21-04-2013
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
வருடக் கணக்கில் ஓடிய கோலங்களில் நடித்த திருமதியார் பக்கத்தில் இருக்கிறார்..! தமிழ் இலக்கியத்தில் முத்துக் குளித்த அறிவு இருக்கிறது..! கோணல்மானலான முகம் என்றாலும் சீரியஸ் நடிப்பையே காமெடியாக்கி பார்க்கும் பாமர ரசிகர்கள் இருக்கிறார்கள்.. என்ன செய்யலாம்..? “ஒண்ணும் இல்லாத பய..! அவன் மூஞ்சியை பாருங்க.. என் மக முகத்தைப் பாருங்க.. ஏதாச்சும் பொருத்தம் இருக்கா..? ஒட்டுமா..? அவனுக்கெல்லாம் என் பொண்ணை கொடுக்கணுமா..?” என்று அடிவயிற்றில் அடித்துக் கொண்டு சாபமிட்ட மாமியாரின் நினைவுகள் ரொம்பவே தொல்லைபடுத்திவிட்டது மருமகனுக்கு. போதாக்குறைக்கு மச்சுனனும் வேற ரூட்டுல டாப்புக்கு போயிட்டிருக்க.. என்னத்த செஞ்சாவது தன் பெயரை நிலை நாட்ட வேண்டும் என்ற வெறி இயக்குநர் ராஜகுமாரனுக்கு.. அதுக்கு நாமளா கிடைச்சோம்..?
சாம் ஆண்டர்சன், பவர் ஸ்டார் வரிசையில் அடுத்ததாக நம்மைக் குதறியெடுக்க வந்திருக்கிறார் இந்த சோலார் ஸ்டார்..! ஜெயமாலினிகூட தனது ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் வாயில் இவ்வளவு லிப்ஸ்டிக்கை கொட்டியதில்லை..! தேய்த்து எடுத்திருக்கிறார் அண்ணன்..! அண்ணன் பேசும், ஒவ்வொரு வசன உச்சரிப்புக்கும், டப்பிங் இன்சார்ஜ் என்ன பாடுபட்டாரோ தெரியவில்லை..? எதிரில் யாரோ ஒருவர் கையில் ஆசிட் பாட்டிலுடன் நின்று மிரட்டியிருக்கிறார்கள் போலிருக்கிறது.. அவ்வளவு மிரட்சியுடன் பேசி அசத்தியிருக்கிறார்..!
கனல் கண்ணனுக்கு இப்படத்தில்தான் பெண்டு நிமிர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன். இந்த டெக்னாலஜி மட்டும் இல்லைன்னா அத்தனை பெரிய, சிறிய, புதிய ஹீரோக்களும் வீட்ல உக்காந்து அடிபம்பைத்தான் அடிக்க முடியும் என்பது இதிலும் நிரூபணமாகியுள்ளது. ஆனாலும் அண்ணன் அடிக்கிற ஒவ்வொரு அடியும் இடி மாதிரி விழுகுது..! கம்பிக் கதவைத் திறந்துக்கிட்டு ஸ்டைலா நடந்து வந்து சட்டையை இழுத்துவிட்டுட்டு, ஒரு கட்டையை எடுத்து கோடு போட்டு கிழிச்சிட்டு ஸ்டைலா நிமிர்ந்து பார்க்குற அந்த ஒரு லுக்கே போதும்.. தமிழ்நாடு முழுக்க அண்ணனுக்கு உடனடியா ரசிகர் மன்றம் ஆரம்பிச்சே தீரணும்..!
அண்ணனின் நடிப்பைப் பத்தி சொல்லணும்ன்னா ரெண்டே ரெண்டு ஷாட்டுகளே போதும்.. ஒண்ணு அவரோட அம்மாவான ரோகிணி போட்டோவை பார்த்து அண்ணன் ஜெர்க் ஆகுறது.. இன்னொண்ணு தேவயானிக்குக் கல்யாணம்ன்னு போன்ல சொன்னவுடனேயே அண்ணன் காட்டுற ஆக்சனையெல்லாம் என்னால எப்படி எழுதிக் காட்டுறதுன்னே தெரியலை..! வார்த்தைகளே சிக்க மாட்டேங்குது..!
அண்ணனுக்கு அவரோட திருமதியாரோட 2 டூயட்டும் இருக்கு..! இப்போ அவங்களோட பொண்ணே பாவாடை, தாவணி போட்டிருக்கு.. இந்த வயசுல போயி இந்தம்மா பிளஸ்டூ ஸ்டூடண்டு மாதிரி டிரெஸ் பண்ணிட்டு வந்து “மாமா மாமா”ன்னா தியேட்டர்ல எம்புட்டு பயம் இருக்கும்..? எம்ஜிஆர், ரஜினி ஸ்டைல்ல டிரெஸ்ஸை போட்டுக்கிட்டு அண்ணன் ஆடுற டான்ஸும், அக்கா காட்டுற மூவ்மெண்ட்ஸும் நிசமாவே ரெண்டு பேரும் லவ் பண்ணும்போது பண்ண முடியாததையெல்லாம் இப்போ நமக்காக, அவங்க செலவுலேயே செஞ்சு காட்டுறாங்களோன்னு ஒரு பீலிங் வருது..!
இதுல தேவயானிக்கு டபுள் ஆக்ட்டு.. அம்மணிக்கு இது 75-வது படம்கிறதால திரைக்கதைல தேவயானிக்கு சீரியல் டைப்புல பிளாஷ்பேக் கதையெல்லாம் வைச்சு கால் மணி நேரத்துக்கு ஒரு திடுக் திருப்பமா வைச்சு.. எண்ட் கார்டுல ராஜகுமாரனா நடிக்கிறதே தேவயானிதான்னு திருப்பம் வந்திருமோன்ற அளவுக்குப் பயமுறுத்திட்டாங்க..! இதுல தேவயானியோட அம்மாவா டிவி நடிகை துர்கா. இந்த அநியாயம் ஊருக்கே அடுக்காது..! “பார்வதி போய் உன் புருஷனை சாப்பிட வரச் சொல்லு”ன்னு சின்னப் புள்ளைலேயே சொல்லிச் சொல்லி பழக்கிட்டாங்களாம்..! இதையும் திரைக்கதைல ஓரமா வைச்சு புல்லரிக்க வைச்சிருக்காரு ராஜகுமாரன்..!
பட்.. படத்தின் ஒன்லைன் நல்ல சப்ஜெக்ட்.. விருப்பமில்லாமல், பலாத்காரமாக, கட்டாயமாக எந்தப் பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்காதீர்கள் என்பதுதான் கதை. இவர்களுடைய வாழ்க்கையில் நடந்த கதையைத்தான் கொஞ்சம் அப்படி, இப்படி சிந்தித்து, இப்படி செயல்படுத்தியிருக்கிறார்கள்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், கிறித்துவ மதம் மற்றும், இஸ்லாம் மதங்களில் மணமக்களுக்கு திருமணத்தில் விருப்பம் இருக்கிறதா என்று கேட்கப்படுகிறதாம்.. இல்லையெனில் திருமணம் நிறுத்தப்படுகிறதாம்..! ஆனால் இந்து மதத்தில் மட்டுமே மணமகள் மீது கல்யாணம் திணிக்கப்படுகிறது என்று அபாண்டமாக குற்றம் சுமத்தியிருக்கிறார் ராஜகுமாரன்..! இது மட்டுமில்லாமல் கடைசி அரைமணி நேரத்தில் நீதிமன்றத்தில் இந்து மதத்தைக் கொத்து புரோட்டா போட்டுத் தாளித்திருக்கிறார் வசனகர்த்தா ராஜகுமாரன்..! இந்து அமைப்பினர் சீக்கிரமா இந்தப் படத்தைப் பார்த்திட்டு தங்களோட பதிலைச் சொன்னாங்கன்னா பத்திரிகையாளர்களும் சந்தோஷப்படுவோம்..!
‘விதி’ என்ற படத்திற்குப் பின், நீண்ட இடைவெளிக்குப் பின்பு இந்தப் படத்தில்தான் நீதிமன்றக் காட்சிகளில் வசன அனல் தெறிக்கிறது.. அதிலும் தேவயானி பேசும் வசனங்கள் அனைத்தும் டிஆர்பியில் ஹிட்டடிக்கும் சேனல்களின் சீரியல் டயலாக்குகள்..! ஏற்கெனவே சீரியல்களை பார்த்து பல குடும்பங்கள்ல வெட்டுக் குத்தா போயிக்கிட்டிருக்கு. இதுல இப்போ “அத்தனை குடும்பத்துலேயும் தோண்டித் துருவிப் பார்த்தா இப்படியொரு விஷயமும் நிச்சயம் இருக்கும்”ன்னு தியேட்டருக்கு வர்ற ரசிகர்களின் குடும்பத்துலேயும் குழப்பம் பண்ணி வைச்சிருக்காரு ராஜகுமாரன்..!
கதை என்னன்னு பார்த்தீங்கன்னா..!?
எடுத்த எடுப்பிலேயே போலீஸ் ஸ்டேஷன்ல குறுக்கும், நெடுக்குமா ரோப் கட்டி பறக்குறாரு ராஜகுமாரன்.. இடைல இடைல கட் டூ ஷாட்டா கீர்த்தி சாவ்லாவுக்கு பிரித்விராஜ்கூட கல்யாணம்..! கல்யாணம் முடிஞ்சு பிருத்விராஜ் வீட்டுக்கு வரும்போது ராஜகுமாரனும் கடல்ல தூக்கிப் போடப்பட்டு சாக்கடைல புரண்ட நிலைமைலேயே அந்த வீட்டுக்கு எதிர் வீட்டுக்கு வந்து நிக்குறாரு..! ரெண்டு வீட்டு பால்கனிலேயேும் கீர்த்தியும், ராஜகுமாரனும் ஒருத்தரை மாத்தி ஒருத்தர் புடுங்குற மாதிரி பார்த்துக்கிட்டே இருக்க.. ரமேஷ்கண்ணா பிளாஷ்பேக்கை ஓப்பன் பண்றாரு.. இங்கதான் கதை ஸ்டார்ட் ஆகுதாம்..!
ராஜகுமாரன் ஒரு வக்கீல். சின்ன வயசுலேயே அம்மா, அப்பா இறந்துட்டதால மாமா, அத்தை அரவணைப்புல வளர்றவரு. இந்த மாமாவோட மகள்தான் ஒரு தேவயானி..! “மாமா மாமா”ன்னு மாமனைக் கட்டிக்க புள்ளை ரொம்பவே ஆசைப்படுது.. வீட்ல ராஜகுமாரன் ஷேவ் பண்ணி தேவயானி பார்த்ததே இல்லையாம்பா.. அதுக்காகவே ஒரு கிக்கான காட்சியை வேற வைச்சு டெம்போ ஏத்தியிருக்காங்கப்பா..! சின்னப் புள்ளைல இருந்தே கட்டிக்கப் போறவாதான்னு நினைப்புல இருந்த ராஜகுமாரன் மனசுல ஒரு லாரி மண்ணையள்ளிப் போடுறாரு மாமா ராதாரவி. சிங்கப்பூர் மாப்ளைக்காரன்கிட்ட தாலியை கொடுத்து தேவயானி கழுத்துல கட்ட வைச்சர்றாரு.. இந்தச் சோகத்தைத் தாங்க முடியாம ஊர்ல இருந்து சென்னைக்கு ஓடி வர்றாரு ராஜகுமாரன்..!
ஏற்கெனவே சென்னைல பிச்சைக்காரனா திரியற அவரோட பிரெண்ட் ரமேஷ்கண்ணாவை பார்க்க வர்றேன்னு போஸ்ட் கார்டுல லெட்டர் போட்டுட்டுத்தான் கிளம்பி வர்றாராம்.. என்னா திரைக்கதை..? அரிசி சோறு கிடைக்கலையேன்னு புகுந்த வீட்ல சண்டை போட்டுக்கிட்டு, பொறந்த வீட்டுக்கு ஆத்தாவைத் தேடி வந்தாளாம் ஒருத்தி.. வழியிலேயே படுக்கிறதுக்கு இடம் தேடி பாயோட அலைஞ்ச ஆத்தாவை பார்த்தாளாம்ன்ற கதையா நடு ரோட்டுல பெட்டி, படுக்கையோட உக்காந்திருக்கிற ரமேஷ்கண்ணாவை பார்த்து அறிமுகத்தை முடிச்சுக்குறாங்க..!
இவங்க ரெண்டு பேரும் வீடு தேடி போகும்போது அன்னிக்குக் காலைல அடிச்ச பிக்பாக்கெட் பர்ஸ்ல இருந்த ராஜகுமாரனின் போட்டோவை பார்த்திட்டு இவன்தான் தன் மகள் கீர்த்தி சாவ்லாவுக்கு மாப்ளைன்னு நம்பி காத்திருக்காராம் இன்னொரு காமெடி மதன்பாப். கரெக்ட்டா அவர் வீட்டு வாசலுக்கே வந்து வீடு கேக்குறாங்க ரெண்டு பேரும். மாப்ளைதான் வந்திருக்காருன்னு சொல்லி ரெண்டு பேரையும் அங்கேயே தங்க வைச்சு உபசரிக்கிறாங்க. வீடு பார்த்துட்டு ஓடிப் போயிரலாம்னு பிளான் பண்ணியும் வீடு கிடைக்காததால, கீர்த்திகூட ஒரு டூயட்ட மட்டும் பாடிட்டு நான் அந்த மாப்ளையில்லைன்னு உண்மையைச் சொல்றாரு ராஜகுமாரன்.
“நம்பிக்கை துரோகம் பண்ணிட்டீங்க... வீட்டைக் காலி பண்ணுங்க”ன்னு கீர்த்தி சொல்லிட்டு அப்பால திரும்பவும் அழுகுது. “என் மனசுல நீங்க மட்டும்தான் இருக்கீங்க”ன்னு.. இங்கதான் ராஜகுமாரனும் தன்னோட பிளாஷ்பேக்கை எடுத்து விடுறாரு..! நடுவுல 4 வருஷத்துக்கு முன்னாலயே போய்ச் சேர்ந்துட்ட மலேசியா வாசுதேவன், தன்னோட மகன் பிருத்விக்கு கீர்த்தியை கல்யாணம் செஞ்சு வைக்கணும்னு வர்றாரு.. இதுக்கொரு பின்னணி கதை..! இவங்க காலேஜ் வாசல்ல இருக்குற இடம் மதன் பாப்போடதாம்.. கீர்த்தியை வளைச்சுப் போட்டா இடம் சொந்தமாயிரும் பாருங்க. அதுக்காகத்தான் இந்தக் கல்யாணமாம்..!
கீர்த்திக்கு விருப்பமில்லாத கல்யாணத்தை நிறுத்த ராஜகுமாரனும், ரமேஷ்கண்ணாவும் ஐயர்ல ஆரம்பிச்சு சாப்பிட்ட இலையை எடுக்கிறவன்வரைக்கும் போய் பேசுறாங்களாம்.. இந்த ஒரு திரைக்கதைக்கே ராஜகுமாரன் வரும் காலங்களில் இயக்குநர்களிடையே நிச்சயம் பேசப்படுவார்..! எல்லாரும் அது எங்க தொழில்ன்னு கை விரிக்க.. கடைசீல கல்யாணத்தன்னிக்கு கீர்த்தியை சின்னப்புள்ளத்தனமா கடத்திட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடி வர்றாரு ராஜகுமாரன்.
அங்கே ஒரு மினிஸ்டரே நேர்ல வந்து கீர்த்தியை தூக்கிட்டுப் போக.. ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு மட்டும் சவுண்டு விட்ட இன்ஸ்பெக்டரை நம்பி, கல்யாணத்தை நிறுத்த மண்டபத்துக்கே திரும்பவும் அவருடனேயே போறாரு ராஜகுமாரன். அஞ்சு நிமிஷத்துல மனசு மாறிட்ட இன்ஸ்பெக்டர், இப்போ கல்யாணத்துக்கு ஓகே சொல்ல.. ராஜகுமாரன் முன்னாடியே கீர்த்திக்கு கல்யாணம் நடக்குது.. அதுக்கப்புறமா அவரை தூக்கிட்டு வந்து ஸ்டேஷன்ல வச்சு மிதி மிதின்னு மிதிக்க.. மறுபடியும் நாமளும் மிதி வாங்கிறது தொடருது..!
பால்கனில பசியோட உக்காந்திருக்கிற கீர்த்திக்கு சாப்பாடு கொடுக்க ராஜகுமாரன் செய்ற வேலை இருக்கே..! அப்பா.. முருகா.. இது உனக்கே அடுக்குமாடா..? ஜாக்கிசான் படத்துலகூட இப்படியொரு காட்சியை நீங்க பார்த்திருக்க மாட்டீங்க.. என்னவொரு தைரியம்..? என்னவொரு புத்திசாலித்தனம்..? மிரட்டிட்டாருல்ல அண்ணன்..! வீட்ல இருக்குற இரு இரும்பு கொடி மரத்தைப் பிடுங்கி.. அதை ரெண்டு வீட்டு பால்கனிக்கும் இடைல போட்டுட்டு ரெண்டு கைலேயும் சாப்பாடு பார்சலை வைச்சுக்கிட்டு அண்ணன் அந்தரத்துல நடந்து போய் கொடுக்குறாரு பாருங்க.. நிச்சயமா தியேட்டர்ல ஸ்கிரீனையே கிழிக்கிற அளவுக்கு கைதட்டல் கிடைக்கும்னு நம்புறேன்..!
இதுல ஒரு அஞ்சு நிமிஷ ‘நச்’ என்ற கதைன்னா அது சாருஹாசனோட கிளைக்கதைதான். அவருக்கும் ஒரு பிளாஷ்பேக்காம்.. படத்தை ஓட்டுற ஆபரேட்டருக்கு மட்டும்தான்யா இதுல கதை இல்லை.. சாருஹாசன் ஒரு வக்கீல்.. பிளாட்பார ஓரத்துல 25 வருஷமா ஆபீஸ் நடத்திக்கிட்டிருக்காராம். ஏன்னு கேட்டா.. அவரையும் ஒரு பொம்பளை வக்கீலு ஏமாத்திருச்சாம்.. “அவ என்னிக்காச்சும் ஒரு நாள் இந்தப் பக்கம் வருவாள்ல.. அப்ப நான் அவளுக்காக இங்க காத்துக்கிட்டிருக்கேன்னு தெரியும்ல்ல.. தெரிஞ்சுக்கணும்.. அதுக்காகத்தான் ரோட்டுலயே உக்காந்திருக்கேன்..”னு பீலிங்கோட சொல்றாருய்யா பெரிசு.. அவரை ஏமாத்தின பொண்ணு யாருன்னா.., அது ராஜகுமாரனோட அம்மா ரோகிணியாம்.. தலை சுத்துற மாதிரியில்லே.. பொதுவா இந்த மாதிரி நேரத்துல டிவில விளம்பரம் போடுவாங்க.. நமக்குத்தான் அந்தக் கொடுப்பினை இல்லையே.. முருகான்னு தலைல அடிச்சிட்டு சீட்ல கவுந்தடிச்சாச்சு..!
இந்த சாருஹாசனும் ஒரு நாள் பொக்குன்னு போய்ச் சேர.. இன்னொரு தேவயானி அறிமுகம். இவுக பேமஸான வக்கீலாம்.. இந்த சாருஹாசன் இவுககிட்ட ராஜகுமாரன் கேஸ் பத்தி சொல்லியிருந்தாராம்.. அதுனால அவங்க வாலண்டியரா இதுல உள்ளார வர்றாங்களாம்.. நல்லா சொல்றாங்கய்யா டீடெயிலு..! கூட இருந்த அஸிஸ்டெண்ட்டெல்லாம் சீரியலுக்கு கதை எழுதினவங்க போலிருக்கு..!
அதெப்படி ஒரே மாதிரி 2 பேர் இருக்க முடியும்ன்னு ராஜகுமாரன் கேள்வியெழுப்ப.. தன்னோட அப்பாவோட செட்டப்போட புள்ளை நானுன்னு சொல்றாங்க வக்கீல் தேவயானி. அந்த அப்பா யாருன்னா அது ராஜகுமாரனோட மாமா ராதாரவிதான்.. போச்சுடா.. 4 வருஷத்துக்கு ஓட்ட வேண்டிய சீரியல் கதையை 2 மணி 38 நிமிஷ படத்துல கட் பண்ணி கட் பண்ணி காட்டி முடிச்சிட்டாங்க..!
இடைல ஊர்ல இருந்து ராதாரவி வந்து முதல் தேவயானி மண்ணெண்ணையை ஊத்தி தீக்குளிச்சிட்டதா சொல்லி சொத்தையெல்லாம் ராஜகுமாரன் பேருக்கே எழுதி வைச்சிட்டதா சொல்றாரு..! வக்கீல் தேவயானி கோர்ட்ல கேஸ் போட்டு கீர்த்தியை அவங்க மாமனார் வீட்ல இருந்து பத்திரமா வெளில கொண்டு வந்தாந்து எதிர்த்துவீட்டு ராஜகுமாரன்கிட்டேயே விட்டுர்றாங்க.. வீட்டுக்கு நடுவுல ஒரு கோட்டை போட்டுட்டு அதுக்கப்புறம் அவங்க.. இதுக்கப்புறம் இவுங்கன்னு ஒரு டீசண்ட்டா வாழறாங்களாம்..!
அதுக்கப்புறம் ஆரம்பிக்குது பெரிய கொடுமை.. கோர்ட், கேஸ், வாய்தா.. வாதம்ன்னு ஆரம்பிச்சு அரை மணி நேரத்துக்கு பக்கம், பக்கமா டயலாக் பேசி கடைசி 5 வருஷமா தேவயானி சினிமால நடிக்கலீல்ல.. எல்லாத்துக்கும் சேர்த்து வைச்சு வெளுத்துக் கட்டுறாங்க.. கூடவே நம்மளையும்தான்.. கீர்த்தி-பிருத்வி கல்யாணத்துக்கு மேளம் அடிச்சுவன்ல இருந்து கேட்டரிங் செஞ்சவன்வரைக்கும் கோர்ட்டுக்கு இழுத்து.. எல்லார்கிட்டேயும் “நீங்க கலந்துக்கிட்ட கல்யாணத்துல பொண்ணுக்கு விருப்பம் இருக்கா இல்லையான்னு உங்களுக்குத் தெரியுமா.. நீங்க ஏன் கேக்கலை?”ன்னு அந்து போன ரீலாட்டும் இவுக காட்டுற நடிப்பு இருக்கே..!??? இனிமே தமிழ்நாட்டுல எவன் கல்யாணத்துக்கு போனாலும் சரி.. பொண்ணுக்கும், மாப்ளைக்கும் கல்யாணத்துக்கு விருப்பமா இல்லையான்னு கேட்டுட்டு அப்புறமா பந்தில உக்காருங்கப்பா.. இல்லாட்டி நீங்களெல்லாம் மனசாட்சி இல்லாதவங்கன்னு தேவயானியக்கா கனவுல வந்து ஈட்டியை வைச்சு குத்தும்..!
கடைசீல கீர்த்தியோட கல்யாணம் செல்லாதுன்னு சொல்லி தீர்ப்பு வாங்கிர்றாங்க வக்கீல் தேவயானி.. இங்கேயும் ஒரு திடுக் திருப்பமா கோர்ட் கூண்டுல கீர்த்தி மேல எனக்கு லவ்வு இருந்தது உண்மைதான்னு சொன்னது பொய்யுன்னு வெளில வரும்போது சொல்லிட்டு எஸ்கேப்பாகப் பார்க்குறாரு ராஜகுமாரன்..!
விடுவாரா தயாரிப்பாளர் தேவயானி.. இப்படியே விட்டா தியேட்டர்ல பெண்கள் கூட்டமெல்லாம் திட்டிட்டு பக்கத்து வீட்டுக்காரிகளையும் தியேட்டருக்கு வர விடாமல் பண்ணிருவாங்கன்னுட்டு மறுபடியும் பஸ்ல ஊருக்குப் போற ராஜகுமாரன் பக்கத்துலேயே கீர்த்தியையும் உட்கார வைச்சு.. “இனிமேலும் இவங்க லவ் பண்ண டிரை பண்ணுவாங்க”ன்னு சொல்லிட்டு நம்ம குடலை உருவி தொங்க விட்டுட்டு, நம்மளை தூக்கிட்டுப் போய் ஆஸ்பத்திரி வாசல்ல போட்டுட்டு போற மாதிரி விட்டுட்டுப் போயிடறாங்க..! உஷ்.. அப்பா.. இவ்ளோதாம்பா கதை..!
இதுல சப்போர்ட்டிங் ஆக்டர்ஸா நிறைய பேரு வாலண்டியரா வந்து நம்மளை குத்திட்டுப் போறாங்க..! இதுல கஞ்சா கருப்புவோட ஒரு புகார் இருக்கு பாருங்க.. என்னவொரு கிரியேட்டிவிட்டி..? “ஆட்டோன்ற இடத்துல சமாச்சாரம்ன்னு போட்டு எழுதிக்குங்க”ன்னு சொல்லிப்புட்டு அவரும் அவரோட பிரெண்டும்.. “என் பொண்டாட்டியை இவன் வைச்சிருந்தான்.. இவன் பொண்டாட்டியை நான் வைச்சிருந்தேன்”னு சொல்ற கதையை வேற காமெடின்னு எடுத்து வைச்சிருக்காங்க.. யூ டூ ராஜகுமாரன்னு கேட்கத் தோணுது..!
பாடல்கள் மட்டுமே படத்துல இருக்குற ஒரே ஆறுதல். பாட்டு சீன் இல்லை. பாடல்கள் மட்டுமே.. அதிலும் ‘தமிழ் தமிழ்’ என்ற பாடல் கேட்பதற்கு மட்டுமே அழகு.. பார்ப்பதற்கு கொடுமை..! ‘திருக்குறள் இடையழகி’, ‘நாயகன்’, ‘வா வா வெண்ணிலவே’ என்று அனைத்து பாடல்களிலுமே தமிழ் வார்த்தைகள் தெள்ளத் தெளிவாகக் கேட்கிறது.. அண்ணன் எஸ்.ஏ.ராஜ்குமாருக்கு ஆளுயுர மாலையைப் போட்டிருங்கப்பா..! ஆனா பாட்டு சீன்ஸையெல்லாம் பார்க்கத்தான் முடியலை..! அத்தனையிலேயும் அண்ணன் காட்டுற ரொமான்ஸை பார்த்தா.. முடியலை.. விட்ருங்கண்ணே..!
எல்லாரும் டிஜிட்டல்ல உலகத் தரத்துல எடுத்துக்கிட்டிருக்கோம்னு ரீல் விடும்போது நம்ம அண்ணன் மட்டும், 1,45,000 அடி பிலிம் ரோல்ல அதுலேயும் ஈஸ்ட்மேன் கலர்ல, நாலரை கோடி செலவுல படத்தை எடுத்திருக்கிறதா பெருமையா வேற சொல்றாரு.. இந்தக் காசுல தேவயானி பேருல இன்னொரு ஸ்டூடியோவே கட்டியிருக்கலாம்.. இல்லாட்டி வசந்த மாளிகையாவது கட்டியிருக்கலாம்.. அந்தக்காதான் பாவம்.. கோலங்கள் சீரியல்ல நடிக்க ஆரம்பிச்சு.. அந்த சீரியல் முடிக்கிறதுள்ள 2 புள்ளையையும் பெத்திட்டு.. கோடில சம்பாதிச்சு வைச்சதை எப்படித்தான் இப்படி அழிக்கிறதுக்கு மனசு வந்ததோ தெரியலை..?
ராஜகுமாரன் இத்தோட தன்னோட நடிப்பு ஆசையை நிறுத்திக்கிட்டா அவருக்கும் நல்லது.. நமக்கும் நல்லது.. இல்லாட்டி தப்பித் தவறி ஏஸி காத்து வாங்கவாச்சும் இப்போ தியேட்டர் பக்கம் வர்றவனும் கடைசீல காணாமப் போயிருவான்..!
வக்கீல் தேவயானிக்கு அன்பான வேண்டுகோள்..! மேடம்.. நீங்க கோர்ட்ல ஒரு பக்கத்துக்கு அள்ளி வீசினீங்களே.. இந்தியன் பீனல் கோட் செக்சன் நம்பர்களை.. அதே மாதிரி இந்தப் படத்தை பார்க்க வைச்சு.. எங்களை உக்கார வைச்சு கொடுமைப்படுத்தினதுக்காக.. உங்க ரெண்டு பேர் மேலேயும் எந்த செக்சன்ல கேஸ் போடுறதுன்னு கொஞ்சம் சொன்னீங்கன்னா எங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்..!