அபியும் அனுவும் - சினிமா விமர்சனம்

28-05-2018

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சரிகம வழங்கும் யூட்லி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகி இருக்கும் இந்த படத்தில் பிரபல மலையாள இளம் ஹீரோவான டொவினோ தாமஸ் நாயகனாக நடித்து தமிழில் அறிமுகமாகிறார். நாயகியாக பியா பாஜ்பாய் நடித்திருக்கிறார். மேலும் பிரபு, சுஹாசினி, ரோகிணி, கலைராணி, தீபா ராமானுஜம், உதயபானு மகேஷ்வரன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
கதை, திரைக்கதை – உதயபானு மகேஷ்வரன், வசனம் – சண்முகம், படத் தொகுப்பு – சுனில்ஸ்ரீ நாயர், ஒளிப்பதிவு – அகிலன், இசை – தரண், தயாரிப்பு, இயக்கம் – பி.ஆர்.விஜயலட்சுமி.
அண்ணன் – தங்கை உறவு முறையில் வரும் இருவர் காதலித்துத் திருமணம் செய்து கொள்ள.. அது பிற்காலத்தில் அவர்களுக்கே தெரிய வரும்போது என்ன நடக்கும் என்பதுதான் இந்தப் படத்தின் அடிப்படை கரு.

நாயகன் ‘அபிமன்யூ’ என்னும் டொவினோ தாமஸ், சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு இளைஞர். இவருடைய தாய், தந்தை இருவரும் பிஸியான தொழிலதிபர்கள். நாடு நாடாய் சுற்றி வருபவர்கள்.
ஒரு நாள் முகநூலில் ஒரு வீடியோ பதிவில் இவரைக் கவர்கிறார் ஊட்டியில் இருக்கும் ‘அனு’ என்னும் பியா பாஜ்பாய். இயற்கை விவசாயம், கால்நடைகளின் மேல் பரிவு.. மற்றும் சமூகப் பிரச்சினைகளில் அக்கறையுள்ள பியாவின் முகநூல் பதிவுகளை தொடர்ந்து பார்க்கும் டொவினோவுக்கு, பியாவை ரொம்பவே பிடித்துப் போகிறது.
அதிலும் கேன்சர் நோய் பீடித்த குழந்தைகளுக்காக பியா தன் தலைமுடியை வெட்டிவிட்டு மொட்டையடித்த நிலையில் குழந்தைகளுடன் பேசி வெளியிட்ட வீடியோவை பார்த்தவுடன் டொவினோவுக்கு அவர் மேல் காதலே பிறந்துவிடுகிறது.
இருவரும் ஒருவருக்கொருவர் முகநூலிலேயே அறிமுகமாகிக் கொள்கிறார்கள். காதல் பிறக்கிறது. கொஞ்சுகிறார்கள். தொடர்ந்து பேசுகிறார்கள். பியாவை பார்க்க ஊட்டிக்கே வருகிறார் டொவினோ தாமஸ். அங்கே வைத்து திடீரென்று இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுக்கிறார்கள்.
கழுத்தில் மாலையுடன் டொவினோ தனது பெற்றோர்களுக்கு ஸ்கைப் மூலமாக தனது திருமணம் குறித்து செய்தியளிக்கிறார். பியா தனது அம்மாவுக்குத் தகவல் சொல்லாமல் மறைக்கிறார். வீட்டிற்கு வரும் பியாவின் தாய் ரோகிணி இதைக் கேட்டு முதலில் அதிர்ச்சியடைந்தாலும், பின்னர் வேறு வழியில்லாமல் அதனை ஏற்றுக் கொள்கிறார்.
பியாவை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வருகிறார் டொவினோ. இவர்களது பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரபு- சுஹாசினி தம்பதிகள் இவர்களுக்கு உதவிகரமாக இருக்கிறார்கள். இந்த நேரத்தில் பியா கர்ப்பமடைய.. அவரைப் பார்த்துக் கொள்ள டொவினோவின் தாய், தங்களுக்குத் தெரிந்த கலைராணியை அனுப்பி வைக்கிறார்கள்.
கலைராணி டொவினோவின் வீட்டுக்கு வரும்போது அங்கே ரோகிணியை பார்த்து அதிர்ச்சியடைகிறார். அப்போதுதான் டொவினோ யார் என்பதே ரோகிணிக்குத் தெரிகிறது.
25 ஆண்டுகளுக்கு முன்பாக டொவினோவின் தாய் தீபா ராமானுஜத்திற்கும், அப்பா உதயபானு மகேஷ்வரனுக்கும் குழந்தை பிறப்பதில் சில சிக்கல்கள் இருந்ததால் அவர்களுக்காக டெஸ்ட் டியூப் பேபி மூலமாக குழந்தை பெற்றுக் கொடுத்தவர் ரோகிணி என்பது தெரிய வருகிறது.
இதையடுத்து டொவினோவும், பியாவும் அண்ணன் தங்கை உறவு முறை என்பதால் அவர்களின் திருமணமே செல்லாது என்றும், பியா தன் வயிற்றில் வளரும் குழந்தையை அழிக்குமாறும் டொவினோவின் தாய் சொல்கிறார்.
இந்தக் களேபரத்தில் திடீரென்று பியாவின் தாய் ரோகிணி காலமாகிறார். அந்தச் சோகத்திற்கிடையில் டொவினோ என்ன முடிவெடுக்கிறார்..? பியா கருவைக் கலைத்தாரா..? அல்லது இருவரும் சேர்ந்தே வாழ முடிவெடுத்தார்களா..? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
நாயகன் டொவினோ தாமஸுக்கு இதுதான் முதல் தமிழ்த் திரைப்படம். ஹீரோவுக்கேற்ற முகவெட்டும், உடல் தகுதியும், அழகும் இருக்கிறது. ஆனால் மலையாள வாடை கொஞ்சம் அடிப்பதுதான் குறை. தமிழில் எப்போதுமே அடிதடி நாயகர்களுக்குத்தான் மவுசு அதிகம் என்பதால், அடுத்தக் கதையில் நல்ல கமர்ஷியல் கம்மர்கட்டில் வலம் வந்தால் ஒரு இடத்தைப் பிடிக்க வாய்ப்புண்டு.
நடிப்பென்று பார்த்தால் குறையே இல்லை. மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் டொவினோ. அவருக்கும் மனோபாலாவுக்கும் இடையில் நடக்கும் அலுவலக சண்டைகள் சிரிக்க வைப்பவை. ஒரு காதலனாக.. ஒரு கணவனாக.. படம் பார்க்கும் ரசிகைகளையும் ஏங்க வைக்கிறார்.
பியா முற்பாதியில் கலகலப்பான பெண்ணாக வந்து நின்று பிற்பாதியில் கண் கலங்க வைக்கிறார். காதலை மறக்க முடியாமல் அவரும், டொவினோவும் தவிப்பதும்.. காலம் காலமான இந்திய சமூகத்தின் கட்டுப்பெட்டித்தனமான குடும்பச் சூழலில் உறவுகளை அற்றொழிப்பது முடியாத காரியம் என்பதால்… அதை நினைத்து கண்ணீர் விடும்போது “இனிமேல் என்னத்தய்யா செய்யச் சொல்றீங்க…?” என்று தியேட்டரில் நம்மையும் முணுமுணுக்க வைக்கிறார்கள்.
ஒரு மனைவியாக காலம் முழுவதும் உடன் இருக்க விரும்பிய பியா, அது முடியாமல் போய் இருக்கும் தருணத்தில் அதை நினைத்து கலங்குவதும், டொவினோ அவரைத் தவிர்ப்பதுமான காட்சிகள் மனதைத் தொடுகின்றன.
குழந்தையே பெற முடியாமல் தவியாய் தவித்து, கடைசியாக இப்போது கணவரையும் இழக்கப் போகும் உண்மை தெரிந்தும் எப்போதும் சிரித்த முகத்துடன் வளைய வரும் சுஹாசினியின் அந்தக் கேரக்டர் ஸ்கெட்ச் தேவையானதுதான். ஆனால் சுஹாசினியின் ஓவர் ஆக்ட்டிங்குதான் இடிக்கிறது.
ரோகிணி இருக்கும் சில காட்சிகளிலும் தன் பெயரை பதிவு செய்திருக்கிறார். தீபா ராமானுஜத்தின் அம்மா நடிப்பு இதில் பணக்காரத்தனமாகவே பதிவு செய்யப்பட்டிருப்பதால் அதிகம் கவனத்தை ஈர்க்கவில்லை. இத்தனை களேபரத்திலும் உடனடியாக ஊருக்குக் கிளம்பும் அவர்களது திரைக்கதை படத்தில் ஒட்டவில்லை.
அகிலனின் ஒளிப்பதிவில் ஊட்டி காட்சிகளும், டொவினோ வீட்டின் உட்புறக் காட்சிகளும் குளுமை. கலை இயக்குநருக்கு ஒரு ஷொட்டு. பாடல் காட்சிகளையும் அழகாகப் படம் பிடித்திருக்கிறார்கள்.
தரண் குமாரின் இசையில் ‘சரிகமப’ பாடல் மூலமாகவே திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார். அதுவே சுவாரஸ்யத்தைக் கொடுக்கிறது. இதேபோல் இரண்டு வித எமோஷன்களில் ஒலிக்கும் ‘எங்கடா போன’ பாடல் உருகவும் வைக்கிறது.. பாடவும் வைக்கிறது..!
எவ்வளவுதான் தொழி்ல் நுட்பத்தைக் கொட்டி அழகுபடுத்திக் காட்டினாலும் படத்தில் சரக்கு எனப்படும் கதை, திரைக்கதையில் ஓட்டையிருந்தால் படம் பற்றிய பேச்சே எழாது.. இது இந்தப் படத்திற்கும் பொருந்தியிருக்கிறது.
தமிழ்ப் படங்களில் ஆங்கிலத்தில் வசனம் பேசினாலும் அதை உடனே வேறொரு கேரக்டர் மூலமாக தமிழிலும் சொல்லிவிடுவது வழக்கம். இந்தக் காலத்திலும் தமிழ்ச் சினிமாவில் அப்படியொரு சூழல் இருக்கும்போது டெஸ்ட் டியூப் பேபி, குழந்தை பிறப்பு பற்றி மேலோட்டமாக சொல்லிவிட்டுப் போயிருப்பதுதான் படத்தின் மிகப் பெரிய குறை.
படம் பார்க்கும் பி அண்ட் சி ரசிகர்களுக்கு இது நிச்சயம் புரியாது. ஏனெனில் படத்திலேயே இது தெளிவாகச் சொல்லப்படவில்லை.
டொவினோ தாமஸ், அவரது தாய், தந்தையரின் உயிரணுக்களை பெற்று அது டெஸ்ட் டியூப்புக்குள் வைக்கப்பட்டு, அங்கே கருவாக உருவாக்கப்பட்டு, பின்பு அந்தக் கரு ரோகிணியின் வயிற்றில் இருக்கும் கர்ப்பப் பையில் வைத்து பிறக்க வைக்கப்பட்டார் என்பது பற்றி தெளிவாக வசனத்தில்கூட சொல்லாதது ஏன் என்று தெரியவில்லை.
டொவினோ தாமஸ் அவரது பெற்றோரின் உயிரணுக்களால்தான் பிறப்பிக்கப்பட்டார். கருப்பை மட்டுமே ரோகிணிக்கு சொந்தமானது என்பதை இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லியிருக்க வேண்டும்.
இதைவிட்டுவிட்டு அனைவரும் எழுந்து போய்க் கொண்டிருக்கும்போது கண நேரத்தில் மறைந்துபோகும்விதமாக  டைட்டிலில் இதற்கான விளக்கக் கார்டு போடுவதால் யாருக்கு என்ன லாபம்..? செய்வதை கொஞ்சம் திருந்தச் செய்திருந்தால் படம் குழப்பமில்லாத நிலைமையில் அனைவருக்குமே புரிந்திருக்கும்.
அதிலும் கரு உருவாகக் காரணமான சினை முட்டை ரோகிணியுடையது இல்லை என்றாலும் ரோகிணியின் வயிற்றில் வைத்துதான் டொவினோ பிறப்பிக்கப்பட்டிருக்கிறார். அப்போது சிந்திய ரத்தமும் ரோகிணியுடையதுதானே..? அதே ரத்தம்தானே அவருக்குப் பின்பு பிறந்த பியாவுக்கும் இருந்திருக்க வேண்டும்..! இந்தச் சின்ன தொடர்பு அவர்களது அண்ணன், தங்கை உறவை குறிக்காதா..?
இந்திய சமூகத்தில் அப்பாவின் தம்பி சித்தப்பா ஆகிறார். அண்ணன் பெரியப்பா ஆகிறார். அம்மாவின் தங்கை சித்தி ஆகிறார். அக்கா பெரியம்மா ஆகிறார். ஒரே அம்மா, அப்பாவுக்கு.. ஒரே வயிற்றில் பிறந்தவர்கள் என்பதால்… இதுதான் இங்கே குடும்பப் பழக்கம்.
வாடகைத் தாய் முறையில் தாயின் கருப்பை மட்டுமே 10 மாதங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளதால் அதில் பிறக்கும் குழந்தைகள்… பின்னாளில் அந்தப் பெண்ணின் சொந்த கருவால் உருவாக்கப்பட்டு பிறக்கும் குழந்தைகளுக்கு உறவில்லை என்பதை ஆங்கில அலோபதி மருத்துவ முறை மட்டுமே சொல்கிறது. “இது மருத்துவ ரீதியான சொந்தம் கிடையாது.. அண்ணன், தங்கை கிடையாது..” என்று சொல்வதை பாமரத்தனமான மக்கள் எப்படி சட்டென்று ஏற்றுக் கொள்வார்கள்..?
மேலும், “காதல் திருமணம் செய்யுங்கள். ஆனால் கல்யாணத்திற்கு முன்பாக பெற்றோர்களிடத்தில் ஒரு வார்த்தை சொல்லிவிடுங்கள்…” என்கிற நீதியையும் இந்தப் படம் சொல்வதாக படத்தின் முடிவில் சொல்கிறார்கள். இது ‘காதல்’ என்னும் சப்ஜெக்ட்டையே சாகடிக்கும் விஷயம்.
இந்தியாவில் டெஸ்ட் டியூப் பேபிகள் தெருவுக்கு தெரு இல்லை. வாடகைத் தாய்களும் வார்டுக்கு வார்டு இல்லை. பின்பு எதற்கு இந்த வேண்டாத வேலை..?
அப்படியே காதலித்து கல்யாணம் செய்யும் முன்பு அவருடைய பெற்றோர்களின் ஜாதகமே அலசப்பட்டு ஆராயப்பட்ட பின்புதான் திருமணம் நடக்க வேண்டும் என்றால் நிச்சயமாக எல்லா கல்யாணங்களும் குழப்பத்தில்தான் துவங்கும். பிரச்சினைகளில்தான் முடியும்..! வேண்டாத சந்தேகங்களும், தேவையில்லாத பிரச்சினைகளும்தான் எழும்.
இப்போதுகூட வாடகைத் தாய் முறையில் குழந்தையைப் பெற்றெடுத்து கொடுத்த பின்பு “இனிமேல் அந்தக் குழந்தைக்கும் அந்தத் தாய்க்கும் எந்தவொரு உறவும் இல்லை. இனி வரும் காலங்களிலும் இருக்கக் கூடாது…” என்று ஒப்பந்தம் எழுதப்பட்டு இரு தரப்பாலும் கையொப்பமிட்டு, மருத்துவமனையின் நிர்வாகிகள் சாட்சி கையொப்பம் போட்ட பின்புதான் அந்த பிள்ளை பிறப்பே நடைபெறுகிறது.
இந்த வகையான பிள்ளை பிறப்பு என்பதே தற்போதைக்கு இந்தியாவில் ஒரு டீஸண்ட்டான பிஸினஸ் போலாகிவிட்டது. இதில் என்ன தாய்மை பிரச்சினை..? அண்ணன், தங்கை பிரச்சினை..? பாசப் போராட்டம் இருக்கிறது..?
பிறரின் உதவியோடு பெற்றெடுக்கப்பட்டு வளர்க்கப்படும், அல்லது தத்தெடுத்து வளர்க்கப்பட்ட மகனோ, மகளோ.. அவர்கள் மேஜரானவுடன் அவர்களது பிறப்பு பற்றி அவர்களிடத்தில் சொல்லிவிட வேண்டும்.  இதுதான் இப்போதை சூழலில் இது போன்ற பிரச்சினைகள் உள்ள குடும்பத்திற்கு நல்லது.
1983-ம் ஆண்டு இசைஞானி இளையராஜாவின் தயாரிப்பில், கவிப்பேரரசு வைரமுத்துவின் கதையில், பாலகிருஷ்ணன், கோகுல கிருஷ்ணன் இயக்கத்தில், பானுசந்தர், அஸ்வினி, கவுண்டமணி நடிப்பில் உருவான ‘ஆனந்தக் கும்மி’ திரைப்படமும் இது போன்ற ஒரு கதையைக் கொண்டதுதான்.
அருமையான இசையைக் கொண்ட பாடல்கள் படத்தில் இருந்தும் படம் படு தோல்வியைத் தழுவியது. காரணம், அண்ணன், தங்கை காதலை தமிழகத்து மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.. அதில் சொல்லப்பட்டிருந்தவிதம்கூட காதல்தான் முக்கியம் என்பதாக இருந்தது. இதனாலேயே படம் மிக அதிகமான விமர்சனங்களையும் எதிர்கொண்டது.
அதே அளவுக்கான மன நிலையில்தான் இன்றைக்கும் தமிழகம் இருந்து வருவதால், இது போன்ற ஷாக்கடிக்கும் கதைகளை அவர்கள் சட்டென ஏற்பார்களா என்பது சந்தேகம்தான்..!
அபியும், அனுவும் சேர்ந்து வாழ்வார்களா என்பதெல்ல இப்போதைய பிரச்சினை..! அப்படி அவர்கள் சேர்ந்து வாழ்ந்தால் மூன்றாம் மனிதர்களாகிய நாம் அதனை ஏற்றுக் கொள்ளலாமா.. வேண்டாமா.. என்பதுதான் பிரச்சினை..!
படத்தின் இறுதியில் காட்டப்படும் டைட்டில் கார்டில்கூட “டொவினோ தாமஸின் பிறப்பு டெஸ்ட் டியூப் பேபிதான் என்பதால் பயோலாஜிக்கலாக அவர் ரோகிணியின் மகன் கிடையாது. எனவே இவர்கள் சேர்ந்து வாழ்வதில் தவறில்லை…” என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். இதை ஆங்கிலத்தில் மட்டுமே போடுவதால் யாருக்கு என்ன புண்ணியம் இயக்குநரே..?
ஆக, படத்தின் இயக்குநரே, “இந்தக் கதையில் இவர்கள் அண்ணன்-தங்கை உறவுகள் இல்லை. ஆகவே இவர்களது காதலும், காதல் திருமணமும் செல்லும்…” என்கிறார்.
பின்பு எதற்காக இத்திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார்…? டெஸ்ட் டியூப் பேபிக்களையும், அவர்களது குடும்பத்தினரையும் பயமுறுத்தவா..? மருத்துவர்களை எச்சரிக்கவா..? அல்லது காதலர்களுக்கு கிலி ஏற்படுத்தவா..?
இயக்குநர்தான் சொல்ல வேண்டும்..!

செம - சினிமா விமர்சனம்

28-05-2018

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பசங்க புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பாக இயக்குநரும், தயாரிப்பாளருமான பாண்டிராஜ், மற்றும் லிங்க பைரவி புரொடெக்சன்ஸ் சார்பில் அதன் தயாரிப்பாளர் பி.ரவிச்சந்திரன் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாகவும், அர்த்தனா பினு ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.
மேலும், யோகி பாபு, மன்சூரலிகான், கோவை சரளா, ‘பருத்தி வீரன்’ சுஜாதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, இயக்கம் – வள்ளிகாந்த், வசனம் – பாண்டிராஜ், ஒளிப்பதிவு – எம்.எஸ்.விவேகானந்தன், இசை – ஜி.வி.பிரகாஷ்குமார், படத் தொகுப்பு – பிரதீப் ஈ.ராகவ், கலை இயக்கம் – ஜே.கே., ஆடை வடிவமைப்பாளர் – நட்ராஜ், ஒப்பனை – விஜி, பாடல்கள் – யுகபாரதி, ஏகாதசி, அருண்ராஜா காமராஜ், நடன இயக்கம் – பாபா பாஸ்கர், காதல் கந்தாஸ், விஜி சதீஷ், சண்டை இயக்கம் – சுதேஷ், புகைப்படங்கள் – ஹரி சங்கர், போஸ்டர் டிசைன்ஸ் – சிந்து கிராபிக்ஸ், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டி.ஒன்.
‘தூறல் நின்னு போச்சு’ படத்தின் கதையை கொஞ்சம் அப்படி, இப்படி மாற்றி உருமாற்றி இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் வள்ளிகாந்த்.

திருச்சியில் தனது தாய் மற்றும் நண்பன் யோகி பாபுவுடன் வசித்து வரும் நாயகன் ஜி.வி.பிரகாஷ், சீசனுக்குத் தகுந்தாற்போல் வியாபாரம் செய்வதில் கெட்டிக்காரர். ஒரு மாதம் காய்கறிகள், அடுத்த மாதம் பழங்கள், கனிகள், அதற்கடுத்த மாதம் மீன்.. அது மீய்ந்து போனால் கருவாடு என்று வெரைட்டியாக வியாபாரம் செய்து வருகிறார்.
இவரும் ஒரு பெண்ணின் பின்னால் மாதக்கணக்காக சுற்றி ‘ஐ லவ் யூ’ சொல்லி வருகிறார். ஆனால் அந்தப் பெண் அதனை ஏற்க மறுக்கிறாள். தன் மகனுக்கு சீக்கிரமாக திருமணம் செய்து வைத்துவிட அம்மா சுஜாதா நினைத்துக் கொண்டிருக்கிறார். இந்த எண்ணத்தில் எண்ணெய்யை ஊற்றுகிறார் ஒரு ஜோசியர். “உன் மகன் ஜாதகத்திற்கு இன்னும் 3 மாதத்தில் திருமணம் நடக்கவில்லையென்றால் அடுத்த 6 வருடத்திற்கு கல்யாணமே நடக்காது…” என்று சாபம் கொடுக்காத குறையாகச் சொல்கிறார் ஜோஸியர்.
இதனால் அவசரம், அவசரமாக தனது மகனுக்குத் திருமணம் செய்து வைக்க திட்டமிடுகிறார் சுஜாதா. ஜி.வி. காதலிக்கும் பெண்ணிடம் போய் கேட்கும்போது அவர் மறுக்கிறார். இதைத் தொடர்ந்து வேறு பல இடங்களில் பெண் பார்க்கப் போயும் யாரும் சம்மதிக்கவில்லை.
இவர்களின் பெண் பார்க்கப் போகும் படலம் அந்தத் தெருவுக்கே தெரிகிறது. அனைவரின் வாயிலும் சுஜாதாவும் அவரது மகனும்தான் விழுந்து கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் கேட்டு நொந்து போன நிலையில் இருக்கும் சுஜாதாவிற்கு திருவாரூரில் ஒரு பெண் இருப்பதாகச் செய்தி வர அங்கே போகிறார்கள்.
ஊர் முழுக்க கடன் வாங்கி வைத்திருக்கும் மன்சூரலிகானின் பெண் அர்த்தனாவை பார்த்தவுடன் ஜி.வி.பிரகாஷூக்கு பிடித்துப் போய்விடுகிறது. பெண்ணுக்கும்தான். பூ வைக்கும் நாளையும் குறிக்கிறார்கள்.
இந்த நேரத்தில் அந்த ஊர் எம்.எல்.ஏ.வின் மகன் ஹீரோயினை தான் ஒன் சைடாக லவ்வுவதாகவும், தான்தான் அவளைத் திருமணம் செய்து கொள்வேன்.. இதற்கு பரிகாரமாக மன்சூரலிகானின் கடன் பிரச்சினையை தான் தீர்த்து வைப்பதாகவும் சொல்ல.. மன்சூரலிகானின் மனம் மாறுகிறது.
பூ வைக்கும் விசேஷத்திற்காக பேருந்தில் வந்து கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷிடம் “பூ வைக்க யாரும் வர வேண்டாம். கல்யாணம் கேன்சல்..” என்கிறார் மன்சூரலிகான். இதைக் கேட்டு சுஜாதா கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்படுகிறார்.
இன்னொரு பக்கம் ஜி.வி.யும், அர்த்தனாவும் ஒருவரையொருவர் மறக்க முடியாமல் தவிக்கிறார்கள். அர்த்தனாவின் தாய் கோவை சரளா எப்படியாவது தனது கணவரை ஏமாற்றி காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறார்.
இறுதியில் என்ன நடக்கிறது..? காதலர்கள் திருமணம் நடந்ததா..? அல்லது மன்சூரலிகானின் விருப்பப்படி நடந்ததா…? என்பதுதான் படத்தின் திரைக்கதை.
‘தூறல் நின்னு போச்சு’ படத்தில் பாக்யராஜ்-சுலக்சனா கல்யாணத்தை நடத்தி வைக்க போராடுவார் நம்பியார். இதில் அதையே கொஞ்சம் மாற்றி கணவருக்குத் தெரியாமல் ஹீரோயினின் அம்மாவே அதனைச் செய்து வைக்கப் போராடுவதாக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர்.
கோவை சரளாவின் அடுத்தடுத்த சமாளிப்புகளால் ஆங்காங்கே சிரிப்பலை எழும்பினாலும், இதற்கு தோதான மத்தளமாகவும் இருக்கிறார் மன்சூரலிகான். வில்லத்தனத்தை ஒளித்து வைத்துவிட்டு கொஞ்சம் காமெடி பக்கமும் திரும்பியிருக்கிறார் மன்சூரலிகான்.
கடன் கொடுத்தவர்களின் பெயர்களை 1 லட்சம், 2 லட்சம், 50 ஆயிரம் என்றெல்லாம் பெயர்களை வைத்துவிட்டு போன் வந்த பின்பு அதை எடுக்காமல் தவிப்பதும், கடன்காரர்களை சமாளிக்கும்விதமும் இவருக்குள்ளேயும் இருக்கும் ஒரு காமெடிக்காரனை வெளிக்கொணர்ந்திருக்கிறது.
இறுதியில் அத்தனை கோபமானாலும் பேத்தியை பார்த்தவுடன் கூலாகி அனைவரையும் மன்னித்து தாத்தாவாகிவிடும் காட்சியில் பாண்டிராஜின் அழகான வசனங்களால் நம் மனம் கவர்கிறார் மன்சூரலிகான்.
கொங்கு தமிழில் இழுத்துப் பேசும் வசன நடை இருக்கும்வரையிலும் கோவை சரளாவை யாரும் அசைச்சுக்க  முடியாதுதான். டைமிங்கான இவரது பல வசனங்கள்தான் இடைவேளைக்கு பின்னான திரைக்கதையில் கொஞ்சம், கொஞ்சம் சிரிக்க வைத்திருக்கிறது.
இன்னொரு புலம்பல் அம்மாவாக சுஜாதா. முணுக்கென்றால் தற்கொலைக்கு முயலும் கேரக்டர். எப்படியாச்சும் பொய் சொல்லியாவது மகனுக்குத் திருமணம் செய்து வைக்க நினைக்கும் அப்பாவி அம்மா. அந்தக் கேரக்டரை கச்சிதமாகச் செய்திருக்கிறார் சுஜாதாம்மா.
யோகிபாபு படம் நெடுகிலும் ஜி.வி.யுடனேயே வந்து கொஞ்சம் அலப்பறை செய்திருக்கிறார். டைமிங்சென்ஸ் காமெடியில் யோகியும் ரொம்பவே தேறிவிட்டார். வெல்டன் ஸார்..!
ஹீரோயின் அர்த்தனாவைவிடவும் ஜி.வி.பிரகாஷால் காதலிக்கப்படும் பெண்ணாக நடித்தவர் மிகச் சிறப்பாக தனது நடிப்பைக் கொட்டியிருக்கிறார். ஆனால் குளோஸப் காட்சிகளில்தான் பார்க்க சகிக்கவில்லை.
அறிமுக நடிகையான அர்த்தனாவின் அழகு ஈர்ப்பாக இருந்தாலும், நடிப்பு திறமையைக் காட்டுதற்கு படத்தில் பெரிதாக ஸ்கோப் இல்லாததால் அடுத்தடுத்த படங்களில் இவரைப் பார்த்துக் கொள்வோம்.
ஹீரோ ஜி.வி.பிரகாஷ் தனக்குத் தோதான கதைகளையே தேர்ந்தெடுத்து நடிக்கிறார் போலும். இது அவருக்கு தோதாத தைக்கப்பட்ட சட்டைதான். கலர், கலரான பட்டன்களை வைத்து கலர்புல்லாக இருந்தாலும், துணி பழைய காலத்து துணி என்பதால் வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிறது.
சின்னப் பையனை போன்ற அவரது தோற்றமே பல கதைகளை இன்னும் அவருக்குக் கொடுக்கக் காத்திருக்கின்றன. நடிப்பில் கோலம் போட்டு சொல்லும் அளவுக்கு இந்தப் படத்திலும் எதுவும் இல்லை. எல்லாம் வெறுமனே புள்ளி வைத்து சேர்த்து வைத்தது போலத்தான் இருக்கிறது.
எம்.எஸ்.விவேகானந்தனின் ஒளிப்பதிவு வண்ணக் கலவை. கிரேடிங்கை சூப்பராக செய்திருக்கிறார்கள். இசையில் ‘சண்டாளி’ பாடல் கேட்கும் ரகம். ஆனால் ‘சண்டாளன்’ என்கிற பெயரில் ஒரு சாதி இருக்கிறது என்பதையும் மறந்து போய் அனைத்து பாடலாசிரியர்களும் இதே வார்த்தையில் பாடல்களை புனைவது காலம் கடந்த கொடுமையாய் தொடர்கிறது.
‘உருட்டு கண்ணால’ பாடல் காதல் ரசம் சொட்டச் சொட்ட படமாக்கியிருக்கிறார்கள். இதேபோல் ‘வச்சு செஞ்சாச்சு’ ஆட வைக்கும் பாடல். பாடல்கள், இசையில் குறைவில்லாமல்தான் தந்திருக்கிறார் ஜி.வி. பிரகாஷ்குமார்.
கேஸ்ட்டிங்கில் மற்ற கேரக்டர்களுக்கு பார்த்து பார்த்து தேர்வு செய்த இயக்குநர் எம்.எல்.ஏ. மகன் கேரக்டரில் மட்டும் ஏன் சறுக்கினார் என்று தெரியவில்லை. அது கேமிராவுக்கு ஏற்ற முகமல்ல. அதேபோல் நடிப்பும் சுத்தமாக இல்லை. வீணாகிவிட்டது அந்தக் கேரக்டர்.
‘வசனம்-பாண்டிராஜ்’ என்றார்கள். சிற்சில இடங்களில் அது தெரிகிறது. ஆனால், திரைக்கதையில் சொதப்பல் இருக்காது என்று நினைத்தால் படு சறுக்கலைக் கொடுத்திருக்கிறார்கள்.
ஒரு எம்.எல்.ஏ. பையனுக்கு தான் காதலிக்கும் பெண் சென்னையில் எங்கே, எந்த நிறுவனத்தில் என்ன மாதிரியான வேலையில் இருக்கிறாள் என்பதைக் கண்டறிய முடியாதா என்ன..? அப்படியொரு சப்பையாக எம்.எல்.ஏ. மகனின் கேரக்டர் ஸ்கெட்ச்சை உருவாக்கியிருக்கிறார்கள்.
கட்டிய மனைவியே “கணவரை 6 மாசத்துக்கு ஜெயிலிலேயே வைத்திருந்தால் அதற்குள்ளாக திருமணத்தையும் முடித்துவிட்டு புள்ளையையும் பெற்றுக் காண்பித்து அவர் மனதை மாற்றிவிடலாம்…” என்று சொல்வதெல்லாம் டூ மச்சாகத் தெரியவில்லை..?
விசாரணை கைதியை அதுவும் ஜாமீன் கிடைக்காமல் வாடிக் கொண்டிருந்தவரை 6 மாதத்திற்குள்ளாக அண்ணா பிறந்த நாளுக்காக விடுதலை செய்துவிட்டதாக மன்சூரலிகான் சொல்வது உலக மகா காமெடி. பாண்டிராஜ் பங்கெடுக்கும் படத்தில் இப்படியொரு கொடுமை இருக்கலாமா..?
ஒரு எம்.எல்.ஏ.வின் மகனால் லோக்கலில் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில் சிக்கிய தன் வருங்கால மாமனாரை உடனடியாக ஜாமீனில் எடுக்க முடியாதா என்ன..?
இது மாதிரி லாஜிக்கே பார்க்காமல், காமெடியை மட்டுமே நினைத்து படத்தைப் பாருங்கள் என்றால் காமெடி எங்கேயிருக்கிறது என்று தைரியமாகத் திருப்பிக் கேட்கலாம். அப்படித்தான் இருக்கிறது படத்தின் மேக்கிங்.
1990-ம் காலத்து கதையை அதே பழைய திரைக்கதை யுக்தியோடு கொணர்ந்திருக்கிறார் இயக்குநர். திரைக்கதையிலும், படத்தின் மேக்கிங்கிலும் புதுமை எதுவும் இல்லாததால், இந்தப் படமும் பத்தோடு பதினொன்றாகவே காட்சியளிக்கிறது.

காலக்கூத்து - சினிமா விமர்சனம்

28-05-2018

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மதுரை ஸ்ரீகள்ளழகர் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
படத்தில் பிரசன்னா, கலையரசன், சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே, ஆர்.என்.ஆர்.மனோகர், மகேந்திரன், பாண்டி ரவி, ராஜலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – எம்.நாகராஜன், ஒளிப்பதிவு – பி.வி.சங்கர், இசை – ஜஸ்டின் பிரபாகரன், படத் தொகுப்பு – ஆர்.கே.செல்வா, கலை இயக்கம் – என்.கே.ராகுல், சண்டை இயக்கம் – அன்பறிவ், நடன இயக்கம் – சந்தோஷ், மக்கள் தொடர்பு – நிகில், இணை தயாரிப்பு – சக்கரவர்த்தி.
தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களாக குற்றச் செயல்களில் இடம் பிடித்திருக்கும் காதலுக்கு எதிரான கொலை என்னும் கான்செப்ட்டில் இடம் பிடித்திருக்கும் அடுத்தப் படம் இது. முழுக்க, முழுக்க மதுரையை மையமாக வைத்தே படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஹரி என்னும் கலையரசனும், ஈஸ்வர் என்னும் பிரசன்னாவும் பள்ளிப் பருவக் காலத்திலிருந்தே நெருங்கிய நண்பர்கள். கலையரசனின் அம்மா இறந்துவிட்டார். அப்பாவும் ஒரேயொரு தங்கையும் மட்டும்தான். பிரசன்னாவுக்கு அம்மா, அப்பா இருவருமே இல்லை. அனாதையாக இருந்து கலையரசனுடன் இணைந்த பின்பு அந்த எண்ணமே வராத அளவுக்கு இருக்கிறார்.
கலையரசன் வேலை வெட்டியில்லாதவர்.  பிரசன்னா ஒரு டூவீலர் ஷோ ரூமில் மெக்கானிக்காக இருக்கிறார். கலையரசன் காயத்ரி என்னும் சாய் தன்ஷிகாவை காதலித்து வருகிறார். சாய் தன்ஷிகா கல்லூரியில் படித்து வரும் மாணவி.
பிரசன்னாவை அதே பகுதியில் வசித்து வரும் ரேவதி என்ற சிருஷ்டி டாங்கே காதலிக்கிறார். இந்தக் காதலுக்கு முதலில் கண்டு கொள்ளாமல் இருக்கும் பிரசன்னா பின்பு சம்மதிக்கிறார்.
அந்தப் பகுதி கவுன்சிலரின் மகன் பள்ளிக்குச் செல்லும் மாணவிகளை வம்புக்கு இழுப்பதையே தொழிலாக வைத்திருக்கிறான். அவன் ஒரு முறை கலையரசனின் தங்கையை இதுபோல் செய்ய… பிரசன்னா அவனை தாக்கிவிடுகிறார். இதனால் கை ஒடிந்து கட்டுப் போட்டு வீட்டில் இருக்கிறான் கவுன்சிலரின் மகன். அப்போது தேர்தல் நேரம் என்பதால் கவுன்சிலர் ‘இப்போது எதையும் செய்ய வேண்டாம்’ என்று சொல்லி அமைதியாக இருக்கிறார்.
பிரசன்னா – ரேவதியின் காதல் கதை ரேவதியின் அப்பாவுக்குத் தெரிய வருகிறது. உடனேயே அவர் தனது சொந்தத்திலேயே மாப்பிள்ளை பார்க்க ஏற்பாடு செய்கிறார். அதற்குள்ளாக ரேவதியை பெண் கேட்கலாம் என்று சொல்லி பிரசன்னா கலையரசனின் அப்பாவை அழைத்துக் கொண்டு ரேவதியின் வீட்டுக்கு வர.. அங்கே ரேவதிக்கும் வேறொரு ஆளுக்கும் திருமண நிச்சயத்தார்த்தம் நடைபெறுகிறது.
பிரசன்னா அதிர்ச்சியாக, கலையரசன் ரேவதியின் வீட்டில் வந்து கத்திக் குவித்துவிட்டு வருகிறார். இதேபோல் சாய் தன்ஷிகாவின் வீட்டிலும் திடீரென்று ஒரு பிரச்சினை.
சாய் தன்ஷிகாவின் தாத்தா தான் கண்ணை மூடுவதற்குள் பேத்தியின் திருமணத்தை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதனால் சாய் தன்ஷிகாவின் தாய் மாமனுக்கே அவரை திருமணம் செய்து வைக்க சாய் தன்ஷிகாவின் குடும்பத்தார் திட்டமிடுகிறார்கள்.
விஷயம் தெரிந்த கலையரசன், சாய் தன்ஷிகாவை அழைத்துக் கொண்டு கோவிலில் வைத்து திருமணம் செய்துவிடுகிறார். நிச்சயத்தார்த்தம் நடைபெறும் தினத்தன்று நடந்த இந்த அலங்கோலத்தால் சாய் தன்ஷிகாவின் வீடே சோகமயமாகிறது.
இன்னொரு பக்கம் தனது ஒரே மகனின் விருப்பதற்காக பிரசன்னாவை போட்டுத் தள்ள அனுமதி தருகிறார் அப்போதைய கவுன்சிலரும், இப்போதைய மதுரை மாநகராட்சியின் மேயருமான அம்மா.
மேயரின் தம்பி தனது அடியாட்களுடன் பிரசன்னாவை தேடத் துவங்குகிறான். இதே நேரம் சாய் தன்ஷிகாவின் வீட்டில் நடந்த ஒரு அசம்பாவிதத்தால் கோபமடைந்த சாய் தன்ஷிகாவின் தாய் மாமன்கள் இருவரும் கொலை வெறியோடு கலையரசனை தேடுகிறார்கள்.
இறுதியில் என்ன ஆகிறது என்பதுதான் இத்திரைப்படத்தின் திரைக்கதை.
வழக்கமான அதே சினிமா பார்முலாவில்தான் திரைக்கதையையும் அமைத்திருக்கிறார்கள். கலையரசனுக்கு என்ன வேலை என்று தெரியவில்லை. ஆனால் சாய் தான்ஷிகாவை காதலிப்பது மட்டும்தான் வேலை என்று தெரிகிறது. இதிலேயே இந்தக் காதல் மீது ஈர்ப்பே இல்லாமல் போய்விட்டது.
ஆனால் பிரசன்னாவின் காதலை வழங்கியவிதம் அருமை. காதலியே முன்னால் வந்து “நான் உங்களைக் காதலிக்கிறேன். கல்யாணம் செஞ்சுக்கலாமா…?” என்கிறார். பிரசன்னா தனது அனாதை என்கிற அடையாளத்தைத் துறந்துவிட நினைக்கும், அந்தத் தருணம் அழகானது. ஆனால் இந்தக் காதலையும் பட்டென்று உடைத்தது ஏன் என்று தெரியவில்லை. திரைக்கதையில் அழுத்தமே இல்லாமல் சிருஷ்டியின் கேரக்டரை சிதைத்துவிட்டார்கள்.
கலையரசனின்  நடிப்பு எப்போதும்போலத்தான் இருக்கிறது. எந்தவித மாற்றமும் இல்லை. இப்படியே தொடர்ந்தால் இது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை. ஏதாவது மாறுபட்ட கேரக்டர் ஸ்கெட்ச்சில் அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்தாற்போன்று நடித்தால் நன்றாக இருக்கும்.
பிரசன்னா அமைதியின் திருவுருவமாக கிடைத்த கேரக்டரில் அழுத்தம் கொடுத்திருக்கிறார். அவருடைய அமைதியான நடிப்பு அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் திரையைக் கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறது. கிளைமாக்ஸில் அவரது முடிவு எதிர்பார்த்ததுதான் என்றாலும் அதைப் படமாக்கியவிதம் சிம்ப்ளி சூப்பர்ப்.
சாய் தன்ஷிகா குளோஸப்பில் முதிர் கன்னி போல தெரிகிறார். இவரை இன்னும் கல்லூரி மாணவியாகவே பார்க்க முடியாது. ஆனால் நடிப்பில் சோடை போகவில்லை. கலையரசனுக்கு கவுண்ட்டர் கொடுக்கும் பல காட்சிகளில் அந்தக் காட்சிகளை ரசிக்கும்படி செய்திருப்பது சாய் தன்ஷிகாதான். கிளைமாக்ஸில் சாய் தன்ஷிகாவின் அந்த ஒன் வுமன் ஷோ பரிதாபத்திலும் பரிதாபம்..! சிறந்த நடிப்பைக் கொட்டியிருக்கிறார் தன்ஷிகா. வெல்டன் மேடம்..
ஒரு காதலியின் மிரட்டல், உருட்டல், அன்பு, பாசம், உருக்கம் இது எல்லாவற்றையு் கலந்தடிக்கும்விதமாக இருக்கிறது சாய் தன்ஷிகா-கலையரசன் காதல் போர்ஷன். இயற்கை நீதிப்படி கலையரசன் செய்வது தவறென்றாலும், சினிமா நீதிப்படி சிறந்த காதல் கதை..!
இதேபோல் சிருஷ்டி டாங்கேவும்.. ஏன் எதற்கு என்பதெல்லாம் சொல்லப்படாமலேயே “உங்களை எனக்குப் பிடிச்சிருக்கு…” என்று பிரசன்னாவிடம் சொல்லி “கல்யாணத்திற்கு சம்மதமா..?” என்று கேட்பதும், இதைத் தொடர்ந்த காட்சிகளில் அவரது அருகாமையினால் பெருமைப்படும் காட்சிகளை எடுத்தவிதமும் இந்தக் காதலையும் அழகாகத்தான் தெரிகிறது.
ஆனால், கடைசியில் ஏன் இப்படியொரு முடிவைக் கொடுத்து காதலைப் பிரித்தார்கள் என்று தெரியவில்லை. இதனால் படம் பார்க்கும் ரசிகர்களுக்குள் எந்தவித இம்பாக்ட்டையும் இந்தக் கதை கொடுக்கவில்லை என்று சோகமான விஷயம்.
சாய் தன்ஷிகாவின் அப்பா ஆர்.என்.ஆர்.மனோகர் மற்றும் அம்மா ‘சங்கராபரணம்’ ராஜலட்சுமி இருவரின் நடிப்பும் குறைவில்லை. அதேபோல் சில காட்சிகள் என்றாலும் மேயரம்மாவின் சமாளிப்பும், அவரது மகனின் பாராமுகமும் மிக இயற்கையாக படமாக்கப்பட்டிருக்கின்றன..!
மதுரையின் பல இடங்களை இதுவரையிலும் பார்த்திராத பகுதிகளை படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.வி.சங்கர். கிளைமாக்ஸில் அந்த இரவு நேர சண்டை காட்சியில்தான் அவரது கேமிராவின் பணி பம்பரமாக சுற்றியிருக்கிறது. பாடல் காட்சிகள் ஹீரோயின்களை அழகாக காட்டியிருக்கிறார். சண்டை காட்சிகளில் அன்பறிவ் தெறிக்க விட்டிருக்கிறார்.
கலையரசன், பிரசன்னாவின் முன் கதைச் சுருக்கத்தை இன்னும் சுருக்கமாகவே கொடுத்திருக்கலாம். கத்திரி போட்டிருக்க வேண்டியது அங்கேதான். அதற்கடுத்து சிருஷ்டி டாங்கே-பிரசன்னா கதையில் கூடுதல் காட்சிகளை அமைத்து காதலை நியாயப்படுத்தியிருக்கலாம். படத் தொகுப்பாளரின் பணியை இன்னும் செவ்வனே பயன்படுத்தியிருக்கலாம்..!
ஜஸ்டின் பிரபாகரனின் பாடல்கள் அனைத்தும் இதமானவை. ‘கண்ணைக் கட்டி’ பாடலும், ‘கண்ணுக்குள்ள வைச்சிருக்கேன்’ பாடலும், ‘நெற்றி குங்குமம்’ பாடலும் அதிரடி இசையெல்லாம் இல்லாமல் கேட்கும் ரகமாக இருந்தது. ஜஸ்டினுக்கு நன்றி. பாடல் காட்சிகளைக்கூட மிக அழகான மாண்டேஜ் காட்சிகளாக ஒளிப்பதிவாளர் துணையுடன் எடுத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
‘காலக்கூத்து’ என்னும் தலைப்புடன் சம்பந்தப்பட்ட கதைதான் இருக்கிறது. இன்னும்கூட காதலை ஏற்றுக் கொள்ளாத குடும்பங்கள் இருக்கின்றன என்று சொன்னாலும், அந்தக் குடும்பங்களின் பக்கச் சார்பான நியாயத்தையும் படத்தில் சொல்லியிருக்க வேண்டும். அதைவிடுத்து ஒரு சார்பாக காதலுக்கு ‘ஜே’ போட்டே படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.
ஒட்டு மொத்தமாய் பார்க்கப் போனால், படத்தை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது..!

ஒரு குப்பைக் கதை - சினிமா விமர்சனம்

28-05-2018

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

Film Box Productions சார்பில் தயாரிப்பாளர்கள் என்.அரவிந்தன் மற்றும் முகமது அஸ்லம் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
தமிழ்ச் சினிமாவில் பல படங்களில் நடன இயக்குநராகப் பணி புரிந்து, தேசிய விருதைப் பெற்றிருக்கும் நடன இயக்குநர் தினேஷ் இந்தப் படத்தில் முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார்.  கதாநாயகியாக ‘வழக்கு எண்’ புகழ் மனிஷா யாதவ் நடித்துள்ளார்.
மேலும், யோகிபாபு, ஜார்ஜ், ஆதிரா பாண்டி லட்சுமி, சுஜோ மாத்யூஸ், கிரண் ஆர்யன், கோவை பானு, செந்தில் லலிதா  ஆகியோரும் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – காளி ரங்கசாமி, ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி, படத் தொகுப்பு – கோபி கிருஷ்ணா, இசை – ஜோஷ்வா ஸ்ரீதர், பின்னணி இசை – தீபன் சக்ரவர்த்தி, நடனம் – தினேஷ் மாஸ்டர், சண்டை பயிற்சி – பயர் கார்த்திக், தயாரிப்பு நிர்வாகம் – டி.ஆறுமுகம், இணை இயக்கம் – அண்ணாதுரை, சீகுட்டி, வ.முத்துக்குமரன், உடைகள் – மணி, ஒப்பனை – குமார், புகைப்படங்கள் – மோதிதால், மக்கள் தொடர்பு – ஜான், டிஸைன்ஸ் – Dot X Media Solutions.
இந்தப் படத்தை நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின். தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.
குப்பை மேட்டில் யாருக்கும் தெரியாமல் இருக்கும் சில கோமேதங்களைப் பற்றிய கதை இது. மன்னிப்பு என்பது வெறும் வார்த்தையல்ல.. அதுவும் ஒரு வாழ்க்கைதான் என்கிறது இத்திரைப்படம்.

நாயகன் தினேஷ் சென்னையில் கூவம் நதிக்கரையோரம் இருக்கும் குடிசைப் பகுதியில் தனது தாயுடன் வசித்து வருகிறார். சென்னை மாநகராட்சியில் குப்பை அள்ளும் நூற்றுக்கணக்கான தொழிலாளிகளில் அவரும் ஒருவர்.
இவருக்குத் திருமணம் செய்து வைக்க இவரது அம்மா பெரும்பாடுகிறார். ஆனால் பொண்ணுதான் கிடைத்தபாடில்லை. குப்பை அள்ளுகிறார் என்பதாலேயே பெண் கிடைக்காமல் போகிறது. வேறு வழியில்லாமல் ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்தலாம் என்பார்களே என்ற நினைப்பில் பொய் சொல்லியாவது திருமணத்தை நடத்தி வைக்கும் முடிவுக்கு வருகிறார்கள்.
வால்பாறையில் ஒரு பெண் இருப்பதாகக் கேள்விப்பட்டு அங்கே செல்கிறார்கள். அங்கே பூங்கொடி என்னும் மணிஷா யாதவை பார்த்த உடனேயே தினேஷுக்கு பிடித்துப் போய்விடுகிறது. மணிஷாவுக்கும்தான்.
ஆனால் தினேஷ் சென்னையில் ஏதோ கிளார்க் வேலை பார்ப்பதாக புரோக்கர் பொய் சொல்லியிருப்பதை அறியும் தினேஷ்  மணீஷாவின் அப்பாவை தனியே அழைத்து உண்மையைச் சொல்லி விடுகிறார். அவருடைய நல்ல மனதை எண்ணிய மணிஷாவின் அப்பா அவருக்கே தன் மகளைத் திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார். ஆனால் இந்த வேலை விஷயத்தை மட்டும் மகளிடம் சொல்லாமல் மறைத்து விடுகிறார்.
கல்யாணம் முடிந்து வேறு வழியில்லாமல் அந்தக் குடிசைப் பகுதியில் குடித்தனம் நடத்துகிறார் மணிஷா. ஒரு நாள் தற்செயலாக தினேஷ் குப்பை அள்ளுவதை பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்து விசாரிக்கிறார் மணிஷா. அப்போதுதான் தினேஷின் உண்மையான வேலை பற்றிய விவரம் மணிஷாவுக்குத் தெரிய வருகிறது.
இதையடுத்து தன் வீட்டுக்குப் போக முடிவெடுக்கிறார் மணிஷா. அவருடைய அப்பாவின் ஆலோசனையின்பேரில்தான் அவளிடமிருந்து உண்மையை மறைத்தோம் என்ற உண்மையைச் சொல்லி, தற்காலிகமாக பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் தினேஷ்.
கர்ப்பமான மணிஷா குழந்தை பிறப்பிற்காக வால்பாறைக்குச் சென்றவர் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறார். ஆனால் திரும்பவும் சென்னைக்கு வர மறுக்கிறார். அந்தக் குடிசைப் பகுதியின் சூழல் என் குழந்தையை வளர்க்க ஏற்ற இடம் அல்ல என்கிறார் மணிஷா.
இதையடுத்து தினேஷ் தனது சூப்பர்வைஸரின் அடுக்கு மாடி குடியிருப்பு வீட்டில் வாடகைக்கு குடி போகிறார். அதே அபார்ட்மெண்ட்டில் எதிர் வீட்டில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்யும் அர்ஜூன், மணிஷாவின் அழகைப் பார்த்து ரசிக்கிறார். மணிஷாவுக்கு பிராக்கெட் போட்டு அவளது அழகு, தினேஷின் அழகில்லாத தன்மை, பொருத்தமில்லாத ஜோடி என்பதையெல்லாம் சொல்லி மணிஷாவின் மனதைக் கரைக்கிறார். அர்ஜூன் விரித்த வலையில் சிக்குகிறார் மணிஷா.
ஒரு சுபமுகூர்த்த நாளில் மணிஷாவும், அர்ஜூனும் ஊரைவிட்டு ஓசூருக்கு ஓடுகிறார்கள். அங்கே அர்ஜூனின் நண்பனின் வீட்டில் குடியேறுகிறார்கள். தன்னை நம்பி வந்த பெண்ணாக இருந்தாலும் மணிஷாவை தாலி கட்டாத மனைவியாகவே உடன் வைத்துக் கொள்ள அர்ஜூன் விரும்புகிறார்.
இன்னொரு பக்கம் மனைவி காணாமல் போன அதிர்ச்சியில் குடிகாரனாகிறார் தினேஷ். மணிஷாவை பல இடங்களில் தேடி அலைகிறார். இந்த மன உளைச்சலில் தினேஷின் தாயும் இறந்து போகிறார்.
ஒரு பக்கம் அர்ஜூனின் அரவணைப்பில் அடிமையாய் இருக்கிறார் மணிஷா. இன்னொரு பக்கம் மனைவியையும், குழந்தையையும் காணாமல் தேடுகிறார் தினேஷ். முடிவு என்ன ஆனது..? மணிஷாவையும், குழந்தையையும் கண்டுபிடித்தாரா இல்லையா..? என்பதுதான் இந்தக் குப்பைக் கதையின் திரைக்கதை.
வித்தியாசமான கதை, திரைக்கதையில் அழுத்தமான இயக்கத்தையும் கொடுத்திருக்கும் அறிமுக இயக்குநர் காளி ரங்கசாமி பெரும் பாராட்டுக்குரியவராகிறார்.
இந்தப் படத்தின் கதாபாத்திரத் தேர்வு கச்சிதமாக அமைந்திருக்கிறது. ஹீரோவாக இப்போது முன்னணியில் இருப்பவர்களில் யாரேனும் ஒருவரை நடிக்க வைத்திருந்தாலும்கூட இத்தனை யதார்த்தமான நடிப்பைத் திரையில் பார்த்திருக்கவே முடியாது. எப்போதும் இதுவரையிலும் பார்த்திராத ஒரு நாயகனின் நடிப்பை இந்தப் படத்தில் பார்க்கிறோம்.
நாயகனாக நடித்திருக்கும் தினேஷ் நடன இயக்கத்திற்காகவே தேசிய விருதினை பெற்றவர். 100 திரைப்படங்களுக்கும் மேலாக நடன இயக்கம் செய்திருக்கிறார். ஆனால், இந்தப் படத்தில் அமைதியான, அடக்கமான, சுற்றச் சூழலே தெரியாத ஒரு அப்பாவியாய் வாழ்ந்திருக்கிறார்.
உண்மையை பேச நினைக்கும் அப்பாவியாய் மாமனாரிடம் உண்மையை உடைத்துப் பேசுவதில் துவங்கி.. கடைசியாக போலீஸ் ஸ்டேஷனில் வந்து கத்தியைக் கொடுப்பதுவரையிலும் அவரது நடிப்பை காட்சிக்குக் காட்சி சிலாகிக்கலாம். எந்தக் காட்சியிலும் ஓவர் ஆக்ட்டிங்கோ, அல்லது ஹீரோயிஸ நடிப்போ தென்படவில்லை. மாறாக அந்த கேரக்டராகவே மாறியிருக்கிறார் தினேஷ்.
இதுவரையிலும் சில படங்களில் மட்டுமே நடித்திருக்கும் மணிஷா யாதவ்வுக்கு இந்தப் படத்தில் மிகச் சிறப்பான வேடம். அமைதியான, அழகான, இயற்கைச் சூழலில் அமைந்திருக்கும் வால்பாறையில் பிறந்து வளர்ந்து வந்தவர், சென்னையில் கூவத்தின் அழகையும், குடிசைப் பகுதியின் அலங்கோலத்தையும் பார்த்து முகத்தைச் சுழித்தபடியே வருவதிலேயே இவரது அடுத்தடுத்த குணாதிசயங்களை தெரிய வைத்துவிட்டார் இயக்குநர்.
தன்னால் முடிந்த அளவுக்கு தனது கேரக்டருக்கு சிறப்பு செய்யும் அளவுக்கு நடித்திருக்கிறார் மணிஷா. எதுவும் தெரியாத அப்பாவியாய் அவர் வந்திருப்பதால்.. தன்னுடைய கணவன் குப்பை பொறுக்குபவன் என்கிற விஷயத்தையே அவரால் ஜீரணிக்க முடியவில்லை என்பதை சில காட்சிகளில் அழுத்தமாய் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.
அதேபோல் ஒவ்வொரு பெண்ணுக்கும், தனது கணவன்மார்கள் எப்படி அமைய வேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்குமே.. அந்த எதிர்பார்ப்பு கிடைக்காமல் போகும்போது ஏற்படும் விரக்தி, ஏமாற்றத்தில் அது தானாக தேடி வரும்போது அதனை ஏற்றுக் கொள்ளும் அளவுக்குச் செல்வது இயற்கை என்பதையும் தனது நடிப்பிலேயே மிக அழகாக காண்பித்திருக்கிறார் மணிஷா.
கணவனிடமிருந்து கிடைக்காத பேச்சுக்கள், நடத்தைகள், வசதிகளை கொடுக்க வேறொருவன் வரும்போது அதனை ஏற்றுக் கொள்ள துடிக்கும் இரட்டை மனம் கொண்ட பெண்ணின் சங்கடத்தையும் படத்தில் நேர்மையாய் பதிவு செய்திருக்கிறார்கள். இதற்கும் மணிஷாவின் நடிப்பு பெரிதும் உதவியிருக்கிறது.
அர்ஜூனின் நண்பன் மணிஷாவிடம் அத்துமீறலுடன் நடந்து கொள்ளும்போது அவருடைய நடிப்பும் கிளைமாக்ஸில் அவருடைய மிக யதார்த்தமான குப்பை பொறுக்கும் காட்சிகளும் மணிஷாவுக்கு புகழ் சேர்க்கின்றன.
அர்ஜூனாக நடித்த சுஜோ மேத்யூஸ் தனது ஆண் திமிரையும், பணத் திமிரையும் அழகாகக் காட்டியிருக்கிறார். தினேஷின் அம்மாவாக நடித்த ஆதிரா, மணிஷாவின் பெற்றோர்கள் என்று அனைவருமே சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
யோகிபாபு சில காட்சிகளுக்காக இழுத்து வைக்கப்பட்டிருக்கிறார். இருக்கும் காட்சிகளில் வஞ்சகமில்லாமல் காமெடியை வரவழைக்கிறார் யோகி பாபு. குடிக்கும் பழக்கமுள்ள பாட்டி, “சொந்த ஊர் பாண்டிச்சேரியா…?” என்று அதிர்ச்சியாய் கேள்வி எழுப்பும்போது தியேட்டரே கைதட்டலில் அதிர்கிறது. இதேபோல் “சிகரெட் பிடிச்சா… குழந்தையே பொறக்காதுன்னு சொல்வாங்களே.?” என்று மணிஷா அர்ஜூனிடம் கேட்க, “குழந்தையே பொறக்கக் கூடாதுன்னுதான் நாங்க சிகரெட்டே பிடிக்கிறோம்…” என்று அர்ஜூன் அலட்சியமாகச் சொல்லும்போதும் தியேட்டர் கலகலக்கிறது. 
கலை இயக்குநரின் கை வண்ணத்தில் குடிசை பகுதிகளை அத்தனை அழகாக அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்தச் சின்ன குடிசைப் பகுதி இடத்தை தத்ரூபமாக படம் பிடித்திருக்கும் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமிக்கும் நமது பாராட்டுக்கள். சில காட்சிகளே என்றாலும் வால்பாறையையும் மிக அழகாகக் காண்பித்திருக்கிறார். வழக்கமான படமாக இருந்தால் அந்த இடத்தில் ஒரு டூயட்டை வைத்திருப்பார்கள். ஆனால் இந்த இயக்குநர் அதைத் தவிர்த்திருப்பது பாராட்டுக்குரியது.
ஜோஷ்வா ஸ்ரீதரின் இசையில் ‘வாடா மச்சி’ துவக்கப் பாடலும் ‘விலகாதே என்னுயிரே’ பாடலும் சிச்சுவேஷனுக்கேற்ற மூடை கொடுக்கின்றன. கிளைமாக்ஸ் காட்சியில் பின்னணி காட்சியில் அமைதியாக இருந்து அந்தக் கனத்தை ரசிகர்களின் மனதில் ஏற்ற உதவியிருக்கிறார் இசையமைப்பாளர் தீபன் சக்ரவர்த்தி.
திடீரென்று மணிஷா ஓசூரில் இருப்பதாக சியர்ஸ் சொல்வதற்காக வந்த ஒருவன் தினேஷிடம் சொல்லும் காட்சி மட்டும் லாஜிக் மீறலாக இருக்கிறதே தவிர.. படத்தில் யதார்த்தம்தான் அதிகம் பளிச்சிடுகிறது.
இதேபோல் ஐ.டி. பசங்களும், பொண்ணுகளும் இப்படித்தான் இருப்பார்களோ என்கிற பாணியில் அவர்களை காமுகர்களாகவும், காமுகிகளாகவும் காட்டியிருப்பது ரொம்பவே டூ மச்சோ என்றும் சொல்லத் தோன்றுகிறது..!
மணிஷாவின் கேரக்டர் ஸ்கெட்ச்சில் அவர் நினைத்ததுபோல குடிசைப் பகுதியில் இல்லாமல் தனி அபார்ட்மெண்ட் வீட்டிற்கு வந்த பின்பும் அவர் எதிர் வீட்டு அர்ஜூனை பார்த்து சபலப்படுவது ஏன் என்பதுதான் இந்தப் படத்தில் சொல்லியிருக்கும் முக்கிய விஷயம். இந்த இடத்தில் மணிஷாவின் கேரக்டர் ஸ்கெட்ச் கொல்லப்பட்டது என்றாலும் மனம் ஒரு நிலையில்லாதது. எது கிடைத்தாலும் இன்னும் இன்னும் எதிர்பார்க்கும் என்பார்களே அது போலவே.. இந்த நேரத்தில் மணிஷாவின் மனமும் பிறழ்ந்துவிட்டது என்று நினைத்துக் கொள்வோம்.
பணம், கார் போன்ற வசதி வாய்ப்புகள் எளிதில் கிடைக்கும்போது அதில் வாழ்ந்தால்தான் என்ன என்று நினைக்கும் ஒரு சராசரி பெண்ணைப் போல நினைத்தவர் ஆணின் கவர்ச்சிகரமான பேச்சில் மயங்கி வீழ்கிறார். சரிவு அங்கேதான் துவங்குகிறது. பெண்ணின் மீதும் சரி பாதி தவறு இருக்கிறது என்று அழுத்தமாகக் காண்பித்திருக்கிறார் இயக்குநர்…!
மற்றபடி ஊரில் பல ஊர்களில் இதேபோல் பல சம்பவங்கள் மாதத்திற்கு ஒன்று நடந்து கொண்டேயிருப்பதால், இன்றைய சமூகத்தின் நிலைமையை கண்ணுக்கு எதிராகக் காட்டியிருக்கிறார் இயக்குநர் காளி ரங்கசாமி என்பதுதான் அப்பட்டமான உண்மை.
திருமணப் பொருத்தம் என்பது வெறுமனே ஆளை பார்த்தவுடனேயே முடிவாகுவதில்லை. இரு தரப்பினரின் குடும்பம், உறவுகள், பணம், செல்வாக்கு, வீடு எல்லாவற்றையும் பார்த்துதான் முடிவாக வேண்டும். அவசர கதியில் பெண்ணின் கனவை நிறைவேற்ற செய்யப்பட்டும் சடங்குகள் எல்லாம் சடங்கு தீர்ந்தவுடன் கானல் நீராகிப் போய் வெறுமையாகிவிடும்.
தினேஷின் அம்மா சொல்லும் பொய்யும், மணிஷாவின் அப்பா சொல்லும் பொய்யும் எப்படி அவர்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பெரியவர்கள் என்பதாலேயே அனைத்தையும் சொல்லாமல் முடிவெடுக்க அவர்களுக்கு உரிமையில்லையே..!?
இனி வெறுமனே பேச்சிலேயே திருப்தியடையாமல் எல்லாவித பொருத்தங்களையும் பார்த்தே திருமணம் செய்து வைப்பது ஆண், பெண்ணின் குடும்பத்தாரின் கடமையும்கூட.. இதற்கு ஒரு முன்னெச்சரிக்கை படமாகவும் இது அமைந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
கடைசியாக படம் சொல்லியிருக்கும் மிகப் பெரிய விஷயம் ‘எந்தக் குற்றமும் மன்னிக்கக் கூடியதே’ என்பதுதான். தினேஷ் தனது மனைவியை இறுதியில் மன்னித்து ஏற்றுக் கொள்கிறார். அது அவளுக்காகவோ.. அல்லது அவரது குழந்தைக்காகவோ… எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் மன்னிக்கிறார் அல்லவா..! இதுதான் மனித நேயம். ‘திருந்தி வருபவர்களை மன்னித்து அரவணைப்புதான் சிறந்த மனிதப் பண்பு’ என்கிறார் இயக்குநர். இந்தக் கருவைச் சொல்வதற்கு இதைவிட சிறப்பாக கதை எழுதியிருக்க முடியாது..!
இந்தக் குப்பைக் கதையில் இருப்பது மாணிக்கக் கல்..!
பார்க்கத் தவறாதீர்கள்..!