என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
கள்ளச்சாராயம், விபச்சாரம், கடத்தல், கொலை, தாதாயிஸம் போன்றவைகளையெல்லாம் கேள்விப்பட்டும், திரைப்படங்களில் பார்த்தும் இப்படியெல்லாம் செய்ய முடியுமா என்றெல்லாம் எங்களுக்கு நாங்களே கேட்டுக் கொண்டிருந்த காலத்தில், ஆட்டோ சங்கர் என்கிற இந்த இளைஞரின் வழக்கு தமிழகத்தில் வெளியானபோது நிசமாகவே பகீரென்றானது..!
புலனாய்வு பத்திரிகைகள் அரசியல் கூட்டணிகளுக்கும், பிரிவுகளுக்கும், கொஞ்சம் பரபரப்பு, கிசுகிசுகளுக்கும் தீனி போட்டுக் கொண்டிருந்த காலத்தில் அவைகளின் மூலமாகவே சில படுகொலைகள் வெளியானதை பார்த்து நிஜமாகவே எனக்கு ஆச்சரியம்தான்.. அந்த வகையில் இந்த ஆட்டோ சங்கர் செய்த படுகொலைகளை வெளிக்கொணர முதல் முயற்சியாக இருந்த ஜூனியர்விகடன் பத்திரிகையாளர்களுக்கு எனது பாராட்டுக்கள்..!
அந்த முதல் கட்டுரை வந்த பிறகு ஆட்டோ சங்கரின் வழக்கு முடிவடையும்வரையிலும் அப்போதைய பல்வேறு பத்திரிகைகளிலும் நாள் தவறாமல் இடம் பிடித்தவர் ஆட்டோ சங்கர்..! கட்சியினரின் ஆதரவு, லஞ்சத்திற்கு அலையும் காவலர்களின் கூட்டணியும் இல்லாமல் இருந்திருந்தால் ஆட்டோ சங்கரின் வாழ்க்கை இந்த அளவிற்கு மாறிப் போயிருந்திருக்காது. எப்போதும் புறச் சூழல்களை சுத்தமாக மறைத்துவிட்டு நபர்கள் செய்யும் தவறுகளை மட்டுமே குறிப்பெடுத்துக் கொள்வது நமது வழக்கமாச்சே..!
ஆட்டோ சங்கர் பிடிபட காரணமாக இருந்த சம்பவங்களை அன்றைக்கே ஜூனியர்விகடன் கட்டுரையாக வெளியிட்டிருந்தது. அதே கட்டுரை இப்போது மீண்டும் 'பழசு இன்றும் புதுசு' தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரையில் படிக்காதவர்கள் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்..!
பழசு இன்றும் புதுசு - 12 : 13.7.88
தன் கணவர் சம்பத், தன் சகோதரர் மோகன், தன் கணவரின் நண்பர் கோவிந்தராஜ் ஆகிய மூவரையும் கடந்த ஒரு மாதமாகக் காணவில்லை என்று விஜயா சொன்னார். ''எப்படியாவது என் வீட்டுக்காரரைக் கண்டு பிடிச்சுக் குடுங்கய்யா...'' என்று விஜயா கதறி அழுதது, மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. பிறந்து இரண்டே நாளான குழந்தையையும் தூக்கி வந்திருந்தார்!
''என்ன சொல்லிவிட்டுப் போனார்கள்?'' என்று கேட்டதற்கு, ''திருவான்மியூர்வரை போறோம்னு சொன்னாங்க. போனவங்க, மறுநாள் வரைக்கும் திரும்பி வரலை. என்ன ஆச்சோன்னு கவலையோட இருந்தப்ப, மூணு பேரையும் ஏத்திட்டுப்போன ஆட்டோ டிரைவர் சேகர் வந்தாப்ல. சேகர் எங்களுக்கு நல்லாப் பழக்கமானவர்தான். அவர்தான், 'திருவான்மியூர்ல ஒரு ஹோட்டலுக்குப் போனோம். அங்க மது சாப்பிட்டாங்க. அப்ப திடீர்னு நாலைஞ்சு பேர் வந்து சம்பத், மோகனை எல்லாம் அடிச்சாங்க. நான் பயந்துபோய் ஓடியாந்துட்டேன்’னு சொன்னார். எனக்குப் பயமாப் போச்சு... எங்க வீட்ல இருந்தவங்க, 'இன்னிக்கு ராத்திரிவரைக்கும் பாப்போம்... வரலைன்னா, நாளைக்குப் போய் போலீஸ்ல கம்ப்ளெயின்ட் குடுக்கலாம்’னு சொன்னாங்க. மறுநாளும் வரலை. உடனே மயிலாப்பூர் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளெயின்ட் குடுத்தேன். எங்க வீட்டுக்காரர் மது சாப்பிடுவதைச் சொல்லக் கூச்சப்பட்டு, 'காணலை’ங்கிற விஷயத்தை மட்டும் சொன்னேன்...
தகராறுக்குப் பயந்து, வெளியூர்ல இருக்கும் சொந்தக்காரங்க வீட்டுக்குப் போயிருப்பாங்கன்னு நினைச்சு, எல்லாருக்கும் லெட்டர் போட்டு விசாரிச்சேன். திருவான்மியூர்லே போய் விசாரிச்சும் ஒண்ணும் தெரியலை. வேற வழி தோணாம, கவர்னர், ஜ.ஜி., கமிஷனர் எல்லாருக்கும் புகார் குடுத்தேன். யாரும் எதுவும் பண்ணலைங்க. அப்பதான் சில பேர், ஜூ.வி. ஆபீஸ் போய் சொல்லச் சொன்னாங்க...'' என்று அழுதார் விஜயா!
ஆட்டோ டிரைவர் சேகரிடம் சென்று விசாரித்தோம். விஜயா சொன்னதையே அவரும் சொன்னார். ''போலீஸ்ல இதை நீங்க சொல்லலையா?'' என்று கேட்டோம். ''மூணு நாள் கழிச்சுப் போய் சொன்னேன். எழுதித் தரச் சொன்னாங்க... எழுதிக் குடுத்தேன். அப்பாலே என்னைக் கூப்பிட்டு, 'என்ன நடந்திச்சு?’னு கேட்டுட்டுத் திரும்ப அனுப்பிட்டார் இன்ஸ்பெக்டர்!'' என்றார். இதற்கிடையில்தான் விஜயா, மயிலாப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்திருந்தார்.
எனவே மயிலாப்பூர் ஸ்டேஷன் போய், ''ஏதாவது தகவல் கிடைத்ததா?'' என்று கேட்டோம். ''திருவான்மியூர் போய் குடிச்சிட்டுக் கலாட்டா பண்ணியிருக்காங்க. அதனாலே திருவான்மியூர் ஸ்டேஷனுக்குத் தகவல் சொல்லிட்டோம்!'' என்று சிம்பிளாகச் சொன்னார்கள்!
திருவான்மியூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்தோம். தொடர்ந்து எங்கேஜ்டாகவே இருந்தது. நேரில் சென்றோம். இன்ஸ்பெக்டர் தலைமலை இருந்தார். போனின் ரிசீவர் கீழே எடுத்து வைக்கப்பட்டு இருந்தது. நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு, ''ஏன் சார் ரிஸீவரை எடுத்துக் கீழே வெச்சிருக்கீங்க?'' என்றதும், ''ஆமா, ஒரே தொந்தரவு... அதான் எடுத்து வெச்சேன். உங்களுக்கு என்ன வேணும்?'' என்றார். காணாமல் போன நபர்கள் குறித்துக் கேட்டதும், ''ஏன் சார், எங்க பொழப்புதான் மோசம்னா, உங்களுக்கும் என்ன தலையெழுத்தா சார்? போலீஸ் வேலைங்றது நீங்க நினைக்கிற மாதிரி அவ்வளவு லேசு இல்லை. காணாமப் போனவங்களைக் கண்டு பிடிக்கிற வேலைய மட்டும் பார்க்க முடியுமா? மூணு பசங்களும் தகராறு பண்ணாங்க... ஓடிப் போய்ட்டாங்க. எங்கே, எப்படி இருக்கானுகளோ? தகவல் இருந்தா, சொல்லி அனுப்பறேன்.'' என்றார்.
நாம், ''ஹோட்டலில் தகராறு நடந்ததே... அங்கே ஏதும் தகவல் கிடைக்கலையா?'' என்று கேட்டோம். ''நீங்க பத்திரிகைக்காரங்கதானே... நீங்களே ஹோட்டலுக்குப் போய் விசாரிக்க வேண்டியதுதானே...'' என்றார்.
அதுவும் சரிதான் என்று அந்த ஹோட்டலுக்குப் போய் டிபன் சாப்பிட்டபடியே சர்வர்களிடம் பேச்சுக் கொடுத்தோம். 'சங்கர்’ என்ற நபர்தான் அவர்களை அடித்தார் என்றும், அவரின் வீடு அருகில்தான் இருக்கிறது என்றனர். சங்கர் என்பவர் பெண் புரோக்கர், கள்ளச் சாராய வியாபாரி என்று குற்றம் சாட்டினார்கள். அன்றைய தினம் நடந்த சண்டையில் ஒருவரின் கை முறிந்து மயக்கமாகிவிட்டார் என்றும் மற்றொருவர் தலை உடைந்து வந்த ரத்தத்தைப் பார்த்தபோது, இறந்தே போயிருக்கலாம் என்றும் சொன்னார்கள்.
நேராக சங்கர் வீட்டுக்குச் சென்றோம். பெரிய வீடு. சங்கர் இருந்தார். விவரம் சொல்லிக் கேட்டோம். அவர் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல், ''அவங்க மூணு பேர் வந்தது உண்மைதான். அந்த ஹோட்டல் நம்ம நண்பருடையது. அங்க குடிச்சிட்டுக் கலாட்டா பண்ணி சேரை உடைச்சாங்க. உடனே நான் தட்டிக் கேட்டு கையிலே நூறு ரூபா குடுத்து அனுப்பிச்சுட்டேன்...'' என்றார் சாதாரணமாக.
குழப்பமாக இருந்தது. விஜயா, சம்பத்தின் சகோதரர் கோவிந்தன், அவர் நண்பர் கணேசன் ஆகியோரை அழைத்துக்கொண்டு, டி.ஐ.ஜி. ஜாஃபர் அலியை சந்தித்தோம். திருவான்மியூர் இன்ஸ்பெக்டர் சொன்ன பதில், ஹோட்டலில் விசாரித்த செய்திகள், சங்கர் பேசியது ஆகியவற்றைக் கேட்டுக் குறித்துக்கொண்ட டி.ஐ.ஜி. வயர்லெஸ் மைக் மூலம் டி.எஸ்.பி. தங்கையாவை வரவழைத்தார். அவரிடம், காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. மீண்டும் நம்மை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வரச் சொன்னார்.
மறுநாள் ஜாஃபர் அலியை சந்தித்தோம். ''சங்கர் ஒரு 'புரோக்கர்’ங்கிறது உண்மைதான். மூணு பேரையும் அடிச்சதுக்கு சங்கரை அரெஸ்ட் பண்ணி விசாரிச்சாங்களாம். உங்ககிட்ட சொன்ன மாதிரியேதான் ஸ்டேஷன்லயும் சொன்னானாம். திரும்பவும் அவன்கிட்டே விசாரிக்க சொல்லியிருக்கேன்...'' என்றார்.
ஜூலை 5-ம் தேதி இரவு கணேசன் பதற்றத்துடன் நம் அலுவலகம் வந்து சொன்ன விஷயம் அதிர வைத்தது. ''சார்... சார்... அந்த மூணு பேரையும் கொலை பண்ணிப் புதைச்சிட்டாங்களாம் சார். அந்த சங்கர் வீட்டாண்ட ஏதோ தகராறு நடந்தப்போ, இந்த விஷயம் லீக் ஆகியிருக்கு சார்!'' என்றார் கணேசன் அழுதுகொண்டே.
உடனே, கணேசனுடன் டி.ஐ.ஜி. ஜாஃபர் அலியை சந்திக்கச் சென்றோம். ஏதோ முக்கிய மீட்டிங். வெளியே வந்த டி.எஸ்.பி., தங்கையா, ''ஹலோ... கண்டு பிடிச்சாச்சுங்க. மூணு பேரையும் கொலைதான் பண்ணியிருக்கான். டி.ஐ.ஜி-கிட்டே கேட்டுக்கங்க...'' என்றார்.
டி.ஐ.ஜி. ஜாஃபர் அலி, ''சங்கர் மூணு பேரையும் கொலை பண்ணிட்டதாகவும், அவன் வீட்டுக்குப் பக்கத்துல புதைச்சிருக்கிறதாகவும் சொல்றான். ஸ்பாட்டுக்குப் போய்ப் பார்க்கணும்...'' என்று சொல்லியபடி எழுந்தார்.
கூடவே நாமும் போனோம். ஏகப்பட்ட போலீஸ் பந்தோபஸ்து போடப்பட்டு இருந்தது. புதைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட இடத்தைச் சுற்றி நிறைய வீடுகள் இருந்தன. புதைக்கப்பட்ட இடம் தாசில்தார் ஆபீஸ் கிளார்க் ஒருவருக்கு சொந்தமானது.
இடத்தைத் தோண்டிப் பார்ப்பது என்று முடிவாகியது. நாள்பட்ட பிணத்தைத் தோண்ட வேண்டுமெனில் ஆர்.டி.ஓ., தாசில்தார் முன்னிலையில்தான் தோண்ட வேண்டும் என்பது சட்டம்.
மறுநாள் (ஜூலை 7) காலை 10.30 மணி... டி.ஐ.ஜி. முதல் ஃபாரன்சிக் ஆபீஸர், ஸ்பாட் போஸ்ட்மார்ட்டம் செய்ய டாக்டர் என ஏகப்பட்ட அதிகாரிகள் கூடினார்கள். சாலையின் இரண்டு பக்கமும் மக்கள் அருகே வராமல் இருக்க, போலீஸாரால் தடை செய்யப்பட்டது. சுற்றிலும் விஷயம் பரவி, செம கும்பல்...
சம்பத், மோகன், கோவிந்தராஜ் ஆகியோரின் உறவினர்கள் சிலர் மட்டும் தடைசெய்யப்பட்ட இடம் அருகே அனுமதிக்கப்பட்டார்கள். ஏழு... எட்டு இளைஞர்கள் - தோண்டுவதற்காக... அழைத்து வரப்பட்டார்கள். அவர்களுக்காக பிராந்தி, சென்ட், ஊதுபத்தி போன்றவை வாங்கி வரப்பட்டன.
கொலையாளிகளில் ஒருவனாகக் குற்றம் சாட்டப்பட்ட பாபு என்பவன், இடத்தை அடையாளம் காட்ட, விலங்கோடு கொண்டு வரப்பட்டான். அவனை ஒரு வீட்டின் பின்புறம் அழைத்து விசாரித்துக் கொண்டிருந்தார் ஜாஃபர் அலி.
''எத்தனை பேர் சேர்ந்து கொலை பண்ணீங்க?''
''நாங்க ஏழெட்டுப் பேர் இருக்கும் சார்...''
''யாரெல்லாம்..?''
பெயர்கள் சிலவற்றைச் சொன்னான்.
''எப்படிடா கொன்னீங்க..?''
''ஹோட்டல்ல தகராறு நடந்ததும், உருட்டுக் கட்டையால அடிச்சோம் சார். அதுல ஒருத்தன் கை உடைஞ்சிருச்சு. உடனே மத்த ரெண்டு பேரும் ரொம்ப கோபமாகி, எங்க மேலே சேரைத் தூக்கி அடிக்க ஆரம்பிச்சாங்க. அப்புறம்தான் எங்க ஆட்கள் இன்னும் சில பேர் வந்து மூணு பேரையும் நல்லா அடிச்சு, சங்கர் வீட்டுக்குத் தூக்கிட்டுப் போய் போட்டுப் பூட்டி வெச்சிட்டோம். மறுநாள் காலைலே திறந்து பார்த்தோம். ரெண்டு பேர் செத்துக் கிடந்தாங்க... கோவிந்தராஜ் மட்டும் எழுந்திரிக்க முடியாம 'தண்ணி... தண்ணி’னு கேட்டான். உடனே சங்கர், 'ரெண்டு பேர் குளோஸ்... இவனை விட்டுவெச்சா நமக்குக் கஷ்டம்’னு சொல்லி, கோவிந்தராஜ் வாயைப் பொத்திக்கிட்டே கழுத்திலே காலை வெச்சி மிதிச்சுக் கொன்னுட்டான் சார்.''
''அடப் பாவி... இந்த மூணு பேரைத்தான் கொன்னிருக்கீங்களா... வேற யாராவது உண்டா..?''
'இன்னொருத்தன் ரவின்னு... அவனையும் குளோஸ் பண்ணியிருக்கோம் சார்...''
''அது யாரு..? எப்பக் கொன்னீங்க..?''
''ரவியும் ஒரு ஆட்டோ டிரைவர்தான்... பந்த் நடந்துச்சே... அப்பக் கொன்னோம், சார்.''
''மார்ச் 15-ம் தேதியா..?''
''ஆமா சார்...''
''ரவி பாடியை என்ன பண்ணீங்க?''
''அதையும், இங்கதான் புதைச்சு வெச்சிருக்கோம் சார்...''
''இங்கதான்னா... எந்த இடத்திலே?''
''சார் (நாம) நின்னுட்டிருக்கிற இடத்துலதான் சார்...''
''அடப்பாவி...'' என்றபடி வேறு பக்கம் சென்று அவனை மேலும் விசாரித்தார் ஜாஃபர் அலி.
அந்த நேரம் போலீஸார் சங்கரையும் ஸ்பாட்டுக்கு அழைத்து வந்துவிட, அவனிடம் விசாரணை நடந்தது. அப்போது சங்கரிடம் இருந்து கிடைத்த தகவல்கள்...
சுமார் ஆறு மாதங்களுக்கு முன் சங்கரிடம் வேலை பார்த்து வந்தான் சுடலை. திடீரென்று சுடலைக்கும் சங்கருக்கும் தகராறு (பெண் விஷயம்) வந்துவிட, எக்கச்சக்க போதையில் இருந்த சுடலையை ஒரு டவலால் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டான் சங்கர்.
பிணத்தை அப்புறப்படுத்த சோம்பல்பட்டு(?) வீட்டின் ஜன்னல்களையும், கதவுகளையும் மூடிவிட்டு இரண்டு கேன்களில் பெட்ரோல் வாங்கி சுடலையின் பிணத்தை எரித்தான் சங்கர். இரவு சுமார் 10 மணிக்கு எரிக்க ஆரம்பித்த சங்கர், கொஞ்சம் கொஞ்சமாகப் பெட்ரோலை ஊற்றி காலை 6 மணி வரை எரித்து வெறும் சாம்பலாக்கிவிட்டான். அந்தச் சாம்பலை எடுத்து வந்து பாபு மற்றும் நண்பர்களிடம், ''இதுதான் சுடலைன்னு சொன்னா, ஆச்சர்யமால்ல..?'' என்று கேட்டபடியே, சாம்பலைக் கடலுக்குக் கொண்டுபோய் கரைத்துவிட்டான். சுடலைக்கு உறவினர் யாருமே கிடையாது. எனவே, சுடலை காணாமல் போனதுபற்றி யாருமே போலீஸில் தெரிவிக்கவில்லை.
சுடலைக்கும் சங்கருக்கும் நண்பர் - கொல்லப்பட்ட ரவி. இவர் மார்ச் 15-ம் தேதி சங்கருடன் பிராந்தி சாப்பிட்டுக்கொண்டே, ''ஆமா... அன்னிக்கு சுடலை உன்னைப் பார்க்க வந்தானே... அப்புறம் ஆளையே காணோமே..?'' என்று கேட்க... ஒரு விநாடி திகைத்துப்போன சங்கர்... பார்த்தான்... ஒரு லுங்கியால் ரவியின் கழுத்தை நெரித்துக் கொன்று, புதைத்தேவிட்டான்.
மேற்படி விஷயங்கள் தெரிந்ததும், ரவியின் தாய் மற்றும் மனைவியை அழைத்து வரச் சொன்னார் டி.ஐ.ஜி. அப்போது ரவியின் தாயாரோ, ''ஏதோ பொணம் தோண்டறாங்களாம்'' என்று வேடிக்கை பார்க்கும் கும்பலில் ஒருவராக நின்று இருந்தார். அவரை அழைத்துப் பக்குவமாக விஷயத்தைச் சொன்னதுதான் தாமதம்... பெற்ற தாய் தன் வயிற்றிலும், மார்பிலும் அடித்துக்கொண்டு அழ... கொடுமை!
இதற்குள் உடல்கள் புதைக்கப்பட்ட இடம் தோண்டப்பட்டது. மிகவும் அழுகிய நிலையில் உடல் பாகங்கள் காணப்பட்டன. உடைகள் மட்டும் ஓரளவு அடையாளம் தெரிந்தன.
சம்பத், மோகன், கோவிந்தராஜ் மற்றும் ரவி ஆகியோர் தவிர, மேலும் சில கொலைகளை இந்த சங்கர் குரூப் பண்ணியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. எனவே, நம்மிடம் பல விஷயங்களைப் பிரசுரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார் டி.ஐ.ஜி.
இன்ஸ்பெக்டர் தலைமலை பற்றிக் குறிப்பிட்டோம். ''இன்ஸ்பெக்டர் உடனடியாகச் சில நடவடிக்கைகள் எடுத்திருந்தால், சுமார் 40 நாட்கள் கழித்துப் பிணத்தை எடுக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. எனவே, இன்ஸ்பெக்டர் எதனால் மெத்தனமாக இருந்தார் என்று விசாரித்துத் தக்க நடவடிக்கை எடுப்போம்...’ என்றார். தொடர்ந்து, ''என் பார்வைக்கு இந்த விஷயத்தைக் கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி...'' என்று சொன்னார் டி.ஐ.ஜி. ஜாஃபர் அலி.
ஆனால்... காலம் கடந்துவிட்டதே!
நன்றி : ஜூனியர்விகடன்-29-05-2011
|
Tweet |