந்தின பதிவுல? ‘தளபதி’ பட டயலாக் எதையோ என்கிட்ட கேட்பேன்னு சொல்லியிருந்தீங்களே.. என்ன? எனக்குப் புரியல..” என்றார்.. என்னத்தை சொல்ல.. பதிலே சொல்லாமல் சிரித்து மழுப்பிவிட்டு எஸ்கேப்பானேன்.. அதன் பிறகு இறுதிவரையில் அவர் கண்ணில்படவேயில்லை.

‘அறிவுத்திலகம்’ வழக்கம்போல ‘மப்பு மாப்ளை’யுடன் ஜோடியாக வந்தார். பார்க்க கொஞ்சம் இளைத்திருந்தார். இந்த வாரம் முழுக்க மண்டையடியான மேட்டர்களை எழுதியிருந்ததால் கொஞ்சம் களைத்துப் போயிருந்தார். டீ ஷர்ட்டில், இன் செய்து புது மாப்பிள்ளை தோற்றம் வந்திருந்தது.

குசும்பன் இப்போதும் ஒவ்வொருவரிடமும் பக்கத்தில் சென்று பவ்யமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். என்ன அடக்கம்? என்ன பணிவு?

'அறிவுத்திலகம்', பாலாவிடம் “மொதல்ல எல்லாரும் அறிமுகப்படுத்திக்கலாமே..” என்றார். பாலா முதல் நபராக ஆரம்பித்து வைத்தார். “பாலா..” என்றதுமே “பின்னூட்ட பாலாவா..?” என்று யாரோ கேட்டுத் தொலைக்க.. கண்ணு ரெண்டும் வெளில வர்ற மாதிரி முறைச்சுப் பார்த்தார்.

அறிமுகப் படலம் முடிந்ததும் அவரவர் தோதான கூட்டணியில் இணைந்து கொண்டு பேசத் துவங்கினார்கள். நான் முன்பே சொன்ன பின்னவீனத்துவ குழு, அவ்வப்போது எழுந்து போய் தனியே பேசத் தொடங்கியது.. கூட்டணியை பார்த்துதான் எனக்கு திகைப்பாக இருந்தது..

பைத்தியக்காரன், 'அறிவுத்திலகம்', ஜ்யாவ்ராம் சுந்தர், ஆடுமாடு, ‘மப்பு மாப்ளை’ என்று எப்போதெல்லாம் வெண்குழல் பத்த வைக்க தோன்றியதோ.. அப்போதெல்லாம் தனியாக போய் பேசிக் கொண்டேயிருந்தார்கள்.

‘முனிவர்’, ‘பெரியவரின்’ அருகில் சென்று பேச்சைத் துவக்கினார். அது சுவாரஸ்யமானதாக இருந்தது என்று நினைக்கிறேன். ஏனெனில், ‘முனிவர்’ அந்த சீட்டிலிருந்து அடுத்த அரை மணி நேரத்திற்கு எழவில்லை.

நண்பர் ஆழியூரான் ஏதோ சினிமா தியேட்டருக்கு வருவதைப் போல் மூச்சு வாங்கி வந்து நின்றார். என்னவென்று தெரியவில்லை.

‘ஆதிஷா நான்தான்’ என்று கையை நீட்டி பிரசன்னமானார் பதிவர் ஆதிஷா. பார்க்க சின்னப் பையனாகத் தெரிந்தார். ஆனால் பின்பு விசாரித்து பார்த்ததில் ‘பெரியவரின்’ அறிமுகமாகம் இவர்.. கேட்டவுடனேயே ஒரு ஸ்டெப் பின்னால் போய் நின்றேன்.. புரிந்து கொண்டு சிரித்தார். இது போதும் அவருக்கு.. இவர் பிழைத்துக் கொள்வார். நெஞ்சுக்கு நிம்மதி.

பதிவர் முரளிகண்ணன் நிறைய பேசினார். எனது பதிவுகளை தவறாமல் படித்து வருவதாகச் சொன்னார். அப்படி படித்தும் என்னுடன் பேச வந்த தைரியத்தை என்னவென்று சொல்வது..? சுஜாதா பதிவையும், அஞ்சாதே பதிவையும் பற்றியும் பேசினோம். தான் நிறைய எழுதுவதில்லை என்றார்.

தனக்கு “வீட்டுக்கு வீடு லூட்டி’ சீரியல் ரொம்பப் பிடித்தது..” என்றார். “நீங்க எழுதினதுன்னு படிச்ச பின்னாடி ரொம்ப ஆச்சரியமாப் போச்சு..” என்றார். அது பற்றி நிறைய பேசினோம். இதுக்கு மேல அதைப் பத்தி எழுதினா தற்புகழ்ச்சியாயிரும். அதுனால விட்ருவோம்.

குசும்பன் திருமணப் பத்திரிகைகளை வழங்கினார். தெரியாதவர்கள் பெயர்களைக் கேட்டு எழுதிக் கொடுத்தார். நான்கூட சொல்லிப் பார்த்தேன். “எதுக்கு தலைவா வேஸ்ட்டு பண்றீங்க? அதான் வாய்ல சொல்லிட்டீங்களே.. போதுமே” என்று.. அவருக்கு மனசு கேட்கவில்லை போலும்..

பாலா குசும்பனை அழைத்து நடுநாயகமாக நிற்க வைத்து செல்லமுத்து குப்புசாமி மூலமாக புத்தகங்களை பரிசாக வழங்கினார். நானும் ஒரு பரிசை குசும்பனிடம் கொடுத்தேன். எதிர்பாராத சந்தோஷத்தில் பெற்றுக் கொண்டார்.

குசும்பனிடம், “இப்பவே போன் பில் எவ்ளோ ஆச்சு?” என்றேன் சுற்றிவளைத்து.. புரிந்து கொண்ட குசும்பன், “அதுல செலவழித்த காசுக்கு பெசன்ட் நகர்ல வீடே வாங்கிருக்கலாம். அவ்ளோ ஆச்சு” என்று அழுகாமல் சொன்னார் குசும்பன். மணமகளும் அவருடைய உறவினர்தானாம்.. “சின்ன வயதிலிருந்தே தெரியும் ஸார்..” என்றார். வாழ்வாங்கு வாழட்டும் என்று வாழ்த்துகிறேன்..

யாரோ ஒருவர் தாவிக் குதித்து, லாங் ஜம்ப்பெல்லாம் செய்து எங்களை நோக்கி வந்து கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் அவராகத்தான் இருக்க முடியும் என்று நினைத்தேன். அவரேதான்.. “இவர்தான் அபி அப்பா” என்று குசும்பன் அறிமுகப்படுத்தினார்.

அபி அப்பா கலகலப்பாகவே ஆரம்பித்தார் தனது பேச்சை.. மாயவரத்திலிருந்து நேரடியாக வந்ததாக காந்தி தாத்தாவிடம் மட்டும்தான் அவர் சொல்லவில்லை. மற்றபடி எல்லாரிடமும் இந்தக் கதையைச் சொல்லிவிட்டுத்தான் தன் பெயரையே சொன்னார்.

பாலா, அபி அப்பாவை பார்த்ததும் கட்டியணைத்துக் கொண்டு முத்தமழை பொழிந்தார்.

பாலா, ‘பெரியவரின்’ முன்பாக ‘பரதநாட்டியம்’, ‘குச்சுப்புடி’, ‘கதகளி’ என்று பலவித டான்ஸ்கள் செய்து கொண்டிருந்தார். என்னவென்று கூர்ந்து கவனித்தபோது பேசிக் கொண்டிருந்தார்களாம்.. இப்படியா..? பாலா மிகுந்த சந்தோஷமா இருந்த தருணம் அது..

பெரியவரும் நாகராஜும் ரொம்பவே ஆர்வமாக பேசிக் கொண்டிருந்தார்கள். நிச்சயம் அது NHM பற்றித்தான் இருக்கும் என்று நினைத்தேன். அதேதான் என்று அவரே எழுதியிருக்கிறார்.

பின்னவீனத்துவ கூட்டணிகள் விரிந்து கொண்டும், சுருங்கிக் கொண்டும் இருக்க.. எல்லா இடத்திலும் அதியமானின் வெண்கலக் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.

இடையிடையே ஒட்டுக் கேட்ட போது, ‘உக்ரைன்’, ‘ரஷ்யா’, ‘ஸ்டாலின்’, ‘ஜார் மன்னன்’ என்றெல்லாம் கெட்ட வார்த்தைகள் காதில் விழுக.. இது நமக்கான இடமில்லை என்று சொல்லி சற்று தள்ளியே நின்றிருந்தேன்.

அதியமான் சிங்கிள்மேனாக ஆடிக் கொண்டிருந்த இடத்திலெல்லாம் ‘பெரியவர்’ முன்னே வந்து அவருக்கு கை கொடுத்துக் கொண்டிருந்தார். இதுகூட செய்யலைன்னா எப்படி?

அதுலேயும் ‘உக்ரைன்’ பேச்சைவிட ‘உலகமயமாக்கல்’ பேச்சுதான் டாப்.. அதியமான் விக்கிபீடியாவை கரைத்துக் குடித்திருப்பார் போலும்..
எல்லாவற்றுக்கும் ஒரு உதாரணத்தைச் சொல்லி அடுத்த கருத்தைச் சொல்ல முடியாதபடிக்கு பேசுகிறார்.

ஆசிரமத்தில் 108 பிள்ளைகள் காத்திருப்பதாலும்.. அவர்களுக்குச் சமைத்துப் போட்டுவிட்டு தானும் சாப்பிட வேண்டும் என்கின்ற ஆத்திர, அவசரம் இருந்த காரணத்தாலும் வசிஷ்ட மாமுனிவர் பாதியிலேயே விடைபெற்றார். உடன் அழைத்து வந்த காரணத்தால், தம்பி வினையூக்கியும் அவருடனேயே சென்றுவிட்டான்.

தொடர்ந்து அடுத்த ஆளாக, கல்யாணம் முடிந்து மறுவீடு செல்லும் மாப்பிள்ளை, தன் வீட்டில் ‘சந்தோஷமாக’ விடைபெறுவதைப் போல் நண்பர் பைத்தியக்காரன் ஒவ்வொருவரின் தோளைத் தட்டித் திருப்பி “நான் போயிட்டு வரேன்..” என்று சொல்லிவிட்டுப் போனார்.

அபிஅப்பாவிற்கு நான் ஒரு நினைவுப் பரிசை பண்போடு வழங்கினேன். அன்போடு பெற்றுக் கொண்டார். அபி அப்பாவை கொஞ்சம் தனியே தள்ளிக் கொண்டு போய் பேசினேன்.

“உங்களுடைய கும்மி டீம் என்ற குரூப் இருப்பதால்தான் வலையுலகத்தில் எங்களை மாதிரி ஆளுங்களுக்கு கொஞ்சம் ரிலாக்சேஷனும், ஆர்வமும் இருக்கிறது..” என்றேன்.

தனது வலையுலக தம்பிகளையும், தங்கைகளையும் பற்றி அபிஅப்பா சொன்னபோது அவருக்குத் தொண்டை அடைத்து, கண்களில் கண்ணீர் கட்டிக் கொண்டது.

கிட்டத்தட்ட ‘பாசமலர் சிவாஜி’யாகவே மாறிப் போயிருந்தார் அபிஅப்பா. “மை பிரெண்ட், கண்மணி, இம்சை அரசி, பாசமலர் என்று எல்லாருமே எனக்குக் கூடப் பொறக்காத தங்கச்சிக ஸார்.. நேர்ல பாக்குறதுக்கு முன்னாடியே நாங்க அண்ணன்-தங்கச்சியா பழகத் துவங்கி, இன்னிக்கு பெவிகால் ஒட்டாத பாசப் பிணைப்புல இருக்கோம்” என்று சொல்லிவிட்டு தன் கண்களைத் துடைத்துக் கொண்டார். நானும்தான்..

கூடவே ஒரு விஷயத்தை சொன்னார். “உங்களை தம்பி சென்ஷி ரொம்பவே விசாரிச்சதா தனிப்பட்ட முறைல சொல்லச் சொன்னான் ஸார்..” என்றார். நான் எதிர்பார்க்கவே இல்லை. “உங்களைப் பத்தி எங்ககிட்ட நிறைய தடவை சொல்லிருக்கான் ஸார்..” என்றார் மேற்கொண்டு.

எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. சென்ஷியை என்னால் மறக்க முடியுமா?

நான் முதன்முதலில் வலைப்பதிவில் எழுதத் துவங்கியபோது எனக்காக தனிப்பதிவு போட்டு அறிமுகப்படுத்தியவன் தம்பி சென்ஷிதான்.

அபிஅப்பா இதைச் சொன்னதும், நெகிழ்ந்து போனேன் நான்.. “நானும் ரொம்ப விசாரிச்சேன்னு சொல்லுங்க ஸார்..” என்றேன்.. தம்பி சென்ஷி.. அப்படியே கை தூக்கி வணங்குகிறேன்.. “நீ எங்க இருந்தாலும் நல்லாயிருப்படா ராசா..!”

அபிஅப்பாவின் பேச்சு அப்படியே துபாய் வாழ்க்கையைப் பற்றிப் போக.. துபாயை பற்றி நிறைய பேசினார். “அங்கே வெளிநாட்டுக்காரர்கள் நிலம் வாங்க முடியாதாமே..?” என்று நான் கேட்டதற்கு.. “முன்பு அப்படியிருந்தது இப்போது அப்படியில்லை. விதிமுறைகளைத் தளர்த்தி 99 வருஷத்துக்கு குத்தகை மாதிரி எடுத்துக்கலாம்னு சொல்லிருக்காங்க.. அப்படித்தான் நிறைய பேர் வீடு வாங்கியிருக்காங்க..” என்றார்.

மேலும், “அமிதாப்பச்சன், ஷாரூக்கான் என்ற பலரையும் பிராண்ட் பெயராக பயன்படுத்தித்தான் அங்கேயும் ரியல் எஸ்டேட் தொழில் நடக்கிறது..” என்றார் அபி அப்பா.

இடையிடையே அவருடைய வீட்டுக்காரம்மா, “எங்க இருக்கீங்க? எப்ப வருவீங்க..?” என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். “என்ன விஷயம்..?” என்று கேட்டபோது, “காலைல மெட்ராஸ்க்கு போய்ட்டு மதியம் பதிவர் மீட்டிங்க்ல பேசிட்டு, சாயந்தரம் மாயவரத்துல இருப்பேன்..” என்று தனது திருமதியாரிடம் வாக்களித்துவிட்டு வந்ததாக சொல்லி கலகலப்பூட்டினார்.

பார்க்கும் நபர்களிடமெல்லாம் ‘நான் இன்னிக்கு, இந்த நேரத்துல உங்க வீட்லதான் இருப்பேன்’ என்று அரசியல்வாதி போல் வாக்குறுதிகளை அள்ளி வீசியிருந்தாராம் அபி அப்பா. அதுதான் அனைவரும் போன் மேல் போன் போட்டுவிட.. எங்களைவிட போனில்தான் நிறைய நேரம் பேசினார் அபிஅப்பா.

நான்கூட ‘தீபா வெங்கட்’ சுலோச்சனா ஹவுஸில் ஷ¥ட்டிங்கில் இருப்பதை சொல்லலாம் என்றிருந்தேன். ஆனால் ‘அழைத்துப் போங்க’ என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் விட்டுவிட்டேன்.

“என்ன செய்றது? கல்யாணம்னு ஒண்ணு ஆனா இப்படித்தான்..” என்று சொல்லி “இதையே குசும்பனிடம் இப்போதே சொல்லி தைரியப்படுத்தி விடுங்கள்..” என்றேன்.

குசும்பன் அந்தப் பக்கமாக வர.. அவர்கள் இருவருக்கும் இடையில் செவ்வாய்கிழமை புரோகிராம் பற்றி முட்டிக் கொண்டது. தீர்த்து வைக்க கழகத்தின் கண்மணிகள் யாரும் உடன் இல்லாததால் அது நீடித்துக் கொண்டே சென்றது.

குசும்பன் போனஸ் நியூஸாக தன்னுடைய திருமணத்தன்றுதான் அய்யனாருக்கும் திருமணம் என்றார்.

திடீரென்று பாலா, “இவ்ளோ பேர் வேலை மெனக்கெட்டு உங்களை பார்க்க கூடியிருக்கோம்ல.. வந்து ரெண்டு பேரும் ஒரு குத்தாட்டம் போட்டுட்டு போங்க..” என்று அபிஅப்பாவையும், குசும்பனையும் அழைத்தார்.

பெல்லி டான்ஸ் மட்டுமே தெரியும் என்பதால் குசும்பன் பீச்சை நினைத்து பயந்துதான் போனார். “இங்க எப்படிய்யா..? இம்புட்டு பேர் சுத்தி நிக்குறாங்க..” என்று பதறிவிட்டார்.

அபி அப்பாவோ, தீபா வெங்கட் டான்ஸ் ஆடி அவர் பார்க்காத காரணத்தாலோ என்னவோ, அவரும் நடனமாடக் கற்றுக் கொள்ளாமல் இருப்பதால், “ஐய்ய.. வேணாமே.. வேணும்னா பத்து பக்க டயலாக் பேசி கிளிசரின் போடாமலேயே அழுதுட்டுப் போறேன் என் ‘செல்லம்’ மாதிரி..” என்று சொல்லித் தப்பித்துக் கொண்டார்.

திடீரென்று ‘மப்பு மாப்ளை’ அப்போதுதான் என்னை அடையாளம் தெரிந்ததைப் போல் கையைப் பிடித்திழுத்து அமர வைத்துப் பேசினார். அவருடைய ‘பின்புல ஜாதகத்தை’ பற்றி அவரே எடுத்துச் சொன்ன பின்புதான், எப்பேர்ப்பட்ட ஆளுகிட்ட கூட உக்காந்து பேசிக்கிட்டிருக்கேன்னு எனக்குத் தெரிஞ்சது.. இனிமே, இன்னும் கொஞ்சம் சுதாரிப்பா இருந்துக்கணும்..

‘லக்கிலுக்’கும், ‘மப்பு மாப்ளை’யும் ‘பிரெஞ்சு வீராங்கனை’ பற்றி அட்டகாசமாக ‘கதை’ பேசினார்கள். அவர்கள் பேசியதையெல்லாம் வெளியில் சொன்னால் எனக்கு இன்னொரு பட்டப் பெயர் உறுதி என்பதால் சென்ஸார் செய்து விடுகிறேன்.

தமிழ்மணத்தின் தற்போதைய போக்கு பற்றியும், “திட்டறதுதான் திட்டுறீங்க.. என்ன திட்டுறீங்கன்னு புரியற மாதிரி திட்டுன்னா என்ன ஸார் தப்புன்னு நான் கேட்டது தப்பா போயிருச்சு அவுங்களுக்கு.. நீங்களே சொல்லுங்க.. நான் கேட்டது தப்பா?” என்று லக்கி கேட்டபோது சிரிக்காமல் இருக்க முடியவில்லை. (கேட்டவிதம்தான் தவறு என்பது எனது கருத்து)

பதிவர் ஜேகே மற்றும் பாரியுடன் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேச முடிந்தது.

வாத்தியார் சுஜாதா பற்றி நெகிழ்ச்சியுடன் அனைத்து பதிவர்களும் என்னிடம் பேசியது எனக்கு சற்று பெருமையாகவும், ஆறுதலாகவும் இருந்தது.

பார்க்கின்ற அனைவருமே, “உங்கள் பதிவு எல்லாமே நீளமா இருக்கு ஸார்.. எப்படி டைப் பண்றீங்க..?” என்றே கேள்வி கேட்டு சலிப்படைய வைத்துவிட்டார்கள்.

எல்லாருக்கும் நான் சொன்ன ஒரே பதில், “அனைவருக்கும் எலிக்குட்டியை உருட்டுவதற்கு அவ்வளவு சோம்பேறித்தனம்..” என்று.

இடையிடையே அபி அப்பா தனது திருமதியிடமிருந்து வந்த போனுக்கெல்லாம் “சைதாப்பேட்டை தாண்டிட்டேன்.. கிண்டி வந்துட்டேன்..” என்றெல்லாம் டகுல் கொடுத்துக் கொண்டிருந்தார்.

இந்த லட்சணத்தில் டெல்பின் டாக்டரம்மாவை பார்க்க அவர் வீட்டுக்குப் போகும் வழி கேட்டுக் கொண்டிருந்த கொடுமையும் நடந்தது.

‘பாலவாக்கம் போயி திரும்பி வந்து, மாயவரம் போறதுக்கு நாளைக்கு மதியானம் ஆகிடும்’ என்று நாங்கள் எச்சரிக்கை செய்த பிறகே, அத்திட்டத்தைக் கைவிட்டார் அபிஅப்பா.

இந்த கடைசி நேரத்தில் தாக சாந்திக்கு ஏற்பாடு செய்யும் ஸ்பான்ஸராக வந்து சேர்ந்தார் ஓகையார். அனைத்து பதிவர் சந்திப்பிலும் இதுக்கு மட்டும் ஸ்பான்ஸர் இவர்தானாம். சந்தித்தோம்.. கை கொடுத்தோம்.. பேசினோம்.. அபிஅப்பாவையும், குசும்பனையும் அவரிடத்தில் அறிமுகப்படுத்தி வைத்தேன்.

குழு, குழுவாக பேசிக் கொண்டிருந்தவர்களை பாலா “நேரமாச்சு..” என்று கிளப்பி விட்டுக் கொண்டிருந்தார். ஒரு குரூப் டீக்கடை நோக்கிச் செல்ல.. இன்னொரு குரூப் ‘தாக சாந்தி’க்காக டாஸ்மாக் கடை நோக்கிச் சென்றது.

அபிஅப்பாவிற்கு கிண்டி செல்லும் பேருந்தை கை காட்டி பத்திரமாக அனுப்பி வைத்தோம். “சென்று வருகிறேன்.. திரும்பியும் வருவேன்..” என்றெல்லாம் பிரியாவிடை பெற்றுச் சென்றார் அபிஅப்பா.

குசும்பன் ஸார், யாருடன் சென்றார் என்பது மட்டும் எனக்குத் தெரியவில்லை. கடைசி நேரத்தில் அனைவரும் ஆளுக்கொரு பக்கமாக கிளம்பியதால் சற்றுக் குழப்பமாகிவிட்டது.

சில மாதங்கள் கழித்து கடற்கரைக்கு வந்திருப்பதால் அப்படியே உள்ளே சென்று கடலில் கால் நனைத்துவிட்டு போகலாமே என்று எண்ணினேன். நண்பர் நித்யகுமாரனும் “வருகிறேன்..” என்று சொன்னதால் கடலுக்குச் சென்று, கால் நனைத்து, இதமான காற்றை சிறிது நேரம் அனுபவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

நண்பர் நித்யகுமாரனை கிண்டியில் இறக்கிவிட்டுவிட்டு, வீடு வந்து சேர்வதற்குள் ‘பெரியவரிடமிருந்து’ போன் வந்தது. “அபிஅப்பா உங்க போன் நம்பர் கேட்டார். கொடுத்திருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்துல பேசுவார்..” என்றார். “தேங்க்ஸ் ஸார்..” என்றேன்.

சொன்னது போலவே நான் வீட்டுக் கதவைத் திறக்கும்போது அபிஅப்பா போனில் வந்தார். பஸ்ஸில் தான் மாயவரம் சென்று கொண்டிருப்பதாகச் சொன்னார்.. உடனேயே இடம் கிடைத்துவிட்டதால் ரொம்ப சந்தோஷம் என்றார்.

பின்பு சொந்த விஷயங்கள் சிலவற்றை பேசினோம். “நீங்க துபாய்க்குகூட வந்திருங்க..” என்று அழைப்பு விடுத்தார். சென்னையில் இருக்கும் எனது உறவினர்களே இன்னும் என்னை வீட்டுக்கு அழைக்க யோசிப்பதை நினைத்துப் பார்த்த இந்த இடத்தில் கொஞ்சம் எமோஷனல் ஆனேன். இதையெல்லாம் அனுபவித்துப் பார்த்தால்தான் புரியும்.

“அழைப்புக்கு நன்றி.. பத்திரமா ஊருக்குப் போயிட்டு வாங்க ஸார்..” என்று வாழ்த்திவிட்டு போனை வைத்தேன்.

அன்றைய தினத்தில் மேற்கொண்டும் பல பதிவர்களிடம் பேசினேன்.. என்ன பேசினேன் என்பது இவ்வளவு முயன்றும் நினைவுக்கு வராத காரணத்தால் அவர்களைப் பற்றி குறிப்பிட முடியவில்லை.

அனைவரும் மன்னிக்கவும்.

இது போன்ற வலைப்பதிவர் சந்திப்புகள் மாதந்தோறும் நடைபெற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அப்போதுதான் வலைப்பதிவர்களுக்கிடையில் இருக்கும் இறுக்கங்கள் தளர்ந்து, கட்டுப்பாடுகள் உடைந்து ஒரு பொதுவான அமைப்பாக நாம் உருவாக முடியும் என்று நினைக்கிறேன்.

முடிவாக இரண்டு விஷயங்கள் :

1. நண்பர் வவ்வால் இக்கூட்டத்திற்கு வருவார் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன். பாலாவிடம்கூட கேட்டேன். வருவார் என்று தானும் எதிர்பார்ப்பதாகச் சொன்னார். ஆனால் வவ்வால் வரவில்லை. ‘ஊரில் இல்லை’ என்று வினையூக்கியின் பதிவில் சொல்லியிருக்கிறார்.

இருந்தாலும், நான் அவருக்குச் சொல்லியிருந்ததைப் போல இனி அவரிடமிருந்து வரும் எந்தப் பின்னூட்டங்களையும் நான் வெளியிடப் போவதில்லை. அதே போல் நானும் அவருடைய பதிவிற்கு எந்தப் பின்னூட்டமும் போடப் போவதில்லை. பகிஷ்கரிப்புதான்.

2. இனிமேல் வலையுலகில் யாராவது ‘தெய்வ மச்சான்’, ‘திருவோடு மச்சான்’, ‘திருட்டு மச்சான்’ என்று எழுதி சண்டை போட்டுக் கொண்டால், உடனேயே ஓடோடி சென்று ‘கண்ணீரைத் துடைக்கிறேன்’ என்று சொல்லி உங்களது கருத்துக்களை சொல்லி உங்களது நேரத்தை வீணாக்கிக் கொள்ளாதீர்கள்.

அந்தப் பட்டத்தை சமீபத்தில் வாங்கியவரும், பட்டத்தைக் கொடுத்தவரும்தான் அன்றையக் கூட்டத்தில் கட்டிப் பிடித்துக் கொள்ளாத குறையாக கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தனர். கடைசியாக டாஸ்மாக் கடைக்குக்கூட இருவரும் ஜோடி போட்டுச் சென்றதை என் கண்ணால் பார்த்தேன்.

சண்டையெல்லாம் ச்சும்மாங்க.. புரிஞ்சுக்குங்க..

அப்ப அடுத்த மீட்டிங்ல சந்திப்போமா..?

அதுவரைக்கும் விடைபெறுகிறேன்.

கடைசிவரையிலும் சோம்பேறித்தனப்படாமல் எலிக்குட்டியை உருட்டியவர்களுக்கு எனது பணிவான நன்றி கலந்த வணக்கங்கள்.