14-07-2012
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பின்பு இத்தனை ரசிகர் பட்டாளம் தனக்கு மட்டுமே உண்டு என்பதை மீண்டும் நி்ரூபித்திருக்கிறார் அல்டிமேட் ஸ்டார் அஜீத். அதற்காக ஆந்திராவை போன்று விடியற்காலை 4 மணிக்கெல்லாம் ஸ்பெஷல் ஷோக்கள் வைத்து சினிமா தொழிலையும், ரசிகர் பட்டாளத்தையும் கெடுக்க வேண்டுமா என்ன..? மற்ற நடிகர்களும் தங்களது செல்வாக்கை நிரூபிக்க இது போன்று விடியற்காலை ஷோக்களை வைக்கத் துவங்கினால் வளர்ந்து வரும் இளைஞர்களின் கதி என்ன ஆவது..? ஏற்கெனவே சினிமாக்காரர்களால்தான் சமூகம் கெட்டுச் சுவராகிவிட்டது என்று ராமதாஸில் இருந்து நேற்று முளைத்த இந்து மக்கள் கட்சிவரையிலும் தொண்டை கிழிய கத்தி வருகிறார்கள்..! இதில் சிறிதளவுக்காவது உண்மையிருக்கும் நிலையில், இது போன்ற இளைஞர்களின் இயல்பு வாழ்க்கையை மாற்றும் சினிமா கொண்டாட்டங்கள் தேவைதானா என்பதை சினிமாவுலகத்தினர் சிந்திக்க வேண்டும்..!
1978-ம் வருடம் சலீம் ஜாவேத் எழுதிய டான் கதையில் பிறந்த பில்லாவுக்கு இந்தப் படத்தின் மூலம்தான் முன்னுரை எழுதியிருக்கிறார்கள். பில்லா எப்படி இந்தக் கடத்தல் தொழிலுக்கு வந்தான் என்கிற துவக்கக் காலக் கதையை பில்லா-2 என்ற இந்த 3-ம் பாகத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
[1983-ல் வெளிவந்த அல்பாசினோ நடித்த SCARFACE படத்தின் கதை அமைப்பும், பல காட்சிகளும் இதில் இடம் பெற்றுள்ளது..!
2008-ல் வெளிவந்த BODY OF LIES படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சி இதில் அசத்தலாக படமாக்கப்பட்டுள்ளது..!]
இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு அகதியாக வந்து சேர்கிறார் டேவிட் பில்லா. தாய், தந்தை பற்றிய செய்திகள் சொல்லப்படாமல், ஒரு அக்கா.. அந்த அக்காவுக்கு ஒரு பெண்.. இருப்பது சென்னையில் என்பதை மட்டும் பதிவு செய்கிறார். மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து சென்னைக்கு வைரத்தை கடத்தும் தொழிலில் தெரியாமல் இறங்குகிறார். தெரிந்த பின்பு அதையேன் தொடர்ந்து செய்யக் கூடாது என்பதால் கூடுதலாக சதக், சதக் கொலைகளையும் செய்யத் துவங்குகிறார். இது ஸ்டேட் விட்டு ஸ்டேட்டாக பெரிதாகி, இறுதியில் கண்டம் விட்டு கண்டம் தாவுகிறார்..!
தன்னை வளர்த்துவிட்ட கோவா டான் அப்பாசி, தன் மீது சந்தேகம் கொண்டு கொல்லப் பார்க்க அவரையும் போட்டுத் தள்ளுகிறார் பில்லா. தன் தொழில் சாம்ராஜ்யத்திற்கு இடையூறு செய்த உலகளாவிய மாபியா தலைவனான டிமிட்ரியுடன் மோதி அவனையும் காலி செய்துவிட்டு தனிக்காட்டு ராஜாவாகி பில்லா பட்டத்துக்கு வருகிறார்.. இதுவரையிலும் கொண்டு வந்து அப்படியே அந்தரத்தில் நிறுத்திவிட்டுப் போயிருக்கிறார்கள்..! இனி அடுத்தடுத்து பாகங்கள் வருமோ என்னவோ..?
“என்னோட வாழ்க்கைல ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா..” என்ற புல்லரிப்பான டயலாக்கோடு முதல் காட்சியிலேயே பாயத் துவங்கும் தல.. கடைசிவரையிலும் பாய்ந்து கொண்டேயிருக்கிறார். சீறித் தள்ளிக் கொண்டேயிருக்கிறார். கொலை செய்து கொண்டேதான் இருக்கிறார்..! அஜீத்துக்கு ஏற்ற ரோல். அதனால் அனுபவித்து செய்திருக்கிறார்..!
டானாக உருமாறு்ம்வரையிலான அஜீத்தின் தோற்றம், அதற்குப் பின் அவரது மாடுலேஷன், ஸ்டைல், நடை என்று அத்தனையும் ஸ்டைலிஷாக மாறிவிட அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.. ஆனால் நமக்கு..? இன்னும் எத்தனை படங்கள் அவர் இதே போல் டான் வேடத்தில் நடிக்க முடியும். கோட், சூட் போட்டு வில்லத்தனம் செய்ய அஜீத்தால் மட்டுமே முடிகிறதுதான். அதற்காக அத்தனையும் இப்படியே என்றால் போரடிக்காதா..? முன் தொப்பையும் விழுந்து, ஸ்டண்ட் காட்சிகளில் அவரது கஷ்டம்கூட கண்ணில் தெளிவாகத் தெரிகிறது..!
நடிப்பெல்லாம் அஜீத்துக்கு தேவையே இல்லை என்பதுதான் அவரது ரசிகர்களின் விருப்பம்.. ஸ்டைலே போதும் என்பதால் அளவோடு நடித்திருக்கிறார்.. அதிலும் முதல் காட்சியில் மட்டுமே அவரது நடிப்பை கொஞ்சமாவது சொல்லலாம்.. மற்றக் காட்சிகளிலெல்லாம் திரைக்கதையை மட்டுமே பாருங்கள் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
பார்வதி ஓமணக்குட்டன் மற்றும் புருனா அப்துல்லா என்ற இரண்டு ஹீரோயின்களுமே வீணாக்கப்பட்டுள்ளனர்.. மாமா.. மாமா. என்ற பார்வதியின் கேரக்டர் ஸ்கெட்ச் பின் காட்சிகளில் திரைக்கதையை நிரப்ப மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார். ஒரு டூயட்டாவது எதிர்பார்த்தேன். மூச்.. அப்பாவியாக கொல்லப்பட்டுவிட பரிதாபம்தான்..!
புருனா அப்துல்லாஜி.. பிரஸ் மீட்டுக்கே அப்படியொரு டிரெஸ்ஸிங்கில் வந்து புகைப்படக்காரர்களை அலற வைத்தவர்.. படத்தில் டூ பீஸ் உடையில் வரும் ஒரு சில நொடிகள் தியேட்டரே அதிர்கிறது..! ஆனாலும் முகத்தின் குளோஸப்பில் தாங்க முடியவில்லை..! அப்பாஸியின் செட்டப் என்று காண்பித்து, அந்த செட்டப் அஜீத்தை செட்டப் செய்வதை கண்களாலேயே காட்டிவிட்டு ஒரு சீன்கூட ஓட்டாமல் போனது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இப்போ மட்டும் அஜீத்தின் கேரக்டரை கெடுக்காம இருக்கணுமாக்கும்..?
தீவிரவாதிகள்.. கள்ளக் கடத்தல் பேர்வழிகளை முஸ்லீம்களாக சித்தரித்து வழக்கம்போல சினிமா புத்தியைக் காட்டிவிட்டார் இயக்குநர். கூடவே போனால் போகிறதென்று துணைக்கு இந்து பக்திமான் வேடத்தில் இருக்கும் இளவரசுவைக் காட்டி ஹோட்டல் தொழில் நடத்தியே சைட் பிஸினஸாக வைரக் கடத்தல், பொலி போடும் தொழில் செய்பவனாக காட்டி தப்பித்துவிட்டார் இயக்குநர்..!
எதார்த்தம் காட்டுகிறேன் பேர்வழி என்று திருச்சிற்றம்பலம் என்ற அழைப்புக்கு சிவசிதம்பரம்ன்னு நன்றி காட்ட வேண்டும் என்ற கோரிக்கையை இதுவரையிலும் யாரும் பக்தி படங்களில்கூட காட்சியாக வைத்ததில்லை. எழுத்தாளர், வசனகர்த்தா, அண்ணன் இரா.முருகன் புண்ணியத்தில் தமிழகத்திற்கு தெரிவிக்கப்பட்டுவிட்டது..! நன்றிகள்..!
அப்பாஸியாக நடித்த சுதன்சனு பாண்டே நல்லதொரு தேர்வு.. கோவா மாநிலத்தை கையில் வைத்திருக்கும் ஒரு டானாக காட்சியளித்திருக்கிறார். இந்தியாவிலேயே கோவா மாநிலத்தில்தான் முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர்கள், மந்திரிகள் ஆகியோர் போதை மருந்து கடத்தல் கும்பலுடன் தொடர்பு என்ற குற்றச்சாட்டின்கீழ் சிறைக்குச் சென்றுள்ளார்கள். அரசியல்வியாதிகளுடனான தொடர்பில் இன்னமும் அங்கே அப்பாஸி போன்ற டான்கள் இருப்பது சாத்தியம்தான்..!
ஜார்ஜியாவில் சர்வதேச ஆயுத வியாபாரியாக அடையாளம் காட்டப்பட்டுள்ளார் டிமிட்ரியாக நடித்துள்ள வித்யூத் ஜாம்வெல். மிகச் சிறந்த ஸ்டண்ட் கலைஞரான இவருக்கு ஸ்டண்ட்டில் மட்டும் தீனி கிடைக்கவில்லை..! மற்றபடி அஜீத்தின் கெத்துக்கு ஏற்ற வில்லனாகத்தான் தென்படுகிறார்..! ரஞ்சித், மனோஜ் கே.ஜெயன், Sreemaan, ரஹ்மான் என்று கொஞ்சம் தெரிஞ்சவர்களும் வந்து, வந்து செல்கிறார்கள்..!
எந்த நடிப்பையும் எதிர்பார்க்காமல் காட்சிகளின் கோணம், கேமிரா.. நறுக்கென்ற எடி்ட்டிங்.. நச்சென்ற வசனங்கள் மூலமாக வேகவேகமாக காட்சிகளை நகர்த்தியிருப்பதால் அனைத்துமே மிக நன்றாக இருப்பது போலவே தோன்றுகிறது..! அவ்வளவுதான்..! ஆனால் மங்காத்தா என்ற பொழுது போக்கு சினிமாவின் 25 சதவிகிதத்தைக்கூட இப்படம் பூர்த்தி செய்யவில்லை என்பது மட்டும் உண்மை..!
முதற் பாதியில் திரைக்கதையே வேகமாக நகர்த்தி அஜீத்தை டான் வேடத்தில் கொண்டு வந்து உட்கார வைத்துவிட்டு, பிற்பாதியில் இனிமேல் என்ன செய்வது என்பதை ரொம்பவே யோசித்திருக்கிறார்கள்...! கஸ்டம்ஸில் சிக்கியிருக்கும் கடத்தல் லாரியை அஜீத் கடத்திக் கொண்டு போகும் ஒரு காட்சியே போதும்..! எம்புட்டு யோசிச்சிருக்காங்க..!?
கோவாவில் இருந்து ஜார்ஜியாவுக்கு மூன்றே பேருடன் பறந்து வந்து கலாஷ்கோனிவ் துப்பாக்கியுடன் அஜீத் சண்டையிடும் காட்சியை படமாக்கியிருக்கும் விதத்தையெல்லாம் பார்த்தால் வெங்கட்பிரபுவின் காலைத் தொட்டு கும்பிட வேண்டும் போல் உள்ளது.. அதிலும் ஒரு குண்டு அஜீத்தின் நெஞ்சைத் தாக்குகிறது.. மனிதர் அதற்கு மேல் கிளைமாக்ஸ் வரையிலும் தாக்குப் பிடிப்பதும், தக்காளி சூஸின் சிதறல்கள் அடுத்தடுத்த ஷாட்டுகளில் காணாமல் போவதும், வருவதுமாக.. அட்டகாசமான இயக்கத்தைக் கொடுத்திருக்கிறார்கள்..!
இதுவே இப்படியென்றால் பாடல்கள்.. யுவன் சங்கர் ராஜா எங்கேயிருந்து இந்த பிஜிஎம்மை கண்டெடுத்தார் என்று தெரியவில்லை.. அது பாட்டுக்கு 5 வது ரீலில் இருந்து கடைசிவரையிலும் ஒன்று போலத்தான் ஓடியது..! டன் டனா பாடல் மட்டுமே இதில் ஹிட்டடித்திருந்தது.. பாவிகள் அதையும்.. எண்ட் டைட்டிலில் போட்டு வீணடித்திருக்கிறார்கள்..! மற்றபடி ரஞ்சித்தை கொலை செய்ய வரும்போது விபச்சார விடுதி பாடல் காட்சிகளில் ஆடும் நடன நங்கைகள் அத்தனை பேரும் ஹீரோயின்கள்தான்.. இவர்களையெல்லாம் இப்படி தேடித் தேடிப் பிடித்து இழுத்து வந்த நேரத்தில் திரைக்கதையை இன்னும் கொஞ்சம் டிங்கரிங் வேலை செய்திரு்க்கலாம்..!
படத்தில் எதுவுமே நல்லாயில்லை என்று சொல்ல முடியாது.. வசனம், எடிட்டிங், ஒளிப்பதிவு மூன்றுமே அசத்தல்..! இரா.முருகனும், முகமது ஜாபரும் இணைந்து எழுதியிருக்கும் வசனங்கள் படத்திற்கு மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட்.. “டேவிட் பில்லா யாருன்னு கேட்டீல்ல தெரிஞ்சுக்கிட்டு சாவுடா..” என்று சொல்லிவிட்டுச் சாவடிக்கும் அந்தக் காட்சியில் வசனமும் சேர்ந்தே நடித்திருக்கிறது.. சபாஷ்..!
கோவாவின் அழகான அமைப்பியலையும், ஜார்ஜியாவின் அழகையும் தனது கேமிரா கண்களால் மிக அற்புதமாக படம் பிடித்திருக்கிறார் ஆர்.டி.ராஜசேகர்..! அதிலும் அப்பாஸியின் அந்த படகு வீட்டையும், கோவா கடலையும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போலத் தோன்றியது..! பாடி ஆஃப் லைஸ் படத்தில் இருந்த சுட்ட காட்சியிலும் காமிரா கோணமே காப்பி என்றாலும், அசத்தல்தான்..! படத் தொகுப்பில் ஒரு குறையும் வைக்கவில்லை சுரேஷ் அர்ஸ். இன்னும் சொல்லப் போனால் படத்திற்கு இத்தனை இறுக்கம் கிடைத்தது அவரால்தான்..! அப்பாஸியிடம் சண்டையிட்டுவிட்டு இன்னொரு தாதாவை சந்திக்கப் போகுமிடத்தில் அஜீத்தை கொலை செய்ய நடக்கும் சண்டை காட்சியில் எடிட்டிங் தத்ரூபம்..! அதுதான் மிகப் பெரிய பலமாகவும் இருக்கிறது பல காட்சிகளில்..!
நான் ஈ போன்ற படங்களிலெல்லாம் லாஜிக் பார்க்கவே கூடாது என்று எழுதியவன்தான் நான். ஆனால் இது போன்ற கமர்ஷியல் ஹிட்டடிக்கும் படங்களில் லாஜிக் பார்ப்பது அவசியம் தேவைதான்..! இத்தனை கொலைகள்.. கொள்ளைகள் என்று இருந்தும் மருந்துக்குக்கூட சென்னை போலீஸை கூட கண்ணில் காட்டாதது எவ்வளவு பெரிய மடத்தனம் என்பதை இயக்குநர் ஏன் உணரவில்லை..? கோவா மாநில முதல்வரை ஏதோ பஞ்சாயத்து தலைவரை போல காண்பித்து அவரை கொலை செய்யும் காட்சியை எடுத்திருப்பதை என்னவென்று சொல்வது..? உலக அளவிலான கள்ளச் சந்தையில் ஆயுத விற்பனை இப்போது ஜார்ஜியா நாட்டில்தான் அதிகம் நடைபெறுவதாகச் சொல்கிறார்கள். அதனால்தான் ஜார்ஜியாவை களமாக்கியிருக்கிறார்களாம்.. அங்கேயும் இத்தனை கொலைகள்..? இத்தனை சம்பவங்களா..? டிரெயினையே கடத்தல் தளமாக்கி கொண்டு செல்வதெல்லாம் ரொம்பவே டூ மச்..! இவர்களது படப்பிடிப்பிற்கு ஜார்ஜியா நாட்டு அரசே, ராணுவ ஹெலிகாப்டரை ப்ரீயாக கொடுத்ததற்காக இத்தனை ஆர்ப்பாட்டமான கிளைமாக்ஸ் காட்சியை சுட்டு வந்திருக்கிறார்கள்..! அஜீத் டூப் போடாமல் நடித்திருக்கும் காட்சி அது என்று 1000 தடவைகள் சொன்னாலும் மனதில் ஒட்டவில்லை என்பது மட்டுமே உண்மை..!
ஒரு பெரிய மாஸ் நடிகர்.. எவ்வளவு பணம் போட்டாலும் வந்துவிடும்.. ரசிகர்கள் பட்டாளம் லட்சத்தில்.. உருப்படியாய் எடுத்து பெயரெடுத்திருக்கலாம்..! கோட்டைவிட்டது இயக்குநர்தான்..! படு பயங்கர சென்சார் கட்டுகளுடன் ஏ சர்டிபிகேட் கொடுத்திருக்கும்போதே இந்தப் படத்தின் தரம் புரிந்துவிட்டது..!
எது எப்படியிருந்தாலும் தல அஜீத் இருப்பதால் இதுவே போதும் என்ற நினைப்பில்தான் அவரது ரசிகர்கள் இருக்கிறார்கள்..! எந்தப் பக்கம் திரும்பினாலும் ஹிட் என்கிறார்கள். ஹிட் இல்லை என்று சொன்னால் உயிரோடு எரித்துவிடுவார்கள் போலிருக்கிறது.. விஜய் ரசிகர்கள் எவ்வளவு நல்லவர்கள் என்பது இப்போதுதான் தெரிகிறது.. புரிகிறது..! ஆனால் உண்மை அடுத்த புதன்கிழமை தெரிந்துவிடும்.. எப்படி போனாலும் போட்ட பணம் இப்போதே வந்துவிட்டது என்றாலும், புகழ் என்ற ஒன்று உள்ளதே..! இது ரசிகர்களுக்குத் தேவையி்லலைதான். ஆனால் அஜீத்திற்குத் தேவை.. விஷ்ணுவர்த்தனாவது இந்தப் படத்தின் பலவித விமர்சனங்களைப் படித்துவிட்டு தனது அடுத்தப் படத்தில் ‘தல’யை இன்னும் கொஞ்சம் மோல்டிங் செய்து நல்லபடியாக வழங்குவார் என்று எதிர்பார்த்துக் காத்திருப்போம்..!
பில்லா-2-ஐ ஒரு முறை பார்க்கலாம்..!
|
Tweet |
28 comments:
வெற்றிப் படத்தை
முதல் நாளே பார்த்து
முழுமையான விமர்சன
எழுதியமைக்கு நன்றிகள்
ஓய் நீர் என்னமோ துப்பறியும் சாம்பு கணக்கா எல்லாம் சொல்வீர்னு பார்த்தா இப்படிக்கீறீர்,
நாகார்ஜுனா நடிச்ச ஒரு தெலுகு படம் தமிழ்ல சிங்க வேட்டைனு வந்துச்சு அதுல வரது தான் மீதி படம் எல்லாம், டோலட்டி ஒரு படம் விடாம காப்பி அடிச்சுக்கீறார் :-))
சலங்கை ஒலில ஸ்டில் கேமிராவில படம் எடுக்க தெரியாம ஏமாத்தின பழக்க தோஷம் இன்னும் விடலை டோலட்டிக்கு :-))
***விஜய் ரசிகர்கள் எவ்வளவு நல்லவர்கள் என்பது இப்போதுதான் தெரிகிறது.. புரிகிறது..!***
என்னண்ணே இது சின்னப்புள்ளத்தனமா?
ரசிகன்னு வந்துட்டா எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான். நீங்க விசயோட ரசிகர்னால உலகத்தில் உள்ள விசய் ரசிகர் எல்லாரையும் "கொஞ்சம்" நல்லவர்களாக்கனுமா என்ன?
இந்த இயக்குனரு இருக்கான்ல அவனுக்கு ஒரு நல்ல தமிழ்ப் பேரு வைக்கச் சொல்லுங்க (வ்ருண் மாதிரி ஒண்ணு :)) ). வாயிக்குள்ள நொழைய மாட்டேங்கிது அவன் பேரு. மக்கள் சொல்றாப்பிலே ஒரு பேரு தேர்ந்தெடுக்கமுடியாத இவன் எடுக்கிற படம் எப்படி இருக்கும்?
படம் ஆவெரேஜ் இல்லைனா அதுக்கு கீழே போலதான் தோனுது. சகுனி பிக் அப் ஆணாலும் ஆயிடும் :)))
சார்,,,,ஒரு டான் பயோகிராபிய இத விட எப்டி எடுக்க முடியும் ....சில குறைகள் இருந்தாலும் பில்லா ஒரு நல்ல படமே....
[[[ராம்ஜி_யாஹூ said...
வெற்றிப் படத்தை முதல் நாளே பார்த்து முழுமையான விமர்சன எழுதியமைக்கு நன்றிகள்.]]]
வெற்றிப் படமா..? அதுக்குள்ள முடிவே பண்ணிட்டீங்களா ராம்ஜி..?
[[[வவ்வால் said...
ஓய் நீர் என்னமோ துப்பறியும் சாம்பு கணக்கா எல்லாம் சொல்வீர்னு பார்த்தா இப்படிக்கீறீர், நாகார்ஜுனா நடிச்ச ஒரு தெலுகு படம் தமிழ்ல சிங்க வேட்டைனு வந்துச்சு. அதுல வரதுதான் மீதி படம் எல்லாம். டோலட்டி ஒரு படம் விடாம காப்பி அடிச்சுக்கீறார் :-))]]]
அப்போ டோல்ட்டிக்கு முந்திக்கிட்டார் ஒரு தெலுங்கு இயக்குநர்..! வாழ்க..!
[[[சலங்கை ஒலில ஸ்டில் கேமிராவில படம் எடுக்க தெரியாம ஏமாத்தின பழக்க தோஷம் இன்னும் விடலை டோலட்டிக்கு :-))]]]
இதுக்கு அவர் என்ன செய்வாரு.. டைரக்டர் என்ன செய்யச் சொல்றாரோ அதைச் செஞ்சிருக்காரு.. அதுக்கும், இதுக்கும் ஏன் முடிச்சுப் போடுறீர் சாமி..?
[[[வருண் said...
***விஜய் ரசிகர்கள் எவ்வளவு நல்லவர்கள் என்பது இப்போதுதான் தெரிகிறது.. புரிகிறது..!***
என்னண்ணே இது சின்னப்புள்ளத்தனமா?
ரசிகன்னு வந்துட்டா எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான். நீங்க விசயோட ரசிகர்னால உலகத்தில் உள்ள விசய் ரசிகர் எல்லாரையும் "கொஞ்சம்" நல்லவர்களாக்கனுமா என்ன?]]]
நேற்றைய இணையத்தளங்களை பார்த்த எபெக்ட்ல எழுதினது அது..!
[[[இந்த இயக்குனரு இருக்கான்ல அவனுக்கு ஒரு நல்ல தமிழ்ப் பேரு வைக்கச் சொல்லுங்க (வ்ருண் மாதிரி ஒண்ணு :)) ). வாயிக்குள்ள நொழைய மாட்டேங்கிது அவன் பேரு. மக்கள் சொல்றாப்பிலே ஒரு பேரு தேர்ந்தெடுக்க முடியாத இவன் எடுக்கிற படம் எப்படி இருக்கும்?]]]
அதுக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம்..? வேற்று மொழிக்காரர்.. ஹிந்தி வாலாக்கள் மாதிரி சஜீத் நாடியத்வாலான்னு பேர் வைச்சுக்கிட்டு அங்க இல்லையா..? அது மாதிரிதான்..! அசின் தொட்டம்கால் பேரை மட்டும் நாம சுருக்கி அசின்னு கூப்பிடலையா..? இனிமே சாக்ரின்னு கூப்பிட்டுட்டு போயிருவோம்..!
[[[படம் ஆவெரேஜ் இல்லைனா அதுக்கு கீழே போலதான் தோனுது. சகுனி பிக் அப் ஆணாலும் ஆயிடும் :)))]]]
சகுனியை பல தியேட்டர்கள்ல தூக்கியாச்சு. அதைத் தூக்கிட்டுத்தான் நான் ஈ போட்டாங்க. இப்போ நான் ஈயையும் தூக்கிட்டு இதைப் போட்டுட்டாங்க..!
[[[இளம் பரிதி said...
சார்.. ஒரு டான் பயோகிராபிய இத விட எப்டி எடுக்க முடியும்.... சில குறைகள் இருந்தாலும் பில்லா ஒரு நல்ல படமே....]]]
ஓகே.. உங்களுக்குப் பிடிக்கதுன்னா என்னால ஒண்ணும் சொல்ல முடியாது.. என்ஜாய்..!
ஒரிஜினல் பில்லாதான் பெஸ்ட். பில்லா ஒன்னு மனசுல ஒட்டவே இல்லை. ரெண்டாவது பாகம் பாக்கற ஐடியா இல்லை
Vakkirathanamana vimarsanam .
[[[எல் கே :
ஒரிஜினல் பில்லாதான் பெஸ்ட். பில்லா ஒன்னு மனசுல ஒட்டவே இல்லை. ரெண்டாவது பாகம் பாக்கற ஐடியா இல்லை.]]]
நம்ம ரசனையும் மாறிருச்சு.. ஜெனரேஷனும் மாறிருச்சு..! இதுதான் பிரச்சினை..!
[[[nimalakanthan
Vakkirathanamana vimarsanam.]]]
இதுல என்ன வக்கிரத்தனம் இருக்கு..?
// முன் தொப்பையும் விழுந்து///
இது விமர்சனத்திற்கு கொஞ்சம் கூட தேவை இல்லாத விஷயம்.. உங்களை போன்ற ஒருவரிடம் இருந்து இதனை நாம் எதிர்பார்க்கவே இல்லை...முன்பு ஏற்பட்ட விபத்துக்காக ஸ்டீராய்டு உள்ள மருந்து சாப்பிடுவதால் உடம்பு பெரிதாகி விடுகிறது என்றும் உடற்பயிற்சி செய்தால் முதுகு வலிக்கிறது என்றும் அதனால் தான் உடம்பை சரிவர பராமரிக்க முடியவில்லை என்றும் அஜித் பலமுறை கூறிவிட்டார்... தலையிடம் நாம் அதெல்லாம் ஒரு குறையாக நினைப்பதே இல்லை...
ஏன் மீண்டும் இந்த தொப்பை விவகாரத்தை பெரிது படுத்துகுறீர்கள்?
தலையின் கதை தேர்வு! இயக்குனர் தேர்வு! எதை வேணும் என்றாலும் குறை கூறுங்கள்.. ஆனால் இந்த தொப்பை விடயத்தை மீண்டும் மீண்டும் எழுதி உங்களின் மதிப்பை குறைத்து கொள்ளாதீர்கள்.
[[[Pradeep said...
//முன் தொப்பையும் விழுந்து///
இது விமர்சனத்திற்கு கொஞ்சம் கூட தேவை இல்லாத விஷயம்.. உங்களை போன்ற ஒருவரிடம் இருந்து இதனை நாம் எதிர்பார்க்கவே இல்லை. முன்பு ஏற்பட்ட விபத்துக்காக ஸ்டீராய்டு உள்ள மருந்து சாப்பிடுவதால் உடம்பு பெரிதாகி விடுகிறது என்றும் உடற்பயிற்சி செய்தால் முதுகு வலிக்கிறது என்றும் அதனால்தான் உடம்பை சரிவர பராமரிக்க முடியவில்லை என்றும் அஜித் பலமுறை கூறிவிட்டார். தலையிடம் நாம் அதெல்லாம் ஒரு குறையாக நினைப்பதே இல்லை.]]]
நான் அஜீத்தின் தீவிர ரசிகனில்லை. ஆகவே எனக்கு உங்களைப் போன்று ரசிக்க கட்டாயமில்லை பிரதர்..!
[[[ஏன் மீண்டும் இந்த தொப்பை விவகாரத்தை பெரிதுபடுத்துகுறீர்கள்?
தலையின் கதை தேர்வு! இயக்குனர் தேர்வு! எதை வேணும் என்றாலும் குறை கூறுங்கள்.. ஆனால் இந்த தொப்பை விடயத்தை மீண்டும் மீண்டும் எழுதி உங்களின் மதிப்பை குறைத்து கொள்ளாதீர்கள்.]]]
இப்படியே ஒவ்வொண்ணையும் விட்டுக்கிட்டே போனா கடைசீல வணக்கம் மட்டும்தான் மிச்சமாகும்..!
படத்தோட நிறை குறைன்னு ரொம்ப நல்லா அலசி இருக்கேங்க...ரொம்பவே நல்ல விமர்சனம்...
SCARFACE படத்துல இருந்தது கூட ஒரு காட்சியை உபயோக படுத்தி இருக்காங்க...முதல் போதை மருந்து டீல்...
நேரம் இருந்தா என்னோட கடை பக்கம் கொஞ்சம் வாங்க அண்ணே...நானும் இந்த படத்தை பத்தி எழுதி இருக்கேன்..
http://hollywoodraj.blogspot.in/2012/07/2.html
[[[ராஜ் said...
படத்தோட நிறை குறைன்னு ரொம்ப நல்லா அலசி இருக்கேங்க. ரொம்பவே நல்ல விமர்சனம். SCARFACE படத்துல இருந்துகூட ஒரு காட்சியை உபயோகபடுத்தி இருக்காங்க. முதல் போதை மருந்து டீல்...]]]
இல்லவே இல்லை என்பார்கள். நெருக்கிக் கேட்டால் அது போலவே வேறொருவர் யோசிக்கக் கூடாதா என்பார்கள்..! ஒண்ணும் சொல்ல முடியலை..!
[[[நேரம் இருந்தா என்னோட கடை பக்கம் கொஞ்சம் வாங்க அண்ணே. நானும் இந்த படத்தை பத்தி எழுதி இருக்கேன்..
http://hollywoodraj.blogspot.in/2012/07/2.html]]]
அவசியம் வருகிறேன் ராஜ்.. தங்களது வருகைக்கு நன்றி..!
பில்லா-2-ஐ ஒரு முறை பார்க்கலாம்..!
ரைட்டு
நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன்.
அந்த bottle க்கு நன்றி.
கிரேட் எஸ்கேப்.
விமர்சனம் அருமை
http://dohatalkies.blogspot.com/2012/07/2-doha-qatar.html
நானும் பிழைத்து கொண்டேன் நன்றி சகோ ... ஆனா நீங்க மாடிக்கிடீங்க நீங்க என் கிறுக்கலை படிக்க வாங்க ஹி ஹி
http://tamilyaz.blogspot.com/
[[[அக்கப்போரு said...
பில்லா-2-ஐ ஒரு முறை பார்க்கலாம்..!
ரைட்டு..]]]
பார்த்தாச்சா ஸார்..? எப்படியிருந்ததுன்னு வந்து சொல்லுங்களேன்..!
[[[Doha Talkies said...
நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன். அந்த bottle-க்கு நன்றி.
கிரேட் எஸ்கேப். விமர்சனம் அருமை.]]]
மிச்சம் பிடிச்ச காசை எனக்கு அனுப்பலாமே பிரதர்..?
[[[ரியாஸ் அஹமது said...
நானும் பிழைத்து கொண்டேன். நன்றி சகோ. ஆனா நீங்க மாடிக்கிடீங்க. நீங்க என் கிறுக்கலை படிக்க வாங்க. ஹி ஹி.]]]
அதுக்குப் பேரு கிறுக்கலா..? எல்லாம் போகப் போக சரியாயிரும்.. விடுங்க..!
நண்பா நான் சகுனி விமர்சனம் வரும்போதே பில்லா 2 அஜித்துக்கு ஒரு ராஜபாட்டையாய் இருக்கும் என்று சொன்னேன் இல்லையா? நீங்களும் அந்த அளவு மோசமாய் இருக்காது என்று சொன்னீர்கள்.இப்போது ஒத்து கொள்கிறீர்களா பில்லா சகுனி ராஜபாட்டை வரிசையில் தான் என்று.
நல்ல விமர்சனம் சூப்பர்
[[[scenecreator said...
நண்பா நான் சகுனி விமர்சனம் வரும்போதே பில்லா 2 அஜித்துக்கு ஒரு ராஜபாட்டையாய் இருக்கும் என்று சொன்னேன் இல்லையா? நீங்களும் அந்த அளவு மோசமாய் இருக்காது என்று சொன்னீர்கள்.இப்போது ஒத்து கொள்கிறீர்களா பில்லா சகுனி ராஜபாட்டை வரிசையில்தான் என்று.]]]
ஒத்துக்குறேன் அண்ணே.. இனிமே உங்க பேச்சை என்னிக்கும் தட்ட மாட்டேன்..!
[[[safi said...
நல்ல விமர்சனம் சூப்பர்.]]]
மிக்க நன்றிகள் நண்பரே..!
Good Blogger
Post a Comment