கத பறையும் போள்-குசேலன் - சினிமா விமர்சனம்

01-08-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சில மாதங்களுக்கு முன்னால் ஒரு மாலைப் பொழுது. இயக்குநர் திரு.சசிமோகனை இயக்குநர்கள் சங்கத்தில் சந்தித்தேன். அப்போது சங்கம் தியேட்டரில் ஓடிக் கொண்டிருந்த ஒரு மலையாளத் திரைப்படத்தைப் பற்றி போனில் யாருடனோ நீண்ட நேரமாக ‘கதை’ கட்டிக் கொண்டிருந்தார். பேச்சு சுவாரஸ்யமாக இருக்கவே, அவருடைய போன் பேச்சு முடிந்த பின்பு நான் அந்தப் படத்தைப் பற்றி அவருடன் பேசினேன்.

“ரொம்ப ரொம்ப சின்னக் கதை.. ஆனா மனசை ஆழமா டச் பண்ற கதை.. நம்ம கொட்டாக்காரா சீனிவாசனோடது.. கதாநாயகனே அவர்தான்.. ஆனா மம்முட்டி கெஸ்ட் ரோல்..” என்றார். இதுவே எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது.. ‘மம்முட்டி கெஸ்ட் ரோலா’ என்று கேட்டுவிட்டு கதை பற்றி கேட்டேன். கதையைச் சொல்ல மறுத்துவிட்டு, “உடனே போய் பார்த்துட்டு வந்து சொல்லுங்க..” என்றார்.

மலையாளப் படங்களின் ஆதிக்கமும், தாக்கமும் நல்ல சினிமாவை விரும்புவர்களின் மனதில் எந்த அளவுக்கு பாதித்திருக்குமோ, அதே அளவு என்னையும் தொடக்கக் காலத்திலிருந்தே பாதித்துதான் இருந்தது..

அவசரமாக அன்றைக்கே ஓடினேன். சங்கம் தியேட்டரில் மொத்தமே 20 பேர்தான் இருந்தார்கள். படம், ‘கத பறையும் போள்.’ முதல் பகுதி மிக, மிக யதார்த்தமாக அதே சமயம் சற்று மெதுவாக நகர்ந்தது. ஆனால் இரண்டாம் பகுதி உயிரோட்டமாக எப்படியாவது யாராவது சீனிவாசனை மம்முட்டியின் முன் கொண்டு போய் தள்ளிவிட மாட்டார்களா என்கிற தவிப்புக்குள் நம்மையும் கொண்டு போய் விட்டுவிட்டது.

சீனிவாசன் மற்றும் மம்முட்டியின் யதார்த்தமான நடிப்பு, கோர்வையான திரைக்கதை, அருமையான இயக்கம் என்று சென்ற ஆண்டு சீனிவாசனுக்கு பல திரைப்பட விருதுகளை வாங்கிக் கொடுத்திருக்கிறது இந்தப் படம். படம் பார்த்து முடித்து வெளியே வரும்போது நான் நினைத்தது. “முருகா.. இது நம்மாளுக கண்ல பட்டு, இது மாதிரி உருப்படியா யாராச்சும் எடுக்கணும்னு நினைக்கணுமே..” என்றதுதான். சொன்னது போலவே பட்டுவிட்டது.. ஆனால்.. முருகன் வேறு மாதிரி நினைத்துவிட்டான்.

நட்பு என்பது மனிதர்களுக்கு ஆண்டவன் கொடுக்கும் ஒரு கொடை. அந்த நட்பின் மூலமாகத்தான் அவனது கருணைகளும், அளவற்ற உதவிகளும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவ்வப்போது கிடைக்கும். கிடைக்கின்ற நட்பால்தான் சில நல்ல அனுபவங்களும், பல கெட்ட அனுபவங்களும் மனிதர்களுக்குக் கிட்டுகின்றன.

வாழ்வியலில் நட்புக்கென்றே தனியிடம் இருக்கிறது. பால்ய பருவத்திலும், இளைய பருவத்திலும் நமக்குக் கிடைக்கின்ற நட்பே, பெரியவர்களாகும்போது நமக்குக் கிடைக்கின்ற உயர்வுக்கும், தாழ்வுக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது.

குசேலன் என்றொரு மனிதன் மூலமாக கிருஷ்ண பரமாத்மா நட்பின் ஒரு புற ஆழத்தை உலகத்திற்கு தெரியப்படுத்தியது ஒரு வரலாறு. கர்ணன் துரியோதனன் மீது கொண்ட நட்பின் காரணமாக உயிர் துறந்து நட்பின் இன்னொரு பக்க ஆழம் எவ்வளவு கொடூரமானது என்பதைக் காட்டியதும் அதே வரலாறுதான்..

கர்ணன்-துரியோதன் நட்பிற்காக ‘தளபதி’ என்றொரு பதத்தை முன்னமே நாம் பருகிவிட்டதால், பாக்கியிருந்தது இந்த ‘குசேலன்’தான்.. இப்போது இதுவும் பரிமாறப்பட்டுவிட்டது ரஜினியினால்..!

பிற்பட்டோர் நலத்துறை அலுவலகத்திலிருந்து கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளப்படும் பாலகிருஷ்ணனோடு துவங்கிய படம், “எனது உயிர் நண்பன்.. நான் ரொம்ப வருஷமா தேடிக்கிட்டிருந்த என்னோட பாலகிருஷ்ணன் இவன்தான்..” என்ற வசனத்தோடு நிறைவடைகிறது.

எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் இருக்கும் ஒரேயொரு நாற்காலி.. துருப்பித்த நிலையில் இருக்கும் கத்தி, முடிக்கற்றைகள் நீக்கப்படாமல் இருக்கும் சீப்புகள் என்று குப்பைகளே குவிந்து கிடக்க ‘அழகு நிலையம்’ என்று பெயரில் மட்டுமே அழகை வைத்திருக்கும் ஒரு தரித்திர சலூன் கடைக்குச் சொந்தக்காரன் பாலகிருஷ்ணன்.

காதல் மனைவி ஸ்ரீதேவி.. இரண்டு பெண் குழந்தைகள், ஒரு பையன் என இந்தியாவின் ஜனத்தொகையில் மூன்றைக் கூட்டிய புண்ணியத்தைக் கட்டிக் கொண்டு புவ்வாவுக்கு, உவ்வா தேடிக் கொண்டிருக்கும் நிலைமை பாலகிருஷ்ணனுக்கு..

இவனிடம் தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்து இப்போது இவனது கடைக்கு எதிரிலேயே நிஜமான ‘அழகு நிலையம்’ ஒன்றை நடத்தி பாலகிருஷ்ணனின் சோத்தில் மண்ணை வாரியள்ளிப் போட்ட சிஷ்யன் வடிவேலு.

லோக்கலில் 4 ஆட்களை போலீஸ் போல் வேடமிட்டு, அதிகமாக முடி வளர்த்திருப்பவர்களை ஜீப்பில் அள்ளிப் போட்டுக் கொண்டு அழகு நிலையத்திற்கு கொண்டு வந்து, மயக்க மருந்து தெளித்து மொட்டையாக்கி, பின் அவர்களது பாக்கெட்டையும் மொட்டையாக்கி அதன் மூலம் கொள்ளையடிக்கும் புண்ணியவனாக ஜமாய்த்திருக்கிறார் வடிவேலு.

குருவின் சோத்தில் மண்ணையள்ளிப் போட்டதால், வடிவேலுவுக்கு சொந்த வாழ்க்கையில் அள்ள முடியாத அளவுக்கு மண். மனைவி என்ற பெயரில் ஒரு கேரக்டர்.. “தினமும் 1000 ரூபாய் சம்பாதித்துக் கொடுத்தால்தான் நமக்குள்ள ‘அது’..” என்று சொல்லும் அளவுக்கான சிற்றின்ப தூண்டுதல்..

பண்ணையார் என்று இப்போது சொன்னால் தியேட்டர் ஆபரேட்டரே கடுப்பாகிவிடுவான் என்பதால் ‘ஊரில் பெரிய தலை’ என்ற பெயருடன் பறையூர் குப்புசாமி என்றொரு முதலாளி. இவனை ‘குப்பைசாமி’ என்று சொல்வதற்கு கூடவே ஒ ரு அல்லக்கை.. குப்புசாமியின் லட்சியக் கனவான ஒரு திரைப்படம் எடுத்து அதில் டைட்டிலில் ‘தயாரிப்பு’ என்ற பெயரின் கீழ் ‘பறையூர் குப்புசாமி’ என்றிருக்க வேண்டும் என்ற வெறிக்கு அவ்வப்போது சாம்பிராணி போட்டு புகை மங்கிவிடாமல் பார்த்துக் கொள்ளும் ஒரு அசட்டு இயக்குநர்..

இவர்களோடு கிடைத்த இடத்தில் பூட்டை உடைக்காமல் ஜன்னலை மட்டுமே திறந்து உள்ளே இடம் பிடித்து சீட்டு விளையாடும் கவலையில்லாத இரண்டு இந்தியக் குடிமகன்கள்..

இப்படி பறையூர் என்ற மலையடிவாரத்தில் படர்ந்திருக்கும், ஒரு ஊரில் இருக்கும் அரைவாசி மக்களையும் கதாபாத்திரங்களாக்கியதால் படத்தின் நீளம் தவிர்க்க முடியாமல் போய்விட்டதாம் இயக்குநருக்கு.

பறையூர் குடிமகன்களின் அன்றாட வாழ்க்கை, சூப்பர் ஸ்டார் அசோக்குமாரின் வருகையால் எப்படி தலைகீழாக மாறுகிறது என்பதுதான் முதல் பாதி கதை..
இதைச் சொல்வதற்குத்தான் இயக்குநர் முயன்றிருக்கிறார். ஆனால் அதீதமான நாகரிக உணர்வு, இயக்குநர் என்ற உரிமையில் தலையிடாமை என்று திரைப்பட உலகம் கொண்டாடும் ஒரு சில விஷயங்களில் தீவிரமாக இருக்கும் திரையுலகப் பிரம்மாக்களால் இதனை மீறி செயல்பட முடியாமல் போயிருக்கும் என்று நினைக்கிறேன்.

பசுபதியைப் பொறுத்தமட்டில் ‘வெயில்’ படத்தில் நான் பார்த்த பசுபதியே வேறு. ஆனால் இங்கு கடைசிக் காட்சியில் மட்டுமே அவரை நடிக்க வைத்திருக்கிறார்கள். அதுவும் வேறு வழியில்லாமல்.. மீதி காட்சிகளில் நடிக்க முயன்றிருக்கிறார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

மலையாளத்தில், சீனிவாசன் சுழல் நாற்காலி செய்வதற்காக மரத்தைத் தேடியலைந்து வருகின்ற காட்சியில் பண்ணையாரான இன்னசென்ட்டின் இயல்பான அட்டகாச நடிப்பில் சீனிவாசனின் அப்பாவித்தனமும், சோகமும், ஒரு நாற்காலி செய்யக்கூட வக்கில்லாத நிலையில் இருக்கும் அவருடைய இயலாமையும் முதல் பத்து நிமிடத்திலேயே படம் பார்த்தவர்கள் மனதில் ஒரு பாரத்தை ஏற்படுத்தியது..

ஆனால் இதில்.. பசுபதியின் பேச்சிலும், எதிர்வாதம் செய்யும் லிவிங்ஸ்டனின் வாதத்திலும் கந்துவட்டி மேட்டரும், பசுபதியின் கொள்கையும் மட்டுமே பட்டவர்த்தனமாகத் தெரிந்தது.

பீஸ் கட்டாததால் மகளை பள்ளியிலிருந்து நீக்கிவிட்டது தெரிந்து பிரின்ஸிபாலிடம் வந்து சண்டையிடும் பசுபதியின் நடிப்பும், பேசும் பேச்சுக்களும் அவர் மீது பரிதாபம் வர வேண்டிய நிலையிலிருந்து விலகி எங்கோ சென்றுவிட்டது.

“என்னை எப்பப்பா ஸ்கூல்ல இருந்து நிப்பாட்டப் போற?” என்ற இன்னொரு பிள்ளையின் கேள்வியும், பதிலும் பசுபதியின் குடும்ப வறுமையை வெளிச்சம் போட்டுக் காட்ட எந்தவிதத்திலும் உதவவில்லை.

வறுமை தாண்டவமாடும் வீடு என்று ஒரு வெளிப்புற அமைப்போடு வீட்டைக் காட்டிவிட்டாலே போதும்.. கூடவே ஒரு காலம், காலமாக ஒப்பாரி வீட்டுக்குப் பயன்படுத்தும் பியானோ இசையைத் தவழ விட்டாலேபோதும்.. ரசிகர்கள் மனதில் சொந்த வீட்டுச் சோகம்போல் படம் அப்பிக் கொள்ளும் என்று தப்புக் கணக்குப் போட்டுவிட்டார்கள்.

சட்டி உடைந்ததாகச் சொல்லி பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் மீனா பேசுகின்ற பேச்சில் தொக்கி நின்றது ஓசி கேட்பது போன்ற நிலைமைதானே தவிர, மண் சட்டி பயன்படுத்தும் குடும்பம் என்று இயக்குநர் பதிய நினைத்த தகவல் அல்ல.

அதிலும் மீனா நடித்திருப்பதாகச் சொன்ன காட்சிகளெல்லாம் வசனங்களை வலிந்து, வலிந்து துப்பியதைப் போன்ற உச்சரிப்பு.. எடுத்ததெல்லாம் இயக்குநர்தானா என்ற சந்தேகம் வருகிறது.. ஆனால் மலையாளத்தில்.. சின்னச் சின்ன வரிகளுடன், முகச் சுழிப்புகளுடன் மீனாவின் உரையாடல் சற்றும் நெருடலைத் தராமல் இருந்தது.

‘சந்திரமுகி’யின் அபார வெற்றியினால் அதனை மீண்டும் ருசி பார்த்துவிட வேண்டும் என்ற வெறியில் இருந்த இயக்குநருக்கு, வடிவேலு தவிர்க்க முடியாதவராகத்தான் இருந்திருப்பார். ஆனால் அதே போன்ற ‘காமநெடி’ காமெடி இந்தப் படத்திலும் தேவைதானா என்றும் யோசித்திருக்கலாம்.

கதையோடு ஒட்டாமல் தனி டிராக் போட்டு வடிவேலுக்காகவே எடுத்தது போல் இருக்கிறது. அதிலும் ஜொள்ளுவிடும் இளைஞர்களுக்காக தினம் “1000 ரூபாய் சம்பாதித்தால்தான் ‘அது’..” என்று சொல்லுமளவுக்கு சர்வசாதாரணமாக ‘சாம்பார்ல உப்பு போட மறந்திட்டேன்’ என்று சொல்வதைப் போல எடுத்திருப்பது காமெடியாகவும் இல்லாமல் போய்விட்டது.

அதே போல வடிவேலு ரஜினியைப் பார்க்க யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள் வரும்போது, நயன்தாராவின் அறையில் அவரது அழகை வாயில் ஜொள்ளு வடிய பார்த்து ஏங்கும் காட்சியில் சிரிப்புக்குப் பதிலாக ‘உவ்வே’தான் வருகிறது.

ஆனாலும் வடிவேலு எப்போதும்போல் தனித்துவமாகத் தெரிகிறார். அடியாட்களான போலீஸ் பிடித்து வருபவர்களை மொட்டையடித்து அனுப்பிவிட்டு தனது கடையில் இருந்து பார்க்கும் தனது முன்னாள் முதலாளி பசுபதியின் பொறாமைக் கண்ணுக்காக பூசணிக்காயை உடைக்கும்படி சொல்வதுவரையிலும் ‘சலூன் சண்முகம்’ அப்படியே அச்சு அசலாக வந்துவிடுகிறார்.

சூப்பர் ஸ்டார் அசோக்குமாரின் தீவிர ரசிகர் என்பதை இரண்டாம்பட்சமாக வைத்துவிட்டு மனைவியின் வேண்டுகோளுக்காக (முக்கியமாக ‘அது’க்காக) அசோக்குமாரை பார்க்க விரும்பி அவர் படும் அல்லல்கள் பசுபதியின் முயற்சிகளைவிடவும் வடிவேலுதான் முக்கியம் என்பதாகப் போய் முடிந்துவிட்டது.

அதிலும் அவர் ரஜினியின் காலடியில் விழுந்து எழுந்து தனது சூப்பர் ஸ்டாரைப் பார்த்தவுடன் அவர் பேசுகின்ற பேச்சும், காட்டுகின்ற ஆக்ஷனும் அசத்தல். ஒட்டு மொத்த சூப்பர் ஸடார் ரசிகர்களின் உணர்வையும் குத்தகைக்கு எடுத்துவிட்டதைப் போன்ற உணர்வு. ரஜினி ரசிகர்களின் பெரிய அளவு ஆரவாரம் இக்காட்சிக்கே கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

ஆனாலும் என்னுடைய ஒரே ஆச்சரியம், டப்பிங்கில் வடிவேலு இதனை எப்படி பிசிறில்லாமல் பேசினார் என்பதே.. படத்துக்குப் படம் மனிதர் நடிப்பில் கூடிக் கொண்டே போகிறார்.

மலையாளத்தில் இது போன்ற மிகைப்படுத்தப்பட்ட காட்சியமைப்புகள் ஏதுமில்லை. கூடவே நடிகர் முகேஷின் கதாபாத்திரமும் இதில் இல்லை. முகேஷ் டுடோரியல் காலேஜ் நடத்தி வரும் உள்ளூர்க்காரராக அதில் வருவார். பஞ்சப் பரதேசியாக காலேஜை நடத்தி வரும் முகேஷ், படிக்கின்ற மாணவர்களிடமே பல்வேறு வழிகளில் பணத்தை சுரண்ட முயன்று ஒவ்வொரு முறையும் தோல்வியடையும் ஒரு பரிதாபமான கேரக்டராக காட்சியளிப்பார். தமிழில் அந்தக் கேரக்டர் சுத்தமாக மழிக்கப்பட்டுவிட்டது. (இங்கே ஒரு விஷயம் : ‘கத பறையும் போள்’ படத்தின் தயாரிப்பாளர் நடிகர் முகேஷ்தான்)

சினிமாக்காரர்களைப் பற்றி சினிமாக்காரர்களே வெளியில் சொல்வது “அவுகளுக்கு நடிக்கத் தெரியாது” என்பதுதான். 100 ரூபாய் நோட்டைத் தவிர மற்ற நோட்டுக்களை கண்ணில்கூட பார்த்திராத பறையூர் மக்களிடம் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை அள்ளிக் கொடுக்கின்றபோது, இந்த பந்தாதான் சினிமா மீதான மோகத்தை அப்பாவி மக்களின் மனதில் ‘ஏதோ ஒன்று’ என்று நினைக்கத் தோன்றுவது.

ரஜினியின் வருகை அந்த ஊர் மக்களைவிட வியாபாரிகளைத்தான் அதிகம் சந்தோஷத்தில் ஆழ்த்துகிறது. இதனை மலையாளப் படத்தில் மிக அழகாக செய்திருந்தார்கள். தமிழில் மிகப் பெரிய கோட்டைவிட்டது இங்குதான்..
ரஜினிக்கு பாதுகாப்பு வழங்க வரும் கலெக்டர், பாதுகாப்பு அதிகாரிகள், இதற்கு காரணம் நக்ஸலைட்டுகள் என்று சொல்லி பிரபுவை வரவழைத்து செக்யூரிட்டி வைத்து.. இந்த கோல்மாலுக்கெல்லாம் பேசாமல் அந்த முகேஷ் கேரக்டரையே வைத்திருக்கலாம்.. படத்தின் மென்மையான கதைக்கு ஊறு விளைவிக்காமல் உன்னதம் சேர்த்திருக்கும்.

ரஜினியைச் சந்திக்க பசுபதி எடுக்கும் முயற்சிகள் தோல்வியடைவதற்கு காரணம் அவனுடைய வேண்டா வெறுப்பான அரைகுறையான முயற்சிகளால்தான் என்பதை மலையாளத்தில் தெளிவாகச் சொல்லியிருந்தார்கள். தமிழில் அதை அப்படியே உல்டா செய்ததால் காட்சிகள் சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றி சிரிப்புதான் வருகிறது. ஆனாலும் இதனை வசனத்தால் நிரப்பியிருப்பது ஒட்டவில்லை என்பதும் உண்மை.

“எங்க வீட்டுக்காரருக்கு அசோக்குமார் ரொம்ப தோஸ்தாக்கும்..” என்ற மீனாவின் அலம்பலும், “அச்சச்சோ.. நான் ஊர் முழுக்கச் சொல்லி வைச்சிட்டனே..” என்கிற புலம்பலும் மிக செயற்கையாக இருந்துவிட்டது ஏன் என்றுதான் புரியவில்லை. மலையாளத்தில் இப்படி இல்லையே..

நயன்தாரா என்றொரு தாரகையின் பிரம்மாண்டமான உடல் அழகால் மட்டுமே ‘பில்லா’ என்றொரு படம் சக்கைப் போடு போட்டதை மறந்துவிட்ட இயக்குநர், அவரை ஊறுகாயாகத் தொட்டுப் பார்த்திருக்கிறார். ‘சாரல்’ பாடல் காட்சியில் அது நயன்தாராதானா அல்லது வேறொருவரா என்று கேட்கும் அளவுக்கு இருந்தது.

படத்தில் காணப்பட்ட மிகப் பெரிய குறை இசை. எதுவும் மனதில் நிற்காமல், தாளம் போட வைக்காமல் என்ன பாட்டு, என்ன மியூஸிக் என்று எரிச்சல் வந்தது.. இயக்குநர் மிக மிக அசாத்தியமான நம்பிக்கையில்தான் இந்த இசையமைப்பாளரை புக் செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.. அத்தனையும் வீண்.

பிரபு, லிவிங்ஸ்டன், R.சுந்தர்ராஜன், சந்தானபாரதி, T.P.கஜேந்திரன், நிழல்கள் ரவி, மனோபாலா, M.S.பாஸ்கர், கீதா, தியாகு, கவிதாலயா கிருஷ்ணன், மதன்பாப், மயில்சாமி, சந்தானம், OAK தேவர், பாத்திமாபாபு என்று பல்வேறு பிரபலங்களையெல்லாம் வளைத்துப் போட்டு எடுத்திருக்கிறார்கள். இதில் அஸிஸ்டெண்ட் டைரக்டராக நடிகை மம்தாவும் நடித்திருக்கிறார். 4 காட்சிகளில்தான் தெரிகிறார்.

காமெடி என்பது வெறும் வசன உச்சரிப்பு மட்டுமே அல்ல.. இதற்கு மேலும் ஒன்று வேண்டும்.. அது என்ன என்பதை சந்தானம், வடிவேலுவிடம் கொஞ்சம் கற்றுக் கொள்ளலாம். உச்சஸ்தாயியில் பேசுவதைத் தவிர வேறு எந்த மாற்றமும் இல்லாமல் பேசுவது அடுத்தடுத்தப் படங்களில் அவரை மறக்கடித்துவிடும் அபாயம் உண்டு.

பள்ளி ஆண்டு விழா வரையிலும் ‘பாலகிருஷ்ணன்’ என்ற பெயரையே ரஜினி உச்சரிக்காமல் மேடையில் பேசுவதுதான் படத்தின் ஹைலைட். கதை ஆசிரியரின் திறமை இங்குதான் பளிச்சிடுகிறது.

ஆனாலும் ரஜினிக்காக சில வசனங்களை சேர்த்துக் கொடுத்து மயக்கியிருக்கிறார்கள். மலையாளத்தில் மம்முட்டியின் கண்களில் கண்ணீர் வடிவதை நான் பார்க்கவில்லை. ஆனால் இதில் ரஜினி சிந்தும் கண்ணீர்தான் அடுத்த காட்சிக்கு காத்திருக்கும் ரசிகர்களுக்கு, படம் முடிந்து வெளியில் வரும் ரசிகர்கள் சொல்லப் போகும் விஷயம் என்பது மறுக்க முடியாத உண்மை.

கடைசி இரண்டு ரீலில் படம் பார்த்தவர்களை மயக்கிவிட முடியும் என்று முன்பே வரிந்து கட்டிக் கொண்டு திட்டமிட்டே செயல்பட்டிருப்பதால் கதை இப்படித்தான் போகும் என்று எதிர்பார்க்காதவர்களுக்கு அது ஒரு உன்னதமான ‘ஆட்டோகிராப்’ நினைவுகளை நிச்சயம் தூண்டியிருக்கும். கதாசிரியர் ஜெயித்தது இங்குதான். ‘முத்து’ படத்திற்குப் பின் இந்தப் படத்தில்தான் ரஜினி அழுதிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

வீட்டிற்கு வரும் ரஜினியின் வருகையை கொஞ்சம்கூட பார்வையாளனுக்கு முன்கூட்டிய தெரிவிக்காத அளவுக்கு வைத்திருந்ததுதான் கதையின் இன்னொரு ஸ்டைல். இந்த இடத்தில் ரஜினியின் வருகை பசுபதிக்குத் தெரிகின்ற இடத்தில் கொஞ்சம் காட்சிப்பிழை இருந்தது என்பதையும் சொல்லத்தான் வேண்டும்.

செல்லமான கோபத்தில் பசுபதியின் கன்னத்தில் அறைந்து தனது நட்பை பறை சாற்றி, பட்டென்று இறுகக் கட்டியணைத்து நெகிழும் ரஜினியின் வேகத்தில், நிச்சயம் அவரது ரசிகர்களின் மனம் கரையும் என்று நினைக்கிறேன்.

முன்னமேயே மலையாளப் படத்தைப் பார்த்துவிட்டதனால் எனக்கு இவைகளைத்தான் சொல்லத் தோன்றியது.. ஆனால் மலையாள மூலத்தைப் பார்க்காதவர்களுக்கு ‘குசேலன்’ சொல்லப் போவது நட்பின் வலிமையையா அல்லது இதுவும் இன்னொரு திரைப்படம் அவ்வளவுதான் என்கிற பதிலையா என்பது சில நாட்களில் தெரியுமென்று நினைக்கிறேன்.

மிக, மிக அவசரமாக குறுகிய கால தயாரிப்பாக, எடுக்கப்பட்டாக வேண்டும் என்கிற அவசரத்தில் எடுக்கப்பட்ட படமாதலால் இப்படியானதாக சொல்லலாம்.

டைட்டிலில்கூட 'பாடலாசியர்கள்' என்று ‘ரி’-யை கழட்டிவிட்டு போடப்பட்டிருந்ததே, எனக்கு முதல் அதிர்ச்சி. இவ்வளவு அவசரமா?

படத்தின் நீளம் கருதி பல்வேறு காட்சிகள் அவசரம், அவசரமாக சுருக்கப்பட்டிருந்தது, வெட்டப்பட்டிருந்தது தெளிவாகத் தெரிந்தது. overlap-ஆக ஸ்டில் காட்சிகளின் மேல், அடுத்தக் காட்சி வசனங்கள் பிரதியிடப்பட்டிருந்தது. இது போன்ற சின்னச் சின்னத் தவறுகளை நீக்கியிருக்கலாமே என்று தோன்றுகிறது.

ஆனாலும் படத்திற்குள் காணப்பட்ட சில அம்சங்கள் இத்திரைப்படத்தை பல்வேறு விதங்களில் அலசி ஆராயும் நோக்கில் அமைக்கப்பட்டிருப்பது கொஞ்சம் ஆச்சரியம்தான்..

முதல் காட்சியில் பிற்பட்டோர் நலத்துறை அலுவலகத்திற்கு வரும் பாலகிருஷ்ணன், “லஞ்சம் கொடுக்க மாட்டேன். எனக்குப் பிடிக்காது..” என்று எழுதிக் கொடுத்து அதனை சம்பந்தப்பட்ட அலுவலரையே படிக்க வைக்கிறான்.

அதுவரையிலும் காட்டப்படாத அம்பேத்காரின் புகைப்படம், “இவனை கழுத்தைப் பிடிச்சு வெளில தள்ளு..” என்ற அலுவலரின் ஆணையின்போது காட்டப்படுவதில் அரசியல் இல்லை என்று சொல்லிவிட முடியாது. இங்கே அம்பேத்காரின் புகைப்படம் ஒரு குறியீடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நினைக்கிறேன்.
* * * * *
திரைப்படத்திற்குள் எடுக்கப்பட்ட இன்னொரு திரைப்படமாக வரும் காட்சிகளில் ரஜினி தான் நினைத்திருப்பதை, சொல்ல வந்ததை தனது நெருக்கமான இயக்குநர் மூலம் இப்படத்தில் சொல்லியிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்.

சாமி கும்பிட்டுவிட்டு பூமியைத் தோண்டும் நிலையில் இருப்பவர்களிடம் செம்மண் புழுதி பறக்க காரில் வந்திறங்கும் நயன்தாராவிடமிருந்துதான் ரஜினியின் முதல் கலகக் குரல் பிறக்கிறது.

“எல்லோரும் உடனே இந்த இடத்தை காலி செஞ்சாகணும்.. நான் இதனை விலைக்கு வாங்கப் போறேன்.. இந்த இடத்துல IT Park கட்டப் போறேன்..” என்கிறார் நயன்தாரா.

“இதெல்லாம் விவசாய நிலம்மா.. இதுல போய் நீங்க கட்டிடம் கட்டுறேன்னா விவசாயம் மட்டுமே தெரிஞ்ச நாங்கள்லாம் எங்க போறது?” என்கிறார் விவசாயி விஜயகுமார். “அதெல்லாம் எனக்குத் தெரியாது.. நீங்க உடனே இடத்தைக் காலி பண்ணியாகணும்..” என்றபோது பறந்து வந்து நிற்பார் என்ற என் நினைப்பில், மண்ணை அள்ளிப் போட்டுவிட்டு டிராக்டரில் பாந்தமாக வந்திறங்கும் ‘குருசிஷ்யன்’ ரஜினி தான் அந்த நிலத்தை ஏற்கெனவே விலைக்கு வாங்கி பத்திரத்தை பதிவு செய்த விவரத்தை நிழல்கள் ரவி மூலமாகச் சொல்கிறார்.

மேற்கொண்டு பேசுகின்ற ரஜினி, ‘விவசாயிகளைத் துரத்திவிட்டு அந்த இடத்தில் கம்ப்யூட்டர் நிறுவனம் வருவதால் யாருக்கு லாபம்..? விவசாயிகளையும் அவர்களுக்குத் தெரிந்த விவசாயத்தையும் என்ன செய்யச் சொல்றீங்க? அவங்க வாழ்க்கைக்கு என்ன பதில்?’ என்று கேள்விகளை அடுக்கும்போது எனக்கு ‘பாட்டாளி தலைவர்’தான் ஞாபகத்திற்கு வந்தார். ஒருவேளை தைலாபுரம் டாக்டர் இந்தப் படத்தைப் பார்த்தால்(?) முதல் தடவையாக ரஜினியை பாராட்டினாலும் பாராட்டலாம்.

கதைக்குள் கதையாக, உள்ளடக்கிய சொல்லாடல்களால் குறி வைத்து அரசைத் தாக்கியிருக்கும் ரஜினியின் இந்தப் பேச்சு ஊடகங்களால், ரசிகர்களால் கவனத்திற்கொள்ளப்படாமல் போனால் அதற்கு நயன்தாராவைத் தவிர வேறு யாரும் காரணமில்லை. முக்காலே மூணுவீசம் உடையில், கால் டிராயர் அணிந்த நிலையில் தனது இடது தொடை முழுவதையும் தான் வந்த கார் மீது தூக்கி வைத்து 70 MM திரை முழுவதையும் ஆக்கிரமித்துகாட்டி நின்றிருக்கும் நயன்தாராவின் ‘கொள்ளை அழகில்’ இந்த வசனங்கள் ‘விசிலடிச்சான் குஞ்சுகளை’ கவராமல் போவது உறுதியென்றே நினைக்கிறேன்.
* * * * *
பள்ளியில் பேரண்ட்ஸ்-டீச்சர் மீட்டிங்கில் சுந்தர்ராஜன் சினிமாக்காரர்களைத் தாக்கோ தாக்கென்று தாக்கி பேசுவதைக் கேட்கும்போது, தனது முதல் படமான ‘நீங்களும் ஹீரோதான்’ என்ற படத்தில் இது போன்ற வசனங்களை எழுதிவிட்டு அல்லல்பட்ட வி.சேகர்தான் எனது நினைவுக்கு வந்தார். ஆனால் இது சூப்பர் ஸ்டார் படம். கேள்வி கேட்பாரே இல்லை..
* * * * *
இரண்டாவதாக ஆர்.சுந்தர்ராஜன், ரஜினியை பள்ளி விழாவுக்கு அழைக்க வந்து பேசுகின்ற பேச்சு, நிச்சயம் ரஜினியின் ஒப்புதல் இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. ரசிகர்களின் கை தட்டலில் இரண்டாமிடத்தை இக்காட்சிதான் பிடிக்குமென்று நினைக்கிறேன்.

“அது என்னங்க அது? அரசியலுக்கு வருவேன்றீங்க? ஆனா இப்ப இல்லை.. எப்ப வருவேன்னு எனக்கே தெரியாது.. ஆனா வர வேண்டிய நேரத்துல கண்டிப்பா வருவேன்ங்குறீங்க? என்னங்க இது?” என்ற கேள்விக்கு ரஜினியளிக்கும் பதிலைக் கேட்டால் அந்த ஒரு வசனத்தை வைத்து இத்தனை வருடங்கள் கும்மியடித்த பத்திரிகைகளை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது.

தன் மனதில் இருப்பதை.. தான் பத்திரிகைகளுக்கு சொல்ல நினைத்ததை சுந்தர்ராஜன் மூலமாக ரஜினி சொல்லியிருக்கிறார் என்றே எடுத்துக் கொள்ளலாம். அதிலும் கமல், அமிதாப்பச்சனை இணைத்து கேள்விகளை கேட்க வைத்திருப்பதன் மூலம் திரைப்படத்துறையின் அனைத்து சுப்ரீம் கேள்விகளுக்கும் பதில் சொல்லும் அத்தாரிட்டி நான்தான் என்பதை ரஜினி சொல்லாமல் சொல்லியிருப்பது போல் தெரிகிறது.

“எனக்கு ஒண்ணு ஆச்சுன்னா, உங்களை உசிரோட எரிச்சிருவாருங்க.. அதுனாலதான் இவ்வளவு பாதுகாப்பு..” என்ற ரஜினியின் வசனமும் கொஞ்சம் டூமச்சாகத் தெரிந்தது எனக்கு..

“இந்தாளை நான் அந்த பங்ஷன்ல பார்த்தேன்.. அடிதான்..” என்று ரஜினி சுந்தர்ராஜனை கைகாட்டிச் சொல்லிவிட்டுப் போகும் வசனத்தைக் கேட்டவுடன் இதே ஆர்.சுந்தர்ராஜனின் இயக்கத்தில் வந்த ‘ராஜாதிராஜா’வின் கிளைமாக்ஸில் “ஒரு குஷ்டரோகியைக்கூட உள்ள விடு.. ஆனா இந்தாளை உள்ளவிடாதே..” என்று வினுசக்கரவர்த்தியைக் கை காட்டி சொல்வது, பட்டென்று என் ஞாபகத்திற்கு வந்தது. ரிப்பீட்டு..
* * * * *
பெருங்கதையாடல், சிறுகதையாடல் என்றெல்லாம் பாடம் படிக்காமல் திரைப்படம் வாயிலாக உன்மத்தமான ஒரு விஷயத்தைச் சொல்ல வந்து பாழாய்ப் போன தமிழ்ச் சினிமாவுக்கே உரித்தான கமர்ஷியல் அயிட்டங்களைச் சேர்த்துக் கொடுக்க வேண்டிய கட்டாயம் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநருக்கும் இருந்ததால் ‘குசேலன்’ மலையாள மூலத்திலிருந்து முடிந்தவரை பிரதியெடுக்காமல், சிலவற்றை காப்பி மட்டுமே செய்திருக்கிறது என்று சொல்லலாம்.

இந்த ஒரு பிரதி மூலம், இன்னும் பல்வேறு மூலங்களையும் பல்வேறு மொழிகளிலிருந்தும் நமது தமிழுக்கு இறக்குமதி செய்யப்படும் சாத்தியத்தை தோற்றுவித்திருக்கிறது என்பது தமிழ்ச் சினிமாவுக்கு நல்லதொரு விஷயம்தான் என்ற ஒரு ஆறுதலை மட்டும் நான் அடைந்து கொண்டேன்..

ரஜினிக்கும் ஒரு தேங்க்ஸ் சொல்ல வேண்டும். ஏனெனில் இந்த நட்பின் ஆழம் சொல்லும் கதையை வேறொருவர் எடுத்திருந்தால், அது பெருவாரியான ரசிகர்களின் பார்வைக்குச் சென்றிருக்க முடியாது. ரஜினி என்கிற மாஸ் மீடியாவால் மட்டுமே இது தமிழ் சினிமா ரசிகர்களில் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்களை அடைந்திருக்கும் சாத்தியம் உண்டு என்று நான் நம்புகிறேன்.

அந்த வகையில் ரஜினியை இந்த ஒரு விஷயத்துக்காகவே நாம் பாராட்டலாம்.

இப்படியொரு சிறப்பான கதையைக் கொடுத்து தமிழ் சினிமாவுக்கும் கொஞ்சம் பெருமை சேர்த்திருக்கும் கொட்டாக்காரா சீனிவாசன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

14 comments:

Athisha said...

\\ இப்படியொரு சிறப்பான கதையைக் கொடுத்து தமிழ் சினிமாவுக்கும் கொஞ்சம் பெருமை சேர்த்திருக்கும் கொட்டாக்காரா சீனிவாசன் அவர்களுக்கும் எனது நன்றிகள். \\

நானும் நன்றிகளை தெரிவித்துகிறேனுங்கோ

Athisha said...

மின்னஞ்சலுக்கு

Anonymous said...

வழமைபோல உங்கட ஒரு பதிவு.. நீளம் அதிகந்தேன்.. ஆனாலும் குசேலனை எல்லா இடத்துலேயும் குதறி எடுக்கும்போது இது தேவைதானா..?

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

அனைவரும் நெகடிவ் ஆக எழுதியுள்ளனர் .
நீங்கள் உம்ம்ம்ம்ம்ம்ம் ....பாதி பாசிடிவ் பாதி நெகடிவ் .
நான் இந்த படம் இருபத்து ரூபாய்க்கு டிக்கட் வந்தபிறகு தான் பார்க்கவேண்டும் என்று சபதம் கொண்டுள்ளேன் !

Anonymous said...

குசேனல் மிக மிக அற்புதமாக வந்து இருக்கும் படம்.. படத்தின் இறுதி காட்சியில் கண்களில் தண்ணீர் விடாமல் செல்லும் ஆட்கள் மிகவும் குறைவு.ஆனால் இணையத்தில் வெறியர்கள் மிகவும் கேவலமாக படத்தை விமர்சிக்க தெரியாமல் எழுதுகிறார்கள்.

உங்கள் அற்புதமான விமர்சனத்து நன்றி

உண்மைத்தமிழன் said...

தம்பி அதிஷா நன்றியோ நன்றி..

பிரச்சினை எங்கே போகிறது என்று பார்த்தாயா..?

எடுத்தவிதம் தவறு என்பதை சொல்ல மறந்து, தனி நபர் விரோத பிரச்சாரத்தில் இறங்கிவிட்டார்கள்.

ஜெயித்த போது பிடித்திருக்கிறது என்றவர்கள், பிடிக்காதபோது அதையே ஒரு வரியில் சொல்லலாம்..

ம்.. பசங்க வளர்ந்துட்டாங்க.. வேறென்ன சொல்றது..?

இப்போது அவர்கள் மனதுக்கு அந்த உணர்வு தேவையில்லையே.. அதுதான்..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
வழமைபோல உங்கட ஒரு பதிவு.. நீளம் அதிகந்தேன்.. ஆனாலும் குசேலனை எல்லா இடத்துலேயும் குதறி எடுக்கும்போது இது தேவைதானா..?//

கண்டிப்பாகத் தேவை.. ஒத்தடம் கொடுக்கவாவது ஆள் வேண்டாமா..? அதுக்குத்தான்..

உண்மைத்தமிழன் said...

//ARUVAI BASKAR said...
அனைவரும் நெகடிவ் ஆக எழுதியுள்ளனர். நீங்கள் உம்ம்ம்ம்ம்ம்ம் ....பாதி பாசிடிவ் பாதி நெகடிவ். நான் இந்த படம் இருபத்து ரூபாய்க்கு டிக்கட் வந்தபிறகுதான் பார்க்கவேண்டும் என்று சபதம் கொண்டுள்ளேன்!//

நன்றி பாஸ்கர் ஸார்.. பார்க்கவே வேண்டாத படமில்லை இது. ஒரு தடவை பார்க்கலாம்.. நல்ல கதை.. எடுத்தவிதம்தான் தவறு..

உண்மைத்தமிழன் said...

//சுந்தர் said...
குசேனல் மிக மிக அற்புதமாக வந்து இருக்கும் படம்.. படத்தின் இறுதி காட்சியில் கண்களில் தண்ணீர் விடாமல் செல்லும் ஆட்கள் மிகவும் குறைவு.ஆனால் இணையத்தில் வெறியர்கள் மிகவும் கேவலமாக படத்தை விமர்சிக்க தெரியாமல் எழுதுகிறார்கள். உங்கள் அற்புதமான விமர்சனத்து நன்றி//

மிக மிக அற்புதமான படம் என்பது அதீதமான நம்பிக்கை சுந்தர். அற்புதம் என்றுகூட இந்தப் படத்தைச் சொல்ல முடியாது.. ஒரு நல்ல கதையுடன் வந்திருக்கும் ஒரு திரைப்படம் அவ்வளவுதான்.. வேறொன்றுமில்லை.

றிசாந்தன் said...

குசேலன் முதல் நாள் முதல் காட்சி பாத்தேன் .
ஒரு நல்ல படத்த இப்பிடியெல்லாம் நாசமாக்க முடியுமா ?
இன்னொரு பாபா . பாபாவைக்கூடஇன்னொருதரம் பாக்கலாம் ஆனா
குசேலன் படத்த ஒருதரம் முழுசா பாத்ததே பெரிய விடயம் .

உண்மைத்தமிழன் said...

//றிசாந்தன் said...
குசேலன் முதல் நாள் முதல் காட்சி பாத்தேன். ஒரு நல்ல படத்த இப்பிடியெல்லாம் நாசமாக்க முடியுமா? இன்னொரு பாபா. பாபாவைக்கூட இன்னொரு தரம் பாக்கலாம.் ஆனா குசேலன் படத்த ஒருதரம் முழுசா பாத்ததே பெரிய விடயம்.//

இது சற்று ஓவரான விமர்சனம் றிசாந்தன்.. பாபாவைவிட குசேலன் எவ்வளவோ மேல்..

கிருஷ்ணா said...

படத்தைக் கர்நாடகாவில் வெளியிடும் பொருட்டு படு கேவலமாகப் பால் மாறிய ரசினியின் பச்சோந்தித் தனத்தை ரசிகர்கள் உணர வேண்டும்

கிருஷ்ணா said...

படத்தைக் கர்நாடகாவில் வெளியிடும் பொருட்டு படு கேவலமாகப் பால் மாறிய ரசினியின் பச்சோந்தித் தனத்தை ரசிகர்கள் உணர வேண்டும்

உண்மைத்தமிழன் said...

//கிருஷ்ணா said...
படத்தைக் கர்நாடகாவில் வெளியிடும் பொருட்டு படு கேவலமாகப் பால் மாறிய ரசினியின் பச்சோந்தித் தனத்தை ரசிகர்கள் உணர வேண்டும்.//

இல்லை கிருஷ்ணா ஸார்.. ஒரு சிறு பொறியும் நெருப்பாகிவிடக் கூடாது என்பதற்காக ரெளடிகளுக்கெதிராக தான் தெரிவித்த வார்த்தைகள் மக்களுக்கெதிரானவை என்று திரிக்கப்பட்டுவிட்டதாகச் சொல்லி அதற்காகத்தான் வருத்தம் தெரிவித்துள்ளார் ரஜினி. இது ஏற்புடையதே..

பச்சோந்தித்தனம் என்கிற வார்த்தையை குத்தகைக்கு எடுத்துள்ளவர்கள் நமது அரசியல்வாதிகள் மட்டும்தான்..