நாகேஷ் திரையரங்கம் - சினிமா விமர்சனம்

20-02-2018

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

டிரான்ஸ் இண்டியா மீடியா நிறுவனத்தின் சார்பில், தயாரிப்பாளர் ராஜேந்திர M.ராஜன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
‘நெடுஞ்சாலை’ ஆரி இதில் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஆஷ்னா சவேரி ஹீரோயினாக நடித்துள்ளார்.
மேலும், காளி வெங்கட், மாசூம் சங்கர், எம்.ஜி.ஆர். லதா,  சித்தாரா,  அபிலாஷ்,  அதுல்யா  ரவி, அனில் முரளி, மனோபாலா, சித்ரா லட்சுமணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – நௌஷத், இசை – ஸ்ரீகாந்த் தேவா, படத் தொகுப்பு – தேவராஜ், கலை – ராமலிங்கம்,  பாடல்கள் – தாமரை,  உமாதேவி,  முருகன் மந்திரம்,  வேல்முருகன்,  ஜெகன் சேட்,  சண்டை பயிற்சி – ஸ்டன்னர் ஷாம், நடனம் – ராபர்ட், பாம்பே பாஸ்கர், ஆடைகள் – முகமது சுபீர், ஆடை வடிவமைப்பு – சோபியா சௌரிராஜன்,  தினேஷ், VFX – ட்ராட்ஸ்கி மருது, மக்கள் தொடர்பு – வின்சன்.
‘அகடம்’ என்ற திரைப்படத்தை ஒரே ஷாட்டில் எடுத்து, கின்னஸ் சாதனை புரிந்த, இயக்குநர் இசாக் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

நாயகன் ஆரி வீட்டுக்கு மூத்தப் பையன். வீட்டு புரோக்கர் வேலை பார்த்து வருகிறார். அதில் வருமானமே இல்லாமல் இருந்தாலும், ஆரியின் தம்பி ஐ.டி. கம்பெனியில் வேலை பார்ப்பதால் அதை வைத்து குடும்பத்தை ஓட்டுகிறார் தாய் சித்தாரா. இவர்களுக்கு வாய் பேச முடியாத டீன் ஏஜ் தங்கையும் உண்டு.
நிரந்தரமான வேலையோ, வெளியில் பெருமையாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கான வேலையோ ஆரிக்கு இல்லாதபோதும், அவரது அம்மா அவருக்குத் திருமணம் செய்துவைக்க திட்டமிடுகிறார்.
ஆஷ்னா சாவேரியை பெண் பார்க்க வருகிறார் ஆரி. வந்த இடத்தில் ஆஷ்னாவின் அழகு அவரை வெகுவாக கவர்ந்துவிட பெண்ணை பிடித்துவிட்டதாகச் சொல்கிறார் ஆரி. ஆனால் இருவரும் தனிமையில் பேசும்போது தான் வீட்டு புரோக்கர் வேலை பார்ப்பதாகச் சொல்லிவிடுகிறார் ஆரி.
ஆனால் ஆஷ்னாவோ கட்டினால் ஐ.டி. மாப்பிள்ளையைத்தான் கட்டுவேன் என்று தீர்மானமாக இருப்பதால் இது செட்டாகாது என்று சொல்லி ஆரியை திருப்பியனுப்புகிறார்.
ஆரி புரோக்கர் வேலையைவிட்டுவிட்டு வேறு வேலைக்குச் செல்கிறார். ஆனால் அந்த நேர்முகத் தேர்வில் ஆஷ்னாவும் வந்து குழப்படி செய்ய ஆரிக்கு வேலை பறி போகிறது. ஆரிக்கு பதிலாக அந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறார் ஆஷ்னா.
அந்த நிறுவனத்தில் தயாரான ஆங்கில புத்தகங்களை ரோடு, ரோடாக அலைந்து விற்பனை செய்கிறார். ஆனால் முடிந்தபாடில்லை. ஒரு நாள் பூங்கா ஒன்றில் இந்த விற்பனை வேலையை ஆஷ்னா செய்யும்போது அவரை பார்த்துவிடுகிறார் ஆரி.
ஆஷ்னாவின் மீது பரிதாபப்பட்டு அந்தப் புத்தகங்களை விற்பனை செய்ய உதவுகிறார் ஆரி. இந்த பரஸ்பர உதவுதலில் ஆரியின் நல்ல மனது ஆஷ்னாவுக்கு புரிய.. சினிமாத்தனமான காதல் துவங்குகிறது.
இடையில் ஆரியின் தங்கையான அதுல்யா ஒரு பையனை காதலிக்கிறார். விஷயம் தெரிந்து ஆரியே பெண் பார்க்கும் படலத்திற்கு ஏற்பாடு செய்கிறார். வந்தவர்கள் தங்களது மூத்த மருமகள்கள் இருவரும் தலா 150 பவுன் நகையுடன் வந்ததால் அதுல்யாவுக்கும் 150 பவுன் நகை போட்டால் திருமணத்திற்கு சம்மதம் என்கிறார்கள்.
இப்போது 150 பவுன் நகைக்கு எங்கே போவது என்று குடும்பத்தில் குடுமிப்பிடி சண்டை நடக்கிறது. தம்பியோ தன்னால் 40 பவுனுக்கு மேல் செய்து தர முடியாது என்கிறார். இ்ப்போது அம்மா சித்தாரா ஒரு நிலப் பத்திரத்தை ஆரியின் கையில் கொடுத்து இந்த இடம் நம்முடையதுதான். ரொம்ப நாளாக பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. எப்படியாவது இதை விற்றுவிட்டு பணத்தை வாங்கி வரும்படி ஆரியிடம் சொல்கிறார்.
அந்தப் பத்திரம் காட்டும் இடம் ஊருக்கு வெளியில் இருக்கும் ஒரு பாழடைந்த சினிமா தியேட்டர். ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற பெயரில் இருக்கும் அந்தத் தியேட்டரை தனது நண்பனான காளி வெங்கட்டுடன் வந்து பார்க்கும் ஆரி.. அங்கேயே இருந்து தியேட்டர் இருக்கும் நிலத்தை எப்படியாவது விற்றுவிட நினைக்கிறார்.
ஆனால் அந்த கட்டிடத்திற்குள் இருக்கும் ஒரு பெண் பேய் இவர்களை வைத்து தன்னைக் கொலை செய்தவர்களை பழி வாங்க நினைக்கிறது.
தூக்கத்தில் ஆரிக்கு ஒரு கெட்ட கனவு வருகிறது. அதில் சில கொலைகள் நடப்பதாகத் தெரிகின்றன. உண்மையில் மறுநாள் பத்திரிகைகளில் அந்த கொலைச் செய்தியும் வந்திருக்கிறது. ஆக, தன்னைச் சுற்றி ஏதோ ஒரு மர்மம் இருப்பதையறியும் ஆரி அது என்ன என்பதைக் கண்டறிய முனைகிறார்.
இதற்கிடையில் அந்த இடத்தை வாங்க வரும் அனைவருமே திரும்பிப் பார்க்காமல் ஓட்டம் பிடிக்கிறார்கள். பேய் இருக்கா இல்லையா.. தன் கனவில் வரும் கொலைகளுக்குக் காரணம் என்ன.. பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய முனைகிறார் ஆரி.
அவரால் இதையெல்லாம் செய்ய முடிந்ததா என்பதுதான் இந்த நாகேஷ் திரையரங்கத்தின் திரைக்கதை.
ஒரு அழகான காதல் கதையாகப் போயிருக்க வேண்டிய திரைப்படம் வழியில் திசை மாறி பேய்க் காதலாக உருவமாறிவிட்டது.
பேய்ப் படங்களை டஜன் கணக்கில் பார்த்து, பார்த்து சலித்தாகிவிட்டதால் இந்தப் படம் ஏதாவது கூடுதல் திகிலையோ அல்லது புதுவித பயமுறுத்தலையோ கொடுக்கும் என்று எதிர்பார்த்தால் நமக்கு ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது..!  இடையிடையே டிவிஸ்ட்டாக வரும் திரைக்கதைகள் மட்டுமே படத்தில் இருக்கும் ஆறுதல் களம்.
அனாதைகளான சிறுவர், சிறுமிகளை கடத்தி வைத்து மருத்துவ ரீதியான சோதனைகளுக்கு அவர்களை ஆட்படுத்தும் உலகளாவிய எலி பரிசோதனை கொடுமையை இந்தப் படத்திலும் தோலுரித்திருக்கிறார் இயக்குநர் இசாக்.
ஆரி இன்னும் கொஞ்சம் நடிக்க வேண்டியது இருக்கிறது என்பதைக் காட்டுகிறது இத்திரைப்படம். ஆஷ்னாவிடம் மொட்டை மாடியில் பேசுகின்ற காட்சியில் மட்டுமே ரசிக்க வைத்திருக்கிறார். மற்றபடி பேய்க்கு பயந்து போய் ஓடும் காட்சிகளிலும், அது தொடர்பான மற்றவைகளிலும் எப்போதும்போலத்தான் இருந்திருக்கிறார் ஆரி.
காளி வெங்கட் தனது வீட்டில் மனைவியுடன் கூட முற்படாத தனது சோகக் கதையைச் சொல்லும் காட்சிகளெல்லாம் லாஜிக்படி நம்பவே முடியாததுதான் என்றாலும் அதையும் ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார்கள். ஆணி அடிப்பது என்கிற வார்த்தைக்கு இன்றைய கணவர்மார்கள் மத்தியில் இப்படியும் ஒரு அர்த்தம் உள்ளது என்பதை தமிழ் கூறும் நல்லுலகம் இந்தப் படத்தைப் பார்த்து கற்றுக் கொண்டுள்ளது. இதற்காக இயக்குநருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.
ஆஷ்னா சாவேரி குளோஸப்பில் மிகவும் சின்னப் பொண்ணாக இருக்கிறார். சிரிக்கிறார். ஆனால் நடித்திருக்கிறார். ஐடி பையன்தான் வேண்டும் என்று ஆரியிடம் வாதாடும் காட்சியில் இயக்குநரையும் மீறி நடித்திருப்பது போல தெரிகிறது.
அதுல்யாவுக்கு வாய் பேச முடியாத ஒரு நங்கை வேடம். கொஞ்சமான காட்சிகளில் வந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார். சித்தாரா ரொம்ப நாட்கள் கழித்து அம்மா கேரக்டரில்..! முகத்தில் இருக்கும் பருவைக்கூட வயதையொத்து பொருந்துகிறது என்றெண்ணி விட்டுவிட்டார்கள் போலும்.. ஆனால் அதற்கடுத்து சில காட்சிகளில் அது மேக்கப்பில் காணாமல் போயிருப்பதையும் ஒளிப்பதிவாளர் எப்படி கவனிக்காமல் போனார் என்று தெரியவில்லை. மனோபாலாவின் அந்த இண்டர்வியூ காட்சி ஒரு லக லக..!
இடையில் பேய்ப் பெண்ணாக வரும் மசூம் சங்கருக்கு ஒரு அழகான கேரக்டர். குழந்தைகளுக்கு நேரும் கொடுமைகளை கண்டு பிடித்து பரிதாபமாய் இறந்து போகிறார். ஆனால் அந்தக் கொடுமையைச் செய்தவர்களைத்தான் பேயாய் பழி வாங்குகிறார் என்பதை அவ்வப்போது திரைக்கதையில் கொஞ்சம், கொஞ்சமாக சொல்லியிருப்பது படத்தை ரசிக்க வைத்திருக்கிறது.
இவர்களது பாதுகாவலராக நடித்திருக்கும் லதாவுக்கு சின்ன ரோல்தான் என்றாலும் கவனிக்க வைத்திருக்கிறார். பத்து ரூபாய் மருத்துவர் என்று அவர் சொல்லும் அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் நம்மை பெரிதும் கவர்கிறது..!
யோகி தேவராஜ் உண்மையைச் சொல்லும் சாமியார் கதாபாத்திரத்திலும், மலையாள நடிகர்  அனில் முரளி பேயிடம் அடிபட்டு ரத்தம் கக்கும் கேரக்டரிலும் நடித்திருக்கிறார்கள்.
நெளஷத்தின் கேமிரா இடைவேளைக்கு பின்புதான் ரங்கராட்டினமாக சுற்றியிருக்கிறது. நல்லா இருந்த தியேட்டரை குப்பைக் கூளமாக்கி படமாக்கியிருக்கிறார்கள். பேய் தொடர்பான காட்சிகளில் தங்களுடைய பட்ஜெட்டுக்கு தகுந்தாற்போல் முடிந்த அளவுக்கு பயமுறுத்தியிருக்கிறார்கள். ஆனால் அதிகப்படியாக ஈர்க்கவில்லை என்பதுதான் உண்மை.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் ‘கண்கள் ரெண்டும்’ டூயட் பாடல் அழகு. கேட்க இனிமை. ‘வாடி வாடி’ பாடல் செம குத்தாக குத்தியிருக்கிறார் இசையமைப்பாளர். ‘உங்க அப்பாக்கிட்ட பேசலை; அம்மாக்கிட்ட பேசலை’ என்று தத்துவ முத்துக்களை வைத்து ஒரு பாடலும் ஒலித்தது. பாடல்களைவிடவும் பின்னணி இசைதான் குறிப்பிட்டுச் சொல்லும்படியிருக்கிறது. ஸ்ரீகாந்த் தேவாவுக்கு இதற்காக ஒரு சிறப்புப் பாராட்டு.!
தேவராஜின் படத் தொகுப்பில் இடைவேளைக்கு பின்னான காட்சிகளை பயமுறுத்தலோடு தொகுத்திருக்கிறார்கள். ஆஷ்னா பேயாக வந்து செல்லும் காட்சிகளையும், ஆரி பேயாக உருவெடுக்கும் காட்சிகளையும் குழப்பமே இல்லாமல் தெளிவாக பதிவாக்கியிருக்கிறார் படத் தொகுப்பாளர்.
இதனாலேயே ஆரி இதற்கு அடுத்தக் காட்சியில் தன்னை வைத்து பேய் ஆடும் ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல தான் தற்கொலை செய்து கொள்ள முயலும் காட்சி ரசிகர்களுக்கு மிக எளிதாகப் புரிகிறது..!
பேய்ப் படங்களில் இருக்கும் மிகப் பெரிய பிரச்சினையே முந்தைய பேய்ப் படங்களைவிடவும் இது சிறப்பாக இருக்க வேண்டும் என்பதுதான். இல்லையெனில் முந்தைய பேய்ப் படங்களின் சிறப்புக்களுடனேயே இதுவும் இருந்தாக வேண்டும் என்பதுதான்..!
பேய்களை ரசிகர்கள்விட்டாலும், தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் விட மாட்டார்கள் போலிருக்கிறது..! இத்தோடு பேயை டைவர்ஸ் செய்தால் தமிழ்ச் சினிமாவுலகத்திற்கு மிகவும் நல்லது..!
படம் மருத்துவ விழிப்புணர்வு உள்ளிட்ட சிலவற்றை உண்மையாய் பேசியிருந்தாலும் “காதல் திருமணமாகவே இருந்தாலும் 150 பவுன் நகையைக் கொடுத்தாவது திருமணம் செய்ய வேண்டும்” என்கிற கருத்தாக்கத்தை முன் வைப்பதாக இருப்பது கவலைக்குரியதாக இருக்கிறது. இயக்குநர் இசாக் இதனை மனதில் வைத்து திரைக்கதையை கொஞ்சம் மாற்றியிருக்கலாம்..!
இந்த ‘நாகேஷ் திரையரங்க’த்தை தைரியமாக ஒரு முறை பார்க்கலாம்…!

0 comments: