நான் அவன் இல்லை-2 - சினிமா விமர்சனம்

30-11-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

என்னை மாதிரி 'யூத்'துகளுக்கான 'யூத்புல்'லான திரைப்படம் இது.


உண்மையாகச் சொல்லப் போனால் 'நான் அவனில்லை' என்கிற டைட்டிலில் இது மூன்றாவது பாகம். முதல் பாகத்தில் 'காதல் மன்னன்' ஜெமினிகணேசன் தன்னால் முடிந்த அளவுக்கு பெண்களைக் கவிழ்த்து நமது வீரபராக்கிரமத்தை காட்டியிருந்தார்.

ஜீவன் இதற்கு முந்தைய பாகத்தில் 5 பெண்களை ஏமாற்றி தனது வீரதீரச் செயலைக் காட்டியிருந்தார். சென்ற பாகத்தில் சென்னையில் இருந்து தனது லொள்ளு அண்ட் ஜொள்ளு வேலையைச் செய்திருந்து சந்தேகத்தின் பலனால் நீதிமன்றத்தின் மூலம் தப்பித்த காரணத்தால் இந்த முறை மலேஷியாவுக்கு பறந்துவிட்டார். இதிலும் ஒரு சிறிய மாற்றம்.. கதை முடிவில் இருந்து முதலுக்கு வந்ததுதான்.

மகேஷ் என்னும் ஜீவன் நான்கு பெண்களை ஏமாற்றிப் பணம் பறித்துவிட்டு, ஐந்தாவது பெண்ணுக்கு உதவி செய்து கொஞ்சூண்டு நல்லவனாக இருப்பதுதான் கதை. இப்போதும் அவன் நான் அவனில்லை என்று சொல்லிவிட்டு லாஜிக்கை உதைத்துத் தள்ளிவிட்டு எஸ்கேப்பாவதுடன் படம் முடிகிறது. எப்படியும் அடுத்த பாகம் வரலாம் என்று நம்புவோம்..

இயக்குநர் செல்வா மினிமம் கியாரண்டி கமர்ஷியல் இயக்குநர் என்று பெயரெடுத்தவர். இதிலும் அப்படியே.. நான்கு பெண்களுக்கும் சமமான தனி டூயட்டுகள்.. கலகலப்பான திரைக்கதை.. ஷார்ப்பா, அவ்வப்போது சிரிக்க வைக்கும், புன்முறுவல் பூக்க வைக்கும் வசனங்கள்.. சின்னச் சின்ன டிவிஸ்ட்டுகள் என்று போரடிக்காமல் கொண்டு சென்றிருக்கிறார். மாத நாவல் எழுதும் எழுத்தாளர்களெல்லாம் சினிமா எழுத்துக்கு சரிப்பட்டுவர மாட்டார்கள் என்பது பொய்யாகிக் கொண்டே வருகிறது.. இதில் பட்டுக்கோட்டை பிரபாகரின் வசனங்கள் பல இடங்களில் சிரிக்கவும், சில இடங்களில் 'அட' போடவும் வைக்கிறது..

முதல் பெண் தெலுங்கில் மாடலாடும் தெலுங்கச்சி.. தன்னுடைய அப்பனை போலவே வீட்டுக்கு அடங்கிய பையனை புருஷனாக்கத் துடிக்கிறாள். 'இங்கேயே இரு' என்று சாயந்தரம் சொல்லியும் மறுநாள் காலைவரை அதே இடத்தில் தனக்காகக் காத்திருக்கும் மகேஷை நம்பிவிடுகிறாள்.. நிச்சயத்தார்த்தன்றே வீட்டில் இருக்கும் நகைகள், பணத்தை அள்ளிக் கொண்டு மகேஷ் எஸ்கேப்.

அடுத்து ஒரு கிரிமினலான பெண்ணிடமே தனது கிரிமினல்தனத்தைக் காட்டுகிறான். ஆசை வார்த்தைளைக் கொட்டி, அசத்தலான தனது உடலைக் காட்டி படுக்கைக்கு அழைத்து, கூடவே வந்தவனின் மனைவிக்கும் தகவலைக் கொடுத்து வரவழைத்து அங்கேயே பஞ்சாயத்து செய்து முடிந்த அளவுக்கு இருப்பதைப் பறிக்கும் கெட்டிக்காரத் தமிழச்சி.. இவளிடமே ஆட்டையைப் போடுகிறார் நம்மாளு..

அடுத்து கொலை, கொள்ளைக்கு அஞ்சாத கொள்ளைக்காரியான ஒரு தமிழச்சியிடம் நமது 'வாலிபக் கவிஞர்' வாலியின் வரைவரிகளான திரைப்படப் பாடல்களைச் சொல்லியே கவிழ்க்கிறார். ஆசை வார்த்தையில் குப்புறக் கவிழும் அப்பெண் தனது திருட்டுத் தொழிலையே கைவிட்டுவிட்டு சன்னியாசினி ஆகிவிடுகிறார். தனது குரு மகேஷ்தான் என்று சொல்லி பேப்பரில் விளம்பரம் கொடுக்க அதனை வைத்துத்தான் கதையே துவங்குகிறது.

இடையில் தமிழ்த் திரைப்பட நடிகையான லஷ்மிராயுடன் உடான்ஸைத் துவக்குகிறார். டபுள் ஆக்ட்.. மிகப் பெரிய பணக்கார பேமிலி.. தன் அண்ணன் லஷ்மிராயின் தீவிர ரசிகன். அவளுடைய மானசீகமான காதலன் என்பதை தம்பி தானே முன் வந்து லஷ்மிராயிடம் சொல்கிறான். கூடவே, "அவனைக் காதலிச்ச.. மவளே காணாப் போயிருவ.." என்று நேரடியாகவே மிரட்டுகிறான். அடுத்து அண்ணன்காரனைப் போல மாறுவேடம் போட்டு சாந்தமாக வந்து அவளிடம் குஷாலாகப் பேச, வீம்புக்காகவே அண்ணன்காரனைக் காதலிக்கிறாள் நடிகை லஷ்மிராய். இந்தக் கதை கடைசியில் லஷ்மிராயின் முழுச் சொத்தையும் அபகரிக்கும் அளவுக்குச் செல்கிறது.

கடைசியாக சங்கீதா என்னும் பாவப்பட்ட ஒரு கேரக்டர். கொஞ்சம் திக்குவாய். இது எப்படி ஏற்பட்டது என்பதற்கு இலங்கை பிரச்சினை திணிக்கப்பட்டிருக்கிறது. சங்கீதாவின் காதல் கணவர் இலங்கைத் தமிழர்கள்மேல் அக்கறை கொண்டவராகி இலங்கைக்கு உதவிகள் செய்ய சென்ற இடத்தில் சிங்களப் படையினரின் குண்டுவீச்சில் பலியாக.. சங்கீதாவுக்கு அந்த அதிர்ச்சியில்தான் பேச்சுத் திணறிப் போய்விட்டது என்கிறது கதை.

இவளை எப்படி ஏமாற்றலாம் என்று யோசித்து அவள் மனதில் இடம் பிடிக்கும் நம்ம ஹீரோவுக்கு கடைசியில் மனம் மாறிவிடுகிறது. சங்கீதாவின் குழந்தையை பிரித்து தங்களிடத்தில் வைத்துக் கொள்ளும் அவளுடைய மாமனாரின் குடும்பம் மிகப் பெரும் அளவுக்குப் பணம் கொடுத்தால் குழந்தையைத் தருவதாகப் பேரம் பேசுகிறது.. நடிகையிடம் சுட்ட பணத்தை மகேஷ், சங்கீதாவுக்குத் தெரியாமல் அவளுடைய மாமனார் குடும்பத்திடம் கொடுத்து குழந்தையை மீட்டு அவளிடம் தரும் சமயத்தில் அவனைப் பிடித்துவிடுகிறார்கள் மற்ற நான்கு அபலைப் பெண்களும்.

அடுத்த இருபது நிமிடத்தில் நூற்றிப் பத்து தடவை 'நான் அவனில்லை..' 'நான் அவனில்லை.' 'நான் அவனில்லை..' என்று தொண்டை கிழிய கத்திவிட்டு எஸ்கேப்பாகுகிறான் மகேஷ். முடிந்தது கதை.. முழுக் கதையையும் சொல்லக் கூடாது என்றுதான் பார்த்தேன். ஆனால் முடியவில்லை. பரவாயில்லை. தியேட்டருக்கு சென்று பாருங்கள்.. கலகலப்பாகத்தான் இருக்கிறது..

கொஞ்சமாக இருக்க வேண்டிய கமர்ஷியல் மேட்டர்கள் இங்கே அதிகமாகிவிட்டதையும் குறிப்பிட்டாக வேண்டும். சங்கீதாவைத் தவிர மீதி நான்கு பேர் அணிந்த ஆடையையும் ஒரே ஆள் கையில் தூக்கிக் கொண்டு வந்துவிடலாம். அவ்வளவு சிக்கனமான துணிகள். இதில் மூன்று பேர் முற்றிலும் புதுமுகமாக இருக்க.. புதுமுகங்கள் என்பதால் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு ஆடையைக் குறைத்து வாய்ப்பு தேடியிருக்கிறார்கள். கிடைக்குமா என்பது முருகனுக்குத்தான் தெரியும். பாடல் காட்சிகள் அத்தனையிலும் கிளாமர் கொடி கட்டிப் பறக்கிறது.. யார் அதிகம் ஆடை குறைப்பது என்பதில் நான்கு பேருக்கு இடையிலும் போட்டி நடந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆனால் நடித்தவர்கள் யார் என்று பார்த்தால் சங்கீதாவும், லஷ்மிராயும்தான்.. ஏதோ கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சந்தடிச்சாக்கில், "நடிகைகள் என்றால் இளக்காரமா? அவர்களும் ஆபீஸ் வேலை மாதிரி ஒரு தொழில்தான் செய்றாங்க.." என்று தனது தரப்பு வாதத்தை வைக்க லஷ்மிராய்க்கு வாய்ப்பளித்திருக்கிறார் இயக்குநர்.

ஒளிப்பதிவைப் பற்றி ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை.. முழுக்க முழுக்க வெளிநாட்டிலேயே படமாக்கப்பட்டிருப்பதால் அழகு இடங்களாக பார்த்தே அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.. இசையமைப்பில் மரியா ஓ மரியா என்றொரு பாடல் கேட்க நன்றாக இருந்தது. ஆனால் பாடல் காட்சிதான்.. கண்ணைக் கூச வைக்கிறது.

ஒரேயடியாக ஆம்பளைங்களை காமாந்தக்காரனா, வில்லனாக, ஏமாற்றுக்காரனாகவே காட்டிக் கொண்டிருந்தால் நன்றாக இருக்காதே.. அதனால்தான் இந்த முறை கொஞ்சம் நல்லவனாகக் காட்டி 'நமது குலத்திற்கு' கொஞ்சூண்டு பெருமை சேர்த்திருக்கிறார் இயக்குநர். இந்த ஒரு விஷயத்துக்காகவே செல்வாவுக்கு எனது தேங்க்ஸ்.

'நான் அவனில்லை..' பார்க்கவேகூடாத திரைப்படமல்ல.. நேரம் கிடைத்தால் 'தனியாகச்' சென்று பார்க்கலாம்.

யோகி - திரைப்பட விமர்சனம்

27-11-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


'டூட்ஸி' என்கிற ஆப்பிரிக்க திரைப்படத்தின் ரீமேக்தான் இந்த 'யோகி' என்கிற தமிழ் திரைப்படம்..

பணத்துக்காக எதையும் செய்யும் தாதா கும்பலின் தலைவன் யோகி. வேட்டை என்று சொல்லப்படும் தங்களது தாதா பணிக்காக ஒரு நாள் கிளம்புகிறார்கள். சுனாமி என்கிற ஹோட்டலுக்குள் புகுந்து வேலையாட்களைக் கட்டிப் போட்டுவிட்டு, ஹோட்டல் அறைகளுக்குள் தடாலடியாக நுழைந்து தங்கியிருந்தவர்களைத் தாக்கித் தங்களது வேட்டையை நடத்துகிறார்கள் யோகியும், அவனது ஆட்கள் மூன்று பேரும்.

காருக்குரிய பெண் வேகமாக வெளியே ஓடி வர பின்னால் துரத்தி வந்த போலீஸ் காரால் தாக்கப்பட்டு கீழே விழுகிறாள். யோகி வழியில் ஓரிடத்தில் காரை நிறுத்திவிட்டு ஓட முயல.. காரின் பின் சீட்டில் அம்சமாகப் படுத்திருக்கும் கைக்குழந்தை வீரிட்டு அழுக.. இனிதான் கதையே..

அந்தக் குழந்தையை அங்கேயே விட்டுவிட்டுப் போக மனமில்லாமல் தூக்கிச் சென்று வளர்க்கிறான் யோகி. அதற்காக அவன் படும் சிரமங்களும், அந்தக் கஷ்டத்துடன் குழந்தையை வளர்க்க முயலும் அவனது நோக்கத்திற்கான காரணம் என்ன என்பதிலும்தான் யோகியின் பிறப்பு முதல் இன்றைய வரையிலான ஜாதகமே சொல்லப்படுகிறது.

இன்னொரு புறம் போலீஸ் காரில் மோதி மருத்துவமனையில் பேச்சுமூச்சில்லாமல் கிடக்கிறாள் குழந்தையின் அம்மா. குழந்தையின் அப்பா நகரின் அத்தனை வட்டங்களுக்கும் படையெடுத்து லோக்கல் தாதாக்களிடம் பணத்தை அள்ளிக் கொடுத்து பணத்தையும் கொடுத்து குழந்தையை மட்டும் மீட்டுக் கொடுக்கும்படி கெஞ்சுகிறான்.

போலீஸும் ஒரு பக்கம் குழந்தையைத் தேடுகிறது. லோக்கல் தாதாக்களும் தேடுகிறார்கள். இந்தத் தேடுதல் கடைசியில் யோகியின் கைக்கும் வருகிறது. யோகியும் குழந்தையும் என்ன ஆனார்கள் என்பதுதான் மீதிக் கதை..

இப்படியொரு மாற்று மொழி திரைப்படத்தின் கதையையும், திரைக்கதையையும் அப்படியே காட்சி மாறாமல் சுட்டுத் திரைப்படமாக்க நிச்சயம் அசாத்தியமான தைரியம் வேண்டும். அந்த தைரியம் இத்திரைப்படத்தின் கதை ஆசிரியராக தன் பெயரைப் போட்டிருக்கும் இயக்குநர் சுப்ரமண்யசிவாவுக்கு உண்டு. இதற்காக அவரைப் பாராட்டியே தீர வேண்டும்.

அமீரின் அறிமுகக் காட்சியிலேயே கை தட்டல் பறக்கப் போகிறது என்று எதிர்பார்த்து போயிருந்த எனக்கு தியேட்டரின் உள்ளே நடந்த 'உல்டா' அதிர்ச்சியைத் தந்தது. 'நாடோடிகள்' திரைப்படத்தின் முதல் காட்சியில் சசிகுமாருக்கு கிடைத்த வரவேற்பை இந்த நேரத்தில் ஞாபகப்படுத்திக் கொள்கிறேன்.

இத்திரைப்படத்திற்கு அமீர் எதற்கு என்பது புரியவில்லை. தனது உடலை கொஞ்சம் ஏற்றி, இறக்கி மற்ற நடிகர்களுக்கு சவால் விடுவதைப் போல சிக்ஸ் பேக்கெல்லாம் வைத்து காட்டியிருக்கிறார். சண்டைக் காட்சிகளுக்கு வழக்கம்போல டெக்னாலஜி இருப்பதால் அதனை வைத்துத் தப்பித்துக் கொண்டார். மற்ற காட்சிகளில்..?

நடிக்க வேண்டிய காட்சிகளில் அது தேவையில்லாததுபோல் அமீரின் மீது சுமையைச் சுமத்தாமல் விடுபட வைத்து அவரைக் காப்பாற்றியிருக்கிறார் இயக்குநர்...

தமிழ்ச் சூழலுக்கு புதிய விஷயமே மதுமிதாவுக்கும் குழந்தைக்குமான உறவுதான். இந்த விஷயம்தான் 'டூட்ஸி'யிலும் முக்கியமானதாக இருந்தது.. செய்நேர்த்தியினால் அந்தக் காட்சிகள் மட்டும் ரசிகர்களால் மிகவும் ரசிக்கக்கூடிய வகையில் எடுத்திருக்கிறார் இயக்குநர்.

கிட்டத்தட்ட குடிசைப் பகுதியாக இருக்கும் அந்த இடத்தில் குழந்தையின் சப்தங்கள்கூட வெளியில் கேட்காமல் இருக்கிறது என்று இயக்குநர் சொல்வது கொஞ்சம் காமெடியாக இருந்தாலும், கதையை நகர்த்தியாக வேண்டுமே என்கிற அவரின் தவிப்புக்காக அதனை நாம் கொஞ்சம் விட்டுக் கொடுக்கலாம்.

குடியும், போதையும், புகையும் இளைஞர்களை எந்த அளவுக்கு ரசிக்க வைக்கும் என்பதற்கு இந்தப் படமும் ஒரு சாட்சி. முதல் காட்சியில் இருந்து இறுதிவரையில் புகை பொங்காத ஷாட்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு அந்த ரவுடியிஸத்தை அப்பட்டமாகக் காட்டுவதாக நினைத்து போதை வஸ்துக்களை பரப்பியிருக்கிறார்கள்.

இன்றைய இளைய சமுதாயத்தினரின் எண்ணவோட்டங்கள் வெறுமையான கொண்டாட்டங்கள் மட்டுமே என்பதற்கு இத்திரைப்படத்தில் கைதட்டல்கள் கிடைத்த காட்சிகளை வரிசைப்படுத்தினால் தெளிவாகிறது.

கூடவே எதுவெல்லாம் நமக்கு தவறாகப் படுகிறதோ அதற்கெல்லாம் மற்றுமொரு நியாயமும் உண்டு என்பதையும் உறுதிப்படுத்துகிறது ரசிகர்கள் கூட்டம். பேருந்தில் நடக்கும் முதல் கொலைக்குக் கிடைத்த கைதட்டல் இதைத்தான் உறுதிப்படுத்தியது. அது வெறும் பணத்துக்காக நடக்கும் கொலைதான். அதற்குமா..?

தன்னைப் பள்ளிக்கூடம் போக விடாமல் தடுத்து, தனது அம்மாவை சித்ரவதைப்படுத்தி, சிறு குழந்தையான தங்கை சாவுக்குக் காரணமாக இருந்து, அம்மாவின் தற்கொலைக்கு சிறிதும் வருத்தப்படாத தனது அப்பாவுக்கு சிறுவன் யோகி கொடுக்கும் தண்டனையின்போதுதான் தியேட்டரே கரவொலியில் கலகலத்தது. மறுபடியும் உள்ளுக்குள் ஒரு பயம்.. வரவேற்பு எதற்கெல்லாம் கிடைக்கிறது என்று பார்த்தால் எதிர்காலத்தை நினைத்து பயமாகத்தான் இருக்கிறது..

சிறிய சிறிய வெட்டு, வெட்டான காட்சிகளால் கதையை நகர்த்திவிட முடியும் என்று நம்பியிருக்கிறார் இயக்குநர். இயக்குநருக்கு பக்கபலமாக ஒளிப்பதிவாளரின் 'நச்'சான படப்பதிவு. சண்டைக் காட்சிகளில் 'எடிட்டிங் தெய்வம்' கண்வித்தை காட்டியிருக்கிறார். முதல் பாடல் பல 'முன்னாள் ஹிட்'டுகளின் கலவை. ஆனால் ஆட்டம் அசத்தல் ரகம்.. அமீர் ஹீரோவாக நிற்பது இங்குதான்.. இன்னும் மூன்று பாடல்கள் இருந்தன. தனியாகக் கேட்டால்தான் புரியும்போலிருந்தது.

உடன் நடித்த அக்மார்க் திருவான்மியூர் சென்னைவாசிகளுக்கு அதே மேக்கப். ஏதோ இது போன்ற ரவுடித்தனம் செய்பவர்கள் எல்லாம் இப்படித்தான் இருப்பார்கள் என்று நினைத்து அது போலவே செயற்கைத்தனம் மிக்க அலங்கோலத்துடன் காட்சியளிக்கிறார்கள்.

அமீரின் நண்பனாக கவிஞர் சினேகன் படம் முழுவதும் பவனி வருகிறார். அவர் முடிவுறும் காட்சியில் பாய்கின்ற துப்பாக்கிக் குண்டின் சப்தம் தியேட்டரில் அத்தனை பேரையும் உலுக்கிவிட்டது. ஹேட்ஸ் ஆஃப் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் அண்ட் சவுண்ட் ரிக்கார்டிங்..

இயக்கத்தில் சிற்சில இடங்களில் நகைச்சுவையும், திடுக் திருப்பங்களும் இருக்கத்தான் செய்கின்றன. முக்கியமாக முதல் கொலைச் சம்பவம், ரவுடிகள் கூட்டத்திற்கிடையில் புகுந்து வெளியேறும் அமீர் மின்னல் வேகத்தில் செய்கின்ற கத்தி டச்.. பாம்பை அகற்றியவுடன் குழந்தை பளீரென்று சிரிப்புடன் பார்க்கின்ற காட்சி.. குழந்தையுடன் நண்பர்கள் அமர்ந்திருக்கும் காட்சி.. இறுதியில் குழந்தையின் அம்மா என்ட்ரியாவது என்று பல இடங்களில் இயக்குநரின் கலக்கல் நன்றாகவே இருக்கிறது.

ஹோட்டலில் நங்கையருடன் ரூம் போட்டுத் தங்கியிருக்கும் இன்ஸ்பெக்டர்.. அந்த இன்ஸ்பெக்டரிடமே கொள்ளையடித்துவிட்டதால் மனிதர் கருவிக் கொண்டு திரிவது.. அவருடைய துப்பாக்கியின் மூலமாக நடந்த ஒரு கொலைக்காக மேலதிகாரியிடம் வெளிப்படையாக உண்மையைச் சொல்லி தன்னைக் காப்பாற்றும்படி இன்ஸ்பெக்டர் சொல்கின்ற காட்சி என்று முடிந்த அளவுக்கு இயல்பை காட்டியிருக்கிறார் இயக்குநர்.

மதுமிதா இயல்பாகவே நன்கு நடிப்பவர்தான்.. இப்படத்திலும் அதை இன்னும் கொஞ்சம் செய்திருக்கிறார். இந்த கேரக்டரை செய்வதற்கு நடிகைகள் பலரும் முன் வராதததற்கான காரணம் திரைப்படத்திலேயே உள்ளது. தைரியமாக முன் வந்த மதுமிதாவுக்கு அதற்கான பரிசுகள் காத்திருக்கின்றன. சந்தேகமேயில்லை.

கஞ்சா கருப்பு என்கிற நடிகரை வேஸ்ட்டாக்கியிருக்கிறார்கள். 'நன்றிக்கடனை' செவ்வனே செய்திருக்கிறார் கஞ்சா. ஆனால் கதையுடன் ஒட்டாததால் கவனத்தில் கொள்ள முடியவில்லை. ஆனால் வருகின்ற காட்சிகளில் கொஞ்சம் நகைக்க வைக்கிறார். படத்தை முடித்து வைக்க இவர் வருகின்ற காட்சியில் இயக்குநரின் 'டச்' நச்..

"நான் செய்றதெல்லாம் எனக்குத் தப்பாவே தெரியலை.." என்று யோகி சொல்வதன் மூலம் அவனுக்குத் தெரிந்த நியாயம், அநியாயம் எது என்பதை இயக்குநர் சொல்லிவிட்டதால் நமக்கும் அதனை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. "உலகத்துல நல்லவங்களும் இருக்காங்க.." என்ற மதுமிதாவின் அறிவுரைக்கு "எங்க இருக்காங்க..?" என்ற யோகியின் கேள்வி நச் பதில்..

ஒருவகையில் இந்தக் கேள்விக்கு விடை தேடுவதுதான் இத்திரைப்படம். தேடினால் கிடைக்கும். ஆனால் எப்படி தேடுவது என்றுதான் இந்த யோகிக்கும், அவனைப் போன்ற ஆட்களுக்கும் தெரியவில்லை.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் வன்முறையின் உச்சக்கட்டம். சண்டைக் காட்சியில் தென்படும் உக்கிரத்தை சற்றுக் குறைத்திருக்கலாம். ஒரிஜினல் திரைப்படத்தில் இது போன்று இல்லை.. குழந்தையை மீண்டும் அவர்கள் வீட்டிலேயே ஒப்படைக்க வருவதுதான் ஒரிஜினல் கிளைமாக்ஸ். இதை மட்டும் தமிழுக்காக கொஞ்சம் மாற்றியிருக்கிறார்கள். ஆனால் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்றே நினைக்கிறேன்..

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று..

வனவிலங்குகள் வாரியம், சுகாதாரத் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் போன்று குழந்தைகள் வாரியமும் திரைப்படங்களின் மீது ஏதாவது கட்டுப்பாடுகளை விதித்தால் நல்லதோ என்று இத்திரைப்படத்தை பார்த்த பின்பு தோன்றுகிறது.

ஒரு கைக்குழந்தையின் அழுகையையும், அதனை காட்சிகளுக்காக படுத்தியிருப்பதை பார்த்தால் கொடூரமாக இருக்கிறது. கதைக்குத் தேவையானது என்றாலும் அந்த எறும்பு காட்சியையும் பாம்பு குழந்தையின் மீது ஊர்கின்ற காட்சியிலும் நமக்கு மனம் பகீரென்கிறது.. விலங்களுக்காகவாவது ஒரு வாரியம் இருக்கிறது.. குழந்தைகளுக்கு..? யார் இதையெல்லாம் கேட்பது..?


'கத்திக்குக் கத்தி..' 'பல்லுக்குப் பல்..' என்பதை விளக்கித்தான் மாதந்தோறும் 10 திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. அதில் இதுவும் ஒன்று என்பதுபோல் ஆனது மிகப் பெரிய சோகம்..

நல்லதொரு திருப்புமுனையைத் தர வேண்டிய கிளைமாக்ஸ் சீனை, 'சினிமாட்டிக்காக' முடித்ததினால், 'யோகி'யின் மீதான பரிதாப உணர்வை பார்வையாளனுக்குள் ஏற்படுத்தவேயில்லை. ஆனாலும்..

யோகி - அமீருக்கு ஒரு யோகம்தான்..!!!

சுப்பையா வாத்தியாரின் சாதனை..! நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..!

24-11-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பதிவுலகிற்குள் மாதந்தோறும் 20 பேர் வருவதும், அதில் பாதி பேர் சில காலங்களில் சத்தம் இல்லாமல் மறைவதும் சகஜமாக போய்க் கொண்டிருக்கிறது. எழுத்து என்பது அனைவருக்குள்ளும் இருக்கிறது. வரும்.. வருகிறது. ஆனால் அனைவருக்கும் பிடித்தமாக எழுதுவது என்பது சிலரால் மட்டுமே முடிகிறது. அது இறைவனின் கொடை..

அந்த வரிசையில் நமது வாத்தியார் திரு.சுப்பையா அவர்களின் எழுத்துக்கள் வலையுலகத்தில் அத்தனை பிரிவினரையும் கவர்ந்திழுத்திருக்கிறது.



ஆன்மிகம், ஜோதிடம், ஜாதகம் என்று எழுதினாலும் அதில் நம்பிக்கை இல்லாதவர்களைக்கூட அதன் மீது ஈர்க்கக் கூடிய அளவுக்கு அவருடைய எழுத்து வன்மை அதில் தெரிகிறது.

அந்த நம்பிக்கையில்லாமல் எதிர்க் கேள்விகளை அடுக்கி வைப்பவர்களுக்குக்கூட மிக நாகரிகமாக பதில்களைச் சொல்லும் ஐயாவின் சகிப்புத்தன்மையும், பெரிய மனதும் ஊரறிந்தது.

அவருடைய வகுப்பறை என்னும் தளம் எத்தனையோ வலைப்பதிவர்களுக்கும், படிக்கக் கூடிய ஆர்வலர்களுக்கும் பிரமிப்பை ஊட்டியிருக்கிறது.. எதிர்காலம் பற்றிய ஒரு சிறு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

அவருடைய சிறுகதைத் தொகுப்புகள் மூன்றுமே ரத்தினச் சுருக்கமான வாழ்க்கை வழிகாட்டிகள். அப்படித்தான் நான் நினைக்கிறேன். ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு நீதியினைச் சுட்டிக் காட்டி வாழ்க்கை என்பது என்ன என்பதை நமக்குத் தெளிவாக்கியிருக்கிறார்.

இத்தகைய வித்தகர் நமது வலையுலகில் பவனி வருவது நிச்சயம் நமக்குப் பெருமைதான். நான் சற்றும் கிஞ்சித்தும் அவரை உயர்த்திப் பேசவில்லை. அவருக்குத் தற்போது கிடைத்துள்ள பாலோயர்ஸ் எண்ணிக்கையை சற்று பாருங்கள்..

வலையுலகில் முதல் முறையாக ஒரு தமிழ் பதிவருக்கு ஆயிரம் பாலோயர்களைத் தாண்டியது என்றால் அது நமது வாத்தியாருக்குத்தான்.. இப்போது அவருடைய பாலோயர்களின் எண்ணிக்கை 1032-ல் நிற்கிறது. வாத்தியாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..!

நானும் மூன்றாண்டுகளாக இங்கே குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறேன்.. இப்போதுதான் 300-ஐ தாண்டியிருக்கிறேன். ஆனால் ஐயா அவர்களை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை பார்த்தால் அவருடைய எழுத்தின் வலிமை தெரிகிறது.. புரிகிறது..

அவருடைய கொள்கையில் மாற்றுக் கருத்து உள்ளவர்கள்கூட என்ன சொல்லப் போகிறார்..? எப்படிச் சொல்லப் போகிறார்..? என்கிற ஆர்வத்தில் ஐயாவின் எழுத்தில் கிறங்கிப் போயிருக்கிறார்கள் என்பது என் தெளிவு.

ஐயாவின் இந்த சாதனையை ஊர் அறிய, உலகறிய பாராட்டும் கடமை அவருடைய வகுப்பறை மானிட்டர் என்கிற முறையில் எனக்குக் கிட்டியிருப்பது எனக்குப் பெருமைதான்..

வகுப்பறையின் பெருமையும், ஐயாவின் சீரிய எழுத்தும் மென்மேலும் வளர்ந்து வலையுலகை ஆட்கொள்ள வேண்டுமாய் என் அப்பன் முருகப் பெருமானிடம் வேண்டிக் கொள்கிறேன்.

வகுப்பறை வாழ்க..! சுப்பையா வாத்தியார் வாழ்க..!

புதுச்சேரியின் திண்ணிப் பண்டாரங்களான அரசியல்வியாதிகள்..!!!

22-11-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அரசியல்வாதிகளை 'அரசியல்வியாதிகள்' என்றே நான் குறிப்பிட்டு வருவதைக் குறித்து பல அரசியல் விமர்சனப் பதிவர்கள் நேரிலும், எழுத்திலும் ரொம்பவே வருத்தப்பட்டுக் கொண்டார்கள். 'எனது அரசியல் விமர்சனங்கள் ரொம்பவே ஓவராக இருப்பதாக' அவர்கள் குறை சொல்லி வருகிறார்கள்.

நான் என்ன வேண்டுமென்றே பொச்செரிச்சலுடனா அவர்களைக் கடித்துக் குதறிக் கொண்டிருக்கிறேன். முகமூடி அணிந்து கொள்ளையடிக்கும் திருட்டுக் கும்பலைப் போல, முகமூடி அணியாமல் வெள்ளை வேஷ்டி, சட்டையில் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் இந்தக் கும்பலுக்கென்ன மாலை, மரியாதையா செய்ய முடியும்..?

நமது மாநிலம்தான் இப்படி என்றால் கேள்வி கேட்பாரே இல்லாத புதுவை மாநிலத்தில் கேட்கவா வேண்டும்? புகுந்து விளையாடுகிறார்கள் அமைச்சர்கள்..


மக்கள் ஏதேனும் குற்றம், குறைகளை சுட்டிக் காட்டிப் பேசினால் மட்டும் “ஐயையோ.. நம்ம ஸ்டேட்டை பத்தி உங்களுக்கே தெரியாதா? எல்லா பைலும் டெல்லிக்கு போய் கையெழுத்தாகிதான் வரணும்.. கொஞ்சம் லேட்டாகும்.. எல்லாத்துக்கும் டெல்லிதான் காரணம்..” என்று கூசாமல் பொய்யை மொழுகி அதன் மேல் சாணியைத் தெளித்து கோலம் போட்டும் வாய்ச்சொல் வீரர்கள் அல்லவா இவர்கள்..

ஆனால் தங்களது சொந்த நலன்களுக்காக கொள்ளையடிக்க இறங்கிவிட்டால் மட்டும் தயங்காமல் உடனுக்குடன் காரியங்களைச் செய்து கொள்கிறார்கள். அதிலும் உடன் இருந்தே குழி பறிப்பது, காலை வாரி விடுவது என்பதெல்லாம் புதுவை அரசியலில் மிக சர்வசாதாரணமான விஷயம். எல்லாம் ஒரு லெவல் வரைக்கும்தான்.. ஆட்சிக்கு வந்துவிட்டால் அந்தப் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கூட்டுக் கொள்ளையடிக்க தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொள்வார்கள்.

இதோ இங்கே பாருங்கள்.. புதுவையில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் தலைமையிலான அரசின் முதலமைச்சரும், சில அமைச்சர்களும் மக்களின் வரிப்பணத்தை எப்படியெல்லாம் கொள்ளையடித்திருக்கிறார்கள் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

தகவல் கேட்புரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட சில உண்மைத் தகவல்கள் இந்த அரசியல் வியாதிகள் சிறையில் இருக்க வேண்டிய வியாதிகள்தான் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.


புதுவை முதல்வர் வைத்திலிங்கம் தனது சொந்த வீட்டில் குடியிருந்து கொண்டே வீட்டு வாடகையை அரசிடம் இருந்து வசூலித்து வருகிறார். மாத வாடகை 39000 ரூபாயாம். இவரல்லவோ முதல் அமைச்சர்..?

2008, ஆகஸ்ட் 9-ம் தேதியன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் திண்பண்டங்களுக்காக முதல்வர் செலவிட்ட தொகை 1 லட்சத்து 6000 ரூபாயாம். இதே போல் ஒன்பது மாதங்களில் திண்பண்டங்களுக்காக மட்டுமே 10 லட்சத்து 4000 ரூபாயை செலவழித்திருக்கிறார் முதல்வர் வைத்திலிங்கம். இவரை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை..

இவர் மட்டுமா? தலையே இப்படி இருந்தால் 'வாலுகள்' எந்த லட்சணத்தில் இருக்கும்..?

தொழிலாளர் துறை அமைச்சர் கந்தசாமி தனது சொந்த வீட்டிற்கு வாடகையாக அரசிடமிருந்து பெறும் தொகை 14000 ரூபாய். திண்பண்டங்களுக்காக ஒன்பது மாதங்களில் இந்த அமைச்சர் செலவிட்டுள்ள தொகை, அதிகமில்லை ஜென்டில்மேன்ஸ்.. 9,47,000 ரூபாய் மட்டுமே. இதுபோக டீ, பிஸ்கட்டுக்கான செலவு மட்டும் 3,49,648 ரூபாயாம்.


கல்வித்துறை அமைச்சர் ஷாஜகான் தனது சொந்த வீட்டிற்கு அரசிடமிருந்து வாடகையாக பெறும் தொகை 69,940 ரூபாய். இதில் இதுவரையில் அந்த வீட்டை அழகுபடுத்த வேண்டி அவர் செலவிட்ட அரசுப் பணம் 17,49,187 ரூபாய். இன்னமும் 15,03,000 ரூபாய்க்கு கொட்டேஷன் கொடுத்திருக்கிறாராம்.. அதுவும் மத்திய அரசிடமிருந்து சாங்ஷன் ஆகிவிட்டதாம்..

2008, அக்டோபர் 28-ம் தேதி ஒரு நாளில் மட்டும் 78,000 ரூபாய்க்கு திண்பண்டங்கள் வாங்கியதாக கணக்குக் காட்டியிருக்கிறார். இவர் செலவிட்டுள்ள நான்கு மாத திண்பண்டங்கள் செலவுத் தொகை 1,50,000 ரூபாய். ஒன்பது மாத திண்பண்டச் செலவு 2,79,000 ரூபாய் என்று மொத்தக் கணக்கும் காட்டி பில் பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது.

பொது சுகாதாரத் துறை அமைச்சர் நமச்சிவாயம் தனது அலுவலகத்தை அலங்காரப்படுத்த செலவழித்த தொகை 13,25,511 ரூபாய். இனி செய்யப் போகும் செலவுக்கான எஸ்டிமேட் தொகை ரூபாய் 9,88,880. அக்டோபர் 28-ம் தேதியன்று ஒரு நாளில் மட்டும் திண்பண்டங்களுக்காக இவர் செலவிட்ட தொகை 75,000 ரூபாய். இவருடைய ஒன்பது மாத திண்பண்டங்களுக்கான மொத்தச் செலவு 6,88,000 ரூபாய்.


உள்துறை அமைச்சர் வல்சராஜ் டிசம்பர் 5, 2008 அன்று ஒரு நாள் மட்டும் திண்பண்டங்களுக்காக 60,000 ரூபாயை செலவழித்திருக்கிறார். இவருடைய ஒன்பது மாத திண்பண்டச் செலவு 4,35,000 ரூபாயாம்.

போதுமா..?

கிராமப்புறங்களில் தங்களுடைய குடிசை வீட்டை மராமத்து செய்யவே வக்கில்லாமல் எத்தனையோ ஏழை மக்கள் அல்லாடிக் கொண்டிருக்க..

இந்த வெட்கங்கெட்ட ஜென்மங்கள் லட்சம், லட்சமாக தின்றே தீர்க்கிறார்களே.. இவர்களையெல்லாம் அரசியல் வியாதிகள் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது..?

சுகுணா திவாகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்..!

20-11-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


பகுத்தறிவுத் திலகம், தந்தை பெரியாரின் சீற்றமிகு சீடர், சுயமரியாதைச் சுடரொளி, நமது இனிய நண்பர், மற்றும் நமது பதிவுலக சகாவுமான அண்ணன் சுகுணா திவாகர் இன்று தனது 31-வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார்.

அன்னாருக்கு நமது பதிவுலகம் சார்பாக எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்ணன் இன்றுபோல் என்றும் இளமையுடன், இனிமையுடன் வாழ எனது அப்பன் முருகப் பெருமானை வேண்டிக் கொள்கிறேன்..!

ஜெயில் - ஹிந்தி திரைப்பட விமர்சனம்..!

20-11-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மதூர் பண்டார்கரின் திரைப்படங்களை முதல் நாளே ஆர்வத்துடன் சென்று பார்க்கத் துடிக்கின்ற ரசிகர்களில் நானும் ஒருவன். ஆனால் இந்தத் திரைப்படம் வந்ததும் தெரியாமல், ஓடுவதும் தெரியாமல் என் கண்ணுக்குப் படாமல் எப்படி தப்பித்தது என்று எனக்குத் தெரியவில்லை.

ஹெட்லைன்ஸ் டுடே சேனலில் இடையிடையே ஓடிய விளம்பரங்களை வைத்துத்தான் இப்படியொரு திரைப்படம் ரிலீஸாகியிருப்பதே எனக்குத் தெரிந்தது. விடவில்லை. தேடிப் பிடித்து பார்த்துவிட்டேன்.

சந்தர்ப்ப சூழலால் குற்றவாளியாக உருமாறும் ஒருவன், தனக்குப் பழக்கமே இல்லாத அந்தக் குற்றச் சூழலை எப்படி எதிர்கொள்கிறான் என்பதுதான் இந்த ஜெயில் சொல்லும் கதை.


பராக் தீட்சித் என்னும் 25 வயது இளைஞன் அந்த வயதுக்கே உரித்தான துடிப்போடு ஒரு பைனான்ஸ் கம்பெனியில் பணியாற்றி வருகிறான். அவனுக்கு மேனேஜராக பிரமோஷன் கிடைத்த சந்தோஷத்தை தனது வருங்கால மனைவியுடன் கொண்டாடிய மறுநாளே ஒரு துன்பவியல் சம்பவத்தில் சிக்குகிறான்.

பராக் அவனுடைய ரூம்மேட்டான கேசவை அழைத்துக் கொண்டு தனது காரில் செல்கையில் வழியிலேயே போலீஸ் அவர்களை விரட்டிப் பிடிக்க பராக்குக்கு எதுவுமே புரியாத, தெரியாத சூழலிலேயே அந்த இடத்திலேயே கேசவ் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்படுகிறான். கேசவ் வைத்திருந்த பைகளை சோதனையிட அதில் போதைப்பொருள் இருக்கிறது. கேசவ் அந்த கேடுகெட்டத் தொழிலில் இருக்கிறான் என்பதே அப்போதுதான் பராக்கிற்கே தெரிகிறது. ஆனால் சட்டத்திற்குத் தெரியாதே..

போலீஸாரால் விசாரிக்கப்படுகிறான். அடிக்கப்படுகிறான். சிறைப்படுத்தப்படுகிறான். தொடர்கிறது கதை. வாழ்வின் கொண்டாட்டக் களங்களையும், மேற்கத்தியக் கலாச்சாரத்தையும், வாலிபத் துடிப்பின் அத்தனை இன்பங்களையும் துய்த்து, அதிலேயே தோய்ந்து போயிருந்த பராக்கிற்கு இந்த சிறை அனுபவம் என்னென்ன சொல்லிக் கொடுக்கிறது என்பதைத்தான் அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் சொல்லியிருக்கிறார் மதூர்.

தான் இதுவரையில் பார்த்திராத, பார்க்க விரும்பியிருக்காத அந்தச் சிறைச் சூழலை விரும்பி ஏற்க வேண்டிய கட்டாயம் வரும்வரையில் அல்லப்படும் பராக்கின் அன்றாட நடவடிக்கைகளை நீட்டமாகக் காட்டியிருப்பது சற்றே அலுப்பு தட்டுகிறது.

திருடர்கள், கொள்ளைக்காரர்கள், சிறு குற்றங்கள் செய்தவர்கள் என்று 20 பேர் இருக்க வேண்டிய அறையில் 60 பேர்களை அடைத்து வைத்திருக்க.. அந்த மூச்சுவிட முடியாத அறைக்குள் இருக்கும் அத்தனை கைதிகளுக்குள் இருக்கும் ஆயிரமாயிரம் கதைகளில் ஒன்றிரண்டின் துணையோடுதான் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.


ஜாமீன் கேட்டு அவனது காதலியும், அம்மாவும் முயல்வது.. போதை மருந்து கடத்தல் என்பதால் ஜாமீன் கிடைக்காமல் போவது.. போலீஸ் கொஞ்சம் விட்டுக் கொடுத்தாலும் ஜாமீன் கிடைத்துவிடும் என்ற வக்கீலின் அட்வைஸிற்காக ஒரு நொடியில் வக்கீலின் பீஸ் உயர்வது.. கோர்ட்டில் பராக்கின் வக்கீல் தனது வக்கீல் தொழிலின் நேர்மையையும், கன்னியத்தையும் கடைப்பிடிக்க வேண்டி நான்கு வார்த்தைகளில் தனது வாதத்தை முடித்துக் கொள்ள... பராக் கொள்ளும் பதட்டம் என்று திரைக்கதையில் வேகம் அதிகமாக இருந்தாலும், தொடர்ந்து போலீஸ், ஜாமீன், கோர்ட், சிறை என்று நான்கு இடங்களுக்குள்ளேயே திரும்பித் திரும்பி சுற்றி வருவதால் கொஞ்சம் போரடிக்கத்தான் செய்கிறது.

பூனா மத்திய சிறையிலும், எரவாடா சிறையிலும் சில காட்சிகளை எடுத்திருந்தாலும், முக்கால்வாசி செட்போட்டு எடுக்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. செட் என்பதே தெரியாமல் இருப்பதுதான் கலை இயக்குநருக்கு பெருமை என்பது அவருக்குத் தெரியாமல் போனது எனக்கு ஆச்சரியம்தான்..


சதா சர்வகாலமும் பேசிக் கொண்டேயிருப்பது.. கவலைப்படாமல் கேரம் போர்டு விளையாடுவது.. அடுத்தவர்களைப் பற்றிக் கவலைப்படாத ஜீவன்களாக இருப்பது என்று சிறைக்கைதிகளை ஒரு ஹைஸ்கூல் ஸ்டூடண்ட்டுகளை போல் காட்டியிருப்பது சற்று ஓவரோ என்று தோன்றுகிறது.

இருந்தாலும் சிறையில் கன்விக்ட் வார்டனாக இருக்கும் மனோஜ்பாஜ்பாய்க்கு ஒரு கிளைக்கதை.. மற்றும் ஆஷிஷ் சர்மாவுக்கு ஒரு கிளைக்கதை என்று சொல்லி மனதை கொஞ்சம் இளகச் செய்திருக்கிறார்.

பராக்காக நடித்திருக்கும் நீல் நிடின் முகேஷ் பாலிவுட்டில் இப்போது வளர்ந்து வரும் நடிகர் என்கிறார்கள். எப்போதும் சீரியஸாக இருக்கும் இவரது கேரக்டருக்கு இந்தக் கதாபாத்திரம் பொருத்தம்தான்.. சிறைக்குள் முதன்முதலாக வரும்போது துணிகளை அவிழ்த்துவிட்டு நிர்வாணமாக நிற்கச் சொல்லும் காட்சியில் கூசி குனிகிப் போய் நிற்கின்றபோது அந்த மேல்தட்டு வர்க்கத்தின் அப்பாவி வேஷம் கச்சிதமாகத் தெரிகிறது.

இவருடைய காதலியாக முக்தாகோட்ஸே என்னும் நடிகை. ஒரு படுக்கையறை காட்சியில் உருண்டு புரண்டுவிட்டு பின்பு பார்க்கும்போதெல்லாம் கண்களில் கண்ணீரை உருளவிட்டுக் கொண்டு சோகத்தைப் பிழிய முயன்றார். ஆனால் எனக்குத்தான் கண்ணு கலங்கவில்லை. அவருடைய அம்மாவும் இதே போலத்தான். எல்லா அம்மாக்களும் இப்படித்தானே..


சிறையை மட்டும் காட்டிவிட்டால் போதுமா? உள்அரசியலை காட்ட வேண்டாமா? நிறையவே காட்டியிருக்கிறார் மதூர். உள்ளேயே சி.எம். போன்ற தோரணையில் தாதா ஒருவர். அவருடைய கடைக்கண் பார்வை காட்டினால்போதும் கைதி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அவருடைய குடும்பத்தினரை ஜெகஜோதியாக கண்டு மகிழ்ந்துவிட்டு வரலாம். அந்த தாதாவின் அனுசரணை கிடைத்தால் சிறையிலும் நல்ல கவனிப்பு கிடைக்கும்.. தாதா உள்ளே இருந்தபடியே செல்போனில் வெளியுலக கம்பெனி விவகாரங்களை கவனித்துக் கொள்ளும் அழகே அழகு..

இந்திய நிர்வாக அரசியலின் பொய்த்துப் போன முகமூடிகளை இங்கே கொஞ்சமாவது திறந்து காட்டியிருக்கிறார் மதூர். முரண்டுபிடிக்கும் கைதிகளை அடித்து உதைப்பது, இருட்டறையில் அடைப்பது என்று அத்தாட்சி பெற்ற இந்திய அரசியல் அரக்கர்கள் செய்கின்ற கொடுமை பராக்கிற்கு கிடைக்கிறது. இனி வருவதை எதிர்கொள்வோம் என்ற பக்குவத்தினை பராக்கிற்கு இந்த சம்பவமே உருவாக்கிக் கொடுக்கிறது.

இறுதியில் தாதாவின் உதவியோடு தப்பிக்க நினைக்கும் காட்சியில் கன்விக்ட் வார்டனான மனோஜ் வாஜ்பாய் இதனை கண்டுபிடித்துவிட அந்த நொடியில் பின்னணி இசையே இல்லாமல் காட்சியில் ஒன்ற வைத்துவிட்டார் இயக்குநர். திட்டம் தீட்டி அதன்படியே அவர்கள் தப்பிக்க.. பராக்கால் தப்பிக்க முடியாத அளவுக்கு அவன் மனம் பண்பட்டுவிட்டதை காட்டியபோதே படம் சொல்ல வந்த நீதி என்ன என்பது தெளிவாகிவிட்டது.

இந்தியாவில் சிறைச்சாலைகளில் இருக்கின்ற இந்தியர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்றரை கோடி பேர். அதில் தண்டனை பெற்ற இந்தியர்கள் ஒரு கோடி பேர். மீதியிருக்கும் இரண்டரை கோடி இந்தியர்கள் வெறும் விசாரணைக் கைதிகள்தான்.

இவர்கள் செய்திருக்கும் குற்றத்திற்கு விசாரணை நடத்தி குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டால் அது இப்போது அவர்கள் அனுபவிக்கும் சிறைவாச காலத்தை பல மடங்கு தாண்டிவிடும். இப்படித்தான் இந்தியாவின் நீதித்துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

சிறையில் அடைத்துவைத்து விசாரித்தால்தான் நீதிமன்றங்களில் விசாரணைகள் சீக்கிரமாக முடியுமெனில் இத்தனை ஆண்டுகளாக இரண்டரை கோடி பேரை சிறையில் அடைத்துவைத்தும் அந்த வழக்குகள் முடிந்திருக்க வேண்டுமே..? இந்திய அரசியல் நிர்வாகத்தில் உயர்ந்த அமைப்பான நீதித்துறைக்குள் இருக்கும் சோம்பேறித்தனத்திற்கு ஒரு சிறிய உதாரணத்தை இந்தப் படத்தின் மூலம் காட்டியிருக்கிறார் மதூர்.

ஆனாலும் அவருடைய முந்தைய படங்களில் இருந்த உயிர்ப்பான நடிப்பு, விறுவிறுப்பான திரைக்கதை இவையிரண்டும் இத்திரைப்படத்தில் மிஸ்ஸிங் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஒரு முறை பார்க்கலாம் மதூர் பண்டார்கருக்காக..!

திடீர் பாசம்..! - சர்வேசனின் நச் கதைப் போட்டிக்கான சிறுகதை..!

15-11-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நம் வலையுலக இனிய நண்பர் சர்வேசன் அவர்கள் நடத்துகின்ற 'நச்!-2009 சிறுகதைப் போட்டி'க்காக நான் எழுதியிருக்கும் சிறுகதை இது..

திடீர் பாசம்..!

சந்திரன் மிக வேகமாகவே நடந்து கொண்டிருந்தான். அவனது கையைப் பிடித்தபடியே வந்து கொண்டிருந்த சிறுவன் அவனது வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் கிட்டத்தட்ட ஓடியபடியே உடன் வந்து கொண்டிருந்தான். சந்திரனின் ஒரு கை பேப்பர் கவரை பிடித்திருக்க அவனது மறுகையின் மணிக்கட்டுப் பகுதியைப் பிடித்தபடியே வருகிறான் சிறுவன்.

"என்ன பசிக்குதா..?" என்று சிறுவனை பார்த்து கேட்கிறான் சந்திரன். வாய் திறக்காமல் தலையை அசைத்து 'ஆமாம்' என்கிறான் சிறுவன். "பக்கத்துலதான் வீடு.. போனவுடனேயே சாப்பிடலாம்.. என்ன..?" என்று கேட்க சிறுவன் சரி என்று தலையசைக்கிறான்.

யாருமற்ற அந்த தெருவில் கதவுகளெல்லாம் சாத்தப்பட்டிருக்க தனது வீட்டின் வாசலுக்கு வந்து கதவைத் தட்டுகிறான் சந்திரன். பையன் அவனது கையை இறுகப் பிடித்துக் கொண்டு நிற்கிறான். கதவு திறந்த வேகத்தில் வார்த்தைகளும் வேகமாக பறந்து வருகின்றன சந்திரனை நோக்கி.

"ஐயா வீட்டுக்கு வர்றதுக்கு இவ்ளோ நேரமா..?" என்கிறாள் துளசி.. பையனை இழுத்தபடியே பதில் சொல்லாமல் வீட்டுக்குள் நுழைகிறான் சந்திரன். அப்போதுதான் சிறுவனை பார்க்கும் துளசி, "இது யாரு..?" என்று கேட்க.. அதற்குள் வீட்டுக்குள்ளேயே வந்து நிற்கும் சந்திரன், "யாருன்னு தெரியலை. பார்க்ல உக்காந்திருந்தேன். கிளம்பும்போது வாசல்ல நின்னு அழுதுகிட்டிருந்தான். பாவம்.. யாருமில்லையாம்.. அவங்க மாமா ஊருக்கு போறானாம்.. காசில்லைன்னான்.." துளசியின் குரலைக் கேட்ட சிறுவன் பயந்து போய் சந்திரனின் கால்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறான்.

சொல்லி முடிப்பதற்குள், "அதுக்கு.. அப்படியே வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தர்றதா..?" என்கிறாள் துளசி. "இல்ல துளசி.. ராத்திரியாயிருச்சு. பஸ் இருக்காது.. விடிஞ்சதும் அனுப்பி வைச்சிரலாம்..." என்றபடியே தனது கையில் இருந்த பேப்பர் கட்டை அவளிடம் கொடுக்கிறான் சந்திரன். "இதென்ன சத்திரமா..?" பேப்பர் கட்டில் இருந்த கீரையை வாங்கிக் கொண்டே துளசி கோபப்பட..

சந்திரன் பதில் சொல்லாமல் சிறுவனை பார்க்க சிறுவன் அண்ணாந்து பார்த்தவனின் முகத்தில் அர்த்தம் புரியாத கவலை. வெளியில் அனுப்பி விடுவார்களோ என்ற பயத்துடன் சிறுவன் நோக்க.. "மொதல்ல அவனை கொண்டு போய் விட்டுட்டு வாங்க.." என்று கத்துகிறாள் துளசி. "இல்ல.. ஒரு ராத்திரிதான.. இங்கயே தங்கட்டுமே.. காலைல அனுப்பி வைச்சிரலாம்.." சந்திரன் பையனின் தலையை ஆறுதலாகத் தடவியபடியே சொல்ல..

"னக்குப் பிடிக்கலீங்க.. ராத்திரி தங்கிட்டு காலைல போறதுக்கு இதொண்ணும் மடமில்லை.... கொண்டு போய் விட்டுட்டு வாங்க.." என்று ஹாலில் அவர்களை மறித்து நின்று கொண்டு துளசி சொல்ல.. சந்திரன் 'பாவம்மா..' என்று கண்களாலேயே கெஞ்சுகிறான்.

"முடியாது.. நான் விடமாட்டேன்.. மொதல்ல அவனை அனுப்பிட்டு அப்புறமா உள்ள வாங்க.. ஏதோ பார்க்ல பார்த்தாராம்.. கூட்டிட்டு வந்தாராம்.. கொஞ்சமாவது பொறுப்பு வேணாம்..? இதென்ன விளையாட்டா..?" என்று கேட்டு டைனிங் டேபிளில் பேப்பர் கட்டை பொத்தென்று போட்டுவிட்டு சேரில் அமர்கிறாள்.

"அதை அப்புறமா பேசிக்கலாம்.. பையன் ரொம்ப பசியா இருக்கான்.. மொதல்ல அவனுக்கு கொஞ்சம் சோறு போடும்மா.." சந்திரன் சொல்லி முடிப்பதற்குள் துளசி வெடிக்கிறாள். "நான் என்ன வைச்ச வேலைக்காரியா..? வர்றவன் போறவனுக்கெல்லாம் ஆக்கிக் கொட்டணும்னு எனக்கென்ன தலையெழுத்தா..?" என்கிறாள் ஆக்ரோஷமாக..

சந்திரன் கிட்டத்தட்ட அந்த சிறுவனின் நிலைமையில் இருந்தான் இப்போது. இனியும் துளசியிடம் பேசினால் எட்டு வீடு கேட்கும் அளவுக்குத் தனது குரலை நிச்சயம் உயர்த்துவாள். நாளை காலையில் அக்கம்பக்கம் வீட்டினர் தன்னை பார்த்து சிரிப்பார்கள் என்பது புரிந்தது.. வழக்கம்போலத்தான் இது என்றாலும், அந்தச் சிறுவனை பார்க்க பரிதாபமாக இருந்தது அவனுக்கு. வெளியில் போ என்று சொல்ல வாய் வர மறுக்கிறது..

சந்திரனின் தயக்கத்தைக் கண்ட துளசி.. "டேய் யார்ரா நீ..? உன் பேரென்ன..?" என்று கேட்க பையன் அவள் முகத்தைக் கூட பார்க்க பயந்து சந்திரனுக்குப் பின்னால் பதுங்கிக் கொள்ள.. "அவன் பேர் என்ன..?" என்கிறாள் சந்திரனிடம்.

சந்திரன் உண்மையாகவே "தெரியலம்மா.." என்று சொல்ல.. "ஐயோ.." என்று சொல்லித் தன் வாயைப் பொத்திக் கொள்கிறாள் துளசி. "பேரே தெரியலை.. வீட்டுக்குக் கூட்டிட்டு வர்றீங்களா..? ஏங்க உங்களுக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கா..? யார், என்னன்னு கேக்க வேண்டாம்..? அப்படியே கூட்டிட்டு வந்தர்றதா..? நீங்கள்லாம் ஒரு ஆம்பளை.. ச்சே.." என்று வெறுப்பை கண்களிலேயே உமிழ்ந்த துளசியை ஏறெடுத்துப் பார்க்க பயந்து போய் சந்திரன் வேறு பக்கம் பார்த்தபடியே, "சரி.. கத்தாத.. இப்ப சோறு போடு. விடிஞ்சதும் முதல் வேலையா நானே பஸ்ஸ்டாண்டுல கொண்டு போய் விட்டுட்டு வந்தர்றேன்.." என்கிறான்.

"இந்த கதையெல்லாம் என்கிட்ட வேண்டாம்.. மொதல்ல அவனை அனுப்பிட்டு அப்புறமா நீங்க உள்ள போங்க. இல்லேன்னா நீங்களும் சேர்ந்து வெளிய போயிருங்க.." என்று தீர்மானமாகச் சொல்கிறாள். சந்திரன் சிறுவனை பார்க்க சிறுவன் தன் கண்களில் உதிர்த்த சொட்டுக் கண்ணீருடன் சந்திரனை பார்க்கிறான்.

பட்டென்று எழுந்த துளசி, "ஊர் உலகத்துல எல்லா வீட்லேயும் ஆம்பளைங்க என்ன லட்சணத்துல இருக்காங்கன்னு நாலு வீட்டுக்கு போய் பார்த்தா தெரியும்.. இங்கதான் வீடு, வீடு விட்டா ஆபீஸ்ன்னு ஒரு சவம் மாதிரி போயிட்டிருக்கு.. எங்க தெரியப் போகுது..?" என்று சொல்லிக் கொண்டே பேப்பரில் சுருட்டியிருந்த கீரையைப் பிரித்து தனியே எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் நுழைகிறாள் துளசி.

சட்டென்று வெளியே எட்டிப் பார்க்கும் துளசி, "என்ன இன்னும் நின்னுக்கிட்டிருக்கீங்க.. மொதல்ல அவனை துரத்தி விடுங்க. ஏன் இப்படி என்னை அர்த்த ராத்திரில கத்த வைக்குறீங்க..?" என்கிறாள். மீண்டும் சமையலறையின் உட்பக்கம் திரும்பிக் கொண்ட துளசி "எவனையோ கூட்டிட்டு வந்து தங்க வைக்கணுமாம்.. அவன் யாரு, என்ன, எப்படின்னு தெரியலை.. விடிஞ்சு பார்த்தா வீட்ல என்னென்ன இருக்கோ இல்லையோ.. எதை எதை லவட்டிக்கிட்டு போகப் போறானோ.. யாருக்குத் தெரியும்..? ஆம்பளைன்னா இதையெல்லாம் கொஞ்சமாச்சும் யோசிக்க வேணாம்.. செய்புத்திதான் இல்லை.... சொல்புத்தியையாவது கேட்டுத் தொலையலாம்ல.. எனக்குன்னு வந்து வாச்சிருக்கு பாருங்க.." என்றபடியே கீரைக்கட்டுக்களைப் பிரித்து பாத்திரத்தில் போடத் துவங்க..

வெளியில் தனது முகத்தைப் ஏக்கத்துடன் பார்த்தபடியே நிற்கும் சிறுவனை பரிதாபமாக பார்க்கிறான் சந்திரன். இனியும் நின்றால் இவளிடம் பேச்சுவாங்கியே விடிந்துவிடும்.. வேறு வழியில்லை.. என்று நினைத்த சந்திரன் மெதுவாக பையனின் கையைப் பிடித்து வெளியே அழைத்து வருகிறான்.

பையன் சொல்ல முடியாத சோகத்தை முகத்தில் எப்படி காட்டுவது என்பதுகூடத் தெரியாமல் மெளனமாக சந்திரனுடன் வெளியேறுகிறான். தெருவில் நாலைந்து நாய்கள் மட்டுமே சுற்றிக் கொண்டிருக்க.. பையனை தனியே அனுப்ப முடியாது என்பதால் தானே அவனை பஸ்ஸ்டாண்டில் கொண்டு போய்விட முடிவு செய்து நடக்கிறார்.

பையன் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே வர.. "மனுஷியா இவ.. ஏதோ ஒரு வேளை சோறு போட்டா எதுல குறைஞ்சு போயிருவாளாம்..? சின்னப் பையன்னு ஒரு இரக்கம் வேணாம்.." என்றெல்லாம் சந்திரனின் மனம் குமைந்தாலும் துளசியை எதிர்த்து பேசுவது அவனுடைய சுபாவம் இல்லாததால் அந்தக் கோபத்தை நடையில் காட்டுகிறான் சந்திரன்.

பஸ்ஸ்டாண்டில் பையனை நிறுத்திவிட்டு அவன் பாக்கெட்டில் நூறு ரூபாயை திணித்து வைத்து "எங்கயாவது போயி பொழைச்சுக்கப்பா.." என்று சொல்லி அவன் கன்னத்தை ஆசையாகத் தடவிக் கொடுக்க.. பையன் கண்களில் பொங்கி நின்ற கண்ணீருடன் பணம் இருந்த பாக்கெட்டைத் தொட்டபடியே நிற்க.. விருட்டென்று திரும்பிப் பார்க்காமல் வீடு நோக்கி நடக்கிறார் சந்திரன்.

ஒரு நொடியில் திரும்பிப் பார்த்தால்கூட தன் மனம் மாறிவிடுமோ என்கிற சந்தேகத்தில் மனதை கல்லாக்கிக் கொண்டு வெக்கு, வெக்கென்று வீடு நோக்கி நடக்கிறார். அந்தப் பையன் தன்னை பார்க்கிறானோ..? தன் பின்னால் வருகிறானோ என்றெல்லாம் திடீரென்று ஒரு நொடி யோசித்துப் பார்த்தவர் வந்தாலும் வரலாம் என்று நினைத்து ஓட்டமும், நடையுமாக செல்கிறார்.

வீடு இருந்த தெருவுக்குள் வந்ததும் படுத்திருந்த நாய்கள் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு நம்மாளுல ஒருத்தருதான் என்பதைப் புரிந்து கொண்டு மீண்டும் தலையைச் சாய்த்துக் கொள்ள சந்திரன் தனது வீட்டை பார்த்து நடக்க..

வீட்டு வாசலில் கையில் பேப்பருடன் துளசி நின்று கொண்டிருக்கிறாள். "பொண்டாட்டியா இவ.. சண்டாளி.. அகங்காரி.. ஆணவக்காரி.. பேய், பிசாசு.. கொண்டுபோய் விட்டுட்டு வந்துட்டனான்றதைகூட வாசல்ல வந்து பாக்குறா பாரு.." என்று அவளைப் பார்த்த மாத்திரத்தில் மனதுக்குள் குமைந்தபடியே அவளை நோக்கி வருகிறான் சந்திரன்.

துளசியே அவரை நோக்கி ஓடி வருகிறாள். "ஏங்க.. எங்க அந்த பையன்.. எங்க பையன்..?" என்று கேட்க அவளுடைய வாயில் இருந்து அப்படியொரு வார்த்தை வரும் என்று எதிர்பார்த்திராத சந்திரன் திகைக்கிறான்.

அவரை உலுக்கிய துளசி, "எங்கங்க அந்த பையன்..?" என்று மீண்டும் கேட்க, "அதான்.. நீதான எங்கயாவது கொண்டு போய்விடச் சொன்ன..? பஸ்ஸ்டாண்ட்ல கொண்டு போய் விட்டுட்டேன்.." என்று முறைத்தபடியே சொல்லி முடிப்பதற்குள், பதறுகிறாள் துளசி.

"போங்க.. போங்க.. போய் அந்தப் பையனை கூட்டிட்டு வாங்க.." என்கிறாள் பதட்டத்துடன்.. "எதுக்கு..? எதுக்கு..? நீதான அனுப்பச் சொன்ன..?" என்று சந்திரன் திடீர் அதிர்ச்சியோடு கேட்க.. "ஐயோ.. இத பாருங்க.. அந்தப் பையன் வீட்டை விட்டு ஓடி வந்துட்டானாம்.. அவனைக் கண்டுபிடிச்சுக் கொடுத்தா பத்தாயிரம் ரூபாய் பரிசுன்னு அவங்க அப்பா விளம்பரம் கொடுத்திருக்காரு.. போங்க.. போய் அவனை பிடிச்சுக் கூட்டிட்டு வாங்க.. நமக்குக் காசாவது வரும். போங்க..." என்று அவனைப் பிடித்து தள்ளிவிட..

பிரமை பிடித்தாற்போல் நிற்கிறான் சந்திரன்.

பதிவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - இன்றைய பதிவர் சந்திப்பு ரத்து..!

14-11-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நமது சக பதிவரும், அன்பிற்கினிய நண்பருமான கேபிள் சங்கரின் தந்தையார் இன்று காலையில் திடீரென்று காலமானதால் இன்று மாலை நடைபெறவிருந்த வலைப்பதிவர்கள் சந்திப்பு ரத்து செய்யப்படுவதாக அதன் அமைப்பாளர்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர் கேபிள் சங்கருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர் கேபிள் சங்கரின் முகவரி

11/5, அனுபவ் பிளாட்ஸ்
ராமாபுரம் ராமசாமி தெரு
சைதாப்பேட்டை
சென்னை.

லேண்ட்மார்க் : மெட்ரோ வாட்டர் அலுவலகம் அருகாமையில்..!

இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்-13-11-2009

13-11-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இட்லி

குதிரை குப்புறத் தள்ளி, குழியையும் தோண்டிய கதையாக நடிகர் சங்கக் கூட்டத்தில் பத்திரிகையாளர்களை பதம் பார்த்த நடிகர் சூர்யாவை பதிலுக்கு பதம் பார்க்கத் துவங்கிவிட்டது பத்திரிகையாளர் படை.

சிங்களப் படமொன்றில் அவர் நடிக்கவிருப்பதாக சிங்கள பத்திரிகைகளில் வந்த கட்டிங் செய்தியை பின்லேடன் ரேஞ்ச்சுக்கு பரப்பிவிட்டதில் 'கடுப்பு பத்திரிகையாளர்களின்' பங்குதான் அதிகமாம். "இதை இப்படியே விடக்கூடாது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சினையா இழுத்துவிட்டாத்தான், நம்ம யாருன்னு அவங்களுக்குத் தெரியும்.." என்கிறது 'நான்காவது எஸ்டேட்.'

சூர்யா தனது தந்தையின் அட்வைஸுக்காகவும், தம்பியின் லேசான முணுமுணுப்புக்காகவும் லெட்டர்பேடில் எழுதியனுப்பிய விளக்கக் கடிதத்தைத் தூக்கிக் குப்பையில் வீசி விட்டது பத்திரிகையுலகம். ஆனாலும் பெரிய இடத்தைப் பிடித்து அதன் மூலம் ஆனந்தவிகடன் அட்டையில் இடம் பிடித்த சூர்யாவை கடுப்பாக்கவே, அவரைப் பற்றிய 'டேமேஜ் செய்திகள்' தினம்தோறும் வெளிவந்து கொண்டிருக்கிறதாம்..

இவர்தான் இப்படியென்றால் சின்னக் கலைவாணரின் நிலைமை அதைவிட மோசம்.. அந்த மீட்டிங்கிற்கு அடுத்த நாளே வில்லங்கம் பிடித்த பத்திரிகையாளர்கள் சிலர், "விவேக் கதாநாயகனாக நடித்த திரைப்படங்கள் ஏன் பாதியில் நிற்கின்றன..? வெளிவராமல் இருக்கின்றன..?" என்பதற்கு அடையாளமாக அந்தப் படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்களின் நிலைமையை வெளிப்படையாக்கி செய்தியைப் பரப்ப.. 'நகைச்சுவை' திகிலடித்துப் போயிருக்கிறது.

போதாக்குறைக்கு விவேக் கலந்து கொள்கின்ற நிகழ்ச்சிகளில் அவரை புகைப்படம் எடுப்பதை தவிர்த்து வருகிறது பிரஸ் உலகம்.. இதை ஒரு நிகழ்ச்சியில் விவேக்கின் நேருக்கு நேராகவே செய்துகாட்டிவிட மனிதருக்கு உச்சுக் கொட்டிவிட்டதாம்.. இப்போது இந்தப் பிரச்சினை சுமூகமாக முடிய வேண்டி பல்வேறு பெரிய புள்ளிகளிடம் தூது சென்றபடியிருக்கிறாராம் விவேக். ஆனாலும் விவேக் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை புறக்கணிப்பது என்கிற முடிவில் மாற்றமில்லை என்கிறது பத்திரிகை வட்டாரம்.

இன்று(13-11-2009) மாலை சென்னையில் நடக்கவிருக்கும் ஒரு சினிமா நிகழ்ச்சியில் விவேக் பேசப் போவதாகச் செய்தி வர.. பத்திரிகையாளர்கள் விவேக்கிற்கு கருப்புக் கொடி காட்டுவதாக முடிவு செய்து அதனையும் உளவுச் செய்தி போல பரப்பிவிட்டனர். விஷயத்தைக் கேள்விப்பட்டு விவேக் தனது வருகையை ரத்து செய்திருக்கிறாராம். "இதேபோலத்தான் இனியும் தங்களது எதிர் போராட்டம் தொடர்ந்து நடக்கும்" என்கிறது பத்திரிகை வட்டாரங்கள்.

கோவணத்தில் இருந்து கோர்பசேவ் வரையிலும் பொளந்து கட்டிய சின்னக் கலைவாணருக்கு, இது போதாத காலம் போலிருக்கிறது.. 'அடப்பாவிகளா' என்று இப்போது யார், யாரைத் திட்டுவது..?

தோசை

மலையாளத்தில் ஏற்கெனவே திரைப்படங்களில் ஜோடி போட்டு நடித்திருந்தது சித்தாரா-ரகுமான் ஜோடி. தமிழில் இருவரும் சேர்ந்து நடித்த 'புதுப்புது அர்த்தங்கள்' சூப்பர்ஹிட்டாக.. அதைத் தொடர்ந்து இந்த ஜோடி பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்தது. ஆனால் வில்லங்கம் ஒரு திரைப்படத்தில் உருவாகி அத்தனை வருட நட்பை ஒரே நாளில் முறித்தது.


பாடல் காட்சியொன்றில் ஒரு பெட்ஷீட்டுக்குள் இருவரும் கசமுசா பண்ணுவதைப் போல் எடுத்துக் கொண்டிருந்தபோது சித்தாராவுக்கும், ரகுமானுக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு சின்ன மிஸ் அண்டர்ஸ்டேண்டிங் ஓபாமா-ஜார்ஜ்புஷ் லெவலுக்கு பெரிசாக.. வாக்குவாதம், சண்டை, சச்சரவு, மூட் அவுட், ஷூட்டிங் கேன்சல் என்று பெரிய அளவுக்கு பஞ்சாயத்து ஆனது அப்போது.

அதன் பின்பு தமிழில் மட்டுமன்றி மலையாளத்திலும் இருவரும் ஜோடி போடாமல் தவிர்த்து சண்டைக் கோழிகளாகவே வலம் வந்து கொண்டிருந்தனர். காலம்தான் அத்தனையையும் தீர்த்து வைக்கும் மருந்தாச்சே..

இப்போது மிகச் சமீபத்தில் மலையாளக் கரையோரம் ஒரு திரைப்படத்திலும், தொலைக்காட்சித் தொடரிலும் இந்த ஜோடி இணைந்து நடித்திருக்கிறது.. இத்தனை நாட்கள் கழித்து மீண்டும் 'கேளடி கண்மணியாக' நட்பு துளிர்த்திருக்கிறதாம்.. வெல்டன்..

பொங்கல்

வலையுலகத்தின் பெருமைகள் பெருகிக் கொண்டே போக.. அதன் பெருமூச்சு கலையுலகத்தின் உள்ளேயும், வெளியேயும் அனல் காற்றாய் அடித்துக் கொண்டுதான் இருக்கிறது. பத்திரிகையாளர்கள் பலரும் வலையிலும் எழுதத் துவங்கியிருக்கும் இந்த நேரத்தில், மற்றுமொரு மூத்தப் பத்திரிகையாளரும் நமது வலையில் விழுந்திருக்கிறார்.


'தேவிமணி' என்கிற பெயரைத் தெரியாத சினிமாக்காரர்களே இருக்க முடியாது. அரைநூற்றாண்டு காலமாக எழுத்துத் துறையில் இருக்கிறார். கவிஞர் கண்ணதாசன், பழ.நெடுமாறன் நடத்திய பத்திரிகைகளில் பணியாற்றியவர். சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக 'தேவி' வார இதழில் சினிமா செய்தியாளராகப் பணியாற்றி வருகிறார். 'கலைமாமணி' விருதையும் பெற்றவர்.

நம்முடைய 'அந்தணன்', 'உதயசூரியன்' வரிசையில் இன்னுமொரு சூரியனாக வந்திருக்கிறார். என்னைப் போல் அல்லாமல் சின்ன சின்னதான கருத்து முத்துக்களை பதித்திருக்கிறார். இங்கே சென்று படித்துப் பாருங்கள்..

காரச் சட்னி

நடிகர் சங்கக் கூட்டத்தில் பேசிய 'புரட்சித் தமிழன்' சத்யராஜ், எம்.ஜி.ஆர் யாரோ ஒரு பத்திரிகையாளரை மேக்கப் அறைக்குள் வைத்து அடித்ததாக சொல்லியிருந்தார். அது யார், எவர், எப்போது நடந்தது என்று விசாரித்தபோது கிடைத்த விஷயங்கள் இது.

'இதயம் பேசுகிறது' மணியன் தயாரித்த 'இதயவீணை' படத்தின் பூஜை ஜெமினி ஸ்டூடியோவில் நடந்தது. அந்த பூஜைக்கு 'பிலிமாலயா' பத்திரிகையின் ரிப்போர்ட்டர் லட்சுமணன் வந்திருக்கிறார். 'பிலிமாலயா' பத்திரிகையில் தொடர் கட்டுரை எழுதி வந்த லட்சுமணன், எம்.ஜி.ஆர். தனது படமொன்றில் நடிகை ரோஜாரமணியை வெறும் பாவாடை மட்டும் கட்டிக் கொண்டு வரும்படி சொன்னதாக எழுதியிருக்கிறார். இதைப் படித்த எம்.ஜி.ஆருக்கு கோபம் கனன்று கொண்டிருந்தது.

இந்த நேரத்தில் பட பூஜைக்கு வந்த லட்சுமணனை அன்போடு அணைத்து தோளில் கை போட்டு மேக்கப் ரூமுக்குள் அழைத்துச் சென்று நிஜமாகவே 'பூஜை' செய்திருக்கிறார் எம்.ஜி.ஆர். இதுதான் உண்மையாக நடந்தது என்கிறார்கள் திரையுலக சீனியர்கள். உபரி நியூஸ்.. அடி வாங்கிய லட்சுமணன், திரைப்பட இயக்குநர் பஞ்சு அருணாசலத்தின் தம்பி..

இவர் ஒருவர்தான் எம்.ஜி.ஆரிடம் அடி வாங்கியிருக்கிறாரா என்றால் இல்லை.. இன்னொருவரும் இருக்கிறார் என்கிறார்கள் சினிமாத்துறையினர். 'தர்மஅடி' வாங்கிய இன்னொரு புண்ணியவான் மிகப் பெரும் எழுத்தாளர்.. பிரபலமானவர்.. வெளியில் சொன்னால் நம்ப முடியாத அளவுக்கு முக்கியஸ்தர்.. அவர் 'கல்கண்டு' ஆசிரியர் திரு.தமிழ்வாணன்.


1972-களில் தமிழ்வாணன் ஏதோ ஒரு காரணத்துக்காக எம்.ஜி.ஆரை தாக்கி 'தினமணிகதிரில்' எழுதி வந்திருக்கிறார். சினிமா துறையில் எம்.ஜி.ஆர் சண்டியர் போலவும், அவருக்குப் பிடிக்காவிடில் ஒருவரும் சினிமாத் துறையில் இருக்க முடியாது என்பதைப் போலவும் தமிழ்வாணன் எழுதி வந்தது எம்.ஜி.ஆருக்கு கோபத்தை வரவழைத்திருக்கிறது.

இந்த நேரத்தில் 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்திற்காக ஜப்பான் சென்றிருந்த எம்.ஜி.ஆரை வேறொரு வேலையாக அங்கே சென்றிருந்த தமிழ்வாணனும், மஸ்தான் என்றொரு தயாரிப்பாளரும் எம்.ஜி.ஆரின் ஹோட்டல் அறையில் சந்தித்திருக்கிறார்கள். அந்த நேரத்தில்தான் தமிழ்வாணனின் சட்டையைக் கொத்தாகப் பிடித்து நாலு சாத்து சாத்தியிருக்கிறார் எம்.ஜி.ஆர். இதன் பின் நடந்தது என்ன என்பதையெல்லாம் மஸ்தான் தனது புத்தகத்தில் பதிவு செய்து வைத்திருக்கிறார். நல்லவேளை அந்தப் புத்தகம் வந்தபோது தமிழ்வாணனும் உயிரோடு இல்லை. எம்.ஜி.ஆரும் உயிருடன் இல்லை..

சாம்பார்

பெப்ஸி உறுப்பினர்களுக்கு அரசே வீடு கட்டித் தரும் என்ற முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து பெப்ஸியுடன் இணைந்த 28 சங்க அலுவலகங்களிலும் கூட்டம் கூடிக் கொண்டே செல்கிறது. தினம்தோறும் ஐந்து பேராவது சங்கங்களில் இணைந்து கொண்டேயிருக்கிறார்களாம். வருகின்றவர்களை அள்ளிப் போட்டு கல்லாவை நிரப்புவது என்று முடிவு செய்து அவசரம், அவசரமாக அட்மிஷன் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் சங்கத்தினர்.

அதே நேரம் கூட்டம் வரும்போதே காசு அள்ளினால்தான் ஆச்சு என்பதை உணர்ந்திருக்கும் சங்கத்தினர் தங்களது உறுப்பினர் கட்டணத்தை உயர்த்தலாமா என்று யோசித்து வருகிறார்களாம். ஏற்கெனவே திரையுலக சங்கங்களில் உறுப்பினர் கட்டணங்கள் பிளைட் டிக்கெட் ரேஞ்ச்சுக்கு உயர்ந்துதான் இருக்கிறது.

இயக்குநர்கள் சங்கத்தில் இயக்குநராவதற்கு ஐம்பதாயிரம் ரூபாய்.. டான்ஸ் யூனியனில் சேர்வதற்கு ஒன்றரை லட்சம், ஸ்டண்ட் யூனியனில் சேர்வதற்கு ஒரு லட்சம்.. ஏன்..? பாத்திரம் கழுவும் வேலையை செய்யும் நளபாக சங்கத்தில் சேர்வதற்கே எழுபத்தைந்தாயிரம் என்று அனைத்தும் சுயநிதிக் கல்லூரிகள் ஸ்டைலிலேயே இருக்கின்றன. இருப்பதிலேயே குறைவான உறுப்பினர் கட்டணம் எழுத்தாளர்கள் சங்கம்தான்.. இருபதாயிரம் ரூபாய்..

முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து வீடு கட்ட இடம் தேடி ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருக்க.. இந்தப் பக்கம் உள்ளே நுழைய ஒரு கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருக்கிறது.. காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளத்தான் வேண்டும்.

கேசரி

'நகைச்சுவைத் திலகம்' நாகேஷின் வாழ்க்கை வரலாற்றில் இயக்குநர் ஸ்ரீதருக்கு பெரும் பங்குண்டு. ஸ்ரீதரின் 'நெஞ்சில் ஓர் ஆலயம்'தான் முதன்முதலில் நாகேஷுக்கு பெயர் வாங்கிக் கொடுத்தத் திரைப்படம். இதற்குப் பின் ஸ்ரீதரின் அத்தனை திரைப்படங்களிலும் நாகேஷ் நடித்திருக்கிறார். தமிழ்ச் சினிமாவின் மறக்க முடியாத 'காதலிக்க நேரமில்லை' திரைப்படத்தில் நாகேஷின் அந்த 'செல்லப்பா' கேரக்டர்தான் தமிழக மக்களால் இன்னமும் மறக்க முடியாத கேரக்டர்.


ஸ்ரீதருக்கும், நாகேஷுக்குமான நட்பு திரையுலகத்தையும் தாண்டியது. ஸ்ரீதர் உடல் நலமில்லாமல் பாரிசவாயு வியாதியால் பீடிக்கப்பட்டபோது நாகேஷ்தான் தினந்தோறும் மருத்துவமனைக்கு சென்று ஸ்ரீதரின் அருகில் அமர்ந்து அவருடனான தனது தொடர்புகளை, சந்திப்புகளை மீண்டும், மீண்டும் ஞாபகப்படுத்தி அவருக்கு மெமரி பவரை திரும்பக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டவர். இதுபோல் நிறைய கலைஞர்கள் செய்தார்கள். ஆனாலும் நாகேஷின் இந்த முயற்சியை அவருடைய குடும்பத்தினர் அதன் பின் கண்கலங்கிப் போய் பல பேட்டிகளில் சொல்லியிருந்தார்கள்.

இப்போது இது எதற்கு என்கிறீர்களா..? இதனை இப்போது சொல்ல வந்ததன் காரணம், இயக்குநர் ஸ்ரீதர் இறந்து போனது அப்போது உயிரோடு இருந்த நாகேஷுக்கு அவர் சாகின்றவரையிலும் தெரியாது என்கிற உண்மையைச் சொல்லத்தான். இது எவ்ளோ பெரிய கொடுமை..?


இதனைக் கேள்விப்பட்டு உறுதிப்படுத்திய பின்பு என்னாலும் நம்ப முடியவில்லை. நாகேஷின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அந்தச் செய்தியை அவரிடம் சொல்ல நாகேஷின் குடும்பத்தினர் மறுத்துவிட்டார்களாம்.. இத்தனைக்கும் ஸ்ரீதரின் மனைவியே நாகேஷை வரச் சொல்லி கேட்டுக் கொண்டும் முடியவில்லையாம். அதேபோல் நாகேஷின் கடைசி நேரம் வரையிலும் ஸ்ரீதர் பற்றி ஒரு விஷயம்கூட நாகேஷுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அவருடைய குடும்பத்தினர்.

நாகேஷ் என்ன நினைத்துக் கொண்டு வாழ்ந்திருப்பார் என்பதை என்னால் கணிக்க முடியவில்லை. இன்னுமொரு விஷயமும் உண்டு. ஸ்ரீதருக்கு அடுத்து இறந்து போன நடிகர் நம்பியாரின் மரணமும் நாகேஷிடம் சொல்லப்படவே இல்லையாம்.. இரண்டு நண்பர்கள் தனக்கு முன்பாக விடைபெற்றது தெரியாமல்தான் இந்த நண்பனும் விடைபெற்றிருக்கிறான்.

ம்ஹும்.. நினைத்தால் மனம் ரொம்பவே கனக்கிறது..

தேங்காய் சட்னி

சினிமாவில் பெரும்பாலான சாதனையாளர்கள் தங்களைப் பற்றிக் கவலைப்படாமல், தங்களது படைப்புகளை பற்றி மட்டுமே கவலைப்பட்டு ஓய்ந்து போகிறார்கள். அவர்களுடைய திரைப்படங்களைப் பற்றிய முழுத் தகவல்கள் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் அது மட்டும் கிடைக்கவே கிடைக்காது.

நல்லவேளையாக சிவாஜிக்கும், எம்.ஜி.ஆருக்கும் ரசிகர் மன்றங்கள் அரசியல் கட்சிகள் போல இருந்ததால், புள்ளிவிபரங்களைத் தொகுத்து வைத்திருக்கிறார்கள். மற்றவர்களுக்கு..? 'பிலிம் நியூஸ் ஆனந்தன்' என்கிற மகத்தான மனிதரின் தொண்டு காரணமாகத்தான் தமிழ்ச் சினிமாவின் வரலாறும், கூடவே நடிகர்களின் திரைப்படங்கள் பற்றிய பட்டியலும் இப்போது நம் கையில் கிடைத்திருக்கிறது.

ஆச்சி மனோரமா ஆயிரம் திரைப்படங்களில் நடித்து முடித்த ஆதாரங்களைக்கூட பிலிம் நியூஸ் ஆனந்தன்தான் தொகுத்து வழங்கியிருக்கிறார். அந்தந்த நடிகர், நடிகைகளே தங்களது திரைப்படங்களைப் பற்றிய செய்திகளை குறித்து வைத்திருந்தால் அவர்களுக்கு அது நல்லது என்பது தெரியாமல் உள்ளது.

இனிவரும் காலங்களிலும் அதுவும் ஒருவகையில் அவர்களுக்கு பிற்காலத்தில் உதவும் என்பதால் இப்போதுதான் அந்த வேலையை பலரும் செய்து வருகிறார்கள். தமிழில் இப்போதைக்கு நடிகர் சிவகுமாரிடம் மட்டுமே அவர் நடித்த திரைப்படங்கள் பற்றிய முழு விபரங்கள் உள்ளன. மற்றவர்களிடம் சில்லறைகள்தான் தேறும்.

அந்த வரிசையில் மலையாளத் திரையுலகத்தின் 'நகைச்சுவைத் திலகம்' ஜெகதிஸ்ரீகுமார் மற்றவர்களுக்கு முன் உதாரணமாகத் திகழ்ந்து வருகிறார்.



மனிதர் கடந்த நாற்பதாண்டுகளாக மலையாள சினிமாவை ஆட்டிப் படைத்து வருகிறார். அன்றிலிருந்து இன்றுவரையில் தான் நடித்த திரைப்படங்களின் பட்டியலையும், அவைகள் வெளியான வருடங்களையும் தொகுத்து தனி வெப்சைட்டையே வைத்துள்ளார். பார்க்கவே ஆச்சரியமாக உள்ளது. இங்கே சென்று பாருங்கள்.

எவ்ளோ நல்ல விஷயம். வருங்கால திரையுலகத்தினருக்காக அவர் விட்டுச் செல்கின்ற மிகப் பெரிய சொத்து இது.. இது எப்படி உன் கண்ணுல பட்டுச்சு என்கிறீர்களா..? அடுத்ததை படிங்க..

பனியாரம்

நான் வயசுக்கு வந்த பின்பு(எப்படின்னுல்லாம் சின்னப் புள்ளை மாதிரி கேக்கக்கூடாது.. சொல்லிட்டேன்) நான் பார்த்த முதல் பிட்டு படம் 'வைன் அண்ட் வுமன்'(Wine and Woman) என்கிற மலையாள திரைப்படம்தான். அதன் பின் இத்திரைப்படத்தை பல்வேறு ஊர்களில், பல திரையரங்குகளில் சலிக்காமல் பார்த்துத் தொலைத்திருக்கிறேன். ஆனாலும் சமீபத்தில் இப்படி நான் பார்த்த மலையாள கவர்ச்சித் திரைப்படங்களின் பட்டியலை கூகிளிட்டு தேடியபோது இப்படி ஒரு பெயரில் மலையாளத் திரைப்படமே இல்லை என்பது தெரிந்தது.

அப்படியானால் ஒரிஜினலாக அந்தப் படத்தின் மலையாளப் பெயர் என்னவாக இருக்கும் என்று நினைத்து என் மனம் அலைபாய்ந்தது. இதன் தேடுதல் தொடர்ச்சியாகத்தான் ஜெகதிஸ்ரீகுமாரின் வலைத்தளம் தென்பட்டது. முதலில் நடிகர், நடிகைகள் மூலமாகத் தேடலாம் என்று நினைத்து தேடினேன். இத்திரைப்படத்தில் நடித்திருந்த ஜெகதிஸ்ரீகுமார், பீமன் கே.ரகு, ஸ்வப்னா, ஜலஜா ஆகிய நான்கு பேர்தான் என்னுடைய ஞாபகத்தில் இருந்தார்கள். இந்தத் தேடுதலில் ஜெகதியிடமும், பீமன் கே.ரகுவிடமும், இயக்குநர் சங்கரன்நாயரிடமும் மட்டுமே புள்ளிவிபரங்கள் கிட்டியது.

அத்தனையையும் கூட்டிக் கழித்துப் பார்த்ததில் எனது மனதுக்கினிய இத்திரைப்படத்தின் ஒரிஜினல் மலையாளப் பெயர் 1984-ம் ஆண்டு வெளியான "Kudumbam Oru Swargam; Bharya Oru Devatha" - இதுவாகத்தான் இருக்கும் என்பது எனது அனுமானம். இது தவறு என்றால் தெரிந்தவர்கள் சொல்லுங்கள். அறிந்து கொள்ளத் துடிக்கிறேன்.

வடை

தமிழில் நல்ல கதைகளுக்கு மெகா பஞ்சம் போலிருக்கிறது. புதிய நடிகைகளை வைத்து ஜில்பான்ஸ் காட்சிகளை எப்படி எடுப்பது என்பதில் மட்டும் புதிய, புதிய முயற்சிகளை செய்யும் தமிழ்த் திரையுலகம் கதையில் மட்டும் நொண்டியடிக்கிறது. பழைய திரைப்படங்களை காப்பி செய்வது.. இல்லையெனில் வெளிநாட்டு டிவிடிக்களில் இருந்து கதையை மட்டுமல்ல காட்சியையும் சுடுவது என்பதுதான் தமிழ்த் திரையுலகின் இன்றைய நிலைமை.

தெலுங்கில் இருந்து பரபரப்பான படங்களை சூட்டோடு சூட்டாக வாங்கிப் போட்டு இளையதலைமுறை ஹீரோக்கள் கல்லாகட்டுவதும் இதனால்தான்.. யூத்புல்லான ஒரு தெலுங்கு திரைப்படம் வெளியாகிறது எனில் அதனை பார்க்க ஆசைப்படுவதில் முதலிடம் நமது தமிழ் நடிகர்களும், தயாரிப்பாளர்களும்தான். அந்த வரிசையில் இப்போது மலையாளமும் சேர்ந்திருக்கிறது.

மலையாளத்தில் இந்த ஆண்டு மே மாதம் வெளிவந்த Passenger என்கிற திரைப்படம் செம திரில்லராம்.. சூப்பரான திரைக்கதையாம்.. திலீப்பும், சீனிவாசனும் இணைந்து நடித்திருக்கிறார்கள். ஒரு டிரெயினில் பயணம் செய்து வரும் வழக்கமான சீசன் டிக்கெட் பயணிகளின் வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகள்தான் படத்தின் கதையாம்.


இப்போது இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைப் பெற்றுவிட்டது கவிதாலயா. அடுத்த சில நாட்களில் பரபரப்பாகச் சுழன்று ஏற்பாடுகளைச் செய்து ஆர்ட்டிஸ்டுகளை புக் செய்து இன்றைக்கு ஷூட்டிங்கிற்கு தயாராகிவிட்டது. படப்பிடிப்பு துவங்கிய 35 நாட்களில் படத்தை முடித்துவிடுவதாக உறுதியளித்திருக்கிறார் இயக்குநர் செல்வா. சத்யராஜ், கணேஷ் வெங்கட்ராம், ரம்யா நம்பீசன் நடிக்கிறார்களாம்.. பார்ப்போம்.. அப்படியே எடுக்கிறார்களா..? அல்லது கெடுக்கிறார்களா.. என்று..?

கொத்தமல்லி சட்னி

நமக்குத் தெரிந்தவரைப் பற்றி அறிந்து கொள்ளும் முயற்சியில் இருக்கும்போது அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்தால் எப்படியிருக்கும்..?

ஒரு பத்திரிகை விஷயமாக தெலுங்குத் திரையுலகின் மூத்த அம்மாவான நிர்மலாம்மாவிடம் பேட்டியெடுக்க வேண்டும் என்று நினைத்து பல்வேறு முயற்சிகளை செய்து வந்தேன். தமிழ்த் திரையுலகின் பல பி.ஆர்.ஓ.க்களிடம் கேட்டபோது "நம்பர் வாங்கித் தருகிறேன்.." என்று உறுதியாகச் சொன்னதால் நானும் சாதாரணமாகத்தான் இருந்தேன்.


சரி.. கூகிளாண்டவரிடம் கேட்டாவது ஏதாவது கிடைக்குமா என்று பார்ப்போம் என்று தேடினால் கிடைத்தது மரண அடி. உண்மையில் மரணம்தான். தெலுங்குத் திரையுலகின் அம்மா கேரக்டரில் கிட்டத்தட்ட முப்பதாண்டு காலமாக அசைக்க முடியாத இடத்தில் இருந்த நிர்மலாம்மா இறந்து போய் ஏழு மாதங்களாகிவிட்டதாம்..


அடப்பாவிகளா.. தமிழ் சினிமாக்காரர்களுக்கே தெரியாத நியூஸாக போய்விட்டதே.. இந்த அம்மாவுக்கு மகனாக நடிக்காத நடிகர்களே தெலுங்கில் இல்லை.. நம்ம ஆச்சி மனோரமா மாதிரி வெகு அலட்சியமான, இயல்பான நடிப்பு இவருடையது..

எனக்கு மிகவும் பிடித்தது 'வைஜெயந்தி ஐ.பி.எஸ்.'ஸில் விஜயசாந்தியுடன் அவர் நடித்திருந்தது.. 'சிப்புக்குள் முத்து'வில் கமலஹாசனுக்கு பாட்டியாக நடித்திருந்தது.. ம்.. இன்னும் நிறைய சொல்லலாம். ஆனால் பெயர்கள் தெரியாது.. சிரஞ்சீவிக்கு மிகவும் பிடித்தமான அம்மாவாக இருந்தார்.

இந்தத் தகவல் எப்படி என் கவனத்துக்கு வராமல் போனது என்றே தெரியவில்லை. இன்னமும் நிறைய கவனத்துடன் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது..
நல்லவேளை கூகிளாண்டவர் கடைசி நேரத்தில் என் மானத்தைக் காப்பாற்றிவிட்டார். வாழ்க கூகிள் குழுமம்..!

பாயாசம்

வர வர நானும் பாக்குறேன்.. சின்னஞ்சிறுசுக அல்லாரும் வயசு, வித்தியாசம் இல்லாம 'ஏ ஜோக்ஸ்' சொல்லவும், படிக்கவும் ஆரம்பிச்சிட்டாங்க. முன்னாடில்லாம் இதைப் படிக்கணும்னா அந்த மாதிரி புத்தகத்தைத் தேடிப் புடிச்சுத்தான் படிக்கணும். ஆனா இப்ப என்னடான்னா நல்ல நல்ல பதிவுகளுக்கு இடையில எல்லாம் இதுவும் இருந்து, அந்த நல்ல பதிவுகளை ரசிக்க முடியாமல் போகுது..


அதுவெல்லாம் இருக்க வேண்டிய இடத்துலதான் இருக்கோணும். படிக்க வேண்டிய நேரத்துலதான் படிக்கோணும்.. மறைச்சு வைச்சு படிக்க வேண்டியதுக்காக 'கந்தசஷ்டிகவசம்' புத்தகத்துக்கு நடுவுல இதை வைச்சுப் படிக்கக் கூடாது.. ரொம்பத் தப்பு.. யாருக்குத் தெரியுது..? புரியுது..? சொன்னா.. 'நான் யூத்து.. நான் ரொம்பவே யூத்து.. அப்படித்தான் இருப்போம்'ன்னு மேலேயும், கீழேயும் குதிக்கிறாங்க..

அதுனால நான் ஒரு முடிவு பண்ணிட்டேன். இனிமே இது மாதிரி பப்ளிக் பதிவுல யாராச்சும் 'ஏ ஜோக்' போட்டிருந்தாங்கன்னா தமிழ்மணம் நிர்வாகம் எனக்கு அளித்திருக்கும் கருவிப்பட்டையில் ஓட்டளிக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, முடிஞ்ச அளவுக்கு எம்புட்டு மைனஸ் குத்து குத்த முடியுமோ அம்புட்டையும் குத்துறதா தீர்மானம் செஞ்சுப்புட்டேன்.. யாரும் கோச்சுக்காதீங்க..

அது அவசியம் வேணும்னா மொக்கை மெயில் குரூப் மாதிரி நீங்களும் ஒரு மெயில் குரூப் ஆரம்பிச்சு அது மூலமா தேவைப்பட்டவங்களுக்கு மட்டும் அள்ளி விடலாம்.. அதைவிட்டுப்போட்டு பதிவுகளுக்கு நடுவுல அதைப் போட்டு இம்சை பண்ணாதீங்கப்பா.(முடிஞ்சா நானும் சேர்றேன்)

நேத்து ஒரு 'யூத்'தோட தளத்தைக் காட்டி "படிச்சுப் பாரும்மா"ன்னு ஒரு ஆபீஸ்ல இருந்த கேர்ள் பிரெண்ட்கிட்ட எடுத்துக் கொடுத்திட்டு டீ குடிக்கப் போயிட்டேன். திரும்பி வந்து பார்த்தா.. அர்ச்சனையோ அர்ச்சனை.. மொத்தம் இருந்த அஞ்சு பாராவுலே, நாலு பாராவுல இருந்த நல்ல விஷயமெல்லாம் காணாமப் போயி, அஞ்சாவதா இருந்த அந்த 'ஏ ஜோக்ஸ்' எனக்கு வர வேண்டிய ஒரு நல்ல ஆஃபரை கெடுத்திருச்சு..

பழி வாங்கியே தீருவேன்.. விடமாட்டேனாக்கும்..!!!

பார்த்ததில் பிடித்தது


படித்ததில் பிடித்தது

"நான் இது போன்ற சென்டிமென்ட்கள் பார்க்கிறவனல்லன். உதாரணமாய், ஒரு படத்துக்கு எங்கள் ஆபீசிலேயே பூஜைக்கு நேரம் குறித்திருந்தோம். ஆபீசில் இருந்த கடவுள் படங்களையே படம் பிடித்து படத்தை ஆரம்பிப்பதாக ஏற்பாடு. குழந்தை தெய்வத்திற்குச் சமமில்லையா..? யாராவது ஒரு சிறு குழந்தையை வைத்து கேமிராவை இயக்குவது என்ற என் வழக்கப்படி கேமராமேன் வின்சென்ட்டின் மகன் ஜெயனன் கேமராவை இயக்க வேண்டும்.

ஆனால் திடீரென்று பட்டனை அழுத்த மாட்டேன் என அவன் அடம் பிடிக்க, நாங்கள் அவனைக் கட்டாயப்படுத்த அவனோ அழ ஆரம்பித்துவிட்டான். கடைசியில் அவன் விரலை வின்சென்ட் கேமராவில் பதித்து கேமராவை இயக்கினார்.

வின்சென்ட்டின் மகன் பண்ணின கலாட்டா போதாதென்று அடுத்தபடியாய் கற்பூரம் ஏற்றிக் காட்டியபோது கரெண்ட் கட். மறுபடியும் அபசகுனமா என்ற முணுமுணுப்பு என் காது படவே கேட்டது.

நான் இதைப் பெரிதுபடுத்தாவிட்டாலும் கோபு மனம் வாட்டமுற்றது. 'இதற்கெல்லாம் முக்கியத்துவம் தர வேண்டாம். எனக்குக் கதை மீது நம்பிக்கை இருக்கிறது' என்று அவரைச் சமாதானப்படுத்தினாலும் அவருக்கு முழு திருப்தியில்லை. "வேண்டுமானால் பாடல் பதிவின்போது ஒரு சின்ன பூஜைக்கு ஏற்பாடு செய்து விடலாம்.." என்றேன். அதன்படியே சாஸ்திரிகளை வைத்து நேரம் குறித்து ஒரு பூஜையும் ஏற்பாடாகியது.


மறுபடியும் பிரச்சினை. குறிப்பிட்ட நாளில், பூஜை நேரத்துக்கு வர வேண்டிய ஐயர் ஏனோ வரவில்லை. எம்.எஸ்.வி.யின் குழுவில் இருந்த பிராமணர் ஒருவரை வைத்து பூஜையை முடித்துட்டு குறித்த நேரத்தில் பாடல் ரிக்கார்டிங்கை தொடங்கினோம்.

படத்தின் முதல் காட்சியாக ராஜஸ்ரீ நடிக்கும் பாடல் காட்சி.. 'அனுபவம் புதுமை' பாடல் படம் பிடிக்கத் தயாராகி, ஸ்டார்ட் சொன்னதும், கேமராவில் பெல்ட் ஒன்று அறுந்துபோக ஷூட்டிங் தடைபட்டது.

அபசகுனம் என கருதப்பட்ட அத்தனை தடைகளையும் மீறி அந்தப் படம் அமோக வெற்றி பெற்றது. அதுதான் காதலிக்க நேரமில்லை."

புத்தகம் : திரும்பிப் பார்க்கிறேன் - சொன்னவர் இயக்குநர் ஸ்ரீதர்

போதுமென்று நினைக்கிறேன். மீண்டும் அடுத்த இட்லி-வடையில் சந்திப்போம்..

பொறுமையாகப் படித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்..

குழந்தைகளும் வலைப்பதிவர்களும்..!

09-11-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இமெயிலில் வந்த இந்தக் குறும்புப் புகைப்படங்களை பார்த்துக் கொண்டேயிருந்தபோது திடீரென்று தோன்றிய ஐடியாவில் ஏதோவொன்றை எழுதியிருக்கிறேன்.. கோபிக்க வேண்டாம்.. என்ஜாய் பண்ணுங்க மக்களே..!

நான்தான் வால் பையன்.. இதுக்கு மேலேயும் ஆதாரம் வேணுமா உங்களுக்கு..?


ஐயையோ.. தெரியாத்தனமா தமிழ்மணம் போட்டிக்கு வந்த பதிவுகளையெல்லாம் படிச்சுத் தொலைஞ்சிட்டேன்..



தூயா ஆண்ட்டி உசிரோட சமைக்கிறது எப்படின்னு போஸ்ட் போட்டிருக்காங்க..



ஷக்கலக்க பேபி.. ஷக்கலக்க பேபி.. கானா பிரபா அங்கிள் எனக்காக போட்ட பாட்டு கேக்குது..



அப்பா ஜ்யோவ்ராம்சுந்தர் பதிவைப் படிக்குறாரு.. அதான் என்னைத் திருப்பிப் போட்டுட்டாரு..



சர்வேசன் மாமா 'நச் கதை போட்டி' வைச்சிருக்காரு. 'ச்சும்மா' இதே மாதிரி ஊதிருவேனாக்கும்..


பெருசு தண்டோராவோட பதிவையெல்லாம் படிச்சிட்டு கடைசீல இந்தத் தண்ணில குளிச்சாத்தான் சூடு அடங்குது..


குசும்பன் மாமா எழுதாம இருக்காரே.. ரொம்ப வருத்தமா இருக்கு..


ஐயையோ... ஆசீப் அண்ணாச்சி துபாய்லபோய் கட்சி ஆரம்பிச்சிட்டாராம்..



ஹாலிவுட்பாலா சித்தப்பா எழுதறதையெல்லாம் படிக்கப் படிக்க முடி இப்படி நீண்டுக்குது..



ஐயையோ.. வடகரை அண்ணாச்சிக்கிட்ட வம்பு பண்ணி இப்படி மாட்டிக்கிட்டனே..



சஞ்சய் மாமாவுக்கு இப்போதைக்கு கல்யாணம் இல்லையாம்.. சந்தோஷமா இருக்கு..!



ச்சீச்சீ.. சுகுணாதிவாகரும், கமலஹாசனும் எப்பவுமே குட்பிரெண்ட்ஸ்தான்..



போன மாசம் பைத்தியக்காரன் அண்ணாச்சி காட்டுன படத்துல பார்த்த ஸ்டைல்.. நல்லாயிருக்கா..?



எப்படி என் ஆங்கிள்..? எடுத்தது ஜாக்கிசேகர் அங்கிளாக்கும்..



இப்படி சாதுகளையெல்லாம் கழுத்தை நெரிச்சு கொல்றதுதான் வலையுலக ஸ்டைலு..



அண்ணன் வினவு பதிவையெல்லாம் படிக்கணும்னா இப்படியொரு கண்ணாடியை போட்டுக்கோணும்..!



இதுதான் மொக்கை குரூப்போட ஸ்டைலு.. எத்தனை பேர் தலைல மண்ணையள்ளிப் போட்டிருக்காங்க தெரியுமா?



ஹி..ஹி.. நான் மா.சி.யோட குரூப் மெம்பர்.. இது அவருக்கே தெரியாது. அவர்கிட்ட சொல்லிராதீங்க..



கேபிள் சங்கர் தாத்தாவோட நிதர்சனக் கதைகள் எல்லாத்தையும் படிச்சனா..? தலை அரிக்குது.. அதுதான் கட் பண்றேன்..



ஐயையோ நான் ஜட்டியோட இருக்கேன். அப்புறமா நந்து அப்பாவுக்கு போஸ் தரேன்..



'யூத்' உண்மைத்தமிழன் சின்ன வயசுல இப்படித்தான் இருந்தாராம்.. அதான் இப்பவும் இப்படி இருக்காரு..

படித்தோர் அனைவருக்கும் குழந்தைகளின் சார்பாக எனது நன்றிகள்..!!!