கூட்டத்தில் ஒருத்தன் - சினிமா விமர்சனம்

30-07-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனமும், ரமாணியம் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன.  
இந்தப் படத்தில் அசோக் செல்வன், ப்ரியா ஆனந்த், சமுத்திரக்கனி, மாரிமுத்து, அனுபமா குமார், பால சரவணன், ஜான் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இசை – நிவாஸ் கே பிரசன்னா, ஒளிப்பதிவு – பி.கே.வர்மா, படத் தொகுப்பு – ஜெய், கலை இயக்கம் – கே.கதிர், சண்டை பயிற்சி – அன்பறிவு, நடனம் – சதீஷ், பாடல்கள் – கபிலன், தயாரிப்பு மேற்பார்வை – வைரம் சங்கர், தயாரிப்பு – ரமாணியம் டாக்கீஸ், ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் பத்திரிகையாளர் த.செ.ஞானவேல்.

இதுவரை தமிழ் சினிமாவில் முதல் பெஞ்ச் மாணவர்கள், கடைசி பெஞ்ச் மாணவர்கள் பற்றி நிறைய படங்கள் வந்துள்ளன. ஆனால், இந்தப் படம் கொஞ்சம் வித்தியாசமாக மிடில் பெஞ்ச் மாணவர்களைப் பற்றி பேசியிருக்கிறது. இந்த உலகத்தில் பெரும்பான்மையானவர்கள் மிடில் பெஞ்சர்ஸ்தான். அவர்களை கொண்டாடும் படமாக இந்த ‘கூட்டத்தில் ஒருத்தன்’ திரைப்படம் வந்திருக்கிறது.
பள்ளி படிப்பைத் துவக்கியதில் இருந்தே சராசரி மாணவராக… 100-க்கு 50 மதிப்பெண் பெறும் மாணவராகவே இருக்கிறார் ஹீரோ அசோக் செல்வன். அம்மா, அப்பா, அக்கா, தம்பியுடன் இருக்கும் அசோக் செல்வனுக்கு அவருடைய அப்பா மட்டுமே எதிரி.
பள்ளி ஆசிரியராக இருக்கும் அவருடைய அப்பாவான மாரிமுத்துவிற்கு அசோக் செல்வனின் ஆவரேஜ் மதிப்பெண்கள் கவலையளிக்கிறது. இதனால் அசோக் செல்வனுக்கான மரியாதையும் வீட்டில் குறைவாகே இருக்கிறது.
பள்ளியில், வகுப்பில், வீட்டில் எங்கு பார்த்தாலும் தன்னை ஒரு பொருட்டாகவே மதிக்க மறுக்கிறார்களே என்று மனம் குமைகிறார் அசோக். ஆனால் இவரது இந்த வருத்தத்தை கேட்கக்கூட ஆளில்லை என்பதுதான் சோகமான விஷயம்.
இந்த நேரத்தில் ஒரு நாள் மாலையில் கடற்கரைக்கு செல்கிறார்கள் அசோக்கின் குடும்பத்தார். அந்த நேரத்தில் கடற்கரையில் கிடந்த ஒரு குப்பையை எடுத்துச் சென்று குப்பைத் தொட்டியில் போடுகிறார் அசோக். இப்போது அந்தக் குப்பையை அங்கே வேண்டுமென்றே வைத்துவிட்டுச் சென்ற பள்ளியின் என்.எஸ்.எஸ். பிரிவைச் சேர்ந்த ஹீரோயின் பிரியா ஆனந்த் ஓடோடி வந்து அசோக்கிடம் கை குலுக்கி பாராட்டுகிறார்.
இந்த ஒரு நிமிட பாராட்டு அவருக்குள்  ஒரு இனம் புரியாத உணர்வை ஏற்படுத்துகிறது.  காதல் என்ற கெமிஸ்ட்ரியை உண்டு பண்ணுகிறது.
இதே பிரியா ஆனந்த் அந்த வருடத்திய பிளஸ் டூ வகுப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவியாக தேர்வாகிறார். இதைத் தொலைக்காட்சியில் பார்க்கும் அசோக் செல்வன் பிரியாவிடம் மயங்கிவிடுகிறார். பிரியா தான் ஜர்னலிஸம் படிக்கப் போவதாகச் சொல்ல அசோக்கும் அதே கோர்ஸில் படிக்க விருப்பப்படுகிறார்.
அப்பாவின் எதிர்ப்பையும் மீறி ஜர்னலிஸம் வகுப்பில் சேர்கிறார் அசோக். பிரியா ஆனந்தும் அதே கல்லூரியில், அதே வகுப்பில் படிக்க வருகிறார். பிரியாவுக்காகவே அந்தக் கல்லூரியில், அதே படிப்பில் சேர்ந்த அசோக் நிஜமாகவே பிரியாவை காதலிக்கத் துவங்குகிறார்.
பிரியாவின் அம்மா ஒரு மாஜிஸ்திரேட். டைவர்ஸ் ஆனவர். தனது மகளை சிறு வயதிலிலிருந்தே தனித்து வளர்த்தெடுத்தவர். காதல் என்ற பெயரில் நெருங்குபவர்களை அருகில் அனுமதிக்க வேண்டாம் என்று மகளுக்கே டியூஷன் எடுக்கிறார். இதனால் பிரியாவும் காதல் என்ற பேச்சுக்கே இடமளிக்காமல் இருக்கிறார்.
இந்த நேரத்தில் அசோக் பிரியாவை காதலிப்பதாக அவரிடமே போய் சொல்ல.. “காதல் என்றால் என்ன..? எதுக்குக் காதலிக்கணும்..? அடுத்து என்ன செய்யப் போற..?” என்று அடுக்கடுக்காய் கேள்விகளை கேட்டுவிட்டு தனக்கு அசோக் மீது காதல் இல்லை என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டுப் போகிறார் பிரியா ஆனந்த்.
இந்த்த் திடீர் காதல் தோல்வியால் மனமுடைந்த அசோக் தற்கொலை செய்து கொள்ள கடலுக்குள் செல்கிறார். ஆனால் எதிர்பாராதவிதமாக அப்போது கடலில் மூழ்கிக் கொண்டிருந்த சின்னப் பையனுடன் மோதி.. இருவருமே மயக்கமடைந்து கரைக்கு வந்து ஒதுங்குகிறார்கள்.
இந்தச் சம்பவம் ஒரு நபரால் வீடியோவில் படமாக்கப்பட்டு யூடியூபில் வெளியாகிறது. இதையடுத்து அசோக்தான் அந்தச் சிறுவனை காப்பாற்றியதாக ஊர், உலகமே நம்புகிறது. பாராட்டுக்கள் குவிகிறது அசோக்கிற்கு. பிரியாவிற்கு அசோக் மீது ஒரு கவன ஈர்ப்பு இதன் மூலம் வருகிறது.
அந்தச் சிறுவன் லோக்கல் ரவுடியான சமுத்திரக்கனியின் மகன். தன் உயிருக்குயிரான மகனை காப்பாற்றிய அசோக்கை நேரில் வரவழைத்து பாராட்டுகிறார் சமுத்திரக்கனி. அசோக்கின் தற்போதைய பிரச்சினையை சால்வ் செய்ய சமுத்திரக்கனி தன்னாலான முயற்சிகளை மேற்கொள்கிறார்.
இதில் ஒன்றாக லண்டன் பிபிசியில் வேலை செய்வதற்கான சிறப்பு மாணவராக அசோக்கை தேர்வு செய்து அனுப்பிவைக்கும்படி துறை தலைவரை ஆள் வைத்து மிரட்டி சாதிக்கிறார் சமுத்திரக்கனி. இது மேலும் பிரியாவையும், அசோக்கையும் இணைத்து வைக்கிறது.
ஆனாலும் காதல் மட்டும் ஓகேயாகாமல் இருப்பதால் இதற்காக சமுத்திரக்கனி ஒரு திட்டம் போட.. அது சொதப்பலாகி அசோக்கை காப்பாற்றிவிட்டு தான் மட்டும் சமுத்திரக்கனி  செட்டப் செய்த விபத்தில் சிக்கிக் கொள்கிறார் பிரியா ஆனந்த்.
இதனால் 3 மாதங்கள் மருத்துவமனையில் இருந்து உயிர் பிழைத்து வருகிறார் பிரியா ஆனந்த். இப்போது பிரியா காதலுக்கு ஓகே சொல்ல.. அசோக் ஆனந்தத்தில் திளைக்கிறார்.
ஏற்கெனவே போலீஸை பகைத்துக் கொண்ட சமுத்திரக்கனியை போலீஸ் இன்ஸ்பெக்டரான ஜான் விஜய் திட்டம் போட்டு என்கவுண்ட்டரில் படுகொலை செய்கிறார்.
அதே நேரம் அசோக்கின் வகுப்பிலேயே படித்து வரும் இன்னொரு மாணவன் அசோக் பற்றி நன்கு தெரிந்து வைத்து, பக்காவாக பிளான் செய்து அசோக் எப்படி லண்டனுக்கு தேர்வானான்..? எப்படி பிரியாவை மடக்கி காதலிக்க வைத்தான் என்பதையெல்லாம் அவன் வாயாலேயே சொல்ல வைத்து அதனை கான்பிரன்ஸ் கால் மூலமாக அனைவருக்கும் தெரியப்படுத்த..
கல்லூரியில் இருந்து அசோக்கை துரத்துகிறார்கள். பிரியா அசோக்கிற்கு “குட் பை” சொல்கிறார். மாரிமுத்து வீட்டில் அசோக்கை சேர்க்க மாட்டேன் என்று சொல்லி வெளியில் துரத்துகிறார்.
இனி என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதமான திரைக்கதை..!
மேற் சொன்னதுதான் திரைக்கதைப்படி கதையாக வருகிறது என்றாலும் முடிவு வேறு கோணத்தில் சமூக நோக்கோடு அமைக்கப்பட்டிருக்கிறது. மீதமான உணவை குப்பைத் தொட்டியில் போடாமல் அதனை உணவில்லாதவர்களுக்கு கொடுத்தால் அவர்களது பசியாவது மிஞ்சுமே என்ற பிரியா ஆனந்த், அசோக்கிடம் சொல்லும் கான்செப்ட் இப்போது உலகம் முழுவதுமே நடைமுறையில் இருக்கிறது.
இந்த கான்செப்ட்டை தமிழகத்திலும் பல நல்ல உள்ளங்கள் செயல்படுத்தி வருகிறார்கள். இதனையே இந்தப் படத்தில் அறிமுகப்படுத்தி அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
ஒரு மிடில் பெஞ்ச் மாணவன் தனது வாழ்க்கை திசை திரும்பிய நிலையில் மற்றவர்களுக்காக வாழ விரும்பிய நிலையில்.. தியாக மனப்பான்மையோடு இதனை ஒரு சேவையாக நினைத்துச் செய்யத் துவங்க அது ‘அமுதசுரபி’ என்னும் தொண்டு நிறுவனமாக மிகப் பெரிய அளவுக்கு வளர்கிறது என்றால் அது பாராட்டத்தக்கதுதான்.
ஆனால் இந்தக் காட்சியை வைப்பதற்கான அழுத்தமான காரணங்கள் எதுவும் ஹீரோவின் வாழ்க்கையில் இல்லை என்பதுதான் சோகமான விஷயம். காதலுக்காக அனைத்தையும் செய்த ஹீரோ கடைசியில் அந்தக் காதலே இல்லை என்ற நிலைமை வந்தவுடன், சமூக சேவைக்கு வருவதை போல திரைக்கதை அமைந்திருப்பது படத்தின் மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட்.
காதலே இந்த தியாகத்தால்தான் உருவாகிறது என்பதுபோல இருந்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும். ஆனால் கடைசியில் காதலி மனமுருகி திரும்பி வருவதெல்லாம் சினிமாத்தனமாகவே இருக்கிறது.
அசோக் செல்வன் சோடா புட்டி கண்ணாடியோடு ஒரு மிடில் பெஞ்ச் மாணவராகவே காட்சியளிக்கிறார். இந்த ஒரு படத்தோடு அவர் ஸ்கூல் பையன் இமேஜை கைவிடுவது நல்லது.
வெகுளியான தனது நடிப்பைக் காட்ட அவருக்கு மிகப் பெரிய வாய்ப்பு கிடைத்து அதை அவரும் சிறப்பாக கையாண்டிருக்கிறார். பிரியா ஆனந்த் அவரை நிராகரித்தவுடன் அவருக்கு ஏற்படும் அதிர்ச்சியும், தொடர்ச்சியான தற்கொலை முயற்சிகளும் நியாயப்படுத்த முடியாதவை என்றாலும் அதில் அந்த வயதுக்கே உரிய கதாபாத்திரத்தின் செயல் தென்படுகிறது. இயக்குநர் இதனை அழுத்தமாகவே படத்தில் பதிவு செய்திருக்கிறார்.
பிரியாவின் நாயைத் தேடி அலைச்சல்.. பிரியாவை கவர கவனம் எடுக்கும் சில செயல்கள்.. காதல் தோற்றவுடன் அசோக் நினைத்துப் பார்க்கும் நினைவுகள்.. பிரியா மருத்துவமனையில் இருக்கும்போது சமுத்திரக்கனியுடன் வந்து சண்டையிடும் காட்சிகள் என்று பல இடங்களில் தனது நடிப்பை அக்மார்க் முத்திரையுடன் குத்தியிருக்கிறார் அசோக் செல்வன். பாராட்டுக்கள்.
திரையுலகத்தில் நடிப்பை ஓரங்கட்டிவிட்டு விடை பெற நினைத்திருந்த நேரத்தில் இதில் நடித்திருக்கிறார் பிரியா ஆனந்த்.  பாடல் காட்சிகளில் கொஞ்சம் கிளாமரோடு இருந்தாலும், கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார். பாராட்டு மட்டுமே காதலாகிவிடாது என்பதில் உறுதியாக இருக்கும் பிரியா ஆனந்த், போகப் போக மெதுவாக அசோக் மீது காதல் வயப்படுவதாக காட்டியிருப்பது அழகு. ஆனாலும் திரைக்கதையில் வேகம் குறைவானது இந்த இடத்தில்தான்..!
பால சரவணன் அவ்வப்போது தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி விடுகிறார். மாரிமுத்து அக்மார்க் ஒரு அப்பாவாக தனது நடிப்பைக் காண்பித்திருக்கிறார். இன்னொரு பக்கம் ஏற்கெனவே ஏமாந்து போன அம்மாவாக வரும் அனுபமா குமாரின் ஸ்கிரீன் பிரஸ்ஸென்ஸ் ஆண்ட்டி மேனியா கொண்டவர்களுக்கு அற்புத சலுகை..!
ரவுடியாக வரும் சமுத்திரக்கனி இன்னொரு பக்கம் பாசக்காரராக வலம் வருகிறார். தனது ஒரே மகனை காப்பாற்றிய ஒரே காரணத்துக்காக அசோக்கிற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்துவிட்டு அசோக்கின் கோபத்தையும், உதாசீனத்தையும் தாங்கிக் கொண்டு கடைசியாக பரிதாபமாக உயிரைவிடுகிறார். ஆனால் நடிப்பில் அப்படியே ஈர்த்திருக்கிறார்.
நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் பாடல்கள் கேட்கும்படிதான் இருக்கிறது. பின்னணி இசையும் படத்திற்கொரு பலம். பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவில் அனைத்துக் காட்சிகளுமே அழகுற படமாக்கப்பட்டுள்ளன. பாடல் காட்சிகளுக்கு கூடுதல் கவனம் எடுத்து செய்திருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. 
மிடில் பெஞ்ச் மாணவர்கள் கீழேயும் போக முடியாமல், மேலேயும் உயரத் தெரியாமல் அல்லல்படும் கஷ்டங்களை படத்தின் முற்பாதியில் ரொம்பவே சொல்லியிருக்கிறார் இயக்குநர். இதையே படத்தின் முழுமையான கதைக் கருவாக வைத்திருக்கலாம். பிற்பாதியில் சமூக சேவையை நோக்கி படத்தைத் திசை திருப்பியதால் படம் எது மாதிரியான படம் என்பதில் ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுவிட்டது..! இதுதான் படம் எதிர்நோக்கிய ஒரேயொரு பிரச்சினை.
அதே சமயம், “உணவை வீணாக்கக் கூடாது. மீதமான உணவை பகிர்ந்து கொள்ள வேண்டும்…” என்கிற இப்போதைய சமூகத்திற்குத் தேவையான மெஸேஜை தெரிவித்த காரணத்துக்காக இந்தப் படம், இயக்குநருக்கு நிச்சயமாக பெருமையை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
`கூட்டத்தில் ஒருத்தன்’ நிச்சயமாக சினிமாவிலும் ஒருத்தன்தான்..!

நிபுணன் - சினிமா விமர்சனம்

29-07-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பேஷன் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் உமேஷ், சுதன் சுந்தரம், ஜெயராம் மற்றும் அருண் வைத்தியநாதன் ஆகியோர் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளார்கள்.
படத்தில் ‘ஆக்சன் கிங்’ அர்ஜூன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது அவருடைய 150-வது திரைப்படமாகும். மற்றும் பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார். ஸ்ருதி ஹரிஹரன், சுமன், சுஹாசினி மணிரத்னம், வைபவ், கிருஷ்ணா மற்றும் பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
கலை – கே.ஆறுச்சாமி, சண்டை பயிற்சி – அன்பறிவ், சுதேஷ், உடைகள் – ப்ரீத்தி கந்தன், பிரியங்கா, ஒலிக்கலவை – எம்.ஆர்.ராஜாகிருஷ்ணன், சிறப்பு சப்தம் – சின்க் சினிமா, பி.ஆர்.ஓ. – சுரேஷ் சந்திரா, நிகில் முருகன், ஒளிப்பதிவு – அரவிந்த் கிருஷ்ணா, இசை – எஸ்.நவீன், பாடல்கள் – அருண்ராஜா காமராஜ், மதன் கார்க்கி, அருண் வைத்தியநாதன், படத் தொகுப்பு – சதீஷ் சூர்யா, திரைக்கதை – ஆனந்த் ராகவ், அருண் வைத்தியநாதன், எழுத்து, இயக்கம் – அருண் வைத்தியநாதன்.
திரில்லர் டைப் படங்களின் வருகையும், வெற்றியும் அதிகரித்து வருகின்றன என்பதற்கு இந்த ‘நிபுணன்’ திரைப்படமும் ஒரு உதாரணமாகிவிட்டது.

காவல்துறையின் புலனாய்வு பிரிவில் டி.எஸ்.பி.யாக இருக்கிறார் ‘ஆக்சன் கிங்’ அர்ஜூன். இன்ஸ்பெக்டர்களாக பிரசன்னாவும், வரலட்சுமியும் உடன் பணியாற்றி வருகிறார்கள்.
அர்ஜூன் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் என்பதோடு எந்தச் சிக்கலான கேஸையும் புலன் விசாரணை செய்வதில் நிபுணர். மனைவி ஸ்ருதியும் ஒரு பெண் குழந்தையும் உண்டு. இவருடைய தம்பியான வைபவ் ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர். வீட்டில் தம்பியுடன் மிக நெருங்கிய நட்பாக நண்பனை போல அவருடனேயே கட்டிங் அடிக்கும் அளவுக்கு நெருக்கமாகவும் இருக்கிறார் அர்ஜூன்.
ஒரு பெரிய தொழிற்சாலை அமைப்பதற்காக பல ஆயிரம் விவசாய நிலங்களை அழிக்க நினைக்கிறார்கள். இதனை எதிர்த்து ஒரு சமூக ஆர்வலர் தலைமையில் மக்கள் போராடி வருகிறார்கள்.
இந்த நேரத்தில் அந்த சமூக ஆர்வலர் ஒரு இரவு நேரத்தில் கடத்தப்பட்டு படு பயங்கரமான முறையில் படுகொலை செய்யப்படுகிறார். இந்தக் கொலை வழக்கு அர்ஜூன் வசம் வருகிறது. அவரும் விசாரிக்கத் துவங்குகிறார்.
இதையடுத்து அரசு மருத்துவனையில் உடற்கூரியல் மருத்துவ நிபுணரான பெண் மருத்துவர் ஒருவரும் அதேபோல் பயங்கரமான சித்ரவதைக்கு பின் கொல்லப்படுகிறார். நகரமே பதறுகிறது. அர்ஜூன் மிக முயன்றும் கொலையின் முடிச்சு அவிழவில்லை.
அடுத்து ஒரு வழக்கறிஞர் இதே பாணியில் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார். நகரமே பரபரப்பாக… வழக்கினை முடிவுக்குக் கொண்டு வர துடிக்கிறார் அர்ஜூன். அப்போது ஒரு பொறி தட்ட.. இப்போது தொடர்ச்சியாக கொலையானவர்களுக்கும் தனக்கும் ஒரு ரகசிய தொடர்பு இருப்பதை கண்டறிகிறார் அர்ஜூன்.
இதன்படி பார்த்தால் கொலைகாரனின் அடுத்த டார்கெட் தான்தான் என்பதை ஊகிக்கிறார் அர்ஜூன். இந்த நேரத்தில் திடீரென்று அர்ஜூனை பக்கவாத நோய் தாக்குகிறது. அது முதல் ஸ்டேஜில் இருப்பதால், உடனடியாக மருத்துவ சிகிச்சையெடுக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஆனால் தனது போலீஸ் கடமை அழைப்பதால் அதனைத்தான் முதலில் முடிக்க வேணடும் என்று நினைக்கிறார் அர்ஜூன். அதற்கேற்றாற்போல் குற்றவாளியை பிடிக்க ஒரு தூண்டில் போடுகிறார். குற்றவாளியும் இதையெல்லாம் எதிர்பார்த்து காத்திருக்க.. யார் வலையில் யார் சிக்குகிறார்கள்..? இறுதியில் என்ன நடந்தது..? ஏன் இந்தக் கொலைகள் நடைபெற்றன என்பதுதான் இந்தப் படத்தின் சுவையான தேடல் மிகுந்த கதை.
ஆருஷி தல்வார். நினைவிருக்கிறதா..? 2008-ம் ஆண்டு தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஒரு கவுரவக் கொலையில் சிக்கி உயிரிழந்த சிறுமி. வயது 14-தான். பெற்றோர்கள் இருவரும் பிஸியான பல் மருத்துவர்கள். அந்த வீட்டில் தங்கியிருந்து வேலை செய்து கொண்டிருந்த ஹேம்ராஜ் என்ற வேலைக்காரனுடன்தான் அதிக நேரம் இருக்க வேண்டிய சூழல் ஆருஷிக்கு..
இந்தத் தனிமையும், பேச்சு சுதந்திரமும் அவர்களை மிக நெருக்கமாக்கிவிட விஷயம் பெற்றோர்களுக்குத் தெரிய வருகிறது. குடும்ப மானம் பறி போனதே என்கிற கோபத்தில் வேலைக்காரனையும், மகள் ஆருஷியையும் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு வேலைக்காரன்தான் தங்களது மகளை கொலை செய்துவிட்டு கூடவே தானும் தற்கொலை செய்து கொண்டுவிட்டதாக கதை கட்டினார்கள்.
ஆனால் டில்லி போலீஸ் மிக புத்திசாலித்தனமாக இந்த வழக்கை விசாரித்து உண்மையை கண்டறிந்து ஆரூஷியின் பெற்றோரை கைது செய்து அவர்களுக்கு தண்டனையையும் வாங்கிக் கொடுத்தது.
இந்தச் சம்பவம் அந்தச் சமயத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் மற்றும் கவுரவக் கொலைகளின் பட்டியலில் ஒன்று என்றெல்லாம் இந்தியா முழுவதும் பேசப்பட்டு பரபரப்பானது.
இதைத்தான் இந்தப் படத்தின் மையக் கருத்தாக வைத்திருக்கிறார் இயக்குநர் அருண் வைத்தியநாதன். நிச்சயமாக பாராட்டுக்குரிய கருத்து. அதையும் இந்தச் சம்பவத்தை இடைவேளைக்கு பின்பு திறந்து, இதனைச் சுற்றியே திரைக்கதை அமைத்து, கிளைமாக்ஸ் வரைக்கும் சஸ்பென்ஸை கொண்டு சென்று படத்தில் லயிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.
இந்த வயதிலும் கட்டுக்கோப்பாக உடலை வைத்துக் கொண்டு, புலனாய்வு அதிகாரிகளின் தோற்றத்திற்கும், மிடுக்குக்கும் உதாரணமாக படம் முழுவதும் வலம் வருகிறார் நடிகர் அர்ஜூன். இது அவரது 150-வது படம் என்பதால் இன்னொரு சிறப்பையும் இந்தப் படம் பெறுகிறது.
மனைவியுடன் அர்ஜூன் நடத்தும் ரொமான்ஸ் காட்சிகள்தான் படத்தின் முதல் பாதியில் சுவையான திரைக்கதை. அந்தக் காட்சியில் பேசப்படும் வசனங்களும், காட்சியமைப்பும், இயக்கமும், நடிப்பும் ஒருசேர அனைவரையும் கவர்கின்றன. இந்தக் கொஞ்சல், கெஞ்சலையெல்லாம் ஸ்கிரீனில் காட்டுவதென்பது இளமையான இயக்குநர்களால்தான் முடியும். அந்த வகையில் இயக்குநர் அருண் வைத்தியநாதன் இளமைத் துடிப்புள்ள இயக்குநர் என்பது நன்றாகவே தெரிகிறது.
பிரசன்னாவும் அப்படியே.. சரளமான வசன உச்சரிப்புடன் வரலட்சுமியை அவ்வப்போது சீண்டி விளையாடும் ஒரு விளையாட்டுக்கார போலீஸ் அதிகாரியாகி நடித்திருக்கிறார். வரலட்சுமிக்கும் பெரிய அளவிலான துப்பறியும் வேலையில்லையென்றாலும் காட்சியமைப்பை நகர்த்துவதில் அவரும் பெரிய பங்களிப்பை செய்திருக்கிறார்.
சுகாசினி, சுமன், அவர்களது மகள் என்று இந்தக் குடும்பமும் ஒரு சில நிமிடங்களே என்றாலும் மனதில் நிற்கிறார்கள். இப்படியொரு அசம்பாவிதம் யார் வீட்டில் நடந்தாலும் அடுத்து என்ன நடக்கும் என்பதை யாராலும் யூகிக்க முடியாதுதான். ஒரு பக்கம் பெற்றோர்கள் செய்தது தவறென்றாலும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் யாரால் அதனைத் தாங்கிக் கொள்ள முடியும் என்பதையும் சரி சமமான விகிதத்தில் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.
வைபவ் கேரக்டர் ரசிகர்களுக்கு கொலையாளி இவராக இருக்குமோ என்கிற சந்தேகத்தைக் கொடுப்பதற்காகவே வைக்கப்பட்டிருப்பதுபோல் தெரிகிறது. கிருஷ்ணா கேரக்டர். சான்ஸே இல்லை. சந்தேகிக்க இடமே இல்லாத அளவுக்கு அவரை அறிமுகப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
படுகொலைகளை படமாக்கியவிதம் கொடூரமாக இருந்தாலும் அது ஏன்..? எதற்காக இந்தக் கொடூரம் என்பதற்கும் ஒரு காரணத்தைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். இதுவே படத்தின் மீதான ஆர்வத்திற்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது.
இது போன்ற படங்களின் வேகமான ஓட்டத்திற்கும், கவன ஈர்ப்பிற்கும் சுவையான பின்னணி இசையும் காரணமாக இருக்கும். இதில் அதுவும் சாத்தியமாகியிருக்கிறது. நவீனின் பின்னணி இசை பல இடங்களில் அடுத்தது என்ன என்கிற எதிர்பார்ப்பை தூண்டியிருக்கிறது.
இதேபோல் பாடல்களில் ‘இதுவும் கடந்து போகும்’ பாடல் மனதை ஆற்றுகிறது. பாடலை எழுதிய இயக்குநர் அருண் வைத்தியநாதனுக்கு பாராட்டுக்கள். பாடல் காட்சியை படமாக்கியவிதமும் அருமைதான். ‘வாடா மோதிப் பார்க்கலாம்’ பாடல் காட்சி சிச்சுவேஷனுக்கேற்ற பாடலாக சீக்வென்ஸ் காட்சிகளாக வந்து போகிறது..!
அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவே படத்தின் தரத்தை உணர்த்தியிருக்கிறது. படம் முழுவதுமே மேக்கிங் பிரமாதம் என்று சொல்லக் கூடிய அளவுக்கு காட்சிகளை அமைத்திருப்பதற்கு ஒளிப்பதிவே ஒரு உதாரணமாகியிருக்கிறது.
நறுக்கான வசனங்கள்.. அந்த வசனங்களையும் அழகாக கத்தரித்தாற்போல் பேச வைத்திருக்கும்விதம்.. அர்ஜூனின் அலட்சியமான நடிப்பு.. பிரசன்னா, வரலட்சுமியின் துடிப்பான தேடல்.. ஒரு நிமிடம்கூட திரைக்கதை படத்தின் மையக் கதையைவிட்டு அகலாத தன்மை.. திகிலூட்டிய பின்னணி இசை.. கொஞ்சமும் சோர்வில்லாத திரைக்கதை.. நடிகர்களின் குறைவில்லாத பங்களிப்பு.. எல்லாவற்றுக்கும் மேலாக சிறப்பான இயக்கம்.. இது எல்லாமும் சேர்ந்து இந்தப் படத்தை அவசியம் பார்க்க வேண்டிய படம் என்று சொல்ல வைத்திருக்கிறது.
அவசியம் பாருங்கள் மக்களே..! நிச்சயமாக நேரம் வீணாகாது..!!

பாக்கணும் போல இருக்கு - சினிமா விமர்சனம்

27-07-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘வீரசேகரன்’, ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’. ‘தொட்டால் தொடரும்’ ஆகிய படங்களை தயாரித்த எப்.சி.எஸ். கிரியேஷன்ஸின் தயாரிப்பாளர் துவார் ஜி.சந்திரசேகர்தான் இந்தப் படத்தையும் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் ஹீரோவாக பரதன் நடிக்க, ஹீரோயினாக ஹன்சிபா நடிக்கிறார். இவர் ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’, ‘பரஞ்சோதி’, மலையாளப் படமான ‘திரிஷ்யம்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.  இவர்களுடன் சூரி, கஞ்சா கருப்பு, பிளாக் பாண்டி, முத்துக்காளை, சிங்கப்பூர் துரைராஜ், மெய்ராஜன், ஜானகி ஆகியோரும் நடித்துள்ளார்கள்.
மக்கள் தொடர்பு – கோவிந்தராஜ், சண்டை பயிற்சி – நாக் அவுட் நந்தா, நடனம் – பாபி ஆண்டனி, ஈஸ்வர் பாபு, கலை – எஸ்.எஸ்.மூர்த்தி, ஒளிப்பதிவு – ஜி.ரமேஷ், இசை – அருள்தேவ், படத் தொகுப்பு – சுதா, தயாரிப்பு – துவார் ஜி.சந்திரசேகர், எழுத்து, இயக்கம் – எஸ்.பி.ராஜ்குமார்.
இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியுள்ள எஸ்.பி.ராஜ்குமார், ‘பொன்மனம்’, ‘என் புருஷன் குழந்தை மாதிரி’, விஜய் நடித்த ‘சுறா’, சமீபத்தில் வெளியான ‘பட்டைய கிளப்பணும் பாண்டியா’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

வெகு நாட்களுக்கு பிறகு கிராமிய பின்னணியில் ஒரு நகைச்சுவை திரைப்படத்தை பார்த்த திருப்தியை இந்தப் படம் கொடுத்திருக்கிறது.
ஹீரோவான பரதன் கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பவர். இவருடைய நெருங்கிய நண்பர் சூரி. காலையிலேயே சரக்கில் திளைக்கும் அளவுக்கு குடி மன்னர். இன்னொரு நண்பன் பிளாக் பாண்டி. இவர்கள் மூவரும் சந்திக்கும் பிக்னிக் ஸ்பாட் கஞ்சா கருப்பு நடத்தும் டெய்லர் கடை.
அங்கே அமர்ந்து கொண்டு கஞ்சா கருப்புவின் தொழிலையும் நாசமாக்குகிறார்கள். கஞ்சா கருப்பு புது மிஷின் வாங்குவதற்காக கடன் வாங்கி வைத்திருக்கும் 2000 ரூபாயையும் குடிக்க வைத்தே அழிக்கும் அளவுக்கு ரொம்ப நல்லவர்கள் இந்த நண்பர்கள்.
அதே ஊருக்கு ரொம்ப வருடங்கள் கழித்து குடி வருகிறது தாசில்தார் லிவிங்ஸ்டனின் குடும்பம். லிவிங்ஸ்டனுக்கு இரண்டு பெண்கள். மூத்தவர் ஜானகி. இளையவர்தான் ஹீரோயின் அன்ஸிபா ஹாசன்.
ஏற்கெனவே லிவிங்ஸ்டன் அதே ஊரில் இருக்கும்போது அன்ஸிபா ஹாசனுடன் சிறு வயதில் நட்பாக இருந்திருக்கிறார் ஹீரோ பரதன். ஊர் ஆற்றங்கரையோரம் ஒரு கல்லைத் தூக்கி வைத்து இதுதான் பிள்ளையார் என்று சாமியும் கும்பிட்டிருக்கிறார்கள். அன்ஸிபா நினைவாக அந்த இடத்தில் நிஜமாகவே ஒரு பிள்ளையார் சிலையை வைத்து இத்தனை நாளும் கும்பிட்டு வருகிறார் பரதன்.
இப்போது அந்த இடத்தைத் தேடிப் பிடித்து பார்க்க வரும் ஹீரோயின், பரதன் இன்னமும் அந்த இடத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது அறிந்து அவர் மீது காதல் கொள்கிறார். ஹீரோவுக்கும் காதல் பற்றிக் கொள்கிறது.
ஒரு நாள் இளம் காதல் ஜோடிகள் சினிமாவுக்கு செல்கிறது. படம் முடிந்து வெளியில் வரும்போது படம் பற்றிய கருத்து கேட்கும் லோக்கல் டிவி சேனலின் கேமிராவில் மாட்டிக் கொள்கிறார்கள். இதைப் பார்க்கும் லிவிங்ஸ்டன் பதறுகிறார். வருத்தப்படுகிறார். அதே நேரம் பரதனின் தந்தை ஜெயப்பிரகாஷும் இதைப் பார்த்துவிட்டு லிவிங்ஸ்டன் வீட்டுக்கு வந்து பேசுகிறார்.
காதலர்களை பிரிக்க நினைத்தால் அவர்கள் ஒட்டத்தான் நினைப்பார்கள். பேசாமல் நாமளே இவர்களுக்கு கல்யாணத்தை செய்து வைத்துவிடலாம் என்று முடிவெடுக்கிறார்கள் இரு தரப்பு பெற்றோர்களும்.
நிச்சயத்தார்த்த நாளன்று தற்செயலாக கல்யாண மண்டபத்தில் ஹீரோயினின் அக்கா ஜானகியும், ஹீரோ பரதனின் அண்ணனும் சந்தித்துக் கொள்கிறார்கள். பார்த்த மாத்திரத்திலேயே அவர்களுக்குள் காதல் பற்றிக் கொள்ள இதுவும் எதிர்பாராதவிதமாக திருமண நிகழ்வை படமாக்கிக் கொண்டிருக்கும் கேமிராவில் பதிவாகி மண்டபம் முழுக்க ஒளிபரப்பாகிறது.
இதையடுத்து மீண்டும் ஒரு சலசலப்பு எழ.. அதே முகூர்த்தத்தில் ஜானகிக்கும், பரதனின் அண்ணனுக்கும் திருமணம் நடந்தேறுகிறது. திருமணம் முடிந்த கையோடு பரதனின் வீட்டில் அவனது அம்மா சமையல்கட்டில் பேசும் பேச்சு, கல்யாணம், பவுன் நகை பற்றியிருக்க தன்னைப் பற்றித்தான் பேசுகிறார்களோ என்று ஜானகிக்கு பயம் ஏற்படுகிறது.
இதேபோல் பரதனின் பாட்டியும் “கூடுதலாக நகை செய்து தரும்படி உன் அப்பாவிடம் போய் கேட்டு வாங்கிட்டு வா…” என்று ஜானகியிடம் சொல்ல.. ஜானகி அழுகிறார்.
தன் வீட்டுக்கு போய் அம்மா, அப்பாவிடம் இதைச் சொல்ல லிவிங்ஸ்டன் உண்மை தெரியாமல் கொதிக்கிறார். அன்றைய இரவில் எதிர்பாராமல் நடைபெறும் தீ விபத்தில் ஜானகி சிக்கிக் கொள்ள.. பரதன் குடும்பத்தினர்தான் திட்டமிட்டு தங்களது மகளை தீக்கிரையாக்கியதாக தவறாக நினைத்துக் கொள்கிறார் லிவிங்ஸ்டன்.
உடனேயே போலீஸ் பரதனின் அப்பா, அம்மா, அண்ணன் மூவரையும் ஜெயிலில் தள்ளுகிறது. இந்த நேரம் ஹீரோயின் அன்ஸிபாவோடு கொடைக்கானலுக்கு சென்றிருந்த ஹீரோ விஷயம் தெரிந்து அங்கே ஓடி வர.. அதற்குள்ளாக விவகாரம் பெரிதாகியிருக்கிறது.
ஹீரோவுக்கும் லிவிங்ஸ்டனுக்கும் இடையில் சண்டை நடக்க லிவிங்ஸ்டனை அடித்துவிடுகிறார் ஹீரோ. இதைப் பார்க்கும் ஹீரோயின் ஹீரோவை அடித்துவிரட்டிவிட்டு அவருடனான காதலையும் தூக்கியெறிகிறார்.
இனிமேல் என்ன நடந்தது என்பதை தியேட்டரில் பார்த்து தெரிந்து கொள்ளலாமே..?
இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் மிக அனுபவம் வாய்ந்தவர் என்பதால் அதிகப்பட்சம் காமெடியின் மூலமாகவே படத்தை நகர்த்தியிருக்கிறார்.
அறிமுக நடிகர் பரதன் முடிந்த அளவுக்கு நடித்திருக்கிறார். அவருக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திருக்கிறார். பரதன், சூரியுடன் இணைந்து செய்யும் காமெடியும், துணைக்கு கஞ்சா கருப்புவும் சேர்ந்து கொள்ளும் காமெடிகளும் அதகளம். அதிலும் கஞ்சா கருப்பு ஹோட்டலில் பேண்ட் ஜிப்பை பயன்படுத்தும் காட்சியில் விலா நோக சிரிப்பு.. ரொம்ப நாட்களுக்கு பிறகு தொலைக்காட்சிகளுக்கு தேவையான காமெடி காட்சிகள் இந்தப் படத்தில் இருக்கின்றன. எந்தத் தொலைக்காட்சி படத்தை வாங்குகிறதோ அதற்கு ஜாக்பாட்டுதான்..!
அன்ஸிபா ஹாஸன் கேரளத்து அழகி. அமைதியாகவும், ஆர்ப்பாட்டமாகவும் நடித்திருக்கிறார். தனது அப்பாவுக்கு நேர்ந்த கொடுமைக்காக காதலன் என்றும் பாராமல் ஹீரோவை அடித்துவிரட்டிவிட்டு பின்பு வருத்தப்பட்டு நிற்கும் காட்சியில் அச்சச்சோ என்று சொல்லவும் வைத்திருக்கிறார்.
ஜெயப்பிரகாஷ், லிவிங்ஸ்டன் இருவரும் குணச்சித்திரத்தில் பாசமான அப்பாக்களாக போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். நல்லதுதான்.
பாடல் காட்சிகளில் காட்சிகளை இன்னும் கொஞ்சம் அழகாக காட்டியிருக்கலாம். ஒளிப்பதிவாளர் ஜி.ரமேஷின் கேமிரா அனுபவம் ஏன் கோட்டைவிட்டது என்று தெரியவில்லை.
அருள்தேவ் இசையில் பாடல்கள் அனைத்துமே கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் ரசிக்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர். ‘உன் ரெட்ட சட கூப்பிடுதே முத்தம்மா’ பாடல் ஆட வைக்கிறது. மெலடிக்கு ‘மஞ்சப் பூவே மஞ்சப் பூவே’, ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடல்களும் லயிக்க வைத்திருக்கின்றன. சின்ன பட்ஜெட் படங்களில் இசை சிறப்பாக இருக்கும் என்பதற்கு இந்தப் படமும் ஒரு சான்று.
ஐந்தாண்டுகளுக்கு முன்பாகவே தயாரான படம். ஏதோவொரு காரணத்தால் நின்று, நின்று இப்போதுதான் வெளியாகியிருக்கிறது. அப்போதே வெளியாகியிருந்தால் நிச்சயமாக ஒரு பெரும் ஹிட்டடித்திருக்கும்.
இன்றைக்கு பெரிய படங்களின் ஆதிக்கத்திற்கிடையில் கிடைத்த தியேட்டர்களில் படம் ரிலீஸாகியிருப்பதால் படத்தின் கதியை தயாரிப்பாளர் தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொண்டதை போல வைத்துக் கொண்டிருக்கிறார்.
இந்தப் படத்தை இனி வரும் காலங்களில் தொலைக்காட்சிகளில் பார்க்கும் வாய்ப்புள்ளவர்கள் நிச்சயமாக பாராட்டுவார்கள்.. மெச்சுவார்கள்..!

விக்ரம் வேதா - சினிமா விமர்சனம்

24-07-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘தமிழ் படம்’, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘வாயை மூடி பேசவும்’, ‘இறுதி சுற்று’ போன்ற வெற்றி படங்களை தயாரித்த சசிகாந்தின் Y NOT ஸ்டுடியோஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
இப்படத்தில் மாதவன், விஜய் சேதுபதி இருவரும் கதாநாயகர்களாக நடிக்க இவர்களுடன் கதிர், வரலட்சுமி, ‘யு டர்ன்’ புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத், பிரேம், அச்சுயுத் குமார், ‘ஆண்டவன் கட்டளை’ புகழ் ஹரீஷ் பெரடி, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – P.S.வினோத், இசை – சாம் C.S., வசனம் – மணிகண்டன், பாடல்கள் – முத்தமிழ், நடனம் – கல்யாண், படத் தொகுப்பு – ரிச்சர்ட் கெவின், கலை இயக்குனர் – வினோத் ராஜ்குமார், சண்டை பயிற்சி – திலிப் சுப்பராயன், மக்கள் தொடர்பு – நிகில், நிர்வாக தயாரிப்பு – சக்கரவர்த்தி ராமச்சந்திரா, தயாரிப்பு மேற்பார்வை – முத்துராமலிங்கம், எழுத்து இயக்கம் – புஷ்கர் – காயத்ரி, தயாரிப்பு – சசிகாந்த் YNOT ஸ்டுடியோஸ்.

‘ஓரம்போ’, ‘வா குவார்ட்டர் கட்டிங்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் தம்பதிகளான புஷ்கர் – காயத்ரி இயக்கியிருக்கும் மூன்றாவது படம். ஆனால் இதுதான் இவர்களது முதல் வெற்றிப் படம்.
விக்கிரமாதித்தன் கதைகளை ஆதி காலத்தில் இருந்தே கேட்டு வருகிறோம். 
மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் வேதாளத்தைச் விக்கிரமாதித்தன் சுமந்து வருகிறான். அதே நேரம், தன்னைச் சுமந்து வரும்போது விக்கிரமாதித்தன் எதுவுமே பேசக் கூடாது என்று வேதாளம் ஒரு நிபந்தனையை முன்பே விதித்திருக்கிறது.
ஆனால் விக்கிரமாதித்தன் நடந்து செல்லும்போது, வேதாளம் வேண்டுமென்றே “ஒரு கதை சொல்லட்டுமா..?” என்று ஆரம்பித்து ஒரு கதையை சொல்லும். அந்தக் கதையைச் சொல்லி முடித்தவுடன் அந்தக் கதையைத் தொட்டு ஒரு கேள்வியும் கேட்கும் வேதாளம். சரியான விடை தெரிந்தும் பதில் சொல்லவில்லையானால் விக்கிரமாதித்தனின் தலை சுக்கு நூறாக வெடித்து விடும் என்கிற விதியும் உண்டு.
விக்கிரமாதித்தன், வேதாளம் சொல்லும் கதைகளைக் கேட்டுவிட்டு, பின்பு அந்தக் கதையைத் தொட்டு வேதாளம் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலை தனது உயிரைக் காக்கும் பொருட்டு சொல்லுவான். ஆனால் மௌனமாகத் தன்னைச் சுமந்து வர வேண்டுமென்கிற நிபந்தனை அப்போது மீறப்படுவதால், வேதாளம் விக்கிரமாதித்தனிடமிருந்து விடுபட்டு மறுபடியும் மரத்தில் ஏறிக் கொள்ளும்.
இந்த கான்செப்ட்டின் மூலமாக பலவிதமான கதைகளை இந்த வேதாளம், விக்கிரமாதித்தன் மூலமாக தமிழக மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
இந்த வேதாளம்-விக்கிரமாதித்தன் கான்செப்ட்டை மட்டும் அடிப்படையாக கொண்டு அழகான கதை, திரைக்கதையில் அற்புதமான இயக்கத்தில் ஒரு பரபரப்பான படத்தை உருவாக்கி அதனை வெற்றியும் பெற வைத்திருக்கிறார்கள் புஷ்கர்-காயத்ரி இயக்குநர் தம்பதிகள். அவர்களுக்கு நமது முதல் நன்றிகள்..!
18 கொலைகளை அசால்ட்டாக செய்திருக்கும் வேதா என்னும் ரவுடியான விஜய் சேதுபதியை பிடிக்க சென்னை காவல்துறையில் சிறப்பு அதிரடிப் படை அமைக்கப்பட்டிருக்கிறது.
இன்ஸ்பெக்டர் பிரேம் தலைமையில் இருக்கும் அந்த அணியில் 16 என்கவுண்ட்டர்களை அதேபோல் அசால்ட்டாக செய்து காண்பித்திருக்கும் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டான விக்ரம் என்னும் மாதவனும் இடம் பிடித்திருக்கிறார்.
ஓரிடத்தில் விஜய் சேதுபதி பதுங்கியிருப்பதாக செய்தி வர தனது போலீஸ் படையுடன் சென்று அங்கேயிருக்கும் விஜய் சேதுபதியின் கூட்டாளிகளை சுட்டுத் தள்ளுகிறார் மாதவன். இந்தத் தாக்குதலில் ரவுடியிஸத்தில் பங்கு பெறாத கதிரும் இடம் பெற்று உயிரையிழக்கிறார். இந்தக் கதிர் விஜய் சேதுபதியின் பாசத்துக்குரிய உடன் பிறந்த தம்பி. ஆனால் கதிரும் துப்பாக்கியால் போலீஸாரை சுட்டார் என்று தவறான அலிபியை தயார் செய்து அனைவரையும் நம்ப வைக்கிறார் மாதவன்.
ஆனாலும் என்கவுண்ட்டரில் நிறைய பேர் இறந்ததையடுத்து மனித உரிமை கமிஷன் விசாரணை மற்றும் பத்திரிகைகளின் கடுமையான எதிர்ப்பினால் முகம் சுழிக்கும் போலீஸ் உயரதிகாரிகள், சீக்கிரமாக வேதாவை கண்டுபிடித்து பிரச்சனையை முடிக்கும்படி உத்தரவிடுகிறார்கள்.
இந்தப் பிரச்சினை காய்வதற்குள்ளாக விஜய் சேதுபதியே தானாகவே முன் வந்து கமிஷனர் அலுவலகத்தில் சரணடைகிறார். மாதவன் அவரை விசாரித்தபோது வேதாளம்-விக்கிரமாதித்தன் கதை போல ஒரு கதையைச் சொல்கிறார்.
“ஒரு குற்றச் செயலை செய்தவனை கொல்வதா..? அல்லது அந்தக் குற்றச் செயலைச் செய்யச் சொன்னவனை கொல்வதா..?” என்று புதிரான கேள்வியைக் கேட்கிறார் விஜய் சேதுபதி. “செய்யச் சொன்னவனைத்தான் முதலில் கொல்ல வேண்டும்…” என்று மாதவன் சொல்ல.. அதைத்தான் நான் செய்ததாக சொல்லி இதுவரையிலும் அவர் வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்கிறார் விஜய் சேதுபதி.
இதைச் சொல்லி முடித்தவுடனேயே விஜய்சேதுபதியின் ஜாமீன் மனுவோடு அங்கே வருகிறார் மாதவனின் மனைவியான வக்கீல் ஷ்ரத்தா ஸ்ரீதர்.  மாதவன் பெரும் அதிர்ச்சியாகிறார். விஜய் சேதுபதி ஜாமீனில் விடுதலையாகி வெளியே சென்றுவிட.. இது தொடர்பாக மாதவனுக்கும், அவரது மனைவி ஷ்ரத்தாவுக்கும் இடையில் பனிப்போர் ஏற்படுகிறது.
ஷ்ரத்தாவை வைத்தே விஜய் சேதுபதியை பிடிக்க எண்ணுகிறார் மாதவன். அதற்காக இவர் ஒரு திட்டம் போட.. அத்திட்டம் தோல்வியடைகிறது. ஆனால் இன்ஸ்பெக்டர் பிரேம் தனியே போய் விஜய் சேதுபதியை பிடிக்க திட்டமிட அது தோல்வியாகி பிரேம் சுட்டுக் கொல்லப்படுகிறார்.
தன்னுடைய நெருங்கிய நண்பனான பிரேமின் கொலையை மாதவனால் சாதாரணமாக விட முடியவில்லை. அதற்குக் காரணம் விஜய் சேதுபதிதான் என்று நினைத்து விஜய் சேதுபதி இன்னும் கொலை வெறியோடு தேடுகிறார். இறுதியில் என்னாகிறது என்பதுதான் ‘விக்ரம்-வேதா’ படத்தின் திரைக்கதை.
படத்தின் மூன்று கதைகள்.. ஒன்று விஜய் சேதுபதி எப்படி டானாக உருவெடுக்கிறார் என்பது.. இரண்டு, மாதவன் பிரேமின் கொலைக்கு காரணம் தேடி அலைந்து கண்டறிவது.. மூன்று, விஜய் சேதுபதியின் டான் வாழ்க்கையில் ஏற்படும் விஷயங்கள்..! இந்த மூன்றையும் சரி சமமான விஷயத்தில் திரைக்கதையில் வடிவமைத்திருக்கிறார்கள் இயக்குநர்கள்.
விஜய் சேதுபதியின் அந்த அறிமுகக் காட்சிக்கே ஒரு ‘ஓ’ போடலாம். பின்னணி இசையும் இந்த இடத்தில் அபாரம்.. ஏதோ ஒரு காட்சியாக உருவகப்படுத்தப்பட்டு, அந்த கருப்பு சட்டை கொஞ்சம் முன்னால் நகர்ந்த பின்பே அது விஜய் சேதுபதியாக தெரியும்போது ஏற்படும் கிளர்ச்சியே கைதட்ட வைத்திருக்கிறது.
கொலை செய்துவிட்டு கத்தியுடன் வீர நடை போடும் அந்த தோற்றமே விஜய் சேதுபதிக்கு இந்தக் கேரக்டர் ஸ்கெட்ச் கச்சிதமாக பொருந்தியிருப்பதைக் காட்டுகிறது. தம்பி மீதான பாசத்தில் அவனிடத்தில் இருந்து முத்தம் கேட்டுப் பெறுவது.. சேட்டனுக்கு பரோட்டோவை எப்படி சாப்பிடுவது என்று சொல்லிக் கொடுப்பது.. சேட்டனுடன் சேர்ந்து தனக்கு துரோகம் செய்யும் கடைசி நண்பனையும் புரட்டியெடுப்பது.. என்று ஒரு மாஸ் ஹீரோவுக்கான அத்தனை காட்சிகளிலும் அதகளப்படுத்தியிருக்கிறார் விஜய் சேதுபதி.
“தோட்டா இருக்கு.. துப்பாக்கி எங்க..?” என்று மிக எளிமையான வசனத்தின் மூலம் அறிமுகமாகும் மாதவன், தொடர்ச்சியான தனது வசன உச்சரிப்பாலும் அழுத்தமான நடிப்பாலும், கொஞ்சமும் சேதாராமாகாத போலீஸ் மிடுக்கில் அவர் காட்டும் ஆக்ரோஷ அதிகாரி வேடம்.. எல்லாமும் சேர்ந்து விக்ரம் கேரக்டருக்கு அழகைக் கூட்டியிருக்கிறது.
மனைவியுடன் ரொமான்ஸ் காட்சிகளில் காட்டும் அழகு.. அதே மனைவியுடன் விஜய் சேதுபதியால் முரண்படும் தருணம்.. ‘வெத்து பயலுக’ என்று போலீஸ் உயரதிகாரி சொன்னவுடன் சீறி வரும் கோபம்.. பிரேமின் உண்மையான நிலைமை தெரிந்து அந்த நேரத்தில் தன்னை உணரும் தருணம்.. ‘நான் வெறும் போலீஸாவே இருந்துட்டேன்’ என்று தன்னைத்தானே நினைத்து வருந்தும் காட்சியும்.. கடைசியில் போலீஸாரை காலில் சுட்டு காயப்படுத்திவிட்டு ‘அவங்களை திருத்திரலாம்.. ஆனால் இவனை முடியாது’ என்று சொல்லி விஜய் சேதுபதியின் சாய்ஸை போலவே தன்னுடைய உயரதிகாரியை போட்டுத் தள்ளுவது செம டிவிஸ்ட்டு..!
ஷ்ரத்தா அழகு நாயகியாக வலம் வந்திருக்கிறார். வக்கீலாக அவர் இருப்பதை முதலில் காட்டினாலும் எதிரெதிர் காவலாளிகளாக காட்டியிருக்கும் முரண்பாடுதான் படத்தை ரசிக்க வைத்திருக்கிறது. தன்னை வைத்து விஜய் சேதுபதியை பிடிக்க நினைக்கும் கணவருடன் கோபப்பட்டாலும், அவருடைய நலனில் அக்கறை கொண்ட மனைவியாக இருக்கும்விதமும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
கதிருக்கு இதுவொரு முக்கியமான படம். பங்கு மார்க்கெட் வர்த்தகத்தில் நிறைய பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு இருக்கும்போது எதற்கு இந்த அடிதடி, வெட்டுக் குத்து என்று அன்பாக கேட்டு அண்ணனை திசை திருப்பப் பார்க்கிறார். அண்ணன் அவருக்கான வாழ்க்கையை மும்பையில் அமைத்துக் கொடுத்த பின்பும், சந்தர்ப்பவசத்தால் இங்கே வந்து மாட்டிக் கொண்டு மரணமடைகிறார்.
இவருக்கும் வரலட்சுமிக்கும் இருக்கும் வயது தாண்டிய காதல் ரசிக்க வைத்திருக்கிறது என்றாலும் அந்தக் காதல் காட்சி இந்தப் படத்துக்குத் தேவைதானா என்றும் கேட்க தோன்றுகிறது. நீக்கியிருக்கலாம்..!
வரலட்சுமி எல்லாவற்றுக்கும் ‘ஆமாம் சாமி’ போடும் தனி கேரக்டர். பணத்தைத் தூக்கிக் கொண்டு ஓடிய பின்பும் காதலனை மறக்க முடியாமல் போன் போட்டுச் சொல்லி திரும்பி வந்து நின்று அண்ணனுக்கும், தம்பிக்கும் இடையில் மோதலுக்கு அச்சாரமாக நிற்கும் கேரக்டர். ஆனால் இறுதியில் பரிதாபமாக உயிரை விட்டிருக்கிறார்.
ஒரு சில காட்சிகள் என்றாலும் தனது தனி வசன உச்சரிப்பால் கவனத்தை ஈர்க்கும் ஈ.ராம்தாஸ், இன்ஸ்பெக்டர் பிரேம், சேட்டனாக நடித்திருக்கும் ஹரீஷ் பெரடி, கடைசிவரையிலும் நண்பனாக நடித்து துரோகம் செய்யும் அக்சுயுத் குமார் நால்ரும் நினைவில் நிற்கும் அளவுக்கு நடித்திருக்கிறார்கள். அதிலும் ஹரீஷ் பெரடியின் சில, பல குளோஸப் ஷாட்டுகள் அவரது கேரக்டருக்கு வலுவூட்டியிருக்கின்றன.
அதேபோல் புதிதாக கான்ஸ்டபிளாக நுழைந்திருக்கும் ஒருவர் இந்த என்கவுண்ட்டரை பார்த்தவுடன் பயந்துபோய் வேறு இடத்திற்கு டிரான்ஸ்பர் கேட்பதும், பின்பு ஒரு கட்டத்தில் மாதவனை காப்பாற்றுவதும்.. கடைசியாக தனக்குத்தானே துப்பாக்கி கிடைத்தவுடன் உண்மையான போலீஸாக மாறி மாதவனை கொல்ல முயல்வதும்.. டச்சிங்கான காட்சிகள்..
விஜய் சேதுபதி பேசும் வசனங்கள்தான் அவருடைய கேரக்டரை தூக்கி நிறுத்தியிருக்கின்றன. வேதாளம் – விக்கிரமாதித்தனைவிடவும் பல காட்சிகளில் பல கேரக்டர்கள் பேசும் யதார்த்த வசனங்களே படத்திற்கு மிகப் பெரிய பலம். அந்த வகையில் வசனம் எழுதிய மணிகண்டனுக்கு பாராட்டுக்கள்.
“போடத் தெரியாதவனுக்கு பொருள் எதுக்குடா..?”, “போட்டுத் தள்ளிட்டு வீட்டுக்குப் போய் கொறட்டை விட்டு நிம்மதியா தூங்கிருவேன். ஏன்னா நான் போட்டுத் தள்ளின எவனும் அப்பாவிக இல்லை..”, “ஒருத்தனோட கண்ணை பார்த்தே அவன் ரவுடியா இன்னசெண்ட்டான்னு கண்டுபிடிக்கணும். அவன்தான் போலீஸ்..” என்று பல இடங்களிலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக வசனத்தை கொட்டியிருக்கிறார்கள்.
ரவுடியின் மகனையும் ரவுடியாக பார்க்கும் கலாச்சாரத்தைக் கொண்டிருக்கும் போலீஸிடமே,” காந்தியோட அப்பா காந்தியா ஸார்..? அவரைச் சுட்ட கோட்சேவின் அப்பா கோட்சேவா ஸார்..?” என்று கேட்டு மூக்குடைக்கும் காட்சியில் கைதட்டல்கள் பறக்கிறது..!
அதேபோல் “பிரச்சினை என்னன்னு பார்க்குறதைவிட, பிரச்சினையை தூண்டிவிட்டவன் எவன்னுதான் பார்க்கணும்..?”, “கொலை செஞ்சவனைவிட, செய்யச் சொன்னவன்தான் நம்மளோட முதல் எதிரி..” என்கிற மாதிரியான வசனங்களும் இந்தப் படத்திற்கு கெத்தை கூட்டியிருக்கின்றன.
பி.எஸ்.வினோத்தின் ஒளிப்பதிவு படத்திற்குக் கிடைத்த இன்னொரு பலம். முதல் காட்சியில் காணப்படும் அதே கலர் டோனே கடைசிவரையிலும் பயணிக்கிறது. சண்டை காட்சிகளிலும், என்கவுண்ட்டர்களிலும் கேமிராவை தூக்கி சுமந்து படாதபாடுபட்டு படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் வினோத்திற்கு நமது பாராட்டுக்கள்..! அந்த ராட்டினம் மாடல் அளவு படமாக்கலும், ரவுண்ட் டிராலி ஷாட்டும், விஜய் சேதுபதியை தேடும் படலமும் படத்தை பிரமிப்பாக பார்க்க வைத்திருக்கிறது.
சி.எஸ்.சாம்ஸின் இசையில் ‘ஏய் டாசாங்கு’ என்ற பாடலும், நடனமும், காட்சியமைப்புகளும் ஏக ரகளை.. இதைவிடவும் பின்னணி இசையில் நின்று, நிதானித்து அடித்து, ஆடியிருக்கிறார் இசையமைப்பாளர். பாராட்டுக்கள்..!
இது போன்ற கேங்ஸ்டர் படங்களில் இருக்க வேண்டிய விறுவிறுப்பை துளியும் குறையாத அளவுக்கு படத்தின் படத் தொகுப்பு பணியினைச் செய்திருக்கிறார் ரிச்சர்ட் கெவின். துப்பாக்கி சண்டை காட்சிகள், மாதவன்-விஜய் சேதுபதி மோதும் காட்சிகள், கிளைமாக்ஸில் தெறிக்கும் சண்டை காட்சி என்று அனைத்துமே கச்சிதமாக நறுக்கப்பட்டிருக்கின்றன.
முடிவில் யார் உயிருடன் இருப்பார்.. யார் இல்லை என்பதை நம்மிடமே விட்டுவிட்டு படத்தை முடித்திருக்கிறார்கள் இயக்குநர்கள்.
காவல்துறையின் செயல்பாடுகளில் லாஜிக் மீறலெல்லாம் பார்க்கவே கூடாத அளவுக்கு மிக நுணுக்கமாக பார்த்து, பார்த்து செய்திருக்கிறார் இயக்குநர். அதேபோல் லோக்கல் டான்களின் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகளையும் அவர் மற்றவர்களை எதிர்கொள்ளும்விதத்தையும்கூட நல்லவிதமாகவே காட்டியிருக்கிறார்.
போலீஸ் ரெய்டு வரும்போது போதை மருந்து கடத்தல்காரர்கள் என்னவெல்லாம் செய்வார்கள்.. எப்படி தப்பிப்பார்கள் என்பதைக்கூட உள்ளது உள்ளபடியே காட்டியிருக்கிறார் இயக்குநர்.
படத்தின் முக்கியமான கிளைமாக்ஸில் வரலட்சுமி இடது கை பழக்கமுள்ளவர் என்று தெரிந்து கொண்டு பிரேம் திட்டமிட்டு கொல்லப்பட்டார் என்று மாதவன் அறிந்து கொள்கிறார். ஆனால் வரலட்சுமி இடது கை பழக்கமுள்ளவர் என்று மாதவனுக்கு எப்படி தெரிந்தது என்றுதான் தெரியவில்லை.
இதேபோல் இந்த ஒரு திடீர் யோசனைக்கு பின்பு எப்போதோ பேசப்பட்ட பிரச்சினைகளை தோண்டியெடுத்து உடன் வேலை செய்த போலீஸாரிடம் சொல்வதும்.. குற்றவாளிகள் தன் கூடவே இருந்தார்கள் என்பதை அறிந்து கொள்வதும்.. தான் மட்டும் எப்போதும் வேலை, வேலை என்று வேலையையே நினைத்து உலகத்தை மறந்து செயலாற்றியதையும் சொல்கிறார் மாதவன். இந்த திடீர் அறிவு எப்படி அவருக்கு வந்த்து என்பதைத்தான் கொஞ்சம் அழுத்தமாக சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அதை மட்டும் செய்யாமல் அசுர வேகத்தில் கிளைமாக்ஸை சொல்லியிருக்கிறார்கள்.
என்னதான் சொன்னாலும் ராக்கெட் வேக கதையில், ஜெட் வேக திரைக்கதையில்.. மனதை லயிக்க வைக்கும் இயக்கத்தில் இந்தப் படம் உருவாக்கப்பட்டிருப்பதால் எல்லாவற்றையும் மறந்து போய் ரசிக்க வைக்கிறது..!
இதுவரைக்கும் தமிழில் வெளிவந்த கேங்ஸ்டர் சம்பந்தப்பட்ட படங்களில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது இந்த ‘விக்ரம்-வேதா’ திரைப்படம்.

படக் குழுவினர் அனைவருக்கும் நமது வாழ்த்துகளும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும்..!