அன்பாவன் அடங்காதவன் அசராதவன் - சினிமா விமர்சனம்

28-06-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘தென்மேற்குப் பருவக் காற்று’, ‘ஈட்டி’, ‘மிருதன்’ போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த குளோபல் இன்போடெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் சிம்பு ஹீரோவாக நடித்துள்ளார். இவருடன் ஸ்ரேயா, தமன்னா, ஒய்.ஜி.மகேந்திரன், வி.டி.வி.கணேஷ், அர்ஜூன், விஜயகுமார், கோவை சரளா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – கிருஷ்ணன் வசந்த், இசை – யுவன் சங்கர் ராஜா, படத் தொகுப்பு – ரூபன், கலை இயக்கம் – பால்ராஜ், உமேஷ் ஜெ.குமார், சண்டை பயிற்சி –  ராஜசேகர், உடை வடிவமைப்பு – என்.ஜெ.சத்யா, நடன இயக்கம் – ராபர்ட், சதீஷ், ஒப்பனை – குப்புசாமி, உடைகள் – கணேஷ், தயாரிப்பு – செராபின் ராய சேவியர், எழுத்து, இயக்கம் – ஆதிக் ரவிச்சந்திரன்.

படம் எடுக்கும் தயாரிப்பாளரை மட்டுமல்லாது படம் பார்க்க வரும் ரசிகர்களையும் டார்ச்சர் செய்யும் பழக்கமுள்ள சின்னத் தம்பி சிம்புவின் அக்மார்க் படம் இது. கூடவே த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற காம காவியத்தைக் கண்டெடுத்த தமிழ்த் திரையுலகச் சிற்பி இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்திருக்கிறார் என்றால் கேட்கவா வேண்டும்..? நல்லா வைச்சு செஞ்சிருக்காங்க..!
மதுரை பகுதியில் அடியாள் தொழில் செய்து வரும் மதுரை மைக்கேலுக்கு ஒய்.ஜி.மகேந்திரனின் மகளான ஸ்ரேயாவின் மீது ஒரு கண். அந்தப் பாப்பாவுக்கும் மைக்கேல் மீது ஒரு இதுவாக காதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
சந்தர்ப்ப சூழலால் பதிவாளர் அலுவலகத்தில் அவர் முன்னிலையில் இருவரும் மாலை மாற்றி அரசுப் பூர்வமாக திருமணமும் செய்து கொள்கிறார்கள்.
இதே ஊரில் இருந்தால் இதேபோல் அடிதடி, வெட்டுக் குத்து, கொலை என்றாகி வாழ்க்கையே கெட்டுவிடும். எல்லாத்தையும்விட்டுவிட்டு என்னுடன் வா. எங்காவது போய் நல்லபடியா வாழலாம் என்று அழைக்கிறார் ஸ்ரேயா. துபாய்க்கு போக முடிவெடுக்கிறார்கள்.
அதற்குள்ளாக பழைய பாஸ் ஒரேயொரு சம்பவத்தை மட்டும் செஞ்சுட்டு போயிருப்பா என்று கெஞ்ச.. சரி.. என்று அந்தச் சம்பவத்தைச் செய்யப் போகிறார். அந்தச் சம்பவத்தில் தெரியாத்தனமாக மாமனார் ஒய்.ஜி.மகேந்திரனே சிக்கிக் கொள்கிறார். அவரை மருத்துவமனையில் சேர்த்த பொழுதில் போலீஸும் வந்து மைக்கேலை கைது செய்ய வெற்றிகரமாக சிறை புகுகிறார் மைக்கேல்.
ஒரு நல்ல நாளில் சிறையில் இருந்து தப்பித்து ஊருக்கு வர அங்கே ஸ்ரேயாவுக்குக் கல்யாணம். இனிமேல் குறுக்கே புகுந்து கெடுக்காமல் ஒதுங்குவோம் என்று சொல்லி துபாய்க்கு பறந்தோடுகிறார் மைக்கேல்.
துபாயில் அஸ்வின் தாத்தா என்கிற பெயரில் மிகப் பெரிய இண்டர்நேஷனல் தாதாவாக உருமாறியிருக்கிறார். இப்போது அவரை இண்டர்போல் போலீஸே வலைவீசி தேடி வருகிறார். அப்பேர்ப்பட்ட அப்பாடக்கர் தாதா மறுபடியும் இந்த வயதில் தாயகம் திரும்பி அஸ்வின் தாத்தாவாகவே வாழ்கிறார்.
இப்போதும் இவருக்கு திடீரென்று ஒரு காதல் வருகிறது. கோவை சரளாவுக்கு துணைய்ய் வரும் தமன்னாவை பார்த்தவுடன் லவ்வாகிறார் அஸ்வின் தாத்தா. ஆனால் தமன்னாவுக்கு தாத்தா மீது காதல் இல்லாமல் போக.. தாத்தா இந்தக் காதல் நிறைவேற துடிக்கிறார். அவருடைய ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதுதான் கதையாம்..!
சிம்புவின் முந்தைய படங்களிலெல்லாம் அவர் என்னென்ன பேசினாரோ அதையெல்லாம் இந்தப் படத்திலும் ரிப்பீட் செய்திருக்கிறார். காதலைப் பற்றி அவர் பேசியிருக்கும் அத்தனை வெண்ணை பேச்சுக்களையும் தொகுத்து புத்தகமாக போட்டால்கூட ஒரு நாயும் சீண்டாது. அப்படியொரு சுய புராணம்.
இவர் காதலித்தார்.. கல்யாணம் செய்ய முடியவில்லை. இதையே இன்னும் எத்தனை நாளைக்கு.. எத்தனை படங்களில்தான் சொல்லி நம்ம தாலியை அறுப்பாரோ தெரியவில்லை..
“காதலியைக்கூட விட்டுக் கொடுப்பேன். ஆனால் நண்பனை விட்டுத் தரவே மாட்டேன்…” என்கிறார் ஒரு காட்சியில். தனுஷ் பாவம்.. இதையெல்லாம் கேட்டு என்ன காண்டாகப் போகிறாரோ..?!
“நான் மோசமானவன்தான். ஆனால் கெட்டவனில்லை” என்கிறார் இன்னொரு காட்சியில். இந்த ‘மோசமானவன்’, ‘கெட்டவன்’ – இது இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை. சிம்புவிடம்தான் கேட்க வேண்டும்.
காதலிகள் காதலர்களை கழட்டிவிடுவதுதான் இப்போதைய தமிழ்நாட்டின் மிகப் பெரிய பிரச்சினை என்பது போல திரைக்கதை அமைத்து ஜவ்வாய் இழுத்திருக்கிறார்கள். அதிலும் வண்டி, வண்டியாக சிம்பு பேசும் காதலிகளை திட்டும் வசனங்களையெல்லாம் கேட்கும்போது பதிலுக்கு நமக்கும் சிம்புவை வண்டை, வண்டையாய் திட்டத்தான் தோன்றுகிறது..!
படத்தில் எங்கெங்கு பார்த்தாலும் டபுள் மீனிங் டயலாக்குகள்.. அதிலும் பட்டவர்த்தனமாய் ஒலிப்பதுதான் கொடூரம். சிம்பு மட்டுமில்லை.. படத்தில் இடம் பெற்ற அனைவருமே இதைப் பேசியிருப்பதுதான் மகா கொடூரம்.
மாமனாராக நடித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு இது தேவைதானா..? அவர் ஏன் இப்படிப்பட்ட கேரக்டரில் நடித்தார் என்று தெரியவில்லை. அக்கிரமம், ஆபாசம்.. ஒய்.ஜி.மகேந்திரன் எந்த சுவிட்ச்சை போட்டாலும் அவருக்கு ஷாக் அடிக்குமாம். உடனேயே யாராவது அவருடைய வாயில் வாய் வைத்து காற்றை ஊதி காப்பாற்றுவார்களாம்..!
அவருடைய மனைவிக்கு ‘இதை செய்து’ அலுத்துவிட்டதாம். அடுத்து ஊரில் பலரும் இதனைச் செய்திருக்கிறார். சிம்புவும் இதனை மூன்று இடங்களில் செய்து தனது ஹீரோத்தனத்தைக் காட்டுகிறார். நல்லா எழுதியிருக்காங்கப்பா திரைக்கதையை.. ஒய்.ஜி.மகேந்திரனின் நடிப்பு கேரியரில் ‘புகழ்’ பெற்ற படமாகிவிட்டது இந்தப் படம். நல்லாயிருக்கட்டும் அவர்.
இதேபோல் ரேஷன் கடை வாசலில் கியூவில் நிற்கும்போது காதலர் கொட்டாவி விடுவாராம். அதைப் பார்த்து காதலியும் கொட்டாவிவிட்டால் காதல் இருக்கும் என்று அர்த்தமாம். இதற்காக எடுக்கப்பட்டிருக்கும் காட்சியைப் பார்க்கும்போது இயக்குநரை விரட்டி விரட்டி அடிக்க வேண்டும் போலத்தான் தோன்றுகிறது.
விஜயகுமாரை வைத்து ஒரு காட்சி. அவருக்கு இளமையான மனைவி கிடைக்கிறார். இப்போவெல்லாம் இளைஞர்களை விரும்புவதைவிடவும் பெரிசுகளைத்தான் பெண்கள் விரும்புகிறார்கள் என்று ஒரு டயலாக்கு.. கோவை சரளா அஸ்வின் தாத்தாவை லவ்வுகிறார். கதைப்படி அவர் வயதானவர்தானே என்பதால் கண்டு கொள்ளக் கூடாதாம்..! ஆனாலும் அவரும் தனது மகள் வயதான தமன்னாவுடன் லவ்வுக்காக போட்டி போடுகிறார்..! கொடுமையான காட்சிகளப்பா..!
இந்த லட்சணத்தில் ‘இன்னிக்கு ராத்திரிக்கு மட்டும் லவ் பண்ணு’ன்னு ஒரு மாதிரியான பாடல் வேறு.. இசையமைத்த யுவனுக்கு அதிகமான வேலைகளே இல்லை. சிம்புவுக்கான தீம் மியூஸிக்கையே படம் முழுக்க நிரவிவிட்டிருக்கிறார்.  ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்துதான் பாவம். எப்படித்தான் இத்தனை காட்சிகளை கஷ்டப்பட்டு படமாக்கினாரோ..? ஸ்கிரீனில் பார்க்கும் நமக்கே இத்தனை கோபம் வருகிறதே..? நேரில் பார்த்திருக்கும் அவருக்கு..? உங்களது பொறுமைக்கு எங்களது பாராட்டுக்கள் ஸார்..!
படத்தின் முதல் காட்சியே ஒரு முழம் பூவை எடுத்து நம் தோளில் மீது ஏறி அமர்ந்து காதில் பூ சுற்றியது போலிருக்கிறது. மதுரை சிறையிலிருந்து மைக்கேல் தப்பிக்கும் காட்சியை அந்த அளவுக்கு நம்பகத் தன்மையுடன் காண்பித்திருக்கிறார் இயக்குநர்.
துவக்கத்தில் முன்னாள் நாயகி கஸ்தூரி தனது கவர்ச்சியான உடலைக் காட்டி ஒருவனை மயக்கி அழைத்து வந்து படுக்கையில் கட்டிப் போட்டுவிட்டு “என்னையவா கூப்பிடுற.. நான் தமிழச்சிடா…” என்று வீர ஆவேசம் பேசுகிறார். கேட்டால் இவர்தான் உச்ச போலீஸ் அதிகாரியாம்.
பாரில் அமர்ந்து இப்படி சைடாக லுக்விட்டு உதட்டைச் சுழித்து கூப்பிட்டால் எந்த நாட்டு ஆணாக இருந்தாலும் வரத்தான் போகிறான். “நான் சுத்த தமிழச்சின்னு சொல்லிப்புட்டு நீ ஏம்மா அங்க போய் உக்காந்து வாடா மாமான்னு கூப்பிட்ட..?”ன்னு கேக்கணும்..! ஆனால் யார்கிட்டன்னுதான் தெரியலை..!
மிகப் பெரிய டானான மைக்கேலை தேடு தேடு என்று தேடுகிறார் கஸ்தூரி. ஆனால் டான் எப்படி துபாயில் டான் ஆனார் என்பது பற்றி ஒரு சின்ன காட்சிகூட இல்லை. கஸ்தூரியின் லோ கட் ஸ்லீவ்லெஸ் பனியனை பார்த்த திருப்தி மட்டுமே..! இப்படியுமா துபாயில் போலீஸ்காரங்க இருக்காங்கோ..? இயக்குநர் ரொம்பத்தான் தின்க் பண்ணியிருக்காரு..! இப்படி எத்தனை, எத்தனை லாஜிக் ஓட்டைகள் என்றெல்லாம் கணக்குப் பார்க்கவே முடியாது. படம் முழுக்கவே ஓட்டைகள்தான்.
பின்னந்தலை முடியை சிலுப்பிவிட்டு “சிறப்பு” என்று சொல்லும் மேனரிசத்துடன் வலம் வருகிறார் மதுரை மைக்கேல் என்னும் சிம்பு. இது அக்மார்க் அப்படியே டி.ராஜேந்தர்தான். வேறெந்த நடிப்பும் இல்லை. ஏதோ மேம்போக்காக சைடில் நின்றபடி இணை இயக்குநர் வசனத்தை எடுத்துக் கொடுக்க அதனை அப்படியே ஒப்பித்துவிட்டு போயிருக்கிறார் சிம்பு.
அஸ்வின் தாத்தா இதற்கும் மேல.. தலை முடியையும், மீசை முடியையும் டை அடித்துவிட்டால் அவர் தாத்தாவாம். இவர் தமன்னா மீது காதல் கொள்ளும் கதையையும் ஏற்க முடியவில்லை. இள வயதில்தான் பிடிக்காமல் பிரிந்து போன காதலி மீது கோபம் வரும். ஆத்திரம் வரும்.. ஆனால் இந்த வயதிலும் அஸ்வின் தாத்தாவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வர.. அடுத்த பாகத்தில் தமன்னாவை என்ன கிழி, கிழிக்கப் போறேன் பாருங்க என்று சொல்லி முடித்திருக்கிறார்.
இதில் மூன்றாவது கேரக்டராக திக்கு சிவாவாகவும் அறிமுகமாகிறார் சிம்பு. இது அப்படியே அவரது தம்பி குறளரசன் தோற்றம். அவராவது உருப்படியாய் இருப்பாரா என்பதை அடுத்த பாகம் வரும்வரையிலும் நாம் உயிருடன் இருந்தால் பார்ப்போம்.
முதல் பாகமாவது ஒரு அளவுக்கு உட்கார வைத்து பார்க்க வைத்திருக்கிறார்கள். ஆனால் இரண்டாம் பாகத்தில் எப்படியாவது தப்பிச்சுப் போகணுமேன்னு நினைக்க வைத்திருக்கிறார்கள். இதில் இன்னொரு பாகமும் வரப் போகுதாம்.. தமிழ் சினிமா ரசிகனை காப்பாற்ற வழியே இல்லையா..?

வனமகன் - சினிமா விமர்சனம்

26-06-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

திங்க் பிக் ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.எல்.அழகப்பன் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாகவும், பழம்பெரும் பாலிவுட் நடிகரான திலீப்குமாரின் பேத்தியான சாயீஷா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். சாயீஷாவுக்கு இதுதான் தமிழில் முதல் படம்.
மேலும், பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, சண்முகராஜ், வருண், தலைவாசல் விஜய், வேல ராமமூர்த்தி,  ரம்யா, அர்ஜூன், சாம்பால் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ஸ்டில்ஸ் – ராமசுப்பு, கன்சல்டன்ட் புரொடியூஸர் – ஜி.தனஞ்செயன், ஒலிப்பதிவு – எம்.ஆர்.ராஜாகிருஷ்ணன், ஆடை வடிவமைப்பு – பிரியங்கா ஜாவேரி, ஷாஹின் அஹ்மத், ஒப்பனை – பட்டினம் ரஷீத், நடனம் – பிருந்தா, பிரசன்னா, காயத்ரி ரகுராம், பாடல்கள் – மதன் கார்க்கி, கலை இயக்கம் – ஜெய லட்சுமிநாராயணன், சண்டை பயிற்சி – ஸ்டண்ட் சில்வா, படத் தொகுப்பு – ஆண்டனி, இசை – ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவு – எஸ்.திருநாவுக்கரசு, எழுத்து, இயக்கம் – விஜய்.

ஹீரோயின் சாயீஷா மிகப் பெரிய கோடீஸ்வரப் பெண். பெற்றோரை இழந்து அப்பாவின் நண்பரான பிரகாஷ்ராஜின் பராமரிப்பில் இருப்பவர். தனது நண்பிகளுடன் அந்தமானுக்கு சுற்றுலா செல்கிறார். சென்ற இடத்தில் அவருடைய காரில் மோதி காயமடைகிறார் ஆதிவாசி மனிதரான ஜெயம் ரவி.
ஜெயம் ரவி மயக்கமடையவே.. அவரை அங்கேயே விட்டுவிடாமல் லோக்கல் மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்க்கிறார்கள் சாயிஷா அண்ட் டீம். அந்த மருத்துவமனையில் மேல் சிகிச்சைகளுக்கு வழியில்லை என்பதால் சென்னைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்துகிறார்கள்.
இதனால் சென்னைக்கு தங்களுடனேயே ஜெயம் ரவியையும் கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்க்கிறார் சாயிஷா. சிகிச்சைக்குப் பின்னர் ஜெயம் ரவி சாயிஷாவின் வீட்டுக்கே வந்துவிடுகிறார்.
ஆனால் வந்த பின்புதான் தெரிகிறது ஜெயம் ரவி சாதாரணமான நம்மைப் போன்ற மனிதரல்ல என்று..! ஆதிவாசி மனிதராகவும், மொழி தெரியாதவராகவும், பேசத் தெரியாதவராகவும், நகர வாழ்க்கையின் நாகரிகம் தெரியாதவராகவும் இருக்கிறார் ஜெயம் ரவி.
முதலில் அவர் செய்யும் அட்ராசிட்டியால் அலறும் சாயிஷா பின்பு இவர் போன்ற மனிதர்களை எப்படி கட்டுப்படுத்துவது என்பதை பற்றி இணையம் மூலமாக படித்துத் தெரிந்து கொண்டு அதன்படியே ஜெயம் ரவியிடம் பழகுகிறார். அன்பாகப் பேசுகிறார். இது பலனளிக்க.. இதன் பின்பு சாயிஷா என்ன சொன்னாலும் ஜெயம் ரவி கேட்கத் துவங்குகிறார்.
பிரகாஷ்ராஜின் மகனான வருண், சாயிஷாவை கல்யாணம் செய்ய தயாராக இருக்கிறார். ஆனால் சாயிஷா இதற்கு மறுப்புத் தெரிவிக்க இந்தச் சண்டையில் இடையில் புகும் ஜெயம் ரவி, வருண் சாயிஷாவை தாக்க முற்படுவதாக நினைத்து வருணை போட்டு புரட்டியெடுக்கிறார்.
இப்போதுதான் ஜெயம் ரவி என்றொரு ஆதிவாசி மனிதர் சாயிஷாவின் வீட்டில் அவருடனேயே வாழ்ந்து வருவது சாயிஷாவின் நண்பர்கள் அனைவருக்குமே தெரிய வருகிறது. இந்த நேரத்தில் இதுவரையிலும் ஜெயம் ரவியை தேடி வந்த அந்தமான் போலீஸ் ஜெயம் ரவியை உண்மையாகவே வலையை வீசித்தான் பிடித்துத் தூக்கிச் செல்கிறது.
அதிர்ச்சியடையும் சாயிஷாவும் அவருடைய மேனேஜர் தம்பி ராமையாவும் ஜெயம் ரவியை மீட்பதற்காக அந்தமான் செல்கிறார்கள். இதே நேரம் சாயிஷாவை மீட்பதற்காக பிரகாஷ்ராஜூம் ஒரு பெரிய போலீஸ் படையுடன் அந்தமானுக்குள் புகுகிறார். இறுதியில் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் திரைக்கதை..!
உண்மையில் இப்படியொரு படத்தை தனது சொந்தத் தயாரிப்பில் எடுக்கத் துணிந்த இயக்குநர் விஜய்க்கு மிகப் பெரிய சல்யூட். 2010-ம் ஆண்டில் இருந்தே இதனை பல்வேறு தயாரிப்பாளர்களிடத்தில் சொல்லியும் அவர்கள் யாரும் தயாரிக்க முன் வரவில்லை என்றார் விஜய். அதுவும் உண்மைதான். நிச்சயம் யாரும் வர மாட்டார்கள். அவர்களிருக்கும் பயமும் நியாயமானதுதான்.
படத்தின் ஹீரோ ஒரு வசனம்கூட பேச மாட்டார். டூயட்டுகளும் இருக்க முடியாது. சீரியஸ் கதை என்பதால் நிச்சயம் ரிஸ்க்குதான் என்று பலரும் மறுதலித்த இந்தக் கதையை தானே சொந்தமாக தயாரித்து வெளியிட்டிருக்கிறார் இயக்குநர் விஜய்.
பல்வேறு ஆங்கிலப் படங்களில் பார்த்த கதைதான். டார்ஜான் சீரியஸ் படங்களின் கதைதான் இந்தப் படத்தின் அடிப்படை கதையாக இருந்தாலும் தமிழுக்காக சிலவைகளை புதியதாக செய்திருக்கிறார் இயக்குநர் விஜய்.
ஜெயம் ரவியின் உடல் வாகு ஆதிவாசி மனிதனின் தோற்றத்திற்கு மிகப் பெரிய உதவியாக இருந்திருக்கிறது. மேக்கப் போடாத முகம், நடிப்பைக் காட்டாத முகம்.. முரட்டுத்தனத்துடன் இருக்கும் முகம் என்று எப்போதும் காணாத ஒரு ஜெயம் ரவியை இந்தப் படத்தில் காணலாம்.
சுவரை இடித்துக் கொண்டு உள்ளே வந்து நிற்பது.. எதுவுமே நடக்காதது போல திரும்பிச் செல்வது.. ஏசி காற்றைவிடவும் இயற்கையான காற்றை நேசிக்கும் அதே குணம்.. மரத்தின் மீது தாவியேறும் அந்தப் பழக்கம்.. மரத்தை கட்டியணைத்து தூங்கும்விதம்.. என்று அனைத்திலும் படம் பார்க்கும் அத்தனை போலியான நாகரிக மனிதர்களையும், ஆதிவாசி வாழ்க்கைக்கு ஏங்க வைத்துவிட்டார் ஜெயம் ரவி.
இன்னொரு சிம்ரன் என்று உறுதியாச் சொல்லலாம் ஹீரோயின் சாயிஷாவை. அப்படியே மெழுகு பொம்மை போல் இருந்தாலும், நடிப்பில் மிகப் பெரிய ஸ்கோர் செய்திருக்கிறார் என்று உறுதியாய் சொல்லலாம். பணக்காரத் திமிர். இள வயதுக்கே உரித்தான பயம். இதுவரையில் சந்தித்திராத ஒரு புதுமையான ஆணை பார்த்தவுடன் அவன் மீது கொள்ளும் பரிதாபம்.. காதலே இல்லாமல் ஜெயம் ரவி மீது ஏற்படும் பரிவு.. அந்தப் பாசத்தை வெளிப்படுத்தும்விதம் என்று சாயிஷாவின் நடிப்புக்கு ஸ்கோப் உள்ள இடங்கள் நிறைய. அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார் சாயிஷா.
அதிலும் ஜெயம் ரவி, புலியை காப்பாற்றும் காட்சியில் 2 நிமிட தனி மோனோ ஆக்டிங் காட்சியில் அசத்தியிருக்கிறார் சாயிஷா. இதுதான் போதாதென்று நடனத்தில் சின்ன பிரபுதேவா என்று சொல்லும் அளவுக்கு ஸ்பிரிங்காய் வளைந்து கொடுத்திருக்கிறார். நடனத்தை அமைத்ததே பிரபுதேவாதானாம். அத்தனை அழகாய், ஓயிலாய் நடனடமாயிருக்கிறார் சாயிஷா. வெல்கம் தேவதையே..!!!
மேனேஜராக நடித்திருக்கும் தம்பி ராமையா பல இடங்களில் ரசிகர்களைக் காப்பாற்றியிருக்கிறார். ஹீரோ வசனமே பேசவில்லை. ஹீரோயினும் நடித்துக் கொண்டேயிருக்கிறார். எங்கள் சார்பாக யாருமே பேச மாட்டீர்களா என்ற தியேட்டர் ரசிகர்களின் கேள்விக்கு தம்பி ராமையாதான் பல இடங்களில் பதில் சொல்லியிருக்கிறார்.
இதேபோல் பிரகாஷ்ராஜ். வழக்கமான வில்லன் வேடத்தில் கடைசிவரையிலும் தனது வில்லத்தனத்தைக் காட்டிக் கொள்ளாத குணச்சித்திர வேடத்தை அணிந்திருக்கிறார். இவருடைய மகனாக வருண்.. கொஞ்ச நேரமே ஆனாலும் கடைசியில் பரிதாபமான முடிவு. ஜெயம் ரவியிடம் இத்தனை அடி வாங்கி நடிக்க இவருக்கு எப்படி மனம் வந்தது என்று தெரியவில்லை. தைரியமான முடிவுதான்..!
காடும், காடு சார்ந்த இடமும் என்று சொல்லி இயற்கை அன்னையை ரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு. அடிக்கடி காட்டும் ஏர் வியூ காட்சியை பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போலிருக்கிறது. அந்தமானின் அழகை இத்தனை அழகாய் இதுவரையிலும் எந்தப் படத்திலும் பார்த்ததில்லை.
பாடல் காட்சிகளிலும் இதுவரையிலும் படம் பிடிக்காத இடங்களை பிரயத்தனப்பட்டு காட்டியிருக்கிறார்கள். ஹீரோ, ஹீரோயினின் உடைகள், இயற்கையின் தோற்றம்.. கேமிராவின் அழகு எல்லாமுமாய் சேர்ந்து பாடல் காட்சிகளை பெரிதும் ரசிக்க வைத்திருக்கின்றன.
படத் தொகுப்பாளர் ஆண்டனியின் கச்சிதமான கத்திரி பணியும் படத்தை தொய்வில்லாமல் கொண்டு போக உதவியிருக்கிறது. சண்டை பயிற்சியால் ஸ்டண்ட் சில்வாவின் அதிரடி பாணி சண்டை காட்சிகளும் படத்திற்கு மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட்.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் ‘யேய் அழகம்மா’ பாடல் ‘சங்கத்தில் பாடாத கவிதை’ மெட்டில் அசத்தலாய் ஒலிக்கிறது.. ‘டேம் டேம்’ பாடலில் சாயாஷாவின் சுறுசுறுப்புக்காகவும், அழகுக்காகவே பார்க்க வைக்கிறது. பின்னணி இசையில் அதிகம் இசைக்காமல் பார்த்துக் கொண்டமைக்காக மட்டுமே ஹாரிஸுக்கு நமது நன்றிகள்.
ஜெயம் ரவி தன் கண் பார்வையில் படும் பழங்களை அதீத பசியால் அபேஸாக்கும் காட்சியில் ‘ச்சீ’ என்று நம்மை பேச வைத்துவிட்டு பின்பு இன்னொரு காட்சியில் அதே பசியுணர்வோடு சாயிஷாவும், தம்பி ராமையாவும் அதே பழங்களை தின்னும் காட்சியில் பாசத்தோடு பார்க்கும் ஜெயம் ரவியின் முகத்தை பதிவு செய்திருக்கும்விதமே, இயக்குநர் விஜய்யின் இயக்கத்திற்கு இதுவும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு..!
லோக்கல் இன்ஸ்பெக்டர் சண்முகராஜாவின் குழந்தை காணாமல் போய் ஜெயம் ரவியின் கூட்டத்தாரிம் சிக்கி பின்பு ஒரு நாள் அவரிடத்திலேயே வந்து சேரும் அந்தக் காட்சியும் படத்தில் ரசனையான திரைக்கதை.
இயற்கை வளங்கள் நமக்காக வழங்கப்பட்டவை என்றாலும் காடுகளே உலகம் என்று வாழும் ஆதிவாசி மக்களையும் நாம் வாழ விட வேண்டும். காடுதான் அவர்களது பூமி. அவர்களது சொத்தை நாம் அனுபவிக்க நினைப்பது சட்ட விரோதம் என்கிற கருத்தையும் கொஞ்சம் அழுத்தமாக கிளைமாக்ஸ் காட்சியில் வைத்திருக்கிறார் இயக்குநர். இதற்காக இயக்குநர் விஜய்க்கு ஒரு பாராட்டு..!
நாட்டுக்குள் இருக்கும் வீட்டுக்கு மருமகளாக இருப்பதைவிடவும், காட்டுக்குள் இருக்கும் நாட்டுக்குள் மருமகளாகச் செல்வதே மேல் என்று கடைசியில் முடிவெடுக்கும் நாயகி சாயிஷாவின் அந்த செயல் பெருமைக்குரியதே..!
இத்தனை பெரிய கோடீஸ்வரப் பெண்.. சட்டென்று நடக்கும் ஒரு விபத்துக்கு பயப்படுவது.. அதுவும் போலீஸுக்கு பயந்து ஜெயம் ரவியை மருத்துவமனைக்குக் கொண்டு போக நினைப்பது.. அப்படியே அசால்ட்டாக ஜெயம் ரவியை சென்னைக்கு விமானத்தில் கொண்டு வருவது.. தன் வீட்டில் தங்க வைப்பது என்று நம் இயல்புத் தன்மைக்கு மாறான சில விஷயங்களை படத்தில் செய்திருந்தாலும், இது இயக்குநரின் வசதிக்காக அமைக்கப்பட்ட திரைக்கதை என்று மட்டுமே எடுத்துக் கொள்வோம்..!
காடுகளை அழித்துவிட்டு நாட்டு மக்களைக் காப்பாற்றுவதைவிட்டுவிட்டு காடுகளை வளர்த்தெடுத்து அதன் மூலமாக நாட்டு மக்களைக் காப்பாற்றுவதுதான் நல்ல அரசுகளுக்குரிய செயல் என்பதையும் இயக்குநர் விஜய் இந்தப் படம் மூலமாகச் சொல்லியிருக்கிறார்.
அதே நேரம், இன்றைக்கும் அந்தமானில் இருக்கும் பூர்வகுடி மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், அவர்களை ஏதோ விலங்குகளை பார்வையிடச் செல்லும் டூரிஸ்ட்டுகளை போல சென்று பார்த்துவரும் நம்முடைய இனத்தவர்களை கடுமையாக கண்டிக்கத்தான் வேண்டும்.
அந்த ஆதிவாசி மக்களின் வாழ்க்கையில் நாட்டு மக்கள் குறுக்கிடாதவகையிலும், அவர்களது எண்ணிக்கை கூடவும், அவர்களது வாழ்க்கைத் தரம் உயரவும், அவர்கள் பேசும் மொழி பரவலாக இருக்கும்வகையிலும் அந்தமான் அரசும், இந்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்..!
‘வனமகன்’ நமக்கு பெருமை சேர்க்கும் தலைமகனாக திகழ்கிறான்.. அவசியம் பாருங்கள்..!

உரு - சினிமா விமர்சனம்

19-06-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்தை வையம் மீடியாஸ் பட நிறுவனத்தின் சார்பில் வி.பி.விஜி தயாரித்துள்ளார்.
இதில் கலையரசன் கதாநாயகனாவும், சாய் தன்க்ஷிகா கதாநாயகியாகவும் நடிக்க, இவர்களுடன் மைம் கோபி, டேனியல் ஆனி, தமிழ்ச்செல்வி, கார்த்திகா உள்பட பலரும் நடித்துள்ளனர்.
தயாரிப்பு – வையம் மீடியாஸ், தயாரிப்பாளர் – V.P.விஜி, எழுத்து, இயக்கம் – விக்கி ஆனந்த், ஒளிப்பதிவு – பிரசன்னா S.குமார், இசை – ஜோஹன், படத் தொகுப்பு – சான் லோகேஷ், பாடல்கள் – மதன் கார்க்கி, தயாரிப்பு மேற்பார்வை – கார்த்திக் ஆனந்த கிருஷ்ணன், மக்கள் தொடர்பு – C.N.குமார்.

‘உரு’ என்றால் ‘பயம்’ என்று பொருள். பயத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள கதை என்பதால் இப்படத்திற்கு ‘உரு’ என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளதாம்.
பேய்ப் படம்தான் என்றாலும் பேய் இல்லாத திகில் படம் இது. நாயகன் கலையரசன் நல்ல குடும்பக் கதைகளை எழுதி வரும் எழுத்தாளர். சில ஆண்டுகளுக்கு முன்புவரையிலும் பல ஆயிரம் காப்பிகள் விற்பனையான புத்தகங்களுக்குச் சொந்தக்காரர். ஆனால் இன்றைய மாறிவிட்ட சமூகச் சூழலில், இவரின் கதைகள் வரவேற்கப்படாமல் போக இவரது புத்தகங்களின் விற்பனை டல்லடிக்கிறது.
புத்தக வெளியீட்டாளர் தனது கோபத்தை எழுத்தாளர் கலையரசனிடம் காட்டுகிறார். அவருடைய கதைகள் அனைத்தும் அவுட் ஆஃப் ஆர்டர் என்பதால்  இன்றைய காலகட்டத்திற்கேற்ப ரசிகர்களை மிகவும் கவரும்படியான கதைகளை எழுதச் சொல்கிறார்.
இப்போது கலையரசனுக்கு பணம் ஒரு பெரிய பிரச்சினையாகி அவர் முன் நிற்க.. அவருடைய மனைவி தன்ஷிகாவோ இந்த எழுத்தாளன் பொழைப்பை தலைமுழுகிட்டு படித்த வேலைக்கு போய் சம்பாதிக்கும்படி சொல்கிறார். வீட்டில் மனைவியின் சம்பாத்தியத்தில் இதுவரையிலும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் எழுத்தாளருக்கு, இப்போது இதுவொரு தன்மானப் பிரச்சினையாகிறது.
எப்போதுமே டிரெண்ட்டில் இருக்கும் ஒருயொரு கான்செப்ட் பயம்தான். திரில்லர் கலந்த கதைகளுக்கு எப்போதுமே மவுசு அதிகம் என்பதால் திரில்லர் கதையை எழுத முடிவெடுத்து யோசிக்கிறார் கலை. என்ன செய்யலாம் என்று யோசித்தவருக்கு ஒரு சப்ஜெக்ட் பிடிபடுகிறது.
பதிப்பாளரிடத்தில் கதைக் கருவைச் சொல்லி ஓகே வாங்கிக் கொண்டு கதையை எழுதத் துவங்குகிறார். ஆனால் சென்னை வீட்டில் இருந்தபடியே அவரால் ஒரு பக்கத்திற்கு மேல் எழுத முடியாமல் போகிறது. எனவே, அந்தக் கதையை எழுதுவதற்காகவே கொடைக்கானல் அருகேயிருக்கும் மேகமலைக்கு செல்ல முடிவெடுக்கிறார் கலையரசன்.
அங்கு சென்று தனிமையில் அமர்ந்து கதை எழுதத் தொடங்குகிறார் கலை. அப்போது கதையில் அவர் என்னவெல்லாம் எழுதுகிறாரோ, அதுவெல்லாம் அப்படியே நிஜத்தில் அப்போதே அவரருகே நிகழ்ந்து அவரை பயமுறுத்துகின்றன. அவரைச் சுற்றி பல அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடக்கின்றன.
கதையில் அவர் தொடர்ந்து எழுதி வரும் உருவமில்லாத ஒரு உருவம், திடீரென்று கலையரசனின் முன்பாக வந்து அவரையே கொலை செய்ய முயல்கிறது. அதனிடத்தில் இருந்து அவர் தப்பிக்க நினைக்கிறார். அதே சமயம் கலையரசனை தேடி வரும் அவரது மனைவி தன்ஷிகாவும், அந்த உருவத்திடம் சிக்கிக் கொள்கிறார். இதைத் தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதுதான் இந்த பரபரப்பான திகில் படத்தின் கதை.
முதல் பாராட்டு இயக்குநருக்கு. இது சைக்காலஜிக்கல் திரில்லர் கதை. இதனையே கடைசிவரையிலும் சாமர்த்தியமாக மறைத்துக் கொணர்ந்து இறுதியில் வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. இருந்தாலும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் புரியும்வகையில் இன்னும் எளிமையாக படத்தின் முடிவையும், கதைச் சுருக்கத்தையும் கொடுத்திருக்கலாம். கிளைமாக்ஸ் எத்தனை பேருக்கு புரியுமென்று தெரியவில்லை என்பதுதான் இந்தப் படத்தின் ஒரேயொரு சின்ன பலவீனம்.
பல காட்சிகள், திரைக்கதை அமைப்பு, திரில்லருக்கான அமைக்கப்பட்ட சேஸிங் காட்சிகள்… அந்தக் கொடைக்கானல் வீட்டையே தலைகீழாக புரட்டிப் போடும் அளவுக்கு எடுக்கப்பட்டிருக்கும் விரட்டல் காட்சிகள்.. தன்ஷிகா, கலையரசனுக்கு இடையில் நடக்கும் சண்டை காட்சிகள்.. ஒவ்வொரு திரில்லிங்கிலும் ஒரு புது டிவிஸ்ட்டை கொடுத்து திசை திருப்புவது.. கிளைமாக்ஸில் பட்டென உடையும் புதுக் கதை.. அந்தப் புதுக் கதையிலும் பிறக்கும் கடைசி டிவிஸ்ட்டான கிளைமாக்ஸ் என்று படம் நெடுகிலும் வியாபித்திருக்கிறது இயக்குநரின் கதையாக்கத் திறமையும், இயக்கத் திறமையும். முதல் பட இயக்குநர் என்பதால் இயக்குநர் விக்கி ஆனந்துக்கு ஒரு மிகப் பெரிய சல்யூட்..!
அடுத்த பாராட்டு ஒளிப்பதிவாளர் பிரசன்னா குமாருக்கு. முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் கேமிராவின் சித்துவிளையாட்டில்தான் படத்தையே அதிக நேரம் ரசிக்க முடிந்திருக்கிறது. கொடைக்கானலின் இரவு நேர அழகை மிக அழகாக படம் பிடித்திருக்கிறார்.
அதே நேரம் தன்ஷிகா, கலையரசன், உருவம் சம்பந்தப்பட்ட காட்சிகளின் விரட்டுதலில் இருக்கும் ஒரு படபடப்பை, டென்ஷனை, திகிலை, திரில்லரை மிகச் சிறப்பான இயக்கத்தின் மூலமாக மட்டுமல்லாமல் ஒளிப்பதிவாளரின் கேமிரா வித்தையாலும் சிறப்பு செய்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
கலையரசனைவிடவும் மிக அதிகமாக துன்பப்பட்டு நடித்திருப்பவர் தன்ஷிகாதான். இவர் அளவுக்கு எந்தவொரு நடிகையும் இத்தனை அடி, உதை வாங்கியிருப்பார்களா என்பது சந்தேகம்தான். பாராட்டுக்கள் தன்ஷிகா. தன்னுடைய எமோஷன்ஸ் மொத்தத்தையும் படம் முழுவதிலும் கொஞ்சமும் குறையாமல் வழங்கியிருக்கும் தன்ஷிகாவால்தான் படத்தை நகர்த்த முடிந்திருக்கிறது.
அந்த பயவுணர்வு, கோபம்.. பரிதவிப்பு.. படபடப்பு.. எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்கிற முனைப்பு.. கணவன் மீதான கோபம்.. ஆனால் கொலை செய்ய தயங்கும் பரிதாபம் என்று பலவற்றையும் கலந்து கட்டி அடித்திருக்கிறார் தன்ஷிகா. வெல்டன் மேடம்..!
கலையரசனுக்கும் இது புதுமையான வேடம்தான். தன்னுடைய பச்சாபத்த்தை தீர்த்துக் கொள்ள மனைவியைத் திட்டிவிட்டு சிகரெட்டுக்காகவே அலைவது.. எழுத்துக்களே நேரில் வந்து கதையை நடத்திக் காட்டுவதினால் ஏற்படும் பயம்.. அந்தப் பயத்தினால் அவருக்குள் ஏற்படும் மனச்சிதைவு மாற்றம்… அந்த உருவத்தில் இருந்து கொண்டு அவர் செய்யும் ஆக்சன் காட்சிகள்.. கடைசியாக இது எதுவுமே தான் செய்யவில்லை என்பதுபோல் மனோதத்துவவியல் வகுப்பில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது என்று தன்னுடைய கேரக்டரில் குறையில்லாமல் நடித்துக் கொடுத்திருக்கிறார் கலையரசன்.
கூடவே மைம் கோபி, தமிழரசன், டேனியல், தன்ஷிகாவின் அண்ணனாக நடித்தவர் என்று பலரும் தங்களுக்கான கேரக்டர்களை புரிந்து செய்திருக்கிறார்கள்.
ஜோகனின் பின்னணி இசையும் இன்னொரு பலம். கர்ப்பிணி பெண்ணாக இருக்கும் கார்த்திகா திடீரென்று கதவில் வந்து மோதி நிற்கும் காட்சியில் பார்வையாளர்களுக்கு ஏற்பட்ட ‘திக்’ என்ற உணர்விற்கு இயக்குநரும், இசையமைப்பாளருமே காரணம். அத்தனை நடுக்கத்தைக் காட்டியிருக்கிறது அந்தக் காட்சி.
இதேபோல் பல சேஸிங் காட்சிகளில் பின்னணி இசைதான் நம்மையும் விடாமல் பார்க்க வைத்திருக்கிறது. திரில்லருக்கான பொருத்தமான இசையை வழங்கியிருக்கும் ஜோகனை மனதாரப் பாராட்டுகிறோம்.
சான் லோகேஷின் படத் தொகுப்பில் படத்தின் காட்சிகள் இடையே எந்தவித சிராய்ப்பும் இல்லாமல் கச்சிதமாக நறுக்கியிருப்பது தெரிகிறது. அடுத்தடுத்த காட்சிகளின் நகர்தல் புரிந்தாலும் அந்த திரில்லிங் தொடர்ந்து இருந்து கொண்டேதான் இருந்தது.. இது மாதிரியான படங்களுக்கேற்ற படத் தொகுப்பை வழங்கியிருக்கிறார் சான் லோகேஷ். பாராட்டுக்கள் ஸார்..!
கொடைக்கானலில் 4 டிகிரி கடும் குளிரில் பல நாட்கள் கடும் சிரமத்திற்கிடையே இந்தப் படத்தை படமாக்கியிருக்கிறார் இயக்குநர். இந்தக் கடின உழைப்புக்கான பலன் திரையில் தெரிகிறது. இதற்காக படக் குழுவினருக்கு நமது சல்யூட்.
இந்த ‘உரு’ திரைப்படம் உங்களுக்கு நிச்சயமாக ஒரு திரில்லிங் அனுபவத்தைக் கொடுக்கும். அவசியம் படத்தை பாருங்கள்.. அனுபவியுங்கள்..!

தங்க ரதம் - சினிமா விமர்சனம்

18-06-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

என்.டி.சி. மீடியா மற்றும் வீ கேர் புரொடெக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் வர்கீஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.  
‘எனக்குள் ஒருவன்’ மற்றும் ‘ஸ்ட்ராபெர்ரி’ போன்ற படங்களில் நடித்த வெற்றி இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். அதிதி நாயகியாக நடித்திருக்கிறார். மற்றும் செளந்தர்ராஜன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ‘ஆடுகளம்’ நரேன், ‘லொள்ளு சபா’ சாமிநாதன், பாண்டியன், ராண்டில்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இவர்களுடன் டிஸ்கோ சாந்தியின் சகோதரியான சுஜித்ரா ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்.
ஒளிப்பதிவு – R.ஜேக்கப், இசை – டோனி பிரிட்டோ, படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், கலை – N.K.பாலமுருகன், சண்டை பயிற்சி – ஃபயர் கார்த்திக், பாடலாசிரியர்கள் – யுகபாரதி, பாலமுருகன், நடனம் – தீனா, டிசைன்ஸ் – ஷபீர், மக்கள் தொடர்பு – யுவராஜ், தயாரிப்பு நிர்வாகி – சுரேஷ் கண்டியர், நிர்வாக தயாரிப்பு – பினுராம், தயாரிப்பு – C.M.வர்கீஸ். எழுத்து, இயக்கம் – பாலமுருகன்.

ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட் தமிழ்நாட்டிலேயே இரண்டாவது பெரிய காய்கறி மார்க்கெட். அந்த மார்க்கெட்டில் ஒரு காலத்தில் நடந்த ஒரு உண்மைக் கதையில் கொஞ்சம் மசாலா தூவி இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பாலமுருகன்.
ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட்டிற்கு அருகில் இருக்கும் ஊரில் இருந்து காய்கறிகளை ஏற்றி வரும் வேலையை செய்து வருகிறார் ஹீரோ வெற்றி. இவர் ஓட்டி வரும் வேனின் பெயர் ‘தங்க ரதம்’. இந்த வேனுக்கு உரிமையாளர் ‘ஆடுகளம்’ நரேன். நரேன், ஒருவகையில் வெற்றிக்கு சித்தப்பா வேண்டும்.
அதே ஊரில் இவர்களுக்கும் உறவுகளான குடும்பத்தைச் சேர்ந்தவர் செளந்தர்ராஜன். இவரும் ஒரு வேனை சொந்தமாக வைத்து ஓட்டி வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையில் எப்போதும் போட்டா போட்டிதான். யார் முதலில் சந்தைக்கு செல்வது என்று இருவரும் ஒருவரையொருவர் முந்திக் கொண்டு வேனை செலுத்தி வருகிறார்கள்.
முதலில் முந்தி வருபவரின் காய்கறிகள் டிமாண்டு காரணமாக உடனுக்குடன் அதிக ஏலத்தில் விற்பதால்தான் இப்படி இவர்கள் இருவருக்குள்ளும் போட்டி ஏற்பட்டிருக்கிறது.
2 வருடங்களுக்கு முன்பு வெற்றி அதே ஊரைச் சேர்ந்த அதிதியை பார்த்தவுடன் ஒரு தலையாய் காதலிக்கிறார். ஆனால் அதிதி செளந்தர்ராஜனின் தங்கை என்பது தெரிந்தவுடன் இது நமக்கு செட்டாகாது என்று சொல்லி விலகிவிட்டார்.
அந்த அதிதி இப்போது வலிய வந்து வெற்றியுடன் பேசுகிறார். பழகுகிறார். இது காதலுக்கு முதல் நிலையில் இருந்து பரவி ஒரு கட்டத்தில் காதலாகவே மாறிவிடுகிறது.
இந்த நேரத்தில்தான் மலைச்சாமி என்னும் வெட்டி ஆபிசரான ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் செளந்தர்ராஜன் மீதிருந்த கோபத்தில் அவரது வேன் கண்ணாடியை உடைத்துவிடுகிறார். ஆனால் இதனைச் செய்தது வெற்றி என்று நினைத்து வெற்றியை கொலை செய்ய வெறியாய் அலைகிறார் செளந்தர்ராஜன்.
இந்த திடீர் குழப்பத்தால் பயந்து போகும் நரேன், வெற்றியை ஒரு வாரத்திற்கு திண்டுக்கல்லில் இருக்கும் தன்னுடைய மைத்துனர் வீட்டில் போய் தங்கிக் கொள்ளும்படியும், தான் அழைக்கும்போது வந்தால் போதும் என்று சொல்லியும் அனுப்பிவிடுகிறார்.
வெற்றி ஊருக்குப் போய்விட அதிதியால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்த நேரத்தில் இந்தப் பிரச்சினையை சுமூகமாக முடிக்க விரும்பும் நரேன், சமயோசிதமாக அதிதியை தனது மகனுக்கு கல்யாணம் செய்துவைத்துவிட்டால் இந்தப் பிரச்சினை முடிந்துவிடுமே என்று யோசிக்கிறார்.
தனது குடும்பத்தினரிடம் ஆலோசனை கேட்டுவிட்டு, உடனேயே அதிதியின் அப்பாவிடம் பெண் கேட்கிறார். அவரும் இந்தக் கல்யாணத்திற்கு ஒப்புக் கொள்ள உடனேயே நிச்சயத்தார்த்தம் நடந்தேறுகிறது.
நிச்சயத்தார்த்தம் முடிந்தவுடன் வெற்றிக்கு போன் செய்து விஷயத்தை சொல்லும் நரேன் அவரை உடனேயே கிளம்பி ஊருக்கு வரச் சொல்கிறார். இனிமேல் ஊரில் எந்தப் பிரச்சினையும் வராது என்கிறார். ஆனால் தனது காதல், கல்லறைக்குப் போனதை நினைத்து அதிர்ச்சியாகிறார் வெற்றி.
இனிமேல் நடப்பது என்ன..? வெற்றியும், அதிதியும் இணைந்தார்களா..? மோதல் கைவிடப்பட்டதா என்பதுதான் இடைவேளைக்கு பின்னான திரைக்கதை.
ஒரு சின்னஞ்சிறிய கதை. தேவையில்லாத நீட்டல்கள் எதுவுமில்லாமல் நறுக்கென்று ஒரு சிறுகதையை படித்தது போன்று கிளைமாக்ஸை வைத்து படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர். ஆனால் இடையிடையே பிளாஷ்பேக்கை கொண்டு வந்ததுதான் படத்தை முழுமையாக ரசிக்க முடியாமைக்கு காரணம்.. இந்த பிளாஷ்பேக் கதையை முன்பேயே காட்டிவிட்டு முடித்திருக்கலாம்.
ஹீரோ வெற்றி ஏற்கெனவே இரண்டு படங்களில் நடித்திருந்தாலும், இதில்தான் மெயின் ஹீரோவாக நடித்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் நடித்திருக்கலாம்தான். இயக்குநரின் திறமையினால் இந்த அளவுக்கு அவரிடமிருந்து நடிப்புத் திறன் வெளிப்பட்டதே சாதனை என்னும்போது அவரைக் குற்றம் சொல்லி என்ன பயன்..? மலையாள வாடை அடிக்கும் அளவுக்கு இருக்கும் செயற்கையான சில வசனப் பேச்சுக்கள்தான் கொஞ்சம் சோதனையைக் கொடுக்கின்றன.
ஹீரோயின் அதிதி குழந்தை முகம். ஆனால் கலக்கமான முகத்தைக் காட்டுவதில் எக்ஸ்பர்ட்டாக இருக்கிறார். காதலா, வீடா என்கிற குழப்பத்தில் தவிக்கும் இவரது நடிப்புத் திறனால் கொஞ்சமேனும் படத்தோடு ஒன்ற முடிந்திருக்கிறது. பாடல் காட்சிகளில் கிளாமர் காட்டாமலேயே ரசிக்க வைத்திருக்கிறார்.
ஆனால் இவரைவிடவும் குத்துப் பாடலில் ஆடிய சுஜித்ராவையே ஹீரோயினாக்கியிருக்கலாம். அப்படியொரு அட்ராக்சனான முகம். ஏன் இப்படி அழகு தேவதைகள் எல்லாம் ஒரு பாட்டுக்கு ஆடி தங்களது கேரியரை தொலைத்துக் கொள்கிறார்கள்..?
‘ஆடுகளம்’ நரேன்தான் படத்தில் அடுத்த இடத்தைப் பிடித்திருக்கிறார். கச்சிதமான, மிகையில்லாத நடிப்பு. வெற்றியின் அப்பாவை மருத்துவனைக்குத் தூக்கிவந்து சேர்ப்பித்துவிட்டு வெற்றியிடம் பாசத்துடன் பேசுகின்ற காட்சியிலும், டெம்போ வேனை வெற்றியின் பெயரிலேயே எழுதி வைத்துவிட்டதை வீட்டுக்கு வந்து தயகத்துடன் சொல்லும் காட்சியிலும் ‘சபாஷ்’ என்று சொல்ல வைத்திருக்கிறார் நரேன். வெல்டன் ஸார்..!
‘நான் கடவுள்’ ராஜேந்திரனுக்கு ஒரு மொக்கை கேரக்டர். அவருடைய வீட்டில் நடக்கும் கேபிள் டிவி சமாச்சாரம் உவ்வே. ஆனால் அதனை ஆபாசமாக்காமல் வார்த்தைகளிலேயே சாமரசம் வீசுவதை போல காமெடியாக்கி வைத்திருப்பதற்கு இயக்குநருக்கு நமது நன்றிகள்..!
யாருங்க அது ‘வெள்ளப்புறா’ என்னும் பாண்டியன்….? அந்தக் குள்ளமான உருவத்தோடு மனிதர் அலட்டிக் கொள்ளாமல் பேசும் பல வசனங்கள் மனதில் அப்படியே நிற்கின்றன. வெள்ளந்தியாக அவர் பேசுவதும், செயல்படுவதும் படத்திற்கு ஒரு வித்தியாசமான கலரைக் காட்டியிருக்கிறது.
ஆர்.ஜேக்கப்பின் ஒளிப்பதிவில் ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளின் சுற்றுப்புறங்கள் அழகாக படமாக்கப்பட்டுள்ளன. அந்த காந்தி மார்க்கெட்டி பிரம்மாண்டத்தை மட்டும் இன்னொரு சுற்று காட்டியிருக்கலாம்.
டோனியின் இசையில் வார்த்தைகள் புரியும்வகையிலான இசையைத் தந்தமைக்கு நன்றிகள்.. சுரேஷ் அர்ஸின் படத் தொகுப்புதான் படத்தை இந்த அளவுக்காவாவது ரசிக்க வைத்திருக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம்.
படத்தின் முடிவு எதிர்பாராதது. தவறை உணரும் நண்பன் அதனை வெளிப்படையாகச் சொல்லும் முன்பாகவே விதி தன் விளையாட்டைக் காட்டிவிட இதனை நினைத்து நண்பன் மறுகுவதோடு படம் முடிவது ஒரு சிறுகதையின் அழகான முடிவுக்கு ஒத்தான விஷயம்..!
நல்லதொரு மென்மையான படத்தைப் பார்க்க விரும்புவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம் ‘தங்க ரதம்’..!

மரகத நாணயம் - சினிமா விமர்சனம்

18-06-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்தை ‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ சார்பில் தயாரிப்பாளர் ஜி.டில்லி பாபு தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் ஆதி ஹீரோவாகவும், நிக்கி கல்ரானி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும் நடிகர் ஆனந்தராஜ், முனீஸ்காந்த், அருண்ராஜா காமராஜ், டேனி, கோட்டா சீனிவாசராவ், பிரம்மானந்தம், எம்.எஸ்.பாஸ்கர், மைம் கோபி மற்றும் முருகானந்தம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – பி.வி.ஷங்கர், இசை – திபு நைனன் தாமஸ், கலை இயக்கம் – என்.கே.ராகுல், எழுத்து, இயக்கம் – ஏ.ஆர்.கே.சரவண்.

இதுவொரு பேண்டசி, அட்வென்ச்சர், காமெடி கலந்த கதை. 1100, 1992, 2016 ஆகிய மூன்று காலக்கட்டங்களில் இந்தப் படம் நிகழ்கிறது. காஸ்ட்லியான ஒரு மரகத நாணயத்தைத் தேடும் படலம்தான் படத்தின் திரைக்கதை. ஹீரோவான ஆதியின் டீமும், வில்லன் ஆனந்தராஜ் டீமும் இந்த மரகத நாணயத்தை மும்முரமாகத் தேடுகின்றன. இறுதியில் அது யாருடைய கையில் கிடைக்கிறது என்பதுதான் கிளைமாக்ஸ்.
சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தைத் தழுவி கொஞ்சம் கற்பனை கலந்து இந்தக் கதையை உருவாக்கியிருப்பதாக இயக்குநர் கூறியிருந்தார்.
உண்மையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக சேலம் அருகே ‘சதுரங்க வேட்டை’யில் வந்த ஏமாற்றுக் கும்பல் போல, ராஜா காலத்து மரகத நாணயம் ஒன்று தங்களிடம் இருப்பதாகவும், அது விலை மதிப்பில்லாதது என்றும், வாங்கி விற்கலாமே என்று ஒரு சிலரிடம் ஆசையைத் தூண்டியது ஒரு திருட்டுக் கும்பல்.
ரகசியமாக பல லட்சம் ரூபாய் கொடுத்து கூட்டணி அமைத்து அந்த மரகத நாணயத்தை வாங்கினார்கள் சில பெரும் புள்ளிகள். அதன் பின்புதான் அது கலைடாஸ்கோப்பில் பயன்படுத்தும் கண்ணாடிகளை பயன்படுத்தி செய்யப்பட்ட பிங்கான் கலவை என்பதை அறிந்து ஏமாந்தனர்.
இதையடுத்து அந்தத் திருட்டுக் கும்பலை தேடிச் சென்று கொலை வெறியோடு தாக்கி கொலையும் செய்தனர். இதையே கொஞ்சம் மாற்றி சுவையான திரைக்கதையில் சிரிக்க, சிரிக்க கொடுத்திருக்கிறார் இயக்குநர் சரவண்.
கி.பி.1100-ம் வருடம் தமிழகத்தின் தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்தவன் இரும்பொறை என்ற மன்னன். சேர, சோழ, பாண்டியர்களையே தனது படை பலத்தால் வென்று வீராதிவீரனாகியிருந்தார். இதற்காக தன்னைத் தானே பாராட்டிக் கொள்ள நினைத்து விலை மதிப்பில்லாத மரகதத்தால் ஆன நாணயத்தை செய்து அதனை தனது வாளில் பொருத்தி வைத்து தனக்குத்தானே அழகு சூட்டிக் கொண்டான்.
தான் இறந்தவுடன் அந்த மரகத நாணயத்தையும் தன்னுடனேயே வைத்து அடக்கம் செய்துவிட வேண்டும் என்று அவன் சொல்லிவிட்டு இறந்த்தால் அவனுடைய வாரிசுகள் அது போலவே அவனது சடலத்துடன் அந்த மரகத நாணயத்தையும் சேர்த்தே புதைத்துவிட்டார்கள்.
இந்தக் குறிப்பிட்டை செப்பேடுகளின் மூலமாக தெரிந்து கொண்ட சிலர், இரும்பொறை மன்னனின் சமாதியைத் தோண்டி அந்த மரகத நாணயத்தை தேடியெடுத்தனர். அப்படி தேடி, தோண்டியெடுத்தவர்கள் வரிசையாக 132 பேர். இந்த 132 பேருமே விபத்தில் சிக்கி பலியாகிவிட்டார்கள்.
ஆனால் உண்மையில் அந்த மரகத நாணயத்தை யார் தொட்டாலும் அவர்களை மன்னன் இரும்பொறையின் ஆவி விடாமல் துரத்தி கொலை செய்வதாக பல மந்திரவாதிகளும் நினைக்கிறார்கள். இப்போதும் சொல்லி வருகிறார்கள்.
இந்த நேரத்தில் திருப்பூரில் இருந்து சுமாராக 40 லட்சம் ரூபாய் கடனுடன் சென்னைக்கு வருகிறார் ஆதி. கடனை அடைக்க வேண்டியிருப்பதால் உடனடியாக பெரிய பணக்காரனாக வேண்டும் என்று நினைத்து குறுக்கு வழியில் பணம் சேர்க்க நினைக்கிறார். இதற்காக சாதாரண சின்னச் சின்ன கடத்தல் வேலைகளில் ஈடுபடும் முனீஷ்காந்த் என்னும் ராமதாஸிடம் சேர்கிறார். அங்கே ஆதியை சேர்த்துவிடுவது ஆதியின் நண்பனான டேனியல்.
“இப்படியே சின்னச் சின்னதாக செய்தால் என்றைக்கு 40 லட்சம் ரூபாயை புரட்டுவது..?” என்று யோசிக்கும் ஆதி, “பெரிய பிராஜெக்ட்டா கை வைப்போம்…” என்று முனீஸ்காந்திடம் சொல்லி வருகிறார்.
இந்த நேரத்தில்தான் மிடில் கிளாஸ் ரவுடியான மைம் கோபியை, சீனாவில் இருந்து வந்த ஒரு அன்பர் சந்திக்கிறார். அந்த மரகத நாணயத்தை பற்றிச் சொல்லி அதைக் கைப்பற்றி கொடுத்தால் 10 கோடி தருவதாகச் சொல்கிறார்.
இதற்காக யார், யாரையோ பிடித்துப் பார்க்கிறார் மைம் கோபி. யாரும் செட்டாகவில்லை. டாப் கடத்தல் பேர்வழியாக இருக்கும் ஆனந்த்ராஜிடமும் கேட்டுப் பார்க்கிறார் மைம் கோபி. அவர்களும் ஆர்வம் இல்லை என்று கழன்று கொள்கிறார்கள். இந்த நேரத்தில்தான் டேனியல் மூலமாக ஆதிக்கு இது தெரிய வர, களத்தில் குதிக்கிறார்.
இந்த நேரத்தில் திடீரென்று முனீஸ்காந்த மாரடைப்பால் காலமாக.. ஆதிக்கும், டேனியலுக்கும் வேலையில்லாமல் போகிறது. சரி.. இந்த மரகத நாணயத்தையே முதல் போணியாக எடுத்துச் செய்வோம் என்று நினைக்கிறார் ஆதி.
ஆனால் இதில் இருக்கும் ஆபத்து பற்றி டேனியலுக்கும், ஆதிக்கும் புட்டுப் புட்டு வைக்கிறார் மந்திரவாதி கோட்டா சீனிவாசராவ். ஆனாலும் இளம் ரத்தமான ஆதி எதற்கும் அஞ்சாமல் துணிந்து நிற்கிறார்.
கையில் ஒரு எலுமிச்சம் பழத்தைக் கொடுத்து “உனக்குப் பிரியமானவர்களை நினைத்தால் அவர்கள் உன் உதவிக்கு வருவார்கள்…” என்று சொல்லிக் கொடுக்கிறார் கோட்டா. மரகத நாணயத்தை தேடிச் சென்று உயிரிழந்த தனது மாமா ஒருவரை நினைவு கூர்கிறார் டேனியல். ஆனால் அந்த மாமா இறந்து போன முனீஸ்காந்த் உடல் மூலமாக உயிர் பெற்று எழுந்து வருகிறார். அதிர்ச்சியாகிறார்கள் இருவரும்.
“தங்களுக்கு மரகத நாணயத்தை கைப்பற்ற உதவி செய்ய வேண்டும்…” என்று ஆதியும், டேனியலும் முனீஸ்காந்திடம் கேட்க.. அவர் அதற்கு தன்னுடைய பால்ய கால தோழர்களையும் உயிர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லி மூன்று இறந்து போன உடல்களைக் கேட்கிறார். தோழர்களும் அதற்கு ஏற்பாடு செய்ய.. அருண்ராஜா காமராஜூம், சங்கிலி முருகனும் கிடைக்கிறார்கள்.
கூடவே பேருந்து நிறுத்தத்தில் பார்த்தவுடன் ஆதிக்குள் காதலாகி பின்பு காதல் பணாலாகி.. கைவிட்டுப் போன காதலியான நிக்கி கல்ரானி செத்த பொணமாக நான்காவது ஆளாகக் கிடைக்கிறார். ஆனால் அவருடைய உடலில் ஒரு ஆண் குடியேறியிருக்கிறார்.
இந்த நால்வரும் சேர்ந்து மரகத நாணயத்தைத் தேடியெடுக்க முனைகிறார்கள். செய்து முடித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் சுவையான, சுவராஸ்யமான, நகைச்சுவை கலந்த திரைக்கதை..!
படத்தின் டைட்டில் கார்டிலேயே வித்தியாசத்தைக் காட்டி அசத்தியிருக்கிறார் இயக்குநர். கார்ட்டூன்களால் முன் காலத்துக் கதைச் சுருக்கத்தைச் சொல்லும்விதமே கவனத்தை ஈர்க்கிறது. செங்குட்டுவன், இரும்பொறை, சாணக்யன், நேசமணி என்ற தமிழ்ப் பெயர்கள்.. தமிழ் புலவரான சங்கிலி முருகன், ஆனந்த்ராஜின் கேரக்டர் ஸ்கெட்ச். அவருடைய அல்லக்கை முருகானந்தத்தின் அப்பாவித்தனம்.. நிகில் கல்ரானிக்கு அமைந்திருக்கும் ஆண் குரல்.. மரகத நாணயம் பயணம் செய்யும் இடம், படுகொலைகள் நடக்கும்விதம்.. இரும்பொறையின் ஆவி வரும் தகர டப்பாவால் ஆன லாரி.. இரும்பொறையின் சமாதி.. இறுதியில் பிளேட்டை திருப்பிப் போடுவது போல செய்யும் பிரம்மானந்தத்தின் அப்பாவித்தனமான காமெடி.. என்று படம் பல சுவாரஸ்யங்களால் நிறைந்திருக்கிறது.
ஆதிக்கு நிச்சயமாக இந்த வேடம் பொறுத்தமில்லைதான். ஆனால் முந்தைய கமர்ஷியல் ஹீரோ வேடம் போலில்லாமல் நடிக்கவே தேவையில்லாத அளவுக்கு ஒரு கேரக்டரை கச்சிதமாக செய்திருக்கிறார் ஆதி. காதல் போர்ஷன் இல்லை என்பதால் ஒரு குறை முடிந்தது. ஆனால் ஆக்சன் போர்ஷனில் வஞ்சகமில்லாமல் வைத்து செய்திருக்கிறார். டைமிங்கான வசனங்களை முனீஸ்காந்துக்கு இணையாக பேசியதில் இருந்தே தெரிகிறது.. ஆதி நிரம்பவே தேறிவிட்டார் என்று..! வாழ்த்துகள்..
முனீஸ்காந்த் என்ற ராமதாஸ்தான் படத்தை தாங்கியிருக்கிறார். உண்மையான கடத்தல் பேர்வழியாக பெத்த அம்மாவுடன் ஏதோ சோறாக்கி சாப்பிடும் அளவுக்கு சின்னதா செய்றேன் என்று அடக்கமாக பேசி சீக்கிரமாக இறந்தும் போகிறார். ஆனால் மறுஉயிரில் வந்து இவர் கலக்கும் கலக்கல்தான் படத்துக்கு ஆணி வேர்.
தன் உற்ற நண்பர்களுக்கு உயிர் கொடுத்து அழைத்து வருவது.. மரகத நாணயத்திற்கு ஸ்கெட்ச் போடுவது.. ஆனந்த்ராஜின் அடியாளின் துப்பாக்கி குண்டுக்கு அசால்ட்டாக நெஞ்சை காட்டுவது.. சித்ரவதை கூடத்தில் அந்தக் குண்டனுக்கு பதிலடி கொடுப்பது என்று இவர் இருக்கும் காட்சிகளில் சிரிப்புக்கு பஞ்சமில்லை.
நிக்கி கல்ரானி.. அப்படியே அலாக்காக தூக்கி உச்சி முகிர வேண்டியவர். பஸ் ஸ்டாப்பில் ஆதியின் பார்வை தவிர்க்கும் லாவகம்.. எதிர்காலக் கணவருடன் பயணப்படும்போது ஏற்படும் சங்கடங்களை முகத்தில் காட்டி.. டார்ச்சர் கணவனால் இறப்புவரையிலும் போகும் அளவுக்கு துன்பப்படும் அந்தச் சின்ன கேரக்டரில் அடக்கமோ அடக்கம்..!
ஆனால் மறு உயிர் பிரவேசத்தில் “என்ன கிழிஞ்ச வேட்டி.. யாரை பொணங்குற.. உன்னைய பொணமாக்கிருவேன்..” என்று ஆண்மைத்தன குரலில் கோபத்தைக் காட்டும்போதுகூட சிரிப்பலை தியேட்டரில் உதிர்கிறது.. தொடர்ச்சியான இவரது பல ஆக்சன் காட்சிகள்.. அமர்ந்திருக்கும் ஸ்டைல்.. ஒரு இறந்து போன ஆன்மாவின் பயமறியா தகைமையை காட்டியிருக்கிறார் இந்த எழில்மிகு நங்கை. கங்கிராட்ஸ் மேடம்..!
ஆனந்த்ராஜுக்குள் இத்தனை காமெடியனா..? இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சே சுவாரஸ்யம். நேரில் போகாமல் ஸ்பீக்கர் செட்டை கொடுத்தனுப்பி அதில் பேசுவது.. சித்ரவதை கூடத்தை ரெடி செய்து வைத்து அதில் களமாடுவது.. அரை வேக்காடு அடியாட்களை வைத்துக் கொண்டு எப்படித்தான் இந்தத் தொழிலை செய்கிறாரோ என்று நம்மையே ஒரு நிமிடம் சிரிக்க வைத்துவிட்டார்.
 ‘அவன் மேட் இன் சைனா.. எப்பவாச்சும் வெடிப்பான். ஆனால் நான் மேட் இன் இண்டியா. எப்ப வேணாலும் வெடிப்பேன்’ என்று மைம் கோபியிடம் இவர் சீறுவதுகூட நகைச்சுவைதான்.
ஒரு காட்சியில் சமய சந்தர்ப்பம் இல்லாமல் வீரம் காட்டும் தன்னுடைய அல்லக்கைகளிடம், ‘நான் சீரியஸாவே சீரியஸான ஆளுடா.. இப்போ காமெடிதான் ட்ரெண்டுன்னு நினைச்சுத்தான் உங்களைக்கூட வெச்சிருக்கேன். உங்ககூட இருக்கிறதால என்னையும் காமெடியா பார்க்கிறானுங்கடா…” என்று வெறுத்துப் போன மன நிலையில் பேசுவதுகூட தியேட்டரே அதிரும் காமெடிதான்..!
ஆதியின் நண்பனாக படம் முழுக்க வலம் வரும் டேனியலுக்கு இந்தப் படம் நிச்சயமாக ஒரு பெரிய பெயரைப் பெற்றுத் தரும். மற்ற படங்களை போல கிறுக்கு வசனங்கள் எதுவுமே இல்லாமல், கதையுடன் ஒட்டிய டயலாக்குகளையே பேசி சிரிக்க வைத்திருக்கிறார் டேனியல்.
இரண்டு காட்சிகள் என்றாலும் மனதில் நிற்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். அதேபோல் இறுதிக் காட்சியில் வந்து காரியத்தை செய்து முடிக்கும் புரோகிதர் போல காட்சி தரும் சங்கிலி முருகன் ஒரு வித்தியாசமான கேரக்டர். சுத்தத் தமிழில் பேசி கலக்குகிறார்.
வந்த காரியம் முடிந்தவுடன் தங்களுக்குத் தாங்களே குழி தோண்டி வைத்துவிட்டு அதில் விழும் முன்பு “நான் போகலாம். ஆனால் என் இனிய தமிழ்.. இன்ப தமிழ் என்றும் சாகாது..” என்று சொல்லிவிட்டுப் போவது டச்சிங்கான வசனம்..!
கூடவே மைம் கோபி, முனீஸ்காந்தின் அம்மா, “அடிக்காதடா தையல் போட்டிருக்கேன். பிரிஞ்சிரும்டா” என்று ஆனந்த்ராஜின் அடியாளிடம் கெஞ்சி, கெஞ்சி தவிர்க்கப் பார்த்து முடியாமல் தையல் பிரிந்து தன் தலை துண்டாகிப் போய் விழுந்தவுடன் அதே டோனில் பேசும் நேசமணி என்னும் அருண்ராஜா காமராஜ் இன்னொரு பக்கம் சிரிக்க வைத்திருக்கிறார்.
பி.வி.ஷங்கரின் ஒளிப்பதிவில் அதிக இடறல் இல்லாமல் அனைத்துக் காட்சிகளிலும் ஒளி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனந்த்ராஜின் இடத்தில் மட்டுமே செட்டிங் லைட்டுகள் போடப்பட்டு ஜோராக இருக்கிறது ஸ்கிரீன். இறுதி காட்சியில் அந்த தகர டப்பா லாரியை எங்கேயிருந்து பிடித்து வந்தார்கள் என்று தெரியவில்லை. அதன் அமைப்பும், காட்சியமைப்பும் அட்டகாசம்..!
ரசிகர்கள் கொஞ்சமும் தோய்வடையாமல் இருக்கும் பொருட்டு பாடல் காட்சிகளை மாண்டேஜ் ஷாட்டுகளாவே நிரப்பி நம்மை சோர்வடையாமல் இருக்க வைத்திருக்கிறார் இயக்குநர். இசையமைப்பாளரின் பின்னணி இசைதான் ஜோர். அதிலும் ஆனந்த்ராஜுக்கு போட்டிருக்கும் பின்னணி இசை கச்சிதம்.. அதேபோல் கிளைமாக்ஸில் அந்த பேய் லாரிக்கு ஓட்டியிருக்கும் இசையும் ரம்மியம்..!
ஆங்காங்கே விட்டுவிட்டு நம்மை சிரிக்க வைக்க வேண்டும் என்று இயக்குநர் நினைத்திருக்கிறார் போலும். இடைவேளைக்கு பின்புதான் அதீதமான நகைச்சுவை தெறிக்க வைக்கிறது.
ஒட்டு மொத்தமாக ஒரு நகைச்சுவை படத்திற்கு என்ன தேவையோ, அது அத்தனையையும் தன்னில் உள்ளடக்கியிருக்கிறது இந்தப் படம்.
நிச்சயமாக உங்களுடைய சிரிப்புக்கு நாங்கள் கியாரண்டி. அவசியம் பாருங்கள்..!