மதுரையில் மக்கள் தொலைக்காட்சியின் மூன்றாமாண்டு துவக்க விழா

28-08-2008


என் இனிய வலைத்தமிழ் மக்களே..

அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் ஆயிரம் இருந்தாலும் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும் ஒன்று சேர்ந்து ஒத்துக் கொள்ளும் ஒரு விஷயம் மக்கள் தொலைக்காட்சியின் அடக்கமான, ஆரவாரமில்லாத வெற்றியைத்தான்.

எந்த சேனலைத் திருப்பினாலும் “மாமியார்-மருமகள் சண்டை, மாமனார், மருமகன் மோதல். விஷம் வைப்பது எப்படி..? அடியாட்களை திரட்டுவது எப்படி? மனைவியை ஏமாற்றுவது எப்படி? திட்டமிட்டு கொலை செய்வது எப்படி? செய்த கொலையில் சிக்காமல் தப்பிப்பது எப்படி?” என்று சமூகத்தின் அனைத்து அநியாயங்களையும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒருவிதத்தில் பார்க்கப் போனால், வேகாத வெயிலில் கிடைக்கின்ற ஜில்லென்ற தண்ணீர்தான்.

தமிழகமே அழுவாச்சி சீரியல்களில் தவித்துக் கொண்டிருக்கும்போது மக்கள் தொலைக்காட்சி மட்டுமே கண்ணீரைத் துடைக்கும் பெண்களைக் காட்டியது. காமெடி என்கிற பெயரில் நடுவீட்டில் எச்சில் துப்புவதைக் கூட துல்லியமாகக் காட்டிய கண்றாவி காட்சிகளுக்கு மத்தியில், சிறுவர்களின் வாழ்க்கை முறைகள் எப்படியிருக்க வேண்டும் என்பதனை படம் பிடித்துக் காட்டியது மக்கள் தொலைக்காட்சிதான்.

நடு இரவில் குருவியைச் சுடுவதைப் போல குற்றவாளியாக்கப்பட்டவர்களை படுகொலை செய்துவிட்டு, மறுநாள் 10 ரூபாய் மாவுகட்டை வாங்கிப் போட்டுக் கொண்டு மருத்துவமனையில் படுத்துறங்கி வீடியோ கேமிராக்களுக்கு போஸ் கொடுத்த உலகப் புகழ் பெற்ற தமிழக போலீஸாரின் பேட்டியை வீரசாகசம் என்று சொல்லி அனைத்து சேனல்களும் கூத்தடித்துக் கொண்டிருந்த வேளையில்...

ஹிட்லருக்குத் தாங்கள் எந்தவிதத்திலும் சளைத்தவர்களல்ல என்பதை நிரூபிப்பதைப் போல வீரப்பன் வேட்டை என்ற பெயரில் தமிழகக் காவல்துறை நடந்து கொண்ட மிருகத்தனத்தை பெரும் பொருட்செலவில் நஷ்டம் பற்றி கவலையில்லாமல் சீரியலாக எடுத்துப் பெருமையைத் தேடிக் கொண்டது மக்கள் தொலைக்காட்சிதான்.

“மண் பயனுற வேண்டும்” என்பதை தனது தாரக மந்திரமாக வைத்திருக்கும் மக்கள் தொலைக்காட்சி அந்தப் பணியைத் திறம்பட நேர்மையாக செய்து வருகிறது என்றே சொல்லலாம்.

இப்போதுதான் ஆரம்பித்தது போலிருக்கிறது மக்கள் தொலைக்காட்சியின் தோற்றம். ஆனால் மூன்று வருடங்களாகிவிட்டதாம் அதன் வயது. இரண்டு மாதங்களுக்கு முன்புதான் சென்னையில் ஸ்டாலின் தலைமையில் விழா கொண்டாடப்பட்டது.

இப்போது சங்கம் வளர்த்த மாமதுரையில் மக்கள் தொலைக்காட்சி தனது மூன்றாமாண்டு விழாவை அமர்க்களமாக நடத்தவிருக்கிறது. இன்று மாலைதான் எனக்கு அழைப்பிதழ் கிடைத்தது.

உள்ளடக்கம் மனதைக் கவர்வது போலவும், தமிழ்.. தமிழ் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்கின்றவர்கள், அவர்களது அலுவலக அனுமதி அட்டையையே ஆங்கிலத்தில் வைத்து தமிழை பரப்பிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், மக்கள் தொலைக்காட்சி மேடையிலும்கூட தமிழ் மணக்க நிகழ்ச்சிகளை வழங்கப் போகின்றதே என்கிற ஒரு கரிசனையிலும் ஏதோ ஒன்றாகி இந்தப் பதிவினை இடுகிறேன்..

இனி மக்கள் தொலைக்காட்சியின் மூன்றாமாண்டு துவக்க விழாவின் நிகழ்ச்சி நிரல்

செப்டம்பர் 6-ம் நாள் மாலை 4 மணிக்கு மதுரை, தல்லாகுளம், இராசா முத்தையா மன்றத்தில் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளோடு நிகழ்ச்சி துவங்கவிருக்கிறது.

இசைத்தமிழும், நாட்டியத் தமிழும், நாடகத்தமிழும் ஒருங்கே இணைந்து இயம்பவிருக்கும் இந்த கலை நிகழ்ச்சிகளின் பட்டியல் இதோ..

நாகசுரம் : திருக்குவளை சகோதரிகள்

நாட்டுப்புறப்பாட்டு : திருமதி பரவை முனியம்மா

கலைக்கிராமம் குழுவினர் வழங்கும் உருமி மேளம்

காணிக்காரர் திரு.பழங்குடி பாரதி மற்றும் குழுவினர் வழங்கும் காட்டுப்புறப் பாட்டு

காவடி ஆட்டம் : கலைமாமணி தஞ்சை விநாயகம்

மதுரையில் வீரப்பனும், கூட்டாளிகளும்

மதுரை பத்ரீசியார் நடுநிலைப்பள்ளி மாணவிகள் பாடும் மக்கள் தொலைக்காட்சியின் மூன்றாவது ஆண்டு விழா பாடல்

மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் வழங்கம் கலைச்சங்கமம் (மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் என அனைத்துக் கலைகளின் சங்கமம்)

புதுகை பிரகதீசுவரன் குழுவினர் வழங்கும் புதிய கோணங்கிகளின் அதிர்வேட்டு.

மக்கள் தமிழ்

மக்கள் செய்திகள் : ஒரு பார்வை என்கிற தலைப்பில் டெக்கான் கிரானிக்கல் இதழின் சிறப்பாசிரியர் திரு.பகவான்சிங் அவர்கள் பேசப் போகிறார்.

மக்கள் தொலைக்காட்சியில் தமிழன் என்கிற தலைப்பில் கவிஞர் திருப்பூர் கிருட்டிணன் பேசவிருக்கிறார்.

மலரும் பூமி நிகழ்ச்சி : ஒரு பார்வை என்கிற தலைப்பில் இயற்கை விஞ்ஞானி திரு.நம்மாழ்வார் அவர்கள் பேசுவார்.

மக்கள் தொலைக்காட்சியின் தொடர்கள் என்கிற தலைப்பில் திரைப்பட இயக்குநர் திரு.சீமான் அவர்கள் பேசுவார்.

மக்கள் தொலைக்காட்சியின் சமூகப் பார்வை என்கிற தலைப்பில் முனைவர் வசந்திதேவி அவர்கள் சிறப்புரையாற்றுவார்கள்.

மக்கள் தொலைக்காட்சியில் திரைப்படங்கள் என்கின்ற தலைப்பில் திரைப்பட இயக்குநர் திரு.அமீர் அவர்கள் உரையாற்றவுள்ளார்.

மக்கள் தொலைக்காட்சியில் தமிழ்க் கலைகள் என்ற தலைப்பில் பேசவிருக்கிறார் முனைவர் திரு.கே.ஏ.குணசேகரன் அவர்கள்.

இயற்றமிழ் பிரிவில் உரையாற்றுபவர்கள்

நெல்லைத்தமிழ் பற்றி கலைமாமணி திரு.சுப்பு ஆறுமுகம் அவர்கள்..

குமரித்தமிழ் பற்றி எழுத்தாளர் திரு.நாஞ்சில் நாடன் அவர்கள்..

கொங்குத் தமிழ் பற்றி எழுத்தாளர் திரு.பாமரன் அவர்கள்..

சென்னைத் தமிழ் பற்றி முனைவர் பெரியார்தாசன் அவர்கள்..

மதுரைத் தமிழ் பற்றி திரு.திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள்..

ஈழத் தமிழ் பற்றி ஐயா திரு.எஸ்.பொ அவர்கள்.

உலகத் தமிழ் பற்றி திரு.செந்தலை கெளதமன் அவர்கள்..

விழாவிற்கு தலைமையேற்க இருப்பவர் மத்திய மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு.அன்புமணி இராமதாசு அவர்கள்..

மக்கள் தொலைக்காட்சியின் மேலாண் இயக்குநர் திரு.வேணு சஞ்சீவி அவர்கள் வரவேற்புரையாற்றுவார்கள்.

மக்கள் தொலைக்காட்சியின் நிறுவனர் மருத்துவர் திரு.ச.இராமதாசு அவர்கள் சிறப்புரையாற்றுவார்கள்.

மக்கள் தொலைக்காட்சியின் முதன்மைச் செயல் அலுவலர் திரு.அ.சிவக்குமார் அவர்கள் நன்றியுரை நிகழ்த்துவார்.

இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் அன்று மாலை 4 மணி முதல் மக்கள் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவிருக்கிறது.

மதுரை நேயர்களும், வலைப்பதிவர்களும் வாய்ப்பு கிடைத்தால் நேரில் சென்று, கண்டு, களிக்கும்படி வாழ்த்துகிறேன்.

நன்றியுடன்


உண்மைத்தமிழன்

2 comments:

ஜோதிஜி said...

உங்களை முன் உதாரணம் காட்டி என்னை பழி எடுத்துக்கொண்டுருக்கிறார் திரு சுந்தர் ராமன் (அது ஒரு கனா காலம்). காரணம் என்னுடைய நீள் பதிவுகள.


இரண்டு நாட்களாக முயற்சித்து போது எங்கங்கேயோ கூட்டிப் போய்கின்றதே தவிர நான் விரும்பியபடி இந்த நடு இரவில் தான் உள்ளே வர முடிந்தது.


நான் பரவாயில்லை போலும். ஆனாலும் அத்தனையும் சுவராஸ்மாக இருக்கிறது. எத்தனை பொருள். எத்தனை விஷயங்கள். சகலகலா வித்தகரோ?


ஆனாலும் நான் விரும்பும் விஷயங்கள் இல்லாத வரையில் எந்தக் கருத்தும் எவர் மீதும் திணிப்பது இல்லை. நான் மனதில் உள்ளே வைத்துள்ள இந்த மக்கள் தொலைக்காட்சி குறித்து உங்கள் பதிவு பார்த்ததும் அதிக சந்தோஷம். அதுவும் உங்கள் தொடக்க வார்த்தைகள் அத்தனையும் உண்மை.


இந்த அதிகாலை 3,30 மணி அளவில் ஓடிக்கொண்டுருப்பது அந்த மக்கள் தொலைக்காட்சி தான்.


ரீட்டா பகுகுணா செய்தி ஓடிக்கொண்டுருக்கிறது. காது மட்டும் கேட்டுக்கொண்டுருக்கிறது.


நீங்கள் குறிப்பிட்டுருக்கும் அந்த நிகழ்ச்சிகளை பார்த்தவன் என்ற முறையில் தரம் குறித்து அக்கறை கொண்டவன் என்ற முறையில் அவர்களின் வழிமுறைகள் குறித்து ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் " மக்கள் தொலைக்காட்சி " தமிழன் வாழும் கடைசி காலம் வரையிலும் உயிரை (பொருளாதாரம்) மற்றும் நம்பகத்தன்மை ( தென் மாவட்டங்கள் முழுவதும் வருவதே இல்லை. நன்றி................?) கையில் பிடித்துக்கொண்டு தொண்டு செய்ய வேண்டும். கவலையில்


ஜோதிஜி


தேவியர் இல்லம்

திருப்பூர்.

http://texlords.wordpress.com

abeer ahmed said...

See who owns typepad.com or any other website:
http://whois.domaintasks.com/typepad.com