காவியத்தலைவன் - சினிமா விமர்சனம்

30-11-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழ்ச் சினிமாவில் இதுவரையில் நாடகக் கலையின் ஆரம்பக் கட்டங்களை கண் முன்னே நிகழ்த்திய திரைப்படங்கள் குறைவு. அனைவருக்கும் நினைவிருப்பது ‘ராஜபார்ட் ரங்கதுரை’ மட்டுமே.. அதுவும் நாயக பிம்பத்தின் கீழ் சிவாஜி படமாகவே தயாரிக்கப்பட்டதால் உண்மையான நாடக வரலாற்றின் வாழ்க்கை அதில் குறைவு.
அந்தக் குறையை போக்க வேண்டும் என்று எண்ணித்தான் இயக்குநர் வசந்தபாலன் இந்தக் காவியத்தை படைக்க முனைந்திருக்கிறார். அவருடைய இந்த நினைப்பு மிகப் பெரிய விஷயம். இப்போதைய நிலைமையில் எந்தவொரு இயக்குநரும் நினைத்துக் கூட பார்க்காத ஒரு முடிவை கையாண்டிருக்கிறார் வசந்தபாலன். அதற்காக முதற்கண் பாராட்டுக்கள் அவருக்கும், தயாரிப்பாளர்கள் இருவருக்கும்..!
இந்தப் படம் “கொடுமுடி கோகிலம்’ கே.பி.சுந்தராம்பாள் மற்றும் பழம் பெரும் நாடக நடிகர் எல்.ஜி.கிட்டப்பாவின் காதல் வாழ்க்கையையும் தொட்டுச் செல்கிறது. தமிழகத்தின் நாடகக் கலையின் துவக்கத்தில் நாடகம் எப்படி நடத்தப்பட்டது..? அதன் வடிவங்கள் எத்தனை..? அதன் செயல்பாடுகள் எப்படி என்பதை இந்தப் படம் உணர்த்தும்..” என்று முன்பேயே சொல்லியிருந்தார் இயக்குநர் வசந்தபாலன். இதை நினைத்துத்தான் படம் பார்க்க அமர்ந்தோம்..!1925-ல் தமிழ் நாடகக் கலையின் காவலர்கள் என்றழைக்கப்படும் டி.கே.எஸ். சகோதரர்கள் ஆரம்பித்த நாடக சபாவின் பெயர் ‘ஸ்ரீபாலசண்முகானந்தா சபா’. இந்த சபாவின் பெயரைத்தான் படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
இந்த சபாவை நடத்துவது சிவதாஸ சுவாமிகள் என்கிற நாசர். இந்த நாடகக் கம்பெனியில் சிறு வயதில் இருந்தே வளர்ந்து வந்திருக்கும் நண்பர்கள் சித்தார்த்தும், பிருத்விராஜும்.  இருவரும் இணைந்து நடித்து வந்தாலும் இப்போது வளர்ந்துவிட்ட சூழலில் நாசருக்கு பிருத்வியைவிடவும் சித்தார்த் மீது பரிவு அதிகம். சித்தார்த்தின் நடிப்பு மீது நாசர் பெருமிதப்படுகிறார். இந்தப் பெருமையையும், அன்பையும் நாசரிடமிருந்து பெற்றுவிடத் துடிக்கிறார் பிருத்விராஜ். அது அவருக்குக் கிடைக்கவில்லை. இந்த ஏமாற்றமே அவருக்குள் சித்தார்த் மீது பொறாமையை ஏற்படுத்தி அது துவேஷமாக வளர்ந்து வருகிறது.
இந்த நேரத்தில் ஆண்கள் மட்டுமே இருந்து வரும் அந்த நாடக சபாவில் சேர தனது மகள் வடிவு என்னும் வேதிகாவை அழைத்து வருகிறார் குயிலி. வேதிகாவிடம் இருக்கும் பாடகி திறமையும், நடிப்புத் திறமையும் அவரையும் சபாவில் சேர்க்க வைக்கிறது.
அதே நேரத்தில் அதே சபாவில் அதுவரையில் ராஜபார்ட் வேடத்தில் யாரும் அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் பொன்வண்ணனுக்கு நாசர் மீது கருத்து பேதம் ஏற்பட.. வித்யா கர்வத்தினால் பொன்வண்ணன் வார்த்தைகளை நாசர் மீது அள்ளி வீசிவிட்டு சபாவில் இருந்து வெளியேறுகிறார்.
அடுத்த ராஜபார்ட்டாக சித்தார்த்தை தேர்வு செய்கிறார் நாசர். இது பிருத்விக்கு கோபத்தை உண்டாக்குகிறது. ஆனால் எதுவும் செய்ய முடியவில்லை. அதே நேரத்தில் அந்த ஊர் ஜமீன்தாரின் பெண்ணான அனைகா, நாடகம் பார்க்க வந்த வேளையில் சித்தார்த் மீது காதல் கொள்ள.. இருவரின் காதல் லீலைகள் அரங்கேறுகின்றன. இதனை தெரிந்து கொண்ட பிருத்வி, ஒரு நாள் இரவில் காதல் லீலைக்காக அரண்மனைக்கு ஓடியிருக்கும் சித்தார்த்தை நாசரிடம் காட்டிக் கொடுக்கிறார்.
மறுநாள் காலை திரும்பி வரும் சித்தார்த்தை நாசர் அடித்து நொறுக்குகிறார். சித்தார்த் மன்னிப்பு கேட்டதால், ‘இனிமேல் அனைகாவை பார்க்கக் கூடாது. நாடகத்தில் வேடம் போடக் கூடாது’ என்று தடை உத்தரவு போடுகிறார். மேலும், ‘இனிமேல் இந்த ஊரில் பிழைப்பு நடத்த முடியாது. உடனே கிளம்புங்கள்’ என்று நாசர் சொல்ல வேறு ஊருக்கு கிளம்புகிறது நாடகக் குழு.
அங்கே சென்ற பின்பு ராஜபார்ட்டாக பிருத்வியும், நடிகையாக வேதிகாவும் மேடையேறுகிறார்கள். இடையில் வேதிகா, சித்தார்த் மீது ஒரு தலை காதலும் கொள்கிறார். இதேபோல் பிருத்வியும் வேதிகா மீது ஒரு தலை காதல் கொள்கிறார். இந்த நேரத்தில் அனைகா வயிற்றில் பிள்ளையிருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டதாகச் செய்திகள் வர.. ஆத்திரப்படும் சித்தார்த் நாசரிடம் வந்து முறையிட்டு, சண்டையிட்டு சாபமே கொடுக்கிறார். அந்தச் சாபம் அடுத்த நொடியில் பலித்துவிட.. நாசர் பக்கவாதம் வந்து உடனேயே மரித்துப் போகிறார்.
இதுதான் சமயம் என்று காத்திருந்த பிருத்வி ‘இந்த நாடகக் குழுவை இனிமேல் நானே நடத்தப் போகிறேன்’ என்று சொல்லிவிட்டு தனக்கு சித்தார்த் தேவையில்லை என்று சொல்லி அவரை அடித்து விரட்டுகிறார். சித்தார்த் வெளியேற.. பிருத்வியின் தலைமையில் வேதிகாவும் இருக்க நாடகம் தொடர்ந்து நடக்கிறது.
இதன் பிறகு சித்தார்த் என்ன ஆனார்..? பிருத்வியின் காதல் ஜெயித்ததா..? நாடகக் குழு என்ன ஆனது என்பதை அவசியம் படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்..!
“இது முழுக்க, முழுக்க நிஜக் கதையல்ல. அதேபோல் கற்பனையான கதையும் அல்ல.. சில, சில விஷயங்கள் மட்டுமே உண்மையாக சேர்க்கப்பட்டிருக்கின்றன..” என்றார் இயக்குநர். இதுதான் படத்தின் மிகப் பெரிய பலவீனமாகவும் இருக்கிறது..!
முதலில் படத்தின் காலக்கட்டம் எது என்று இயக்குநர் வரையறுக்கவில்லை. நம்மாலும் யூகிக்க முடியவில்லை.. இதில் சித்தார்த்துதான் எல்.ஜி.கிட்டப்பாவா..? வடிவுதான் கே.பி.சுந்தராம்பாளா  என்பதையும் நம்மால் யூகிக்க முடியவில்லை.. எல்.ஜி.கிட்டபாபவும், கே.பி.சுந்தராம்பாளும் ஒருவரையொருவர் நேரில் சந்தித்ததே இலங்கையில்தான்.. அங்கு நாடகத்தில் நடிக்கப் போயிருந்தபோதுதான் அவர்கள் சந்திப்பு நடந்தது.
இது சங்கரதாஸ் சுவாமிகள் வாழ்ந்த காலகட்டமா என்றும் தெரியவில்லை. சங்கரதாஸ் சுவாமிகள் 1867-ல் தூத்துக்குடியில் பிறந்து 1922-ல் பாண்டிச்சேரியில் காலமானார். நாசரின் கேரக்டர் சங்கரதாஸ் சுவாமிகளைத்தான் குறிக்கிறது என்பதற்கு படத்தில் இருக்கும் ஒரேயொரு ஆதாரம் படத்தில் நாசர் இறக்கும்போது அவருக்கு ஏற்படும் பக்கவாதம். நிஜத்தில் சங்கரதாஸ் சுவாமிகளுக்கும் பக்கவாதம் ஏற்பட்டுத்தான் இறந்திருக்கிறார்.
ஆனால் அன்றைய காலக்கட்டத்தில் அவருடைய நாடக சபாவில் இது நடந்திருக்கிறது என்றெல்லாம் இயக்குநர் உறுதியாகச் சொல்ல வரவில்லை. அதுவரையிலும் சந்தோஷம்தான். ஏனெனில் சங்கரதாஸ் சுவாமிகள் காலத்திலேயே அவரே பல நாடக சபாக்களை தோற்றுவித்து தமிழகம் முழுவதும் நாடகக் கலையை வளர்த்திருக்கிறார்.
அவர் நடத்திய நாடகக் கம்பெனி குருகுலம் போன்றது. பாய்ஸ் நாடகக் குழு. சிறு வயதிலிருந்தே பையன்களை வளர்த்து அவர்களுக்கு வாய்ப்பாட்டு, நடனம், நடிப்பு அனைத்தையும் சொல்லிக் கொடுத்துதான் நாடகத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள்.  அங்கே குருவிடம் மாணாக்கர்கள் பேசும்விதம், நடந்து கொள்ளும்விதம் ஒரு அடிமைத்தனத்தின் தொடர்ச்சியாகத்தான் இருந்தது..
ஆனால், இந்தப் படத்தில் காட்டப்பட்டிருக்கும் காட்சிகளுக்கும் அன்றைய காலக்கட்டத்தில் வாழ்ந்திருக்கும் நமது முன்னோர்களின் வாழ்க்கைக்கும் நிறைய வித்தியாசங்கள் காணப்படுகின்றன என்பதால் இதுவொரு உண்மையான வரலாற்று படம் என்று சொல்ல முடியவில்லை..!
ஒருவேளை இயக்குநர் பழைய கதையை புதிய ஸ்டைலில்.. இப்போதைய யூத்துகளுக்கும் பிடிப்பதுபோல காட்ட வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ..? ஆனால் அதற்கு இப்படியொரு வரலாற்று பின்புலம் தேவைதானா ஸார்..? இந்த தமிழ் நாடகக் கலை வரலாறு என்ற விஷயமே இல்லாமல் இப்போதைய சமூகச் சூழலுடன் ஒப்பிட்டு வேறு ஒரு பேக்கிரவுண்ட்டை வைத்திருந்தால்கூட இந்த்த் திரைக்கதை அதற்கும் கச்சிதமாகப் பொருந்தும். அந்த அளவுக்கு 2014-க்கு பொருந்தக் கூடிய திரைக்கதையை வைத்து படமாக்கியிருக்கிறார் இயக்குநர். இதுதான் இந்தப் படத்தின் மிகப் பெரிய பின்னடைவு..!
ஆனால் நடிப்பிலும், இயக்கத்திலும் குறைவில்லை.. சித்தார்த்-பிருத்விராஜ் இருவரும் போட்டி போட்டிக் கொண்டு நடித்திருக்கிறார்கள். ஒரேயொரு உதாரணம் சூரபத்மன் நாடகத்தின் வசனத்தை இருவருமே வேறு வேறு ஆக்சன்களில் நடித்துக் காட்டும்போது ஏற்படும் சூழலையே சொல்லலாம்.. பிருத்வி பேசுவதுதான் அப்போதைய நாடகத்தின் ஆக்கம்.. ஆனால் சித்தார்த் அதில் புதுமையை புகுத்த நினைத்து பேசுவது இயக்கத்தால் சிறப்பாகிறது..!
தனது மனம் முழுவதும் நிரம்பி வழிந்திருக்கும் பொறாமை என்னும் துர்குணத்தை தனது கண்களாலும், உடல் மொழியாலும் கடைசிவரையிலும் கொண்டு வந்திருக்கிறார் கோமதி நாயகம் என்கிற பிருத்விராஜ். நாசரிடம் தனக்கு நியாயம் கேட்க பேசும்பேச்சும், சித்தார்த்தை சமயம் பார்த்து வெளியேற்றும் நேரத்திலும் ஒரு ஹீரோயிஸமாகவே அதைச் செய்திருக்கிறார்.
காய்ச்சலில் துவண்டு கிடக்கும் அந்தச் சூழலிலும் சித்தார்த்தை பார்த்தவுடன் தானும் அவனுடன் போட்டி போடணும் என்று நினைத்து கர்ணன் வேடத்தை ஏற்பதும்.. அர்ஜூனுடன் மல்லுக் கட்டுவதும் அவருடைய பொறாமைத் தீ இன்றளவும் அணைந்துவிடாமல் இப்போதும் எரிந்து கொண்டேயிருக்கிறது என்பதை காட்டுகிறது.. இயக்குநர் இப்படி பல இடங்களில் காட்சிப்படுத்தலில் ஒவ்வொரு கேரக்டரின் தன்மையையும் வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.
நஷ்டத்தை ஏற்க வேண்டி தன்னிடமிருக்கும் நகைகளைக் கொடுத்துவிட்டு தன் இயலாமையை தம்பி ராமையாவிடம் வெளிப்படுத்தும் காட்சியில் மிக அழகு என்று சொல்ல வைத்திருக்கிறார் பிருத்வி. வேதிகாவிடம் காதலுக்காக ஏங்குவது.. திரும்பத் திரும்ப தோற்றாலும் அதில் மீண்டும் முயல்வது.. கிளைமாக்ஸில் அந்த நயவஞ்கச் செயலை செய்யும்போது உண்மை உணர்ந்து அதிர்ச்சியைக் காட்டுவது என்று பிருத்வியின் நடிப்புக்கு செம வேட்டை இந்தப் படத்தில் கிடைத்திருக்கிறது.
சித்தார்த் இப்படியொரு சீரியஸான படத்தில் இதற்கு முன் தமிழில் நடித்திருக்கிறாரா என்று தெரியவில்லை. நாசரிடம் அடி வாங்கி மன்னிப்பு கேட்கும் காட்சியிலேயே அசத்தியிருக்கிறார். மென்மையாளர் என்று கருதப்படும் இவரிடத்தில் இருந்தும் நடிப்பை வரவழைத்திருக்கும் இயக்குநருக்கு இன்னொரு பாராட்டு.. சூரபத்மனின் வீர வசனத்தை தன்னுடைய ஆக்சனால் மென்மைப்படுத்தி, வித்தியாசப்படுத்தி காட்டுமிடத்தில் சித்தார்த் மிளிர்கிறார்.
சித்தார்த் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருந்தார் என்பதை ராட்டை கொடியை பயன்படுத்தியதில் இருந்து புரிந்து கொள்ள வைத்திருக்கிறார் இயக்குநர்.  காங்கிரஸின் போராட்டங்களில் கலந்து கொள்கிறார். காங்கிரஸ் சார்பாக நாட்டு விடுதலையை ஆதரித்த நாடகங்களில் நடிக்கிறார். காங்கிரஸ் சார்பான சுதேசி துணி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். ஆக ஒரு இந்திய சுதந்திரப் போராட்ட போராளியாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார் சித்தார்த்.
அனைகாவின் காதலில் உருகுவது.. பாடல் காட்சிகளின் நடனத்தில் வேகம் காட்டியிருப்பது.. அனைகா இறந்த பின்பு நாசருக்கு சாபம் விடுவது.. சுதந்திரப் போராட்ட வீரராக உருமாறிய பின்பு பிருத்வியிடம் நட்பு பாராட்டுவது.. கிளைமாக்ஸில் தன் மனதில் இருப்பதை கண் கலங்க சொல்வதெல்லாம் அவரவளவிற்கு மிகப் பெரிய நடிப்பு சாதனை..
கண்களிர் ஈர்ப்பையும், உடல் அசைவில் கவர்ச்சியையும் காட்டி இழுக்கும் ஜமீன் வாரிசாக அனைகா. ராம்கோபால்வர்மாவின் கண்டு பிடிப்பு. எதற்காக இவரை நடிக்க வைத்தார் என்பதை இவருடைய முதல் படத்தைப் பார்த்தாலே தெரியும். ஆனால் இரண்டாவதாக இந்தப் படத்தில் இவரை நடிக்க வைக்க இயக்குநர் முடிவெடுத்த்து ஏன் என்றுதான் தெரியவில்லை.. இக்காலத்திய சினிமா ரசிகர்களுக்காக இவரது கேரக்டர் ஸ்கெட்ச் இப்படி வைக்கப்பட்டதோ என்று சந்தேகப்பட தோன்றுகிறது..! திரைக்கதையின் மெதுவான ஓட்டத்தினால் இவரது சோகமான மரணம், ரசிகர்களாகிய நம்மை அதிகம் பாதிக்கவில்லை என்பதும் ஒரு குறைதான்..!
வேதிகா என்றொரு அழகி.. நிச்சயம் தமிழ் முகமல்ல என்பது பார்த்தவுடன் தெரியுமளவுக்கு இருக்கிறார். நடனத்தில் நளினத்தைக் காட்டியிருக்கிறார். நாசர் முன்பாக அவர் பாடும் பாடலும், அதற்கு அவர் பிடிக்கும் அபிநயமும் நமக்குப் பிடிக்கத்தான் செய்கிறது. இவரை முன்னிறுத்தியே பிருத்வி-சித்தார்த் மோதல் தொடர்ந்து நடைபெறுவதால் முக்கியத்துவம் பெற்றிருக்கிறார் படத்தில்..! இவரே கே.பி.சுந்தராம்பாள் என்கிறார்கள். ஆனால் கதையில் அது ஒட்டவேயில்லை..!
நாசரை பற்றி சொல்லவே வேண்டியதில்லை.. இது போன்ற கேரக்டர்கள் என்றால் ஆர்வத்துடன் நடிப்பவர்.. தன்னால் நூறு சதவிகிதம் முடிந்த அளவுக்கு நடித்திருக்கிறார். அந்த சிவதாஸ் சுவாமிகளாகவே நாசரை பார்க்க முடிந்தது. அதுவரைக்கும் சந்தோஷம்..
சில காட்சிகளே வந்தாலும் பொன்வண்ணன் அழுத்தமாக தன்னை பதிவு செய்திருக்கிறார். இவரது கேரக்டர்கள் இன்றைக்கும் தமிழ் நாடக உலகத்திலும், தமிழ்ச் சினிமாவுலகத்திலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இவர்களை போன்றவர்களால்தான் பல்வேறு வளர்ச்சிகளும் இத்துறையில் ஏற்பட்டிருக்கின்றன.
இவர் போன்ற ராஜபார்ட்டுகள் ஈகோ தன்மையுடன் கோபம் கொண்டு சண்டையிட்டு பிரிந்து சென்று தங்களுக்கென்று தனித்த நாடகக் குழுவை அமைக்க.. அமைக்கத்தான் தமிழ்நாட்டில் நாடகக் குழுக்கள் அதிகமாகி, நாடகக் கலை மென்மேலும் வளர்ந்திருப்பதாக ‘எனது நாடக வாழ்க்கை’ என்ற புத்தகத்தைப் படிக்கும்போது புரிந்தது..!
ஒரு சில காட்சிகளே வந்தாலும் மனதில் நின்றுவிட்டார் காண்ட்ராக்டர் கன்மையனாக நடித்திருக்கும் மன்சூரலிகான்.  அவருக்கே உரித்தான பாணியில் முதலில் வரவேற்று பேசி.. வணங்கி பேசி.. பின்பு ஏக்கப்பட்டு.. டிக்கெட் விற்பனை குறைந்த நிலையில் குடித்துவிட்டு வந்து திட்டிவிட்டுப் போவதுவரையிலும் இவரது கேரக்டரை வெகுவாக ரசிக்க முடிந்தது அண்ணன் மன்சூரலிகானின் நடிப்பினால்தான்.. பாராட்டுக்கள்..!
ரஹ்மான் தனது ரசிகர்களை மனதில் வைத்து இன்றைய நிலையில் கேட்க வேண்டும் என்பதை போல இசையை அமைத்திருக்கிறார். இந்தப் பாடல்களும், பாடல் காட்சிகளும்தான் இந்தப் படத்தை வரலாற்று புனைவு என்ற ஒரு வார்த்தையிலிருந்து படத்தை வெகு தொலைவுக்கு கொண்டு சென்றிருக்கிறது..
‘ஏய் மிஸ்டர் மைனர்’, ‘சண்டிக்குதிரை’ பாடலும் ரசிகர்களால்  வெகுவாக ரசிக்கப்படுகின்றன. ‘வாங்க மக்கா வாங்க’ பாடல் குத்துப் பாடலுக்கு நிகராக தாளம் போட வைக்கிறது. பாடல் காட்சிகளில் நடன அசைவுகள் அப்போதைய கலாச்சாரத்திற்கு எந்த வகையிலும் ஒட்டாததுபோல் இருப்பதை இயக்குநர் ஏன் உணரவில்லை..?
இந்தப் படத்திற்கு முறையாக எம்.எஸ்.விஸ்வநாதனைத்தான் அணுகியிருக்க வேண்டும்.. அவர்தான் பொருத்தமானவராக இருந்திருப்பார். இப்படி இயக்குநர்களே புறக்கணித்தால் எப்படி..? அவர் இருந்திருந்தால் நாடகக் காட்சிகள் அனைத்திலும் ஆர்மோனியத்தின் ஒரு நிமிட இசையையாவது ஒலிபரப்பியிருப்பார். படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் ஆர்மோனியத்தின் இசையைத்தான் காணோம்.. சின்ன பட்ஜெட் படங்களில் கிராமத்து விழாக்களை காட்டும்போதுகூட ஆர்மோனியம் விளையாடுகிறதே. இதையேன் மறந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்..?
நெகிழ்வோடு முழுமையாக பாராட்டுவது ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவைத்தான்.. துவக்கக் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் இவருடைய ராஜாங்கம்தான்.. அனைத்தும் சிவப்பு மயமாக இருக்க.. ஒளியமைப்பை அதற்கு பொருந்தும்வகையில் வைத்திருந்து காட்சிப்படுத்தியிருக்கிறார். அந்தக் காலத்தில் அரிக்கேள்விளக்கு வெளிச்சத்தில் நாடகமே நடந்து கொண்டிருக்கும் சூழலில் இத்தனை லைட்டுகள்..? இத்தனை வெளிச்சங்கள்..? எப்படி..? ஜமீனின் அரண்மனைகூட ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது..! அசந்துதான் விட்டோம்.. படம் பார்க்கும்போது இந்த யோசனையே வராத அளவுக்கு படமாக்கியிருக்கிறார்கள்.
நடித்தவர்களின் உடைகள் தேர்வு என்பதில் கொஞ்சம் குழப்பம் கூடியிருக்கிறது. மேக்கப் கலையில் மட்டும் குறை வைக்கவில்லை.. கச்சிதமாக பொருந்தியிருக்கிறது அனைவரின் வேடங்களும். அதிலும் பிருத்வி பெண் வேடமிட்டு ஆடும் நடனம் அசத்தல்.. அந்த அளவுக்கு கச்சிதமாக இருக்கிறது அவருடைய பெண் வேடம். அனைகாவும் வேதிகாவும் நாடக மேடையில் இக்காலத்திய பெண்கள் போல மேக்கப்பில் ஜொலிக்கிறார்கள்.  எதையும் செய்யாததுபோல நினைக்க வைத்து செய்வதுதான் மேக்கப் கலையின் ரகசியம் என்பார்கள். அது இங்கே சாத்தியமாகியிருக்கிறது..
சாதாரணமான ஒரு தமிழ்த் திரைப்படத்தின் வசனகர்த்தாவுடன் போட்டி போட்டு எழுதியிருக்கிறார் வசனகர்த்தா ஜெயமோகன். மிக எளிமையான வசனங்கள். அடுத்த வசனத்தை நாமளே ஊகித்துவிடலாம் என்கிற அளவுக்கு இறங்கி வந்து எழுதியிருக்கிறார். பல இடங்களில் வசந்தபாலனின் கை வண்ணமும் இருக்கிறது என்பதும் புரிகிறது.. இதேபோல் ஜெயமோகன் ‘கடல்’ படத்திலும் செய்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும்..!
முன்பே சொன்னதுபோல இந்தப் படத்தின் காலக்கட்டம் எது என்பதே ஊகிப்பதிலேயே பிரச்சினையிருப்பதால் அக்காலக்கட்டத்தை இந்தப் படம் எதிரொலிக்கிறதா என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை.. இதனாலேயே இந்தப் படம் அக்காலத்திய வாழ்க்கையை நம் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறது என்பதையும் எழுத விடாமல் தடுக்கிறது..!
சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் மக்களின் பேச்சுக்கள், பழக்க வழக்கங்களை இந்தப் படம் காண்பிக்கவில்லை. உதாரணம், அனைகாவும், அவரது தோழிகளும் சித்தார்த்திடமும், சிங்கம்புலியிடமும் பேசும் காட்சிகள்.. இதே வசனங்களை நாளை விமல்-சூரி படத்தில் வைத்தால்கூட கச்சிதமாகப் பொருந்தும். இதுதான் இந்தப் படம் முழுவதும் நிரவியிருக்கும் பிரச்சினை..!
கரிகாலன் கைது செய்ய வரும்போது, “வாரண்ட் இருக்கா..?” என்கிறார் சித்தார்த். இந்த அளவுக்கு மனித உரிமைகளை பிரிட்டிஷ்காரன் அப்போது கொடுத்திருந்தானா என்பது தெரியவில்லை. நமக்குத் தெரிந்து சுதந்திர கோஷத்தை பரப்பிய நாடகங்கள் தடை செய்யப்பட்டன என்பது உண்மை. அதை நடத்தியவர்களுக்கு சிறை தண்டனையும் வழங்கப்பட்டது என்பதும் உண்மை. இப்பட்டிப்பட்ட காட்சிகளெல்லாம் மக்கள் மனதில் நிற்பது போல எடுத்திருக்க வேண்டும். இங்கே அதுதான் மிஸ்ஸிங்..!
நண்பர்களுக்குள் பொறாமை.. ஒரு தலை காதல்.. அக்காலத்திய நாடகக் கலையின் வாழ்க்கை வரலாறு.. இந்திய சுதந்திரப் போராட்டம் என்று நான்குவிதமான கதைகளுக்குள்ளும் அவ்வப்போது சென்று வருவதால் படத்தின் கதை இதுதான் என்றோ, படம் இதை நோக்கித்தான் செல்கிறதோ என்றோ கடைசிவரையிலும் அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை..
நான்கு பகுதிகளிலுமே சிலவற்றை மட்டுமே தொட்டுச் சென்றுள்ளதால் மிக ஆழமாக மனதில் பதிய வேண்டியதெல்லாம் மிகச் சாதாரணமாகவே போய்விட்டது என்பது நமது துரதிருஷ்டமே..!
இயக்குநர் வசந்தபாலன் ‘அரவானில்’ செய்த அதே தவறைத்தான் இதிலும் செய்திருக்கிறார். ஆனால் ‘அரவானும்’ இப்போது தமிழ்ச் சினிமா வரலாற்றில் தனித்தே நிற்கிறது.. இந்தப் படமும் அந்த வரிசையில்தான் இடம் பிடித்திருக்கிறது என்பதுதான் வருத்தமான விஷயம்..!
வரலாற்று படங்கள் அதிகம் வருவதில்லை என்று வருத்தப்படுவதைவிட இப்படியாவது குறைந்தபட்சம் எடுத்துக் கொடுத்தார்களே.. சந்தோஷப்படுங்கள் என்று கூறினால் அதற்கும் நாம் கை தட்டுகிறோம்..!

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு – நீதிபதி குன்ஹா தீர்ப்பு விவரம் – 10

17-11-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


''சேலைகளையும் செருப்புகளையும் தள்ளுபடி செய்கிறேன்!'' 

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில், நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா வழங்கிய தீர்ப்பில், மிக முக்கியமான குற்றச்சாட்டுகளைக் கவனமாகப் பரிசீலித்து, அவர் நிறுவியவிதம் பற்றி இதுவரை விரிவாகப் பார்த்தோம். இந்தத் தீர்ப்பில், அரசுத் தரப்பு சமர்ப்பித்த ஆவணங்களை நீதிபதி குன்ஹாஅப்படியே ஏற்றுக்கொள்ளவும் இல்லை; ஜெயலலிதாவுக்கு எதிராக அரசுத்தரப்பு சமர்ப்பித்த சில ஆவணங்கள் முறையாக இல்லாதபோது, அவற்றை முழுமையாகத் தள்ளுபடி செய்யவும் அவர் தயங்கவில்லை. அது பற்றிய அவருடைய தீர்ப்பு...

சேலைகளின் மதிப்பை தள்ளுபடி செய்கிறேன்!

''ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை நடத்தியபோது, அங்கு 914 பட்டுச் சேலைகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றின் மதிப்பு 61 லட்சத்து 13 ஆயிரத்து 700 ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதுபோல 6,195 சாதாரண சேலைகளின் மதிப்பு 27 லட்சத்து 8 ஆயிரத்து 720 ரூபாய் என்றும், மேலும் பழைய சேலைகள் மற்றும் இதர உடைகளின் மதிப்பு 4 லட்சத்து 21 ஆயிரத்து 870 ரூபாய் என்றும் அரசுத்தரப்பு மதிப்பிட்டுள்ளது. இந்த விலை மதிப்பீட்டை கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் செங்கல்வராயன் செய்துள்ளார்.

ஆனால், ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து சேலைகளைப் பறிமுதல் செய்தபோது, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோர் அங்கு இல்லை. அவற்றின் மதிப்பைக் கணக்கிட்டபோதும், குற்றம்சாட்டப்பட்டவரோ, அவர்கள் தரப்பினரோ அந்த இடத்தில் இல்லை.

மேலும் ஜெயலலிதா, இந்தச் சேலைகளை 1991 - 96 காலகட்டத்தில்தான் வாங்கினார் என்பதற்கோ, யாரிடமிருந்து வாங்கினார் என்பதற்கோ எந்த ஆவணங்களையும் அரசுத் தரப்பு சமர்ப்பிக்கவில்லை. மேலும், அத்துடன் 1988, 1993, 1995 வாக்காளர் பட்டியலை பரிசோதித்தபோது, போயஸ் கார்டன் வீட்டில் 32 பேர் வசித்துள்ளது தெரிகிறது. அவர்கள் யாரும் இந்தச் சேலைகள் அனைத்தும் ஜெயலலிதாவுடையது என்று சொல்லவில்லை.  மேலும், இந்தச் சேலைகளை தங்களுடையவை என்று உரிமை கொண்டாடியும் யாரும் வரவில்லை.

அத்துடன் ஜெயலலிதா அரசியலுக்கு வருவதற்கு முன்பே புகழ் பெற்ற திரைப்பட நடிகையாக இருந்தவர். அந்தத் துறையில் இருப்பவர்கள் எப்போதும் விலை உயர்ந்த ஆடைகளை அணிவார்கள் என்பதையும் மற்றவர்களைவிட ரசனையுடன் கூடிய உடைகளை அதிகளவில் வைத்திருப்பார்கள் என்பதையும் நீதிமன்றம் கவனத்தில் கொள்கிறது.

இந்தச் சேலைகள், அந்தக் காலகட்டத்தில் இருந்தே அவர் வைத்திருந்தவையா? அல்லது முதலமைச்சராக இருந்த 1991-96 காலகட்டத்தில்தான் வாங்கப்பட்டவையா என்பதற்கு எந்த முறையான ஆவணங்களையும் இரு தரப்பும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை.
எனவே, சேலைகளின் மதிப்பாக கணக்கிடப்பட்டுள்ள 92 லட்சத்து 44 ஆயிரத்து 290 ரூபாயை ஜெயலலிதாவுக்கு ஆதரவாக வழக்கில் இருந்து இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது.''

செருப்புகளின் விலையையும் தள்ளுபடி செய்கிறேன்!

''ஜெயலலிதாவின் இல்லத்தில் இருந்து 389 ஜோடி செருப்புகளை அரசுத் தரப்பு கைப்பற்றி அதன் மதிப்பாக இரண்டு லட்சத்து 902 ரூபாய் என்று கணக்கிட்டுள்ளது. தமிழ்நாடு தோல் மேம்பாட்டுத் துறையில் தரக் கட்டுப்பாட்டாளராகப் பணிபுரியும் ஜெரால்டு வில்சன் என்பவர் செருப்புகளின் விலையை மதிப்பீடு செய்துள்ளார்.

386 ஜோடி செருப்புகளுடன் அங்கு ஒற்றைச் செருப்புகளாக இருந்த 26 செருப்புகளுக்கும் தனியாக விலை கணக்கிடப்பட்டு உள்ளது. அதுவும் 26 ஒற்றைச் செருப்புகளை ஜோடிச் செருப்புகள் விலையில் கணக்கிட்டுள்ளனர். இதை ஜெயலலிதாவின் வழக்கறிஞர் கடுமையாக ஆட்சேபித்துள்ளார். அத்துடன் அரசுத் தரப்பு கணக்குக் காட்டி உள்ள இந்தச் செருப்புகளில் ஆண்களின் செருப்புகள், விளையாட்டுப் போட்டிகளில் பயன்படுத்தப்படும் பூட்ஸ்களும் உள்ளன. இவற்றை ஜெயலலிதா யாருக்காக வாங்கினார் என்பதை அரசுத் தரப்பால் நிரூபிக்க முடியவில்லை.

மேலும், 1991-96 காலகட்டத்தில்தான் இவை வாங்கப்பட்டவை என்பதற்கும் அரசுத்தரப்பு சரியான ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை. அத்துடன், 26 ஒற்றைச் செருப்புகளையும் ஜோடி செருப்புகளின் விலையில் கணக்கிட்டுள்ளதை ஏற்க முடியாது. இந்த விவகாரத்தில், செருப்புகளின் விலையை ஜெயலலிதாவின் சொத்து மதிப்பாக எந்தவகையிலும் எடுத்துக்கொள்ள முடியாது. எனவே, அதையும் இந்த நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகத் தள்ளுபடி செய்கிறது.''

34 டைட்டன் கடிகாரங்கள்

''சென்னை சென்ட்ரல் அருகில் உள்ள டைட்டன் கடிகாரம் விற்பனை மையத்தின் உரிமையாளரான சஞ்சய் ஜெயின் தன்னுடைய சாட்சியில், 'எனக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜவஹர் பாபு நன்கு அறிமுகம். அவர் ஒரு நாள் தன்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு 34 டைட்டன் கடிகாரங்களுக்கு ஆர்டர் கொடுத்தார். முதலமைச்சர் வீட்டுத் திருமணத்துக்காக அவற்றை வாங்குவதாகத் தெரிவித்தார். மேலும் அதற்கான தொகையை ரொக்கமாக ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 565 ரூபாய் கொடுத்தார்என்றும் சொல்லியுள்ளார்.

ஆனால், குறுக்கு விசாரணையில் தன்னிடம் கடிகாரங்களை வாங்கிக் கொண்டு அதற்குப் பணம் கொடுத்தவர் யார் என்று தனக்கு அடையாளம் தெரியாது என்று சொல்லியுள்ளார். ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜவஹர் பாபு தன்னுடைய சாட்சியத்தில், சஞ்சய் ஜெயினை தனக்கு முன் பின் தெரியாது என்றே சொல்லியுள்ளார். இதனை அரசு தரப்பால் நிரூபிக்க முடியவில்லை. ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி நேரில் கடைக்குப்போய் ரொக்கமாகப் பணம் கொடுத்து 34 கடிகாரங்களை வாங்கினார்; அதுவும் முதலமைச்சர் வீட்டுத் திருமணத்துக்காக வாங்கினார் என்று சொல்வதும் நம்பும்படியாக இல்லை. இந்தத் தொகையை நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது''

- இது போன்று பல இடங்களில் ஜெயலலிதா தரப்பின் நியாயத்தை ஏற்றுக் கொள்ளவும், அரசுத் தரப்பு ஆவணங்களில் இருந்த ஓட்டைகளை சுட்டிக் காட்டவும் செய்துள்ளார் நீதிபதி குன்ஹா.

அடிப்படையே ஆறு பாயின்டுகள்தான்!

ஒட்டு மொத்தமாக இந்த வழக்கையே 6 பாயின்டுகளை முன்வைத்து ஜெயலலிதா தரப்பு கேள்விக்குள்ளாக்கியது. ஆனால், தன்னுடைய தீர்ப்பின் ஆரம்பத்திலேயே 60 பக்கங்களில் அவற்றுக்கு விளக்கம் அளித்து, இந்த வழக்கு சரியான முறையில் தொடுக்கப்பட்டு சரியான முறையில் நடத்தப்பட்டது என்பதையும் விளக்கி உள்ளார். அந்த ஆறு பாயின்டுகளும் அதற்கு குன்ஹா அளித்துள்ள விளக்கமும் இதோ...

1. வழக்குக்கு அனுமதி அளித்தது  சட்டப்படி செல்லாது.

பொது ஊழியர் மீது வழக்குத் தொடுக்க மாநில ஆளுநர் அனுமதி கொடுத்தது செல்லாது என்பது ஜெயலலிதா தரப்பு வாதம். இந்த வாதத்தின் அடிப்படையில் ஜெயலலிதா தரப்பு செய்த முறையீட்டில், தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், 'கவர்னர் அளித்த அனுமதி வெறுமனே அவருடைய சொந்த விருப்பு வெறுப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டது அல்ல. முழுக்க முழுக்க ஆவணங்களின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டது என்று தீர்ப்பளித்துள்ளது. மேலும், உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பில், 'உரிய ஆவணங்கள் இருக்கும்போது, மாநில முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட மாநில ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. எனவே, இந்த வழக்கு சட்டப்படியானதுதான்.

2. வழக்குப்பதிவு செய்தது மற்றும் விசாரணை நடத்தியது சட்டத்துக்கு உட்பட்டதே..

ஜெயலலிதா தரப்பு, சொத்துக் குவிப்பு வழக்கில் எஃப்.ஐ.ஆர் போட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி வி.சி.பெருமாள் எந்தக் காவல் நிலையத்திலும் பணியாற்றவில்லை. எனவே, அவர் இதில் எஃப்.ஐ.ஆர் போட்டதும், விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி நல்லம்ம நாயுடுவுக்கு உத்தரவிட்டதும் செல்லாது என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால், தமிழக அரசாங்கம் பிறப்பித்த அரசாணை எண். எம்.எஸ். 963 லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தை காவல் நிலையமாக அறிவித்துள்ளது. அங்கு பணியாற்றும் ஆய்வாளர் தகுதியில் உள்ள அதிகாரிக்கு காவல் துறை ஆய்வாளருக்கான அதிகாரத்தையும் வழங்குகிறது. அதன்படி, அவர் ஒருவரை கைது செய்யவும் விசாரணை நடத்தவும் தகுதி உடையவர் என்றும் அந்த அரசு ஆணை தெரிவிக்கிறது. மேலும் குற்றவாளிகளிடம் இருந்து ஆவணங்களைக் கைப்பற்ற விசாரணை அமைப்புக்கு முழு அதிகாரம் இருக்கிறது என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அந்த அடிப்படையில்தான், இந்த வழக்கில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதில் எந்த சட்டவிரோதமும் இல்லை.

3. நல்லம்ம நாயுடுவுக்கு அதிகாரம் உண்டு!

லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் வி.சி.பெருமாள், தன்னுடைய சாட்சியத்தில், 'நான் இந்த வழக்கை விசாரிக்க ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 17 மற்றும் 18-ன்படி 12 அதிகாரிகளுக்கு அனுமதி அளித்தேன். ஆனால், நல்லம்ம நாயுடுவுக்கு நான் தனியாக எந்த அதிகாரத்தையும் கொடுக்கவில்லைஎன்று குறிப்பிட்டார். அதனை ஜெயலலிதா தரப்பு பயன்படுத்தி, 'நல்லம்ம நாயுடு இந்த வழக்கை விசாரித்ததே செல்லாதுஎன்று குறிப்பிட்டது. 'நீதிமன்ற உத்தரவுப்படிதான் நல்லம நாயுடு நியமிக்கப்பட்டார். எனவே வழக்கை நல்லம்ம நாயுடு விசாரித்ததில் எந்த அதிகார மீறலும் இல்லை.

4. வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிரிவுகள் சரியானதே..

ஜெயலலிதா மட்டும்தான் பொது ஊழியர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பொது ஊழியர்கள் அல்ல. அவர்கள் பெயரில் உள்ள நிறுவனங்கள் சம்பாதித்த சொத்துகளும், பொது ஊழியரான ஜெயலலிதா தலையில் மொத்தமாகக் கட்டப்பட்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ஜெ. தரப்பு கூறியது.

சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ஒவ்வொரு காலகட்டத்திலும் இயக்குநர்களாகவோ, பங்குதாரர்களாகவோ இருந்த நிறுவனங்களின் பின்னணியில் ஜெயலலிதா இருந்துள்ளார். தாங்கள் தவறாக வழிநடத்தப்பட்டோம் என்றோ, தவறான பிரிவுகளின் கீழ் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றோ குற்றவாளிகள் எப்போதும் புகார் தெரிவிக்கவில்லை. எனவே, இந்த வழக்குப் பதிவு செல்லும்.

5. சொத்துகளை இணைத்தல்

ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், இந்த வழக்கில் ஏராளமான நிறுவனங்கள் மற்றும் அவற்றின் சொத்துகள் குற்றம்சாட்டப்பட்டவர்களின் சொத்துகளாகத் தவறாக இணைக்கப்பட்டுள்ளன என்று சொன்னார். ஆனால், இணைக்கப்பட்ட நிறுவனங்களில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் இருந்ததும், அவர்கள் ஜெயலலிதாவுக்காக அதில் செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது. எனவே, இந்த வழக்கில் தவறாக சொத்துகள் இணைக்கப்பட்டுள்ளன என்ற வாதத்தை இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது.

6. அரசியல் பழிவாங்கல்

ஜெயலலிதா மீதான இந்த வழக்கு அரசியல் பழிவாங்கல் அடிப்படையில் அவருடைய அரசியல் எதிரிகளால் தொடுக்கப்பட்டது என்று ஜெயலலிதாவின் வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை, இதே மனுதாரர்கள் உச்ச நீதிமன்றம் கொண்டு சென்றபோது, அது அங்கு தள்ளுபடியாகிவிட்டது. அப்போது உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்தில், 'ஜனநாயகத்தில் எதிர்க் கட்சிகளுக்கு சட்டமன்றத்தைத் தாண்டியும் பல பொறுப்புகளும் கடமைகளும் உள்ளன. அந்த வகையில் ஆள்பவர்களும், அரசாங்கமும் தவறான பாதையில் போகும்போது அதை மக்களிடம் தெரிவிக்கவும் அதைத் தடுப்பதற்கான வேலைகளில் இறங்கவும் அவர்களுக்கு முழு உரிமை உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளது. அந்த வகையில் ஜெயலலிதா தரப்பின் அந்த வாதத்தையும் இந்த நீதிமன்றம் நிராகரிக்கிறது'' என்றார்.

தீர்ப்பு நிறைந்தது.

- ஜோ.ஸ்டாலின்


நன்றி : ஜூனியர்விகடன்

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு – நீதிபதி குன்ஹா தீர்ப்பு விவரம் – 9

17-11-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!புதிய கட்டடங்களும் கூடுதல் கட்டுமானங்களும்...ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த 1991-96 காலகட்டத்தில் புதிய கட்டடங்களைக் கட்டியதாகவும் பழைய கட்டடங்களில் கூடுதல் வேலைப்பாடுகள் மற்றும் பராமரிப்பு செய்ததாகவும் அரசுத் தரப்பு ஆவணங்களைச் சமர்ப்பித்தது.

சிறுதாவூர் பங்களா, நீலாங்கரை பங்களா, பையனூர் பங்களா, போயஸ் கார்டன்  உள்பட 19 கட்டடங்கள் இந்தப் பட்டியலில் வருகின்றன. இப்படி ஜெயலலிதாவால் செய்யப்பட்ட மராமத்து  வேலைகளின் மதிப்பு அசையா சொத்து என்ற வகையில் அவருடைய சொத்துப் பட்டியலில் சேருகின்றன. அதன் மதிப்பு 28 கோடியே 17 லட்சத்து 40 ஆயிரத்து 430 ரூபாய் என்று அரசுத் தரப்பு மதிப்பிட்டுள்ளது. இதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பு வைத்த எதிர்வாதங்கள் மற்றும் ஆவணங்களை பரிசீலித்து நீதிபதி குன்ஹா இறுதி முடிவாக எடுத்தது என்ன..? தீர்ப்பின் அந்தப் பகுதிகள் :

சிறுதாவூர் பங்களா

புதிய கட்டடங்கள் மற்றும் பழைய கட்டடங்களில் செய்யப்பட்ட கட்டுமானங்கள் பற்றி எழுந்துள்ள இந்தச் சர்ச்சையில், பொதுப்பணித் துறையின் கண்காணிப்புப் பொறியாளர் சொர்ணத்தின் சாட்சி முக்கியமானது.

  

கடந்த 1996-ம் ஆண்டு சொர்ணம், அவருடைய குழுவில் இடம் பெற்ற உதவி செயற்பொறியாளர் சிவலிங்கம், உதவிப் பொறியாளர்கள் சங்கர், செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர்(எலெக்ட்ரிசிட்டி) திருத்துவராஜ் மற்றும் செல்வராஜ் ஆகியோருடன் சேர்ந்து கடந்த 1996-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம்வரை இந்தக் கட்டடங்களில் ஆய்வு நடத்தியுள்ளனர்.

மகாபலிபுரம் சாலையில் உள்ள சிறுதாவூர் பங்களாவையும் இவர்கள்தான் சோதனையிட்டுள்ளனர். அது பற்றி சொர்ணம் தனது சாட்சியில், 'சிறுதாவூர் பங்களா, நீச்சல் குளம், ஜெனரேட்டர் அறை, இரண்டு தண்ணீர் தொட்டி, மூன்று மோட்டார் அறைகள், ஊழியர்கள் தங்குவதற்காகக் கட்டப்பட்ட இரண்டு கட்டடங்களுடன் பிரமாண்டமாக இருந்தது.

பங்களாவின் உள்ளே இரண்டு வட்டக் கிணறுகள், மீன்கள் வளர்ப்பதற்கான 6 பெரிய தொட்டிகள் இருந்தன. மேலும் மெயின் ரோட்டில் இருந்து பங்களாவுக்குள் செல்ல சிறப்புச் சாலை அமைக்கப்பட்டிருந்தது. தரைத்தளம், முதல்தளம் என்று இரண்டு தளங்களைக் கொண்ட சிறுதாவூர் பங்களாவை ஆர்.சி.சி. பில்லர்ஸ் என்ற நிறுவனம் கட்டிக் கொடுத்துள்ளது. அந்த நிறுவனம் இதற்காக பூமிக்கடியில் மிகப் பெரிய அஸ்திவாரம் அமைத்து பில்லர்களை நிறுவி உள்ளது.

பங்களாவின் உள்ளே, தரைத் தளத்தில் ஆறு படுக்கை அறைகள், மிகப் பெரிய முகப்பு அறை, வரவேற்பறை, சாப்பாட்டு கூடம், சமையலறை, சேமிப்பு அறை, உணவுப் பண்டங்களைச் சேமித்து வைக்க தனியாக ஒரு அறை, கை கழுவ ஒரு அறை, பூஜை அறை ஆகியவை இருந்தன. மேலும், அங்கு பணியாற்றும் வேலைக்காரர்களுக்கான அறை ஒன்றும் பங்களாவின் உள்ளே இருந்தது.

பங்களாவின் தரைகளில் மார்பிள்கள் பதிக்கப்பட்டிருந்தன. கலைநயத்துடன் கூடிய வேலைப்பாடுகள்கொண்ட வெள்ளை மார்பிள்கள் சுவர்களில் பதிக்கப்பட்டு இருந்தன. மெட்டாலிக் மற்றும் செராமிக் டைல்ஸ்களால் அமைக்கப்பட்ட குளியலறை மற்றும் தேக்கு மரத்தால் செய்யப்பட்ட கதவுகள் மற்றும் ஜன்னல்களால் அந்தப் பங்களா அமைக்கப்பட்டு இருந்தது. கதவுகளின் சட்டங்கள் இரும்புக் கம்பிகளால் உருவாக்கப்பட்டு இருந்தன. முதல் தளத்தில் பாத்டப் வடிவமைக்கப்பட்டு இருந்தன. ரூபி ரெட் கிரானைட் கற்களால் பால்கனி அழகூட்டப்பட்டு இருந்தன.

அந்தப் பங்களாவில் இருந்த மின் இணைப்புகளை எங்கள் குழுவில் இடம்பெற்ற திருத்துவ ராஜ் மற்றும் செல்வராஜ் ஆய்வு செய்தனர். இந்தச் சோதனைகள் அனைத்தும் அந்தப் பங்களாவின் உரிமையாளர் நியமித்த பொன்னுராஜ் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றன. கட்டடத்தின் மதிப்பை அறிய அவர் முன்னிலையிலேயே, சாம்பிள்கள் சேகரிக்கப்பட்டன.

நாங்கள் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோதும்கூட பங்களாவின் உள்ளே கட்டுமான வேலைகள் கொஞ்சம் நடந்து கொண்டுதான் இருந்தன. எங்களுடைய மதிப்பீட்டின்படி அந்த பங்களா, 1995-ல் தொடங்கி 1996-ம் ஆண்டு முடிக்கப்பட்டு இருக்க வேண்டும்' என்று  சாட்சியத்தில் பதிவுசெய்து உள்ளார்.

பையனூர் பங்களா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பையனூர் பங்களாவையும் இதே குழு 1996-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி ஆய்வு செய்தது. பங்களா உரிமையாளர்கள் சார்பில் நியமிக்கப்பட்ட பொன்னுராஜ் என்பவர் அந்தச் சோதனையின்போது உடன் இருந்துள்ளார். இவர்கள் சாட்சிப்படி, 'பையனூர் பங்களாவில் இருந்த தரைத்தளத்தில் இரண்டு படுக்கை அறைகள்,  வேலைக்காரர்களுக்கான ஓர் அறை இருந்தன. முதல் தளத்தில் மூன்று படுக்கை அறைகள் இருந்தன. தரைத்தளத்தில் இருந்து முதல் தளத்துக்குச் செல்ல  நகரும் மாடிப் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன.  தரைத்தளத்தில் இருந்து பார்த்தால் முதல் தளத்தின் கூரை தெரியும் வகையில் இந்த பங்களா மிகவும் வித்தியாசமாக அமைக்கப்பட்டு இருந்தது. அனைத்து தளங்களும் மார்பிள்களால் அமைக்கப்பட்டவை. தேக்கு மரத்தில் செய்யப்பட்ட கதவுகள் ஜன்னல்களைக் கொண்டிருந்தன.  இதன்படி அந்தப் பங்களாவின் மொத்த மதிப்பு ஒரு கோடியே 25 லட்சத்து 90 ஆயிரத்து 261 ரூபாய்.(இதுபோல் 19 கட்டடங்களில் நடந்த ஆய்வு, அவற்றில் இருந்த அறைகள், வசதிகள் போன்றவை தீர்ப்பு நகலில் விவரிக்கப்பட்டு உள்ளன.)

ஆனால், குறுக்கு விசாரணையில் இந்த சாட்சி, அலங்காரப் பொருள்கள் மற்றும் கிரானைட் போன்ற பொருள்களை ஒரு பேப்பரில் குறித்துக்கொண்டு, அதன் பிறகு சென்னை கோயம்பேட்டில் நூறு அடி சாலையில் உள்ள ஒரு கடையில் விலை விசாரித்து மதிப்பீடு தயாரித்ததாக சொல்லி உள்ளார். ஆனால், அதன் பிறகு அலங்காரப் பொருள்கள் பற்றி குறித்து வைத்திருந்த பேப்பரை கிழித்துவிட்டதாகவும் சொல்லி உள்ளார்.

ஆனால், திருத்துவராஜ் மற்றும் செல்வராஜ் ஆகியோர் தங்களின் மதிப்பீடு முடிந்ததும் அவற்றில் தங்கள் கையெழுத்திட்டு சொர்ணத்திடம் கொடுத்ததாகவே குறுக்கு விசாரணையில் தெளிவுபடுத்தி உள்ளனர்.

''ஜெயலலிதாதான் செலவு செய்தாரா?''

இந்த சாட்சிகளின் வாக்குமூலத்தை எதிர்த்து, ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் பி.குமார், சில வாதங்களை முன் வைக்கிறார். அதாவது, அரசுத் தரப்பு அளித்துள்ள மதிப்பீட்டு அறிக்கையில், கட்டடத்தின் அளவு பற்றிய தெளிவான புரிதலும், அறிவும் இல்லை. கட்டடத்தின் வயதையும் அவை கட்டப்பட்ட வருடத்தையும் அறிந்து கொள்ள அறிவியல்பூர்வமான ஆய்வு எதையும் அரசுத் தரப்பு மேற்கொள்ளவில்லை.

பொதுப்பணித் துறையிடம் விலைப் பட்டியல் இல்லாத பொருள்கள் மற்றும் கட்டடத்தில் இருந்த கட்டுமானங்கள் பற்றி அளிக்கப்பட்டுள்ள விலைப் பட்டியல் சந்தைகளில் கேட்டு அறிந்த மதிப்பிடப்பட்டதாக அரசுத் தரப்பு சொல்லி உள்ளது. ஆனால், அவை எல்லாம் 1991-96 வரையிலான விலைதான் என்பதற்கான உரிய ஆவணங்களை அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. பொதுப்பணித்துறையின் விலைப் பட்டியல்படி கட்டடத்தின் செங்கல் மணல் போன்ற விலைகள் மதிப்பிடப்பட்டதாக அரசுத் தரப்பு சொல்கிறது. ஆனால், பொதுப்பணித் துறையின் விலைப் பட்டியல் புத்தகத்தை அவர்கள் தங்கள் அறிக்கையுடன் இணைக்கவில்லை.

இந்த மதிப்பீடுகள் அனைத்தும் 1996 அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்குள் செய்யப்பட்டவை. கட்டடம் கட்டப்பட்டபோது பார்த்தவர்களோ, அது தொடர்பான பொறியாளர்களோ, வடிவமைப்பாளர்களோ இந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை. இந்தக் கட்டடங்களுக்கான செலவுகளை ஜெயலலிதாதான் செய்தார் என்பதற்கும் எந்த ஆதாரங்களையும் அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லைஎன்று சொல்லி உள்ளார்.

''அனைத்துக் கட்டடங்களும் அவர்களுடையவைதான்!''

இந்த வாதங்களை எல்லாம் இந்த நீதிமன்றம் கவனத்தில் கொள்கிறது. இப்போது இரண்டு தரப்பு ஆவணங்களையும் வாதங்களையும் கவனமாகப் பரிசீலித்து நாம் முடிவுக்கு வரவேண்டும்.

ஜெயலலிதா தரப்பால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சாட்சி போர்செல்வம், தான் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றுவதாகவும், மணிமேகலை என்பவர்  பையனூர் பங்களாவுக்கு மின் இணைப்பு கேட்டு விண்ணப்பம் கொடுத்ததாகவும் தன்னுடைய சாட்சியில் சொல்லி உள்ளார்.

அதாவது பையனூர் பங்களா, ஜெயலலிதாவுக்கோ, சசிகலாவுக்கோ சொந்தமானது அல்ல என்று நிரூபிக்கும் பொருட்டு இந்தச் சாட்சியை நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தி உள்ளனர். மணிமேகலை, மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தார் என்பதற்கு ஆதாரமாக ஒரு ஜெராக்ஸ் நகலைக்கொண்டு வந்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கின்றனர். ஜெராக்ஸ் நகல்களை எந்த நீதிமன்றமும் ஏற்றுக் கொள்ளாது. இருந்தபோதிலும் மணிமேகலை சமர்ப்பித்த ஜெராக்ஸ் நகலையும் இந்த நீதிமன்றம் பரிசீலித்தது.

அதில், அவர் எந்த வீட்டுக்கு விண்ணப்பித்தார் என்ற விவரம் இல்லை. இது தொடர்பாக மின்சார வாரியத்திடமும் எந்த விதமான ஆவணங்களும் இல்லை. மேலும், இதில் இவ்வளவு சிரமப்பட வேண்டிய அவசியமும் இல்லை.

அரசுத் தரப்பு வழக்கில், கட்டடங்கள் அனைத்தும் ஜெயலலிதா, சசிகலாவுக்குச் சொந்தமானவைதான் என்பது பத்திரப் பதிவு ஆவணங்கள் மூலம் தெளிவாக நிரூபிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக கங்கை அமரனின் சாட்சி, பையனூர் பங்களாவை தன்னிடம் இருந்து வாங்கியது சசிகலாதான் என்று சொல்லி ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்டு உள்ளது.  

அவர் தன்னுடைய சாட்சியில், 'பையனூரில் கதை எழுதுவதற்காகவும் பாடல்களை கம்போசிங் செய்வதற்காகவும் தான் வைத்திருந்த பண்ணை வீட்டுக்கு ஒரு நாள் சுதாகரன் வந்தார். தன்னை ஜெயலலிதா பார்க்க வேண்டும் என்று சொன்னதாக போயஸ் கார்டன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். ஆனால், அங்கு நான் ஜெயலலிதாவைப் பார்க்கவில்லை. சசிகலாதான் தன்னைப் பார்த்து பேசினார். பையனூர் வீட்டைக் கேட்டார். ஆனால், அதை நான் விற்பதற்குத் தயாராக இல்லை என்றேன். ஆனால், மறுநாள் என்னுடைய வீட்டுக்குப் பத்திரப் பதிவாளர்களுடன் வந்து அந்த வீட்டை எழுதி வாங்கிக்கொண்டனர்எனச் சொல்லி உள்ளார். மேலும், அந்தப் பத்திரத்தில் வாங்குபவரின் பெயர் குறிப்பிடாமல் வெறுமனே காலியாக இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால். அதன் பிறகு சில காலம் கழித்து அந்தப் பங்களா சசிகலாவின் பெயரில் பதிவாகி இருப்பதைத் தான் பத்திரப் பதிவு அலுவலகம் மூலம் அறிந்து கொண்டதாகச் சொல்லியுள்ளார். அதற்கான ஆவணங்களை அரசுத் தரப்பே நீதிமன்றத்தில் சமர்ப்பித்துவிட்டது. இதேபாணியில்தான், இந்த சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன என்பது உரிய சாட்சிகளின் மூலம் நிருபிக்கப்பட்டு உள்ளது.

ஜெயலலிதா இந்தக் கட்டடங்களுக்கு செலவழித்தாரா? இல்லையா? என்பதைவிட இந்தச் சொத்துகள் அவர் அனுபவத்தில் உள்ளதா, இல்லையா என்பதுதான் வழக்கு. அதன்படி பார்த்தால், இவை எல்லாம் அவருடைய அனுபவத்தில்தான் உள்ளன.

''தற்காத்துக் கொள்ளும் ஆவணங்கள் இல்லை!''

அதுபோல்,  அரசுத் தரப்பைப் பொறுத்தவரை கட்டடங்களுக்கான செங்கல், மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களைப் பொதுப்பணித் துறையின் விலையில் கணக்கிட்டுள்ளனர். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், பொதுப்பணித் துறையிடம் விலைப் பட்டியல் இல்லாத கிரானைட், மார்பிள், தேக்கு போன்ற பொருள்களைச் சந்தை விலையில் கணக்கிட்டுள்ளனர். அதுவும் 1999-ம் ஆண்டு விலையில் கணக்கிட்டுள்ளனர். அதுதான் உண்மையான விலை என்று அவர்கள் நிரூபிக்க முயல்கின்றனர். ஆனால், அதற்குரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை. ஆனால், அதேசமயம் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் தங்களை தற்காத்துக்கொள்ள எந்த ஆவணங்களையும் இந்த நீதிமன்றத்தில் அளிக்கவில்லை. இந்த கட்டடங்கள் இந்த விலையில்தான் கட்டப்பட்டன. அவற்றில் செய்யப்பட்டுள்ள வேலைப்பாடுகளின் மதிப்பு இவ்வளவுதான் என்பதை ஆணித்தரமாகச் சொல்லி, அதற்கு ஆவணங்களைச் சமர்ப்பித்து தங்களை தற்காத்துக் கொள்ளமுடியவில்லை.

எனவே, அரசுத் தரப்பு மற்றும் எதிர்த் தரப்பு ஆகியவற்றில் உள்ள இந்தக் குறைபாடுகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, அரசுத் தரப்பின் மதிப்பீட்டில் 20 சதவிகிதத்தை இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது. அதன்படி இந்தக் கட்டடங்களின் மதிப்பு 22 கோடியே 53 லட்சத்து 92 ஆயிரத்து 344 ரூபாய் என்று எடுத்துக்கொள்கிறது.''

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், ஜெயலலிதாவுக்கு எதிராக அரசுத் தரப்பு வைத்த வாதங்கள் ஆவணங்களின் அடிப்படையில் வலுவாக இருந்தன. அதை பரிசீலித்தே நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பை வழங்கினார்.
அதேசமயம், அரசுத் தரப்பு சார்பில் வைக்கப்பட்ட சில குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லாத நிலையில், அவற்றை ஜெயலலிதாவுக்கு ஆதரவாகத் தள்ளுபடி செய்யவும் தயங்கவில்லை.

அது பற்றி அடுத்த இதழில்...


ஜோ.ஸ்டாலின்

நன்றி : ஜூனியர் விகடன்


ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு – நீதிபதி குன்ஹா தீர்ப்பு விவரம் – 8

17-11=2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

திராட்சை தோட்டத்து கணக்கு... வழக்கு!

ஜெயலலிதாவின் திராட்சைத் தோட்ட வருவாய் பற்றி நீதிபதி குன்ஹா தெரிவித்த கருத்துகள் இவை :

"1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை வாங்கிக் குவித்தார் என்பது அரசுத் தரப்புக் குற்றச்சாட்டு. அதற்கு ஆதாரமாகப் பல ஆவணங்களை அரசுத் தரப்பு, நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. ஜெயலலிதா இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து, தன்னிடம் இருக்கும் சொத்துகள் தனக்கு முறையான வருமானங்கள் மூலம் சேர்ந்தவை என்று பல ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அந்த வகையில் அவர் ஆந்திர மாநிலம், ஹைதராபாத், ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள ஜே.டி.மெட்லா திராட்சைத் தோட்டத்தில் இருந்து தனக்கு 52 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் வந்தது என்று குறிப்பிடுகிறார். இதை மறுக்கும் அரசுத் தரப்பு, திராட்சைத் தோட்டத்தில் இருந்து, ஜெயலலிதாவுக்கு 1991-96 காலகட்டத்தில் கிடைத்த மொத்த வருமானம் வெறும் 5 லட்சத்து 78 ஆயிரத்து 340 ரூபாய் மட்டுமே என்று ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளது. அரசுத் தரப்பின் இந்த வாதத்துக்கு வலுச்சேர்க்க அவர்கள் சார்பில் மூன்று சாட்சிகள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு உள்ளனர்.

அதில் முதல் சாட்சி கே.ஆர்.லதா. இவர் ஆந்திர மாநிலம், ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் தோட்டக் கலைத் துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருடைய சாட்சியத்தின் மூலம் நீதிமன்றத்துக்கு தெரியவருவது, 1996-ம் ஆண்டு டிசம்பர் மாதம் லதாவும் மற்றொரு தோட்டக் கலைத் துறை அதிகாரி சஞ்சய் குமாரும் சேர்ந்து ஜெயலலிதாவின் திராட்சைத் தோட்டத்தில் ஆய்வு நடத்தி உள்ளனர் என்பது அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் சூப்பிரண்டென்ட் கதிரேசனும் இவர்களுடன் இருந்துள்ளார்.

அடுத்த அரசுத் தரப்பு சாட்சி கொண்டா ரெட்டி. இவர் தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநர். லதாவும், சஞ்சய் குமாரும் ஆய்வறிக்கை அளித்த பின் கொண்டாரெட்டி திராட்சைத் தோட்டத்துக்குச் சென்றுள்ளார். இவர் ஆய்வு செய்த பின், லதா மற்றும் சஞ்சய் குமார் அளித்த ஆய்வறிக்கையை அடிப்படையாக வைத்தும் இவர் திராட்சைத் தோட்ட வருமானத்தை மதிப்பீடு செய்துள்ளார். திராட்சைச் செடிகளின் வயது, அவற்றின் வளர்ச்சி ஆகியவற்றை இவருடைய மதிப்பீட்டுக்கு அடிப்படையாக வைத்து வருமானத்தைக் கணக்கிட்டுள்ளார்.

இவருடைய மதிப்புப்படி அங்கிருந்த 'அனாப் இ சாகிதிராட்சைச் செடிகளின் வயது 15. விதையற்ற திராட்சைகளின் வயது நான்கு. இவற்றின் மூலம் கிடைக்கும் வருமானத்தின் அடிப்படையில், 1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதாவுக்கு 6 லட்சத்து ஆயிரத்து 380 ரூபாய் கிடைத்திருக்கும் என்று மதிப்பிட்டுள்ளார்.

இந்த சாட்சிகளை எல்லாம் தன்னுடைய வாதத்தில் கடுமையாக எதிர்க்கும் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார், 'அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், அடிப்படையிலேயே பல தவறுகள் உள்ளன. அதைத் தயாரித்த சாட்சிகள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி உள்ளனர்.  தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநர் கொண்டா ரெட்டி, தன்னுடைய அறிக்கையை சொந்தக் கணிப்பில் செய்துள்ளார். அதுவும் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு முதல் நாள்தான் தன்னுடைய அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

மேலும், ஜெயலலிதா தன்னுடைய திராட்சைத் தோட்டத்தில் இருந்து கிடைத்த வருமானம் பற்றி, 1987 முதல் 1993 வரை அவர் தாக்கல் செய்துள்ள வருமானவரிக் கணக்கில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த அடிப்படையில் 1992-93-ம் ஆண்டிலேயே ஜெயலலிதாவுக்கு திராட்சைத் தோட்டத்தின் மூலம் 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இதை வருமானவரித் துறை மதிப்பீட்டு அதிகாரியும் ஏற்றுக் கொண்டுள்ளார். அடுத்தடுத்த ஆண்டுகளிலும் ஜெயலலிதா தன்னுடைய வருமானவரிக் கணக்கில் திராட்சைத் தோட்ட வருமானத்தைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அதன்படி அவர் முதலமைச்சராக இருந்த காலத்தில் அவருக்கு திராட்சைத் தோட்டத்தில் இருந்து கிடைத்த வருமானம் 52 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என்பது தெளிவாகிறதுஎன்று தன்னுடைய வாதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரண்டு வாதங்களையும் கவனமாகப் பரிசீலித்து இவர்கள் சமர்ப்பித்த ஆவணங்களின் அடிப்படையில் நாம் வருமானத்தைக் கணக்கிடலாம். ஜெயலலிதா தன்னுடைய திராட்சைத் தோட்ட வருமானமாக, 1987-88-ல் 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய். 1988-89-ல் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய். 1989-90-ல் ஏழு லட்சம். இந்த விகிதத்தில் அந்த வருமானத்தை ஆண்டுக்கு ஆண்டு உயர்த்தி 1992-93-ம் ஆண்டில் 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என்று காட்டி உள்ளார். இதை மதிப்பீட்டு அதிகாரி ஏற்றுக் கொண்டு சான்றிதழ் அளித்துள்ளார்.

ஆனால், வருமானவரித் துறை இந்த வருமானம் உண்மையானதாக இருக்க முடியாது என்று, ஜெயலலிதாவின் வருமானவரிக் கணக்கை 1998-ம் ஆண்டில் மறு ஆய்வுக்காகத் திறந்துள்ளது. அதற்கு வருமானவரித் துறை சொல்லும் காரணம், ஜெயலலிதா திராட்சைத் தோட்ட வருமானமாகக் காட்டியிருக்கும் மதிப்புக்கு அவர், எந்தவிதமான ஆவணங்களையும் காட்டவில்லை. வெறும் கணிப்பில் மட்டுமே தாக்கல் செய்துள்ளார். அதனால், அந்தக் கணக்கை மறு ஆய்வுக்கு உட்படுத்தினோம் என்று சொல்லி உள்ளார்.


ஏனென்றால், 1993-ல் ஜெயலலிதாவின் திராட்சைத் தோட்டத்தில் ஆய்வு மேற்கொண்டபோது, ஒரு வருடத்துக்கு அதில் வருமானமாக 12 ஆயிரம் ரூபாய் மட்டுமே வந்துள்ளது. காய்கறிகள் மூலம் ரூ.5,000-ல் இருந்து 6,000 ரூபாய்வரை கிடைக்க வாய்ப்பிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

மேலும். இந்தக் கணக்கை ஹைதராபாத் வேளாண்மைக் கல்லூரியில் உள்ள ஆய்வுப் பிரிவில் சமர்ப்பித்து, திராட்சைகள் மூலம் எவ்வளவு வருமானம் வரும் என்று கணக்கிடப்பட்டு அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அதன்படி பார்த்தால், அந்தத் தோட்டத்தில் இருந்து  வருடத்துக்கு 60 ஆயிரம் ரூபாய் வருவாய்கூட தாண்டாது. அப்படியிருக்கும்போது, அவர் 1986-ம் ஆண்டிலேயே தனக்கு திராட்சைத் தோட்டத்தின் மூலம் 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கிடைத்திருப்பதாகக் கூறியதை ஏற்க முடியவில்லை.

அதனால், ஜெயலலிதா தாக்கல் செய்த வருமானவரிக் கணக்கை மீண்டும் மறு ஆய்வுக்கு உட்படுத்த, வருமானவரிச் சட்டம், 1961 பிரிவு 147-ன்படி அதில் வழி உள்ளது. அதன்படி ஜெயலலிதாவின் கணக்கு மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது என்று சொல்லி உள்ளார்.
வருமானவரித் துறையின் இந்த மறு ஆய்வை ஜெயலலிதா எதிர்த்து தீர்ப்பாயத்தில் முறையிட்டு, அதில் வெற்றியும் பெற்றுள்ளார். தீர்ப்பாயம் வருமானவரித் துறையின் நடவடிக்கையை ரத்து செய்துவிட்டது. அத்துடன் ஜெயலலிதாவின் வருமானம் 1992-93-ம் ஆண்டிலேயே ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் என்றும் உறுதிப்படுத்தி உள்ளது.

ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார், இதைத்தான் முழுமையாக நம்பி தன்னுடைய வாதத்தை எடுத்து வைத்துள்ளார். ஆனால், கிரிமினல் வழக்கைப் பொறுத்தவரையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் மூலம்தான் தீர்ப்பளிக்கப்படுமே தவிர, வருமானவரித் துறை அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் தீர்ப்பளிக்க முடியாது. எனவே, இங்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் திராட்சைத் தோட்டத்தின் வருமானத்தைக் கணக்கிடலாம்.

ஜெயலலிதாவின் திராட்சைத் தோட்டம் 15 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. அதில் 50 சதவிகிதம் முதல் 60 சதவிகிதம் மட்டும்தான் வேளாண்மை செய்யப்பட்டுள்ளது. மீதி உள்ள இடத்தில், பண்ணை வீடு, ஊழியர்களின் குடியிருப்பு, சாலைகள், பாதைகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக திராட்சைத் தோட்டம் அமைந்துள்ள இடம் மிகவும் சிறிய பகுதி. மற்ற பகுதிகளில் தர்பூசணி, கத்தரிக்காய் போன்றவை பயிரிடப்பட்டு உள்ளன. இந்த நிலத்தில் இருந்து தனக்கு பல லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது என்று சொல்லும் ஜெயலலிதா, அதற்கு ஆதாரமாக எந்தவிதமான கணக்கு வழக்குகளையும் சமர்ப்பிக்கவில்லை. அப்படி ஒரு கணக்கு வழக்கை அவர் பராமரிக்கிறார் என்பதற்கே எந்த ஆதாரமும் நீதிமன்றத்தில் வைக்கப்படவில்லை. வருமானவரித் துறையிடம் தாக்கல் செய்த ஆதாரங்களை மட்டுமே இந்தக் கோர்ட்டில் முன் வைத்திருக்கிறார்.  அதைத்தான் வருமானவரித் துறையே கேள்வி எழுப்பி இருக்கிறதே..?

ஆவணங்களாக சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில், ஜெயலலிதாவின் பதினான்கரை ஏக்கர் திராட்சைத் தோட்டத்தில் 10 ஏக்கரில் மட்டுமே விவசாயம் நடைபெற்றது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் 10 ஏக்கரை மட்டும் இந்த நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்கிறது.

1991-96 காலகட்டத்தில் திராட்சை மூலம் கிடைத்த வருமானம் ஓர் ஏக்கருக்கு 20,000 ரூபாய் என அப்போதிருந்த விலை மதிப்பின் மூலம் தெரியவருகிறது. அதையே நீதிமன்றமும் எடுத்துக்கொள்கிறது. ஓர் ஏக்கருக்கு 20,000 என்றால், 10 ஏக்கருக்கு இரண்டு லட்சம் ரூபாய். ஆக, ஐந்து ஆண்டுகளுக்கு 10 லட்சம் ரூபாய் வருகிறது. இதையே ஐந்தாண்டுகளில் ஜெயலலிதாவுக்கு திராட்சைத் தோட்டம் மூலம் கிடைத்த வருமானமாக இந்த நீதிமன்றம் எடுத்துக்கொள்கிறது. ஜெயலலிதா தரப்பு சொன்ன 52 லட்ச ரூபாய் வருவாய் என்பதையும் அரசுத் தரப்பு சொன்ன 5 லட்சம் வருவாய் என்பதையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது.''

தீர்ப்பின் விவரம் தொடர்கிறது.
-
ஜோ.ஸ்டாலின்


நன்றி : ஜூனியர்விகடன்