இளமி - சினிமா விமர்சனம்

28-11-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஜோ புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜூலியன் பிரகாஷ்  தயாரித்து, கூடுதலாக கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் இது. இதில்  யுவன், அனு கிருஷ்ணா, அகில்,  கிஷோர், ரவி மரியா  ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.  
1715-ம் ஆண்டில் மதுரை வட்டாரத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது இந்தப் படம்.

மதுரை வட்டாரத்தில் மேலூர் அருகில் இருக்கும் மாங்குளம் கிராமம். இந்தக் கிராமத்து ஜனங்களுக்கும், இதன் அருகில் இருக்கும் இன்னொரு கிராமத்திற்கும் இடையில் தற்போது ஒரேயொரு பிரச்சினை கனன்று கொண்டிருக்கிறது. அவர்களது குல தெய்வமான அய்யனார் சிலையை பக்கத்து கிராமத்தினர் வைத்திருக்கிறார்கள். வருடாவருடம் அவர்கள் ஊரிலேயே சாமி கும்பிடு நடந்து வருகிறது.
அந்தச் சிலை மாங்குளம் கிராமத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டது என்பதால் அதனை திருப்பிக் கேட்க நினைக்கிறார்கள் மாங்குளம் கிராமத்து இளந்தாரிகள். ஆனால் ஊர்ப் பெரியவர்கள் சமாதானமாகப் பேசி வாங்கலாம் என்று சொல்லியே காலத்தைத் தள்ளி வருகிறார்கள்.
மாங்குளத்தில் ஊர் தலைவர் வீரய்யா என்கிற ரவி மரியா. இவரின் மகள்தான் நாயகியான இளமி என்னும் அனு கிருஷ்ணா.  ரவி மரியா வளர்த்து வரும் காளையை அந்தப் பகுதியில் யாருமே அடக்க முடியவில்லை. அதனால் வருடாவருடம் காளை அடக்கும் நிகழ்ச்சியில் இவரது காளையே வெற்றி பெற்று வருகிறது.
பக்கத்து ஊரில் இருக்கிறார் ஹீரோ கருப்பு என்னும் யுவன். வேட்டையாடுவதில் வல்லவர். இதே ஊர்க்காரரான சடைப்புலி என்னும் ‘கல்லூரி’ அகில் காளையை அடக்குவதில் வில்லவன். ஆனால் முரடனும்கூட. யுவனும், அனு கிருஷ்ணாவும் ரகசியமாக காதலித்து வருகிறார்கள்.
இந்த நேரத்தில் அய்யனார் சாமி கும்பிடுக்கு ரவி மரியா ஏற்பாடு செய்கிறார். இதைக் கேட்டு அகில் கொதிக்கிறார். “இந்த வருடமாவது சாமியை நம்ம ஊருக்கு கொண்டு வர வேண்டும்…” என்கிறார். ஊர்ப் பெரியவர்கள் பேசித் தீர்க்கப் பார்க்கிறார்கள். அது முடியாமல் போக.. எப்படியாவது அந்த ஊர் திருவிழாவை தடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
சாமியைத் தூக்குவதற்கு திட்டம் தீட்டுகிறார்கள். பின்பு சாமி சிலைக்கு பதிலாக கலசக் கும்பத்தை கடத்தி வர ஏற்பாடு செய்கிறார்கள். அகிலின் தலைமையில் யுவனும், அவனது நண்பனும் சேர்ந்து கலசக் கும்பத்தைத் தூக்கி வருகிறார்கள்.
மாங்குளம் கிராமமே கிளம்பி சண்டைக்கு வருகிறது. இப்போது சமாதானம் பேசுகிறார்கள். அது முடியாமல் போக பேச்சுவார்த்தை வலுத்துக் கொண்டே போகிறது. தன்னுடைய காளையை அடக்கினால் ஊர்ச் சாமியை இவர்களிடம் ஒப்படைப்பதாக ரவி மரியா சொல்கிறார். கூடவே அவருடைய மகளான அனு கிருஷ்ணாவையும் கேட்கிறான் அகில். இதற்கும் ஒப்புக் கொள்கிறார் ரவி மரியா.
இறுதியில், என்ன நடந்தது..? காளையை அடக்கினார்களா..? யார் அடக்கியது..? யுவனும், அனு கிருஷ்ணாவும் ஒன்று சேர்ந்தார்களா..? என்பதுதான் மீதிக் கதை.
படம் பழந்தமிழர் பண்பாட்டை மையப்படுத்திய கதையாக இருந்தாலும், இதில் முக்கியமாக இருப்பது அக்காலத்திய ஜல்லிக்கட்டுதான்.
ஜல்லிக்கட்டில் மூன்று வகை உண்டு என்கிறது தமிழ்ச் சமூகம். ஒன்று.. ஒரே மாட்டை குறி வைத்து பலரும் பின்னாலேயே விரட்டிச் சென்று பிடிப்பது. இரண்டாவது.. பல மாடுகளை ஒரே நேரத்தில் திறந்துவிட.. அவற்றின் கொம்பையோ அல்லது திமிலையோ பிடித்திழுத்து நிறுத்துவது.. மூன்றாவது, வடம் என்னும் ஜல்லிக்கட்டு காளையை நேருக்கு நேராக சந்தித்து அதன் கொம்பை பிடித்து இழுத்துப் பிடித்து நிறுத்துவது அல்லது மண்டியிடச் செய்வது.
முதல் இரண்டு வகையான ஜல்லிக்கட்டு விளையாட்டுக்களைவிடவும் அதிக ஆபத்தானது, வீரமிக்கது வடம் ஜல்லிக்கட்டுதான். இதில்தான் காளையை நேருக்கு நேராக மோதி ஆண்கள் தங்கள் வீரத்தைக் காட்டி காளைய அடக்கி ஜெயித்து பெண்களை மணந்ததாக பழந்தமிழரின் வரலாறு சொல்கிறது.
வடம் ஜல்லிக்கட்டில் ஒரு பெரிய வடக் கயிற்றை ஒரு பெரிய கல்லில் கட்டி அதை பந்தய மைதானத்தில் குழி தோண்டி மண்ணுக்குள் புதைத்துவைத்துவிடுவார்கள். அந்த வடத்தின் மறுமுனை காளையின் கழுத்தில் கட்டப்படும். அந்தக் கயிற்றுடனேயே காளை மாடு ஓடிக் கொண்டிருக்கும்.
அந்தக் காளை அந்தக் கயிற்றுடன் நேர் திசையில் செல்லும் எல்லைப் பகுதியருகே ஒரு கோடு ஒன்றை வட்டமாக வரைவார்கள். அதற்கு அடுத்து இரண்டு தப்படி இடைவெளிவிட்டு மீண்டும் ஒரு கோடு வரையப்படும். போட்டியில் பங்கு பெறுபவர்கள் அந்தக் கோட்டைத் தொட்டுவிட்டால் அவர்கள் ஆட்டத்தில் இருந்து நீக்கப்படுவார்கள்.
காளையுடன் சண்டையிடுபவர்கள் அந்தக் கோட்டின் உள்பகுதிக்குள்ளேயே இருந்துதான் காளையுடன் மல்லுக்கட்டி அதனை வீழ்த்த வேண்டும். இதுதான் இந்த வடம் ஜல்லிக்கட்டின் நிபந்தனைகளாம். இந்த ஆதாரங்களை வைத்து ஜல்லிக்கட்டு பகுதியை மிகச் சிறப்பாக படமாக்கியிருக்கிறார்கள்.
இதே ஜல்லிக்கட்டை மையமாக வைத்து இதற்கு முன்னர் தமிழ்ச் சினிமாவில் பல படங்கள் வெளிவந்திருந்தாலும், இந்தப் படம்தான் உண்மையான ஜல்லிக்கட்டின் வரலாற்றையும், அதன் பெருமையையும் உண்மையாகவே பேசியிருக்கிறது.  
நாசமாகப் போன திடீர், குபீர் விலங்கின உரிமைப் போராளிகளால் சினிமாக்களில் விலங்குகளுக்கு ஆபத்து நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சித்ரவதை செய்யக் கூடாது என்கிற வெட்டி விதிமுறைகளால், இப்போதெல்லாம் விலங்குகளை வைத்து யாருமே படமெடுக்க முடியவில்லை.
இந்தப் படத்தின் கதியும் அது போலவே ஆகிவிட்டது. காளை மாட்டைகூட கிராபிக்ஸ்லேயே படமாக்கியிருக்கிறார்கள். கிராபிக்ஸ் வேலைகளும் அற்புதமாக இருக்கிறது. வடம் ஜல்லிக்கட்டு விஷயத்தில் நிஜமான காளை மாடு என்னென்ன செய்யுமோ அது அத்தனையையும் அற்புதமாக விஷுவலாக்கியிருக்கிறார்கள். மும்பையில் பெரும் பொருட் செலவில் இந்தப் படத்திற்கு கிராபிக்ஸ், விஷுவலைஸ் செய்திருக்கிறார்கள். பாராட்டுக்கள்..!
நாயகன் யுவன், கருப்பு கேரக்டருக்கு பொருத்தமாகவே இருக்கிறார். அந்தக் காலத்து இளைஞனின் தோற்றத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். காதல் காட்சிகள், மற்றும் காளையை அடக்க பயிற்சி பெறும் காட்சிகள், இறுதியில் அனுவை இழந்துவிட்ட பரிதவிப்பில் அவர் படும்பாடு என தனக்குக் கிடைத்த இடங்களிலெல்லாம் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார் யுவன். இவருக்கு இன்னும் நல்ல வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் இவரது கேரியர் உயரும்.
கல்லூரி அகில் இதில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில், வில்லனாக நடித்திருக்கிறார். முதலில் சில நிமிடங்கள் அடையாளமே தெரியாத அளவுக்கு இருக்கிறார். பின்புதான் தெரிகிறது அது அகில் என்று.. ஒப்பனை கலைஞருக்கு நமது பாராட்டுக்கள்.
நாயகி இளமி என்னும் அனு கிருஷ்ணாவின் நடிப்பு இந்தப் படத்துக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய பலம். இளமி என்றால் ‘இளமையான இளைஞி’ என்று பொருள். இந்தப் பொருளுக்கு மிக பொருத்தமாக அமைந்திருக்கிறார் அனு கிருஷ்ணா. அவருடைய அம்பாரம் போன்ற கண்களே, ஆயிரம் கதைகள் பேசுகின்றன. தன்னுடைய யதார்த்தமான நடிப்பையும் காட்டியிருக்கிறார். கேரளத்து பெண்களுக்கு அழகுடன், நடிப்பும் வருவதில் ஆச்சரியமில்லையே..?!
ஊர் தலைவரான ரவி மரியா, வடம் ஜல்லிக்கட்டில் ஜெயிப்பதற்கு யுவன் குழுவினருக்கு ஆலோசனை சொல்லும் மதுரையின் தளபதியான கிஷோர், மற்றும் ஊர்ப் பெரியவர்களாக, ஊர் மக்களாக நடித்த அத்தனை பேருமே ஒரு சின்ன இடறல்கூட இல்லாமல் நடித்திருக்கிறார்கள்.
18-ம் நூற்றாண்டு பின்னணியில் கதை நகர்வதால், நகர்ப்புற வாடையே படக் கூடாது என்பதால் தேனி பகுதியில் ஆள், அரவமற்ற ஒரு பெரிய இடத்தில் கிராமத்து செட்டப்பை அமைத்து, அந்தப் பகுதி கிராமத்து மக்களையே தேடிப் பிடித்து கஷ்டப்பட்டு நடிக்க வைத்திருக்கிறார்கள்.
சட்டை அணியாத ஆண்கள். ஜாக்கெட் அணியாத பெண்கள்.. காலில் சிலம்பணிந்த பெண்கள்.. ஜல்லிக்கட்டில் காளையை அடக்கினால்தான் பெண் கொடுப்பேன் என்பது.. அந்தக் காலத்திய உணவு வகைகள்.. ஆடை, அணிகலன்கள்.. வீட்டு பொருட்கள்.. தேன் எடுக்கும் பணி.. தேனை எப்படி எடுக்க வேண்டும் என்கிற வழிமுறைகள்.. என்று அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார் இயக்குநர்.
யுகாவின் ஒளிப்பதிவில் முதல் காட்சியில் இருந்து முடிவுவரையிலும் கேமிராவின் கண்களால் படம் முழுவதையும் ரசிக்க முடிந்திருக்கிறது. உடும்பை அடிக்கும் காட்சியும், கலச கும்பத்தைக் கடத்தும் காட்சியிலும், பாடல் காட்சிகளிலும், யுவன் தேன் எடுக்கும் காட்சிகளிலும் ஒளிப்பதிவாளர் இயக்குநருக்கு பெரிதும் துணை நின்றிருக்கிறார்.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் 3 பாடல்களுமே கேட்கும்படியாக இருந்தது. அனைத்து பாடல் வரிகளுமே திரும்ப இன்னொரு முறை கேட்டாலே மனப்பாடம் ஆகிவிடுவதை போல அமைந்திருப்பதும் சிறப்பு.
படத்தின் மிகப் பெரிய பலமே வசனங்கள்தான். அந்தக் காலத்திய மதுரை வட்டார தமிழ் மொழியை அலசி, ஆராய்ந்து கொஞ்சமும் தேய்ந்து போகாமல் வார்த்தையை வசமாக்கி டப்பிங்கில் பேச வைத்திருக்கிறார்கள். பல வசனங்களே நம் முன்னோர்களின் வாழ்க்கையை நமக்குச் சொல்லி விடுகின்றன. வசனம் எழுதிய இயக்குநருக்கு இது ஒன்றுக்காகவே இன்னொரு முறை ‘ஜே’ போட வேண்டும்.
படத்தில் இருக்கும் ஒரே நெருடல் இறுதிக் காட்சிதான். இந்தப் படத்துக்கு இத்தனை கொடூரமான கிளைமாக்ஸ் தேவையா என்பவர்கள். இது நடந்து முடிந்த கதை என்பதை மட்டும் நினைவில் கொண்டால் இதையும் ஜீரணிக்கத்தான் வேண்டும்.
ஒருதலையான காதலினால், பொறாமைத் தீயில் சிக்கிய வில்லனால் கொல்லப்பட்ட  கருப்புவுக்கும், இளமிக்கும் அந்த ஊர் மக்கள் தங்களது மாங்குளத்தில் கோவிலே கட்டி வைத்திருக்கிறார்கள். கோவில் கட்டிய வரலாறு வழி வழியாக செவி வழியாக கேட்டு, கேட்டு இப்போதைய தலைமுறைவரையிலும் நீண்டிருக்கிறது.
அந்தக் கதையைக் கேட்டுத்தான் இந்தப் படத்தின் இயக்குநரான ஜீலியன் பிரகாஷ் ஆர்வப்பட்டு விசாரித்து இந்தக் கதையை தனது சொந்த செலவில் தயாரித்திருக்கிறார். உண்மையில் இதற்காகவே இவருக்கு ஒரு பெரிய பாராட்டு விழாவே நடத்த வேண்டும்.
இன்றைக்கும் காதலித்து வரும் இளைஞர்களும், இளைஞிகளும் ஜோடியாக அந்தக் கோவிலுக்கு வந்து தங்களது காதல் ஜெயிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு வருகிறார்கள். இதையம் விஷுவலாக படத்தின் இறுதியில் காட்டியிருக்கிறார்கள்.
ஆக.. நடந்து முடிந்த கதையை அப்படியேதானே காட்டியாக வேண்டும்..? ஆகவே அந்தக் கிளைமாக்ஸ் கொடூரம் தேவையானதுதான். அதற்காக அப்போதே தமிழர்கள் இப்படித்தானே இருந்திருக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேச வேண்டாம். தமிழர்கள் என்றாலும் அவர்களும் மனிதர்கள்தான். மனித இனத்துக்குள்ளேயே போட்டி, பொறாமை, வஞ்சகம், அனைத்தும் இருக்கும். இது இல்லாத சமூகமே உலகத்தில் எங்குமே இல்லை.
எத்தனையோ மொக்கை படங்களுக்கு மத்தியில், ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ மற்றும் ‘கவலை வேண்டாம்’ மாதிரியான எடுக்கக் கூடாத பொய்மை படங்களுக்கு மத்தியில் இப்படியொரு படத்தை அதுவும் தன்னுடைய சொந்தத் தயாரிப்பில்.. தரமான இயக்கத்தில், அற்புதமான படமாக உருவாக்கி அளித்திருக்கும் படத்தின் இயக்குநர் ஜூலியன் பிரகாஷ்  தமிழ்ச் சினிமாவில் போற்றி பாராட்டப்பட வேண்டிய ஒருவர்.
தமிழ்ச் சினிமாவுலகம் இவரை நல்லவிதமாக பயன்படுத்திக் கொண்டால் தமிழ்ச் சினிமாவுலகத்துக்கு நல்லது..!
‘இளமி’ தமிழர்கள் அனைவரும் கட்டாயமாக பார்த்தே தீர வேண்டிய படம்..! அவசியம் பார்த்து ஆதரவு கொடுங்கள் தமிழர்களே..!

பட்டதாரி - சினிமா விமர்சனம்

25-11-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

GES Movies சார்பில் தயாரிப்பாளர் எஸ்.இளங்கோவன் லதாவின் தயாரிப்பில் இயக்குநர்.ஆர்.சங்கர்பாண்டி இயக்கியிருக்கும் படம் இது.
இதுவும் மதுரையை மையப்படுத்திய கதைதான். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு போகாமல் ஊரைச் சுற்றி வரும் 5 நண்பர்களை பற்றிய கதை இது.


அபி சரவணன், அம்பானி சங்கர், கலையரசன், துரை, கார்த்திக் என்ற இந்த 5 இளைஞர்களும் இணை பிரியாதவர்கள். இதில் அபி சரவணன்தான் ஹீரோ. கொஞ்சம் பணக்காரர். எல்லாவற்றையும் விளையாட்டாகவே எடுத்துக் கொள்கிறார். பெண்கள் என்றாலே கொஞ்சம் வெறுப்பு. இதற்கு பிளாஷ்பேக் காரணமும் உண்டு.
இவர்களில் ஒருவன் ஒரு பெண்ணை காதலிக்கிறான். அவன் சரியாக வேலைக்குப் போகாமல் ஊரைச் சுற்றுவதால் கடைசியில் வேறொருவனை கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகிறாள் காதலி. இன்னொருவன் கடலை போடுவதற்காகவே பெண்களை வளைக்கப் பார்க்கிறான். அம்பானி சங்கர் குள்ளமாக இருப்பதால் பெண் கிடைக்க சிரமம் இருப்பதை உணர்ந்து பள்ளி மாணவியின் பின்னால் சென்று காதலித்து பொழுதைப் போக்குகிறான். இப்படிப்பட்ட நண்பர்கள் நிஜத்தில் எப்படியிருப்பார்களோ.. அப்படியேதான் திரையிலும் குடியும், கொண்டாட்டமுமாக இருக்கிறார்கள்.
ஹீரோயின் அதிதி, தற்செயலாக அபி சரவணனை பார்க்கிறார். பார்த்தவுடன் அவன் மீது காதல் கொள்கிறாள். ஆனால் ஏற்கெனவே ஒரு காதல் தோல்வியால் பெண்கள் மீதே வெறுப்பில் இருக்கும் அபி சரவணன், அதிதியின் காதலை ஏற்க மறுத்து தப்பித்து ஓடுகிறார்.
அதிதி தற்செயல் விபத்தொன்றில் சிக்கி காயம்பட அது தன்னால் விளைந்ததோ என்று நினைத்து பயந்து போன அபி சரவணன், தனக்கு இப்போது காதல் கசக்குவதற்கான காரணத்தை பிளாஷ்பேக்கில் சொல்கிறார்.
அந்தக் கதையையும் கேட்டுவிட்டு திடீரென்று அதிதி மனம் மாறி தான் அபியை காதலிக்கவே இல்லை என்று டபாய்க்க.. முடிவு என்னாகிறது என்பதுதான் இந்த ‘பட்டதாரி’ படத்தின் கதை.
வழக்கம்போல இந்தப் படமும் இளைஞர்களை காதல் என்னும் கொண்டாட்டத்திற்குள்ளேயே தள்ளப் பார்க்கிறது. அவர்கள் செய்வது தவறு என்பதை அவர்களே உணர்வதற்கான அழுத்தமான காட்சிகளே படத்தில் இல்லை. காதலன் சும்மாவே ஊர் சுற்றுகிறான் என்பதற்காக காதலி அவனை விட்டுப் பிரிவதும், அதன் பின்பு அவன் காதலி தன்னைவிட்டுப் போய்விட்டாள் என்று மகளிரை மானாவாரியாகத் திட்டுவதாகத்தான் காட்சியை நீட்டித்திருக்கிறார்கள்.
திடீரென்று ஏதோ ஒரு ஞானதோயம் வந்த்தை போல வேலைக்கு போகலாம் என்று முடிவெடுக்கிறார்கள். அதுவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்றவுடன் கடைசியில் டீக்கடை வைத்து அங்கேயும் கதையடிக்கவே அமர்கிறார்கள் என்பதாக முடித்திருக்கிறார்கள்.
இது இளைஞர்களை நல்வழிப்படுத்துவதுபோல தெரியலையே..? அவரவர் படித்த படிப்புக்கு ஏற்றாற் போன்று கிடைத்த வேலைக்குப் போய் குடும்பத்தைக் காப்பாற்றவும், பெற்ற தாய், தந்தையரை பேணிக் காக்கவும் என்றைக்கு தமிழ்ச் சினிமா சொல்லிக் கொடுக்கப் போகிறது என்று தெரியவில்லை..!
பன்னெடுங்காலமாக ஒவ்வொரு வீட்டிலும் புழங்கி வரும் காதல் எதிர்ப்பு வசனங்கள் இந்தப் படத்திலும் ரீல் பை ரீல் வலம் வருகிறது. கல்லூரியில் உருவாகும் காதலை இன்னும் எத்தனை சினிமாக்கள்தான் ஆதரிக்கப் போகின்றன என்று தெரியவில்லை. இந்தக் காதலை நியாயப்படுத்துபவர்கள் சம்பாதிக்கவே துப்பில்லாத காதலன் கல்யாணம் செய்து என்ன செய்யப் போகிறான் என்பதை மட்டும் வசதியாக சாய்ஸில் விட்டுவிடுகிறார்கள்..! இதனால்தான் பெற்றவர்களின் காதல் எதிர்ப்புகள் வெகுஜன விரோதமாகவே இங்கு பார்க்கப்படுகின்றன. இந்தப் படமும் அதைத்தான் செய்திருக்கிறது.
நடிகர்கள் யாரும் நடிப்பில் குறை வைக்கவில்லை. இயக்கமும் சிறப்புதான். திரைக்கதை சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பது ஒன்றுதான் பெரும் குறை. ஹீரோயின்களான ராசிகாவும், அதிதியும் நடிப்பில் கரை கண்டவர்கள்போல் நடித்திருக்கிறார்கள். உண்மையிலேயே சில, பல குளோஸப் காட்சிகளில் இவர்களின் அழுத்தமான நடிப்பை காண முடிந்திருக்கிறது.
இதேபோல் அபி சரவணனும்.. தன் காதலியின் இறப்புக்கு வந்து கதறியழும் காட்சியிலும், நண்பர்களுடன் அலட்சியப் போக்குடனும், எதைப் பற்றியும் கவலைப்படாத தன்மையுடனும் நடித்திருக்கும் காட்சிகளில் தனித்தன்மையைக் காட்டியிருக்கிறார். இன்னும் பல நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் மேலும் பல ரவுண்டுகள் வரலாம்.
எஸ்.எஸ்.குமரனின் இசையில் ‘சிங்கிள் சிம்’ பாடல் தூங்கிக் கொண்டிருந்தவர்களை தட்டியெழுப்பி படத்தைப் பார்க்க வைத்திருக்கிறது. பாராட்டுக்கள்.
அனைத்து கேரக்டர்களையும் அழுத்தமாக நடிக்க வைத்திருக்கும் இயக்குநர், பெண் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஜெயவாணியை மட்டும் ஏன் இப்படியொரு டிராமா ஆர்ட்டிஸ்டை போல நடிக்க வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. அப்படியொரு சினிமாட்டிக் கேரக்டர்.. கண்ணில் அப்பிய மையும், பவுடர் கேக்கும் பளிச்சென்று தெரியுமளவுக்கு குளோஸப் வைத்தவர்கள்.. அவர் ஏன் வசனங்களை இப்படி மென்று, மென்று துப்புகிறார்  என்பதற்கான காரணத்தைச் சொன்னால் தெரிந்து கொள்வோம்.
அவரை துவக்கத்தில் வில்லியாக காட்டுவதா அல்லது நல்ல கேரக்டராக காட்டுவதா என்று இயக்குநருக்கு குழப்பம் வந்துவிட்டதுபோலும். அவருக்கேற்பட்ட குழப்பத்தில் பார்வையாளனுக்கும் குழப்பம் கூடிவிட்டது.
காதலன் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக காதலி பழியைத் தான் சுமந்து கொண்டு வீடு திரும்புவது நல்ல திருப்பம்தான். ஆனால் இது இந்த இன்ஸ்பெக்டரம்மாவினால் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது.
தொடர்ந்து நடக்கும் கடைசி நேர கடத்தல் கிளைமாக்ஸ் டிவிஸ்ட் எதிர்பாராததுதான். இந்த ஒரு விஷயத்துக்காகவே படம் முழுவதையும் சிலாகிக்க வேண்டும் என்றால் எப்படிங்க இயக்குநரே..?!
கடைசியில் சாதாரணமானதொரு கமர்ஷியல் படமாகவே இந்தப் ‘பட்டதாரி’யைச் சொல்ல முடியும்..!

கண்ல காச காட்டப்பா - சினிமா விமர்சனம்

25-11-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

1991-ம் ஆண்டு ‘வானமே எல்லை’ படத்தில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரால் ஒரு நடிகராக அறிமுகப்படுத்தி வைக்கப்பட்ட, மேஜர் கெளதம் இயக்கியிருக்கும் முதல் படம் இது.
பழம் பெரும் நடிகரான மேஜர் சுந்தர்ராஜனின் மகனான கெளதம், அடிப்படையில் ஒரு பாலே நடனக் கலைஞர். இப்போதும் சென்னையில் இருக்கும் ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரில் பாலே நடனம் கற்றுத் தரும் ஆசிரியராகவும் இருக்கிறார்.
‘வானமே எல்லை’ படத்திற்கு பிறகு பல படங்களில் கதாநாயகன்களில் ஒருவராகவும் பின்பு குணச்சித்திர நடிகராகவும் மாறி, தொலைக்காட்சிகளுக்கும் தாவி அங்கும் சீரியல்களில் நடித்து புகழ் பெற்றார்.
தன்னுடைய இத்தனையாண்டு கால திரையுலக அனுபவத்தை வைத்து இப்போதுதான் முதல்முறையாக தன்னுடைய நண்பர்கள் 3 பேரின் துணையுடன் படத்தின் தயாரிப்பாளராகவும் மாறி இயக்கமும் செய்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
பக்கா கமர்ஷியல் படமாகவும், அதிலும் நகைச்சுவை கலந்த சுவாரஸ்யமான திரைக்கதையுடனும், அழுத்தமான இயக்கத்துடனும் படத்தை அழகாக உருவாக்கியிருக்கிறார் மேஜர் கெளதம்.

தமிழகத்தில் வீட்டுக்கு வீடு கழிப்பறை கட்டித் தருவதற்காக மக்களுக்குத் தரப்பட்ட பணத்தில் 100 கோடி ரூபாயை அபேஸ் செய்கிறார் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர். அந்தப் பணத்தையெல்லாம் மலேசியாவிற்கு ஹவாலா மூலமாக அனுப்பியும் வைத்திருக்கிறார்.
இப்போது ஆட்சியில் சிக்கல். பதவிக்கு ஆபத்து வரும் சூழல் இருப்பதால் பணத்தை இன்னும் பத்திரப்படுத்த நினைக்கிறார் அமைச்சர். அவருடன் கூடவே இருக்கும் அல்லக்கையான கவிதாலயா கிருஷ்ணன், அந்தப் பணத்தை கொலம்பியா நாட்டில் இருக்கும் ஒரு வங்கியில் டெபாசிட் செய்ய ஐடியா கொடுக்கிறார்.
இதன்படி மலேசியாவிற்கு சென்று ஹவாலா பணத்தை வாங்கி, அதனை கொலம்பியா கொண்டு சென்று வங்கியில் டெபாசிட் செய்ய ஒரு பொறுப்பான நம்பிக்கையான ஆள் வேண்டும் என்று தேட, இதற்கு விச்சு விஸ்வநாத் கிடைக்கிறார். அமைச்சருக்கு நேரடி பழக்கமான பாலாஜி, விச்சுவை புக் செய்து மலேசியாவுக்கு அனுப்பி வைக்கிறார்.
மலேசியா வந்த விச்சு ஹவாலா தொழிலை மறைமுகமாக செய்து வரும் மணி எக்சேஞ்ச் கடைக்குச் சென்று அசால்ட்டாக 20 கோடி ரூபாயை ஒரே பேக்கில் வைத்து தான் தங்கியிருக்கும் தனது தோழியின் வீட்டுக்கு கொண்டு செல்கிறார்.
அதே மலேசியாவில் தனது பூர்வீக வீடு கடன் தொல்லையால் ஜப்தியாகப் போகிறது என்பதால் அதைத் தடுப்பதற்காக கடத்தல், கொள்ளை, திருட்டில் ஈடுபடவும் தயங்காத எம்.எஸ்.பாஸ்கர், தனது பேரனான ஹீரோ அரவிந்தையும் இந்தக் கடத்தல் வேலைக்குள் ஈடுபடுத்துகிறார்.
இவர்களின் முதல் கடத்தல் சொதப்பலாகிறது. ஒரு பாரில் இருந்து பெரும் பணக்காரி என்று நினைத்து இவர்கள் கடத்தி வரும் அஷ்வதி, விடிந்ததும் இவர்களுடைய பொருட்களையே திருடிச் சென்றுவிடுகிறார்.
இன்னொரு பக்கம் விச்சு விஸ்வநாத்துக்கு உதவி செய்வதாக நடிக்கும் ஹீரோயின் சாந்தினி, முழு பணமும் கைக்கு கிடைத்தவுடன் சுருட்டுவதற்காக காத்திருக்கிறார்.
அரைவேக்காட்டுத்தனமான சிஷ்யனான யோகி பாபு, தனது பாஸான கல்யாணுடன் சின்ன சின்ன திருட்டுக்களில் ஈடுபடுகிறார். இவர்கள் 20 கோடி ரூபாயுடன் செல்லும் விச்சுவை பாலோ செய்து பணத்தைத் திருட எத்தனித்து தோல்வியடைகிறார்கள். ஆனாலும் முயற்சியைக் கைவிடாமல் விச்சுவிடமிருக்கும் பணத்தைக் கையாடல் செய்ய துடியாய் துடிக்கிறார்கள்.
இந்த நேரம் விச்சுவை புக்கிங் செய்த பாலாஜி சென்னையில் ஒரு விபத்தில் சிக்கி கோமாவில் மூழ்கிவிட.. பணத்தை டிரான்ஸ்பர் செய்ய மலேசியாவுக்கு பாலாஜி யாரை அனுப்பியிருக்கிறார் என்பது தெரியாமல் அமைச்சர் முழிக்கிறார். இதற்காக அவர் ஒரு தனியார் டிடெக்டிவ் ஏஜென்டை அணுகி அவனிடத்தில் விஷயத்தைச் சொல்லி அவனையும் மலேசியாவிற்கு அனுப்பி வைக்கிறார்.
இன்னும் சில நாட்களில் மீதமிருக்கும் 80 கோடியையும் ஹவாலா ஏஜென்ஸியிடமிருந்து பெற்று கொலம்பியா செல்ல திட்டம் தீட்டுகிறார் விச்சு. இந்த நேரத்தில் தன்னை சென்னையில் இருந்து அனுப்பி வைத்த பாலாஜி கோமாவில் மூழ்கிவிட்டதை அறிந்து மொத்தப் பணத்தையும் தானே ஆட்டையை போட எண்ணி திட்டம் தீட்டுகிறார். இதனால் ஒரு சேப்டிக்காக தன்னுடைய பாடிகார்டாக இருக்கும்படி ஹீரோ அரவிந்தை கேட்டுக் கொள்ள.. அவரும் சம்மதிக்கிறார்.
அதே நேரம் விச்சு விஸ்வநாத்திடமிருந்து அந்த 100 கோடியையும் சுருட்ட எம்.எஸ்.பாஸ்கர், அஷ்வதி டீம் ஒரு பக்கமும், சாந்தினி, யோகி பாபு, கல்யாண் கோஷ்டி இன்னொரு பக்கமும், தனியார் டிடெக்டிவ் ஏஜென்ட் மூன்றாவது பக்கமுமாக முட்டி மோதுகிறார்கள்.
கடைசியில் அந்த 100 கோடி ரூபாய் என்ன ஆனது..? யார் கையில் கிடைத்தது என்பதுதான் இந்த சுவாரஸ்யமான திரைக்கதையின் கிளைமாக்ஸ்.
படத்தின் மிகப் பெரிய பலமே நகைச்சுவையை மிளிர வைக்கும் வகையில் செய்திருக்கும் இயக்கம்தான். நகைச்சுவை கலந்த படத்தை இயக்கம் செய்வது அத்தனை சுலபமல்ல. அதிலும் முதல் படத்திலேயே அதனை செய்து காண்பித்திருக்கிறார் இயக்குநர் மேஜர் கெளதம். இவர், மேலும் தொடர்ந்து படங்களை இயக்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.
இவருக்கு பக்க பலமாக இருந்து கை கொடுத்து உதவியிருக்கிறார் படத்தின் வசனகர்த்தாவான ராதாகிருஷ்ணன். சின்னத்திரையில் பல வருடங்களாக வசனம் எழுதிய அனுபவம் கொண்ட ராதாகிருஷ்ணன், திரைப்படங்களிலும் தொடர்ச்சியாக தனது சாதனைகளைத் தொடர்ந்து வருகிறார். அவருடைய வெற்றி திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகிவிட்டது.
அத்தனை பேரையும் பிரித்து மேய்ந்தது போல இவர் எழுதியிருக்கும் டைமிங் வசனங்கள்தான் குபீர் சிரிப்பை வரவழைத்திருக்கின்றன. அதிலும் யோகிபாபுவும், எம்.எஸ்.பாஸ்கரும் ஒருவரையொருவர் வாரிவிட்டுக் கொள்ளும் காட்சிகளும், தங்களைப் பற்றி அவர்களை கொடுத்துக் கொள்ளும் பில்டப்புகளும், எம்.எஸ்.பாஸ்கரின் வழுக்கைத் தலையைப் பற்றி ஒரு ஆராய்ச்சியே செய்யும் அளவுக்கு எழுதப்பட்டிருக்கும் வசனங்களும்தான் படத்தின் சுவாரஸ்யங்கள்..! வெல்டன் ராதாகிருஷ்ணன்.
‘சென்னை-28’ உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்திருக்கும் அரவிந்துக்கு இது தனிமையான ஹீரோ வேஷம்.  இதில் அதிகமாக கவனிக்க வைத்திருக்கிறார். அதேபோல் விச்சு விஸ்வநாத்துக்கும். சுந்தர்.சி.யின் ஆஸ்தான நடிகரான இவர் இந்தப் படத்தில்தான் அதிகமான காட்சிகளில் நடித்த பெருமையைப் பெற்றிருக்கிறார்.
சாந்தினி, அஷ்வதி இருவருக்குமே சம அளவுக்கான நடிப்புக்கான ஸ்கோப் படத்தில் இருக்கிறது. இருவருமே மிக அழகாக நடித்திருக்கிறார்கள். திருடி என்பதே தெரியாத அளவுக்கு அஷ்வதியும், வில்லி என்பதையே காட்டாத அளவுக்கு சாந்தினியும் படத்தை நகர்த்த பெரிதும் உதவியிருக்கிறார்கள். அதிகமாக உடலை எக்ஸ்போஸ் செய்யாமல், கவர்ச்சி காட்டாமல் வெறுமனே நடிப்பினாலும், அழகினாலும் ரசிகர்களை கவர்கிறார்கள் இரண்டு ஹீரோயின்களும்..!
இதேபோல் யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கரின் காமெடியும் சக்கை போடு போடுகிறது. எம்.எஸ்.பாஸ்கர் என்னும் நடிப்பு பல்கலைக்கழகத்திற்கு ஈடு கொடுத்து யோகி பாபு நடித்திருப்பதும், அவருடைய தனி ஸ்டைலான மாடுலேஷனும் தியேட்டரில் சிரிப்பலைகளை உருவாக்கியிருக்கின்றன.
அப்பாவியா, முட்டாளா என்கிற கேள்விக்கு விடையே கிடைக்காதது போல இருக்கும் யோகிபாபுவின் கேரக்டர் ஸ்கெட்ச் மிக, மிக சுவாரஸ்யமானதுதான். அவசர யுகத்திலும் முட்டாள்தனமாக பேசும் வசனம்.. அத்தனை டென்ஷனிலும் “அதென்ன..?” என்று கேட்டு பிரச்சனையை டைவர்ட் செய்யும்விதம் என்று யோகிபாபு இந்தப் படத்திற்காக கூடுதல் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார் என்றே சொல்லலாம்.
இந்தப் படத்தில் காட்டப்பட்ட ஒருவர்கூட நல்லவர் இல்லை என்பதுதான் படத்தின் மிகப் பெரிய பலம். அத்தனை திருடர்களையும் ஒன்றாகக் கூட்டி எண்ணிக்கையை பத்தாகக் காட்டியும் எதுவும் தவறாகப்படவில்லை என்பதுதான் இயக்குநருக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்.
அரவிந்த் கமலநாதனின் ஒளிப்பதிவில் இதுவரையிலும் தமிழ்ச் சினிமாவில் பார்த்திராத பல மலேசிய இடங்களை காண்பித்திருக்கிறார்கள். ஒவ்வொரு காட்சிக்கும் ஏற்றாற்போல் லொகேஷன்களை பார்த்து, பார்த்து படமாக்கியிருக்கிறார்கள். பாடல் காட்சிகளும் அழகுற படமாக்கப்பட்டிருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் அடுத்தடுத்து நடக்கும் டிவிஸ்ட்டுகள் எதிர்பாராதவை. ஆனால் சுவாரஸ்யமாக இருக்கின்றன.
திவாகர் சுப்ரமணியத்தின் இசையில் ‘கண்ல காச காட்டப்பா’ பாடலே தனியாக ஒலிக்கிறது. மற்றைய பாடல்களில் பாடல் வரிகள் காதிலேயே விழாமல் போனதுதான் துரதிருஷ்டவசமானது.
இத்தனை உழைத்தும், படத் தொகுப்பிலும், டப்பிங்கிலும் சில, பல தவறுகள் இருப்பது ஏற்புடையதாக இல்லை. இன்னும் கொஞ்சம் நிதானமாக சரி பார்த்து அனுப்பியிருக்கலாம். சில இடங்களில் பல வசனங்கள் சின்க் ஆகவே இல்லை. கட் செய்யப்பட்ட வசனங்கள் மியூட் செய்யப்படாமலேயே போயிருப்பதால் ஆங்காங்கே கட்டிங்குகள் தென்படுகின்றன. படத்தொகுப்பாளர் செல்வம் இந்தத் தவறுகளை எப்படி அனுமதித்தார் என்றே தெரியவில்லை. சரி செய்தால் நல்லது.
பக்கா கமர்ஷியல் படமாகவும், லாஜிக் ஏதும் பார்க்கவில்லையென்றால் கவலையை மறந்து சிரித்துவிட்டு வரலாம் என்று உறுதியாகச் சொல்ல வைத்திருக்கிறது இந்தப் படத்தின் மேக்கிங்.
இந்தக் காமெடியையும் தியேட்டருக்கு சென்று பாருங்களேன்..! நிச்சயம் பொழுது போகும்..!

அஞ்சுக்கு ஒண்ணு - சினிமா விமர்சனம்

24-11-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பேரண்ட்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.சண்முகம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இது.
இந்தப் படத்தில் ஜெரால்டு, ராஜசேகர், அமர், நசீர், சித்தார்த், உமாஸ்ரீ, மேக்னா  மற்றும் சிங்கம் புலி, முத்துக்காளை, உமா, கசாலி, ஷர்மிளா, காளையப்பன், சிவநாரயணமூர்த்தி  மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – நந்து, படத் தொகுப்பு – வி.பழனிவேல், இசை – சாகித்யா.ஆர், பாடல்கள்  – கானா பாலா, தொல்காப்பியன், கவிக்குமார், நடனம் – தீனா, காதர், அருண்குமார், ஸ்டில்ஸ் – அருண், டிசைன்ஸ் – சிவா, தயாரிப்பு மேற்பார்வை – ரஞ்சித், கே.ஆர்.பழனியப்பன்,  மக்கள் தொடர்பு-எம்.பி.ஆனந்த், இணை  தயாரிப்பு-S.S.ராஜ், இயக்கம் – ஆர்.வி.யார், பேனர்  –  பேரண்ட்ஸ் பிக்சர்ஸ், தயாரிப்பு  – எவர்கிரின் எஸ். சண்முகம்.

கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஐந்து இளைஞர்கள் பற்றிய கதை இது. தாய், தந்தை இல்லாது அனாதையாகிப் போய் சிறு வயதிலேயே நண்பர்களுடன் சேர்ந்து வளர்ந்தே வருகிறார்கள் ஐவரும்.
சென்னையில் ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் கட்டிட வேலை செய்து வருகிறார்கள். பகலில் வேலையும் இரவில் குடியும், கூத்துமாக இருக்கிறார்கள். நீண்ட நாட்களாக ஒரே காண்ட்ராக்டரிடம் பணியாற்றி வருவதால் இவர்களை கட்டிடம் கட்டும் இடத்திலேயே தங்கவும் அனுமதித்திருக்கிறார்கள்.
அதே இடத்தில் அதே வேலைக்கு வரும் உமாஸ்ரீ மீது சித்தார்த்துக்கு காதல். குடித்தாலும், பெண்களிடத்தில் போனாலும் ஐந்து பேரும் ஒன்று போலவே வரிசையாக போய்விட்டு வரும் நிலையில், ஒரேயொருவன் மட்டும் தனியே கல்யாணம் செய்து கொள்ளப் போவது மற்றவர்களுக்குப் பிடிக்கவில்லை.
சித்தார்த்தை கண்டிக்கிறார்கள். அடிதடியில் ஈடுபடுகிறார்கள். இதனையும் மீறி சித்தார்த்தும், உமாஸ்ரீயும் திருமணம் செய்து கொள்கிறார்கள். இதன் பின்பும் நண்பர்கள் தம்பதிகள் மீது கோபமாகவே இருக்க.. நண்பர்களை எந்த வகையிலும் சமாதானப்படுத்த முடியாமல் தவிக்கிறான் சித்தார்த். உமாஸ்ரீயும் தன்னால் முடிந்த அளவுக்கு அவர்களை நல்வழிப்படுத்த முயல்கிறாள். கடைசியில் அவளுக்கே அது ஆபத்தாக முடிகிறது.
ஆனாலும் விடாமல் போராடி தங்களுடைய நல்ல மனதை அவர்களிடத்தில் காட்டி அவர்களையும் நண்பர்களாக்குகிறார்கள் தம்பதிகள். இடையில் காண்ட்ராக்டரின் மகளுக்கும் இன்னொரு கூட்டாளியான அமருக்கும் இடையில் காதல் மலர்கிறது. இந்த நேரத்தில் இன்னொரு கூட்டாளிக்கு உடல் நலமில்லாமல் போக.. மருத்துவரிடம் செல்லக்கூட காசில்லாமல் தவிக்கிறார்கள்.
மழை என்னும் பேராபத்தில் சிக்கித் தவிக்கும் இந்த நேரத்தில் கடைசியாக சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் போக.. தன்னால் இவர்கள் படும் கஷ்டத்தை தாங்காமல் அந்த நோயாளி நண்பன் எடுக்கும் முடிவு இவர்களை அதிர்ச்சியாக்குகிறது.
அதோடு காண்ட்ராக்டர் தனது மகளின் காதலைப் பற்றி அறிந்து அதை தடுக்கும் முயற்சிகளிலும் ஈடுபடுகிறார். கடைசியில் என்னவாகிறது என்பதுதான் படமே..!
ஒரு அப்ரண்டிஷிப் இயக்குநர் இயக்கியிருந்தால் எப்படியிருக்குமோ அப்படித்தான் இருக்கிறது படம். அழுத்தமான காட்சிகளோ, பார்வையாளனை கட்டிப் போட வைக்கும் இயக்கமோ இல்லாமல்.. எல்லாவற்றிலும் ஏனோ, தானோவென்று இருக்கிறது. திரைக்கதையில் ஒரு சுவாரசியமும் இல்லாத காரணத்தினால் படம் எந்தவிதத்திலும் கவரவில்லை.
இந்த ஐந்து பேரும் இல்லாவிட்டால் ஏதோ அந்த கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியே திவாலாகிவிடும் போல வசனம் வைத்திருப்பதும், காட்சிகளை அமைத்திருப்பதும் ஏன் என்று தெரியவில்லை. சாதாரண செங்கல்லை அடுக்கும், வெள்ளையடிக்கும், பெயிண்ட் அடிக்கும், சுண்ணாம்பு கலக்கும் தொழிலாளர்களை நம்பியா கட்டுமான நிறுவனங்கள் வாழ்கின்றன. இவர்கள் இல்லாவிட்டால் இன்னொரு குழு. திரைக்கதையில் இருக்கும் மகா சொதப்பல் இதுதான்..!
நடிகர்களைப் பொறுத்தவரையில் உமாஸ்ரீயும், சித்தார்த்தும், நண்பர்களும் கதைக்கேற்றவாறு.. அவர்களுக்கேற்ற கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ப நடித்திருக்கிறார்கள்.
உமாஸ்ரீயின் காதல் வளரும் பாடல் காட்சியும், தீபாவளி பாடல் காட்சியும் மட்டுமே படத்திற்கு ஒரேயொரு ஆறுதல். இன்னொரு நாயகியான மேக்னாவின் காதல் எதனால் உருவானது.. எப்படி உருவானது என்பதே தெரியாமல் பார்த்தவுடன் பட்டென்று உருவாகி கடைசியில் கண்ணைக் கசக்கும்விதமாக கரைகிறது..!
இந்த நண்பர்கள்தான் இப்படியென்றால் மேஸ்திரியான சிங்கம்புலியின் கேரக்டர் ஸ்கெட்ச்சும்கூட அநியாயமானது. வீட்டில் மனைவியிருக்க வேறு பெண்களை கூச்சமே இல்லாமல் நாடுவதும்.. அவள் கணவனிடமே அதைப் பற்றிப் பேசுவதுமாக திரைக்கதை செல்வது.. தமிழ்ச் சினிமாவுலகம் எதார்த்தம் என்கிற பெயரில் எங்கே போகிறது என்று யோசிக்க வைக்கிறது.
இது கட்டிட தொழிலாளர்களிடத்தில் மட்டுமல்ல.. இவர்களையும் தாண்டி மற்ற துறைகளில் இருக்கும் அடிமட்ட தொழிலாளர்களிடமும் இருக்கும் பிரச்சினைதான். அன்றைக்கு சம்பாதிப்போம். அதையே கொண்டாடி அழிப்போம் என்றே இவர்களில் பெரும்பாலோர் அவர்களது வாழ்க்கையை அவர்களே அழித்துக் கொள்கிறார்கள்.
இத்தனை வயதாகியும் திருமணம், குழந்தை என்ற எண்ணமே இல்லாமல் இருக்கும் இளைஞர்களின் எண்ணவோட்டத்தை பதிவு செய்ய முயன்ற இயக்குநர் அதில் தோல்வியடைந்திருக்கிறார். இப்படியொரு எண்ணமே இல்லாமல், குடி கூத்தாகவே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நிச்சயம் சமூகத்திற்குக் கெட்டவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்கேற்ற கண்டனத்தை இந்தப் படம் பதிவு செய்யவில்லை என்பது வருத்தத்திற்குரியது.
இன்னமும் 50 சதவிகிதம் உழைத்திருக்க வேண்டியிருக்க படம் இது..!

கடவுள் இருக்கான் குமாரு - சினிமா விமர்சனம்

19-11-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

 ‘தெய்வ வாக்கு’, ‘சின்ன மாப்ளே’, ‘ராசையா’, ‘அரவிந்தன்’, ‘அரவான்’ போன்ற பிரம்மாண்டமான படங்களை தயாரித்த அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் 25-வது படம் இது. இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கியிருக்கும் 7-வது படமும்கூட.  

லஞ்சப் பேயான ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் இரண்டு இளைஞர்கள் சிக்கிக் கொண்டு தவிப்பதுதான் சுருக்கமான கதைக் கரு. இதற்கு எம்.ராஜேஷின் வழக்கமான பாணியிலான திரைக்கதையைக் கொண்டு கதையை உருவாக்கியிருக்கிறார்கள்.
நாளை நிகில் கல்ரானியுடன் தனக்கு திருமணம் நடக்கும் நிலையில் இன்று பேச்சுலர் பார்ட்டி என்று கொண்டாடுவதற்காக பாண்டிச்சேரி வருகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். உடன் அவரது உற்ற நண்பர் பாலாஜி.
பாண்டிச்சேரியில் இருந்து திரும்பும் வழியில் டோல்கேட்டை தாண்டியவுடன் தமிழக எல்லை சாவடியில் லஞ்சப் போலீஸான பிரகாஷ்ராஜ், ரோபோ சங்கர், சிங்கம்புலி கூட்டணியிடம் சிக்குகின்றனர் இருவரும்.
பிரகாஷுக்கே தெரியாமல் பாண்டிச்சேரியில் சரக்கை வாங்கி காரில் டிக்கியில் வைத்து கொண்டு வந்திருக்கிறார் பாலாஜி. இதைப் பார்த்து பிரகாஷ்ராஜ் இவர்களை அரெஸ்ட் செய்யும்படி சொல்ல, கிடைத்த இடைவெளியில் காரை எடுத்துக் கொண்டு தப்பித்து ஓடுகிறார்கள் இருவரும்.
ஆனாலும் பிரகாஷ்ராஜ் இருவரையும் விரட்டிப் பிடிக்கிறார். 50 ஆயிரம் ரூபாயை லஞ்சமாகக் கொடுத்துவிட்டு போகும்படி சொல்கிறார். உலகத்திலேயே முதல் முறையாக 50 ஆயிரம் ரூபாய் லஞ்சத்தை செக்காக எழுதிக் கொடுத்துவிட்டு தப்பிக்கிறார்கள் இருவரும்.
ஆனாலும் மறுபடியும் பாலாஜி செய்த திருவிளையாடலால் கடுப்பான பிரகாஷ்ராஜ் இம்முறை அவர்களை கொலை வெறியாய் விரட்டிப் பிடிக்கிறார். இம்முறை லஞ்சத் தொகை அதிகமாகி 3 லட்சமாகிறது. இதைக் கொடுக்காவிட்டால் பல வழக்குகளை அவர்கள் மீது போட்டு திருமணத்தையும் நடத்தவிடாமல் செய்துவிடுவதாக பிரகாஷ்ராஜ் மிரட்டுகிறார்.
இன்னொரு பக்கம் மணப்பெண்ணும், அம்மாவும் “எப்போ வருவ…?” என்று போனில் டார்ச்சர் செய்ய.. மாப்பிள்ளையும், மாப்பிள்ளை தோழனும் என்ன செய்தார்கள்..? லஞ்ச போலீஸிடமிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் பிரதான திரைக்கதை.
ராஜேஷின் மற்றைய படங்களை போலவே இந்தப் படமும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்துமே அந்த நொடியில்.. அந்த நிமிடத்தில் சிரித்துவிட்டு மறந்து போகின்ற அளவுக்கான காமெடிகள் என்பதுதான் கொஞ்சம் சோகமான விஷயம்.
படத்தின் முற்பாதியில் உண்மையிலேயே விறுவிறுப்புதான். அதிலும் பாண்டிச்சேரி போர்ஷன் ஆரம்பித்த பின்புதான் படமே வேகமெடுக்கிறது. பின்பு பிரகாஷ்ராஜின் வருகை அதை இன்னும் வேகமெடுத்து ஓட வைத்திருக்கிறது. ஆனால் படத்தின் பிற்பாதியில் தேவையில்லாமல் பேய்க் கதையைப் புகுத்தியிருப்பதால் சட்டென அசுர வேகத்தில் போய் பட்டென்று முதல் கியரில் சாதுவாக நடப்பது போன்ற பீலிங்கை படம் கொடுத்திருப்பதில் சற்று ஏமாற்றமாகவே இருக்கிறது.
பொதுவாக ராஜேஷின் படங்களில் கலாய்ப்புகள் அதிகமாக இருக்கும். அந்தக் கலாய்ப்புகள் அதிகமாக இன்றைய இளைஞர்களைக் கவரும்வகையிலேயே இருக்கும். இந்தப் படத்திலும் அவைகள் அனைத்துமே இருக்கின்றன.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை கழுவி, கழுவி ஊற்றியிருக்கிறார்கள். ஏற்கெனவே பலவித கட்டப் பஞ்சாயத்துக்களில் இருக்கும் நிலைமையில் இது வேறய்யா..? அந்தம்மா பொங்கிரப் போகுதுப்பா..!
இது போதாதென்று கிறித்துவ பாதிரியார்களையும், சர்ச்சுகளையும், அப்பம் வாங்குவதையும்கூட விட்டு வைக்காமல் கிண்டலடித்திருக்கிறார்கள். இது எங்கே போய் முடியப் போகுதோ..?
லஞ்சம் கொடுப்பது தவறு.. வாங்குவதும் தவறு என்பதை அரசு தீண்டாமை விளம்பரத்திற்கடுத்து அதிக அளவில் பரப்புரை செய்து வரும் வேளையில், லஞ்சம் கொடுத்தாவது காரியத்தைச் சாதிக்க வேண்டும் என்று துடிக்கும் இளைஞர்களை கண்டிப்பது போல காட்சிகள் இல்லாததும் கண்டிக்கத்தக்கதுதான்..
படத்தில் ஹீரோ, ஹீரோயின்களையும் மிஞ்சியவர்கள் ஊர்வசியும், பிரகாஷ்ராஜூம்தான்..! பஞ்சாயத்து செய்யும் அக்காவாக அமர்ந்திருக்கும் ஊர்வசி செய்யும் அலட்டல், அலப்பறைகள்.. பஞ்சாயத்துகள் வயிற்றை பதம் பார்க்கும் காமெடிகள்..! இடையிடையே மனோபாலா எடுத்துக் கொடுக்கும் சேனலின் ரகசியங்கள் குபீர் சிரிப்பை வரவழைப்பவை.
தான் காதலித்த பெண்ணின் அப்பாவான எம்.எஸ்.பாஸ்கர் போடும் குடும்பத்தோடு கிறித்துவ மதத்திற்கு இடப் பெயர்ச்சி செய்ய வேண்டும் என்கிற நிபந்தனையும் அதன் விளைவுகளும் இன்னொரு பக்க காமெடி அண்ட் சென்ஸ் ஸ்டோரி. இதைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் பேசும் அந்த நீளமான வசனமும் அவர் ஒரு நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறது.
இதேபோல் ஸ்கிரீனில் தோன்றும் முதல் காட்சியில் இருந்து கடைசியாக தனது சின்ன வீடு விஷயத்தை மனைவியிடம் சொல்லாதே என்று கெஞ்சும் காட்சிவரையிலும் பிரகாஷ்ராஜின் சின்னச் சின்ன ஆக்சன்கள்கூட ரசிக்க வைத்திருக்கின்றன. சிறந்த நடிகர்களால் மட்டுமே காட்சிகளை மேலும் நகர்த்திச் செல்ல முடியும் என்பதற்கு பிரகாஷ்ராஜ் கூட்டணியினரின் தொடர்ச்சியான நகைச்சுவை துணுக்குகளே உதாரணம்.
ஜி.வி.பிரகாஷுக்கு இந்த லவ்வர் பாய் ஹீரோ வேஷம் பொருந்துகிறதா என்று தெரியவில்லை. டார்லிங் கதையம்சமே வேறு என்பதால் அதில் ரசிக்க முடிந்தது. இதில் ராஜேஷின் இயல்பு தன்மையும் கலந்திருப்பதால் இயக்குநரே அதிகம் மேலோங்கியிருக்கிறார்.
நிக்கி கல்ரானி, ஆனந்தி இரு ஜோடிகளில் சிறப்பான இயக்கத்தினால் இவர்களை முழுமையாக ரசிக்கவும் முடிந்திருக்கிறது. நிக்கியைவிடவும் ஆனந்தி நடித்திருக்கிறார். ஆனந்தியைவிடவும் நிக்கி அதிகமாக கவர்ந்திழுக்கிறார். நிக்கியைவிடவும் ஆனந்தி ஆடைக் குறைப்பில் எச்சரிக்கையாக இருந்திருக்கிறார். ஆனந்தையவிடவும் நிக்கியே பாடல் காட்சிகளில் கிளாமரை கொட்டியிருக்கிறார்.
சுவாரஸ்யமான காட்சிகளால், வசனங்களால் காதலர்களின் மோதல், ஊடல், காதல் என்று அனைத்தையும் சகஜமாக்க நம்மிடையே நேரலை மின்சாரம் போல கடத்தியிருக்கிறார் இயக்குநர்.
“தயவு செய்து இங்கிலீஷ் பேசாத” என்று சொல்லி நிக்கி பிரகாஷை துரத்தும் காட்சியும், தன்னை மறந்துவிட்டு நிக்கியை கல்யாணம் செய்து கொள்ளும்படி ஆனந்தி பிரகாஷை துரத்தும் காட்சியும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல ராஜேஷின் சிறப்பான இயக்கத்திற்கு உதாரணமாக சுட்டலாம்.
நடிப்பில் குறை வைக்காத ஜி.வி.பிரகாஷ், இசையில்தான் கோட்டைவிட்டுவிட்டார். அனைத்துமே ஒலியின் இரைச்சலில் பாய்ந்தோடிய ஒலிக் கலவைகளாகவே இருக்கின்றன. ‘லொக்காலட்டி பாய்ஸ்’, ‘நீ போன தெருவுல’, ‘ஹேய் பார்த்து போடி’ என்ற பாடல்கள் காட்சியமைப்புகளால் கவர்ந்திழுக்கின்றன. ‘இரவில் ஆட்டம் பகலினில் தூக்கம்’ பாடலை ரீமிக்ஸ் செய்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். தேவையா என்றுதான் கேட்க வைக்கிறது அந்தப் பாடல் காட்சி.
படத்தின் மிகப் பெரிய தொய்வே அந்த பேய் பங்களா காட்சிகள்தான். அதுவரையிலும் ஸ்மூத்தாக பரபரவென்று ஓடிக் கொண்டிருந்த கதையில் திடீர் பள்ளம் விழுந்திருப்பது இதில்தான். இதையடுத்து மீண்டும் கல்யாண மண்டபத்தில் பிரகாஷ்ராஜ், பிரகாஷ் சந்திப்பு மேலும் சுவாரஸ்யத்தைக் கூட்டினாலும், இப்படித்தான் நடக்கப் போகிறது என்று நம்மால் ஊகிக்க முடிவதால் சிறிது ஏமாற்றம்தான்…!
சக்தி சரவணனின் ஒளிப்பதிவில் ஹீரோயின்களும், லொகேஷன்களும் பக்காவான அழகைக் காட்டியிருக்கின்றன. ‘ஹேய் பார்த்து போடி’ பாடல் காட்சியில் லொகேஷனும், ஆடுபவர்களின் காஸ்ட்யூம் டிஸைனும், ஒளிப்பதிவும் சேர்ந்து அதீதமாக கவனத்தை ஈர்த்திருக்கின்றன.
விவேக் ஹர்ஷனின் படத் தொகுப்பில் மிக அதிகமான ஷாட்டுகளைக் கொண்டிருக்கும் இந்தப் படத்தில் கொஞ்சமும் தொய்வில்லாமல் வசனங்களை பிசிறு தட்டாமல், ஆக்சன் குறையாமல் காட்சிகளை ரசிக்க முடிந்திருக்கிறது. வெல்டன் தொகுப்பாளர்.
ராஜேஷின் படங்களில் டாஸ்மாக் சரக்கும், மதுவருந்துவதும் முக்கிய கேரக்டர்களாக இருக்கும். இதில் சரக்கை காட்டியதோடு சரி.. அந்த வகையில் நல்ல பிள்ளையாக பெயர் எடுக்க முனைந்திருக்கும் இயக்குநர் ராஜேஷுக்கு நமது வாழ்த்துகள். பாராட்டுக்கள்..!
ராஜேஷின் முந்தைய படங்களிலெல்லாம் கொஞ்சம் அழுத்தமான கதையும் இருக்கும். கூடவே, இளைஞர்களின் மனசைத் திசை திருப்பும் டாஸ்மாக் சீன்கள் அதிகமாக இருக்கும். ஆனால் இதில் டாஸ்மாக்கே இல்லை. கூடுதல் திருப்பமாக கதையிலும் அழுத்தம் இல்லாமல் இருப்பது அதிர்ச்சிதான்.
எதற்கு சிரித்தோம்.. ஏன் சிரித்தோம்.. என்ற கேள்விக்கே விடையில்லாமல் ஒரு கமர்ஷியல் சினிமாவுக்குப் போனோமா? சிரிச்சோமோ? வந்தோமா? என்றிருக்க வேண்டுமாய் இயக்குநர் ராஜேஷின் இந்தப் படம் அமைந்திருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்தான்..!