இறுதிச் சுற்று - சினிமா விமர்சனம்

31-01-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பெண் இயக்குநர் இயக்கிய படம்தானே என்று அலட்சியமாக சென்றால், ‘அட’ என்று ஒரு ஆச்சரியக் குறியை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா.  2010-ம் ஆண்டு ‘துரோகி’ என்ற தமிழ்ப் படத்தை இயக்கியிருக்கும் சுதா, மணிரத்னத்திடம் திரைப்பாடம் பயின்றவர். இந்தியில் ‘சாலா கதூஸ்’ என்ற பெயரிலும் தமிழில் இந்தப் பெயரிலுமாக இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்.
எடுத்துக் கொண்ட கதையும், திரைக்கதையும், பேசப்பட்டிருக்கும் வசனமும், இயக்கமும் பல படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட ஒரு ஆண் இயக்குநர்தான் இயக்கியிருக்கிறார் என்கிற பிரமையை ஏற்படுத்துகிறது.

குத்துச் சண்டை விளையாட்டில் இந்திய அளவில் மிகச் சிறந்த பயிற்சியாளராக இருக்கிறார் மாதவன். இவருடைய மனைவி இவரைவிட்டு விலகிச் சென்றுவிட்டதால் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார். பெண்களுடனான தொடர்பு, குடிப் பழக்கம், கட் அண்ட் ரைட்டாக பேசுவது என்று முரண்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
இவரை குத்துச் சண்டை சம்மேளனத்திலிருந்து நீக்க முடியாமல் சென்னைக்கு மாற்றல் செய்கிறார்கள். “அங்கே போய் உன் வீரத்தைக் காட்டி யாரையாவது தேசிய லெவலுக்கு கொண்டு வா பார்ப்போம்..” என்று கிண்டல் செய்கிறார்கள் சங்கத்தின் நிர்வாகிகள்.
சென்னை வரும் மாதவன் முதலில் பயிற்சியில் ஆர்வமே இல்லாமல் இருக்கிறார். ஹீரோயின் ரித்திகாவின் அக்காவான மும்தாஜ் இங்கே வீராங்கனையாக இருக்கிறார். ஆனால் அவரால் எக்காலத்திலும் குத்துச் சண்டையில் சோபிக்க முடியாது என்று ஆரம்பத்திலேயே கண்டு பிடிக்கும் மாதவன், ரித்திகாவிடம் குத்துச் சண்டை வீரனுக்கே உரித்தான கோபமும், குணமும், வீரமும் இருப்பதை அறிகிறார்.
மீன் விற்று பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் ரித்திகாவிடம் தினமும் பயிற்சிக்கு வந்தால் 500 ரூபாய் தருவதாகச் சொல்லி ஆசை காட்டுகிறார் மாதவன். இந்தப் பணத்துக்காகவே ரித்திகாவும் வர சம்மதிக்கிறார்.  இந்தப் பயிற்சியின்போது மாதவனின் கடுமையான சொற்களை தாங்க முடியாமல் வெளியேற நினைக்கிறார் ரித்திகா. ஆனாலும் மாதவன் வம்படியாக ரித்திகாவுக்கு டிரெயினிங் கொடுத்து மேம்படுத்த.. தேசிய லெவல் போட்டிகளுக்கு ரித்தாக ஆயத்தமாகிறார்.
இந்த நேரத்தில் மும்தாஜின் முட்டாள்தனமான பொறாமையால் அந்தப் போட்டியில் ரித்திகா தோல்வியடைகிறார்.  தனது கனவெல்லாம் உடைந்து போனதையடுத்து மாதவன் ரித்திகாவை அடித்து, உதைத்து, திட்டிவிட்டுச் செல்கிறார்.
இப்போது போட்டிகள், அதன் உள்ளடக்கம்.. பயிற்சியாளர்.. விளையாட்டு என்பதன் சீரியஸை உணரும் ரித்திகா மீண்டும் விளையாட ஆயத்தமாகிறார். ஆனால் மாதவன் இல்லாமல் போகும் ஒரு தருணத்தில் சங்கத்தின் தேசிய தலைவர் ரித்திகாவை பாலியல் ரீதியாய் அணுக.. அவனை அடித்துவிடுகிறார்.
இதனால் ஒரு பொய்யான குற்றச்சாட்டின் பேரில் போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துச் செல்லப்படுகிறார் ரித்திகா. மாதவனே வந்து ரித்திகாவை விடுவிக்க.. இப்போது ரித்திகாவின் மன நிலை அறிந்து அவரை சண்டிகர் தேசிய பயிற்சி கூடத்திற்கு தன் பொறுப்பில் அழைத்துச் செல்கிறார்.
இதையடுத்து ரித்திகாவுக்கு கடுமையான பயிற்சி கொடுத்து அவரை தேசிய சேம்பியன் லெவலுக்குக் கொண்டு போக நினைக்கிறார் மாதவன். இது முடிந்ததா இல்லையா என்பதுதான் மிச்சமான திரைக்கதை.
படத்தின் துவக்கமே ஆச்சரியம்தான். ஒரு பாலியல் தொழிலாளியுடன் மாதவன் படுக்கையில் இருக்கும் காட்சியுடன்தான் படமே துவங்குகிறது. ஒரு பெண் இயக்குநரின் படத்தில் இப்படியொரு மங்களகரமான துவக்கக் காட்சியை இதுவரையில் பார்த்ததேயில்லை..!
படத்திற்கு தேவையில்லாத ஒரு சின்ன ஷாட்கூட படத்தில் இல்லை. அவ்வளவு கச்சிதமான படத்தொகுப்பு. படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யாவுக்கு ஒரு ஷொட்டு. படம் நெடுகிலும் மாதவன் உச்சரிக்கும் கோப, ஆவேச, நக்கல் வசனங்களை எழுதியிருக்கும் அருண் மாதேஸ்வரனுக்கு ஒரு ஷொட்டு. இப்படி குத்தீட்டியாய் வசனத்தை எழுத வைத்து அதனை சரியான கோணத்தில் படமாக்கியிருக்கும் இயக்குநருக்கும் ஒரு ஷொட்டு..!
இயல்பாகவே ரித்திகா குத்துச் சண்டை வீராங்கனை என்பது படத்திற்குக் கிடைத்த கூடுதல் போனஸ் என்பதால் அந்த வன்முறைக் களமான குத்துச் சண்டை போட்டிகளை ஆக்ரோஷமாக கேமிராமேன் சிவகுமார் விஜயனின் துணையுடன் படமாக்கியிருக்கிறார். இந்த சண்டை காட்சிகளே தூக்கிவாரிப் போடுகின்றன.
குத்துச் சண்டையை எப்போதும் விளையாட்டாக நினைக்கவே கூடாது. மற்யுத்தம் ஒருவிதமான உடல் பயிற்சி போர் என்பதால் அதைக்கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இப்படி ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் முட்டாள்தனமான சண்டையை விளையாட்டு என்றால் எப்படி..? தாங்க முடியவில்லை..! இத்தனை கோரமாக இருக்கும் இதனை எந்த மடையன் விளையாட்டு என்ற பிரிவில் சேர்த்தான் என்று தெரியவில்லை..! வெட்டணும் அவனை..!
பொதுவாக அனைத்து படங்களிலும் இது உண்மைக் கதை இல்லை என்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் ‘இது பல உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு’ என்கிற உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். இரண்டரை வருடங்களாக இதற்காக ஆராய்ச்சி செய்து அலைந்து, திரிந்து பலருடன் இணைந்து திரைக்கதை அமைத்து உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.. மிகப் பெரிய பாராட்டுக்கள்..!
எப்படியிருந்தாலும் இந்தப் படம் இப்போதைய இந்தியாவில் விளையாட்டுத் துறை எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்பதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். எடுத்துக் கொள்ள முடியும்..! ஆதர்சமான விளையாட்டு வீராங்கனையாக ரித்திகா கேரக்டரும், துரோணாச்சார்யா விருதினைப் பெற தகுதியுடைய பயிற்சியாளராக மாதவன் கேரக்டரும் இருக்க முடியாது.. கூடாது என்பதும் இந்தப் படம் சொல்லும் நீதிதான்..!
ஏனெனில் ஒரு பயிற்சியாளர் எப்படியெல்லாம் இருக்க்க் கூடாதோ அப்படியெல்லாம் இருக்கிறார் மாதவன். இப்படியொரு கேரக்டரைசேஷன் கொண்டவர்கள் பயிற்சியாளர்களாக இருந்தால் இவர்களை நம்பி எப்படி வீரர்களை அனுப்புவது..? பயிற்சியாளரும் ஒரு ஆசிரியரே.. நமக்குக் கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அதையேதான் இங்கேயும் எதிர்பார்க்க வேண்டும். வெளியுலகத்தில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். கற்றுக் கொடுப்பதில் மட்டும் திறமைசாலியாக இருந்தால் போதும் என்று எந்த பள்ளியும் நினைப்பதில்லை.. விளையாட்டு சங்கமும் நினைப்பதில்லை. நினைத்தால் அதுதான் மிகப் பெரிய தவறு..!
இறுதியில் ரித்திகா வெற்றி பெற்ற கையோடு ஓடி வந்து மாதவன் மீது தாவிக் கொள்வதெல்லாம் சந்தோஷத்திலா அல்லது காதலினாலா என்பதை நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும். அது சந்தோஷம் என்றால் நமக்கும் சந்தோஷமே..? மாறாக அது காதல் என்றால் இது வெறும் சினிமா என்று நினைக்க வேண்டியதுதான்..!
சாக்லேட் பாய் மாதவனை இப்படியொரு கேரக்டரில் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அந்த அழகு முகத்தில் தாடியோடு எப்படிய்யா ரசிப்பார்கள் என்று போஸ்டரை பார்த்து நினைத்திருந்தோம். ஆனால் படத்தில் ‘அசால்ட்டு சேது’வாக பல காட்சிகளில் அனைவரையும் அசர வைத்துவிட்டார் மனிதர்..!
முதல் காட்சியில் இருந்து முடிவுவரையிலும் அவருடைய முகம் காட்டும் இறுக்கமே ஒருவித ஈர்ப்பை அளிக்கிறது. ஒரு வரி, ரெண்டு வரிகளில் அனைவரின் வாயையும் அடைக்கும்விதமாக பேசும் ‘படாபட்’ வசன உச்சரிப்புகளும், யாருக்காகவும், எதற்காகவும் காம்பரமைஸ் ஆகாமல் இருக்கும்விதமான தனது தனித்தன்மையை கடைசிவரையிலும் காப்பாற்றிக் காட்டுவதில் மாதவன் தனது உடல் மொழியால் அசத்தியிருக்கிறார்.
ரித்திகாவிற்கு மிகப் பெரிய பாராட்டு மழைகள் பொழிந்து கொண்டிருக்கின்றன. இதைவிடவும் மிகப் பிரமாண்டமான அறிமுகம் இவருக்குத் தேவையில்லை. கிடைத்த வாய்ப்பில் கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார் ரித்திகா. முதல் முறை வேண்டுமென்றே தோல்வியடைந்து, நடுவரை அறைந்துவிட்டு மாதவனை அலட்சியமாக பார்க்கிறாரே ஒரு பார்வை.. அசத்தல் நடிப்பு..!
அக்காவை தேர்வு செய்யாத நடுவர்களை பாய்ந்து சென்று தாக்கும் காட்சியிலிருந்து கடைசியில் வெற்றி பெற்ற கையோடு சங்கத்தின் தலைவரை புரட்டியெடுத்துவிட்டு மாதவனை தேடி வந்து தாவிக் கொள்ளும் காட்சிவரையிலும் ‘என்ன நடிப்புடா சாமி’ என்கிற ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கிறார்.
காளி வெங்கட்டின் கிறித்துவ மதம் மாற்றம் காட்சியை ஆட்சேபிக்காத சென்சார் போர்டு அதே இடத்தில் இந்து மதமோ, முஸ்லீம் மதமோ இருந்தால் இந்நேரம் விட்டு வைத்திருக்குமா என்று தெரியவில்லை. சென்ஸிட்டிவ் விஷயங்களில் போய் காமெடியை திணிக்கிறார்களே..?
துணை கோச்சாக நடித்திருக்கும் நாசர், சம்மேளனத்தின் துணைத் தலைவரான ராதாரவி.. ஹீரோயினின் அம்மாவாக நடித்த நடிகை.. சம்மேளனத் தலைவர் என்று அனைவருமே மிகச் சிறப்பான இயக்கத்தினால் தங்களது சிறந்த நடிப்பை காண்பித்திருக்கிறார்கள்.
‘வா மச்சானே’ பாடலும், பாடலுக்கான ஆட்டமும் கச்சிதம். முதல் பாதியில் 3 பாடல்களை வைத்திருந்து பிற்பாதியில் ஒரு பாடலை மட்டுமே வைத்து பெப் குறையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர். வசனத்திற்கும், காட்சிகளுக்கும் இடையூறு இல்லாமல் பின்னணி இசையை ரம்மியமாக அமைத்துக் கொண்ட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு ஒரு நன்றி.
மணிரத்னத்தின் சீடர் என்பதாலோ என்னவோ வசன உச்சரிப்பிலும், வசன ஒலிப்பதிவிலும் அதே பாணியை பயன்படுத்தியிருப்பதால் பல இடங்களில் வசனங்கள் மின்னல் வேகத்தில் நம்மை கடந்து செல்கின்றன. அடுத்த படத்திலாவது கொஞ்சம் பார்த்துக்குங்க மேடம்..!
விறுவிறுப்பான திரைக்கதை.. கச்சிதமான படத் தொகுப்பு.. அழகான ஒளிப்பதிவு.. அருமையான நடிப்பு.. இடையிடையே படத்தினை தொய்வடையவிடாமல் செய்யும் பாடல் காட்சிகள்.. அனைத்தையும் ஒருங்கிணைத்த சிறப்பான இயக்கம் என்று அனைத்திலும் சிறப்பாக வந்திருக்கும் இந்தப் படம், இந்த வருடத்திய டாப் லிஸ்ட்டில் இடம் பிடித்திருக்கிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.
ஒரு பெண் இயக்குநர் இயக்கிய சிறந்த தமிழ்ப் படம் என்பதற்கு உதாரணப் படமாக இது திகழும் என்பதில் சந்தேகமில்லை..!
இறுதிச் சுற்று – சினிமா ஆர்வலர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்..!

2015-ம் ஆண்டு உண்மைத்தமிழன் திரைப்பட விருதுகள் பட்டியல்..!

19-01-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


சென்ற ஆண்டு வெளியான 203 நேரடி தமிழ் படங்களில் சுமாராக 185 படங்களையாவது நாம் பார்த்திருக்கிறோம்.
அந்த அனுபவத்தில் திரைப்படங்களின் பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறந்தவர்களை / சிறந்தவைகளை தேர்ந்தெடுத்து இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

சிறந்த திரைப்படம் முதல் பரிசு – காக்கா முட்டை
சிறந்த திரைப்படம் இரண்டாம் பரிசு – குற்றம் கடிதல்
சிறந்த திரைப்படம் மூன்றாம் பரிசு – பாகுபலி
சிறந்த நகைச்சுவை திரைப்படம் – இவனுக்கு தண்ணில கண்டம்
சிறந்த பேய் படம் – மாயா
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – ராஜதந்திரம்
சிறந்த இயக்குநர் – எஸ்.மணிகண்டன் (காக்கா முட்டை)
சிறந்த இயக்குநர் – சிறப்பு விருது – எஸ்.எஸ்.ராஜமெளலி (பாகுபலி)
சிறந்த புதுமுக இயக்குநர் – ஏ.ஜி.அமித் (ராஜதந்திரம்)
சிறந்த புதுமுக இயக்குநர் – சிறப்பு விருது – ராம் மனோஜ் குமார் (ஆத்யன்)
சிறந்த கதை – ஜெயம் ராஜா (தனி ஒருவன்)
சிறந்த கதை – சிறப்புப் பரிசு – சரவணன் (கத்துக்குட்டி), பி.ஆரோக்கியதாஸ் (49-ஓ)
சிறந்த திரைக்கதை – ரவிக்குமார் (இன்று நேற்று நாளை)
சிறந்த வசனம் – 49-ஓ, கத்துக்குட்டி, உப்பு கருவாடு
சிறந்த நடிகர் –  விக்ரம் (ஐ)
சிறந்த நடிகர் சிறப்பு விருது –  சத்யராஜ் (பாகுபலி, ஒரு நாள் இரவில்)
சிறந்த புதுமுக நடிகர் –   ஜி.வி.பிரகாஷ் குமார் (டார்லிங்)
சிறந்த நடிகை – ஐஸ்வர்யா ராஜேஷ் (காக்கா முட்டை), ராதிகா பிரஷிதா (குற்றம் கடிதல்)
சிறந்த நடிகை – சிறப்பு விருது – பிரியங்கா –  (வந்தா மல)
சிறந்த புதுமுக நடிகை – சாவித்ரி (இசை)
சிறந்த துணை நடிகர் –  பிரகாஷ் ராஜ், (ஓகே கண்மணி)
சிறந்த துணை நடிகை – ஜெய் குஹானி (சார்லஸ் ஷபீக் கார்த்திகா)
சிறந்த குணச்சித்திர‌ நடிகர் – ராஜ்கிரண் (சிவப்பு)
சிறந்த குணச்சித்திர நடிகர் சிறப்பு விருது – தம்பி ராமையா (பல திரைப்படங்கள்)
சிறந்த குணச்சித்திர‌ நடிகை – ரம்யா கிருஷ்ணன் (பாகுபலி)
சிறந்த குணசித்திர நடிகை சிறப்பு விருது – ஊர்வசி (உத்தமவில்லன், சவாலே சமாளி)
சிறந்த வில்லன் நடிகர் – அரவிந்த்சாமி (தனி ஒருவன்)
சிறந்த வில்லன் நடிகர் சிறப்பு விருது – சுரேஷ் கோபி (ஐ) 
சிறந்த வில்லி – ஆஷா சரத் (பாபநாசம்)
சிறந்த வில்லி சிறப்பு விருது – ஷனூர் ஷனா
சிறந்த நகைச்சுவை நடிகர் – சூரி (பல திரைப்படங்கள்)
சிறந்த நகைச்சுவை நடிகர் சிறப்பு விருது – (பாலசரவணன், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்)
சிறந்த நகைச்சுவை நடிகை – கோவை சரளா (காஞ்சனா-2)
சிறந்த நகைச்சுவை நடிகை – சிறப்பு விருது – தேவதர்ஷிணி (திருட்டு விசிடி)
சிறந்த ஒளிப்பதிவு – பாலசுப்ரமணியெம் (பசங்க-2)
சிறந்த படத்தொகுப்பு – டி.எஸ்.சுரேஷ் (மாயா)
சிறந்த பின்னணி இசை – ரோன் எத்தன் யோகன் (மாயா)
சிறந்த பாடல் இசையமைப்பாளர் – அருணகிரி (சண்டிவீரன்)
சிறந்த ஒலிப்பதிவு – மனோஜ் எம்.கோஸ்வாமி டீம் (பாகுபலி)
சிறந்த ஒலிக்கலவை – ஜஸ்டின் ஜோஸ் டீம் (பாகுபலி)
சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் – சீனிவாஸ் மோகன் & டீம் (பாகுபலி)
சிறந்த நடன இயக்கம் – சந்தோஷ் (வெள்ளக்கார ராணி – கள்ளப்படம்)
சிறந்த சண்டை அமைப்பு – பீட்டர் ஹெயின் (பாகுபலி)
சிறந்த கலை இயக்கம் – மனு ஜகாத், ராகுல் பன்ச்சாங் (பாகுபலி)
சிறந்த ஆடை வடிவமைப்பு – ரமா ராஜமெளலி, பிரசாந்தி டிப்ரினேனி (பாகுபலி)
சிறந்த ஒப்பனை – பாகுபலி
சிறந்த பாடல் –  அலுங்குறேன் குலுங்குறேன் (சண்டிவீரன்)
சிறந்த ஜனரஞ்சக பாடல் –  வெள்ளக்கார ராணி (கள்ளப்படம்)
சிறந்த பின்னணி பாடகர் –  பிரசன்னா (அலுங்குறேன் குலுங்குறேன் – சண்டிவீரன்)
சிறந்த பின்னணி பாடகி –  ஸ்வேதா மோகன் (பேய்ஞ்சாக்கா மழை துளியோ – கங்காரு)
சிறந்த டிரெய்லர் – பாகுபலி
தேர்வுகள் பற்றிய கருத்துகள், விமர்சனங்கள், அர்ச்சனைகள், பொங்கல்கள் அனைத்தும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன..!

கெத்து - சினிமா விமர்சனம்

16-01-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

உதயநிதி ஸ்டாலின் சீரியஸாக ஆக்சன் காட்டியிருக்கும் முதல் படம் இது.
பழைய காலத்து தமிழ்வாணன் கதைகளில் இருக்கும் அதே திரைக்கதையுடன் எழுதப்பட்டிருக்கும் திரில்லர் கதை இது..!

கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் கூடலூரில் ஒரு பள்ளியில் பிடி மாஸ்டராக இருக்கிறார் சத்யராஜ். இவரது மகன் உதயநிதி. அருகில் இருக்கும் ஒரு பொது நூலகத்தில் வேலை செய்கிறார். அந்த நூலகத்தை நடத்துபவர் ராஜேஷ். ராஜேஷின் மாணவர்தான் இன்றைய இந்தியாவின் தலை சிறந்த விண்வெளி விஞ்ஞானி அப்துல் கமால்.
பல பெரிய சர்வதேச கொலைகளை செய்து வரும் விக்ராந்த்திடம் இப்போது ஒரு அஸைண்மெண்ட் ஒப்படைக்கப்படுகிறது. விஞ்ஞானி அப்துல் கமாலை கொலை செய்ய வேண்டும் என்பதுதான். இதற்காக அப்துல் கமாலை கொலை செய்ய வசதியான ஒரு இடத்திற்கு கொண்டு வர வேண்டும்.
இதற்கான திட்டம் தீட்டும்போது அவரது ஆசிரியரான ராஜேஷை கொலை செய்தால் அப்போது கமால் கண்டிப்பாக கூடலூருக்கு வருவார். அங்கே அவரை மிக எளிதாக கொலை செய்துவிடலாம் என்று விக்ராந்த் திட்டம் தீட்டி கூடலூர் வருகிறார்.
இந்த நேரத்தில் கூடலூரிலேயே இருக்கும் ஹீரோயின் எமி ஜாக்சனுக்கு ஒரு கெட்டப் பழக்கம். அது புத்தகத் திருட்டில் ஈடுபடுவது. ராஜேஷின் நூலகத்தில் இருந்து பல புத்தகங்களை திருடிக் கொண்டு வந்து தன் வீட்டிலேயே பெரிய நூலகத்தையே வைத்திருக்கிறார் எமி. உதயநிதி இதைக் கண்டுபிடித்து எமியிடமிருந்து புத்தகங்களை திருப்பி வாங்குகிறார். கூடவே மனசையும்தான். காதல் பிறக்கிறது. 2 டூயட்டுகளுக்கு வழியும் பிறக்கிறது.
இன்னொரு பக்கம் சத்யராஜ் பணியாற்றும் பள்ளியின் அருகேயே ஒரு கும்பல் டாஸ்மாக் பாரை துவக்குகிறது. இதனால் பள்ளி மாணவிகளுக்கு பிரச்சனை ஏற்படுவதால் பாரை அகற்றும்படி போலீஸில் புகார் கொடுக்கிறார் சத்யராஜ். இந்தப் பிரச்சினையில் பாரை நடத்தும் மைம் கோபி டீமுக்கும், சத்யராஜ் மற்றும் உதயநிதிக்கும் இடையில் சண்டை மூள்கிறது. அடிதடியும் நடக்கிறது.
இந்த நேரத்தில் திடீரென்று மைம் கோபி கொல்லப்பட்டு கிடக்கிறார். இதற்கான பழி சத்யராஜ் மீது விழுக.. அவரை போலீஸ் கைது செய்கிறது.. கோர்ட்டிலேயே சத்யராஜை கொலை செய்யும் முயற்சிகளெல்லாம் நடைபெற.. மகன் உதயநிதி தன் உயிரை பணயம் வைத்து தன் தந்தையைக் காப்பாற்றுகிறார்.
மைம் கோபியை கொலை செய்தது யார்..? ராஜேஷ் உயிர் தப்பினாரா..? விக்ராந்த் என்ன ஆனார்..? சொன்னதை செய்தாரா..? என்பதையெல்லாம் திரில்லர் என்று சொல்லப்படும் இந்தப் படத்தை தியேட்டரில் பார்க்கும்போது தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு சிறிய, இரண்டு வரி கதையை மையப்படுத்தி திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். ஆனால் அரதப் பழசான திரைக்கதை என்பதால் அடுத்து என்ன நடக்கும் என்பதை நாமளே யூகிக்க முடிவதை போல இருப்பதுதான் திரைக்கதையின் மிகப் பெரிய பலவீனம். இதைவிடவும் அதிகப்படியான கதை, திரைக்கதையுடன் செமத்தியான திரில்லருடன் பல படங்கள் வந்துவிட்டதும் இதற்கு ஒரு காரணம்..!
ஒரு கொலை வழக்கு விபரங்களை சாதாரண கான்ஸ்டபிள் தனது நண்பனுக்காக வெளியிட்டு.. உடன் கூடவே சென்று தானாகவே விசாரிக்கத் துவங்குவதெல்லாம் சினிமாவுக்கு மட்டுமே சரியானதாக இருக்கும். கான்ஸ்டபிளான கருணாகரன் இல்லாமலேயே உதயநிதி விசாரிப்பதாக இருந்தால்கூட ஒத்துக் கொள்ளலாம். ஆனாலும் இவர்கள் போகும்போதெல்லாம் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்வதெல்லாம் திரைக்கதையின் வேகமாக யுக்தியாகவே தெரிகிறது.!
சிசிடிவி ஆதாரத்தைக் கைப்பற்ற கடைக்கு வரும் விக்ராந்தை, கடைக்குள் நுழைந்தவுடன் ஷட்டரை மூடிவிட்டு பிடித்திருக்கலாம். ஆனாலும் அதற்குள்ளாக அவசரப்பட்டு ஓடவிட்டு.. ஒரு ரன்னிங் ரேஸை நடத்தியிருப்பதில் யாருக்கு என்ன திருப்தி கிடைத்திருக்கிறது இயக்குநரே..?
அத்தனை போலீஸ் செக்யூரிட்டி போட்டிருக்கும் இடத்தில் உதயநிதி மட்டும் போலீஸாருக்கு இடையில் ஓடி, நடந்து.. மரத்திற்கு நடுவில் வித்தியாசத்தைக் கண்டறிந்து.. தூரத்தில் இருக்கும் மாளிகையைக் கண்டு பிடிப்பதெல்லாம் எழுத்தில் ஓகே.. காட்சியில் எப்படி இயக்குநரே..?
கிளைமாக்ஸ் சண்டையில் அந்த நெடுந்தொலைவு துப்பாக்கியை கீழே தூக்கி போட்டிருந்தாலே சண்டையே தேவையில்லாமல் போயிருக்கும்.. எதற்கு இவ்வளவு பெரிய பில்டப் என்று தெரியவில்லை.. ஆனால் சண்டை காட்சிகளில் உதயநிதிக்கு கை, கால்களில் சுளுக்கு ஏற்படும் அளவுக்கு சண்டை பயிற்சியாளர்கள் வேலை வாங்கியிருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது..! அவரது கடின உழைப்புக்கு பாராட்டுக்கள்..
இனிமேல் வெறும் காமெடி நடிகராகவே வலம் வந்தால் தேறுவது கடினம் என்பதால்தான் இந்தப் படத்தில் ஒரு ஆக்சன் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்திருக்கிறார் உதயநிதி. நடிப்பென்று பார்த்தால் எதுவும் வித்தியாசமாக இல்லை. ஏதாவது சொல்லும்படியாக இருந்தால் மட்டுமே சொல்ல முடியும் என்பதால் மற்ற கமர்ஷியல் ஹீரோக்கள் போலவே வலம் வருகிறார் என்றுதான் சொல்ல வேண்டும்..!
எமி ஜாக்சன் இந்தப் படத்திற்கு எதற்கு என்று தெரியவில்லை. இவருக்குக் கொடுத்த காசுக்கு கூடுதலாக 20 நிமிடங்கள் திரைக்கதை எழுதி எடுத்திருக்கலாம். வீணான போர்ஷன் ஹீரோயின்தான்..! இவர் கடித்துத் துப்பும் வசனத்தையெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பார்த்துக் கொண்டேயிருப்பது என்று தெரியவில்லை..!
சத்யராஜ் சின்ன கேரக்டர் என்றாலும் மனதில் நிற்கிறார். இதேபோல் வசனத்திலேயே தனது கேரக்டரை உறுதிப்படுத்தும் ராஜேஷையும் பாராட்ட வேண்டும்..! மைம் கோபி தன் வில்லத்தனத்தில் புதிய எதிர்பார்ப்பை உண்டு செய்து கொண்டேயிருக்கிறார்..!
படத்தின் ஒரேயொரு ஹீரோ ஒளிப்பதிவாளர் ‘மைனா’ சுகுமார்தான். படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் கேமிராவின் குளுமையான காட்சிகளில் படமே வித்தியாசமான ஒரு உணர்வைத் தருகிறது.  ஹாரிஸ் ஜெயராஜ் என்ற ஒருவர் இசையமைத்திருக்கிறாராம். கொடுத்த காசு என்னாச்சு என்று தெரியவில்லை. பாடல்கள் நினைவிலேயே இல்லை..!
இன்னும் ஒரு 20 நிமிடங்கள் கொஞ்சம் கூடுதலான, அழுத்தமான காட்சிகளோடு எடுத்து இணைத்திருந்தால் ஒரு முழுமையான திரில்லர் படத்தை பார்த்த திருப்தி கிடைத்திருக்கும்..!

கதகளி - சினிமா விமர்சனம்

15-01-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இயக்குநர் பாண்டிராஜ் சமீபத்திய ‘பசங்க-2’ படத்தின் மூலமாக தானும் ஒரு குழந்தைகளுக்கான இயக்குநர் என்பதை நிரூபித்தார். அதற்கடுத்த ஒரு வார இடைவெளியில் ஒரு திரில்லர் படத்தை இயக்கி கமர்ஷியலும் தனக்கு வரும் என்று நிரூபித்திருக்கிறார்.

கடலூர் மாவட்ட மீனவர் சங்கத் தலைவராக இருப்பவர் ‘தம்பா’ என்னும் மதுசூதனன். பெயருக்குத்தான் சங்கத் தலைவர். மற்றபடி மிகப் பெரிய ரவுடி கும்பலின் தலைவர். கட்டப் பஞ்சாயத்தில் துவங்கி கொலைவரையிலும் செய்பவர். ஆளும் கட்சி, போலீஸ், அதிகார வர்க்கம் என்று அனைத்தையும் தனது கரத்தில் ஒளித்து வைத்திருப்பவர். பெயருக்கு மீன்களை ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இவரால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் விஷால். அமெரிக்காவில் 3 வருடங்கள் வாழ்ந்துவிட்டு கடலூர் திரும்புகிறார். ஒரு மிஸ்டு காலில் சந்தித்த தனது காதலி கேத்ரீன் தெரசாவை திருமணம் செய்து கொள்வதற்காகவே தாயகம் திரும்பியிருக்கிறார்.
விஷாலின் திருமணத்திற்கு 3 நாட்கள் முன்னதாக திடீரென்று தம்பா கொலையாகிறார். இவரை விஷாலும், அவரது அண்ணனும்தான் கொலை செய்திருப்பார்கள் ஓன்று போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தேகப்பட்டு விசாரணைக்காக விஷாலை வரச் சொல்கிறார். விஷால் சென்னையில் இருந்து கடலூர் வருவதற்குள் பிரச்சினைகள் வேறு விதமாக திசை திரும்ப போலீஸிடமிருந்து தப்பிக்கிறார் விஷால்.
தம்பாவை யார்தான் கொலை செய்தது..? விஷாலுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்பதெல்லாம் கடைசிவரையிலும் வைத்திருக்கும் டிவிஸ்ட்டுகளுடன் இணைந்த சுவாரஸ்யமான திரைக்கதையாக்கத்தில் தெளிவாகிறது..!
விஷால் கொடுத்த மிகக் குறைந்த நாள் கால்ஷீட்டில் அவரை வைத்து இப்படித்தான் படமெடுக்க முடியும். எந்தவொரு இயக்குநரும் நடிகருக்காக கதை செய்து, அதில் தன்னுடைய முத்திரையும் இருக்க வேண்டும் என்று மெனக்கெட்டால் கிடைக்கும் பலன்தான் இந்தப் படத்திற்குக் கிடைக்கவிருக்கிறது.
விஷாலின் அறிமுகம் சாந்தமாக துவங்கி.. நடுவில் பரபரப்புடன் திசை திரும்பி.. பின்பு அதுவே ஆக்ரோஷமாகி.. பின்பு கடைசியாக அடிக்கும் பக்கா சினிமா டிவிஸ்ட்டில் படத்தின் தன்மை கெட்டுவிட்டது என்னவோ உண்மைதான்..!
கொலை செய்தவன் தப்பிக்கிறான் என்பதெல்லாம் சிறந்த சினிமா கதையாக இருக்க முடியாது.. அந்தக் கொலையை எதற்காக செய்கிறான் என்பதையும் பார்க்க வேண்டும்.  இது கடைசியாக எப்படியெல்லாம் மாட்டிக் கொள்ளாமல் கொலை செய்யலாம் என்பதை சினிமாவே கற்பித்துக் கொடுப்பது போலாகிவிடும்..!
கேத்தரீன்-விஷால் காதல் துவங்கும் இடமும், அதனை அவ்வப்போது பத்திரிகை கொடுக்கப் போகும் இடங்களிலெல்லாம் துவங்கி முடிக்கும் சுவாரஸ்யமும் கேட்கவும், பார்க்கவும் நன்றாகத்தான் இருக்கிறது. கேத்ரீன் தெரசா ‘பாப்பு’ என்றும் ‘பப்பி’ என்றும் அழைக்கும் அளவுக்கு பப்பிஷமாக இருக்கிறார்.
முதல் சில காட்சிகளின் குளோஷப் ஷாட்டுகளின் அழகில் மனதைக் கொள்ளை கொள்கிறார்.  ‘யாருங்க அந்த அமுதன்?’ என்று சலித்துக் கொண்டாலும் ஏமாற்றுகிறார்கள் என்று தெரியாமலேயே அப்பாவியாக விஷாலுக்கு போனை போட்டு ‘குட்டி மாமாவுக்கு ஆக்சிடெண்ட்டாம்’ என்று சொல்வதும் நல்ல நடிப்பு.. மனதை ஈர்த்திருக்கிறார். போகப் போக இவருக்கான இடம் இரண்டாம்பட்சமாகிவிட்டாலும் ஹீரோயின் ஓகே..!
விஷாலுக்கு அதிகம் அலட்டலில்லை. சண்டை காட்சிகளில் சண்டை பயிற்சியாளரின் புண்ணியத்தாலும், கேமிராமேன் பாலசுப்ரமணியெம்மின் வித்தையினாலும் பிய்ச்சு உதறியிருக்கிறார். கருணாஸை டபாய்க்கின்ற சில காட்சிகளில் விஷாலை ரசிக்கலாம். ஆனால் எப்போதும் போலவே ஒரே மாதிரியான முக பாவனையுடன் படம் நெடுகிலும் வருவதை எப்போது நிறுத்துவார் என்று தெரியவில்லையே..?
விஷாலின் அண்ணனாக நடித்திருக்கும் மைம் கோபிதான் விஷாலுக்கும் சேர்த்து வைத்து நடித்திருக்கிறார். வசன உச்சரிப்பும், மென்மையான, பயப்படும்படியான நடிப்பும் அவரையொரு பண்பட்ட நடிகர் என்று சொல்ல வைக்கிறது. இவரும், இவரது குடும்பத்தினரும் நட்ட நடு இரவில் படும் துயரமும், கஷ்டமும் அதிகார வர்க்கத்தின் கோர முகத்தின் இன்னொரு பக்கத்தை காட்டுகின்றன.
வில்லனாக மதுசூதனன்.. ஒரேயொரு காட்சியில் மட்டுமே வில்லத்தன வசனம் பேசியிருக்கிறார். விஷாலுக்கு கொஞ்சம் ஈடு கொடுத்து இயல்பான நகைச்சுவைக்கு உத்தரவாதம் பெற்றுக் கொடுத்திருக்கிறார் கருணாஸ். இத்தனை இறுக்கமான சமயத்தில் ஒரு ரிலாக்சேஷனுக்காக உள்ளே நுழைக்கப்பட்ட இமான் அண்ணாச்சியும்  தன் பணியை செவ்வனே செய்திருக்கிறார்.
நட்புகளாக நடித்தவர்களில் விஷாலை சந்தேகப்படுபவர் மீதே சந்தேகம் வருவது போலவும் ஒரு திரைக்கதை.. விஷாலின் அண்ணன் மீது சந்தேகப்படும் சூழல்.. பவன் குமார் மீது வரும் சந்தேகம்.. இப்படி திரைக்கதையில் சுற்றிச் சுற்றி சந்தேக கதகளியை அவிழ்த்துவிட்டிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.
‘ஹிப்ஹாப்’ தமிழா ஆதியின் இசையில் ஒன்றுமேயில்லை. இடைவேளைக்கு பின்பு பாடல்களே இல்லாமல் நகர்ந்திருப்பதால் பின்னணி இசைக்காக கொஞ்சம் மெனக்கெட்டிருக்கிறார் போலிருக்கிறது.
இவர்களையும் தாண்டி மனதில் அமர்பவர் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம்தான். கேத்தரினை அழகாக காட்டுவதில் துவங்கி.. கடலூரின் மழைக் காலத்தில்கூட துல்லியமாக படமெடுக்க வைத்து அதையும் அழகாக பதிவாக்கியிருக்கிறார். இடைவேளைக்கு பின்பு காட்சிகள் பெரும்பாலும் இரவிலேயே நடப்பதால் எதுவும் அத்துமீறாமல் இயல்பாக படமாகியிருக்கிறது..! பாராட்டுக்கள் ஒளிப்பதிவாளருக்கு..!
ஊருக்கே அநியாயம் செல்பவன் தண்டிக்கப்பட வேண்டியவன்தான் என்பதில் சந்தேகமில்லை.  ஆனால் அந்தத் தண்டனை கொலையா..? செய்வது அவனால் பாதிக்கப்பட்ட தனியொரு மனிதனா..? இது நியாயம்தானா..? என்கிற பல கேள்விகளை எழுப்புகிறது இந்தப் படம்..!
அமெரிக்காவில் இருந்து தாயகம் திரும்பி கல்யாணத்தை முடித்துவிட்டு திரும்பவும் அமெரிக்கா செல்லவிருக்கும் ஒருவன் செய்யக் கூடிய செயலா இது..? ஏன் இந்தக் கொலை வெறி..? என்பதற்கு விளக்கமெல்லாம் அளிக்காமல் பழிக்குப் பழி வாங்கிய ஹீரோவின் கதையாக படத்தை முடித்திருக்கிறார் என்பதாலும் படத்திற்கு மவுத் டாக் பாராட்டுரைகள் கிடைக்கவில்லை என்பது உண்மை.!
பாண்டிராஜ் முழுக்க, முழுக்க குழந்தைகளுக்கான இயக்குநர் இல்லை. ஆனாலும் ஒரு சமூகத்திற்கு நல்லொழுக்கம் போதிக்கும் ஆசிரிய இயக்குநர் என்று அனைவரும் நம்புகிறோம். அடுத்தடுத்த படங்களில் ஹீரோவுக்காக இல்லையென்றாலும் அது அவருடைய பெயரைச் சொல்லும் படமாக இருக்கும் என்று நம்புகிறோம்..!

ரஜினி முருகன் - சினிமா விமர்சனம்

15-01-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


அஜீத், விஜய்க்கு பிறகு மிகப் பெரிய ஓப்பனிங்கை கையில் வைத்திருக்கும் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் இது. தப்பாமல் மிகப் பெரிய வசூலை குறி வைத்து நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது..!
‘வருத்தப்படாத வாலிபர் சங்க’த்தை இயக்கிய பொன்ராமின் அடுத்த படம் இது என்பதாலும் தப்பில்லாமல் அது போலவே கமர்ஷியலாக, காமெடியை முன் வைத்து சுவையான திரைக்கதையில் பின்னப்பட்டிருக்கிறது படம்.!
கதைக் களம் மதுரை. சிவகார்த்திகேயனின் தாத்தாவான ராஜ்கிரணுக்கு நிறைய பிள்ளைகள். அவர்களில் பலரும் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு மகனான ஞானசம்பந்தம் மட்டும் உள்ளூரில் ஒரு பள்ளியின் தலைமையாசிரியராக இருக்கிறார். இவருடைய மகன்தான் சிவகார்த்திகேயன்.  
இவரும் இவரது நண்பரான சூரியும் வழக்கம்போல வெட்டி ஆபீஸர்கள். வேலைக்கே போகக் கூடாது என்கிற கொள்கையில் இருப்பவர்கள். வீட்டில் இருவரையும் தண்ணி தெளித்து விட்டுவிட்டார்கள். ஒரு ஜோஸியக்காரனின் பேச்சைக் கேட்டு தொழில் துவங்கலாம் என்றெண்ணி  ஆபீஸ் போட்டு அமர்கிறார்கள்.
இந்த நேரத்தில் மதுரையின் பிரபல ரவுடியான சமுத்திரக்கனி சிவாவின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறார். பணக்காரர்களிடம் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டும் பழக்கமுள்ள சமுத்திரக்கனி சிவாவிடமும் பணம் கேட்க.. சிவா தர முடியாது என்று சொல்ல சிவாவின் அலுவலகத்தை அடித்து நொறுக்குகிறார். விவகாரம் போலீஸ் கேஸாக.. போலீஸில் சிக்காமல் இருக்க வேண்டி அலுவலகத்தை அடித்து நொறுக்கியதற்கு நஷ்டஈடாக 2 லட்சம் ரூபாயை கனி, சிவாவுக்கு கொடுக்க வேண்டியிருக்கிறது.  வாங்கி மட்டுமே பழக்கமுள்ள கனிக்கு கொடுக்க வேண்டியதாகிவிட்டதே என்கிற கோபம் வெறியாகி மாறியிருக்கிறது.
இப்படி போகும் ஒரு நன்னாளில் சிவா கண்ணில் கீர்த்தி சுரேஷ் பட்டுவிட.. அவரை காதலிக்கத் துவங்குகிறார் சிவா. கீர்த்தியின் அப்பாவான அச்யுத குமாரும், சிவாவின் அப்பாவான ஞானசம்பந்தனும் முன்னாளில் மிக நெருங்கிய குடும்ப நண்பர்கள்.  இந்த அச்யுத குமார் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகர்.
சிவாவுக்கு ‘ரஜினி முருகன்’ என்று பெயர் வைத்ததே அச்யுத குமார்தான். கீர்த்தியும், சிவாவும் சின்ன வயதில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட ஒரு பிரச்சினையால் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் இப்போது பேச்சுவார்த்தை இல்லாமல் போய்விட்டது.
இது அனைத்தையும் அறிந்திருக்கும் சிவா, கீர்த்தியை காதலித்தே தீருவது என்கிற கொள்கையில் இருக்கிறார். இதற்காக கீர்த்தியின் வீட்டிற்கு எதிரிலேயே ஒரு டீக்கடையை போட்டு அமர்ந்துவிடுகிறார். அச்யுத குமார் கீர்த்தியிடம் சிவாவை பற்றி எச்சரித்து ‘காதல்’, ‘கீதல்’ன்னு எதுவும் வரக் கூடாது என்கிறார். ஆனால் கீர்த்தி சிவாவின் காதல் வலையில் சிக்கிவிடுகிறார்.
இந்த நேரத்தில் தாத்தா ராஜ்கிரண் தனது செல்லப் பேரன் சிவாவை எப்படியாவது செட்டில் செய்துவிட வேண்டும் என்று துடிக்கிறார். இதனால் தான் வசித்து வரும் அந்த பங்களாவை விற்றுவிட்டு அனைவருக்கும் அவரவர் பங்கை கொடுத்து செட்டில்மெண்ட் செய்துவிட துடிக்கிறார். மகன்களுக்கும், மகள்களுக்கும் போன் செய்து சொல்லியும் யாரும் வர மறுக்கிறார்கள்.
இதனால் சிவாவின் தூண்டுதலில் ஒரு டிராமா போடுகிறார். குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடுகிறார்கள். இந்த நேரத்தில் சமுத்திரக்கனி தானும் ராஜ்கிரணுக்கு பேரன் உறவுதான் என்றும், தனக்கும் இந்த வீட்டில் பங்கு இருப்பதாகச் சொல்லி புதிய பிரச்சினையுடன் வந்து நிற்கிறார்.
காதல் கை கூட வேண்டுமெனில் தான் வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும். அதற்குப் பணம் வேண்டும். அந்தப் பணம் இந்த வீட்டை விற்றால்தான் கிடைக்கும். வீட்டை விற்பதற்கு சமுத்திரக்கனி இடையூறாக நிற்கிறார் என்கிற சூழலில் சிவகார்த்திகேயன் என்னும் ரஜினி முருகன் என்ன செய்தார் என்பதுதான் இடைவேளைக்கு பின்னான சுவாரஸ்யமான கதையின் சுருக்கம்..!
கமர்ஷியலாக நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கிறது. இடைவேளைக்கு முன்பான திரைக்கதையில் சூரியை பிரதானமாக வைத்து நகர்த்தியிருக்கிறார்கள். படத்தில் ஆங்காங்கே வெளிப்படும் வெறித்தனமான நகைச்சுவையில் தியேட்டரே அதிர்கிறது.
உச்சப்பட்ச காமெடி வாழைப்பழத்தை பிடுங்கப் போய் டீக்கடையே சரிந்து விழுவதுதான். இது போன்ற காட்சியமைப்புகளிலேயே நகைச்சுவையை வரவழைப்பதெல்லாம் அனைத்து இயக்குநர்களுக்கும் வந்துவிடுவதில்லை. பொன்ராம் போன்ற ஒரு சிலரிடம்தான் மட்டும் அது இருக்கிறது.
இந்தப் படத்தின் அடிநாதமே.. தானும் ஒரு பேரன் என்று சொல்லி ஒருவர் வந்து இடையூறு செய்வதுதான். இதை அப்படியே இரண்டாம் பாதியில் சுவையான திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார்கள்.
முதல் கட்ட பஞ்சாயத்து கனிக்கு சாதமாகப் போய் கடைசியில் திகிலோடு முடிய.. இரண்டாம்கட்ட பஞ்சாயத்தில் கனிக்கு எதிர்ப்பாகப் போகும் நிலைமையை சரிவர பேலன்ஸ் செய்து திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். முடிவில் வரும் ஒரு டிவிஸ்ட் யாருமே எதிர்பாராதது.  படம் பார்க்கும் அனைவருக்குமே தோன்றிய “இந்த பங்களாவை எதுக்கு விக்கணும்..?” என்கிற கருத்தை கிளைமாக்ஸில் சொல்லி படத்தை முடித்திருப்பது எதிர்பாராத திருப்பம்தான்.
சிவாவை குடும்பத்தினர் மொத்தத்திற்கும் பிடித்துப் போகிறது என்றால் அதற்குக் காரணம் அவருடைய இயல்பான நடிப்பு, வசன உச்சரிப்புதான். அப்பா, அம்மாவிடம் நல்ல பெயர் எடுக்க முடியாமல் தவித்தாலும், கெட்ட பெயரையே எடுத்தாலும்.. யதார்த்தமாக திட்டு வாங்கிக் கொண்டு அலையும் பலருக்கும் எடுத்துக்காட்டாய் ஸ்கிரீனில் நடித்துவிடுவது சிவாவின் பிளஸ் பாயிண்ட்..!
இவரும் சூரியும் ஆடும் காமெடி பல்லாங்குழியில் காட்சிக்கு காட்சி வசனங்கள் வந்து தெறித்து விழுகின்றன. “நீங்களே காமெடி பண்ணிக்கிட்டா இடைல நான் எதுக்கு இங்க..?” என்று சூரி அலுங்காமல் கேட்கின்ற காட்சியில் தியேட்டரே குலுங்குகிறது. இதேபோல் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் போல மேக்கப் போட்டவர்கள் பேசுகின்ற டயலாக்குகளில் கமல் பேசத் துவங்குவதற்கு முன்பேயே “ஐயையோ…” என்கிற பீலிங்கில் சூரியும், சிவாவும் தப்பி ஓடுவதில் தியேட்டர் ஆடுகிறது. இப்பத்தான் மதுரைல கமல் ரசிகர்களுடன் ரகளையாச்சு.. அதுக்குள்ள இது ஏன் சிவா இப்படி..?
சூரி இன்றைய நிலைமைக்கு அனைத்து நடிகர்களுக்காகவும் திரையில் தோன்றிக் கொண்டிருக்கிறார். ஆனால் தனிப்பட்ட முறையிலான நடிப்பு திறமையை இதுவரையில் வெளிப்படுத்தவில்லை. எதிலாவது தனித்துவம் மிக்கவராக வருவார் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.
கீர்த்தி சுரேஷ். கொள்ளை அழகு. சிரித்தாலே போதும் என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது அவரது மந்தாரப் புன்னகை. பாடல் காட்சிகளில் சொக்க வைத்திருக்கிறார். பாவாடை, தாவணி யாருக்கு சூட் ஆகிறதோ இல்லையோ.. கீர்த்தி சுரேஷ் பச்சக்கென்று மனதில் இடம் பிடித்துவிட்டார். அதிகமாக நடிப்புக்கென்று ஸ்கோப் இல்லையென்றாலும், காதல் காட்சிகளில் ரொமான்ஸை கொட்டியிருக்கிறார். 
ராஜ்கிரண் வழக்கம்போல.. தாத்தாவாக மருகுவதும், பிள்ளைகளை பார்க்க முடியாமல் தவிக்கும் அப்பனாக தவிப்பதும்.. 2 வயது பேரனை பார்த்து இப்பத்தான் வாழ்க்கைல முதல் முறையா பார்க்கிறேன் என்று சொல்லி கண்ணீர் விடுவதுமாக நடிப்பை பிழிந்தெடுத்திருக்கிறார். இவர் பேசும் ஒவ்வொரு வசனமும் வெளிநாடுகளில் படம் பார்க்கும் தமிழக மக்கள் ஒவ்வொருவரையும் ஒரு நாள் இரவு நிச்சயம் தூங்கவிடாது..!
ஏழரை மூக்கனாக நடித்திருக்கும் சமுத்திரக்கனிக்கு வித்தியாசமாக வில்லன் வேடம். அடிபட்டாலும் படாததுபோல “பிரிச்சு மேய்ஞ்சிட்டோம்ல்ல.. நம்மள பார்த்து பூராப் பயலுவலும் விலகி ஓடிட்டானுகளே…” என்று கெத்தாக பேசியபடியே செல்லும் நடிப்பு அக்மார்க் டாப்புதான்..!
அச்யுதகுமாரின் நடிப்பு ஒரு பக்கம் பேசப்படுகிறது. மகளுக்கு அட்வைஸ் செய்ய ரஜினியின் படங்களில் இருந்தே காட்சிகளை காட்டுவது டச்சிங்கானது. தலைமுடியை சிலுப்பிக் கொண்டு இவர் பேசும் டயலாக்குகளும்.. நண்பனுக்கு ஒன்று என்றவுடன் தானே தேடி வந்து நட்பை புதுப்பித்து உதவி செய்ய முன் வருவதும் சூப்பரான திரைக்கதை.!
பாலசுப்ரமணியெம்மின் கேமிராவில் கீர்த்தி சுரேஷின் அழகை இன்னும் கொஞ்சம் கூட்டிக் காண்பித்திருக்கிறார். காட்சிக்குக் காட்சி ஒரு சின்ன நெருடல்கூட இல்லாமல் படமாக்கியிருக்கிறார். பாடல் காட்சிகளில் கேமிராவுக்கு மிகப் பெரிய பங்களிப்பு உண்டு..! மாடு விரட்டும் காட்சி.. பஞ்சாயத்து காட்சி.. கோவில் திருவிழா காட்சி என்று பெருந்திரளான காட்சிகளை ரசனையாக படமாக்கியிருக்கிறார் கேமிராமேன்.
இமானின் இசையில் வழக்கமான அதே மெட்டுக்களில்தான் பாடல்கள் தெறிக்கின்றன. ‘உன் மேல ஒரு கண்ணு’ பாடல் வழக்கம்போல ஹிட்டு.. ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ பாடல் காலத்திற்கேற்ற சிச்சுவேஷன் பாடல். கேட்க சுகமாய்த்தான் இருக்கிறது.  இன்னும் எத்தனை நாளைக்கு இதே மெட்டுக்களில் பாடல்களை போடுவார்கள்..? கொஞ்சம் மாத்துங்கப்பா..!
ஒரு கமர்ஷியல் படத்திற்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்து “நம்பி வாங்க.. சந்தோஷமா போங்க…” என்பதை ஸ்லோகனாக வைத்து விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள். இது பக்கவான உண்மைதான்.
நம்பி போகலாம். சிரிச்சுக்கிட்டே வரலாம்..!

தாரை தப்பட்டை - சினிமா விமர்சனம்

15-01-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எத்தனை புதிய இயக்குநர்கள் வந்து கொண்டிருந்தாலும், வருடத்திற்கு ஒரு படம் கொடுத்து வந்தாலும் இயக்குநர் பாலாவின் படங்களுக்கென்றே ஒரு தனி எதிர்பார்ப்பு தமிழ்த் திரையுலகில் உண்டு.
அது படம் நல்லாயிருக்குமா இல்லையா என்பதைவிட பாலா இந்தப் படத்தில் யாரை டார்ச்சர் செய்திருக்கிறார் என்கிற எதிர்பார்ப்பின் அடிப்படையிலேயே இருந்து தொலைவதுதான் சிக்கலான விஷயம். இதிலும் அது சாத்தியப்பட்டிருக்கிறது..!

கலையையும், நெல்லையும் வளர்த்த தஞ்சைத் தரணியில் தொன்றுதொட்ட கலையான கரகாட்டத்தையும், ஆடல் பாடலையும் வளர்க்கும் தொழிலில் தலைமுறை தலைமுறையாக ஈடுபட்டிருக்கும் ஒரு பரம்பரையின் தற்போதைய தலைமையாளராக இருக்கிறார் சாமி புலவர் என்னும் ஜி.எம்.குமார்.
பாடலின் மூலம் கதையைச் சொல்லி அதன் மூலம் பாடலைப் பாடி.. பாடலுக்காக ஆட்டத் திறனைக் காட்டி கலையை வளர்த்த காலம் போய் இப்போதெல்லாம் கரகாட்டம் என்கிற பெயரில் அடிக்கும் கூத்துக்களால் மனம் நொடிந்துபோய் மூலையில் முடங்கிக் கிடக்கிறார் ஜி.எம்.குமார். மகா குடிகாரராகவும் இருக்கிறார்.
இவரது மகன் ‘சன்னாசி’ என்னும் சசிகுமார். குழுவின் தலைவராக இருக்கும் இவர் குழுவின் அனைத்து வேலைகளையும் செய்து வழி நடத்தி வருகிறார். இவரை தீவிரமாக காதலித்து வரும் ‘சூறாவளி’ என்னும் ஆட்டக்காரி வரலட்சுமி. தைரியமானவர். கெட்ட ஆட்டம் போடுகிறார். அதேபோல் ராத்திரியானால் வரும்கால மாமனாருடன் சேர்ந்து ‘கட்டிங்’ போடும் பழக்கமுள்ள நல்ல தமிழச்சி..! தன்னைத் தீவிர வெறியுடன் காதலித்து வரும் வரலட்சுமியின் காதலை சசிகுமார் ஏற்றுக் கொண்டாலும், அதை வெளிப்படுத்திக் கொள்ளும் சராசரி காதலனாக அவர் இல்லை.
திடீரென்று அடக்க ஒடுக்கமாக மாவட்ட ஆட்சியரின் கார் டிரைவராக வேலை பார்ப்பதாகச் சொல்லி அங்கே வரும் சுரேஷ், வரலட்சுமியை தான் தீவிரமாக காதலிப்பதாகவும், அவரை தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறும் வரலட்சுமியின் தாயை மூளைச்சலவை செய்கிறார்.
வரலட்சுமியின் தாயும் தனது மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டி இதற்காக சசிகுமாரிடம் கேட்க.. சசிகுமாரும் வரலட்சுமியிடம் இது பற்றிச் சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்கிறார். ஆனாலும் சசிகுமாரின் பாராமுகத்தாலும், வேண்டுதலாலும் வரலட்சுமி கல்யாணத்துக்கு சம்மதிக்கிறார்.
இதற்குப் பின்பு வரலட்சுமியின் ஆட்டம் இல்லாததால் சன்னாசி குழுவினரை அழைக்க ஆட்கள் குறைந்துபோக கூட்டத்திற்கு வருமானம் குறைகிறது. குடும்பங்களில் பல பிரச்சினைகள் எழ.. வேறு ஆட்டக்காரிகளை தேடிப் போய் செத்துப் போன பிணத்தின் முன்பெல்லாம் ஆட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது சன்னாசி குழுவினருக்கு..!
இந்த நேரத்தில் அப்பனுக்கும், மகனுக்கும் இது தொடர்பான பிரச்சினையில் மோதல் எழ.. அப்பா ஜி.எம்.குமாரை வார்த்தைகள் கொத்தியெடுக்கிறார் சசிகுமார். இது தாங்காமல் அவர் மரணமடைய.. மேலும் குழப்பமாகிறது அந்தக் குப்பம்.
கல்யாணமாகிப் போன வரலட்சுமி ஒரு வருடமாகியும் திரும்பியே வராமல் இருப்பது குறித்து சசிகுமார் அவரது தாயாரிடம் விசாரிக்க தான் வரலட்சுமியை பார்த்தே பல மாதங்களாகிவிட்டதாக அவர் சொல்ல.. சசிகுமார் வரலட்சுமியை பற்றி விசாரிக்க ஓடுகிறார்.
அங்கே அவருக்கு பல அதிர்ச்சி தகவல்கள் காத்திருக்க.. படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியான விஷயங்கள் காத்திருக்க.. அவைகள் என்ன..? முடிவென்ன என்பதுதான் படம்..!
இந்தப் படத்தின் ஹீரோவும், ஹீரோயினும் வரலட்சமிதான். இவரது முதல் படம் இது என்றேதான் சொல்ல வேண்டும். வாய்த் துடுக்கு.. துள்ளலான நடனம்.. மிக வேகமாக நடிப்பு.. அவருடைய அனைத்துவித அங்க அசைவுகள்.. என்று தனது அனைத்து நடிப்பையும் இந்த ஒரு படத்திலேயே கொட்டித் தீர்த்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே மது பாட்டிலை கையிலெடுத்து அதிர்ச்சியூட்டும் இவர் கடைசிவரையிலும் அந்த அதிர்ச்சிகளை தொடர்ந்து கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். இத்தனை வெளிப்படையாக அசிங்கம், அசிங்கமாக பேசுபவர், தன்னை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் சூறாவளியாய் பாய்ந்து அழைத்தவர்களை புரட்டி புரட்டியெடுக்கிறார். இதுவும் அவரது கேரக்டர் ஸ்கெட்ச்சாம்..!
நடனத்தில் காட்டிய அதே வேகத்தை வசன உச்சரிப்பிலும் காட்டியிருக்கிறார். இரட்டை அர்த்த வசனங்களை அதே வேகத்தில் பேசிக் காட்டி அதிர்ச்சியாக்கினாலும் திருமணத்தன்று வாயே திறக்காமல் அமைதியாக, வெறுமையாக அவர் இருக்கின்ற சில ஷாட்டுகளே மனதை முட்டுகின்றன..! கிளைமாக்ஸில் தனது இறுதிப் பயணத்தில் வெறித்த பார்வையுடன் அவர் கிடக்கும் சில ஷாட்டுகள்கூட ஒரு கதையைச் சொல்கின்றன.. பிரமாதம் வரலட்சுமி..!
சசிகுமாருக்கும் இது நிச்சயம் பெயர் சொல்லும் படம்தான்.. முகத்தில் திரண்டு வந்து விழும் முடியுடன் அவர் பேசும் பேச்சும், நடிப்பும், காட்டும் ஆவேசமும் பாலாவின் இயக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் இருக்கின்றன. ஜி.எம்.குமாரிடம் மல்லுக்குப் போய் “அடிச்சே கொன்னுருவேன்..” என்று பெத்த அப்பனையே அடிக்கப் போன கோபம் தீராமல் திரும்பிப் போகும் சசிகுமாருக்கு இது நிச்சயம் ஒரு புதுமையான அனுபவம்தான்..!
மூன்றாவது பெத்த பெயரைத் தட்டிச் சென்றிருப்பவர் ஜி.எம்.குமார். அவருடைய உடல்வாகுவே அவரது கேரக்டருக்கு மிகப் பெரிய பலம். அந்த உடலுக்கேற்ற இறக்கத்தோடு அவர் பேசும் வசன உச்சரிப்பும், கொக்கரிப்பும் அவரது கேரக்டருக்கேற்ற பலம். “என்ன வெளக்குப் பிடிக்க போகலையா..?” என்று சசிகுமாரை வெறுப்பேத்துவதாகட்டும்.. “அத்தனை பேரும் போய் நக்கித் தின்னுங்கடா..” என்று திட்டித் தீர்ப்பதாகட்டும் ஒரு தலைமுறையின் சாபத்தை மொத்தமாக கொட்டித் தீர்த்துள்ளார் ஜி.எம்.குமார்.
இந்தப் படத்திலேயே ஒரேயொரு ஆறுதல் காட்சியாக இருப்பது ஜி.எம்.குமார், வெளிநாட்டு பிரதிநிதிக்காக பாடும் அந்த பாடல் காட்சிதான்.. இந்தக் காட்சியை அத்தனை அழகாக படமாக்கியிருக்கிறார் பாலா..!
ஸ்டூடியோ 9 தயாரிப்பாளர் சுரேஷிற்கு இது முதல் படம். முதல் பாதியில் அப்பாவியாய் வலம் வந்தவர் இரண்டாம் பாதியில் டெர்ரர் பார்ட்டியாக வந்து கதி கலங்க வைக்கிறார். இத்தனை குரூரம் தேவையா என்று இவரைக் கேட்க முடியாது. இயக்குநரைத்தான் கேட்க வேண்டும் என்பதால் இவர் தப்பித்தார்..!
இசைஞானி இளையராஜாவின் 1000-மாவது படம் என்பதால் இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பெயரை இந்தப் படம் முழுக்க முழுக்க பெற்றுள்ளதா என்பதில் சந்தேகம்தான். ஆனால் பின்னணி இசையில் ராஜா அசத்தியிருக்கிறார். டைட்டிலில் துவங்கி இறுதியில் கிளைமாக்ஸில் வரலட்சுமியின் திறந்து கிடக்கும் கண்ணை காட்டும்போது ஒலிக்கும் சின்னஞ்சிறிய இசைவரையிலும் தனி கேரக்டராகவே வலம் வந்து படத்திற்கு பலம் கூட்டியிருக்கிறார்.
செழியனின் கேமிரா பாடல் காட்சிகளில்கூட ஆடியிருக்கிறது.. நடனக் கலைஞர்கள் அனைவரும் ஆளுக்கொரு பாடலை கையில் எடுத்துக் கொண்டு பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். ‘அவன் இவன்’ படத்தில் முதல் பாடலில் எத்தனை கெட்ட ஆட்டம் இருந்ததோ அந்த ஆட்டங்கள் மொத்தத்தையும் இதில் காட்டியிருக்கிறார்கள்.
‘பிதாமகன்’ படத்தில் வரும் பல பாடல்களின் தொகுப்பு போல இதிலும் ஒரு பாடலை வைக்க முடிவு செய்து அதில் சில சொதப்பல்களை செய்திருக்கிறார் பாலா. பாடல் தேர்வுகள் சரியில்லை. இசைஞானியின் இசையில் திருவாசகத்தை மையப்படுத்திய பாடல் ஒன்றே கேட்கும்படியிருந்தது..! மற்றதெல்லாம் தாரையும், தப்பட்டையும் அடித்ததில் காதில் கேட்காமலேயே போய்விட்டது.
நல்ல விஷயங்களை நல்லவிதமாகத்தான் சொல்ல வேண்டும். கெட்ட விஷயங்களையும் நல்லவிதமாகவே சொல்லலாம். இது பாலாவுக்கு மட்டும்தான் தெரிய மாட்டேன் என்கிறது. சென்ற படமான ‘பரதேசி’ வரலாற்றுடன் தொடர்புடைய படம் என்பதால் அதன் பல காட்சிகளை ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஆனால் இது..?
கரகாட்டம் ஆடுபவர்களின் இப்போதைய வாழ்க்கைச் சூழலை இப்படம் உரித்துக் காட்டுகிறது என்பதை அப்படியே எடுத்துக் கொள்ள முடியாது. இது உண்மையென்றால் இப்படியொரு கேவலமான வாழ்க்கையை வாழ்பவர்கள்தான் கரகாட்டக்காரர்கள்.. அவர்கள் தமிழர்கள் என்றெல்லாம் சொன்னால் அது நமக்குத்தான் கேவலம்..!
ஆண்களுக்கு சமமாக மதுவருந்துவிட்டு.. அதிலும் வரும்கால மாமனாருடனேயே ‘சியர்ஸ்’ சொல்லி சரக்கு அடிக்கும் அளவுக்கு ஒரு திருமணமாகாத பெண் ஒருவர் இருப்பது போலவும்.. உற்சாகத்தில் மாமனாரின் கன்னத்தையே கடிக்கும் அளவுக்கு பாசமுள்ளவராக இருக்கிறார் என்பதெல்லாம் எத்தனை அதீதமான கேரக்டர் ஸ்கெட்ச் கொண்டது..?
மேலும் படத்தில் வரலட்சுமி பேசும் பல வெளிப்படையான பேச்சுக்கள் சிம்புவின் பீப் பாடலைவிடவும் 100 மடங்கு வீரியமானவை. கடையில் உள்ளாடை வாங்கப் போன இடத்தில் ஒரு பெண்ணிடம் “என்ன சைஸ்..?” என்று வயதான ஒரு ஆண் கேட்க.. “நீயே பார்த்துக்க..” என்று அந்தப் பெண் தன் மார்பை காட்டும் காட்சியையெல்லாம் எந்த யதார்த்தவாத, மையவாத, பக்கவாத, திரிபுவாத காட்சியாக எடுத்துக் கொள்வது..?
இதே காட்சியில் வரலட்சுமி தனது கையில் பிராவைத் தூக்கிக் கொண்டு வந்து சசிகுமாரிடம் காட்டி “மாமா.. இந்த சைஸ் எனக்கு பொருந்துமா.. நீயே சொல்லு..?” என்று கேட்கிறார்..? எந்த ஊரில் இந்த அநியாயம் நடக்கிறது..? நடக்கும்..? காட்சிகளை யோசிப்பதற்கும், வைப்பதற்கும் ஒரு அளவு இல்லையா பாலா..?
கரகாட்டக்காரக் குழுவினர் போல்டாக.. வெளிப்படையாக பேசுவார்கள் என்பது உண்மைதான். ஆனால் அதற்கான சூழலை உருவாக்கியது நமது சமூகம்தான் என்பதைத்தான் அங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
அரசர்கள் காலத்தில் இந்தக் கலையை ஒரு கலையாக ஒரு குடும்பமே, குழுவே, கூட்டமே தொடர்ந்து வளர்த்து வந்திருக்கிறது. அப்போது அவர்களை ஆதரிக்க ஒரு கூட்டமும், அரசுகளும், நிர்வாகங்களும் இருந்தன. ஆனால் இப்போது அவைகளெல்லாம் இல்லை. அதோடு மக்களுக்கும் பொழுது போக்குவதற்கும், வேறு வகையான கலைகளை அணுகும் பக்குவமும், ரசனையும் மாறிவிட்டதால் இவர்களுக்கு மவுசு இல்லாமல் போய்விட்டது.
அவர்களைக் கவர வேண்டியே சினிமா வந்த பின்புதான் கரகாட்ட குழுவினரின் போக்கிலும் வித்தியாசம் தென்பட்டது. சினிமா பார்த்து வேறு உலகத்திற்குள் போய்க் கொண்டிருந்த கூட்டத்தைக் கவர வேண்டி இரட்டை அர்த்த ஆபாச வசனங்களை பேச ஆரம்பித்தவர்கள் இன்றைக்கு அதிலிருந்து அவர்களே விடுபட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பக்தியை வளர்க்கிறோம் என்று சொல்லி வள்ளி திருமணம் நாடகம் போட்டவர்கள்.. அதில் பபூன் கேரக்டர்களில் இடையிடையே இரட்டை அர்த்த வசனங்களைத்தான் அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் எங்கேயிருக்கிறது பக்தி..?
“நாங்க என்னங்க செய்யறது..? கூப்பிடுறவங்கதான அப்படி பேசுங்கன்னு சொல்றாங்க” என்கிறார்கள். அழைத்தவர்களோ.. “அப்பத்தான கூட்டம் சேருது..” என்கிறார்கள். கூட்டத்தினரோ அதை எதிர்பார்த்துதான் வருகிறார்கள்.. ஆக ஒரு தலைமுறை கலையை அழித்துக் கொண்டே வர.. வேறு வழியில்லாமல் கலைஞர்களும் இதற்கு உடந்தையாகிக் கொண்டே போகிறார்கள்.. இது எங்கே போய் முடியும்..?
படத்தில்கூட இது தொடர்பான மிகப் பெரிய முரண்பாடு உண்டு. சன்னாசி குழுவினர் அந்தமானில் ஆடும் ஆட்டமும், செத்த பிணத்தின் முன்பு ஆடும் ஆட்டமும் ஒன்றுதான். பின்பு எதற்கு சசிகுமார் “கலையை ஏண்டா கொல்றீங்க..?” என்று இன்னொருவரை திட்டுகிறார். “தங்கச்சிகூடயே இரட்டை அர்த்த டயலாக்குள பேசுறியே..?” என்றும் திட்டுகிறார்.  இரண்டு ஆட்டமும் ஒன்றாகத்தானே இருந்த்து..? இதிலென்ன வித்தியாசம் இருக்கிறது காப்பாற்ற.. அழிக்க..!
சித்ரவதை என்பதை பாலாவின் படங்கள் தொடர்ச்சியாக சொல்லாமல் சொல்லி வருகின்றன. இதிலும் அப்படியே..? பிரார்த்தல் தொழில் செய்யும் பெண்கள் தனியே போக விரும்பி தப்பித்துப் போக அவர்களை போலீஸ் துணையுடன் இழுத்து வரும் சுரேஷ்.. அவர்களை செய்யும் கொடுமைகளெல்லாம் தாங்க முடியாதவை. சவுக்கால் அடிப்பது.. அடித்து உதைப்பது.. எட்டி உதைப்பது.. அனைவருக்கும் மொட்டையடிப்பது என்று சகல பெண்ணிய விரோதத்தையும் இந்த ஒரே காட்சியில் காட்டி முடித்திருக்கிறார்.
வரலட்சுமியை சுரேஷ் அடித்து உதைக்கும் காட்சியில் ரத்தம் சிந்தவில்லை என்றாலும் குத்துச் சண்டை போட்டிகளில்கூட இப்படியொரு ரணகளம் ஏற்பட்டிருக்காது என்பது மட்டும் உண்மை. இது போன்ற காட்சிகளை பார்ப்பவர்களின் மனதில் ஏற்படும் வலியையும், வதையையும் பாலா போன்றவர்களால் உணரவே முடியாது..!
இதுவே வேறு யாராவது ஒரு அறிமுக இயக்குநர் வைத்திருந்தால் இந்நேரம் என்ன ஆகியிருக்கும்..? பத்திரிகாவுலகமே பொங்கியெழுந்திருக்கும். இது பாலாவின் படம் என்பதால் கையது, வாயது பொத்தி, சகல துவாரங்களையும் அடக்கிக் கொண்டு மெளனம் காக்கிறார்கள்..!
இது மாதிரியான.. ஒரு சைக்கோத்தனமான படத்தை எடுக்க பாலா போன்ற ஒரு சைக்கோ இயக்குநரால் மட்டுமே முடியும்..!
‘தாரை தப்பட்டை’ அடித்து, கிழித்து, துவைத்து எடுக்கப் போகிறது என்றார்கள். ஆனால், இது தன்னைத்தானே கிழித்துக் கொண்டு அசிங்கமாய் நிற்கிறது..!
அநியாயம்.. அக்கிரமம், ஆபாசம், வக்கிரம் என்று அனைத்தையும் தாங்கிய கலவை இந்தப் படம்..! நிச்சயம் தமிழ்ச் சினிமா என்றுகூட சொல்ல முடியாத படம்..!

இனிமேல் நானும் ஒரு சர்க்கரை நோயாளியே..!

08-01-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எனது வாழ்க்கையின் கடைசி அத்தியாயம் துவங்கிவிட்டது என்றே நினைக்கிறேன்.

சென்ற வருடத்திய ஏப்ரல் மாதமே எனது வலது கண்ணில் புரை இருப்பதாகவும் அதனை சரி செய்ய உடனேயே ஆபரேஷன செய்ய வேண்டும் என்றும் வாசன் ஐ கேர் மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தார்கள். 

நான்தான் அப்புறம் பார்க்கலாம்.. பார்க்கலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன். இந்த வருட புதிய துவக்க நாள்களில் ஏதோ ஒரு வித்தியாசம் கண்ணில் தெரியவே.. ஒரு இனம் தெரியாத பயம் வர.. மருத்துவமனைக்கு ஓடினேன். வாசன் ஐ கேரில் ஆபரேஷனுக்கு 13000 ரூபாய் கேட்டார்கள். மற்ற சில மருத்துவமனைகளிலும் இதேபோலத்தான் கேட்டார்கள். நான் இ்பபோது வாழும் பொழப்பில் இவ்வளவு பெரிய தொகையை செலவழிக்க முடியாத சூழல். 

அதனால் சின்னத்திரை இயக்குநர் சங்கத்தில் உறுப்பினர் என்கிற ரீதியில் சங்கம் அளித்த எஸ்.ஆர்.எம். மருத்துவ காப்பீட்டை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள தீர்மானித்தேன்.

இதனாலேயே தூரமாக இருந்தாலும் கடந்த 4 நாட்களாக காலை 4.30 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம்.மருத்துவமனைக்கு சென்று அலைந்து திரிந்து வந்து சேர்ந்திருக்கிறேன்.

இரண்டு கண்களிலுமே புரையையும் மீறி வேறு ஏதோ ஒன்று இருப்பதாக கண் மருத்துவர்கள் சந்தேகப்பட்டார்கள். “எங்காவது கரண்ட் ஷாக் எடுத்துக்கிட்டீங்களா?” என்று அபாயகரமான கேள்வியை கேட்டார் ஒரு பெண் மருத்துவர். திக்கென்று இருந்தது. “இல்லையே மேடம் ஏன்..?” என்றேன். என் கண்ணிலேயே காட்டினார்கள். லேசர் மூலமாக எடுத்தப் புகைப்படங்களில் எனது இரு விழிகளின் ஓரத்திலும் கருமை நிறங்களாக காட்சியளித்தன. 

பின்பு தலைமை மருத்துவரும் வந்து இரு தரப்பினரும் சகலவிதமான ஆங்கில டிக்ஷனரி வார்த்தைகளையும் பயன்படுத்தி ஒரு வழியாகப் பேசி முடித்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள். “ஆபரேஷனை செய்யப் போகிறோம்..” என்றார்கள். அதற்கு முன் அனஸ்தீஷியா மருத்துவரிடம் பிட்னெஸ் சர்டிபிகேட் வாங்கி வரும்படி பணித்தார்கள். இதை இவர்கள் சொல்லி முடிப்பதற்கே மதியம் 2 மணி ஆகிவிட்டதால் மறுநாள் போக வேண்டிய கட்டாயம்..!

மறுநாள் மயக்க மருத்துவியல் நிபுணரை சந்தித்து எனது கோரிக்கையை வைத்தேன். “ரத்தப் பரிசோதனை இல்லாமல் நான் சர்டிபிகேட் தர முடியாதே..” என்றார். “எனக்கு பி.பி., சுகரெல்லாம் இல்ல ஸார். இதுவரைக்கும் அது தொடர்பா எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை..” என்றேன் தீர்மானமாக. “நீங்க சொல்றது சரி. ஆனால் எங்க ரூல்ஸ்படி அதில்லாமல் நாங்க சர்டிபிகேட் தரவே முடியாது.. நீங்க திரும்ப கண் டிபார்ட்மெண்ட்டுக்கே போய் அவங்ககிட்ட எழுதி வாங்கிட்டுபோய் பிளட் டெஸ்ட் பண்ணிட்டு அதை எடுத்திட்டு வாங்க. தர்றேன்..” என்றார் தீர்மானமாக.

மறுபடியும் கண் டிபார்ட்மெண்ட்டுக்கு ரிட்டர்னாகி எழுதி வாங்கிக் கொண்டு லேபுக்கு போய் என்னுடைய ரத்த மாதிரியை தானமாகக் கொடுத்து ரிசல்ட்டுக்காக காத்திருந்தேன். கிடைத்தது. எதுவுமே தெரியாமல் வாங்கிச் சென்று சந்தோஷமாக நீட்டினேன். வாங்கியவர் பேஸ்தடித்துப் போய் அருகில் இருந்த நர்ஸிடம் தனது அதிர்ச்சியை கண்களிலேயே காட்டினார். வேக வேகமாக பேப்பரில் எழுதி என்னிடம் நீட்டி, "இதைக் கொண்டு போய் கொடுங்க.." என்றார். "என்ன ஸார்.. சுகர்ல ஏதும் பிரச்சினையா..?" என்றேன். "இல்லை.. இல்லை. அங்க போய் கேளுங்க.. சொல்வாங்க.." என்று சொல்லி முடிப்பதற்குள் எழுந்து போய்விட்டார்.

ஒரு சந்தேகத்துடனேயே கண் டிபார்ட்மெண்ட்டுக்கு வந்தேன். அங்கேயிருந்த பெண் பயிற்சி மருத்துவரிடம் கொடுத்தேன். பார்த்த கணத்தில் தன் வாயில் விரல் வைத்துவிட்டு என்னை அப்படியொரு முறை முறைத்தார். “என்ன ஸார் நீங்க..? சுகரே இல்லைன்னு சொன்னீங்க.. இப்போ 231 இருக்கு. இதுல எந்த ஆஸ்பத்திரிலேயுமே ஆபரேஷன் செய்ய மாட்டாங்க..” என்று கோபித்துக் கொண்டார். வாங்கிப் பார்த்தேன். சாப்பாட்டுக்கு முன்பு 70-ல் இருந்து 110-க்குள் இருக்க வேண்டிய சுகர் 148 இருந்தது. சாப்பாட்டுக்கு பின்பு 80-ல் இருந்து 140-க்குள் இருக்க வேண்டிய சுகர் 231 இருந்தது.

எனக்குத் தலையும் புரியலை.. காலும் புரியலை.. “மேடம்..  சத்தியமா இது எனக்குத் தெரியாது.. எப்படி வந்துச்சுன்னும் தெரியலை..” என்றேன். “அது யாருக்குமே தெரியாமல்தான் வரும். இதுல நாங்க ஒண்ணும் செய்ய முடியாது ஸார். அனஸ்தீஸியா டாக்டர், டயாப்டீஸ் டாக்டர்கிட்ட ஒப்பீனியன் கேட்டுக்குங்கன்னு எழுதிக் கொடுத்திருக்கார். நீங்க டயாப்டீஸ் டாக்டர்கிட்ட போய் செக்கப் பண்ணிட்டு வாங்க.. அப்புறம் பார்க்கலாம்..” என்று சொன்னவர், “இன்னொரு தடவை பிளட் டெஸ்ட் கொடுக்கணும். எழுதித் தரேன். அதையும் செஞ்சிருங்க..” என்றார். 

தற்செயலாக உள்ளே வந்த டிபார்ட்மெண்ட் சீப் டாக்டரிடம் இதை அவர் சொல்ல.. அவரோ கையெடுத்துக் கும்பிட்டார். “ஐயோ வேணாம் சாமி.. நீங்க சுகரை குறைச்சிட்டு வாங்க. ஆபரேஷன் பண்ணுவோம்..” என்றார். மறுபடியும், மறுபடியும் தயங்கி நின்றேன். பெரிய டாக்டர் தோளில் கை போட்டு ஆதரவாக “வேற வழியில்லை ஸார்.. சுகர் அதிகமா இருக்குற நேரத்துல எந்த ஆபரேஷனும் செய்யக் கூடாது. இது மெடிக்கல் ரூல்ஸ். சுகரை குறைச்சிருங்க. அப்புறமா ஆபரேஷனை பண்ணிக்கலாம். ஒண்ணும் பிரச்சினையில்லை. போங்க..” என்று அன்புடன் சொல்லி அனுப்பி வைத்தார்.

ஆஹா.. இந்த ஒரு ஆபரேஷனை வைச்சே எல்லா வார்டையும் ஒரு ரவுண்டு அடிச்சிரலாம் போலிருக்கேன்னு நினைத்தேன். புதிய டெஸ்ட்டுக்கு அரக்கப் பரக்க ஓடி.. சீக்கிரமா கொடுத்திட்டால் இன்னிக்கே ரிசல்ட்டை வாங்கிரலாமேன்னு நினைத்து ஓடிப் போய் கியூவில் நின்னு செஞ்சாச்சு..! கடைசியாக பசிக்குதே.. கொஞ்சம் வயித்துக்கு போட்டுக்குவோமே.. என்று சாப்பிட்டுவிட்டு தெம்பாக சர்க்கரை வியாதி செக்ஷனுக்குள் போய் நின்னேன். 

புது ஆடு ஒண்ணு சிக்கிருச்சு என்பது போலவே நர்ஸ்கள் பார்த்தார்கள். டயாப்டீஸ் டாக்டரோ எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்குற லெவல்ல குடும்ப பரம்பரையையே கேட்டுவிட்டு, “இன்னொரு பிளட் டெஸ்ட் எடுக்கணும். போய்க் கொடுங்க. அந்த ரிசல்ட்டோட வாங்க. பேசுவோம்...” என்றார்.  “இப்போதான் ஸார் பிளட் கொடுத்தேன்..” என்று சொல்லி ஒரு சீட்டை காட்டினேன். வாங்கிப் பார்த்துவிட்டு, “இது யூரின் டெஸ்ட்.. இப்போ கொடுக்கப் போறது உங்களோட மூணு மாச சுகர் கவுண்டிங் எப்படியிருக்குன்னு தெரிஞ்சுக்கத்தான்..! போங்க..” என்று விரட்டியேவிட்டார்.

மறுபடியும் லேப். இப்பவும் மூன்று முறையும் ரத்தம் உறிஞ்சிய அதே டெக்னீஷியன் பொண்ணு. “என்ன ஸார்.. திரும்பவும்..?” என்று கேட்டு ஆச்சரியப்பட்டார். விஷயத்தைச் சொல்ல.. “பாவம்தான் ஸார் நீங்க..” என்று ஆற்றிவிட்டு ஒரு கப் நிறைய ரத்தத்தை உறிஞ்சி எடுத்து விட்டுத்தான் அனுப்பினார். “இந்த ரிசல்ட்டும் நாளைக்குத்தான் ஸார் கிடைக்கும். வேற வழியே இல்லை. வந்துதான் ஆகணும்..” என்றார்கள். நம்ம நேரம் இப்படித்தான் இருக்குன்றப்ப அவங்களை குத்தம் சொல்லி என்ன புண்ணியம்..? திரும்பி வந்தேன்.

மறுநாள் காலை மறுபடியும் விஜயம். கொஞ்சம் காத்திருப்புக்குப் பின்னர் ரிசல்ட் கைக்கு கிடைத்தது. HBA1c Result 8.3 ஆக இருந்த்து. 4.5-6.0-க்குள்தான் இருக்க வேண்டுமாம். E AG 192 இருந்த்து. 126-க்குள்தான் இருக்க வேண்டுமாம். யூரினில் சுகர் மூன்று பிளஸ் பாயிண்ட்டுகள். ஒரேயொரு ஆறுதலாக ஹீமோகுளோபின் 12.7-தான் இருந்த்து. இது13-17 இருக்க வேண்டுமாம். 

டயாப்டீஸ் மருத்துவரிடம் வந்து அமர்ந்தேன். பார்த்தார். எந்த சலனத்தையும் காட்டவில்லை. “மாத்திரை தர்றேன்.. டயட்டியீஷனுக்கு எழுதித் தர்றேன்.. அவங்ககிட்ட என்னென்ன சாப்பிடணும்..? எப்படி சாப்பிடணும்ன்னு தெரிஞ்சுக்குங்க.. திரும்பவும் திங்கள்கிழமை வாங்க.. குறைஞ்சிருச்சுன்னா கண்டிப்பா கையெழுத்து போட்டுத் தரேன்..” என்றார்.

டயட்டீஷன் செக்ஷன் வந்தமர்ந்தால் அதுவரையில் இருந்த பசியையும் அப்படியே ஓரம்கட்டிவிட்டார்கள்.இனிமேல் சக்கரை, இனிப்பு வகைகள், அதிகப்படியான அரிசி சாதம், இளநீர், கோக், பெப்சி வகையறாக்களை தொடவே கூடாது.காலைல 3 இட்லி அல்லது 3 இடியாப்பம் அல்லது 2 தோசை  அல்லது ஒன்றரை கப் உப்புமா, அல்லது 3 சப்பாத்தி. அதிலும் கோதுமை சப்பாத்திதான்.  என்ற ரீதியில் இரண்டு பக்கங்களுக்கு என்ன நேரத்தில், எந்த அளவில் சாப்பிட வேண்டும் என்று எழுதியே கொடுத்துவிட்டார்கள்..!  வாங்கிப் படித்தால் பசியே மறந்துபோய்விடும்..!
ஆக.. இந்த உண்மைத்தமிழனின் புலம்பல்கள் இந்தாண்டில் இருந்து இன்னும் அதிகமாக ஒலிக்கும் என்பதை வேறு வழியில்லாமல் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.

நமக்குக் கிடைச்சிருக்கிற பிச்சைக்கார வாழ்க்கைல இருக்குற பிரச்சினையே போதாதா என்று நினைத்தால், இந்த கேடு கெட்ட முருகப் பய வருஷத் துவக்கத்திலேயே வைச்ச இந்த டிவிஸ்ட்டுதான் என் வாழ்க்கையில் சூப்பரானது...! இதுதான் கடைசியானது என்றும் நான் நினைக்கிறேன்..! 

சாவதற்கு நான் எப்போதும் பயப்படவில்லை. ஆனால் கஷ்டப்படுத்தாமல் கூப்பிட்டுக்கடான்னுதான் கேட்டுக்கிட்டேயிருக்கேன். பயலுக்கு என்னை மாதிரியே காது செவுடு போலிருக்கு..! ஆத்தா, அப்பன், பொண்டாட்டிகளோட அவன் மட்டும் நல்லாவே இருக்கட்டும்..! 

அழகு குட்டி செல்லம் - சினிமா விமர்சனம்

01-01-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

குழந்தைகளை மையமாக வைத்து 5 குடும்பங்களின் வாழ்க்கைக் கதையை தெளிவான நீரோடை போன்ற திரைக்கதையில் கடைசிவரையிலும் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர் சார்லஸ்.

முருகப் பெருமானின் திருவடி நிழலில் அவன் பெயரைச் சொல்லியே அனாதை ஆசிரமம் நடத்தி வரும் தம்பி ராமையாவின் வளர்ப்பு மகனாக வளர்ந்து வந்திருக்கும் ஒரு சிறுவன்.. ஈகோவால் டைவர்ஸ்வரையிலும் போன தாய், தகப்பன் இருவரிடத்தில் யாரிடம் வாழ்வது என்கிற இக்கட்டில் இருக்கும் சிறுவன், அக்காவுக்கு மகள் பிறந்த பின்பும் அவள் மாமனார் வீட்டுக்குப் போகாமல் இருப்பதன் மர்மம் தெரியாமல் இருக்கும் சிறுமி, வரிசையாக 3 பெண் குழந்தைகள் பிறந்த்தால் ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு எதிர்பார்த்து காத்திருக்கும் ஆட்டோ டிரைவர்..  செஸ் போட்டியில் அறிமுகமான காதலனுடன் மிக இளம் வயதிலேயே செக்ஸ் உறவு வைத்து இதன் விளைவாய் பிள்ளையை வயிற்றில் சுமக்கும் ஒரு இளம் பெண்.. திருமணமாகி குழந்தையே பிறக்காமல் பார்ப்போர் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆட்பட்டு தினம் தினம் மன சித்வரைத்துக்குள்ளாகி வரும் டீச்சர் வினோதினி.. முள்ளிவாய்க்கால் போரில் பெற்ற மகளைப் பறிகொடுத்துவிட்டு தவிக்கும் ஈழத்து தமிழ் தம்பதிகள்.. என்று இந்த 5 பேரின் வாழ்க்கையில் ஒரு நாள் ஒரு கைக்குழந்தை குறுக்கிடுகிறது.. ஏன்.. எதற்கு.. எப்படி.. என்பதுதான் இந்த ‘அழகு குட்டி செல்லம்’ படத்தின் சின்ன கரு.
இந்தச் சின்னப் பிள்ளைகள் படிக்கும் கிறிஸ்துவ பள்ளிக்கு வெளிநாட்டில் இருந்து கிடைக்கும் நிதியுதவி நிறுத்தப்படும் அபாயம். பள்ளியின் முதல்வர் எப்படியாவது அந்த நிதியுதவி தொடர வேண்டும் என்று பரிதவிக்கிறார். இதற்காக இந்தாண்டு பள்ளி ஆண்டு விழாவிற்கு மாநில கார்டினலை சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கிறார்.
இதனால் ஆண்டு விழாவில் போடப்படும் நாடகத்தை இன்னும் சிறப்பாக நடத்திக் காண்பித்து எப்படியாவது கார்டினலை இம்ப்ரஸ் செய்ய நினைக்கிறார் பள்ளியின் முதல்வர். எப்போதும் தொடர்ந்து நாடகம் போடும் 10-ம் வகுப்பு மாணவர்களையே இந்த வருடமும் நாடகப் போடச் சொல்கிறார். ஆனால் 8-ம் வகுப்பு பயிலும் இந்த சிறுவர்கள், “நாங்கள் நாடகம் போடுகிறோம். எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்..” என்று முதல்வரிடமும், டீச்சர் வினோதினியிடமும் கெஞ்சுகிறார்கள்.
“உங்களுக்குக் கொடுத்தால் என்ன செய்வீர்கள்..?” என்று முதல்வர் கேட்க.. “இயேசு பிறக்கிறார் என்கிற நாடகத்தின் கிளைமாக்ஸாக நிஜ குழந்தையையே மேடைக்கு கொண்டு வந்து காட்டுகிறோம்..” என்கிறார்கள் பிள்ளைகள். முதல்வர் நம்ப மறுக்கிறார். ஆனால், கடைசியில் 10-ம் வகுப்பு மாணவர்களின் அசிரத்தையினால்  நாடகம் இவர்களின் கைக்கே வந்து சேர்கிறது.
ஒரு வேகத்தில் குழந்தையைக் காட்டுவோம் என்று சொல்லிவிட்டாலும் குழந்தைக்கு என்ன செய்வது என்று பிள்ளைகள் யோசிக்கிறார்கள். ஒரு சிறுமியின் அக்கா குழந்தையைக் கொண்டு வர திட்டம் தீட்டுகிறார்கள். ஆனால் திடீரென்று அக்கா பிரச்சினையெல்லாம் முடிந்து அவளது மாமனார் வீட்டுக்குப் போய்விட திட்டம் பணால்.
அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கும்போது கூவம் ஆற்றின் கரையோரம் ஒரு அனாதை கைக்குழந்தை கிடைக்கிறது. அதனை பிள்ளைகள் எடுத்துச் செல்லும்போது அங்கே வரும் போலீஸ்காரர் பெஞ்சமின் அந்தக் குழந்தையைக் கைப்பற்றி அனாதை ஆசிரமத்திற்கு கொண்டு போகிறார்.
அனாதை ஆசிரமத்திற்கு செல்லும் பிள்ளைகள் குழந்தையைக் கடத்தி தங்களது நாடகத்திற்குக் கொண்டு போக திட்டம் தீட்டுகிறார்கள்.  இவர்களின் இந்தத் திட்டம் நிறைவேறியதா இல்லையா..? அது யாருடைய குழந்தை என்பதுதான் படத்தின் கதையோட்டமான திரைக்கதை.
இப்படியொரு கதையைக் கேட்டுவிட்டு இதனை படமாக்க முன் வந்த மெர்க்குரி நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆண்டனி நிச்சயம் பாராட்டுக்குரியவர். இவரைத் தவிர வேறு யாராவது இந்தக் கதையைக் கேட்டிருந்தால் நிச்சயமாக ஒத்துக் கொண்டிருக்கவே மாட்டார்கள். வித்தியாசம் காட்ட வேண்டும் என்றே நினைக்கும் தயாரிப்பாளர் ஆண்டனியிடம், வித்தியாசமான இயக்குநரான சார்லஸ் இணைந்தது கர்த்தரின் விருப்பம்போல..!
இந்தப் படத்தில் ஒரேயொரு மிகப் பெரிய லாஜிக் மிஸ்டேக் படம் பார்க்கும் அனைவருக்குமே தெரிய வரும். அது பள்ளியின் முதல்வர் “நீங்களே சின்னப் புள்ளைக.. நீங்க எப்படி கைக்குழந்தையை கொண்டு வருவீங்க..?” என்று கேள்வி கேட்டு “இது சின்னப்புள்ளத்தமானல்ல இருக்கு..” என்று சொல்லி நிராகரித்திருந்தால் இது கதையே இல்லை. ஆனால் அந்தக் குழந்தைகள் செய்ய நினைக்கிறார்கள். ஆசிரியர்கள் துணை நிற்பார்கள் என்று முதல்வர் நினைத்திருக்கலாம். எப்படியாவது கொண்டு வருவார்கள் என்று ஆசிரியர்களும் நினைத்திருக்கலாம்.. இப்படி நாம் நினைத்துத்தான் இந்தப் படம் பற்றி மேற்கொண்டு பேச வேண்டும்..! வேறு வழியில்லை.
ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு பின்னணி.. அந்தக் கதைக்குள் குழந்தைகளை பாதிக்கும் ஒரு விஷயம்.. அதிலிருந்து மீள முடியாமல் தவித்த நிலையில் படிப்பு, பள்ளி, நாடகம், சுய மரியாதை.. கவுரவம் இத்தனையையும் தாண்டி அந்தக் குழந்தைகள் ஓடிக் கொண்டிருப்பதை மிக அழகாக படம் பிடித்து காட்டியிருக்கிறார் இயக்குநர்.
கேரக்டர் ஸ்கெட்ச்சுகளைகூட ரசனையுடன் அமைத்திருக்கிறார் இயக்குநர். எதற்கெடுத்தாலும் “முருகா” என்று சொல்லும் தம்பி ராமையா.. அவரை கோப்ப்பட வைத்து பேச வைக்கும் அவரது துடிப்பான வளர்ப்பு மகன்.. ஆண் பிள்ளைக்கு தவியாய் தவிக்கும் கருணாஸ்.. தன் உடம்புக்கு ஆகாதென்றாலும் கணவனுக்காக கருவைச் சுமக்கும் மனைவி.. துணிக்கடையில் ஒரு சிறிய ஆடையைப் பார்த்தவுடன் மகள் நினைவு வந்து கதறியழும் ஈழப் பெண் ரித்விகா, புள்ளை பெத்திருந்தால்தானே அந்த அருமை தெரியும் என்று வார்த்தைகளை வீசிவிட்டுச் செல்லும் பெண்மணியைப் பார்த்து விக்கித்துப் போய் நிற்கும் வினோதினி.. படிப்பு, காசு இருக்கும் திமிரில் ஈகோவை விட்டுக் கொடுக்காமல் டைவர்ஸ்வரைக்கும் வந்து நிற்கும் நரேனும், அவரது மனைவியும்.. கடைசியான செஸ் போட்டியில் காதலனை தோற்கடித்துவிட்டு குழந்தையை டிரைவர் குடும்பத்திடம் ஒப்படைத்துவிட்டு வீரநடை போட்டு செல்லும் கிரிஷா..  என்று அமைத்திருக்கும் குடும்பங்களின் பின்னணியே நம்ம பக்கத்து வீட்டுக் கதை போல தோன்றுகிறது.
சிறுவர், சிறுமிகள் மிக அழகாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஜான் விஜய்யிடமிருந்து தப்பிக்க நினைத்து இவர்கள் செய்யும் அலப்பறை ருசிகரமானது. இதேபோல் போலீஸ்காரர் பெஞ்சமினிடமிருந்து தப்பிக்கும் காட்சியிலும் தியேட்டர் குலுங்குகிறது.. இறுதியில் தனது தாய், தகப்பனை சேர்த்து வைக்க பையன் படும் கஷ்டமும், மிக எதார்த்தமாக நாடக வசனம் இல்லாமல் அவர்களது பிரச்சினையையே பதட்டத்தில் மேடையில் பேசப் போக.. அதுவே கார்டினல் மனதை மாற்றும்விதமாக இருப்பது இயக்குநரின் டச். இப்படி கோர்க்கும் திறமைக்கு நிரம்ப மூளை வேண்டும். பாராட்டுக்கள் இயக்குநர் ஸார்..
கருணாஸுக்கு ஏன் யாரும் இப்படியொரு கேரக்டர்களை தர மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை. மிக அருமையான நடிப்பு. “மூணு பிள்ளை இருந்தா என்ன..? அதுவும் என் ரத்தம்தான..? விட்ருவனா..? வளர்த்திர மாட்டனா..?” என்று புலம்பித் தள்ளியபடியே தன் மகளைத் தேடியலையும் காட்சியில் மனதைத் தொட்டுவிட்டார். அவருடைய மனைவியாக நடித்தவரும் அந்தக் கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார்.
அடுத்து குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது கிரிஷாவை. ஒரு அவசரத்தில் காமத்தில் கட்டுண்டுவிட்டு பின்பு வயிற்றில் குழந்தையை சுமந்து கஷ்டப்பட்டு, பெற்றவர்களிடத்தில் திட்டு வாங்கி.. ஆனாலும் காதலனை நம்பி பிள்ளையை பெற்றுவிட்டு கடைசியாக இந்த அவமானத்தை துடைத்தே தீருவது என்றெண்ணி செஸ் போட்டியில் கலந்து கொள்ள வரும் கிரிஷாவை ‘வாவ்’ என்று பாராட்டவே தோன்றுகிறது. புதுமுகம் என்றே தோன்றவில்லை. அருமை..
இதேபோல் ஈழத்துப் பெண்ணாக வரும் ரித்விகா.. திடீரென்று அவர் அழும் அழுகையும், கோவில், கோவிலாக குழந்தைக்காக சுற்றி வரும் துயரமும் மனதைத் தொடும் காட்சிகள்..  மிக அருமையான, உண்மையான ஈழத்து பேச்சுக்கள் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளன.
விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் ஒளிப்பதிவில் அனைவருமே மிக அழகாகத் தெரிகிறார்கள். இறுதியான ஸ்கூல் டிராமாவை மட்டும் ஏன் இப்படி இருட்டாக்கினார்களோ தெரியவில்லை. இயேசுவின் மாட்டுத் தொழுவத்தை இன்னும் நன்றாகவே காட்டியிருக்கலாம். ஆனால் பாடல் காட்சிகளிலும், வெளிப்புறக் காட்சிகளிலும் கேமிராவின் உழைப்பு ஸ்கிரீனில் பளிச்சென்று தெரிகிறது..!
வேத்ஷங்கரின் பின்னணி இசை முற்பாதியில் பல காட்சிகளை நாடகத்தனமாக காட்டியிருக்கிறது. இதை முற்றிலும் தவிர்த்திருக்கலாம். காட்சிகள் நன்றாக இருந்தும் பின்னணி இசையின் மலட்டுத்தனத்தால் அது வேறாக போய்விட்டது.
சில, பல காட்சிகளில் இயக்கம் நாடகத்தனம் என்றாலும் குழந்தைகள் சம்பந்தப்பட்டவைகள் மட்டுமே அழகாக, ரசனையாக படம் பிடிக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக அந்தச் சின்னக் குழந்தை முதல்முறையாக குப்புறப் படுக்கும் காட்சியை படமாக்கியிருக்கும்விதம். இயக்குநர் சார்லஸ் தனது குழந்தையைத்தான் கூவம் ஆற்றின் கரையோரம் கிடத்தி படத்தில் பயன்படுத்தியிருக்கிறார். இதற்காகவும் சேர்த்து இயக்குநருக்கு ஒரு பாராட்டு. இந்த அளவுக்காக ஒரு இயக்குநர் தன் படத்திற்காக மெனக்கெடுவார்..?
இப்போதுதான் ‘பசங்க-2’ வந்து குழந்தைகளை அணுகும் முறையில் பெற்றவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மாற்றுக் கண்ணோட்டம் வேண்டும் என்று போதித்தது. இப்போது இந்தப் படமும் அதே கருத்தை வேறு விதமாகச் சொல்கிறது.
பரவாயில்லை.. தமிழ்ச் சினிமா இன்றைக்கு இந்த அளவுக்காச்சும் முன்னேறியிருக்கிறது என்பதை நினைத்தால் பெருமையாகத்தான் இருக்கிறது.
இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நமது பாராட்டுக்கள். குழந்தைகளும், பெற்றோர்களும் அவசியம் பார்க்க வேண்டிய படம் இது..!