ICAF-ஜூன் மாதத்திய திரைப்பட விழாக்கள்

29-05-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..
http://truetamilans.blogspot.com/2008/02/blog-post_23.html - இந்தப் பதிவில் நான் அறிமுகப்படுத்திய ICAF அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில், ஜூன் மாதத்திய நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.

02.06.2008 - திங்கள்கிழமை முதல் 05.06.2008-வெள்ளிக்கிழமை வரையிலான நான்கு நாட்களும் Brazilian Film Festival நடைபெறப் போகிறது.
பிரேசில் திரைப்படங்களின் பட்டியல்

02.06.08 - 6.15 pm - Bossa Nova


02.06.08 - 8.00 pm - Latitude Zero

03.06.08 - 6.15 pm - Abril Despedacado

03.06.08- 8.00 pm - Normais os
04.06.08 - 6.15 pm - Invasor O

04.06.08 - 8.00 pm - Memoras Postumas

05-06-08 - 6.15 pm - Guerrade Cannods

இத்திரைப்படங்கள் அனைத்தும் சென்னை, அண்ணா சாலை, ஜெமினி மேம்பாலம் அருகிலுள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கில் திரையிடப்படும்.

09.06.08 திங்கள்கிழமை முதல் 11.06.08 புதன்கிழமைவரை ஸ்லோவாக்(Slovak) நாட்டுத் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

ஸ்லோவாக் திரைப்படங்களின் பட்டியல்
09.06.08 - 6.15 PM - RED WINE
10.06.08 - 6.15 PM - COPPER TOWER
10.06.08 - 8.00 PM - BUILD A HOUSE, PLANT A TREE
11.06.08 - 6.15 PM - NIGHT REIDERS
11.06.08 - 8.00 PM - SOUTHERN MAIL

மறைந்த அமெரிக்க நடிகர் சார்ல்டன் ஹீஸ்டர்(Charlton Heston) நினைவாக அவர் நடித்த சில திரைப்படங்கள் 16.06.08 திங்கள்கிழமை முதல் 20.06.08 வெள்ளிக்கிழமைவரை திரையிடப்படும்.

திரைப்படங்களின் பட்டியல்

16.06.08 - 6.30 PM - AIRPORT(1974)


17.06.08 - 6.30 PM - BENHUR (1959)

18.06.08 - 6.30 PM - THE TEN COMMANDMENTS(1956)

19.06.08 - 6.30 PM - THE GREATEST SHOW ON EARTH(1952)

20.06.08 - 6.30 PM - THE AGONY AND THE ECSTASY

23.06.08 திங்கள்கிழமை முதல் 26-06-08 வியாழக்கிழமைவரையிலும் கியூபா நாட்டுத் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

கியூபா திரைப்படங்களின் பட்டியல்

23.06.08 - 6.30 PM - SPLATT OR TO BE AFRAID OF LIFE

24.06.08 - 6.30 PM - PORTRAIT OF TERESA

25.06.08 - 6.30 PM - PAGES FROM MAURICIO'S DIARY
26.06.08 - 6.30 PM - BENNY

இந்த கியூபா திரைப்படங்கள் மட்டும் சென்னை கல்லூரி சாலையில் உள்ள Alliance Francaise of Madras Auditorium-த்தில் திரையிடப்படும்.

இந்த அமைப்பில் சேருவதற்கான விதிமுறைகள் மற்றும் கட்டணங்கள் பற்றிய தகவல்கள் http://truetamilans.blogspot.com/2008/02/blog-post_23.html-இந்தப் பதிவில் இருக்கின்றன.

அதில் குறிப்பிடத் தவறிய ஒரு விஷயம்..

இந்த அமைப்பினர், வருடாவருடம் ஏப்ரல் மாத முதல் தேதியிலிருந்து தங்களது உறுப்பினர்களின் கார்டை புதுப்பிப்பதால் ஆர்வமுள்ளவர்கள் இப்போதே இணைந்து கொள்வதும், புதுப்பித்துக் கொள்வதும் நல்லது.

இல்லையெனில் நீங்கள் வேறு எந்த மாதத்திலாவது சேர்ந்திருந்தாலும் மறுபடியும் அடுத்த ஏப்ரல் மாதத்தில் கண்டிப்பாக மீண்டும் கட்டணம் செலுத்த நேரிடும்.(அதாவது அடுத்தாண்டு ஜனவரி மாதம் நீங்கள் உறுப்பினராகச் சேரும்பட்சத்தில், தொடர்ந்த ஏப்ரல் மாதத்திலேயே மீண்டும் ஒரு முறை ஆண்டு கட்டணமான 500 ரூபாயைக் கட்ட வேண்டியிருக்கும்.)
ஆர்வமுள்ளவர்கள் அமைப்பில் இணைந்து திரைப்படங்களைக் கண்டுகளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மக்கள் தொலைக்காட்சியில் எனது குறும்படம்!

23-05-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எழுதியே தீர வேண்டுமென முனைந்தால் சுமாராக 40 பக்கங்களுக்கு குறையாமல் எழுதக்கூடிய அளவுக்கு, பல பாடங்களை எனக்குக் கற்றுக் கொடுத்த நிகழ்வு ஒன்று கடந்த ஓராண்டுக்கு முன்பாக நிகழ்ந்தது.

பல வருடங்களாக என் மனதில் இருந்த ஒரு கருவை எழுத்தாக்கி, அதனை விரிவுபடுத்தி, செம்மையாக்கி ஒரு குறும்படமாக என் மனதிலேயே தேக்கி வைத்திருந்தேன்.

மனதில் நிறுத்தி வைத்திருந்த அக்குறும்படத்தைத்தான் 1 வருட காலத்திற்கு முன்பு, மிகுந்த போராட்டத்திற்குப் பின்னால் படச்சுருளில் படம் பிடித்தேன்.

வழி தெரியாதவன் விசாரிக்க பல வழிகள் இருக்கும் என்பதைப் போல, குறும்பட போட்டிகளுக்கு மட்டும் எனது படத்தினை அனுப்பிவிட்டு அமைதியாகி விட்டேன்.

என்ன காரணமோ தெரியவில்லை... அதனை எனது வலைப்பதிவில் போடுவதற்கு எண்ணமே வரவில்லை.

வலைப்பதிவர்களில் சிலருக்கு மட்டுமே நான் எடுத்திருந்த இந்த குறும்படம் பற்றித் தெரிந்திருந்தாலும், இதுவரையிலும் அந்தச் சிலரில் 4 பேருக்கு மட்டுமே இதனைப் பார்க்கும் கொடுமையை நான் கொடுத்திருந்தேன்.

வலையுலக வசிஷ்ட மாமுனி திரு.மா.சிவக்குமார், 'தடாலடி புண்ணியவான்' திரு.ஜி.கெளதம், 'இனமானப் பேராசிரியர்' திரு.தருமி, திருமிகு.ஓசை செல்லா ஆகிய நான்கு பேர் மட்டுமே இதுவரையில் கஷ்டப்பட்டு இக்குறும்படத்தைப் பார்த்த புண்ணியவான்கள்.. வாழ்க வளமுடன்..

இதனை வலைப்பதிவில் ஏற்றுவதற்குத் தேவையானதைப் போல மாற்றம் செய்து கொடுக்கும்படி திருமிகு.ஓசை செல்லாவிடம் 6 மாதங்களுக்கு முன்பே சொல்லியிருந்தேன். பின்பு நானே அதனை மறந்துவிட்ட காரணத்தால், திருமிகு.ஓசை செல்லாவிடம் இப்போது நான் இதுபற்றி கேள்வி ஏதும் கேட்க முடியாது..

வலைப்பதிவர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்..

இந்த மன்னிப்புக்கு காரணம் வேறு விஷயம்..

இதுவரையிலும் தப்பித்துக் கொண்ட வலைப்பதிவர்கள் தற்போது எனது குறும்படத்தை பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள் என்பதால் அவர்களிடம் எனது மன்னிப்பை முன்பே கேட்டு விடுகிறேன்.

வருகின்ற 25-05-08, ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 8.30 மணியளவில் மக்கள் தொலைக்காட்சியில் நான் எழுதி, இயக்கிய 'புனிதப்போர்' என்னும் குறும்படம் ஒளிபரப்பாக உள்ளது என்பதனை மிக்க வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

வருகின்ற ஞாயிற்றுக்கிழமையன்று எனது குறும்படத்தை நீங்கள் பார்க்க முடியாமல் போனாலும் எனது கிரகமோ, அல்லது எனக்கு நடந்து கொண்டிருக்கும் காலத் திசையோ உங்களை விடப் போவதில்லை..

அடுத்த வெள்ளிக்கிழமை அதாவது வருகின்ற 30-05-2008 அன்று பகல் 12.30 மணியளவில் மீண்டும் 'அந்தக் கொடுமை' மக்கள் தொலைக்காட்சியில் அரங்கேற உள்ளதால்..
வருகின்ற ஞாயிற்றுக்கிழமை பார்க்க முடியாதவர்கள் அதற்கடுத்த வெள்ளிக்கிழமையன்றாவது பார்த்துத் தொலைக்குமாறு அன்போடும், பண்போடும், பணிவன்போடும் கேட்டுக் கொள்கிறேன்..

பார்க்க விரும்பும் அன்பு வலையுலக உள்ளங்கள் முடிந்தால் பாருங்கள்..

பார்த்துவிட்டு உங்களது கருத்துக்களை நேரமிருந்தால், தங்களுக்கு ஓய்வு கிடைத்தால், தங்கள் மனதுக்கு ஏதாவது தோன்றினால் உள்ளதை உள்ளபடியே எனக்கு எழுதியனுப்புங்கள்..

அல்லது வலைப்பதிவு செய்யுங்கள்.. அல்லது இனிமேல் டிவி நிகழ்ச்சியையே பார்க்க மாட்டேன் என்றோ, அல்லது இனிமேல் என் வாழ்க்கையில் குறும்படம் பக்கமே போக மாட்டேன் என்றோ சபதமெடுத்துக் கொள்ளுங்கள்.

எப்படியிருப்பினும் என் அப்பன் முருகப்பெருமான் உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும் நீண்ட ஆயுளை வழங்கி இன்னும் இது போன்ற நிறைய குறும்படங்களை பார்க்கும் வாய்ப்பையும் வழங்குவான் என்பதனை அவன் சார்பாகச் சொல்லி விடைபெறுகிறேன்.
டிஸ்கி : இந்த நிகழ்ச்சி நிரல் கடைசி நேர மாறுதலுக்குட்பட்டது என்பதனையும் மக்கள் தொலைக்காட்சி நிறுவனத்தார் குறிப்பிடுகின்றனர்.

எனவே, ஒருவேளை அந்த மாறுதலினால் எனது குறும்படம் அந்த நேரத்தில் திரையிடப்படவில்லையெனில், பதிவர்கள் என் மேல் கோபப்பட வேண்டாம்.. தப்பித்ததாக நினைத்துச் சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்கள்..

ப்ளஸ்டூ தேர்வு முடிவுகள் - சில புள்ளிவிபரங்கள்

10-05-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..


தமிழகத்தில் ப்ளஸ்டூ தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன.

பத்திரிகைகள் பக்கங்களைக் கூட்டுவதற்காக கள்ளக்காதல், கொலை செய்திகளை இரண்டு பக்கத்திற்கு எழுதும்போதெல்லாம் கோபமடையும் எனக்கு, இன்றைய செய்தித்தாள்கள் கரும்பாய் இனித்தன.

ப்ளஸ்டூ தேர்வு பற்றிய செய்திகளை பல பத்திரிகைகளும் பல பக்கங்களுக்கு எழுதியிருக்கிறார்கள். நிச்சயம் பாராட்ட வேண்டிய விஷயம்தான் இது..

வருடம் முழுக்கத்தான் தாக்குகிறோம்.. இந்த ஒரு விஷயத்திற்காக ஒரு நாளைக்கு பாராட்டுவோமே.

இனி ப்ளஸ்டூ தேர்வு பற்றிய பத்திரிகைச் செய்திகளிலிருந்து சில உங்களது பார்வைக்கு..

2007-2008 கல்வியாண்டில் நடைபெற்ற ப்ளஸ்டூ பொதுத் தேர்வில் வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகளே கூடுதலாகத் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மொத்தம் 5 லட்சத்து 87 ஆயிரத்து 994 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர்.

இவர்களில் 2 லட்சத்து 79 ஆயிரத்து 25 பேர் மாணவர்கள்.

3 லட்சத்து எட்டாயிரத்து 969 பேர் மாணவிகள்.

இவர்களில் 4 லட்சத்து 96 ஆயிரத்து 494 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 84.4.

மாணவர்களில் 81.3 சதவிகிதம் பேரும், மாணவிகளில் 87.3 சதவிகிதம் பேரும் தேறியுள்ளனர்.

கடந்தாண்டு தேர்வில் 81 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். ஆனால் இந்தாண்டு கூடுதலாக 3.4 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்களைவிட மாணவிகள் 6 சதவிகிதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

60 சதவிகிதத்திற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்று 3 லட்சத்து 60 ஆயிரத்து 722 பேர் முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்துள்ளனர்.

கடந்தாண்டுகளில் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் பெரும்பாலும் 80 சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருந்துள்ளன. அதிகபட்சமாக 2002-ம் ஆண்டு 84.55 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

2004-ல் 76.3 சதவிகிதம், 2005-ல் 76.8 சதவிகிதம், 2006 & 2007-ல் முறையே 81 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

இந்த ஆண்டுதான் தேர்ச்சி விகிதம் மீண்டும் 84 சதவிகிதத்தைத் தொட்டுள்ளது.

தேர்வு எழுதுவதற்கு முன்னதாக வினாத்தாளை மாணவர்கள் நன்றாகப் படித்து புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தனியாக 10 நிமிடங்கள் தரப்பட்டன. தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்துள்ளதற்கு இதுதான் முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.

கடந்த பத்தாண்டுகளாக மாணவிகளே ப்ளஸ்டூ தேர்வில் அதிக தேர்ச்சியடைந்து வருகின்றனர்.

2004-ல் மாணவர்கள்-73% மாணவிகள்-79%
2005-ல் மாணவர்கள்-74% மாணவிகள்-79%
2006-ல் மாணவர்கள்-72% மாணவிகள்-77%
2007-ல் மாணவர்கள்-77% மாணவிகள்-84%
2008-ல் மாணவர்கள்-81% மாணவிகள்-87%

தமிழை முதல் பாடமாக எடுத்துப் படித்து, மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் கல்வி உதவித் தொகைகள், மேற்படிப்புச் செலவுகள் என அனைத்தையும் அரசே ஏற்கிறது.

அந்த வகையில் தமிழை முதல் பாடமாக எடுத்துப் படித்து இந்தாண்டு தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை ஐந்து மாணவர்கள் பிடித்துள்ளனர்.

திருச்செங்கோடு வித்யாவிகாஸ் பள்ளி மாணவி தாரிணி 1182 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

செங்கல்பட்டு செயிண்ட் ஜோஸப் மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.ராஜேஸ்குமார் 1182 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பகிர்ந்து கொள்கிறார்.

ஈரோடு, கே.கே.என்.ஜி. மேல்நிலைப் பள்ளி மாணவி ஏ.ரம்யா 1181 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளார்.

திருச்செங்கோடு வித்யாவிகாஸ் பள்ளி மாணவர் தளபதி குமார்விக்ரம் 1181 மதிப்பெண் பெற்று இரண்டாமிடத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.

ராசிபுரம் எஸ்.ஆர்.வி. மகளிர் பள்ளி மாணவி தீபா 1180 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளார்.

ராசிபுரம் வித்யாவிகாஸ் பள்ளி மாணவி நிஷாந்தினி தமிழ் பாடத்தில் 198 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் தமிழ் மொழியில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

1179 மதிப்பெண்கள் பெற்ற ராசிபுரம் மாணவர் மனோஜ்குமார் உயிரியல் பாடத்தில் 200 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் அப்பாடத்தில் முதல் மாணவராக வந்துள்ளார்.

வேதியியல், இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் 200 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாமிடத்தையும் இவரே பெற்றுள்ளார்.

கணிதத்தில் சென்டம் இரண்டு மடங்காக அதிகரிப்பு

கடந்தாண்டைவிட, இந்தாண்டு எல்லாப் பாடங்களிலும் அதிகமான மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர்.

இயற்பியல் 2007-ல் 217, 2008-ல் 282.
வேதியியல் 2007-ல் 145, 2008-ல் 306
உயிரியல் 2007-ல் 129, 2008-ல் 153
தாவரவியல் 2007-ல் 12, 2008-ல் 19
விலங்கியல் 2007-ல் 1, 2008-ல் 1
கணிதம் 2007-ல் 1568, 2008-3852
கம்ப்யூட்டர் சயின்ஸ் 2007-ல் 0, 2008-ல் 60
வணிகவியல் 2007-ல் 288, 2008-ல் 148
கணக்குப் பதிவியல் 2007-ல் 133, 2008-ல் 739
வணிக்கணிதம் 2007-ல் 156, 2008-ல் 291.

ஈரோடு பெரியார் நகரைச் சேர்ந்த அங்கமுத்து என்பவரின் மகளான ரம்யா கலைமகள் கல்வி நிலைய மாணவி.

இவர் ப்ளஸ்டூ தேர்வில் 1181 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளார்.

இவர் ஏற்கெனவே 2006-07ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றிருந்தார்.

முதன்மைப் பாடமாக தமிழ் இல்லாததால் கிரீடம் பறிபோனது

தமிழ் அல்லாத பிற மொழிப் பாடத்தை முதன்மைப் பாடமாக எடுத்து அதில் முதலிடம் பிடித்த மாணவி ஆஷாகணேசன். இவர் மொத்தமாக 1191 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தமிழை முதன்மைப் பாடமாக எடுக்காமல் பிரெஞ்ச் பாடத்தை எடுத்திருந்ததால் அரசின் சலுகைகள் இவருக்குக் கிடைக்கவில்லை. "IFS படித்து வெளிநாட்டிற்குப் போய் நம் நாட்டின் பெருமையை உயர்த்துவதே தனது லட்சியம்.." என்று இந்தப் பெண் பேட்டியில் கூறியிருக்கிறார்.

இதேபோல் சமஸ்கிருதத்தை முதன்மைப் பாடமாக எடுத்திருந்த சென்னை ஆதம்பாக்கம் டி.ஏ.வி.பள்ளி மாணவர் முரளிகிருஷ்ணன் என்னும் மாணவர் 1188 மதிப்பெண்களும், ஹரீஸ் ராம் என்ற சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி.மேல்நிலைப்பள்ளி மாணவர் 1187 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

கண்பார்வையற்ற மாணவரின் சாதனை

உடுமலையைச் சேர்ந்த கண் பார்வையற்ற ஆனந்தகுமார் என்ற மாணவர், கோவை பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா சுவாமி சிவானந்தா மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கிப் படித்து வந்தவர்.

சாதாரணமாக பள்ளியில் சக மாணவர்களோடு அமர்ந்து படித்து வந்த இவர் இந்த ப்ளஸ்டூ தேர்வில் 1125 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதல் மாணவராகத் தேர்வு பெற்றுள்ளார்.

கண் பார்வையற்ற மாணவர்களுக்காகத் தயாரிக்கப்படும் ப்ளஸ் டூ வகுப்பு பாடங்களை ப்ரெய்லி முறையில் இவர் கற்றுள்ளார். இவரது மதிப்பெண் விவரம் தமிழ் 173, ஆங்கிலம் 172, புள்ளியியல் 197, பொருளாதாரம் 184, கணக்குப் பதிவியல் 200, வணிகவியல் 190.

மாணவர் ஆனந்தகுமார் பத்தாம் வகுப்புத் தேர்விலும் இதே பள்ளியில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றவராம். இவருடைய தந்தை நடராஜ் உடுமலைப்பேட்டையில் விவசாயம் செய்து வருகிறார்.

நிஜமான சாதனைகள்

பொள்ளாச்சியை அடுத்த கொங்கநாட்டன்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் பொள்ளாச்சி பழனிக்கவுண்டர் மேல்நிலைப்பள்ளி மாணவர். பண்ணை பொறியியல் மற்றும் அறுவடை பின்சார் தொழில்நுட்பவியல் பாடத்தில் 396 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளார்.

இவரது தந்தை திருமூர்த்தி தேங்காய் அறுத்துப் போடும் கூலி வேலை செய்து வருகிறார்.

விவசாயம் சார்ந்த அனைத்துத் தகவல்களும் அடிப்படையாகத் தெரிந்து வைத்திருந்ததால் இந்தப் பாடத்தைப் புரிந்து கொள்வதற்கும், தேர்வு எழுதுவதற்கும் எளிமையாக இருந்ததாகச் சொல்கிறார் சதீஷ்குமார். எலெக்ட்ரானிக்ஸ் துறையில் இன்ஜீனியராவதே தன் லட்சியம் என்கிறார் இவர்.

வணிகவியலில் முதலிடம்

பஸ் வசதியில்லாத கிராமத்தில் இருந்து மூன்றரை கி.மீ. தூரம் சைக்கிளில் சென்று படித்த ரேவதி என்ற மாணவி வணிகவியல் பாடத்தில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்று தனது ஊருக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இவர் அவிநாசி அருகே திம்மணையாம்பாளையத்தைச் சேர்ந்தவர். தெக்கலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வணிகவியல் பாடப் பிரிவில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

இவர் கணக்குப் பதிவியல் மற்றும் தணிக்கையியல், செய்முறை-1, செய்முறை-2 ஆகிய பாடங்களிலும் சதமடித்துள்ளார். தமிழில் 163, ஆங்கிலத்தில் 128 என மொத்தம் 1,091 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளி மகன்

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த அரியலூரைச் சேர்ந்தவர் சீராளன். இவர் ஒரு விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது மகன் சந்தோஷ்குமார். சங்கராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்டூ தேர்வில் ரேடியோ மற்றும் டிவி தொழில் பாடப்பிரிவில் 200-க்கு 187 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளார்.

இதே போல் கவுந்தப்பாடி வளையக்காரன்பாளையத்தைச் சேர்ந்த மோகன்குமார் என்ற மாணவர் பால்பண்ணை அறிவியல் பாடத்தில் முதலிடம் பிடித்துள்ளார். இவரது அப்பா போத்தநாயக்கர் விவசாயக் கூலித் தொழிலாளி.

சேலம் சமூக நலத்துறை சேவை இல்ல மேல்நிலைப்பள்ளி மாணவி சாந்தி, டெக்ஸ்டைல் டிஸைனிங் பாடத்தில் மாநில அளவில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். இவர் மொத்தமாக 1050 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவருக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகளில் விவகாரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல் இதே டெக்ஸ்டைல் டிஸைனிங் பாடத்தில் மாநில அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள மாணவி சித்ரகலா.

இவருக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் நடந்துள்ளது. ஆறு வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. இவரது கணவர் மாரடைப்பால் காலமானதால் சேவை இல்லத்தில் தங்கி படித்தராம். “தொடர்ந்து ஆசிரியர் பயிற்சி பெற விரும்புகிறேன்.. பெற்றோர் கூலி வேலை செய்வதால் வேறு மாதிரியான உதவிகள் கிடைத்தால் மட்டுமே தன்னால் மேற்கொண்டு படிக்கவியலும்..” என்கிறார் இவர்.

சாதனை படைத்த மாணவச் செல்வங்களை மனதாரப் பாராட்டுகிறேன்.

இன்னமும் மேற்கொண்டு அவர்களது கல்விப் பாதையில் ஜெயிப்பதற்கு என் அப்பன் முருகனின் அருள் அவர்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமாய் வேண்டிக் கொள்கிறேன்.

ICAF-மே மாதத்திய திரைப்பட விழாக்கள்

02-05-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

http://truetamilans.blogspot.com/2008/02/blog-post_23.html - இந்தப் பதிவில் நான் அறிமுகப்படுத்திய ICAF அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் மே மாதத்திய நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.

06.05.2008 - செவ்வாய் முதல் 09.05.2008-வெள்ளி வரையிலான நான்கு நாட்களும் Russian Film Festival நடைபெறப் போகிறது.

சென்னையில் கஸ்தூரிரங்கன் சாலையில் உள்ள ரஷ்யன் கல்ச்சுரல் சென்டர் அரங்கத்தில் இந்த படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.

முதல் நாளான 06-05-2008-செவ்வாய்கிழமை மட்டும், மாலை 6.15 மணிக்கு படம் திரையிடப்படும். மற்ற நாட்களில் மாலை 6 மணிக்கே படம் துவங்கிவிடும்.

இத்திரைப்பட விழாவில் ஒவ்வொரு திரைப்படத்திற்கு முன்பும், ஒரு டாக்குமெண்ட்டரி படமும் காட்டப்படும்.

திரைப்படங்களின் பட்டியல்

06.05.08 - 6.15 pm - War is not woman(Documentary)
Destiny of a man(feature)

07.05.08 - 6.00 pm - Lesson of History(Documentary)
Not by bread alone(Feature)
White Sun of the Desert(Feature)

08.05.08 - 6.00 pm - Spring After Victory(Documentary)
The Driver for Vera(Feature)
Dejavu(Feature)

09.05.08 - 6.00 pm - Our Victories(Documentary)
They Fought for their(Feature)

12.05.2008 திங்கள்கிழமை முதல் 15.05.08 வியாழக்கிழமை வரை பிரெஞ்ச் இயக்குநர் திரு.Eric Rohmer-ன் சிறந்த படைப்புகள் என்ற வரிசையில் இவர் இயக்கிய திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

12.05.08 - 6.30 pm - My night at Maud's
13.05.08 - 6.30 pm - Claire's knee
14.05.08 - 6.30 pm - The Good Marriage
15.05.08 - 6.30 pm - Pauline at the beach

இத்திரைப்படங்கள் அனைத்துமே கல்லூரி சாலையில் உள்ள Alliance Francaise of Madras அலுவலக அரங்கத்தில் திரையிடப்படும்.

19.05.08 திங்கள்கிழமை முதல் 22.05.08 வியாழக்கிழமை வரையிலும் Award Winning African Films திரையிடப்பட உள்ளன.

19.05.08 - 6.30 pm - Tilai(1990), Burkina Faso
20.05.08 - 6.30 pm - Guimba(1995), Mali
21.05.08 - Alizaoua(2000), Marocca
22.05.08 - Sarraounia(1986), Mauritanine

இத்திரைப்படங்களும் கல்லூரி சாலையில் உள்ள Alliance Francaise of Madras அலுவலக அரங்கத்தில் திரையிடப்படும்.

மேலும், 26.05.08 முதல் 29.05.08 வரை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கத்திலும் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இத்திரைப்படங்கள் பற்றியத் தகவல் விரைவில் அறிவிக்கப்படும்.

30.05.08 அன்று RED என்ற அமெரிக்கத் திரைப்படம் பிலிம் சேம்பர் திரையரங்கில் திரையிடப்பட உள்ளது.

இந்த அமைப்பில் சேருவதற்கான விதிமுறைகள் மற்றும் கட்டணங்கள் பற்றிய தகவல்கள் http://truetamilans.blogspot.com/2008/02/blog-post_23.html-இந்தப் பதிவில் இருக்கின்றன.

அதில் குறிப்பிடத் தவறிய ஒரு விஷயம்..

இந்த அமைப்பினர், வருடாவருடம் ஏப்ரல் மாத முதல் தேதியிலிருந்து தங்களது உறுப்பினர்களின் கார்டை புதுப்பிப்பதால் ஆர்வமுள்ளவர்கள் இப்போதே இணைந்து கொள்வதும், புதுப்பித்துக் கொள்வதும் நல்லது.

இல்லையெனில் நீங்கள் வேறு எந்த மாதத்திலாவது சேர்ந்திருந்தாலும் மறுபடியும் அடுத்த ஏப்ரல் மாதத்தில் கண்டிப்பாக மீண்டும் கட்டணம் செலுத்த நேரிடும்.(அதாவது அடுத்தாண்டு ஜனவரி மாதம் நீங்கள் உறுப்பினராகச் சேரும்பட்சத்தில், தொடர்ந்த ஏப்ரல் மாதத்திலேயே மீண்டும் ஒரு முறை ஆண்டு கட்டணமான 500 ரூபாயைக் கட்ட வேண்டியிருக்கும்.)

ஆர்வமுள்ளவர்கள் அமைப்பில் இணைந்து திரைப்படங்களைக் கண்டுகளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.