அசத்தல் ‘சுப்பிரமணியபுரம்!’

09-08-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



இந்த ஒரு திரைப்படம் என்னை ரொம்பவே அலைக்கழித்துவிட்டது. கிட்டத்தட்ட 8 முறை பல்வேறு தியேட்டர்களுக்கு படையெடுத்தும், டிக்கெட் கிடைக்காமல் வெறுத்துப் போய் திரும்பிய அனுபவத்துடன், நேற்று பெரும்பிரயத்தனம் செய்துதான் பார்க்க முடிந்தது.

தமிழுக்கும், மதுரைக்கும் எவ்வளவு தொடர்பிருக்கிறதோ அதே அளவு அரசியலுக்கும் மதுரைக்கும் தொடர்பு உண்டு.

அரசியலுக்கும் நேர்மைக்கும் எவ்வளவு தொடர்பிருக்கிறதோ அதே அளவு அநீதிக்கும், அரசியலுக்கும் தொடர்புண்டு.

அரசியல்வாதிகளுக்கும், மக்களுக்கும் எவ்வளவு நேரடி தொடர்புண்டோ, அதைவிட அதிக அளவு அரசியல்வாதிகளுக்கும், அவர்தம் தொண்டர்களுக்கும் உண்டு.

அரசியல் தொண்டர்களுக்கும், ரவுடியிஸத்திற்கும் எந்த அளவுக்குத் தொடர்புண்டோ, அதே அளவு அவர்களை உருவாக்கிய அரசியலுக்கும் உண்டு.

அப்படியொரு அரசியல் கண்ணாமூச்சியை தத்ரூபமாகக் காட்டியிருக்கிறது 'சுப்பிரமணியபுரம்!'

மதுரையின் வைகையாற்றில் வெட்டி வீழ்த்தப்பட்டு வீசப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை ஏராளம்.

காணாமல் போனவர்கள் பட்டியலில் இருக்கும் தென் மாவட்ட இளைஞர்களில் பலர் வைகை ஆற்றின் மண்ணில் புதையுண்டு கிடப்பதை அந்த ஆறே சொல்லக் கூடும்..

புகழ் பெற்ற ‘மாஞ்சா வெட்டு’ என்ற பெயரை கேள்விப்படாத மதுரையின் அல்லக்கை இளைஞர்களும், அரசியல்வாதிகளும் இருக்க முடியாது.

கரிமேடு, நரிமேடு, அஹிம்சாபுரம், பெத்தானியபுரம், சிம்மக்கல், பரமேஸ்வரி தியேட்டர் பகுதி, பழைய தேவி தியேட்டர் இருந்த பகுதி என்று மதுரையின் கீழ்த்தட்டு மக்கள் அதிகம் வசிக்கும் எப்பகுதியிலும் தெருவுக்குத் தெரு இத்திரைப்படத்தின் நாயகர்களான அழகனும், பரமனையும் இப்போதும் நீங்கள் பார்க்கலாம்.

அரசியல் என்ற சாக்கடையில் சிக்கும் அப்பாவிகளின் வாழ்க்கை என்னாகும் என்பதிலும், முகமூடி அரசியல்வாதிகளின் கையில் அப்பாவி இளைஞர்கள் தஞ்சாவூர் பொம்மையாக பொம்மலாட்டம் ஆடும் திருக்காட்சிகளை ஏற்கெனவே ‘சத்யா’ திரைப்படத்தில் பார்த்திருக்கிறோம். இப்போது இன்னும் கொஞ்சம் இப்படத்தின் மூலமாகவும்.

மழை கொட்டுகின்ற ஒரு பொழுதில் மதுரை, மத்திய சிறைச்சாலையில் இருந்து சிறை தண்டனை முடிந்து வெளியில் வரும் ஒருவர் கத்திக்குத்துக்கு ஆளாவதில் துவங்கும் திரைப்படம், அதே நபர் கொல்லப்படுவதுடன் முடிவுறுவது ஒரு அருமையான துன்பவியல் நாடகம்.

திரைப்படம் என்பதை நடந்தது போல் சொல்வது, அல்லது இப்படியெல்லாம் நடக்க முடியுமா என்பது போல் சொல்வது என்று இரண்டாகப் பிரித்துப் பார்க்கலாம். அதில் இது முதல் வகை. சொல்ல வந்ததை சொல்லிய விதத்தில் இயக்குநர் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார்.

பாத்திரப் படைப்புகளில் அதிக அக்கறையெடுத்து வில்லனான கனகு, அவருடைய அண்ணன் சோமசுந்தரம், கதாநாயகியின் தந்தையான மூத்த அண்ணன், இவர்களது மனைவிகள், மொக்கைச்சாமி என்னும் கோவில் கமிட்டித் தலைவர், பரமனையும், அழகரையும் ஜாமீன் எடுத்து அதன் மூலம் தனது நீண்ட நாள் பகையைத் தீர்த்துக் கொள்ளும் நபர் என்று படம் முழுக்கவே தமிழ் திரையுலகிற்கு முற்றிலும் புதியவர்கள்.

இந்தப் புதியவர்களை வைத்துக் கொண்டு தமிழ்ச் சினிமாவின் மிக முக்கியமான ஒரு திரைப்படத்தை வழங்கியதற்காக சசிகுமாருக்கு தமிழ்ச் சினிமாவுலகம் என்றென்றும் நன்றிக் கடன்பட்டிருக்கும்.

வேலைவெட்டியில்லாமல் கூட்டாளிகளுடன் சேர்ந்து சுற்றிக் கொண்டு, சத்யன் சவுண்ட் சர்வீஸில் பொழுதைக் கழிக்கும் அந்த ஐவருக்கும் எதிர்வீட்டு அரசியல்வாதி சோமுதான் காட்பாதர். அவருக்கு ஒன்று என்றால் இவர்களுக்கு கொதிக்கிறது.. இவர்களுக்கு ஒன்று என்றால் அப்போதுவரை அவரும் பறக்கிறார்.

விசுவாசத்திற்கு எல்லை ஏது? நன்றிக்கு உச்சபட்சம் ஏது? யாராலும் சொல்ல முடியாது.. அதே போல் காதலுக்கும் முடிவு ஏது? அதையும் சொல்ல முடியாது. இயக்குநர் இந்த மூன்றையும் ஒரு சேர உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.

காட்பாதரின் மகளையே காதலிக்கும் அளவுக்குத் துணிச்சல்கார அழகன். தனது காதலை உயிர் நண்பன் பரமனிடம் சொல்கிற காட்சியில் இருப்பதெல்லாம் இளைஞரணியின் துடிப்புகள்தான். திரையரங்கில் விசில் சப்தம் காதைப் பிளக்கிறதே..

அதிலும் நாயகி பார்வையாலேயே தனது உள்ளத்தைச் சொன்னபடியே உலா வருவது கொள்ளை அழகு. கதிரின் கேமிராவிற்குள் அந்த கண்களை மட்டுமே வைத்து ஒரு காதலை செதுக்கியிருக்கிறார் இயக்குநர்.

அரசியல்வாதி சோமுவிற்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காத கோபத்தில் இப்போது மாவட்டச் செயலாளராக இருப்பவரை கொலை செய்யச் சொல்கிற இடத்தில் கனகுவாக நடித்த நண்பர், தோழர் சமுத்திரக்கனியின் நடிப்பு ஒரு மிகைப்படுத்தப்பட்ட இயக்கம் என்று சொல்லலாம். இயக்குநரையும் மீறி கனகுவாக அங்கே வாழ்ந்திருக்கிறார் கனி.
“ஒண்ணுக்குள்ள ஒண்ணா தாயா புள்ளையா இருக்குறோம்.. உங்களுக்கு ஒண்ணுன்னா அது எங்களுக்கும்தான். அதே மாதிரிதான் எங்களுக்கு ஒண்ணுன்னா அது உங்களுக்கும்தான்...” என்று வசீகரப்படுத்தி பேசுவதிலும், “என் சொத்து, பத்தை வித்தாவது உங்களைக் காப்பாத்திர மாட்டேனா?” என்று குரல் உடைந்த நிலையில் கனகுவாக கேட்கின்ற இடத்திலும் சமுத்திரகனி தேர்ந்த நடிகராக பரிணாமம் எடுத்துவிட்டார்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக தமிழகத்தையே உலுக்கிய தமிழக முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணனின் கொலையை நினைவுபடுத்தும் விதத்தில், அதேபோன்று மாவட்டச் செயலாளரின் கொலைக் காட்சியை எடுத்த தைரியத்திற்காக இயக்குநருக்கு ஒரு ஸ்பெஷல் சபாஷ் போடலாம்.

சிறைக்குள் வந்தும் ஜாமீன் எடுக்க யாரும் வரவில்லை என்பது தெரிந்து தங்களை ஏமாற்றியதை நினைத்து பொருமுவதும், அங்கேயே கிடைக்கும் நட்பின் மூலம் வெளியே வந்து உடனேயே கனகுவை போட்டுத் தள்ள முடிவெடுப்பதும் அந்த இளைஞர்களின் ஆவேச புத்தியை மட்டுமே காட்டுகிறது. இந்த அளவிற்கு எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற மனநிலையில் இருக்கும் அவர்களை அரசியல் தன்வசப்படுத்தியதில் ஆச்சரியமில்லை.

ஜாமீன் எடுத்தவரின் மீது தங்களுக்கிருக்கும் விசுவாசத்திற்காக ஒரு கொலை.. அந்தக் கொலைக்கு பதிலாக தங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலிலிருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தல். பின்பு அவர்களையே சீட்டாட்ட கிளப்பிற்கு சென்று கொன்றுவிட்டு ஓடுவது என்று பிற்பாதியில் வேகமான திரைக்கதை தூள் பறத்திவிட்டது.

இந்தக் கொலைக்காக அவர்கள் எடுக்கும் இடம்கூட அவர்களின் மனநிலையை அடையாளம் காட்டுகிறது. ஒரு எழவு விழுந்த வீட்டில் பிணத்திற்கு கொள்ளி வைத்துவிட்டு மொட்டையடித்த நிலையில் ஒதுக்குப்புறமாக ஒதுங்கியவரின் மேல் பாய்ந்து வீசுகின்ற ‘மாஞ்சா வெட்டு’ திகில்தான்.

தங்கள் மீது வன்மம் வைத்துவிட்டார்கள் என்பதை உணர்ந்து போலீஸை வைத்து கனகு சமாளித்தும் முடியாமல் போய் கடைசியில் அழகன் தனது அண்ணன் மகள் மீதே கை வத்திருக்கிறான் என்பது தெரிந்து அழித்தே தீருவோம் என்று செயல்படுத்தியது நிச்சயம் திருப்பம்தான். அதிலும் அதைச் செயல்படுத்திய விதமும் அருமை.

தனது உயிர் நண்பன் கொல்லப்பட்டதை அறிந்து கனகுவை மருத்துவமனை வாசலிலேயே ஆட்டோவில் இழுத்துச் சென்று ஆட்டை அறுப்பது போல் அறுத்து தலையைத் துண்டித்து அழகனின் உடல் சிதைந்த இடத்தில் வீசிவிட்டு ரத்தக்கறை படிந்த உடையுடன் அமரும் பரமனின் ஆளுமை ஏற்பதா, வேண்டாமா? சரியா? தவறா? என்றுகூட சொல்ல முடியாத நிலைமைக்குக் கொண்டு சென்றது.

முடிவு நான் ஓரளவு யூகித்ததுதான். ‘மலையூம் மம்பட்டியான்’ படத்தில் பார்த்த 'முதல் அதிர்ச்சி' இத்திரைப்படத்திலும் தொடர்கிறது. நம்பிக்கை துரோகம். காசி செய்வது எதற்கு என்ற கேள்விக்கான பதிலை திரைப்படத்தை கூர்ந்து கவனித்திருந்தால் மட்டுமே புரியும்படியாக வைத்திருப்பது ஒன்றுதான் இத்திரைப்படத்தில் நான் பார்த்த சிறிய சங்கடம்.

முதலிலேயே ஜாதி பாசத்தில் காசி, மொக்கைச்சாமியை ஆதரிப்பதாக பரமன் கேட்பதிலேயே ஒரு முடிச்சும், மாவட்டச் செயலாளரை கொலை செய்ய உடனிடிருந்து கட்டைக் கால் கொடுக்கும் காசி, இவர்கள் உள்ளே போக அவன் வெளியே இருக்கும் நிலை இரண்டாவது முடிச்சு.. ஜாமீன் எடுத்தவருக்காகச் செய்யப்பட்ட கொலைக்குப் பின் அவர் தரும் பணத்தினை வாங்க ஆலாய் பறக்கும் காசியின் குணம் மூன்றாம் முடிச்சு.. மூன்றையும் முடிச்சுப் போட்டுப் பார்த்தால் காசியின் நம்பிக்கை துரோகத்திற்கான தூண்டுதல் எது என்பது புரியும்.

காசிக்கான தண்டனை 28 ஆண்டுகளுக்குப் பின்பும் கிடைக்கிறது என்கிறபோது அதன் மறுபெயர் விசுவாசம். நட்பு. அந்த நட்பை பணம், மற்றும் ஜாதிக்காக புறக்கணித்ததால் காசிக்கு கிடைத்த இந்தத் தண்டனையும் இயல்பானதுதான்.

கத்தியெடுத்தவன் கத்தியினால்தான் சாவான் என்பது விதிக்கப்படாத விதி. அது நடந்தே தீரும். எப்பேர்ப்பட்டவனையும் பதம் பார்க்கும் கத்திக்கு, அதைப் பயன்படுத்துபவன் முக்கியமல்ல.. எப்படி செயல்படுகிறோம் என்பதுதான் முக்கியம்.

விசுவாசம் என்னும் முடிவுறாத முற்றுப்புள்ளியைக் கையில் எடுத்துக் கொண்டு இயக்குநர் ஆடியிருக்கும் இந்த ஆட்டத்தின் சிறப்பிற்கு அவருக்கு உதவியது அவருடைய பலமான, சுவையான திரைக்கதைதான்.

* * * * *
மாதத்திற்கு நான்கு படங்கள் ரிலீஸ் என்றால் அதில் 2 படங்களில் அரிவாள் நிச்சயமாகத் தூக்கப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது வித்தியாசப்படுத்திதான் வெற்றியை ருசிக்க வேண்டும் என்பதற்காகவே நம்மை பின்னோக்கி அழைத்துச் சென்றுள்ளார் இயக்குநர். கால வித்தியாசத்தில் காட்சிகளை காண்பது என்பது நமக்கொரு பரவசம். இதற்காக இயக்குநர் மிக மிக மெனக்கெட்டிருக்கிறார் என்பது தெளிவு.


முதலில் நினைவிற்கு வருவது ஸ்டெப் கட்டிங்.. அடுக்கடுக்கான அலைகளைப் போன்ற தலையுடன் அழகனையும், கனகுவையும் பார்க்கின்றபோது எனது அண்ணன் அதே 1980-களில் மணிக்கணக்காக கண்ணாடி முன் சீப்பும், கையுமாக நின்றிருந்தது எனக்கு நினைவுக்கு வருகிறது. பெல்பாட்டம் பேண்ட், வட்ட வடிவ பட்டையான பெல்ட், இறுகப் பிடித்த சட்டை என அக்கால இளைஞர்களின் முன்னோடியான மைக் மோகனை நினைவுபடுத்தி மதுரையில் அலப்பறையை கொடுத்த குஞ்சுகளின் நினைவுகள் தவறாமல் வருகின்றன.

இயக்குநரின் சிரத்தை சிறிய அளவில் என்றில்லை.. ஓரிடத்தில்கூட தவறில்லாமல் தனது கவனத்தைச் செலுத்தியிருக்கிறார். ‘வெள்ளை நிற பாண்டியன் போக்குவரத்துக் கழகப் பேருந்து, அவ்வப்போது ஓரமாக நிற்கும், அல்லது செல்லும் அப்போதைய அம்பாசிடர் கார்கள்.. சோமுவின் கார், டெலிபோன், கொள்ளையடிக்கப் போகும் மளிகைக் கடையில் தொங்கும் காலண்டர், அக்கால டயனோரா பிளாக் அண்ட் ஒயிட் டிவி, அரை வட்ட வடிவ சேர்கள்..’ என்று ஒன்றுவிடாமல் பார்த்து பார்த்து செய்து, மொக்கைச்சாமி நுழையும் அந்த சவுண்ட் சர்வீஸ்காரனின் வீடு வரையிலும் விடாமல் செய்திருப்பதற்கு கண்டிப்பாக ஒரு சல்யூட் அடித்தே தீர வேண்டும்.
மாவட்டச் செயலாளரை போட்டுத் தள்ளிவிட்டு கோர்ட்டுக்கு வந்து சரண்டராகும் காட்சியில், அந்தப் பழைய முன்சீப் கோர்ட்டை முன் நிறுத்தி கோர்ட்டில் குத்த வைத்து அமருவதுவரையிலும் நுணுக்கத்தைத் தவறவிடாமல் இருக்கிறார் இயக்குநர்.

80-களின் துவக்கத்தில் வெளி வந்து தமிழ்ச் சினிமாவில் ஒரு புதிய அலையைத் துவக்கி வைத்த திரைப்படமான ‘முரட்டுக்காளை’யின் ரிலீஸ் ஷோவை காட்டுவதற்கு மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர். அதே சென்ட்ரல் தியேட்டரில் ஏகோபித்த ரசிகர்களின் கூட்டத்தையும், இன்றைக்கும் மாநகரங்களைத் தவிர மற்ற இடங்களில் தலைக்கு மேலே பறந்து சென்று டிக்கெட் வாங்கும் தீவிர ரசிகர்களில் ஒருவனாக காசி செய்து காட்டுவதும் ரசிகப் பெருமக்களை கவரத்தான் செய்கிறது.

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை அப்போதைய தோற்றத்தின்படியும், சிறைக்குள் இருக்கும் சில இடங்களை முதல்முறையாக வெளிக்காட்டியிருப்பதும் இயக்குநர் எதற்கும் சோர்ந்து போகவில்லை என்பதைக் காட்டுகிறது.

* * * * *

செவிக்கினிய இசையெனில் தலைமுறை கடந்தும் நம் தலையசையும் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு ‘கல்லுக்குள் ஈரம்’ திரைப்படத்தின் ‘சிறுபொன்மணி’ பாடலே சான்று. இப்பாடல் காட்சிக்கு கிடைக்கின்ற கை தட்டல்களை இசைஞானியிடம் நிச்சயம் சேர்ப்பிக்க வேண்டும். நல்ல இசையை எப்போதும் ரசிகர்கள் விரும்பத்தான் செய்வார்கள். இனி வருபவர்களும் இதைக் கவனித்தில் கொண்டால் நல்லதுதான்..

இசையில் புதுமுகம் ஜேம்ஸ் வசந்தன் தனது நீண்ட நாள் கனவை இதன் மூலம் நிறைவேற்றியிருக்கிறார் என்றே சொல்லலாம். இப்போதெல்லாம் வருகின்ற பாடல்கள் நின்று கேட்டுவிட்டுப் போக வேண்டும் என்ற உணர்வைத் தோற்றுவிக்கவில்லையே தவிர, ஒரு முறை கேட்கலாம் என்கிற அளவிலேயே வருகின்றன.

அந்த வகையில் 'கண்கள் இரண்டில்' பாடல் இசை ரசிகர்களின் பெருத்த ஆதரவைப் பெற்றுள்ளது படம் பார்க்கும்போதே தெரிகிறது. அதிலும் அந்தப் பாடல் படமாக்கப்பட்டுள்ளவிதமும் அருமைதான். நாயகின் கண் விளையாட்டை மையமாக வைத்து இயக்குநர் கையாண்டிருக்கும் இயக்கத்தில் அதிகமாக ஜெயித்தது நாயகிதான்.. நாயகி தனது கண்களாலும், நேர் நோக்கிய, விழிகளை உருட்டியும், விழித்தும், வெட்கப்பட்டும் செல்கின்ற அந்த ஓரங்க நாடகத்தில் காதல் ஜெயித்தேவிட்டது. பத்து திரைப்படங்களில் நடிக்கவிருக்கும் நடிப்பை, இந்த ஒரே திரைப்படத்தில் அந்த நாயகி முடித்திருக்கிறார்.

நாயகன் தனது பரட்டைத் தலையின் பின்புறம் அடிக்கடி கையை வைத்து ஸ்டைல் செய்யும்விதமும், நாயகியின் வெட்கப்படுதலும் பாடலின் மீதான ஈர்ப்பை அதிகப்படுத்திவிட்டது. காதலுக்கு கண்ணில்லை என்று எதை வைத்துச் சொல்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒன்று வேண்டும் என்று மட்டும் தெரிகிறது. அந்த ஒன்று இந்தப் பாடலின்போது படம் பார்க்கும் காதலர்களுக்கு கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறேன்.


அழகனின் ரெளடித்தனத்தை நேரில் பார்த்து பதைபதைக்கும்போதும், அவனை அத்தொழிலை விட்டுவிடும்படி கெஞ்சுவதிலும் காதல் பெருக்கெடுத்து ஓடுகிறது. கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு எதிர்கால வாழ்க்கை பற்றி பயமிருக்காதா என்ன? ‘முரட்டுக்காளை’ பட காட்சியில் அழகரின் ஆட்டத்தைப் பார்த்து க்ளூக்கென்று ஒரு சிரிப்பு சிரிக்கிறாரே.. காதலுக்கு ஏதோவொன்று வேண்டும். அது இதுவாகக்கூட இருக்கலாம்.

அவளது சித்தப்பாவை கொலை செய்யத்தான் காத்திருக்கிறேன் என்பதை கடைசி நிமிடத்தில் சொல்வதால்தான் அவர்களுடைய பிணைப்புக்கான ஒரு கவனம் நமக்கு கிடைக்காமல் போய்விட்டது. கனகு பற்றி நாயகிக்கு ஏற்கெனவே அனைத்தும் தெரியும் என்பதைப் போல் காட்சியமைப்புகள் போய்விட்டதால் சராசரி பார்வையாளனுக்கு அது ஒரு குறையாகத் தெரிகிறது.

இறுதியாக அழகனை பார்க்க வந்து அழுது கொண்டிருக்கும் காட்சியில் மருத்துவமனையில் ‘மாஞ்சா வெட்டால்’ அடிபட்டுக் கிடக்கும் தனது அப்பாவுக்கான அழுகையா அல்லது அடுத்த சில நிமிடங்களில் சாகப் போகும் தனது காதலனை நினைத்து வந்த அழுகையா என்பதை யூகிக்க விடாமல் செய்திருக்கும் இயக்குநரின் குறிப்பறிதல் பாராட்டுக்குரியது.

நாயகியின் அழுகையைப் பார்க்கின்றபோது. அவளுக்குத் தெரிந்தே கனகு தனது அடியாட்களுடன் வந்திருக்கிறான் என்பதாக எனக்குத் தெரிகிறது.

* * * * * * *

பரமன் எவ்வளவு சொல்லியும் கேளாமல் “அவ என்னைக் காதலிக்கிறாடா.. பாருடா.. என்னைத் தேடுவா பாரு.. சுத்தி முத்தி பார்ப்பா பாரு..” என்று உற்சாகக் குரலோடு சொல்லித் தன்னை வெளிப்படுத்தி நாயகியின் காதலை வெளிக்கொணருவது அழகனின் அசல் நடிப்பு.

அவசரத்தனமாக கனகுவிடம் தலையாட்டிவிட்டு வெளியே வந்து பரமனிடம் கொலை செய்யத் தூண்டுவதிலும், சிறைக்குள் இருவரும் சண்டையிட்டுக் கொள்ளுவதிலும் அழகன் ஒரு பதட்டப்படக் கூடிய ஆனால் அரவணைக்கப்பட வேண்டியவன் என்பதை உணர்த்துகிறது.

அழகனையும், காசியையும் அடியாட்கள் அரிவாளுடன் துரத்தி செல்லும் காட்சியில் கேமிரா புகுந்து விளையாடியிருக்கிறது.. பாராட்டுக்கள்..

தன்னைத் துரத்தி வந்தவர்களிடமிருந்து தப்பிக்க ஒரு வீட்டில் ஒளிந்து கொண்டு அந்த வீட்டுக்காரம்மாவின் காலில் விழுந்து தன்னைக் காப்பாற்றும்படி கெஞ்சும்போது அவனுக்கான ஆதரவு பரிதாபமாகி மேலும் மேலும் கதையில் தீவிரம் கிடைத்துவிடுகிறது.

இறுதியில் அவனது மரணத்தின்போதும் தனது காதலியைப் பார்த்த திக்கிலேயே கண் இருக்க.. ரத்தம் சொட்டச் சொட்ட உயிர் போன நிலையில் இழுத்துச் செல்வதுவரையிலும் காட்டப்படுவது காதல் சார்ந்த வன்முறையை உணர்த்துவதாக உள்ளது.

இறுதியான அந்த நீண்ட சிங்கிள் ஷாட்டில் காசியாக நடித்திருக்கும் கஞ்சா கருப்பு தன்னால் பேசாமலும் நடிக்க முடியும் என்பதனை நமது இயக்குநர்களுக்காக செய்து காட்டியிருக்கிறார். நமது இயக்குநர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

காசியின் வெக்கு, வெக்கென்ற நடையுடன் பருந்து பார்வையில் பரமனின் உயிர் கொஞ்சம், கொஞ்சமாக போவதுடன் ஓரமாக நின்று கொண்டிருக்கும் காரில் அமர்ந்திருக்கும் சோமுவிடம் வந்து பணத்தை வாங்கித் தனது சட்டைக்குள் தள்ளிவிட்டு எல்லைக் கல்லின் மீதமருந்து பீடியை பற்ற வைத்து பெருமூச்சுவிடும்போது அவனுக்குள் இருப்பது எது என்று எனக்குத் தெரியவில்லை. படம் முடிந்த பின்புதான் புரிந்தது.

* * * * *

இத்திரைப்படத்தின் பல காட்சிகளில் நான் முன்பே சொன்னது போல் நடந்ததை காட்டுவது, அல்லது இப்படியும் நடக்குமோ என்று காட்டுவது என்கிற பருந்து பார்வையில் ஆணாதிக்கமும் கொஞ்சம் சேர்ந்துவிட்டது எனலாம்.

அரசியல்வாதி சோமு பதவி இல்லாவிட்டால் யாரும் மதிக்க மாட்டார்கள் என்பதில்கூட மிகப் பெரிய குறையாக “வீட்டுப் பொம்பளைங்ககூட மதிக்க மாட்டாளுங்க..” என்று பொறுமுகிறார். நிஜமாகவே வீட்டுக்காரம்மா அவரை கிண்டல் செய்து பேசுகின்ற பேச்சுதான் படத்தின் கீ பாயிண்ட். அண்ணியை அடிக்கும் அண்ணனைத் தடுக்கும் கனகவுக்கு அப்போதைய நிகழ்வின் பெரும் காரணம், அந்த புதிய மாவட்டத் தலைவர்தான் என்பதாகப் போய் ஹோட்டலில் ரூம் போட்டு யோசித்து கதையை நகர்த்தும் அளவிற்குச் சென்று முடிகிறது.

கனகவும் அதையேதான் சொல்கிறார். “வீட்ல பொம்பளைங்ககூட மதிக்க மாட்டேங்குறாளுக.. எப்படி வீட்ல இருக்கிறது..?” என்கிறார். இது காலம் காலமான ஆணாதிக்கச் சிந்தனையை வளர்த்துவிடும் நோக்கில் வீட்டுக்கு வீடு பேசப்படும் வார்த்தைகள்தான். இதன் விளைவுதானே கொலையும் அதைத் தொடர்ந்த பெரும் கொலைகளும்.

தூண்டிவிடப்படும் வஸ்துவாக, போதை மருந்தாக உசுப்பிவிடப்பட்டு பிடறி மயிரைப் பிடித்து உலுக்கி அனுப்புகிறது ஆண் என்னும் திமிர்த்தனம்.. வேறென்ன சொல்ல..?

அழகன், பரமனிடம் “ஒரு பொட்டச்சிகிட்ட போய் கெஞ்ச விட்டுட்டாங்கடா....” என்று பொருமித் தள்ளி, அன்றிரவே அவர்களைப் போட்டுத் தள்ளும் காட்சியும் வன்முறைக் கும்பலின் எதேச்சதிகாரம் ஆண் என்னும் பால்நோக்கிலேயே செல்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

படம் நெடுகிலும் கிடைத்த இடங்களிலெல்லாம் பரமன் அழகனிடம் "அவளை நம்பாத.." என்று சொல்லும்போது சொல்லப்படுகின்ற தொனி "அவளுக அப்படித்தான்" என்று பெண்கள் மீதான நம்பிக்கையை சந்தேகக் கண்ணுடனேயே பார்ப்பது புலனாகிறது. உச்சக்கட்டத்தில் கனகுவின் தலையை சணல் பையில் கொண்டு வந்து அழகன் வெட்டப்பட்ட இடத்தில் வீசிவிட்டு அய்யனாராக காட்சியளிக்கும் இடத்தில்கூட "பொட்டச்சியை நம்பாத.. நம்பாதன்னு சொன்னேன்.. கேட்டானா அவன்..?" என்று தனது உயிர்த்தோழன் மீதான பாசத்தில் பொருமும் பரமனின் பேச்சில் இருப்பதும் காலம், காலமாக நம்மிடையே இருந்துவரும் ஆணாதிக்கத் தோற்றத்தில்தான்..!

* * * * *
தமிழ்த் திரைப்படங்களின் தற்போதைய போக்கு ரவுடியை கல்லூரி மாணவி காதலிப்பது, அவனைத் திருத்த முயல்வது, முடியாமல் அவன் செய்த தவறுக்குத் தான் பலியாவது என்பதாகவே போய்க் கொண்டிருப்பதாக நிறைய விமர்சகர்கள் எழுதுகிறார்கள். இதில் உண்மையும் உண்டு.

வன்முறையும், பாலியல் காட்சிகளும் படத்திற்கு படம் மலிந்து கிடக்கின்ற காலக்கட்டத்தில் இது போன்ற திரைப்படங்களின் வெற்றி எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. மாறாக மெல்ல, மெல்ல பயத்தை தோற்றுவிக்கிறது.

அடுத்த வீட்டுப் பையன் கீழே விழுந்து ரத்தம் சிந்தினால்கூட நமக்கு மனம் சங்கடப்படும்போது திரையில் ஓடும் ரத்தம் தெறிக்கும் காட்சிகளின்போது மட்டும் “இவனுக்கு வேணுன்டா.. என்ன ஆட்டம் ஆடினான்.. நல்லா வேணும்..” என்பதாக நமக்குள் எந்த எழவு ரசாயனத்தையோ ஏன் தோற்றுவிக்க வேண்டும் என்று தெரியவில்லை.

இத்திரைப்படத்தில் பரமன், கனகுவின் தலையை ஆட்டோவிற்குள் வைத்து அறுத்து பையில் போட்டு எடுத்துச் செல்லும் காட்சியில் தியேட்டரில் எழுந்த கைதட்டல்கள் எனக்கு ஆச்சரியத்தையும், திகைப்பையும் ஏற்படுத்தியது. எப்படி இந்த உணர்வு இவர்களுக்குள் வந்தது? இது எங்கிருந்து ஆரம்பித்தது? என்பதும் புரியவில்லை.

முன்பெல்லாம் நேரத்தைப் போக்க என்று ஒரு சிலரும், சும்மா ஜாலிக்கு என்று பலரும் வந்து போய்க் கொண்டிருந்த திரைப்படங்கள் இன்றைய அதீத நுகர்வுக் கலாச்சாரத்தில்கூட மக்களின் மனதை ஊடுறுவும் அளவுக்கு இன்னமும் இருப்பது நல்லது என்று சொன்னாலும், இந்த அளவிற்கு வன்முறையை ஊக்குவிக்கும் மனப்பான்மை ரசிகனுக்குள் ஏற்படுவது நல்லதா என்பது விவாதிக்கக் கூடியதுதான் என்று மட்டும் தெரிகிறது.

இதே நேரத்தில் நண்பர் பத்ரி தனது http://thoughtsintamil.blogspot.com/2008/07/blog-post_28.html இந்தப் பதிவில் இத்திரைப்படத்தில் காணப்பட்ட சில குறைகளையும் பட்டியலிட்டுள்ளார். இதையும் படித்துக் கொள்ளுங்கள். முழுக்க, முழுக்க இனிப்பையே சாப்பிடக் கூடாது.. கொஞ்சம் காரமும் வேண்டும்.

எது எப்படியிருந்தாலும், தமிழ்ச் சினிமாவின் மிக முக்கியமான ஒரு திரைப்படத்தினை தனது முதல் படைப்பிலேயே கொடுத்து திரையுலகில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறார் இயக்குநர் சசிகுமார்.

அவருக்கு வாழ்த்துச் சொல்லி வரவேற்கிறேன்.

படம் உதவி : http://www.indiaglitz.com/

20 comments:

இவன் said...

பயங்கர நுணுக்கமா படத்தை அவதானித்திருக்கிருகிறீர்கள்... எனக்கு என்னவோ படம் நன்றாகவே மிக நன்றாகவே பிடித்திருந்தது. நீங்கள் படத்தில் வரும் பாடல்கள் மற்றும் இசை பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லையே. மற்றது அந்த பெண் திரும்பிப்பார்க்கும் போது ராஜாவின் இசை நம்மைத்தாலாட்டுகிறதே அதையும் கொஞ்சம் விரிவாக சொல்லி இருக்கலாம்...

//
அழகன், பரமனிடம் “ஒரு பொட்டச்சிகிட்ட போய் கெஞ்ச விட்டுட்டாங்கடா....” என்று பொருமித் தள்ளி, அன்றிரவே அவர்களைப் போட்டுத் தள்ளும் காட்சியும் வன்முறைக் கும்பலின் எதேச்சதிகாரம் ஆண் என்னும் பால்நோக்கிலேயே செல்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.//


அந்த நேரங்களில் இப்படி ஆணாதிக்க சிந்தனை சற்றே அதிகமாக இருந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி அதனையும் காட்டுவதற்காக அந்த காட்சிகளை எடுத்திருக்கலாம் இல்லையா??

எனக்கு உங்கள் அளவுக்கு நுணுக்கமாக பார்த்து புரிந்துகொள்ளும் திறன் இல்லை. தவறேது இருப்பின் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள்

உண்மைத்தமிழன் said...

இவன் ஸார்,

இசை பற்றி இதில் இடம் பெறாதது தவறுதான்.. மன்னித்துக் கொள்ளுங்கள்.. இரண்டு பத்திகள் எழுதப்பட்டு அது காப்பி செய்யும்போது மிஸ் ஆனதால் நடந்துவிட்டது. சரிப்படுத்திவிடுகிறேன்.

//அந்த நேரங்களில் இப்படி ஆணாதிக்க சிந்தனை சற்றே அதிகமாக இருந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி அதனையும் காட்டுவதற்காக அந்த காட்சிகளை எடுத்திருக்கலாம் இல்லையா??//

உண்மைதான்.. இன்னமும்கூட இரு பால் சமத்துவ சுதந்திரம் என்பது நடுத்தர வர்க்கத்தைத் தாண்டி கீழே இறங்கவில்லை. இது போன்ற விளிம்பு நிலை மக்களிடையே அது தெய்வக்குற்றமாகவே உள்ளது. நடந்ததை யதார்த்தமாக அப்படியே சொல்ல வந்திருக்கிறார் இயக்குநர்.. ஆகவே இதனை கதையின மாந்தரின் செயல் என்ற நோக்கில் நாம் எடுத்துக் கொள்ளலாம். இயக்குநரின் தவறல்ல.. அவருடைய பார்வையும் அல்ல..

இவன் said...

நன்றி உண்மைத்தமிழன், நீங்கள் சொல்வது சரியாகத்தான் படுகிறது.
மற்றது என்னைத்தயவுசெய்து இவன் ஸார் என்று மட்டும் கூப்பிட வேண்டாம் இவன் என்றே கூப்பிடுங்கள்

உண்மைத்தமிழன் said...

//இவன் said...
நன்றி உண்மைத்தமிழன், நீங்கள் சொல்வது சரியாகத்தான் படுகிறது. மற்றது என்னைத் தயவுசெய்து இவன் ஸார் என்று மட்டும் கூப்பிட வேண்டாம.் இவன் என்றே கூப்பிடுங்கள்//

நிறைய பேர் தவறு செய்வது இங்குதான். தான் பெரிய ஆளில்லை என்ற தன்னடக்கத்தில் அனைவரும் சொல்கின்ற வார்த்தை இது..

ஆனால் சக மனிதர்களை முதலில் மதிக்கக் கற்க வேண்டும். கற்றுக் கொடுக்கவும் வேண்டும்.. ஸார் என்பது ஒரு மரியாதைதான்.. எனக்கு முன்பின் அறிமுகமில்லாதவர்களுக்கு நான் இந்தளவிற்கு மரியாதை தந்துதான் தீர வேண்டும். நேரில் சந்தித்து பழகிய பின்பு நெருக்கமான காலக்கட்டத்திற்குப் பின்பு அவர் ஏற்கும்பட்சத்தில் ஒருமையிலோ அல்லது செல்லப் பெயரிலோ அழைத்துக் கொள்ளலாம்.. இது சக மனிதர்களிடையே பிணைப்பையும், நல்லுறவையும் வளர்க்கும் ஒரு விஷயம்..

நிச்சயம் நான் பின்பற்றுவேன்.. நீங்களும் பின்பற்றுங்கள்.. உங்களுக்குப் பிடிக்கவில்லையெனில் வெகு சீக்கிரமே என்னை நேரில் சந்தித்து நட்புணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும் என என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்ளுங்கள்..

வாழ்க வளமுடன்

உண்மைத்தமிழன் said...

என்ன விக்கி.. வெறும் ஸ்மைலி மட்டும்தானா..?

narsim said...

ஆழமான பார்வை.. (நம்ம வில்லாபுரத்தை விட்டுட்டீங்களே!..)
அருமையான படம்! (காரணங்களை எனது பதிவில் பட்டியலிட்டிள்ளேன்)
குறைகளைப் பற்றிய உங்கள் கருத்துக்களும் ஏற்புடையதே! ஆனாலும் அந்த வசனங்கள்(பொட்டச்சிய நம்பாதே, பொம்பளைங்க மதிக்க மாட்டேங்கறாங்க.." இன்றளவும் மதுரையின் உள்வட்டங்களில் (வில்லாபுரம்,அவனியாபுரம்,திடீர் நகர்..etc.) இன்னும் சொல்லப்படும் வார்த்தைகளே..

நர்சிம்.

உண்மைத்தமிழன் said...

//narsim said...
ஆழமான பார்வை.. (நம்ம வில்லாபுரத்தை விட்டுட்டீங்களே!..)//

ஆமா.. யோசிக்கும்போது சட்டுன்னு ஞாபகத்துக்கு வராம போயிருச்சு.. நன்றி..

//அருமையான படம்! (காரணங்களை எனது பதிவில் பட்டியலிட்டிள்ளேன்) குறைகளைப் பற்றிய உங்கள் கருத்துக்களும் ஏற்புடையதே!//

வந்து படிக்கிறேன் ஸார்..

//ஆனாலும் அந்த வசனங்கள் (பொட்டச்சிய நம்பாதே, பொம்பளைங்க மதிக்க மாட்டேங்கறாங்க.." இன்றளவும் மதுரையின் உள்வட்டங்களில் (வில்லாபுரம், அவனியாபுரம், திடீர் நகர்..etc.) இன்னும் சொல்லப்படும் வார்த்தைகளே..
நர்சிம்.//

அங்கே மட்டும்தான் என்றில்லை நரஸிம்.. நாடு முழுக்கவே இது போன்ற வார்த்தைகள் நமது குடும்பங்களில் அன்றாடம் பயன்படுத்தப்பட்டே வருகிறது. இதுதான் கலாச்சாரம் என்கிறார்கள்.

இவன் said...

//நிறைய பேர் தவறு செய்வது இங்குதான். தான் பெரிய ஆளில்லை என்ற தன்னடக்கத்தில் அனைவரும் சொல்கின்ற வார்த்தை இது..

ஆனால் சக மனிதர்களை முதலில் மதிக்கக் கற்க வேண்டும். கற்றுக் கொடுக்கவும் வேண்டும்.. ஸார் என்பது ஒரு மரியாதைதான்.. எனக்கு முன்பின் அறிமுகமில்லாதவர்களுக்கு நான் இந்தளவிற்கு மரியாதை தந்துதான் தீர வேண்டும். நேரில் சந்தித்து பழகிய பின்பு நெருக்கமான காலக்கட்டத்திற்குப் பின்பு அவர் ஏற்கும்பட்சத்தில் ஒருமையிலோ அல்லது செல்லப் பெயரிலோ அழைத்துக் கொள்ளலாம்.. இது சக மனிதர்களிடையே பிணைப்பையும், நல்லுறவையும் வளர்க்கும் ஒரு விஷயம்..

நிச்சயம் நான் பின்பற்றுவேன்.. நீங்களும் பின்பற்றுங்கள்.. உங்களுக்குப் பிடிக்கவில்லையெனில் வெகு சீக்கிரமே என்னை நேரில் சந்தித்து நட்புணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும் என என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்ளுங்கள்..

வாழ்க வளமுடன்//


பின்பற்ற முயற்சிக்கிறேன் உண்மைத்தமிழன் Sir,
நாங்கள் புதிதாய் சந்தித்தாலும் நட்பினை வளர்த்துக்கொள்ளத்தான் அவ்வாறு நான் அழைப்பது. அதனால் சற்றே இறுக்கம் குறைந்து சாதாரணமாக பழக கூடியாதாக இருக்கும் அதற்காகத்தான் சொன்னேன் தவறிருப்பின் மன்னிக்கவும். ஆம் கூடிய சீக்கிரம் சந்திப்போம் நான் இந்தியா வரும்போது அல்லது நீங்கள் ஆஸ்திரேலியா வரும் போது

அன்புடன்
இவன்

உண்மைத்தமிழன் said...

//பின்பற்ற முயற்சிக்கிறேன் உண்மைத்தமிழன் Sir,
நாங்கள் புதிதாய் சந்தித்தாலும் நட்பினை வளர்த்துக்கொள்ளத்தான் அவ்வாறு நான் அழைப்பது. அதனால் சற்றே இறுக்கம் குறைந்து சாதாரணமாக பழக கூடியாதாக இருக்கும.் அதற்காகத்தான் சொன்னேன.் தவறிருப்பின் மன்னிக்கவும். ஆம் கூடிய சீக்கிரம் சந்திப்போம். நான் இந்தியா வரும்போது அல்லது நீங்கள் ஆஸ்திரேலியா வரும் போது.
அன்புடன்
இவன்//

நான் ஆஸ்திரேலியா வரும்போது என்று மட்டும் நிறைய முறை நினைத்துக் கொள்ளுங்கள். அப்படியாவது 'எனது ஆகாசக் கனவு' பலிக்கிறதா என்று பார்ப்போம்..)))))))))))))))))

இவன் said...

//நான் ஆஸ்திரேலியா வரும்போது என்று மட்டும் நிறைய முறை நினைத்துக் கொள்ளுங்கள். அப்படியாவது 'எனது ஆகாசக் கனவு' பலிக்கிறதா என்று பார்ப்போம்..)))))))))))))))))//

சரி உண்மைத்தமிழன் sir, நினைவு வைத்துக்கொள்கிறேன்.... கனவு பலிக்க வாழ்த்துக்கள்

manjoorraja said...

அன்பு உண்மைத்தமிழன்
படத்தை மிகவும் ஆழமாக அலசி விமர்சனம் செய்துள்ளீர்கள். இதை விமர்சனம் என்பதைவிட ஒரு கண்ணோட்டம் என்றே கொள்ளலாம்.
இந்த படத்தின் இணை தயாரிப்பாளராகவும் இருந்து இயக்கி வெளியிட்ட சசிக்குமார் மிகவும் பாராட்டத்தக்கவர். தன் திறமையை மட்டுமே நம்பி நடிகர்களை மட்டுமல்லாமல் இசையமைப்பாளர், பாடகர்கள், மற்றும் பல தொழில்நுட்பக்கலைஞர்களை புதுமுகங்களாக அறிமுகப்படுத்தி வெற்றிக்கண்டிருக்கிறார் சசிக்குமார்.

இது உண்மையிலேயே மிகவும் பெரிய சாதனை என்றே சொல்லவேண்டும்.

அவரை வாழ்த்துவோம்.

கண்கள் இரண்டால் பாடலை பாடிய பெள்ளிராஜ், தீபா மற்றும் இசையமைத்த ஜேம்ஸ்வசந்த் அனைவரும் புதுமுகங்களாக இருந்தாலும் திறமையானவர்கள் என்பதை அப்பாடல் நிரூபிக்கிறது.
இவர்களின் சிறப்பு பேட்டி நாளை (15.8.2008) இரவு எட்டு மணிக்கு எஸ் எஸ் ம்யூசிக்கில் ஒளிப்பரப்பப்படுகிறது.

Tech Shankar said...




இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

Tech Shankar said...




இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

இராம்/Raam said...

எங்கூரூ பத்தி வந்த நல்ல படத்துக்கு இப்பிடியொரு மொக்கை விமர்சன பதிவு...... :(


எழவு வெறனத்த சொல்ல???????

உண்மைத்தமிழன் said...

///இவன் said...
//நான் ஆஸ்திரேலியா வரும்போது என்று மட்டும் நிறைய முறை நினைத்துக் கொள்ளுங்கள். அப்படியாவது 'எனது ஆகாசக் கனவு' பலிக்கிறதா என்று பார்ப்போம்..)))))))))))))))))//
சரி உண்மைத்தமிழன் sir, நினைவு வைத்துக் கொள்கிறேன்.... கனவு பலிக்க வாழ்த்துக்கள்.///

நன்றி ஸார்..

உண்மைத்தமிழன் said...

//மஞ்சூர் ராசா said...
அன்பு உண்மைத்தமிழன். படத்தை மிகவும் ஆழமாக அலசி விமர்சனம் செய்துள்ளீர்கள். இதை விமர்சனம் என்பதைவிட ஒரு கண்ணோட்டம் என்றே கொள்ளலாம். இந்த படத்தின் இணை தயாரிப்பாளராகவும் இருந்து இயக்கி வெளியிட்ட சசிக்குமார் மிகவும் பாராட்டத்தக்கவர். தன் திறமையை மட்டுமே நம்பி நடிகர்களை மட்டுமல்லாமல் இசையமைப்பாளர், பாடகர்கள், மற்றும் பல தொழில்நுட்பக் கலைஞர்களை புதுமுகங்களாக அறிமுகப்படுத்தி வெற்றி ்கண்டிருக்கிறார் சசிக்குமார். இது உண்மையிலேயே மிகவும் பெரிய சாதனை என்றே சொல்லவேண்டும்.அவரை வாழ்த்துவோம்.//

நிச்சயம் ஸார்.. புதுமுகங்களை வைத்துப் படமெடுப்பது வாழ்வா, சாவா போராட்டத்திற்குச் சமமானது. அப்படியொரு போராட்டத்தில் துணிந்து இறங்கி ஜெயித்திருக்கிறார் எனில் வாழ்த்தப்படக்கூடியவர் சசிகுமார் என்பதில் எனக்கும் சந்தேகமில்லை.

உண்மைத்தமிழன் said...

தமிழ்நெஞ்சம் நானும் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன்..

நன்றி..

உண்மைத்தமிழன் said...

//இராம்/Raam said...
எங்கூரூ பத்தி வந்த நல்ல படத்துக்கு இப்பிடியொரு மொக்கை விமர்சன பதிவு......:( எழவு வெறனத்த சொல்ல???????//

நன்றி ராம் தம்பீபீபீ..

ERODE KAIPULLAI (a) ERODE MAPILLAI said...

kathi eduthavan kathiyala thaan savan / sariyana vimarasanam.

keep it up

very nice shot

Vishwa said...

very nice review...great...

vishwa