03-07-2007
என் இனிய வலைத்தமிழ் மக்களே...
திரு.அருண்செளரி 'தினமணி'யில் எழுதி வரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திருமதி பிரதிபா பாட்டீல் மற்றும் அவரது குடும்பத்தாரின் ஊழல் மற்றும் முறைகேடுகள் பற்றிய தொடரின் மூன்றாம் பாகம் இது..
முதல் பாகம்
இரண்டாம் பாகம்
மகளிருக்கு அதிகாரம் அளிப்பதில் உள்ள பிரச்சினை என்னவென்றால், "அதிகாரம் பெறும் மகளிருக்கு கணவர் உண்டு.." என்பதை எல்லோருமே மறந்து விடுவதுதான்.
இணையதளத்தில் பிரதிபா பற்றிய வாழ்க்கைக் குறிப்பில், 'பிரதிபா, மகிளா சஹகாரி வங்கியின் நிறுவனர், தலைவர்' என்று அவரைக் குறிப்பிட்டுள்ளனர். வங்கி பற்றி அனைவரும் எழுத ஆரம்பித்ததும், "அவருக்கு 1994 முதல் அந்த வங்கியிடுன் தொடர்பு ஏதும் கிடையாது.." என்று திடீரென்று அறிவிக்கின்றனர்.
'ஜலகாம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையின் முதன்மை ஊக்குவிப்பாளர், தலைவர்' என்று அவருடைய வாழ்க்கைக் குறிப்பில் உள்ளது. அந்த ஆலை பற்றி எழுத ஆரம்பித்ததும் அறிவிப்பு வருகிறது, "அவருக்கும், சர்க்கரை ஆலைக்கும் சம்பந்தமே இல்லை.." என்று..
கூட்டுறவு வங்கி, சர்க்கரை ஆலை இரண்டிலிருந்தும் விலகிய பிரதிபா தனது நேரம், உழைப்பு அனைத்தையும் கல்விப் பணிகளிலேயே செலவிட்டிருப்பார் என்று நம்பலாம்.
பிரதிபா பாட்டீலும் அவருடைய குடும்பத்தாரும் சங்கம் வைத்து சில பள்ளிக்கூடங்களை நடத்தினர். அதில் பணியாற்றுகிறவர்கள் நிர்வாகத்தின் மீது மிகுந்த கசப்புணர்வோடு இருக்கின்றனர். அவர்களோடு பணியாற்றிய கிசான்தாகே என்ற ஆசிரியர் எப்படி நடத்தப்பட்டார். அவர் எப்படித் தற்கொலைக்குத் தள்ளப்பட்டார் என்பதை ஆவணங்களோடு அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இதற்கெல்லாம் பிரதிபாவின் கணவர் தேவிசிங் ஷெகாவத்தும், அவருடைய சகாக்களும்தான் காரணம் என்கின்றனர்.
ஷெகாவத்துகள் நடத்தும் பள்ளிக்கூடத்தில் 1977-ல் கிசான் தாகே பணிக்குச் சேர்ந்தார். உதவி ஆசிரியர் என்ற பதவியில் அமர்த்தப்பட்டார். ஊதியம் தராமலும், உரிய மரியாதை கொடுக்காமலும் அவமதிக்கப்பட்ட அவர் 1998-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கான காரணம் என்ன என்பதை ஒரு காகிதத்தில் எழுதி வைத்திருந்தார். அதுவன்றி ஒரு பத்திரமும் அவரிடம் இருந்தது. போலீஸார் அவற்றையெல்லாம் கைப்பற்றிக் கொண்டு பிரேதபரிசோதனை நடத்தினர். தேவிசிங்கும் அவருடைய நண்பர்களும் எப்படித் தன்னைச் சிறுமைப்படுத்தினார்கள்? ஊதியம் தராமலும், பள்ளிக்கூடச் சங்கத்துக்குச் சொந்தமான கடன் சங்கத்திலிருந்து, கடன்கூட வாங்க முடியாமலும் எப்படியெல்லாம் அலைக்கழித்தனர் என்றெல்லாம் விவரமாக அதில் எழுதியிருந்தார்.
கிசான்தாகே உயிரோடு இருந்தபோது பட்டத் துயரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவருடைய மகன், கல்வி உதவித் தொகை பெறுவதற்காக தேர்வெழுத விண்ணப்ப மனுகூட கிடைக்கவொட்டாமல் தடுத்தனர். வேலை பார்த்த பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாகக்கூறி தொலைதூரத்தில் உள்ள வேறொரு பள்ளிக்கூடத்திற்கு அவரை மாற்றினர். அங்கு ஆசிரியர் வேலையே இல்லை என்றதும், விடுதி மேலாளராக வேலை பார்க்குமாறு கூறினர்.
அமராவதி நகரில் உள்ள சமூக நலத்துறை அதிகாரிக்கு இது பற்றி கடிதம் எழுதினார் தாகே. "ஆசிரியர் பணியிடமே இல்லாத இடத்துக்கு ஒருவரை மாற்றுவது சட்டவிரோதமான செயல்.." என்று சமூக நலத்துறை அதிகாரி 1998, ஜனவரி 27-ல் பள்ளிக்கூட நிர்வாகத்துக்கு கடிதம் எழுதினார். அந்த மாறுதலுக்கு தன்னுடைய ஒப்புதலைத் தர முடியாது என்றும் காட்டமாகக் குறிப்பிட்டிருந்தார். அதற்குப் பிறகு அவருக்கு ஊதியம் தருவதை முற்றாக நிறுத்திவிட்டது நிர்வாகம்.
இதற்கிடையே மும்பை உயர்நீதிமன்றத்தின் நாகபுரி கிளையில் 1998, ஜனவரி 19-ல் மனு தாக்கல் செய்தார் தாகே. தன்னைச் சட்டத்துக்குப் புறம்பாக மாற்றியது குறித்து அம்மனுவில் குறிப்பிட்டிருந்தார். அவரை மீண்டும் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளுமாறும் ஊதியம் தருமாறும் 1998 அக்டோபர் 8-ம் தேதி நாகபுரி உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. 1997 ஆகஸ்ட் 25 முதல் அவருக்கு நிலுவை ஊதியத்தையும் தருமாறு அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டது.
அதன் பிறகும் ஊதியம் பெற அவர் நிர்வாகத்திடம் நடையாய் நடந்தார். இந்தக் கட்டத்தில் அவருடைய உடல் நலிவடைய ஆரம்பித்தது. டாக்டர் அளித்தச் சான்றுடன் விடுமுறை கேட்டு விண்ணப்பித்தார். அதையும் நிர்வாகம் ஏற்கவில்லை. தாகேயின் பரிதாப நிலை கண்டு சக ஆசிரியர்கள் மிகவும் வருந்தினர். அவர்களால் பரிதாபப்படுவதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியவில்லை.
இதற்கிடையே வீட்டில் உள்ள பண்டம், பாத்திரங்களையும், மனைவியின் நகைகளையும் விற்றுத் தீர்த்துவிட்டதால் இனி வேறு வழியே இல்லை என்ற நிலையில் தற்கொலை முடிவை எடுத்து நிறைவேற்றிவிட்டார் தாகே. தாகேவின் மனைவி மங்கள்பாய் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் பாராமுகமாக இருந்துவிட்டனர்.
மங்கள்பாயின் மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம், தாகேவைச் சிறுமைப்படுத்தியது.. வேலையே இல்லாத இடத்துக்கு மாற்றியது. பிறகு ஊதியம் தராமல் நிறுத்தியது. மருத்துவ விடுப்பைத் தர மறுத்தது. உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை எதிர்மனுக்கள் மூலம் தாமதம் செய்தது என எல்லாவற்றையும் நீதிமன்றம் சுட்டிக் காட்டியது.
"இதில் முதல் நோக்கில் தவறு யார் மீது என்று தெரிகிறது. போலீஸார் உரிய வகையில் வழக்கைப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்.." என்று நீதிமன்றம் ஆணையிட்டது. 2000 அக்டோபர் 6-ம் தேதி அந்த ஆணை வெளியானது. அதற்குள் ஊதியமே இல்லாமல் 3 ஆண்டுகள் தாகேவே இல்லாமல் 2 ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த ஆணையையும் எதிர்த்து கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் பள்ளிக்கூட நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஐந்தாண்டுகளுக்குப் பிறகு ஜூடிஷியல் மாஜிஸ்திரேட் ஏ.ஏ.நந்தகாவோன்கர் அளித்த தீர்ப்பு பள்ளிக்கூட நிர்வாகத்தை கன்னத்தில் அறைந்தாற்போல இருந்தது. "தேவிசிங் மீதும் அவருடைய சகாக்கள் மீதும் மனுதாரர் செய்த புகார்கள் உண்மையானவை என்பது நடந்த சம்பவங்களிலிருந்தும் கிடைத்துள்ள ஆவணங்களிலிருந்தும் தெரிகிறது. எனவே இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 306, 34 ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.." என்று தீர்ப்பளித்தார். அது 2005, ஜூலை 22-ல் வெளியானது.
அதன் பிறகாவது சட்டம் தன் வேலையைச் செய்திருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? குடியரசுத்தலைவர் மாளிகையை அலங்கரிக்கவிருக்கும் இந்த நாட்டின் வருங்கால முதல் குடிமகளின் கணவர், அவ்வளவு லேசுப்பட்ட ஆளா? அந்த ஆணையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்.
சமூக நலத்துறை அதிகாரி, உயர்நீதிமன்ற நீதிபதி ஆகியோருக்கு அடுத்தபடியாக இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்த நீதிபதியும், கன்னத்தில் அறைந்தாற்போல் ஒரு தீர்ப்பை அளித்தார்.
"இந்தத் தற்கொலை வழக்கில் சந்தர்ப்பச் சாட்சியங்களும், ஆவணங்களும் தற்கொலைக்குத் தூண்டியது யார் என்பதை சந்தேகமற தெரிவிக்கின்றன. அப்படியிருக்க அவர்களுடைய மனுக்கள் பரிசீலனைக்கே ஏற்றவை அல்ல.." என்று கூறி தள்ளுபடி செய்தார். இந்த ஆணை 2007 பிப்ரவரி 7ம் தேதி வெளியானது. தாகே 1998 நவம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டார். இன்னும் இந்த வழக்கில் விசாரணையே ஆரம்பமாகவில்லை.
ஆதரவற்ற அப்பாவியான தாகே இறந்துவிட்டார்; அநாதையாகிவிட்ட அவருடைய மனைவி மங்கள்பாய் இனி அங்குமிங்கும் அலைய முடியாதபடிக்குச் சோர்ந்துவிட்டார்.
இந்த விஷயத்தில் முதல் குற்றவாளியாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள தேவிசிங் ஷெகாவத் குடியரசுத் தலைவர் மாளிகையில் நுழைவதற்குத் தயாராகிவிட்டார். தேவிசிங் வெற்றி பெற்றுவிட்டார் என்பதை ஒப்புக் கொள்ள மாட்டீர்களா?
நான்காம் பாகம்