தமிழ்ச் சினிமாவுக்கு வரிவிலக்கு - குழப்பமான அரசாணை - யாருக்கு லாபம்..?

26-07-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கருணாநிதி தனது கடந்த கால ஆட்சியில் திரையுலகத்தினருக்கு அளித்த மாபெரும் சலுகை, தமிழில் தலைப்பு வைத்தால் அத்திரைப்படங்களுக்கு முழு வரிவிலக்கு என்று அறிவித்ததுதான்.

இந்த வரிவிலக்கால் கடந்த நான்கரையாண்டு காலமாக வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும், கூடவே தாத்தாவின் பேரன்களும் முழு பலன்களைப் பெற்றார்கள். அதே நேரத்தில் வழக்கமான முறையில் கேளிக்கை வரியைப் பிடித்தம் செய்திருந்தால் அதில் குறிப்பிட்ட தொகை உள்ளாட்சி அமைப்புகளுக்குப் போய்ச் சேர்ந்திருக்கும். இதனால் ஏற்படும்  இழப்பீட்டுத் தொகையை அரசே உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கும் என்றும் அரசு சொல்லியிருந்த்து. இதனால் திரைப்படங்களின் தயாரிப்புக்கு ஏற்றவாறு மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரிவிலக்கு அளித்த தொகையை அளிக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளானது.

இது ஒரு புறமிருக்க.. தமிழ்ப் பெயர்கள் என்று சொல்லிக் கொண்டு அன்றாடம் பயன்படுத்தும் நடைமுறைத் தமிழை வைத்துக் கொண்டு ஜல்லியடித்தது தமிழ்ச் சினிமாவுலகம். முதல் அம்பு சிவாஜியில் ஆரம்பித்தது. சிவாஜி என்ற எழுத்து நடைமுறைத் தமிழ் என்று விளக்கமளித்த கருணாநிதி அரசு அதற்கு வரிவிலக்கு அளித்தது. அவ்வளவுதான் அதன் பிறகு அனைத்து நடைமுறை தமிழ்களும் சினிமா தலைப்புகளாகி நடைமுறைக்கு வந்துவிட்டன.

சென்ற ஆண்டு வெளிவந்த அம்பாசமுத்திரம் அம்பானி, மதராசபட்டினம்,  தில்லாலங்கடி, பாணா காத்தாடி, மாஸ்கோவின் காவிரி, எந்திரன், பாஸ் என்ற பாஸ்கரன், மைனா, வ குவார்ட்டர் கட்டிங், சித்து +2, கோட்டி, சிக்குபுக்கு, சிங்கம், பையா, குட்டி, கோவா, சுறா, கொலை கொலையாம் முந்திரிக்கா, மிளகா என்று வரிசை கட்டி வந்த திரைப்படங்களிலெல்லாம் தமிழ் மொழியின் வளர்ச்சி, இந்த நடைமுறைத் தமிழ் என்கிற ஓட்டைக்குள் நுழைந்து பதுங்கிவிட்டன..!

இந்த வரிவிலக்கால் யாருக்குத்தான் லாபம் கிடைத்தது..? இந்த அரசாணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து, 2010 டிசம்பர் 31-வரையிலும், 1,208 தமிழ் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு நிச்சயம் 300 கோடி ரூபாய்வரை வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். அதே சமயம் இத்தொகை முழுவதும் தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும்தான் கிடைத்திருக்குமே தவிர, படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு இதனால் எந்தவித்த்திலும் நன்மையில்லை. மாறாக அவர்களிடமிருந்து கூடுதலான தொகையைத்தான் சுருட்டியிருக்கிறார்கள்.

கருணாநிதி ஆட்சிக்கு வந்த பின்புதான் ஏஸி இல்லாத தியேட்டர்களில் கட்டணம் 50-க்கு கீழேதான் இருக்க வேண்டும். ஏஸி உள்ள தியேட்டர்களிலும் ஊரைப் பொறுத்து 75 ரூபாய்தான் அதிகபட்ச கட்டணம் என்று ஒரு நாள் அறிவித்தார். அவர் அவ்வாறு அறிவித்த அன்று இரவிலேயே சென்னையில் இருந்த மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள், அபிராமி ராமநாதன் தலைமையில் கோபாலபுரத்துக்கு படையெடுக்க, மறுநாளே அந்த உத்தரவில் மாறுதல் செய்யப்பட்டு, இந்த டிக்கெட் விலை கட்டுப்பாடு மல்டிபிளெக்ஸ் தியேட்டர்களுக்கு பொருந்தாது என்று விதிவிலக்கு அளிக்கப்பட்டது.

இன்னும் கொஞ்ச நாட்கள் கழித்து திரைப்படம் வெளியான சில நாட்களுக்கு மட்டும் டிக்கெட் கட்டணத்தை எவ்வளவு வேண்டுமானாலும் உயர்த்திக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்தது. இதனாலும் அதிகம் பயனடைந்தவர்கள் தியேட்டர்காரர்களும், விநியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களும்தான்..!

சிறு நகரங்களில் வெறும் 30 ரூபாய் டிக்கெட்டை வணிகவரித்துறையின் சீல் இல்லாமல் 50 ரூபாய்க்கு கவுண்ட்டரில் கொடுத்து துவக்கப்பட்ட கொள்ளையடிப்பு, புதிய படங்களின்போது 100 ரூபாய்க்கு விற்கப்பட்டு 30 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்பட்டதாக கணக்குக் காட்டப்பட்டு அந்த 30 ரூபாய்க்கு கொடுக்கப்பட வேண்டிய வரியான 1 ரூபாயும் வரிவிலக்கால் அவர்களிடமே போய்ச் சேர்ந்த்து. கடைசியில் ஏமாந்த்து என்னைப் போன்ற அதீத சினிமா ரசிகர்கள்தான்..!

தியேட்டர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வரியில் 90 சதவீதத் தொகை,  உள்ளாட்சி அமைப்புகளுக்கு சென்று கொண்டிருந்தன. இந்த வரிச் சலுகையால் 300 கோடி ரூபாயை அனாவசியமாக தேவையில்லாமல் அரசு தனது இருப்பில் வைத்திருக்கும் பணத்தில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு எடுத்துக் கொடுத்திருக்கிறது..!

ஒரு பக்கம் தமிழை வளர்க்க உதவும் என்று வாயில் முழம் போட்ட அந்த வார்த்தைகளும் பொய்யாகி, வரி விலக்கினால் சாதாரண பொதுஜனத்திற்கும் எந்தப் பலனுமில்லை என்ற இன்றையச் சூழ்நிலையில் கடந்த 6 மாதங்களாக எத்திரைப்படத்திற்கும் வரிவிலக்கு அளிக்காமல் மெளனம் காத்து வந்தனர் அரசு அதிகாரிகள்.

இதற்கு அச்சாரமாக கடந்த வருடமே தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தினர் பெரிய படங்களுக்கு வரி விலக்கு தேவையில்லை. சிறிய பட்ஜெட் படங்களுக்கு மட்டும் கொடுங்கள் போதும் என்று அரசிடம் முறையிட்டிருந்தார்கள். ஏனெனில் பெரிய பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்யும்போது தியேட்டர்காரர்கள் அதிக விலைக்கு டிக்கெட்டுக்களை விற்றதன் மூலம் கிடைத்த லாபம் பெரும்பாலும் தியேட்டர் அதிபர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்குமே போய் சேர, தயாரிப்பாளர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை..! அதே சமயம் சிறிய பட்ஜெட் படங்களுக்கு மட்டும் வரி விலக்கு அளித்து, அதன் மூலம் தியேட்டர் கட்டணத்தை குறைத்தால், மக்கள் கூட்டம் அதிகமாக வந்து, சுமாரான வசூலாவது கிடைக்குமே என்று தயாரிப்பாளர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் இதனை திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டம், முளையிலேயே கிள்ளியெறிந்துவிட்டதால் இந்தக் கோரிக்கை குப்பைக் கூடைக்குப் போனது.

கடந்த 6 மாதங்களாக வெளிவந்த திரைப்படங்களுக்கான வரியை உடனே கட்டும்படி 2 மாதங்களுக்கு முன்பாக பல திரையரங்குகளுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பியது. சில திரையரங்கு உரிமையாளர்கள் வரித்தொகையைக் கட்டியிருக்கிறார்கள். சிலர் அவகாசம் கேட்டுவிட்டு தங்களது சங்கத்தில் முறையிட்டுக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நேரத்தில்தான் கடந்த 21-ம் தேதி நம்ம ஆத்தா, புண்ணியவதி ஜெயலலிதா இது தொடர்பாக புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டு இன்னும் கொஞ்சம் குழப்பத்தைக் கூட்டியிருக்கிறார்.

அந்த அரசாணையை படித்துப் பாருங்கள் :

2006-ம் ஆண்டு ஜூலை 22-ம் நாள் வணிக வரி மற்றும் பதிவுத் துறையின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை (நிலை) எண்.72-ன் படி தமிழிலேயே பெயர் சூட்டப்படும் புதிய திரைப்படங்களுக்கு கேளிக்கை வரியில் இருந்து முழுமையான வரி விலக்கு அளிக்கப்பட்டது.

2006-ம் ஆண்டு நவம்பர் 20-ம் நாள் வணிக வரி மற்றும் பதிவுத் துறையின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை (நிலை) எண்.147-ன் படி, கேளிக்கை வரிவிலக்கு பழைய திரைப்படங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.

2007-ம் ஆண்டு மார்ச் 30-ம் நாள் வணிக வரி மற்றும் பதிவுத் துறையின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை (நிலை) எண்.85-ன் படி, தமிழ்த் திரைப்படங்களின் காப்புரிமை வைத்திருப்போருக்கும் கேளிக்கை வரிவிலக்கு நீட்டிக்கப்பட்டது.

2007-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் நாள் வணிக வரி மற்றும் பதிவுத் துறையின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை (நிலை) எண்.159-ன் படி, திரையிடப்படும் பழைய மற்றும் புதிய திரைப்படங்களின் தமிழ்ப் பெயர், தமிழ்ப் பண்பாட்டிற்கு உகந்ததாகவும், கண்ணியமானதாகவும் உள்ளதா என ஆய்வு செய்து பரிந்துரை செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது..

திரைப்படங்களுக்கு தமிழில் பெயரிடப்பட்டால் மட்டுமே அத்திரைப்படங்களின் கதைக் கரு தமிழ்ப் பண்பாட்டிற்கு உகந்த்தாகவும், கண்ணியமானதாகவும் உள்ளது என உறுதி செய்ய இயலவில்லை. மேலும் சில தரமில்லாத திரைப்படங்கள் தமிழில் பெயரிடப்பட்டதால் மட்டுமே கேளிக்கை வரிவிலக்கு பெற்று விடுகின்றன.

மேற்கண்ட சூழ்நிலையில் கேளிக்கை வரிச்சலுகை பெற திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன், கீழ்க்கண்ட கூடுதல் தகுதி வரையறைகளை நிர்ணயம் செய்து ஆணை வெளியிடப்படுகிறது.

(1). அவ்வாறான திரைப்படம், திரைப்படத் தணிக்கை வாரியத்திடமிருந்து “யு” சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

(2). திரைப்படத்தின் கதையின் கருவானது, தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்கு உகந்த்தாக இருத்தல் வேண்டும்.

(3). திரைப்படத்தின் தேவையைக் கருதி பிற மொழிகளைப் பயன்படுத்தும் காட்சிகளைத் தவிர பெருமளவில் திரைப்படத்தின் வசனங்கள் தமிழ் மொழியில் இருத்தல் வேண்டும்.

(4). திரைப்படத்தில் வன்முறை மற்றும் ஆபாசங்கள் அதிக அளவில் இடம் பெறுமேயானால், அத்திரைப்படம் வரிவிலக்கு பெறப்படுவதற்கான தகுதியை இழக்கும்.

மேற்கண்ட வரையறைகள், திரைப்படங்களுக்கு கேளிக்கை வரிவிலக்கு கோரப்பட்டு தற்போது நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கும் பொருந்தும்.

மேலும் கேளிக்கை வரி செலுத்துவதிலிருந்து விலக்களிக்க வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்கின்ற திரைப்படங்களை பார்வையிட்டு வரி விலக்கிற்கு பரிந்துரை செய்ய ஒரு புதிய தனிக்குழு ஏற்படுத்தப்படும் என அரசு ஆணையிடுகிறது. அவ்வாறான புதிய குழு அமைப்பதற்கான ஆணை தனியே வெளியிடப்படும்.

இப்படியொரு குழப்பமான விதிமுறைக்கு ஐடியா கொடுத்த மவராசன் யாருன்னு தெரியலை. ஆத்தாதான் இதுக்குக் காரணம்ன்னா சீக்கிரமா இந்தம்மாவை பெங்களூர் ஜெயிலுக்குள்ள கொண்டு போடா முருகான்னு திரும்பவும் வேண்டிக்கிறேன்..

இந்த அரசாணையின் வரலாற்றை ஒரு முறை பாருங்கள்..

முதல்ல தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்குன்னு சொல்லியிருக்காங்க. 2-வதா பழைய திரைப்படங்களை டூரிங் டாக்கிஸிலும் ரூரல் பகுதிகளிலும் திரையிடும்போது அவற்றுக்கும் வரி விலக்குன்னு சொல்லியிருக்காங்க.. 3-வதா பழைய திரைப்படங்களின் காப்பிரைட் உரிமையாளர்களுக்கும் இந்தச் சலுகையைக் கொடுத்திருக்காங்க. 4-வதா தமிழ்ப் பெயர்கள்தானா என்று கண்டறிந்து வரி விலக்கிற்கு அனுமதி வழங்க ஒரு தனிக் குழுவை அமைக்கப் போவதாகச் சொல்லியிருக்காங்க. இது வ குவார்ட்டர் கட்டிங் படத்தின் தலைப்பு பற்றிய சர்ச்சை எழுந்தபோது, தாத்தா செய்த தில்லாலங்கடி வேலை..!

இப்போது விதிக்கப்பட்டிருக்கும் முதல் விதியை கண்மூடித்தனமாக நான் ஏற்றுக் கொள்கிறேன். யு சர்டிபிகேட் இருந்தால்தான் வரி விலக்கு. ஓகே..

இரண்டாவதாக சொல்லப்பட்டிருக்கும் “திரைப்படத்தின் கதையின் கருவானது, தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருத்தல் வேண்டும்..” என்ற நிபந்தனையை எப்படி செயல்படுத்தப் போகிறார்கள் என்று புரியவில்லை.

தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை வெளிப்படுத்துவதற்கா இங்கே எல்லோரும் சினிமா எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்..? முதலில் தமிழ்ப் பண்பாடு என்றால் என்னவென்று இங்கே யாருக்காவது தெரியுமா..? அப்படியொன்று இருக்கிறதா என்ன..?

ஒரு இடைவேளை, 5 பாடல்கள், இதில் 2 குத்துப் பாடல் காட்சிகள், 4 சண்டைக் காட்சிகள், 2 ரீல்களுக்கு ஒரு முறை 1 நகைச்சுவைக் காட்சி என்று அரைத்த மாவை அரைப்பதை போல எதையோ எடுத்து ஓட்டிக் கொண்டிருக்கும் வேளையில் தமிழ்ப் பண்பாடு என்று எதை, எதையோ சொல்லி பயமுறுத்தினால் எப்படி..? இது எப்படி வேலைக்காகும் என்று ஆலோசனையில் இருந்த ஐ.ஏ.எஸ்.ஸுகள் யோசித்திருக்க வேண்டாமா..?

சரி அப்படியே ஒருவர் தமிழ்ப் பண்பாட்டின்படிதான் திரைப்படத்தை எடுத்திருக்கிறேன் என்று சொன்னாலும், அதற்கு மதிப்பீடு அளிக்கப் போவது யார்..? அதற்கான அளவுகோல்கள் என்னென்ன..? அவர்களுக்கு தமிழ்ப் பண்பாடு இதுதான் என்று எப்படி தெரியும்..? யாராவது இதற்கு பதிலளிக்க முடியுமா..? சுத்தம். சரி இதைவிடுங்க..

“திரைப்படத்தின் தேவையைக் கருதி பிற மொழிகளைப் பயன்படுத்தும் காட்சிகளைத் தவிர, பெருமளவில் திரைப்படத்தின் வசனங்கள் தமிழ் மொழியில் இருத்தல் வேண்டும்..” என்ற மூன்றாவது நிபந்தனை எந்த அளவுக்கு இயக்குநர்களுக்கு ஏற்புடையதாக இருக்கும் என்பது சந்தேகமே..!

ஏனெனில் உயர்தர வர்க்கத்தினரின் வீடுகளில் இப்போது தமிழ் மறக்கடிக்கப்பட்டு வருகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் காவலாளிகள்கூட ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்கள். இது போன்ற சூழ்நிலைகளை காட்டுகின்றபோது நடைமுறைத் தமிழைக்கூட ஒதுக்கிவிட்டு ஆங்கிலத்தைத்தான் பயன்படுத்தியாக வேண்டும். அதுதான் ஓரளவு சினிமாவுக்கு இயல்பாக இருக்கும். தமிழ்நாட்டிலேயே தமிழ் பேசாமல் இருக்கும் வீடுகளெல்லாம் இருக்கும் நிலையில் அது போன்றவைகளை வெளிப்படுத்த, தமிழை பயன்படுத்த முடியாது என்பதுதான் இயக்குநர்களின் கருத்தாக இருக்கும்.

“திரைப்படத்தில் வன்முறை மற்றும் ஆபாசங்கள் அதிக அளவில் இடம் பெறுமேயானால், அத்திரைப்படம் வரிவிலக்கு பெறப்படுவதற்கான தகுதியை இழக்கும்“ என்ற இந்த 4-வது விதிமுறையினால் நிச்சயம் தயாரிப்பாளர்களுக்கும், சென்சார் போர்டு உறுப்பினர்களுக்கும் சிக்கல்தான்..!

ஏனெனில் கந்தசாமி படத்துக்கும், நடுநசி நாய்கள் படத்துக்கும் யு சர்டிபிகேட் கொடுத்து புண்ணியம் கட்டிக் கொண்டவர்கள் சென்சார் போர்டு உறுப்பினர்கள். இந்த நிலையில் இது போன்ற படங்களை பார்க்கும் தகுதிக் குழு நியாயமாகச் செயல்பட்டு இந்தப் படங்களுக்கு வரிவிலக்கில்லை என்று சொன்னால் அதனை ஏற்றுக் கொள்ளலாம். மாறாக அவர்களும் சென்சார் போர்டு உறுப்பினர்களை போல கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்திட்டால் இதுவும் பணால்தான்..! சென்சார் போர்டு யு சர்டிபிகேட் கொடுத்தும் தகுதி குழு அதனை ஏற்க மறுத்தால், தயாரிப்பாளர்கள் என்ன செய்வார்கள்..?

ஆக மொத்தம், இந்தப் புதிய அரசாணையால் புதிய குழப்பத்திற்கு அடி போட்டிருக்கிறார் ஜெயல்லிதா. விரைவில் தமிழ்த் திரைப்பட உலகத்தினர் இந்த விதிமுறைகளை நீக்கச் சொல்லி ஆத்தாவைப் பார்க்க படையெடுப்பது உறுதி.

செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பதவிக்கு நிற்கவிருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகருக்கும், முரளீதரனுக்கும் இந்தப் பிரச்சினை நிச்சயம் தலைவலியைக் கொடுக்கப் போகிறது..

இப்படி திரையுலகில் அனைவருமே அவரவர் சுய லாபத்தைத்தான் குறிக்கோளாக பார்க்கிறார்களே ஒழிய, சமூகம், துறை, கடைநிலை ஊழியர்கள், மற்றும் ரசிகர்களை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. அரசு இந்தத் திட்டத்தையே நீக்கிவிட்டு திரையரங்கு கட்டணங்களைக் குறைக்க முயன்றால், தமிழ்ச் சினிமாவுலகத்துக்கு எதிர்காலத்தில் பெரும் உதவியாக இருக்கும்..!

திரையரங்கு கட்டணங்களை நாங்கள் குறைக்கிறோம். நீங்களும் வரிவிலக்கு அளியுங்கள். வரிவிலக்கு அளித்த பின்பு வருகின்ற கட்டணத்தையே ரசிகர்களிடம் வசூலிக்கிறோம் என்று சொல்லவும் சினிமாக்காரர்களுக்கும்  மனமில்லை.

இவர்களைச் சொல்லியும் குற்றமில்லை..!

அள்ள அள்ளப் பணம் என்பதைப் போல டிக்கெட் கட்டணத்தை எத்தனை உயர்த்தினாலும் ஆன்லைனில் டிக்கெட்டை புக் செய்துவிட்டு அரக்கப் பரக்க தியேட்டருக்கு ஓடிப் போய் நிற்கும் ரசிக குஞ்சாமணிகள் இருக்கின்றவரையில், பொழுது போக்க தியேட்டர்களுக்கு வர நினைக்கும் அப்பாவி தமிழர்களின் குடும்பங்களுக்கு இது நிச்சயம் சோதனைதான்..! 

இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்-23-07-2011

23-07-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!நன்றியோ நன்றி..!

நினைக்கும்பொழுதே நெஞ்சடைக்கிறது. கண்கள் குளமாகின்றன..! விரல்கள் தட்டச்சு செய்ய மறுக்கின்றன.. என்ன எழுதுவது என்பதே தெரியாமல் திகைத்துப் போயுள்ளேன்..! எல்லாம் உங்களால்தான்..

கடந்த 17-ம் தேதியன்று எனது வலைத்தளத்தில் 1000-மாவது நண்பராக திரு.ரபீக் என்பவர் இணைந்திருக்கிறார். தற்போது அது 1005-ஆக உயர்ந்திருக்கிறது.. இதற்காக என்ன தவம் செய்திருக்கிறேன் நான்..? கண்ணீர் சொட்டுச் சொட்டாக வடிகிறது. என்னையும் ஒரு பதிவராக நினைத்து இத்தனை பேர் பின் தொடர்கிறார்கள் என்றால், நானும் ஏதோ 4 பேருக்குப் பிடிப்பதுபோல் எழுதுகிறேன் என்று எனக்கு இப்போதுதான் தன்னம்பிக்கை பிறந்துள்ளது..!

எழுத வந்து 4 ஆண்டுகள் கழித்துதான் இந்த 1000 பேர் இணைந்திருக்கிறார்கள் என்பதே வலையுலகைப் பொறுத்தவரையில் கேவலமானதுதான். ஆனாலும் அதை நாமே  வெளியில் சொல்லிக் கொண்டால், கேவலத்தில் பாதி குறைந்துவிடும் என்பதால் வெட்கமில்லாமல் நானே அதனை இங்கே சொல்லி விடுகிறேன்..!

எனக்குப் பின்பு எழுத வந்தவர்களெல்லாம் 1500-ஐ தாண்டி மின்னல் வேகத்தில் வண்டி ஓட்டிக் கொண்டிருக்க.. நான் மட்டும் கொட்டாம்பட்டி ரோட்டில் ஓடும் கவர்ன்மெண்ட் பஸ் மாதிரி இழுத்துக்கோ, புடிச்சுக்கோன்னு ஓடிக் கொண்டிருப்பதை நினைத்தால் ஒரு பாட்டில் நுவக்ரானை குடிக்கலாம் என்றுதான் தோன்றுகிறது..! ஆனால் தைரியம் இல்லாத்தால் அதனைச் செய்யவில்லை..

இதற்காக யார் மேலேயும் பொறாமைப்படக் கூடாது.. வருத்தப்படக் கூடாது.. என்னதான் எண்ணெய்யை தேய்ச்சுக்கிட்டு மண்ணுல புரண்டு எந்திரிச்சாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்னு சொல்வாங்க. நமக்கு இவ்ளோதான்னு நினைச்சுக்க வேண்டியதுதான்..! இருக்கிறவரைக்கும் வண்டி இப்படியே ஓடட்டும்..! பார்த்துக்குவோம்.

நன்றி மக்களே..!


பையனூர் வீடு கட்டும் திட்டம் அம்போ..!

சென்னைக்கு தொலைவில் இருந்தாலும் பரவாயில்லை. கூடியவிரைவில் கிரேட்டர் மெட்ராஸ் சிட்டி வந்து அதுவும் நகரமாகிவிடும். மிக எளிதாக ஒரு வீட்டுக்கு சொந்தக்காரர்களாகிவிடலாம் என்ற கனவில் இருந்த சினிமா தொழிலாளர்களின் நினைப்பில் ஒரு டன் மண்ணையள்ளி போட்டு மூடிவிட்டார்கள்.

பையனூர் வீடு கட்டும் திட்டம் பணால் என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்கள். வீடு கேட்டு பணம் கட்டியவர்களெல்லாம் பணத்தை திருப்பிக் கொடுங்கள் என்று அனைத்து சங்கங்களிலும் கியூவில் நின்று மனு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இனி சினிமா தொழிலாளர்களுக்கு சொந்த வீட்டிற்கான கனவு கானல் நீர்தான்.. இனிமேற்கொண்டு எந்த அரசு வந்தாலும் விலைக்குக் கூட இடத்தை ஒதுக்கித் தர மாட்டார்கள் என்பது உறுதியாகிவிட்டது. காரணம், கருணாநிதிக்கு திரையுலகப் பிரம்மாக்களிடம் இத்தனை ஆதரவிருந்தும் வாக்களித்த மக்கள் மருந்துக்குக்கூட அதனையொரு பொருட்டாக கருதவில்லையே..?

பெரிய திரை, சின்னத்திரை என்று அனைத்துச் சங்கங்களிலும் நிர்வாகிகள் மட்டத்தில் ஏற்பட்ட பூசலும் இதற்கு ஒரு காரணம். பெப்ஸி தலைவராக இருந்த வி.சி.குகநாதன் எனக்கேன் வம்பு என்று ஒதுங்கிக் கொள்ள.. அ.தி.மு.க. கட்சிக்காரரான பெப்ஸியின் செயலாளர் சிவா, மேற்கொண்டு இதனை எந்தப் பக்கம் நகர்த்துவது என்பதே தெரியாமல் இருக்கிறார்.

இதில் அனைவரையும் முந்திக் கொண்டு நல்ல பெயர் எடுக்க நினைத்த நடிகர் சங்கத்தின் செயலாளர் ராதாரவி ஜெயல்லிதாவைச் சந்தித்தபோது, “அந்த இடம் உங்களுக்கு வேண்டாம். விட்ருங்க..” என்று மண்ணை வாரி இறைத்து மூடு விழா நடத்திவிட்டாராம்.

குத்தகை நிலமாகையால் வங்கிக் கடன்கள் கிடைக்காமல் இருந்த சூழலில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வங்கியான ஹட்கோவே 350 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க முன் வந்து அதுவும் கருணாநிதி முன்பாக கையெழுத்தாகியிருந்த்து. ஆனால் இப்போது சிக்கன நடவடிக்கையாக அதில் கை வைத்துவிட்டாராம் ஜெயல்லிதா.

பெப்ஸியில் இருந்தும், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்தும் கேட்டதற்கு “இன்னும் நிறைய பார்மாலிட்டீஸ் இருக்கே. எல்லாத்துலேயும் கையெழுத்து வாங்கிட்டு வாங்க. பார்ப்போம்..” என்று பட்டும், படாமலும் சொல்லி வருகிறார்கள் அதிகாரிகள்.

ஆனால் அதற்குள்ள 900 வீடுகள் கட்டுவதாகச் சொல்லியிருந்த சின்னத்திரை யூனியனில், வீடு கேட்டிருந்த சின்னத்திரை நடிகர் சங்கத்தினர் 270 பேரும் இப்போது “வீடு வேண்டாம். கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுங்க..” என்று கேட்டு மனு கொடுத்துவிட.. சின்னத்திரை யூனியனும் குப்புறப்படுத்துவிட்டது..!

இந்த லட்சணத்தில் பையனூரில் கலைஞர் நகரத்தில் 2 கோடி ரூபாய் செலவில் கலைஞர் ஸ்டூடியோ என்ற பெயரில் ஒரு இரண்டு ப்ளோர்கள் கொண்ட ஸ்டூடியோவை கட்டி வைத்துவிட்டார்கள். அதனை பர்ஸ்ட் காப்பி அடிப்படையில்(சினிமா பாணியில்) ஒரு தனியார் நிறுவனம் கட்டிக் கொடுத்த்தாம். இப்போது அதற்கு யார் பணம் கொடுப்பது? பெப்ஸியா..? அல்லது அனைத்து சங்கங்களுமா..? அந்த இடத்திற்கு நிரந்தர பட்டா கிடைக்குமா..? என்றெல்லாம் பஜ்ஜி, சொஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டே விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் சங்கங்களின் தலைவர்கள்..!


போராட்டம்ன்னா இப்படீல்ல இருக்கணும்..!

சிலி நாட்டில் கடந்த வாரம் ஒரு வித்தியாசமான போராட்டம் நடந்திருக்கிறது. அந்த நாட்டின் கல்வித் துறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். கல்வித் துறையை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் என்று பலரும் தெருவில் இறங்கிவிட்டார்கள்.

வழக்கமாக கோஷம் போட்டு, பதாகை ஏந்தியெல்லாம் செய்தால் இது நாடு முழுவதும் ரீச் ஆகாது என்று நினைத்தார்களோ என்னவோ, முத்தமிடும் போராட்டத்தை கோலாகலமாக நடத்தியிருக்கிறார்கள்.

போராட்டத்தில் கலந்து கொண்ட ஆண்களும், பெண்களுமாக அன்றைய நேரத்தில் மட்டும் காதலர்களாக உருமாறி முத்தமிட்டுக் கொண்டு கல்வித்துறைக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்களாம். ரொமாண்ட்டிக்காக இருந்த இந்தப் போராட்டம் கடைசியில் கை கலப்பில்தான் போய் முடிந்திருக்கிறது. அது வேறு கதை..!ம்.. நம்ம ஊர்லேயும்தான் இருக்காங்களே..! நம்மளால முடிஞ்சது.. உண்ணாவிரதம்ன்னா உண்ணும்விரதம்.. அவ்ளோதான்..!


எந்தப் படத்தின் பாடல் நீக்கப்பட்டது..?

சென்ற இட்லி-வடை பதிவில் “கமல்ஹாசனின் ஒரு திரைப்படத்தின் பாடல் காட்சி முழுவதும் படமாக்கப்பட்டு, பின்பு அதில் நடித்த மூத்த நடிகையின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் கடைசி நேரத்தில் வேறு விதமாகப் படம் பிடிக்கப்பட்டு படத்தில் இணைக்கப்பட்டது. அது என்ன படம் என்று  தெரிந்தால் சொல்லுங்கள்..” என்று எழுதியிருந்தேன்.

சத்தியமாகச் சொல்கிறேன். பதிவுலகில் யாரும் இது பற்றி கேட்கவில்லை. ஆனால் பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் பலரும் “என்ன படம்? என்ன பாட்டு?” என்று கேட்டு தனி மடல்களை அனுப்பிக் குவித்துவிட்டார்கள். அவர்களுக்கு எனது நன்றி..!

அந்தப் படம் 'மைக்கேல் மதன காமராஜன்'. ரூபிணியுடன், மனோரமாவும் சேர்ந்து ஆடும் அந்த ரொமாண்டிக் பாடல் காட்சிதான் அது. முதல் தடவை ஷூட் செய்தபோது கலைஞானி, ரூபிணியுடன் புகுந்து விளையாடிவிட்டாராம்.. அப்போது எதுவும் சொல்லாமல் உடன் நடித்து முடித்த மனோரமா, சில தினங்கள் கழித்து “அந்தப் பாட்டு சீன் ரொம்ப ஓவரா இருக்கு. உனக்கொண்ணும் இல்லை. என் பேர் கெட்டுப் போயிரும் போலிருக்கு தம்பி..” என்று கமலிடம் லேசாக முனங்கினாராம்.. அதற்காகவே மீண்டும் இன்னொரு முறை அந்தப் பாடல் காட்சியைப் படமாக்கியிருக்கிறார் கமல்.படத்தில் இப்போது இருப்பதே இப்படி பட்டையைக் கிளப்புதே.. இதுக்கும் மேலே என்றால், நம்ம கமல் அண்ணன் என்ன பண்ணியிருப்பாரு..? யோசிங்க..!


தி.மு.க. பொதுக்குழு

கோவையில் நாளை கூடவுள்ள தி.மு.க. பொதுக்குழு பலத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தி.மு.க.வின் அடுத்த்த் தலைவர் யார் என்பதை கருணாநிதி சொல்லியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இனியும் தாமதிக்க முடியாது என்று ஸ்டாலின் பிடிவாதத்தில் இருக்கிறாராம். இதைவிட பிடிவாதமாக அழகிரி அண்ணாத்தேயும் முரண்டு பிடிக்கிறாராம்..!

பத்திரிகைகளில் வருகின்ற தகவல்களும், பத்திரிகையாளர்கள் மூலமாக வருகின்ற செய்திகளும் தி.மு.க.வின் அடுத்த பிளவுக்கு அச்சாரம் இந்தப் பொதுக்குழுதான் என்று உறுதியாக எண்ண வைக்கிறது..!

சில ரவுடித்தனமான மாவட்டச் செயலாளர்களும், அழகிரியின் ஆதரவாளர்களும்தான் தி.மு.க.வின் தோல்விக்குக் காரணம் என்று ஸ்டாலின் நினைக்கிறாராம்.. அதனால்தான் அவர்களுக்கு செக் வைக்கும் அளவுக்கு மாவட்டச் செயலாளர் பதவிகளையே ஒழித்துக் கட்டிவிட்டு, நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் பதவியைக் கொண்டு வரலாமா என்று கேட்டுள்ளார்கள்.

ஆனால் இது நடக்காது என்றே நான் நினைக்கிறேன். தி.மு.க.வின் தற்போதைய மாவட்டச் செயலாளர்கள் அவ்வளவு சீக்கிரம் இதற்கு இணங்க மாட்டார்கள். ஏனெனில் அடுத்தடுத்து சிறைச்சாலைகளுக்கு பாதயாத்திரை செல்லவிருப்பது மாவட்டச் செயலாளர்கள்தான். கட்சிப் பதவி இருந்தால்தான் சிறைக்குள் நுழையும்போதே ஜட்டியுடன் நின்று தப்பிக்கலாம். இல்லாவிட்டால் அதையும் கழட்டித்தான் காட்ட வேண்டி வரும்..! அவரவர்க்கு அவரவர் பிரச்சினை..!

ஸ்டாலின் இன்றைக்கு இவ்வளவு வருத்தப்படுகிறாரே..
ரவுடித்தனத்தில் அயோத்திக்குப்பம் வீரமணியையும் மிஞ்சிய ஈரோடு மாவட்டச் செயலாளர் ராஜாவை அவர்தானே கட்சியில் சேர்த்து, தேர்தலில் நிற்க சீட்டும் கொடுத்தார். குறுநில மன்னர்களாக பிராந்தியத்தில் சர்வாதிகார ஆட்சி நடத்திக் கொண்டிருந்த நேரு, பொன்முடி, பன்னீர்செல்வம் என்று அனைவரையும் இவர்தானே தட்டிக் கொடுத்தார். அப்போது தெரியவில்லையாக்கும் தவறு எங்கே இருக்கிறது என்று..?

இதனூடேயே ஸ்டாலின் இந்த பொதுக்குழுவிலேயே தனக்குப் பட்டாபிஷேகம் நடத்தும்படி கேட்டுள்ளாராம். அது மட்டும் நடந்தால் கலகம் நடப்பது உறுதி. மதுரை அண்ணன் அதனாலேயே தனது தென் மண்டல ஆதரவாளர்களை பொதுக்குழுவுக்கு போக வேண்டாம் என்று தடுத்திருக்கிறார். இதனாலேயே கிச்சன் கேபினட் மூலமாக அழகிரியைச் சமாதானம் செய்து வைத்திருக்கிறார்களாம். ஆனாலும், இந்த முறை ஸ்டாலின் ஆதரவாளர்கள் விடமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்..!

எப்படியோ தி.மு.க. நான்காக உடைந்தாலும் எனக்கு பரம சந்தோஷமே..!

 
ஏமாற்றிய ரதி நிர்வேதம்..!

நான் இதைத்தான் எதிர்பார்த்தேன்..! அதுவே நடந்த்து. அந்தக் கால விசிலடிச்சான் குஞ்சுகளால் மறக்க முடியாத திரைப்படம் ரதி நிர்வேதம். பரதனின் அற்புதமான இயக்கத்தில் ஜெயபாரதியின் உச்சுக் கொட்ட வைத்த இளமையினால் தமிழகம் முழுவதுமே லட்சம் முறை திரையிடப்பட்ட பெருமையைப் பெற்றிருந்த்து இத்திரைப்படம்.


இதன் மறு ஆக்கம் என்றபோதே எனக்குள் உறுதியாகிவிட்டது, இது தேறாது என்று..! அதுபோலவேதான் ஆனது.. ஸ்வேதாமேன்னை எவ்வளவுதான் கேமிராவின் அத்தனை ஆங்கிள்களில் காட்டினாலும் இயக்கத்தில் படு சுமாராக இருந்து தொலைக்க.. படத்தினை என்னைப் போன்ற ரதியின் தீவிர ரசிகர்களால் ரசிக்க முடியவில்லை. ஆனால் மலையாளத்தில் படம் ஹிட் என்கிறார்கள்..!

ஸ்வேதாவுக்காக ஓடியிருக்கும் என்று நினைக்கிறேன். நான் ஆவலோடு எதிர்பார்த்த அந்த்த் தையல் மிஷின் சீனையும், பெட்ரூம் காட்சியும் படு மொக்கையாக எடுத்துத் தொலைத்து முடித்திருக்கிறார்கள். இயக்குநரால் முடிந்த்து இவ்வளவுதான் போலிருக்கிறது.

என்னுடன் படம் பார்த்த இன்னொரு திரையுலக நண்பர் என்னால் ரசிக்க முடியாமல் போனதற்காக வித்தியாசமான காரணத்தைச் சொன்னார். அன்றையக் காலக்கட்டத்தில் இது போன்ற படங்கள் மட்டுமே நமக்கு கிடைத்த ஒரே வாய்ப்பு. அதனால் ஜெயபாரதியின் அரைகுறையும், பரதனின் தூண்டிவிடும் இயக்கத்தையும் ந்ம்மால் ரசிக்க முடிந்த்து. ஆனால் இப்போதே  ஆயுசு முடிஞ்சாலும் கவலையில்லைன்ற லெவலுக்கு இது போன்ற படங்களை சலிக்கச் சலிக்கப் பார்த்து முடிச்சாச்சு. அதுனால இந்த மாதிரி படத்துல இப்போ கிக் இருக்காது.. உன்னால ரசிக்க முடியாத்தற்கு இதுவும் ஒரு காரணம்..” என்றார்.

யோசித்துப் பார்த்தேன். அவர் சொன்னதிலும் ஒரு உண்மை இருக்கத்தான் செய்கிறது..! ஆனாலும் பரதனின் இயக்கத்தில் இருந்த ஒரு உயர்வு இதில் இல்லை என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்..!

அந்த கோல்டன் பீரியடு முடிந்தது முடிந்ததுதான்..!


பீர் முகமதுவின் வெறியாட்டம்..!

யாருய்யா இந்த பீர் முகமது..? நான் முன்ன பின்ன கேள்விப்பட்டதே இல்லை.. மனுஷன் போன வாரம் என் தளத்தில் வெறியாட்டம் ஆடியிருக்கிறார். 2 மணி நேரத்தில் 448 பதிவுகளில் ஒரே செய்தியை பின்னூட்டமாக போட்டு உலக சாதனை படைத்திருக்கிறார்.

See who owns mygsmbd.com http://whois.domaintasks.com/mygsmbd.com or any other website:
http://whois.domaintasks.com/mygsmbd.com

இதுதான் அவர் இட்டிருந்த பின்னூட்டம்.. எதுக்கு இந்த லொள்ளு..? நல்லவேளை தமிழ்மணம் மலேரியா காய்ச்சலில் படுத்த்தினால் தப்பித்தேன். இல்லாவிடில் அத்தனையும் முகப்பில் வந்து நின்று உங்களது வயித்தெரிச்சலை வாங்கிக் கட்டியிருப்பேன்..! ஏதோ அவராகவே நினைத்து ஓய்ந்து விட்டுவிட்டார் என்று நினைக்கிறேன்.

நல்லாயிருங்க பீர் முகமது..!


ஒரு கதை..!

எந்த நாடுன்னு சொல்ல மாட்டேன். ஊர் சொல்ல மாட்டேன். பெயர் சொல்ல மாட்டேன். ஆனால் மேட்டரை மட்டும் சொல்றேன்..!

மனுஷன் கட்டைல போற வயசுல இருக்காரு.. ஆனா அந்த நாட்டுல வெளியாகுற “அந்த” மாதிரி படங்கள்ல பட்டையக் கிளப்பிக்கிட்டிருக்காரு இந்த மனுஷன்..!

இந்த வயசுலேயும் இப்படியா? எப்படிய்யா..? என்று கேட்டால் கொஞ்சமும் தயங்காமல் சிரிக்கிறார்.

“இப்ப வர்ற ‘அந்த’ மாதிரி படத்துல எல்லாம் கிஸ்ஸிங் சீன் டோட்டலா சரியில்லை.. ரொம்ப அரதப் பழசானதா இருக்கு. இது பத்தி ரொம்ப நாளா நான் யோசிச்சிக்கிட்டேயிருந்தேன். வீடியோ தயாரிக்கிற கம்பெனிக்காரங்களுக்கு லெட்டர் எழுதிப் போட்டேன். ஒண்ணும் பதிலைக் காணோம். சரி. நேராவே போய் கேட்க்லாம்னு நினைச்சு போய்க் கேட்டேன். நான் பேசினவிதத்துல அசந்துட்டாங்க.. கடைசீல ‘ஏன் நீங்களே இதுல நடிக்க்க் கூடாது?’ன்னு கேட்டாங்க. எனக்கும் அப்போத்தான் அந்த யோசனையே வந்துச்சு. சரி. ச்சும்மாதான இருக்கோம்.. நடிச்சிருவோம்னு சொல்லிட்டு இறங்கிட்டேன்..

“அந்த’ நேரத்துல ஏதாவது மாத்திரை போட்டுக்குவீங்களா..?” என்று கேட்டதற்கு, “அரை மாத்திரைதான் போட்டுக்குவேன். அதுலேயும் ஒரு நாள் விட்டு ஒரு நாள்தான் ஷூட்டிங் வைச்சுக்குவேன். இல்லேன்னா எனக்குச் சிக்கலாயிரும்..” என்கிறார். “இந்த மாதிரி படங்கள்ல நடிக்கிறது உங்க பேமிலிக்குத் தெரிஞ்சா என்னாகும்..?” என்று கேட்டதற்கு சவுடாலாக அடித்து ஆடுகிறார்..

“எனக்கு மனைவியும், மகளும் மட்டும்தான் இருக்காங்க. நல்லவேளை மகன் இல்லை. தப்பிச்சேன். அவங்களுக்கு நான் இப்படி நடிக்கிறது இப்போவரைக்கும் தெரியாது. ஒருவேளை நான் செத்த பின்னாடி தெரிஞ்சாலும் தெரியலாம். அதைப் பத்தி எனக்குக் கவலையில்லை. நான் இப்ப இருக்குற வாழ்க்கையைப் பத்திதான் எப்பவும் கவலைப்படுவேன்..” என்கிறார்.

“எந்த மாதிரி கதைகளில் அதிகம் நடிக்க விருப்பம்..?” என்றதற்கு ஷகீலா டைப் பதிலையே திருப்பித் தருகிறார்.(உலகம் முழுக்க ஒண்ணுதான் போலிருக்கு) “என்ன.. என் மருமகளோட, பக்கத்து வீட்டுப் பொண்ணோட, மகளோட பிரெண்ட்டோட, ஒய்போட பிரெண்ட்டோடன்னு எல்லாம் ரெடிமேட் கதைகளாத்தான் இருக்கும்.. ஆனாலும் எனக்கு சின்னப் பொண்ணுக்கூட நடிக்கத்தான் ரொம்ப விருப்பம். அதுனால இப்போ இது மாதிரி கதைகளில் மட்டும்தான் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன்..” என்கிறார் இந்த கிழம்..!

இவருக்கு இருக்கின்ற ஒரே கவலை.. படத்தில் நடிப்பதற்கு இவருக்குக் கொடுக்கப்படும் ஊதியம் குறைவாக இருக்கிறதாம். ஒரு படத்துக்கு 500 டாலர்தானாம். அதே நேரத்தில் உடன் நடிக்கும் பெண்களுக்கு 2000 டாலர் கிடைக்கிறதாம்..! ஏன் இந்த ஓரவஞ்சனை என்கிறார்..

இவரால் அந்த நாட்டின் ‘அந்த’ மாதிரி படங்களின் தயாரிப்புத் துறையில் ஒரு புரட்சியே வெடித்துள்ளதாகச் சொல்கிறார், இவரது படங்களைத் தயாரிக்கும் நிறுவனத்தின் தலைவர்..!

நல்லா சொல்லுறாய்ங்கய்யா டீடெயிலு..!


வெளியாகாத திரைப்படங்கள்

2011 ஜனவரி முதல் மே மாதம் வரையிலுமாக தணிக்கை செய்யப்பட்டு தயாராக இருக்கும் படங்களின் லிஸ்ட் இது :

அன்புள்ள மான்விழியே
கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம்
மதுவும், மைதிலியும்
முதல்வர் மகாத்மா
மாமல்லன்
சொன்னதை செய்வேன்
சொந்தமடி பந்தமடி
அன்புள்ள துரோகி
உயிரின் உயிரே
காதலன் காதலி
திகட்டாத காதல்
சக்தி பிறக்குது
ஆயிரம் விளக்கு
யுகம்
பேசு
முன்னவர்
மகாராஜா
கண்டவுடன்
சகாக்கள்
சிவசிவா
குருகுலம்
கருத்தக் கண்ணன்
ஆண்டாள் அழகர்
பாலு தம்பி மனசில்

சென்ற 2010-ம் வருடம் தணிக்கை செய்யப்பட்டு வெளிவராத 41 திரைப்படங்களையும் சேர்த்து கடந்த 2011 மே வரையிலான காலக்கட்டத்தில் 71 படங்கள் திரைக்கு வர காத்திருக்கின்றன..!

ஆனால் சென்ற வருடக் கணக்கைவிட இந்த வருடக் கணக்கு திரைத்துறையின் செழிப்பைத்தான் காட்டுகிறது. கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் 61 நேரடி படங்களும், 12 டப்பிங் படங்களும் வெளியாகியிருந்தன. ஆனால் இந்த வருடம் 68 நேரடி படங்களும், 21 டப்பிங் படங்களும் வெளியாகி எண்ணிக்கை கூடுதலாயிருக்கிறது.

மேற்சொன்ன லிஸ்ட்டில் உள்ள படங்களில் 99 சதவிகிதப் படங்கள் லோ பட்ஜெட் படங்கள்தான். ‘பேசு’ படத்தைத் தவிர.. ‘பேசு’ படம் மட்டும் 4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுத்திருக்கிறார்கள். எஸ்.ராமகிருஷ்ணன் வசனம் எழுதியிருக்கிறார். புதுமுக நடிகர், நடிகையர் என்பதாலும், தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கத்தில் கட்டப்  பஞ்சாயத்தில் சிக்கியிருப்பதாலும் படம் வெளிவரத் தாமதமாகியுள்ளது. இயக்குநருக்கு முதல் படம் என்றாலும், படத்தில் சம்பந்தப்பட்ட அனைவருமே ஆளாளுக்கு கொஞ்சம் கை வைத்து படத்தின் செலவை இரட்டிப்பாக்கிவிட்டார்களாம்.. ம்.. இவர்களை மாதிரி நபர்களால்தான் நல்ல தயாரிப்பாளர்களால் தொடர்ந்து இங்கு இருக்க முடியவில்லை..! கஷ்டகாலம்..!


கண்ணுக்குள்ளேயே இருக்கும் அமுதினி..!

2 வாரங்களுக்கு முன்பாக ஒரு பகல் பொழுதில் கவிஞர் சித்தார்த் திடீரென்று போனில் என்னை அழைத்தார். தானும், காயத்ரியும் சென்னையில் இருப்பதாகவும் மறுநாள் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தால் சந்திக்கலாமா என்றும் கேட்டார். மறுநாள் அனைத்து வேலைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு ஓடினேன்.

அனைத்துப் பதிவர்களுமே பழைய புகைப்படங்களைத்தான் வெளியிட்டு ஏமாற்றி வருகிறார்கள் போலும்..! நமது சித்தார்த்தும் அப்படித்தான் இருந்தார். ஆனால் என்னைவிட கொஞ்சம் கூடுதலான தொப்பையுடன், குண்டாகவும் இருந்தார்.

கவிதாயினி காயத்ரியும், அசத்தல் அமுதினியும் உடன் இருந்தார்கள். காயத்ரி வலையுலகில் எனக்கு ரொம்பவே சீனியர். அப்போதே சந்திக்க வேண்டும் என்று இருந்தேன். அது இப்போது 4 வருடங்கள் கழித்து முடிந்திருக்கிறது. இவர்களது காதல் திருமணம் என்ற விஷயமே எனக்கு சென்ற வருடம்தான் கூகிள் பஸ் மூலமாகத் தெரிந்தது. பதிவுலகில் இன்னமும் நான் தெரிந்து கொள்ள வேண்டியது நிறையவே  இருக்கு போலிருக்கு..!

குட்டிப் பொண்ணு அமுதினி பார்த்தவுடன் என்னுடன் ஒட்டிக் கொண்டாள்.. இன்னமும் கண்ணுக்குள்ளேயே இருக்கிறாள் அமுதினி..! அதனால்தான் நம்ம குசும்பன் இப்பவே வெத்தலை, பாக்கு கொடுத்து பிக்ஸ் பண்ணி வைச்சிருக்கான் போலிருக்கு..!

அண்ணா நகர் சரவண பவனுக்கு காரில் அழைத்துச் சென்று விருந்து கொடுத்தார் சித்தார்த். அமுதினியைப் பார்த்ததிலேயே அதிகமாக பசிக்காமல் போய்விட்டது..! கொஞ்சமாக சாப்பிட்டோம். வலையுலகைப் பற்றி அதிகம் பேசிக் கொள்ளாமல் பொதுவாகவே பேசிக் கொண்டோம்..! கவனம் முழுக்க அமுதினியிடமே இருந்த்தால் வேறு எதுவும் பெரிய விஷயமாகப் பேசத் தோன்றவில்லை. இன்னொரு முறை சித்தார்த்திடம் ரவுண்டு கட்டி எளக்கியம் பற்றி பேச வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்..!

அருமையான விருந்தளித்த காயத்ரிக்கும், சித்தார்த்துக்கும் எனது நன்றி..! கவிதாயினி.. அமுதினியைக் கேட்டதாகச் சொல்லவும்..!


படித்ததில் ரசித்தது..!

எழுத்தாளர் பாலகுமாரன் திருவண்ணாமலை அரசுக் கல்லூரி ஆண்டு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தார். நட்பின் அடிப்படையில் அவரைப் பார்க்க கல்லூரிக்குப் போயிருந்தோம். விழா முடிந்து கல்லூரி வளாகத்தைக் கடக்கும்வரை மெளனம் காத்தோம். ஆனால் பாய்ச்சலுக்கான பதுங்கல் அது என நான் யூகித்தேன்.

பாலகுமாரன் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு, “சொல்லு பவா.. ஜெயமோகன்ற அந்த நாயி யாரு..?” என்றார் உரத்தக் குரலில். அக்குரலின் வன்மம் எங்களைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த மூணு, நான்கு பேரின் நடையை நிறுத்தியது. நானும் கொஞ்சம் நிதானித்தேன்.

பாலகுமாரனே தொடர்ந்தார். “அவன் என்ன பெரிய மயிறு நாவல் எழுதியிருக்கான். ரப்பர்ன்னா அதுல இருந்து பால் வடியணும்..” என்று வாசிப்பின்றி தான் கேள்விப்பட்டதை வைத்தே வீடு கட்டிக் கொண்டிருந்தார். “நான் ஸ்டார்.. தமிழ் வாரப் பத்திரிகைகளுக்கு எழுத நேரமில்லாமல் தவிக்கிறேன். பத்து கை வேணும். பத்து வருஷத்துக்கு என்னை விட்டா யாரு இருக்கா..? அரசியல், சினிமா, இலக்கியம் இவற்றின் தொடர் அழைப்புகளுக்கு ஈடு கொடுக்க முடியாம இருக்கும் எனக்கு, எந்தவிதத்தில் அந்த நாயி போட்டி..?”

“ஸார்..” இது நான்..

“கசடதபற காலத்தில் நான் பேசிய கெட்ட  வார்த்தைகளை இவன் என்னை மறுபடியும் பேச வைச்சுட்டான். என்னை மகான்கிட்ட ‘முனிசிபாலிட்டி குப்பை’ன்னு சொன்னானாமே..?”

ரமனாஸ்ரமத்திற்கு முன் இருந்த அவர் நண்பர் எல்.ஐ.சி. ஜெயராமன் வீடுவரை தொடர்ந்த அந்த வசவுகள், அவர் வீட்டுத் தோட்டத்துக் கிணற்றுத் திட்டில் உட்கார்ந்தபோதும் நீடித்தது.

என் பதில் எல்லாமும் தயவு தாட்சண்யமின்றி நிராகரிக்கப்பட்டது. நான் பேச்சற்றுப் போயிருந்தேன்.

பாலகுமாரனுடன் சொல்லிக் கொள்ள எதுவுமில்லையென முடிவு செய்து அங்கிருந்து வெளியேறினேன். மன அலைக்கழிப்புகளிடையே நடந்து கொண்டேயிருந்தேன். அதுதான் நான் பாலகுமாரனைச் சந்தித்த கடைசி தினமென்று நினைக்கிறேன். பாலகுமாரன் நெருக்கம் பொருட்டு சுரத்குமார் மீதும் லேசான வெறுப்பேற்பட்டது. இவர்களுடனான விலகல் எனக்கு அவசியம் என முடிவு செய்தேன். அதன் பிறகு நீண்ட நாட்கள் எங்கள் சந்திப்பு சாத்தியமற்றுப் போயிருந்தது.

(19 டி.எம்.சாரோனிலிருந்து - பவா செல்லத்துரை)


பார்த்த்தில் பிடித்தது

இதுவரையில் நடந்த ஊழல்களின் தொகுப்பு..!


சமச்சீர் கல்வியின் துயரம்..!

19-07-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

முன்னாள் முதல்வர் கருணாநிதி 5 ஆண்டுகளாக அரும்பாடுபட்டு சம்பாதித்த கெட்ட பெயரை, ஆட்சிக்கு வந்த ஒரு மாத்த்திலேயே பெற்றுவிட்டார் புரட்சித் தலைவி.


சமச்சீர் கல்வி முறை தமிழகத்துக்குத் தேவையா? இல்லையா? என்கிற காலக்கட்டத்தையெல்லாம் தாண்டி இப்போது தினமும் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்கு படிப்புச் சொல்லித் தருவீர்களா? மாட்டீர்களா? என்று கேள்வி கேட்கும் நிலைமைக்குத் தள்ளிவிட்டார் ஜெயல்லிதா.

சமச்சீர் கல்வி புத்தகங்களில் இருக்கும் கருணாநிதியின் கவிதைகள்தான் ஜெயல்லிதாவுக்கு உறுத்தல் என்றால் அந்த ஒன்றை மட்டும் நீக்கிவிட்டு மீதமுள்ளவற்றை அப்போதே அனுமதித்திருக்கலாம்..!

கருணாநிதி கொண்டு வந்த திட்டம் என்ற நோக்கிலேயே இந்தச் சமச்சீர் கல்வித் திட்டத்தை எதிர்கொண்டது தவறானது. ஒரு ஆட்சி போய் மறு ஆட்சி வந்தால் ஊழலை தோண்டலாம்.. துருவலாம்.. அதனால் பாதிப்பு இல்லை.. ஆனால் மக்களின் அடிப்படையான ஒரு விஷயத்தில்.. அதுவும் மாணவர்களின் படிப்பு சம்பந்தமான விஷயத்தில் இந்த அளவுக்கு ஜெயல்லிதா விளையாடியது கொடூரமானது..

பள்ளிக் குழந்தைகள் படிக்காமல் இருப்பதற்கான சூழல்கள் தினம்தோறும் அதிகரித்துக் கொண்டே வரும் இந்தக் காலக்கட்டத்தில் அவர்களை ஒரு மாதம் முழுவதும் அமைதி காத்திருக்க வைத்து, பின்பு அடுத்த 8 மாதங்களில் அனைத்துப் பாடங்களையும் படிக்க வைப்பது எவ்வளவு கடினம் என்பது ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தெரியும்..

இந்தப் பதைபதைப்பில் தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களாக இதுதான் ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது. இது எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஏற்கெனவே 250 கோடிக்கு அச்சிடப்பட்டு தயார் நிலையில் இருக்கும் சமச்சீர் கல்வி புத்தகங்களை ஓரமாகத் தூக்கியெறிந்துவிட்டு, பழைய புத்தகங்களை அச்சடிக்க அவசரம், அவசரமாக 100 கோடி ரூபாய் நிதியையும் ஒதுக்கியிருப்பது எவன் என்னைக் கேட்பான்..? யாருக்கு அந்த தகுதி இருக்கு? என்கிற ஆணவம்தான் காரணமேயன்றி, வேறு எதுவுமே இல்லை..

ஜெயல்லிதா முன்பெல்லாம் தனது பேச்சில் ஆணவத்தையும், கர்வத்தையும் காட்டுவார். இப்போது மீடியாக்களின் முன்பு அமைதியாகி, சாந்த சொரூபியாகி, உள்புறம் மட்டும் தனது வேகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

அந்த வேகத்தை, கோபத்தை மாநிலம் முழுவதும் நில மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது செயல்படுத்தினால் ஊர், ஊருக்கு அவருக்குக் கோவில் கட்ட அப்பாவி தமிழர்கள் ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள். அதையெல்லாம் விட்டுவிட்டு அத்தனை பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் பரிதவிக்கும் செயலாக இப்படியொரு முட்டாள்தனத்தை செய்யும் இவரை திருத்துவது எப்படி..?

பத்தடி தூரம் தள்ளி நின்று வாய் பொத்தி, நேர் பார்வையில்லாமல் அடிமைத்தனத்தில் வாழும் அமைச்சர்களைப் பார்க்கின்றபோது நாம் யாரிடம் போய் இதைச் சொல்லி அழுவது என்றுதான் தெரியவில்லை..

தனிப்பட்ட ஈகோக்களை அரசு விஷயத்திலும், ஆட்சி விவகாரத்திலும் பயன்படுத்த்துதல் நல்ல அரசனுக்கு அழகல்ல.. உயர்நீதிமன்றம் கேள்வி மேல் கேள்வி கேட்டு இடைக்காலத் தடை கொடுத்தபோதே மாணவர்களின் நிலைமை கருதி பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டத்தை வாபஸ் பெற்று பழையபடி சமச்சீர் கல்வியை அமல்படுத்தியிருந்தால் மாநிலமும், கோர்ட் வட்டாரமும் இன்றைக்கு ஜெயல்லிதாவை புகழ்ந்திருக்கும்..

‘மாணவர்கள் நாட்டின் வளமான எதிர்காலம். அரசு அதை கருத்தில் கொண்டு உத்தரவை உடனே அமல்படுத்தும் என்று நம்புகிறோம்’ என்று தீர்ப்பின் இறுதியில் வேண்டுகோள் வைத்துள்ளது உயர்நீதிமன்றம்.

இதன் தீர்ப்பில் தமிழக அரசு நியமித்த கமிட்டியின் சிபாரிசுகளைவிட, அக்கமிட்டியையே நிராகரித்த நீதிபதிகளின் உத்தரவை நான் மிகவும் உயர்வாக நினைக்கிறேன்..!

அந்தக் கமிட்டியில் இருந்தவர்களுக்கும், சாதாரண குடிமக்களுக்கும் என்ன தொடர்பு..? கல்வியை விற்பனை செய்பவர்களை, அதுவும் தனக்குச் சாதகமாக கருத்துச் சொல்வார்கள் என்று உடன்படிக்கை செய்தேதான் இந்தக் கமிட்டியை நியமித்த்து வெட்டவெளிச்சம்..!

உச்சநீதிமன்றத்தில் நாளை அல்லது நாளை மறுநாள் வழக்கு விசாரிக்கப்படும். தீர்ப்பு வழங்க பத்து நாட்களாகும். இத்தனை நாட்கள் பொறுத்த மாணவர்கள் இன்னுமொரு பத்து நாட்கள் பொறுக்க மாட்டார்களா என்று ஆத்தா நினைக்கிறார். ஒருவேளை அங்கேயும் எதிர்ப்பாகவே தீர்ப்பு வந்துவிட்டால் அகிலம் போற்றும் அங்கயற்கண்ணி என்ன செய்வாரோ..? கருப்புப் போர்வையை போர்த்திக் கொண்டு தினமும் கோட்டைக்கு வந்து செல்வாரா? அல்லது மீண்டும் ஏதாவது ரகளைதான் செய்வாரா?

யாருக்குத் தெரியும்..? ஆத்தாவின் குணம் எப்போதும் ஒன்றுபோல் இருந்த்தில்லை. அமாவாசைக்கும், பெளர்ணமிக்கும் ஆடி அடங்கும் அலைகளைப் போல இவரது செயல்களும், பேச்சுக்களும் அலைபாய்ந்து கொண்டிருக்கின்றன..

சென்னை உயர்நீதிமன்றம் தந்துள்ள தீர்ப்பில் ஒரு அம்சம் மட்டுமே குறையாக உள்ளது. மேலும் சேர்க்க வேண்டிய பாடங்கள் ஏதேனும் இருந்தால் அதையும் 3 மாதங்களுக்குள் சேர்த்துக் கொள்ளலாம் என்று அனுமதியளித்துள்ளது.

இந்த ஒரு அனுமதியை வைத்து மீண்டும் 3 மாதங்கள் கழித்து பத்து பாடங்களை சேர்த்துக் கொடுத்தால் என்னாகும்..? படிப்புச் சொல்லித் தர வேண்டியது ஆசிரியர்களின் கடமை என்றாலும், அதற்கு நேரம், கால அவகாசம் தர வேண்டாமா..? நீதிமன்றம் இந்த வரிகளைக் குறிப்பிட்டிருக்கவே தேவையில்லை..!

நாம்தான்.. நன்கு தெரிந்துதான், கண்ணைத் திறந்து கொண்டு பார்த்தநிலையில்தான் ஆத்தாவை கோட்டையில் கொலுவேற்றியிருக்கிறோம். என்ன நடந்தாலும், எது நடந்தாலும் வேறு வழியில்லாமல் இந்தக் கொடுமையையும் இன்னமும் 5 ஆண்டுகளுக்கு நாம் அனுபவித்துதான் ஆக வேண்டும்..!

நேற்றைய தினம் கூகிள் பஸ்ஸிலும், பேஸ்புக்கிலும் இது சம்பந்தமாக நான் எழுதிய ஒரு நான்கு வரி எதிர்ப்பை இங்கே கடைசியாகப் பதிவு செய்ய வேண்டியுள்ளது.

"முருகா.. இந்தம்மாவை சீக்கிரமா பெங்களூர் ஜெயிலுக்கு டிரான்ஸ்பர் செய்யக் கூடாதா..? கொடுமை தாங்கலை.. ஏன் இந்தம்மா கல்யாணம் செஞ்சுக்கிட்டு, புள்ளைக் குட்டிய பெத்துக்கிட்டு குடும்பம் நடத்தாம போச்சு..? மக்களோட பிரச்சினையே தெரிஞ்சுக்காம இருக்கே..? வெளங்காதுய்யா.. இது வெளங்கவே வெளங்காது..!"

தேவைதானா கண் துடைப்பு கமிஷன்கள்? - 10 வருட அலசல்

18-07-2011


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


'பிரச்னை என்றால் கல்லைப் போடு; இல்லைன்னா... கமிஷனைப் போடு’ என்று நையாண்டி செய்யப்படும் சூழலில், ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா, 'புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள்’ என முதல் விசாரணை கமிஷன் போட்டு​விட்டார். 'இது போன்ற கமிஷன்களால் என்ன நடக்கிறது?’ என்ற நினைவுச் சக்கரத்தை ஓட்டினால் ஏமாற்றம்தான் மிச்சம்.


தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் போடப்பட்ட விசாரணை கமிஷன்களின் கதியைப் பாருங்கள்!


அ.தி.மு.க. விசாரணை கமிஷன்கள்!


2001-2006 அ.தி.மு.க. ஆட்சியில் 10-க்கும் மேற்பட்ட கமிஷன்கள் அமைக்கப்பட்டன.


மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல் என்று சொல்லி கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்தது அ.தி.மு.க. அரசு. இதற்காக நீதிபதி ராமன் கமிஷனை அமைத்தார் முதல்வர் ஜெயலலிதா. உயர் காக்கி அதிகாரிகள் கமிஷன் முன்பு ஆஜராகி வாக்குமூலம் எல்லாம் கொடுத்தனர். இந்த கமிஷன், விசாரணையை நடத்திக் கொண்டிருந்தபோதே, ஆட்சி மாற்றம் நடந்துவிட... புதிதாக ஆட்சிக்கு வந்த தி.மு.க., உடனடியாக ராமன் கமிஷனைக் கலைத்துவிட்டது.


அடுத்து, வெங்கடேசப் பண்ணையார் என்​கவுன்ட்டர், நாடார் சமூகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்த... அது பற்றி விசாரிக்க அதே நீதிபதி ராமன் விசாரணை கமிஷனை அமைத்தனர். அந்த கமிஷனுக்கு எதிராக தடை கேட்டு நீதிமன்றத்துக்குப் போனார்கள் சிலர். அதன் பிறகு, அந்த கமிஷனின் அறிக்கையும் வெளியாகவில்லை.


இது இப்படி என்றால்... விசாரணை கமிஷன் முடிந்து அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட பிறகும்கூட, அது வெளியிடப்படாத கொடுமைகளும் உண்டு.


தி.மு.க. ஆட்சியின்போது பெரம்பூரில் மேம்பாலம் கட்டும் பணி இடையிலேயே நின்று போனது. அடுத்து ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க., 'பெரம்பூர் பாலம் கட்டுவதில் ஊழல் நடந்திருக்கிறது’ என்று ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகம் தலைமையில் 2001-ம் ஆண்டு கமிஷன் போட்டது. விசாரணை முடித்து அவரும் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்துவிட்டார். 2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், பெரம்பூர் பாலம் வந்ததே தவிர... கமிஷன் அறிக்கை ரிலீஸ் ஆகவில்லை!


தி.மு.க. விசாரணை கமிஷன்கள்!


கருணாநிதியின் ஐந்து ஆண்டு ஆட்சியிலும் சில விசாரணை கமிஷன்கள் அமைக்கப்​பட்டன. ஜெயலலிதாவுக்கு எதிராக கே.பி.சிவசுப்பிரமணியன் தலைமையில் சிறுதாவூர் விசாரணை கமிஷன் அமைத்தது தி.மு.க. 'ஜெயலலிதாவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை!’ என்று சொன்னது அந்த கமிஷன்.


சேலம் ஓமலூர் பாத்திமா பள்ளியில் சுகன்யா என்ற மாணவி மர்மமான முறையில் இறக்க... நீதிபதி சாமிதுரை தலைமையில் கமிஷன் போடப்பட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட... விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. நீதிபதிகளை விமர்​சித்து ஆற்காடு வீராசாமி பேசிய பேச்சுகள் பரபரப்பைக் கிளப்பின. கடைசியில், இந்த கமிஷன் செயல்படவே இல்லை.


சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் அரங்கேறிய கலவரத்தின் ஆணி வேரைக் கண்டு​பிடிக்க, 2008-ல் நீதிபதி சண்முகம் கமிஷனும் அமைக்கப்பட்டது. இருந்தும், சட்டக் கல்லூரியில் இது​போன்ற சம்பவங்கள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது.


புஸ்வாணமான பரிந்துரைகள்!


கும்பகோணம் தீ விபத்து பற்றி விசாரித்த நீதிபதி சம்பத் கமிஷன், தீ விபத்துக்குக் காரணமான 24 பேரை அடையாளம் காட்டியது. இதில் 12 பேர் மட்டும் குற்றவாளிக் கூண்டில் உள்ளனர். மற்றவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. 'பாலர் பள்ளிகளை முறைப்படுத்திக் கண்காணிக்க தனி இயக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாக ஆட்டோ, வேன்களில் மாணவர்களை ஏற்றக் கூடாது’ உட்பட பல பரிந்துரைகள் இன்று வரை நிறைவேறவில்லை.


1999-ம் ஆண்டு நடந்த மத்திய சிறைக் கலவரம் தொடர்பாக அமைக்கப்பட்ட டேவிட் கிறிஸ்டியன் கமிஷன், 'சிறைப் பணியாளர்களிடையே காணப்படும் ஊழலை உறுதியுடன் ஒடுக்கவும், கைதிகளுக்கு மறைமுக ஆதரவளிக்கும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும்’ என்றும் சொன்னது.


சென்னை சட்டக் கல்லூரியில் மோதல் தொடர்​பான நீதிபதி சண்முகம் கமிஷன், 'சட்டக் கல்லூரியை மூன்றாகப் பிரித்து தாம்பரம், திருவள்ளூர் உள்​ளிட்ட இடங்களுக்கு மாற்ற வேண்டும்’ என்று பரிந்துரைத்தது.


சாதி கலவரங்கள் தொடர்பாக நீதிபதி மோகன் கமிஷன், 'சாதித் தலைவர்கள் சிலைகளை அருங்​காட்சிகத்தில் வைக்க வேண்டும்’ என்று அரசுக்கு அறிவுரை கூறியது.


தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 17 பேர் பலியானது தொடர்பாக 1999-ல் அமைக்கப்பட்ட நீதிபதி மோகன் கமிஷன், 'அரசியல் கட்சி ஊர்வலங்களைத் தடை செய்யப் பொருத்தமான சட்டங்களை இயற்ற வேண்டும்’ என்று குறிப்பிட்டது. இந்த விசாரணை கமிஷன்களின் பரிந்துரைகள் எல்லாம் ஏட்டோடு போய்விட்டன.


கரையும் கரன்சிகள்!


நீதிபதி சம்பளம், படிகள், வீட்டு வாடகை, பயணச் செலவுகள், தொலைபேசி, மின் கட்டணங்கள், சில்லறை செலவுகள், கமிஷன் தொடர்பான விளம்பரக் கட்டணங்கள், வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் பராமரிப்பு, அரசு வழக்கறிஞர் கட்டணம், அலுவலகப் பணியாளர்கள் என்று ஒரு விசாரணை கமிஷனுக்கு லட்சக்கணக்கில் பணம் கரையும். அத்தனையும் மக்கள் வரிப் பணம்.


சாம்பிளுக்கு, சில விசாரணை கமிஷன்களுக்கு செய்யப்பட்ட செலவுகள் இங்கே...


1. சிறுதாவூர்  நில விசாரணை கமிஷன் - 1.38 கோடி


2. கும்பகோணம் பள்ளி தீ விபத்து கமிஷன் - 11 லட்சம்


3. எம்.ஜி.ஆர். நகரில் நெரிசல் மரணம் கமிஷன்-   4.50 லட்சம்


4. கடலூர் குள்ளஞ்சாவடி லாக்அப் மரணம் கமிஷன் - சுமார் 40     லட்சம்


5. சட்டக் கல்லூரி மோதல் விசாரணை கமிஷன் - சுமார் 20 லட்சம்


அது சரி, விசாரணைக் கமிஷன் தேவையா இல்லையா என்பதற்கும் ஒரு விசாரணை கமிஷன் போட்டு விடுவார்களோ..?!


- எம்.பரக்கத் அலி
நன்றி : ஜூனியர்விகடன்-20-07-2011இது போன்ற கமிஷன்களை அமைப்பதற்கான காரணமே, பிரச்சினையை ஊறப் போட்டு, ஆறப் போட்டு சமாதி கட்ட நினைப்பதுதான்..!


காவல்துறை விசாரணைக்கு அனுப்பி சம்பந்தப்பட்டவர்கள் தவறு செய்திருப்பின் கைது செய்து சிறைக்கு அனுப்புவதைவிட்டுவிட்டு, இது போன்ற கமிஷன்களை நியமிப்பது ஏன் என்ற கேள்வி பலருக்குள்ளும் எழும்..


போலீஸ் விசாரணை என்றால் எப்போதும் ஆளுபவர்களின் கைப்பாவையாகச் செயல்படும் ஒரு நடவடிக்கை என்பதே மக்கள் மனதில் பதிந்திருக்கிறது. இதனாலேயே ஒரு நீதிபதியின் தலையில் இந்த வழக்கைக் கட்டி, அவர் விசாரித்து ஒரு அறிக்கை கொடுத்து, அந்த அறிக்கையில் இவர்களெல்லாம் குற்றவாளிகள்.. இவர்களெல்லாம் அப்பாவிகள்.. இத்தனை தவறுகள் நடந்துள்ளன.. இப்படியெல்லாம் மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள். என்னென்ன செய்தால் நாளை இது போன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ளலாம் என்பதையெல்லாம்தான் இந்த கமிஷன்கள் தங்களது அறிக்கையில் சொல்ல வேண்டும்..!


எனக்கு நினைவு தெரிந்து ஒரேயொரு கமிஷன் மட்டுமே இதுவரையில் உருப்படியானது என்று நான் நினைக்கிறேன்.


அது 1990-1995-களில் போலீஸ் சித்ரவதையில் சிக்கியவர்களின் கண்ணீர்க் கதைகளை வெளிக்கொணர்ந்த நீதிபதி காலித் கமிஷன்.


அன்றையக் காலக்கட்டத்தில் வெளிவந்த ஜூனியர்விகடன் பத்திரிகையிலும், தராசு மற்றும் புலனாய்வு பத்திரிகைகளில் வாரத்திற்கு ஒரு லாக்கப் சாவுகள் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும். இப்போதாவது நிலைமை பரவாயில்லை என்றுதான் சொல்ல முடிகிறது. அந்த அளவுக்கு கொடூரமானதாக இருந்த அந்தச் சமயத்தில்தான் சென்னை உயர்நீதிமன்றம் இது தொடர்பான ஹேபியஸ் கார்பஸ் வழக்குகளையெல்லாம் படித்து, படித்து வெறுப்பாகி ஓய்வு பெற்ற நீதிபதி காலித் அவர்களின் தலைமையில் ஒரு கமிஷனை நியமித்து நீதிமன்றத்தில் வழக்கு போட்ட அனைத்து புகார்தாரர்களின் மனுவையும் விசாரிக்கச் சொன்னது..


நீதிபதி காலித் கமிஷன் அளித்த அறிக்கையைக்கூட பல பத்திரிகைகள் வெளியிட்டிருந்தன. பலவித வழக்குகளில் இருந்த உண்மைச் செய்திகள் கண்ணில் கண்ணீர் வரவழைக்கும்விதமாக உருக்கமாக சொல்லப்பட்டிருந்தது. அந்த கமிஷன் அறிக்கையை அதன் பின்பு என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை..!


ஆனால் ஒரு விழிப்புணர்வு மக்களிடையேயும் தொண்டு நிறுவனங்களிடத்திலும், அரசியல் இல்லாத இயக்கத்தினரிடமும் ஏற்பட்டது. இதற்குப் பின்னர் ஹேபியஸ் கார்பஸ் வழக்கு போடுவது முன்னைவிட அதிகமாகி இப்போது லாக்கப் சாவுகள் மிக, மிக குறைந்துள்ளன என்பது ஒத்துக் கொள்ள வேண்டிய விஷயம்.


தாமிரபரணி ஆற்றின் கரையோரம் காவல்துறை நடத்திய தடியடியினால் 17 பேர் ஆற்றில் குதித்து மரணமடைந்த சம்பவத்தை விசாரித்த நீதிபதி மோகன் கமிஷன் அப்பட்டமாக ஒரு பொய்யைச் சொல்லியிருந்தது..


அந்தச் சம்பவத்திற்கு காவல்துறை எந்தவிதத்திலும் காரணமில்லை. அதற்குக் காரணம் ஊர்வலத்தை ஏற்பாடு செய்தவர்கள் என்றது. இது அப்பட்டமான ஒரு சார்பு தீர்ப்பு. ஆனால் இப்படித்தான் தீர்ப்பு வரும் என்று நீதிபதி மோகனை கமிஷன் தலைவராக நியமித்தபோதே பலரும் ஊகித்து கருத்துச் சொல்லியிருந்தனர். அதேபோலத்தான் நடந்தது.


தங்களுக்கு சாதகமான நீதிபதிகளைத் தேடிப் பிடிப்பது. அவர்கள் தலையில் கமிஷனைக் கட்டுவது. யார் குற்றம் சொன்னாலும், அதான் கமிஷன் போட்டாச்சுல்ல.. அறிக்கை வரட்டும்.. பார்ப்போம்.. என்று பிரச்சினையை தள்ளிப் போடுவது. அதற்குள் இதைவிட பெரிய பிரச்சினை வந்துவிடும். உடனேயே மக்கள் மனம் அதை நாடி ஓடியவுடன், வழக்கம்போல இந்த கமிஷனுக்கு மங்களம் பாடிவிடுவார்கள்..!


இப்படித்தான் ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கும் கொஞ்சம் பணம் சம்பாதித்துக் கொடுப்பதற்காக இது போன்ற கமிஷன்கள் நிறையவே உபயோகப்படுகின்றன..! ஆனால் நமக்குத்தான் வழக்கம்போல எதுக்கும் பிரயோசனமில்லை..!

தயாநிதியை அடுத்து உருளும் தலைகள்! - டெல்லி ரகசியங்கள்

15-07-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மாறன் குடும்பத்துக்கும் மத்திய அமைச்சர் பதவிக்கும் கொஞ்சமும் ஒட்டுதல் இல்லை போலும்!

முரசொலி மாறன் மூன்று முறை மத்திய அமைச்சராக இருந்த போதும், பதவிக் காலமான ஐந்து ஆண்டுகளில் ஒருமுறைகூட முழுமையாக நீடிக்கவில்லை. பிரதமராக இருந்த வி.பி.சிங் மற்றும் குஜ்ரால் ஆட்சிகள் கவிழ்ந்ததால், பதவியை இழக்க வேண்டி இருந்தது முரசொலி மாறனுக்கு. வாஜ்பாய் காலகட்டத்தில், உடல் நிலை பாதிக்கப்பட்டதால், மாறனால் தொடர்ந்து பதவியில் நீடிக்க முடியவில்லை.

அதேபோலத்தான் தயாநிதி மாறனும். கடந்த ஆட்சியின்போது 'தினகரன்’ இதழில் வெளியான கருத்துக் கணிப்புக் கோபத்தால், தயாநிதி ராஜினாமா செய்ய வேண்டிய நெருக்கடி. இப்போது உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள அறிக்கை காரணமாக, இரண்டாவது முறையாகவும் ராஜினாமா செய்துள்ளார்!


ஆ.ராசாவும் கனிமொழியும் கைதானபோது, தயாநிதி மாறன் ஆதரவாளர்கள் வருத்தப்படவில்லை. அதேபோல், இப்போது தயாநிதி குறித்து 'தெஹல்கா’ செய்திக் கட்டுரை வெளியிட்டபோது, அந்த இதழை பாட்டியாலா நீதிமன்றத்தில் வைத்து கனிமொழியும் ஆ.ராசாவும் படித்து மகிழ்ந்த காட்சிகள், டெல்லி மீடியாக்களின் கண்களில் இருந்து தப்பவில்லை. இவை, தி.மு.க. வரலாற்றின் மிகச் சோகமான இறங்குமுகத்தின் சாட்சியங்கள்!

தயாநிதி பதவி விலகல் குறித்து கருணாநிதியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அவராலும் தயாநிதிக்கு வக்காலத்து வாங்க முடியவில்லை. ''உலகத்தில் குறிப்பாக, இந்தியாவில் மீடியாக்களின் ஆட்சி நடக்கிறது. அவர்கள் நினைத்தால் யாரையும் இழிவுபடுத்திவிட முடியும். அதற்கு தயாநிதியும் விதிவிலக்கு அல்ல'' என்று சொன்னார். ''பத்திரிகையாளர்கள் பூதாகாரமாகச் சொன்னதை சி.பி.ஐ. நம்பியது. அதை உறுதிப்படுத்திக் கொள்ள வழக்குப் போட்டுள்ளது'' என்று ஏற்கெனவே சொன்னவர்தான் கருணாநிதி. பத்திரிகைகள் சொன்ன பொய்யை கருணாநிதி ஏன் நம்பினார்? அப்பாவி ஆ.ராசாவை ஏன் பதவி விலகச் சொன்னார்? அதாவது, தி.மு.க. தலைவர் இன்னமும் தன்னுடைய சகாக்களின் தவறை உணரவோ, ஒப்புக் கொள்ளவோ, முன் வரவில்லை!

தயாநிதி மாறனின் பதவி விலகல் யாரும் எதிர்பாராத திடுக் சமாசாரம் அல்ல. என்றைக்கு ராசா மீது வழக்குப் பதிவு ஆனதோ... அன்றே இதுவும் தீர்மானிக்கப்பட்டது. ''ஆ.ராசா பதவி விலகியே ஆக வேண்டும்'' என்று பாரதிய ஜனதா கட்சி எம்.பி-க்கள் குரல் கொடுத்தபோது, ''பாரதிய ஜனதா ஆட்சிக் காலத்தில் இருந்தே இப்படித்தான் நடக்கிறது. அந்த சமாசாரங்களையும் விசாரிக்க வேண்டும்'' என்று காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள், தானே வலியப் போய் விவகாரத்தில் மாட்டிக்கொண்டன.

பாரதிய ஜனதா ஆட்சிக் காலத்தில் பிரமோத் மகாஜன் தொலைத் தொடர்புத் துறைக்கு அமைச்சராக இருந்தார். அடுத்து, அருண்ஷோரி வந்தார். வாஜ்பாய் ஆட்சியில் மூன்றாவதாக இந்தத் துறையைக் கைப்பற்றியவர் தயாநிதி மாறன். சி.பி.ஐ. தன்னுடைய அறிக்கையில் 'மூன்றாவது அமைச்சர்’ என்று சொல்வது, தயாநிதி மாறனைத்தான். அவரது பெயரை இந்த அறிக்கையில் நேரடியாகச் சொல்லாமல், இந்த கோட் வேர்டு பயன்படுத்தப்பட்டு உள்ளது.

தயாநிதி மாறன் குறித்த சி.பி.ஐ-யின் குற்றச்சாட்டு புரிந்துகொள்ள கஷ்டமான சுற்றி வளைப்புப் புகார் அல்ல. தமிழகத் தொழில் அதிபர்களில் ஒருவரான சிவசங்கரன், தன்னுடைய ஏர்செல் நிறுவனத்தை விற்பனை செய்தது தொடர்பான ஒரு புகாரை சி.பி.ஐ.யிடம் கொடுக்கிறார்.

''என்னுடைய நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்காக தொலைத் தொடர்புத் துறையிடம் விண்ணப்பம் கொடுத்தேன். அவர்கள் லைசென்ஸ் தர மறுத்தார்கள். தரக் கூடாது என்பதற்காகவே தேவை இல்லாத கண்டிஷன்களைப் போட்டார்கள். அதன் பிறகு, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல்லை விற்க தயாநிதி கட்டாயப்படுத்தினார். என்னை மிரட்டினார். அதன் பிறகு, குறைந்த விலைக்கு நான் அதை விற்றேன். நிறுவனம் கை மாறிய பிறகு, ஏர்செல்லுக்கு தொலைத் தொடர்பு லைசென்ஸ் கிடைத்தது. என்னை மிரட்டியதும், குறைந்த விலைக்கு நிறுவனத்தை விற்கக் கட்டாயப்படுத்தியதும், எனது தொழிலுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தி உள்ளது'' என்று தனது வாக்குமூலத்தில் சிவசங்கரன் சொல்லி இருக்கிறார். இவரது பெயரைச் சொல்லாமல், 'ஜென்டில்மேன்’ என்று கோட் வேர்டைச் சொல்கிறது சி.பி.ஐ. தனது அறிக்கையில்!


தகவல் தொடர்புத் துறையின் மூன்றாவது அமைச்சருக்கும் ஜென்டில்மேனுக்கும் நடக்கும் யுத்தம்தான் இந்த வழக்கு. இதன் தொடர்ச்சியாக ஒரு ரகசியத்தை சி.பி.ஐ-யும் மத்திய அமலாக்கத் துறையும் கொண்டு வருகின்றன. ''இந்த டீலிங் மூலமாக ஆதாயம் பெற்ற மேக்சிஸ் தன்னுடைய துணை நிறுவனமான ஆஸ்ட்ரோ மூலமாக சன் டைரக்ட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.'' என்பதுதான் சி.பி.ஐ. கொண்டு வரப் போகும் குற்றச்சாட்டு.

அதாவது, கலைஞர் டி.வி. மீது என்ன மாதிரியான புகார்கள் கூறப்பட்டனவோ, அதேபோன்று இந்த விவகாரத்திலும் வரப் போகிறது. ''நான் தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக இருந்தபோது, எந்த ஒரு நிறுவனமும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சன் டைரக்ட் நிறுவனத்தில் முதலீடு செய்யவில்லை. ஆஸ்ட்ரோ நிறுவனம் முதலீடு செய்தபோது, நான் அமைச்சராக இல்லை!'' என்று தயாநிதி தரப்பு விளக்கம் வைத்துள்ளது.

''ஆஸ்ட்ரோ நிறுவனத்துக்கும் சன் குழுமத்துக்கும் 1998-ம் ஆண்டு முதலே தொடர்புகள் உண்டு'' என்றும் சொல்கிறார்கள். ஆனால், சி.பி.ஐ. இன்னும் என்ன மாதிரியான பூதங்களைக் கோர்ட்டில் கொண்டுவந்து கொட்டப் போகிறது என்று தெரியவில்லை.

''அடுத்து, யாரைக் குற்றப் பத்திரிகையில் கொண்டுவரப் போகிறீர்கள்?'' என்று இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.பி.பரதன் கிண்டலாகக் கேட்கும் அளவுக்கு, மத்திய அரசாங்கத்தின் முகம் சிதைந்து கொண்டிருக்கிறது.  தயாநிதி தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சிவசங்கரன் உள்ளிட்ட 10 பேரிடம் வாக்குமூலம் வாங்கி வைத்துள்ளது சி.பி.ஐ.

ஆ.ராசா தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் லைசென்ஸ் பெற்ற நிறுவனங்களுக்கு, தயக்கம் இல்லாமல் கோடிக்கணக்கான ரூபாய் பல்வேறு வங்கிகள் மூலமாகக் கடனாகத் தரப்பட்டுள்ளன. அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தை, பி.ஜே.பி. குறி வைத்து தாக்கி வருகிறது.  எந்தக் கேள்விகளும் கேட்காமல், நிதித் துறை அந்தக் காலகட்டத்தில் செயல்பட்டதன் பின்னணியில் அடங்கி உள்ள மர்மத்தை விசாரிக்க வேண்டும் என்கிறது பி.ஜே.பி.

''மத்திய மந்திரி சபையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள ராசா, இந்த ஊழலின் ஒரு பங்குதாரர்தான். இன்னொரு பங்குதாரர் சிதம்பரம்.'' என்கிறது பி.ஜே.பி. இவர்கள் அடுத்ததாக, கபில்சிபலையும் குறிவைத்து உள்ளார்கள். இப்போது, தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக கபில்சிபல் இருக்கிறார்.

''ரிலையன்ஸ் கம்பெனி தனது தொலைபேசிச் சேவையை கிராமப் பகுதிகளில் இருந்து திடீரென ரத்து செய்தது. இது விதிமுறையை மீறிய செயலாகும் என்று சொல்லி தொலைத் தொடர்புத் துறை 650 கோடியை அபராதமாக விதித்தது. அதாவது, 13 மண்டலத்துக்குத் தலா 50 கோடி என்று தொகை முடிவு செய்யப்பட்டது. இந்த 50 கோடியை 5 கோடியாகக் குறைத்து இருக்கிறார் கபில்சிபல். இந்தச் சலுகை மூலமாக அவர் அடைந்த லாபம் என்ன என்று விசாரிக்க வேண்டும்’ என்று பி.ஜே.பி. கேட்கிறது. ஏற்கெனவே, அமைச்சர் சரத்பவார் மீதான குற்றச்சாட்டு எழுந்து அடங்கி இருந்தது. அதையும் மீண்டும் கிளறப் போகிறார்கள்.

போகிற போக்கைப் பார்த்தால், மன்மோகன் சிங் அதிக நாட்கள் நீடிக்க மாட்டார் என்றே தோன்றுகிறது! 

நன்றி : ஆனந்தவிகடன்

சி.பி.ஐ. ஸ்கேனரில் சிங்கப்பூர் திக்திக்!

15-07-2011
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஸ்பெக்ட்ரம் பூதம் தயாநிதி மாற​னையும் கவ்விக் கொண்டது!  ஆ.ராசா, கனிமொழி இருவ​ருடன் இது முடிந்துவிடும்... என்று நினைத்து இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, அதிர்ச்சியின் எல்லைக்குத் தள்ளப்​பட்டுள்ளார். தயாநிதியின் பெயரை சி.பி.ஐ. தனது அறிக்கை​யில் தாக்கல் செய்ததுமே டெல்லி காங்கிரஸ் பிரமுகர் அடித்த கமென்ட், 'தி.மு.க-வின் கரன்சி ஆக்ஸிஜன் இதன் மூலம் அடைக்கப்பட்டுவிட்டது!’ என்பதுதான். அந்த அளவுக்கு, சென்னையையும் டெல்லியையும் அதிரவைத்துள்ளது சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள அறிக்கை!

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இதுவரை 14 பேர் கைது செய்யப்​பட்டு, டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன்னால் நிறுத்தப்பட்டு உள்ளனர். இதில் ஆ.ராசா நீங்க​லாகக் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஜாமீன் மனுக்களைத் தாக்கல் செய்தனர். யாருக்கும் கிடைக்கவில்லை என்பதால், திகார் சிறையிலேயே இருக்கிறார்கள்.

ஜூன் 3-ம் தேதி பாட்டியாலா நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை தொடங்கி, ஜூலை 4-ம் தேதி மீண்டும் கோர்ட் நடவடிக்கைகள் தொடங்கியது. கடந்த 5-ம் தேதி சி.பி.ஐ-யைப் பார்த்து நீதிபதி சைனி சீறினார் - ''குற்றம் சாட்டப்பட்ட 14 பேரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டு இத்தனை நாட்கள் ஆகியும், ஏன் இன்னும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை? தொடர்ந்து அவர்கள் சிறையில் இருக்க வேண்டும் என்பது உங்களது விருப்பமா? குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தர வேண்டிய ஆவணங்களை இதுவரை ஏன் தரவில்லை? இனியும் தாமதம் செய்தால், சி.பி.ஐ-க்கு அபராதம் விதிக்க வேண்டி வரும்!'' என்றதும், சி.பி.ஐ. தரப்பு கொஞ்சம் ஆடிப்போனது.

ஆனால், மறு நாள் உச்ச நீதிமன்றத்தில் சிலிர்த்துக் கிளம்பியது சி.பி.ஐ. ''இந்த வழக்கு, இதுவரை கைதான 14 பேருடன் முடியப்போகும் சமாசாரம் அல்ல. இதோ வருகிறது அடுத்த அஸ்திரம்!'' என்று சி.பி.ஐ. வைத்த வெடிகுண்டுதான்... முதல்கட்டமாக தயாநிதி மாறனின் மந்திரி பதவிக்கு வேட்டுவைத்துள்ளது. ஆ.ராசா, மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த காலத்தில் நடந்த விவகாரங்களை மட்டும் அல்ல... அதற்கு முன்னால் தயாநிதி மாறன் பதவியில் இருந்த காலத்தையும் சி.பி.ஐ. தோண்ட ஆரம்பித்து உள்ளது.


தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தநேரத்தில் நடந்ததாக சில விஷயங்களை, மத்திய அரசு அமைத்த ஒரு நபர் கமிஷன் முன்னால் அருண் ஷோரி வரிசையாக எடுத்து வைத்தார். அவர் அளித்த மனுவை அப்படியே சி.பி.ஐ-க்கு, விசாரணை அதிகாரியான நீதிபதி சிவராஜ் பாட்டீல் அனுப்பி​வைத்தார். உடனடியாக, சி.பி.ஐ. இதனை விசாரிக்க ஆரம்பித்தது. இதன் மையப் புள்ளியாக 'ஸ்டெர்லிங்’ சிவசங்கரனை, சி.பி.ஐ. அதிகாரிகள் ரகசியமாக விசாரிக்கத் தொடங்கினார்கள். இதுபற்றி, ஜூன் 8, 15, 16 தேதியிட்ட ஜூ.வி. இதழ்களில் தொடர்ந்து விவரங்கள் வெளியாகின.

இதுதொடர்பான குற்றச்சாட்டை 'பொது நல வழக்கு தொடர்பான சமூக சேவை அமைப்பு’ உச்ச நீதிமன்றத்தில் மனுவாகத்  தாக்கல் செய்தது. வக்கீல் பிரசாந்த் பூஷண் நடத்தி வரும் அமைப்பு இது.

சுப்ரீம் கோர்ட் இந்த விஷயத்தைக் கையில் எடுக்கும் என்று தெரிந்ததுமே, சிவசங்கரனை அதிகாரபூர்வமாக அழைத்து ஜூன் 6-ம் தேதி வாக்குமூலம் வாங்கியது சி.பி.ஐ. அவரது வாக்கு​மூலத்தை அடிப்படையாக வைத்துதான், கடந்த 6-ம் தேதி சி.பி.ஐ. ஒரு மனுவைத் தாக்கல் செய்தது.

நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி இருவரும்​தான், 2ஜி வழக்கை வைத்துக் கலக்கி வரும் நீதிபதிகள். இவர்களிடம் சி.பி.ஐ. சார்பில் மூடிய கவர் ஒன்றை சி.பி.ஐ. வக்கீல் கே.கே.வேணுகோபால் கொடுத்தார். மொத்தம் 71 பக்கங்களைக்கொண்ட அந்த அறிக்கையின் சாராம்சத்தை வேணுகோபால் சொல்லச் சொல்ல... அதிர்வலைகள் பலமாகின.

இந்த அறிக்கையில் தயாநிதி மாறனின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அவர் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த காலகட்டத்தில் நடந்ததாக சில விஷயங்களை அவர் பெயரைச் சொல்லாமல் குறிப்பிட்டார் வேணுகோபால். ''2004 - 2007 காலகட்டத்தில் ஏர்செல் நிறுவனம் தனது சேவையை விரிவாக்கம் செய்ய முயற்சித்தது. ஆனால், கிடைக்கவில்லை. ஏர்செல் நிறுவனத்திடம் தேவை இல்லாத, முக்கியத்துவம் இல்லாத கேள்விகள் கேட்கப்பட்டன. அவசியமற்ற விசாரணைகள் நடத்தப்பட்டன. ஏர்செல்லைப் போலவே வேறு இரண்டு நிறுவனங்களும் இதே போன்று விண்ணப்​பம் செய்திருந்தன. அந்த நிறுவனங்களிடம் இது மாதிரியான கெடுபிடிகள் காட்டப்படவில்லை. உடனடியாக அந்த இரண்டு நிறுவனங்களுக்கு லைசென்ஸ் கிடைத்தது.

தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக இருந்தவர் ஏதோ ஒரு நிர்பந்தத்தை ஏர்செல் நிறுவனத்​துக்குக் கொடுத்திருக்கிறார் என்பது சி.பி.ஐ-யின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் அனந்தகிருஷ்ணன்  நிறுவனத்துக்கு ஏர்செல்லின் பங்குகளைத் தர வேண்டும் என்று நிர்பந்தம் செய்துள்ளார்கள். சிவசங்கரன் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

 

சிவசங்கரன் தனது கம்பெனிப் பங்குகளை விற்பதைத் தவிர வேறு வழி இல்லை. அதன் பிறகு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு அந்த நிறுவனத்துக்குக் கிடைக்கிறது. இந்தப் பரிமாற்றத்தில் என்ன நடந்து இருக்கிறது என்பது குறித்துத்தான் சி.பி.ஐ. இப்போது விசாரித்து வருகிறது. பணப் பரிமாற்றம் குறித்தும் விசாரித்து வருகிறோம்!'' என்று சொன்னார் கே.கே. வேணுகோபால்.

அதாவது, இந்த விவகாரத்தில் இறங்கி சி.பி.ஐ. விசாரிப்பதற்கான அடிப்படை ஆதாரங்கள் இருப்பதாக நீதிபதிகளிடம் சொன்னார் வேணுகோபால். சிவசங்கரன் பற்றிக் குறிப்பிடும்போதும், 'திஸ் ஜென்டில்மேன்’ என்று மட்டும் சொன்னார். ''பணப் பரிமாற்றம் குறித்து சி.பி.ஐ. தனது விசாரணைகளை ஆரம்பித்துவிட்டது. சிங்கப்பூரில் இருக்கும் ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி மூலமாகத்தான் இதற்கான பணப் பரிமாற்றங்கள் நடந்துள்ளன என்று சந்தேகப்படுகிறோம். சிங்கப்பூரில் உள்ள அதன் அதிகாரியை ஜூலை 13-ம் தேதி விசாரணைக்கு வருமாறு அழைத்து உள்ளோம். மேக்சிஸ், ஆஸ்ட்ரோ, சன் டைரக்ட் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு மத்தியிலும் இந்தக் கால கட்டங்களில் நடந்துள்ள டீலிங்குகளை வைத்து, என்ன நடந்துள்ளது என்பதை முழுமையாக அறிய முடியும். அந்த அதிகாரி எங்கள் முன்பு ஆஜராகி விவரங்களை கூறியபிறகு எங்கள் விசாரணை வேகம் பிடிக்கும்!'' என்று சி.பி.ஐ. வட்டாரத்தில் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

''ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான விசாரணை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் முடிந்துவிடும். 2001 முதல் 2008-ம் ஆண்டு வரையிலான லைசென்ஸ் முறைகேடுகள், செப்டம்பர் 30-ம் தேதிக்குள் முடிந்துவிடும்!'' என்று வக்கீல் கே.கே.வேணுகோபால் சொல்லியதை வைத்துப் பார்க்கும்போது, தயாநிதி மாறன் மீது முழுமையான குற்றப் பத்திரிகை செப்டம்பர் மாதத்துக்குள் தாக்கல் ஆகிவிடும் போலிருக்கிறது!'' என்கிறார்கள் டெல்லி நீதித் துறை வட்டாரங்களில்.


''ராசா அமைச்சராக இருந்த காலகட்டத்தில் நடந்தவை குறித்து அனைத்து விசாரணைகளும் முடிந்துவிட்டன. ராசாவின் சொத்துகள் மற்றும் பண முதலீடுகள் குறித்து வெளிநாட்டு வங்கிகளில் தகவல்கள் திரட்டுவது மட்டுமே பாக்கி. அது தொடர்பாக பல குளுகுளு தீவுகளுக்கெல்லாம் கடிதப் பரிமாற்றங்களைத் தொடங்கி உள்ளோம். எங்களில் சில அதிகாரிகளும் நேரடியாகப் போய் அங்குள்ள முதலீடுகள் பற்றி தகவல்கள் சேர்த்துக் கொண்டு வந்துள்ளனர். அந்த வேலைகள் இன்னும் ஒன்றிரண்டு வாரங்களில் முடியும். தயாநிதி மாறன் தொடர்பான விவரங்களுக்குள் இப்போதுதான் நுழைய ஆரம்பித்துள்ளோம். அதில் மேக்சிஸ் நிறுவனம், சன் டைரக்ட் நிறுவனம் ஆகியவற்றையும் இனி மேல்தான் விசாரிக்க வேண்டி உள்ளது. தயாநிதி மாறனை முதல் கட்டமாக விசாரிப்போம். அவரது ஒத்துழைப்பைப் பொறுத்தே, அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடிவு செய்வோம்!'' என்று சி.பி.ஐ. அதிகாரிகள் சொல்கிறார்கள்.

சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள இந்த அறிக்கை தொடர்பாக எந்தக் கருத்தையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சொல்லவில்லை. ''இந்த அறிக்கை பற்றிய விசாரணை வரும் 11-ம் தேதி நடக்கும்!'' என்று மட்டும் கூறினார்கள். இதனால், 11-ம் தேதிக்குள் சி.பி.ஐ. தன்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கையைத் தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ''தயாநிதி மாறனை 11-ம் தேதிக்குள் விசாரிக்க வாய்ப்பு இல்லை. 13-ம் தேதி சிங்கப்பூர் வங்கி அதிகாரிகள் சி.பி.ஐ. முன்னால் ஆஜராக இருக்கிறார்கள். அவர்களது வாக்குமூலங்களையும் வாங்கி வைத்துக்கொண்டுதான், சி.பி.ஐ. தயாநிதி மாறனை விசாரணைக்கு அழைக்கும்.

அதே சமயம்,  நீதிபதிகள் 11-ம் தேதி என்ன உத்தரவிடுகிறார்கள் என்பதையும் வைத்தே சி.பி.ஐ. செயல்படும்...'' என்று டெல்லியில் ஒரு தரப்பினர் சொல்ல... ''அதற்கு முன்பேகூட சி.பி.ஐ. தன் செயல்பாட்டை தொடங்கிவிடும். அதைப் புரிந்துகொண்டுதான், பிரதமர் தரப்பிலிருந்து தயாநிதி மாறனின் மந்திரி பதவியை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்திலிருந்து தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் பேசினார்கள். 'ஆ.ராசா விஷயத்தில் நடந்ததுபோல் இதில் அடம் பிடிக்க வேண்டாம். ராஜினாமாவை ஒத்திப் போடுவது காங்கிரஸ் - தி.மு.க. ஆகிய இரு தரப்புகளுக்குமே மேலும் மேலும் சங்கடங்களை ஏற்படுத்தும் என்று எடுத்துச் சொன்னார்கள். அதைத் தொடர்ந்தே ராஜினாமா கடிதத்தை தயாநிதி மாறன் ஒப்படைத்தார். மந்திரி பதவியிலிருந்து விலகிய பிறகுதான் ஆ.ராசா தொடர்பாக சி.பி.ஐ-யின் நேரடி நடவடிக்கைகள் தொடங்கின. அதுபோலவே இதிலும் ஆக்ஷன்கள் வேகம் பெறும்'' என்றும் கூறப்படுகிறது.

''இந்த நிகழ்வுகள் சூடு பிடித்த சமயத்தில் டெல்லியில் இருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா 'பிரதமர் இனியும் சும்மா இருக்கக்கூடாது' என்ற பாணியில் உசுப்பிக் கொண்டே இருந்ததை சுட்டிக் காட்டும் சிலர், ''மந்திரி பதவியிலிருந்து தயாநிதி மாறன் விலகிய பிறகு தமிழக அரசு தரப்பிலிருந்து சில நடவடிக்கைகளை எடுப்பதே ஜெயலலிதாவின் நோக்கம்!'' என்றும் கூறத் தொடங்கியுள்ளனர்.

''தயாநிதி தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் எந்த தொலைத்தொடர்பு நிறுவனமும் சன் டைரக்ட்டில் முதலீடு செய்யவில்லை. ஆஸ்ட்ரோ நிறுவனம், சன் டைரக்டில் முதலீடு செய்தபோது தயாநிதி அமைச்சராகவே இல்லை. இந்த நிறுவனங்களில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை!'' என்று தயாநிதிமாறன் தரப்பு தனது விளக்கமாகச் சொல்ல ஆரம்பித்துள்ளது.

ஜூலை 13-க்குப் பிறகு விவகாரம் இன்னும் சூடுபிடிக்கும்!

- சரோஜ் கண்பத்

நன்றி : ஜூனியர்விகடன்-10-07-2011

எழுத்து சுதந்திரத்தை நசுக்க முடியாது...! - காலச்சுவடு வழக்கில் சாட்டையடி

13-07-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

முதலில் கோபித்துக் கொள்ளாமல் 3 ஆண்டுகளுக்கு முன்பாக நான் எழுதிய இந்தப் பதிவைப் படித்துவிட்டு பின்பு இங்கு வந்து மீண்டும் தொடருங்கள்..!

'காலச்சுவடி'ன் மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரி 'காலச்சுவடி'ன் ஆசிரியர் கண்ணன் மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் சென்ற வாரம்தான் தீர்ப்பு சொல்லப்பட்டுள்ளதாம்.

அந்த்த் தீர்ப்பு பற்றி இன்றைய ஜூனியர்விகடனில் வந்திருக்கும் கட்டுரை இது :

''எழுத்து சுதந்திரத்தை நசுக்க முடியாது!'' - 'காலச்சுவடு' வழக்கில் சாட்டையடி

'கருத்து சுதந்திரத்தை அரசியல்​வாதிகள் நினைத்தபடி காலில் போட்டு மிதித்துவிட முடியாது!’ என்பதைச் சொல்லி இருக்கிறது, மதுரை உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு!

அரசு நூலகங்களில் முந்தைய இரு ஆட்சிகளிலும் வாங்கப்பட்டு வந்த இலக்கியப் பத்திரிகையான 'காலச்சுவடு', கடந்த தி.மு.க. ஆட்சியில் திடீரென நிறுத்தப்பட்டது.

நூலகங்களில் வாங்குவது நிறுத்​தப்பட்டதற்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் 'காலச்சுவடு' சார்பில் வழக்கு தொடரப்​பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சந்துரு, அரசின் முடிவுக்கு இடைக்காலத் தடை விதித்தார். ஆட்சி மாறிய நிலையில், கடந்த மாதம் 29-ம் தேதி இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு அளிக்கப்பட்டது. 'அரசு நூலகங்களுக்கு 'காலச்சுவடு' மீண்டும் வாங்க வேண்டும்’ என நீதிபதி அரி பரந்தாமன் தீர்ப்பு அளித்தார்.

வழக்கில் வென்ற 'காலச்சுவடு' பத்திரிகை ஆசிரியர் மற்றும் பதிப்பாளர் கண்ணனிடம் பேசினோம்.

''அரசு நூலகங்களில் எங்கள் பத்திரிகையை வாங்குவதற்கு, 2003 டிசம்பரில் பொது நூலகத் துறையின் அனுமதி கிடைத்தது. 2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த போதும், அனுமதி புதுப்பிக்கப்பட்டது. 2008 ஏப்ரலில் இருந்து, மாவட்ட நூலகங்களில்  எங்கள் பத்திரிகையை வாங்கவில்லை. நாங்கள் பத்திரிகையில் முன்வைத்த சில விமர்சனங்கள்தான் இதற்குக் காரணம் என்பதை அறிந்தோம்.

செம்மொழி தொடர்பாக நாங்கள் 2008 மார்ச்​சில் எழுதிய தலையங்கத்தால், முன்னாள் முதல்வர் கருணாநிதி எங்கள் மீது கோபப்பட்டார் என்று தகவல் அறிந்தோம்.

'அதிகம் பேர் படிக்கும் பத்திரி​கையாக இல்லை என்பதால், 'காலச்சுவடு' நூலகங்களுக்கு வாங்குவது நிறுத்தப்​பட்டது’ என்று, முன்னாள் அமைச்சர்  காரணம் சொன்னார். அதே காலகட்டத்தில் 'கடலார்', 'கனிமொழி', 'தாகூர் கல்விச் செய்தி', 'திரிக முகம்', 'அற்புத ஆலயமணி', 'எங்களுக்கு மகிழ்ச்சி', 'ஜெய் பாடி பில்டிங் மாஸ்டர்', 'கவலைப்படாதே', 'நல்வழி', 'நித்தியானந்தம்'
உட்பட இன்னும் பல பத்திரிகைகள் நூலகங்களில் வாங்கப்பட்டது. இந்தப் பத்திரிகைகள் எல்லாம் அதிக மக்கள் படிப்பவை என்று நீதிமன்றத்திலும் வாதம் செய்தார்கள். ஆனாலும், 'அரசு தன் மனம் போனபோக்கில் எந்த முடிவும் எடுத்துவிட முடியாது’ என, ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, மீண்டும் இப்போது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. அரசு விளம்பரம் தருவதிலும் இதே தீர்ப்பைப் பொருத்திப் பார்க்க முடியும் என நினைக்கிறேன்...'' என்று முடித்தார் கண்ணன்.

கருத்து சுதந்திரத்தை அழிக்க நினைக்கும் ஆட்சியாளர்களுக்கு, இந்தத் தீர்ப்பு ஒரு சவுக்கடி!

- இரா.தமிழ்க்கனல்

நன்றி : ஜூனியர்விகடன்

முந்தைய ஆட்சியாளர்கள் காழ்ப்புணர்வுடன், அப்பட்டமான தனி மனித விரோதத்துடன், ஜனநாயகத்துக்கு விரோதமாக செயல்பட்டனர் என்பதற்கு இந்தக் 'காலச்சுவடு' விஷயமும் ஒரு உதாரணம்..!

நூலகங்களுக்கு மட்டுமே வந்து கொண்டிருந்த பல புத்தகங்களை அதிகம் பேர் படிக்கிறார்கள் என்று நன்கு படித்த அமைச்சராக இருந்த ஒருவர் பொய் சொன்னது மிகக் கேவலமானது..

“வாசகர்கள் அதிக அளவில் படிக்கும் இதழ்களை நூலகங்களுக்கு வாங்கலாம் என்று தீர்மானித்து அதன் அடிப்படையில்தான், ‘காலச்சுவடு’ பத்திரிகையை நிறுத்திவிட முடிவெடுத்திருக்கிறார்கள். ‘காலச்சுவடு’ பத்திரிகை வாசகர்களால் அதிகம் விரும்பிப் படிக்கப்படும் பத்திரிகைகளில் ஒன்றானால், இந்தப் பிரச்சினை தானாக தீர்ந்துவிடும்..”

இப்படிச் சொல்லியிருக்கிறார் அப்போதைய அமைச்சர் தங்கம் தென்னரசு. முந்தையக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்த பத்திரிகைகளில் எத்தனை பத்திரிகைகளை அமைச்சர் கேள்விப்பட்டிருப்பார் என்பதை உங்களது ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன்..

தானும் ஒரு பத்திரிகையாளன் என்று வாய் கூசாமல் சொல்லிக் கொள்ளும் முத்தமிழ் அறிஞரின் நியாயமான ஆட்சியில்தான் இந்தக் கொடுமை நடந்துள்ளது என்பதையும் நினைத்துப் பார்க்கின்றபோது அந்தப் பட்டத்தை வழங்கியவர்களை நினைத்து பரிதாபப்படத்தான் முடிகிறது..! இந்த ஆட்சி போனது நியாயமானதுதான் என்பதற்கு மேலும் ஒரு உதாரணமாக இதனையும் நாம் எடுத்துக் கொள்ளலாம்.

அதே சமயத்தில் தாத்தா மீது ரொம்ப கோபப்பட வேண்டாம். தாத்தா என்றில்லை.. ஆத்தாவும் இதே குணத்துடன்தான் இருக்கிறார்..
 

'விடுதலை' பத்திரிகையை வாங்குவதை நிறுத்தும்படி சென்ற மாதமே அனைத்து நூலகங்களுக்கும் உத்தரவுகள் சென்று, அது நடைமுறைக்கும் வந்துவிட்டதாம்.. முரசொலி வாங்குகிறார்களா என்று தெரியவில்லை.

உண்மையாகவே ஆத்தா, தடை போடுவதாக இருந்தால் 'முரசொலி'க்குத்தான் தடை விதித்திருக்க வேண்டும். 'விடுதலை'க்கு ஏன் தடையென்று தெரியவில்லை. 'விடுதலை'யின் மிகப் பெரிய வியாபாரமே நூலக வியாபாரம்தான். அந்தப் பொழைப்பிலும் மண்ணையள்ளிப் போட்டுவிட்டார் தமிழகத்தின் உத்தமத் தலைவி..! இவரும் தான் ஜனநாயகவாதி என்றுதான் சொல்லிக் கொள்கிறார்.

'விடுதலை' முழுக்க, முழுக்க நாத்திகம் பேசும் ஒரேயொரு தினசரி பத்திரிகை. இதனை அந்த இயக்கத்தின் தொண்டர்கள் மட்டுமே வீடுகளில் வாங்கிப் படிக்கிறார்கள். அவர்களும் ஊருக்கு சில நூறு பேர் மட்டுமே.. மற்றவர்கள் இதனைப் படிக்க வேண்டுமெனில் நூலகங்களுக்குத்தான் செல்ல வேண்டும்..!

நானும் எனது வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் பெரியாரின் தோழராக இருந்தபோது 'விடுதலை'யை தினம் தோறும் தவறாமல் விலைக்கு வாங்கி படித்து வந்தவன்தான்.. என்னுடைய தாயாரின் மறைவுக்குப் பின்பு சில நாட்கள் படிக்காமலேயே இருந்தவனின் கண்ணில் 'கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம்' கிடைத்த்தும் பெரியாரில் இருந்து பெரியாழ்வாருக்கு டிரான்ஸ்பர் வாங்கிவிட்டேன்..! அத்தோடு 'விடுதலை'யை தினமும் படிப்பது நின்றுவிட்டது.

ஆனாலும் மதுரை வைகையாற்றுக் கரையோரம் ஆழ்வார்புரம் ராமச்சந்திரன் நடத்திய 'கலைஞர் படிப்பகம்' பக்கம் போகும்போதெல்லாம் விடுதலையை அடிக்கடி வாசிப்பதுண்டு.. அதில் வரும் நாத்திகக் கருத்துக்களைப் படித்தால் நிஜமாகவே உண்மைதானோ என்று சிந்திக்கத் தோன்றும். அந்த அளவுக்கு கேள்விகளை தீயாய் தீட்டி எழுதியிருப்பார்கள்..

எனக்கு 'விடுதலை'யில் பிடித்தது அறிவியல் முன்னேற்றம் பற்றிய  செய்திகள்தான். அதேபோல் உலக அளவில் முன்னேறிய நாடுகள் பற்றிய செய்திகளையும், அவர்களின் உழைப்புத் திறன், புதிய, அரிய கண்டுபிடிப்புகள் பற்றிய செய்திகளையும் அடிக்கடி வெளியிடுவார்கள். அவைகளனைத்தும் இளைஞர்கள் அவசியம் வாசிக்க வேண்டியவைகள்.

அதிகமாக நூலகத்தில் கிடைக்கக் கூடியதாக இருக்கும் அந்த தினசரியை நிறுத்தியது தமிழ் வாசகர்களுக்கு ஜெயலலிதா செய்த துரோகமாகத்தான்  நினைக்கிறேன்.. மாற்றுக் கருத்து இருந்தாலும் அதனை வெளிப்படுத்திவிட்டு அதற்குப் பதிலளிப்பதுதான் சரியான ஜனநாயகம். தன்னை எதிர்த்துப் பேசுகிறாரே, எழுதுகிறாரே என்றெல்லாம் நினைத்து அவர்கள் அழிந்துபோக வேண்டும் என்று ஒரு முதலமைச்சரே நினைப்பது வெட்கமான செயல்..

ஒரு காலத்தில் 'சமூக நீதி காத்த வீராங்கனை' என்று தனக்கு பட்டமெல்லாம் கொடுத்து பரவசப்படுத்தியபோது, வீரமணியும், அவரது விடுதலையும் ஜெயல்லிதாவுக்கு மிகவும் பிடித்திருந்த்து. இன்றைக்கு எதிரணியில் இருக்கிறார்.. திட்டம் தீட்டிக் கொடுக்கிறார் என்றெல்லாம் தெரிந்தவுடன் வேண்டாத விருந்தாளியாக மாறிப் போய் தடா உத்தரவு போட்டுவிட்டார்.


இதற்காகவா இவர் ஆட்சிக்கு வந்தார்..? இது போன்ற சில்லரைத்தனங்களை செய்வதைக்கூட நாட்டு மக்களால் ஏன் என்று கேட்க முடியவில்லை என்றால் நமக்கு எவ்வளவு அதிகாரம் இருக்கிறது என்பதை நினைத்துப் பார்த்து நாம்தான் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டும். இதற்கு பொறுத்திருக்க வேண்டிய 5 ஆண்டு காலக்கட்டம் மிக அதிகம்.

சென்ற 3 ஆண்டுகளாக 'காலச்சுவடு' இதழை வாங்காததால் அந்த நிறுவனத்துக்குக் கிடைத்த இழப்பீடை யார் தருவார்..? அதேபோல் அந்த 3 ஆண்டுகளும் அந்தப் புத்தகத்தை நூலகங்களில் படிக்கக் கிடைக்காதவர்களின் வாசகப் பசிக்கு யார் பொறுப்பேற்பது..?

இதேபோல்தான் 'விடுதலை'யின் நிலைமையும்.. இனி வீரமணி நீதிமன்றத்தில் தொடுக்கும் வழக்கு எத்தனையாண்டுகள் கழித்து விசாரணைக்கு வந்து அவருக்கு நியாயம் கிடைக்கப் போகிறதே தெரியவில்லை. ஆனால் அதுவரையிலும் நூலகங்களில் அந்தப் பத்திரிகையை படிக்க வாய்ப்பு கிடைக்காத தமிழ் வாசகர்களுக்கு என்ன பதில்..?

ஆத்தாவும், தாத்தாவும் ஒருவருக்கொருவர் திட்டிக் கொண்டாலும், தங்களைத் தாங்களே புகழ்ந்து கொண்டாலும், இதுபோல் அவ்வப்போது எதையாவது செய்து தாங்கள் இருவருமே ஒருவர்தான் என்பதை நிரூபித்து விடுகிறார்கள்..!

வாழ்க ஜனநாயகம்..!

வாழ்க தமிழகம்..!!

வளர்க திராவிடம்..!!!

வீரபாண்டி ஆறுமுகத்தின் ரூ.450 கோடி மெகா ஊழல்!

07-07-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தோண்டத் தோண்ட ஊழல்கள் என்ற ரீதியில் இதுவரையில் அதிகம் வெளியில் சொல்லப்படாத வேளாண்மைத் துறை ஊழல்களைப் பற்றி இந்த மாதத்திய சூரியக்கதிர் பத்திரிகையில் விரிவான கட்டுரை வெளியாகியுள்ளது.

அது உங்களுக்காக இங்கே..

கடந்த வாரம் வேளாண்துறையின் கூட்டத்தை கூட்டினார் முதல்வர் ஜெயலலிதா. ‘இந்த நாட்டின் முதுகெலும்பே விவசாயிகளும், விவசாயமும்தான். எனவே, வேளாண்துறையை வளர்க்க, விவசாயிகளுக்கு உண்மையாகவே நன்மை செய்திட என்ன செய்யலாம்?’ என்று விவாதித்தார். அதேபோன்று வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்லும் விதமாக ஸ்ரீரங்கம் சென்ற முதல்வர், அங்கும் தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்து ரூ.190 கோடி அளவிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு மட்டுமல்லாமல், அந்த பகுதி மக்களின் அடிப்படை தேவையான விவசாயத்தை வளர்க்கும் விதமாக தோட்டக்கலை பல்கலைக்கழகத்தையும் தொடங்கப் போவதாக அறிவித்தார்.

முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் எல்லாம் விவசாயம் சார்ந்த வளர்ச்சிப் பணிகளில் இருக்க, நடந்து முடிந்த தி.மு.க ஆட்சியில் வேளாண் துறையில் மெகா ஊழல்கள் நடந்திருப்பது கண்டு தமிழகத்தின் தோட்டக்கலை துறை அதிர்ந்து போயிருக்கிறது.

நாடு முழுவதும் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்காக வேண்டி இந்த தோட்டக்கலைத் துறையில் ஆர்வம் காட்டியது மத்திய அரசு. ஒரு வருடத்திற்கு அறுபது கோடி ரூபாயை மானியமாகவே தமிழகத்திற்குக் கொடுத்து வருகிறது. இது தவிர, ஐம்பது சதவீத மானிய விலையில் வேறு அறுபது கோடியை கொடுத்து வருகிறது. ஐந்து ஏக்கர், பத்து ஏக்கர் என்று வைத்திருக்கும் விவசாயிகள் அந்தந்த மாவட்ட நிலைக்கு ஏற்ப வாழை, மா, முந்திரி, நெல்லி, மல்லிகை என்று தங்கள் வசதிக்கேற்றதைப் பயிர்செய்து கொள்ளலாம். அதற்கான விதை, பூச்சி மருந்து உரம், தேவையான கருவிகள் என்று தேவையான அனைத்தையும் மத்திய அரசு பணத்தில் இலவசமாகவே கொடுக்க வேண்டும். தோட்டக்கலைத் துறையின் கோப்புகள் அப்படி கொடுத்ததாக மட்டுமே கணக்கு காட்டியுள்ளது. உண்மையில் அப்படி ஏதும் அதிசயம் நடந்தேறவில்லை. விவசாயிகளின் வாழ்வும் செழிக்கவில்லை என்பதுதான் வேதனையான ஒன்று. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இப்படி ரூ.450 கோடிகளை ‘ஊழலாகவே’ பயிர் செய்திருக்கிறார் முன்னாள் வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்.

இனி எப்படியெல்லாம் அந்த ஊழல் விவசாயம் நடந்தேறியது என்பதைப் பார்க்கலாம்.

அந்தந்த பகுதிகளில் உள்ள பயன்பெறும் விவசாயிகளின் பெயர் பட்டியல் இருக்கும். அவர்களுக்குத் தேவையான விதை கொடுப்பதில் தொடங்கி, அது விளைச்சலாகும் வரையிலான எல்லாவிதப் பொருட்களையும் மாநில அரசின் தோட்டக்கலைத் துறையே கொடுக்க வேண்டும். இதில நீரில் கரையும் உரத்திற்கு மட்டுமே ஆண்டுக்கு அறுபது கோடி கொடுக்கப்படுகிறது. பொட்டாசியம் நைட்ரேட், மோனோ அம்மோனியம் பாஸ்பேட் போன்ற உரங்களை நீரில் கலந்து சொட்டு நீர்ப் பாசன முறையில் விவசாயிகளுக்கு தரவேண்டும். அதற்கான கருவிகள்கூட இலவசமே. தோட்டக்கலைத் துறை கொடுத்திருக்க வேண்டும். விவசாயிகள் வாங்கியிருக்க வேண்டும். ஆனால், அப்படி ஏதும் நடக்கவே இல்லை. எந்தவித அங்கீகாரமும் இல்லாத லெட்டர் பேட் கம்பெனிகளுக்குதான் அதற்கான டெண்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் யார் என்பதை தோண்டினாலே அமைச்சரின் நிஜமுகம் அம்பலத்திற்கு வந்துவிடும் என்பது வேறு செய்தி. அந்த லெட்டர்பேட் கம்பெனிகள் ‘எல்லாமும் கொடுக்கப்பட்டு’ வந்ததாக சொல்கிறார்கள். சில மாவட்டங்களில் உள்ள அதிகாரிகள் போதிய(!) ஒத்துழைப்புத் தரவில்லை என்றால் வேறு வழியைக் கையாள்வார்கள். அதாவது மார்க்கெட்டில் உள்ள டி.ஏ.பி, மற்றும் பொட்டாஷ் உரங்களை வாங்கி, அதை நீரில் கலந்து, உண்மையாகவே அந்த பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு கொடுப்பார்கள். அதைதான் விவசாயிகள் சொட்டுநீர் மூலம் தெளித்து வருவார்கள்.

பொட்டாசியம் நைட்ரேட், மோனோ அம்மோனியம் பாஸ்பேட் ஆகிய மருந்துகள் ஒரு கிலோ நூறு ரூபாய். ஆனால், இந்த கலப்பட உரங்களின் மதிப்பு ஒரு கிலோ 7.50 மட்டுமே. பெரும்பாலான விவசாயிகள் போலி நபர்களாக, வெறும் பெயர் பதிவில் மட்டுமே இருப்பார்கள். இருக்கும் ஒரு சிலருக்கும் உண்மையான உரம் மருந்துகளை கொடுப்பதில்லை. சூப்பர் தோட்டக்கலை புரட்சி! பல கோடிகள் கோவிந்தா...

இதில் வேடிக்கை என்னவென்றால் தோட்டக்கலை துறையில் இருந்து உரம் போன்றவைகளை டெண்டர் மூலம் பெறும் இந்த லெட்டர் பேட் கம்பெனிகள்தான் வேளாண்துறைக்கு மருந்துகளை சப்ளை செய்து வருகிறார்கள். ஆண்டுக்கு பதினைந்து கோடி ரூபாய் அளவிற்கு இந்த நபர்களிடம் இருந்துதான் வேளாண் துறைக்கு பூச்சி மருந்து உரங்களை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்(!?) என்ற வேதனையும் ஒன்று.

அடுத்து வேப்பம் புண்ணாக்கு சப்ளை. இது ஆண்டுக்கு ரூபாய் ஐந்து கோடி சப்ளை. தோட்டக்கலை பயிர்களுக்கு பூச்சிகள் பிடித்துவிடக்கூடாது என்பதற்காகவும் சிறந்த சத்து உரமாகவும் உபயோகிக்கப்படுவது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 20,000 டன் கொள்முதல் செய்து தோட்டக்கலை விவசாயிகளுக்கு கொடுத்திருக்கிறார்களாம். வேடிக்கை என்னவென்றால் மத்திய அரசின் புள்ளி விபரப்படி இவ்வளவு புண்ணாக்கு உற்பத்தி கிடையாது என்று சொல்கிறது. ஆனாலும், வீரபாண்டி ஆறுமுகத்திற்கு மட்டும் எங்கிருந்தோ கிடைத்திருக்கிறது!

ரம்பத்தூள்களை வாங்கி, மக்கிப்போன வேறு புண்ணாக்கு தூள்களை வாங்கி அதில் வேப்பம் எண்ணெய்யை ஸ்பிரே மூலம் தெளித்து ‘வேப்பம் புண்ணாக்கு’ என்று கொடுத்து வந்தார்கள். இது ஏதோ கட்டுக்கதை அல்ல. கடந்த காலங்களில் ஜெயா டி.வி யில் செய்தியாக காட்டப்பட்டதுதான். அந்தந்த பகுதிகளில் உள்ள தோட்டக்கலை பயிர் விவசாயிகளுக்கு வந்த ‘வேப்பம் புண்ணாக்கு’ பாக்கெட்டுகளை பார்த்து அதிர்ந்து போய் ஊடகத்தை அழைத்துக் காட்டினார்கள். அப்போது எந்த ஊடகமும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஜெயா டி.வி மட்டுமே ஒளிபரப்பியது.

அடுத்ததும் அக்கப்போர் ஊழல்தான். தோட்டக்கலை விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட மண் புழு உரம்! ஆண்டுக்கு ரூபாய் ஐந்து கோடி, இதற்கு மட்டுமே. இந்த உரத்தை மண் புழுவின் எச்சத்திலிருந்து தயாரிக்க வேண்டும். ஒரு ஆண்டுக்கு 5,000 டன் முதல் 15,000 டன் மண்புழு உரம் வாங்கி விவசாயிகளுக்கு கொடுத்ததாக கணக்குக் காட்டியிருக்கிறது லெட்டர்பேட் கம்பெனிகள். இந்தியா முழுக்க உள்ள மண்புழு உரம் உற்பத்தியே அவ்வளவு இல்லை என்கிறது மத்திய அரசின் புள்ளி விபரம். அப்படியிருக்க தி.மு.க அரசுக்கு மட்டும் எங்கிருந்து எப்படி கிடைத்தது? வேறு என்ன.? வெறும் மாட்டுச்சாணத்தையே மணலில் கலந்து ‘இதுதான்பா அது’ என்று கொடுத்திருக்கிறார்கள். இதற்கு ஆதாரமும் கடந்த கால ஜெயா டி.வி.தான். நடப்பதிலேயே மட்டமான, கேவலமான ஊழல் இதுதான் என்று மக்கள் பேசும் அளவிற்கு ஜெயா டி.வி அதிர வைத்தது.

அதேபோன்று தோட்டக்கலை விவசாயிகளுக்கு மா, வாழை, நெல்லி, போன்ற விதைகள், செடிகள், மரக்கன்றுகள் வழங்கிய விவகாரம். இதற்கு மட்டுமே ஆண்டிற்கு ஆறு கோடி ரூபாய். விதைகளை நட்டு நீர் ஊற்றி வளர்க்க வேண்டிய பாலிதீன் பை, கீழே அதற்கான பிளாஸ்டிக் விரிப்பு, அதிகம் வெயில் படாமல் வளர்வதற்கான நெட், ஷீட்டுகளுக்கு என்று ஆண்டிற்கு ரூபாய் ஒரு கோடி. ஆவணங்களின்படி பார்த்தால் டெண்டர் எடுத்த கம்பெனிகள், ‘எங்கேயோ வாங்கியிருக்கிறார்கள். கொடுத்தும் இருக்கிறார்கள்.’ ஆனால், எந்த விவசாயிகளுக்கு என்பதுதான் கேள்விக்குறி. சுத்தமாக அடித்து சுருட்டியிருக்கிறார்கள்.

அடுத்து உயர் உரம் என்கிற பயோ ஃபெர்டிலைசர்ஸ் சப்ளை செய்த விதம். தோட்டக்கலை பயிருக்குப் பயன்படுத்தும் உரம். இந்த உரத்தை தமிழக வேளாண்துறையே எட்டு மையங்களில் தயாரிக்கிறது. தவிர ஓராண்டுக்கு முன்புதான் மேலும் ஒன்பது யூனிட்டுகளை நிறுவியது. ஆனால், உற்பத்தியை தொடங்கவில்லை என்பது வேறு விஷயம். ஏற்கெனவே எட்டு உற்பத்தி மையங்களிலேயே இந்த பயோ ஃபெர்டிலைசர்ஸ் உரம் தயாராகிறது. தோட்டக்கலைத் துறைக்கான உரத்தை இங்கிருந்தே வாங்கி விவசாயிகளுக்கு கொடுக்க முடியும். அப்படி ஏதும் செய்யவில்லை. முன்னாள் அமைச்சருக்கு லாபம் வேண்டுமல்லவா? அதனால், அந்த லெட்டர்பேட் கம்பெனிகளுக்கே உரிமை கொடுக்கப்பட்டது! அவர்கள் தனியார் கம்பெனியில் வாங்கி இந்த உரத்தை கொடுத்தார்களாம். எந்த தனியார் கம்பெனி என்று பார்த்தால் மேலும் அதிர்ச்சி. அந்த தனியார் கம்பெனிகளுக்கு பயோ ஃபெர்டிலைசர்ஸ் உரம் தயாரிக்கும் கருவிகளே கிடையாது என்பதுதான். அப்படியானால் அந்த மாதிரி உரம கொடுக்கப்படவில்லையா என்று கேட்டால்.. அட கொடுத்தால்தானே விவசாயிகளுக்கு தெரியும் என்ற வேதனை குரல்தான் மிஞ்சுகிறது. இதில் மட்டுமே ஆண்டிற்கு மூன்று கோடி ரூபாய் சுருட்டப்பட்டிருக்கிறது.

இதுபோக செம்மொழி பூங்கா ஏற்காடு, மாதவரம், தென்காசி, ஊட்டி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட பூங்காக்களுக்கு பெங்களூரைச் சேர்ந்த ஒரு கம்பெனிக்கு பூங்கா வேலைகளை செய்யும் பணி ஒதுக்கி கொடுக்கப்பட்டது. பூங்கா வேலைகளை தொடங்குவதற்கு முன்பாகவே டெண்டர் விலையில் 40 சதவீதத் தொகையை முன் பணமாகவே கொடுத்து முடித்துள்ளதிலும் ‘வில்லங்கக்’ கதை. இந்த பெங்களூரு கம்பெனியும் சட்டத்திற்கு முரணாக வேறு கம்பெனிக்கு சப்-காண்டிராக்ட் கொடுத்தருக்கிறது. சென்னை செம்மொழி பூங்காவிற்கு சென்னையிலேயே உள்ள ஒரு காண்டிராக்டருக்கு மிக அதிக விலையில் பணி ஒப்பந்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது எப்படி என்ற விவரம் கோப்புகளில் உள்ளது.

இப்படி தோட்டக்கலை துறையில் நடந்தேறியது எல்லாமும் அப்பட்டமான ஊழல். அதுவும் 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் எப்படி திடீர் கம்பெனிகள் பெயரில் அலைக்கற்றை ஒதுக்கி கொடுத்து, போகாத ஊருக்கு பணம் சென்று, சேராத நபர்களிடம் சேர்ந்ததோ அதே பாணியில் இந்த துறையிலும் நடந்தேறியிருக்கிறது. முன் அனுபவம் உள்ள டெண்டர்தாரர்களுக்குதான் டெண்டர் கொடுக்க வேண்டும் என்ற விதிமுறைகளும் காற்றில் பறந்திருக்கிறது. அனுபவமே இல்லாத, தகுதியே இல்லாத கம்பெனிகளை எல்லாம் விளையாட விட்டிருக்கிறது முன்னாள் தி.மு.க அரசு.

ஆக, கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் ரூ.350 கோடிகளில் இருந்து ரூ.400 கோடிகள் வரையிலும் அப்பட்டமான ஊழல், தோட்டக்கலைத் துறையில் மட்டுமே நடந்தேறியிருக்கிறது. பயனாளிகள் என்ற விவசாயிகளின் பெயர் பட்டியலை பார்த்து விசாரணை நடத்தினாலே சந்தி சிரிக்க தொடங்கிவிடும். இதில் வேடிக்கை என்னவென்றால் கடந்த ஐந்தாண்டு காலத்தில் எந்த அதிகாரிகள் இப்படியான ஊழலுக்கு உடைந்தையாக துணை நின்றார்களோ, அதே அதிகாரிகள்தான் இப்போதும் தோட்டக்கலைத் துறையில் இருக்கிறார்கள்.

ஊழலற்ற ஆட்சியைக் கொடுப்பேன் என்று உறுதி செய்துவிட்டு ‘மக்கள் நலம்பெற வேண்டும்’ என்ற முனைப்போடு செயல்படும் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இதை கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதே பொதுநலன் விரும்புவோரின் கருத்தாக உள்ளது.  மேற்கண்ட ஊழல்கள் அனைத்திற்கும் கோப்புகளே ஆதாரமாக உள்ளது. சப்ளை செய்த கம்பெனிகள் எங்கே? அவர்கள் யார்? அவர்களுக்குப் பின்னணி யார்? என்ற தேடல்கள் எல்லாம் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் வீட்டு விலாசத்திற்கே கொண்டு போய்விடும். அடுக்கடுக்கான ஆதாரங்கள் முதல்வரின் பார்வைக்குப் போக இருக்கிறது. அதிரப்போகும் உண்மைகளை மக்கள் அறியப் போகிறார்கள் என்பதே அடுத்த எதிர்பார்ப்பு.

இருப்பதிலேயே பாவப்பட்டவன் விவசாயிதான். அந்த பாவப்பட்டவர்களின் வயிற்றிலேயே மணல் அடித்து ஊழல் செய்தவர்களை அம்மாதான் தண்டிக்க வேண்டும் என்ற குரலும் கேட்காமலில்லை!

நன்றி : சூரியக்கதிர்-ஜூலை-1-15

இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்-06-07-2011

06-07-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்த கூகிள் பஸ் வந்தாலும் வந்துச்சு.. நமது வலையுலகப் பதிவர்களில் பாதி பேரின் பதிவுகளை குறைத்துவிட்டது. உடனுக்குடன் பதில்கள்.. கிறுக்கல்கள்.. சிணுங்கல்கள்.. சண்டைகள்.. கெஞ்சல்கள்.. சச்சரவுகள்.. என்று சுவாரசியமாகச் செல்வதால் அதிக நேரத்தை உறிஞ்சியெடுத்து பதிவு எழுதவே பதிவர்களுக்கு இப்போது சோம்பேறித்தனமாகிவிட்டது..!

"இட்லி-வடை பதிவுகள் ஏன் எழுதவில்லை..?" என்று ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து அன்புடன் மிரட்டிய டாக்டர் பிரகாஷுக்கும், ருவாண்டாவில் இருந்து அலைபேசியில் ஆடிய தோழருக்கும், சாட்டிங்கில் வந்து எழுதும்படி அன்புக் கட்டளையிட்ட அண்ணன் சீமாச்சுவுக்கும் நன்றி..!

ஏதாவது பெரிய, அரிய விஷயங்கள் கிடைத்தால் மட்டும்தான் இட்லி-வடை பதிவு போடுவேன் என்பது உங்களுக்கே தெரியும்.. அதில் எழுதலாம் என்று வைத்திருந்த செய்திகளையெல்லாம் உடனுக்குடன் செய்தியை முந்தித் தருவது என்ற 'தினத்தந்தி' ஆசையில் கூகிளாண்டவரின் பஸ்ஸில் வெளியிட்டு, என் 'வெறி'யைத் தீர்த்துக் கொண்டதால்(நமது மணிஜி, பஸ்ஸில் வெளுத்துக் கட்டுவதால் “வெறி” என்று சொல்ல வேண்டியிருக்கிறது) இட்லி-வடைக்கு கடும் பஞ்சமாகிவிட்டது..!

இப்படியேவிட்டால் 'இட்லி-வடை' என்கிற வார்த்தையே வலையுலகத்தினருக்கு மறந்துவிடும் அபாயம் இருப்பதை அறிந்து இந்த மாதத்தில் இருந்து அதனைச் செப்பனிட்டு, சீராக்கி, உருவாக்கி அளிக்கலாம் என்று புதிய கொள்கை முடிவொன்றை எடுத்திருக்கிறேன்..!

இனி 'இட்லி-வடை'யின் ஸ்டைலை மாற்றி அந்த வாரத்திய அரசியல் செய்திகள், சினிமா செய்திகள் பற்றிய எனது விமர்சனமாக மாற்றித் தருவதாக முடிவெடுத்துள்ளேன்..! வாராவாரம் புதன்கிழமையன்று இந்தக் கொடுமையை நீங்களெல்லாம் அனுபவிக்க வேண்டும் என்பது உங்களது தலையெழுத்து..! வேறு வழியில்லை.. அனுபவிங்க..!

சக்ஸேனா கைது..!

அம்மாவின் அதிரடியில் முதல் ஆளாகச் சிக்கியிருப்பது ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா.

நித்தி-ரஞ்சிதா விஷயத்தை 2 நாட்களாக விடாமல் ஒளிபரப்ப தெரிந்த சன் டிவிக்கு, இந்தக் கைது மேட்டரை தங்களது தொலைக்காட்சியில் ஒளிபரப்ப மனமில்லை.. "இந்தக் கைது விவகாரத்தை சட்டப்படி அணுகப் போகிறோம்"னு பிரஸ்ஸுக்கு நியூஸ் மட்டும் கொடுத்திருக்காங்க..! சக்ஸேனா கைது என்றவுடனேயே சன் டிவியின் பங்குகளின் விலையும் கொஞ்சூண்டு குறைஞ்சிருக்காம்.. நேற்று மட்டும் 11 ரூபாய் குறைந்ததாகச் சொல்கிறார்கள்..!

சக்ஸேனா கைது என்றதும் யார் சந்தோஷப்பட்டார்களோ இல்லையோ.. நிச்சயமாக விஜய்  சந்தோஷப்பட்டிருப்பார்..! 'வேட்டைக்காரன்' படத்தின் பிரமோஷனுக்காக தன்னை பாடாய்ப்படுத்திய சன் பிக்சர்ஸை, விஜய்யால் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது.

குடும்பத்திற்காக படம் பார்க்க வேண்டும் என்று சொல்லி, 'வேட்டைக்காரன்' படப் பெட்டியைக் கேட்டு ஒரு மெளனப் போராட்டமே நடத்தினார் எஸ்.ஏ.சந்திரசேகர். ம்ஹூம்.. அசைந்து கொடுக்கவில்லை சக்ஸேனா. கடைசியாக சன் டிவி அலுவலகத்துக்கே போய் பஞ்சாயத்து பேசித்தான் பெட்டியையும், பெர்மிஷனையும் வாங்கி வந்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். அத்தோடு தலை முழுக வேண்டிய லிஸ்ட்டில் சன் பிகசர்ஸையும் சேர்த்திருந்தார் விஜய்..!

சன் பிக்சர்ஸின் சி.இ.ஓ. என்ற பதவியை தமிழகத்தின் தலைமைச் செயலாளர் ரேஞ்ச்சுக்கு பயன்படுத்தியவர் என்றுதான் திரையுலகத்தில் சக்ஸேனாவைக் குற்றம்சாட்டுகிறார்கள். இப்போது அவர் கைதாகச் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகூட அதே தயாரிப்பாளரால் சென்ற வருடமே தயாரிப்பாளர் சங்கத்திலும், விநியோகஸ்தர் சங்கத்திலும், திரைப்பட வர்த்தக சபையிலும் புகாராக அளிக்கப்பட்டதுதான்.

யார் பூனைக்கு மணி கட்டுவது என்ற தயக்கத்தில், “நீங்களே சமாதானமா பேசித் தீர்த்துக்குங்களேன்” என்றுதான் சொல்லி டபாய்த்திருக்கிறார்கள் தயாரிப்பாளர் சங்கத்தில்..! சங்கப் பதிவேட்டில் பதியக்கூட வேண்டாம் என்றார்களாம் நிர்வாகிகள்.

இந்த அளவுக்கு ஆளும் கட்சியின் பேரன்கள் மீதே பயம் கொண்டு ஆட்சி நடந்திருக்கிறது என்றால் ம்ஹும்.. இவர் நிச்சயம் தண்டனை பெற வேண்டியவர்தான். இன்னும் செக்கர்ஸ் ஹோட்டல் கேஸ் ஒன்றும் பாக்கியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து ஜாமீன் கேட்கும் சூழல் வரும்போது அந்த வழக்கும் பாயும் என்று நினைக்கிறேன்..! சரத்குமார் ரெட்டிக்கு ஒரு நீதி.. அவரது இனிய நண்பர் சக்ஸேனாவுக்கு இன்னொரு நீதியாகிவிடக் கூடாது..!

சூப்பர் ஸ்டார்களுக்குள் ஒற்றுமை..!

இது இமெயிலில் வந்த செய்தி. கன்னட சூப்பர் ஸ்டார்கள் ராஜ்குமாருக்கும், விஷ்ணுவர்த்தனுக்கும் இருந்த ஒற்றுமைகளாக சிலவற்றை குறிப்பிட்டிருக்கிறார்கள். படித்துப் பாருங்கள்..!
Kannada cinema has lost both its eyes in the space of 44 months: Dr Raj Kumar in April 2006 and Dr Vishnuvardhan in December 2009.

1. Raj Kumar was born on the 24th: 2+4 =6; Vishnuvardhan was born on the 18th: 1+8 =9, both 6 and 9 are multiples of 3.

2. Raj Kumar died on the 12th: 1+2 =3;  Vishnuvardhan died on the 30th: 3+0 =3, again multiples of 3.

3. Raj Kumar died in ‘06; Vishnuvardhan in ’09; both years are multiples of 3.

4. Raj Kumar died two days before new year’s day as per the Souramana calendar;  Vishnuvardhan died two days before new year’s day in the Gregorian calendar.

5. Raj Kumar and Vishnuvardhan both died on Wednesday.

6. Muthuraju: 9 letters; Sampath Kumar: 12 letters, again both multiples of 3.

7. Raj Kumar was born on the 24th and died on the 12th, a difference of 12 days; Vishnuvardhan was born on the 18th and died on the 30th, again a difference of 12 days.

8. Raj Kumar died in Ramaiah hospital: Rajkumar and Ramaiah, both starting with R; Vishnuvardhan died in Vikram Hospital: Vishnuvardhan and Vikram, both starting with V.

9. Raj Kumar’s birth and death was in the same month, April; Vishnuvardhan’s birth and death was in the same city, Mysore.

10. Raj Kumar’s film career started in ’54: 5+4 = 9; Vishnuvardhan’s film career started in ’72: 7+2 = 9.

11. Raj Kumar received honorary doctorate from Mysore University in 1976, 22 years after his first film; Vishnuvardhan received honorary doctorate from Bangalore University in 2005, 33 years after his first film.

12. Raj Kumar’s 100th film was released in 1968; Vishnuvardhan’s 100th film was released in 1986.

13. Raj Kumar and Vishnuvardhan both took 14 years to reach the 100 film mark.

14. Both Raj Kumar and Vishnuvardhan died after a massive heart attack. Raj Kumar died on the 12th day; Vishnuvardhan died in the 12th month.

15. Raj Kumar was cremated in Kanteerava Studio, north Bangalore; Vishnuvardhan was cremated in Abhiman Studio, south Bangalore.
 
ராணுவம் வழங்கிய நீதி..!

பழம் பறிக்க வந்த சிறுவர்களை விரட்ட கடைசியில் துப்பாக்கிதான் கிடைத்ததா அந்த லெப்டினன்ட் கர்னலுக்கு..?
எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாத அப்பட்டமான படுகொலை இது.. சிறுவன் குடியிருப்புக்குள் நுழைந்து அதிகப்பட்சமாக என்ன செய்ய முடியும்..? மிலிட்டிக்காரர்கள் எதிர்பார்க்கும் நியாயத்தையும், ஒழுங்கையும் வெளி ஆட்களிடம் எதிர்பார்க்கலாமா..?


பையனை விரட்டியிருக்கலாம். திட்டி அனுப்பியிருக்கலாம்.. இதையெல்லாம் விட்டுவிட்டு குருவி சுடுவதைப் போல பொசுக்கென்று சுட்டுவிட்டு இன்றுவரையில் அந்த நபரை போலீஸின் கையில் ஒப்படைக்காமல் இருப்பதை பார்த்தால் இந்த நாட்டில் ராணுவத்திற்கும் ஏதோ பெரிய மரியாதையும், சக்தியும் இருப்பதுபோல் தோன்றுகிறது..!


இ.பி.கோ. செக்ஷனில்கூட லோக்கலில் குடியிருக்கும் ராணுவத்தினர் அடங்க மாட்டார்கள் என்றால் ம்ஹூம்.. சத்தியமாக இந்தியாவில் ஜனநாயகம் ஓஹோவென்றுதான் இருக்கிறது..!


இலங்கை ராணுவத்திற்கு ஆயுதம் ஏந்திச் சென்ற இந்திய ராணுவ வாகனங்களை மதுக்கரை அருகே தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டம் செய்த பெரியார் திராவிடர் கழகத்தினரையும், பொதுமக்களையும் வெறி கொண்டு தாக்கிய ராணுவத்தினரைக்கூட இன்னமும் தமிழகத்து போலீஸ் கைது செய்யவில்லை..! அடையாளம் தெரியாத யூனிபார்ம் அணிந்த நபர்கள் என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டிருப்பதாகச் செய்தி..!


ஒருவேளை யாராவது அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், போலீஸ் உயரதிகாரிகளின் பிள்ளைகளை இதுபோல் சுட்டுத் தள்ளியிருந்தால், இன்றைக்கு போலத்தான் அமைதியாக விசாரித்துக் கொண்டே இருப்பார்களோ..?


 
சத்தியமா இந்தியப் பொண்ணுங்கதாங்கோ..!

இந்த டான்ஸை முதல் முறை பார்த்தபோது பயந்து போனேன்.. "என்னங்கடா இது இந்தியப் பொண்ணுங்கதானா இவுங்கோ..?" என்று..! ஏதோ திருமண நிகழ்ச்சியாம்.. பிரான்ஸ் அல்லது கனடாவாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்..! "இதுவெல்லாம் அங்க சகஜம்.." என்கிறார் வீடியோவை வெளியிட்டிருந்தவர்..! தமிழ்நாட்டிலும் இந்தக் கொண்டாட்டங்கள் உண்டுதான்.. என்ன வெளில வராது. அவ்வளவுதான்..!அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம் பெறாத பாடல் காட்சி..!


இந்தப் பாடல் காட்சியையும் சமீபத்தில்தான் பேஸ்புக் வட்டாரத்தில் பார்க்க நேர்ந்தது..!
'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் இருந்து நீக்கப்பட்ட பாடல் காட்சி என்று வெளியிட்டிருந்தார்கள்.


“அண்ணாத்த ஆளுதான் ஒத்துக்கோ.. ஒத்துக்கோ..” பாடலின் சிச்சுவேஷனில் அந்தப் பாடல் படமாக்கப்பட்ட அதே இடத்திலேயே இந்தப் பாடலும் படமாக்கப்பட்டிருக்கிறது..! இந்தப் பாடலில் நடிகை காந்திமதியும் இருக்கிறார். ஆனால் வெளியான படத்தில் இல்லை. ஒருவேளை காந்திமதியையும் நீக்கிவிட்டு, ஜனகராஜுக்கு இன்ஸ்பெக்டர் வேடம் கொடுத்து கதையை மாற்றி அந்தப் பாடலை ஜெகஜோதியாக எடுத்திருக்கிறார் போலிருக்கிறது..!

கமலின் இன்னுமொரு வெற்றிப் படத்திலும் இதே போன்ற ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டு பின்பு உடன் நடித்த ஒரு மூத்த நடிகையின் எதிர்ப்பால்(உடன் நடித்த நடிகையுடன் நம்ம அண்ணன் அப்படி உருக்கி, உருட்டியிருந்தாராம்..) மீண்டும் மாற்றியமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. அது என்ன படமென்று பதிவர்களுக்குத் தெரியுமா..? தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லவும்..!
பாவம் சாருநிவேதிதா..!

 

மத்தளத்துக்கு 2 பக்கமும் இடி என்பதைப் போல இணைய உலகில் அனைத்துத் தரப்பினரின் கண்டனத்தையும் பெற்றிருக்கும் சாரு, கூடவே இலவச இணைப்பாக “பாரதிக்குப் பிறகு நீதான்யா..” என்று தன்னால் புகழப்பட்டவராலேயே மறைமுகமாக “கெட் அவுட்” என்று சொல்லப்பட்டு வெளியில் தள்ளப்பட்டுள்ளார்..! ஒருவகையில் இது எல்லாவற்றுக்கும் சாருவேதான் காரணம்..! அவருடைய இயல்பான குணமே பல நண்பர்களை அவரிடமிருந்து தள்ளிவைத்துவிட்டது..!காமம் என்பது கொண்டாடக் கூடியது என்றாலும், அதனை செய்வதற்கும்  இடம், முறைகள் இருக்கின்றன..! ராஜேந்திரகுமாரும், புஷ்பா தங்கத்துரையும்கூட தனிப்பட்ட முறைகளிலும், பேச்சுக்களிலும் தங்களது எழுத்தை துளியும் காட்டிக் கொள்ளாமல் நடந்து கொண்டவர்கள். ஆனால் எல்லாவற்றிலும் வெளிப்படையாக இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு சாரு இன்றைக்கு செய்திருக்கும் செயலினால் அவரது கவர்ச்சியான எழுத்து நடையால் ஈர்க்கப்பட்டவர்கள், அவருடைய அபிமானிகள்கூட கருத்துச் சொல்ல முடியாத தத்தளிப்பில் இருக்கிறார்கள்.

சாருவின் குணம் ஏற்கெனவே உலகமறிந்தது..! சாட்டிங்கில் பேசியிருக்கும், அவரது பேச்சுக்களில் குறைந்தது 60 சதவிகிதப் பேச்சு அவரது இணையத்தளத்திலேயே இருக்கிறது..! அதனால் இதுவொன்றும் எனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை. இப்படியெல்லாம் சாரு பேசவில்லை என்றால்தான், எனக்கு மயக்கத்தைக் கொடுத்திருக்கும்..!

இன்னொரு பக்கம் தனது புத்தகம் விற்கவேயில்லை என்றெல்லாம் புலம்பிக் கொண்டிருந்த சாருவுக்கு அவல் போட்டுவிட்டது கிழக்கு பதிப்பகத்தின் ஒரு வரிச் செய்தி. “தங்களுடைய விற்பனை இணையத்தளம் மூலம், அதிகமாக விற்பனையான புத்தகம் சாருவின் 'தேகம்'தான்..” என்று என்றைக்கு கிழக்கு அறிவித்ததோ, அன்றைக்கே இந்தத் திருப்பத்தை எதிர்பார்த்தேன்.
 

'உயிர்மை' இல்லையேல் சாரு இல்லைதான்.. ஆனால் சாரு இல்லாமல் போயிருந்தாலும் 'உயிர்மை' இருந்திருக்கும். அதற்கு சுஜாதா இருக்கிறார்.. மாலை அணிவித்தவரே கழுத்தை நெரிக்கவும் செய்கிறார் என்றபோது ஹமீதுவால் என்ன செய்ய முடியும்..? தன்னைக் காப்பாற்றிக் கொண்ட பின்புதானே நியாயம் கேட்க முடியும்.. அதுதான் சாருவின் கைகளை வெட்டிக் கொண்டிருக்கிறார்..!

4 பக்க நோட்டீஸுக்காக பத்திரிகா தர்மத்தை மீறி, பத்திரிகை வெளிவரும் முன்பேயே அதில் எழுதப்பட்ட கட்டுரையை இணையத்தில் போட்டுவிட்ட சாருவின் செயல் நியாயமில்லைதான். ஆனால் இமயமலை ரேஞ்ச்சுக்கு உயர்த்திப் பேசிக் கொண்டிருப்பவனுக்கு, எலிக்குஞ்சுக்கு கொடுக்கும் மரியாதைகூட இல்லாமல் நோட்டீஸ் விட்டு எச்சரிப்பது அந்த எழுத்தாளனின் தன்மானத்தை உரசிப் பார்த்துவிட்டது போல..!

சாரு எங்கேயும் நீண்ட நாட்கள் நீடித்து நிலைத்திருந்ததில்லை. யாருடனும் நெடிய நட்பையும் வைத்துக் கொண்டிருந்ததில்லை. அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டில் அமோகமாக முதலிடத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் 'துக்ளக்'கில் அருள் பாலித்து வரும் சாருவுக்கும், தமிழ்நாட்டின் நீண்ட நாள் பஞ்சாயத்து பெரிசு 'சோ'வுக்கும் எப்போது சண்டை மூளும் என்று எதிர்பார்த்து நாமும் காத்திருப்போமாக..!

இனி சாரு, தைரியமாக 'கிழக்கு' நோக்கி வீறு நடை போட்டுச் செல்லலாம்..! அங்கு போன பின்பாவது, வங்கிக் கணக்கு எண் கொடுத்து பணம் கேட்கும் நிலைமை அந்த அறிவழகனுக்கு வராமல் இருக்கட்டும்..!

விடைபெற்றார் நயன்ஸ்..!

பலவித சர்ச்சைகளுக்குப் பிறகு நடிகை நயன்தாரா, சினிமாவுலகத்தில் இருந்து பிரியாவிடை பெற்றிருக்கிறார்..!
தெலுங்கின் மூத்த  இயக்குநர் திரு.பாப்பு இயக்கிய “ஸ்ரீராம ராஜ்ஜியம்” என்ற தெலுங்கு படத்தில் தன்னுடைய போர்ஷனை முடித்துக் கொடுத்துவிட்டு அன்றைய நாளின் முடிவில் கண்ணீருடன் விடைபெற்றிருக்கிறார் நயன்தாரா..!


“கல்யாணமானா என்ன? பிள்ளை பெத்துட்டும், கொஞ்ச நாள் கழிச்சும் எத்தனை பேர் நடிக்க வரலை.. நீயும் திரும்பி வரலாம்..” என்று ஆறுதல் கூறியவர்களிடம், நடிக்கக் கூடாது என்ற தனது காதலரின் உத்தரவைச் சொல்லி கண் கலங்கியிருக்கிறார்..!


ம்.. பொல்லாத சனி உச்சியில் இருந்தால் யாரால் என்ன செய்ய முடியும்? எப்படியோ ஒரு நல்ல நடிகையை தமிழ்த் திரையுலகம் தற்போதைக்கு இழந்துவிட்டது..!


இப்படித்தான் நடிகை ரேவதி, சுரேஷ் மேனனை திருமணம் செய்ய முடிவெடுத்தபோது பத்திரிகையாளர்களிடம் உறுதியுடன் சொன்னார் “இனிமேல் நோ ஷீட்டிங்” என்று..! 

'புன்னகை மன்னன்' ஷூட்டிங்கின் இறுதி நாளில் கமலும், இயக்குநர் சிகரமும் ஆளுக்கொரு பொக்கே கொடுக்க அவர்களுக்கே கல்யாண பத்திரிகை கொடுக்காமல், தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டுமே அழைத்து திருமணம் செய்து கொண்டார்..! என்ன ஆச்சு..? திரும்பவும் “அரங்கேற்ற வேளை”யில் ரீ என்ட்ரி..! இதேபோல நயனும் திரும்பி வருவார் என்று எதிர்பார்ப்போம்..!
ரஜினியின் பேரன்கள்..!


இது எத்தனை நாளைக்கு என்றுதான் பத்திரிகையாளர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்..!


பிள்ளைகளை மீடியாக்களின் பார்வையில் படாமலேயே  வளர்க்கப் போவதாகச் சொல்லியிருந்த தனுஷ்-ஐஸ்வர்யாவின் சபதம், பிள்ளைகளின் பெரியப்பன் கல்யாணத்தில் புஸ்வானமாகிவிட்டது..!
சவுந்தர்யாவின் திருமணத்தில்கூட பிள்ளைகளை வெளிக்காட்டாமல் வேலைக்காரப் பெண்களிடம் கொடுத்து அரங்கத்தின் ஓரத்தில் அமர்த்தியிருந்தார்கள்.

'அது போன்ற குடும்ப வரலாற்று நிகழ்வுகளில் அந்தக் குழந்தைகள் இடம் பெறாதது பிற்காலத்தில் அவர்களுக்கு வருத்தமாக இருக்காதா?' என்றெல்லாம் பலவித கேள்விகளை  எழுப்பிய தனுஷின் குடும்பத்தினரின் வற்புறுத்தலால்தான், இந்தக் கல்யாணத்தில் மீடியாக்களின் முன் காட்டினார்களாம் பெற்றோர்கள்..! அதிலும் பெரியவன் யாத்ரா, இத்தூணூண்டு வேஷ்டியுடன் அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்து செல்லும் காட்சி சூப்பர்ப்..!

இதிலும் ஒரு சர்ச்சை. "புகைப்படக்காரர்கள் வர வேண்டாம்.. நாங்களே புகைப்படங்களை எடுத்துக் கொடுத்தனுப்புகிறோம்" என்ற தனுஷின் தந்தை, சொன்னதுபோலவே செய்தார். அதில் குழந்தைகளின் படங்களும் இடம் பெற்றிருந்தன. அதன் பின்பு திடீரென்று என்ன நினைத்தாரோ தனுஷ், அனைத்து பத்திரிகைகளுக்கும் போன் செய்து "பிள்ளைகள் போட்டோவை மட்டும் போட வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டாராம். அதற்குள்ளாகவே நக்கீரனிலும், பிற இணையத் தளங்களிலும் அதனை வெளியிட்டுவிட்டார்கள்.மறுநாள் 'தினத்தந்தி'யை தவிர மற்றப் பத்திரிகைகளில் இந்தப் புகைப்படம் வரவில்லை. இதற்காக 'தினத்தந்தி' நிருபரை தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளுத்துக் கட்டிவிட்டாராம் தனுஷ்.. இதற்காக ஒரு தனி பஞ்சாயத்து, தற்போது நிருபர்கள் மத்தியில் ஓடிக் கொண்டிருக்கிறது..!


பதவி படுத்தும் பாடு..!

அதிகாரமிக்க பதவிகள் கைக்குக் கிடைத்துவிட்டால் மனிதர்கள் உடனுக்குடன் மாறிவிடுவார்கள் போலும்..! பலவித உதாரணங்கள் வாரத்துக்கு ஒன்றாக வெளி வந்து கொண்டிருக்கிறது கோடம்பாக்கத்தில்..!

2 ஆண்டுகளுக்கு முன்பாக அதிரடியாக இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் நின்று ஜெயித்தபோது பாரதிராஜா-செல்வமணி கூட்டணியிடம் நிறையவே எதிர்பார்த்தார்கள் உதவி இயக்குநர்கள். சங்க அலுவலகத்தை ஹைடெக்காக மாற்றி, கூடுதல் அலுவலர்களை நியமித்து, இதுவரையில் அடையாள அட்டை பெறாதவர்களை போனில் வருந்தி, வருந்தி அழைத்து அடையாள அட்டைகளை அவர்களது பாக்கெட்டில் திணித்தது என்றெல்லாம் ஆரம்பத்தில் ஜரூர் காட்டத்தான் செய்தார்கள்..!

பின்பு போகப் போக தலைவர் பாரதிராஜாவின் இயல்பான குணத்தினால் ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது என்கிறார்கள் சங்கத்தில்..! சுயேச்சையாக போட்டியிட்டு, ஜெயித்து பொருளாளரான ஆர்.சுந்தர்ராஜன் சங்க நிர்வாகிகளுக்கு கன்வேயன்ஸ் கொடுத்து மாளவில்லை என்ற கோபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். 


அடுத்து வந்த D.-40 இயக்குநர்கள் சங்க ஆண்டு விழா கணக்கு, வழக்குகளில் இன்றுவரையில் தகராறு என்கிறார்கள் சில இயக்குநர்கள். D-40 நிகழ்ச்சிக்காக சன் டிவி, இயக்குநர்கள் சங்கத்திற்கு கொடுத்த  2 கோடியே 60 லட்சம் ரூபாய் பணத்தில் 1 கோடி ரூபாயை செலவு கணக்காகக் காட்டியிருக்கிறார்கள். அதிலும் 60 லட்சத்திற்கு கணக்கு ரெடி. மீதிக்கு..? அதுதான் சிக்கல் என்கிறார்கள்..! முறையான கணக்குகளை சமர்ப்பித்தால் மட்டுமே பதவியேற்பேன் என்று தற்போது பொருளாளராக தேர்வாகியிருக்கும் இயக்குநர் ஜனநாதன் உறுதியுடன் சொல்லிவிட, சங்கத்தில் கடந்த 10 நாட்களாக ஒரே கசமுசா.. இந்தக் கலாட்டாவினால் கடந்த 22-ம் தேதி பதவியேற்றிருக்க வேண்டிய நிர்வாகிகள் வரும் 11-ம் தேதி பதவியேற்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்..!

இதேபோல் சின்னத்திரையிலும் கமுக்கமான முறையில் ஒரு சின்ன கசமுசா.. கலைஞரின் செல்லப் பிள்ளை போல் இருந்த சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் விடுதலை மீதும் ஊழல் புகார் எழுந்துள்ளது. 


பையனூர் அருகே வீடு கட்டுவதற்காக தொழிலாளர்கள் கொடுத்திருந்த பணத்தில் 47 லட்சம் ரூபாயை கட்டுமான நிறுவனத்திடம் யாருக்கும் தெரியாமல் கொடுத்துவிட்டாராம். எங்களைக் கேட்காமல் பணத்தைக் கொடுத்தது ஏன் என்று கேட்டு விடுதலையைக் குடைந்து கொண்டிருக்கிறார்கள் மற்ற நிர்வாகிகள். 

கேள்விகள் அவருக்கு மிக, மிக நெருக்கமான நிர்வாகிகளிடமிருந்தே வந்துவிட்டதால் அவசரம், அவசரமாக செயல்பட்டு 17 லட்சம் ரூபாயை மீட்டுத் தருவதாகச் சொல்லியிருக்கிறார் விடுதலை. மீதி 30 லட்சம். ஸ்வாகாவாம்.. "ஏதோ வேலை செய்திருக்கிறார்கள். அதற்கான செலவு.." என்று கணக்கு சொல்கிறாராம் விடுதலை. என்னதான் வேலை செய்தார்கள் என்றால், கட்டுமான இடத்தில் மண்ணடித்தார்களாம்.. அதற்காக 30 லட்சம் செலவு என்பது டூ மச்சாக இல்லை..!

வரும் 10-ம் தேதி சின்னத்திரை இயக்குநர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம். அன்றைக்கு அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள் அனைத்துத் தரப்பினரும்.. அதே நாளில் சின்னத்திரை எழுத்தாளர்கள் சங்கத்திற்கும் தேர்தல். விடுதலையிடம் சொல்லிவிட்டுத்தான் அந்தத் தேதியை தேர்தல் நாள் என்று தெரிவித்தார்கள் எழுத்தாளர்கள் சங்கத்தினர். ஆனாலும் விடுதலை வேண்டுமென்றே அதே 10-ம் தேதி இயக்குநர்கள் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் என்றும் அறிவித்துவிட.. இரண்டு பக்கமும் கோபக்கனல் வீசுகிறது..!

இதேபோல் தொழிலாளர்கள் யூனியனிலும் கோல்மால். உறுப்பினர்களுக்காக வாங்கி வைத்திருந்த நிலத்தில் கொஞ்சத்தை ஒரு கல்லூரியினர் கேட்டார்கள் என்று சொல்லி அடிமாட்டு விலைக்கு தூக்கிக் கொடுத்திருக்கிறார்கள் சங்க நிர்வாகிகள். இன்னும் கொஞ்சம் நிலங்களையும் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பட்டா போட்டுக் கொடுத்துவிட்டார்களாம்..! பாவம் அப்பிராணி தொழிலாளர்கள்.. வட்டிக்கு வாங்கியும், மனைவி தாலியை அடகு வைத்தும் கட்டிய பணத்தில் இப்படி ஆள், ஆளுக்கு கை வைத்து இனிமா கொடுத்தால் அவர்கள் என்னதான் செய்வார்கள்..?

அரசியல்வியாதிகளைப் போல இந்தச் சங்க நிர்வாகிகளும் தனிக்காட்டு ராஜாபோல் காசு சம்பாதிக்கத் துவங்கியிருக்கும் இந்தச் சூழல், ஏற்கெனவே புதைகுழியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் தமிழ்ச் சினிமாவுலகத்துக்கு நல்லதல்ல..! ஏற்கெனவே பொறுப்பில் இருப்பவர்கள் மீண்டும் அதே பதவிகளுக்கு 2 முறைக்கு மேல் போட்டியிடக் கூடாது என்று அனைத்து சங்கங்களிலும் இப்போதுதான் கூக்குரல் எழுப்பியிருக்கிறார்கள். இது நடைமுறைக்கு வருவதற்குள்ளாக மொத்தத்தையும் சுருட்டிவிடுவார்களே..!

படித்ததில் பிடித்தது..!

கேள்வி : ‘உங்களை விமர்சனம் செய்யும்போது இந்துத்வாவுடன் தொடர்புப்படுத்தி விமர்சனம் செய்வது ஏன்?’’
 
எழுத்தாளர் ஜெயமோகனின் பதில் :

‘‘இதில் ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், எந்த எழுத்தாளர்கள் மீது இது போன்ற விமர்சனங்கள் வரவில்லை என்பதுதான்.  ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, புதுமைப்பித்தன் என்று தமிழ் பண்பாட்டுக்கு பங்களித்த எல்லா எழுத்தாளர்கள் மீது இந்துத்வா, அடிப்படைவாதம், பார்ப்பனீயம் என்கிற அடிப்படையில் அவர்கள் மீது விமர்சனங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன.


இங்கு தமிழ்நாட்டில் இரண்டு வகையான அரசியல் கெடுபிடிகள் இருக்கின்றன. ஒன்று திராவிட இயக்கம் சார்ந்தது. மற்றொன்று மார்க்ஸிஸ்ட் சார்ந்தது. இதில் விவரமான மார்க்ஸிஸ்ட் உண்டு. அதாவது மார்ஸியம் என்றால் என்ன என்று தெரிந்து வைத்திருக்கும் மார்க்சிஸ்ட்டுகள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எண்ணிக்கையில் குறைவு.

பெரும்பாலானவர்கள் இந்த கொள்கைகளை மேலோட்டமாக தெரிந்து கொண்டு மேலோட்டமாக பேசிக் கொள்கிறார்கள். நமது பல்லாயிர வருட பாரம்பரியமோ, தத்துவ சிந்தனையோ அதனுடைய கலையோ இந்து சம்பந்தமாக இருக்கிறது. அதைப் பற்றி ஒருவர் பேசினாலோ அவர் இந்துத்வா சார்ந்தவர் என்று கூறி விடுகின்றனர்.  இப்படி எல்லாம் சொல்பவர்கள் படிக்காதவர்கள். இலக்கியத்தைப் பொறுத்தவரை பெரிய சிக்கல் என்னவென்றால், உண்மையிலேயே புத்தகங்களைப் படித்து தன்னுடைய கருத்துகளை சுயமாக உருவாக்கிக் கொண்டவர்கள் பத்து பேர்தான் இருப்பார்கள்.  நூறு பேர் எதையுமே படித்திருக்க மாட்டார்கள். ஒரு அரட்டையில் உட்கார்ந்து கொண்டு ஒரு கருத்து உருவாக்கிக் கொண்டிருப்பார்கள்.

இது மாதிரி கருத்துகளை சொல்லக் கூடியவர்கள் உண்மையில் சொல்லப் போனால் எதையும் படித்திருக்க மாட்டார்கள். நேரில் அவர்களிடம் போய், “நீ என்ன படித்திருக்கிறாய்..? எந்த புத்தகத்தின் அடிப்படையில் நீ சொல்கிறாய்...?” என்றால் அவர்களால் சொல்ல முடிவதில்லை. “எல்லோரும் உங்களை அப்படிச் சொல்கிறார்கள்” என்பார்கள். அரட்டையில் வரக் கூடிய கருத்துகளுக்கு எந்த மதிப்பீடும் கிடையாது. உண்மையான கருத்துகள், ஆர்வம் போன்றவை இல்லாதவர்களுடைய கூற்றுகளை நான் பெரும்பாலும் பொருட்படுத்துவதில்லை.’’

நன்றி : சூரியக்கதிர்-ஜூலை-01-15 இதழ்

பார்த்ததில் பிடித்தது..!