பதிவர் அனுராதா அம்மா அவர்களுக்கு எனது அஞ்சலி!

28-08-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இன்று காலை அலுவலகத்திற்குள் கால் வைத்தவுடன் வந்த செய்தி எனக்கு பெரும் துக்கத்தை தந்தது.

“உண்மைத்தமிழன்தானே.. நான் திண்டுக்கல் சர்தார் பேசுறேன்..” என்று ஆரம்பித்த அந்தக் குரல் பிசிறு தட்டாமல், ஒரு தடங்கலும் இல்லாமல் “அனுராதாம்மா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி expired ஆயிட்டாங்க.. உங்களுக்குச் சொல்லணும்னு நினைச்சேன். அதுதான்.. உங்களால முடிஞ்சா ஒரு பதிவு போட்டிருங்களேன்..” என்றார்.

வருத்தங்களை வார்த்தைகளால் மட்டுமே வடிக்கும் அளவுக்கு நமது சமூகப் பிரச்சினைகள் சூழ்ந்திருக்கின்றன என்பதால் எனது வருத்தங்களை அவருக்குத் தெரிவித்து போனை வைத்தேன்.

கடந்த 2003-ம் ஆண்டு முதலே அந்தக் கொடிய நோயுடன் மரணப் போராட்டமே நடத்தி வந்திருக்கிறார் நமது பதிவரம்மா.

பொதுவாக பெண்கள் வெளியில் சொல்வதற்கே சங்கடப்படக்கூடிய பல விஷயங்களை அவருடைய துன்பவியல் அனுபவத்தின் மூலம் வெளிப்படுத்தி நம் சமூகத்திற்கு தேவையான ஒரு உதவியைச் செய்திருக்கிறார் அவர்.

பொதுவாகவே நோய் வந்தால் உடனேயே பயத்திலேயே சுருண்டு படுத்துவிடும் மக்கள் மத்தியில் வந்த நோய் எதனால் வந்தது? ஏன் வந்தது? என்பதையெல்லாம் வெளியில் சொல்லி மற்றவர்களையும் எச்சரிக்கையுடன் இருக்கவைக்க வேண்டும் என்று நினைத்த அந்த உயர்ந்த உள்ளத்திற்கு நாம் எப்படி காணிக்கை செலுத்துவது என்று தெரியவில்லை.

விதி வலியது என்பார்கள். அதனை தனது மதியால் இத்தனை நாட்கள் போராடி வந்த அம்மாவின் மனத்திடம், அனைவருக்கும் வாய்த்துவிடாது. அம்மாவுக்கு அது கிடைத்திருக்கிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்பாக அவர் நீண்ட மருத்துவமனை வாசத்திற்குப் பிறகு வீடு திரும்பியிருப்பதை பதிவாக எழுதியிருந்தார். அப்போதுதான் நான் அவருக்கு போன் செய்து பேசினேன். தான் மிகத் தைரியமாக இருப்பதாகவும், நோயின் தாக்கம் அவ்வப்போது வந்து கொண்டேயிருப்பதால் பதிவுகள் மட்டும் உடனுக்குடன் எழுத முடியவில்லை என்றும் வருத்தப்பட்டார். இதுவே எனக்கு ஆச்சரியம்தான்.. “உங்களை எப்படி பாராட்டுறதுன்னே தெரியலம்மா.. நல்லாயிருங்கம்மா.. எல்லாருத்துக்கும் மேல முருகன் இருக்காம்மா..” என்றேன்.. சிரித்துவிட்டு போனை வைத்தார்.

இவருடைய கணவர்தான் நான் சில காலமாகத் தேடிக் கொண்டிருக்கும் திண்டுக்கல் சர்தார் என்பது எனக்கு நேற்றுதான் தெரியும். நேற்றுதான் அவருடைய பதிவில் இது பற்றி வெளிப்படுத்தியிருந்தார். இந்த நேரத்தில் அது பற்றி கேட்கக்கூடாது என்பதால் நானும் கேட்கவில்லை.

ஆரம்பக் காலத்தில் நான்தான் ‘திண்டுக்கல் சர்தார்’ என்று நினைத்து எனக்கு ஏகப்பட்ட ‘அன்பான’ பின்னூட்டங்கள் டஜன் கணக்கில் வந்து கொண்டிருந்தன. தொல்லை தாங்காமல் நானே அவருக்கு ஒரு வேண்டுகோளும் விடுத்தேன். “முகத்தையாவது காட்டுங்களேன்” என்று.. ஆனால் இப்படியொரு துர்ப்பாக்கிய சூழ்நிலையில் அது நிகழும் என்று நான் நினைக்கவில்லை. எல்லாம் முருகன் செயல்.

நாளை காலை மதுரை, தத்தனேரி மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று தெரிவித்தார்.

அம்மாவின் ஆத்மா சாந்தியடைய அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்.

4 comments:

உண்மைத்தமிழன் said...

//உருப்புடாதது_அணிமா said...

ஆழந்த அனுதாபங்கள்..
கண்ணீர் அஞ்சலி...
அவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும்..//

முரளிகண்ணன் said...

திண்டுக்கல் சர்தார் அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்

நித்யன் said...

அம்மாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறேன். வலையில் விழிப்புணர்வை ஏற்படுத்திய வகையில் அவருடைய பணி மிகச்சிறப்பானது. அவருடைய நெஞ்சுரம் நாம் பின்பற்றத்தக்கது.

அவருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

நித்யகுமாரன்.

abeer ahmed said...

See who owns searchmalta.com or any other website:
http://whois.domaintasks.com/searchmalta.com