நரேந்திர மோடியின் அமைச்சர்களின் இலாகாக்கள் முழு விபரம்..!

27-05-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


நேற்று பதவியேற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் அமைச்சர்களுக்கான இலாகாக்களின் முழு பட்டியல் இது :

பிரதமர் நரேந்திர மோடி, பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தித் துறை, விண்வெளி மற்றும் அனைத்து முக்கிய கொள்கை முடிவுகள் உள்ளிட்ட துறைகளை தன் வசம் வைத்துக் கொண்டுள்ளார்.
கேபினட் அமைச்சர்கள் :
1.ராஜ்நாத் சிங் – உள்துறை அமைச்சகம்.
2.அருண் ஜேட்லி – நிதி, பாதுகாப்பு மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை
3.சுஷ்மா ஸ்வராஜ் – வெளியுறவு அமைச்சகம்.
4.வெங்கய்ய நாயுடு – நகர்ப்புற வளர்ச்சி, வீட்டுவசதி, வறுமை ஒழிப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை.
5.கோபிநாத் முண்டே – பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகங்கள்
6.ராம் விலாஸ் பாஸ்வான் – நுகர்வோர் விவகாரத்துறை மற்றும் உணவு, வழங்கல் துறை.
7.நிதின் கட்கரி – போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை.
8.மேனகா காந்தி – பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றத் துறை.
9.கல்ராஜ் மிஸ்ரா – சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை.
10.நஜ்மா ஹெப்துல்லா – சிறுபான்மை விவகாரத்துறை.
11.ஆனந்த் குமார் – ரசாயனம் மற்றும் உரத்துறை.
12.ரவிசங்கர் பிரசாத் – தொலைதொடர்பு, தகவல் தொழில் நுட்பம் மற்றும் சட்டம், நீதித் துறை.
13.ஆனந்த கீதே – கனரக தொழில்துறை மற்றும் பொதுத் துறை.
14.உமா பாரதி – நீர் வள மேலான்மை.
15.அசோக் கஜபதி ராஜூ – விமான போக்குவரத்துத் துறை.
16.ஹர்சிம்ரத் கவுர் பாதல் – உணவு பதப்படுத்துதல் துறை.
17.நரேந்திர சிங் தோமர் – சுரங்கம் மற்றும் இரும்புத் துறை; தொழில் மற்றும் வேலை வாய்ப்புத் துறை.
18.ஜூவல் ஓரம் – பழங்குடியின் விவகாரத்துறை
19.ஹர்ஷ வர்த்தன்- சுகாதாரத் துறை
20.ஸ்மிருதி இராணி – மனித வள மேம்பாடு
21.ராதா மோகன் சிங் – விவசாயம்
22.தாவர்சந்த் கெலாட்- சமூக நீதி
23. சதானந்த கவுடா – ரயில்வே அமைச்சர்
இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு) :
1. ஜெனரல் வி.கே.சிங் – வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி, வெளியுறவு விவகாரம், வெளிநாடு வாழ் இந்தியர் விவகார துறை.
2. இந்திரஜித் சிங் ராவ் – திட்டமிடுதல், புள்ளியல், திட்ட அமலாக்கம், பாதுகாப்பு அமைச்சகம்
3. சந்தோஷ் கங்க்வார் – ஜவுளித்துறை, நாடாளுமன்ற விவகாரத்துறை, நீர் வளம், நதிகள் மேம்பாடு, கங்கை நதி புனரமைத்தல்
4. ஸ்ரீபத் எஸ்ஸோ நாயக் – கலாச்சாரம் மற்றும் சுற்றுலா
5. தர்மேந்திர பிரதான் – பெட்ரோலியம், இயற்கை எரிவாயு
6. சர்வானந்த சோனோவல் – விளையாட்டு, தொழில்முனைவோர் மேம்பாடு, திறன்சார் மேம்பாடு
7. பிரகாஷ் ஜவடேகர் – தகவல் ஒலிபரப்பு, சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம், நாடாளுமன்ற விவகாரத்துறை.
8. பியுஷ் கோயல் – மின்சாரம், நிலக்கரி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை
9. ஜிதேந்திர சிங் – அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை
10. நிர்மலா சீதாராமன் – வர்த்தகம் மற்றும் தொழில்துறை மற்றும் நாடாளுமன்றத் துறை.
இணை அமைச்சர்கள் :
1. ஜி.எம்.சித்தேஸ்வரா – விமான போக்குவரத்துத் துறை
2. மனோஜ் சின்ஹா – ரயில்வே துறை
3. நிஹால் சந்த் – ரசாயனம் மற்றும் உரத் துறை.
4. உபேந்திர குஷ்வாஹா – ஊரக வளர்ச்சித் துறை, குடிநீர், சுகாதாரம், பஞ்சாயத்து ராஜ் துறை.
5. பொன்.ராதாகிருஷ்ணன் – கனரக தொழில்துறை.
6. கிரண் ரிஜிஜு – உள்துறை.
7. கிரிஷன் பால் குர்ஜார் – சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்து துறை.
8. சஞ்சீவ் குமார் பாலியான் – விவசாயம், உணவு பதுப்படுத்துதல் துறை.
9. மன்சுக்பாய் வாசவா – பழங்குடியின விவகாரத் துறை.
10. ராவ் சாஹிப் தான்வே – நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் வழங்கல் துறை.
11. விஷ்ணுதேவ் சாய் – சுரங்கம், இரும்பு, தொழில், வேலைவாய்ப்புத் துறை.
12. சுதர்சன் பகத் – சமூக நீதித் துறை.

பதவியேற்றுள்ள சில மந்திரிகளின் கல்வித் தகுதி பற்றிய செய்திகளும் வெளியாகியுள்ளன. அது இங்கே :


கோச்சடையான் சினிமா விமர்சனம்

23-05-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாய்தான் வருவார் என்பதை இன்னொரு முறையும் நிரூபித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. ராணாதான் இது.. இல்லை.. இல்லை. சுல்தான் இது.. இல்லை.. இல்லை. இரண்டையும் சேர்த்து மிக்ஸ் செய்ததுதான் என்றெல்லாம் உட்கார்ந்த இடத்தில் இருந்து எழுதப்பட்ட அத்தனை கிசுகிசுக்களையும் இன்றைக்கு மறக்கடிக்கச் செய்திருக்கிறது கோச்சடையானின் விஷுவல் ட்ரீட்..!

கலிங்காபுரியில் பிறந்து, தனது தந்தையின் கொடூர மரணத்திற்குப் பின்னர் கடலில் குதித்து தப்பி கோட்டைப்பட்டினம் வந்து சேர்கிறான் ராணா. அங்கேயே வளர்ந்து பெரியவனாகி.. அந்த நாட்டு மன்னனின் நம்பிக்கைக்குரியவனாகி போர்ப்படைத் தளபதியாகவும் மாறுகிறான். கோட்டைப்பட்டினத்தில் அடிமைப்பட்டு கிடந்த தனது நாட்டு மக்களை தந்திரமாக போர் வீர்ர்களாக மாற்றி, அவர்களையும் ஒரு போர்க்களத்தில் தனது நாட்டுக்கே அழைத்து வந்து கலிங்காபுரியில் அடைக்கலமாகிறான் ராணா.
கலிங்காபுரி மன்னனுக்கு ராணாவை பார்த்ததும் கலக்கம். இவன் தன்னை என்ன செய்யப் போகிறானோ என்று..!? இடையில் மன்னனின் மகள் ராணாவைப் பார்த்தவுடன் காதல் கொள்ள.. அதையும் ஏற்றுக் கொள்கிறான்.. தனது தங்கையும், பட்டத்து இளவரசனும் காதல் கொள்ள.. அவர்களைச் சேர்த்து வைக்கிறான் ராணா..
கலிங்காபுரி மன்னின் எச்சரிக்கை உணர்வோடு எதை நினைத்து பயந்தானோ அதையும் ஒரு நாள் ராணா செய்யப் போக பிடிபடுகிறான்.. சிறையில் அடைக்கப்படுகிறான். அவனுக்குள் இருக்கும் அவனது தந்தையைப் பற்றிய ஒரு பிளாஷ்போக் கொஞ்சம் நேரம் திரையையும் நம் மனதையும் வருடுகிறது.. பின் எப்படி தப்பித்து மன்ன்னை பழி வாங்குகிறான் என்பதுதான் இந்தக் கோச்சடையானின் கதை..!
முதல் கால் மணி நேரங்களில் நமக்குக் கண்ணைக் கட்டிய கதைதான்.. இதுவரையில் ஆங்கில டப்பிங் படங்களையே இது போன்ற அனிமேஷன் சூழலில் நாம் பார்த்து பழகியிருப்பதால், முதல் முறையாக சூப்பர் ஸ்டாரையே அப்படி பார்க்க நமது கண்களுக்கு பழக்கமில்லாததால்  சில நிமிடங்கள் அது மூளைக்கு உத்தரவிட மறுத்தது.. அதன் பின் கதையின் நாயகன் கே.எஸ்.ரவிக்குமாரின் கைவண்ணத்தில் வழக்கமான தமிழ்ச் சினிமாவின் கதையும், பரபர திரைக்கதையும் நம்மை உள்ளே இழுக்க ஒரு மாய உலகத்தில் சஞ்சரிக்கும் புதுமையான அனுபவத்தை சராசரி ரசிகனால் அடைய முடிகிறது..
பொம்மை படம் என்றவர்களின் வாயில் நாலு லிட்டர் பெனாயிலை ஊற்றி கழுவச் சொல்லலாம்.. இந்திய அளவுக்கு.. இவர்கள் போட்ட முதலீட்டில் இந்த அளவிற்கு  கிராபிக்ஸையும், அனிமேஷனையும் கொண்டு வந்ததே பெரிய விஷயம்.. அதிலும் தமிழின் முதல் நேரடி அனிமேஷன் படம்.. இரு கரம் கூப்பி வணங்கி வரவேற்க வைத்திருக்கிறது..!
இளைஞனான ராணா கேரக்டரில் அந்த்த் துள்ளல் ஸ்டெப்பு, டான்ஸும், சண்டை காட்சியில் இருக்கும் வேகமும் நிஜத்தில் கிடைப்பதுகூட கஷ்டம்.. அனிமேஷனில் இதுதான் மிகப் பெரிய பலம்.. இதனைக் கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் செளந்தர்யா.
பிளாஷ்பேக்கில் கோச்சடையான் பற்றிய கதையின் திரைக்கதை செம விறுவிறுப்பு.. அவர் செய்யும் செயல் தவறா சரியா என்று பட்டமன்றமே நடத்தக் கூடிய அளவுக்கு மிக இயல்பான ஒரு கதையை அவருக்கு எழுதியிருக்கிறார் ரவிக்குமார்.. இதுதான் மனதை தொட்டுவிட்ட திரைக்கதை.. இதனாலேயே அனிமேஷனை தூக்கிக் கடைசியில் போட்டுவிட்டு ரசிக்க வைத்திருக்கிறது.
நாகேஷ் சிலை வடித்து அது உடைந்து போய் பணம் வராமல் போய்விடுமோ என்று தவிக்கும் காட்சியில், ராணா அந்தச் சிலையாக சில நிமிடங்கள் நிற்கும் காட்சியில் திரைக்கதை பலே.. சட்டென்று உணர முடியவில்லை அது ராணாதான் என்று..! இதுவொன்றை வைத்தே உடனடியாக பாடல் காட்சியைத் தொடர்ந்திருப்பது தமிழ்ச் சினிமா இயக்குநர்களுக்கே உரித்தான தனி அறிவு..!
ரஜினியைத் தவிர்த்து சட்டென்று அடையாளம் காண முடிந்த்து நாகேஷ், ஷோபனா, நாசர்தான்.. ருக்மணி, தீபிகா படுகோன், ஷண்முகராஜா, சரத்குமார் கேரக்டர்களை தீவிர விசாரணைக்குப் பின்தான் உணர முடிந்த்து.. தீபிகாவின் முகச் சாயல் ஒட்டவே இல்லை என்பதுதான் இன்றைய கோச்சடையான் விமர்சனங்களின் ஒன்றுபட்ட கருத்து. இதில் மாறுபட்ட கருத்தே இல்லை.
நாகேஷின் குரலைக் கேட்டு எத்தனை நாட்களாகிவிட்டது.. அந்த பாடி லாங்குவேஜோடு இதற்கு முகம் கொடுத்த அந்த மனிதர் யாரோ..? அவர் எங்கிருந்தாலும் வாழ்க..! ரஜினிக்கே பல இடங்களில் வேறொருவர் உயிர் கொடுத்திருப்பது தெரிகிறது.. மோஷன் கேப்ஸரிங் அனிமேஷன் படங்களே இப்படித்தானே..! இதில் என்ன தவறு இருக்கிறது..?
நிஜத்தில்தான் ரஜினி இப்படி டான்ஸ் ஆட முடியாது.. ஆனால் அனிமேஷனில் தீபிகாவுடனான டூயட்டுகளில் அசத்தல் ஸ்டெப்ஸ்.. அந்த மயில் தோகையின் பின்னணியில் விரியும் காதல் காட்சிகளுக்கு ஒரு ஷொட்டு..! திருநீலகண்டர் மாதிரியான தோற்றத்தில் வரும் கோட்டைப்பட்டினத்தின் தலைமைத் தளபதி கோச்சடையான் ஆடும் சிவதாண்டவ ஆட்டம், படத்தின் பிற்பாதியில் கண்ணை அகற்ற மறுத்தது.
ரஜினியின் முதல் அறிமுகக் காட்சியில் வழக்கம்போல அவருடைய ரசிகர்களை மகிழ்விக்க குதிரையில் வரும் அந்தக் காட்சியும்.. அதற்கு இசைப்புயல் ரஹ்மான் போட்டிருக்கும் பின்னணி இசையும் பலே.. படம் முழுவதும் பல இடங்களில் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு 4 கிலோ பொட்டாஷ் ஊரியாவையே உரமிட்டிருக்கிறார் ரஹ்மான்.
திரைக்கதையின் அடுத்தப் படியாக வசனத்தில்கூட கே.எஸ்.ரவிக்குமார் பின்னியிருக்கிறார். “சந்தர்ப்பத்தை நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்..” “எதிரிகளை அழிக்க ஒரே வழி மன்னிப்பு..” என்றெல்லாம் ரஜினியின் பஞ்ச் டயலாக்போல் வரும் சில வசனங்கள் படத்துடன் ஒன்றுபட வைத்தன.
பிரமாண்டத்தை காட்டுவதெனில் அனிமேஷன் எத்தனை ஈஸி என்பதை இந்தப் படத்தைப் பார்த்த பின்பு தமிழகத்து தமிழ்ச் சினிமா ரசிகர்களுக்கு இந்நேரம் புரிந்திருக்கும்.  இதே ராணா கதையை அனிமேஷன் இல்லாமல் எடுத்திருந்தால் இந்த அளவுக்கு பிரமாண்டமாக எடுத்திருக்க முடியுமா என்பது நிச்சயம் சந்தேகம்தான்..
போர் வீரர்களின் அணி வகுப்பு.. போர்க்களக் காட்சிகள்.. பாரசீக நாட்டில் இருந்து திரும்பும் கப்பல்கள்.. அந்தக் கப்பல்களில் நடைபெறும் சண்டைகள்.. அரண்மனையின் அழகு.. இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் தயாரிப்பாளரின் சொத்தை பிடுங்கியிருக்கலாம்.. ஆனால் நம் மனதையும் கொள்ளை கொண்டிருக்கிறது..!
இந்தப் படத்தில் பாடல் காட்சிகளைக்கூட முழுமையாக நீக்கிவிட்டு எடுத்திருக்கலாம். படத்தில் விறுவிறுப்பு இதைவிட கூடியிருக்கும்தான்.. ஆனால் ரசிகர்களின் ரசிக மனப்பான்மையை பார்த்து இயக்குநர்களெல்லாம் இந்த விஷயத்தில் பயப்படுகிறார்கள். பாடல் காட்சிகளை வெறுக்கும் உலக சினிமா ரசிகர்கள் இந்த ஒரு விஷயத்திற்காகவே இந்தப் படத்தை வாயில் வந்தபடி திட்டுவதற்காகக் காத்திருக்கிறார்கள்.. ரசிகர்கள் மனம் மாறினால் இயக்குநர்களும் நிச்சயம் மாறுவார்களய்யா..!
பல ஆங்கிலப் படங்களை பார்த்து, பார்த்து சலித்துப் போன பெருமக்களுக்கு இந்தப் படத்தின் அனிமேஷன் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் ரஜினி ரசிகர்களுக்கு நிச்சயம் இதுவொரு புதுமையான அனுபவம்.. இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்துக்கு மிகப் பெரிய பாராட்டுக்கள் காத்திருக்கின்றன.. எல்லோரும் தமிழ்ச் சினிமாவை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தப் போகிறோம் என்றெல்லாம் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் உண்மையாகவே இந்தப் படத்தின் மூலமாக அதனைச் செய்து காட்டியிருக்கிறார்  செளந்தர்யா.
கறுப்பு வெள்ளையில் இருந்து ஈஸ்ட்மென் கலருக்கு மாறவே தமிழ்ச் சினிமாவுக்கு நிறைய காலம் தேவைப்பட்டது. அன்பே வா வண்ணத்தில் எடுக்கப்பட்டு அதன் பின்பும் சில எம்.ஜி.ஆர். படங்கள் கறுப்பு வெள்ளையிலேயே வெளிவந்த்து.. ஈஸ்ட்மென் கலருக்கு மாறுவதற்கே தமிழ்ச் சினிமாவின் படாதிபதிகளுக்கும், இயக்குநர்களுக்கும் 2 ஆண்டுகள் ஆயினவாம். அதன் பின்பு இந்த ஈஸ்ட்மென்னையும் தூக்கிச் சாப்பிட சினிமாஸ்கோப் வந்தபோது.. இதனையும் முதலில் ஏற்க மறுத்து.. பின்பு மெதுவாக அரவணைத்தது கோடம்பாக்கம்.
மாறுதல் மட்டுமே உலகத்தில் மாறாத்து என்பார்கள். இதே டயலாக்கை ராணாவும் படத்தில் பேசுகிறார்.. இந்த மாறுதலுக்கு கோடம்பாக்கம் தன்னை ஆட்படுத்திக் கொள்ளத்தான் வேண்டும் என்பதை இதுவரையில் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றாத செளந்தர்யா என்னும் இளம் பெண் செய்து காட்டியிருக்கிறார்.
ரஜினி என்னும் பெரும் வர்த்தக சக்தி.. பெரிய முதலாளிகள்.. உதவிக்கு ஆட்கள் என்று ஆதரவான சூழல் இருந்தபோதிலும், தனியொரு பெண்ணாக அவர் இதை முனைந்து நிறைவேற்றியிருப்பது பாராட்டுக்குரியது..
மிக எளிதான கதை.. தமிழகத்து மக்கள் கேட்ட கதைதான்.. அம்புலிமாமாவில் தொடர்ச்சியாக படித்து வந்த கதை என்பதால் ரசிகர்களால் எளிதில் ஒன்ற முடிந்தது.. கதைத் தேர்வு.. திரைக்கதையின் விரிவாக்கம்.. அனிமேஷன் காட்சிகளில் ரஜினிக்கென்றே இருக்கும் தனி ஸ்டைலை கச்சிதமாகக் கொண்டு வந்தது.. அந்த ஹீரோயிஸத்தை படம் முழுக்க நிரவி வைத்தது.. இது எல்லாமே சேர்ந்து இந்த அனிமேஷன் படத்தை ரஜினியின் வழக்கமான படமாகக் காண்பித்திருக்கிறது.
நிச்சயம் கோச்சடையான் ரஜினி ரசிகனையும் தாண்டி தமிழ்ச் சினிமா ரசிகனையும் வெல்வான் என்பதில் நமக்குச் சந்தேகமில்லை..!

‘தேவர் மகன்’ படத்தின் உண்மையான கதாசிரியர் யார்..? சர்ச்சையில் கலைஞானமும், கமலும்..!

20-05-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘தேவர் மகன்’. கலைஞானி கமல்ஹாசனின் படங்களில் தனித்துவம் வாய்ந்தது. மறக்க முடியாத படமும்கூட.. கமல்ஹாசன், சிவாஜி கணேசன், கவுதமி, ரேவதி, நாசர், காக்கா ராதாகிருஷ்ணன், வடிவேலு, சங்கிலி முருகன், எஸ்.என்.பார்வதி என்று பல பிரபலங்களுக்கு பெயர் சொன்ன படம். 1992-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி தீபாவளியன்று வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது.இந்தப் படத்திற்கு சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருது கிடைத்தது. சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருதினை சிவாஜி கணேசனுக்குப் பெற்றுக் கொடுத்தது. சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது ரேவதிக்குக் கிடைத்தது. சிறந்த ஆடியோகிராபிக்கான விருதும், சிறந்த பாடகிக்கான விருது எஸ்.ஜானகிக்கும் இதே படம் பெற்றுக் கொடுத்தது.

படத்தின் கதை, திரைக்கதையைவிட வசனகர்த்தா கமல்ஹாசன் இந்தப் படத்தில் அதிகம் பேசப்பட்டார். அவ்வளவு வீரியமான வசனங்கள் இந்தப் படத்தில் இருந்தன. கூடவே இளையராஜாவின் இனிமையான இசையும் சேர்ந்து கொள்ள.. இப்போதும் பார்க்கப் பார்க்க திகட்டாத படம்..

மலையாள இயக்குநர் பரதன்தான் இந்தப் படத்தை இயக்கினார். பாதி படம் இயக்கி முடித்தபோதே பரதனுக்கும், கமல்ஹாசனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்களிருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தையே இல்லாமல் போனது. அப்படியிருந்தும் படத்தை எடுத்து முடித்து வெளியிட்டு ஹிட்டாக்கியது கமல்ஹாசனின் சாமர்த்தியம். ‘தேவர் மகன்’ படத்தின் வெற்றி விழாவில் அருகருகே அமர்ந்திருந்தும் பரதனும், கமல்ஹாசனும் பேசிக் கொள்ளாமலேயே இருந்தது சுவாரஸ்யம்தான்.

இந்தப் படம் இந்த பிரெண்ட்ஷிப்பை படத்தின் ஷூட்டிங்கின்போதே கட் செய்தது எனில்,  இன்னொரு பிரெண்ட்ஷிப்பை பட வெளியீட்டுக்குப் பின்பு கட் செய்தது. அது கமலுக்கும், இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கும் இடையிலான நட்பு. ‘தேவர் மகன்’ படத்தின் கதை தன்னுடையது என்றும், இதனை கமல்ஹாசன் தன்னுடைய பெயரில் வெளியிட்டிருக்கிறார் என்றும் படம் வெளியானவுடன் புகார் சொன்னார் கங்கை அமரன்.

இதைப் பற்றி கமல்ஹாசனிடம் கேட்டபோது செல்லமாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு “அவரோட கதையாம்மா..?” என்று எதிர்க் கேள்வி கேட்டு பஞ்சாயத்தை முடித்துவிட்டார். அதற்குப் பின்னர் இன்றுவரையிலும் கங்கை அமரனுக்கும், கமலுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இல்லை.

இதில் இப்போது மேலும் ஒரு டிவிஸ்ட்டாக ‘நக்கீரன்’ பத்திரிகையில் தன்னுடைய திரையுலக வாழ்க்கை அனுபவங்களை ‘சினிமா சீக்ரெட்’ என்ற பெயரில் எழுதி வரும் பிரபல கதாசிரியர் கலைஞானம், ‘தேவர் மகன்’ படத்தின் கதைக் கருவும், சில காட்சிகளும் தன்னுடையது என்கிறார்.

இது குறித்து ‘நக்கீரன்’ இதழில் அவர் எழுதியிருப்பது இது :

பெரிய ஸ்டாரான கமலின் ஓரிரு படங்கள் சரியாகப் போகாத நிலையில் ‘கரகாட்டக்காரன்’ என்னும் பெரும் வெற்றிப் படத்தைத் தந்த கங்கை அமரனை தனது படத்திற்கு டைரக்டராக்கினார் கமல். படத்தின் தயாரிப்பும் கமல்தான்.

ஜல்லிக்காட்டு காளை பின்னணியில் ஆன கிராமியக் கதையை எழுதிய கங்கை அமரன், “இந்தக் கதையின் டிஷ்கஷனுக்கு கலைஞானமும், கலைமணியும் வந்தால் நன்றாக இருக்கும்…” என்று சொல்ல கமலும் டபுள் ஓகே சொல்லிவிட்டார். அழைப்பின்பேரில் நானும் கலைமணியும், கமலின் ஆபீஸுக்குச் சென்றோம். அங்கே தீவிரமாக கதை விவாதம் நடந்து கொண்டிருந்தது. எனக்கும், கலைமணிக்கும் தலா ஐயாயிரம் ரூபாய்க்கு செக் கொடுத்தார் கமல்.

கதை விவாதத்திற்கிடையே என்னிடம் உள்ள கதைகளை சுருக்கமாகச் சொல்வது எனது வழக்கம். அப்படித்தான்.. எனது கல்கத்தா கார் அனுபவமான ‘கான்வாய்’ கதையை கமலிடம் சொன்னேன். அடுத்து ‘எங்க ஊரு ஏட்டையா’ என்கிற கதையையும் சொன்னேன். “ரெண்டு கதைகளையுமே எடுக்கிறேன். ஆனா ரெண்டு, மூணு வருஷம் கழிச்சுத்தான் எடுக்க முடியும்…” என்றார். கமல். “உங்க செளகர்யம் போல செஞ்சுக்கலாம் தம்பி…” என நான் சொன்னேன்.

கமல்-கங்கை அமரன் படத்திற்காக கதை விவாதம் முடிந்தது. படத்திற்கு ‘அதிவீரபாண்டியன்’ என்கிற தலைப்பையும் சொன்னேன். கமல் உட்பட எல்லோருக்கும் பிடித்துவிட்டது. படப்பிடிப்பு துவங்கிருந்த நேரத்தில் சில, பல.. காரணங்களினால் அந்தப் படம் கைவிடப்பட்டது.

உடனடியாக வேறு படம் தொடங்க வேண்டியிருந்த கமல், ஒரு கதையைத் தானே தயார் செய்து, தானே இயக்கித் தயாரிக்க திட்டமிட்டார். எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டு நட்சத்திரங்கள், துணை நடிகர்கள் என சுமார் 200 பேர்களுடன் கமல் தனது சொந்த ஊரான பரமக்குடி பக்கம் தங்கிவிட்டார்.

முதல் நாள் ஷூட்டிங் முடிந்தது. சிந்தனைவயப்பட்டவராக கமல் தூங்காமல் விழித்திருக்க.. அந்தச் சமயம் கமலை வைத்து படம் தயாரிக்க விரும்பி, அங்கே சென்று கமலை சந்தித்தார் சங்கிலிமுருகன்.

“என்ன கமல்.. ஒரு மாதிரியா இருக்கீங்க..?” என்று சங்கிலிமுருகன் கேட்க, “இன்னிக்கு ஷூட்டிங் முடிஞ்சது. ஆனாலும் எனக்கு திருப்தி வரலை. கதை சரியா இல்லை.. அதான் யோசனையா இருக்கு..” என்று கமல் சொல்லிவிட்டு, “சங்கிலி ஸார்.. கலைஞானம் என்கிட்ட ரெண்டு கதைகளோட லைன் சொன்னார். அதுல ஒண்ணு எனக்குப் பிடிச்சிருக்கு. அதை வைச்சு பண்ணலாமா..? அந்த லைன் சொல்றேன்.. கேக்குறீங்களா..?”

“சொல்லுங்க..”

“ஒரு கிராமத்துல இரு பெரிய புள்ளிகள். கோயிலின் ‘முதல் மரியாதை’ என்னும் ‘பரிவட்டம்’ யாருக்கு என்பதில் இருவருக்கும் இடையே போட்டி. தீர்வு கிடைக்காததால் கோயிலை மூடி ஆளுக்கொரு பூட்டைப் போட்டுவிடுகிறார்கள். ‘தீர்வு கிடைக்கும்வரை கோயிலை திறக்கக் கூடாது’ என பரஸ்பரம் சவால் விடுகிறார்கள். இதுதான் கலைஞானம் அண்ணன் சொன்ன ஒன் லைன்..” என்று கமல் சொல்ல.. “இதை வைச்சு தாராளமா செய்யலாம்..” என்று சங்கிலிமுருகனும் ஆர்வமாகிவிட.. இருவரும் விடிய, விடிய கலந்து பேசியதில் முழு திரைக்கதையையும் கமல் அழகாக எழுதிவிட்டார்.

மறுநாள் படப்பிடிப்பு ஜோராகத் தொடங்கியது. அதுதான் ‘தேவர் மகன்’ திரைப்படம். இந்தச் சமயம், சந்தர்ப்பம் சில சங்கடங்களை உண்டாக்கியது.

‘தேவர் மகன்’ படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. அப்போது நான் பாக்யராஜுடன் பார்ட்னராக சேர்ந்து ‘அம்மா வந்தாச்சு’ படத்தை எடுத்து அதனை ரிலீஸ் பண்ணும் வேலைகளில் இருந்தோம். இதற்காக நான் பாக்யராஜின் ஆபிஸிலேயே இருந்தேன். அந்த ஆபீஸுக்கு கமல் போன் பண்ணினார்.

“அண்ணே.. என் படத்தில் உங்களுக்கு முக்கியமான வேஷம் இருக்கு. உடனே கிளம்பி வர முடியுமா..?” என கேட்டார். “தம்பீ.. உங்க படத்துல நீங்க எனக்கு வேஷம் தர்றது அளவிலா மகிழ்ச்சி தருது. ஆனா, இங்க எனக்கு ‘அம்மா வந்தாச்சு’ ரிலீஸ் வேலைகள் இருக்கே…?” என்றேன் நான். “அப்போ.. முதல்ல அதைச் செய்யுங்கண்ணே.. நான் வேற ஆளைப் போட்டுக்குறேன்..” என்றார் கமல். (‘தேவர் மகன்’ படத்தில் காக்கா ராதாகிருஷ்ணன் ஏற்றிருந்த வேஷத்திற்காகத்தான் கமல் என்னை அழைத்தார் என்பதை, பிற்பாடு காக்கா ராதாகிருஷ்ணனே என்னிடம் சொன்னார்.)

ஒரு நாள் என்னுடைய ‘மிருதங்க சக்கரவர்த்தி’ படத்தில் என்னால் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்ட, நடிகர் நாகராஜ சோழன் என்னைச் சந்தித்தார். “அண்ணே, ‘தேவர் மகன்’ படத்ல ஒரு நல்ல கேரக்டர் பண்ணிட்டு வந்தேன்…” என்றார். “அப்படியென்ன கேரக்டர்..?” என கேட்டேன். டேமில் குண்டு வைப்பது உள்ளிட்ட சில சீன்களையும் சொன்னார். இது கமல்கிட்ட நாம சொன்ன கதை மாதிரியிருக்கே..? இதுக்குத்தான் கமல் ‘தேவர் மகனில்’ நடிக்கக் கூப்பிட்டாரோ என எனக்குள் ஒரு சந்தேகம். இருந்தாலும் முழு விபரமும் தெரியாமல் அவசரப்படக் கூடாது என அமைதியானேன்.

சில நாட்கள் கழித்து கமல் அலுவலகத்திற்கு போன் போட்டு மேனேஜர் டி.என்.எஸ்ஸிடம் பேசினேன். நேரடியாகக் கேட்டுவிடக்கூடாது என்பதால் பாலீஷாக சுற்றி வளைத்து பேச்சை ஆரம்பித்தேன். “அதிவீரபாண்டியன்’ படத்துக்கு ஸ்டோரி டிஸ்கஷனில் கலந்துக்கிட்டதுக்காக ஒரு செக் குடுத்துச்சு தம்பி. அது என்ன தேதின்னு சொல்ல முடியுமா..?” என கேட்டேன். தேடிப் பிடித்து செக் தேதியைச் சொன்னவர் “கலைஞானம் ஸார்.. ஒரு செய்தி.. உங்ககிட்ட சொல்ல மறந்திட்டேன்..” என்றார். “என்ன..?” என்றேன். “உங்க தம்பி கமல்.. நீங்க சொன்ன கதையில் இருந்து ‘தேவர் மகன்’ படத்துக்காக ரெண்டு, மூணு சீன்களை எடுத்துக் கொண்டார். உங்ககிட்ட சொல்லச் சொன்னார். நான்தான் மறந்திட்டேன்..”  என்றார். “சரிங்க…” எனச் சொல்லி போனை வைத்துவிட்டேன்.

‘தேவர் மகன்’ படத்தைப் பார்க்காமல் எந்த முடிவுக்கும் வரக் கூடாது. அவசரப்பட்டு அநாகரிகமாக நடந்துவிடக் கூடாது என உறுதியாக இருந்தேன். ‘தேவர் மகன்’ ரிலீஸ். முதல் நாள், முதல் ஷோவே பார்த்தேன். உடனேயே, கமலிடம் பேசுவதற்காக போன் செய்தேன். சிவாஜி பிலிம்ஸின் ‘கலைஞன்’ படப்பிடிற்காக மைசூர் போய்விட்டதாகச் சொன்னார்கள். சென்னைக்கு கமல் வந்த பிறகு சந்திக்கலாம் என இருந்துவிட்டேன்.  ‘தேவர் மகன்’ மிகப் பெரும் வெற்றியுடன் ஓடி முடியும் தருவாய் ஆன நிலையில், அதாவது இரு மாதங்களுக்குப் பிறகு, கமல் சென்னை திரும்பிவிட்டதாக செய்தி கிடைத்த்து.

கமலுடன் பேச விரும்பி பல முறை அவருடைய அலுவலகத்துக்கு போன் செய்தேன். ஆனால் முடியவில்லை. ஒரு நாள் போன் போட்டு உரத்த குரலில் பேசினேன். “கமல் தம்பிகிட்ட போனை குடுங்க. குடுக்கலைன்னா, நான் இப்பவே ஆபீஸுக்கு வருவேன்..” என்று சொன்னதும் உடனே லைனில் வந்தார் கமல்.

“அண்ணே.. வணக்கம்ண்ணே.. கொஞ்சம் பிஸியா இருந்திட்டேன்.. என்னண்ணே..?”

“தம்பீ.. தேவர் மகன் பார்த்தேன். கதையோட ஆரம்பம் என்னுடையதா இருந்தாலும், அதுக்கு நீங்க எழுதின ஸ்கிரீன் பிளே அற்புதம் தம்பி.. உங்களைத் தவிர வேற யாராலும் இப்படி எழுத முடியாது தம்பி..”

“தேங்க்ஸ் அண்ணே.. நாளைக்கு காலைல டி.என்.எஸ்ஸை உங்க வீட்டுக்கு அனுப்புறேன்..”

கமல் சொன்னது போலவே டி.என்.எஸ். என் வீட்டுக்கு வந்தார். செக் ஒன்றை தந்தார்.  ஆனால், அது என் உழைப்புக்கேற்ற  ஊதியமாக இல்லை.  “நான் நாளைக்கு தம்பிய பார்த்து பேசிக்கிறேன். செக்கை நீங்க திரும்ப எடுத்திட்டுப் போயிருங்க..” என்று சொல்லிவிட்டேன்.

மறுநாள் காலை காக்கா ராதாகிருஷ்ணன் எனக்கு போன் செய்து, “கலைஞானம்… ஷூட்டிங்ல கமலுக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிருச்சுப்பா…” என்றார். எனக்கு வருத்தம் ஏற்பட்டது. ‘கலைஞன்’ படத்திற்காக சென்னை அண்ணா மேம்பாலத்திற்குக் கீழே கமல் குதிரையில் வரும் காட்சியைப் படமாக்கிக் கொண்டிருந்தார்கள், அதிகாலைக்கும் முன்பாக. பாலத்தின் தூண் சுவர் மீது குதிரை மோதியதில் கமல் கீழே விழுந்துவிட்டார். இதில் குறுக்குத் தண்டின் கடைசி தசைப் பகுதியில் இரண்டாக வெடிப்பு ஏற்பட்டுவிட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் கமல்.  இந்தச் சூழ்நிலையில் அவரைப் போய் பார்த்தால் ‘கதை விஷயமாக இருக்குமோ’ என்று கமல் நினைத்து வருந்தினால்..? அப்படி ஒரு வேதனைக்கு நாம் காரணமாகக் கூடாது என்று இருந்துவிட்டேன். கமல் நலம் பெற என் இஷ்ட தெய்வம் முருகனிடம் வேண்டிக் கொண்டேன். உயர் சிகிச்சைக்காக மும்பை சென்றுவிட்டார் கமல்.

சில வாரங்களுக்குப் பின் டைரக்டர் ரங்கராஜன் தயாரித்து வந்த ‘மகாராசன்’ படத்தில் கமல் சிறப்பு வேடமேற்று நடித்து வந்தார். இன்னும் ஒரு நாள் கமல் நடித்துக் கொடுத்தால் படம் வெளியாகிவிடும் என்ற சூழலில் அதில் நடித்துக் கொடுக்க கமல், மோகன் ஸ்டூடியோ வந்திருப்பதாக எனக்குத் தகவல் கிடைத்தது. நான் அங்கு போனேன். என்னைப் பார்த்ததும் “வாங்கண்ணே…” என எழுந்து கும்பிட்டார் கமல். அரை பாதியாக மெலிந்திருந்த கமலைப் பார்த்ததும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“என்ன தம்பி இப்படி மெலிஞ்சீட்டிங்க..?”

“அடிபட்ட காயம் இன்னும் முழுசா ஆறலண்ணே.. தொடர்ந்து ட்ரீட்மெண்ட்ல இருக்கேன்…” என்றபடியே தான் உட்கார்ந்திருந்த சேரை காண்பித்தார். அதில் பெரிய ஓட்டை இருந்தது.

“என்ன தம்பி இது..?”

“சேர்ல உட்காரும்போது மறந்துபோய் சாய்ந்து உட்கார்ந்தா, முதுகுத் தண்டுல உராயும். புண் ஆறாது.. அதனாலதான் இந்த ஓட்டை சேர்…” - 

கமல் இப்படிச் சொன்னதும் என் மனம் ரொம்பவே வேதனைப்பட்டது. “தம்பி.. உங்களை நலம் விசாரிக்க மட்டும்தான் வந்தேன். முதல்ல 
உங்க உடம்பை பார்த்துக்குங்க…” என்று சொல்லிவிட்டு வந்தேன்.

அடுத்த ஓரிரு நாளில் சங்கிலி முருகன் என் வீட்டுக்கு வந்தார்.

“அப்பே.. கமல் உங்களை அழைச்சிட்டு வரச் சொன்னார்..” என்றார் சங்கிலி முருகன். அவரது காரில் அவரும், என் காரில் நானும் கமல் ஆபீஸ் போனோம். கமல், மேனேஜர் டி.என்.எஸ். மற்றும் ஊழியர்கள் என்னை எதிர்பார்த்து நின்றிருந்தார்கள். எனக்கு முன் சங்கிலி முருகன் நுழைந்தார். அவர் டைரக்சன் பண்ணினார்.

“டி.என்.எஸ். அந்த பண்டலை எடுத்திட்டு வாங்க..”

கொண்டு வந்தார் டி.என்.எஸ்.

“அதை கமல் தம்பியிடம் கொடுங்க..”

கொடுத்தார்.

“கமல் தம்பி.. அண்ணன்கிட்ட பண்டலைக் கொடுத்து ஆசீர்வாதம் வாங்குங்க..”

கமல் என்னிடம் கொடுக்க நானும் வாங்கிக் கொண்டு கமலை ஆசீர்வதித்தேன். (ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை கமலை ஆசீர்வதிக்கின்றவன்தானே  நான்…!)

பண்டலில் என்ன இருக்கிறது என நாகரிகம் கருதி நானும் கேட்கவில்லை. அவர்களும் சொல்லவில்லை. விடைபெற்று வீடு வந்து சேர்ந்தேன். பண்டலைப் பிரித்தேன். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. சில மாதங்களுக்கு முன் கமல் மேனேஜர் டி.என்.எஸ்., என் வீட்டுக்கு வந்து கொடுத்த.. திறமைக்கேற்ற ஊதியம் இல்லை என நான் திருப்பியனுப்பிய அதே காசோலை தொகையே, இப்போது பணமாக இருந்தது. எனக்கும், கமலுக்கும் இடையே இடைத்தரகர்கள் விளையாடிவிட்டார்கள் என்றாலும், கமல் மீது நம்பிக்கையோடு இப்போதும் காத்திருக்கிறேன்…”

- இதுதான் கதாசிரியர் கலைஞானம் எழுதியிருப்பது.

இவர் சொல்படி பார்த்தால் ‘தேவர் மகனின்’ கதைக் கருவே இவருடையதுதான்.. பின்பு எப்படி கங்கை அமரன் தன் கதை என்று சொல்ல முடியும்..? ஒருவேளை இதுவரையிலும் கலைஞானம் இதனை வெளியில் சொல்லாத காரணத்தினால், கங்கை அமரன் டிஸ்கஷனில் உருவான கதையை இயக்குநர் என்ற முறையில் தன்னுடையது என்கிறாரோ என்னவோ..?

இனி அடுத்த வெர்ஷனை கங்கை அமரன்தான் சொல்ல வேண்டும்..! காத்திருப்போம்..!!!

நன்றி : நக்கீரன் வார இதழ்

அடங்காமல் சொத்துக்களை வாங்கிக் குவித்திருக்கும் ஜெயலலிதா..!

14-05-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு க்ளைமாக்ஸை நெருங்கிவிட்டது.

 கடந்த 9-ம் தேதி அரசு வழக்கறிஞர் பவானி சிங்கும், அவரது ஜூனியர் மராடியும் நீதிபதி முன்பு ஜெயலலிதாவின் 306 சொத்துகளின் பட்டியலை மாறி மாறி வாசித்து முடித்தபோது, அத்தனை பரபரப்பு.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் அரசுத் தரப்பின் இறுதி வாதம் 15-வது நாளாக கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. சரியாக 10.30 மணிக்கு நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா இருக்கையில் அமர்ந்தார். ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார், அசோகன், பன்னீர்செல்வம் ஆகியோர் ஆஜரானார்கள். தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் தரப்பில் வழக்கறிஞர்கள் சரவணன், நடேசன், பாலாஜி சிங், குமரேசன் ஆகியோர் ஆஜராகினர். குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வழக்கம்போல் ஆஜராகவில்லை.

அரசு வழக்கறிஞர் பவானி சிங், ''1991 முதல் 1996 வரை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, முறைகேடாக யார் யாரிடம் எப்படியெல்லாம் சொத்துகளை வாங்கிக் குவித்திருக்கிறார் என்பதை இங்கு 2,500 பக்க சாட்சியங்கள் அடங்கிய ஆவணத்தோடு தெரிவிக்கிறேன். 

இந்த வழக்கு தொடங்குவதற்கு முன்பு குற்றவாளிகள் தரப்பில் 17 சொத்துகள் மட்டுமே இருந்தன. இந்த வழக்கு நடைபெற்ற காலகட்டத்தில் 306 சொத்துகள் அதிகரித்துள்ளன. அதில் 286 சொத்துகள் பல வழிகளில் வருமானத்துக்கு அதிகமாகச் சேர்க்கப்பட்டவை. இந்த வழக்கு காலத்துக்கு முன்பு இவர்களின் பொருளாதார நிலையும், வழக்கு நடைபெற்ற காலத்தில் இவர்களின் பொருளாதார நிலையும் சம்பந்தம் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது'' என்று கூறி ஜெயலலிதா தரப்பின் சொத்துப் பட்டியலை காலை 10.30-க்கு வாசிக்கத் தொடங்கினார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு வாசிக்கத் தொடங்கியவர்கள், மாலை 4.15 மணிக்கு முடித்தனர். மேலும் சில ஆவணங்களை 15-ம் தேதி அறிவிப்பதாகச் சொல்லி முடித்தார் பவானி சிங்.

அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வாசித்த ஜெயலலிதாவின் 306 சொத்துப் பட்டியல் இதுதான்....

''இந்த வழக்கின் குற்றவாளிகளாகக் கருதப்படும் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் பெயர்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இவர்கள் பங்குதாரர்களாக இருந்து தொடங்கிய ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ், மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ஜே.எஸ்.ப்ராப்பர்ட்டீஸ், லெக்ஸ் ப்ராப்பர்ட்டீஸ், ஜெ ஃபார்ம் ஹவுஸ், ஜெயா கன்ஸ்ட்ரக்ஷன், ரிவர்வே அக்ரோ பிரைவேட் லிமிடெட், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், கிரீன் கார்டன், ஆஞ்சநேயா பிரின்டர்ஸ், சூப்பர் டூப்பர் பிரைவேட் லிமிடெட் என 32 கம்பெனிகள் பெயரிலும் சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன.

போயஸ் கார்டன் நிலம் மற்றும் கட்டடம் 10 கிரவுண்ட் 330 சதுர அடி விலை ரூ.1,32,009.

ஹைதராபாத் சிட்டியில் பிளாட் நம்பர் 36-ல் விரிவாக்கப்பட்ட 651.18 சதுர அடி கட்டடம் ரூ.50,000.

ஹைதராபாத் பஷீராபாத் என்ற கிராமத்தில் திராட்சைத் தோட்டம் மற்றும் இரண்டு பண்ணை வீடுகள், வேலையாட்களுக்கான குவாட்டர்ஸ் உள்ளிட்ட 11.35 ஏக்கர் நிலம் ரூ.1,65,058.

மேலும் அதே பகுதியில் 93/3 சர்வே எண்ணில் 3.15 ஏக்கர் ரூ.13,254 ஆகியவை சந்தியா மற்றும் ஜெயலலிதா பெயரில் வாங்கப்பட்டுள்ளன.  

தஞ்சாவூர் மானம்புசாவடியில் 2,400 சதுர அடியில் நிலம் மற்றும் வீடு ரூ.1,57,125.

அதே பகுதியில் 51,000 சதுர அடி காலி நிலம் ரூ.1,15,315.

மீண்டும் அதே பகுதியில் காலி நிலம் ரூ.2,02,778 ஆகியவை சசி என்டர்பிரைசஸ் வாங்கியது. 

சசிகலா பெயரில் திருச்சி அபிராமிபுரத்தில் நிலம் மற்றும் வீடு 3,525 சதுர அடி ரூ.5,85,420. 

ஜெயா பப்ளிகேஷன் பெயரில் கிண்டி தொழிற்பேட்டை நிலம் மற்றும் ஷெட் ரூ.5,28,039.

புதுக்கோட்டையில் 1 கிரவுண்ட் 1,407 சதுர அடி நிலம் மற்றும் கட்டடம் ரூ.10,20,371.

டான்சி நிலம் 55 கிரவுண்ட் ரூ.2,13,68,152.

சசிகலா, இளவரசி, சுதாகரன் பெயரில் 900 ஏக்கரில் கொடநாடு டீ எஸ்டேட் மற்றும் ஃபேக்டரி ரூ.7,60,00,000.

வெலகாபுரம் கிராமத்தில் மெடோ ஆக்ரோ ஃபார்ம்ஸுக்கு 210.33 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா பெயரில் வட சென்னையில் சேயார் கிராமத்தில் விவசாய நிலம் வேதாசல முதலியார் மகன் நடேச முதலியாரிடம் 3.43 ஏக்கர் நிலம் ரூ.17,060.

ஜெயலலிதா சசிகலா பெயரில் சென்னை-28, சீனிவாச அவின்யூ நிலம் மற்றும் வீடு 1,897 சதுர அடி வெங்கடசுப்பனிடம் இருந்து ரூ.5,70,039 வாங்கியது. 

சசிகலா பெயரில் சாந்தோம் ஆர்.ஆர். ஃப்ளாட் ரூ.3,13,530.

சசி என்டர்பிரைசஸ் பெயரில் சென்னை 4, அப்பாஸ் அலிகான் ரோட்டில் ரூ.98.904-க்கு ஷாப்பிங் மால்

நுங்கம்பாக்கம் காதர் நவாஸ் கான் ரோட்டில் 11 கிரவுண்ட் 736 சதுர அடி நிலம் ரூ.22,10,919

மவுண்ட் ரோடு, மயிலாப்பூரில் ஜெயலலிதா பெயரில் வாங்கிய நிலம் மற்றும் கடை ரூ.1,05409.

திருநெல்வேலி மாவட்டத்தில் 1,200 ஏக்கர்.

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், முட்டுக்காடு, வெட்டுவாங்கேணி, பையனூர், சிறுதாவூர், சோழிங்கநல்லூர் செய்யூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, மன்னார்குடி என தமிழகத்தின் பல மாவட்டங்களில் காலி நிலம், கட்டடம், கடைகள் மற்றும் விளைநிலங்களும் வாங்கப்பட்டுள்ளன. 

சென்னையில் கிண்டி, டி.டி.கே ரோடு, மவுண்ட் ரோடு, லஸ் பகுதிகளில் இடங்கள், கட்டடங்கள் வாங்கப்பட்டுள்ளன.

பையனூர் பங்களா ரூ.1,25,90,261.

ஹைதராபாத் திராட்சைத் தோட்டப் பண்ணை வீடு ரூ.6,40,33,901.

போயஸ் கார்டன் வீடு விரிவாக்கம் ரூ.7,24,98,000.

சிறுதாவூர் பங்களா ரூ.5,40,52,298 உட்பட பல இடங்களில் உள்ள பண்ணை வீடுகள், புதிய கட்டடங்களின் மராமத்துப் பணிகளின் செலவுகள் பட்டியலிடப்பட்டன.

இளவரசி அக்கவுன்டில் அபிராமிபுரம் இந்தியன் வங்கியில் ரூ.2,42,211.

ஜெயலலிதா அக்கவுன்டில் மயிலாப்பூர் கனரா வங்கியில் ரூ.19,29,561.

மயிலாப்பூர் ஸ்டேட் பேங்க்கில் ரூ.1,70,570.

சசிகலா பெயரில் கிண்டி கனரா வங்கியில் ரூ.3,17,242

சுதாகரன் அக்கவுன்டில் அபிராமிபுரம் இந்தியன் வங்கியில் ரூ.5,46,577 

என, பல பெயர்களில் பல வங்கிகளில் இருப்பு வைத்திருக்கிறார்கள்.

ஜெயலலிதா பெயரில் வாங்கப்பட்ட கார்கள் டாடா சியரா - ரூ.4,01,131, மாருதி 800 ரூ.60,435, மாருதி ஜிப்ஸி, ட்ராக்ஸ் ஜீப். 

ஜெயா பப்ளிகேஷன் டாடா எஸ்டேட் கார், டாடா மொபைல் வேன் என பல மாடல்களில் 30-க்கும் மேற்பட்ட கார்கள் வாங்கியிருக்கிறார்கள்.

போயஸ் கார்டனில் கைப்பற்றப்பட்ட 389 ஜோடி செருப்புகள் ரூ.2,00,902, 914

பட்டுப் புடவைகள் ரூ.61,13,700 

மற்ற புடவைகள் ரூ.27,08,720 மற்றும் பழைய புடவைகள் ரூ.4,21,870. 

28 கிலோ தங்க நகைகள் 

1,000-க்கும் மேற்பட்ட வைரக்கற்கள் 

என 306 சொத்துகளின் அப்போதைய மதிப்பு ரூ.66,44,73,573 ஆகும்'' என்று விடாமல் வாசித்து முடித்தார்.

நீதிமன்றம் முடிந்து வெளியே வந்த பெங்களூரு தி.மு.க வழக்கறிஞர் நடேசன், ''ஜெயலலிதா வாங்கியிருக்கும் இந்த 306 சொத்துகளின் இப்போதைய மதிப்பு பல நூறு கோடியைத் தாண்டும். அரசுத் தரப்பு இறுதி வாதம் 15-ம் தேதியோடு நிறைவு பெறும். அதன் பிறகு ஜெயலலிதா தரப்பு இறுதி வாதம் தொடங்கும். அது முடிந்ததும் இன்னும் ஓரிரு மாதங்களில் தீர்ப்பு கிடைக்கும். தீர்ப்புக்குப் பிறகு ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகும்'' என்றார்.

அ.தி.மு.க வழக்கறிஞரும் சேலம் மாவட்ட கவுன்சிலருமான வக்கீல் மணிகண்டன், ''இந்தச் சொத்துகள் அனைத்தும் 20 வருடங்களுக்கு முன் வாங்கப்பட்டவை. அதில் பலர் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். அன்றைய காலகட்டத்தில் நிலத்தின் மதிப்பு குறைவு. ஆனால், இன்று நிலத்தின் வேல்யூ அதிகரித்துள்ளது. நான் 20 வருடங்களுக்கு முன்பு ஒரு வீட்டை மூன்று லட்சத்துக்குக் கட்டினேன் என்றால், அதன் மதிப்பு இப்போது 30 லட்சமாக அதிகரித்து இருக்கும். நான் 30 லட்சத்துக்கு வீடு கட்டினேன் என்று சொல்லுவது எவ்வளவு அபத்தமோ, அதைப் போன்றதுதான் இந்த வழக்கும். இதைச் சொத்துக் குவிப்பு என்று சொல்வதே அடிப்படையற்ற வாதம். கருணாநிதியைப் போல வெறும் கையை வீசிக்கொண்டு அம்மா அரசியலுக்கு வரவில்லை. அவர் மிகவும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்த வழக்கில் இருந்து அம்மா கூடிய சீக்கிரத்தில் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு வெளியே வருவார்'' என்றார்.

நன்றி : ஜூனியர்விகடன் - மே-14

யாமிருக்க பயமே - சினிமா விமர்சனம்

11-05-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எத்தனை நாட்களாகிவிட்டது திரையரங்கில் இத்தனை சிரிப்பு சிரித்து..? கடைசியாக இந்த அளவுக்கு சிரித்தது ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில்தான்..! அதுவும் ஒரு திகில், மர்மம் படத்திலேயே நகைச்சுவையும் கலந்து வருகிறது எனில், இந்த இயக்குநரின் தனித்திறமையை கண்டிப்பாக பாராட்டியே தீர வேண்டும்.. வெல்டன் இயக்குநர் ஸார்..!

சிட்டுக் குருவி லேகியம்போல் ஒரு மாத்திரையை மார்க்கெட்டிங் செய்யும் நிகழ்ச்சியைத் தயாரித்துக் கொண்டிருக்கும் கிருஷ்ணாவுக்கு அந்த மாத்திரையை வாங்கிப் பயன்படுத்தியவனால் சோதனை ஏற்படுகிறது. அவனுடைய ‘கிளி’ அளவுக்கதிகமான மாத்திரை உபயோகத்தால் செத்துப் போய்விட்டதாக்க் கூறி அவனுடைய அப்பன் கிருஷ்ணாவைக் கடத்திச் சென்று தாக்குகிறான். மருமகள் ஓடிப் போய்விட்டதால், மரியாதையாக வேறு பொண்ணை தன் மகனுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்து தரும்படி மிரட்டுகிறான். வீட்டுக்கு வந்தால் கடன் கொடுத்தவன் வந்து மிரட்டிக் கொண்டிருக்கிறான்.
இந்தச் சிக்கல் இருக்கும்போது அவனது நிஜமான அப்பா அவனுக்கு எழுதிய கடிதம் அவர் கைக்கு வருகிறது. அதில் கொள்ளியூரில் இருக்கும் பூர்வீகச் சொத்தை பெற்றுக் கொள்ளும்படி எழுதியிருக்க தனது காதலி ரூபா மஞ்சரியுடன் கொள்ளியூர் பயணமாகிறார் கிருஷ்ணா. அங்கே ஒரு பாழடைந்த பங்களா டைப் வீடுதான் அவரது சொத்தாக இருக்கிறது. அங்கேயே தங்கையுடன் குடியிருக்கும் கருணாகரனுடன் நட்பு வைத்து அவனது ஆலோசனையின்பேரில் அந்த பங்களாவை புதுப்பிக்க ஏற்பாடு செய்கிறான்.
இதற்காக திரும்பவும் சென்னைக்கு வந்து ரவுடியின் மகனுக்கு சோனாவை செட் செய்துவிடுவதாக்க் கூறி 40 லட்சம் ரூபாயை அபேஸ் செய்துவிட்டு கொள்ளியூர் வருகிறார் கிருஷ்ணா. அதனை வைத்து பங்களாவை புதுப்பித்து புது ஹோட்டலாக திறக்கிறார்கள்.
ஹோட்டலுக்குள் தங்க வருபவர்கள் ஒவ்வொருவராக இறந்து போக.. போலீஸுக்கு போனால் சிக்கலாகும் என்று நினைத்து அனைவரையும் வரிசையாக புதைக்கிறார்கள். ஒரு கட்டத்தில் புதைத்தவர்களெல்லாம் காணாமல் போக.. திக்கென்றாகிறது.. இதற்கிடையில் வீட்டுக்குள் ஒரு பேய் நடமாடுவது தெரிய வர… அந்தப் பேயின் கதையையும் தேடிப் பிடிக்கிறார்கள். கடைசியில் பேய் அவர்கள் அனைவரையும் விரட்டுகிறது.. தப்பித்தார்களா இல்லையா என்பதுதான் படமே..!
அமர்க்களப்படுத்தியிருக்கிறார்கள். முற்பாதியில் சிற்சில இடங்களில் அட.. அடடே என்றெல்லாம் போட வைத்தவர்கள் பிற்பாதியில் வெளுத்திருக்கிறார்கள். தொடர்ச்சியான சிரிப்பலைகள் தியேட்டர்களில்..!  பேயை கொடூரமாகக் காட்டியே இதுவரைக்கும் பயமுறுத்தியிருந்தவர்கள்.. பேயின் ஆக்சன்களில் இப்போது சிரிப்பலையும் சேர்த்தே உருவாக்கியிருக்கிறார்கள்..!
கிருஷ்ணா ஓரளவுக்கு நடித்திருக்கிறார். இது போன்ற இன்னும் 2 படங்களில் நடித்தால் நடிப்பில் தேறிவிடுவார். டயலாக் டெலிவரியின் மென்மேலும் தேர்ச்சி பெற்றுள்ளார். கருணாகரனின் பன்ச் டயலாக்கிற்கு இவரது எதிர் ஆக்சனும், டயலாக்குகளும் பல இடங்களில் சிரிக்க வைக்கின்றன..
கருணாகரன் சரியான தேர்வு. இவர் வாய் வைக்கும் ஒவ்வொருவரும் சாகின்ற காட்சியில் இவரது நடிப்பும், பேச்சும் செம.. அவ்வளவு அட்டகாசமாக ரசிக்க வைத்து சிரிக்க வைத்திருக்கிறார்கள் அந்தக் காட்சியில்.. சிம்ப்ளி சூப்பர் டைரக்சன்..! யார், யார் கொலைகளைச் செய்தது என்று கருணாகரன் அப்பாவியாய் கணக்குப் போட்டுச் சொல்லும் காட்சி ஒன்றே போதும் அவரது நடிப்புத் திறனுக்கு..!
ரூபா மஞ்சரி.. ஓவியா என்று இரண்டு ஹீரோயின்கள்.. இந்தக் கதைக்கு பொருத்தமாக இரண்டு பேரை திரைக்கதையில் திணித்திருக்கும் லாவகத்திற்கும் பாராட்டுக்கள்.. ஓவியா முன்னழகையும், பின்னழகையும் படம் முழுக்க காட்டியபடியே கவர்ச்சி மழை மொழிந்திருக்கிறார். ஆனால் கோபம்தான் வர மாட்டேங்குது. அதே சிரிப்பு.. அதே புன்னகை.. இன்னும் எத்தனை நாட்களுக்கு..? இருவருக்குள்ளும் இடையே நடக்கும் சின்னச் சின்ன சக்களத்தி சண்டைகளும் எல்லை மீறியிருந்தாலும் ரசிக்கத்தான் வைக்கின்றன..
அந்த பில்டிங்கின் ஓனர்கள் ஒவ்வொருவரும் ஏதோவொருவித்த்தில் இறந்து போயிருக்கிறார்கள் என்னும் கதையைச் சொல்லும் நளினிகாந்தின் கேரக்டர் ஸ்கெட்ச்சும் ஒரு நகைச்சுவை திணிப்பு. அதிலும் தூக்கக் கலக்கத்தில் நடந்து போய் அவரைத் தூக்கிக் கொண்டு வந்து பக்கத்தில் படுக்க வைத்துக் கொள்ளும் கருணாகரனின் சிம்பிள் நடிப்பில் தியேட்டரே அதிர்கிறது..!
ஆதவ் கண்ணதாசனை வைத்து ஒரு சிறிய காதல் கதை.. அதன் துவக்கமாக வரும் அந்த பெண் ஆவியான அனஸ்வராவுக்கு ஒரு பாடல் காட்சியையும் கொடுத்து சரிப்படுத்தப் பார்த்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் இருக்கும் இரண்டு குறைகளில் ஒன்று பாடல் காட்சி. இன்னொன்று ஆபாச வசனங்கள்.. துவக்கத்தில் வரும் அந்த மாத்திரை காட்சிகள் மற்றும் இடையிடையே வரும் இரட்டை அர்த்த வசனங்களை முழுவதுமாக நீக்கியிருக்கலாம்.. படத்தினை குழந்தைகளும் வந்து பார்ப்பது போல செய்திருந்தால் படம் இன்னும் நன்றாக ஓடும் வாய்ப்புண்டு..
ஒவ்வொருவரின் மரணக் காட்சிகளும், இடைவேளைக்குப் பின்பு ஒவ்வொரு ஆளிடமும் பேய் மாறி மாறி இடம் மாறும் காட்சிகளும், அனஸ்வரா முதலில் தனது முகத்தைக் காட்சியும் காட்சியிலும் பரபரவென்ற திரைக்கதையாலும், நடிப்பாலும், திகிலான இசையாலும் நம்மை திடுக்கிட வைத்திருக்கிறார்கள். இசையமைப்பாளரை வெகுவாகப் பாராட்ட வேண்டும். ‘நச்’ என்று இருக்கிறது பின்னணி இசை. திகில் படங்களுக்கு இசைதான் மிக முக்கியம். அவைகள் உசுப்பிவிடுவதில் கோட்டைவிட்டால் என்னதான் ஆக்சனை காட்டியிருந்தாலும், ரசிகர்களை அது தாக்காது.. ஆனால் இது மோதித் தாக்கியிருக்கிறது.. அதகளம் செய்திருக்கிறது கிளைமாக்ஸ் பின்னணி.
மயில்சாமியின் கிளைக் கதையும் இன்னொரு காமெடி டிராக்.. அலட்சியமாக மனிதர் ஸ்கோர் செய்திருக்கிறார். அவரைக் கடத்தி வந்த பின்பு நடக்கும் கூத்துக்களில் மயில்சாமியின் பங்களிப்பும் அதிகம்.. போலி சாமியார்கள் எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை இவரை வைத்தும் காமெடியாகவே சொல்லியிருக்கிறார்கள்..
கிளைமாக்ஸில் வரும் இரண்டு டிவிஸ்ட்டுகளுமே செம கலகலப்பு..! இப்படியெல்லாம் நடக்க முடியுமா..? நடந்திருக்குமா என்றெல்லாம் எந்தவித லாஜிக்கையும் பார்க்கவே கூடாது என்பதற்காகத்தான் வந்தவைகளெல்லாம் ஆவிகள் என்று சொல்லி முடித்திருக்கிறார்கள்.
‘பீட்சா’ படம்தான் கடைசியாக நம்மை மிரள வைத்திருந்தது. அடுத்ததாக இந்தப் படம் பல இடங்களில் நம்மை மிரள வைத்து அசத்தியிருக்கிறது. புதுமுக இயக்குநரான டி.கே. கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தில் குறையே வைக்காமல் முதல் முறையாக திகில் படத்தில் அதிர்ச்சியலையுடன் சிரிப்பலையையும் சேர்த்தே வரும்படி செய்திருக்கிறார். எத்துணை பாராட்டினாலும் தகும்..
தங்கள் வரவு நல்வரவாகட்டும் டி.கே.

நீ எங்கே என் அன்பே - சினிமா விமர்சனம்

03-05-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


ஹிந்தியில் வித்யா பாலனின் நடிப்பில் ‘கஹானி’ என்ற பெயரில் வெளிவந்து வெற்றி பெற்ற படம். இந்தக் காலத்திற்கு மிக பொருத்தமானதுதான்..
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்த அதே நாளில், குண்டு வெடிப்பு சம்பவத்தை மையமாக வைத்தே எடுக்கப்பட்ட இந்தப் படம் சென்னையில் ரிலீஸானது யாருடைய விருப்பமோ தெரியவில்லை..? சாலப் பொருத்தம்..! தெலுங்கில் ‘அனாமிகா’ என்ற பெயரில் இதனை ரீமேக் செய்திருக்கிறார்கள். அங்கிருந்து தமிழுக்கு ‘நீ எங்கே என் அன்பே’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
வலிக்காமல் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதுபோல இந்திய அறிவாளிகளின் இப்போதைய நிலைப்பாட்டைத்தான் இந்தப் படமும் எடுத்துச் சொல்கிறது.. இஸ்லாமிய தீவிரவாதிகள் எதற்கும் அஞ்ச மாட்டார்கள்.. இதற்காக இஸ்லாத்தை மறுத்து வேறு மதத்தின் பெயரில்கூட ஒளிந்திருந்து தாக்குவார்கள் என்பதை இந்தப் படத்தின் மூலமாகவும் சொல்லியிருக்கிறார்கள்.
படத்தின் இந்த போதனை நம் மக்களுக்குப் புரிந்ததோ புரியலையோ.. ஒரு திரைப்படமாக பார்க்கப் போனால் மேக்கிங் அசத்தியிருப்பதால் அனைவருமே உண்மையை மறந்துவிட்டு, இரண்டரை மணி நேரம் டைம் போனதே தெரியலை என்றே சொல்லிவிட்டு தியேட்டரில் இருந்து வெளியேறுவார்கள். இதைத்தான் இந்தப் படத்தின் கதாசிரியரும், இயக்குநரும் எதிர்பார்த்தார்கள்.. இதுதான் நடக்கிறது..
அமெரிக்காவில் இருந்து ஐதராபாத்துக்கு வரும் ஹீரோயின் நயன்தாரா.. விமான நிலையத்தில் இருந்து நேராக போலீஸ் ஸ்டேஷனுக்குச் செல்கிறார். அமெரிக்காவில் இருந்து ஐதராபாத்திற்கு அலுவல் விஷயமாக வந்த தனது காதல் கணவரைக் காணவில்லை என்று புகார் கொடுக்கிறார். ஸ்டேஷனில் புதிதாக சப் இன்ஸ்பெக்டராக வேலைக்குச் சேர்ந்திருக்கும் தமிழரான வைபவ் நயன்தாராவுக்கு உதவ முன் வருகிறார்.
முதல் கட்ட விசாரணையில் எதுவும் தெரியாமல் இருந்தாலும் தனது கணவர் தங்கியிருந்த அதே ஹோட்டலில், அதே அறையில்தான் நயன்தாராவும தங்குகிறார். அங்கே வேலை செய்யும் ஒரு சிறுவனின் சாட்சியத்தின்படி அவரது கணவர் சில ரவுடிகளால் கடத்திச் செல்லப்பட்டார் என்கிற தகவலும் கிடைக்கிறது. இதனையும் போலீஸில் சொல்லி விசாரிக்கச் சொல்கிறார்.
விசாரணை தொடரும் சமயத்தில் ஒரு சந்தேகத்தில் முஸ்லீம் மத குருவிடம் போய் விசாரிக்கிறார்கள். நயன்தாரா படும் கஷ்டத்தைப் பார்த்து வருத்தப்படும் மதகுரு அன்றைய நாள் நடக்கும் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு வந்தால் சில தகவல்கள் கிடைக்கும் என்கிறார். வைபவும், நயன்தாராவும் அங்கே போய் காத்திருக்க.. இங்கே மதகுருவை ஒரு நபர் நமஸ்காரம் சொல்லி சுட்டுக் கொலை செய்கிறார்.
இதற்கிடையில் அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் நயன்தாராவை படுக்கைக்கு அழைக்கிறார். தன்னுடன் ஒரு நாள் இருந்தால்போதும்.. அவரது கணவனை கண்டுபிடித்துத் தருவதாகச் சொல்கிறார். அந்தச் சமயத்தில் அந்த இன்ஸ்பெக்டரும் சுட்டுக் கொலை செய்யப்படுகிறார்.
இப்போது இந்த வழக்கில் பசுபதி விசாரணை அதிகாரியாக நுழைகிறார். அவரும் நயன்தாராவை மிரட்டி உருட்டி விசாரணை செய்தவர் சொல்லும் தகவல் அதிர்ச்சியாக இருக்கிறது. காற்றாடி திருவிழா அன்று ஐதராபாத்தில் நடந்த குண்டு வெடிப்புக்கு காணாமல் போன நயன்தாராவின் கணவன்தான் காரணம் என்கிறார் பசுபதி. நயன்தாரா அதனை நம்ப மறுக்கிறார்.
சுட்டுக் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டரின் வீட்டில் சோதனை செய்யும்போது ஒரு ஹார்டு டிஸ்க் கிடைக்கிறது. தீவிரவாதிகள் பற்றிய தகவல்கள் இருக்கும் அந்த ஹார்டு டிஸ்க்கை கேட்டு உள்துறை அமைச்சர் ஒரு பக்கம் பசுபதியை விரட்டுகிறார். அந்த ஹார்டு டிஸ்க் நயன்தாரா கையில் கிடைக்க. இன்னொரு பக்கம் வைபவுக்கு வேறொரு துப்பு கிடைக்க..
இறுதியில் என்னவாகிறது என்பதை மிக சுவாரஸ்யமான திரைக்கதையோடு, விறுவிறுப்பு கொஞ்சமும் குறையாமல் மிக அழுத்தமான இயக்கத்துடன் ஆர்ப்பாட்டமான பின்னணி இசை கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் சேகர் கம்முலா. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!
கஹானியின் இருந்ததை போல இதில் ஹீரோயினுக்கு கர்ப்பிணி வேடமில்லை. நயன்தாராவை கரு சுமக்கும் நிலையில் நடிக்க வைத்தால் தெலுங்கிற்காக சின்னதாக மாற்றம் செய்திருக்கும் திரைக்கதையில் சிக்கல் வரும் என்பதால் கர்ப்பிணி வேடத்தை மட்டும் விட்டுவிட்டு மிச்சத்தை கஹானியை போலவே எடுத்திருக்கிறார்கள்.
நயன்தாரா படம் முழுவதும் வியாபித்திருக்கிறார். மிக்க் குறைவான மேக்கப்தான். ஆனால் நடிப்பு அதே வீச்சு.. பசுபதியிடம் வாக்குவாதம் செய்யுமிடங்களில் உண்மைக்கு மிக அருகிலேயே சென்றுவிட்டார். அற்புதமான எளிமையான வசனங்கள். ஹார்டு டிஸ்க்கை ஒளித்து வைக்க அவதிப்படும் நேரத்தில் டென்ஷனைக் கூட்டும் பசுபதியிடம் பேசும் காட்சிகளும்.. இறுதியில் தனது கணவனுடன் அமைதியாக பேசி பத்ரகாளியாக உருமாறும் காட்சியிலும் நயன்தாரா தெரியவே இல்லை.. யாரோ ஒரு அனாமிகாதான் தெரிந்தார்.. அந்த அளவுக்கு யதார்த்தமான நடிப்பும், இயக்கமும் அசத்தியிருக்கிறது..!
கீரவாணியின் பின்னணி இசையைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். குண்டு வெடிக்கின்ற தருணத்தில் அந்த நொடியை நோக்கிச் செல்கின்ற அந்த நேரத்தை மிகவும் பதட்டமாக்கியிருக்கிறார் தனது இசையில்.. ஸ்கூட்டர் கொலையாளியை விரட்டிச் செல்லும் சமயத்திலும், ஹார்ட் டிஸ்க் கேட்டு பசுபதியும், தேசிய பாதுகாப்பு படையும் ஹோட்டல் அறையில் ரகளை செய்யும் நேரத்திலும் இசைதான் பரபரவென்றிருக்கிறது..
உதவி செய்யும் சப் இன்ஸ்பெக்டராக வைபவ். நயன்தாராவுடன் நடித்துவிட்ட திருப்தியுடன் இருப்பாரென்று நினைக்கிறோம். விசாரணை அதிகாரியாக பசுபதி.. அதே வேகம்.. ஆக்சன்.. டயலாக் டெலிவரி.. வைபவை விரட்டும் காட்சியில் இருக்கும் வயித்தெரிச்சல் அவரது முகத்திலேயே தெரிந்தது.. இறுதிக் காட்சியில் அவ கிடைக்க மாட்டா.. இந்நேரம் பிளைட் ஏறியிருப்பா என்று உறுதியுடன் சொல்லும் அந்தக் குரல்.. எல்லாம் சேர்ந்து அழகான நடிப்பைக் காட்டியிருக்கிறார் பசுபதி. அந்த இன்ஸ்பெக்டரின் ரியாக்ஷன்களும், ஹோட்டலுக்கு வெளியே வந்து நின்று கொண்டு நயன்தாராவை மிரட்டி விட்டுப் போகின்ற ஆக்சனும் உண்மையிலேயே மிரட்டல்..!
முதற்பாதியில் நிறைய தெலுங்கு வசனங்கள் இருப்பதினால் புரிந்து கொள்வதற்கு சிரமமாக இருந்தது. பேசாமல் அதிலும் தமிழில் சப் டைட்டில் போட்டிருக்கலாம்.. எண்டமூரி வீரேந்திரநாத்தின் திரைக்கதையில் நிறைய மாறுதல்கள்.
கிளைமாக்ஸ் இப்படித்தான் இருக்கும் என்று சாதாரண ரசிகன் ஊகிக்க முடியாத அளவுக்குக் கொண்டு போய் முடித்திருப்பதுதான் இந்தப் படத்தின் சிறப்பு.. அந்த கிளைமாக்ஸின் இரண்டு டிவிஸ்ட்டுகள்தான் படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கின்றன. நயன்தாராவின் நடிப்பு கேரியரில் நிச்சயமாக இந்தப் படம் மிக முக்கியமானதாக இருக்கும்..!
ஒரு குண்டு வெடிக்கிறது.. பேப்பரில் செய்தி வருகிறது.. படித்துவிட்டு தனக்குப் பாதிப்பில்லையெனில் அடுத்த வேலையை பார்த்துவிட்டுப் போகும் சாதாரண பொதுஜனத்திற்கும் இதில் ஒரு பொறுப்புணர்வு உண்டு என்பதை இந்தப் படத்தின் ஹீரோயின் மூலமாக கதாசிரியர் சொல்லியிருக்கிறார். இது ஒன்றுக்காகவே அவருக்கு சபாஷ் போடலாம்..!
அவசியம் பாருங்கள்…!