Showing posts with label மதுரை. Show all posts
Showing posts with label மதுரை. Show all posts

மதுரையில் நடந்த சொதப்பலான வங்கி கொள்ளை திட்டம்

16-03-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கொள்ளையடிக்க திட்டம் போடுபவர்கள் என்னதான் பக்காவாக பிளான் செய்தாலும் ஏதாவது ஒரு இடத்தில் முட்டாள்தனம் செய்து கோட்டைவிட்டுவிடுவார்கள். இதை வைத்துதான் போலீஸும் அவர்களைப் பிடிக்கிறது. ஒரு சிறிய தவறுகூட இல்லாத திருட்டு எனில் போலீஸ் பாடு திண்டாட்டம்தான். இதில்தான் போலீஸார் போலி குற்றவாளிகளை கோர்ட்டில் நிறுத்தி கேஸை முடித்துவிடுவார்கள்.

எல்லாம் பக்காவாக செய்தும், ஒரேயொரு விஷயத்தில் முட்டாள்தனமாக இருந்ததால் தாமாக போலீஸிடம் மாட்டிய கொள்ளையர்கள் கதைதான் இது.



25 வருடங்களுக்கு முன்பு. மதுரையில்.. தற்போதைய உயர்நீதிமன்றக் கிளையின் அருகில் இருக்கும் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில்.. ஒரு நாள் இரவில் திடீர் கொள்ளை. 300 பவுன் நகைகளும், சில லட்சம் ரூபாய்களும் அபேஸ். மதுரையே பரபரத்துவிட்டது.

நகைகளை அடகு வைத்திருந்தவர்களெல்லாம் வங்கி முன்னாடி வந்து நின்று கண்ணீரும், கபலையுமாய் பேட்டியெல்லாம் கொடுத்தார்கள். எப்படியும் மீட்டுவிடுவோம். பஸ் மறியலெல்லாம் வேண்டாம்..என்று அவர்களது காலில் விழுகாத குறையாக கெஞ்சி, வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள் வங்கி அதிகாரிகள்.

வங்கியின் பின்புறக் கதவுகளை பெயர்த்தெடுத்து உள்ளே நுழைந்தவர்கள் மின் வயர்களையும் அறுத்துவிட்டதால் அபாய ஒலி ஒலிக்கவில்லை. வெல்டிங் கேஸை பயன்படுத்தி நகைப் பெட்டகத்தை உடைத்து நகைகளை எடுத்துவிட்டார்கள். கையோடு கொண்டு போயிருந்த கடப்பாரையை வைத்து பணப் பெட்டகங்களை உடைத்து லம்ப்பாக மொத்தப் பணத்தையும் அள்ளிக் கொண்டு போய்விட்டார்கள். எப்படியும் 8 அல்லது 9 பேராவது இதில் ஈடுபட்டிருப்பார்கள் என்று யூகித்தது போலீஸ்.

தேடுதல் வேட்டையை தொடங்கியது போலீஸ். மதுரையில் இருக்கும் நகைக் கடைகள் அனைத்திலும் புகுந்து சோதனை நடத்தியது போலீஸ். தடயம் எதுவும் சிக்கவில்லை. எடுத்த கைரேகைகள் எதுவும் பழைய குற்றவாளிகளுடன் ஒத்துப் போகவில்லை. நகைக் கடை பஜாரில் இருக்கும் அனைத்து கடைகளிலும் உளவுக்கு ஆட்களை நிறுத்தி வேவு பார்த்தது போலீஸ். யார் நகைகளை விற்க வந்தாலும் தங்களிடம் சொல்ல வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தது. ஒன்றும் பலனில்லை. கொள்ளையர்கள் புது ஆட்களாக இருக்கும் என்கிற முடிவுக்கு வந்தது காவல் துறை.

சில நாட்கள் கழித்து பாண்டியன் எக்ஸ்பிரஸில் மதுரையில் இருந்து சென்னைக்கு பயணப்படுகிறார்கள் கொள்ளையர் டீம். இவர்களுடன் ஒரு போலீஸ் ஏட்டுவும் அடக்கம். சென்னைல ஒரு சின்ன வேலை இருக்கு. நீங்ககூட வந்தீங்கன்னா ஈஸியா முடிச்சிரலாம்..என்று சொல்லியே அழைத்திருக்கிறார்கள். அழைத்தவர் பெரிய புள்ளிஎன்பதால் ஏட்டுவும் தயங்காமல் வந்திருக்கிறார்.

அவரிடத்தில் ஒரு பையை ஒப்படைத்து, “இதை உங்க பையோட சேர்த்தே கொண்டு வந்திருங்க..என்று சொல்லியிருக்கிறார்கள். அவரும் நம்ம பசங்களோடதுதானே என்றெண்ணி பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார். சென்னை வந்தவுடன் அந்த ஏட்டுவின் கையில் இருந்த பையை இவர்கள் எடுத்துக் கொண்டு தனியே சென்றிருக்கிறார்கள்.

எங்கோ சென்றுவிட்டு அன்று மதியம் லாட்ஜூக்கு திரும்பி வந்தவர்களிடம் ஏட்டு, “எதுக்கு என்னை கூட்டிட்டு வந்தீங்க.. என்ன வேலை..?” என்று கேட்க.. நம்மாளுதானே.. நம்ம பேச்சைக் கேட்பார் என்று நினைத்து, “யார்கிட்டேயும் சொல்லாதீங்கண்ணே. இதுதான் மேட்டர்.. துணைக்கு வந்ததுக்கு வைச்சுக்குங்க..என்று வங்கியில் கொள்ளையடித்த விஷயத்தைச் சொல்லி, 25,000 ரூபாயை கமிஷனாக அவரிடத்தில் திணித்திருக்கிறார்கள்.

ஏட்டு பரிதவித்துப் போனார். டிரெயின்ல போகும்போது திடீர்ன்னு போலீஸ் செக்கிங் வந்தாலும் வருவாங்க. நீங்க போலீஸ்ன்றதால யாரும் செக் பண்ண மாட்டாங்களேன்னுதான் கூட்டிட்டு வந்தோம்..என்று சல்ஜாப்பு சொல்லியிருக்கிறார்கள் கொள்ளையர்கள். பயம் ஏட்டுவின் முதுகைத் தண்டில் பாய்ந்திருந்தாலும், எந்த ரியாக்ஷனும் காட்டாமல் அன்றைய இரவில் அதே பாண்டியன் எக்ஸ்பிரஸில் மதுரை திரும்பியிருக்கிறார் ஏட்டு.

மறுநாள் காலை மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டெண்ட்டிம் நேரில் சென்று நடந்ததை சொல்லி அவர் காலில் விழுந்து, “ஐயா.. என்னை காப்பாத்துங்க... சத்தியமா எனக்கு வேற ஒண்ணும் தெரியாது எசமான்..என்று கதறியேவிட்டார் ஏட்டு. அவர் கொடுத்த தகவலை உடனேயே சென்னைக்கு பாஸ் செய்தது மதுரை போலீஸ்.

எழும்பூர் நல்லமணி லாட்ஜில் கட்டிங் போட்டுவிட்டு குப்புறப்படுத்து தூங்கிக் கொண்டிருந்தவர்களை, அப்படியே தூக்கி, பத்திரமாக வைத்திருந்து சென்னைக்கு ஓடி வந்த மதுரை போலீஸிடம் ஒப்படைத்தார்கள் சென்னை காவல்துறையினர்.

பாவம்.. பிடிபட்டவர்களில் பலரும் தொழிலுக்கு புதுமுகங்க்ளாம். கூட்டத் தலைவரின் அடிவருடிகள். அவர் சொன்னதற்காக இந்த கொள்ளை வேலையைச் செய்து தங்களது உடம்பை புண்ணாக்கிக் கொண்டார்கள்.

விசாரணை செய்த மதுரை போலீஸார் தங்களுக்குத் தெரிந்த அத்தனை டிஸைன், டிஸைனான சித்ரவதைகளையும் இவர்களிடத்தில் காட்டிவிட்டார்கள்.

அதில் ஒருவர் தீப்பெட்டி கணேசன் சைஸுக்கு இருந்தாலும் செம வாயாம். அவருடைய பத்து விரல்களின் நகங்களுமே புடுங்கி எறியப்பட்டிருந்தது. முன் வரிசை பற்கள் உடைக்கப்பட்டன. அனைவருக்குமே ஊசியை நகக்கண்ணில் ஏற்றி, ஏற்றி.. அவர்களால் விரல்களை சேர்க்கவே முடியாமல் இருந்தது. அடித்த அடியில் அனைவருமே கால்களை நொண்டிக் கொண்டுதான் கோர்ட்டுக்கு வந்தார்கள். கை முட்டியெல்லாம் பலூன் சைஸுக்கு வீங்கியிருந்தது.

கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டபோது கொள்ளையர்கள் அனைவருமே தங்களது கைகளிலும், விரல்களிலும் படிந்திருந்த ரத்தக் காயங்களை காட்டி, போலீஸ் கஸ்டடியில் தாங்கள் தாக்கப்பட்டதாகச் சொல்லி செய்தியாளர்களிடத்தில் கதறினார்கள். ஆனால் பாவமாச்சே என்று சொல்லத்தான் ஆட்கள் இல்லை. இப்படி வெளியில் சொன்னதற்காக போலீஸ் கஸ்டடியில் இன்னொரு முறை பழி தீர்த்துக் கொண்டார்கள்போலீஸார். பாவம்தான்..!

இவர்களை மதிச்சியம் போலீஸ் ஸ்டேஷன் மாடியில் வைத்து போலீஸ் புரட்டி எடுத்துக் கொண்டிருந்தபோது, தமிழ் தேசிய அமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அவர்களை பார்க்க வந்தார். சந்திக்க அனுமதியில்லை என்று மறுத்தது போலீஸ். அவர்களை என்னிடத்தில் காட்டவில்லையெனில், கோர்ட்டுக்கு போவேன்..என்று மிரட்டினார் நெடுமாறன். ஆனாலும் போலீஸ் அவரை அனுமதிக்கவில்லை.

அப்போது 1991-ம் ஆண்டு. சுப்ரமணியசாமியால் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டு அதிகாரிகளின் ராஜ்ஜியம் ஆரம்பித்திருந்த காலம். அவர்கள் வைத்ததுதானே சட்டம்..? அவர்களைப் பார்க்க முடியாததால் பத்திரிகையாளர்களிடத்தில் போலீஸாரை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டுப் போனார் நெடுமாறன்.

நெடுமாறன் வந்து பார்க்கும் அளவுக்கு அந்தத் திருடர்கள் முக்கியமானவர்களா என்று பார்த்தால், கூட்டத் தலைவர் மட்டும் மிக, மிக முக்கியமானவராக இருந்தார்.

மதுரையின் உண்மையான அஞ்சா நெஞ்சன், மதுரை மாநகரின் முதல் மேயரான மதுரை முத்துவின் மூத்த மகனான மு.நல்லதம்பிதான் இந்தக் கொள்ளைக் கூட்டத்தின் தலைவர். இவருக்காகத்தான் நெடுமாறன் அங்கே சென்றிருக்கிறார்.

தொடர்ந்து இந்தக் கேஸின் விசாரணைக்காக கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டபோது ஈழத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காகவே இந்தக் கொள்ளையை தாங்கள் செய்ததாக பேட்டியும் கொடுத்தார் நல்லதம்பி. ஈழ ஆதரவு கோஷங்களையும் எழுப்பினார்கள் கொள்ளையர்கள். கூடவே தனித் தமிழ்நாடு கோஷமும் சேர்ந்துதான்..!

காட்டிக் கொடுத்த போலீஸ் ஏட்டுவின் குடும்பத்தினருக்கு தனது அரசியல் செல்வாக்கால் நிறைய உதவிகளைச் செய்து கொடுத்திருக்கிறார் நல்லதம்பி. அந்த விசுவாசத்தால் ஏட்டுவும் நிறைய பதில் உதவிகளை நல்லதம்பிக்கு செய்து அவரது குடும்பத்தில் ஒருவர்போல இருந்திருக்கிறார். இதனாலேயே அவரை முழுமையாக நம்பி விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள். அவரோ யூனிபார்மை கழட்டிருவாங்களே என்ற பயத்தில் போட்டுக் கொடுத்துவிட்டார்..!

கடைசியில், ஏதோ 10 வருஷம் தண்டனை கொடுத்தார்கள். இப்போது எல்லாம் முடிந்து வெளியில் வந்திருப்பார்கள். ஆனால், இந்த 10 வருஷமும்போய் கூடுதலாக 5 வருடமும் கழித்துதான் அந்த வங்கிக் கொள்ளையில் காணாமல் போன நகைகள் சம்பந்தப்பட்டவர்களுக்குக் கிடைத்தது என்பது இன்னொரு சோகமான விஷயம்.!


சூரிய நகரம் - சினிமா விமர்சனம்

02-04-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எத்தனை முறை அடிபட்டாலும், எத்தனை பேரின் கண்ணீர்க் கதைகளைக் கேட்டாலும் புதிய தயாரிப்பாளர்கள் திருந்த மாட்டார்கள் போலிருக்கிறது.!

கையில் பணம் இருக்கிறது என்றாலும், தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு கதையையும், இயக்குனரையும் தேர்வு செய்வதுதான் அவர்கள் செய்ய வேண்டிய மிகப் பெரிய வேலை..! சிறந்த இயக்குநர்கள் எனப்படுபவர்களின் படங்களே தலைகுப்புற விழுகும் சூழலில், புதுமுக இயக்குநரிடம் லாஜிக் என்றால் கிலோ என்ன விலை என்னும் கேட்கும் அளவுக்கு ஒரு காமெடியான படத்தை எடுத்துக் கொடுத்தால் எப்படி..?


மதுரைதான் கதைக் களம். அதனால்தான் சூரிய நகரம் என்ற டைட்டிலாம்..! ஹீரோ ராகுல், ஹீரோயின் மீரா நந்தனின் வீட்டுக்கு நேர் எதிரில் இருக்கும் கஞ்சா கருப்புவின் வொர்க் ஷாப்பில் மெக்கானிக்காக வேலை செய்கிறார். மீரா நந்தனின் அப்பா இயக்குநர் ஆர்.வி.உதயகுமார். சாதிக்காகவே உயிர் வாழும் உத்தம மனிதர். தன் உயிரைவிட சாதியே பெரிது என்று நினைக்கும் சாதிச் சங்கத்தின் தலைவர் அவர்தானாம்..! எந்தச் சாதி என்பதை வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் தேவர் சாதியைத்தான் குறிப்பிடுகிறார் என்பதற்கு பல குறியீடுகளை இலவசமாக அள்ளி வீசியிருக்கிறார்கள்.

ராகுலின் குடும்பம் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. கஞ்சா கருப்பு அண்ட் கோவிடம் எப்படி வந்து மாட்டினார் என்பதும் தெரியாது. ஆனால் ஹீரோயினை பார்த்தவுடன்.. அதுவும் அவரது வளையல் அணிந்த ஒரு கையைப் பார்த்தவுடனேயே லவ்வு பீறிக்கிட்டு வருதாம்..!  பின்னாடியே துரத்துறாரு.. ஹீரோயினும் லவ் பண்ண ஆரம்பிக்க.. 2 டூயட்டுகளுக்கு வசதியா போச்சு..

ஆர்.வி.உதயகுமாரின் அறிமுகத்திற்கு இத்தனை பில்டப்புகள் எதுக்குன்னு தெரியலை..? அத்தோட அவரோட வீட்டு உறவுகளையெல்லாம் அறிமுகப்படுத்துறதெல்லாம் பக்கா சீரியல் டைப்.. உதயகுமாரின் கையாளின் தங்கையை வேறொரு சாதிக்கார பய இழுத்துக்கிட்டு ஓடிட்டினான்னு தெரிஞ்சவுடனேயே தேடத் துவங்குறாங்க பாருங்க.. காமெடி களை கட்டுது.. 

மதுரைல தேவர் சிலை பக்கத்துல தேடிக்கிட்டிருக்குறவங்க டக்குன்னு ஒரு போன் வந்தவுடனேயே பிளைட்ல ஏறி தேனி என்.ஆர்.டி. நகர்ல பாரதிராஜா வீட்டுத் தெருவுக்கே போயிட்டாங்க. இவங்க போய் லைட்டு அடிச்சவுடனேயே மிகச் சரியா லவ்வர்ஸ் அந்தத் தெருவுலதான் துண்டைக் காணோம்.. துணியைக் காணோம்ன்னு ஓடிக்கிட்டிருக்காங்களாம்.. ஆளைப் பிடிச்சவுடனேயே ஒரே வெட்டு.. இவனை என்ன செய்யணுமோ செய்யுன்னு கெத்தா சொல்லிட்டு வண்டியேறுறாரு சாதித் தலைவரு..? இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படியே சீனை காட்டி நம்ம தாலியை அறுக்கப் போறாங்கன்னு தெரியலை..?

இதுல உதயகுமாருக்கு ஒரு தங்கச்சி.. அவருக்கு ஒரு பொறம்போக்கு புள்ளை.. ஆத்தா வீட்ல பார்த்துக்கிட்டிருக்கும்போதே வேலைக்காரியை ரூமுக்குள்ள இழுத்துட்டுப் போய் ஜல்சா பண்ற டைப்பு. உறவு விட்டிரக் கூடாதுன்னு இந்த மருமகனுக்கு கட்டி வைக்கப் பாக்குறாங்க.. ஓடுவதுதான் சிறந்த வழின்னு லவ்வர்ஸ் ஓடத் துவங்க.. அப்பாவும் அவங்களை  மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல பார்த்துர்றார்.. ஹீரோவைத் தூக்கிப் போட்டு மிதிச்சு சட்னியாக்கிட்டு, பொண்ணை அழுங்காம, குலுங்காம தூக்கிட்டுப் போறாரு..! அப்புறம் அவங்க ஒண்ணு சேர்ந்தாங்களா இல்லையான்றதை முடிஞ்சா தியேட்டர்ல போய் பார்த்துக்குங்க..! 

ரீலுக்கு ரீல் சாதி.. சாதி.. சாதின்னு இவங்க பேசுற பேச்சைப் பார்த்தா சாதிக்காரப் பயலுவலே காதைப் பொத்திக்கிட்டு போயிருவாங்க. அந்த அளவுக்கு சாதிப் பித்து பிடிச்சுப் போயிருக்குன்னு இந்தப் படத்துல நிறுவியிருக்காரு இயக்குநரு..!

ஹீரோ ஆயுள் தண்டனை கைதியா ஜெயில்ல இருக்காரு.. விசாரணை கைதியா 15 நாள் சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிடுறாரு.. ஆனா ஹீரோவை தண்டனை கைதி உடைல உள்ள கொண்டு போறாங்க.. என்ன பெர்பெக்சன் பாருங்க..!?

ஜெயில்ல தற்கொலை முயற்சியில் ஈடுபடும் ஹீரோவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வர்றாங்க..! எங்கேன்றீங்க.. சரவணா மருத்துவமனைன்ற தனியார் ஆஸ்பத்திரிக்கு. இயக்குநர் இவ்வளவு நாளா வேறெங்கயோ வாழ்ந்திருக்காரு போலிருக்கு..  ஹீரோயினும் விஷத்தைக் குடிச்சிட்டு ச்சும்மா அதே ஆஸ்பத்திரிலதான் ஹாயா படுத்திருக்கு..! இயக்குநர், முன்ன பின்ன விஷம் குடிச்சவங்க கதியை ஆஸ்பத்திரில போய் பார்த்ததில்லை போலிருக்கு..! ஏதோ காய்ச்சல் வந்த மாதிரி படுத்திருக்கு பொண்ணு. கைல டிரிப்ஸ்கூட ஏறலை.. ஏத்தி முடிச்ச மாதிரி காட்டுறாங்களாம்..! அடுத்த சீன்ல தானா எந்திரிச்சு நடக்குது..! அங்க ஹீரோ இருக்குற ரூம் வாசல்ல நிக்குற 2 போலீஸ்காரங்க, “வாய்யா போய் ஒரு டீ அடிச்சிட்டு வருவோம்..”ன்னு டயலாக் பேசிட்டே நடந்து போறாங்க..!  இத்தனை சினிமாக்களை பார்த்தும் இப்பவும் எல்கேஜி ஸ்டூடண்ட் மாதிரியே படத்தை எடுத்துக் கொடுத்தா எப்படி..? 

சாதிக்காரங்க எல்லாரும் சேர்ந்து உங்கப்பா மாதிரியே நீங்களும் தலைவரா இருங்கன்னு சொல்லி வற்புறுத்த முடியாதுன்னு மறுக்குறாரு உதயகுமாரின் மகன்..! இவர்தான் சிறைக்கும், வீட்டுக்குமாக நடந்து அக்காவின் காதலை வாழ வைக்கிறார்..!

10 ஆண்டு கால சிறை வாழ்க்கையை, ஜஸ்ட் ஒரேயொரு சீனில் ஜம்ப் செய்து திரைக்கதையைக் கொண்டு போயிருக்கிறார் இயக்குநர். 10 ஆண்டுகால முடிவில் கைதிகளை விடுதலை செய்யும் திட்டத்தை துணைக்கு வைத்துக் கொண்டு ஹீரோவை விடுவித்து, ஹீரோயினோடு சேர்த்து வைக்க தம்பியும் எண்ணுகிறார்..  ஆனால் விதி வேறு மாதிரியாகி.. ஒரு ஊரே திரண்டு வந்து இவர்களை கொலை செய்தே தீர வேண்டும் என்று சொல்வதெல்லாம் ரொம்பவே டூ மச்.. இதற்காக அந்தத் தம்பி செய்யும் கருணைக் கொலையும் ரொம்ப ரொம்ப டூ மச்சு.. 

இதுதான் இப்படியென்றால் படத்தின் பாடல்களை கேட்டீர்களேயானால் என்ன செய்வீர்களோ தெரியாது..? அந்த அளவுக்கு என்ட்டர் டைப் வசனங்களை பாடல் வரிகளாக்கி இசை என்ற பெயரில் அலங்கோலப்படுத்தியிருக்கிறார்கள்..!

ஹீரோ ராகுலைவிடவும் ஹீரோயின் ஓகேதான்.. பாவாடை, தாவணில ரொம்ப நாள் கழிச்சு ஒரு அழகு பொண்ணை ஸ்கிரீன்ல பார்க்க முடிஞ்சது..! தம்பியை மொட்டை மாடிக்கு அடிக்கடி விரட்டி தான் வரப் போவதைச் சொல்லச் சொல்லும் காட்சியிலும், வொர்க் ஷாப்பில் பூக்கள் மத்தியில் காதல் வசனம் பேசும் காட்சியிலும் அழகும், நடிப்பும் மிளிர்கிறது..! ஏதோ மலையாளத்துக்காக நடிக்க வைத்திருந்தாலும், கேரளாவில் ஓடுமா என்பதும் சந்தேகமே..

ஜாதி மேட்டர் என்பதால் சென்சார் போர்டில் ரொம்பவே உன்னிப்பாக கவனித்திருப்பார்கள் போலும்.. பல இடங்களில் கத்திரி போட்டும், இன்னும் போடப்பட வேண்டியவை நிறையவே உள்ளன..! ஆபாசம், வன்முறையைவிட இது போன்ற இன உணர்வைத் தூண்டும் வசனங்களைத்தான் முற்றிலும் தடை செய்ய வேண்டும்..!

ஜாதின்னா என்ன என்று கேட்கும் அளவுக்கு நமது தலைமுறையை நகர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது உண்மையைத்தான் சொல்கிறோம் என்ற போர்வையில் “ஓஹோ.. நாமெல்லாம் அவுக.. அவுகெல்லாம் வேற ஆளா..?” என்ற சிந்தனையை படம் பார்க்கும் ரசிகர்களின் மனதிலும் விஷமாக விதைக்க முயற்சித்திருப்பதைத் தவிர வேறு எதையும் இந்தப் படம் செய்யவில்லை என்பது வருத்தத்திற்குரியது..!

தாயே... மன்னித்துவிடு..!


17-03-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அப்போது நான் மதுரை ஒத்தக்கடை அருகேயுள்ள அரசு டிராக்டர் ஒர்க்ஷாப்பில் அப்ரண்டிஸ் செய்து கொண்டிருந்தேன். குடியிருந்தது திண்டுக்கல்லில். தினமும் காலை 4.30 மணிக்கு எழுந்து 5.45 மணிக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸையோ அல்லது அதற்குப் பின்பு வரும் டிரெயினையோ பிடித்து மதுரை வந்து, அங்கிருந்து வேறொரு பஸ்ஸில் 8 மணிக்குள்ளாக ஒர்க்ஷாப்பிற்குள் போயாக வேண்டும்..!

எனது அம்மாவுக்கு படிப்பறிவே இல்லை. பள்ளிக்கூடமே போகவில்லை. கையெழுத்து கூட போடத் தெரியாது. உடல் வலுவும் இல்லை. ஒல்லிக்குச்சியாக இருக்கும். எப்போதும் காலை நீட்டி சுவரில் சாய்ந்துதான் உட்கார்ந்திருக்கும். வீட்டில் சமையல் வேலையெல்லாம் எனது அக்காள்கள்தான்..! எனக்காக எனது அக்கா செல்வமணி காலை 4 மணிக்கு எழுந்து சமையல் செய்து கொடுக்கும். சில நாட்களில் அக்காவால் முடியலைன்னா அதுவும் படுத்திரும். 

காலை 4.15 மணிக்கு முதல் அலாரம் ஒலித்த சில நொடிகளில் என் அம்மா கண் முழிச்சிரும்.. “தம்பி...” என்று குரல் கொடுக்கும். என்னிடமிருந்து ஏதாவது அசைவுகள் வரவில்லையெனில் “ராசா” என்று இன்னொரு குரல் கொடுக்கும்.. அதற்கும் நான் பதில் அசைவு கொடுக்கவில்லையெனில் எழுந்து உட்கார்ந்து நான் போர்த்தியிருக்கும் பெட்ஷீட்டை லேசாக உருவியபடியே “கண்ணு.. எந்திரி கண்ணு.. அலாரம் அடிச்சிருச்சு..” என்று சொல்லும்..!

அப்படி, இப்படி என்று திரும்பி, அலுத்துப் போய் எழுந்து உட்கார்ந்து அம்மாவை பார்த்தவுடன் ஒரு இனம் புரியாத கடுப்பு.. கோபம்.. எல்லாம் சேர்ந்து வரும்.. “அதான் எந்திரிச்சிட்டேன்ல.. அப்புறம் எதுக்கு நொய்.. நொய்யுன்ற..” என்று கடுப்போடு எழுந்து போவேன்.. அம்மா இதைக் கண்டு கொள்ளாமலேயே இன்னொரு பக்கம் படுத்திருக்கும் அக்காளை எழுப்பத் துவங்கும். “செல்வா.. தம்பி எந்திரிச்சிட்டான் பாரு..” என்று குரல் கொடுக்கும். அக்காள் உடனே எழுந்தால் நல்லது. இல்லையெனில், கோபத்துடன் வசவுகளை வாரி வழங்கும். இந்தக் கோபக் குரலைக் கேட்டே அக்காளுக்கும் கோபம் வரும்.. “ச்சே.. ஆத்தாளுக்கும், மகனுக்கும் வேலையில்லை. உயிரை வாங்குறீங்க..” என்று சொல்லிக் கொண்டே எழுந்திருக்கும்.. “ஆமா.. எனக்கு வேலையில்லை.. வேலைக்குப் பொற புள்ளைக்கு சமைச்சுக் கொடுக்க உனக்கு வலிக்குதாடி..?” என்று கேட்டுவிட்டு மீண்டும் படுத்துக் கொள்ளும் அம்மா..!

நான் குளித்து முடித்து ரெடியாகி வரும்வரையில் அக்காவிடமிருந்து சின்னச் சின்ன முனங்கல்கள் மட்டுமே வெளிவந்து கொண்டிருக்கும். இதற்கு எதிர்வினையாக அம்மாவும் எதையாவது படுத்த நிலையில் இருந்தே அள்ளி வீசிக் கொண்டிருக்கும். அதிகமாக “உனக்கு கொழுப்பு கூடிப் போச்சுடி.. பொம்பளை மாதிரியா இருக்குற..? அவனுக்கு சமைச்சுக் கொடுக்க உனக்கு வலிக்குதா.. நாம செஞ்சு கொடுக்கலைன்னா வேற எவ செஞ்சு கொடுப்பா..?” என்பதாகவே இருக்கும்..!

“இந்தாடா.. கிளம்பு.. போய்த் தொலை.. உயிரை எடுக்குறான்..” என்று அதிகப்பட்சம் முறைப்புடன் அக்கா, டிபன் பாக்ஸை கையில் கொடுத்துவிட்டு எப்போது வெளியேறுவேன்.. கதவைச் சாத்தலாம் என்கிற ஆசையோடு காத்திருக்கும்.. நான் பேக், டிபன் பாக்ஸ் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு கிளம்பும்வரையிலும் படுத்திருக்கும் அம்மா, வாசல் கதவு அருகே சென்றவுடன் எழுந்து உட்கார்ந்து, “தம்பி.. பாஸ் எடுத்துக்கிட்டியா..? எல்லாம் எடுத்திட்டியா..? காசு வைச்சிருக்கியா..?” என்றெல்லாம் அடுக்கடுக்காய் கேள்விகளை வீசும். ஒரு நாள்கூட ஒரு கேள்விக்கும் மரியாதையாய் பதில் சொல்லியதில்லை. “எல்லாம் எடுத்துக்கிட்டேன்.. ச்சும்மா தொண, தொணன்னு அனத்தாதம்மா.. படுத்துத் தொலை..” என்று வெறுப்பை கக்கிவிட்டுத்தான் கிளம்பியிருக்கிறேன்..!

இந்த வெறுப்பை என்றைக்கும் எனது அம்மா கண்டு கொண்டதில்லை.. அடுத்த நாள்.. அதற்கடுத்த நாள்.. அந்த 2 வருட அப்ரண்டிஸ் பீரியட் முடியும்வரையிலும் அதனுடைய கேள்விகளும், விசாரணைகளும், அக்கறையும் ஒரு நாள்கூட நின்றதில்லை..! அதற்குப் பின்பு கேன்சரில் அது படுத்த படுக்கையாகும்வரையிலும்கூட இரவு வேளையில் நான் எவ்வளவு நேரம் கழித்து வந்தாலும் “சாப்பிட்டியா கண்ணு..?” என்று வார்த்தைகளை வீசாமல் தூங்கியதில்லை....! 

எனக்கும் என் அண்ணனுக்கும் இடையில் 16 வருட இடைவெளி. இது தலைமுறை இடைவேளையாக பரவி.. ரோட்டில் பார்த்துக் கொண்டால்கூட பேசிக் கொள்ளாமல் செல்வதாக இருந்தது.. ஒரு நாள் டிரெயின் பாஸ் எடுக்க  காசில்லை என்றார் அண்ணன். எனக்கு கோபம். தொடர்ந்து வீட்டுச் சண்டையில் வீட்டில் எல்லாரையும் சபித்துவிட்டு, பட்டென்று சில துணிமணிகளை எடுத்துக் கொண்டு “இந்த எழவெடுத்த வீட்டுக்கு இனிமேல் வரவே மாட்டேன்..” என்று சொல்லிவிட்டு வெளியேறினேன்..

மதுரை ஒத்தக்கடையில் என்னுடன் வேலை பார்த்த வேல்முருகனின் வீட்டில் டேரா போட்டுவிட்டேன். காலையில் மெதுவாக எழுந்து, ஹோட்டலில் சுடச் சுட இட்லியையும், மெதுவடையையும் சாப்பிட்டுவிட்டு மதியத்திற்கும் கடையிலேயே சாப்பிட்டு இரண்டாவது நாளிலேயே நாக்கு சுவை கண்டுவிட்டது..! மாதம் அப்ரண்டீஸ் உதவித் தொகையாக 450 ரூபாய் கொடுத்தார்கள். அதை வைத்து சமாளித்துக் கொள்ளலாம் என்று மனதுக்குள் ஒரு நப்பாசை..!

2-வது நாள் மாலையே எனது அண்ணன் ஒர்க்ஷாப்பிற்கு போன் செய்தார். “டேய் அம்மா கூப்பிடுதுடா.. வந்திருடா..” என்றார். “அதுக்கு வேற வேலையில்லை.. எங்கிட்டாவது போகச் சொல்லுங்க..” என்று சொல்லிவிட்டு வைக்கிறேன்னு சொல்லாமலேயே போனை கட் செய்தேன்.. மாலை வேலைகளில் ஒத்தக்கடை சிவலிங்கம் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு, அடுத்தடுத்த நாட்களில் சினிப்பிரியா, மினிப்பிரியா என்று நண்பர்களுடன் அவர்களுடைய காசில் ரவுண்டு அடிக்க ஆரம்பித்தேன்..!

தினமும் மாலை 5 மணிக்கு எனது அண்ணன் போன் செய்வதும், நான் மறுப்பதுமாக நாட்கள் நகர்ந்தன. 10-வது நாள். மறுபடியும் போன்.. “டேய்.. அம்மா நேத்து காலைல இருந்து சாப்பிடலைடா.. உன்னை பார்த்தாத்தான் சாப்பிடுவேன்னு சொல்லுதுடா.. வந்து ஒரு வாட்டி முகத்தைக் காட்டிட்டுப் போடா. அது பாவம்டா...” என்றார் அண்ணன்.. இப்போதும் “உங்க வீட்டுக்கே வர விருப்பமில்லை. ஆளை விடுங்க” என்றேன்..!

மீண்டும், மீண்டும் அன்றைக்கே தொடர்ச்சியாய் போன்.. ஒர்க்ஷாப்பில் விசாரித்தார்கள். விபரம் தெரிந்து ஆள், ஆளுக்கு கையில் கிடைத்ததையெல்லாம் தூக்கிக் கொண்டு அடிக்க வந்தார்கள். “மரியாதையா இப்பவே கிளம்பலைன்னா நாளைக்கு வீட்டுக்குள்ள விடமாட்டோம்”னு நண்பர்களே சொல்லும் அளவுக்கு டிராக்டர் ஷெட் பஞ்சாயத்து சென்றுவிட்டது..

கடுப்போ கடுப்பு.. கோபமோ கோபம்..! கொஞ்சமும் நிம்மதியாய் இருக்க முடியலை.. நம்ம இஷ்டத்துக்கு விட மாட்டேன்றானுக என்று நெஞ்சு கொதிக்க.. நண்பர்களிடம் கை மாத்து வாங்கிக் கொண்டு திண்டுக்கல்லுக்கு பஸ் ஏறினேன்.. மதுரையில் சிடி சினிமா, தீபா, ரூபாவில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்றுதான் பிட்டு படங்களை மாற்றுவார்கள். அது வியாழக்கிழமை.. நாளைக்கு ஒரு நாள் கூட இருந்து படத்தையாவது பார்த்துட்டுப் போகலாம்னு முடியலையே என்ற கோபமும் சேர்ந்து கொண்டது..!

திண்டுக்கல்லுக்கு இரவு 7.30 மணிக்கு வந்து சேர்ந்து அப்பவும் வீட்டுக்குப் போக மனசில்லாமல் ஒய்.எம்.ஆர்.பட்டி தாஸ் கடையில் பையை வைத்துவிட்டு அப்படியே என்விஜிபி தியேட்டருக்கு 8 மணி ஷோவிற்குச் சென்றேன்.. அப்போது பிட்டு படங்கள் மட்டுமே அந்த ஷோவில் ஓட்டுவார்கள்.. ஓட்டினார்கள்.. கண் குளிர பார்த்துவிட்டு மிக சாவகாசமாக போய்த் தொலைவோம் என்ற நினைப்பிலேயே 11 மணிக்கு வீட்டுக் கதவைத் தட்டினேன்..!

உள்ளேயிருந்து என் அம்மாவின் குரல்தான்.. “செல்லா.. தம்பி வந்துட்டான்.. தம்பி வந்துட்டான்.. கதவைத் திறடி..” என்றது அவசரமான அந்தக் குரல்.. கதவைத் திறந்த அக்காள் தலையில் நொங்கு நொங்கென்று கொட்டினாள்.. “சனியனே.. சனியனே.. ஏன் எங்க உயிரை எடுக்குற..? உங்க ஆத்தாளுக்கு எவ பதில் சொல்றது..? வந்து தொலைய வேண்டியதுதானே..?” என்றது. படுக்கைகள் விரித்து தூங்கிப் போயிருந்தவர்களை எழுப்பியிருக்கிறேன் என்பது புரிந்த்து. இன்னொரு மூலையில் கட்டிலில் படுத்திருந்த அண்ணன் எழுந்து காலைத் தொங்கபோட்டபடியே என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அருகிலேயே தரையில் காலை நீட்டி அமர்ந்திருந்த எனது அம்மாவை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஆனால் அம்மாவின் குரல் வீடு முழுக்க திரும்பத் திரும்ப ஒலித்தது.. “சோறு எடுத்து வைடி.. புள்ள பசியோட வந்திருப்பான்..” என்றது.. அந்த ஒரு நொடிதான்.. எனக்குள் ஒரு மிருக வெறி.. அடுத்த 5 நிமிடங்களுக்கு எனது அம்மாவைப் பார்த்து எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு கத்தித் தீர்த்தேன்.. 

சனியன், பிசாசு, பேய் என்று என்னென்ன அடைமொழி இருக்கோ அத்தனையையும் சொல்லி.. “ஏன் என் உசிரை எடுக்குற..? பார்க்கணும்.. பார்க்கணும்னு ஏன் என்னைக் கொல்லுற.. மதுரைல நிம்மதியா இருந்தேன்.. அதான் வந்துட்டேன்ல.. என்ன செய்யணும்.. சொல்லு.. சொல்லு..?” என்று அவள் கையைப் பிடித்து இழுத்து அராஜகம் செய்தேன்.. எனது அண்ணன் எனது கையை கஷ்டப்பட்டு விலக்கி என்னைக் கீழே தள்ளிவிட்டார்..

எனது அம்மா தனது கண்ணாடியைக் கழட்டிவிட்டு கண்களை முந்தானையில் துடைத்துக் கொண்டு மீண்டும் அக்காவிடம் “தட்டு எடுத்து வைடி. சாப்பிட்ட்டும்...” என்று சொல்லிவிட்டு, “சாப்பிடுறா.. சாப்பிடு தம்பி.. ராசா சாப்பிடு..” என்றார். இப்போதும் என் தலையில் அடித்துக் கொண்டு, “சாப்பிடு.. சாப்பிடு.. சாப்பிடு.. ஏன் இப்படி உசிரை எடுக்குற..? சாப்பிடவா நான் பொறந்தேன்.. சனியனே உசிரை எடுக்காத.. காலைல சரவணான்னு எழுப்பின கொன்னே புடுவேன்..” என்று சொன்னபடியே விரித்திருந்த பாயில் மல்லாந்தேன்..!

எனக்கு இப்போதும் நியாபகம் இருக்கிறது. அன்றைய இரவில் நான் சாப்பிட்ட பின்பு எனது அம்மாவை வலுக்கட்டாயமாக எழுப்பி அண்ணன் ஒரு பக்கம், அக்காள் ஒரு பக்கமாக கெஞ்சு, கெஞ்சென்று கெஞ்சி சாப்பிட வைத்தார்கள்.. என்னைப் பார்த்தபடியே ஏக்கத்துடன் இருந்த அந்த சுருங்கிப் போன முகத் தோல்களை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு என் முதுகைக் காட்டிவிட்டு திரும்பிப் படுத்தேன்..!  இப்படித்தான் தொடர்ந்திருந்தது எனக்கும், எனது அம்மாவுக்குமான பாசப் போராட்டம். 

சாப்பிடு.. தூங்கு என்ற இரண்டு வார்த்தைகளைத் தவிர வேறு எதையும் என்னிடம் சொல்ல விரும்பாத ஒரு தாயை நான் அப்போதைக்கு விரும்பாதவன்.. ஆனால் இப்போது..?

இன்று நீண்ட நாட்கள் கழித்து எனது தாயோடு நெருங்கிப் பழகிய ஒரு புண்ணிய ஆத்மாவிடம் சிறிது நேரம் பேசினேன்..! எனது அம்மாவைப் பற்றிச் சொன்ன அவர், “பாவம்டா உங்கம்மா.. அவளுக்கு ஒண்ணுமே தெரியாது.. உலகமே தெரியாது.. பாசக்காரி.. நீங்கதான் அவளைப் புரிஞ்சுக்கலை..” என்றார்..

அந்த வார்த்தைகள் என் நெஞ்சில் முள்ளாய் குத்தியது.. வீடு வந்து சேரும்வரையில் நான் என் நினைவில் இல்லை.. இப்போதுதான் கொஞ்சம் கூடுதலாக நினைத்துப் பார்க்கிறேன்.. எத்தனை பாசம்..? எத்தனை அன்பு..? எத்தனை ஈர்ப்பு..? எத்தனை கனிவு..? அத்தனையையும் கலந்து கொடுத்த ஒரு தெய்வத்தையே நான் மதிக்காமல்தான் வளர்ந்திருக்கிறேன்.. வந்திருக்கிறேன்..! புரிந்து கொள்ளாமல்தான் இருந்திருக்கிறேன்..!

பெற்றவர்களின் ஆசி எல்லாவற்றுக்கும் வேண்டும் என்பார்கள். நான் எல்லாவிதத்திலும் அவர்களை உதாசீனப்படுத்தியவன்.. கஷ்டப்படுத்தியவன்.. மரணத் தருவாயில் இருந்த எனது தாய், தந்தையர் இருவரிடமும் இரு வேறு சந்தர்ப்பங்களில் நேருக்கு நேராகவே கேட்டிருக்கிறேன்.. “செத்துத் தொலையக் கூடாதா..?” என்று..! 

அவர்களுடைய இறுதிக் கட்டத்தில்தான் அவர்களுடன் நெருக்கமாகி, அவர்கள் இருக்கப் போவதே கொஞ்ச நாள்தான்.. பாவம் என்று பலரும் சொன்ன பின்புதான் தாய், தந்தையர் என்பதையும் தாண்டி ஒரு உயிர் என்ற பிற்போக்குத்தனமான பார்வையுடன் பார்த்திருந்த எனது கேடுகெட்டத்தனத்தை இன்றைக்கு நினைத்தாலும் வெட்கமாகத்தான் இருக்கிறது..!

அத்தனைக்கும் இப்போது படுகிறேன்..! நினைத்துப் பார்த்தால் இங்கேதான் ஜெயிக்கிறான் இறைவன்..! பட்டுத் திருந்து.. படாமல் போனால் கிடைக்காது புத்தி என்கிறான் இறைவன்..!  இருக்கும்போது அதன் அருமை தெரியவில்லை. இல்லாதபோதுதான் புரிகிறது..! இன்றைக்கு ஒரு வேளை.. ஒரு வாய் சாப்பிட்டியா என்று கேட்கவே எனக்கு நாதியில்லை..! “தூங்குனியா..? உடம்பு சரியில்லையா..?” என்று அன்பை கொட்டவும் ஆளில்லை..! செத்துப் போனால்கூட தூக்கிப் போடவும் ஆளில்லை.. எத்தனை, எத்தனை விஷத்தைக் வார்த்தைகளில் தோய்த்து வீசியிருக்கிறேன் எனது தாயை நோக்கி.. அத்தனைக்குமான பதிலடிகளை இப்போது வட்டியும் முதலுமாக வாங்கிக் கொண்டிருக்கிறேன்..! எத்தனையோ முறைகள்.. எப்படியெப்படியோ திட்டமிட்டும் எதுவும், எதிலும் ஜெயிக்க முடியவில்லை. தோற்றுக் கொண்டேயிருக்கிறேன் ஒவ்வொரு விஷயத்திலும்..! தாயின் ஆசிகளே இல்லையே.. கிடைத்திருக்காதே.. பின்பு எப்படி வரும் நல்ல வாழ்க்கை..?

ஆண்டவனின் விளையாட்டில் எல்லாவற்றிற்கும் காரணம் இருக்கத்தான் செய்கிறது.. அத்தனை பேருக்கும் அவன் அளந்துதான் கொடுத்திருக்கிறான்.. கொடுக்கிறான் என்பது இப்போது யோசித்துப் பார்த்தாலும் புரிகிறது.. நான் யார், யாரையோ இப்படி சொன்னேன்.. அப்போது நான் சொன்னது, இப்போது எனக்கே திருப்பியடிக்கிறது..! 

வேறு வழியில்லை.. மனதை சாந்தப்படுத்த யாரிடமாவது பேச வேண்டும்போல் உள்ளது. நான் பேசுவதையும், மன்றாடுவதையும், மன்னிப்பு கேட்பதையும் தெரிந்து கொள்ளவும் ஆள் இல்லையே.. அதனால்தான் இந்த எழுத்து..! 

தாயே.. கடைசி முறையாகக் கேட்கிறேன்.. மன்னித்து விடு..!



ஒரு ஆங்கில வார்த்தையினால் திசை மாறிய எனது வாழ்க்கை..!

29-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தக் கூத்து நடந்து முடிந்து சில ஆண்டுகளாகிவிட்டது.. ஆனாலும் என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நிகழ்வு இது என்பதால் என் மனதில் இருந்து மட்டும் அகற்ற முடியவில்லை..!

'வருவாய் ஆய்வாளர்' என்னும் 'ரெவின்யூ இன்ஸ்பெக்டர்' பதவிக்கான தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சில ஆண்டுகளுக்கு முன்பாக நடத்தியது. அடியேன், அப்போது வெறும் ஊர் சுற்றியாக மதுரையில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தேன்..!

இந்த அறிவிப்பு வந்ததில் இருந்து எனது அக்காமார்களும், அண்ணனும் “இதுக்கு அப்ளிகேஷனை போட்டுட்டு ஒழுங்கு மருவாதையா படிச்சு பாஸ் பண்ணி, வேலைக்குப் போற வழியை பாரு..” என்று மிரட்டத் துவங்கினார்கள். அதெப்படி ஒரே நாளில் கொண்ட கொள்கையை மாற்றிக் கொள்ள முடியுமா..?

பின்பு என்னையே நம்பியிருக்கும் ‘தீபா’. ‘ரூபா’, ‘சிடி சினிமா’, ‘சக்தி’, ‘சிவம்’, ‘மது’, ‘மதி’ தியேட்டர்களின் கதி என்னாவது..? ரெகுலர் பாஸ் வாங்கி வைத்திருக்கும் என்னைப் போன்றவர்களால்தான் அவர்களின் பொழைப்பே ஓடிக் கொண்டிருந்தது.. அடுத்தவர் வயிற்றில் அடிக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

இன்னும் மசியாமல் இருக்கானே என்ற ஆதங்கத்தில் என்னோட ரெண்டாவது அக்காவான செல்வமணி என்னும் செல்வாக்கா, ஒரு ஸ்கட் ஏவுகணையை வீசுச்சு. “நான் பிளஸ் டூதான் படிச்சேன். அப்புறம் எக்ஸாம் எழுதி இந்த ஆபீஸ் வேலையை வாங்கலையா..? எனக்கு மட்டும்தான் அறிவிருக்கா..? நீயும்தான என் கூட பொறந்திருக்க..? என் அறிவுல பாதியாவது உனக்கு இருக்கும்ல.. படிச்சுத் தொலையேண்டா. ஏன் உன்னால முடியாதா..?” என்று என் தன்மானத்தை சீண்டிவிடுவதைப் போல தீக்குச்சியை உரசிப் போட்டுச்சு..!

கொஞ்சம் அசைந்து கொடுத்தேன்.. அப்ளிகேஷனை வாங்கி பில்லப் செய்து ஒரு நல்ல நாளில் போஸ்ட் செய்துவிட்டு அப்படியே புதுமண்டபம் போய் அண்ணன் கொடுத்த காசில் டி.என்.பி.எஸ்.சி. மாடல் கொஸ்டீன் பேப்பர் புஸ்தகத்தையும் வாங்கி வந்தாச்சு..!

இங்கே ஒரு சிக்கல்.. தேர்வில் இரண்டு பிரிவுகள் உண்டு. ஒன்று பொது அறிவுத் திறனை சோதிக்கும் முதல் கட்டத் தேர்வு. இதில் வெற்றி பெற்ற பின்பு, அடுத்தக் கட்டத் தேர்வு. அதுவொரு சோகத்தைத் தாங்கியது. வேப்பங்காயைவிட எனக்குக் கசக்கும் ஆங்கில அறிவை பரிசோதிக்கும் தேர்வு. முடியலை.. யோசித்துப் பார்த்தேன்..!

எப்படியும் முதல் தேர்வில் ஜெயித்தால்தானே அடுத்ததுக்குக் கூப்பிடுவாய்ங்க.. நமக்குத்தான் நம்பிக்கையில்லையே.. பிறகென்ன? என்ற நினைப்பில் ஏதோ ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே புத்தகத்தையும், தினசரி பேப்பர்களையும் மேய்ந்துவிட்டு, புல் கட்டு கட்ட நம்ம தியேட்டர்களுக்கு நேரில் சென்று ஆஜரையும் கொடுத்துவிட்டுத்தான் வந்து கொண்டிருந்தேன்.

முதல் கட்டத் தேர்வும் வந்தது.. “சுதந்திர இந்தியாவின் முதல் வைஸ்ராய் யார்..?  கல்லணையைக் கட்டியது யார்..? சூரியனைச் சுற்றி பூமி சுழல்கிறது - இது சரி.. அல்லது தவறு..” - இந்த மாதிரி கேணத்தனமான கேள்வியா கேட்டுத் தொலைச்சிருந்தாங்க..! ஏதோ எனக்குத் தெரிஞ்ச அளவுக்கு கிறுக்கி வைச்சிட்டு வந்தேன்..!

தேர்வில் பாஸ்..! நம்ப முடியலை.. குவார்ட்டர்ஸ்ல 'பி' பிளாக்ல ஒரே 'சரவணன்' நான்தான்றதால, நம்பித் தொலைய வேண்டியதா போச்சு. அடுத்த ரோதனை ஆரம்பிச்சுச்சு.. இரண்டாம் கட்டத் தேர்வுல தமிழோடு, கொஞ்சம் இங்கிலீபீஷுலேயும் எழுதணும்..

நானும் இங்கிலீஷும் எம்.ஜி.ஆர். நம்பியார் மாதிரி.. ஒண்ணாங்கிளாஸ்ல இருந்து பத்தாம் கிளாஸ்வரைக்கும் பரம எதிரி..! அதுலேயும் 9, 10-ம் வகுப்புகளில் பாலன் கே.நாயரை பார்த்து மலையாள ஹீரோயின்கள் பயப்படுவாங்களே.. அது மாதிரி எனக்கு அதைக் கண்டாலே அப்படியொரு டர்ரு..! இந்த லட்சணத்துல எப்படிங்கய்யா இந்தக் கண்டத்தை தாண்டுறதுன்னு ஒரே யோசனை..!

செல்வாக்கா தினம் ராத்திரி ஒரு மணி நேரம் எனக்கோசரம் உக்காந்து மண்டைல கொட்டி, கொட்டி "VERB"ன்னா என்ன? "NOUN"ன்னுன்னா என்ன..? "SENTENCE"ன்னா என்னன்னு விலாவாரியா எடுத்து எடுத்துச் சொல்லுச்சு.. அப்பவும் நம்ம மரமண்டைல ஏறலை..

சரி.. தெரியறவரைக்கும் ஒப்பேத்திருவோம்னுட்டு தைரியமா எக்ஸாமுக்கு போனேன்.. கோடிட்ட இடத்தை நிரப்புன்ற மாதிரி அஞ்சு மார்க் கொஸ்டீன்ஸ் இருந்துச்சு.. அப்புறம் எதிர்ச்சொல் சொல்லுன்ற மாதிரி 5 கொஸ்டீன்ஸ்.. இதையும் கொஞ்சம் யோசிச்சு தாண்டியாச்சு.. அப்புறம் ஒரே வாக்கியத்தில் வார்த்தைகளை மாத்திப் போட்டு வைச்சிருந்தாங்க. அதுக்கான சரியான வாக்கியத்தை செலக்ட் செய்யச் சொல்லியிருந்தாங்க. கைல எச்சிலை வைச்சு, எப்படியோ கண்டுபிடிச்சுப் போட்டுட்டேன்..

கடைசியா ஒரு மொய் வைச்சிருந்தானுங்கப்பா..! இது ஒண்ணுதான் என் வாழ்க்கைய இப்போவரைக்கும் இப்படி புரட்டிப் போட்டதுக்கு ஒரே காரணம்..!

பத்து வரில ஒரு கதையைக் கொடுத்துப்புட்டு, அந்தக் கதை தொடர்பா சில கேள்விகளைக் கேட்டு பதில் எழுதச் சொல்லியிருந்தாங்க. இதுக்கு 10 மார்க்கு..!

நானும் படிச்சேன்.. படிச்சேன்.. படிச்சேன்.. திருப்பித் திருப்பிப் படிச்சேன்.. CLOTHS, WASHING, RIVER, MAN எல்லாம் புரிஞ்சுச்சு.. ஒரேயொரு வார்த்தைக்கு மட்டும்தான் அர்த்தம் புரியலை..! இதையெல்லாம் கூட்டிக் கழிச்சு பார்த்து ஏதாவது தோணுதான்னுகூட யோசிச்சுப் பார்த்தேன்.. ம்ஹூம்.. ஒண்ணும் தோணலை..

சரி விடு கழுதை...! வராததுக்காக எதுக்கு கொஞ்சூண்டு இருக்குற நம்ம ஹைப்போதலாமஸை வேஸ்ட்டாக்கணும்னு சொல்லிட்டு அதுல கேட்டிருந்த எல்லா கேள்வியையும் விட்டுட்டேன்..! ஆனாலும் அந்த ஒரு வார்த்தைக்கு அர்த்தம் தெரியாம ரொம்பவே மனசு கஷ்டமா இருந்துச்சு..!

தேர்வு மதியானம் முடிஞ்சு, அப்படியே நேரா அடுத்த பஸ்ஸை புடிச்சு மது தியேட்டருக்குப் போய் மனசை சாந்தப்படுத்திட்டு திரும்பவும் வீட்டுக்குப் போன பின்னாடியும் அந்த ஒத்தை வார்த்தை திரும்பத் திரும்ப மனசுக்குள்ள வந்துகிட்டே இருந்துச்சு.. வீட்ல செல்வாக்கா கேட்டதுக்கு “எல்லாம் நல்லாத்தான் எழுதியிருக்கேன். என்னை செலக்ட் செய்யாம போயிருவானுகளா?”ன்னு ச்சும்மா ரூட் விட்டுட்டு எஸ்கேப்பானேன்..! வீட்ல அக்கா, அண்ணன் எல்லாரும் இந்த முடிவுக்காக ரொம்ப ஆர்வமா காத்திருக்க ஆரம்பிச்சாங்க. ஆனாலும் செல்வாக்கா ரொம்ப, ரொம்ப அப்பாவி.. அப்படியே என்னை நம்பிட்டுருந்துச்சு..!

ஒரு நல்ல நாள் அதுவுமா, ரிசல்ட் வீட்டுக்கு வந்துச்சு.. 4 மதிப்பெண்கள் குறைவாக எடுத்திருப்பதால் தேர்வில் தோல்வி என்று..! இரண்டு தேர்வுகளிலும் சேர்த்து ஆவரேஜா 60 சதவிகிதத்துக்கு மேல எடுத்திருந்தால் பாஸ். நான் எடுத்திருந்தது 56.

அண்ணனுக்கும், செல்வாக்காவுக்கும் தாங்க முடியாத வருத்தம், சனியனை இத்தோட ஒழிச்சுக் கட்டிரலாம்னு பார்த்தா மறுபடியும் டவுசரை கிழிச்சுட்டு நடுவீட்ல உக்காந்துட்டானேன்னு..! இருக்காதா பின்ன..? சம்பாதிச்சுக் கொட்டுறது அவங்க..! அந்தக் காசுல ஊரைச் சுத்துறது நானுல்ல..!

அக்காவோட வருத்தம் தாங்க முடியாம, அந்த கொஸ்டீன் பேப்பரை அப்பத்தான் தேடியெடுத்து “அந்த” வார்த்தையைக் காட்டி விஷயத்தைச் சொல்லி, “இதுக்கு என்னக்கா அர்ததம்”ண்ணே..!?

அப்படியே ஏற இறங்க பார்த்துட்டு அப்புறம் திட்டுச்சு பாருங்க.. ஒரு திட்டு.. அவுங்க வீட்டுக்காரரைகூட அதுக்கப்புறம் இப்படி திட்டலை செல்வாக்கா... அப்படியொரு வசவு.. "நீயெல்லாம் ஒரு புள்ளையாடா..? நீ எப்படிடா டென்த் படிச்சு முடிச்ச..? அப்புறம் ஐ.டி.ஐ. வேற.. அதுல அப்ரண்டீஸும் படிச்சு முடிச்சுக் கிழிச்சிட்ட..? கழுதை.. கழுதை.. இது என்னன்னுகூட தெரியாம இப்படி தடிமாடு மாதிரி வளர்ந்திருக்க.. சனியன். சனியன்....”னு வாய்க்கு வந்ததெல்லாம் திட்டி ஓய்ஞ்ச பின்னாடி, நானே ஒரு சொம்பு நிறைய தண்ணியை கொடுத்து அக்காவை ஆசுவாசப்படுத்திட்டு மறுபடியும், “அந்த வார்த்தைக்கு என்னக்கா அர்த்தம்...?”னு அப்பாவியா கேட்டேன்..

நான் கிண்டல் செய்யலை. நிசமாவே தெரியாமத்தான் கேக்குறேன்னு புரிஞ்சுக்கிட்ட செல்வாக்கா, கடைசீல ரொம்ப வருத்தமா சொல்லுச்சு “DONKEY-ன்னா 'கழுதை'டா..”ன்னு..!

அடங்கொக்காமக்கா.. கழுதையைத்தான் இப்படி DONKEY-ன்னு கூப்பிடுறானுவகளா..? 25 வயசுவரைக்கும் இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியாம ஒரு பய வளர்ந்திருக்கேன்னா, என்னத்தடா சொல்லிக் கொடுத்தீங்கன்னு, என் ஸ்கூலை நான் திட்டாத திட்டுல்ல..!

அது மட்டும் “கழுதை”ன்னு தெரிஞ்சிருந்தா அதுல இருந்த 5 கேள்விக்கும் சரியா பதில் எழுதியிருப்பனே..? 10 மார்க் கிடைச்சு பாஸ் பண்ணியிருந்தா ஐயா இந்நேரம், ரெவின்யூ இன்ஸ்பெக்டரா ஜம்முன்னு கவர்ன்மெண்ட்டு வேலை பார்த்திட்டு நிம்மதியா சீட்டைத் தேய்ச்சிட்டிருந்திருப்பேன்.. முக்கியமா எங்கிட்டாவது, யாருக்காவது கழுத்தை நீட்டி.. புள்ளைய பெத்துட்டு நிம்மதியா குடும்பஸ்தனாகியிருப்பேன்..!

விட்டானா முருகன்..!? அயோக்கிய ராஸ்கல்..! தமிழ்.. தமிழ்ன்னு அவனை மட்டுமே படிக்க வைச்சு கடைசியா இப்போவரைக்கும் பிச்சையெடுக்க வைச்சிட்டானே என்ன..!?

சரி.. அவன் கெடக்கட்டும்.. வருஷக்கணக்கா என் வீட்ல என்னோட அப்பா, அம்மா, அக்காமார்கள், அண்ணன்னு அத்தனை பேரும் என்னை ரவுண்டு கட்டி, முறை வைச்சுத் திட்டியிருக்காங்க.. இதே மாதிரி “எருமை மாடு, கழுதை, சனியன், பீடை, எங்கயோ கழுதை மாதிரி ஊர் சுத்திட்டு வருது பாரு..” என்றெல்லாம் திட்டித் தீர்த்திருக்கிறார்கள்..!


அப்படித் திட்டும்போதாவது “தோ பாரு.. DONKEY மாதிரி சுத்திட்டு வந்திருக்கான்.. இங்க பாரு.. MONKEY மாதிரி அலைஞ்சிட்டு வந்திருக்கான்.. அங்க பாரு.. DOG மாதிரி ஓடிட்டு வந்திருக்கான்.. இங்க பாரு… PIG மாதிரி திரியறான்”னு கொஞ்சம் இங்கிலீஷு வார்த்தையையெல்லாம் போட்டுத் திட்டியிருந்தா, ஒருவேளை இதெல்லாம் எனக்குத் தெரிஞ்சு நான் பாஸ் பண்ணித் தொலைஞ்சிருப்பனே..?

இந்த பிளாக்கு, சினிமா, பிச்சையெடுக்க வைத்திருக்கும் சென்னைன்னு எதையும் தொடாம, எதையும் எதிர்பார்க்காத ஒரு சாதாரண மிடில் கிளாஸ் மனுஷனாவே இருந்து, ஏன் நிம்மதியா செத்து கூட போயிருக்கலாம்.. ம்.. என்னத்த சொல்றது..? எல்லாம் அந்த ஒத்த வார்த்தையால முடிஞ்சு போச்சு..!?

கண்ணுகளா.. இனிமேலாச்சும் நீங்க வீட்ல பிள்ளைகளை திட்டும்போது, கொஞ்சம் இங்கிலீஷ்லேயும் சேர்த்து வைச்சுத் திட்டுங்கப்பா.. அப்படியாச்சும் அவுங்க நாலு இங்கிலீஷை கத்துக்கிடட்டும்..!

ரஜினி உண்மையிலேயே 32 வருஷம் கழிச்சா மதுரைக்கு வந்தாரு..?

18-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பத்திரிகைகளுக்கு அல்வா கொடுப்பதிலும், தீனியைப் போடுவதிலும் நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினியை மிஞ்ச முடியாது..!

பழகின தோஷத்திற்காக, நட்புக்காக அப்போதைக்கு தோன்றுவதையெல்லாம் செய்துவிட்டு பின்பு ஆற, அமர யோசித்து தப்பாயிருச்சே என்ற பின் அமைதியாவது அண்ணனின் பொழுது போக்கு..!

அரசியலாகட்டும்.. ஆன்மீகமாகட்டும் அண்ணனின் பாணியே தனிதான்..!

"150 வருஷமா என்னோட குருஜி இமயமலைல தவத்துல இருக்காரு"ன்னு ஒரு தடவை சொல்லி ஆன்மீகத்தையே திடீர்ன்னு காமெடியாக்கி எங்களை மாதிரியானவங்களை கவலைக்குள்ளாக்கினார்.

'சந்திரமுகி' படத்தில் நாசர் ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு முன், குமுதம் பத்திரிகையில் நாசர் இதைக் கிண்டல் செய்து பேட்டியளித்திருந்தார். அதைப் படித்துவிட்டு நாசருக்குக் கொடுக்கவிருந்த கேரக்டரில் இருந்து அவரைக் கழட்டிவிட்டு விஜயகுமாரை புக் செய்யவும் சிவாஜி பிலிம்ஸ் முனைந்தது. பின்பு ரஜினியே விஷயத்தைக் கேள்விப்பட்டு நாசரே இருக்கட்டும் என்று சொல்லி அழைத்தது வேறு விஷயம்..! அதற்குப் பின் இன்றுவரையில் அந்த குருஜி பற்றிய பேச்சே இல்லை..

பழம்பெரும் இயக்குநர் திரு. ஸ்ரீதரின் மறைவுக்குப் பின்பு அவருக்காக பிலிம் சேம்பரில் நடத்தப்பட்ட இரங்கல் கூட்டத்தில் தான் ஸ்ரீதரை அவருடைய வீட்டில் சென்று சந்தித்ததாகவும், அவருக்குப் படம் செய்து தருகிறேன் என்று சொன்னதாகவும் பேச்சுவாக்கில் சொல்லிவிட்டார். கூடவே ஸ்ரீதரின் மரணத்தின்போது மாலை அணிவித்து மரியாதை செய்ததாகவும் சொல்ல.. மேடையில் அமர்ந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீதரின் குடும்பத்தினரே ஷாக்காகிவிட்டார்கள்.

காரணம், ரஜினி ஸ்ரீதர் இறந்த பின்பு மாலை போட வரவில்லை. ஹைதராபாத்தில் இருந்ததாகச் சொன்னார்கள். பின்பு ஏன் இப்படி..? “ஏதோ வாய்வரைக்கும் வந்திருக்கும்.. சொல்லிட்டாரு. விட்ருங்க ஸார். நம்ம ரஜினி ஸார்தானே..! அவரைப் பத்தித் தெரியாதா உங்களுக்கு..?” என்று பிற்பாடு அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் போன் வந்தது தனிக்கதை.

இதோ இப்போதும் இன்றைக்கு கட்டின பாவத்துக்கு கூடப் போய் அலைஞ்ச மாதிரி கலைஞரின் பேரன் திருமணத்திற்கு மதுரைக்குப் போனவர் சந்தடிசாக்கில் “32 வருஷம் கழிச்சு இன்னிக்குத்தான் மதுரைக்கு வந்திருக்கேன்..” என்று சொல்லியிருக்கிறார்.


ஏன்தான் இப்படி பேசுறாரோ என்றுதான் எனக்கும் தெரியவில்லை. ஒரு நிகழ்ச்சியைப் பெருமைப்படுத்தி பேசணும்னா அதுக்கு எத்தனையோ வழிகள் இருக்கு. பேச்சுக்கள் இருக்கு.. விஷயங்கள் இருக்கு. அதான், “அழகிரியும், ஸ்டாலினும் ஒரு சொத்து. தி.மு.க. கட்சி ஒரு சொத்து.. அந்தச் சொத்து இந்தச் சொத்தைப் பாத்துக்கணும்; இந்தச் சொத்து அந்தச் சொத்தைப் பார்த்துக்கணும்..”னு சொல்லியாச்சுல்ல. விட்ர வேண்டியதுதான..? இதை வைச்சே இன்னும் ஒரு மாசத்துக்கு எல்லா பத்திரிகையும் மஞ்சள் குளிக்கலாமே..? போதாதா..? கூட இப்படி வேற சொல்லி தாத்தாவுக்கு புகழைச் சேர்க்கணுமா..?


ரஜினி நிசமாவே 32 வருஷம் கழிச்சுத்தான் மதுரைக்கு வந்தாரா..? இல்லை.. இருக்காது.. ஏதோ 'தாட் ஸ்லிப்' ஆயிருக்கும்னு நினைக்கிறேன்..!

ரஜினியை நான் முதலில் நேரில் பார்த்தது 1990-களில்.. 'தளபதி' படம் ரிலீஸான பின்பு என்று நினைக்கிறேன். மதுரை பாண்டியன் ஹோட்டல் வாசலில்.. உடன் ஜி.வெங்கடேஸ்வரனும் வந்திருந்தார். வந்த நோக்கம் திருச்சி அடைக்கலராஜின் பெப்ஸி கம்பெனியின் துவக்க விழா.

மதுரை நகரமே விழாக் கோலம் பூண்டிருந்தது.. ஏர்போர்ட்டில் இருந்து விழா நடக்கும் மேலமாசிவீதி, வடக்குமாசிவீதி சந்திப்பு வரையிலும் கலக்கல் போஸ்டர்களும், தட்டிகளுமாக களைக் கட்டியிருந்தது. ஆனால் ரஜினியோ திருச்சி வரையிலும் விமானத்தில் வந்து, பின்பு அங்கிருந்து காரிலேயே மதுரை வந்து பாண்டியன் ஹோட்டலுக்குள் ஐக்கியமாகிவிட்டார்.

ஹோட்டலில் இருந்து கிளம்பும்போது அவரை ஏற்றிச் செல்ல ஐந்து காண்டஸா கிளாஸிக் கார்களை வாசலில் நிறுத்தி வைத்து ரசிகர்களை ஏமாற்றி, எதில் அவர் செல்கிறார் என்பதே தெரியாத அளவுக்கு அழைத்துச் சென்றார்கள்.

அப்போது வீட்டில் வெட்டி ஆபீஸராக தண்டச்சோறு தின்று கொண்டிருந்த நானும் தலைவரைப் பார்க்க வேண்டுமே என்கிற வெறியோடு அந்தக் கூட்டத்திற்கு சென்றிருந்தேன். அப்போது அவர் பேசிய பேச்சின் சில பகுதிகள் இப்போதும் இணையத்தில் இருக்கின்றன..!

''மதுரைக்கும் எனக்கும் ஒரு நெருங்கிய நட்பு உண்டு. நான் மதுரைக்கு முதன்முதலில் வந்தது 'மூன்று முடிச்சு' பட விழாவுக்கு. இதில் 'மூன்று' உண்டு. அதன் பின் 'திரிசூலம்' படத்தின் வெற்றி விழாவுக்கு வந்தேன். 'திரிசூலம்' - மூன்று சூலம். இதிலும் 'மூன்று' உண்டு. பிறகு. 'மூன்று முகம்' படத்தின் வெற்றி விழாவுக்கும் வந்தேன். இதிலும் 'மூன்று' உண்டு. மதுரை என்பதிலும் மூன்று எழுத்து. ரஜினி என்பதிலும் மூன்று எழுத்து. இப்படியாக எனக்கும் மதுரைக்கும் நெருங்கிய நட்பு உண்டு.

நான் சினிமாவுக்கு வந்ததே ஒரு அதிசயம். அதிலும் கதாநாயகன் அந்தஸ்து பெற்றது பெரிய அதிசயம். அதைவிட, ரசிகர்களாகிய உங்கள் உள்ளங்களை நான் வென்றது மிகப் பெரிய அதிசயம். இந்திப் படங்களில் நடிக்கச் சென்றதும் அதிசயம். அதன் பின் ஆங்கிலப் படத்தில் நடித்தது பேரதிசயம்.

நான் பிறந்தவுடன் டாக்டர்கள், 'இவன் பத்து நாள் கூடத் தாங்க மாட்டான். இறந்துவிடுவான்' என்று சொல்லிவிட்டார்களாம். நான் பிறந்த நட்சத்திரம் என்ன என்று எனக்குத் தெரியாது. 'மூன்று முடிச்சு' விழாவுக்கு வந்திருந்தபோது, மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றேன். சக நடிகர்களெல்லாம் தங்கள் பிறந்த நட்சத்திரங்களைச் சொல்லி அர்ச்சனை செய்தார்கள். அர்ச்சகர் என்னிடம் 'உன் நட்சத்திரம் என்ன?'ன்னு கேட்டார். தெரியலைன்னேன். ஏன்னா.. என் நட்சத்திரம் என்னன்னு எனக்கே தெரியாது! ஆனா இப்போ தெரிஞ்சிருச்சு..'' என்று சொல்லி நிறுத்தியபோது, நாங்க பதிலுக்கு “சூப்பர் ஸ்டார்”ன்னு கத்துன கத்து இருக்கே..!? அதுல நிச்சயம் மதுரையே குலுங்கியிருக்கும்..!

மேலும் தொடர்ந்த ரஜினி, ''நான் ஒரு குதிரை மாதிரி. என் கண்மணிகளாகிய நீங்கள் என் மேல் அமர்ந்துள்ளீர்கள். எனக்கொரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு குதிரைமேல் சாமியை வைத்து ஊர்வலம் வந்தார்கள். வரும் வழியில் எல்லோரும் வணங்கினார்கள். உடனே குதிரைக்குக் கர்வம் வந்துவிட்டது, எல்லோரும் தன்னை வணங்குகிறார்களே என்று! கோயில் வந்ததும், சாமியை உள்ளே எடுத்துச் சென்றுவிட்டார்கள். அப்புறம் யாரும் குதிரையை மதிக்கவில்லை. அதுபோலத்தான் நானும்! ரசிகர்களாகிய நீங்கள் இருக்கும்வரைதான் எனக்கு மரியாதை!'' என்றார்..!

இதன் பின்பும் ஒரு முறை ரஜினி மதுரைக்கு வந்தார். அது தினத்தந்தி பத்திரிகையின் பொன்விழா என்று நினைக்கிறேன். மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தது இந்த விழா. ரஜினி வரும்வரையில் விழாவில் ராஜா மாதிரி அமர்ந்திருந்தார் நாவலர் நெடுஞ்செழியன். ரஜினியைப் பார்த்தவுடன் எழுந்த கரகோஷமும், கூச்சலையும் பார்த்து முதலில் முகம் சுழித்தவர் நாவலர்தான்.

தன்னுடைய பேச்சில் நாவலர் இதைக் குறிப்பிட்டு, “நீங்கள்லாம் எதுக்கு வந்திருக்கீங்கன்னு தெரியும்.. நான் என்ன பேசினாலும் கேக்குற நிலைமைல நீங்க இல்லைன்றதும் தெரியும். நான் இனிமே பேசி என்னாகப் போகுது.. போங்க..” என்று ரஜினி ரசிகர்களாகிய எங்களை மறைமுகமாகக் திட்டிவிட்டுத்தான் அமர்ந்தார்.

அடுத்துப் பேசிய ரஜினி, “நான் தமிழ் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டதே தினத்தந்தியைப் பார்த்துதான்..” என்றார். மேலும் “தினத்தந்தியில் என்னைப் பற்றிய அவதூறான செய்திகள் எதுவுமே வராது. அப்படித்தான் அந்தப் பத்திரிகை இருக்கிறது..” என்று பாராட்டிவிட்டும்தான் சென்றார்.

இந்த நிகழ்வு நிச்சயமாக 1990-களின் மத்தியில்தான் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் 1995-ல் நான் மதுரையை டைவர்ஸ் செய்துவிட்டு சென்னைக்கு வந்துவிட்டேன். ஸோ.. 1990-ல் இருந்து 1995-க்குள் இரண்டு முறை அண்ணன் ரஜினி மதுரை மண்ணை மிதித்திருக்கிறார் என்பதுதான் உண்மை.

"அப்புறம் ஏன் இப்படி 32 வருஷம் கழிச்சு வந்திருக்கேன்னு சொன்னாரு?"ன்னு கேக்குறீங்களா..? 22-ன்னு சொல்ல வந்திருப்பாரு.. தாட் ஸ்லிப்புல மாறியிருக்கும்....!

"அதான் தெரியுதுல்ல.. அடக்கிக்கிட்டு இருக்க வேண்டியதுதானே..!? எதுக்கு இந்த போஸ்ட்டு..? நீயே எடுத்துக் குடுக்கிறியே..? நீயெல்லாம் ஒரு ரசிகனாடா..?" அப்படீன்னு நீங்க கேக்குறதும், திட்டுறதும் புரியுது..!

முடியல.. கை ரொம்ப அரிக்குது..! இன்னிக்கு கோட்டாவுக்கு ஏதாவது மேட்டர் எழுதணும்ல.. அதுனாலதான்..! 

நன்றி.!

மதுரையில் மக்கள் தொலைக்காட்சியின் மூன்றாமாண்டு துவக்க விழா

28-08-2008


என் இனிய வலைத்தமிழ் மக்களே..

அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் ஆயிரம் இருந்தாலும் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும் ஒன்று சேர்ந்து ஒத்துக் கொள்ளும் ஒரு விஷயம் மக்கள் தொலைக்காட்சியின் அடக்கமான, ஆரவாரமில்லாத வெற்றியைத்தான்.

எந்த சேனலைத் திருப்பினாலும் “மாமியார்-மருமகள் சண்டை, மாமனார், மருமகன் மோதல். விஷம் வைப்பது எப்படி..? அடியாட்களை திரட்டுவது எப்படி? மனைவியை ஏமாற்றுவது எப்படி? திட்டமிட்டு கொலை செய்வது எப்படி? செய்த கொலையில் சிக்காமல் தப்பிப்பது எப்படி?” என்று சமூகத்தின் அனைத்து அநியாயங்களையும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒருவிதத்தில் பார்க்கப் போனால், வேகாத வெயிலில் கிடைக்கின்ற ஜில்லென்ற தண்ணீர்தான்.

தமிழகமே அழுவாச்சி சீரியல்களில் தவித்துக் கொண்டிருக்கும்போது மக்கள் தொலைக்காட்சி மட்டுமே கண்ணீரைத் துடைக்கும் பெண்களைக் காட்டியது. காமெடி என்கிற பெயரில் நடுவீட்டில் எச்சில் துப்புவதைக் கூட துல்லியமாகக் காட்டிய கண்றாவி காட்சிகளுக்கு மத்தியில், சிறுவர்களின் வாழ்க்கை முறைகள் எப்படியிருக்க வேண்டும் என்பதனை படம் பிடித்துக் காட்டியது மக்கள் தொலைக்காட்சிதான்.

நடு இரவில் குருவியைச் சுடுவதைப் போல குற்றவாளியாக்கப்பட்டவர்களை படுகொலை செய்துவிட்டு, மறுநாள் 10 ரூபாய் மாவுகட்டை வாங்கிப் போட்டுக் கொண்டு மருத்துவமனையில் படுத்துறங்கி வீடியோ கேமிராக்களுக்கு போஸ் கொடுத்த உலகப் புகழ் பெற்ற தமிழக போலீஸாரின் பேட்டியை வீரசாகசம் என்று சொல்லி அனைத்து சேனல்களும் கூத்தடித்துக் கொண்டிருந்த வேளையில்...

ஹிட்லருக்குத் தாங்கள் எந்தவிதத்திலும் சளைத்தவர்களல்ல என்பதை நிரூபிப்பதைப் போல வீரப்பன் வேட்டை என்ற பெயரில் தமிழகக் காவல்துறை நடந்து கொண்ட மிருகத்தனத்தை பெரும் பொருட்செலவில் நஷ்டம் பற்றி கவலையில்லாமல் சீரியலாக எடுத்துப் பெருமையைத் தேடிக் கொண்டது மக்கள் தொலைக்காட்சிதான்.

“மண் பயனுற வேண்டும்” என்பதை தனது தாரக மந்திரமாக வைத்திருக்கும் மக்கள் தொலைக்காட்சி அந்தப் பணியைத் திறம்பட நேர்மையாக செய்து வருகிறது என்றே சொல்லலாம்.

இப்போதுதான் ஆரம்பித்தது போலிருக்கிறது மக்கள் தொலைக்காட்சியின் தோற்றம். ஆனால் மூன்று வருடங்களாகிவிட்டதாம் அதன் வயது. இரண்டு மாதங்களுக்கு முன்புதான் சென்னையில் ஸ்டாலின் தலைமையில் விழா கொண்டாடப்பட்டது.

இப்போது சங்கம் வளர்த்த மாமதுரையில் மக்கள் தொலைக்காட்சி தனது மூன்றாமாண்டு விழாவை அமர்க்களமாக நடத்தவிருக்கிறது. இன்று மாலைதான் எனக்கு அழைப்பிதழ் கிடைத்தது.

உள்ளடக்கம் மனதைக் கவர்வது போலவும், தமிழ்.. தமிழ் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்கின்றவர்கள், அவர்களது அலுவலக அனுமதி அட்டையையே ஆங்கிலத்தில் வைத்து தமிழை பரப்பிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், மக்கள் தொலைக்காட்சி மேடையிலும்கூட தமிழ் மணக்க நிகழ்ச்சிகளை வழங்கப் போகின்றதே என்கிற ஒரு கரிசனையிலும் ஏதோ ஒன்றாகி இந்தப் பதிவினை இடுகிறேன்..

இனி மக்கள் தொலைக்காட்சியின் மூன்றாமாண்டு துவக்க விழாவின் நிகழ்ச்சி நிரல்

செப்டம்பர் 6-ம் நாள் மாலை 4 மணிக்கு மதுரை, தல்லாகுளம், இராசா முத்தையா மன்றத்தில் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளோடு நிகழ்ச்சி துவங்கவிருக்கிறது.

இசைத்தமிழும், நாட்டியத் தமிழும், நாடகத்தமிழும் ஒருங்கே இணைந்து இயம்பவிருக்கும் இந்த கலை நிகழ்ச்சிகளின் பட்டியல் இதோ..

நாகசுரம் : திருக்குவளை சகோதரிகள்

நாட்டுப்புறப்பாட்டு : திருமதி பரவை முனியம்மா

கலைக்கிராமம் குழுவினர் வழங்கும் உருமி மேளம்

காணிக்காரர் திரு.பழங்குடி பாரதி மற்றும் குழுவினர் வழங்கும் காட்டுப்புறப் பாட்டு

காவடி ஆட்டம் : கலைமாமணி தஞ்சை விநாயகம்

மதுரையில் வீரப்பனும், கூட்டாளிகளும்

மதுரை பத்ரீசியார் நடுநிலைப்பள்ளி மாணவிகள் பாடும் மக்கள் தொலைக்காட்சியின் மூன்றாவது ஆண்டு விழா பாடல்

மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் வழங்கம் கலைச்சங்கமம் (மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் என அனைத்துக் கலைகளின் சங்கமம்)

புதுகை பிரகதீசுவரன் குழுவினர் வழங்கும் புதிய கோணங்கிகளின் அதிர்வேட்டு.

மக்கள் தமிழ்

மக்கள் செய்திகள் : ஒரு பார்வை என்கிற தலைப்பில் டெக்கான் கிரானிக்கல் இதழின் சிறப்பாசிரியர் திரு.பகவான்சிங் அவர்கள் பேசப் போகிறார்.

மக்கள் தொலைக்காட்சியில் தமிழன் என்கிற தலைப்பில் கவிஞர் திருப்பூர் கிருட்டிணன் பேசவிருக்கிறார்.

மலரும் பூமி நிகழ்ச்சி : ஒரு பார்வை என்கிற தலைப்பில் இயற்கை விஞ்ஞானி திரு.நம்மாழ்வார் அவர்கள் பேசுவார்.

மக்கள் தொலைக்காட்சியின் தொடர்கள் என்கிற தலைப்பில் திரைப்பட இயக்குநர் திரு.சீமான் அவர்கள் பேசுவார்.

மக்கள் தொலைக்காட்சியின் சமூகப் பார்வை என்கிற தலைப்பில் முனைவர் வசந்திதேவி அவர்கள் சிறப்புரையாற்றுவார்கள்.

மக்கள் தொலைக்காட்சியில் திரைப்படங்கள் என்கின்ற தலைப்பில் திரைப்பட இயக்குநர் திரு.அமீர் அவர்கள் உரையாற்றவுள்ளார்.

மக்கள் தொலைக்காட்சியில் தமிழ்க் கலைகள் என்ற தலைப்பில் பேசவிருக்கிறார் முனைவர் திரு.கே.ஏ.குணசேகரன் அவர்கள்.

இயற்றமிழ் பிரிவில் உரையாற்றுபவர்கள்

நெல்லைத்தமிழ் பற்றி கலைமாமணி திரு.சுப்பு ஆறுமுகம் அவர்கள்..

குமரித்தமிழ் பற்றி எழுத்தாளர் திரு.நாஞ்சில் நாடன் அவர்கள்..

கொங்குத் தமிழ் பற்றி எழுத்தாளர் திரு.பாமரன் அவர்கள்..

சென்னைத் தமிழ் பற்றி முனைவர் பெரியார்தாசன் அவர்கள்..

மதுரைத் தமிழ் பற்றி திரு.திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள்..

ஈழத் தமிழ் பற்றி ஐயா திரு.எஸ்.பொ அவர்கள்.

உலகத் தமிழ் பற்றி திரு.செந்தலை கெளதமன் அவர்கள்..

விழாவிற்கு தலைமையேற்க இருப்பவர் மத்திய மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு.அன்புமணி இராமதாசு அவர்கள்..

மக்கள் தொலைக்காட்சியின் மேலாண் இயக்குநர் திரு.வேணு சஞ்சீவி அவர்கள் வரவேற்புரையாற்றுவார்கள்.

மக்கள் தொலைக்காட்சியின் நிறுவனர் மருத்துவர் திரு.ச.இராமதாசு அவர்கள் சிறப்புரையாற்றுவார்கள்.

மக்கள் தொலைக்காட்சியின் முதன்மைச் செயல் அலுவலர் திரு.அ.சிவக்குமார் அவர்கள் நன்றியுரை நிகழ்த்துவார்.

இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் அன்று மாலை 4 மணி முதல் மக்கள் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவிருக்கிறது.

மதுரை நேயர்களும், வலைப்பதிவர்களும் வாய்ப்பு கிடைத்தால் நேரில் சென்று, கண்டு, களிக்கும்படி வாழ்த்துகிறேன்.

நன்றியுடன்


உண்மைத்தமிழன்