27-02-2018
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
கேலக்ஸி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் சம்பந்தம் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
படத்தில் புதுமுகமான அவிஷேக் கார்த்திக் ஹீரோவாகவும், தன்ஷிகா ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்கள்.
மேலும் வி.எஸ்.ராகவன், சம்பத், ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன், டேனியல், பேபி சாதன்யா, மனோபாலா, லொள்ளு சபா மனோகர், காளி வெங்கட், கோட்டா சீனிவாசராவ், மதுமிதா, பசங்க சிவகுமார், ஜெய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ஜெமின் ஜோம், இசை – பவன் – தீபன், படத் தொகுப்பு – விஜய் வேலுகுட்டி, தயாரிப்பு நிறுவனம் – கேலக்ஸி பிக்சர்ஸ், தயாரிப்பாளர் – ஸ்ரீனிவாஸ் சம்பந்தம், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – கல்யாண்.
சின்னச் சின்ன திருட்டுக்களை செய்து வரும் சக்தி என்னும் அவிஷேக்கும், துப்பாக்கி என்னும் டேனியலும் மிக நெருங்கிய நண்பர்கள். பெரிய அளவில் காசு சேர்த்துவிட்டு வெளிநாட்டுக்கு போய் பிழைக்கலாம் என்கிற எண்ணத்தில் இருக்கிறார்கள்.
சின்னச் சின்னதாக திருடினால் பெரிய அளவுக்கு காசு சேர்க்க முடியாது என்பதால் பெரிய திருட்டுக்கு அச்சாரம் போடுகிறார்கள். பணம் லம்ப்பாக கிடைக்க வேண்டுமென்றால் குழந்தைகளைக் கடத்தலாம் என்று முடிவெடுக்கிறார்கள்.
இவர்கள் முடிவெடுத்த நேரத்தில் அவர்களின் கண் பார்வையில் குழந்தை சாதன்யா சிக்குகிறாள். சம்பத் தன்னுடைய காரில் சாதன்யாவை விட்டுவிட்டு நண்பரின் வீட்டுக்குள் போகும்போது சாதன்யாவை கடத்திச் செல்கிறார்கள் அவிஷேக்கும், டேனியலும்.
சாதன்யாவை பத்திரமாக தங்க வைத்துவிட்டு சம்பத்திற்கு போன் செய்து கடத்தி வந்ததை மட்டும் சொல்கிறார்கள். ஆனால் அன்றைய இரவிலேயே போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் இருந்த தன்ஷிகாவிடம் மாட்டிக் கொள்கிறார்கள். ஒரிஜினல் போலீஸ் என்று தன்ஷிகாவை அவர்கள் நினைக்க தன்ஷிகாவோ சூழ்நிலைக்காக போலீஸ் டிரெஸ்ஸை போட்டிருப்பது தெரிய வருகிறது.
குழந்தை சாதன்யா கடத்தி வரப்பட்டிருக்கும் செய்தியைக் கேட்ட தன்ஷிகா இவர்களது முட்டாள்தனத்தைப் பார்த்து இந்தக் கடத்தல் நாடகத்தே தானே டேக் ஓவர் செய்கிறார். சம்பத்திற்கு போன் செய்து சாதன்யாவிற்காக 50 லட்சம் ரூபாய் பேரம் பேசுகிறார்.
ஆனால் இன்னொரு டிவிஸ்ட்டாக குழந்தை சாதன்யா தன்னை சம்பத்திடம் ஒப்படைக்க வேண்டாம். நான் உங்களுடனேயே இருந்து கொள்கிறேன் என்கிறாள். அதிர்ச்சியைடயும் இந்தக் கடத்தல் கூட்டணி சாதன்யாவிடம் காரணத்தைக் கேட்க அவள் ஒரு அதிர்ச்சிகரமான கதையைச் சொல்கிறாள்.
இடையில் இவர்களது செல்போன் டவர்களை வைத்து சம்பத்தின் ஆட்கள் இவர்களை குறி வைத்து வந்து தாக்குகிறார்கள். அப்போதைக்கு தப்பித்தாலும் சம்பத்தின் ஆட்கள் துரத்திக் கொண்டேயிருக்கிறார்கள். முடிவு என்னாகிறது என்பதுதான் இந்தக் காத்தாடி படத்தின் சுவையான திரைக்கதை.
இந்தப் படத்தை எந்த மொழியில் வேண்டுமானாலும் உருவாக்கி வெளியிடலாம். அந்த அளவுக்கு அனைத்துத் தரப்பு மக்களும் ரசிக்கக் கூடிய கதையம்சம் கொண்டது.
முதல் காட்சியில் புகைப்படக் கலைஞரின் பார்வையில் படத்தைத் துவக்கி கடைசியாக அதன்டன் தொடர்புடைய ஒரு காட்சியில் வந்து முடிவது படத்தின் சிறப்பு. அந்தச் சின்ன காட்சி படத்தின் இறுதியில் ரசிகனுக்கு ஒரு ஜெர்க்கை கொடுத்திருக்க வேண்டும். அது இல்லாததுதான் படத்திற்குக் கிடைத்த பின்னடைவு.
குலேபகாவலி படத்தை இயக்கி கல்யாண்தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். அந்தப் படத்தில் இருந்த அதிகப்படியான காமெடிகள் இதில் குறைவு என்பதுதான் ஒரேயொரு பெரும் குறை.
ஸ்ரீதேவியின் தம்பியான அவிஷேக்குதான் ஹீரோவாக சக்தி என்னும் கேரக்டரில் நடித்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் நடிக்க வைக்கப்பட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது. இருந்தாலும் இந்தக் கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கும், திரைக்கதைக்கும் பொருத்தமாகத்தான் இருக்கிறார். புதுமுகம் மாதிரியே தெரியவில்லை என்பது மட்டும் உண்மை.
டேனியலுக்கு ஈடு கொடுக்கும்வகையில் டயலாக் டெலிவரி செய்திருக்கிறார். அதிலும் நகைச்சுவை நடிப்பும் அவருக்கு வந்திருக்கிறது. நடிப்புக் குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் அது இயல்பாகவே அவருக்குக் கிடைத்திருக்கலாம். இன்னும் பல படங்களில் அவர் தன் நடிப்புத் திறமையைக் காட்ட வாழ்த்துகிறோம்.
டேனியல்தான் படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறார். படத்தின் கடைசிவரையிலும் அவரது காமெடி கலந்த காட்சிகள்தான் படத்தை போரடிக்காமல் கொண்டு போக உதவியிருக்கிறது. கடத்தல் தொகையாக எவ்வளவு கேட்கலாம் என்று அவர்களுக்குள் பேசும் காட்சிகளும், தன்ஷிகாவிடம் இது தொடர்பாக பேசி தங்களது அறிவை வெளிப்படுத்தும் காட்சிகளிலும் கலகலப்பு..! டேனியலின் பிளாஷ்பேக் கதை இன்னமும் காமெடி. அவர் சிறு வயதில் யாரை முறை சொல்லி அழைக்கிறாரோ அவர்களெல்லாம் செத்துப் போவார்கள் என்ற திரைக்கதையை காமெடியாகவே படமாக்கியிருக்கிறார்கள். டேனியலுக்கு மற்றுமொரு பெயர் சொல்லும் படம் இது.
தன்ஷிகாவுக்கும் ஒரு பின்னணி கதையுண்டு. அதையும் ரொம்பவே காட்டாமல் லைட்டாக காட்டி முடித்திருப்பதால் அவரது கேரக்டர் ஸ்கெட்ச் மீது ஆர்வமோ, ஈர்ப்போ வரவில்லை. அவரது கேரக்டரின் திடீர் மாற்றம் திகைப்பைத் தந்தாலும் சுவாரஸ்யத்தை தரவில்லை. படத்தில் ஒரு பெண் கேரக்டரும் இருந்தால் நலம் என்பதாலேயே அவர் வைக்கப்பட்டிருக்கிறார் என்று தெரிகிறது. தன்ஷிகாவை பார்த்த பின்புதான் குழந்தை சாதன்யா தன் கதையைச் சொல்கிறாள் என்பது டச்சிங்கான திரைக்கதை.
வில்லன்களில் ஒருவரான ஜான் விஜய், பெரிய வில்லன் சம்பத், இவர்களது கூட்டாளிகள், கூடுதலாக காளி வெங்கட்டின் பங்களிப்பும் படத்திற்கு வலுவூட்டியிருக்கிறது. காளி வெங்கட்டிற்குக் கிடைத்த கேரக்டர் ஸ்கெட்ச்சும், தன் பெண்ணின் சிகிச்சைக்காகும் செலவுக்காக காத்திருக்கும் அவருக்கு கடைசியாக மார்ச்சுவரியில் கிடைக்கும் பலனும் எதிர்பாராதது. இதேபோலத்தான் சாதன்யாவின் அம்மாவை யாருடைய கார் மோதியது என்று தெரிய வருவது.. இப்படி அனைத்து கேரக்டர்களுக்குமான தொடர்புகளை லாஜில் மீறலே இல்லாமல் அழகாக கோர்த்திருக்கிறார் இயக்குநர் கல்யாண்.
ஆர்.பவன் இசையில் ‘வாமா வாமா’ பாடலும், ‘அடடா’ பாடலும் கேட்கும் ரகம். பாடல் காட்சிகளில் சுவையில்லை என்பதால் அதிகம் கவரவில்லை.
ஜெமின் ஜோமினின் ஒளிப்பதிவும், படத் தொகுப்பாளர் விஜய் வேலுகுட்டியின் வேலையும் இந்தச் சின்னப் படத்திற்கு கச்சிதம்தான். சேஸிங் காட்சிகளுக்கேற்ற படம் என்பதால் அதற்கான திரைக்கதைகள் இருந்தும் இயக்குநர் அதனை பயன்படுத்திக் கொள்ளாதது ஏன் என்று தெரியவில்லை.
இது போன்ற தேடுதல் வேட்டை போன்ற படங்களில் இருக்க வேண்டிய பரபரவென்ற திரைக்கதை இந்தப் படத்தில் முழுமையாக இல்லாதது படத்தின் மிகப் பெரிய குறை. அதேபோல் சென்னை வாழ் தமிழை டேனியலும், அவிஷேக்கும் கொத்துப் புரோட்டோ போடுவதும் ஒரு கட்டத்தில் சலிப்பாக்கிவிட்டது. இனிமேலாவது தமிழகம் முழுவதுக்குமான தமிழை பயன்படுத்துங்கள் இயக்குநர்களே..!
இன்னும் கொஞ்சம் அழகாக உருவாக்கியிருந்தால் மிக, மிக உயரே பறந்திருக்கும் இந்தக் காத்தாடி..!
|
Tweet |
0 comments:
Post a Comment