Showing posts with label பதிவர் வட்டம். Show all posts
Showing posts with label பதிவர் வட்டம். Show all posts

உங்கள் நல்லாசியுடன் புதிய செய்தித் தளம்..!

7-2-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



அப்பன் முருகன் எவ்வளவுதான் சோதனைகளைக் கொடுத்தாலும் வாழ்ந்துதான் தீர வேண்டும். போராட்டங்களை நடத்தித்தான் ஆக வேண்டும்.. தற்போதைய நிலைமையில் வேலை தேடும் படலத்தை ஒரு பக்கம் நகர்த்திக் கொண்டேயிருந்தாலும், எதிர்பார்த்த வேலை கிடைக்கின்றவரையிலும் வருமானத்திற்கு ஏதாவது செய்தாக வேண்டிய நிலை..

வெறுமனே பத்து காசுக்கு பிரயோசனப்படாமல் பிளாக்கில் எழுதி வருவதையே கொஞ்சம் மாற்றி தனி இணையத்தளத்தில் எழுதினால் என்ன என்ற யோசனை பல ஆண்டுகளாக எனக்குள்ளேயே இருந்தது. ஆனால் நேரமில்லாத காரணத்தினாலும், அதனை தொடர்ந்து பின்பற்ற முடியாதே என்கிற தவிப்பினாலும் தொடாமலேயே இருந்தேன்.

இப்போதுதான் நேரம் வாய்த்தது.. எனக்குப் பிடித்த.. நான் செய்கின்ற தொழிலான சினிமாவில்.. பத்திரிகையாளராக உருமாறி வலைத்தளத்தில் எழுதிக் கொண்டிருந்ததை, இப்போது எனது சொந்தத் தளத்தில் எழுதி வருகிறேன்..

இப்படியொரு ஐடியாவை சில மாதங்களுக்கு முன்னால் கூகிள் பிளஸ்ஸில் நான் வைத்தபோது உடனுக்குடன் அன்றைக்கே ஓடி வந்து ,அறிவுரையும், ஆலோசனையும் சொல்லி ஊக்கமளித்தவர்கள் பலர்.. அதில் தற்போது அமெரி்ககாவில் இருக்கும் அண்ணன் முத்துக்குமரன், எனது தளத்தை உடனுக்குடன் பதிவு செய்து கொடுத்தார். பெங்களூரில் இருக்கும் நமது ஐயப்பன் கிருஷ்ணன் என்கிற ஜீவ்ஸ் அதனை ஒரு சில நாட்களில் உருவாக்கிக் கொடுத்தார்..

ஆனாலும் அந்த நேரத்தில் என்னால் முழுமையாக அதனைச் செயல்படுத்த முடியவில்லை. சட்டென்று அலுவலகத்தில் எழுந்த திடீர் மாற்றங்கள் என்னை கொஞ்சம் யோசிக்க வைத்தது.. குழி தோண்டுகிறார்கள் என்பதையே புரிந்து கொள்ள முடியாத நிலையில்.. குப்புறத் தள்ளிய பிறகே குழி நமக்குத்தான் என்பது தெரிந்தது.. அதற்குள்ளாக 2 மாதங்கள் ஓடிவிட்டன..

இதன் பின்பும் தம்பி ஜீவ்ஸ் அவ்வப்போது சாட்டிங்கிலும், போனிலும் இதைப் பற்றிச் சொல்லி கடிந்து கொண்டார். முத்துக்குமரன் அண்ணன் "எல்லாம் வேஸ்ட்டா போச்சேண்ணே.. ஏன் இத்தனை லேட் பண்றீங்க..?" என்று வருத்தப்பட்டார்.. அப்போதும் அதனை ஆரம்பிக்கத் தயங்கினேன். காரணம்.. அதனை ஆரம்பித்து பாதியில் விடவே முடியாது. துவக்கினால் அதனை முழுமையாகச் செய்ய வேண்டும் என்று நினைப்பவன் நான். அதனால்தான் அத்தனை யோசிப்பு..

போன மாத கடைசி வாரத்தில் களத்தில் ஏற்பட்ட சில, பல ஏமாற்றங்கள் வேறு வழியே இல்லாமல், என்னை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்து தள்ளிவிட்டது. www.tamilcinetalk.com என்ற இத்தளத்தை முழுமையாக பணிக்குக் கொண்டு வரும் பணியை துவக்கினேன்.. அருமை நண்பரும் 'கேள்விக்குறி' படத்தின் இயக்குநரான அண்ணன் ஜெய்லானி, மிக அருமையாக மிகக் குறுகிய காலத்தில் இத்தளத்தை முழுமையாக வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார்.. 

முழுக்க, முழுக்க சினிமா பற்றிய செய்திகளைத் தொகுத்து தரும் தளமாகவே இதனை கொண்டு வந்திருக்கிறேன். இதுதான் எனது தொழில். இதன் பின் விளைவுகளும், பக்க விளைவுகளும் எனக்கே..! இதுவரையில் 'உண்மைத்தமிழன்' வலைத்தளத்தில் எழுதி வந்த சினிமா விமர்சனங்கள், இனி இந்த தமிழ்சினிடாக்.காம்-ல் வெளிவரும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்..

அதன் முதல் கட்டமாக 'ரம்மி'  மற்றும் 'உ' படத்தின் விமர்சனங்களை தமிழ்சினிடாக்.காம்-ல் எழுதியுள்ளேன்..  படித்துப் பார்க்கவும்..! பிற்காலத்தில் தேவையெனில் 'உண்மைத்தமிழன்' வலைத்தளத்திலும் பதிவு செய்து வைக்கிறேன்.. இப்போது ஏதேனும் ஒரு தளத்தில் மட்டும் வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஏனெனில் சொந்தத் தளமென்றாலும் அதற்குத் தேவை அதிகப்படியான பார்வையாளர்களின் வருகை.. அதற்காகத்தான் இப்போது, இந்த காலை வேளையில் பல்லுகூட விளக்காமல் மல்லு கட்டிக் கொண்டிருக்கிறேன். அத்தனை வேலைகள் காத்திருக்கின்றன.. 

வலைத்தளம் உருவாக பெரிதும் உதவிகள் செய்த அண்ணன்கள் முத்துக்குமரன், ஜீவ்ஸ் ஆகியோருக்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். இப்போதுவரையிலும் அவர்களுக்கு சல்லிக்காசு தரவில்லை.. இதுபோன்ற நட்புகளை நம்பித்தான் நமது வாழ்க்கை தீராநதியாக ஓடிக் கொண்டிருக்கிறது.. நன்றி நண்பர்களே..! என்றென்றும் நினைவில் வைத்திருப்பேன். அண்ணன் ஜெய்லானிக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள்..

நண்பர்களும், அன்பர்களும் கோபித்துக் கொள்ளாமல், சிரமம் பார்க்காமல் எனது சினிமா செய்தித் தளத்திற்கு வந்து சினிமா விமர்சனங்களை படித்துக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..



மீண்டும் சந்தி்பபோம் மக்களே..!

வெட்டி வெண்ணை முருகா..பாகம்-2..

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

என்னுடைய இந்த வெட்டி வெண்ணை முருகா பதிவைப் படித்துவிட்டு வழக்கம்போல புலம்பித் தள்ளியிருக்கிறான் என்று ஒரு சின்ன புன்சிரிப்போடு கடந்து சென்றவர்களுக்கும், பின்னூட்டமிட்டு வாழ்த்திய, திட்டிய அன்பார்ந்த நெஞ்சங்களுக்கும் எனது நன்றி..!

இந்தப் பதிவைப் படித்துவிட்டு திருவாரூரில் இருந்து சரவணன் என்ற என்னைப் போன்ற இன்னொரு ஜீவன், எனக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறது. அந்தக் கடிதம் இது :

உண்மைத் தமிழன் அண்ணே வணக்கம்.

என் பேரும் சரவணன்தான். பொதுவா முருகன் திருநாமங்களில் அதுவும் சரவணன் என்ற பெயர் வைத்தவர்களை போட்டு அடித்து, துவைத்து, காயப்போட்டு உரித்து தொங்கவிட்டுத்தான் விளையாடிக்கொண்டிருக்கிறான். என்ன பண்ண சொல்றீங்க.?

நான் சரஸ்வதி பூஜை அன்னைக்கு பிறந்துட்டேன்னு சரவணன்னு பேர் வெச்சுட்டாங்க. சமீபத்துல ஒரு நியூமராலஜி பார்ட்டியை வேறு ஒரு வேலையா சந்திச்சப்ப, நீங்க பிறந்த தேதிக்கும் உங்க பேருக்கும் ஆகவே ஆகாதுன்னு சொல்லி, 500 ரூபா பீஸ் எடுத்துட்டு வாங்க. சூப்பரா நான் ஒரு பேர் வெச்சுடுறேன்னு சொன்னார். "அட போப்பா, அந்த காசு இருந்துச்சுன்னா ஒரு வாரம் என் வீட்டுல சாப்பாடு செலவுக்கு அட்ஜஸ்ட் ஆயிடும்"னுட்டு வந்துட்டேன்.

கடந்த 17-ம் தேதி என்னுடைய டி.டி.பி. சென்டர்ல சிஸ்டம் ஹேங் ஆயிடுச்சு. நானும் என்னென்னவோ செய்து பார்த்தேன். வழிக்கு வரலை. சுவிட்ச் போர்டு சுவிட்சையே ஆப் செஞ்சுட்டு, திருப்பி ஆன் பண்ணினா பூட் ஆகி ஆட்டமெடிக் லாகின் ஆகி உள்ளே போகுது. அப்புறம் அவ்வளவுதான். டெஸ்க் டாப்பில் உள்ள ஒரே ஒரு நோட்பேட் பைலை திறக்குறதுக்குள்ள ஹேங் ஆயிடும்.  அட்டகாசம் படத்துல கருணாஸ் சொல்லுவாரே, ‘வண்டி ஸ்டார்ட் ஆகுது. கியர் விழுகுது. ஆனா வண்டி மூவ் ஆக மாட்டெங்குது’ன்னு.. அந்த கதிதான் என் கதியும். சரி. இனி நம்ம சிஸ்டம் அதோ கதிதான்னு முடிவு பண்ணி நானும் எனக்கு தெரிஞ்ச சர்வீஸ் எஞ்சீனியர்கள், எனக்குத் தெரியாத.. ஆனா வேலை தெரிஞ்ச எஞ்சீனியர்கள்னு அழைச்சுட்டு வந்து பார்த்தாலும் அவங்களும் உதட்டைப் பிதுக்கிட்டாங்க.

இந்த லட்சணத்துல கிரௌன் சைஸ்ல தலா எண்பது பக்கம் கொண்ட புத்தகம் லே அவுட் செஞ்சு அந்த கம்ப்யூட்டர்லதான் இருக்கு. நாலு நாள்ல சித்தப்பா பொண்ணுக்கு கல்யாணம். சும்மா இருந்த தம்பி, சித்தப்பாகிட்ட 12-க்கு எட்டு ப்ளக்ஸ் வெச்சிடுறேன்னு உதார் விட்டாச்சு. அதை ரெடி பண்ணணும். இது தவிர பொங்கல் நேரத்துல கோர்ட் சராமாரியா லீவா போனதால வழக்கமா கேஸ் விவரங்கள் டைப் செய்யுற வக்கீலுங்க அந்த நேரத்துலதான் அதிகமா வேலையை எடுத்துக்கிட்டு வர்றாங்க. 

சரி… யாராச்சும் பழைய சிஸ்டம் தள்ளிவிடுறாங்களான்னு விசாரிச்சா இப்போ ஒண்ணும் இல்லையேன்னு பழைய சோறு கேட்டு போனவனை (பழங்கால பிச்சைக்காரனை) விரட்டுற மாதிரி பதில் சொல்லிட்டாங்க.  27 ஆயிரம் ரூபாய்க்கு அவர் வாங்கின சிஸ்டத்தை அட்லீஸ்ட் 20 ஆயிரம் கொடுத்தாச்சும் எடுத்தாதான் நம்ம மனசாட்சி கொஞ்சம் அமைதியா இருக்கும்.

அது போகட்டும். அந்த சிஸ்டத்தையாவது அடுத்த நாளே ரெடி பண்ண முடிஞ்சதா? இல்லையே. விண்டோஸ் 7-தான் இன்ஸ்டால் ஆகுது. அது நான் வழக்கமா பயன்படுத்துற சில சாப்ட்வேருக்கு சப்போர்ட் பண்ணாது. எக்ஸ்பி இன்ஸ்டால் பண்ணவே முடியலை. நானும் என்னென்னவோ முயற்சி செய்து பார்த்து 10 நாள் கழித்து உறவுக்கார பையன் ஒருத்தன் பயாஸ் செட்டிங்ல ஒரே ஒரு ஆப்ஷனை மாத்தினான். எக்ஸ்பி ஓகே ஆயிடுச்சு. 

நடுவுல இந்த பத்துநாளும் என்ன நடந்துச்சுன்னுதானே கேட்குறீங்க.? மக்கர் பண்ணின பழைய சிஸ்டமே ஒர்க் ஆகுது. ஆனாஅதுவும் கடந்த 5 வருசமா நம்மகிட்ட சிக்கி சின்னாபின்னமாகிதான் உழைச்சுகிட்டு இருக்கு. இப்போ தேவையில்லாம ஏற்கனவே இருக்குற கடன் போதாதுன்னு புதுசா ஒருத்தர்கிட்ட இருபதாயிரம் கடன். மாசம் 4 ஆயிரம் ரூபா சம்பாதிக்கிறதுக்குள்ள நாக்கு தள்ளிப்போற ஒருத்தனுக்கு இது தேவையா..? பழைய சிஸ்டம் டுயல் கோர் சிக்கியிருந்தா எப்படியும் சிபியு மட்டும் நல்ல கண்டிசனா இருந்தாலே ஆறு அல்லது ஏழாயிரம் ரூபாய்ல முடிஞ்சிருக்கும். இப்படி இழுத்துவிட்டுட்டார் ஆண்டவன். 

அடுத்த டுவிஸ்ட் என்னன்னா நான் பழைய சிஸ்டம் இருக்கான்னு விசாரிச்ச எல்லாரும் அடுத்து 2 நாள்ல இப்போ இருக்குன்னு போன் செய்யுறானுங்க. இது போதாதுன்னு …………. ஊர் கலெக்டர் ஆபீஸ் வளாகத்துல ஒரு துறையில இருக்குற உறவினர், எங்க ஆபீஸ்ல ஹை கான்பிகிரேசன்ல சிஸ்டம் போடப்போறதால பெரிய யுபிஎஸ், சிஸ்டம், பிரிண்டர்அப்படின்னு செட்டப்பா இருக்கு. நீ வந்து பார்த்து என்ன ரேட் தேறும்னு நீயே முடிவு பண்ணி மூணு நாலு லெட்டர்பேடுல ஒரு கொட்டேசன் கொடுத்துடு. நான் வாங்கித் தர்றேன்னு சொல்றார். மாவட்ட மைய நூலகத்துக்கு போனா அங்க ஒரு சிஸ்டத்தை கொடுத்துட்டு அப்கிரேடு செய்யப்போறதா நமக்கு பழக்கமான லைப்ரேரியன் சொல்றார். இன்னொரு தனியார் பைனான்ஸ் நிறுவனத்துல இதே மாதிரி ஒரு தகவல் வருது. இது எல்லா தகவலும் நான் ஒரு சிஸ்டத்தை கொண்டு வந்த ரெண்டே நாள் கழித்து ஒரு நாள் முழுக்க இந்த மாதிரி தகவல் வருதுன்னா மேல உட்கார்ந்துருக்குறவனுங்களை என்ன செய்யுறது...?

இது ரெண்டு நாள் சாம்பிள்தான் அண்ணே. எனக்கு விவரம் தெரிஞ்ச நாலு வயசுல இருந்து நடந்ததை புத்தகமாக்கினா குறைஞ்சது 100 தொகுதி அச்சடிக்கலாம். நடுவுல நீங்க ஒரு நாள் வண்டி பஞ்சர் ஆன கதை எழுதியிருந்தீங்கிளே. அப்படி நமக்கு வாரத்துக்கு நாலு மேட்டர் நடக்கும்.கைப்புள்ள வடிவேலு கதையா... என்ன இன்னைக்கு பொழுது விடிஞ்சதுல இருந்து ஒரு அடியும் விழலைன்னு மிச்சமிருக்குறஒண்ணு ரெண்டு நாள்ல கவலைப்படுற அளவுக்கு நம்ம கதி ஆயிடுச்சு.

நான் மீடியேட்டரா இருந்து யாருக்காச்சும் ஒரு வேலையை கைகாட்டி விட்டா ஒருத்தர் 10 முதல் 20 ஆயிரம் லாபம்கிடைச்சா போதும்னு இருந்த நேரத்துல 1 லட்ச ரூபாய் லாபம் கிடைச்சுடுச்சுன்னு மிரண்டு போய் இருக்கார். ஆனா என் கதி... கடை வாடகை, வீட்டு சாப்பாட்டு செலவு தவிர வேறு ஒரு பைசா பார்க்க முடியலை. தொழிலை விட்டுட்டு வேலைக்கு போக வேண்டியதுதானேன்னு கேட்பீங்க. வேலைக்கு போன ஒரு இடத்துல கூட எனக்கு சம்பளம் அதிகமா இல்லை... பேசுன தொகையே வராதுண்ணே. உள்ளூர் ஸ்பேர் பார்ட்ஸ் கடையில இருந்து தினமலர் எடிட்டோரியல்வரை இதுதான் நிலைமை.

வெண்ணை வெட்டி முருகான்னு நீங்க எழுதுன பதிவை படிச்சதும், என் மனசுல இருந்த சோகமெல்லாம் மறைஞ்சு நாமசங்கம் சேர்றதுக்கு ஒரு ஆள் இருக்காருன்னுதான் தோணுச்சு.

அன்புடன்

From 

Saravanan
Thiruvarur.


அன்பின் சரவணன்

உங்களுக்கு நான் ஆறுதல் சொல்லித் தேற்றும் நிலையில் இல்லை.. வேண்டுமானால் நாம் இருவரும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வோம்.. 

வாழ்க்கை ஒரு போராட்டம்.. அதில் ஜெயிப்பவன்தான் மனிதன் என்று அடுத்த வேளை சோற்றுக்கு பிரச்சினையில்லாத பேச்சாளர்கள்தான் பேசுவார்கள்.. அவர்களுக்கு கவலையில்லை. பேசுகிறார்கள். வாழ்க்கையில் இத்தனை பிரச்சினைகள் வருகின்றன.. இத்தனை கஷ்டங்கள் வருகின்றன.. அதனை நிவர்த்தி செய்யும் வழிகளும் இங்கேயே இருக்கின்றன. அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்ற அறிவுரை எல்லா திசைகளில் இருந்தும் கிடைக்கின்றன.. ஆனால் அது தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தால் எப்படியிருக்கும் என்று கேட்டுப் பாருங்கள்.. பதிலே வராது..

ஒருவன் வாங்கி வந்த வரமே இப்படித்தான் என்றால் அவன் உடல் சுடுகாடு போகும்வரையிலும் எழுந்து, விழுந்து பின் எழுந்து, பின் மீண்டும் விழுந்து.. இப்படியேதான் இந்த வாழ்க்கைச் சூழலில் உழல வேண்டும்.. உங்களது துயரங்கள் தொடர்கதை என்னும்போதே நீங்களும் என்னைப் போன்றவர் என்ற உணர்வினை என்னால் உணர முடிந்தது..!

பகுத்தறிவை பயன்படுத்தச் சொல்லி அறிவுரை வழங்கும் அஞ்சாசிங்கங்கள் எல்லாம் இங்கே பலர் இருக்கிறார்கள். பாவம்.. அவர்களுக்கு இதுவெல்லாம் வாய்க்க வாய்ப்பில்லை.. வாழ்க்கையில் துயரங்களையும், சோகங்களையும் உண்மையாகவே அனுபவிக்காதவனிடம் அதன் நிழல்கூட தெரியாது.. பார்ப்பவர்களிடத்திலெல்லாம் எதையும் ஈஸியா எடுத்துக்கணும் என்று சொல்லிவிட்டுப் போகத் தெரிந்தவனுக்கு அவனது பிரச்சினையைத் தீர்க்க ஆயிரம் பேர் இருப்பார்கள்.. இருந்திருக்கிறார்கள் என்பதெல்லாம் புரியாது..!

அன்பின் சரவணன்.. இதுதான் நமது விதி.. போராடி, போராடியேதான் நாம் அனைத்தையும் பெற வேண்டும் என்பது இந்த ஜென்மத்தில் நமக்கு விதிக்கப்படடிருக்கும் விதி.. அதனை நம்மால் மீற முடியாது.. ஒரு செயலைத் துவக்கும்போதே இது நடக்காமல் போனால் என்ன செய்வது என்பதற்கான வழிகளையும் வைத்துக் கொண்டே எதனையும் செய்யத் துவங்குங்கள். இதுதான் நான் உங்களுக்குக் கொடுக்கும் ஒரேயொரு சின்ன அட்வைஸ்.. இதைத்தான் நானும் இப்போதுவரையிலும் பின்பற்றுகிறேன்..!

போன ஜென்மத்து பாவத்தையெல்லாம் இந்த ஜென்மத்தில் சுமக்குகிறோம் என்கிறார்கள்.. இந்த ஜென்மத்தில் நாம் செய்கிற புண்ணியமெல்லாம் சேர்ந்து அடுத்த ஜென்மத்திலாவது நம்மை இவ்வுலகில் வாழ விடட்டும்..! சென்னைக்கு வந்தீர்களேயானால் அவசியம் என்னை சந்தியுங்கள்.. சந்திப்போம்.. 

நன்றி..

டிரைவிங் லைசென்ஸ் வாங்கிய கதை..!


17-05-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

உரிக்க உரிக்க ஒன்றுமேயில்லாத வெங்காயத்தைப் போலவேதான் என் வாழ்க்கையும்.. சிற்சில சமயங்களில் நடக்கும் காமெடிகளை நினைத்துப் பார்த்தால், நானெல்லாம் உலகத் தமிழர்களை இம்சை செய்யும் அளவுக்கு வளர்ந்திருப்பதே பெரிய விஷயம் என்றே எனக்குத் தோன்றுகிறது.. சோம்பேறித்தனம்.. அளவு கடந்த சோம்பேறித்தனம்.. ஆபீஸ் வேலையைத் தவிர மற்றவற்றில் ஏனோதானோவென்று பைத்தியக்காரனை போல திரியும் எனக்கு இது போன்ற அலைச்சல்கள் புதிதல்ல..!

அன்றைக்கும் வழக்கம்போல முருகனைத் திட்டிவிட்டுத்தான் வீட்டில் இருந்து கிளம்பினேன்..! அடிக்கிற வெயிலில் ஏசி காரில் போகிறவனை பார்த்து காரணமேயில்லாமல் கோபமெல்லாம் கொப்பளிக்கும் காலை நேரம்..! ஆங்காங்கே சாலைகளில் ஸ்பீடு பிரேக்கர் போட்டு வைத்து நமது வண்டியை பதம் பார்க்க வைத்திருப்பது வண்டியோட்டிகளின் நலனுக்காக அல்ல.. வசூல் வேட்டை நடத்தும் போலீஸாரின் வசதிக்காகவே என்று இப்போதுதான் சென்னைவாழ் வாகன ஓட்டிகளுக்குத் தெரிந்திருக்கிறது..!

மடுவன்கரை பாலம் தாண்டி வேளச்சேரி செல்லும் ரோட்டில் ரேஸ்கிளப் குதிரை லாயத்தின் வாசலில் ஒரு பெரிய ஸ்பீடு பிரேக்கர்.. எப்போதும் அங்கே வசூல் ராஜாக்கள் யூனிபார்மோடு நின்றிருப்பார்கள். பல நாட்கள் அவர்களை ஒரு புன்னகையுடன் கடந்து போயிருக்கிறேன்.. நாம போறதே TVS XL SUPER. இதுக்கெல்லாம் ஒரு லைசென்ஸ் தேவையான்னு, அவங்களே பீல் பண்ணித்தான் நம்மளை எதுவும் கேக்க மாட்டாங்கறாங்களோன்னு நானே நினைச்சுக்கிட்டு போயிட்டு வந்துக்கிட்டிருந்தேன்..!

அன்றைக்கு பார்த்து ஒரு கெடா மீசை இன்ஸ்பெக்டர் அங்கே வசூலில் மும்முரமாக இருந்தார். நிறைய ஹோண்டாக்கள் சிக்கியிருந்தன.. எப்பவும் துணைக்கு ஒரேயொரு டிராபிக் கான்ஸ்டபிள்தான் இருப்பார். இன்றைக்கு இரண்டு பேர் இருந்தார்கள். இவர்களும் போதாமல் பெண் கான்ஸ்டபிள் ஒருவரும் இருந்தார்..! 

இந்த டீமை பார்த்தவுடன் மெகா வேட்டை என்பதை புரிந்து கொண்டு சில இளைஞர்கள் தூரத்திலேயே வண்டியைத் திருப்பித் தப்பி ஓடிக் கொண்டிருந்தார்கள். நான்தான் “நம்மளை யார் கேக்கப் போறா..?” என்கிற அலட்சியத்துடன் வண்டியைவிட.. அந்த பெண் கான்ஸ்டபிள் என் வாழ்க்கையின் குறுக்கே.. ச்சே.. ச்சே.. என் வண்டியின் குறுக்கே வந்து நின்று கை காட்டினார்..

என்னடா இது அதிசயமா இருக்கு..? இந்த இனத்துல யாராச்சும் லிப்ட் கேக்க மாட்டாங்களான்னு ஆசையா இருக்கும்போது, இப்படி அநியாயமா போலீஸ் டிரெஸ்ல வந்து மடக்கினா எப்படின்னு நினைச்சுக்கிட்டே பக்கத்துல போயி கெத்தா “பிரஸ்” என்றேன்.. “ஓகே ஸார்.. கொஞ்சம் ஓரமா நிறுத்துங்க.. இன்ஸ்பெக்டர்கிட்ட பேசிக்குங்க..” என்றது அந்தத் தேன்குரல்..!(பெயர் தெரியும்.. சொல்ல மாட்டேன்) திரும்பவும் அழுத்தமாகச் சொன்னேன்.. “பிரஸ்ஸுங்க. ஆபீஸுக்கு போயிட்டிருக்கேன்..” என்றேன்.. வேகவேகமாக எனது ஐடி கார்டை எடுத்துக் காட்டினேன். அதற்குள் பக்கத்தில் வந்த டிராபிக் கான்ஸ்டபிள்.. “சரி ஸார்.. புது இன்ஸ்பெக்டர்.. எல்லாரையும் நிறுத்தச் சொல்றாரு.. லைசென்ஸை காட்டிட்டு போங்களேன்..” என்றார்.. என் கோபம் அந்த போலீஸ் மயில் மேல் பாய்ந்தது..! ஒரு முறைப்பை காண்பித்துவிட்டு வண்டியை ஓரங்கட்டி நிறுத்தினேன்..!

இது மாதிரி எத்தனை பேர் நேரத்தை வீணடிக்கிறானுகன்னு கோச்சுக்கிட்டே என் சட்டை பாக்கெட்டில் இருந்த டிரைவிங் லைசென்ஸை எடுத்து டிராபிக் கான்ஸ்டபிள்கிட்ட நீட்டினேன்..! அவசரமா வாங்கினவர் அதை பார்க்கக்கூட இல்லாம அப்படியே நேரா கெடா மீசை இன்ஸ்பெக்டர்கிட்ட கொண்டு போய் கொடுத்தார். நானோ கை காட்டி நிறுத்தின அந்த போலீஸ் மயிலையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்..! அவ்வளவு அழகு..! அட்டக்கத்தி நந்திதாவை ஜெராக்ஸ் எடுத்த மாதிரி இருந்தது..! அதிலும் அந்த இறுக்கமான காக்கி டிரெஸ்ஸிலும் அசத்தலாக இருந்தார்.

திரும்பிப் பார்த்த என்னை இன்ஸ்பெக்டர் அங்கேயிருந்தபடியே முறைக்கிறார்.. பக்கத்துல இருந்த டிராபிக் கான்ஸ்டபிளும் என்னை முறைக்கிறார்.. இன்ஸ்பெக்டர் லைசென்ஸை கான்ஸ்டபிளிடம் கொடுத்துவிட்டு ஏதோ சொல்ல… கான்ஸ்டபிள் அதை வாங்கிக் கொண்டு நேராக என்னிடம் வந்தார்.. 

“ஏன் ஸார்.. என்னமோ பெரிசா பிரஸ்ஸுங்குறீங்க..? உங்களுக்கே பொறுப்பு வேணாமா..? இதுல உங்களுக்கு ஐடி கார்டு வேற..?” என்றார். நமக்கு ஒண்ணுமே புரியலை.. போலீஸ் மயிலும் பக்கத்தில் வந்து நின்று கொள்ள உள்ளுக்குள் ரோஷமும், தன்மானமும் தானாகவே எழுந்துவிட்டது..! “ஸார்.. இப்போ என்னாச்சு..? அதை மட்டும் சொல்லுங்க..” என்றேன். லைசென்ஸை என்னிடம் நீட்டி “டேட் பாருங்க..” என்றார் கான்ஸ்டபிள்.. வாங்கினேன்.. பார்த்தேன்.. “எக்ஸ்பயரி டேட் என்னிக்கு போட்டிருக்கு..?” என்றார் கான்ஸ்டபிள்.. அந்த இடத்தை உற்றுப் பார்த்தால் பகீரென்றது. கண்ணாடியை கழட்டியும் பார்த்தேன். தெளிவாகத் தெரிந்தது.. எனது லைசென்ஸ் காலாவதியாகி இரண்டு வருஷமாயிருச்சு..!

பக்கென்று நிமிர்ந்து பார்த்தேன். இப்போது கான்ஸ்டபிள் கூடுதல் முறைப்போடு, “என்ன ஸார் பிரஸ்ஸு..? லைசென்ஸ் முடிஞ்சு 2 வருஷமாச்சு.. அதுகூட தெரியாம இன்னும் வண்டியோட்டிக்கிட்டிருக்கீங்க..? ஆனா நாங்க மட்டும் ஒரு நிமிஷம் நில்லுங்கன்னு சொன்னா கோச்சுக்குறீங்க..?” என்றார்.. வாழைப்பழத்தை வாயில் வைத்துக் கொண்டு முழுங்குவதா வேண்டாமா என்கிற யோசனை எனக்கு..!

போலீஸ் மயில் ஒரு எகத்தாள பார்வை பார்க்க அதற்குமேல் சைட் அடிக்கும் எண்ணமே இல்லாமல் போய் “ஹி ஹி..” என்றேன்.. “ஸார்.. இந்த ரெண்டு வருஷமா நான் யார்கிட்டேயும் மாட்டலை. அதான் தெரியாம போச்சு..” என்று இழுத்தேன். “ஏன் நாங்க கேட்டாத்தான் நீங்க லைசென்ஸை பார்ப்பீங்களா..? நீங்களே செக் பண்ணிக்க மாட்டீங்களா..?” என்றார். தலையைச் சொறிந்து கொண்டே “இப்ப என்ன ஸார்.. பைன்தானே கட்டணும்.. எவ்வளவுன்னு சொல்லுங்க.. கொடுத்தர்றேன்..” என்று வேகவேகமாக பர்ஸை எடுத்தேன்..!

“ஹலோ.. நாங்க ஒண்ணும் கேஸ் பிடிக்குறதுக்காக அலையலை.. ‘அவர் இப்போவரைக்கும் கவனிக்காம இருந்திருக்காரு. அதுனாலதான் கேட்டவுடனே கெத்தா லைசென்ஸை எடுத்து நீட்டியிருக்காரு.. லைசென்ஸ் வாங்கிச் சொல்லி அனுப்பிரு’ன்னு இன்ஸ்பெக்டரே சொல்றாரு.. ஏன் ஸார் இப்படியே எங்களை நினைக்குறீங்க..? பிரஸ்.. பிரஸ்ஸுன்னு… மொதல்ல நீங்க நேர்மையா இருங்க.. அப்புறமா எங்களை சொல்லலாம். போங்க.. போங்க..” என்று சொல்லிவிட்டு அடுத்து வந்த டி.வி.எஸ். ஸ்கூட்டியை நிறுத்தப் போய்விட்டார்.

பக்கத்தில் இருந்த மயில் என்னை ஒரு பார்வை பார்க்க.. படாரென்று ஒரு சிரிப்பு சிரித்தேன்.. முதலில் சிரித்து.. பின்பு சுதாரித்து தான் போலீஸ் என்பதை உணர்ந்தோ என்னவோ முகத்தைத் திருப்பிக்கிச்சு..! இன்ஸ்பெக்டரின் அருகில் சென்று “ஸார்.. நிசமாவே நான் கவனிக்கலை ஸார்.. ஸாரி ஸார்.. சீக்கிரமா லைசென்ஸ் வாங்கிர்றேன்.. மிக்க நன்றி..” என்றேன்.. கெடா மீசை.. ஒரு வார்த்தைகூட பேசலை.. அப்படியே நம்பியார் மாதிரியே முறைச்சு பார்க்க.. ஓகே.. இந்த மரியாதையே போதுண்டா சாமின்னு கிளம்பிட்டேன்..!

மனசுக்குள் போலீஸ் மயிலுக்கு ஒரு பிளையிங் கிஸ் கொடுத்துவிட்டு, டாட்டா காட்டாமல் ஓரப்பார்வை பார்த்தபடியே வண்டியைக் கிளப்பிய எனக்கு இப்போதுவரையிலும் அந்த போலீஸ் மயிலின் ஓரக்கண் பார்வை மறக்கவில்லை..!

மறுநாளே கே.கே. நகர் ஆர்.டி.ஓ. ஆபீஸ்.. “டிரைவிங் லைசென்ஸ் நீங்க எந்த ஊர்ல, எந்த ஆபீஸ்ல வாங்கினீங்களோ, அங்கதான் போய் ரினீவல் பண்ணனும்.. இங்க செய்ய முடியாது..” என்றார்கள்.. “இப்போ மதுரைல அந்த அட்ரஸ்ல யாருமே இல்லை ஸார்.. போக, வர பணமும் செலவாகுமே..” என்று இழுத்தேன். “நாங்க என்ன பண்றது..? கவர்ன்மெண்ட் ரூல்ஸை கண்டிப்பா நாங்க பாலோ செஞ்சுத்தானே ஆகணும்.. இல்லைன்னா நீங்கதான இதுக்கும் எங்களைத் திட்டுவீங்க..?” என்று சைடாக ஒரு போடு போட்டார் டிராபிக் இன்ஸ்பெக்டர். உள்ளே நுழைஞ்சதும் ஐடி கார்டை காட்டியதன் விளைவு..!

“வேற வழியே இல்லையா ஸார்..?” என்றேன்.. “வேணும்னா சென்னை அட்ரஸை வைச்சு புதுசா லைசென்ஸ் அப்ளை பண்ணி வாங்கிக்குங்க” என்று மெல்லிய குரலில் அட்வைஸ் செய்தார்.. யோசித்தேன். “ஹலோ.. அது ஒண்ணுதான் ஒரே வழி.. டைமை வேஸ்ட் பண்ணாதீங்க..” என்றார்.. “ஓகே” சொல்லிவிட்டு புதுசுக்கு அப்ளிகேஷன் போட்டேன்..! 

டிரெயினர் சர்டிபிகேட் கொடுத்தார்கள். அது வெறும் ஏ-4 பேப்பரில் இருக்கும் ஒரு அத்தாட்சிதான்.. ஒரு மாசம் கழிச்சு வண்டியை ஓட்டி காமிச்சு லைசென்ஸ் வாங்கிக்கலாம்னு சொன்னாங்க..! ஆனா அந்த ஒரு மாசமும் வண்டியோட்டும்போது ‘L’ போர்டு மாட்டியிருக்கணுமாம்.. ஆபீஸ் போர்டுல எழுதியிருந்தாங்க.. நாம ஓட்டுற வண்டியே L போர்டு வண்டிதான். பிறகெதுக்கு L போர்டுன்னு விட்டுட்டேன்..! 

ஒரு நாள் ராத்திரி  தி.நகர்ல கண்ணதாசன் சிலையைத் தாண்டி பாண்டிபஜார் போலீஸ் ஸ்டேஷன் பின் பக்க ரோட்டுல வந்து வலது பக்கம் திரும்பும்போது போலீஸ் ஸார் ஒருத்தர்கிட்ட சிக்குனேன்.. 

“எல் போர்டு எங்க..?” 
“இந்த வண்டிக்கு எதுக்கு ஸார்..?” 
“ரூல்ஸ்ன்னு ஒண்ணு இருக்குல்ல..?” 
“எல்லாரும், எல்லா சமயமும் ரூல்ஸை அப்படியே கீப் அப் பண்றாங்களா..?”
“நல்லா பேசுங்க.. ஆனா அதை மட்டும் செஞ்சிராதீங்க..?”
“இந்த வண்டிக்கு எல் போர்டு மாட்டினா கேவலமா இருக்கும் ஸார்…?”
“இது கவர்ன்மெண்ட்டுக்கு தெரியலையே.. நாங்க என்ன செய்யறது..?”
“இப்போ என்ன செய்யணும்ன்றீங்க..?”
“பைன் 100 ரூபா.. இல்லாட்டி ஒரு 50 கொடுத்துட்டு போயிருங்க..”
“பைனையே கட்டிர்றேன்.. ரசீது கொடுங்க..”
“இதெல்லாம் விவரமா பேசுங்க.. ஆனா ஒரு போர்டு எழுத மட்டும் யோசிங்க..”
“அதெல்லாம் கவுரவப் பிரச்சினை ஸார்..” 
“சரி.. சரி.. போயிட்டு வாங்க.. நாளைக்கு போர்டு எழுதிருங்க..”
“பைன்.. ரசீது..” 
“இன்ஸ்பெக்டர் மெஷினை எடுத்திட்டுப் போயிட்டாரு. அவர்கிட்டதான் இருக்கு..”
“அப்போ இப்போ எதுக்கு இந்த என்கொயரி..?”
“அதெல்லாம் உங்களுக்கெதுக்கு..? கிளம்புங்க..”

அப்படியும் போர்டை மாட்டவில்லை.. தன்மானச் சிங்கமாக வலம்வரும் வேளையில் கேவலம் L போர்டு மாட்டி எனது பெருமையை குறைத்துக் கொள்ள விரும்பாததால் ஒரு மாத காலம் தமிழக அரசின் விதிமுறையை புறக்கணித்தேன் என்பதை இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்..!

ஒரு மாதம் கழித்து கே.கே. பழைய பேருந்து நிலையத்தில் அன்றாடம் நடக்கும் வாகன ஓட்டிகளுக்கான டெஸ்ட்டுக்காக சென்றேன்.. வண்டியோட ஒரிஜினல் சர்டிபிகேட்டுகள், புகை பரிசோதனை சான்றிதழ், 3 புகைப்படங்கள், 300 ரூபாய் பணம் கட்டிய சலான் என்று அனைத்தையும் கையில் வைத்துக் கொண்டு எனது வண்டியுடன் தயாராகவே இருந்தேன்..!

டிரைவிங் இன்ஸ்டிடியூட் மூலமாக வருபவர்களுக்கே அங்கே முதலில் முன்னுரிமை. ஒரே வண்டியை பலரும் பயன்படுத்திக் கொள்ள அனுமதியளிக்கிறார்கள்.. எட்டு போடச் சொன்னால், ஒரு சிலர் ஒன்பது போட்டு வாங்கிக் கட்டிக் கொண்டார்கள். கட்டாயம் ஹெல்மெட் அவசியம் என்றார்கள். சிலர் சரியாக வண்டி ஓட்டாதபோது இன்னொரு சான்ஸ் கொடுத்து அவர்களைக் காப்பாற்றினார் இன்ஸ்பெக்டர். நல்ல மனுஷன்யா. எனக்கு அலுவலகத்தில் அட்வைஸ் செய்த அதே ஆசாமி..!

எனது விண்ணப்பத்தைக் கொடுத்தேன். உதவியாளர் “எங்க உங்க வண்டி..?” என்றார். ஓடிச் சென்று எனது பி.எம்.டபிள்யூ.வை காட்டினேன்.. ஐஸ்வர்யாராயை பார்க்க வந்து பிந்துகோஷை பார்த்த அதிர்ச்சியில் உதவியாளர் வாய் பிளந்துவிட்டார்.. நானோ வண்டியை ஸ்டார்ட் செய்துவிட்டு தயாராக இருக்க.. உதவியாளர் இன்ஸ்பெக்டரிடம் எனது விண்ணப்பத்தைக் கொடுத்து ஏதோ சொல்ல.. இன்ஸ்பெக்டர் என்னை அழைத்தார்.

வண்டியை ஸ்டாண்ட் போட்டுவிட்டு அருகில் போனேன்.. “என்ன ஸார் இது..?” என்றார். “வண்டி ஸார்..” என்றேன்.. “அது தெரியுது.. வண்டி நம்பர் என்ன..?” என்றார். TN 07 Q 7803 என்றேன். “நான் அதைக் கேக்கலை.. வண்டில நம்பர் பிளேட் எங்கன்னு கேட்டேன்..?” என்றார். திக்கென்றானது. திரும்பிப் பார்த்தேன். அட நெசம்தான். என் காதல் வாகனத்தின் முன் பகுதியில் முந்தைய நாள்வரையிலும் பளிச்சென்று தெரிந்து கொண்டிருந்த நம்பர் பிளேட்டை காணவில்லை.. தேடு தேடு என்று தேடினேன்.. பின்னாடியெல்லாம் போய் தேடினேன்..

“ஹலோ.. முன்னாடி இருக்கற பிளேட்டைத்தான் கேட்டேன்..?” என்றார் மறுபடியும்.. “ஹி.. ஹி.. ஸாரி ஸார்.. எனக்குத் தெரியலை.. எங்கயாவது விழுந்துருச்சுன்னு நினைக்கிறேன்..” என்றேன்..! “ஏன் ஸார்.. இப்படி டிப்டாப்பா ஐடி கம்பெனி மாதிரி வேலைக்குப் போகத் தெரியுது.. கொஞ்சம் வண்டியை நல்லவிதமா பார்த்துக்கத் தெரியாதா..? இப்போ நாங்க என்ன செய்யணும்னு சொல்லுங்க..?” என்றார்...!

“இல்ல ஸார்.. நிஜமாவே நான் கவனிக்கலை. இல்லாட்டி நான் இன்னிக்கு வந்திருக்கவே மாட்டேன்..” என்றேன்.. “வண்டி ஓனர் யாரு..?” என்றார். “நான்தான் ஸார்..!” “வண்டிய வாங்கி 10 வருஷமாச்சே.. லைசென்ஸ் இல்லாமலேயே இதுவரைக்கும் வண்டி ஓட்டுனீங்களா..?” என்றார். கலவரமானது எனது வயிறு.. சுற்றி 20 பேர் நின்று கொண்டிருக்க மானம் போகுதேன்னு கவலை வேற..!

பக்கத்தில் போய் “ஸார்.. முன்னாடியே மதுரைல வாங்கினது.. தேதி முடிஞ்சு போச்சு.. சென்னை அட்ரஸை வைச்சு வேற புதுசு வாங்கிக்கன்னு நீங்கதான் சொன்னீங்க..!” என்றேன்.. சற்றுத் தள்ளி என் முகத்தை பார்த்துவிட்டு நியாபகம் வந்ததை போல தலையைத் தேய்த்துக் கொண்டார்..! ஒவ்வொரு திங்கள்கிழமை மட்டுமே நம்ம முகம் பளிச்சுன்னு இருக்கும்ன்றது அவருக்குத் தெரியாதுல்ல.. அதான் குழப்பமாயிருச்சு..!

இதுக்கு மேல எதுவுமே சொல்லாம அந்த பேப்பர்ல சிவப்பு மைல கையெழுத்த போட்டு அதை என் கைல கொடுத்திட்டு தூரத்தில் ஒரு இடத்தைக் கை காட்டி “அங்க போய் வெயிட் பண்ணுங்க..” என்றார்..! நம்ம வாய் சும்மா இருக்குமா..? “அப்போ ஓட்டிக் காட்ட வேணாமா ஸார்..?” என்றேன்.. இன்ஸ்பெக்டர் முறைத்த முறைப்பு இருக்கே..! புரிந்து கொண்டு நடையைக் கட்டினேன்..!

11 மணிக்கெல்லாம் பயிற்சி சோதனை முடிந்து அலுவலகத்திற்கு வரச் சொன்னார்கள். வரிசையாக போட்டிருந்த சேர்களில் ஆள் எழுந்து போகும்போதெல்லாம் கிடைத்த சீட்டுகளில் மாறி மாறி உட்கார்ந்தும் நம்மளை போட்டோ எடுக்க கூப்பிடலை.. ஆர்.டி.ஓ. ஆபீஸுக்குள்ள தரகர்களை ஒழித்துவிட்டோம்ன்னு என்னிக்கோ அமைச்சர்ன்னு சொல்லி ஒருத்தர் சட்டசபைல கூவுனாரு.. அவரை வந்து இங்க உக்காரச் சொல்லி பார்க்க வைக்கணும்..!

வெளில இருந்து வந்த ஒருத்தரே ஆபீஸ் பைலை திறந்து அதுல அப்ளிகேஷன் விவரங்களை பில்லப் செய்து கையெழுத்துக்கு மட்டும் காது குடைஞ்சுக்கிட்டிருந்த அலுவலரிடம் தள்ளிவிட்டார். அந்த ஒரு வேலையை செய்றதுக்கு அந்தாளு அவ்ளோ யோசிக்கிறாருய்யா.. இன்னும் சிலர் கொண்டு வரும் அப்ளிகேஷன்களுக்கு அவர்களே சீல் எடுத்து குத்திவிட்டு நம்பரை மட்டும் அலுவலரிடம் சொல்லிவிட்டு கையோடு எடுத்துக் கொண்டு உள்ளே ஓடினார்கள்.. ஓடிய வேகத்தில் திரும்பி வந்து விண்ணப்பதாரர்களை உள்ளே அழைத்துச் சென்று போட்டோ எடுக்க வைத்தார்கள்.. என்னைய மாதிரியான உண்மையான பொழப்பத்த, நாதியத்த தமிழர்கள் வாயில் விரல் வைத்துச் சப்பிக்கொண்டு இந்தக் கூத்துக்களையெல்லாம் வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருந்தோம்..!

ஒரு வழியாக புகைப்படம் எடுத்துக் கொடுத்தவுடன், “மதியம் 3 மணிக்கு வாங்க. ரெடியா இருக்கும். வாங்கிக்கலாம்..” என்றார்கள். அது போலவே அன்று மதியம் 4 மணிக்கு சென்று எனது லைசென்ஸை பெற்றுக் கொண்டேன்..!  ஆனாலும் என் அப்பன் முருகன் இதிலும் ஒரு ஆப்படித்துவிட்டான்..  ஒரிஜினல் சர்டிபிகேட்டுகள் தேவை என்று டிராபிக் இன்ஸ்பெக்டர் கேட்டதால் எனது வண்டியின் ஒரிஜினல் ஆர்.சி.பேப்பரையும் அதனுடன் இணைத்திருந்தேன். அதனை திருப்பிக் கேட்க மறந்துவிட்டேன்..!

எனது வண்டியின் இன்ஸூரன்ஸ் பாலிஸி முடிந்துவிட்டதால் அதை ரினீவல் செய்ய போன இடத்தில் தேதி முடிந்து வந்தால், ஒரிஜினல் ஆர்.சி.பேப்பர் இருந்தால்தான் செய்ய முடியும் என்றார்கள். வீட்டில் தேடிப் பார்த்து களைத்த பின்பே இதன் ஞாபகம் வந்தது.. மறுபடியும் ஆர்.டி.ஓ. ஆபீஸ் சென்று கெஞ்சி கூத்தாடி பார்த்தேன்.. அதில் ஜெராக்ஸ்தான் இருக்கிறது. ஒரிஜினல் இல்லை என்கிறார்கள். ஒருவேளை அன்றைக்கு ஜெராக்ஸ் எடுத்த இடத்தில் விட்டுவிட்டேனா என்றோ தெரியவில்லை..!  இல்லாவிடில் புதுசா அப்ளிகேஷன் போட்டு வாங்கணுமாம்.. அதுக்கு வேற தனியா அலையணுமா..? முருகா.. 

இதாவது பரவாயில்லை.. இன்னும் ஒரு பிரச்சினை இருக்கு பாருங்க..! இந்தியக் குடிமகன் என்ற அங்கீகாரம், பாஸ்போர்ட் நம்ம கையில் இருந்தால்தான் உண்மையாம்..!  வாங்கிய பாஸ்போர்ட்டும் காலாவதியாகி 1 வருஷமாச்சு.. அடுத்து அங்கேதான்..!

எடுறா வண்டியை..!

கட்டற்ற சுதந்திரம் - நொறுங்கிப் போன கனவு..!

04-10-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


“இதற்கு மேலும் இதனைப் பற்றி எழுதாமல் போனால், நாளைக்கு நீயே ‘உள்ள’ போனீன்னா, ஒரு ஈ, காக்கா கூட உன்னை பார்க்க புழலுக்கு வராது..” என்று ஒரு நண்பர் எச்சரித்ததால், இந்த விஷயத்தில் சற்றே தாமதமான பதிவு இது. தோழர்கள் பெரிதும் மன்னிக்கவும்.

கட்டற்ற சுதந்திரம் என்று பூரிப்பில் இருந்த இணையத்தள மேய்வாளர்களுக்கு கடும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுத்திருக்கிறது இந்தப் பிரச்சினை.. கைது அளவுக்குப் போகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. யார் மீது தவறு என்று இந்தப் பிரச்சினையில் அனைத்து வகை பட்டிமன்றங்களையும் படித்து, படித்து மிகவும் டயர்டாகிவிட்டது..! இந்த வழக்கின் கைது, சட்டங்கள் பற்றிய விஷயங்களைப் படித்தபோது இதே போன்று என்னையவே கைது செய்ய அனைத்துவகை சட்ட ஆதாரங்களும் என் தளத்திலேயே இருக்கும் உண்மை எனக்கும் இப்போதுதான் புரிந்தது. புகார் கொடுக்க வேண்டிய ‘ஆத்தா’வுக்கும், ‘தாத்தா’வுக்கும் நான் ஒரு கொசு, என்பதால் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். இதுதான் உண்மை.

இதன் மூலம் அறிவது என்னவெனில் அடுத்தவரின் மூக்கு நுனியைத் தொடுவதுவரைதான் உனக்குள்ள பேச்சுரிமை என்று நமது புளுத்துப் போன அரசியல் சட்டம் தெளிவாகச் சொல்கிறது. ஒருவரின் வார்த்தை மற்றவருக்கு கடும் மன உளைச்சலைத் தருகிறது என்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்க சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் அது எந்த வகையான மன உளைச்சல் என்பதை கனம் கோர்ட்டார்தான் முடிவு செய்வார்களாம்.. நடவடிக்கைகளில் கைதும் செய்யலாம் என்பதும் சட்டம் கொடுத்திருக்கும் வசதி.. இதில் நாம் என்ன செய்வது..?

கைதுகள் அதிகார வர்க்கத்திற்குத்தான் அடி பணியும் என்பது நன்கு தெரிந்த விஷயம்தான் என்பதால் இதில் எனக்கொன்றும் ஆச்சரியமில்லை..! தோழர் சவுக்கு சங்கரை, தாத்தாவின் ஆட்சியில் ஜாபர்சேட்டின் தூண்டுதலினால் உண்மையே இல்லாத வழிப்பறி கேஸில் பிடித்து உள்ளே வைத்தார்கள்.  அதுதான் இணைய எழுத்தாளர்களின் மீதான முதல் தாக்குதல் என்று நினைக்கிறேன்..  அந்தக் கேஸ் பொய்யானது என்று சொல்லி சமீபத்தில்தான் தீர்ப்பாகி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார் சங்கர்..! அப்போது நம்மில் எத்தனை பேர் பொங்கி எழுந்தோம் என்பதை இப்போது கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்..!

இந்தக் கைது விவகாரத்தில் சட்டம் அதிகாரம் படைத்தவர்களுக்காக வளைந்து கொடுத்திருக்கிற அதேசமயம், கைதும் சட்டவிரோதமாக நடத்தப்படவில்லை.. ஆனால் வேகமாக, முக்கியத்துவம் வாய்ந்த கைதாகவே நடத்தப்பட்டிருக்கிறது..! கைது நடவடிக்கையின்போது ஒரு துணை கமிஷனரே சரவணக்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்றிருக்கிறார். இதிலிருந்தே போலீஸ் இதற்குக் கொடுத்த முக்கியத்துவம் நமக்குப் புரிகிறது.. இருவரும் இப்போது ஜாமீனில் வெளியில் வந்துவிட்டாலும், இவர்கள் கைதுக்கான முக்கியக் காரணம் சின்மயி மீதான வார்த்தைத் தாக்குதல் மட்டுமில்லை.. ஆத்தாவைப் பற்றி ராஜன் எழுதிய ஒரு சின்ன ட்வீட்டுதான் மிகப் பெரிய காரணம் என்று நான் நினைக்கிறேன்..! ஒருவரைவிட்டுவிட்டு மற்றவரை கைது செய்தால் பிரச்சினையாகும் என்பதால் இதில் சரவணக்குமாரும் மாட்டிக் கொண்டுவிட்டார் என்றே நான் நினைக்கிறேன்..!

ராஜனின் திருமணத்திற்கு நானும் சென்றிருந்தேன். பல முறை போனிலும் பேசியிருக்கிறேன்.. அவருடைய பல ட்வீட்டுகளை, கிண்டல்தான் என்றாலும், அத்துமீறிய ட்வீட்டுகள் என்று அவருக்கு ட்வீட்டரிலேயே சொல்லியிருக்கிறேன். “இது ரத்த பூமிண்ணே..” என்று அவரும் திருப்பி பதிலும் சொல்லியிருக்கிறார். சொல்லிக் காட்ட இது நேரமில்லை என்றாலும், அவருடைய சில டிவீட்டூகள் புகார்தாரர்களை காயப்படுத்தியிருக்கிறது என்பது மட்டுமே உண்மை. இதனால்தான் நம் அன்புத் தம்பி என்றாலும் அவருக்கு முழுமையான ஆதரவளிக்க முடியவில்லை. உற்றார், உறவினர் கைது செய்யப்பட்டால் எந்த வழக்காக இருந்தாலும் நமக்கு ஒரு பாசம் வருமே.. அது போன்றுதான் இப்போதும் ராஜன் மீதும், சரவணக்குமார் மீதும்.. பெரிதும் வருந்துகிறேன்.. நடந்திருக்கவே கூடாது.. நடந்துவிட்டது.. இனி நாம் ஜாக்கிரதையாகவே இருப்போம்..!

சின்மயியின் ட்வீட்டுகளும் நமக்கு மன உளைச்சலைத் தருகின்றன என்று நாம் புகார் கொடுத்தாலும், நமக்குத் தெரிந்த காவல் துறையின் உயரதிகாரி யாரும் இல்லாததால் அந்த வழக்கில் நிச்சயம் கைது எதுவும் இருக்காது..! நடக்காது..! இந்தக் கேடு கெட்ட இந்தியாவில் நாம் வாழும் சூழலில், இதனுடைய முரணான அரசியல் சாக்கடைகளையும் நாம் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். வேறு வழியில்லை.. சின்மயி நம்மைப் பற்றி தனிப்பட்ட முறையில் தாக்குதல் கொடுக்காதவரையிலும், நாம் பதில் நடவடிக்கையை எதிர்த் தரப்பினரை கைது அளவுக்குக் கொண்டு செல்லவும் முடியாது..! இப்போதாவது நாம் செய்த தவறென்ன என்பதைப் புரிந்து கொண்டு அதனை மாற்று வழியில் சந்திக்க முற்படுவோம்..! 

வெற்றிகரமான வலைப்பதிவர் சந்திப்பு..!

28-08-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அனைவரும் எதிர்பார்த்ததுபோல் இனிதே நடந்து முடிந்தது தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு..! 80 வயது முதிய பதிவர்-புலவர் இராமானுசம் அவர்களின் ஒரு சிறு முயற்சி, நேற்றைக்கு பெருவெள்ளமாக புண்ணியகோடி மண்டபத்தில் கடந்தோடியது எனலாம். அவருக்கு எனது முதல் நன்றிகள்..!



இப்படியொரு அறிவிப்பை கவிஞர் மதுமதி அவர்கள் தனது பதிவில் வெளியிடும்வரையிலும் அந்த அழைப்பிதழில் இருந்த பலரது தளங்களை நான் பார்த்ததே இல்லை.. இத்தனை பேர் எப்போது இருந்து எழுதுகிறார்கள் என்ற சந்தேகம்தான் எழுந்தது.. அவர்கள் ஒவ்வொருவரின் எழுத்தையும் தேடிப் பிடித்து படித்தபோது, அவர்களது எழுத்தில் பதிவுலக அரசியல் கொஞ்சமும் இல்லாமல், நட்புணர்வே மேலோங்கி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது..!

மிக அருமையான ஒரு குழுமம்..! ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டு, இந்தக் குழு, அந்தக் குழுவென்றில்லாமல் அனைவருமே ஒரு குழு என்ற மன எண்ணத்தோடு செயல்பட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துகள்..! இந்தக் குழுவினர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு முறை மட்டுமே என்னால் பங்கேற்க முடிந்தது. அதுவும் கொஞ்சம் நேரம்தான் இருக்கவும் முடிந்தது. அலுவலகப் பணிகள் கடுமையாக இருப்பதினால் முழுமையாகச் செயல்பட முடியவில்லை என்று இராமானுசம் ஐயாவிடம் முன்பே சொல்லி மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்..! எந்தவொரு இடர்பாடும் இல்லாத வகையில், அனைவரையும் அனுசரித்துப் போய் ஒரு புதிய வழிகாட்டுதலைத் துவக்கி வைத்திருக்கிறார்கள்.. 

நேற்றைக்கு அலுவலகப் பணியொன்று காலையில் இருந்ததினால், மதியம்தான் என்னால் கூட்டத்திற்கு செல்ல முடிந்தது..! 150 பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்து அதற்கும் மேல் இருந்தது கூட்டம். பலருடைய முகத்தை நேருக்கு நேர் பார்த்துதுமே இவர் யாராக இருக்கக் கூடும் என்ற தேடுதல் வேண்டாமே என்றெண்ணி பேட்ஜையும் கொடுத்திருந்தார்கள்.. அதை வைத்துத்தான் அறிமுகப் படலம் எனக்குள் துவங்கியது.. இதுவரையில் நேரில் பார்த்திருக்காத பதிவர்களையெல்லாம் சந்திக்க முடிந்தது..!  

நான் உள்ளே நுழைந்தபோது மேடையில் மூத்தப் பதிவர்களை அறிமுகம் செய்து வைத்து அவர்களை கவுரவிக்கும் வைபவம் நடந்து கொண்டிருந்தது.. இனிய நண்பர் சுரேகாவும், கவிஞர் மதுமதியும் மிக அழகாக நிகழ்வினைத் தொகுத்து வழங்கினார்கள்..! வயதில் மூத்த பல பதிவர்களை இப்போதுதான் முதன் முறையாகப் பார்க்கிறேன்.. ஆனால் விழாவினை நடத்தியவர்களுக்கு அவர்கள் நன்கு அறிமுகமானவர்களாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி.  நாம்தான் தனி தீவாக இருந்து கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை எனக்கு உணர்த்துவதாக இருந்த்து இந்த பதிவர் சந்திப்பு..!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பதிவர்கள் கூட்டமாய் வந்திருந்தார்கள்..! திரட்டிகளில் அதிகம் மேய்ச்சல் காட்டாமல் பேஸ்புக், டிவிட்டர், கூகிள் பிளஸ் என்று அதிகம் எனது பார்வையை திருப்பிக் கொண்டதால் எண்ணற்ற பதிவுகளையும், பதிவர்களையும் இதுவரையில் காணாமல் இருந்தது கண்டு இப்போது நான் வருத்தப்படுகிறேன்..!

பலரும் ஏற்கெனவே தங்களுக்குள் பேசி வைத்திருந்து வந்ததை போல அவரவர்களை அடையாளம் கண்டு தனி குழுவாக பேசித் தீர்த்ததும் நடக்கத்தான் செய்த்து.. இதுதான் இந்தக் குழுமத்தின் முதல் படி.. சிறு குழு, பெருங் குழுவாகி இப்போது குழுமமாகவே இதன் மூலம் சங்கமித்திருக்கிறது..!

விழா நடத்துவதிலும் மிகத் துல்லியமாக இருந்து 99 சதவிகிதம்வரையிலும் திட்டமிட்டபடி நிகழ்வினை குறித்த நேரத்திற்குள் நடத்தி முடித்தார்கள். மாலை மயங்கிய நேரத்தில் விடுதிக்குச் சென்றுவிட்டு ரயில் நிலையத்திற்குச் செல்லும் கால அவகாசத்தை கொடுத்து பதிவர்களை பத்திரமாக அனுப்பி வைத்திருந்துவிட்டு பின்புதான் அருகில் வந்து கை கொடுத்தனர் விழா அமைப்பினர்.. இந்த பொறுப்பும், தன்மையும்தான் இந்த பதிவர் சந்திப்பின் வெற்றிக்கான காரணம்..!

தனிமரம் தோப்பாகாது என்பதையும், ஒரு கை ஓசை எப்போதும் பலமில்லாத்து என்பதையும் புலவர் இராமானுசம் ஐயா அவருடைய பேச்சில் குறிப்பிட்டார்..! அது போலவே இவர் சார்பு, அவர் சார்பு என்றில்லாமல் யார் வேண்டுமானாலும், எந்த வகையில் வேண்டுமானாலும் இதில் பங்கெடுத்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்புடன் துவங்கப்பட்டுள்ள இந்தக் குழுமம் தனது அடுத்த உயர்வாக முறையான குழுமமாகச் செயல்பட உத்தேசித்துள்ளதும் பாராட்டுக்குரியது..! 

இந்த விழாவினை திறம்பட நடத்தி முடிக்க உறுதுணையாக இருந்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும்.. குறிப்பாக புலவர் இராமானுசம் ஐயா அவர்களுக்கும், கவிஞர் மதுமதி அவர்களுக்கும், இருதய ஆபரேஷன் செய்த நிலையிலும் இதற்காக ராப்பகலாக உழைத்திருக்கும் அன்பர் பட்டிக்காட்டான் ஜெய் அவர்களுக்கும் இன்ன பிற பதிவுலக நண்பர்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றி..!

ஒவ்வொரு கூட்டத்திற்கும் இடமளித்து கூடுதலாக நன்கொடையும் அளித்து முக்கிய முகவரியாக விளங்கிய டிஸ்கவரி புக் பேலஸின் உரிமையாளர் பதிவர் வேடியப்பனுக்கும் ஒரு சிறப்பு நன்றி..! இந்த நிகழ்ச்சிக்காக நன்கொடையளித்த அனைத்து பதிவர்களுக்கும் எனது நன்றிகள்..!

இதேவேளையில் வலையுலகில் பழமைக்கும், புதுமைக்கும் என்றும் இணைப்புப் பாலமாய் திகழ்ந்து கொண்டிருக்கும் அன்பர்கள் மோகன்குமார், மெட்ராஸ்பவன் சிவக்குமார், பிலாஸபி பிரபாகரன் ஆகியோருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்..!

நிகழ்ச்சிகள் முடிந்த பின்பு இருந்த பதிவர்களை வைத்துக் கொண்டு விழா அமைப்பாளர்கள் காட்டிய அக்கறையுடனான சந்திப்பில், பதிவர்கள் மிகவும் எதிர்பார்த்த விஷயங்கள் மிகச் சில எட்டிப் பிடிக்கப்பட்டுள்ளன.. விரைவில் அவைகளனைத்தும் நடந்தேறும் என்று நம்புகிறேன்..!

உயர்வான நோக்கம்.. எளிமையான அணுகுமுறை.. ஜனநாயகமான நடைமுறைகளுடன் தோற்றுவிக்கப்பட இருக்கும் இந்த வலைப்பதிவர் குழுமம், மற்ற இணையத்தள சமூகங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்றே நம்புகிறேன்..!


கிருஷ்ணா டாவின்சி - நினைவலைகள்..!

17-04-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மறைந்த அண்ணன் கிருஷ்ணா டாவின்சியின் நினைவேந்தல் நிகழ்ச்சி நெகிழ்ச்சியுடன் நடந்து முடிந்தது..! நண்பர்கள், தோழர்கள், குடும்பத்தினர் என்று கிருஷ்ணாவுடன் இணைந்திருந்தவர்களின் பலரது நெகிழ்ச்சியான பேச்சுக்களைவிட கிருஷ்ணாவின் இசை ஆர்வத்தை வெளிப்படுத்தும்விதமாய் காட்டப்பட்ட அந்த வீடியோ காட்சிகள்தான் பரவசமூட்டின..! ஒவ்வொரு வீடியோ பதிவின்போதும் அந்த இருட்டுச் சூழலிலும் தோழி ஜெயராணி தன் உடல் குலுங்கி மெலிதாக அழுதபோதுதான் அதுவொரு துக்கச் சூழல் என்பதே புரிந்தது..! 


அண்ணனுக்கு வயது 46-தான். ஆனாலும் அதற்குள்ளாக காலன் அவரை அழைத்துவிட்டான்..! அவருடைய இசை ஆர்வம், படிப்பு ஆர்வம்.. எழுத்தாற்றல் எல்லாவற்றையும்விட சக தோழர்களிடம் நண்பனாக அவர் நடந்து கொண்டவிதம்தான் இத்தனை கூட்டத்தையும் திரட்டியிருந்ததாக எனக்குத் தோன்றுகிறது..!

அண்ணன் கிருஷ்ணா டாவின்சியை நான் முதன்முதலில் சந்தித்தது தி.நகரில் இருந்த மின் பிம்பங்கள் ஸ்டூடியோவில்தான். அந்தச் சமயத்தில் அங்கு அவர் அவ்வப்போது வந்து செல்லும் சூழல் இருந்தது.. அவர் அப்போது குமுதத்தில் பணியாற்றி வந்தாலும், அரசு பதில்களில் அண்ணனின் கைவண்ணமும் இருக்கிறது என்பது அப்போது எனக்குத் தெரியாது. 

ஒரு நாள் மாலைப் பொழுதில் அண்ணன் அங்கே வரும்போது கொஞ்சம் காத்திருக்க வேண்டியிருந்தது. கிடைத்த நேரத்தில் “வாங்க.. ஒரு டீ அடிச்சிட்டு வருவோம்..” என்று சொல்லி என் தோளில் கை வைத்து அழைத்துச் சென்றார். 

பேச்சுவாக்கில் “நீங்க எத்தனை வருஷமா இந்த ஆபீஸ்ல இருக்கீங்க..?” என்றார். “4 வருஷமா..” என்றேன். “கதை ஏதாவது எழுதுறீங்களா..?” என்றார். “இல்ல ஸார்.. ஆனால் திருத்தம் மட்டும் பண்ணுவேன்..” என்றேன். புருவத்தை உயர்த்தி கிண்டலான பார்வையுடன், “அதென்ன திருத்தம் மட்டும்..?” என்றார். “இல்ல.. இங்க வர்ற கதைகளைப் படிச்சுட்டு அதுல சீரியலுக்கு ஏத்த மாதிரி ஸ்கோப் என்ன இருக்குன்னு பார்த்துட்டு கிளைக் கதையா டைப் பண்ணித் தருவேன்..” என்றேன். “அப்போ உங்களால சீரியலுக்கு கதை எழுத முடியுமே..? ஏன் அதைச் செய்யாம டைப் அடிச்சிட்டிருக்கீங்க..?” என்றார். எனக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. அதுவரையிலும் நான் அப்போது அது பற்றி யோசிக்கவே இல்லை என்று இப்போது எனக்குப் புரிகிறது..! சமாளிப்பாக, “இல்லண்ணே.. எழுத வாய்ப்பு வரலை..” என்றேன்.. “வாய்ப்பெல்லாம் வராது.. நாமதான் உருவாக்கிக்கணும். இத்தனை சீரியல் பண்ற கம்பெனில உக்காந்துக்கிட்டு, எழுதத் தெரிஞ்சும் ஒண்ணும் செய்யாம இருக்கீங்களே பிரதர்..?” என்று வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னார். 

“ஏதாவது கதை வைச்சிருக்கீங்களா?” என்றார். “ஐடியாஸ் மட்டும் இருக்குண்ணே.. இன்னும் எழுதலை..” என்றேன். “சீக்கிரமா எழுதுங்க.. எழுதி கைலாசம் ஸார்கிட்ட காட்டுங்க.. ஒருவேளை அவருக்குப் பிடிச்சிருந்து உங்களை எழுதச் சொல்லலாம்ல. ஏன் டயத்தை வேஸ்ட் பண்றீங்க.?” என்றார். “இல்லண்ணே.. ஆபீஸ் வேலையே ரொம்ப டைட்டாத்தான் இருக்கு.. நாம கதை எழுதணும்னா கொஞ்சம் டைம் வேணும். இடம் வேணும்.. இங்க உக்காந்து எழுத முடியாது..” என்றேன் தன்மையாக..! 

அதற்குள் கடையின் அருகே வந்துவிட்டோம்.  “அப்போ வீட்ல காலைல சீக்கிரமா எந்திரிச்சு எழுதுங்க...” என்றார்.. ”காலைல சீக்கிரமா எழுந்திருச்சு.. நானு.. முடியாதுண்ணே..” என்றேன் கொஞ்சம் அலட்சியமாக..  “நீங்க வேண்ணா ஒரு நாளைக்கு டிரை பண்ணிப் பாருங்க..” என்றார் விடாப்பிடியாக. “இந்த ஜென்மத்துல நடக்காது..” என்றேன்.. “வொய் பிரதர்..”(தனது பேண்ட் பாக்கெட்டில் இரண்டு கைகளையும் விட்டுக் கொண்டு, எனது முகத்திற்கு அருகே தனது முகத்தை வைத்துக் இப்படி கேட்ட அந்த  ஸ்டைல் இருக்கே..! கிருஷ்ணாண்ணா..!) என்றார்.. “நான் காலைல எழுந்திருக்கிறதே 8 மணிக்குத்தாண்ணே..” என்றேன். 

டீ கைக்கு வர.. அதை வாங்கிக் கொண்டு “ஏதோ கல்யாணமானவன் மாதிரி பேசுறீங்களே சரவணன்.. உங்களுக்கென்ன வேலை, ராத்திரில..?” என்றார் கிண்டலாக.. “இல்லண்ணே.. காலைல 5 மணி, 6 மணிக்கெல்லாம் என்னால எழுந்திருக்கவே முடியாது.. நான் எப்பவும் கொஞ்சம் லேட்டா தூங்குவேன்.. அதுனாலதான்..” என்றேன்.. “அப்போ அலாரம் வைச்சுக்குங்க..” என்றார்.  “அது வைச்சாலும் நம்ம காதுக்குக் கேக்காதுண்ணே.. ராத்திரில மெஷினை கழட்டிருவேன்ல.. அதான்..” என்றேன். “செல்போன்ல அலாரம் வைச்சு காதுக்குப் பக்கத்துல வைச்சுக்குங்க..” என்றார்.. “அப்படி வைச்சாலும், பெட்ஷீட்டை போர்த்திக்கிட்டு படுக்கறதால அதுவும் கேக்காதுண்ணே..” என்றேன்.. விடாப்பிடியாக நான் தொடர்ந்து சொன்ன எதிர்பதில்கள் அவருக்குள் ஏதோ சலிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். வெறுப்பாகிப் போன முக பாவனையை கொஞ்சம் காட்டிவிட்டு, சட்டென்று இயல்புக்கு திரும்பினார்.

“நான் ஒரு ஐடியா சொல்றேன்.. செய்றீங்களா?” என்றார் கண்களில் குறும்பு மின்ன.. “சொல்லுங்க..” என்றேன் எதிர்வரும் அணுகுண்டை உணராமல்..! “செல்போனை, வைப்ரேட்டர் மோடுக்கு மாத்திருங்க..” என்றார். “மாத்திட்டு..” என்று நான் கேட்டு பதிலுக்குக் காத்திருக்க, ஒரு வாய் டீயை அருந்திவிட்டு, “ஜட்டிக்குள்ள போட்டுக்குங்க.. காலைல தானா முழிப்பு வரும்..” என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு டீ கிளாஸை வைக்க நகர்ந்தார்..

நான் குடித்த டீ, என் மூக்கு வழியாக வெளியே வரும் அளவுக்கு புரையேறி சிரித்துத் தொலைத்தேன்.. கடையே என்னை வேடிக்கை பார்க்க.. இதைப் பற்றியே கண்டு கொள்ளாமல் டீக்கு காசு கொடுத்துவிட்டு “வாங்க போகலாம்..” என்றார்.. “எப்படிண்ணே..?” என்றேன், சிரிப்பை அடக்க முடியாமல்.. “இதெல்லாம் நமக்குத் தானா தோன்றதுதான்..” என்றார்..

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அண்ணனை எப்போது சந்தித்தாலும், அவருடைய கண்களில், இது பற்றிய ஒரு குறும்புப் பார்வையை என்னை நோக்கி வீசுவார்..! அதற்குப் பிறகு அவர் அங்கே வருகை தந்த நாட்களில் கிடைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம் பேசும்போது பெரும்பாலும், இசையைப் பற்றிப் பேசுவார். அல்லது சினிமாவைப் பற்றிப் பேசுவார். 


நான் மின்பிம்பங்களில் இருந்து விலகியிருந்த நேரத்தில் ஒரு நாள் மாலை அவருடைய எழும்பூர் இல்லத்தில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். வீடு அப்போதுதான் துடைத்து மெழுகப்பட்டது போன்று பளிச்சென்று இருந்தது. சுற்றிலும் புத்தகங்களுக்கு மத்தியில் எழுதிக் கொண்டிருந்தார். மெல்லிய இசை ஒன்று ஒலித்துக் கொண்டிருந்தது. வெறும் இசை மட்டும்தான். ஒரு ஆங்கிலப் புத்தகத்தை பார்த்து அதனை தமிழாக்கம் செய்து கொண்டிருந்தார். 

வெளிநாட்டு இசைக் கலைஞர் ஒருவரைப் பற்றி கட்டுரை எழுதுவதாகச் சொன்னார்.(பெயர் மறந்துவிட்டது) அந்த இசையமைப்பாளருக்கு காது கேட்காத சூழல் இருந்தபோதிலும், அவரால் இசை அமைக்க முடிந்தது என்கிற தகவலைச் சொன்னார்.. அது எப்படி என்று நான் ஆச்சரியப்பட்டு கேட்க, அந்தப் புத்தகத்தில் இருந்து சில வரிகளைப் படித்துக் காட்டி மொழி பெயர்த்து சொன்னார்..!

“இசை அறிவு அவருக்குள்ள நிறைய இருக்கு. அதைக் கேக்கணும்னு அவருக்கு அவசியம் இல்லை. இசைக் கோர்வைகளை நோட்ஸ்களாக குறித்துக் கொடுத்தாலே போதும். அதைத்தான் அவர் செஞ்சிருக்காரு..” என்று சொல்லி வரிசையாக பல வெளிநாட்டு இசைக் கலைஞர்களின் பெயர்களைச் சொல்லி “அந்த இசையையெல்லாம் நீங்க கேட்டீங்கன்னா அசந்திருவீங்க..” என்றார். அப்போது ஒலித்துக் கொண்டிருந்த வெறும் இசையைக் குறிப்பிட்டுக் கேட்டேன்.. “எல்லாரும் பாட்டோடதான் கேக்கணும்னு விருப்பப்படுவாங்க.. நீங்க ஏன் இப்படி..?” என்றேன்.. “இது என் விருப்பம். இசை மெட்டு நல்லா இருக்குல்ல.. அதுக்காகத்தான்..” என்றார். “எப்படிண்ணே.. இவ்வளவையும் படிச்சு, மனப்பாடமா வைச்சுக்குறீங்க. நான் ஸ்கூல்லகூட இங்கிலீஷ் புத்தகத்தை புரட்டினதில்லை..” என்றேன்.. 

“படிக்கணுமன்ற ஆர்வம் இருந்தால்போதும்.. வெறும் சினிமா மட்டும் பார்த்துக்கிட்டு இருந்தா நாம அதுல ஒரு டெக்னீஷியனா மட்டும்தான் ஆவோம். கிரியேட்டரா மாற முடியாது. கிரியேட்டரா மாறணும்னு நிறைய கதைகள் படிக்கணும். புத்தகம் வாசிக்கணும்..” என்றார். “நானும் நிறைய படிப்பேண்ணே. புத்தக வெறியன் மாதிரிதான்.. ஆனா தமிழ்ல மட்டும்தான்..” என்றேன். “நான் நம்ப மாட்டேன்..” என்றார். “நான் எப்படிச் சொன்னா நம்புவீங்க..?” என்றேன்.. டக்கென்று எதிரில் இருந்த ஒரு ஆங்கிலப் புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொடுத்து “நேரா மொட்டை மாடிக்கு போங்க.. மேல் சுவர்ல ஏறுங்க.. இதைக் கைல வைச்சு படிச்சிக்கிட்டு நடந்துக்கிட்டே வாங்க.. அப்பத்தான் நீங்க ஒரு புத்தக வெறியன்னு நம்புவேன்..” என்றார். “ஏண்ணே.. இது உங்களுக்கே ஓவரா இல்லை. அப்படியே கீழ விழுந்தா என்னாகும்..?” என்றேன். “புத்தகம் வாசிப்பு சுவாரஸ்யத்தில் உயிரைவிட்ட ஒரு வாசகன்னு அடுத்த வார குமுதத்துல உங்க போட்டோவ போட்டு ஒரு கட்டுரை எழுதிருவேன்.. எனக்கும் காசு வரும்.. என்ன செய்றீங்களா..?” என்றார் குறும்பாக..!

பார்த்தவுடன் எனெர்ஜியை தூண்டிவிடும் ஆற்றல் கொண்டது கிருஷ்ணாவின் முகம். அவ்வளவு வசீகரமானது.. அவருடைய முகத்தில் எப்போதும் இருக்கும் புன்முறுவலும், உற்சாகமும் அடுத்தவரை வசியப்படுத்தக் கூடியது..! குமுதத்தில் அவருடன் இணைந்து பணியாற்றிய அனைவருமே இப்போதும் இதைத்தான் சொல்கிறார்கள். அவருடைய உற்சாகப்படுத்தலில்தான் தாங்கள் மேலும் முன்னேறினோம் என்று..!

இதற்கெல்லாம் பின்பு ஒரு முறை குமுதம் பத்திரிகையில் நடந்த வாசகர்கள் சந்திப்பில் என்னை முன் வரிசையில் பார்த்தவுடன் அதே குறும்புடன் கண்ணடித்தார் கிருஷ்ணா. “அரசு பதில்களில் பழைய குறும்புத்தனம் இல்லை..” என்ற எனது புகாரைக் கேட்டவுடன் ஜவஹர் சாருடன் இணைந்து கிருஷ்ணாவும் சிரித்தார். இந்த நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்தவுடன் மிக வேகமாக என்னருகில் வந்த கிருஷ்ணா, என் தோளில் கை போட்டு “ரொம்ப தேங்க்ஸ் சரவணன்..” என்றார்..! அதற்கடுத்த வாரங்களில் இருந்து அரசு பதில்கள் மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்பியதையும் சொல்லத்தான் வேண்டும்..!

அரசு பதில்களில் அமரர் எஸ்.ஏ.பி.க்கு பின்பு அதிக காலம் ஆதிக்கம் செலுத்தியவர் கிருஷ்ணா அண்ணன்தான் என்று பலரும் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆனால் கிருஷ்ணாவிடம் இது பற்றி ஒரு முறைகேட்டபோது நேரிடையாக பதில் சொல்லவில்லை.. மென்மையாகச் சிரித்தார். அவ்வளவுதான்..! அத்தோடு குமுதம் அலுவலகத்தில் நடக்கும், நடந்த சில சம்பவங்கள் பற்றி நான் ஆர்வத்தோடு கேட்டபோதெல்லாம் மனிதர் அசைந்து கொடுக்கவில்லை. “எல்லா ஆபீஸ்லேயும் இது மாதிரியிருக்கும். நீங்க எங்க போனாலும் இதை பேஸ் பண்ணித்தான் ஆகணும்..” என்று பொத்தாம்பொதுவாகச் சொல்வாரே ஒழிய மேட்டரை ரிலீஸ் செய்யவே மாட்டார்..!

அவ்வப்போது தொலைபேசியில் பேசியபோதெல்லாம் “அடுத்த வருஷம் படம் பண்ணிருவேன்.. கதையெல்லாம் ரெடி.. சீக்கிரமே..” என்றுதான் உற்சாகமாகப் பேசுவார். ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி குமுதத்தில் அவர் எழுதிய தொடர் மிக அழகானது.. அதற்காக பல கடின உழைப்புகளை அவர் செய்திருக்கிறார். ரஹ்மான் தொடருக்காக அவரை தொலைபேசியில் அழைத்து பாராட்டியபோது அதற்காக அவர் சந்தித்த நபர்கள், போன இடங்கள்.. படித்த புத்தகங்கள் என்று பெரும் பட்டியலையே சொன்னார். மலைப்பாக இருந்தது எனக்கு..! இந்தக் கடின உழைப்புக்கு நியாயமான பெயரை அத்தொடர் அவருக்கு பெற்றுக் கொடுத்தது என்று நம்புகிறேன்..!

கடைசியாக வர்ணம் திரைப்படத்தின் வலைப்பதிவர்களுக்கான சிறப்புக் காட்சியில்தான் அவரைச் சந்தித்தேன்.. அப்போதும் அதே உற்சாகம்.. அதே சிரிப்பு.. இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, உரையாடலில் அண்ணனின் தலைமையில் ஒரு டீம் செயல்பட்டதாக அறிந்தபோது மிகப் பெரிய சந்தோஷம். படமும் சிறப்பாகத்தான் இருந்தது..! பல வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் பங்கு கொண்டு பரிசுகளை வென்றது.. தமிழில்தான் சரியான விளம்பரம் மற்றும் ஓப்பனிங் என்று சொல்லப்படும் சினிமா ஜாதகத்தை முழுமையாகப் பூர்த்தி செய்யாததால் தமிழகத்து மக்களின் பார்வைக்கு அதிகம் போகவில்லை என்பது வருத்தமே..

இப்போது மறுபடியும் அதே நிறுவனத்திற்காக அடுத்த கதை, திரைக்கதையை எழுதி முடித்திருக்கிறார். இடையில் பல சினிமா நிறுவனங்களின் கதை இலாகாவில் பணியாற்றி அதனை இதுவரையில் வெளியில் சொல்லாமலும் இருந்திருக்கிறார் என்பதே அவர் மீதான மரியாதையை பெருமளவில் கூட்டியிருக்கிறது..!

நான் தற்போது பணியாற்றும் டிவி நிறுவனத்தின் சார்பாக தயாரிக்கப்பட இருக்கும் சினிமா நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கும் பணிக்காக கடந்த ஒரு மாதத்திற்கு  முன்பாக அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன்..! “இப்போ வேணாம் சரவணன்.. கைல நாலைஞ்சு பிராஜெக்ட் இருக்கு.. முடிச்சிட்டு சொல்றேன்..” என்றார். “நேர்ல வந்து விளக்கமா சொல்றேண்ணே. வரட்டுமா..?” என்றேன்.. “இல்ல சரவணன்.. இப்ப வேண்டாம்.. நாம அப்புறமா சந்திக்கலாம்..” என்று அவசரமாகச் சொன்னார். அவருடனான கடைசி பேச்சு அரைகுறையாக முடிந்துவிட்டதே என்பதை இப்போதைக்கு நினைத்தாலும் வருத்தமாகத்தான் இருக்கிறது..! 

தனது நோயுடன் போராடிய அனுபவங்களை வைத்து அவர் எழுதியிருக்கும் “காலா அருகே வாடா..” என்ற சிறுகதை, அச்சுக்குப் போவதற்கு முன்னாலேயே அவர் விண்ணுலகம் சென்றுவிட்டது மகா கொடுமை..! தனது சாவிலும் அதற்கொரு பொருத்தமான எழுத்தை பதிவு செய்ததுதான் அண்ணனுக்கு கிடைத்திருக்கும் பெருமை..!

தனது எழுத்துப் பணி, சினிமா பணிகள், இசை ஆர்வம், குடும்பம் என்று அனைத்திலும் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்திருந்தாலும், இந்த விரைவான அவரது விடைபெறல் அதிர்ச்சியானதுதான்..! அவர் இன்னும் சாதித்திருக்க வேண்டியதும், செய்ய வேண்டியதும் நிறையவே காத்திருக்கின்றன.. அவருடைய மரணச் செய்தியைக் கேட்டவுடன் நான் அதனைப் படித்த முகப்புத்தகத்தில் “சாவே உனக்கு சாவு வராதா..?” என்று கோபத்துடன் எழுதினேன்.. அதையே இப்போதும் எழுதுகிறேன்..! சொல்கிறேன்..!

நினைவேந்தல் நிகழ்ச்சியில் காட்டப்பட்ட வீடியோக்களில் அண்ணன் கிடார் இசையமைப்பில் உற்சாகத்துடன், படத்தில் தென்பட்ட அதே உணர்ச்சியுடன் பாடிய அந்தப் பாடல்கள் அவருடைய குடும்பத்தினருக்கு அவர், அவர்களுடனேயே இருப்பதை என்றென்றும் நினைவூட்டும்..! இந்த உற்சாகத்தையும், சந்தோஷத்தையும்தான் அவர் தம் குடும்பத்தினருக்கு அதிகமாக அளித்துள்ளார். கிருஷ்ணா அண்ணனின் தந்தையார் தாங்க முடியாத சோகத்தில் பாதி அழுகையுடனும் பேசி முடித்த அந்த ஒரு கணம், எந்தவொரு தகப்பனுக்கும் இந்த கொடுமை இனிமேலும் நிகழ்ந்துவிடக் கூடாதே என்றுதான் மனம் சொன்னது..!

இது போன்ற அநியாய துக்க நிகழ்வுகளுக்குச் செல்வது, இதுவே கடைசியாக இருந்து தொலையட்டும்..!

வயலும், வாழ்வும்-1

09-01-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சென்னையில் இருந்து 500 மைல்கள் தொலைவில் மையம் கொண்டுள்ளேன். அன்புத் தம்பி மயில் ராவணன் அவர்களின் கருணைப் பார்வையால் கிடைத்த லேப்டாப்பின் மூலம் இந்த வலைத் தொல்லை உங்களைத் தொடர்கிறது.

இது சத்தியமா மொக்கைதான். ச்சும்மா ஜாலிக்காக எழுதியதுதான்.. சீரியஸா எடுத்துக்கிட்டு யாராச்சும் பதில் சொன்னா அதுக்கு நான் பொறுப்பில்லை..!




என்ர அக்கா வூடுங்க..!



யாரு, யாரு கூப்பிட்டது. நான்தான் உண்மைத்தமிழன்.. உண்மையான உண்மைத்தமிழன் நான்தான்..!


அடச்சே..! நீதானா..


என்ன.. கமெண்ட்டு போடுறது எப்படின்னு சொல்லித் தரணுமா.. நீ மொதல்ல நாலு விதமா குரைச்சுக் காட்டு. அப்புறமா நாலென்ன.. நாப்பதுவிதமா கமெண்ட் போடறது எப்படின்னு நான் சொல்லித் தர்றேன்..!



திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், பொம்மலுகவுண்டனூர் கிராமத் தமிழ் வலைப்பதிவர்கள் சங்கம் கூட சரியான இடம்..!


இருப்பா.. பிளாக்கர் சங்கத்துல சேர்க்க ஆள் தேடி வரலை..! பயப்படாம பேசு..!


ஐயையோ.. எங்களுக்கு பிளாக்கெல்லாம் இல்லை. ஆளை விடுப்பா..!


சத்தியமா நான் அம்மா ஆளில்லை. நீயாச்சும் என்னை நம்புப்பா..!




பதிவு போட்டு அல்லல்படுறதுக்கு இந்த வேலை ரொம்ப ஈஸி போலிருக்கே..!




சரி.. சரி.. இனிமே ஜாக்கி நல்லவரா.. கேபிள் நல்லவரான்னு உன்கிட்ட கேக்கவே மாட்டேன். கோச்சுக்காத..!


என்னோட கதையைச் சொல்றேன். படமா எடுக்குறது யாரு..



பதிவர் கூட்டத்தில் இருந்த தப்பி வந்த குட்டி ஆடுகள் இல்லீங்க.. மட்டன் ஆகுறதுக்குள்ள தப்பிச்சவங்க நாங்க..!




அடியாத்தீ..! மெட்ராஸ்ல இருக்குற சங்கத்துக்கு ஆள் பிடிக்கோசரம் இங்க வந்திருக்காரா..




காளையவே அடக்கிட்டேன் பாருங்க..! நான் உண்மைத்தமிழன்தானே...!




எல்லாரும் ஒரு நாளைக்கு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி, ஓய்ஞ்சு இப்படித்தான் கோட்டைச் சுவத்துல சாய்ஞ்சு உக்காரணும்..!


குறிப்பு : என்னிடம் இருக்கும் ஜி-5 பழைய மாடல் செல்போனில் எடுத்தது. தெளிவில்லாமல்தான் இருக்கும்.


நீங்கதான் நியாயம் சொல்லணும்..!

04-01-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இன்று மாலை டிஸ்கவரி புக் பேலஸில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு நானும் சென்றிருந்தேன். அங்கே வருகை தந்திருந்த தலைவர்கள் கேபிளாரும், ஜாக்கியாரும் ஒருவரையொருவர் கட்டியணைத்து 'ஷோ' காட்டினார்கள். என்னிடம் தாங்கள் ஒற்றுமையாக இருப்பதாக நடித்தும் காட்டினார்கள். கூடவே "எங்களை எதிர்த்தா எழுதற?" என்று எனது சட்டையைப் பிடித்து, இழுத்து அடிக்கவும் பாய்ந்தார்கள்.












கருத்தை, கருத்தால் எதிர் கொள்ள வேண்டும் என்ற சாக்ரடீஸின் தத்துவம் கூடவா, நீட்சேயின் இந்த வாரிசுகளுக்குத் தெரியாது..? 

நீங்கதான் நியாயத்தைச் சொல்லணும்..! இல்லாட்டி அவங்களுக்குப் புரிய வைக்கணும்..!



அன்புடன்


உண்மைத்தமிழன்

புத்தாண்டு வாழ்த்துகள்..!


01-01-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இன்னொரு நாளும் பிறந்துவிட்டது..! புது வருடம்.. எங்கெங்கும் சந்தோஷங்கள். கை குலுக்கல்கள். நாளைய வாழ்க்கை பற்றிய கனவுகளுடன் கண்கள் பரவசப்படுகின்றன..! இந்த நாளும் இன்னொரு நாளே என்று இந்த நாளை மட்டுமே சொல்ல முடியவில்லை.

ஒரு போரைத் துவக்க இன்றைக்கு விதை போட்டிருக்கலாம்..!

ஒரு வரலாற்றைப் புரட்டிப் போட இன்றைக்கே யோசிக்க துவங்கியிருக்கலாம்..

ஒரு புதிய வாழ்க்கையைப் பற்றிய புதுமையான எண்ணம், இன்று நமக்குள் எழுந்திருக்கலாம்..!

எல்லாம் நம்பிக்கைதான். நம்பிக்கைக்கு ஒளியூட்டுகிறது ஒரு நாள். இது இந்த நாள். 

சென்ற ஆண்டின் நம்பிக்கைகளையும், செயல்களையும் முடித்தோமா என்று நமக்குள் நாமே கேட்டுக் கொள்ளலாம்..! அதில் முடியாதது எதுவோ, அதற்கான காரணங்களை அசை போடலாம். வெளிப்படையாகப் பேசலாம். அந்தத் தவறுகள் இந்தாண்டும் தொடராமல் இருக்க முனைய வேண்டும்..!

நேற்று மாலையில் இருந்தே எண்ணற்ற வாழ்த்துகள். பண்டிகை நாளில் மட்டுமே வாழ்த்துகள் மூலமாகவே பேசும் அன்பிற்கினிய தூரத்து நண்பர்களும், இன்றைக்கு வருடத்தின் முதல் வாழ்த்தாய் தங்களது முகம் காட்டினார்கள். இ-மெயிலில் கணக்கற்ற வாழ்த்துகள். அனைத்தும் பரஸ்பரம் பகிர்தல்..! ஒருவருக்கொருவர் வாழ்த்தில் அவர்களிறியாமலேயே அனைவரையும் ஒரு குடும்பமாக்குகிறார்கள். அனைவருமே நன்றாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையான எண்ணம், மனிதர்களிடையே இருப்பதற்கு இன்றைய வாழ்த்துகளும் ஒரு உதாரணம்.

பல வாழ்த்துகளுக்கு பதில் வாழ்த்தை உடனே சொல்ல முடியவில்லை. ஏனெனில் பகல் கொள்ளைக்காரர்களாக இன்றைக்கு மட்டும் முகப்பூச்சு அணிந்திருக்கிறார்கள் செல்பேசி நிறுவனத்தினர்.. அவர்களுக்கு தான, தர்மம் செய்வதற்கு பிச்சைக்காரனுக்குக்கூட போடலாம்..! ஆனால் தாங்கள் சில்லறை பிச்சைக்காரர்கள் என்பதையே அந்த கோட்டு, சூட்டு மனிதர்கள் இப்போதுவரையிலும் உணரவில்லை என்பதுதான் வருத்தத்திற்குரியது.. போய்த் தொலையட்டும். முதல் நாளில் சாபமோ, கெடுதியோ வேண்டாம்..!


எப்போதும்போல் தொடர்ந்த 10-வது ஆண்டாக எனது பெருமதிப்பிற்குரிய இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரிடம் ஆசி பெற்றேன். “இந்த வருஷமாவது பத்திரிகையை நீட்டு..” என்ற அவரது கண்டிப்பான குரலில் என் தந்தையை பார்த்தேன். வார்த்தைகள் வராத அந்தக் கணத்தில் கன்னத்தில் தட்டிக் கொடுத்து வாழ்த்தியனுப்பி வைத்தார்..!

இரண்டாவதாக பெரியவர், திரையுலகக் களஞ்சியம் பிலிம் நியூஸ் ஆனந்தனையும் சந்தித்து ஆசிகள் பெற்றேன். அக்கறையாக இந்த வருடத்திய சினிமா பற்றிய புள்ளி விவரத் தொகுப்பை நீட்டினார். “நேத்தைக்குத்தான் வந்துச்சு.. நிறைய டீடெயில்ஸ் கலெக்ட் செய்ய முடியலை. பலரும் சரியா ஒத்துழைப்பு தர்றதில்லை..” என்கிற இந்தப் பெரியவரின் வருத்தத்தின் பின்னணியில் சினிமாவுலகத்தின் கருப்புப் பக்கம் இருக்கிறது. தொகுப்பின் கடைசியில், “இதுதான் எனது கடைசி வெளியீடாக இருக்க வேண்டுமென்று பெரிதும் விரும்புகிறேன்..” என்று எழுதியிருக்கிறார். கடுமையாக சண்டையிட்டேன். வீட்டாரும் சேர்ந்து கொண்டார்கள். சிரிக்கிறார். பின்பு விரக்தி கலந்து சொல்கிறார், “ஒரு ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். என்கிட்டயே வந்து ஒரு பி.ஆர்.ஓ. டிரெயினர், ‘ஸார் நீங்க எந்த பத்திரிகை?’ன்னு கேக்குறான்..? இதுக்கு மேலேயும் நான் கோடம்பாக்கத்துல இருந்து என்ன செய்ய..?” என்றார் எங்கோ வெறித்த பார்வையுடன்.. 1000 பிறை கண்டதோடு, 4 தலைமுறை நடிகர்களையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கும் கலைஞனுக்கு பெரும் சோகத்தை அவர்களே கொடுக்கிறார்கள்..! 

“இந்த வருஷமும் நல்லா வருவீங்க.. சட்டு, சட்டுன்னு எதையும் முடிவெடுக்காதீங்க. ஆற, அமர யோசித்து பண்ணுங்க.. காலம் கெட்டுப் போய்க் கெடக்கு.. அடிக்கடி வாங்க..” என்று சொல்லி விடைகொடுத்தார்.. மாதத்திற்கு ஒரு முறை பார்த்து பேசினாலும், அதே அன்பு, அதே நேசம், அதே பாசம்.. இப்போதும் அபாரமான ஞாபக சக்தி.. சிந்திக்க வைக்கிறது இரு பெரும் தந்தைகளின் ஆளுமை..! 

வாழ்க்கையில் உயர வேண்டும் என்றால் அதற்கு அயராத, நேர்மையான உழைப்பு என்பதை மட்டுமே வழியாகக் கொண்டு சென்றால் நிச்சயமாக கிடைக்கும் என்பதற்கு இந்த இருவருமே சிறந்த எடுத்துக்காட்டு. 

பெற்ற வாழ்த்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..! புரிந்து கொள்வோம். முயல்வோம். உயர்வோம்..!

வலையுலக அண்ணன்மார்களுக்கும், அக்காமார்களுக்கும், மற்றும் நம் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!


கோபமாய்ப் பேசினால் குணத்தை இழப்பாய்..!

அதிகமாய்ப் பேசினால் அமைதியை இழப்பாய்..!

வேகமாய்ப் பேசினால் அர்த்தத்தை இழப்பாய்..!

ஆணவமாய்ப் பேசினால் அன்பை இழப்பாய்..!

பொய்யாய்ப் பேசினால் பெயரை இழப்பாய்..!

சிந்தித்து பேசினால் சிறப்போடு இருப்பாய்..!

சிரித்துப் பேசினால் அன்போடு இருப்பாய்..!


நன்றி

உங்கள் உண்மைத்தமிழன்

ஈரோடு வலைப்பதிவர் குழுமச் சங்கம விழா - எனது பார்வை..!


30-12-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இதற்கு மேலும் இது பற்றி எழுதாமல் இருக்கக் கூடாது என்று நினைத்துதான் அவசரமாக இதனை எழுதத் துவங்குகிறேன். “18-ம் தேதி நடந்த நிகழ்வுக்கு 12 நாட்கள் கழித்து பதிவா..?” என்று கோபப்படாதீர்கள். அப்பன் முருகனின் திருவிளையாடலில் அலுவலகப் பணியும், வீட்டுப் பணிகளும் ஏராளம். அலுவலகத்தில் நிஜமாகவே வேலை பார்க்கச் சொல்லி டார்ச்சர் செய்கிறார்கள். தாங்க முடியவில்லை. கொஞ்சம் பொறுத்து நிதானமாக எழுதலாம் என்று நினைத்தால், தலைவர் ஜாக்கியாரே திடீரென்று பதிவை போட்டுவிட்டார். தலைவரே பதிவு போட்ட பின்பு, நான் ஒரு சாமான்யமான சின்னப் பதிவன்.. இதற்கு மேலும் பதிவு எழுதாமல் இருந்தால் அவருக்கு மரியாதையாக இருக்காது என்பதால் எனது ஈரோடு சுற்றுப்பயணத்தை இதில் இருந்தே துவங்குகிறேன்..!

அது என்றைக்கு என்று எனக்கு நினைவில்லை. திடீரென்று நமது ஈரோட்டு சிங்கம் கதிர் என்னை தொலைபேசியில் அழைத்து சங்கமம் நிகழ்ச்சி பற்றிச் சொன்னார். வாழ்த்துக்களைக் கூறினேன். கூடவே, “உங்களை அந்த நிகழ்ச்சியில் பாராட்டப் போறோம்ண்ணே..” என்றார். கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது எனக்கு. “நிசமாவா..?” என்றேன். “ஆமாம்..” என்றார். “என்னைவிட சீனியரெல்லாம் இருக்காங்க கதிரு..” என்றேன். “அதெல்லாம் மேட்டர் இல்லை. உங்களை பாராட்டணும்னு நினைச்சிருக்கோம்.. அவ்ளோதான்..” என்றார் தீர்மானமாக. சங்கடமாக இருந்தது எனக்கு..! “வேறு யார், யாரை பாராட்டப் போறீங்க..? லிஸ்ட் சொல்ல முடியுமா..?” என்றேன். “ஸாரிண்ணே.. அது குழுவின் முடிவு.. நானே தனிப்பட்டு வெளியிட முடியாது. ஆனால் உங்களை தேர்வு செய்திருக்கிறோம்.. வருவீங்களா? மாட்டீங்களா..?” என்றார். நானும் எனது முடிவை இறுதியாகச் சொல்லாமல் “2 நாள் கழித்துச் சொல்றனே..” என்றேன். “சரி” என்று விட்டுவிட்டார் கதிர்.

1 நாள் முழுவதும் யோசித்தேன். வலையுலகத்தில் எனக்கு முன்னோடிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் விட்டுவிட்டு நமக்குக் கொடுத்து, நாம் வாங்கிக் கொண்டால் அது தர்மசங்கடமாகிவிடுமே என்றுதான் மிகவும் யோசித்தேன். விருது கொடுப்பது வலையுலகத்திற்கு சம்பந்தமில்லாத தனியார் நிறுவனமல்ல.. வலையுலகக் குழுமம்.. தனியார் நிறுவனங்களோ, அமைப்புகளோ தாங்களே தேர்வு செய்து விருதளித்தால் அது அவர்களின் முடிவு என்று சொல்லிவிடலாம். ஆனால் வலையுலகக் குழுமமே, தமது சீனியர்களை விட்டுவிட்டு தற்போது எழுதி வருபவர்கள் என்ற பட்டியல்படி தேர்வு செய்தால் அது தவறானதாக இருக்குமே என்பது எனது கருத்து..!

ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. மனம் ஊசலாடியது. “கடைசியாக நம்ம கதிர்தானே.. நிச்சயமா நல்லவிதமாத்தான் செஞ்சிருப்பாரு.. நிச்சயம் சீனியர்களெல்லாம் உடன் இருப்பார்கள்” என்று நம்பிக்கையுடன் எனக்கு நானே சமாதானப்படுத்திக் கொண்டு கதிருக்கு போன் செய்து “யெஸ்” சொன்னேன்.. சந்தோஷப்பட்ட கதிர், “போக்குவரத்து, தங்குமிட வசதியையெல்லாம் ஜாபர்தான் செய்றாருண்ணே.. அவரே உங்களை கான்டக்ட் செய்வாரு. நீங்களும் அவர்கிட்ட தொடர்புல இருங்க” என்று சொல்லி போனை வைத்தார் கதிர். அடுத்த நாளில் எனது பயோடேட்டா கேட்டு ஒரு தனி மெயில் வந்திருந்தது. அதையும் வேலைப் பளு காரணமாக 1 நாள் கழித்தே யோசித்து தட்டச்சி அனுப்பி வைத்தேன். 

14-ம் தேதி முதல் சென்னையில் துவங்கிய 9-வது சர்வதேசத் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள வேண்டி அலுவலகத்தில் 9 நாட்கள் சம்பளமில்லாத விடுப்பெடுத்துவிட்டு உலக சினிமாவில் ஐக்கியமாகியிருந்தேன். உடன் படம் பார்த்துக் கொண்டிருந்த தலைவர் ஜாக்கியார், ஈரோட்டுக்கு எப்படி செல்வது, எப்போது செல்வது என்று அடிக்கடி பிளான் பேசிக் கொண்டேயிருந்தார். அப்போது எங்களுடன் படம் பார்த்துக் கொண்டிருந்த பட்டர்பிளை சூர்யாவை துணைக்கழைத்து, “எப்படியாவது முந்தின நாள் ராத்திரியே ஈரோட்டு போயி ரூமை போடுவோம்.. கட்டிங்கை ஊத்துவோம்.. திங்க் பண்ணுவோம்..” என்ற ஐடியாவில் பரபரத்தார்.  “13-ம் தேதி இரவு கிளம்பி 14-ம் தேதி காலைல போலாமே.. நான் அப்படித்தான் போகப் போறேன்..” என்று நான் சொன்னதற்கு தலைவர் ஜாக்கியார், என்னை பார்த்து உதிர்த்த வார்த்தைகளை நானே வெளியில் சொல்லி எனக்கு இப்பவும் இருக்குற கொஞ்சூண்டு மானத்தையும் கப்பலேத்திக் கொள்ள விரும்பவில்லை. 

இதற்கிடையில் சென்னையில் இருந்து செல்கிற பதிவர்களின் காரில் டிக்கியிலாவது தொற்றிக் கொள்ளலாமே என்ற எண்ணத்தில் நான் மணிஜியுடன் மாறி, மாறி செல்பேசியும் மனுஷன் அசரவில்லை. சுப்ரமணியம்சுவாமியை போல வைச்சிருக்கேன். எப்போ வெளில விடணுமோ அப்பத்தான் விடுவேன்ற மாதிரியே “சீட்டு இல்லை. சீட்டு இருக்கு. இடம் இல்லை.. இடம் இருக்கு.. ஆள் நிறைய இருக்கு.. பார்க்கலாமே.. நீயும் வர்றியா..? ஏண்ணே ஈரோட்டுக்கு பஸ்ஸே இல்லையா..?” என்றெல்லாம் மாற்றி, மாற்றி ‘கதை’ விட்டுக் கொண்டிருந்தார். 

எனக்குப் புரிந்தது..! ‘இரும்பு அடிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலை?’ன்னுட்டு பஸ் பயணமே என்று உறுதி செய்து கொண்டேன். ஆனாலும் தலைவர் ஜாக்கியார் மட்டும் விடாப்பிடியாக உறுதியாக இருந்து, மணிஜியின் காரில் தொற்றிக் கிளம்பிவிட்டார்.

டிசம்பர் 13 அன்று லேசான காய்ச்சலால் உலக சினிமாவுக்கும் போக முடியவில்லை. வீட்டில் இருந்தேன். காலையிலேயே ஜாபருக்கு போன் செய்து இரவு பஸ் ஏறுவதாகச் சொல்லிவிட்டேன். காலை 12 மணி வாக்கில் மணிஜியின் போனில் தலைவர் ஜாக்கியார் போன் செய்து தானும் அவர்களுடன் காரில் சென்று கொண்டிருப்பதாகச் சொன்னார். இதையே 2 வது முறையாக நான் தலைவருக்கு தனியாக போன் செய்தபோதுதான் முந்தின முறை பேசியதே தலைவர்தான் என்று எனக்குத் தெரிய வந்த்து. இதுவொரு தனிக்கதை. போன் பேசும்போது யாரோ காருக்குள்ளயே “ஆ.. ஊ..” என்று ஊளையிட்டுக் கொண்டே செல்வது காதில் விழுந்தது. இங்கேயே மப்பு ஏற்றிக் கொண்டுதான் வண்டி செல்கிறது என்பதும் புரிந்தது..! அதுக்காக இப்படியா சின்னப் புள்ளைக மாதிரி கத்திக்கிட்டே போறது..? உருப்படாததுக..! 

இந்த போனுக்கு பின்பு மேலும் 2 முக்கிய நபர்களுடன் ஈரோடு சங்கமம் தொடர்பாக போனில் பேசினேன். அது இக்கட்டுரையின் பிறிதொரு பக்கத்தில் வரும்..!

அன்று இரவு கே.பி.என். பேருந்தில் ஈரோடு கிளம்பினேன். கட்டணம் 435 ரூபாயாம். ரொம்பவே அதிகம்.. அண்ணன் ஜாபருக்கு போன் செய்து “தயவு செஞ்சு காலைல போன் ஆஃப் ஆகி இருக்குற மாதிரி எதுவும் செஞ்சிராதீங்கண்ணே. நீங்க செய்ய மாட்டீங்க. ஆனா என் அப்பன் எதையாவது செஞ்சு வைப்பான். அப்புறம் நான் நடுரோட்டுல நிக்க வேண்டி வரும்..” என்று எச்சரித்தேன். அண்ணன் ஜாபர் இனி ஜென்மத்தில் எனக்கு பின்னூட்டம் போட மாட்டார் என்று நினைக்கிறேன். (ஏற்கெனவே நிறைய பின்னூட்டம் போட்டுட்டார் பாருங்க. இனிமே போடுறதுக்கு..!) பரவாயில்லை. என் பயம் எனக்குத்தான தெரியும்..!

பேருந்தில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எதுவும் நடக்கவில்லையென்றாலும், ஒரேயொரு விஷயத்தை மட்டும் பதிவு செய்து வைக்க விரும்புகிறேன். விடியற்காலை பொழுதில் அசந்திருந்த நேரத்தில் “சீக்கிரம் இறங்குங்க..” என்ற சத்தமான குரல் கேட்டு கண் விழித்தேன். அக்கம்பக்கம் பார்த்த பொழுது இருட்டாக இருந்து பல பேர் இறங்கிக் கொண்டிருந்தார்கள். பக்கத்தில் இருந்தவரிடம் “ஈரோடு வந்திருச்சா..?” என்றேன். அவர் என்ன சொன்னார் என்று என் காதில் சரியாக விழுகவில்லை. வேகவேகமாக, பையைத் தூக்கிக் கொண்டு இறங்கியும்விட்டேன். இறங்கிய வேகத்தில் பேருந்தின் கதவைச் சாத்திய நடத்துனரிடம், “என்ன சீக்கிரமா கொண்டாந்துட்டீங்க.. 5.30 மணியாகும்னு சொன்னீங்க..” என்றேன். அவர் குழப்பமாகி “நீங்க எந்த ஊர் கேட்டிருந்தீங்க..” என்றார். “ஈரோடு..” என்றேன். பட்டென்று தன் தலையில் அடித்துக் கொண்டவர் கதவைத் திறந்து அவர் கீழேயிறங்கி பேருந்து படிக்கட்டைக் காண்பித்து, “ஏறுங்க ஸார்.. காலங்கார்த்தால காமெடி பண்ணாதீங்க.. இது சேலம்ங்க..!” என்றார். இப்போது இவர் கோபத்தில் கத்தியது தெளிவாகக் காதில் விழ.. மருவாதையாக பேருந்தில் ஏறியவன் வாயது, கையது பொத்திக் கொண்டு அமர்ந்திருந்து, ஈரோடு வந்ததும் ஒரு முறைக்கு 3 முறை கேட்ட பின்பே பேருந்தில் இருந்து இறங்கினேன்..!

சேலத்தில் இருந்து ஈரோடு வரும்போதே அண்ணன் ஜாபர் போன் செய்து ஹோட்டல் ஒன்றின் பெயரைச் சொல்லி(மறந்து போச்சுங்க மக்காஸ்) அதன் வாசலில் நிற்கும்படி சொல்லியிருந்தார். அதே போல் அந்த ஹோட்டல் வாசலில் வந்து நின்று போனை அடித்தவுடன் 2 நிமிடத்தில் தனது ரதத்தில் வந்து சேர்ந்தார் அண்ணன் ஜாபர். அவரை இப்போதுதான் முதல் முறையாகப் பார்க்கிறேன்.. ஹேண்ட்சம்மாக இருக்கிறார்..! “நான் பிளாக்கையெல்லாம் படிப்பேன். ஆனால் எழுதறதில்லை..” என்று சிணுங்கல் குரலில் அந்த விடியற்காலையிலும் தெளிவாகவே சொன்னார். வழியில் ஓரிடத்தில் காபி குடித்தபோது நேற்று இரவு வந்தவர்கள், வரவிருப்பவர்கள் பற்றியெல்லாம் சொன்னார். காலை 4 மணியில் இருந்தே இப்படி டிரான்ஸ்போர்ட் வேலையில் ஈடுபட்டிருப்பதாகச் சொன்னார். பாவமாகவும் இருந்தது. பெருமிதமாகவும் இருந்தது..!

தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தபோது வாசலில் நின்று வரவேற்றார் சங்கவி. இவரை நான் அறிந்த ஆதி காலத்தில் பெண் என்றே நினைத்திருந்தேன். இதையும் அவரிடமே சொல்லி கொஞ்சம் பல்பு வாங்கிக் கொண்டேன்.. ஹோட்டல் லாபியில் அண்ணன் காவேரிகணேஷ் ஒரு குழுவினருடன் அமர்ந்திருந்தார். அவரிடமும் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு படியேறினேன். என்னதான் அடிச்சாலும், புடிச்சாலும் அவுங்ககூடதான் ஒட்ட வேண்டியிருக்கு என்பதால்.. “எளக்கிய சூடாமணிகளின்’ அறைக்கே போகலாம்” என்று அண்ணன் ஜாபரிடம் சொன்னேன். மிகச் சரியாக ஒரு அறையின் முன் கொண்டு வந்து நிறுத்தி கதவைத் தட்டினார் அண்ணன் ஜாபர். முதல் இரவு முடிந்து எழுந்து வரும் தோற்றத்தில் கதவைத் திறந்து ‘என்னா’ என்பதை போல் பார்த்தார், வலையுலக குபீர் எளக்கிய சூறாவளியான மயில் ராவணன். 

அவரிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார் அண்ணன் ஜாபர். முக்கால்வாசி மப்பு இறங்கியும், கால்வாசி இறங்கியிருக்காத நிலையிலும் மயிலு காட்சி தந்ததால் அவரைத் தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தால், இரண்டு வலையுலக எளக்கிய விடிவெள்ளிகள் ஆழ்ந்த சயனத்தில் இருந்தார்கள். ஒருவர் பீஸ் வாங்காமலேயே டைவர்ஸ் கேஸ்களில் ஆண்களுக்காக ஆஜராகி, நம் இனத்தவர் பலரின் வாழ்க்கையைக் காப்பாற்றி வரும் பேமஸ் வக்கீலும், எளக்கிய சிந்தனையாளருமான அகநாழிகை வாசுதேவன்.. இன்னொருவர் அவருடைய உயிரும், உடலில் பாதியுமான எளக்கிய வித்திகர் தண்டோரா மணிஜி..(பில்டப்பு போதுமா..?)

இருவரையும் எழுப்பிவிட்டு குட்மார்னிங் வைத்தால், கை கொடுத்துவிட்டு தலையில் அடித்துக் கொண்டார்கள். ‘முழிச்சது உன் மூஞ்சிலயா?’ என்கிற பயம், அவர்களையறியாமலேயே அவர்களது கண்களில் தெளிவாகத் தெரிந்தது. கொஞ்சம் தெளிவானவுடன் மணிஜி சொன்னார்.. “அண்ணே.. ராத்திரி ஓவர் மப்புண்ணே.. எவ்ளோ அடிச்சோம்னே தெரியலை.. என்ன பேசினோம்னும் தெரியலை..”. நல்லவேளை.. நான் ராத்திரி வரலையேன்னு அப்பத்தான் எனக்கு சந்தோஷமா இருந்துச்சு..!

முக்கால் நிர்வாணக் கோலத்தில் திடுக்கென்று வந்து நின்று ஆஜரானார் தலைவர் ஜாக்கியார். ஒரு வணக்கம் போட்டு வைத்தேன்..! “பக்கத்து ரூமிலும் நம்மாளுகதான்..” என்றார் வாசு. சென்று பார்த்தால் காலை 7 மணிக்கு பல்லைக்கூட வெளக்காம வெத்தலை பாக்கு போட்டுக் கொண்டிருந்தார் மாயவர ஒடம்பொறப்பு அபிஅப்பா. அவருக்கும் எனக்கும் தற்போது டெர்ம்ஸ் சரியில்லாமல் இருக்கும் காரணத்தால், அதிகமாக அவரைத் திட்டவில்லை. கொஞ்சமாகத் திட்டி வைத்தேன்..! மனுஷர் எல்லாத்துக்கும் சிரிச்சே வாயடைக்குறார். இதே மாதிரி பின்னூட்டத்துலேயும் செஞ்சா நல்லாயிருக்கும்ல்ல..!

எதிர் ரூமில் பிலாசபி பிரபாகரன் மற்றும் நாய் நக்ஸ், ஆரூர் செந்தில் என்ற நண்பர்கள் குழாம் முகாமிட்டிருந்தது.. அவர்களிடத்திலும் அறிமுகப்படுத்திக் கொண்டேன்..! ஜாபரும், சங்கவியும் விரைந்து கிளம்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் சுடுதண்ணீருக்காக கொஞ்சம் காத்திருந்து குளித்துவிட்டுக் கிளம்பினோம். கிளம்பியபோது அண்ணன் நாய் நக்ஸ் இன்சுலின் போட்டுக் கொள்வதற்காக மருந்தை கையில் வைத்து ஆட்டிக் கொண்டிருந்தார். திக்கென்றானது மனசு. இப்போதுவரைக்கும் ஒரு மாதிரியாத்தான் இருக்கு. டெய்லி அந்த ஊசிய போடணுமாம்.. இதையும் சிரிச்சுக்கிட்டே சொல்றாரு மனுஷன்.. பாவம்பா இவங்கள்லாம்..!

படியிறங்கியபோது லாபியில் எழுத்தாளர் கே.ஆர்.பி.செந்தில், மெட்ராஸ் பவன் சிவகுமார் மற்றும் பல நண்பர்கள்(பெயர் மறந்து போச்சுப்பா. கோச்சுக்காதீங்க) காத்திருந்தனர். சிறிது நேர இடைவெளியில் பேஸ்புக்கின் முடிசூடா மன்னர்களான அன்பழகன் வீரப்பனும், செல்வா அண்ணனும், ஜெயராஜ் பாண்டியனும் இறங்கி வந்தார்கள். அன்பழகன் வீரப்பனார் மீடியாவில் எக்ஸ்பர்ட்.. காற்று புகாத இடத்தில்கூட ஆள் வைத்திருப்பவர். ஆனால் மீடியாக்காரர் இல்லை என்று சொல்லிக் கொள்பவர். அண்ணன் ஜெயராஜ் பாண்டியனை இந்தப் பயணத்தின்போதுதான் நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன்.. அண்ணன் செல்வகுமார், அவர் அடுத்து எடுக்கப் போகும் திரைப்படத்தில் என்னை ஹீரோவாக நடிக்க வைக்கப் போவதாக பட்டப் பகலிலேயே ‘எதுவும் போடாமலேயே’ சத்தியம் செய்து சொல்லியிருக்கிறார். பார்ப்போம்..!

மணிஜியின் காரில் தோழர்கள் சிலர் ஏறிக் கொள்ள.. இடம் கிடைக்காத சிலருடன் ஆட்டோவில் ஏறி அரங்கம் நோக்கிப் பயணமானோம். அதிகம் டிராபிக் இல்லாத அந்த நேரத்தில் 2 நிமிடத்தில் அரங்கத்தை அடைந்தோம். வாசலில் அண்ணன்கள் தாமோதரன் சந்துருவும், ஆரூரானும் எங்களை வரவேற்றனர். இருவரையும் நான் சந்திப்பது இதுவே முதல் முறை.. தலைவர் சந்துரு நல்ல மனுஷனா தெரியறாரு.. அப்புறம் ஏன் இப்படி வலையுலகத்து வந்து மாட்டினாருன்னு தெரியலை..! அன்னாரின் வலைத்தளத்தின் பெயர்கூட எனக்குத் தெரியாது. அந்த லட்சணத்தில்தான் நான் இருக்கிறேன். மன்னிச்சுக்குங்க அண்ணா..!


விருந்தினர்களுக்காக காலை டிபன் தயாராக இருந்தது.. சாப்பிட்டுவிட்டால் அவர்களுக்கு ஒரு வேலை முடியுமே என்பதால் கூச்சப்படாமல் முதல் பந்தியிலேயே உட்கார்ந்து முடித்துவிட்டோம். எனக்கு சாப்பாட்டின் மீது அதிக ஆர்வம் இல்லாததால் என்ன சாப்பிட்டேன் என்பது மறந்துவிட்டது மக்களே..! யாராவது சொன்னால் கேட்டுக் கொள்கிறேன். 

அடுத்து பதிவர்களின் வருகை வந்தபடியே இருக்க அனைவருடன் முகமன் பழகவே நேரம் சரியாக இருந்தது.. நாங்கள் வந்திறங்கிய பின்பு அண்ணன் கதிர் தனது குடும்பத்தினருடனும், வானம்பாடிகள் ஐயாவுடனும் வந்து சேர்ந்தார். வானம்பாடிகள் ஐயா மீது எனக்கு ஏற்கெனவே ஒரு கோபம் உண்டு. 2 வருடங்களுக்கு முன்பு அண்ணன் கதிர் சென்னை வந்து எனது வீட்டில் இருந்து கிளம்பி ஜெயா டிவியின் ஒளிபரப்பு நிகழ்ச்சிக்காக சென்றார். அது முடிந்தவுடன் அவரை பிக்கப் செய்து ஹோட்டலில் விருந்து வைத்து நிறைய பேச வேண்டும் என்று காத்திருந்த நேரத்தில், இந்த வானம்பாடிகள் ஐயாதான் குறுக்கே புகுந்து அன்றைக்கே கதிரை தள்ளிக் கொண்டு போய்விட்டார். இந்தப் பெரிசு இவர் கூட எப்படி என்று அப்போதே யோசித்தேன்.. ம்.. எல்லாம் ‘எளக்கியம்’ செய்ற வேலை என்பது புரிந்தது..! சரி.. பரவாயில்லை. நல்லாயிருக்கட்டுமே..! 

அரங்கத்தின் உள் அலங்கார வேலைகளை முந்தின தினமே முடித்து வைத்திருந்ததால், அரங்கம் நிகழ்ச்சிக்குத் தயாராகத்தான் இருந்தது..! ஒவ்வொருத்தரும், ஒவ்வொருவரிடமும் “நீங்க யாரு..? உங்க பெயர் என்ன..?” என்று கேட்டு நேரத்தை வீணாக்க வேண்டாம் என்ற நல்லெண்ணத்தில் பெயர் பேட்ஜ் அங்கேயே தரப்பட்டது. அதை நெஞ்சில் வீராப்பாக குத்திய பின்பு ஒரு வேலை மிச்சமாகியது. நன்றி நண்பர்களுக்கு..!

சீனா ஐயா தனது துணைவியாருடன் வந்தார். இவரையும் நான் இப்போதுதான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். வலைச்சரத்தில் எனக்குப் பின்பு எழுத வந்தவர்களெல்லாம் விருந்தினராகிவிட்டார்கள் என்னைத் தவிர..! இதைப் பற்றிக் கேட்கலாம் என்று நினைத்தேன். வந்தவுடனேயே வில்லங்கத்தைத் துவக்கணுமா என்று விட்டுவிட்டேன். நிகழ்ச்சி இறுதியில் பேசலாம் என்று நினைத்து அதுவும் மறந்துபோய்விட்டது..!


இணையத் தளங்கள் அனைத்திலும், பத்திரிகைகள் பலவற்றிலும் தனது பங்களிப்பை செய்து வரும் தேனக்கா தனது கணவருடன் வந்தார். மீண்டும் கீழே வெட்டிப் பேச்சு. உரையாடல்.. கலகலப்பு இவற்றுடன் இருந்தபோது மதுரை பதிவர்கள் ஒரு செட்டாக வந்து சேர்ந்தார்கள். நான் “பெரிசு” என்று செல்லமாக அழைக்கும் தருமி ஐயா அவர்களுடன் மதுரையின் இலக்கிய சூடாமணி கார்த்திகை பாண்டியனும் வருகை தந்தார். தருமி ஐயாவை பார்த்து 3 வருஷமாச்சு. மதுரைக்கு போய் அவர் வீட்டில் அவருடன் உரையாடியதுதான் கடைசி சந்திப்பு.. இவர்களுடனும் வானம்பாடிகள் ஐயாவுடனும் சிறிது நேரம் மொக்கை போட்டு நேரத்தை போக்கி மேலும் பதிவர்களின் வருகைக்காக காத்திருந்தோம்.

அபியப்பா மற்றும், கே.ஆர்.பி.செந்தில் இருந்த இடத்தில் மணிஜியிடம், “விருச்சிக்காந்தும், சாம் மார்த்தாண்டனும் வந்துட்டாங்களா..? இல்லை வரப் போறாங்களாண்ணே..?” என்று கேட்டேன். “விருச்சிக்காந்த் நேத்தே வந்தாச்சு..” என்றார் மணிஜி. “சாம் மார்த்தாண்டனும் வந்தாச்சு. இங்கதான் இருக்காரு..” என்று சிரித்தபடியே சொன்னார் கே.ஆர்.பி.செந்தில். அருகில் நின்று கொண்டிருந்த தலைவர் ஜாக்கியாரும் இதைக் கேட்டுவிட்டு எங்கயோ பார்த்தபடியே சிரித்துத் தொலைத்தார். “ஜாக்கிக்கே அது யாருன்னு தெரியும்ண்ணே..” என்றார் செந்தில். ஸோ.. எல்லாரும் ஒரு கோக்குமாக்காத்தான் இருக்காங்கன்னு தெரியுது..!


அண்ணன் பாலபாரதி தனது துணைவியார், மகனுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்தார். ஆட்டோவில் வந்தவர் இடம் தெரியாமல் 2 முறை போன் செய்து கேட்ட, அவருக்காக ரோட்டில் போய் நின்று அடையாளம் காட்ட வேண்டியதாகிவிட்டது. பய கனிவமுதன்.. செம சேட்டை.. அப்பனுக்கேத்த புள்ளை..! “அடங்க மாட்டேங்குறாண்ணே..!” என்றார் பாலபாரதி.. “அப்பன் அடங்குனாத்தான, புள்ளை அடங்குவான். அப்பன் எதுக்காவது, என்னிக்காச்சும், யார்கிட்டயாவது அடங்கியிருக்கானா..?” என்று கேட்டேன். திருமதி பாலபாரதியே இதனை வழிமொழிந்ததால், பாவம் திருவாளர் பாலபாரதியால் எதுவும் பேச முடியவில்லை. கனிவமுதன் முதலில் முரண்டு பிடித்தாலும், கொஞ்ச நேரத்தில் அனைவருடனும் ஒட்டிக் கொண்டான். கடைசிவரையிலும் பதிவர்களுக்கு இருந்த ரிலாக்சேஷன் இந்தச் சின்ன ஐயாதான்..!

திருப்பூரில் இருந்து சேர்தளம் குழுமத்தின் உறுப்பினர்கள் அதன் தலைவர் வெயிலானின் தலைமையில் அணிவகுத்து வந்தது பார்ப்பதற்கு ஜோராக இருந்தது.  அவர்களுடைய லோகாவுடனான டீ ஷர்ட்டுடன் காட்சியளித்த அவர்கள் நிகழ்ச்சி முடியும்வரையில் பல புதியவர்களின் கேள்விக்கு உள்ளானார்கள். வெயிலான் எதற்காக இந்த யூனிபார்மோடு வர வேண்டும் என்று நினைத்தாரோ அது நடந்தேறிவிட்டது..! என்னை மாதிரி சின்னப் பசங்களையெல்லாம் கொஞ்சம் கண்டுக்கிட்டாருன்னு இன்னமும் நல்லாயிருக்கும்..!


நிகழ்ச்சி துவங்க நேரம் நெருங்கியபோது கதிர் அருகில் வந்து “கடைசி வரிசையில் உக்காருங்கண்ணே..” என்றார். அவர் சொன்னதுபோலவே அமர்ந்தேன். சீனா ஐயாவும், தருமியும் வந்திருப்பதால் அவர்களும் எங்களுடன் மேடையேறுவார்கள் என்றுதான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். 

முதல் நிகழ்ச்சியாக அண்ணன் ஆரூராரின் பிள்ளைகளான அருட்சுடரும், அமர்நீதியும் அழகுத் தமிழில் தமிழ் வணக்கம் பாடியது கேட்பதற்கே வித்தியாசமாக இருந்தது. தொடர்ந்து சந்துரு அண்ணன் சுருக்கமாக வரவேற்புரையாற்றினார். இதையடுத்து அழகுத் தமிழில் அன்பு அண்ணன் ஆரூரான் சிறப்புப் பேச்சாளரான ஸ்டாலின் குணசேகரன் பற்றி எங்களுக்கு எடுத்துரைத்தார். இது நல்ல விஷயம். தெரியாதவர்களும் வந்திருப்பார்களே.. அவர்களும் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா..? அண்ணன் ஆரூராரின் தமிழ்ப் பற்றை அன்றைக்குத்தான் மேடையில் பார்த்தேன். அசத்துகிறார். 

அடுத்து பாராட்டப்பட வேண்டியவர்களை வரிசையாக மேடைக்கு அழைத்தார்கள். முதலில் நான். எனக்கு பின்பு தலைவர் ஜாக்கியார், அண்ணன்மார்கள் ஜீவ்ஸ், அதிஷா, வெயிலான், கே.ஆர்.பி.செந்தில், சுரேஷ்பாபு, யுவகிருஷ்ணா, ரவிக்குமார், பாலபாரதி, இளங்கோவன், மகேந்திரன், ஓவியர் ஜீவா, சீனா ஐயா இவர்களுடன் தேனக்காவும் சேர்ந்து மேடையேறினார்கள்.


மேடையில் ஒரு பிளாஸ்டிக் பையில் ஒரு பெட்ஷீட்டும், ஒரு ஷீல்டும் ஒரு தாம்பாளத் தட்டில் வைத்து எங்களிடம் தரப்பட்டது. அத்தனை பேரும் சொல்லி வைத்தாற்போல் அந்த்த் தாம்பாளத் தட்டையும் வாங்கிக் கொண்டே தங்களது இருக்கைக்கு சென்று அமர, பின்னாலேயே யாரோ ஒருவர் வந்து அந்தத் தட்டை பெற்றுச் சென்றது கடைசிவரையிலும் காமெடியாகத்தான் இருந்தது.

எங்களைப் பற்றிய தகவல்களைத் தெரிவித்தபோது அது தொடர்பான புகைப்படங்களையும் அருகில் இருந்த ஸ்கிரீனில் காண்பித்த்து மிக அழகாக இருந்தது.  அதேபோல் எங்களைப் பற்றிய குறிப்புகளை அறிவிப்பாளர்கள் 3 பேர் மாற்றி, மாற்றி பேசியதும் ரசிக்க வைத்தது. இருந்தாலும் என்னால்தான் அதிகம் ரசிக்க முடியவில்லை..! என்னைவிட மிக மூத்த பதிவரான தருமி ஐயா கீழே இருக்க.. நான் விருது பெறுவதும், தருமி ஐயா மட்டுமல்ல.. வேறு பலரும் இப்போதும் பதிவுலகில் ஆக்டிவ்வாக இருப்பதும் சட்டென்று நினைவில் வர மனம் ஒரு நிலையில் இல்லை. அருகில் அமர்ந்திருந்த தலைவர் ஜாக்கியார், எனக்கு முன்னால் உட்கார்ந்திருந்த அண்ணன் யுவகிருஷ்ணாவை சுட்டிக் காட்டி என்னிடம் ஏதோ சொல்லி கிண்டல் செய்தபடியே இருந்தார். எனக்குத்தான் முழு கவனமும் அதில் இல்லையே..! அப்புறம் என்னத்த கேக்குறது..?

இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம்.. ஏதோ சினிமா நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் டிவி கேமிராக்களை போல கிட்டத்தட்ட 30 பேருக்கும் மேலாக கையில் கேமிராவைத் தூக்க.. மேடை நிகழ்ச்சிகளில் பிளாஷ் மழைகள் பொழிந்தன.  வாழ்த்திப் பேசிய திரு.ஸ்டாலின் குணசேகரனின் பேச்சு கூட்டத்தினரை மிகவும் ஈர்க்கும்வகையில் இருந்தது. அதிலும் நியூயார்க் ட்வின் டவர்ஸ் தாக்கப்பட்ட சம்பவம் பற்றி அவர் குறிப்பிட்ட செய்தி மிகவும் குறிப்பிடத்தக்கது. ஈரோட்டில் வருடாவருடம் அவர் நடத்தி வரும் புத்தகக் கண்காட்சியின்போது எத்தனையோ பேச்சாற்றல் மிக்கவர்களை அழைத்து கூட்டம் நடத்தி தமிழ்ப் பேச்சுக் கலையை ஆதரித்தும், வளர்த்தும் வருகிறார் என்பதை அறிந்தபோது அவர் குறித்து மிகவும் பெருமைப்பட்டேன். 

மேடையில் பாராட்டுப் பெற்றவர்களின் குறிப்புகள் இங்கே இருக்கிறது. படித்துப் பாருங்கள்.. எங்கள் 15 பேரிலும் சமூக ஆர்வலர், கவிஞர் மகேந்திரனின் சேவைதான் மகத்தானது. அவரைப் பற்றி தெரிந்து கொண்டபோது இது போன்று ஒரு செயலைக்கூட இதுவரையில் என் வாழ்க்கையில் செய்ததில்லையே என்ற வருத்தமே எனக்குள் எழுகிறது.. வாழ்க மகேந்திரன்..! 

பேசுவதற்கு வாய்ப்பு வந்தபோது சில மணித் துளிகள் மட்டுமே அனுமதி என்று கதிர் முன்கூட்டியே சொல்லிவிட்டதாலும், எனக்குள் இருந்த பதட்டம் காரணமாகவுமே கீழ்க்கண்டவைகளை மட்டுமே பேசினேன்..

“அனைவருக்கும் வணக்கம். சிறப்புப் பேச்சாளருக்கு சிறப்பு வணக்கம். இத்தனை நாட்களாக இரவு, பகலாக பக்கம், பக்கமாக மாய்ந்து, மாய்ந்து எழுதி என்னத்தடா உண்மைத்தமிழா சாதிச்ச என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டிருக்கும், இந்த நேரத்தில் ஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழுமம் இப்படியொரு விருதினை கொடுத்து கவுரப்படுத்தியிருக்கிறது. அவர்களுக்கு எனது நன்றிகள்.. இந்த விருதினை நான் எப்படி எடுத்துக் கொண்டேனென்றால், இதுவரைக்கும் பதிவுகளை 25 பக்கங்களில் எழுதிட்டிருந்த. அது போதாது.. இனிமேல் 50 பக்கங்களில் எழுது என்று ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் எனக்கு உத்தரவிட்டதாகவே இந்த விருதினை எடுத்துக் கொள்கிறேன்.. நன்றி வணக்கம்..”

இப்படித்தான் பேசினேன் என்று நினைக்கிறேன்..! ஆனாலும் எனக்குள் இருந்த வருத்தத்தை வெளிக்காட்ட விரும்பவில்லை...! வலைப்பதிவர்கள் மட்டுமே இருந்திருந்தால் சொல்லியிருக்கலாம். ஆனால் பல்வேறு இணையத்தள வாசகர்களும், எழுத்தாளர்களும் இருந்ததால் அந்த மேடையிலேயே இதனை ஒரு இஷ்யூவாக ஆக்க விரும்பவில்லை.. ஆனாலும் சென்னை திரும்பிய பின்பு மனசு பொறுக்காமல் கதிருக்கு போன் அடித்து எனது வருத்தங்களையும், கண்டனங்களையும் தெரிவித்தேன். அவசரமாகச் செய்ததாலும், குழுவினர் முடிவெடுத்ததாலும் இப்படி செய்ய வேண்டியதாகிவிட்டது என்றார் கதிர். அடுத்த சங்கமத்தில் இதனை நிவர்த்தி செய்து கொள்ளும்படி வேண்டிக் கொண்டேன். “நிச்சயமாக..” என்று சொல்லியிருக்கிறார் கதிர்..! செய்வார்கள் என்றே நம்புகிறேன்..!

அதே நேரத்தில் எனக்கு முன்பாகப் பேசிய தலைவர் ஜாக்கியாரின் பேச்சில் இருந்த ஒரு சில வார்த்தைகளை வன்மையாகக் கண்டிக்கத்தான் வேண்டும். தலைவராக இருந்தாலும், நம் மனதுக்குத் தவறாக இருந்தால் அதனைக் குறிப்பிட்டுச் சொல்லிவிடுவதுதான் நல்லதொரு தொண்டனுக்கு அழகு.. 

“என்னைப் பற்றிய விமர்சனங்கள் என் கால் தூசுக்குச் சமம்..” என்று மேடையில் அவர் சொன்ன வார்த்தைகள் அழகில்லை. பொருத்தமானதில்லை..! விமர்சனங்களை எதிர்கொள்பவன்தான் நல்ல எழுத்தாளன். அது எப்பேர்ப்பட்ட விமர்சனமாக இருந்தாலும் சரி..! குழந்தை தவழ்ந்து, நடை பயின்று, ஓடியாடி தனது அடுத்தக்கட்ட வளர்ச்சியை அடையும்வரையில் அதற்குக் கிடைக்கின்ற தாயின் அன்பைப் போன்றதுதான் வாசகர்களின் விமர்சனங்கள். எழுதுவதற்கெல்லாம் பாராட்டுக்கள் கிடைத்துவிடாது..! அனைத்துமே பாராட்டாகத்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறானது..! தலைவர் ஜாக்கியார் தான் இப்படித்தான் என்று சொல்லிச் சொல்லியே தனது தவறை நியாயப்படுத்துகிறார். பல முறை இதனை அவரிடத்தில் நேரில் சொல்லியும் மூக்குடைபட்டிருக்கிறேன். அவருடைய தளத்தில்கூட நான் இது பற்றி ஒரு முறை அவருக்குப் பின்னூட்டம் போட்டும், அதனை அவர் வெளியிடவில்லை. கருத்துச் சுதந்திரம் இல்லாத இடத்தில் நானும் பின்னூட்டம் போடுவதில்லை என்று சொல்லி, அன்றிலிருந்து அவர் தளத்தில் பின்னூட்டம் இடுவதை நானும் நிறுத்திக் கொண்டேன். ஆனாலும் இப்போதும் அதனையே சொல்லத் தோன்றுகிறது. சொல்லிவிட்டேன்..! இனி எப்போதும் இதைத்தான் சொல்லுவேன்..!

தொடர்ந்து ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்தின் உறுப்பினர்கள் மேடையேற்றப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டார்கள். அண்ணன் க.பாலாசி நன்றியுரை நிகழ்த்திய பின்பு மேடை பொதுவானதாக அறிவிக்கப்பட்டு, யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. புதிய பதிவர்கள் பலரும் மேடையேறி தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு தாங்கள் பதிவுலகத்தில் நுழைந்தது எப்படி என்றும், பதிவுலகத்தின் பலன்கள் பற்றியும் பொதுவாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

அதுவரையிலும் பொறுமை காத்த கூட்டம் இதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் கீழே இறங்கி ஓடியது. முதல் கூட்டத்தினர் தம் அடிக்க ஓட.. இரண்டாவது கூட்டம் கதையடிக்க ஆரம்பித்தது. இதை என்ன செய்ய முடியும்..? எப்படி தடுக்க முடியும்..? இத்தனை பதிவர்களும் பல மாதங்கள் கழித்து ஒன்று சேர்கிறார்கள். பேசுவதற்கு எத்தனை விஷயங்கள் இருக்கும்..?

மணிஜியை சுற்றி ஒரு கூட்டம்.. தலைவர் ஜாக்கியாரை சுற்றி ஒரு கூட்டம்.. சி.பி.செந்தில்குமாரை சுற்றி ஒரு கூட்டம். ‘மெட்ராஸ் பவன்’ சிவகுமாரை சுற்றி ஒரு கூட்டம்.. கார்த்திகைபாண்டியனை சுற்றி ஒரு கூட்டம்.. என்று ஆளாளுக்கு குழு ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்கள். 


கிடைத்த இடைவெளியில் பதிவர்கள் பலரையும் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன். எடுத்தவர்களெல்லாம் எனக்கு ஒரு காப்பி அனுப்பி வைத்தால் தன்யனாவேன்..! அண்ணன் ஜீவாவுடன் சிறிது நேரம் அளவளாவியபோது அவர் பிரபல ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் அண்ணன் என்று தெரிந்து கொஞ்சம் ஆச்சரியமானேன்..! தேசிய விருதுக்கு புத்தகங்களை அனுப்பும் முறையை அண்ணனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

அங்கே நான் சந்தித்த தம்பி சி.பி.செந்தில்குமாருக்கு ஒரு சின்ன எச்சரிக்கையை விட்டேன். “தொடர்ந்து குஜிலி, பிகர் என்றே உனது பிளாக்கில் எழுதிக்கிட்டே வர்ற.. பின்னாடி ஏதாவது பிரச்சினைன்னா யாரும் உனக்கு சப்போர்ட் பண்ண மாட்டாங்க.. இது மாதிரி எழுதறதை நிறுத்திட்டு அளவோட எழுது..” என்றேன். நல்லது சொன்னா இந்தக் காலத்துல எந்தப் புள்ளை கேக்குது..? தானா அடிபட்டு புரிஞ்சுக்கட்டும்..!


நான் முன்பே சொன்னதுபோல எனக்கு சாப்பாட்டின் மீது அதிக ஆர்வம் இல்லாததால் சாப்பாட்டு சீர்வரிசைகள் பற்றி அதிகம் சொல்ல என்னிடம் ஏதுமில்லை. ஆனாலும் அசைவத்தை ஒரு வெட்டு வெட்டினேன்.. அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த காவேரிகணேஷ், அவ்வளவு காரத்தையும் சமாளித்து வியர்க்க, விறுவிறுக்க முழுங்கிக் கொண்டிருந்தார். எப்படித்தான் முடியுதோ தெரியலையே..? 

இடையிலேயே அரங்கத்தில் இருந்து ஜூட் விட்ட மணிஜியும், அவரது அடிப்பொடிகளும் கொஞ்சம் ‘சுதி’யை ஏற்றிக் கொண்டு எங்களுக்கு அடுத்த பந்தியில் அமர்ந்து ஆற, அமர வெட்டினார்கள்..! ‘அடிச்சது’கூட வெளில  தெரியாமல் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது ஆச்சரியம்தான். ஆனால் அண்ணன் அகநாழிகை வாசுதேவன் யாருக்காவது திடீரென்று முத்தம் கொடுத்தால், அண்ணன் மப்பில் இருக்கிறார் என்று உறுதியாகச் சொல்லலாம். எனக்கு 2 முறை முத்தம் கொடுத்தார். முதல் முறை சரியில்லை என்று சொல்லி 2-ம் முறையாக முத்தம் கொடுத்தபோதுதான்  எனக்கே ‘தெளிந்தது’ இந்த விஷயம்..! நல்ல அண்ணன்..!

இந்தக் கூத்துக்கிடையில் பல பதிவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி ஓய்ந்து, புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து களைத்துப் போய் நின்றிருந்தவேளையில் குழுமத்தின் உறுப்பினர்கள் சாப்பிட்டவர்களிடமே திரும்பத் திரும்ப போய் “சாப்பிட வாங்க..” என்று வாய்கூசாமல் அழைத்துக் கொண்டிருந்தார்கள். அன்புக்கு ஒரு அளவு வேண்டாமா..? கா.பா. வலசை புத்தகத்தை எனக்குப் பரிசாக அளித்தார்.  விஜி மற்றும் ரோஹினி சிவாவிடமும் சிறிது நேர அளவளாவல். “உங்களுக்காக பொண்ணு பார்க்குறேன் சித்தப்பூ..” என்றார் விஜி. “இது முடியறதுக்குள்ள நீ நிச்சயம் பாட்டியாயிருவ..” என்று வாழ்த்தியிருக்கிறேன்..! இத்தனை களேபரத்திலும் புகைப்படக் கலைஞர் அண்ணன் ஜீவ்ஸ் மட்டும் தனது பணியில் மிகச் சரியாக இருந்தார்..! பெற்றோர்களுடன் வந்திருந்த சிறு குழந்தைகளை வைத்து ஒரு ஆல்பமே தயாரிக்கும் அளவுக்கு புகைப்படங்களை எடுத்துத் தள்ளிவிட்டார்..! என்னையும்தான் எடுத்தார். ஆனால் இதுவரையில் வெளியிடவில்லை..! அவ்வளவு மோசமாவா இருக்கேன்..?

மதியம் 3-30 மணி டிரெயினில் சென்னை திரும்ப ஒரு டீம் கிளம்பிக் கொண்டிருக்க.. நான் வழக்கம்போல எப்படி திரும்பச் செல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இப்போதும் மணிஜி கார் ஹவுஸ்புல் என்று நான் கேட்காமலேயே சொல்லி தப்பித்துக் கொண்டார். தொடர்ந்த விசாரணையில் பேஸ்புக் தோழர் சி.ஐ.டி. அன்பழகன் வீரப்பன் காரில் வந்திருப்பதாகச் சொல்ல.. காவேரிகணேஷின் மூலமாக ஒரு பிட்டை போட்டு அவர்கள் மனதில் இடம் பிடித்து, அதன் மூலம் காரிலும் சீட்டைப் பிடித்தேன்..! 


நள்ளிரவுக்குள் சென்னை திரும்ப நினைத்து முதலில் நாங்கள்தான் அரங்கத்தை காலி செய்தோம். அனைவரிடமும் திரும்பத் திரும்ப ‘டாட்டா’ காட்டியே அலுத்துப் போனது..! அந்த அளவுக்கு சென்று வருகிறோம் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்துவிட்டுத்தான் கிளம்பினோம். பேருந்து நிலையம்வரையிலும் அண்ணன் சங்கவியும் எங்களுடன் வந்தார். “போன் பண்றேண்ணே..” என்று சொல்லிவிட்டு வண்டியில் இருந்து இறங்கிச் சென்ற அண்ணன் சங்கவி இப்போதுவரையிலும் போன் செய்யவில்லை.. சரி.. நல்லாயிருக்கட்டும்..!

சி.ஐ.டி. அன்பழகன் வீரப்பனார் வண்டியோட்ட மோகன்குமார், காவேரிகணேஷ், ஜெயராஜ் பாண்டியன் இவர்களுடன் நானும் சேர்ந்து பயணாமானோம். இப்போதுதான் தெரிகிறது கார் பயணத்தின் அனுகூலம் என்னவென்று..! ஏதோவொரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு ‘உச்சா’ போனபோது, தூரத்தில் இருந்து சில இளைஞர்கள் எதையோ செல்போனில் படம் எடுத்துக் கொண்டிருந்தவர்கள், எங்களையும் சேர்த்தே படம் எடுத்தார்கள். ஓரக்கண்ணால் பார்க்கத்தான் முடிந்தது..! எதுவும் சொல்ல முடியவில்லை. ஆமாம்.. இதை படம் புடிச்சு அவனுக என்ன செய்யப் போறானுக..? 

காரில் வரும்போதே யுடான்ஸ் பரிசளிப்பு விழாவும் சட்டென்று ஞாபகத்திற்கு வர, வேடியப்பனுக்கு போன் செய்து கேட்டேன். விழா முடிந்து நான் கடையையும் பூட்டிவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டதாகச் சொன்னார்..! அடுத்து தம்பி அப்துல்லாவிற்கு போன் செய்தேன். விழாவினை வெற்றிகரமாக முடித்துவிட்டு, அனைவருடனும் சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்கு வந்திருப்பதாகச் சொன்னார்..! ‘ச்சும்மா ஒரு விசாரணைதான்’ என்று சொல்லி வைத்தேன்..!

ஈ.ஸி.ஆர். ரோட்டில் எப்படி வேண்டுமானாலும் பறக்கலாம் போலிருக்கிறது..!  சி.ஐ.டி. அன்பழகன் 120-ல் இருந்து 160 வரையிலும் ஸ்பீடு காட்டினார்.. நடு, நடுவே செல்வா அண்ணனுடனும், மோகன்குமாருடனும் பேசிக் களைத்தோம். செல்வா அண்ணன் தமிழகத்தின் அடுத்த அண்ணாஹசாரேவாக உருமாறும் அளவுக்கு அரசியல் பேசுகிறார். ஆனால் பிளாக்கில்தான் எழுத மாட்டேன்றார்..! 7.30 மணி நேரப் பயணத்தின் முடிவில் இரவு 11 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தோம்..!

எந்தவொரு லாப நோக்கமும் அற்ற நிலையில், எழுத்து, மற்றும் செயல்களை ஊக்குவிக்கும் பொருட்டு அளிக்கப்பட்ட விருதுகள் என்றாலும், அதனை அளித்தவிதம்தான் அத்தனை வருத்தங்களையும் தூக்கியெறிந்துவிட்டது. கதிரின் அன்புக் குழந்தைகள்தான் தர வேண்டிய பரிசுப் பொருட்களை உள்ளறையில் இருந்து எடுத்து வந்து கொடுத்தபடி இருந்தார்கள். அவர்களுக்கென்ன 12, 14 வயது இருக்குமா..? கதிர் இப்பொழுதே பழக்குகிறார் போலும்..! தூரத்தில் இருந்து பார்த்தபோது மனம்  நெகிழத்தான் செய்தது..!

மேடையில் முகத்தைக் காட்டாமலேயே உள் அறையில் நின்றபடியே கதிர் 2, 3 முறை பேசினார். “சிறப்புப் பேச்சாளர் பேசும்போது பார்வையாளர்கள் அமைதி காக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்..” என்று கதிர் மறைந்திருந்துதான் மைக்கில் பேசினார். அது ஏன் என்று இப்போது யோசித்துப் பார்த்தால் புரிகிறது. தப்பித் தவறிகூட அரங்கத்தில் யாரும் இதனை பரிகாசம் செய்துவிடக் கூடாது என்பதில் கதிர் மிகவும் கவனமாக இருந்திருக்கிறார்.

நான் 3-வது முறையாக சென்னையில் இருந்து கதிரை அழைத்து நான் எப்படி வரவிருக்கிறேன் என்பதைத் தெரிவித்தபோது, முதல் பதில் வார்த்தையாக கதிர் சொன்னது.. “ஜாபர்கிட்ட பேசுங்கண்ணே.. அவர்தாண்ணே போக்குவரத்தெல்லாம் பாத்துக்குறாரு..” என்பதுதான்..! இதுதான் ஒரு நல்ல கேப்டனுக்கு அழகு. ஒருவருக்கு ஒரு பொறுப்பை கொடுத்துவிட்டால், அதனை அவர்தான் பார்க்க வேண்டும். டீம் வொர்க் என்பதும் இதுதான். அனாவசியமாக அடுத்தவர்கள் வேலையைத் தாங்களே நட்புக்காக செய்து நேரத்தை வீணடிக்கக் கூடாது என்பதுதான் அமைப்புக்கு மிகச் சரி..!

நான் காரில் ஏறி கிளம்பிய அந்தத் தருணத்தில்தான் தலைவர் தாமோதர் சந்துரு, சாப்பிட அமர்ந்தார். அதுவரையிலும் அத்தனை குழுக்களின் அருகிலும் வந்து “சாப்பிட்டீங்களா..? சாப்பிட்டீங்களா..?” என்று கேட்டுவிட்டு கடைசி பந்தியில் அமரும் அளவுக்கு மிகப் பொறுப்பான தலைமையைத்தான் இந்தக் குழுமம் பெற்றிருக்கிறது..! பாவம்.. இந்த மனிதருக்கு சிரிக்க மட்டுமே தெரியும் போலிருக்கு..! அப்படியொரு சிரிப்பு..! இப்படியாக குழுமத்தில் இருக்கும் அனைவருமே ஒரு சிறிய பிரச்சினையைக்கூட அடுத்தவர் முன்பாக வெளிக்காட்டிக் கொள்ளாமல் நிகழ்ச்சி முடியும்வரையிலும் சிறப்பாக ஒத்துழைப்பு அளித்து நிகழ்ச்சியை நடத்திக் காட்டியது பெருமைக்குரிய விஷயம்..! வாழ்க ஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழுமத்தினர்..!

இது போன்ற நிகழ்வுகள் தமிழ் வலைப்பதிவர்கள் இருக்கின்ற அத்தனை ஊர்களிலும் நடந்தால் வலைப்பதிவுகளின் மூலமாக தமிழில் எழுதும் நாம் அனைவரும் இன்னமும் நெருக்கமாகும் வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆனால் அதே சமயம், இது போன்ற நிகழ்வுகள் நடத்த ஆகும் செலவுகள் குறித்தும் கொஞ்சம் யோசிக்க வேண்டும்..!

இந்த ஈரோட்டு நிகழ்வுக்கே எவ்வளவு ரூபாய் செலவானது என்று தெரியவில்லை. இது பற்றி ஒரு வார்த்தைகூட கேட்காமல் சாப்பிட்டுவிட்டு வந்திருக்கிறேன் என்பதை இப்போது தட்டச்சு செய்து கொண்டிருக்கும்போதுதான் வெட்கமான ஞாபகம் வருகிறது. நிச்சயமாக 75000 ரூபாயாவது செலவாகியிருக்கும். நன்கொடைகள் இல்லாமல் குழும உறுப்பினர்கள் தங்களுக்குள்ளேயே பகிர்ந்து கொண்டு செய்திருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்.. இது போன்று அனைத்து ஊர்களிலும் செய்துவிட முடியாது..! பணமும் மிக முக்கியந்தான்..!

இதற்குப் பதிலாக நன்கொடைகள் மற்றும் விளம்பரம் மூலமாக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தலாம். ஆனாலும் எந்தவொரு நிகழ்வும் அது தொடர்பான துறையின் வளர்ச்சிக்கு பெருமளவில் உதவி செய்வதாகவே இருக்க வேண்டும். அந்த வகையில் இது போன்ற வலைப்பதிவர்கள் சந்திப்பு என்னும் நிகழ்ச்சியினைவிடவும், வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறைகளை நாம் நடத்தினால் அது நமது தமிழுக்கும், தமிழகத்திற்கும், தமிழ் வலைப்பதிவர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும்..!

வலைப்பதிவர்களின் கலந்துரையாடலில் கிடைக்கும் மகிழ்ச்சியும், பூரிப்பும் அவ்வப்போது நமக்குக் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. போனில் பேசுகிறோம். எங்கேனும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு வந்தால் பேசுகிறோம். அந்தந்த ஊர்களுக்குச் செல்லும்போது பதிவர்களைச் சந்தித்து உரையாடுகிறோம். இதை அப்படியே வைத்துக் கொண்டு இன்னமும் பார்வையாளர்களாகவே இருக்கும் பல வாசகர்களையும் நாம் எழுத வைக்க வேண்டும். அதற்காக வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறைகளை அவசியம் நாம் ஊர், ஊருக்கு நடத்தியாக வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக சென்னையில் அண்ணன் பாலபாரதி தலைமையில் வலைப்பதிவு பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தினோம். அன்றைக்கு மட்டும் கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்டோர் வலைப்பதிவுகள் பற்றி அறிந்து கொண்டதோடு 150-க்கும் மேற்பட்டோருக்கு வலைப்பதிவுகளை ஒரே நாளில் துவக்கிக் கொடுத்தோம். 10 கணிணிகளை வாடகைக்கு எடுத்து வந்து, ஆர்வத்தோடு வந்தவர்களுக்கு அங்கேயே வலைப்பதிவுகளைத் துவக்கிக் கொடுத்தோம். தமிழில் எப்படி தட்டச்சு செய்வது.. எந்த தட்டச்சு முறை கற்றுக் கொள்ள மிக எளிதானது என்று சொல்லி அதற்கான விளக்கக் கையேட்டை கூட மறைந்த அண்ணன் சிந்தாநதியின் ஒத்துழைப்பில் வழங்கியிருந்தோம். அவர்களில் பலர் இப்போதும் எழுதிதான் வருகிறார்கள். இது போன்ற சேவையை நம்மால் முடிந்த அளவுக்கு, தமிழகம் முழுவதுமே ஒருங்கிணைந்து செயல்படுத்தினால் இதுவே நமது வலையுலகத்திற்கு நாம் செய்யும் பேருதவியாக இருக்கும் என்பது எனது கருத்து..! 

அடுத்த பிப்ரவரி மாதத்தில் சென்னையில் நடத்தவுள்ள சென்னை இணையும் கரங்கள் நிகழ்ச்சி ஈரோடு சங்கமம் போன்றதுதான். முதல் முறையாக நடத்துவதால் அனைத்து இணையப் பங்களிப்பார்களையும் வலையுலகத்தின் பக்கம் ஈர்த்துவிட்டு, பின்பு அடுத்த ஆண்டில் இருந்து பயிற்சிப் பட்டறை போன்று நடத்த உத்தேசிக்கலாம் என்று யோசிக்கப்பட்டுள்ளது. இதற்கு கால அவகாசமும், நிறைய உடல் உழைப்பும், பணமும் தேவைப்படுகிறது..! இதற்கான முன் பயிற்சியாகத்தான் இந்த இணையத்தள பங்களிப்பாளர்களின் ஒன்றுகூடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் எங்களுக்குக் கிடைக்கின்ற அனுபவத்தின் வாயிலாக நிச்சயமாகத் தொடரும் காலங்களில் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படும் என்றே நான் உறுதியாக நம்புகிறேன்.

இதேபோல் பல்வேறு ஊர்களில் இருக்கும் வலைப்பதிவர்கள் தங்களுடைய ஊர்களில் இருக்கும் பதிவர்களை ஒன்றிணைத்து ஒரு குழுமத்தை உருவாக்கி அதன் மூலம் கூட்டங்களை நடத்தி, வலைப்பதிவர்களை ஒன்றிணைத்தால் வரும் காலத்தில் நமது தமிழ் வலையுலகத்தை முன்னோக்கி நகர்த்தலாம் என்று கருதுகிறேன்..! தமிழகத்தின் தமிழ்ப் பதிவர்கள் இது குறித்து ஆவண செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..!

ரொம்ப ஓவரா, சீரியஸா பேசிட்டனோ..? எனக்கே ஒரு மாதிரியாத்தான் இருக்கு..! அதுனால இனி கொஞ்சம் ரிலாக்ஸா பேசலாமா..? இனிமேல் வருபவைகளெல்லாம் மொக்கைகளே..! மொக்கைகளைத் தவிர வேறில்லை என்று என் அப்பன் முருகன் மீது ஆணையாகச் சொல்லித் துவக்குகிறேன். 

டிசம்பர் 13-ம் தேதி காலையில் அண்ணன் சஞ்சய்காந்தி போன் செய்தான். “என்னண்ணே எப்படியிருக்கீங்க..? ச்சும்மாதான் ரொம்ப நாளாச்சு பேசி.. பேசலாம்னு நினைச்சேன்..” என்றான். நானும் மிக மகிழ்ச்சியாக என்னையும் ஒரு மனுஷனா மதிச்சு பேசுறானேன்னுட்டு ஊர்க்கதை, உலகக் கதையெல்லாம் பேசிட்டு கடைசியா, “ஈரோட்டு வர்றியாடா..?” என்றேன். “எதுக்குண்ணே..?” என்றான். “அதான் சங்கமம் நிகழ்ச்சிக்குடா..” என்றேன். “நான் வரலை.. ஆமா.. இப்படி கூட்டம் போட்டு பேசி என்னத்த சாதிக்கப் போறீங்க..?” என்றான். “என்னடா இப்படிச் சொல்ற.. எப்பவும் போன்ல பேசிக்கிட்டிருந்து, பின்னூட்டம் போட்டுக்கிட்டேயிருந்தா போதுமா..? நேர்ல பார்த்து பழக வேண்டாமா..?” என்றேன்.. “என்னமோ செய்யுங்க.. எனக்கு வேலையிருக்கு.. நீங்க அங்க போறீங்களா..?” என்றான். “என்னையும் மேடையேத்தி பாராட்டப் போறதா கதிர் சொல்றாரு. போகாம எப்படி இருக்குறது..?” என்றேன். “என்னது பாராட்டா..? எதுக்கு..?” என்றான் அண்ணன். “பிளாக்ல ரொம்ப நாளா எழுதிட்டிருக்கேன்ல.. அதுக்காக..” என்று தெரியாத்தனமாகச் சொல்லிவிட்டேன். “அப்போ நானெல்லாம் பதிவர் இல்லையாமா? நான் உங்களைவிட சீனியர் தெரியும்ல்ல..! அதென்ன கணக்குல கூப்பிட்டு பாராட்டுறாங்களாம்..?” என்றார் சஞ்சூ.. “தெரியலடா.. கூப்பிட்டாங்க போறேன்.. அவ்ளோதான்..” என்றேன். “சரி.. சரி.. போயிட்டு வாங்க..” என்று சொல்லிவிட்டு விடைபெற்றான். போனை வைத்துவிட்டு நானும் கொஞ்சம் யோசித்தேன்.. இவன் ஒருத்தனுக்கே இம்புட்டு கோபம் வருதே.. மத்தவங்களுக்கெல்லாம் வராதா என்று..!

சரி.. அது முடிஞ்சு போச்சு.. இப்போ ஒண்ணும் செய்ய முடியாது. ஆனாலும் அண்ணன் சஞ்சய் விடலை.. 2 நாளைக்கு முன்னாடி கூகிள் பிளஸ்ல, “இந்தப் பதிவர் கூட்டம் நடத்தி என்ன சாதிக்கப் போறீங்க..?”ன்னு கேட்டு தாளிச்சிட்டான்..! இதை கதிர் பார்த்தாரான்னு எனக்குத் தெரியலை.. பார்க்கலைன்னா இப்போ தெரிஞ்சுக்கட்டுமேன்றதுக்காக மட்டுமே இதைச் சொல்றேன். பத்த வைக்குறேன்னு யாரும் சொல்லிராதீங்கப்பா..! நான் ரொம்ப.. ரொம்ப.. ரொம்ப நல்லவனாக்கும்..!

சஞ்சய்கிட்ட போன் பேசி முடிச்சுட்டு அடுத்து அண்ணன் அப்துல்லாவுக்கு நானே போன் செய்தேன். “ஈரோட்டுக்கு எப்பண்ணே வர்றீங்க..?” என்றேன்.. “அட போண்ணே.. எங்க வர்றது.. வரலைண்ணே..” என்றார் வெறுப்பாக.. “என்னாச்சுண்ணே..? ஏன் வரலை..?” என்று நான் கேட்க.. “எல்லாம் இந்த ஆதியும், பரிசலும் செஞ்ச வேலைண்ணே.. யுடான்ஸ் பரிசளிப்பு விழாவை வைச்சிட்டாங்களே.. அதான் நகர முடியலை..” என்று அலுத்துக் கொண்டார். “அவங்க நடத்தினா நடத்தட்டும். நீங்க வரலாம்ல..” என்றேன். “எப்படிண்ணே வர்றது..? நான் செஞ்ச ஒரே தப்பு, தெரியாத்தனமா இந்தப் போட்டிக்கு நடுவரா இருந்திட்டேண்ணே.. நடுவரா இருந்தவரே பரிசளிப்பு விழாவுக்கு வராம இருக்கக் கூடாதுன்னு சொல்லி ஈரோட்டுக்கு 'தடா’ போட்டுட்டாய்ங்கண்ணே.. போட்டுட்டாய்ங்க..” என்றார்..! “உங்க நிகழ்ச்சியையாவது கொஞ்சம் தள்ளிப் போட்டிருக்கலாம்ல.. நாங்களும் கலந்துக்கிட்டிருப்போம்ல.. இப்போ சென்னை பதிவர்கள் எல்லோரும் ஈரோட்டுக்கு போயிட்டிருக்காங்க..” என்றேன் வருத்தத்துடன். “ஆமாண்ணே.. புரியுதுண்ணே.. நானும் கேபிளும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம்.. இந்த ஆதியும், பரிசலும் முடியவே முடியாதுன்னுட்டாய்ங்கண்ணே.. நான் என்னண்ணே செய்யறது..?” என்றார் வருத்தத்துடன். எனக்கும் தாங்க முடியலை.. “ஏன்.. என்ன பிரச்சினை.. ஒரு வாரமாச்சும் தள்ளிப் போட வேண்டியதுதானே.. எல்லாரும் உன்னை கேப்பாங்க அப்துல்..” என்றேன். “யார் கேட்டாலும், நான் சொன்ன இதை அப்படியே சொல்லிருண்ணே.. மைக்ல கூட சொல்லிரு. ஒண்ணும் தப்பில்லை. ஆதியும், பரிசலும் சேர்ந்து பிடிவாதமா பங்ஷனை வைச்சு, அப்துல்லாவை ஈரோட்டுக்கு வரவிடாம பண்ணிட்டாங்கன்னு சொல்லிரு...” என்றார் அப்துல். பாவம்.. ரொம்ப நொந்து போயிருக்காருன்னு நினைச்சு நானும் “சரி.. ஓகே.. போயிட்டு வரேன்..” என்று சொல்லி போனை வைத்தேன். 

அப்துல் அண்ணன் சொன்னதை ஈரோட்டில் நான் யாரிடம் சொன்னேன் என்று எனக்கு நியாபகமில்லை. மேடையிலும் இதைச் சொல்லவில்லை.  ஆகவே இங்கே பதிவு செய்துவிடலாம் என்று நினைத்தேன். அவ்ளோதான்.. நான் ரொம்ப, ரொம்ப நல்லவன் சாமிகளா..! இப்பவாவது நம்புங்க..!

இப்போ மேட்டருக்கு வருவோம். ஆதியும், பரிசலும் ஏன் இப்படி பிடிவாதம் பிடித்தார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி. தலைவர் கேபிளாரும் எங்களுடன் இணைந்து விருது பெற இருந்தார் என்பதை மட்டும் கொஞ்சம் உங்களது மனதில் நிலைநிறுத்தி யோசித்துப் பார்த்தீர்களேயானால், இந்தக் கேளவிக்கான விடை உங்களுக்குத் தானாகவே கிடைக்கும்..!

வந்தால் மட்டுமே விருது என்று ஈரோட்டுக் குழுமம் முடிவு செய்திருந்ததால், நிச்சயமாக கேபிளார் ஈரோடு சென்றே தீர வேண்டும் என்று அடம் பிடித்திருப்பார். அதுவும் அவருடைய ‘அன்னியோன்ய’ நண்பரான, இன்னொரு தலைவர் ஜாக்கியார் விருது பெறும்போது, தானும் அதே ஆண்டு, அதே மேடையில் விருதைப் பெற்றாக வேண்டும் என்று துடித்திருப்பார். ஆனால் ஆமை தோற்றத்தில் நடுவில் புகுந்து கெடுத்தது ஆதியும், பரிசலும்தான் என்றால் இந்தக் கொடுமையை அவர் எங்கே போய்ச் சொல்வார்..? 

ஆதி, பரிசல், வெண்பூ, நர்சிம், கார்க்கி, அப்துல் என்ற கூட்டணி ஒரே சமயத்தில்தான் பதிவுலகத்தில் நுழைந்தார்கள் என்று நினைக்கிறேன். இவர்களுக்கு பின்பு எழுத வந்த கேபிளார், காலப்போக்கில் ‘யூத்து’ என்கிற ஒரேயொரு உரிமையோடு இவர்களிடத்தில் ஐக்கியமாகி இப்போது ஒருவரை விரட்டியடித்துவிட்டு அறுவராகக் காட்சியளிக்கிறார்கள். இதில் மிச்சம் மீதியிருந்த சீனியர்களைவிட்டுவிட்டு ஒருத்தருக்கு மட்டும் பொன்னாடை போர்த்தினால், விட்டுவிடுவார்களா அவர்கள்..? நேராகச் சொல்ல முடியாமல் பிளான் செய்து காரியத்தை நகர்த்தி கச்சிதமாகத் தலைவர் கேபிளாரை சென்னையிலேயே முடக்கி விட்டார்கள் என்று இந்திய உளவுத் துறை சந்தேகிக்கிறது. 

ஒரு வேளை ஆதியும், பரிசலும் விரும்பியிருந்தாலும் தற்போது ஒபாமாவின் விருந்தினராகச் சென்றிருக்கும், அந்த குண்டு பையன் எதிர்த்திருக்கலாம் என்று கே.ஜி.பி.யின் அறிக்கையும் கூறுகிறது. “கொஞ்சூண்டு தொப்பை வைச்சிருக்கிற கேபிளுக்கு விருது..? அவரைவிட நிறைய தொப்பையோட இருக்குற எனக்கு விருதில்லையா..?” என்று அவர் ஆதியைப் போட்டு பிறாண்டியிருப்பார். பதிலுக்கு ஆதி, பரிசலை கடித்திருப்பார் என்று நினைக்கிறேன். இப்படியும் ஒரு சந்தேகம் ரா உளவுத்துறைக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது...!

இன்னும் கொஞ்சம் யூகித்தால், ஈரோட்டு சிங்கம் கதிரின் மீதி இருக்கும் கடுப்பினாலும் ஆதியும், பரிசலும் இதனை வேண்டுமென்றே செய்திருக்கலாம் என்று சி.ஐ.ஏ. சந்தேகிக்கிறது..! “திருப்பூரில் நாங்கள் நடத்துவதற்குள் நீ நடத்துறியா..? கேபிளார் இல்லாம எப்படி நிகழ்ச்சி நடத்துறன்னு பார்க்கலாம்..?” என்று மனதுக்குள் பந்தயம் கட்டி கவுத்திருப்பார்கள் என்று கொடுமுடி ஆற்றின் கரையில் இரண்டு டோபிக்கள் பேசிக் கொண்டார்களாம்..!

இன்னொரு பக்கம் பார்த்தால், தலைவர் ஜாக்கியாரின் இன்னொரு நெருங்கிய நண்பரான பரிசல், ஜாக்கியாருக்கு மறைமுகமாக உதவி செய்யும்பொருட்டு, கேபிளாரைத் தடுத்து வைத்திருக்கலாம் என்றும் டிஸ்கவரி புக் பேலஸ் கூட்டத்தில் யாரோ பேசிக் கொண்டார்கள். ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்கக் கூடாதாம்..! ஒரே மேடையில் இரண்டு தலைவர்கள் இருந்தால் அது நல்லாயிருக்காது என்று நினைத்து ஜாக்கியாரைத் தூக்கிப் பிடித்து, கேபிளாருக்கு ஆப்படித்திருக்கிறார்கள் என்றும் சிலர் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்லவில்லை..!

இந்த மணிஜி இருக்காரே மணிஜி.. இவர் பிள்ளையையும் கிள்ளிவிடுவார். தொட்டிலையும் ஆட்டிவிடுவார். இவர் சேட்டைகளை வெளிப்படையாகச் சொன்னால், கூட இருந்த பாவத்துக்காக என்னை வெள்ளாவி வைத்து வெளுத்து விடுவீர்கள். ஆனால் இவரிடமும் ஒரு நல்ல பழக்கம் உண்டு. அது என்னவெனில், இவரால் யாருக்காவது பிரச்சினை ஏற்பட்டால், எதிராளியின் டவுசர் கழறும்வரை பொறுத்திருந்து பார்த்துவிட்டு, கடைசி நேரத்தில் ‘வேறு பெயரில்’ வந்தாவது பிரச்சினையை சுபமாக முடித்துவைத்துவிடுவார். இந்த நல்லெண்ணம் காரணமாகவே இந்த அண்ணன், இன்றுவரையிலும் அவரைத் தாக்கியவர்களாலும், அவரால் தாக்குதலுக்குட்பட்டவர்களாலுமே பெரிதும் ரசிக்கப்படுகிறார். 

இவரும் தலைவர் கேபிளாரும்கூடத்தான் டாஸ்மாக்கின் மூலமாக மிக நெருங்கிய நண்பர்கள். எங்கே கேபிளாரும் கூடவே ஈரோட்டுக்கு வந்தால், டாஸ்மாக் சரக்குக்கு கூடுதல் செலவாகுமே என்று நினைத்து அண்ணன் மணிஜியே அடுத்த விளம்பரப் படத்தில் விஜய் ரசிகனாக நடிக்க வைப்பதாக தம்பி கார்க்கியிடம் சொல்லி, அவர் மூலமாக ஆதி, பரிசலை ஆஃப் செய்திருக்கலாம் என்று கேபிளாரே நினைப்பதாக சைதாப்பேட்டை கேபிள் டிவி வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள்..!

இதற்கும் மேலாக கேபிளாரின் ‘தற்போதைய’ பாதி உடலான அவரது நெருங்கிய நண்பர் கே.ஆர்.பி.செந்திலும் யுடான்ஸ் நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டு ஈரோட்டுக்கு வந்தது நிச்சயம் கேபிளாருக்கு வருத்தத்தைத் தந்திருக்கும் என்று நினைக்கிறேன். இதையும் யோசித்துப் பார்த்தால் கட்டிங் பிரெண்ட் செந்திலை, கேபிளாரின் அருகில் இருந்து பேக்அப் செய்து அனுப்பி வைக்க அந்த நால்வர் கூட்டணி செய்த சதியாகவும் இதனை கருத வாய்ப்புண்டு என்று ஜூனியர்விகடன் கழுகார் எச்சரிக்கிறார்..!

ஆக மொத்தத்தில் தலைவர் கேபிளாருக்கு குழி தோண்டியது, அவருடைய நெருங்கிய நண்பர்களே என்பது இங்கே வெட்ட வெளிச்சமாகியிருப்பதால், இனிமேலாவது ‘ஜாக்கிரதையாக’ இருக்கும்படி அவரை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..!

இன்னும் நிறைய எழுதலாம்தான்.. ஆனா பாருங்க.. சென்னை இணையும் கரங்கள் நிகழ்ச்சிக்காக சென்னை பதிவர்கள் கூட்டத்தில் நான் இனிமேல் அடிக்கடி கலந்து கொள்ள வேண்டி வரும் போலத் தெரிகிறது. போனால் பத்திரமாகத் திரும்பி வரணும் என்ற பயமும் எனக்கு இப்போது இருப்பதால், என் பாதுகாப்புக்காக இந்த மொக்கையை இத்தோடு முடித்துக் கொள்கிறேன்..!

அத்தோடு பரிசல்கார அண்ணன் வேறு என் மேல் ரொம்ப மதிப்பும், மரியாதையும் வைச்சு ட்வீட்டர்ல “பட் உங்க நேர்மை எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு” என்று ட்வீட்டியிருந்தார். எதற்கு என்று தெரியவில்லை. எனது வலைத்தளத்தில் பரிசலின் பின்னூட்டத்தை பூதக்கண்ணாடி வைத்துதான் தேட வேண்டியிருக்கும். அந்த அளவுக்கு அவருக்கு நான் மிகவும் பிடித்தமானவன் என்பதால், அண்ணன் பரிசலுக்கு இங்கேயே அனைவரின் முன்பாகவும் நன்றி கூறிக் கொள்கிறேன்.

இந்த ஒரு நாள் மேட்டருக்கு இவ்வளவு பெரிய பில்டப்பா என்று நினைக்க வேண்டாம். நாங்கள்லாம் அப்பவே இப்படித்தான்..! நேரம் இருந்தால், கீழே இருப்பவைகளையும் கொஞ்சம் படித்துப் பாருங்கள்..! 




அப்புறம் இன்னொரு விஷயம். ‘ஏதோ’வொரு விஷயத்துக்காக தலைவர்கள் கேபிளாரும், ஜாக்கியாரும் இப்படியொரு பின்னூட்டங்களை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.

இது தலைவர் கேபிளார் சொன்னது..!

என்ன தலைவரே.. பதிவெழுத ஏதும் கிடைக்கலைன்னா இது மாதிரி எதையாவதை ஆரம்பிச்சு வைச்சிர வேண்டியதா..? ஆஹா.. உடான்ஸ் விழா முன்னமே முடிவு செய்யப்பட்டது. ஈரோட்டு விழாவில் சிறப்பிக்க இருந்தவர்களில் நானுமொருவன். அதைவிட்டு நாங்கள் நிகழ்ச்சியை நடத்த வேண்டியிருந்ததால், கலந்து கொள்ள முடியவில்லை. சும்மாவாவது குரூப் அது இது என்று பேசுவதை விட்டுவிட்டு அரசியல் ஆக்கப் பார்க்காதீர்கள்..!

இது தலைவர் ஜாக்கியார் சொன்னது..!

ஜாக்கி குருப், கேபிள் குருப் என்று சில பேச்சுகள்  கவனத்துக்கு வருகின்றன..அப்படி எதுவும் இல்லை... சென்னை பதிவர்களை பொறுத்தவரை எவ்வளவு கருத்து மோதலாக சண்டை போட்டுக்கொண்டாலும் நேரில் அதனை வெளிப்படுத்திக்கொண்டதே இல்லை.. கேபிளுக்கு எனக்கும் கருத்து மோதல் உண்டு ஆனால் அவர் என் நண்பர்..அவரோடுதான் ஒஸ்திபடம் பார்த்தேன்..இரண்டு நாளைக்கு முன் கூட  இரவு  சென்னை லஷ்மன் சுருதி எதிரில் தாகசாந்தி முடித்து விட்டு புகாரியில் நான் கேபிள் மற்றும் நண்பர்களோடு சாப்பிட்டோம்..இங்கே குருப் என்று எதுவும் இல்லை... அதை வைத்துக்கொண்டு ஒன்னரை ரூபாய் வாட்டர் பாக்கெட் கூட வாங்க முடியாது.....பொழுது போகாதவர்கள் எதைவேண்டுமானாலும் பேசுவார்கள்.. அதுதானே அவர்கள் வேலை....

இதனை நன்கு படித்து, 
முடிந்தால் மனப்பாடம் செய்துகூட 
வைத்துக் கொள்ளுங்கள். 
மிக விரைவில் 
இவைகள் 
உங்களுக்கு 
நீங்கள் எழுதப் போகும் 
‘ஏதோ’வொரு பதிவின் 
ஆதாரத்துக்காக 
நிச்சயமாகத்
தேவைப்படும்..!!!

இதுவரையில் பொறுமையாக இந்தக் காவியத்தைப் படித்து முடித்த உங்கள் அனைவரின் பாதம் தொட்டு வணங்கி நன்றி கூறிக் கொள்கிறேன்.

இப்படிக்கு

தமிழ் வலையுலகத்தின் ஒரேயொரு யூத்து

உங்கள் உண்மைத்தமிழன்