சவரக்கத்தி - சினிமா விமர்சனம்

11-02-2018

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இயக்குநர் மிஷ்கின் தன்னுடைய சொந்தத் தயாரிப்பு நிறுவனமான Lone Wolf Productions சார்பில் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் மிஷ்கின், இயக்குநர் ராம், பூர்ணா, அஸ்வதி, மோகன், ஆதேஷ், கார்த்திக் ஜெமினி, ருத்ரு, கீதா ஆனந்த், சங்கீதா பாலன், ஹாரிஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – வி.ஐ.கார்த்திக், இசை – அரோல் கரோலி, பாடல்கள் – தமிழச்சி தங்கப்பாண்டியன், கலை இயக்கம் – சதீஷ், சண்டை இயக்கம் – தினேஷ் குமார், ஒப்பனை – பாலாஜி, ஸ்டில்ஸ் – ஹரிசங்கர், படத் தொகுப்பு – எஸ்.ஜூலியன், தயாரிப்பு நிர்வாகம் – ஆர்.எஸ்.வெங்கட், வெளியீடு – KRIKES CINE CREATIONS, திரைக்கதை, தயாரிப்பு – மிஷ்கின், இயக்கம் – ஜி.ஆர்.ஆதித்யா.
தமிழ்த் திரையுலகில் மிக, மிக வித்தியாசமான இயக்குநரான மிஷ்கினின் அடுத்தப் படைப்பு இது.
அவருடைய ஒவ்வொரு படமும் தமிழ்த் திரையுலகத்தின் முக்கியமான படங்களின் பட்டியலில் தவறாமல் இடம் பிடிக்கும். இந்தப் படமும் அப்படியே..!
குடும்பச் சூழலில் சிக்கித் தவிக்கும் ஒரு அப்பாவிக்கும், மகா முரடனான ஒரு கிரிமினலுக்கும் இடையில் நடக்கும் பெரும் போராட்டம்தான் இந்த ‘சவரக்கத்தி’.

பிச்சை என்னும் இயக்குநர் ராம், முடி திருத்துநர் வேலை பார்த்து வருகிறார். இது அவருடைய பரம்பரைத் தொழில். அவருடைய அப்பாவும், தாத்தாவும் இதே தொழிலில்தான் இருந்திருக்கிறார்கள்.
இவருடைய மனைவி சுபத்ரா என்னும் பூர்ணா. காது கேளாதவர். ஒரு ஆண், பெண் என இரண்டு பிள்ளைகள். ஆனாலும் இப்போது மீண்டும் நிறை மாத கர்ப்பிணியாய் இருக்கிறார் பூர்ணா.
ராமுக்கு மிக மிக கெட்ட நாள் அது. அன்றைக்கு அவருடைய மைத்துனர்.. முடவாக்க நோயால் பாதிக்கப்பட்டு இடுப்புக்குக் கீழே செயல்பட முடியாதவர். இவரையும் ஒரு பெரிய பணக்காரரின் பெண் காதலித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருவருமே கோவிலுக்குச் சென்று காத்திருக்கிறார்கள்.
இவர்களின் திருமணச் செய்தியறிந்து கடைக்கு வந்து கணவரை அழைக்கிறார் பூர்ணா. அவருடன் மல்லுக்கட்டி விஷயத்தை அறிந்து கொண்டு தெரிந்த நண்பனிடம் ராஜ்தூத் பைக்கை ஓசி வாங்கிக் கொண்டு மனைவியையும், பிள்ளைகளையும் ஏற்றிக் கொண்டு தண்டையார்பேட்டை கோவில் நோக்கிச் செல்கிறார் ராம்.
வழியில் அவருக்கான விதியை மாற்றியமைக்க வருகிறார் மகா முரடனான மங்கா என்னும் மிஷ்கின். ஏற்கெனவே செய்த ஒரு குற்றத்திற்காக 5 ஆண்டு தண்டனை பெற்று சிறையில் இருந்தவர் இப்போது பரோலில் வந்திருக்கிறார். அன்றைக்குத்தான் பரோலுக்கு கடைசி நாள். அன்றைய நாளில் மாலை 5 மணிக்கு அவர் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைய வேண்டும்.
இப்போதுதான் விதி விளையாட்டுக் காட்டத் துவங்குகிறது. தன்னை இடித்துத் தள்ளிவிடும் அளவுக்கு காரில் வேகமாக வரும் மிஷ்கின் அண்ட் கோ-வை ராம் தட்டிக் கேட்கிறார். ராம் இயல்பாகவே சூடானவர் என்பதால் வாக்குவாதம் முற்றிப் போய் கைகளை நீட்டியெல்லாம் சண்டை போடுகிறார் ராம்.
அதே நேரம் பின்னால் வந்த இன்னொரு கார் நின்று கொண்டிருக்கும் மிஷ்கினின் கார் மீது மோத.. இதனால் முன் சீ்ட்டில் அமர்ந்திருந்த மிஷ்கினுக்கு வாயில் அடிபட்டு ரத்தம் கொட்டுகிறது.
ராம் விலகிச் சென்று போய்க் கொண்டிருக்க மிஷ்கின் காரை நிறுத்தி தனது காயத்தைத் துடைத்துக் கொள்கிறார். இருந்தாலும் தனக்கு அந்தக் காயம் எப்படி ஏற்பட்டது என்பதை தனது அல்லக்கைகளிடம் மாறி, மாறி கேட்கிறார்.
இப்போதைக்கு தப்பித்தால் போதும் என்று நினைத்த அவர்கள், “ராம் அடித்ததால்தான் ரத்தம் வந்தது…” என்கிறார்கள். பெத்தப்பா என்னும் மிஷ்கினின் சித்தப்பா மட்டுமே பின்னால் வந்த கார் மோதியதால் ஏற்பட்டது என்று உண்மையைச் சொல்கிறார்.
ஆனால் மிஷ்கின் இதை ஏற்காமல்.. தன்னை ரத்தம் சிந்த வைத்த ராமை கொலை செய்யப் போவதாகச் சொல்லி காரில் ஏறி அவரைத் தேடி அலைகிறார். இன்னொரு பக்கம் ராம் தனது மைத்துனரின் திருமணத்தை நடத்தி வைக்க கோவிலுக்கு சென்று கொண்டிருக்கிறார்.
ராமின் மைத்துனரை கல்யாணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணின் குடும்பத்தாரும் ஒரு காரில் பெண்ணைத் தேடியலைகிறார்கள். இந்த தேடுதல் வேட்டையின் முடிவு என்ன என்பதுதான் இந்தச் ‘சவரக்கத்தி’யின் சுவாரஸ்யமான திரைக்கதை..!
பூனை-எலி விளையாட்டு, புலி-மான் விளையாட்டை போல மிஷ்கினும், ராமும் படத்தின் இறுதிவரையிலும் ஓடிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் ஓட்ட விளையாட்டுதான் மொத்தப் படமுமே..!
பொய்யைத் தவிர வேறு எதையுமே சொல்லக் கூடாது என்கிற கொள்கையில் இருக்கும் முடி திருத்துநரான ராம் அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். கடை வாசலில் வாயும், வயிறுமாக வந்து நின்று கல்யாணத்திற்கு அழைக்கும் மனைவியிடம் ‘சொல்லுடி… சுபத்ரா சொல்லித் தொலை’ என்று தொண்டை தண்ணீர் வற்ற கத்தித் தீர்க்கும் ராமின் மீது படியும் பரிதாப பார்வை, கடைசிவரையிலும் தன்னைவிட்டு அகலவிடாமல் அவரே பார்த்துக் கொண்டிருக்கிறார்.
பணமில்லை. ஆனால் நேக்கு போக்கு தெரியும். ஏமாற்றத் தெரியும். அதே அளவுக்கு கோபப்படவும் தெரியும். வார்த்தைகளால் சுடவும் தெரியும் என்கிற வித்தைக்காரனாக இருக்கும் ராம், மிஷ்கின்தான் தன்னைத் தாக்க வரப் போவது என்பது தெரியாமல் உதார்விட்டு அவர்கள் வருவதற்குள் தண்டாலெல்லாம் எடுத்து பாடியை பில்ட்அப் செய்து வைத்துவிட்டு ஆட்களை பார்த்தவுடன் ‘எஸ்கேப்’ என்று சொல்லி ஓடத் துவங்குகிறார். இங்கேயிருந்து துவங்கும் இவர்களது ஓட்டம் கடைசிவரையிலும் நிற்கவில்லை.
தனது மனைவியிடம் கத்தித் தீர்த்து, பேசிப் பார்த்து, அவளது இயலாமையினால் தனது தலையில் அடித்துக் கொண்டு.. தன்னையே நொந்து கொண்டு.. கடைக்காரனையும் பேச்சில் சமாளித்து.. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் குடும்பப் பாரத்தைச் சுமந்து ஓடும் ராமின்  அப்பிராணி நடிப்புக்கு ஒரு ‘ஜே’ போடலாம்..!
‘பொய்யாமொழி தேநீர் கடை’யில் ‘வாய் பேச முடியாதவன் நானே இப்படி உழைக்கிறேன். நீ ஏன் இப்படி அழுகுற..?’ என்று சைகையிலேயே கேட்டவுடனேயே அதுவரையிலும் அழுது கொண்டிருந்துவிட்டு எழுந்தோடும் ராமின் அந்த நடிப்புக்குத்தான், அரங்கம் அதிர கைதட்டல் ஒலித்தது. நடிக்க வைக்கப்பட்டிருக்கும் ராமிற்கும் நமது பாராட்டுக்கள்..!
முரட்டு உருவம்.. கண்ணழகன் என்று சொல்லும் அளவுக்கு கண்ணைக் காட்டியே பயமுறுத்தும் வில்லனாக ‘மங்கா’ என்ற கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார் மிஷ்கின். தன் மீது கை பட்டதையே அவமானமாகக் கருதும் முட்டாள், மூடன், முரடனாக முதலில் தெரியும் மிஷ்கின் பின்பு மெது, மெதுவாக நகைச்சுவையையும் தனது ஆக்சனில் காட்டி படத்தின் வெற்றிக்கு வழி காட்டியிருக்கிறார்.
வெறுமனே வசனத்தில் மட்டுமே நகைச்சுவையும், சிரிப்பலைகளும் தியேட்டரில் எழும்பவில்லை. நடித்த நடிகர், நடிகையர் அனைவருமே தங்களது நடிப்பை முகத்தையும் தாண்டி, உடல் மொழியாகவும் பிரகாசமாக வழங்கியிருக்கிறார். அதிலும் மிஷ்கினின் மிரட்டல்தான் அபாரமானது..!
‘நீ பார்த்தியா.. நீ பார்த்தியா…’ என்று தன்னைத் தாக்கியது ராம்தானா என்பதைக் கேட்டு உறுதிப்படுத்துவதில் துவங்கி.. கடைசியாக அப்போதுதான் ஜனித்த குழந்தையின் அழுகுரலைக் கேட்டவுடன் அப்படியே அதிர்ச்சியோடு அதிர்ச்சியாய் கொட்டுகின்ற தண்ணீரைத் தாங்கிக் கொண்டு படுத்திருக்கும் அந்த முக பாவனைவரையிலும் மிஷ்கினின் ராஜ்ஜியம்தான்..!
ஐஸ்கிரீம் கடையில் மல்லிகைப் பூவோடு மணக்கும் ஸ்டைலில் இருக்கும் பெண்ணை பார்த்தவுடன் வைத்த கண் பார்க்காமல் பார்க்கும் மிஷ்கினின் குணம் அந்தக் காட்சியில் குறிப்பால் மட்டுமே உணர்த்தப்பட்டிருக்கிறது.
குறியீடாக பார்க்கப் போனால் அடுத்த 3 வருடங்களுக்கு சிறையில் இருக்க வேண்டி வருமே என்கிற ஏக்கமும், பெண் மீதான தாபமும் சேர்ந்திருக்கும் அந்தப் பொழுதில் மிஷ்கினின் அந்தத் தாபம் தணிக்கப்பட்டிருந்தால் அதைத் தொடர்ந்து நடப்பதெல்லாம் நடக்காமலேயே இருந்திருக்கும் என்பதும் நமக்குப் புரிகிறது. ஆனால் இயக்குநர் இதுதான் மிஷ்கினின் இயல்பு மாற்ற தன்மைக்கு காரணம் என்பதை நமக்குப் புரிய வைத்திருக்கிறார்.
கோபம் கொப்பளிக்க தனக்குத் தண்ணி காட்டும் ராமை பிடித்துக் காட்ட.. அவரது குடும்பத்தினரை பிணைக் கைதியாக்கி அதுவும் சொதப்பலாகி.. பின்பு மீண்டும் ஒரு அரை லூஸுத்தனமான வீரத்தினால் பூர்ணா சிக்கியவுடன்.. கதையை மடை மாற்றி.. ‘நீ ஓடு.. நான் துரத்திப் பிடிக்கிறேன்’ என்று தான் சொன்ன சொல்லை வாபஸ் வாங்கிக் கொண்டு ‘வந்து உன் குடும்பத்தைக் காப்பாற்றிக் கொண்டு போய்க்கோ’ என்று அழைப்பதும் செமத்தியான மிஷ்கினின் போர்ஷன்.
தனது அல்லக்கைகள் முன்பாக தான் அவமானப்பட்ட அந்த கணத்தில் நேர்ந்த கோபமும், அவமானமும் சேர்ந்து மிஷ்கினை அழுத்துகிறது என்பதையும், கிளைமாக்ஸில் கட்டிப் புரண்டு சண்டையிட்ட பின்பு அந்த குழந்தையின் அழுகை சப்தம் இன்னொரு அப்பன் உயிருடன் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து மிஷ்கின் எழுந்து செல்வதுமான காட்சியும் அவரது கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு சுவாரஸ்யம் சேர்த்திருக்கிறது.
இவர்கள் இருவருக்கும் சற்றும் குறையாமல் தனது நடிப்பு வித்தையைக் காட்டியிருக்கிறார் சுபத்ராவாக நடித்திருக்கும் பூர்ணா. காது கேளாத தனது குறைபாட்டை கண்டுகொள்ளாமலேயே காலம் தள்ளும் அவரது கேரக்டர் ஸ்கெட்ச் சற்று வெகுளியானது என்றாலும் அதுதான் நகைச்சுவையை தயக்கமில்லாமல் கொடுக்கிறது.
முதல் சில காட்சிகளில் கொஞ்சம் ஓவர் ஆக்டிங்காக இருந்தாலும் போகப் போக.. கேரக்டருக்குள் உள் வாங்கி ‘அத்தான்’ என்று ஆசையாய் அழைத்து அவரிடமே கோபப்பட்டு, ஆத்திரத்தைக் காட்டி.. வார்த்தைகளைக் கொட்டி.. ஒரு அக்மார்க் மனைவி எப்படியிருப்பாரோ அப்படியே இருக்கிறார் பூர்ணா. பாராட்டுக்கள்..!
இவர்கள் மட்டுமல்ல.. இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரு கேரக்டர்கூட வீணடிக்கப்படவில்லை. அனைவருமே நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
பார்பர் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், ராமின் உதவியாளன், மிஷ்கினின் அல்லக்கை ரவுடிகளில் அடிக்கடி ஐடியா சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்பவர்.. பெத்தப்பாவாக நடித்து இறுதியில் மிஷ்கினை இன்னொரு கொலை செய்யவிடாமல் காப்பாற்றுபவர்.. அவரது இன்னும் இரண்டு அடிமை ரவுடிகள் என்று இந்தக் கோஷ்டியின் பக்கவாத்தியத்தால் பல காட்சிகளில் தியேட்டரில் சிரிப்பலை கொப்பளிக்கிறது.
ராமின் கடையில் அவரது உதவியாளரை ‘பி.கே.’ படத்தின் அமீர்கான்போல அமர வைத்து மிஷ்கின் சாத்தியெடுப்பது வன்முறையையும் தாண்டி நகைச்சுவையை மட்டுமே முன் நிறுத்துகிறது.
மற்றொரு பக்கம் ஓடிப் போன காதலியின் அம்மாவாக நடித்திருக்கும் சங்கீதா பாலன் குறிப்பிடத்தக்க நடிப்பைக் காண்பித்திருக்கிறார். காரில் வரும்போது புருஷனையும், தம்பியையும் வாங்கு வாங்குவென்று வாங்குபவர்.. தனது மகளின் காதலனை நேரில் பார்த்தால் கொலை செய்துவிட்டுத்தான் மறுவேலை என்பவர்.. அதே மாப்பிள்ளைக்காரனின் காலைப் பிடித்துத் தூக்கும் அந்த ஒரு கணமே நெகிழ வைக்கிறார். ‘ஆத்திரத்தையும், கோபத்தையம் கட்டுப்படுத்த மனிதமே போதும்’ என்று போதிக்கிறது அந்தக் காட்சி..!
கரும்பு ஜூஸ் விற்கும் பெண் கோப வார்த்தைகளை வீசி நடித்திருக்கும் நடிப்பு, கிளி ஜோஸியக்காரன் வசனமே பேசாமல் ராமை விரட்டியடிக்கும் காட்சி..  குப்பைத் தொட்டிக்குள் ஒளிந்து கொண்ட ராமை கண்டும் காணாமல் குப்பையை பொறுக்கிவிட்டுப் போகும் ஆள்.. டீக்கடையில் சைகையிலேயே அறிவுரை சொல்லும் மாற்றுத் திறனாளி.. ஆபத்துக்குப் பாவமில்லை என்று சொல்லி காதலர்களுக்கு உதவ நினைக்கும் ரிஜிஸ்தரர்.. மனநல காப்பகத்தில் இருந்து தப்பித்து வரும் ஆங்கில புலவரான ஷாஜி, பணத்துக்கு ஆசைப்பட்டு ராமை பிடித்து அடித்து உதைக்கும் இன்ஸ்பெக்டர்.. ஸ்டேஷனில் வேலை பார்க்கும் மற்ற போலீஸ்காரர்கள் என்று அனைவரின் நடிப்பையும் நாம் சொல்லியே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில்தான் இயக்குநர் தனது படைப்பை செய்நேர்த்தியாக செய்திருக்கிறார்.
இன்ஸ்பெக்டருக்கு எதிராக சவரக்கத்தியை வீசுகிறார் ராம். நிச்சயமாக கழுத்தில்தான் கோடு போட்டிருப்பார் என்று நினைத்த நேரத்தில் இன்ஸ்பெக்டரின் பாதி மீசையை கட் செய்துவிட்டு விறுவிறுவென நடந்து செல்லும் ராமின் அந்த வீரத்திற்கு தியேட்டரில் கைதட்டல்கள் அள்ளுகிறது..! நிச்சயம் எதிர்பாராத ஆக்சன் இது..!
ஒரு நாளில் நடைபெறும் கதை என்பதால் காலையில் தோளில் தூக்கி வைத்த கேமிராவை மாலைவரையிலும் இறக்காமலேயே சுமந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வி.ஐ.கார்த்திக். அற்புதம் என்று சொல்லக் கூடிய அளவுக்கு கேமிராவில் வித்தையைக் காட்டியிருக்கிறார். மிஷ்கினின் வழக்கமான காட்சிகள் என்று சொல்லப்படுவதெல்லாம் படத்தில் இருக்கிறது. இதற்கு ஒளிப்பதிவாளர் வலுவான ஒத்துழைப்பையும் கொடுத்திருக்கிறார்.
ஆள் அரவற்ற சாலை, மரங்களடர்ந்த சாலைகள்.. ஆளே இல்லாத வீட்டுப் பகுதிகள்.. பாழடைந்த குடோன்.. ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருக்கும் கோவில்.. கோவிலின் உட்புறமாய் இருக்கும் காதலர்களின் கூடாரம் என்று பலவற்றையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார் இயக்குநர். இதற்கு ஒத்தாசையாய் ஓடியாடி உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். வெல்டன் ஸார்..
அதிலும் அந்த கிளைமாக்ஸ் காட்சியில் தண்ணீர் சொட்டும் நேரத்திலும் இமையைக்கூட அசைக்காமல் காதில் விழும் குழந்தையின் அழுகுரலைக் கேட்டபடியே செத்த பொணம் போல் மிஷ்கின் படுத்திருக்கும் காட்சியை அழகான கவிதையாய் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். இத்தனை கவித்துவமாய் படத்தை முடித்திருப்பதால் இது பி அண்ட் சி சென்டர் ரசிகர்களை கவருமா.. அவர்களுக்கு புரியுமா என்பதும் சந்தேகம்தான்..!
அரோல் கரோலியின் பின்னணி இசையில் முதல் பாதியில் சின்ன ஆர்மோனிய வாசிப்பிலேயே காட்சிகளை நகர்த்தியிருக்கிறார். பிற்பாதியில்தான் படத்தின் ஓட்டத்திற்கு ஓட்டமாய் பின்னணி இசையும் காதுகளுக்கு இதமாய் ஓடுகிறது. இரண்டே இரண்டு பாடல்களில் ‘சவரக்கத்தி’ பாடல் நிச்சயமாய் ஹிட்டடித்திருக்கிறது என்று சந்தேகமே இல்லாமல் சொல்லலாம்.
ஒரு காட்சி முடிந்து அடுத்தக் காட்சி துவங்குவதற்கான வாய்ப்புகளை உடனுக்குடன் கொடுப்பதை போல படத்தின் தொகுப்பாளரான ஜூலியன் அழகான ஒட்டுதல் பணியைச் செய்திருக்கிறார். கச்சிதமாக இருக்கிறது படத் தொகுப்பு.
படத்தின் இயக்குநரான ஜி.ஆர்.ஆதித்யா இயக்குநர் மிஷ்கினின் சொந்தத் தம்பி. தம்பியென்றாலும் பல வருடங்கள் தவிக்கவிட்டுவிட்டு பின்புதான் தன்னிடத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறார் மிஷ்கின். மிஷ்கினை போலவேதான் இயக்கியிருக்கிறார்.
திரைக்கதையில் பல சுவாரஸ்ய டிவிஸ்ட்டுகளை கொடுத்துக் கொண்டே செல்வதால் படத்தில் விறுவிறுப்பு கூடிக் கொண்டே செல்கிறது. கோவிலில் இருந்து எப்படித்தான் தப்பிப்பார்கள் பார்ப்போம் என்றால் அதற்குள்ளாக திரைக்கதையே டிவிஸ்ட்டாக திரும்புவது கை தட்ட வைத்த இடைவேளையைக் காட்டிவிட்டது.
‘சவரக்கத்தி’ எதுக்குத்தான் இருக்கு என்பதை பாடல் காட்சிகளில் வைத்தமைக்கு பதிலாக நிஜமான காட்சியாகவே வைத்திருக்கலாம். அதே ‘சவரக்கத்தி’ கடைசியாக தொப்புள் கொடியை அறுப்பதற்கு பயன்படுகிறது என்பதை நினைக்கும்போது கத்தி யாருடைய கையில் இருந்தாலும் தனது குணத்தை மாற்றிக் கொள்ளாது என்பதை அழுத்தமாக உணர்த்துகிறார் இயக்குநர்.
இடையிடையே பலவித சம்பவங்கள்.. துரத்தல்கள்.. பெத்தப்பன் அடியாள் ஒருவனை சொல்லவிடாமல் உதைப்பதும்.. அதற்குள்ளாக பூர்ணாவே வெளியில் வந்து மிஷ்கினை மிரட்டுவதும்.. அனைவருமே திருடர்களாக இருந்தாலும் அந்த ஒரு திருடனுக்காகவே தன் வாழ்க்கையை அழித்துக் கொண்ட பெத்தப்பனின் கதையும் ஒரு நிமிடம் படத்தை நிறுத்திப் பார்க்க வைக்கிறது..!
எந்தவிதமான பாசாங்கும் இல்லாமல், லாஜிக் மீறல்களையும் தன்னிடத்தில் வைத்துக் கொள்ளாமல்.. ஒரு சின்னக் கதையை இத்தனை சுவாரஸ்யமான திரைக்கதையில் சொல்லி.. அழுத்தமான இயக்கத்தில் இதனை படைத்திருக்கும் இயக்குநர் ஜி.ஆர்.ஆதித்யா மிஷ்கினின் பாசறையை மென்மேலும் வளர்க்கட்டும் என்று பெரிதும் வாழ்த்துகிறோம்..!
சவரக்கத்தி.. அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்..!

0 comments: