54321 - சினிமா விமர்சனம்

31-08-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எடுக்கக் கூடாத கதையை, எடுக்கக் கூடாதவிதத்தில் எடுத்து பார்க்க வைத்திருக்கிறார்கள்.
ஊட்டியில் பள்ளியில் படித்து வரும் ஷபீர்தான் வகுப்பில் முதல் மாணவன். கிளாஸ் லீடரும்கூட. ஆனால் திடீரென்று ஊட்டிக்கு மாறுதலாகி வந்ததால் அந்த வகுப்பில் சேரும் அர்வின், அடுத்த தேர்வில் முதல் மதிப்பெண்ணை பிடித்து கிளாஸ் லீடராகவும் ஆகிவிட.. இயல்பாகவே ஷபீருக்கு அர்வின் மீது கோபம் ஏற்படுகிறது.

இந்தக் கோபம் பொறாமையாகி அவன் மனதில் வன்மமாக மாறி, அர்வினை தாக்கவும் செய்கிறான் ஷபீர். இந்தப் பிரச்சினையால் ஷபீரால், அர்வினின் தாயார் விபத்துக்குள்ளாகி மரணிக்கிறார். ஏற்கெனவே தந்தையை இழந்திருக்கும் அர்வின் இப்போது தாயையும் இழந்துவிட.. அவனையும் தன் வீட்டில் வைத்து அரவணைக்கிறார்கள் ஷபீரின் பெற்றோர்.
இது ஷபீருக்கு பிடிக்காமல் போக.. வீட்டில் ரகளை செய்கிறான். இந்த ரகளையில் ஷபீரின் தாய் இறந்துபோக.. ஷபீர்தான் அவளது இறப்புக்குக் காரணம் என்பதால் சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பப்படுகிறான் ஷபீர். அங்கே அவனை விநோதமான ஒரு நோய் தாக்க.. அந்த நோயுடனேயே வளர்கிறான். ஆனாலும் மனதுக்குள் அர்வினை விடக் கூடாது என்கிற வன்மம் மட்டும் இருந்து கொண்டேயிருக்கிறது.
இப்போது அர்வின் வாலிபனாகி ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து குழந்தையும் பெற்றுவிட்டான். இந்த நேரத்தில் ஷபீர் மனநோய் காப்பகத்தில் இருந்து தப்பித்து அர்வினைத் தேடி வருகிறான். இதே நேரம் இரண்டு திருடர்களும் அந்த வீட்டில் கொள்ளையடிக்க உள்ளே நுழைகிறார்கள்.
ஷபீர் என்ன செய்தான்..? அர்வின் தப்பித்தானா..? திருடர்கள் என்ன ஆனார்கள்..? என்பதெல்லாம் படத்தில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்..!
ஒரு வித்தியாசமான திரில்லர் கதைதான். ஆனால் படம் பார்க்கும் அனைவரையும் அந்த குணம் பீடித்துவிடும் அளவுக்கான சிறப்பான இயக்கத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராகவேந்திரா பிரசாத்.  இதுதான் பயமாக இருக்கிறது.
இப்போதே நாட்டில் பல கொலைகள். திட்டமிட்ட படுகொலைகள் எல்லாம் தாறுமாறாக நடந்து வரும் சூழலில் இது போன்ற திரைப்படங்கள் வந்தால்.. நிச்சயம் மனிதருக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு மிருக வெறியை தூண்டிவிடும் என்பதில் சந்தேகமில்லை.
வில்லனான ஷபீரை பிடித்திருக்கும் OCD நோயை பற்றி லேசாக சொல்லிவிட்டு தப்பித்துவிட்டதால் இது கொடூரமான மனநிலை கொண்டவனின் தாக்குதலாகவே ரசிகர்களால் பார்க்கப்படும். அந்த நோயின் தீவிரம் பற்றியும், ஒரு நோயாளியை போன்ற டிரீட்மெண்ட்டிலும் இந்தக் கேரக்டரை அணுகியிருக்க வேண்டும். இயக்குநரின் நேரம் போதாமை என்கிற அவசரத்தில் இதைத் தொடாததால் படம் பயங்கரவாதம் காட்டும் படமாக மாறியிருக்கிறது.
அர்வினை தாக்கும் காட்சிகளும், அர்வின் மனைவியின் விரலை வெட்டித் தள்ளும் காட்சிகளும், குழந்தையை கொல்லும் காட்சியும் மனதை பிசைய வைக்கும் காட்சிகள். இத்தனை வன்முறைகளுடன் படத்தை பார்க்க வைத்தால் எப்படி இயக்குநரே..?
வில்லன் ஷபீரே படத்தின் பிரதான கேரக்டர். தன் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார். பயமுறுத்தியிருக்கிறார். மனநோயாளியின் பிம்பத்தை பிரதிபலித்திருக்கிறார். இன்னொரு ஹீரோவான அர்வினுக்கு சாப்டான கேரக்டர் என்றாலும் இறுதிக் காட்சியில் அவரையும் சண்டை போட வைத்திருக்கிறார்கள். எப்படியிருந்தாலும் பாவம் என்கிற உணர்வை தன் நடிப்பால் வரவழைத்திருக்கிறார் அர்வின்.
ஹீரோயின் பவித்ராவுக்கு அதிகம் வேலையில்லை. அதிலும் முக்கால்வாசி காட்சிகளில் கட்டிப் போட்டபடியே இருப்பதால் நோ யூஸ்.. ஷபீரின் அப்பாவாக வந்து தர்ம அடி வாங்கும் ராகவேந்தரை நினைக்கும்போது பாராட்டத் தோன்றுகிறது. பொதுவாக இது போன்ற கேரக்டர்களில் நடிக்க நடிகர்கள் முன் வர மாட்டாரகள். துணிந்து முன் வந்து அடி வாங்கி.. நடித்திருக்கும் அவருக்கு நமது பாராட்டுக்கள்.
திருடனாக நடித்திருக்கும் ஜெயக்குமாரின் கேரக்டர் ஸ்கெட்ச்சுதான் வீண். இவ்வளவு தைரியமாக கொள்ளையடிக்க வரும் திருடன் ஏன் இப்படி பயந்தாங்கொள்ளியாக இருக்கப்பட்டார் என்று தெரியவில்லை. ஆனால் இவருக்கான பிளாஷ்பேக் கதை அருமை. அந்த ரன் வேக ஓட்டத்தை படமாக்கியவிதமும் சூப்பர்ப்.
படத்தில் கடுமையாக உழைத்திருக்கும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு நமது பாராட்டுக்கள். ஒளிப்பதிவாளர் பானு முருகனின் கைவண்ணத்தில் காட்சிகள் ரகளையாக படமாக்கப்பட்டிருக்கிறது. வீட்டின் உட்புறம்.. ஒரேயொரு ஹால்.. அங்கேதான் அத்தனையும் நடக்கிறது என்றாலும், கொஞ்சமும் போரடிக்காமல்.. அதே சமயம் பய உணர்வுடனேயே படத்தை பார்க்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
இதேபோல் பின்னணி இசையும் தன் பங்குக்கு அதிகமாகவே மிரட்டியிருக்கிறது. ஜோஷ்வா ஸ்ரீதருக்கு நமது பாராட்டுக்கள். படத் தொகுப்பாளரான ரிஜீஸின் அற்புதமான வேலையினால் படத்தின் பிற்பாதியில் படம் ஒரு இறுகிய தன்மை கொண்டதாக மாறி, ரசிக்க வைத்திருக்கிறது.
படத்தைப் பார்க்க வைத்திருக்கிறார்கள். போரடிக்காமல் செல்கிறது.. சைக்காலஜிக்கல் திரில்லர் டைப் படம் என்பதால் வன்முறை ஒரு பொருட்டல்ல என்றெல்லாம் சொல்லிக் கொண்டே போனாலும், இந்தப் படம் எடுக்கப்பட கூடாத படம். இயக்கப்பட கூடாத கதை என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை.
மொக்கையான இயக்கத்தில் தீவிரமான விஷயத்தை பேசுவது என்பது வேறு. டூவீலர் ஸ்டேண்ட்டில் டூவீலரை வெளியில் எடுப்பதற்குள் எல்லாமே மறந்துபோய்விடும். ஆனால் அதே தீவிரமான விஷயத்தை மிகச் சிறப்பான இயக்கத்தில் ரசிகனின் மனதுக்குள் திணிப்பது என்பது ஒரு சமூகத்தையே பேராபத்தில் கொண்டு போய்விடும். இதனால்தான் சொல்கிறோம். இயக்குநர் ராகவேந்திர பிரசாத் இந்த படத்தினை தவிர்த்திருக்கலாம்.

மீண்டும் ஒரு காதல் கதை - சினிமா விமர்சனம்

31-08-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மலையாளத்தில் மெகா ஹிட்டடிக்கும் மென்மையான காதல் திரைப்படங்கள், தமிழ் ரசிகர்களால் ஓட வைக்கப்பட மாட்டாது என்பதை இந்தப் படமும் நிரூபித்திருக்கிறது.
2012-ம் வருடம் மலையாளத்தில் வெளியான ‘தட்டத்தின் மறையத்து’ என்கிற படத்தின் தமிழ் ரீமேக்குதான் இந்த ‘மீண்டும் ஒரு காதல் கதை’ திரைப்படம்.
பிரபல மலையாள நடிகரும், இயக்குநருமான சீனிவாசனும், மலையாள நடிகர் முகேஷும் இணைந்து தயாரித்த இந்த மலையாளப் படத்தில் நிவின் பாலியும், இஷா தல்வாரும் இணைந்து நடித்திருந்தனர். சீனிவாசனின் மகன் வினீத் சீனிவாசன் எழுதி, இயக்கியிருந்தார். படம் வெளியாகி கேரளாவில் அந்த வருடத்தின் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து சாதனை படைத்தது.
தமிழுக்கு இதைக் கொண்டு வருவதென்பது மீன் மார்க்கெட்டில் தயிர் சாதம் விற்பது போன்ற நிலைமை என்பதை புரிந்துகொண்டு பல கதாநாயக நடிகர்களும் ஒதுங்கிக் கொள்ள.. அறிமுக நடிகரான வால்டர் பிலிப்ஸ் தனது அறிமுகத்திற்கு இதுதான் ஏற்ற கதை என்று சொல்லி ரீமேக் உரிமையை வாங்கி படமாக்கியிருக்கிறார்.
மலையாளத்தில் ஹீரோயினாக நடித்த இஷா தல்வாரே தமிழிலும் ஹீரோயினாக நடித்திருக்கிறார். மேலும் நாசர், ‘தலைவாசல்’ விஜய், மனோஜ் கே.ஜெயன், சிங்கமுத்து, வனிதா கிருஷ்ணசந்திரன், அர்ஜூன், வித்யூலோகா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – விஷ்ணு சர்மா, இசை – ஜி.வி.பிரகாஷ்குமார், படத்தொகுப்பு – தியாகராஜன். ‘யாரடி நீ மோகினி’ படத்தை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
காலம் காலமாக நாம் பார்த்து சலித்துப் போயிருக்கும் அதே காதல் கதைதான். மலையாளத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இருந்த உயிரோட்டமும், கேரள முஸ்லீம்கள் குடும்பத்தில் இப்போதும் நிலவும் பெண்ணடிமைத்தனத்தின் உச்சத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியதுதான் படத்தின் ஹிட்டுக்குக் காரணம்.
தமிழகத்தில் மைனாரிட்டியாக இருக்கும் முஸ்லீம் மக்களில் கால்வாசிபேர்கூட சினிமா பார்க்க வர மாட்டார்கள் என்பதாலும், அவர்களுக்காக கொடுக்கப்பட்டிருக்கும் உரிமைக் குரலை அவர்களே கேட்க முடியாமல் இருக்கும்போது மற்றவர்களுக்கு அது எந்த பாதிப்பை நிகழ்த்திவிடப் போகிறது..?

நாகர்கோவிலின் கட்டுக்கோப்பான பாரம்பரியமிக்க முஸ்லீம் குடும்பத்து பெண் ஆயிஷா என்னும் இஷா தல்வார். இவரது பெரியப்பா நாசர். தந்தை ‘தலைவாசல்’ விஜய், இவருக்கு ஒரு அக்கா. அவரும் திருமணமாகி ஒரே வருடத்தில் விவாகரத்தாகி வீடு திரும்பிவிட்டார்.
ஒரு திருமணத்தில் ஆயிஷாவை பார்க்கும் வினோத் என்னும் ஹீரோ, பார்த்தவுடன் காதலிக்கத் துவங்குகிறார். இந்தக் காதல் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு வலுப்பெற்று காதலர்களிடையே மன ஒற்றுமை வரும்போது வீட்டுக்கு தெரிந்துவிடுகிறது.
பிறகென்ன..? வீட்டில் கடும் காவல். ஆயிஷாவுக்கு எதிர்ப்பு. காதலர்களை பிரிக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. இதனையும் மீறி ஆயிஷாவை பார்க்கப் போகும் ஹீரோவை போலீஸில் ஒப்படைக்கிறார்கள்.
இப்போது போலீஸ் இந்த காதல் கதையை முழுமையாகக் கேட்கிறது. காதல் திருமணம் செய்திருக்கும் இன்ஸ்பெக்டர் மனோஜ் கே.ஜெயன் இந்தக் காதலை தான் நடத்தி வைப்பதாக காதலனிடம் உறுதியளிக்கிறார். இறுதியில் இவர்களது காதல் ஜெயித்ததா..? காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா..? என்பதுதான் படம்.
ஹீரோ வால்டர் பிலிப்ஸுக்கு முதல் படம் என்பதால் விட்டுவிடுவோம். அந்தக் காதலருக்கே உரித்தான குணத்தோடும், படபடப்போடும், காதல் உணர்வோடும் நடித்திருக்கிறார். சில இடங்களில் நம்மையும் சேர்த்தே பதைபதைக்க வைத்திருக்கிறார்.
இஷா தல்வார் மலையாளத்தில் தான் செய்த அதே கேரக்டரை இஷ்டப்பட்டு செய்திருக்கிறார். கேரளாவின் முஸ்லீம் முகத்திற்கு அழகு எடுத்துக்காட்டு என்பதால் கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறார். ஆயிஷாவாக நடித்தும் இருக்கிறார். கிளைமாக்ஸில் அனைவரையும்விட தலைவாசல் விஜய்யே ஸ்கோர் செய்துவிட்டதால் இவரை வைத்து திரும்ப வேண்டிய கதை வேறுவிதமாக மாறியிருக்கிறது.
இவருடைய அக்காவாக நடித்திருக்கும் திவ்யா, நாசர், ‘தலைவாசல்’ விஜய் இந்த முஸ்லீம் குடும்பம் தங்களது கேரக்டர்களை சின்னச் சின்ன ஆக்சன்களிலேயே செய்து காட்டி திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார்கள். கிளைமாக்ஸில் ‘தலைவாசல்’ விஜய்யின் மென்மையான அதே சமயம் அழுத்தமான அந்த வசன உச்சரிப்பும், நடிப்பும், நாசரை திடுக்கிட வைக்கும் செயலும்.. மிக அழகாக பதிவாகியிருக்கிறது.
இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் மனோஜ் கே.ஜெயன்தான் மலையாளத்திலும் இதே கேரக்டரை செய்திருக்கிறார். அசால்ட்டாகாவும், கொஞ்சம் காமெடி இன்ஸ்பெக்டராகவும் வந்திருப்பதால் தமிழ் ரசிகர்களை அதிகம் கவர வாய்ப்பில்லை. ஆனால் இந்த சேட்டன் நடிப்பில் குறையே வைக்கவில்லை.
படத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படி இருப்பது ஒளிப்பதிவுதான். விஷ்ணு ஷர்மாவின் ஒளிப்பதிவில் முதல் காட்சியில் இருந்து இறுதிவரையிலும் அப்படியொரு அட்ராக்சன். கலர் டோனிலும் பலவித மேஜிக்குகள் செய்து கடைசிவரையிலும் ஸ்கிரீனை பார்க்க வைத்திருக்கிறார். பாடல் காட்சிகளில் கேமிராவின் கைவண்ணம் சூப்பர்..
ஜி.வி.பிரகாஷின் இசையில் ஒலித்த நான்கு பாடல்களுமே ஒரு முறை மட்டுமே கேட்கும் ரகமாக இருந்தது என்பது கொடுமையான விஷயம். ஒளிப்பதிவு இல்லாமல் போயிருந்தால் பாடல் காட்சிகளையும் பார்த்திருக்க முடியாது..!
இயக்குநர் மித்ரன் ஜவஹர் “மலையாளப் படம் படு போர். அதனால் பல காட்சிகளை தமிழுக்கு ஏற்றாற்போல் மாற்றி எடுத்திருக்கிறேன்” என்று சொன்னார். ஆனால் படத்தில் பார்த்தால் 90 சதவிகிதம் காட்சிகளை.. ஏன் சில ஷாட்டுகளைகூட அப்படியேதான் காப்பி செய்திருக்கிறார்.
முன்னரே சொன்னதுபோல மலையாள முஸ்லீம்களின் கலாச்சாரத்துடன் ஒன்றிப் போன ஒரு விஷயத்தை இந்தப் படம் கேள்விக்குறியாக்கியதால் கேரளாவில் பெரும் வெற்றி பெற்றது. ஆனால், தமிழகத்தில் அந்த உணர்வை தூண்டவே இல்லாத காரணத்தினால் சாதாரணமான ஒரு காதல் படமாக தேங்கிவிட்டது.
மீண்டும் ஒரு காதல் கதையை ஒரு முறை பார்க்கலாம்..!

பயம் ஒரு பயணம் - சினிமா விமர்சனம்

29-08-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பேய்ப் படங்களின் பட்டியலில் கட்டாயம் இடம் பெற தகுதியுள்ள படம்தான் இது.
புகைப்படக் கலைஞரான ஹீரோ பரத் ரெட்டி, ஒரு அஸைண்மெண்ட்டுக்காக தேக்கடி அருகில் இருக்கும் காட்டு பகுதிக்குள் வருகிறார். புகைப்படங்களை முடிந்தவரையிலும் எடுத்துவிட்டு இரவில் தங்குவதற்காக கெஸ்ட் ஹவுஸ் தேடுகிறார். அவருக்கு அந்தப் பகுதியில் வசிக்கும் மகா குடிகாரரான சிங்கம்புலி ஒரு கெஸ்ட் ஹவுஸை காட்டுகிறார்.

அன்றைய இரவில் அங்கே தங்கும் நாயகனுக்கு தற்செயலாக ஒரு மெமரி கார்டு கிடைக்கிறது. அதனை லேப்டாப்பில் போட்டு பார்க்கும்போது வில்லங்கமான விஷயங்கள் அதில் இருப்பது தெரிகிறது. அதோடு அந்தப் புகைப்படங்களுக்கும் அவருக்கும் இருக்கும் ஒரு தனிப்பட்ட தொடர்பும் அவரை திடுக்கிட வைக்கிறது.
உடனேயே தன்னுடைய நண்பரான பத்திரிகையாளருக்கு போன் செய்து அதனைச் சொல்கிறார். ஜிமெயிலில் புகைப்படங்களை அனுப்ப முயன்றும் முடியாமல் தோல்வியுறுகிறது.
இந்த நேரத்தில் திடீரென்று அந்த வீட்டில் பல அமானுஷ்யங்கள் நடைபெறுகின்றன. சில, பல பேய்கள் அவரை விரட்டுகின்றன. பயமுறுத்துகின்றன. பரத் ரெட்டியால் ஒரு கட்டத்திற்கு மேல் சமாளிக்க முடியாமல் நடு இரவில் காரை எடுத்துக் கொண்டு தப்பியோடுகிறார்.
அந்தப் பேய் பல உருவங்களில் அவரை பின் தொடர.. அதில் இருந்து தப்பிக்க முடியாமல் தவிக்கிறார். தேக்கடியில் தங்கியிருக்கும் தனது குடும்பத்தினரையும் தொடர்பு கொள்ள முடியாமல் அல்லாடுகிறார். அந்த பேய்க்கும் இவருக்கும் என்ன தொடர்பு..? இறுதியில் என்ன ஆகிறது..? என்பதுதான் இந்த திரில்லர் படத்தின் கதை.
சுவையான திரைக்கதை. ஆனால் போதாமையான இயக்கத்தினால் சிற்சில தேக்கங்கள் படத்தில் இருந்தாலும் கடைசிவரையிலும் பார்க்க முடிகிறது.
ஹீரோ பரத் ரெட்டியை சுற்றித்தான் அதிக நேரம் கதை நகர்கிறது. அவருடைய நடிப்பும் அந்த பதட்டத்தை அதிகமாகவே வெளிக்கொணர்ந்திருக்கிறது. இவருக்கும் சிங்கம்புலிக்குமான பிரெண்ட்ஷிப்பில் விளையும் தொடர் கலகலப்புகளும், திருப்பங்களும் இயக்குநருக்கு பலே சொல்ல வைக்கின்றன.
இறந்து போனவர்களெல்லாம் வரிசையாக கண்ணுக்கு வந்து தொலைந்து அடுத்தடுத்து பரத் ரெட்டி அல்லல்படும் காட்சிகளெல்லாம் திக் திக் உணர்வுதான்.
விசாகா சிங்கை பாவமாக்கியிருக்கிறார்கள். அத்தனை வன்முறை அந்தப் பெண்ணின் மீது நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இத்தனை கொடூரத்தைச் செய்தால் அந்தப் பெண் பேயாக மாறாமல் எப்படியிருப்பார்..?
மங்களூரிலும், புனேவிலும், மும்பையிலும், நாக்பூரிலும் இந்து மத அமைப்புகள் ஒழுக்கம் என்கிற பெயரில் பப்புகளிலும், பூங்காக்களிலும் நுழைந்த நடத்திய அழிச்சாட்டியத்தை இங்கே அதே இந்தி மத அமைப்புகள் என்கிற பெயரிலேயே தைரியமாக காட்டியிருக்கிறார் இயக்குநர். இதற்காகவே இவருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு.
அதே சமயம் இன்றைய இளைஞர்கள், இளைஞிகள் இப்படியொரு தண்ணி பார்ட்டியில் கலந்து கொள்ள வேண்டிய அவசியமென்ன என்கிற கேள்வியையும் எழுப்பியிருக்கிறார் இயக்குநர். இது நியாயமானதுதான்..!
பத்திரிகையாளர்களுக்கென்று தனியாக ஒரு சமூகமில்லை. அவர்களும் இந்தச் சமூகத்தில் ஒரு அங்கம்தான். பத்திரிகை என்கிற பின்புலம் இல்லையென்றால் அவர்களும் சாதாரணமானவர்களே என்பதையும் ஒரு கட்டத்தில் ஹீரோவுக்கு புரிய வைக்க முயல்கிறார் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை.
தன் மகளின் புகைப்படத்துடன் காமக்களியாட்டம் என்பது போன்ற டைட்டில் வைத்து செய்தியை வெளியிடாதீர்கள் என்று கெஞ்சி கேட்டும் செய்தியை திமிராக வெளியிட்டு அதற்கான பதிலாக அவர்களின் தற்கொலை என்னும் பாவத்தை சம்பாதிக்கும் அந்த நடிப்பை உண்மையாக வெளிப்படுத்தியிருக்கிறார் பரத் ரெட்டி. வாழ்த்துகள். பாராட்டுக்கள்.
இப்படி சில உண்மையான மனதைத் தொடும் சம்பவங்கள் இந்தப் படத்தில் இருப்பதாலேயே படம் கவனிக்க வைத்திருக்கிறது. பயத்தை ஏற்படுத்தும் காட்சிகளும், பேய் மிரட்டல் காட்சிகளும் உண்மையாகவே இருப்பதினால் திரில்லர் வகை படங்களின் லிஸ்ட்டிலும் இந்தப் படம் இடம் பிடித்திருக்கிறது.
விசாகா சிங், அவரது அப்பாவான ஞானவேல், அம்மாவான ஊர்வசி, நண்பராக வரும் முண்டாசுப்பட்டி முனீஸ்காந்த், சிங்கம்புலி ஆகியோரின் பண்பட்ட நடிப்பு படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது. இன்னொரு நாயகியான மீனாட்சி தீட்சித்திற்கு கொஞ்சமேனும் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கிளைமாக்ஸில் வரும் அந்த திடீர் திருப்பம் எதிர்பாராதது. ஆனால் மனதில் பெரும் பாரத்தைக் கொடுக்கிறது.
ஆண்ட்ரூவின் அற்புதமான ஒளிப்பதிவு இந்தப் படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பலம் என்றே சொல்ல்லாம். இரவு நேரக் காட்சிகளிலும், பேய் துரத்தல் காட்சிகளிலும் உண்மையாகவே மிரட்டியிருக்கிறார். இதேபோல் படத் தொகுப்பாளர் தாஸ் டேனியலின் கைவண்ணத்தில் படத்தை ஒரு இறுக்கமான சூழலிலேயே கடைசிவரையிலும் போரடிக்காமல் கொண்டு சென்று ரசிக்க வைத்திருக்கிறார்கள். பாராட்டுக்கள் இருவருக்கும்.
ஒய்.ஆர்.பிரசாத் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருந்தாலும், பின்னணி இசையில் பெரும் திகில்தான். சோகத்திற்கு நடுவே இடையிடையில் தன்னுடைய கதையை நாயகன் சொல்வதால் அந்த பீலிங் மட்டும் ஜம்ப் ஆவது ஒரு பெரிய குறை.
இயக்குநர் மணிசர்மா தான் ஒரு சிறந்த இயக்குநர் என்பதை இந்தப் படத்தில் நிரூபித்திருக்கிறார். பேய்ப் படம்தான் என்றாலும் அதை பார்க்கும்படியாக உருவாக்கி கொடுத்திருப்பதை பார்த்தால், பேய்ப் படங்களின் ராஜ்ஜியம் இப்போதைக்கு தமிழ்ச் சினிமாவில் முடியாது போலிருக்கிறது.
சிறந்த இயக்கத்தில் கொடுத்தால் எத்தனை பேய்கள் வந்தாலும், தமிழ் சினிமா ரசிகர்கள் அதனை பயப்படாமல் எதிர்கொள்வார்கள் என்பதை இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பும் சொல்கிறது.
‘பயம் ஒரு பயணம்’ – திகிலூட்டும் ஒரு பயணம்.

எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது - சினிமா விமர்சனம்

29-08-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எத்தனை ஹீரோக்கள் வந்தாலும் வேறு யாரும் தன்னுடைய இடத்தை நிரப்பவோ, பிடிக்கவோ முடியாது என்பதற்கு ஒரேயொரு உதாரணமாக இருக்கிறார் நகைச்சுவை சக்கரவர்த்தி மகான் கவுண்டமணி.
ஏற்கெனவே ‘49-ஓ’ என்கிற சமுதாய முன்னேற்றத்தை முக்கியமாகக் கொண்ட படத்தில் நடித்து தனது பெயரையும் காப்பாற்றிய கையோடு, இயல்பான நகைச்சுவையிலும், நக்கல் பேச்சிலும், அரசியல் அதிரடி பேச்சிலும் தன்னை மிஞ்ச ஆளில்லை என்பதை நிரூபித்தார் கவுண்டமணி. இப்போது அதே பாணியில் இன்னுமொரு படம் ‘எனக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது’.

சின்ன வயதிலேயே ஓவியக் கலையும், படைப்பாற்றலும் மிக்கவராக இருக்கும் கவுண்டர், ஊருக்குள் வரும் சினிமா படப்பிடிப்புக் குழுவுக்கு ஒரு உதவியைச் செய்கிறார். ஹீரோயினின் டிரெஸ் மாற்றுவதற்கு படப்பிடிப்புக் குழு வந்த வேனையே மாற்றித் தருகிறார். இதைப் பார்த்து அசந்து போன அந்த வேனின் உரிமையாளர் கவுண்டரை தன்னுடனேயே சென்னைக்கு அழைத்து வருகிறார்.
சென்னைக்கு வந்த பின்பு தன்னுடைய புத்திசாலித்தனத்தினாலும், பேச்சாலும் வளர்ந்து இப்போது திரைப்படத் துறையினருக்கு கேரவன் வேன்களை வாடகைக்கு விடும் பெரிய தொழிலதிபராக வளர்ந்திருக்கிறார் கவுண்டமணி.
கூடவே, காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் வேலையையும் கச்சிதமாகச் செய்து வருகிறார். இதில் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் பேசியே சமாளிக்கும் ஆற்றல் படைத்தவராக இருக்கிறார்.
இவருடைய மனைவியோ பதிபக்தியும், இறை பக்தியும் மிக்கவர். ஜோதிடம், நாள், நேரம், நட்சத்திரம் எல்லாவற்றிலும் நம்பிக்கை உடையவர். கவுண்டரின் பாதுகாப்புக்காக பாதுகாவலர்களையெல்லாம் செட்டப் செய்து வைத்து தனது தாலியை காப்பாற்றி வருகிறார்.
புதிதாக 2 கேரவன் வேன்களை வாங்கியிருக்கும் கவுண்டமணி, இதற்காக தன்னிடம் வேலை பார்ப்பவர்களுடன் சந்தோஷமாக டூர் அடிப்பதற்காக வண்டியை கிளப்பச் சொல்கிறார்.
இதே நேரம் மதுரையை மையமாகக் கொண்ட மாநில அமைச்சரின் மகளான ரித்விகாவை அதே ஊரில் இருக்கும் வேறொரு  ஜாதியைச் சேர்ந்த வாலிபனான செளந்தர்ராஜன் காதலிக்கிறார். இந்தக் காதல் அவர்களது வீட்டுக்கு தெரிந்து ரகளையாக.. வழக்கம்போல இருவரும் ஊரில் இருந்து எஸ்கேப்பாகுகிறார்கள்.
இவர்களைத் தேடிப் பிடித்து கொலை செய்ய ஒரு வாடகைக் கொலையாளிகளை புக் செய்து அனுப்புகிறார் அமைச்சர். அந்த ரவுடி கோஷ்டி காதலர்களை பிடிக்கும் சமயம் கவுண்டமணி தனது கேரவனோடு வந்து அவர்களை விசாரிக்கிறார். இது காதல் விவகாரம் என்பதை அறிந்தவுடன்.. இது தான் நடத்தி வைக்கப் போகும் 51-வது காதல் திருமணம் என்று செண்ட்டிமெண்ட்டாக பீல் ஆகி.. காதலர்களுடன் வண்டியை மதுரைக்கு விடச் சொல்கிறார்.
அங்கே என்ன நடக்கிறது..? காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா..? காதலர்களை கவுண்டர் சேர்த்து வைத்தாரா என்பதுதான் திரைக்கதை.
கவுண்டமணியை வைத்துக் கொண்டு சீரியல் படம் எடுக்க முடியாது. ஆனால் சீரியஸான விஷயங்களை காமெடியாகச் சொல்லி பார்வையாளர்களை சீரியஸாக்கலாம். அதைத்தான் இந்தப் படத்திலும் செய்திருக்கிறார் கவுண்டமணி.
தமிழ்ச் சினிமா நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், அரசியல்வாதிகள், ஜாதிக் கட்சித் தலைவர்கள், போஸ்டர் ஒட்டும் அல்லக்கைகள்.. காலில் விழுந்து காலை வாரத் துடிக்கும் தொண்டர்கள், ஜோதிடர்கள், பக்தி, ஒழுக்கம், கோவில்கள் என்று சமூகத்தின் பலவற்றையும் கொத்து புரோட்டா போட்டிருக்கிறார் கவுண்டர்.
ஒரு காட்சியில், ஹன்ஸிகா மோத்வானி, காஜர் அகர்வாலின் பெயர்களில் இருக்கும் ஜாதிப் பெயரைத் திட்டிவிவிட்டு, ‘இப்படி பேரு வைச்சிருக்கிறவங்களுக்கு கேரவன் தர மாட்டோம்ன்னு சொல்லு’ என்கிறார்.
விஷால் கேரவன் கேட்டால் ‘பின்னி மில்லுக்கு அனுப்பு’.. கவுதம் வாசுதேவ் மேனன் கேட்டால் ‘ஈ.சி.ஆர். ரோட்டு காபி ஷாப்புக்கு அனுப்பு’.. ஹரி கேட்டால் ‘போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பு’.. என்று டக், டக்கென்று ஒப்பிக்கிறார் கவுண்டர்.
இன்னொரு காட்சியில் ‘ஜி.வி.பிரகாஷ், எஸ்.ஜே.சூர்யால்லாம் நடிக்க வந்துட்டாங்க’ என்ற தகவலுக்கு, ‘அடேய் இங்க என்னடா நடக்குது.. சினிமா எங்கடா போய்க்கிட்டிருக்கு’ என்று மொத்தமாக வாரியிருக்கிறார் கவுண்டர்.
பவர் ஸ்டாருக்கு இதைவிட பெரிய மானக்கேடு வேற எதுவும் வேணாம்.. அப்படியொரு பன்ச்சை அவருக்கு வைத்திருக்கிறார் கவுண்டமணி.
‘இப்பவெல்லாம் நாய், பேயை வைச்சு எடுக்குற படம்தாண்டா நல்லா ஓடுது. அதுனால நாய் படத்துக்குத்தான் முதல்ல கேரவனை அனுப்பணும்’ என்கிறார். பெயர் தெரியாத ஒரு நடிகருக்கு கேரவன் வேணும் என்று உதவியாளர் சொல்ல ‘அவனுக்கெல்லாம் தர முடியாது. போய் மரத்தடில போட்டுக்கச் சொல்லு’ என்கிறார் அலட்சியமாக..!
இன்னொரு காட்சியில் தன்னிடம் கேரவன் வாங்கியிருக்கும் ஒரு படத்தின் படப்பிடிப்புக்குச் செல்கிறார் கவுண்டமணி. அந்தப் படத்தின் படப்பிடிப்பில் ஹீரோ ‘நான் செத்துட்டேன்னா உன்னை சும்மா விட மாட்டேன்டா’ என்கிற வசனத்தை வேறு, வேறு மாடுலேஷனில் நடிப்பே இல்லாமல் சொல்கிறார். இயக்குநர் விடாமல் அவரை அனத்தி அதை பேச வைக்க.. இந்தக் காட்சியில் கவுண்டரின் வெறும் முக பாவனையிலேயே கை தட்டல் அள்ளுகிறது. கடைசியாக ‘அவன் செத்த பின்னாடி எப்படிடா அவனை பார்ப்பான்.. என்னடா டயலாக் எழுதுறீங்க..?’ என்று அலுத்துக் கொள்வதும் நம்பர் ஒன் காமெடி.
சாதாரண டயலாக்குதான். ஆனால் அது கவுண்டமணியின் வாயிலிருந்து வரும்போது காமெடியாக மாறி விடுகிறது.
தனது மனைவியின் ஜோதிட ஆர்வத்தையும், கடவுள் பாசத்தையும் ஒரு சேர கிண்டலடித்து அவரையும் வெறுப்பேற்றுகிறார்.  “அதென்னங்கடா ஆனா ஊனான்னா அண்ணனை வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறேன்னு கதை விடுறீங்க.. வயசில்லைன்னா.. வயசுக்கு வந்தப்புறம் வந்து கும்புடுங்கடா..” என்று ஒட்டு மொத்த அரசியல்வாதிகளையும் நக்கலடிக்கிறார்.
“இந்தக் கால்ல விழுகுற கர்மத்தை எவண்டா கண்டுபிடிச்சான்..? எதுக்கெடுத்தாலும் கால் விழுந்தாகணுமா..?” என்ற கவுண்டரின் எகத்தாளமான கேள்வி, இன்றைய ஆட்சியாளர்களின் காதுகளுக்கு போனதா என்று தெரியவில்லை. செருப்படி கமெண்ட்..! ஜாதியை பார்க்காமல் ஓட்டு கேட்டு வாங்கிவிட்டு, பின்பு ஜாதி பார்த்து பேசுவதும், திருமணம் செய்வதுமான அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டையும் வாரியிருக்கிறார் கவுண்டர்.
இதுதான் என்றில்லை.. சாதாரணமாக அவரது சின்ன பார்வை ஒன்றே பல விஷயங்களை உணர்த்துகிறது. அவருடைய மனைவியின் அருகில் படுத்திருப்பவர், மனைவியின் முகத்தை பார்த்துவிட்டு பயத்துடன் திரும்புவதும்.. ஒரு காட்சியில் பதிலேதும் சொல்லாமல் சரக்கையெடுத்து குடித்துவிட்டு முகத்தைத் திருப்பிக் கொள்வதுமாக சில காட்சிகளில் கவுண்டமணியின் முக பாவனையே ஆயிரம் நடிப்பைக் காட்டுகிறது.
கவுண்டருக்கு உடல் வலு இல்லை. முகம்கூட ஒட்டிப் போய்விட்டது என்றாலும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு அவருக்கு எப்போதும் உண்டு. பாடல் காட்சிகளில் நடனமாடவும் செய்கிறார். என்னதான் செய்தாலும் அவருடைய பலம் அவருடைய வாய்தான் என்பதுதான் உண்மை.
காதலியாக வரும் ரித்விகா, காதலனாக நடித்திருக்கும் செளந்தர்ராஜன், உதவியாளரான பாடகர் வேலமுருகன் என்று இவர்களுக்கும் தனித்த நடிப்புக்கான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு, அதையும் கச்சிதமாகவே செய்திருக்கிறார்கள்.
கவுண்டரின் மனைவியாக நடித்திருக்கும் ஷானூர் ஷானா, இனி வரும் காலங்களில் நிறைய தமிழ்ப் படங்களில் அம்மா கேரக்டரில் நடிக்க வைக்கப்படலாம். தெலுங்கில் அதிகமாக அம்மாவாக நடித்துவரும் இவருக்கு இது இரண்டாவது தமிழ்ப் படம் என்று நினைக்கிறோம். அழகிலும், நடிப்பிலும் குறைவில்லை.
காதலர்களை போட்டுத் தள்ளுவதற்காக தேடிப் பிடிக்கும் ராம்ஸ் அண்ட் கோ-ரவுடி கும்பலின் அளப்பறை இன்னொரு பக்கம் தியேட்டரை குலுங்க வைக்கிறது. இவர்கள் ஆயிரத்தில் பேச வந்தவர்கள் லட்சத்தில் சொன்னவுடன் திகைப்பதும்.. அட்வான்ஸை வாங்க மறுத்து ‘பேலன்ஸை மொதல்ல எடுத்து வைங்க’ என்று கேட்டு அவர்களை திகைக்க வைப்பதும் காமெடியிலும் ஒரு காமெடி.
திருட்டு பைக்கில் ஸ்டீரியோ டைப் ஸ்பீக்கரை வைத்து.. மூடி போடாமல் ஓட வேண்டும் என்பதும்.. 200 அடி பின்னால்தான் சந்தேகப்படாத அளவுக்கு நிற்க வேண்டும் என்பதற்காக டேப் வைத்து அளந்து பார்ப்பதெல்லாம் நான் ஸ்டாப் காமெடியாகிவிட்டது.
கண்ணனின் ஒளிப்பதிவில் குறையொன்றுமில்லை. இதையெல்லாம் தனித்துப் பார்க்கும் அளவுக்கு முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. அருணகிரியின் இசையில் ‘பேடி பேடி’, ‘கோடம்பாக்கம் மறுபேரு’, ‘அதான் இதானு’ பார்த்தேன் பாடல்கள் ஓகே.. கவுண்டருக்காக வைக்கப்பட்டிருக்கும் டைட்டில் பாடல் படு ஜோர்..!
முதற்பாதியில் கவுண்டரின் பன்ச்சினால் தீயாய் பறக்கும் படம்.. இடைவேளைக்கு பின்பு செளந்தர்ராஜன், ரித்விகா காதல் ஸ்டோரியை சொல்வதற்காக கொஞ்சம் பிரேக்விட்டதில் தொய்வாகிவிட்டது.. இதில் லவ் ஸ்டோரியை கொஞ்சமாகச் சொல்லி கவுண்டரையே முன்னிலைப்படுத்தியிருக்கலாம்.
இருந்தாலும், அநியாயத்தைத் தட்டிக் கேட்கும் தோழராக செளந்தர்ராஜனை காட்டியிருப்பதும்.. அமைச்சரின் மகளுக்கு அப்பாவின் பொஸஸ்ஸிவ்னஸ் காரணமாகவே செளந்தர் மீது காதல் வருவதும்.. ஜாதிவிட்டு ஜாதி கல்யாணம் செய்த்தற்காகவே தம்பியுடன் பேசாமல் இருக்கும் அமைச்சரின் கதையும்.. இதே தம்பி காதலைப் பிரிக்க நினைப்பதும், கிளைமாக்ஸில் மணப்பெண் உடையில் மகளைப் பார்த்தவுடன் அப்பா மனம் மாறுவதும்.. அடிதடியில்லாமல் முடிக்கப்பட்டு இது போன்ற சிற்சில சுவாரஸ்யங்களே படத்தைக் காப்பாற்றியிருக்கின்றன.
கவுண்டமணியின் புண்ணியத்தில் படத்தை கடைசிவரையிலும் பார்க்க வைத்திருக்கிறார்கள். பார்க்கலாம்.. சிரிக்கலாம்.

வென்று வருவான் - சினிமா விமர்சனம்

27-08-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கும் திருவளக்குறிச்சி என்ற கிராமத்தில் வாழும் வர்மன் எட்டுக் கொலைகளை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு, அந்தக் குற்றங்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட காரணத்தினால் தூக்குத் தண்டனை கிடைத்து தூக்கில் போடப்பட காத்திருக்கிறான்.

இன்னும் ஒரு வாரத்தில் தூக்கலிடப்பட இருக்கையில் இது பற்றி ஒரு பத்திரிகை, சிறப்புச் செய்தியை வெளியிட முடிவு செய்து, தனது செய்தியாளரை வர்மனை பற்றி அறிந்து கொள்ள திருவளக்குறிச்சிக்கு அனுப்புகிறது.
அங்கே வர்மனின் கதையைத் தெரிந்து கொள்கிறார் பத்திரிகையாளர். பிளாஷ்பேக்கில் நமக்கும் கதை விரிகிறது.
பிறப்பிலேயே கண் பார்வையில்லாத விதவைத் தாயின் மகன் வர்மன். தனது அம்மாவுடன் அந்தக் கிராமத்திலேயே வாழ்ந்து வந்தவன்.. தனது அம்மாவிற்கு நேரும் சின்னச் சின்ன கொடுமைகளைக்கூட தாங்கா மாட்டாமல் கோபப்படுகிறான். அந்த ஊர்த் தலைவரையே அடித்துவிடுகிறான்.
இதனால் பயந்து போன அவனது அம்மா அவனை காட்டுக்குள் அனுப்பி ஒரு சாமியாரின் அரவணைப்பில் வளர வைக்கிறாள். இதனால் எப்போதும் தனக்கென ஒரு உலகத்தை படைத்துக் கொண்டவன்போல வாழ்கிறான் வர்மன்.
அதே ஊரில் வசிக்கும் இளம் பெண் சமீராவின் காதலுக்கும் ஆளாகிறான் வர்மன். ஆனால் காதலிப்பது என்றால் என்னவென்று தெரியாமல் போய்.. கடைசியாக அதற்கும் ஒப்புக் கொள்கிறான்.
இருந்தாலும் தனது இயல்பின் காரணமாய் தவறு எங்கே நடந்தாலும் அதைத் தட்டிக் கேட்கிறான். இதனால் ஊருக்குள் அவனுக்கு பல எதிரிகள். இந்தச் சூழலில் இவன் எதிர்த்த 4 ஊர்க்கார பையன்கள் கொலையுண்டு கிடக்க அந்தப் பழியும் இவன் மீது விழுகிறது. அதேபோல் ஊர்க்கார தலைவர் அவரது மகன் மற்றும் இருவரின் கொலைப் பழியும் வர்மன் மீது தானாகவே வந்து விழுக.. அவன் கைதாகிறான்.
தூக்குக்கு முதல் நாள் அவனது இறுதி ஆசை என்ன என்று கேட்கும்போது தனது தாய் தனக்காக பாட வேண்டும். அவளது பாட்டை கேட்பதுதான் தனது இறுதி ஆசை என்கிறான்.
இதற்காக அவனது தாயை அழைத்து வர ஏற்பாடு செய்கிறார் ஜெயில் அதிகாரி.. தாய் வந்தாளா..? தூக்குத் தண்டனை நிறைவேறியதா என்பதெல்லாம் திரைக்கதை..!
ஒரு சின்ன கிராமத்துக் கதை. அதனை தங்களால் முடிந்த அளவுக்கு நேர்மையாக தயாரித்து வழங்கியிருக்கிறார்கள் இந்த படக் குழுவினர்.
திரைக்கதை மிகவும் நீட்டாக எழுதப்பட்டிருக்கிறது. இடையில் அடிக்கடி வரும் நகைச்சுவை காட்சிகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் நேர்த்தியான திரைக்கதை. அதிகம் குறை சொல்ல முடியாத அளவுக்கு இயக்கியிருக்கிறார் இயக்குநர் விஜேந்திரன்.
நிறை, குறைகள் என்று நிறையவே படத்தில் இருந்தாலும் படம் நெடுகிலும் ஏதோவொன்று இருந்து கொண்டுபோய் படத்தினை கடைசிவரையிலும் பார்க்க வைத்திருக்கிறது.
வர்மனாக நடித்திருக்கும் வீர பாரதி அந்தக் கேரக்டருக்கு ஏற்ற முகம். இயல்பாக நடித்திருக்கிறார். இதேபோல் புதுமுக நடிகை சமீரா.. அவரும் அப்படியே..
இவர்கள் இருவரையும் ஓவர்டேக் செய்து படத்தையை ஹைஜாக் செய்திருக்கிறார் வீர பாரதியின் கண் பார்வையில்லாத அம்மாவாக நடித்திருக்கும் நடிகை எலிஸபெத் சூரஜ்.
aaraaro-aaraaro
இவர் நடித்திருக்கும் முதல் படம் என்று சொல்லும் அளவுக்கு மிக யதார்த்தமான நடிப்பு. கிளைமாக்ஸில் ‘ஆராரோ ஆராரோ’ பாடல் காட்சியில் கண்களை குளமாக்கிவிட்டது இவர் பாடும் பாடலும், இவரது நடிப்பும்..!
இத்தனை வருடங்கள் போராடியும் இப்போதுதான் இவருக்கே பெயர் சொல்லும் அளவுக்கு ஒரு கேரக்டர் கிடைத்திருக்கிறது. கிடைத்த்தை கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார். வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்.
இடைவேளைக்கு பின்னான படத்தில் தீவிரவாதிகள் பிரச்சினை.. இதில் இன்ஸ்பெக்டர் தலையிடுவது.. பத்திரிகையாளரும், தலைவரின் உதவியாளரும் மாட்டிக் கொள்வது.. தப்பிப்பது.. தூக்கலிடும் நேரம் தள்ளிப் போவது.. மறுநாள் நீதிமன்றம் தலையிட்டு தூக்கை நிறுத்துவது.. என்று பரபர திரைக்கதையில் நேரம் போவதே தெரியாமல்போய்விட்டது..
படத்தில் பெரும் சோதனை நகைச்சுவை காட்சிகள் என்ற பெயரில் நேரத்தை வீணாக்கியிருப்பதுதான். இதனை திறமைமிக்க நகைச்சுவை எழுத்தாளர்களிடத்தில் சொல்லி நல்ல நகைச்சுவை போர்ஷனை இதே ஆட்களை வைத்தே படமாக்கியிருக்கலாம்.
‘சண்டி குதிரை’ படத்திற்கு பிறகு இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்துமே கேட்கும் ரகம். அதிலும் ‘ஆராரோ ஆராரோ’ பாடல் இன்னமும் மனதைவிட்டு நீங்கவில்லை.
சின்ன பட்ஜெட் என்பதாலும், புதுமுக இயக்குநர் என்பதாலும் படத்தில் பல நிறை, குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அனைத்தையும் சொல்லிக் கொண்டேயிருந்தால் இந்த இயக்குநரின் திறமைக்கு நாமே முட்டுக்கட்டை போடுவது போலாகிவிடும்.
இயக்குநர் விஜேந்திரன் தனது அடுத்தடுத்த படங்களில் இன்னமும் சிறப்பான படங்களை இயக்குவார் என்று நம்புகிறோம்..!
வென்று வருவான் – அவசியம் பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டிய படம் தோழர்களே.. கை விட்ராதீங்க..!

சாக்கோபார் - சினிமா விமர்சனம்

27-08-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தியாவின் பரபரப்பு இயக்குநர்களில் ஒருவரான ராம்கோபால்வர்மாவின் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி ‘ஐஸ்கிரீம்’ என்கிற பெயரில் வெளியான படத்தின் தமிழ் டப்பிங் படம்தான் இந்த ‘சாக்கோபார்’.
ஒரே லொக்கேஷன். மிகப் பெரிய வீடு. இரண்டு முக்கிய நடிகர்கள். 4 துணை நடிகர்களுடன் வெறும் இரண்டே கால் லட்சம் ரூபாய் செலவில் 4 நாட்களில் மொத்தப் படமும் எடுத்து முடிக்கப்பட்டது. படத்தின் வசூலோ 5 கோடிக்கும் மேல்.
இப்படியெல்லாம் குறைந்த செலவில் ஒரு திரைப்படத்தை தயாரிக்க முடியுமா என்கிற ஒரு கேள்வியை இந்தியா முழுக்க கேட்க வைத்துவிட்டார் ராம்கோபால்வர்மா. அது வர்மா போன்ற சிறந்த இயக்குநர்களால் மட்டுமே முடியும் என்பதுதான் உண்மை.

இதே ‘ஐஸ்கிரீமின்’ தொடர்ச்சியாக முதல் பாகம் வெளியான சில மாதங்களிலேயே 2014 நவம்பர் 21-ம் தேதி ‘ஐஸ்கிரீம்’ படத்தின் இரண்டாம் பாகத்தையும் இதேபோல் குறைந்த செலவில் தயாரித்து வெளியிட்டார் ராம்கோபால் வர்மா. அதுவும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி 10 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இந்தப் படமெல்லாம் தமிழுக்கு செட்டாகாது என்று வர்மா மறுத்தும் கேளாமல் ஏடிஎம் புரொடக்சன் நிறுவனத்தின் தயாரிப்பாளரான டி.மதுராஜ், வர்மாவிடம் அனுமதி வாங்கி ‘ஐஸ்கிரீம்’ முதல் பாகத்தை ‘சாக்கோபார்’ என்கிற பெயரில் தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டிருக்கிறார்.
கல்லூரி மாணவியான தேஜஸ்வினியின் பெற்றோர் ஒரு கல்யாணத்திற்காக வெளியூர் செல்கிறார்கள். அவளுடைய மிகப் பெரிய வீட்டில் அவள் மட்டும் தனியே இருப்பதை அறிந்த அவளது காதலனான ஹீரோ நவ்தீப் அவளைப் பார்க்க அந்த வீட்டிற்கு வருகிறான்.
அந்த வீட்டில் இருக்கும் தவளை மாதிரியான ஒரு பொம்மை இருக்கிறது. அந்தப் பொம்மையை இந்த வீட்டை கட்டியவர்கள் ஏதோ ஒரு சென்ட்டிமெண்ட்டிற்காக வைத்திருக்கிறார்கள் என்கிறாள் ஹீரோயின். ஆனால் ஹீரோ வெகு அலட்சியமாக அந்தத் தவளை பொம்மையை தன் காலால் எட்டி உதைத்துவிடுகிறான்.
இதன் பின்பு அந்த வீட்டில் நடக்கக் கூடாத சம்பவங்களெல்லாம் வரிசையாக நடக்கிறது. யாரோ பியானோ வாசிக்கிறார்கள். 10 நிமிடத்திற்கொரு முறை வீட்டுக் கதவைத் தட்டுகிறார்கள். பாத்ரூமில் பேய்கள் குடியிருக்கின்றன. சூனியக்காரி கிழவி வேடத்தில் ஒருத்தி ஹீரோயினின் கண்ணுக்குப் படுகிறாள். பாத்ரூமில் தண்ணீர் விடாமல் சொட்டுகிறது. தனிமையில் இருக்கும் ஹீரோயினை அப்போதைய சூழல் பெரிதும் பயமுறுத்த துணைக்கு ஹீரோவை வரவழைக்கிறாள்.
சொட்டுச் சொட்டாக வடியும் பாத்ரூம் குழாயை சரி செய்ய பிளம்பரை வரவழைக்கிறான் காதலன். ஆனால் வந்தவனோ மந்திரவாதியை போலவே இருக்க.. இன்னும் பயப்படுகிறாள் ஹீரோயின். மேலும் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரியும், அவளது தம்பியாக வருபவர்களும் சேர்ந்து கொண்டு காட்சிக்கு காட்சி பயமுறுத்த.. ஹீரோயினுக்கு நிஜமாகவே அந்த வீட்டில் ஏதோ ஒன்று நடக்கிறது என்பது போல தெரிகிறது.
கடைசியில் என்ன ஆகிறது என்பதும்..? ஹீரோயினின் பயம் தெளிந்ததா என்பதும்தான் இந்தப் படத்தின் பயமுறுத்த வைக்கும் கதை..!
இயக்கம் என்றால் என்ன என்பதற்கு ராம்கோபால்வர்மா மிகப் பெரிய உதாரணம். இந்தப் படத்தில் இன்னும் கொஞ்சம் மேலே போய் பயமுறுத்தல் என்றால் என்ன என்பதற்கான உதாரணத்தையும் காட்டியிருக்கிறார் வர்மா.
காட்சிக்குக் காட்சி மிரட்டல்தான். இப்படியெல்லாம் ஷாட்டுகள் வைக்க முடியுமா என்பது போலவே வைத்து அசத்தியிருக்கிறார். மிரட்டியிருக்கிறார் வர்மா. ப்ளோகேம் என்னும் புதுவிதமான கேமிரா பதிவு மூலம் மொத்தப் படத்தையும் பதிவாக்கியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ஆஞ்சிதான் இந்தப் படத்திற்கு முதுகெலும்பாய் இருந்திருக்கிறார். பாவம்.. அந்த 4 நாட்களும் அவர் எப்படித்தான் இப்படி அலைந்து, திரிந்து படமாக்கினாரோ..? பாராட்டுக்கள்.. வாழ்த்துகள் ஒளிப்பதிவாளருக்கு..
ஹீரோயின் தேஜஸ்வனிகூட அதிக நேரம் நடந்தும், ஓடியுமே அதிகம் களைப்பாகியிருப்பார். அந்த அளவுக்கு அவரை ஓட வைத்திருக்கிறார் வர்மா. வெறுமனே மிரட்டல் மட்டும் அல்ல. படத்தில் நடித்த 6 பேரையுமே மிகச் சிறப்பாக நடிக்கவும் வைத்திருக்கிறார் வர்மா.
தேஜஸ்வனியின் ஒவ்வொரு பயப்படுதலும், பயமுறுத்தப்படுதலும் பார்வையாளனுக்கும் சேர்ந்தே கடத்தப்பட்டிருக்கிறது. வேலைக்காரியாக நடித்திருக்கும் அந்தப் பெண்ணின் மிரட்டல் பார்வையும், பேய்க் கிழவியின் மேக்கப்பும் ஓஹோ.. மிக பொருத்தமான தேர்வு. இதேபோல் பிளம்பராக வருபவரின் ஆக்சன்களும் கூடுதலாக மிரட்டிவிட்டுப் போக.. படத்தின் அத்தனை கேரக்டர் ஸ்கெட்ச்சுகளும் மட்டுமல்லாமல் செட் பிராப்பர்ட்டீஸ்கூட மிரட்டியிருக்கின்றன எனலாம்.
வர்மா படம் என்றால் கவர்ச்சி இல்லாமல் எப்படி..? இதில் ஹீரோயினை கவுச்சி ஆடை அணிவித்து கடைசிவரையிலும் அதே ஆடையிலேயே வலம் வர வைத்து.. எப்படியும் ‘ஏ’ சர்டிபிகேட்டுதான் கிடைக்கப் போகுது.. பார்த்து ரசிக்கட்டுமே என்று ஜொள்ளுவிட வைத்திருக்கிறார் வர்மா. இன்றைய இந்திய இளைஞர்களைப் பற்றி உண்மையாகவே தெரிந்து வைத்திருக்கும் ஒரே இயக்குநர் வர்மாதான் போலிருக்கிறது..!
நவ்தீப் ஓகே.. காதலியை சமாளிப்பதற்கும், சரசமாடுவதற்கும் அவசியம் தேவையாய் இருந்திருக்கிறார். கடைசியில் இவருடைய முடிவு எதிர்பாராதது..! “ஹைதராபாத்தில் நடந்த உண்மைச் சம்பவம்தான் இது…” என்கிறார் வர்மா. நம்பத்தான் முடியவில்லை.
பிரத்யோதனின் இசையும், பிரதாப் குமார் சங்காவின் படத் தொகுப்பும் மிகச் சிறப்பானது. மிரட்டல் காட்சிகளில் வரும் இசையும், இதனூடேயே தொடர்ந்து நடிப்பையும் காட்ட வைத்திருக்கும் படத் தொகுப்பும் இந்த பேய்ப் படத்தை திகில் விரும்பிகள் அனைவரும் பார்க்கலாம் என்று சொல்ல வைத்திருக்கிறது.
சாக்கோபார் – பேய் மிரட்டல்