கமல்ஹாசனுக்காக காத்திருந்த தெரு...!


25-05-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வக்காலி.. மன்மோகன்சிங், பிரதீபாபாட்டிலுக்குக்கூட இப்படியொரு அலட்டல் நடந்திருக்காது.. ஆழ்வார்பேட்டை ஆண்டவன் கமலஹாசன் ஒரு ஆர்ட் கேலரியைத் திறந்து வைக்க வந்த நிகழ்ச்சிக்காக, ஆழ்வார்பேட்டை கஸ்தூரிரங்கன் சாலையை துவம்சம் செய்துவிட்டார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்..!

 ஏற்கெனவே பெரும் பணக்காரர்கள் நிரம்பிய அந்தச் சாலையில் கலையார்வம் கொண்ட ஒரு பெரும் பணக்காரர் குறைந்த வாடகையில் கொடுத்த அற்புதமான ஒரு வீட்டில் அழகான தனது கலை வடிவங்களை கண்காட்சிக்கு வைத்திருக்கிறார் கலை ஓவியர் ஸ்ரீதர்.



கமலஹாசனின் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே பாடல் காட்சி துவங்கி, அவரது பல்வேறு அவதாரங்களின் தொகுப்பு வரையிலும் பலவற்றையும் வரைந்து கமலிடம் வழங்கி அவரது அன்பைப் பெற்றவர் ஸ்ரீதர். அதற்கான நன்றிக் கடனாக அவரது ஆர்ட் கேலரியைத் திறந்து வைக்க இன்று வருகை புரிந்தார் கமல்.

மதியம் 3.30 மணிக்கு நிகழ்ச்சி துவங்கும் என்று சொல்லி 3 மணியில் இருந்தே பத்திரிகையாளர்கள் வந்து காத்திருக்க.. அநத் தெருவையே இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குத்தகைக்கு எடுத்துவிட்டார்கள். வருகின்ற கார்களை பிக்கப் செய்து வேறிடத்தில் நிறுத்திவைக்க கால் டிரைவர்ஸ் யூனிட்டையே களம் இறக்கியிருந்தார்கள். தெருவில் இருந்த வீட்டு ஓனர்களிடம் பேசி, சிறிது நேரத்திற்கு வெளியில் கார்களை நிறுத்த வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொண்டார்களாம்..!

தெருவின் துவக்கத்தில் இருந்த ஒரு மரத்தில் இருந்து ஏதோவொரு பழங்களை உலுக்கி எடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களையும் அவ்வப்போது கொஞ்சம் நிறுத்திக்கக் கூடாதா என்று கேட்டு அதனையும் சீக்கிரமாகவே முடிக்க வைத்துவிட்டார்கள்..! டூவிலர்கள் நிறுத்த இடமில்லாமல்போக, கூடுதலாக வந்தவைகளை தெருவின் மறுகோடிவரையிலும் கொண்டு போய் நிறுத்தச் சொன்னார்கள். தெருவில் குடியிருப்பவர்கள் வந்த கார்களைகூட ஓரமா நிறுத்துங்களேன் என்று வாலண்டியராக கூவிக் கொண்டிருந்தார்கள்..!

இதோ வர்றார்.. கிளம்பிட்டார்.. வந்துக்கிட்டேயிருக்கார் என்றெல்லாம் கிசுகிசு பாணியில் புரளியைக் கிளப்பிவிட.. பாவம் கேமிராமேன்களும், புகைப்படக்காரர்களும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாசலில் தேமே என்று தவம் கிடந்தது பரிதாபம்தான்..!





வரப் போவது தெரிந்தவுடன் யார், யார் தெருவில் போய் நிற்பது.. கார் எங்கே வந்து நிற்கும்.. கமல் காரில் இருந்து இறங்கியவுடன் யார் முதலில் வரவேற்பது என்றெல்லாம் நொடியில் பேசி முடித்து பக்காவாக செயல்படுத்தினார்கள்.

50 வீடியோ கேமிராமேன்கள் சூழ்ந்து கொள்ள.. பிளாஷ் மழையில் நனைந்து கொண்டேதான் உள்ளே வந்தார் கமல். தனது புகைப்படத்தில் இரண்டு பக்கமும் மாறி, மாறி நின்றபடியே எழுதியதை, திருப்பித் திருப்பி எழுதி போஸ் கொடுத்தார்..!



ஒரு வித்தியாசத்திற்கு கம்யூட்டரில் இருந்த குத்துவிளக்கு படத்தில் திரி எரியும் இடத்தில் பிரஷ்ஷால் தீபத்தை வரைந்து விழாவைத் துவக்கி வைத்தார்.. சிம்ப்ளி சூப்பர்ப்..! பியானோவை பார்த்தவுடன் ஆர்வத்துடன் உட்கார்ந்தவர்.. ஏதோ பேச்சுக்கு என்பது போல் இல்லாமல், அழகாக பியானோவை வாசிப்பதுபோல் நடித்தது மிகவும் அழகு..!



டிவி, தின இதழ், வார இதழ், இணையத்தளங்கள் என்று 100-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கூடி நிற்க.. இதில் பாதிப் பேர் இடமில்லாமல் நிற்க வேண்டியிருந்தது..! உட்கார்ந்து பேசினால் நல்லது என்று ஸ்டில் கேமிராமேன்களும், நின்று கொண்டே பேசினால் நல்லது என்று டிவி கேமிராமேன்களும் சொல்ல.. மெஜாரிட்டிபடி நின்றபடியே பேசி முடித்தார் கமல்.



பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் ஸ்ரீதருக்கும் தனக்குமான நட்பை விளக்கிவிட்டு, அவருடைய அன்புக்காகவே தான் வந்ததாகச் சொன்னார். விஸ்வரூபம் பற்றி நிருபர்கள் கேள்வி கேட்டதற்கு “முக்கால்வாசி முடிஞ்சிருச்சு.. படம் பாருங்க தெரியும்..” என்றார். நிருபர்கள் விடாமல் விஸ்வரூபத்தை கேட்க... “அடுத்து வசனத்தை கேட்பீங்களா? என்று அரங்கத்தை கலகலப்பாக்கினார். விஸ்வரூபத்தின் முதல் காட்சி அடுத்த மாதம் சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் இந்திய பிலிம் பெஸ்டிவலில் நடைபெறும் என்று இன்றைக்குத்தான் நியூஸ் கொடுத்தார்கள்..! தான் படங்களில் நடித்ததை தானே பார்க்கும்போதுதான் தனக்குள்ளும் ஒரு ரசிகன் இருக்கிறான் என்பதை உணர்கிறேன் என்றார்..!  ஸ்ருதியின் படங்கள் பற்றி கேட்டபோது, “எனக்கே பார்க்க கொடுமையாத்தான் இருக்கு..” என்றார்.  இதற்கு மேலும் இங்கேயிருந்தால் கேள்விகள் பாயும் வர்றேன் என்று சொல்லிவிட்டு பாய்ந்தோடினார்..!

வழியில் நின்று கொண்டிருந்த பலரிடமும் கை கொடுத்து குலுக்கிவிட்டு அவர் ஓடிய ஓட்டத்திற்கு அப்படியே நடக்க விட்டிருந்தால் 2 நிமிடத்தில் அவர் ஆபீஸுக்கே போய்ச் சேர்ந்திருக்கலாம்.. பிரபலங்களுக்கு இது ஒரு மாதிரியான தொல்லைதான் என்றாலும், அடிக்கடி வெளியில் வந்து பேசிக் கொண்டிருந்தால், இந்த அன்புத் தொல்லையிருக்காது..!

கமல் திரும்பி வந்து காரில் ஏறும்வரையிலும் அத்தெருவில் ஒரு காரையும் ஓரமாக நிறுத்தக் கூட விடவில்லை ஐயாமார்கள்.. ஓடோடிச் சென்று அன்போடு “கொஞ்சம் தள்ளி.. கொஞ்சம் தள்ளி..” என்று சொல்லி வழியை தயார் நிலையில் வைத்திருந்தார்கள்..! கமலின் கார் சென்ற பின்பே டூவிலர்களுக்கும், மற்றவர்களுக்கும் அனுமதி கிடைத்தது..! இதையெல்லாம் யாராவது அரசியல்வியாதிகள் பார்த்தால் என்ன ஆகும்..?

பை தி பை.. லாஸ்ட் பன்ச் என்னன்னா.. நெல்லை சந்திப்பு படத்தின் இசை வெளியீட்டு விழால அரை மணி நேரம் காக்க வைச்சதுக்காக பல பத்திரிகையாளர்கள் விழா துவக்கத்திலேயே விழாவைப் புறக்கணிச்சிட்டு எழுந்திரிச்சு போயிட்டாங்க..! ஆனா இங்க.. கூடுதலா 2 மணி நேரமாகியும் மெதுவா, இருந்து பார்த்து, பேசி, கூடிக் குலாவிட்டுத்தான் போனாங்க..! என்னவொரு மாற்றம் பாருங்க.. வல்லவன் வகுத்ததே வாய்க்கால்ன்னு சொல்லுவாய்ங்க பாருங்க.. அது இதுதான்..!

ரா! குச்சு!! செப்பு!!!

22-05-2012



என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வந்தாரை வாழ வைக்கும் சென்னைன்னு சொல்றது ச்சும்மால்ல.. நேத்து வருவான் தலைவன் படத்தோட போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சில இயக்குநர் வாசு சொன்னதை நினைச்சா இப்படித்தான் தோணுது..!



என்டி ராமராவின் மகன் பாலகிருஷ்ணாவை Sahasame Jeevitham  என்ற தனது படத்தில் ஹீரோவா நடிக்க வைக்கிறதா முடிவெடுத்திருந்தாராம் பி.வாசு. பாலகிருஷ்ணாவுக்கு கதை சொல்றதுக்காக ஹைதரபாத் போயிருக்காரு.. அப்போ என்.டி.ஆர்.தான் அங்க சீப் மினிஸ்டர்..! பாலகிருஷ்ணாவுக்காக அவர்தான் கதை கேப்பாராம்..!

“என்னைப் பார்த்ததும் எப்படியும் எங்கப்பா பீதாம்பரம்பத்தை பத்தி விசாரிப்பாருன்னுதான் நினைச்சேன். ஆனா அது நடக்கலை. என்னைப் பார்த்ததும், ரா.. குச்சு.. செப்பு..ன்னு மூணே வார்த்தைதான் சொன்னார்..! பெரிய நடிகர்ன்றதையும் தாண்டி, அப்போ சீப் மினிஸ்டராவும் இருந்ததால எனக்குள்ள லேசா ஒரு பயம் இருந்தது.. இதுல இன்னொரு பிரச்சினை எனக்கு தெலுங்கு தெரியாது. அதுனால நான் தமிழ்லதான் கதை சொல்லப் போறேன்னு மெல்லமா அவர்கிட்ட சொன்னேன். சட்டுன்னு கோபப்பட்டாரு.. “என்ன தைரியம் இருந்தா ஆந்திராவுக்கே வந்து.. அதோட சீப் மினிஸ்டர்கிட்டயே தமிழ்லதான் பேசுவேன்னு சொல்லுவ..?” என்று கர்ஜித்தார். வெலவெலத்துப் போயி்ட்டேன். அடுத்த செகண்ட்டே சாதாரணமா மாறிட்டாரு. அதுக்கப்புறமா சொன்னாரு.. “நான் 40 வருஷமா தமிழ்நாட்டு தண்ணியை குடிச்சு வளர்ந்தவன்.. தமிழ்நாட்டுக்கு நான் என்னிக்குமே நன்றிக் கடன்பட்டிருக்கேன்..! பரவாயில்ல.. தமிழ்லேயே சொல்லு. ஆனா அடுத்த தடவை நீ வரும்போது தெலுங்குலதான் கதை சொல்லணும்..”னு சொன்னாரு..!” என்றார் வாசு..!



வயசு 52-ன்னாலும் கமல்ஹாசனைவிடவும் இளமையாத்தான் தெரியறாரு பாலகிருஷ்ணா. டைட் ஜீன்ஸ்.. வெள்ளை சட்டைன்னு அதையும் கழுத்துவரைக்கும் பட்டன் போட்டு இறுக்கிக்கிட்டு வந்திருந்தாரு.. அவ்வளவு ஏசிலேயும் இவருக்கு மட்டும் வியர்த்து ஊத்துச்சு..! கொஞ்சம், கொஞ்சம் திக்கித் திணறி கஷ்டப்பட்டு தமிழ்லேயே பேசி முடிச்சாரு பாலய்யா..! முதல் முறையா தமிழ்ல ஹீரோவா அறிமுகமாகுறதை நினைச்சு நிறையவே சந்தோஷப்பட்டேன்னு சொன்னவரு “நான் பொறந்ததே சென்னைலதான்..” என்றவுடன் பத்திரிகையாளர்கள் தன்னையறியாமலேயே கை தட்டிக் குவித்துவிட்டார்கள்.. “எங்கப்பா அடிக்கடி சொல்வாரு.. தமிழ்நாடுதான் நமக்கு சோறு போட்டுச்சு.. வளர்த்துச்சு.. அந்த ஊர் தண்ணியை குடிச்சுத்தான் நாமெல்லாம் வளர்ந்திருக்கோம்ன்னு.. அப்படிப்பட்ட ஊருக்கு பதிலுக்கு ஏதாவது செய்யணுமேன்னு நினைச்சுதான் எங்கப்பா  கிருஷ்ணா தண்ணியை சென்னைக்கு குடுத்தாரு..” என்றார்.  ம்.. அப்புறம் ஏன் இப்போ சந்திரபாபு நாயுடு விடமாட்டேன்றாருன்னு தெரியலையே..?



கோடம்பாக்கத்துல இப்ப இருக்கிற சின்ன ஹீரோக்களே தயாரிப்பாளர் வருவரோன்னு நடுரோட்டுல நின்னுக்கிட்டிருக்குற நேரத்துல இந்தப் படத்தின் மூலமா தமிழுக்கு இன்னொரு ஹீரோவும் புதுசா என்ட்ரியாகுறாரு..! தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகனான மனோஜ்தான் அந்த ஹீரோ. இந்த வருவான் தலைவன் படம் மோகன்பாபுவின் சொந்தப் படம். அவரது மகள் லட்சுமி மஞ்சு பிரசன்னாதான் தயாரிப்பாளர்..! ஹீரோயின் ராஜபாட்டையில் தெருக்கோடிக்கே ஓடிப் போன தீக்சாசேத்..! தெலுங்கு, தமிழ் இரண்டிலும் ஒரே நேரத்தில் படம் தயாராகி வருகிறதாம். தெலுங்குல இந்தப் படத்தோட பேரு Uu Kodathara? Ulikki Padathara?



இந்தப் படத்திற்காக ஆறரை கோடி செலவில் கந்தர்வ மஹால் என்னும் ஒரு பிரம்மாண்டமான அரண்மனையைக் கட்டியிருக்காங்க. 2 வருஷமா படத்தை எடுத்துக்கிட்டேயிருக்காங்களாம். தமிழுக்காக பிரபு, சுஹாசினி, மனோபாலா, இளவரசு, பாண்டியராஜன், சார்லி, பானுசந்தர், பிரபான்னு தெரிஞ்ச முகங்கள் நிறையவே இருக்காங்க..! இந்த நிகழ்ச்சில மனோஜின் பெஸ்ட் பிரண்ட் சிம்புவும் கலந்துக்கிட்டாரு..



விழால பேசின மனோபாலா பேசின ஒரு விஷயத்தைக் கேட்டு சிம்புவே சிரிச்சுட்டாரு..! “நான் மனோஜ்கிட்ட உங்களுக்கு தமிழ்ல நல்லா தெரிஞ்ச ஹீரோ யாருன்னு கேட்டேன்.. அவர் டக்குன்னு சொன்னார்.. சிம்புதான்.. சிம்பு எனக்கு ஸ்கூல் டேய்ஸ்ல இருந்தே பிரெண்ட்டுன்னாரு. இதுக்கு மேல நாம ஏதாவது பேச முடியுமா..? பெஸ்ட் ஆஃப் லக்குன்னு சொல்லிட்டேன்”னார் மனோபாலா..! இதுக்கும் மேல பேசாம இருக்கிறது நல்லதுதான..?

ஆனாலும் நிகழ்ச்சி முடிந்தவுடன் மனோபாலாவை கிட்டத்திட்ட இழுத்துக்கிட்டு வெளில ஓடினாரு சிம்பு.. என்ன நடந்துச்சோ..?

ராட்டினம்-சினிமா விமர்சனம்

20-05-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மெளனகுரு, வழக்கு எண் வரிசையில் தமிழ்ச் சினிமாவுக்கு பெருமை சேர்க்க வந்திருக்கும் படம் இது. காதலை அனுபவித்தவர்கள் அதன் சந்தோஷமான பக்கங்களை மட்டுமே நினைவு கூர்வார்கள். அதே சமயம் அக்காதலுக்குப் பின்புலத்தில் நடந்த எதிர்ப்புகளையும், அதன் வீச்சுக்களையும் காதலுக்குச் சம்பந்தப்படாதவர்களே பல காலம் மனதில் வைத்திருப்பார்கள். அப்படியொரு இழப்பினைச் சந்தித்த முதியவர் சிந்தும் கண்ணீர்க் கதைதான் இது..!

ஏதோ தூத்துக்குடி வட்டாரத்தையே சலித்து, துவைத்து தனது கேமிராவில் படமாக்கிய ஒரே காரணத்தினாலோ என்னவோ இப்படம் யதார்த்தவாத படமாகவோ, சிறந்த படமாகவோ எண்ணப்படவில்லை. இயக்கம்.. துளியும் யாரையும் நடிக்கவிடாமல் செய்து இயல்பாக இருப்பது போல நிறுத்தி வைத்து நம்மை கவர வைத்திருக்கிறாரே இயக்குநர்..! இதனால்தான்..!

ஜெயத்துக்கு தனத்தின் மீது காதல் வருவது சினிமாத்தனம். ஆனால் எப்படி இந்தக் காதல் ஏற்படுகிறது என்பதை இயக்குநர் காட்டியிருக்கும் விதம்தான் நம்பத் தகுந்தது..! யாரோ ஒருத்தி மீது மையல் கொண்டு அக்காதலுக்கு துணைக்கழைக்கும் நண்பனுக்கு உதவப் போய், அது திசை மாறி தனத்தின் மீதான காதல் ஜெயத்திற்கு ஏற்படுவதிலேயே சினிமாத்தனம் தோற்றுப் போய்விடுகிறது..!


ஜெயத்திற்கு அரசியல்வாதியான அண்ணன், வார்டு கவுன்சிலரான அண்ணி.. கடையைக் கவனிக்கும் அப்பா.. தனம் பக்கம் இதற்கு நேரெதிரான கூட்டம். தூத்துக்குடி துறைமுகத்தின் சேர்மன் அப்பா. தாய் மாமா அரசு வழக்கறிஞர்.. செல்வாக்கும், சொல்வாக்கும் ஒரு சேர அமைந்த குடும்பம்.. இந்தக் காதலினால் இக்குடும்பங்களில் ஏற்படும் இழப்புகளை மட்டுமே நம் மனதைத் தொடும்விதத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர்..!

ஐ.பி.எஸ். ஆகியே தீர வேண்டும் என்ற நினைவில் இருக்கும் தனத்தின் அண்ணனுக்கு அக்கனவு நிராசையாகிறது.. கட்சியில் தானும் பெரிய ஆளாகி தற்போதைய மாவட்டச் செயலாளரை அரசியலில் வெல்ல வேண்டும் என்று துடித்த ஜெயத்தின் அண்ணன் உயிர் துறக்கிறான்.. 1 வயது குழந்தையுடன் அண்ணி விதவையாகிறாள்.. கூட்டுக் குடும்பம். தலைப் பையன் தலையெடுத்து தன்னை தலை நிமிர நடக்க வைக்கிறான் என்ற பூரிப்பில் இருந்த ஜெயத்தின் அப்பா நிலைகுலைய.. ஜெயம்-தனத்தின் காதல் தற்காலிகமாக ஜெயிக்கிறது. ஆனால் இறுதியில்..?

எத்தனையோ காதல்கள்..? எத்தனையோ போராட்டங்கள்.. அடிதடிகள்.. வழக்குகள்.. இத்தனையையும் தாண்டி புதிய புதிய காதல்கள் முளைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஜெயித்த காதல்களை மட்டுமே நாம் பேசுகிறோம். தோல்வியில் முடிந்தவைகளைப் பற்றி நாம் யோசிப்பதில்லை. 

“அப்பவே ஒரு பொண்ணை லவ் பண்ணிக்கிட்டிருந்தான். அப்புறம் அங்கிட்டு, இங்கிட்டு பேசி அந்தப் பொண்ணை வெட்டிவிட்டுட்டு நம்ம பக்கம் ஒரு பொண்ணை பார்த்து கட்டி வைச்சோம்.. நல்லாத்தான இருக்கான் பையன்..” - இப்படித்தான் ஒரு காதலின் வரலாறு மூன்று வரிகளில் முடிக்கப்பட்டுவிடுகிறது.. ஆனால் இதன் பின்னணியில் ஒரு சிலர் இழந்த உயிர்கள், நிம்மதி, குடும்பம், உறவுகள் இதைப் பற்றி நமக்குத் தெரிவதில்லை. நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.. பார்த்திருக்கிறோம். ஆனால் உணர்ந்ததில்லை. அந்த உணர்வை இப்படத்தின் இறுதியில் மிக நுணுக்கமாக உணர்த்தியிருக்கிறார் இயக்குநர்.

இடைவேளையின்போது ஜெயமும், தனமும் திருச்செந்தூர் சென்றுவிட்டு திரும்பி வருகையில் போலீஸிடம் சிக்கி, அதன் விளைவாய் வெடிக்கும் பிரச்சினைகளுக்காக வைத்திருக்கும் டிவிஸ்ட் அந்த இடைவேளை உணர்வையே நீக்கிவிட்டது..! நட்ட நடுரோட்டில் படமாக்கப்பட்டிருக்கும் அக்காட்சி, நம் அடிவயிற்றிலும் அமிலத்தைக் கரைக்கத்தான் செய்தது..! 

இதன் தொடர்ச்சியாய் எழப் போகும் போராட்டங்கள் எப்படி அந்த இரண்டு குடும்பங்களின் நிம்மதியையும் குலைத்துப் போடுகிறது என்பதை நாம் ஏற்றுக் கொள்ளும்விதத்தில் மிக அருமையாய் செதுக்கியிருக்கிறார் இயக்குநர்..!

படத்தின் மிகப் பெரிய பலமே கிளைமாக்ஸ்தான்.. அதில் இயக்குநர் வைத்திருக்கும் அந்த 2 டிவிஸ்ட்டுகள் அசர வைத்துவிட்டது..! அதுவரையிலுமான போராட்டத்தின் ஒரு சின்ன சுவடே தெரியாத அளவுக்கு இரு தரப்புமே தங்களது புதிய வாழ்க்கையில் திளைத்திருக்க.. தனது மூத்தப் பிள்ளைக்காக சொட்டு கண்ணீரை அப்படியே சிதறவிடும் அந்தப் பெரியவரின்  தள்ளாடிய நடையும், உடல் குலுங்க முடியாத அடக்கத்துடனான கண்ணீரும்தான் படத்தின் முதுகெலும்பு.. மிக, மிக ரசித்தேன் இக்காட்சியை..!

ஜெயமாக லகுபரன்.. பேஸ்புக்கில் தனது புகைப்படத்தை போட்டு வைத்திருக்க.. அதனை பார்த்த மாத்திரத்தில் கிடைத்த வாய்ப்பு இது என்று இப்போதும் சொல்லிச் சொல்லிப் பூரிக்கிறார்..! அந்தந்த வயதில் இருப்பவர்களைத்தான் இதில் பயன்படுத்த வேண்டும் என்ற இயக்குநரின் ஆசையை இவரும் நிறைவேற்றியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்..!

பாடல்களின் மாண்டேஜ் காட்சிகள் முழுவதிலும் இவரது காதல் பீலிங்குகள் தூண்டிவிடுகின்றன..! காதலியைப் பார்க்க முடியாமல் இருக்கிறதே என்பதற்காக செல்போனில் பரவசத்துடன் பேசிவிட்டு அழுத்தமாக முத்தம் கொடுக்கும் காட்சியை திரும்பவும் ஒரு முறை பாருங்கள்..! அந்த வயது அப்படித்தான் என்று தோன்றும்..!

பிறந்தது தமிழகம் என்றாலும் வளர்ந்தது கேரளாவாம் ஹீரோயின் ஸ்வாதிக்கு..! பிளஸ் டூ படித்துக் கொண்டிருந்த பொண்ணுதான் வேண்டும் என்ற இயக்குநரின் தேடுதல் வேட்டையில் சிக்கியிருக்கிறார். சன்னமான குரலில் “என்னை லவ் பண்றேன்னு சொல்றாண்டி..” என்று தோழியிடம் முனங்கிவிட்டு பின்பு அவனைப் பார்க்க வேண்டி பரபரப்புடன் தனது கண்களை உருட்டும் காட்சியிலேயே லவ் பண்ணத் தோன்றுகிறது..! சிறந்த செலக்சன்..! அம்மா எலிசபெத்திடம் ஜெயத்தைத்தான் கல்யாணம் செஞ்சுக்குவேன் என்று சண்டையிடும் காட்சியில் மட்டுமே குரலை உயர்த்தியிருக்கிறார். ஆனால் யதார்த்தம்..! ச்சே போய்த் தொலை என்று நமக்கே சொல்லத் தோன்றுகிறது..!

இவர்கள் இருவருக்கும் இடையில் மிகச் சொற்பமான காட்சியில் வந்தாலும் தனது இறுக்கமான நடிப்பால் கவர்கிறார் ஜெயத்தின் அண்ணனாக நடித்திருக்கும் இயக்குநர் கே.எஸ்.தங்கசாமி..! அந்தக் கதாபாத்திரத்திற்கு வேறு யாரை நடிக்க வைத்திருந்தாலும் அதில் அவர்கள் தனியே தெரிய வாய்ப்புண்டு என்பதால் இவரே நடித்திருக்கிறாராம்..! ஒரு பக்கம் கட்சி, மாவட்டச் செயலாளர்.. எதிர்ப்புகள்.. உள்குத்துகள்.. இன்னொரு பக்கம் அப்பா, தம்பி, மனைவி, கட்சி வேலைகள்.. என்ற பரபரப்பில் ஜெயத்தை அடிக்கும் காட்சியில் அப்படியொரு இயல்பு.. அவரது அப்பாவை பார்த்தவுடன் அடிப்பதை நிறுத்திவிட்டு செல்வதும், தலைகுனிந்த நிலையிலேயே அப்பாவிடம் பேசும் காட்சிகளும் ஒரு குடும்பக் கதையை கண் முன்னே கொண்டு வந்து காட்டியிருக்கிறது..!

தூத்துக்குடியை துப்பரவாக தனது கேமிராவில் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்..! தூத்துக்குடி, திருச்செந்தூர், குலசேகரப்பட்டிணம் திருவிழா காட்சிகள் என்று அனைத்தையும் படமாக்கியதில் இவருடைய பங்களிப்பு மிக அதிகம்..! நகரத் தெருக்களை சினிமாவுக்காக பாலீஷ் போடாமல் இருப்பதை வைத்தே படமாக்கியிருக்கிறார்..! 

இன்னொரு பக்கம் படத்திற்கு பக்க பலமாக இருக்கிறார் இசையமைப்பாளர் மனுரமேசன்..! அசத்தும் அழகு பாடல் ஏற்கெனவே சூப்பர்ஹிட்டாகிவிட்டது..! கூடவே ஏ புள்ள.. என்ன புள்ள பாடலும், யாக்கை சுற்றும் பாடலும்கூட ஹிட்டாகிவிட்டன..! புதிய மெலடிகளை புது வடிவத்தில் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர்..! காதல் படங்களில் பாடல்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அதனை இப்படம் நூறு சதவிகிதம் நிறைவேற்றியிருக்கிறது..!

இப்படத்தின் எடிட்டரான கோபிகிருஷ்ணா தமிழின் மிக முக்கியமான எடிட்டராக முன்னேறிக் கொண்டே வருகிறார்.  இதற்கு முன் வழக்கு எண் படத்திற்கும் இவர்தான் எடிட்டர்..! ஸாங் மாண்டேஜ் சீன்களில் இவரது கை வண்ணம் பளிச்சிடுகிறது..! அசத்தும் அழகு பாடலை படமாக்கியவிதத்தைக் காட்டிலும், படத்தொகுப்பில் கோபிகிருஷ்ணா கலக்கியிருக்கிறார்.. வாழ்த்துகள்..! 

ஒரு காதலினால் எத்தனை கொலைகள்.. எத்தனை இழப்புகள்.. படத்தின் துவக்கத்தில் காட்டப்படும் 2 படுகொலைகளுக்குப் பின்னணி இதுதான் என்று இறுதியில் சொல்லப்படும் அந்த மெளனமான 5 நிமிட சாட்சியங்கள் தமிழகத்தின் எந்த ஊரிலும் நடந்தேறிய கதைதான்.. மறுக்கவே முடியாதது..!

தற்போது தமிழகத்தின் மத்தியப் பகுதி சரகத்தில் காவல்துறை ஐஜியாக இருக்கும் ஒருவரின் தம்பி மகள், ஒருவரை காதல் செய்து தொலைக்க.. அந்தக் காதலரின் குடும்பமே இந்த ஒரு காரணத்துக்காகவே சூறையாடப்பட்டது ஒரு காலத்தில் தமிழகப் பத்திரிகைகளை உலுக்கிய விஷயங்கள். காதலரின் குடும்பம் சிறைக்குள் போக.. காதலரின் மாமியார் போலீஸ் லாக்கப்பில் வைத்து சித்ரவதைப்படுத்தப்பட்டு மீடியாக்களின் பலத்த எதிர்ப்பினால் நடைப்பிணமாக வெளியில் கொண்டு வரப்பட்டார். ஆனால் அந்தக் காதலுக்கு அப்போதும் அந்த அம்மையார் ஆதரவளித்தார். கடைசியில் அது நீடிக்க முடியாமல் போனபோது, காதலரின் குடும்பமே சிதறியிருந்தது..!

கட்டிய தாலியை காதலன் கையாலேயே கழற்றி எறியும் அளவுக்கு டார்ச்சர் செய்து பிரிக்கப்பட்ட காதலர்களின் கதையும் நடந்தேறியிருக்கிறது..! காதலின் கையை மட்டும் தனியாக வெட்டி வீறாப்புடன் தெருவில் நடந்து வந்து போலீஸ் ஸ்டேஷனில் சரண்டரான காதலியின் அண்ணனையும் திருநெல்வேலியில் பார்க்க முடிந்திருக்கிறது..! இப்படி நாம் அன்றாடம் பார்த்து, பார்த்து பயத்தினால் சலித்துப் போயிருக்கும் இந்தக் காதலினால் இறுதியில் யாருக்குத்தான் என்ன பயன்..?

அவர் ஒரு பெரும் சினிமா தயாரிப்பாளர். அவரது மகள் தங்கள் வீட்டு கார் டிரைவரை காதலித்தார். குடும்பம் கோபப்பட்டது. டிரைவரை போலீஸில் சிக்க வைத்தது.. தனது தந்தையின் பண பலத்தை வைத்து காதலரை கொன்றுவிடுவார்களோ என்று பயந்த காதலி, காதலனை அழைத்துக் கொண்டு அவரது சொந்த ஊருக்கு போய் தாலி கட்டிக் கொண்டார். கோபத்தின் உச்சிக்கே போன அந்தத் தயாரிப்பாளரின் மனைவி, அடியாட்களை வைத்து மகளது வீட்டிற்கு போய் நாலு வெட்டு, ஆறு குத்துக்களை வீசி மகளை கடத்திச் சென்றார்..!

சாதாரண சைக்கிள் கடை வைத்து இனிமேல் ராஜ வாழ்க்கை வாழலாம் என்று நினைத்த அந்த காதலர் இந்தத் தாக்குதலில் ஊனமானதுதான் மிச்சம். காதலி திரும்ப வரவில்லை. அவர் வேறொரு வாழ்க்கையில் நுழைந்து இப்போது நிம்மதியாக இருக்கிறார்.. காதலர் தனது வாழ்க்கையையும் தொலைத்து, குடும்பத்தாரின் ஆதரவையும் இழந்து தவித்துப் போயிருக்கிறார்..!

பள்ளி, மாணவ பருவக் காதல்களை உண்மைக் காதல் இல்லை என்கிறார்கள். அதுவொரு இனக்கவர்ச்சி.. பருவ ஈர்ப்பு என்று மட்டுமே சொல்கிறார்கள். அப்போதைய காதலர்களில் பலரும் பிற்காலத்தில் தங்களது காதலைத் துறந்து வெளியேறிக் கொண்டிருப்பதை பார்க்கும்போது இது சரிதானோ என்று தோன்றுகிறது..! ஆனாலும் இந்தக் காதல் தலைமுறை, தலைமுறையாகத் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது..!

சினிமாதான் எல்லாத்துக்கும் காரணம் என்று அனைவருமே குற்றம்சாட்டுவதை புறக்கணித்துவிட முடியாது. சினிமாவும் இதில் ஒரு காரணமாக இருக்கலாம்..! ஆனாலும் உண்மைக் காதல்களுக்கு தூண்டுதலாக அவர்களிடையே இருக்கும் புரிதல் மட்டுமே காரணமாக இருக்க முடியும்.. வழிமுறை வேண்டுமானால் சினிமா கற்றுக் கொடுத்தமையாக இருக்கலாம்..! இது போன்ற படங்களை அந்தப் பாவத்திற்கு பிராயச்சித்தமாக எடுத்துக் கொள்ளலாம்..!

உங்களது வாழ்விலும் இது போன்ற காதல்களை, காதலர்களை, இழப்புகளை நீங்கள் சந்தித்திருந்தால்.. கேட்டிருந்தால்.. பார்த்திருந்தால்.. இந்த படம் அவ்வளவு சீக்கிரம் உங்கள் மனதைவிட்டு நீங்காது.. ராட்டினமாக உங்களது மனதை சுற்ற வைக்கும் என்பது உறுதி..!   

ராட்டினம்-அவசியம் பார்க்க வேண்டிய படம்..!
   

கலகலப்பு-சினிமா விமர்சனம்

13-05-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படம் 2009-ம் ஆண்டு வெளியான SOUL KITCHEN என்னும் ஜெர்மானிய திரைப்படத்தின் தமிழ் ரீமேக். இது குறித்து மேலும் அறிய இங்கே செல்லவும்.


அக்மார்க் சுந்தர்.சி.யின் படம்தான். படத்தின் தலைப்புக்கேற்ப கலகலப்பான படம்தான். சந்தேகமில்லை. லாஜிக்கையெல்லாம் பார்க்காமல் இரண்டரை மணி நேரத்தில் முக்கால்வாசி நேரம் சிரித்துவிட்டு வரலாம்..!


கும்பகோணத்தில் 3 தலைமுறையாக நடத்தப்பட்டு தற்போது மூடுவிழா காணும் நிலையில் இருக்கும் மசாலா கபே என்ற ஹோட்டலை நடத்தி வருகிறார் விமல். கொஞ்சம் நேர்மையாளன்.. இவரது தம்பி சிவா. அண்ணனுக்கு நேரெதிர்.  அந்த ஹோட்டலில் சுகாதாரமில்லை என்று சொல்லி நோட்டீஸ் அனுப்பும் நகராட்சி ஹெல்த் இன்ஸ்பெக்டர் அஞ்சலியை முதலில் ஜொள்ளுவிட்டு, பின்பு லொள்ளு செய்து, கரெக்ட் செய்கிறார் விமல். அப்போதுதான் ஜெயிலுக்கு இன்பச் சுற்றுலா சென்றுவிட்டு அடுத்த டூட்டிக்காக வெளியில் வந்திருக்கும் சிவா, நேரே ஹோட்டலுக்கு வர, அங்கேயிருக்கும் தலைமை சமையற்காரர் வி.எஸ்.ராகவனின் பேத்தி ஓவியாவை சைட் அடித்து பிக்கப் செய்கிறார்..!

விமலுக்கு கடன் கொடுத்தே ஓய்ஞ்சு போயிருக்கும் இளவரசு ஒரு பக்கம் விமலை துரத்திக் கொண்டிருக்கிறார். ஹோட்டல் இருக்கும் இடத்தை விலைக்குக் கேட்கும் நகைக்கடைக்காரர், லோக்கல் இன்ஸ்பெக்டர் மூலம் காய் நகர்த்துகிறார். ஊரில் இருக்கும் தனது தாத்தா மண்டையைப் போடும் சூழலில் இருப்பதால் தனக்குத் திருமண ஏற்பாடுகள் நடப்பதால் உடனே வந்து என்னை தள்ளிக் கொண்டு போகும்படி அஞ்சலி விமலை அழைக்கிறார்.

அஞ்சலியை கட்ட நினைக்கும் முறைமாமன் சந்தானத்தை முதலில் காக்கா பிடித்து, பின்பு உண்மை தெரிந்து தப்பிக்க முயன்று முடியாமல், தாத்தாவும் செத்துப் போக நொந்து போய் ஊர் திரும்புகிறார் விமல். இந்த இடைவெளியில் லோக்கல் இன்ஸ்பெக்டர் மங்காத்தா ஆட்டத்தில் ஹோட்டல் இடத்தை சிவாவிடம் இருந்து தட்டிப் பறிக்கிறார். 

இதற்கிடையில் பஞ்சு சிவா, தனது நகைக்கடையில் இருந்த வைரங்களை சேப்டியாக பத்திரப்படுத்திவிட்டு கடையை கொளுத்திவிடுகிறார். இன்சூரன்ஸ் கிடைக்கும்வரையில் பணம் பத்திரமாக இருக்கட்டுமே என்று சொல்லி தனது வீணாப் போன மச்சினனிடம் கொடுத்து கும்பகோணத்துக்கு அனுப்ப, அந்த வைரம் அடங்கிய செல்போன் ஒரு கட்டத்தில் விமல்-சிவாவிடம் வந்து மாட்டுகிறது. இந்த விஷயமும் இன்ஸ்பெக்டருக்கு தெரிய வர அவரும் வைரத்தை ஆட்டையப் போட நினைக்கிறார்.  இரட்டையர்கள் ஹோட்டலை மீட்டார்களா..? வைரத்தின் கதி என்ன என்பதைத்தான் சுவையான திரைக்கதையின் மூலமாக போரடிக்காமல் கொண்டு போயிருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி. 

முதல் சில நிமிடங்கள்வரையிலும் படம் மெதுவாகத்தான் நகர்கிறது.. அதிலும் ஓவியாவின் அறிமுகமும் சப்பென்று இருக்க.. என்னடா இது என்று முணுமுணுக்க வைத்தது. மிர்ச்சி சிவாவின் என்ட்ரியும், அதனைத் தொடர்ந்த காட்சியிலேயே இளவரசுவை போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் மாட்டிவிடும் காட்சியில் தொடங்கும் கலாட்டா கலகலப்பு.. இறுதிவரையில் அவ்வப்போது வந்து, வந்து போய்க் கொண்டு படத்தை நிறைவு செய்துவிட்டது..!

விமலுக்கு வழக்கம்போல இயல்பான நடிப்புதான்..! உணர்ச்சிகரமாக இவர் நடிக்க வாய்ப்பே இல்லை என்னும்போது இது போன்று நடிப்பு தேவையில்லாத கேரக்டரில் வெளுத்துக் கட்டிவிட்டு போய்விடுவதே சாலச் சிறந்தது..! விமலுக்கு இருக்கும் இன்னொரு பிளஸ் பாயிண்ட் சாதாரணமாகவே காமெடி டைமிங்சென்ஸ் மிகச் சரியாக வருகிறது.. இதையே பாலோ செய்துவிட்டு போக வேண்டியதுதான்..!

மிர்ச்சி சிவாவின் அட்டூழியம்தான் சந்தானம் வரும்வரையிலும் படத்தில் ஒன்ற வைத்தது..! வந்த முதல் நாளே ஓவியாவுக்கு ரூட்டு விடுவதில் துவங்கி, ஓவியாவுக்காக பர்தா அணிந்து கடையில் புகுந்து ஆட்டையைப் போடும் காட்சி, ஹோட்டலை நவீனப்படுத்தப் போவதாகச் சொல்லி பழமையான உணவு வகைகளுக்காக கடையை கொள்ளையடிப்பது.. இதற்கெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் அவர் பேசும் டைமிங் டயலாக்குகள் குபீர் சிரிப்பு ரகம்..!

இருந்தாலும் பல இடங்களிலும் இருந்த இரட்டை அர்த்த ஆபாச வசனங்களை முற்றிலும் தவிர்த்திருக்க வேண்டும். இந்தப் படத்தில் அவைகள் இல்லாமல் இருந்திருந்தாலும் படம் நன்றாகத்தான் இருந்திருக்கும்..! அதிலும் ஓவியாவிடம் சைஸ் கேட்கும் காட்சி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இயக்குநர் சுந்தர்.சி.க்கும் 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இது போன்ற காட்சியமைப்புகளை வைப்பதற்கு முன்பு அதனை அவர் சற்று யோசித்திருக்கலாம்..! பேட் டேஸ்ட் சுந்தர் ஸார்..!

ஓவியாவும், அஞ்சலியும் போட்டி போட்டுக் கொண்டு நடித்தும் இருக்கிறார்கள். 'காட்டி'யும் இருக்கிறார்கள்..! இரண்டு நடிகைகள் ஒரு படத்தில் நடிக்கும்போது, இப்படி, அப்படி நடிக்க வைக்க சித்து விளையாட்டை விளையாடுவார்கள் படக் குழுவினர். ஆனால் அப்படியெதுவும் இல்லாமலேயே இந்த இரண்டு தாரகைகளுமே அந்தப் பாடல் காட்சியின் போது அணிந்திருந்த காஸ்ட்யூம்ஸ்களை தாங்களேதான் தேர்வு செய்தார்களாம்.. இனிமேல் நாம் பேசி பயனில்லை..! இது அவர்களின் பிஸினஸ் பிரச்சினை..! எப்படியாவது டாப் லெவலுக்கு சம்பளத்தை லட்சங்களில் பெற வேண்டும் என்ற அவர்களது ஆசை நிறைவேற வாழ்த்துவோம்..!

ஓவியாவைவிடவும் அஞ்சலி மிகவும் ரசிக்க வைக்கிறார். தான் யார் என்பதை சொல்லாமலேயே விமலிடம் சிக்கிக் கொண்டு தப்பிப்பது.. பின்பு விமலை மடக்குவது என்ற காட்சிகளில் அவரது பார்வை ஒன்று போதும்.. கவிழ்வதற்கு.. விமல் கவிழ்ந்ததில் தப்பில்லை.. சரியான கேரக்டர் ஸ்கெட்ச்.. இதற்கேற்றாற்போல் நடிகர், நடிகைகளை செலக்ட் செய்து ரசிகர்களுக்கு கிக் ஏற்றியிருக்கிறார்கள்..!

இடைவேளைக்குப் பின்பு ஆட்டத்தில் குதிக்கும் சந்தானத்தின் அலப்பறை இறுதிவரையிலும் சக்கை போடு போடுகிறது..! அவருடைய உதவியாளர்களுக்கு வைத்திருக்கும் பட்டப் பெயர்களும்.. சண்டைக்குக் கிளம்பும்போது மாத்திரை போட்டுட்டு வரவா என்று சிரியா மூஞ்சிகளையும் சிரிக்க வைத்துவிடும் டயலாக்குகளும்.. மனோபாலாவுடன் அவர் பேசும் எகத்தாள பேச்சுக்களும் செம.. செம..!

அஞ்சலி கை நழுவிய பின்பு அவர் சொல்லும் அந்த மொட்டை மாடி டயலாக் ஏ ஒன்..! படத்தின் டிரெயிலரிலேயே அனைவராலும் ரசிக்கப்பட்டது..! ஆனாலும் இவர் இப்படி வாயை வைத்தே எத்தனை நாளைக்கு குப்பை கொட்ட முடியும் என்பதும் தெரியவில்லை.. வைகைப்புயலின் நீண்ட மெளனத்தில் முத்துக் குளிப்பது சந்தானம் மட்டுமே..! வாழ்க..!

பஞ்சு சுப்புவின் ஆட்கள் இன்னொரு பக்கம் விமல் அண்ட் கோ-வை துரத்த.. இந்த இம்சை தாங்க முடியாமல், போலீஸையும் உள்ளே இழுத்துப் போட்டுவிட்டு திரைக்கதையில் பரமபதம் ஆடியிருக்கிறார்கள்.. ஸ்டோரி டிஸ்கஷன் டீமுக்கு எனது பாராட்டுக்கள்..!

பாடல்களில் சந்தேகமே இல்லாமல் இவளுக இம்சை தாங்க முடியலை டாப்புதான்..! ஆனால் பாடல் காட்சிகளே இம்சையாக இருப்பதுதான் கொடுமை..! எப்படியோ இளசுகளை சிக்க வைத்தாகிவிட்டது.. வசூலை அள்ளிவிடுவார்கள்..!

யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவில் இப்படியொரு மோசம்  இருக்கும் என்று நான் நினைக்கவில்லை..! என்னதான் டைட் ஷெட்யூல் என்றாலும் அதற்காக நைட் எபெக்ட் காட்சிகளை இப்படி பகலில் எடுத்து லைட்டை குறைத்து ஷோ காட்டுவது..? எத்தனை படங்களில் பணியாற்றியிருக்கிறார்கள்..? கொஞ்சமாவது யோசித்திருக்க வேண்டாமா..? ஒரே நாள் இரவில் அனைத்தையும் எடுத்திருக்கலாமே..? ஆனாலும் அஞ்சலி தப்பிக்க நினைக்கும் காட்சியும், அதைத் தொடர்ந்து கார் சேஸிங் காட்சிகளும் நல்ல நகைச்சுவையைத் தந்தன..!

பொதுவாகவே சுந்தர் சியின் படங்களில் ஒரே வீட்டில் பலரும் கைகளில் தடியுடன் சுற்றி சுற்றி வருவார்கள். இதில் கொஞ்சம் வித்தியாசமாக காரில் பவனி வர வைத்திருக்கிறார்.. வெல்டன்..!

சுந்தர் சி.க்கு இது 25-வது படம். வாழ்த்துகள்.. நான் முன்பே குறிப்பிட்ட அந்த ஆபாச வசனங்களை மட்டும் நீக்கிவிட்டு பார்த்தால், இது நல்ல காமெடி படம்தான்..! சந்தேகமேயில்லை..! சுந்தர் சி.க்கு இப்படம் பொருளாதார ரீதியாகவும், கோடியில் பணத்தைச் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. வெறுமனே "யு" சர்டிபிகேட் மட்டும் வாங்கியிருந்தால், கூடுதல் வரியையும் சேர்த்து சம்பாதித்திருக்கலாம்..! ம்.. போகட்டும்.. அடுத்தப் படத்தில் பார்த்துக் கொள்ளலாம்..!

சுந்தர் சி. நடிக்கப் போகாமல், இது போன்று திரும்பவும் படங்களை இயக்கத் துவங்கினால், காமெடியை விரும்பும் ரசிகர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்..!

கலகலப்பு உண்மையாகவே கலகலப்புதான்..! 



வழக்கு எண் 18/9 - சினிமா விமர்சனம்

06-05-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சென்ற மாதம் நடந்த வழக்கு எண் 18/9 படத்தின் நிகழ்ச்சியில், “கல்லூரி படத்திற்குப் பின் ஏன் இத்தனை ஆண்டு கால இடைவெளி..?” என்று இயக்குநர் பாலாஜி சக்திவேலிடம் கேட்டதற்கு “எனக்குள்ள எப்போ கதை ஓடுதோ.. எப்போ எடு்க்கலாம்னு நினைக்கிறேனோ அப்பத்தான் என்னால படம் பண்ண முடியும்..! வருஷத்துக்கு ஒரு படம்ன்னு டைம் பிக்ஸ் பண்ணிட்டு என்னால படம் செய்ய முடியாது.. எனக்கு படத்தின் தரம்தான் முக்கியம்..” என்றார். இதனை இப்படத்தில் நிரூபித்திருக்கிறார்..!

படத்தின் முதல் பிரதியைப் பார்த்துவிட்டு பிரமாதமாக இருக்கிறதே என்ற திகைப்பையும், ஆச்சரியத்தையும் கேட்டவர்களிடத்திலெல்லாம் பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர் லிங்குசாமி, யு டிவி நிறுவனத்திடமிருந்து விநியோக உரிமையையும் ஒரு நம்பிக்கையில் தானே திரும்பவும் பெற்றுக் கொண்டார்..! இதற்கான விலை லிங்குசாமிக்குக் கண்டிப்பாகக் கிடைக்கப் பெற்றாக வேண்டும்..!

நாம் அன்றாட வாழ்வில் சந்தித்த ஒரு பிரச்சினையைத்தான் இங்கே புள்ளி வைத்து, கோலம் போட்டு அதில் கலர் பவுடர்களையும் தூவி, அழகுபடுத்திக் காண்பித்திருக்கிறார். நாம்தான் இன்னமும் இதனை கவனிக்காமல் இருந்திருக்கிறோம் என்பதை நமக்கே உணர்த்தியிருக்கிறார் இயக்குநர்..! விஞ்ஞான தொழில் நுட்பத்தின் வளர்ச்சியின் ஒரு பகுதி, குடும்ப உறவுகளையும் பாழாக்க ஆரம்பித்திருக்கிறது என்பதை இணையத்தை லேசாகப் புரட்டினாலே தெரிகிறது. அதில் இருந்து ஒரு பகுதியை நமக்கு எடுத்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர்..!


தீ விபத்துதான் என்பதுபோலவே நாம் எண்ணும் அளவுக்கு துவக்கக் காட்சியை நகர்த்தி, பிற்பாதியில் அது ஆசீட் வீச்சு என்பதை இயக்குநர் உடைக்கும்போது நம் மனசும் சேர்ந்தே உடைகிறது.. சினிமா பாணியில் அட என்னவொரு டிவிஸ்ட் என்று சொல்லவும் வைக்கிறது..!

இந்த விபத்தை விசாரணை செய்யும் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரவேலுவின் பார்வையில் இதன் பின்பு விரியும் கதைக்குள் ரோட்டோரக் கடையில் வேலை செய்யும் அனாதை வேலு நுழைந்து, தனது எட்டு ஜென்ம சோகக் கதையைச் சொல்லிவிட்டு தனது முறைக்காகக் காத்திருக்கிறான். இவனைத் தொடர்ந்து வரும் ஆர்த்தி, தனது தரப்பான விஷயங்களைச் சொல்லும்போது முழுமையான கதையாக அது உருவெடுக்கிறது..!

வீட்டு வேலை செய்யும் ஜோதியை பல அசந்தர்ப்பமான சூழல்களில் சந்தித்து அவளது வெறுப்பை சம்பாதித்து வைத்திருக்கிறான் வேலு. ஜோதி வேலை செய்யும் வீட்டுப் பெண்ணான பிளஸ் டூ படிக்கும் ஆர்த்தி, தன்னுடன் ஒரேயொரு எண்ணத்துடன் பழகும் தினேஷின் நடவடிக்கையால் தடம் புரளப் போகும் தனது வாழ்க்கையை ஒரு நாளில், ஒரு நிமிடத்தில் காப்பாற்றிக் கொள்கிறாள். ஆனால் அதன் விளைவை அனுபவிக்கிறாள் ஜோதி. இந்த ஜோதி மேல் வைத்திருக்கும் தனது உண்மைக் காதலுக்காக செய்யாத தப்புக்கு தண்டனையை ஏற்றுக் கொண்டு சிறை செல்கிறான் வேலு. உண்மையை ஜோதி உணர்ந்தாளா என்பதும், வேலு சிறையிலிருந்து மீண்டானா என்பதும், அரசியல் சட்டத்தின் தராசு என்ன ஆனது என்பதுதான் மிச்சக் கதை..! 

முற்றிலும் புதுமுகங்களை வைத்து, கேனன் 5-டி கேமிராவில், குறைந்தபட்ச செலவில், அதிகம் சென்னைக்குள்ளேயே ஷூட்டிங்கை வைத்துக் கொண்டு தயாரிப்பாளருக்கு எந்தவொரு சிரமத்தையும் தராமல் ஒரு உலக சினிமாவைப் படைத்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி சக்திவேல். கை வலிக்கும்வரையிலும் தட்டலாம்..!

என்னை ஆச்சரியப்படுத்துவது திரைக்கதைதான்.. வேலு இன்ஸ்பெக்டர் குமாரவேலுவிடம் சொல்லும் கதையை ஒட்டியே அடுத்து ஆர்த்தியும் வருகிறாள். வேலு-ஜோதியின் ஒவ்வொரு சந்திப்புகளிலும் ஆர்த்தி-தினேஷின் பழக்கமும் தொடர்கிறது..! எந்தவிதத்திலும் இரண்டுமே திரைக்கதையை விட்டுத் தாண்டவில்லை என்பது இப்படத்தில் மட்டுமே நான் பார்த்த ஒரு புதுமை..! 

இன்ஸ்பெக்டர் குமாரவேலாக நடித்த முத்துராமன் எந்த இடத்திலும் நடிக்கவில்லை. அப்படியே இயல்பு நிலைமையை, யதார்த்த வாழ்க்கையில் நடந்து காட்டியிருக்கிறார். பாலாஜி சக்திவேலின் மிக நெருங்கிய நண்பரான முத்துராமன் திண்டுக்கல்லை சேர்ந்தவர். சமூக, தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகிறார்..! இயக்குநரின் நட்பால் இறுகிப் போய் இப்படத்தில் பணியாற்றியிருக்கிறார்..!

வேலுவிடம் அதட்டல் தொனியில் பேச ஆரம்பித்து “உன் கதையைக் கேட்டா எனக்கே ரொம்ப பாவமா இருக்குடா..” என்றெல்லாம் அதே உணர்ச்சியோடு பேசுவதும்.. ஆர்த்தியிடம் “விஷயம் இப்படிப் போகுதா..?” என்று போட்டு வாங்கி முழுதையும் வெளிக்கொணரும்வரையிலும், அவரது வில்லத்தனத்தை அறிய முடியவில்லை. இந்த இயக்கத்திற்கும், அவரது நடிப்பிற்கும் பாராட்டுக்கள்..!

“மந்திரிகிட்ட சொல்லி எஃப்.ஐ.ஆரை உடைச்சிட்டு போயிட்டா அப்புறம் நாம எதுக்கு இருக்கோம்..? நமக்கு என்ன லாபம்..?” என்று ஆரம்பித்து, எந்தவிதப் பதட்டமும் இல்லாமல் பேப்பர் படித்துக் கொண்டிருப்பது.. வேலுவிடம் சாந்த சொரூபியாக பேசி ஒரே நிமிடத்தில் ஒரு நல்லவனை தியாகியாக்குவது.. குற்றவாளியாக்குவது என்று சகலத்திலும் இதன் பின்பு குமாரவேலுவின் ராஜ்ஜியம்தான்..

“தாயோளிகளா..!” என்ற அந்த வார்த்தையை சென்சார் போர்டிலேயே வெகுவாக ரசித்தார்களாம்.. இரண்டு முறை வரும் அந்த வார்த்தையைக்கூட கட் செ்யய மனசில்லாமல் விட்டிருக்கிறார் சென்சார் உறுப்பினர்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்..! பலத்த கை தட்டல் இந்த ஒரு காட்சிக்குக் கிடைத்ததை வைத்தே இப்படத்தின் முடிவை முதல் காட்சியிலேயே அறிந்து கொண்டனர் படக் குழுவினர்..! திரையிட்ட அத்தனை ஊர்களிலும் இந்த ஒரு காட்சிக்கு அவ்வளவு வரவேற்பாம்..! 


வேலுவாக நடித்த ஸ்ரீ, அக்மார்க் ஹை சொஸைட்டி கேரளத்து பையன்..! இது மாதிரியான ஒரு கேரக்டர் ஸ்கெட்ச்சை தன் வாழ்க்கையில் இதுவரையில் பார்த்ததே இல்லை என்றார்..!  இன்ஸ்பெக்டரிடம் கை கட்டி நின்று கதையைத் துவக்குவதில் இருந்து ஜெயில் கம்பிக்குள் நின்றபடியே ஜோதியை பார்த்து உருகும், மருகும்வரையிலும் ஒரு காதலனாக தனது முத்திரையைப் பதித்திருக்கிறார்..!

இவருக்கு நேரெதிரான தினேஷ் கேரக்டரில் நடித்த மிதுனும் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவராகவே இருக்கிறார். எடுத்த வீடியோவை பள்ளியில் கொண்டு போய் காட்டும்போது அவருடைய வெற்றிப் புன்னகையை பார்க்க வேண்டுமே..! பீச்சில் ஆர்த்திக்குத் தெரியாமல் படம் பிடிக்கும் வில்லத்தனமும், அதில் அவர் காட்டும் நடிப்பும் அந்த வயதுக்கே உரித்தான சென்ஸ்.. இதனை பக்குவமாக கையாண்டிருக்கிறார் இயக்குநர். 

ஒரு நவநாகரிகப் பெண்ணை சேரிப் பெண்ணாக மாற்றியிருந்தும் எதுவும் தெரியவில்லை ஜோதியாக நடித்திருக்கும் ஊர்மிளாவிடம். ரோஸியிடம் வேலு பணம் கொடுப்பதை பார்ப்பது.. வேலு தன் மீது மோதுவதைப் போல் வருவதைப் பார்த்து தவறாகப் புரிந்து கொள்வது. வேலுவால் கடையில் கிண்டல் செய்யப்படுவது.. அம்மாவை அழைத்துப் போய் உடன் சண்டையிடுவது என்று துவங்கி ஒவ்வொரு காட்சியிலும் தனது அமைதியையே நடிப்பாகக் காட்டியிருக்கிறார். இறுதிக் காட்சியில் முகச் சீலை விளக்கி அந்தக் கொடூரத்தைக் காட்டும் காட்சியில் மட்டுமே அழகாக மிச்சமிருந்த அந்த ஒரு கண்ணும் நடிப்பைக் காட்டியிருக்கிறது..!

ஜோதியைவிடவும் ஸ்கோர் செய்திருப்பது ஆர்த்தியாக நடித்திருக்கும் மனிஷாதான்..! 18 வயதுக்கே உரித்தான அந்த தடுமாற்றத்தை தனது நடிப்பில் அவ்வப்போது காட்டும்போது நமக்கே பதறுகிறது..! காபி டேயில் மிதுனின் செல்போனில் இருக்கும் அடல்ட்ஸ் ஒன்லி ஜோக்கை பார்த்துவிட்டு அடக்க மாட்டாமல் சிரிப்பது.. அதற்கு வேறொரு விளக்கமளித்தாலும், பின்பு மீண்டும் சிரிப்பது.. “போன் செய்து ஸாரியாவது சொல்லு..” என்ற தோழிகளின் நச்சரிப்பை எதிர்கொள்ளும்விதம்.. ரிசார்ட்டில் மிதுனைப் பற்றி அறியாமல் அதே தோழியிடம் அவனைப் பற்றிப் புகழ்ந்து பேசுவது.. அடுத்த 3 நிமிடத்தில் உண்மை தெரிந்து வியர்த்துப் போவதாக.. நம்ம வீட்டுப் பொண்ணுக்கு இப்படியொரு நிலைமை நடந்திருந்தால் நாம் எப்படி நிலைகுலைவோமே அந்த நிலைமைக்கு நம்மை வியக்க வைத்திருக்கிறார் மனிஷா.. வாழ்த்துகள் அனைவருக்கும்..!


இவர்களையும் தாண்டி தனது இயல்பான நடிப்பால் அனைவரையும் கவர்கிறான் சின்னச்சாமி. தொலைந்து போய்க் கொண்டிருக்கும் கூத்துக் கலையைப் பிரதிபலிக்கும்வகையில் அவனது வாழ்க்கையின் இருண்ட பக்கத்தை எடுத்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர். பெண் வேடமிட்டு ஆடவும், நடிக்கவும் செய்யும் சின்னச்சாமி, சினிமா ஆசையால் நடிக்க விரும்பி சென்னைக்கு வந்த கதையையும், அதன் தொடர்ச்சியும் இப்படத்திற்கு மிக முக்கிய உதவியாக இருந்திருக்கிறது..! வேலுவை விடவும் பேசத் தெரிந்து, கடைக்காரரிடம் முறைப்புக் காட்டிவிட்டு பின்பு வேலுவை தனியே சந்தித்து மன்னிப்பு கேட்கும் பக்குவமே நாடகக் கலையை காட்டிவிடுகிறது..! இந்தப் பையன் மூலமாகவே படம் முடியும் சூழல் உருவாவது எதிர்பாராதது..! 

வனயுத்தம் போன்ற பெரிய படங்களுக்கே தற்போது ஒளிப்பதிவு செய்து வரும் தோழர் விஜய் மில்டன் இந்த டிஜிட்டல் படத்திற்கும் சம்மதித்து படம் செய்தது ஏன் என்று கேட்டதற்கு, “எனக்கு படத்தின் கதையும், மேக்கிங்கும்தான் முக்கியம்.. நல்ல படத்துல நான் வொர்க் பண்ணியிருக்கணும். இதுதான் எனக்கு வேணும்..” என்றார். மயக்க நிலைமைக்குப் போய்க் கொண்டிருக்கும் நிலைமையில் வேலு தள்ளாடி நடந்து வருவதை படமெடுத்திருக்கும்விதத்தைப் பார்க்கின்றபோது கை தட்டத் தோன்றுகிறது..! இவருக்கும் ஒரு சல்யூட்..!

படத்தொகுப்பை கையாண்டிருக்கிறார் கோபிகிருஷ்ணா. புதியவர். வித்தகர் கோலாபாஸ்கரின் சீடர். கச்சிதமான பாணியில் கொஞ்சமும் வித்தியாசம் தெரியாமல் கார்-சைக்கிள் மோதலைக்கூட மோதல் நடந்ததா என்றுகூட தெரியாத அளவுக்குக் காட்சியை நகர்த்தியிருக்கிறார். அடுத்து வரும் ராட்டினம் படத்திற்கும் இவர்தான் படத்தொகுப்பாளர்..! சிலரது வெற்றியை அவர்களது படைப்புகளே சொல்லும்..!

இறுதிக் காட்சியில் அந்த ஒற்றை பாடலே பாதி உணர்ச்சியைத் தூண்டி விடுகிறது..! நா.முத்துக்குமார் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு எழுதிய இந்தப் பாடல்தான் படத்தின் கிளாஸ்..! ஆம்புலன்ஸ் வேனுக்கு பின்பான காட்சிகளில் துவங்கி வேலு இன்ஸ்பெக்டரின் முன்னால் வந்து நிற்கும்வரையிலும் பிரசன்னாவின் பின்னணி இசைதான் பெரிய பலம்..!

பள்ளி நடத்தும் கோடீஸ்வர மிதுனின் அம்மா.. அவளுக்கும், மிதுனுக்கும் இடையில் இருக்கும் நட்பு, பூசல்.. வளர்ப்பு முறை.. முகம் மறைக்கப்பட்ட அமைச்சர், அவரது என்ஜாய்மெண்ட் என்று பல விஷயங்களையும் சட் சட்டென்று தொட்டுவிட்டுப் போகும் இயக்குநர் எதையும் மிதமிஞ்சிய கற்பனையாகக் காட்டிவிடவில்லை. நடப்பதுதான்.. நடந்ததுதான்..!

வேலுவின் சொந்தக் கதை சோகத்திலும் பல கிளைக் கதைகளாக விரிந்திருக்கும் பணம், கடன், கந்துவட்டி, பொருளாதார நசிவு, இடம் பெயர்தல், குழந்தைத் தொழிலாளர் என்று பல விஷயங்களையும் விவசாய வீழ்ச்சி என்ற ஒரு காரணியால் நிகழ்கிறது என்பதை தொடர்ச்சியாய் சொல்லியிருக்கும் இயக்குநருக்கு இன்னொரு ஷொட்டு..! இந்தக் காட்சிகள் தேவையா என்றெல்லாம் நாம் நினைக்கலாம். ஆனால் இப்படியொரு சோக வாழ்க்கையை அனுபவித்தவனுக்கு மேலும் ஒரு சோகத்தை அவன் ஏழை என்ற ஒரே காரணத்திற்காக வழங்கப்படுகிறது என்பதைத்தான் இயக்குநர் சொல்ல வந்திருக்கிறார். இதனை நாம் இப்படி புரிந்து கொண்டால் போதும்..!

சில ஆண்டுகளுக்கு முன்பாக தென் சென்னையில் இருக்கும் ஒரு பிரபல தியேட்டர் உரிமையாளரின் பையன் பள்ளியில் தன்னுடன் படித்த மாணவிக்கு செய்த கொடூரத்திற்கு வேறொரு ஏழை பையன் பலிகடாவாகி பெரும் பொருட்செலவில் இந்தத் திரை நாடகம் தயாராகி முடிந்தது..! இதனைச் செய்து முடித்த உத்தம ஐ.பி.எஸ். ஒரு காலத்தில் காவல்துறையை ஆட்டிப் படைக்கும் நிலைமைக்குப் போய் இன்றைக்கு ஆட்சி மாறி, காட்சிகள் திரும்பியதும் அரசுப் பேருந்து நிலையப் பணிமனையில் தலைமை விஜிலென்ஸ் ஆபீஸராக குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறார். விரைவில் மீண்டும் ஒரு நல்ல நிலைமைக்கு வந்து அரசு பதக்கங்களுடனும், விருதுகளுடனும் ஓய்வு பெறுவார். வாழ்க இந்திய ஜனநாயகம்.

3 ஆண்டுகளுக்கு முன்பாக நுங்கம்பாக்கம் பகுதியில் லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்டிச் சென்ற கோடீஸ்வரப் புள்ளி ஒருவரின் பள்ளியில் படிக்கும் மகன், தனது கார் வேகத்தில் சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த 2 பேரின் மீது மோதி அவர்களை அந்த இடத்திலேயே பரலோகத்திற்கு அனுப்பி வைத்தான். கோர்ட், கேஸ், ஜாமீன் என்றெல்லாம் எதற்கும் போகாமல் அப்போதைய மின்துறையின் உதவியோடு கொல்கத்தாவுக்கு ஸ்கூல் படிப்பையே டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு தப்பிச் சென்றார். இந்தக் கொலைச் சம்பவத்திற்கு சில லட்சங்கள் சம்பளத்தில் கூலி ஆள் ஒருவர் சிக்கி, அவரும் சம்பிரதாயத்திற்கு ஒரு வாரம் ஜெயிலில் இருந்துவிட்டு வெளியில் வந்துவிட்டார். அந்தக் கேஸ் இப்போது என்ன ஆனது என்பது நீதி தேவதைக்கே வெளிச்சம்..!

இப்படி பல விஷயங்களையும் ஒரே நேர்க்கோட்டில் கொண்டு வந்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருக்கிறார் இயக்குநர். ஏழைக்கு ஒரு நீதி, பணக்காரனுக்கு ஒரு நீதி என்ற நமது நாட்டின் எழுதப்படாத விதியைத்தான் இங்கே குறிப்பிட்டுக் காட்டுகிறார். கத்தியைக் காட்டி மிரட்டி 300 ரூபாய் வழிப்பறி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டவன் 3 ஆண்டுகளாகியும் ஜாமீன் கிடைக்காமல் சிறையில் வாட, 66 கோடி ரூபாய்க்கு ஊழல் செய்ததாக குற்றஞ்சாட்டப்பவர் இங்கே ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகத் திகழ்வது எங்கனம் சாத்தியம் என்று நாம் என்றைக்காவது யோசித்திருக்கோமா..? இதைத்தான் இயக்குநர் நமது மரமண்டைகளுக்கு உணர்த்தியிருக்கிறார்..!

செல்போன்களின் பயன்பாடு இன்றைய இளைய சமுதாயத்தினரை எந்தப் பக்கம் திசை திருப்புகிறது என்பதையும் மிக எச்சரிக்கை உணர்வோடு குறிப்பிட்டிருக்கிறார் இயக்குநர். இந்தப் படத்தை பெற்றோர்கள் அவசியம் பார்த்தாக வேண்டும்.. தங்களது பிள்ளைகள் படிக்கிறார்கள். படிக்கவில்லை என்பதை அறிய முயலும் அதே தருணத்தில், அவர்களது பழக்க வழக்கங்களையும் கொஞ்சம் தெரிந்து வைத்திருப்பது நல்லது என்ற எச்சரிக்கையை அவர்களுக்கு உணர்த்துகிறது இப்படம்.

இப்போதே இணையத்தில் கணக்கற்ற அளவுக்கு மறைவு படங்கள் வெளியாகியுள்ளன. சத்தியமாக இப்படி நமது உடலும், முகமும் பல லட்சக்கணக்கான இணையவாசிகளின் கண் முன்னே விரிகிறது என்பது அந்த அப்பாவிகளுக்கு இப்போதுவரையிலும் தெரிந்திருக்காது. இணையத்தின் அகோர வளர்ச்சியில் இது போன்ற முறைகேடுகளும் தவிர்க்க முடியாதவை என்றாலும், அறவே ஒழிகக முடியாதவைதான் என்றாலும் நிச்சயம் பெருமளவுக்குத் தடுக்கலாம். அதன் முதல் படியை  துவக்கி வைத்த பெருமை இப்படத்திற்கு உண்டு..!

இந்தப் படத்தின் துவக்கக் காட்சிகளை.. எப்படி படத்தின் கதையைத் துவக்குவது என்பதை மட்டும் ரொம்பவே யோசித்து கடைசியாகத்தான் எடுத்தாராம் இயக்குநர்..! திரைக்கதைக்காக இத்தனை மெனக்கெட்டு ஒரு கதை சொல்லியைப் போல் தலைகீழாக மாற்றியமைத்தாலும், கதை நம் அனைவரின் மனதிலும் பதியும் அளவுக்கு செய்திருக்கும் அவரது இயக்கத்திற்கு எனது சல்யூட்..!

நல்ல படம் வரலை.. எல்லாமே மொக்கை என்றெல்லாம் மொக்கையாகவே பேசாமல், இது போன்று பார்க்க வேண்டிய உலகத் தரத்திலான படங்கள் வரும்போதெல்லாம் உடனுக்குடன் குடும்பத்துடன் தியேட்டருக்குச் சென்று படம் பார்த்து அவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டியது நமது கடமை.. அவசியம் தியேட்டருக்கு குடும்பத்துடன் செல்லவும்..!

மீண்டும் அடுத்து 2 வாரங்கள் கழித்து இதேபோன்ற ஒரு மன நெகிழ்வுடன் நீங்கள் நிச்சயம் கண் கலங்கப் போகும் “ராட்டினம்” படத்தின் விமர்சனத்தில் அவசியம் சந்திப்போம்.. 

நன்றி..!

சினிமா 360-4

03-05-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கிழக்கு பாத்த வீடு

ஹீரோ பெரியகுளம். ஹீரோயின் சின்னமனூர்.. இயக்குநர் தேனிக்காரர். பாட்டுக்காரரும் தேனிக்காரர்.. படத்தின் தயாரிப்பாளரும் தேனிக்காரர். இப்படி தேனி மாவட்டமே ஒன்றிணைந்து இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். அண்ணன் ஸ்டில்ஸ் ரவி எடுத்திருந்த அருமையான புகைப்படங்கள் படத்திற்கு மேலும் மெருகேற்றியுள்ளன. தனது மண்ணின் மைந்தர்களின் படம் என்பதால் இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் இசை வெளியீட்டு விழாவுக்கு ஆர்வத்துடன் வந்திருந்தார்.


படத்துக்கு இசை அமைத்திருந்தவர் மரியா மனோகர்.. வைரமுத்துவின் வரிகளுக்கு உரிய மரியாதை கொடுத்து பாடல் காட்சிகளை படமாக்கியிருக்கிறார் இயக்குநர் பாலகுருசாமி. அதுவும் “படபடப்பாகுதே..” பாடல் காட்சி நிச்சயம் சேனல்களில் ஹிட்டடிக்கும். 

தனது வார்த்தைகள் படமானவிதம் பார்த்து மிகவும் பெருமைப்பட்டார் வைரமுத்து. 'முதல் மரியாதை' படத்தின்போது சிவாஜிக்கு நரை முடி இருக்கிறதா என்று பலரிடமும் கேட்டு விசாரித்து, இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திய பின்பே “காதோரம் நரைச்ச முடி கன்னத்துல குத்துது குத்துது..” என்று எழுதியதாகச் சொன்னார்.   


படத்தை வாழ்த்திப் பேசிய பாரதிராஜா வாழ்த்தோடு வாழ்த்தாக, “சினிமா யாருக்கும் சொந்தமில்லை. யார் வேண்டுமானாலும் நடிப்பார்கள். இயக்குவார்கள். பணியாற்றுவார்கள்.. யாரும் இதற்கு எந்தவிதத்திலும் தடை போட முடியாது. கூடாது..” என்று பெப்சி மேட்டரையும் சேர்த்தே பேசினார். அதே நேரத்தில் இவர் இப்படி இங்கே பேசுவதே தெரியாமல், பக்கத்து பில்டிங்கான இசையமைப்பாளர் சங்கத்தில் நடந்து கொண்டிருந்த மே தின கொண்டாட்டத்தில் பெப்சி ஊழியர்கள்,  “தமிழ்ச் சினிமாவுக்கு ஒரேயொரு தொழிலாளர் சங்கம்தான். அது நாம மட்டும்தான்..” என்று உறுதிமொழி கொடுத்துக் கொண்டிருந்தும் ஒரு சுவையான செய்தி..! 

பிரசன்னா-ஸ்நேகா திருமண அறிவிப்பு

பத்திரிகையாளர்களுக்கு ஒரு பக்கம் சந்தோஷம் என்றாலும், இன்னொரு பக்கம் ரொம்ப வருத்தமாகவும் இருந்தது பிரசன்னா-ஸ்நேகா திருமண அறிவிப்பு.. 


பத்திரிகையாளர்களை தங்களது திருமணத்திற்கு அழைக்க ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். ஜம்மென்று தம்பதிகள் போல் வந்திறங்கியவர்களை வளைத்து, வளைத்து புகைப்படமெடுத்த புகைப்படக்காரர்களுக்கு சளைக்காமல் போஸ் கொடுத்தார்கள் காதலர்கள்..!


பத்திரிகையாளர்கள் அனைவரின் அருகேயும் வந்து திருமண அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு "அவசியம் கல்யாணத்து வரணும்.." என்று அன்பாக வேண்டுகோள் வைத்தார் பிரசன்னா. கிடைத்த இடைவெளியில் சிநேகாவைச் சுற்றிவளைத்து “திரும்பவும் நடிக்க வருவீர்களா..?” என்ற ஒரே கேள்வியை அனைத்து சேனல்களும் திரும்பத் திரும்பக் கேட்டாலும், அத்தனைக்கும் புன்னகை மாறாமல் பதில் அளித்தார் இளவரசி..!


புன்னகை இளவரசியைக் கடத்திக் கொண்டு போகப் போவதாக பிரசன்னா அறிவித்தவுடனேயே இமெயிலிலும், டிவிட்டரிலும் பிரசன்னாவுக்கு அன்பான மிரட்டல்கள் வரத் தொடங்கிவிட்டனவாம்..  “நம்பர் டூ நம்பர் பேச குறைந்தபட்சத் தொகை என்ற ஆப்ஷன் மட்டும் இல்லைன்னா நான் சம்பாதிச்சதுல முக்கால்வாசி போன் பில்லுக்கே காணாமப் போயிருக்கும்..” என்று வழக்கமான காதலரைப் போன்றே ஒரு பிட்டையும் போட்டார் பிரசன்னா. சிநேகா, கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது “இனிமேதான் சமையல் கத்துக்கணும்..” என்று பேச்சோடு பேச்சாக சொல்ல, இதற்கு பிரசன்னா காட்டிய ரியாக்சனை பார்க்கணுமே..!! பாவம்தான்..!

தம்பதிகள் எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..!

நெகிழ வைக்கும் வழக்கு எண் 18/9

மனதை நெகிழ வைக்கிறது 'வழக்கு எண் 18/9' திரைப்படம். 'காதல்' படம் பார்த்த அதே பீலிங் நேற்றைக்கும் எனக்குக் கிடைத்தது. கிளைமாக்ஸில் கண் கலங்கிவிட்டேன்.. படம் முடிந்ததும் அரங்கத்தில் எழுந்த பத்திரிகையாளர்களின் கைதட்டல் சப்தம் கேட்டு, வெளியில் நின்று கொண்டிருந்த இயக்குநர் பாலாஜி சக்திவேல் நெக்குருகிப் போனார்..! நல்ல படங்களை எப்பவுமே பத்திரிகையுலகம் பிரமோட் செய்தேதான் தீரும்.. 


இந்தப் படத்தில் முற்றிலும் புதுமுகங்கள்.. கேனான் 5 டி கேமிராவில் பிரபலமான ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் படம் பிடித்துள்ளார்.. மிகக் குறைந்த செலவிலான தயாரிப்பு.. குறைந்த நாட்கள் ஷூட்டிங் என்று தயாரிப்பாளருக்குப் பிடித்ததுபோல் செய்திருக்கிறார் இயக்குநர். 

இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் லிங்குசாமி பேசியதுபோல், இதுதான் அவரது தயாரிப்பில் வெளிவரும் உண்மையான முதல் படம் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம்..! இந்தத் தைரியத்தில்தான் யூ டிவியிடம் கொடுத்திருந்த விநியோக உரிமையை திரும்பப் பெற்றுக் கொண்டு தானே வெளியிட முடிவு செய்துள்ளார் லிங்குசாமி.. 

வெற்றி பெற வேண்டிய படம்.. அவசியம் பாருங்கள் மக்களே..!


நெல்லை சந்திப்பில் நடந்த சந்திப்பு..!

மாலை 6 மணிவரை காத்தாட இருந்த அரங்கம், 7 மணிக்கெல்லாம் நிரம்பி வழிந்தது. இயக்குநர் நவீனுக்கென்று இணையத்தில் இருக்கும் நட்பு வட்டங்களும், கலையுலக நட்புகளும் ஒன்று சேர்ந்து வந்துவிட பத்திரிகையாளர்களுக்கே உட்கார இடமில்லாமல் போய்விட்டது. நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராமசுப்புவின் வருகைக்காக நிகழ்ச்சி துவங்க காலதாதமாக.. இதனால் கோபித்துக் கொண்ட சில பத்திரிகையாளர்கள் விழா துவக்கத்திலேயே வாக்அவுட் செய்துவிட்டனர்..


அரசியலும், கலையுலகமும் ஒன்று சேர்ந்து கொள்ள மேடையில் இனி சேர் போடக்கூட இடமில்லை என்கிற லெவலுக்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது..! வாழ்த்திப் பேச வந்த விக்ரமன் நெல்லை வட்டாரத்தைப் பற்றியும், அல்வா வந்த கதையைப் பற்றியும் விளக்கமாகப் பேசியதுதான் விழாவின் ஹைலைட். கூடவே "இப்படி அல்வா கொடுத்து ஏமாத்துறவன்தான் நெல்லைக்காரன்னு எங்களை கேவலமா பேசாதீங்கப்பா..!" என்று வேண்டுகோளும் வைத்தார்..!

படத்தின் டிரெயிலர், படம் பற்றிய எதிர்பார்ப்பை ரொம்பவே அதிகரித்திருக்கிறது! ஆவலுடன் காத்திருக்கிறோம்..! 


கலகலப்புவில் நடந்த கலாட்டா..!

பெயருக்கேற்றார் போலவே கலகலப்பாகவே நடந்து முடிந்தது கலகலப்பு இசை வெளியீட்டு விழா. மைக்கை நீட்டினாலே சரடு விடும் ஹீரோக்கள் மத்தியில் விமலுக்கு ஒரு பொன்னாடை போர்த்தி, கதம்ப மாலையையே சூட்டலாம்..! 


அனைத்து சேனல்களின் மைக்கிலும் விமல் சொன்னது படத்தில் நடித்தவர்கள் பட்டியலை மட்டும்தான்..! “கொஞ்சம் கூட ஏதாவது.. படத்துல உங்க கேரக்டர் பத்தி சொல்லுங்களேன்..” என்று கேட்டதற்கு, “என் கேரக்டர் எனக்குப் பிடிச்சிருந்தது. நல்லா நடிச்சிருக்கேன். அவ்வளவுதான்..” என்று சொல்லி எஸ்கேப்பானார். 


மேடையில் அவரை பேச அழைத்தபோது "தேங்க்ஸ்" என்று ஒற்றை வரி சொல்லிவிட்டு தப்பிக்கப் போனவரை இழுத்துப் பிடித்து நிறுத்தியும் ஓடிப் போய் மூலையில் பதுங்கிக் கொண்டார்.. ரொம்ப வெட்கப்படுகிறாரோ என்று நினைத்துக் கொண்டிருக்க.. நிகழ்ச்சியின் இறுதியில்தான் தெரிந்தது அண்ணன் கொஞ்சம் 'பூஸ்ட்' அடித்து வந்திருந்தாரென்று..! ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறார். அதிலும் அவர்தான் ஹீரோ. "ஹீரோவே இப்படியா..?" என்று மூத்த பத்திரிகையாளர் ஒருவர் விசனப்பட்டு தயாரிப்பு டீமிடம் கேட்டபோதுதான் 'பூஸ்ட்'டுக்கான காரணம் தெரிந்தது. இருந்தாலும் இது தப்பில்லையா..? சின்னப் பையன்.. யாராச்சும் சொல்லி திருத்துங்கப்பா..! 


அஞ்சலியிடமும், ஓவியாவிடமும் அடக்க மாட்டாத ஆர்வத்தில் ஒரே கேள்வியைக் கேட்டார்கள் பத்திரிகையாளர்கள்.. “ஏன் இவ்வளவு கவர்ச்சி..?”யென்று..! “இந்தப் பாட்டுல கொஞ்சம் கவர்ச்சியா இருக்கணும்னு முன் கூட்டியே சொல்லிட்டாங்க.. எங்களுக்கும் பிடிச்சிருந்தது.." என்றார்கள் இருவரும். 'இவளுக இம்சை தாங்க முடியலை' பாடலின்போது இவர்கள் அணிந்திருந்த காஸ்ட்யூம்கூட இவர்களே செலக்ட் செய்ததுதானாம்..! 


ம்.. இது நல்லாயிருக்கே..!


ஏன் என்றால் காதல் என்பேன்..!

இயக்குநர்கள் லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், எஸ்.எஸ்.ஸ்டான்லி, ஏ.ஆர்.முருகதாஸ், சசி ஆகியோர் உதவி இயக்குநர்களாக இருந்தபோது அவர்களுடன் இருந்தவர் கருணாகரன். தேவகோட்டைக்காரர். ஆனால் தெலுங்கு சினிமா பக்கம் போய் Darling  (2010), Ullasamga Utsahamga (2008), Happy  (2006), Balu ABCDEFG  (2005), Vasu  (2002), Yuvakudu (2000), Tholi Prema  (1998) என்று இதுவரைக்கும் 7 படங்களை இயக்கியிருக்கிறார். 


தற்போது முதன் முறையாக தாய்மொழிக்குத் திரும்பியிருக்கிறார். “ஏன் என்றால் காதல் என்பேன்” என்பது படத்தின் தலைப்பு. தெலுங்கு ஹீரோ ராம் இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். ஆள்தான் தெலுங்கு என்றாலும் பிறந்தது, படித்தது, வளர்ந்ததெல்லாம் சென்னைதானாம்.. இங்கே தமிழில் ஒரு நல்ல பிராஜெக்ட்டில் அறிமுகமாகிவிட வேண்டும் என்று துடித்தவருக்கு கருணாகரன் கை கொடுக்க.. இங்கே வந்திருக்கிறார். துணைக்கு தமன்னா. 


பொண்ணு சாப்பிட சோறே கிடைக்கலையோன்னு கேக்கணும்ன்ற லெவலுக்கு இருக்கு. ஆனாலும் எப்படித்தான் ஸ்கிரீன்ல பார்க்குறாங்களோ தெரியலை..!? “மெட்ராஸ் ஏர்போர்ட்ல கால் வைச்சதுமே ஒரு மெல்லிய காத்து என் மேல வீசுச்சு.. அது அன்பான காத்து. அவ்வளவு பாசமானவங்க தமிழ்நாட்டுக்காரங்க..” என்று ஐஸ் மேல் ஐஸ் வைத்து பேசியது குழந்தை..!

"கருணாகரன் இயக்கிய 'டார்லிங்' படத்தில் இருந்த ஒரு பாடலின் மாண்டேஜ் காட்சியை நான் இயக்கிய ஹிந்தி கஜினி படத்தில் அப்படியே வைச்சிருக்கேன். எனக்கு ரொம்ப புடிச்ச சீன் அது என்பதால் கருணாவிடம் பெர்மிஷன் கேட்டு வைத்தேன்.." என்றார் ஏ.ஆர்.முருகதாஸ்.

தமிழ், தெலுங்கு இரண்டிலுமே ஒரு நேரத்தில் தயாரித்திருக்கிறார்கள். . படத்தின் தயாரிப்பாளர் பெரிய கை என்பதால் படத்தை எல்லா வழிகளிலும் பிரமோட் செய்துவிடுவார்கள்..! .பார்க்கலாம்..!


“50 ரூபா மாலைக்குக் கூடவா எங்களுக்குத் தகுதியில்லை..?”

சென்ற மாதம் காலமான கதாசிரியர், இயக்குநருமான கலைமணியின் மரணம் தமிழ்ச் சினிமாவுலகத்தில் எந்தக் கவனத்தையும் ஈர்க்காமலேயே போய்விட்டது..!


தமிழ்ச் சினிமாவின் ஒரு திருப்பு முனை படமான '16 வயதினிலே' படத்தின் கதை, வசனகர்த்தா இவர்தான்..! 'மண்வாசனை'யும் இவருடைய கதை, வசனம்தான். 'இங்கேயும் ஒரு கங்கை', 'சிறைப் பறவை', 'முதல் வசந்தம்', 'தெற்கத்திக் கள்ளன்', 'பொறுத்தது போதும்', 'சிறையில் பூத்த சின்ன மலர்', 'கோபுரங்கள் சாய்வதில்லை', 'மனைவி சொல்லே மந்திரம்', 'என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்; என்று பல பிரபல படங்களுடன் சேர்த்து 85 படங்களுக்கு கதை எழுதியவர். 5 படங்களை இயக்கியுள்ளார். 13 படங்களை தயாரித்துள்ளார். விஜய் நடித்த குருவி படத்துக்கும் இவர்தான் வசனகர்த்தா..!


குடல் புற்றுநோயால் கடந்த 2 ஆண்டு காலமாகவே சிகிச்சை பெற்று வந்த கலைமணி இறுதி காலத்திலும் டிவி சீரியல்களுக்கு கதை, வசனம் எழுதிக் கொண்டிருந்தார். மருத்துவ சிகிச்சைகளுக்கு இவருடைய சீடர் ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட பலரும் நிதியுதவி அளித்திருக்கிறார்கள்.

அஞ்சலி செலுத்த வந்த 'கடலோரக் கவிதைகள்' ரேகா கதறி அழுதுவிட்டார். கலைமணிதான் ரேகாவை, பாரதிராஜாவிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்தாராம். தனக்கு ஒரு அப்பா ஸ்தானத்தில் இருந்து தன்னை வழி நடத்தியதாகச் சொன்னார் ரேகா. அனைவருக்கும் முன்பாகவே வந்த விஜயகாந்த், அவசரம், அவசரமாக தனது மரியாதையைச் செலுத்திவிட்டு அப்படியே வந்த கையோடு பக்கத்து தெருவில் இருந்த ஆச்சி மனோராமாவையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு பறந்தோடினார். சுஹாசினி, மோகன், ராதிகா மூவரும் நீண்ட நேரம் காத்திருந்தார்கள் பாரதிராஜா வருவாரென்று..! ஆனால் அவர் வராமல் அவருடைய பையனை மட்டும் அனுப்பி வைத்திருந்தார். 


பாரதிராஜா வராதது மாத்திரமல்ல.. கலைமணியின் இறப்புக்கு இயக்குநர்கள் சங்கமும் உரிய மரியாதை செலுத்தவில்லை என்று கலைமணியின் சீடரும், நடிகரும், இயக்குநருமான மனோபாலா ரொம்பவே வருத்தப்பட்டார். இறப்புச் செய்தியை இயக்குநர் சங்கத்திற்கு சொன்னவுடன், “அவர் இப்போ உறுப்பினரா இல்லை. அவரோட கார்டு லேப்ஸ் ஆயிருச்சே.. அதுனால சங்கம் சார்பா யாரும் வர முடியாது..” என்று கவர்ன்மெண்ட் ஆபீஸ் போல பதில் சொன்னார்களாம் சங்கத்தில் இருந்தவர்கள்..! அடக்க நாளன்று பொறுமையாகவே இருந்த மனோபாலா நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரிடத்திலும் இதனைச் சொல்லி பெரிதும் வருத்தப்பட்டார். “ஏங்க ஒரு 50 ரூபா மாலை போடக் கூடவா லாயக்கில்லாம போயிட்டோம் நாங்க..” என்று கோபமாகவே பேட்டியும் கொடுத்தார். மறுநாள் இயக்குநர்கள் சங்கத்திற்குச் சென்று ஆவேசமாக சாமியாடிவிட்டும் வந்தார்..! 

இதாவது பரவாயில்லை.. பழம்பெரும் நடிகையும், கே.ஏ.தங்கவேலுவின் மனைவியுமான சரோஜாம்மாவின் மரணத்துக்கு அஞ்சலி தெரிவிக்க முக்கிய சினிமாக்காரர்கள் யாரும் அந்தப் பக்கம் தலைவைத்துக்கூட படுக்கவில்லையாம்..! நடிகர் சங்கத்தினரே கண்டு கொள்ளவில்லை என்று அக்குடும்பத்தினர் அப்போதே வருத்தப்பட்டனர். அவர்களும் இதே காரணத்தைத்தான் சொன்னார்களாம்.. மிகச் சொற்பமான உறவினர்களுடன் சுடுகாட்டுக்குப் பயணமானார் சரோஜாம்மா. 

ஆனால் கலைமணியை அந்த அளவுக்கு விடவில்லை அக்கம்பக்கத்தினர். அந்தப் பகுதி ஆட்டோக்காரர்கள், சைக்கிள் ரிக்ஷாக்காரர்கள் என்று அனைவரும் ஒன்று சேர ஒரு ஊரே திரண்டிருந்தது கலைமணியின் சவ ஊர்வலத்தில்.. ஜாம்ஜாமென்று அவரவர் சொந்தக் காசில், வெடிகளை வெடித்தும் ஆர்ப்பாட்டமாய் கொண்டு போய் சேர்த்தார்கள்..! கலைமணி அந்த அளவுக்கு அக்கம்பக்கத்தினர் மீது பாசமாக இருப்பாராம்..! அதிலும் ஆட்டோக்காரர்கள், ரிக்ஷாக்காரர்கள் மீது அளவு கடந்த பாசமாம்.. தோளில் கை போட்டு தோழமையுடன்தான் பேசுவாராம். கண்கலங்கிப் போய்ச் சொன்னார்கள்..!

“இவங்களுக்கு இருந்த ஒரு சின்ன மனிதாபிமான உணர்வுகூட வெள்ளித்திரைல உணர்ச்சிகரமா நடிச்சுக் காண்பிக்கிற சினிமாக்காரங்ககிட்ட இல்லையே..” என்றார் மனோபாலா..! 


வெறுப்பாகத்தான் இருக்கிறது..!


பெப்சி-சன் டிவி-தயாரிப்பாளர்கள் சங்கம்

பெப்சியை இரண்டாக உடைப்போம் என்று சொன்ன தயாரிப்பாளர்கள் சங்கம் இரண்டாக உடைந்து தற்போது தத்தளிப்பில் உள்ளது. தலைவர் எஸ்.ஏ.சி.யையும், பொருளாளர் தாணுவையும், துணைத் தலைவர் தேனப்பனையும் 6 மாதங்களுக்கு சங்கத்தில் இருந்து நீக்குவதாக 265 பேர் கூடியிருந்த பொதுக்குழு முடிவு செய்து சொன்னது இந்த மூவருக்குமே பயங்கர ஷாக்குதான்..! ஆனாலும் வேறு வழியில்லை. 


போர்க்களத்தில் குதிச்சாச்சு.. எதிர்த்து நிற்போம் என்றவர்களுக்கு ஆத்தா வேறு ஒரு ஷாக் கொடுத்துவிட்டார். அட்ஹாக் கமிட்டியையே பெப்சியுடனான பேச்சுவார்த்தைக்கு அங்கீகாரமான அமைப்பாக அரசுத் தரப்பு முடிவு செய்ய பாவம் எஸ்.ஏ.சி. தரப்புக்கு சுத்தமாக சுதியிறங்கிவிட்டது..! 


இதற்குப் பின்னணியில் இருப்பது சன் டிவிதான் என்பது திரையுலகில் அனைவருக்குமே தெரியும் என்றாலும் வெளிப்படையாகப் பேச மறுக்கிறார்கள்..! எப்படியும் காசு உள்ளவன்கிட்ட நாளைக்கு நாமதான் போய் நிக்கணும். நாம எதுக்கு வம்பை விலைக்கு வாங்கணும் என்ற சொந்த, சுய லாபத்துடன் அத்தனை பேரும் வரிந்து கட்டிக் கொண்டு சங்கத்தை உடைத்திருக்கிறார்கள்..!

உடைத்த அணியினருக்கோ இன்னொரு பிரச்சினை. அட்ஹாக் கமிட்டிக்கு ஆதரவு கொடுக்கும் கே.ராஜனை அங்கே யாருக்குமே பிடிக்கவில்லை. கே.ராஜன் இதுவரையிலும் 2 படங்களைத்தான் தயாரித்திருக்கிறார். அதுவும் பலான, மொக்கை படங்கள்தான். அவருக்கு என்ன தகுதி இருக்கு தயாரிப்பை பத்தி பேசுறதுக்கு என்கிறார்கள் பெரிசுகள்.. ஆனால் வெளியில் சொல்ல முடியவில்லை. காரணம், கே.ராஜனின் தலைமையில் சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் அணி திரண்டிருக்கிறார்கள். அவர்கள் நினைத்தால் பெரிசுகளையே கட் செய்துவிட்டு சங்கத்தைக் கைப்பற்றிக் கொள்ளலாம்..! சங்கத்தில் இருக்கும் கோடிக்கணக்கான நிதியும், பில்டிங்கும், பதவி ஆசையும்தான் சின்ன பட்ஜெட்காரர்களுக்கு பெரிசுகள் போடும் சல்யூட்டுக்குக் காரணம்..!

இன்றைக்கு சங்க அலுவலகத்தில் நுழைய முயன்ற எஸ்.ஏ.சி.க்கும், ராவுத்தருக்கும் இடையே அலுவலக வாசலிலேயே அக்கப்போர் நடந்தது..! பாவம் தாணு ஸார்..! தன் கையெழுத்துக்காக செக் புக்கோடு வீடு தேடி வந்தவர்கள், இன்றைக்கு தெருவுக்கே தன்னை துரத்துகிறார்கள் என்பதை நம்ப முடியாத அதிர்ச்சியோடு பார்த்தபடியிருந்தார். எல்லாம் காலத்தின் கோலம்தான்..!

சச்சு, ரோஜா மலரே ஆன கதை..!

பழம்பெரும் நகைச்சுவை நடிகை சச்சுவுக்கு 'நாடக சூடாமணி' என்ற விருதினை வழங்கி கெளரவித்தது தி.நகர் கிருஷ்ணகான சபா. 


இந்த விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன், “வீரத்திருமகன் படத்தின் பாடல் கம்போஸிங்கின்போது கண்ணதாசன் 'அத்திக்காய் காய் காய்' என்ற பாடலை எழுதினார். நான் அவரிடம், 'இந்தப் பாட்டு நல்லாத்தான் ஸார் இருக்கு. ஆனா இந்த சிச்சுவேஷனுக்கு, எங்க ஹீரோயினுக்கு இது பொருத்தமா இருக்காது. எங்க ஹீரோயின் ரோஸ் மாதிரி ஸார்.. அதை வைச்சு எழுதுங்களேன்' என்றேன். கவிஞர் நொடியும் தாமதிக்காமல் 'ரோஜா மலரே ராஜகுமாரி' என்ற முதல் வரியைச் சொன்னார். அன்னிலேர்ந்துதான் இந்தம்மா ரோஜா மலராயிட்டாங்க..” என்றார். 

கண்ணதாசன் கண்ணதாசன்தான்..!


காந்தி கணக்கில் கில்லியான இயக்குநர் விடுதலை..!

இனிமேல் காந்தி கணக்கு எழுதுவது எப்படி என்று கற்றுக் கொள்ள நினைப்பவர்கள், சின்னத்திரை கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் விடுதலையிடம் சென்று கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். மனிதர் அந்த விஷயத்தில் அரசியல்வியாதிகளையே மிஞ்சும்விதத்தில் இருக்கிறார்..!

2010-2011-ம் ஆண்டுக்கான சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் வரவு செலவுக் கணக்கை எந்தவித கணக்கும் காட்டாமல் வெறும் தொகையை மட்டுமே குறிப்பிட்டு அழகாக கணக்கெழுதி காண்பித்திருக்கிறார் விடுதலை.

பாசத் தலைவன் பாராட்டு விழாவுக்கு 4 லட்சம், இந்த விழாவில் நடன நிகழ்ச்சி மற்றும் பரிசுப் பொருள் வாங்கியதாக 60000, கலைமாமணி மற்றும் மாநில அரசு விருது பெற்றவர்களுக்கான பாராட்டு விழா நடத்த 78000, பையனூர் நிலத்தின் துவக்க விழாவுக்கு 5,75000, இந்த விழாவுக்கு பஸ்ஸில் அழைத்துச் சென்ற கட்டணமாக 2,60,000, காலை டிபன், மதியச் சாப்பாடு வழங்கியதற்கு 1,26,000, பூமி பூஜை போட்ட செலவு 1 லட்சம், பையனூர் நிலத்தில் மரங்களை வெட்ட பாரஸ்ட் டிபார்ட்மெண்ட்டுக்கு கட்டின பணமாக 1,30,000, பையனூர் நிலத்தை செப்பனிட 6,50,000, சொஸைட்டி ஆபீஸுக்காக செட்டப் செய்ய 2,50,000, செம்மொழி மாநாட்டுக்காக முரசொலி மற்றும் தமிழ்முரசு பத்திரிகைக்கு கொடுத்த விளம்பரமாக 60,000 என்று கணக்கைத் தீட்டியிருக்கிறார்.

பையனூர் நிலத்தில் வீடு கேட்பவர்கள் 2000 ரூபாய் நன்கொடையாக சங்கத்துக்கு கொடுக்க வேண்டும் என்றார்கள். 1317 பேர் பணம் கொடுத்தார்கள். மொத்தமாக 26,34,000 ரூபாய் வந்தது.  இதோடு சங்கத்து உறுப்பினர்களின் குழந்தைகளின் கல்விக் கடன் செலவுக்காக அபிநயா கிரியேஷன்ஸ் மற்றும் விகடன் டெலிவிஸ்டாஸ் கொடுத்த 4 லட்சம், இயக்குநர் சங்கத்தில் ஏற்கெனவே இருந்த நன்கொடை 3,60,000 என்று அனைத்தையும் சேர்த்தால் 33,94,000 ரூபாய் வருகிறது. விடுதலை காட்டியிருக்கும் செலவு கணக்கு 33,86,477. கையிருப்பு வெறும் 7,523. இது எப்படியிருக்கு..? 

விடுதலை இப்படி தன் மனம்போன போக்கில் செய்திருக்கும் செலவுகளுக்கு பொதுக்குழுவையோ, செயற்குழுவையோ கூட்டி அனுமதியே வாங்கவில்லை. ஆனால் 10000 ரூபாய்க்கு மேல் செலவழிக்க வேண்டுமெனில் அதற்கு முன்கூட்டியே பொதுக்குழுவில் அனுமதி பெற வேண்டும் என்று சங்கத்தின் விதிமுறைகள் இருக்கிறதாம்..! 

அன்றைய முதல்வரான, தி.மு.க. தலைவரை அப்பா என்றழைக்கும் நெருக்கத்தில் விடுதலை போட்ட ஆட்டத்தில், அவனவன் பொண்டாட்டி தாலியை அடகு வைச்சு கட்டின பணமெல்லாம் இப்போது அம்பேல்..! 

சென்ற மாதம் நடந்த பொதுக்குழுவில் அத்தனை துணை, உதவி, இணை, இயக்குநர்களே பொங்கிவிட்டார்கள். இதற்கான கணக்கு, வழக்கு ரசீதுகள் எல்லாம் ஆடிட்டரிடம் உள்ளன. அவரிடம் இருந்து சர்டிபிகேட் வந்தவுடன் சங்கத்திடம் அதனை ஒப்படைக்கிறேன் என்று விடுதலை சொன்னாராம். விடுதலையே நேரில் வரவழைத்து கேள்விகள் கேட்க வேண்டும். அவருக்கு அழைப்பாணை அனுப்புங்கள் என்றார்கள் கோபத்துடன். அதன்படி விடுதலைக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். வருவாரா அல்லது விளக்கத்தை தபாலில் அனுப்புவாரா என்பது தெரியவில்லை. 

விடுதலை சின்னத்திரையில் கதாசிரியர், இயக்குநர்.. பிரச்சினையை இழுக்குறதுக்கு சொல்லியா தரணும்..? அதுலேயும் அரசியல்வாதியாவும் இருந்திட்டா..? எல்லாருக்கும் பட்டை நாமம்தான்..!


படித்ததில் பிடித்தது :

கேள்வி : 

மைக்கேல் மதன காமராசன் படத்தில் “சுந்தரி நீயும் சுந்தரன் நானும்” பாட்டு சிருங்கார ரசம் கொண்டது. ஆனால் காட்சியில் அது அவ்வளவு வெளிப்படவில்லை அல்லவா..?

நடிகை ஊர்வசியின் பதில் :


அந்தப் பாட்டு கிளாமராக திட்டமிடப்பட்ட பாட்டுதான். தண்ணீருக்கு அடியில் நெருக்கமாக நடிக்க கமல் திட்டமிட்டிருந்தார். நான் மடிசார் புடவையில் முழுமையாக சேப்டி பின் குத்தித்தான் எதுவும் விலகாதவாறு நடித்தேன். கமலுக்கு ஏமாற்றம்தான். விவாதமும் ஏற்பட்டது. சரி வேண்டாம் என்று விட்டுவிட்டுப் போய்விட்டார். அசைவமாக இருக்க வேண்டிய சமையல் சைவமா மாறிடுச்சே என்று பீல் பண்ணினார். 

கிளைமாக்ஸில் அத்தனை ஹீரோயினும் அந்த மலை வீட்டில இருந்து இறங்கணும். நான் அந்தக் காட்சியில் இல்லை. அதனால் எனக்குப் பதிலா வெள்ளையா ஒரு பையனை டூப்பு போட்டு இறங்கச் சொல்லியிருக்காங்க. அவன் ஆம்பளைப் பையன்தானே.. புடவையையெல்லாம் தூக்கிட்டு அவன் இறங்கிட்டான். டப்பிங்கில் பார்க்கும்போதுதான் தெரிஞ்சது. அடப்பாவி நான் இத்தனை பாதுகாப்பா நடிச்சதை இவன் இப்படி ஆக்கிட்டானேன்னு நினைத்தேன்.. நான் டப்பிங் பேச மாட்டேன். அந்த சீனை கட் பண்ண்ணும்னு பிடிவாதமா இருந்தேன். அவர்களும் கூடுமானவரை அதை கட் பண்ணியே ரிலீஸ் செய்தார்கள்.

நான், கதாநாயகிகளோட நடிச்சாலும் ஊர்வசி கதாபாத்திரம்தான் இந்தப் படத்தை நிறுத்துச்சுன்னு கமல்ஹாசன் வெளிப்படையாகச் சொன்னதுதான் இன்னைக்கும் என்னைப் பற்றிய பாராட்டாக நிற்கிறது. திரிபுரசுந்தரியா நடிக்கும்போது சாதாரணமாகத்தான் நினைத்து நடித்தேன்.

(- காட்சிப்பிழை திரை இதழில் நடிகை ஊர்வசியின் பேட்டியில் இருந்து)

- மீண்டும் அடுத்த இதழில் சந்திப்போம்.