எமன் - சினிமா விமர்சனம்

24-02-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சகுனியின் தாயக்கட்டைதான் உலகத்திலேயே மிகப் பெரிய சூழ்ச்சி எந்திரம் என்பார்கள். அதைதான் இந்தியத் திருநாட்டில் இப்போதைய அரசியல்வாதிகளும் கையாண்டு வருகிறார்கள்.
இப்போது இந்தியாவில் அரசியல் பதவிக்காக கொலைகளை செய்வது சாதாரணமான சமூகக் கொலைகளைவிடவும் அதிகமாகிவிட்டது. அரசியலை வைத்துதான் அதிகாரமும், பணமும், உயர் பதவிகளும் தானாகவே வந்து சேர்கிறது என்பதால் அந்த அரசியல் அதிகாரத்தை கைவிட அரசியல்வாதிகள் சுடுகாட்டுக்கு போகும்வரையிலும்கூட விட மறுக்கிறார்கள்.
அப்படிப்பட்ட அரசியலை பட்டவர்த்தனமாக சொல்லக்கூடிய திரைப்படங்கள் தமிழில் அதிகம் இல்லை. ‘அமைதிப்படை’ முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் மட்டுமே அரசியல்வாதிகளின் உண்மைத்தனத்தை தோலுரித்த திரைப்படங்கள். இப்போது மூன்றாவதாக ஒரு கெட்ட அரசியல்வாதி எப்படி உருவாகி வெற்றியடைகிறான் என்பதை வெளிப்படுத்த வந்திருக்கிறது இந்த ‘எமன்’ திரைப்படம்.

திருநெல்வேலியை பூர்வீகமாகக் கொண்ட விஜய் ஆண்டனி தனது சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவர். ஜாதிவிட்டு ஜாதி திருமணம் செய்த காரணத்துக்காக விஜய் ஆண்டனியின் அப்பாவை அவரது சொந்த தாய் மாமனும், அப்போதைய அரசியல்வாதியான அருள்ஜோதியும் சேர்ந்து கொலை செய்கிறார்கள்.
தனது தாத்தா சங்கிலி முருகனின் வளர்ப்பிலேயே வளர்த்தெடுக்கப்படுகிறார் மகன் விஜய் ஆண்டனி. இப்போது தாத்தாவுக்கு வயிற்றில் ஏற்பட்டிருக்கும் கேன்சர் கட்டிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம். சில லட்சங்கள் தேவை என்கிற நிலையில் இருக்கும் விஜய் ஆண்டனி, இந்தப் பணத்துக்காக எதையும் செய்யும் தயார் நிலையில் இருக்கிறார்.
அரசியல்வாதியாகவும் மற்றும் ரவுடியாகவும் இருக்கும் ஜெயக்குமாரின் மீது கார் ஏற்றி கொலை செய்ய முயற்சித்த ஒரு வழக்கில் செட்டப் டிரைவராக ஜெயிலுக்குள் போகிறார் விஜய் ஆண்டனி. இதற்கு பரிகாரமாக அவருக்குக் கிடைக்கும் பணத்தை வைத்து தனது தாத்தாவின் கேன்சர் ஆபரேசனை செய்து முடிக்கிறார்.
அதே நேரம் ஜெயிலில் அரசியல்வாதி மாரிமுத்துவின் நட்பு விஜய் ஆண்டனிக்கு கிடைக்கிறது. ஜெயக்குமாருக்கும் மாரிமுத்துவுக்கும் இடையில் பகை ஏற்பட்டு இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் கொலை செய்ய துடித்துக் கொண்டிருப்பதும் விஜய் ஆண்டனிக்குத் தெரிகிறது.
சிறையில் தன்னைச் சந்திக்க வரும் சமயத்தில் வரம்பு மீறி, தன்னைத் தாக்கும் ஜெயக்குமாரை பதிலுக்குத் தாக்குகிறார் விஜய் ஆண்டனி. அதோடு சிறையில் மாரிமுத்துவை கொலை செய்ய வந்த ஜெயக்குமாரின் ஆட்களையும் அடித்து விரட்டுகிறார். இதனால் விஜய் ஆண்டனியை கொலை செய்ய ஆத்திரத்துடன் இருக்கிறார் ஜெயக்குமார்.
மாரிமுத்துவின் அழைப்பின் பேரில் அவரது கூட்டணியில் சேர்கிறார் விஜய் ஆண்டனி. மாரிமுத்து, ஜெயக்குமார் இருவரின் அரசியல் குருவான முன்னாள் எம்.எல்.ஏ. கருணாகரன் என்னும் தியாகராஜன் இருவரையும் அழைத்து சமரசம் செய்து வைக்கிறார்.
அப்போது விஜய் ஆண்டனியை பற்றி தெரிந்து கொள்ளும் தியாகராஜன் ஜெயக்குமார், மாரிமுத்து கூட்டணி தனது சமரசப் பேச்சின் அடிப்படையில் விஜய் ஆண்டனியை கொலை செய்ய தீர்மானிக்கிறது. இந்த விஷயத்தை விஜய் ஆண்டனியிடம் போட்டுக் கொடுக்கிறார் கருணாகரன். இதனால் அந்த கொலை முயற்சியில் இருந்து தப்பிக்கும் விஜய் ஆண்டனி.. பதிலுக்கு தந்திரமாகச் செயல்பட்டு மாரிமுத்துவை அவரது அடியாள் மூலமாகவே கொலை செய்ய வைக்கிறார்.
இப்போது தியாகராஜனிடமே சரண்டராகும் விஜய் ஆண்டனிக்கு ஒரு ஏ.சி. பார் லைசென்ஸை தொகுதி மந்திரியான அருள்ஜோதியிடம் சொல்லி ஏற்பாடு செய்கிறார் தியாகராஜன். தன்னைப் பார்க்க வரும் விஜய் ஆண்டனியை பார்த்து அதிர்ச்சியாகிறார் மந்திரி. 30 வருடங்களுக்கு முன்பு தான் கொலை செய்த அப்பா விஜய் ஆண்டனியின் நகலாக, அப்படியே இவரும் இருப்பதைக் கண்டு பேச்சுமூச்சற்றுப் போகிறார்.
ஆனாலும் கருணாகரனின் சிபாரிசுப்படி அந்த ஏ.சி. பாரை விஜய் ஆண்டனிக்கே கொடுக்கிறார். இருந்தாலும் ஜெயக்குமாரிடம சொல்லி விஜய் ஆண்டனியை கொலை செய்ய முயல்கிறார் மந்திரி. இந்தக் கொலை முயற்சியிலும் தப்பிக்கும் விஜய் ஆண்டனி மீண்டும் தனது தந்திர புத்தியால் மந்திரியை வைத்தே ஜெயக்குமாரின் கதையை முடிக்கிறார்.
இடையில் திரைப்பட நடிகையான மியாவின் மீது காதல் கொள்கிறார் விஜய் ஆண்டனி. தக்க தருணத்தில் மியாவுக்கு உதவி செய்வதால் அவரும் இவருடன் நட்பாக பழகுகிறார். தன்னை படுக்கைக்கு அழைக்கும் மந்திரியின் மகனை பற்றி விஜய் ஆண்டனியிடம் சொல்கிறார் மியா.
விஜய் ஆண்டனி இது பற்றி மந்திரியிடம் சொல்லி எச்சரிக்க.. அவரோ அதை மிக அலட்சியமாக எடுத்துக் கொள்கிறார். இதனால் கோபப்படும் விஜய் ஆண்டனி மந்திரியை ஒருமையில் திட்டிவிட்டுப் போக கோபப்படும் மந்திரி தனது அடியாட்களை வைத்து மியா வீட்டிலும், விஜய் ஆண்டனியின் வீட்டிலும் பெட்ரோல் குண்டுகளை வீச வைக்கிறார்.
இந்த்த் தாக்குதலில் விஜய் ஆண்டனியின் தாத்தாவான சங்கிலி முருகன் இறந்து போக.. மியா தப்பிக்கிறார். இதன் பின்பு தான் தனியாளாய் நின்று இவர்களை ஜெயிக்க முடியாது என்று நினைக்கும் விஜய் ஆண்டனி அரசியலில் கால் பதிக்க முடிவெடுக்கிறார்.
அரசியலில் விஜய் ஆண்டனியால் ஜெயிக்க முடிந்ததா..? தியாகராஜன் இவரை வளர விட்டாரா..? மியா-விஜய் ஆண்டனி காதல் என்ன ஆனது..? மந்திரி என்ன ஆனார் என்பதெல்லாம் சுவையான திரைக்கதையில் பார்க்க வேண்டியவை.
விஜய் ஆண்டனி தனக்கேற்ற கதையை தேர்வு செய்வதை தொடர்ந்து தப்பில்லாமல் செய்து வருகிறார். இந்தக் கதையும் அவருக்கேற்ற கதைதான். என்ன…!? ஒரே மாதிரியான நடிப்பை தொடர்ந்து பார்த்து வருவதால், ரசிகர்களுக்கு கொஞ்சம் போரடிக்குமே என்றும் சொல்லத் தோன்றுகிறது.
மற்றபடி முரட்டு உருவமும், முறுக்கிவிட்ட மீசையுமாய், ஆஜானுபாகுவாய் அம்சமாய் இருக்கிறார் விஜய் ஆண்டனி. அரசியல்வாதிகளுக்கே உரித்தான திமிர், ஆணவத்தை தனது நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும் அழுத்தமாக காட்டியிருக்கிறார்.
விஜய் ஆண்டனியிடம் விருதுக்குரிய நடிப்பாக இல்லாமல் அவரிடத்தில் என்ன இருக்குமோ அதுவே நியாயமாக வெளிப்பட்டிருக்கிறது. அனைத்திற்கும் முத்தாய்ப்பாக கிளைமாக்ஸில் தியாகராஜனிடம் அவரது ஆட்டம் குளோஸ் என்பதை சொல்லும் மேடை காட்சியில் அரை பக்க முகம் மட்டுமே தெரிந்தது என்றாலும் விஜய் ஆண்டனி பொல்லாத அரசியல்வாதியாய் மிகவும் கவர்ந்திழுக்கிறார்.
தமிழ்ச் சினிமாவில் ரொமான்ஸ் மிக முக்கியமானது. இதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் காட்சிகள் இதுவரையிலான விஜய் ஆண்டனியின் எந்தப் படத்திலும் இல்லாததால். ஒரு சாராருக்கு அவரை இன்னமும் பிடிக்காமலேயே இருக்கிறது என்பதை விஜய் ஆண்டனி உணர வேண்டும்.
இந்தப் படத்திலும் காதல் காட்சிகள் இல்லாமல் மொன்னையாக கொண்டு போயிருப்பதால் அந்த போர்ஷன் ரசிக்கப்படவில்லை. காதலே இல்லாததால் பாடல் காட்சிகளும் அதிகமாக ஈர்க்கவில்லை என்பதுதான் உண்மை.
சண்டை காட்சிகளில் மட்டுமே புதிய தொழில் நுட்பத்தின் கை கொண்டு புதிய, புதிய உத்திகளுடன் கவனமாக படமாக்கியிருக்கிறார்கள். வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..
இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து காமெடியையும் கொண்டு வந்துவிட்டால் ஹீரோக்கள் லிஸ்ட்டில் நிச்சயமாக இடம் பிடித்துவிடுவார் விஜய் ஆண்டனி. தமிழகத்தில் அனைத்துத் தரப்பு சினிமா ரசிகர்களுக்கும் காமெடி, ஆக்சன், ரொமான்ஸ் ஹீரோக்கள்தான் அதிகம் பிடிக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இவருக்கு பின்பு என்றால் அது மந்திரியாக நடித்த அருள்ஜோதிக்குத்தான். சில படங்களில் சின்ன, சின்ன கேரக்டர்களில் நடித்திருக்கும் இவருக்கு இதில் மிகப் பெரிய கேரக்டர்தான். தின்னவேலி பாஷையில் வெளுத்துக் கட்டியிருக்கிறார். மகன் விஜய் ஆண்டனியை பார்த்தவுடன் இவர் காட்டும் நடிப்பிலேயே காட்சியில் ஒன்றிப் போக வைத்திருக்கிறார்.
ஜெயக்குமார், மாரிமுத்து இருவரும் ஆளுக்கொரு பக்கமாக திரைக்கதையை இழுத்திருக்கிறார்கள். நடிப்பிலும் சோடை போகவில்லை. நடிகர் சார்லியின் பண்பட்ட நடிப்புக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாக இந்தப் படம் அமைகிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகு என்றாலும் தியாகராஜனின் கம்பீரமான நடிப்பு, இந்தப் படத்திற்குக் கிடைத்த இன்னொரு பலம். தியாகராஜனின் மிகப் பெரிய பலமே அவரது குரல்தான். அந்தக் குரலை வைத்து இந்தப் படத்தில் தனது கேரக்டருக்கு மேலும் வலு கூட்டியிருக்கிறார்.
உண்மையைச் சொல்கிறாரா அல்லது பொய்யாக நடிக்கிறாரா என்பதையே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு முதல் சில காட்சிகளில் அவருடைய நடிப்பு இருக்கிறது. இதனாலேயே இயக்குநர் ஜீவா சங்கர் இவருக்குக் கொடுத்த கேரக்டர் நியாயமாகிறது. கிளைமாக்ஸில் அத்தனை பயத்தையும் முகத்தில் காட்டிக் கொண்டு விஜய் ஆண்டனியை சமாதானம் செய்ய முயலும் காட்சியில்கூட அந்த நடிப்பு ரசனையானது. வெல்டன் ஸார்..
ஹீரோயின் மியா ஜார்ஜுக்கு பெரிய அளவில் நடிப்புக்கான ஸ்கோப் இல்லையென்றாலும் தன்னை படுக்கைக்கு அழைக்கும் மந்திரியின் மகன் பற்றி சொல்லும்போது மட்டும் அவரை ரசிக்க வைத்திருக்கிறார். அவர் ஆடும் சோலோ நடனமும் அழகுதான்..! ஆனால் அந்த நடனத்தை அந்த இடத்தில் எதற்காக ஆடுகிறார் என்பது இயக்குநருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
இயக்குநர் பணியோடு ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றிய இயக்குநர் ஜீவா சங்கர் அதையும் திறம்பட செய்திருக்கிறார். வெளிநாட்டு லொகேஷன்களை தேடித் தேடிப் பார்த்து படமாக்கியிருக்கிறார். அழகு. அதேபோல் படத் தொகுப்பாளர் வீரசெந்தில் ராஜின் பணிகளும் சிறப்பு. இடைவேளைக்கு பின்பு கொஞ்சம் கத்திரியை போட்டிருந்தால் இன்னும் நன்றாகவே இருந்திருக்கும்.
படத்தின் பின்னணி இசை ஓகேதான். ஆனால் பாடல்கள்..? ‘என் மேல கை வைச்சா காலி’ என்ற பாடல் மட்டுமே பாடவும், துள்ளவும் வைத்திருக்கிறது. டூயட்டுகள் ஏமாற்றத்தை அளித்த கையோடு, படத்தின் வேகத்துக்கும் மிகப் பெரிய தடைக்கல்லை போட்டிருக்கின்றன.  
வசனங்கள் படத்திற்கு மிகப் பெரிய பலம் என்பதில் சந்தேகமில்லை. இன்றைய அரசியலை அலசி ஆராய்ந்து துவைத்து காயப் போடுவதுபோல சுவாமிநாதனும், விஜய் ஆண்டனியும் பேசும் காட்சிகளும், மந்திரியின் பி.ஏ.வான சார்லி பேசும் சில வசனங்களும் இன்றைய யதார்த்த அரசியல் உலகத்தை அப்படியே பிரதிபலிக்கிறது.
ஜீவா சங்கர் மிகத் திறமையான இயக்குநர். அவருடைய முந்தைய படங்களான ‘நான்’, ‘அமரகாவியம்’ ஆகியவற்றில் அவர் எழுதிய கதை, திரைக்கதையைவிடவும், இயக்கத் திறமைதான் அந்தப் படங்களை அதிகம் பேச வைத்தது. அதுபோலவேதான் இந்தப் படமும்..!
லாஜிக் மீறல்களும் இல்லாமல் இல்லை.. மாரிமுத்து இறக்கும் காட்சி, ஜெயக்குமார் இறக்கும் காட்சி, கிளைமாக்ஸ் காட்சிகளில் உண்மைத்தன்மை இல்லை. இயக்குநர் இந்தக் காட்சிகளில் ஏன் கோட்டைவிட்டார் என்பது புரியவில்லை. படம் நெடுகிலும் ஆள், ஆளுக்கு கொலை செய்து கொண்டிருக்க போலீஸின் நடவடிக்கைகள் பற்றியும் கொஞ்சம் சொல்லியிருந்தால் திரைக்கதை சமமாக இருந்திருக்கும்.
ஒரு திரைப்படமாக பார்க்கப் போனால் இது சொல்வது இன்றைய தமிழக அரசியல் உலகத்தின் யதார்த்த நிலைமையைத்தான் காட்டுவதாகச் சொல்லலாம்.. விஜய் ஆண்டனி என்னும் தமிழரசனும் ஒரு அயோக்கியன்தான். அந்த அயோக்கியன் எத்தனை பேரை வெட்டி, வீழ்த்திவிட்டு அரியணை ஏறுகிறான் என்பதை படத்தில் அழுத்தமாக சொல்லியிருக்கிறார். ஆனால் இது ஹீரோயிஸ படமாக இருப்பதால் ஒரு கெட்டவனை ஹீரோவாக காட்டியிருக்கிறார் என்கிற ஒரு தவறையும் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது.
மற்றபடி இந்த எமனும் பார்க்கக் கூடிய ஒரு எமன்தான்..!

காதல் கண் கட்டுதே - சினிமா விமர்சனம்

19-02-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

Montage Media Production நிறுவனம் வெளியிட்டிருக்கும் இந்தப் படத்தில் சிவா ஹீரோவாகவும், அதுல்யா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். இயக்குநர் சிவராஜ் ஹீரோவின் நண்பனாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இசை – பவன், ஒளி கலவை – ராஜ் மோகன், பாடல்கள் – மோகன் ராஜா, ஒளிப்பதிவு, எழுத்து, படத் தொகுப்பு, இயக்கம் – சிவராஜ். தயாரிப்பு – தேவா, சிவராஜ்.

ஹீரோ சிவா படித்து முடித்துவிட்டு வேலை தேடி வரும் வாலிபர். ஹீரோயின் அதுல்யா ‘தினக்கதிர்’ என்ற பத்திரிகையில் செய்தியாளராகப் பணியாற்றி வருகிறார். கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு பணிமாற்றலாகி வருகிறார்.
இருவரும் முதலில் நண்பர்களாக சந்தித்து பேசி, பழகி இப்போது ஒருவரையொருவர் பார்க்க முடியாமல் தவிக்கும் அளவுக்கு வந்த பின்பு, தாங்கள் ஒருவரையொருவர் காதலிக்கிறோம் என்பதை புரிந்து கொள்கிறார்கள்.
ஹீரோவுக்கு வேலையில்லாமல் இருப்பது ஒரு பெரும் குறையாக இருக்கிறது. செலவுக்கு காதலியிடமே பணம் கேட்கும் லெவலில் இருக்கிறார். இதனால் ஹீரோவின் நண்பரான சிவராஜ், தான் வேலை பார்க்கும் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் ஹீரோவை வேலைக்கு சேர்த்துவிடுகிறார்.
இந்த நேரத்தில் பத்திரிகை அலுவலகத்தில் ஹீரோயினுடன் வேலை செய்யும் சக பத்திரிகையாளர் அதுல்யாவை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளலாமா என்றும் கேட்க அதுல்யா அதிர்ச்சியாகிறாள். ஆனால் அவள் அதை நிராகரித்துவிட்டு இந்தச் சம்பவத்தை ஹீரோவிடம் சொல்லியும் விடுகிறாள்.
ஊடலும், கூடலுமாக போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் நிரந்தரமாக பிரியும் சூழலுக்கு காதலர்கள் வருகிறார்கள். ஹீரோயின் தன்னிடம் பொய் சொல்லிவிட்டு அதே பத்திரிகையாளருடன் பைக்கில் செல்வதை பார்க்கும் ஹீரோ சிவா கோபப்பட்டு வார்த்தைகளைக் கொட்ட.. இருவருக்குள்ளும் ரசாபாசமாகி மோதல் வெடித்து தற்காலிகமாக காதலுக்கு குட்பை சொல்கிறார்கள்.
இனி அந்தக் காதல் என்ன ஆனது..? காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பது இளைஞர்களை கவரும்வகையில் அமைக்கப்பட்டிருக்கும் படத்தின் திரைக்கதையில் சொல்லப்பட்டிருக்கும் கதையாகும்.
படத்தின் இயக்குநர் குறும்பட இயக்குநர் போலிருக்கிறது. அதன் தன்மை மாறாமல் ஆனால் சிறப்பான இயக்கத்தில்… மிகக் குறைந்த பட்ஜெட்டில்… அழகாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்.
முற்றிலும் புதுமுகங்களுடன் இப்படியொரு படத்தை இயக்கிக் கொடுத்திருக்கும் அவரை நிச்சயமாக நாம் பாராட்டியே ஆக வேண்டும். முதல் காட்சியிலேயே ‘நீ வாயை மூடு.. நீ மூடு’ என்று மகள்கள் இருவரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டிருக்க அப்போது அங்கே வரும் அம்மா ‘மொதல்ல ரெண்டு பேரும் மூடுங்கடி’ என்று சொல்ல.. தியேட்டரே அதிர்கிறது. இந்த ஒரு காட்சியே போதும் இயக்குநரின் இயக்கத் திறமைக்கு..!
காதலை மையப்படுத்திய கதை என்பதால் கொஞ்சம், கொஞ்சம் காதலர்களுக்கு பிடித்தமான வகையில் திரைக்கதை அமைத்து, வசனங்களையும் எழுதி கவர்ந்திழுத்திருக்கிறார் இயக்குநர் சிவராஜ்.
அம்மாவை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்திருக்கும் நிலைமையிலும் நண்பி அழைத்தவுடன் ஓடி வருவதும்.. இன்றைக்குச் சொல்லியே விடலாம் என்கிற நினைப்பில் ஒற்றை ரோஜாவை வைத்துக் கொண்டு காதலைச் சொல்வதும்.. அதற்கு காதலியின் ரிப்ளையும் செம க்யூட்.. காதலை கொண்டாடாதவர்களுக்குக்கூட அந்த சிச்சுவேஷன் நிச்சயமாக பிடிக்கும்.
ஹீரோயினின் அப்பா பாசம்.. அப்பாவின் பைக் மீதிருக்கும் இனம் புரியாத நேசத்தில் அந்த பைக்கை கற்றுக் கொண்டு அலுவலகத்திற்கு அதிலேயே வருவது.. என்று ஒரு சின்ன சோகத்தைக்கூட இயல்பாக திரையில் காண்பித்திருக்கிறார் இயக்குநர்.
காதலியிடமே காசு வாங்க ரோஷம் பார்த்துவிட்டு பின்பு வாங்கிக் கொள்வது.. காதலினால் விளைந்த பொஸிஸ்னெவ்ஸை வெளிப்படுத்த வாய்ப்பில்லாமல் தவிப்பது.. காதலைச் சொன்ன அதே டிரஸ்ஸை டிஸ்ஸால்வ் செய்த அன்றும் அணிந்திருக்க… இதனை காதலி சுட்டிக் காட்டும் இடம்.. கடைசியில் எத்தனை மறைத்தாலும் காதலை மறைக்க முடியாமல் இருவரும் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளாமலேயே அவரவர் வீடுகளின் வாசலில் வந்து நிற்கின்ற அந்த அழகு..! ஸோ ஸ்வீட் என்று கொண்டாட தோன்றுகிறது இயக்குநரை..!
ஹீரோ சிவா தமிழ்த் திரையுலகத்திற்குக் கிடைத்திருக்கும் இன்னுமொரு ரோமியோ என்று உறுதியாகச் சொல்லலாம். அத்தனை அழகாகவும், இயல்பாகவும் நடித்திருக்கிறார். ஹீரோயினும் அழகில் குறைவில்லை. அவருடைய கண்களும் சில காட்சிகளில் நடித்திருக்கின்றன. சில, பல குளோஸப் காட்சிகள் ஹீரோயினுக்காகவே வைக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது.
இவர்களைவிடவும் ஹீரோவுக்கு நண்பனாக நடித்திருக்கும் சிவராஜும், இன்னொரு ஊமை நண்பனாக நடித்திருப்பவரும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். சில இடங்களில் வசனங்களே பெரும் சிரிப்பை வரவழைக்கின்றன. தண்ணியடித்துக் கொண்டே.. சிக்கன் சாப்பிட்டுக் கொண்டே… தன் அம்மாவிடம் ‘அதையெல்லாம் செய்ய மாட்டேன்’ என்று சத்தியம் செய்து சொல்லும் இயக்குநர் சிவராஜின் நடிப்புக்கு ஒரு ஷொட்டு..! அதேபோல் ஹீரோயினின் அம்மாவும்.. சினிமாட்டிக் முகம் என்று அவரைச் சொல்லலாம்.
சிவராஜின் ஒளிப்பதிவு துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் படத்தை கலர்புல்லாக காட்டியிருக்கிறது.  ஹீரோயினின் அழகை இன்னும் மெருகேற்றி காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். பவனின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருந்தாலும் அது ஒரு முறைதான் என்பதில் மட்டுமே வருத்தம் மேலிடுகிறது.
ஆனால் பாடல் காட்சிகளின் அனைத்து மாண்டேஜ் ஷாட்டுகளும் அழகானவை. ரம்மியமானவை. பின்னணி இசையை உறுத்தாத அளவுக்கு கொண்டு வந்து இயக்குநருக்கு கை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர்.
இக்கால இளைஞர்களின் வாழ்க்கையை ரொம்பவுமே யதார்த்தமாகவே பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். அனைத்து கதாபாத்திரங்களுமே புதுமுகங்கள் என்று சொல்ல முடியாத அளவுக்கு நடித்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
காலம் காலமாகச் சொல்லப்படும் காதல் கதைதான்.. காதலர்களின் ஊடல், மோதல், கூடலைத்தான் இந்தப் படம் சொல்கிறது என்றாலும்… ஒரு நிமிடம்கூட சொல்ல வந்த விஷயத்தில் இருந்து பிறழாமல் திரைக்கதையை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர்.
தன்னுடைய அழுத்தமான இயக்கத்தினால் ‘படத்துல ஏதோ சொல்லியிருக்காங்கப்பா’ என்று சாதாரணமாக படம் பார்க்க வந்தவர்களைக்கூட சொல்ல வைத்திருக்கிறார் இயக்குநர்.
இதுவே இயக்குநருக்குக் கிடைத்த வெற்றி..! காதலர்களுக்கும் கிடைத்த வெற்றிதான்..!

பகடி ஆட்டம் - சினிமா விமர்சனம்

19-02-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்தை மரம் மூவீஸ் மற்றும் பரணி மூவீஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் டி.எஸ்.குமார் மற்றும் கே.ராமராஜ் தயாரித்துள்ளனர்.
இதில் ரகுமான், அகில்,  கவுரி நந்தா, சுரேந்தர், மோனிகா, ‘கருத்தம்மா’ ராஜஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர். ராம் கே.சந்திரன் எழுதி இயக்கியிருக்கிறார். 

செல்லமாக கஷ்டம் தெரியாமல் வளர்க்கப்படும் பையன்கள்.. எப்படியெல்லாம் கெட்டு சீரழிகிறார்கள் என்பதை இப்போதைய செய்தித் தாள்களை புரட்டிப் பார்த்தே தெரிகிறது. பல பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் வசதி, வாய்ப்புகள் கைகளில் இருப்பதாலேயே உலகத்தையே தங்கள் காலடியில் போட்டு வைத்திருப்பதுபோலவே நடந்து கொள்வார்கள்.
காதல் என்கிற பெயரில் பெண்களுடன் பழகுவது.. உறவு கொள்வது.. பின்பு கழட்டிவிடுவது என்பதையெல்லாம் இப்போது மிக எளிதாக, இதுதான் இப்போதைய டிரெண்ட்  என்பதுபோல செய்கிறார்கள். இவர்களது இந்த வெளிப்படையான கற்பழிப்பினால் பாதிக்கப்படும் ஒரு பெண்ணின் வாழ்க்கைக் கதைதான் இந்த பகடி ஆட்டம்.
நாயகன் சுரேந்தர் பணக்கார அப்பாவான நிழல்கள் ரவி, சுதாவின் ஒரே மகன். கல்லூரியில் படிக்கிறான். ஆனாலும் பெண்கள் விஷயத்தில் மிகத் தீவிரமானவன். யாரையாவது பிடித்துவிட்டால் அந்தப் பெண்ணை ஏமாற்றி அடைய வேண்டும் என்று நினைக்கும் கொடூரமானவன். தான் செய்வதை தவறு என்றே உணராத அளவுக்கு இருக்கிறான்.
பல பெண்களுடன் பழகி வருவதால் அவர்களது பெயர்களை தனது செல்போனில் ஐஸ்கிரீம், சாக்லேட், அம்மா, அப்பா, பாப்கார்ன் என்று விதம்விதமான பெயர்களில் பதிவு செய்து வைத்து தனது அம்மா, அப்பாவை ஏமாற்றியும் வருகிறான்.
சுரேந்தர் ஒரு நாள் தனது காதலியைப் பார்க்க அவசரமாக செல்லும்போது வழியில் யாரோ முகம் தெரியாத சிலரால் கடத்தப்படுகிறான். சில மணி நேரங்கள் கழித்து அவன் முழித்துப் பார்க்கும்போது ஒரு மரப் பெட்டிக்குள் அவன் அடைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிகிறது.
அந்த பெட்டிக்குள் ஒரு சிறிய பழைய மாடல் செல்போனும், லைட்டரும் மட்டுமே இருக்கிறது. செல்போனில் அவுட் கோயிங் தடையாகியிருக்கிறது. இன்கமிங் மட்டுமே.. அந்த செல்போனில் லைனுக்கு வரும் ஒரு ஆள் அவனது ஆண் உறுப்பை அவனே அறுத்துக் கொடுத்தால் அவனை அந்தப் பெட்டியில் இருந்து விடுவிப்பதாகச் சொல்கிறான்.
இப்போதுதான் தன்னால் பாதிக்கப்பட்ட யாரோ ஒரு பெண்தான் தன்னை இந்தக் கதிக்கு ஆளாக்கியிருப்பதாக உணர்கிறான் சுரேந்தர். அந்தப் பெண் கெளசல்யா என்னும் மோனிகா.
அரசுப் பள்ளியில் ப்ளஸ் டூ வகுப்பில் 1100 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதல் மாணவியாக வரும் மோனிகாவுக்கு அம்மா, அக்கா, அண்ணன், அண்ணி உள்ளனர். அவளது அக்காவான கவுரி ந்ந்தா ஆட்டோ ஓட்டி குடும்பத்தை சமாளிக்கிறார். அண்ணன் செல்போன் ரிப்பேர் கடை வைத்திருக்கிறார்.
மோனிகா நன்றாக படிப்பதால் இவரையாவது படிக்க வைப்போம் என்று நினைத்து கல்லூரியில் சேர்த்துவிடுகிறார்கள். அங்கேதான் தனது நண்பியால் சுரேந்தருக்கு அறிமுகமாகி பின்பு அவனுடன் காதலாகிவிடுகிறாள் மோனிகா.
இதையறியும் கவுரி தனது தங்கையை கண்டிக்கிறாள். சற்று முழித்துக் கொள்ளும் மோனிகா.. காதலை தியாகம் செய்ய முனையும்போது வழக்கமான தீவிரமான காதலன்போல் தான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி அவளுடன் பழகுகிறான் சுரேந்தர்.
ஒரு நாள் அவனது அப்பா, அம்மா வீட்டில் இல்லாத நேரத்தில் மோனிகாவை வீட்டுக்கு வரவழைத்து தனது தாகத்தைத் தீர்த்துக் கொள்கிறான். இந்த வேட்டையை செல்போனில் படமும் பிடித்து வைத்துக் கொள்கிறான். இதையறியும் மோனிகா அந்த படத்தை அழிக்கும்படி நேரில் வந்து அழுது, கெஞ்சி கேட்கிறாள். சுரேந்தர் மறுக்கிறான். இதனால் கவலையடையும் மோனிகா அவசரப்பட்டு தற்கொலை செய்து கொள்கிறாள்.
இந்த மோனிகாவால்தான் தான் இந்த நிலைமைக்கு வந்திருப்பதாக நினைக்கிறான் சுரேந்தர். அதே நேரம் சுரேந்தர் காணாமல் போய்விட்டதாக போலீஸுக்கு தகவல் வர.. துணை கமிஷனரான ரகுமான் களத்தில் இறங்குகிறார்.
அவர் விசாரிக்க.. விசாரிக்க.. சுரேந்தர் பற்றிய ஏடாகூடா தகவல்கள் அனைத்தும் அவருக்குத் தெரிய வருகிறது. முடிவு என்ன..? பெட்டியில் இருந்து சுரேந்தர் மீட்கப்பட்டானா..? யார் அவனை கடத்தி வைத்திருந்தது..? என்பதையெல்லாம் தியேட்டருக்குச் சென்று படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்களேன்..!
ஸ்பெயின் நாட்டு படமான Buried என்கிற திரைப்படத்தின் தழுவல்தான் இது. இந்தப் படத்தின் கதைக் கருவைக் கையாண்டு ஏற்கெனவே இரண்டு தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனால் இந்தப் படத்தில்தான் முறைப்படி டைட்டிலில் பெயர் போடப்பட்டு நன்றி சொல்லியுள்ளார்கள். அந்த வகையில் நேர்மையாக ஒத்துக் கொண்டமைக்காக இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நமது நன்றிகள்.
சுரேந்தர் புதுமுகம். தன்னுடைய வயதுக்கேற்ற கேரக்டர் என்பதால் அதனை உணர்ந்து, அனுபவித்து நடித்திருக்கிறார். இவரை வில்லனாக பாவிக்க ஒரேயொரு காட்சி மட்டுமே உண்டு என்பதால் அத்தனை ரணமாக நம் மனதில் பதியாமல் போய்விட்டார்.
ஹீரோயினான மோகினி நல்ல அழகி. கண்களே பேசுகின்றன. இவரும் அதே வயதில்.. அந்த வயதுக்கேற்ற கேரக்டர் ஸ்கெட்ச்சுடன் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். இவரைவிடவும் இவரது அக்காவாக ஆட்டோ டிரைவர் வேடத்தில் நடித்திருக்கும் கவுரி நந்தாவுக்கு மிகப் பெரிய பொக்கே ஒன்றை கொடுக்கலாம். அழுத்தமான வேடம்.
தங்கையிடம் காண்டம் பாக்கெட்டை கொடுக்கும் காட்சியிலும், அடுத்து அவர் பேசும் வசனங்களும் உறுதியானவை. கிளைமாக்ஸில் ரகுமானிடம் முடிஞ்சா கண்டுபிடிச்சுக்குங்க என்று சவால் விட்டு தைரியமாக நிற்கும் காட்சியில் சபாஷ் போட வைத்திருக்கிறார்.
டிபிக்கல் அம்மாவாக ராஜஸ்ரீ, நிழல்கள் ரவி, சுதா என்று தங்களது கேரக்டர்களை உணர்ந்து நடித்தருந்தாலும் துணை கமிஷனரான ரகுமான் இன்னொரு பக்கம்.. இடைவேளைக்கு பின்னான கதையை நன்கு நகர்த்த உதவியிருக்கிறார்.
வீட்டில் அம்மா, அப்பா எத்தனை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்கள். இதனை உணராமல் அவர்களை ஏமாற்றி ஊரைச் சுற்றி வருகிறார்களே என்று ரகுமான் பேசும் பல வசனங்கள் சாட்டையடி..
”எதுக்கும் தயாரான பொண்ணுகளை என்ன வேண்ணாலும் பண்ணித் தொலைங்கடா. படிக்க வர்ற பொண்ணுங்களையாச்சும் படிக்க விடுங்கடா…” என்ற வசனம் மிக இயல்பானது.
கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவில் படம் மிளிர்கிறது. குறையில்லாத ஒலிப்பதிவும், இசையும்கூட.. கார்த்திக் ராஜாவின் இசையில் இசைஞானி இளையராஜாவின் குரலில் ஒலிக்கும் அந்த சோகப் பாடல் நிச்சயமாக கவனிக்கத்தக்க பாடல்களில் ஒன்றுதான். கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது.
'இளமை என்னும் பூங்காற்று' பாடலே 3 நிமிடங்கள் தொடர்வதெல்லாம் கார்த்திக் ராஜா இருப்பதால் சாத்தியமாயிற்றா என்று தெரியவில்லை. ஆனால் கார்த்திக் ராஜாவால்கூட ஏன் புதிய நல்ல இசையைக் கொடுக்க முடியவில்லை என்றுதான் தெரியவில்லை.
இடைவேளைக்கு பின்பு ரகுமான் வந்த பிறகு.. விசாரணையின் வேகத்தின் காரணமாய் படம் மிக வேகமாய் நகர்கிறது. முடிவில் யாரும் எதிர்பார்க்காத டிவிஸ்ட்டை துணை கமிஷனரான ரகுமான் சொல்லும்போது யாரோ ஓரிருவராவது தியேட்டரில் நிச்சயமாக கை தட்டுவார்கள். அப்படியொரு வலுவான வசனம் அது..!
சுரேந்தர் பெட்டிக்குள் அடைக்கப்பட்ட பிறகே மோனிகாவின் கதை திறக்கப்படுவதால் அந்த இடத்தில் இருந்தே சஸ்பென்ஸ் கூடிக் கொண்டே போகிறது.. இறுதியில் இதனைச் செய்வது யாராக இருக்கும் என்பதை சில, சில குளோஸப் காட்சிகளே காட்டிக் கொடுத்து விடுகிறது என்பதுதான் படத்தின் மிகப் பெரிய குறை.
காதல் என்ற போர்வையில் பெண்களின் வாழ்க்கையில் விளையாடும் இளைஞர்களுக்கு இறுதியில் கிடைக்கும் தண்டனை என்ன என்பதை நயமாக இதில் சொல்லியிருக்கிறார்கள். ஐயோ பாவம் என்ற பச்சாபாதம் ரசிகனுக்குள் வராத அளவுக்கு திரைக்கதையை எழுதியருக்கிறார் இயக்குநர் ராம்.கே.சந்திரன். வெல்டன் ஸார்..
இந்தப் படத்தைப் பார்க்கும் இளைஞர்களும், இளைஞிகளும் ஒரு நிமிடமாவது தங்களை சுய பரிசோதனை செய்து கொள்வது நலம் எனலாம்.

ரம் - சினிமா விமர்சனம்

19-02-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘ஆல் இன் பிச்சர்ஸ்’ சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
‘வி.ஐ.பி.’ படத்தில் தனுஷுக்கு தம்பியாக நடித்த ஹரிஷிகேஷ், சஞ்சிதா, மியா ஜார்ஜ், விவேக், நரேன், அம்ஜத் மற்றும் அர்ஜுன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கிறார். அறிமுக இயக்குநர் சாய் பரத் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

நாயகன் ரிஷிகேஷ், அம்ஷத், அர்ஜுன் சிதம்பரம், சஞ்சிதா ஷெட்டி, இவர்களுடன் விவேக்கும் சேர்ந்து கொள்ள.. இந்த டீமே ஒரு ஸ்மால் கொள்ளையர் டீம். அவ்வப்போது ஏதாவது, எங்கேயாவது கொள்ளையடித்து வாழ்வாங்கு வாழ்வார்கள்.
இவர்களின் இந்த திருட்டு வேலைக்கு வேலூர் இன்ஸ்பெக்டரான நரேனும் உடந்தை. கிடைத்த பணத்தில் கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக நரேனுக்கும் ஒரு பங்கினை கொடுத்துவிடுவது இவர்களது வாடிக்கை.
இந்த முறை ஒரு பெரிய தொகையை கொள்ளையடித்துவிட்டு இந்தப் பொது வாழ்வில் இருந்து வாலண்டரி ரிட்டையர்ட்மெண்ட் வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள்.
பண்டைய வாழ்க்கைச் சூழலில், போர்க்களத்தில் மாண்டவர்களின் உடல் இருந்த இடத்தின் அருகே மெர்க்குரி ஸ்டோன் எனப்படும் கற்களையும் ஒரு எலுமிச்சம் பழத்தையும் புதைத்து வைப்பது பழக்கம் என்றும்.. இதனால் மாண்டவர்களின் ஆத்மா சாந்தியாகும் என்ற நம்பிக்கை இருந்த்தாம்.
அந்த மெர்க்குரி ஸ்டோன்ஸ் இப்போதைய உலகத்தில் அரிதிலும் அரிதாகத்தான் இருக்கிறது என்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாக இந்தக் குழுவினருக்குத் தெரிய வருகிறது. அந்தக் கற்கள் 3-னை போலீல் பாதுகாப்புடன் வேறு இடத்துக்குக் கொண்டு செல்லப் போகிறார்கள் என்பது இன்ஸ்பெக்டர் நரேன் உதவியுடன் தெரிந்து கொள்கிறது ஹரிஷிகேஷ் டீம்.
சொதப்பாமல் அந்தக் கற்களை கொள்ளையடிக்க திட்டம் தீட்டுகிறார்கள். அதன்படியே செயல்பட்டு கச்சிதமாக 3 கற்களையும் திருடிவிட்டு எஸ்கேப்பாகுகிறார்கள். வழக்கமாக நரேனை சந்தித்து பாகம் பிரிக்கும் வேலையைத் தொடங்குவதற்கு பதிலாக.. எத்தனை நாளைக்குத்தான் அவனுக்கு கமிஷன் கொடுப்பது.. இந்த முறை கொடுக்காமல் நழுவிவிடலாம் என்று நினைக்கிறான் ஹரிஷிகேஷ்.
இதற்காக குழுவில் இருக்கும் அர்ஜூன் சிதம்பரத்திற்கு தெரிந்த ஏலகிரி மலையில் இருக்கும் ஒரு பங்களாவிற்கு வந்து சேர்கிறார்கள்.
அந்த பங்களாவிலோ ஏற்கெனவே நரேனால் படுகொலை செய்யப்பட்ட அப்பா, மகள், மகன் என்று மூன்று பேய்கள் தங்களது ஆத்மா சாந்தியாகாமலும், நரேனை பழி வாங்கவும் துடியாய் துடித்துக் கொண்டிருக்கின்றன.
இந்த நேரத்தில் நரேனுடன் தொடர்புடைய இந்த கொள்ளையர் கூட்டம் வீட்டுக்குள் வந்துவிட.. பேய்களுக்கும், இவர்களுக்குமான ஆட்டம் துவங்குகிறது. கடைசியில் பேயிடம் இருந்து இவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதுதான் படமே..!
நாயகன் ஹரிஷிகேஷ் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷுக்கு தம்பியாக நடித்தவர். இதில் தனி ஹீரோவாகும் ‘வெறி’யுடன் படத்தில் நடித்திருக்கிறார். எந்தக் காட்சியிலும் தப்பித் தவறிகூட நல்லா நடிச்சிருக்கார் என்று நாம் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பது மாதிரியேதான் நடித்திருக்கிறார்.
எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரியான எக்ஸ்பிரஷனை வைத்துக் கொண்டு படத்தில் விவேக்கே கிண்டல் செய்வதை ஊர்ஜிதப்படுத்தும்விதமாக இருக்கிறது இவரது நடிப்பு. ‘இவன் வேற, எல்லாத்துக்கும் ஒரே எக்ஸ்பிரஷனைக் காட்டிக்கிட்டு!’’ என்று ஒரு காட்சியில் ஹரிஷிகேஷை கிண்டல் செய்வார் விவேக். உண்மையில் அது கிண்டல் இல்லை. யதார்த்தமான உண்மையே அதுதான்.
அம்ஷத், அர்ஜூன் சிதம்பரம், விவேக் ஆகியோரில் விவேக்கே மொத்தப் படத்தையும் தன் முதுகில் சுமந்திருக்கிறார். அவருடைய டைமிங் காமெடிக்கள் மட்டும் இல்லையெனில் இந்தப் படத்தில் முழுமையாக உட்கார்ந்திருக்கவே முடியாது. அப்படியொரு திரைக்கதை, இயக்கம். நல்லவேளையாக விவேக்குதான் ரசிகர்களை காப்பாற்றியிருக்கிறார்.
அதிலும் சரவெடியாக அவர் வெடிக்கும் சில வசனங்களே புல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தியைத் தருகிறது.
‘என்னடா விஜய் – அஜித் ஃபேன்ஸ் மாதிரி சண்டை போட்டுக்கிறீங்க, இது ரோடா இல்லை ஃபேஸ்புக்கா..?’
‘இவன் போலீஸா, பிரஸ்ஸா இல்ல… மீம்ஸ் போடுறவனானு தெரியலையே..!’
‘நல்லா எம்.சி.ஆர் வேட்டிய கட்டிக்கிட்டு மோகன்லால் மாதிரி ஒரு உருவம் வந்து துவம்சம் பண்ணிடுச்சுடா…’
‘650 ஸ்பேர் பார்ட்ஸ்ல ஓடாத வண்டியாடா… இந்த எலுமிச்சை பழத்தால ஓடப் போகுதுன்னு கேட்டவன்டா நானு. ஏதோ பேய் சீஸன்ல வந்து நானும் உங்ககிட்ட மாட்டிக்கிட்டு, இந்தக் கஷ்டத்தை எல்லாம் அனுபவிக்கிறேன்’ என்று இறுதியில் விவேக் சொல்லும் இந்த நச்சு டயலாக் படம் பார்க்க ரசிகனுக்கும் சேர்த்தே விவேக் சொன்னதாகவே எடுத்துக் கொள்ளலாம்..!
நரேன் முகமூடிக்கு பிறகு மீண்டும் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பெரிய அளவில் நடிப்புக்கு ஸ்கோப் இல்லையென்பதால் வேறு எதுவும் சொல்வதற்கில்லை.
அர்ஜூன் சிதம்பரத்தைவிடவும் பேச இயலாதவராக வரும் அம்ஷத் கொஞ்சம் ரசிக்க வைத்திருக்கிறார். நடிப்பில் கொஞ்சம் கவனிக்கவும் வைத்திருக்கிறார். பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ் என்று இரு கதாநாயகிகள். படம் முழுக்க அரைக்கால் டவுசர் போட்டுக் கொண்டு அந்த இரவு வேளையில் கெட்ட ஆட்டம் போடுகிறார் சஞ்சிதா ஷெட்டி. மியா ஜார்ஜ் படத்தின் பிற்பாதியில் வெயிட்டான ரோலை செய்திருக்கிறார்.
விக்னேஷ் விசுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. படத்தின் முக்கால் பாகம் இருட்டிலேயே நடைபெறுவதால் மிரட்டுவதற்கு கேமிரா மிகப் பெரிய பங்களிப்பை செய்திருக்கிறது. ஒளிப்பதிவில் குறைவில்லைதான். அதேபோல் படத் தொகுப்பாளரும் தனது வேலையை கச்சிதமாகச் செய்திருக்கிறார். பல இடங்களில் பயமுறுத்தியிருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் படத் தொகுப்பாளர்தான். பாராட்டுக்கள்.
அனிருத்துக்கு இசையறிவு குறைஞ்சிருச்சு போலிருக்கு. இளையராஜாவின் புகழ் பெற்ற பாடலான ‘சங்கத்தில் பாடாத கவிதை’ பாடலின் இசையை படத்தின் முற்பாதியில் பல இடங்களில் பின்னணி இசையாக பயன்படுத்தியிருக்கிறார். இதுல இவர்தான் சிறந்த இசையமைப்பாளர்ன்னு அவரே சொல்லிக்கிறாரு.. பாடல்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு நிறைவை கொடுத்திருக்கின்றன.
பார்த்து, பார்த்து சலித்துப் போன பேய் படங்களில் இதுவும் ஒன்றே..! பயமுறுத்தப்படும் ஒரு சில காட்சிகளைத் தவிர மற்றவைகளில் எந்த புதுமையும் இல்லை. டெம்ப்ளேட்டான திரைக்கதை என்பதால் அடுத்து என்ன நடக்கும் என்பதை நாமளே சொல்லிவிடலாம் போலிருக்கிறது.
நகைச்சுவையை இன்னமும் அதிகம் கலந்திருக்கலாம். திரில்லரையும் கூட்டியிருக்கலாம்.. இறந்து போன ஆத்மாக்களின் சாவுகளின்போது ரசிகனுக்குள் புகுந்திருக்க வேண்டிய அனுதாப உணர்வு இதில் மிஸ்ஸிங் என்பதால் பேய்கள் ரசிகர்களை அதிகம் கவரவில்லை என்பதுதான் உண்மை.
மொத்தத்தில் இந்த ‘ரம்’ பாதியளவுதான் ‘கிக்’கினை ஏற்றியிருக்கிறது. 

என்னோடு விளையாடு - சினிமா விமர்சனம்

19-02-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்தை ரேயான் ஸ்டுடியோஸ் மற்றும் டொரோண்டோ ரீல்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
‘காதல்’ படத்தின் மூலம் நம் எல்லோர் வீட்டுப் பிள்ளையாகவே ஆகிவிட்ட ‘சின்ன தளபதி’ பரத்தும், ‘மத யானைக் கூட்டம்’ படத்தில் அறிமுகமாகி ‘கிருமி’வரை மிக வேகமாக வளர்ந்து வரும் கதிரும் இந்தப் படத்தில் ஹீரோக்களாக நடித்துள்ளனர். 
மேலும் சாந்தினி, சஞ்சிதா ஷெட்டி, ராதாரவி, யோக் ஜே.பி, கமலா தியேட்டர் கணேஷ், வெங்கடேஷ்  மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – யுவா, படத் தொகுப்பு – கோபி கிருஷ்ணா, இசை- சுதர்சன்.எம் குமார்  & ஏ.மோசேஸ்,  பாடல்கள் – விவேகா, சாரதி, அருண்ராஜா காமராஜ், கதிர்மொழி ஆக்ஷன்-ஓம் பிரகாஷ்,  நடனம்-விஜிசதீஷ், கலை-சுப்பு அழகப்பன், எழுத்து, இயக்கம்- அருண் கிருஷ்ணசுவாமி, தயாரிப்பு – ரேயான் ஸ்டுடியோஸ் மற்றும் டொரோண்டோ ரீல்ஸ்.

ஒரு கட்டுமான நிறுவனத்தில் அக்கவுண்டன்ட்டாக பணிபுரியும் பரத்துக்கு குதிரை ரேஸ் மீது அலாதி பிரியம். தனது கம்பெனியில் இருந்துகூட பணத்தைக் கையாடல் செய்து குதிரை ரேஸில் கலந்து கொள்கிறார்.
துவக்கத்தில் சில, சில வெற்றிகள் கிடைத்தாலும் போகப் போக அவருக்கு கிடைப்பதெல்லாம் தோல்விகளே.. எந்தக் குதிரை ஜெயிக்கும் என்பதைக் கணிப்பதில் தான் ஒரு வல்லவன் என்பதை பரத் நினைத்துக் கொண்டாலும், கடைசி நிமிடத்தில் அவர் பணம் கட்டும் குதிரைகள் தோல்வியைத் தழுவுகின்றன.
இப்போதைய நிலைமையில் பரத் 27 லட்சம் ரூபாய் அளவுக்கு கடனாளியாக இருக்கிறார். இதில் அவரது கம்பெனி பணம் போக.. மீதமெல்லாம் பல்வேறு வங்கிகளின் கடன் அட்டை மூலமாக அவர் செலவழித்ததுதான்.
தினம்தோறும் வங்கிகளில் இருந்து வரும் போன் அழைப்புகளில் “கடனை எப்போ கட்டுவீர்கள்…?” என்று கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் பரத் தனது கம்பெனியில் செய்த தில்லுமுல்லு நிர்வாகத்திற்கும் தெரிய வர.. ஒரு வாரம் நேரம் கொடுத்து அதற்குள்ளாக பணத்தைக் கட்டும்படியும், இல்லையெனில் சிறைக்கு போக நேரிடும் என்று பரத்தையும் எச்சரிக்கிறார்கள்.
இதே நேரத்தில் இசை ஆசிரியையாக இருக்கும் சாந்தினியை பார்த்தவுடன் லவ்வாகிறார் பரத். தன்னுடைய தந்தையிடம் பரத்தை அழைத்து வந்து அறிமுகப்படுத்துகிறார் சாந்தினி. அவரது தந்தையோ பரத்தின் ஜாதகத்தையே பகிரங்கப்படுத்துகிறார்.
அவர் 27 லட்சம் ரூபாய் கடனில் இருப்பதையும்.. கிரெடிட் கார்டு கடனுக்காக பல்வேறு வங்கிகள் பரத்தை தேடி வருவதையும் சொல்லி எந்த நம்பிக்கையில் “இவனை உனக்குக் கல்யாணம் செய்து வைப்பது…” என்கிறார்..!
ஒரு பக்கம் காதல் நிறைவேறாத நிலைமை.. இன்னொரு பக்கம் இன்னும் ஒரு வாரத்தில் பணத்தைக் கட்டாவிட்டால் உங்களுடைய பெயர் சிபில் அமைப்பில் சேர்க்கப்படும் என்கிற வங்கிகளின் கடைசி கட்ட எச்சரிக்கை.. கம்பெனி பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லையெனில் சிறைக்கு செல்ல வேண்டிய நிலைமை.. என்று மூன்று புறமும் தன்னை எதிர்நோக்கியிருக்கும் இந்த பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்து வருகிறார் பரத்.
இதே நேரம் திருச்சியில் இருந்து சென்னைக்கு வேலையில் சேர வருகிறார் கதிர். வந்த இடத்தில் கதிரின் தங்கையின் பிரெண்ட்டான சஞ்சிதா ஷெட்டியின் வீட்டில் தங்க வேண்டிய சூழ்நிலை. இயல்பிலேயே பெண்கள் பக்கமே போக விருப்பமில்லாத கதிருக்கு இது தர்மசங்கடத்தைக் கொடுத்தாலும் வேறு வழியில்லாமல் அந்த வீட்டில் இருக்கிறார்.
ஒரு நிலையில் புரிந்து கொள்ளாத சூழலில் சஞ்சிதாவுக்கும், கதிருக்கும் இடையில் முட்டல் மோதல் உருவாகிறது. வீட்டைவிட்டு போக முடிவெடுக்கிறார் கதிர். ஆனால் இதனை சஞ்சிதா விரும்பவில்லை. கதிரை இருக்க வைக்க நினைக்கிறார். ஆனால் அதை அவரால் வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் தவிக்கிறார்.
அந்த நேரத்தில் கதிரின் பையில் இருந்து ஒரு எலி இறங்கி வீட்டுக்குள் ஓடி ஒளிகிறது. “அந்த எலியைக் கண்டுபிடிச்சு வெளில எடுத்துப் போட்டுட்டு நீங்க வீட்டைக் காலி பண்ணுங்க…” என்று சஞ்சிதா சொல்லிவிட.. எலியைத் தேடி அலைகிறார் கதிர். எலி அவர் கண்ணுக்கே சிக்கவில்லை. அதே நேரம் கதிருக்கும் அந்த வீட்டில் இருந்து வெளியேறும் சூழல் பிடிக்கவில்லை. அதனால் தந்திரமாக அவரும் எலியை பிடிக்கும் முயற்சியைத் தொடராமலேயே இருக்கிறார்.
“சஞ்சிதாவின் பூர்வீக வீடு ஏலத்தில் இருக்கிறது. அதற்கு 25 லட்சம் ரூபாய் தேவை. பணம் கிடைத்தால் வீட்டை மீட்டுவிடுவேன்…” என்று கண் கலங்குகிறார் சஞ்சிதா. அவருக்கு எந்த வகையிலாவது உதவி செய்ய வேண்டும் என்று கதிர் துடித்துக் கொண்டிருக்கிறார். இந்த உதவி செய்யும் மனப்பான்மையே கதிருக்குள் காதலை ஏற்படுத்திவிட அது சஞ்சிதாவுக்கும் பாஸாகிவிடுகிறது.
ஒரு காலத்தில் குதிரை பந்தயத்தில் ராஜா போல் இருந்த ராதாரவி, சில காரணங்களினால் சில காலம் அதில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்தார். இப்போது மீண்டும் களத்தில் குதிக்கத் தயாராகிவிட்டார். ஆனால் முதல் ஓட்டத்திலேயே பரிசை வெல்ல துடிக்கிறார்.
இப்போதைய குதிரை பந்தய ஓட்டத்தில் தொடர்ச்சியான வெற்றியை யோக்ஜேபியின் குதிரைதான் பெற்று வருகிறது. ஆகவே யோக்ஜேபியுடன் ஒரு பரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள வருகிறார் ராதாரவி. 50 லட்சம் ரூபாய் தருவதாகவும், அந்த வெற்றியை தனக்கு விட்டுக் கொடுக்கும்படியும் ராதாரவி கேட்கிறார்.
யோக்ஜேபியும் விட்டுத் தருவதாகச் சொல்ல.. பணத்தை மறுநாள் காலை ஒரு ரெஸ்ட்டாரெண்ட்டில் வந்து வாங்கிக் கொள்ளும்படி சொல்கிறார் ராதாரவி. சொன்னது போலவே அந்த ரெஸ்ட்டாரெண்ட்டுக்கு தனது ஆட்கள் மூலமாக 50 லட்சம் ரூபாயை கொடுத்துவிடுகிறார் ராதாரவி. அன்றைக்கு அதே ரெஸ்ட்டாரெண்ட்டுக்கு சாப்பிடுவதற்காக கதிரும் வந்திருக்கிறார்.
ஆனால் ராதாரவியின் அடியாட்கள் ரெஸ்ட்டாரெண்ட்டில் இருக்கும்போது போலீஸ் திடீரென்று வந்துவிட.. அவர்களிடமிருந்து தப்பிக்க வேண்டி பணம் இருந்த பையை கதிரின் கார் டிக்கியில் வைத்துவிட்டு தப்பிக்கப் பார்க்கிறார்கள் அடியாட்கள். ஆனாலும் போலீஸ் அவர்களை இழுத்துச் செல்ல.. வண்டியின் நம்பர் தெரியாமல் கலரை மட்டும் தெரிந்து கொண்டு போகிறார்கள் இருவரும்.
தன்னுடைய கணிப்பெல்லாம் கடைசி நிமிடத்தில் தோற்பதை அறிந்த பரத் இதற்கான காரணத்தை தேடுகிறார். அதில் குதிரை ரேஸில் ஓடும் குதிரைகளுக்கு மறைமுக ஊக்கம் கொடுத்தும், தொந்திரவு செய்தும் வெற்றிகளை சிலர் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வதாக தெரிந்து கொள்கிறார் பரத்.
இது தொடர்பாக அவர் உளவு வேலை பார்க்கும்போது ராதாரவியும், யோக்ஜேபியும் பேசுவதை ஒட்டுக் கேட்கிறார். அந்த 50 லட்சம் ரூபாயை அபேஸ் செய்ய திட்டம் தீட்டி அதே ரெஸ்ட்டாரெண்ட்டில் வந்து காத்திருக்கிறார் பரத். ஆனால் தனது கார் டிக்கியில் 50 லட்சம் ரூபாய் இருப்பதே தெரியாமல் கதிர் காரை எடுத்துக் கொண்டு போய்விட.. பரத்துக்கு ஏமாற்றமாகிறது.
அந்தப் பணம் கிடைத்தால் கடனை அடைத்து காதலியையும் திருமணம் செய்யலாம் என்ற நிலைமையில் பரத்.. 25 லட்சம் ரூபாய் கிடைத்தால் தனது காதலி சஞ்சிதாவின் வீட்டை மீட்டுக் கொடுத்துவிட்டு, அவளை திருமணம் செய்து கொள்ளலாம் என்று கதிரும் காத்திருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் யோக்ஜேபி பணம் இன்னமும் தன் கைக்கு வந்து சேரவில்லை என்கிறார். ராதாரவியோ அவரது ஆட்களை தேடுகிறார்.
இறுதியில் என்னவாகிறது என்பதுதான் திரைக்கதை.
எல்லா வகையான சூதாட்டங்களை போலவே குதிரை பந்தயமும் ஒரு சூதாட்டம்தான். சென்னையில் பிரிட்டிஷார் காலத்தில் போர்களில் பயன்படுத்தப்பட்ட குதிரைகளை அதற்கான தேவைகள் இல்லாததால் சும்மாவே வைத்திருந்தார்கள். அப்போதுதான் பிரிட்டிஷ் பாரம்பரியத்தின்படி அவைகளை வைத்து எந்தக் குதிரை வேகமாக ஓடுகிறது என்பதற்காக ரேஸ் போட்டியை நடத்தினார்கள்.
தொடர்ந்து வெளிநாடுகளில் நடப்பதுபோலவே இதனை ஒரு அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக மாற்றி குதிரை பந்தயமாகவே மாற்றிவிட்டுப் போனார்கள். பின்பு தமிழகத்தைச் சேர்ந்த பணக்காரர்கள் தங்களது பணத் திமிரை காட்டுவதற்காக பந்தயக் குதிரைகளை வாங்கி அதனை வளர்த்து, பயிற்சி கொடுத்து இந்த குதிரை ரேஸில் ஓடவிட்டு மகிழ்ந்தார்கள்.
இது காலப்போக்கில் அனைத்துத் தரப்பு மக்களும் குதிரை மீது பணத்தைக் கட்டி சூதாட்டம்போல் ஆடும் விளையாட்டாக மாறிவிட்டது. இன்றைக்கும் கிண்டி ரேஸ் கிளப்பில் பார்வையாளர்கள் கேலரியில் அமர்ந்திருப்பவர்களில் 90 சதவிகிதம் பேர் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களே..!
5 நிமிடங்களில் கட்டிய பணத்தைவிட இரட்டிப்பு மடங்கில் பணம் கிடைக்கிறதே என்பதற்காகவும், உழைக்காமல் மிக எளிதாக பணம் சம்பாதிக்க முடிகிறதே என்பதற்காகவும் பலரும் இந்த குதிரை பந்தயத்தில் ஈடுபட்டார்கள். இது மிக எளிதாக சென்னைவாழ் மக்களிடையே போதைப் பழக்கம், குடிப்பழக்கம்போல பரவி.. இன்றைக்கு பல குடும்பங்களின் தாழ்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் காரணமாகிவிட்டது.
1971-ம் ஆண்டு இந்த குதிரை பந்தயத்தை ஒழிப்பதாக அப்போதைய தி.மு.க. அரசு ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து குதிரைப் பந்தயத்தை நிறுத்தியது. இதற்கான அடையாளமாக சென்னையின் மையப் பகுதியான அண்ணா சாலை மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் ஒரு குதிரையின் சிலையை நிறுவி, தனக்குத்தானே பெருமைப்பட்டுக் கொண்டது அப்போதைய தி.மு.க. அரசு.
ஆனால் குதிரை பந்தயத்தில் ஈடுபடும் தொழிலதிபர்கள் காட்ட வேண்டியவைகளை காட்டியும்.. கொடுக்க வேண்டியவைகளையும் கொடுத்து மறுபடியும் அதே தி.மு.க. அரசின் மூலமாகவே குதிரை பந்தயத்தை நடத்த அனுமதி வாங்கி திரும்பவும் நடத்தத் துவங்கினார்கள்.
1996-2001- ஆட்சிக் காலத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது திரும்பவும் கிண்டி குதிரை பந்தயத்தை நிறுத்துவதாக அறிவித்தது. ஆனால் இந்த முறையும் கட்சிக்கும், ஆட்சியாளர்களுக்கும் தகுந்த கவனிப்பை செய்து, அவர்களின் வழிகாட்டுதலிலேயே நீதிமன்றத்தில் இது சூதாட்டமே அல்ல என்றொரு தீர்ப்பை வாங்கி வெற்றிகரமாக இப்போதுவரையிலும் நடத்தி வருகிறார்கள் பந்தயக் குதிரையை வளர்த்து வரும் பணக்காரர்கள்.
“படத்தில் குதிரை பந்தயத்தில் ஈடுபடுவது அவர்களது குடும்பத்தையே பாதிக்கும். இது குடிப் பழக்கத்திற்கு ஈடான சமூக விரோதச் செயல் என்றெல்லாம் சொல்லியிருப்பதாக…” பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தப் படத்தின் இயக்குநர் அருண் கிருஷ்ணசாமி கூறியிருந்தார். ஆனால் படத்தில் அப்படி சொல்லவே இல்லை.
திருடிய பணத்தை வைத்து குதிரை பந்தயத்தில் ஈடுபட்டு.. அந்தக் குதிரை ஜெயிக்க.. ஜாக்பாட்டி வெற்றியில் கிடைத்த பணத்தில் இருந்து திருடிய பணத்தை திருடியவரிடமே திரும்பவும் ஒப்படைத்துவிட்டு, மீதமிருக்கும் பணத்துடன் ஹீரோக்கள் இருவரும் சந்தோஷமாக இருக்கப் போகிறார்கள் என்றே படத்தை முடித்திருக்கிறார். இதன் மூலமாக இந்தச் சமூகத்திற்கு இயக்குநர் சொல்லியிருக்கும் செய்தி என்ன என்பதை நீங்களே புரிந்து கொள்ளலாம்.
நடிகர் பரத்திற்கு நீண்ட இடைவெளிக்கு பின்பு பெயர் சொல்லும் அளவுக்கு ஒரு படம் கிடைத்திருக்கிறது. நடிப்பைக் கொட்ட வேண்டிய காட்சிகளெல்லாமல் இல்லாமல்.. இப்போதைக்கு இருக்கும் யூத்துகளின் பிரச்சினையாக திரைக்கதை அமைந்திருப்பதால் வரும் காட்சிகளிலெல்லாம் பரத் என்கிற இளைஞனையே காட்டியிருக்கிறார் இயக்குநர். நன்று..!
இதேபோல் கதிரும்.. இவருக்குத்தான் அதிகமாக நடிக்க வாய்ப்பு. சஞ்சிதாவுடன் ஏற்படும் வாய்ச் சண்டை.. பின்பு அவரை நினைத்து வருத்தப்படுவது.. வீட்டிலேயே இரு என்று சொல்ல மாட்டாரா என்று ஏங்குவது.. தனக்குள் வந்துவிட்ட காதலைக்கூட சொல்லத் தெரியாமல் இருப்பது என்று ரொமான்ஸ் காட்சிகளில் கதிர் காட்டியிருக்கும் நடிப்பை பார்த்தால் நிச்சயமாக இவர் சரியான தேர்வு என்றுதான் சொல்ல வேண்டும்.
நாயகிகள் சாந்தினிக்கும், சஞ்சிதா ஷெட்டிக்கும் சமமான கதாபாத்திரம்தான். சாந்தினியைவிடவும் தனக்கு நடிப்பில் ஸ்கோப் நிறைய இருப்பதால் அதில் நிஜமாகவே கவர்ந்திருக்கிறார் சஞ்சிதா ஷெட்டி.
தூக்கத்தில் புரண்டு விழும் தனது குணத்தை மறைக்க முடியாமல் சொல்லிவிட்டு பின்பு அதைச் சமாளிக்க சண்டையிடுவதும்.. தனது பூர்வீக வீட்டின் மீதான பாசத்தை மறைக்க முடியாமல் அதனை நினைத்து ஏங்குவதும், பேசுவதுமாக காதலருக்கு தன் மீதான காதலை தோற்றுவிக்கும் கேரக்டர் ஸ்கெட்ச்சில் சஞ்சிதா ஷெட்டி ஸ்கோர் செய்திருக்கிறார்.  பாடல் காட்சிகளில் எல்லை மீறாமல்.. இருவருமே கச்சிதமாக மாடர்ன் டிரெஸ்களில் வந்து கலக்கியிருக்கிறார்கள்.
ராதாரவி வழக்கம்போல.. அவர் இருக்கும் காட்சிகள் முழுவதிலுமே அவரே கவர்கிறார். யோக்ஜேபியுடன் அலட்சிய நடிப்பை தனது கம்பீர நடிப்பால் ப்பூ என்று ஊதி தள்ளுகிறார்.  வில்லன்களில் இன்னமும் அசைக்க முடியாதவர் ராதாரவி என்பதில் சந்தேகமேயில்லை.
ஒளிப்பதிவாளர் யுவாவின் கேமரா பணிகள் அசத்தல். ஒரு காட்சியில்கூட சாதாரணமாக இல்லை. காட்சிகள் அனைத்துமே அழகுணர்ச்சியுடன் படமாக்கப்பட்டிருக்கிறது. குதிரை பந்தயக் காட்சிகளை சினிமாத்தனமாக திரில்லிங் அனுபவத்தில் எடுத்து அதனை கச்சிதமாகத் தொகுத்திருக்கிறார்கள்.
பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். எதுவும் இரண்டாவது முறையாக கேட்கும் நிலையில் இல்லை என்பதுதான் வருத்தமான விஷயம். இசையமைப்பாளர் சுதர்சன் எம்.குமாரின் பின்னணி இசை படத்திற்கு கிடைத்த ஒரு பலம் என்றே சொல்லலாம். 
குதிரைகள் லாயத்திற்குள் நுழைந்து குதிரைகளை கொல்வது.. அதன் பின் இதன் விளைவுகள் என்ன என்று காட்டப்படாதது.. யோக்ஜேபி ரேஸ் கிளப்பின் ரெஸ்ட் ரூமுக்குள் சர்வசாதாரணமாக துப்பாக்கியால் சுட்டு ஒருவனை கொலை செய்வது.. போலீஸ் உயரதிகாரிகள் இரு தரப்பினருடன் நட்புறவோடு இருப்பது.. பழகுவது.. என்று சில இடங்களில் புருவத்தை உயர்த்தி கேள்வியெழுப்ப வேண்டிய நிலைமை இருந்தாலும்..
ஒட்டு மொத்தமாகப் பார்க்கப் போனால் ஒரு சுவையான திரில்லிங் அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கிறது என்பதில் சந்தேகமேயில்லை..!
‘என்னோடு விளையாடு’ – நிச்சயமாக நாமும் விளையாடலாம் என்பதுதான் உண்மை.