06-02-2018
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
EVOKE நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஏ.மதிவாணன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். காவ்யா சினிமாஸ் நிறுவனம் படத்தை வெளியிட்டுள்ளது.
இந்தப் படத்தில் விஜய் யேசுதாஸ் ஹீரோவாகவும், அம்ரிதா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும் இயக்குநர் இமயம் பாரதிராஜாவும், இயக்குநர் கவிதா பாரதியும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மற்றும் இயக்குநர் மனோஜ்குமார், நிதிஷ் வீரா, கலையரசன், சதீஷ், கன்யா பாரதி, நிஷா, சிந்து, திண்டுக்கல் அலெக்ஸ், சுரேஷ் ஈகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ராஜவேல் முருகன், படத் தொகுப்பு – புவன் சீனிவாசன், இசை – கார்த்திக் ராஜா, பாடல்கள் – தனா, பிரியன், மோகன் ராஜன், கலை இயக்கம் – சதீஷ் குமார், நடனம் – விஜி சதீஷ், ஒலிப்பதிவு – ஏ.சிவக்குமார், ஏ.எம்.ரஹ்மத்துல்லா, சண்டை பயிற்சி – தில் தளபதி, ஸ்டில்ஸ் – ஏ.ராஜா, தயாரிப்பு மேலாளர் – நாகராஜன், இணை தயாரிப்பு – அசோக் குணக்குன்று, நிர்வாகத் தயாரிப்பு – விஜய் பாலாஜி, மக்கள் தொடர்பு – நிகில், தயாரிப்பாளர் – ஏ.மதிவாணன், எழுத்து, இயக்கம் – தனா.
சரியான நேரத்தில், சரியான முறையில் வந்திருக்கிறது இந்தப் படம். தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுமைக்குமே கேன்சர் என்னும் நோயைவிடவும் கொடூரமாக பீடித்திருக்கும் சாதி நோயின் தாக்கம் அதிகரித்து வரும் இந்த வேளையில் இந்தப் படத்தின் வருகை முக்கியமானதுதான்..!
சாதியக் கட்டுப்பாடுகள் நிறைந்த கிராமம். ஒடுக்கப்பட்டவர்களும், அவர்களை அடக்கி ஆளும் ‘ஆண்ட சாதிகள்’ என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்ளும் உயர்சாதிக்காரர்களும் இருக்கும் கிராமம். ஒரே சாமியைத்தான் கும்பிடுகிறார்கள். ஆனால் உயர்சாதிக்காரர்களுக்கு அடுத்துதான் ஒடுக்கப்பட்டவர்கள் கும்பிட வேண்டும்.
அனைத்து வகைகளிலும் ஒடுக்கப்பட்டவர்களை இன்னமும் அடிமைகளாகவே நடத்தும் மனோபாவம் கொண்ட உயர் சாதி சமூகத்தின் தலைவராக பெரியசாமி என்னும் கவிதாபாரதி ஊரின் பெரிய தனக்காரராக இருக்கிறார்.
அதே ஊரில் வசிக்கும் மனோஜ்குமாரின் மகனான ஹீரோ முனீஸ்வரன் என்னும் விஜய் யேசுதாஸ் எந்த வேலை, வெட்டிக்கும் போகாமல் வீட்டில் இருப்பவர்.
அதே ஊரில் வசிக்கும் கிருஷ்ணன் என்னும் கிட்னன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். பேச்சுலர். தன்னுடைய அண்ணன் வீட்டில் சாப்பிட்டுவிட்டு ஊரில் இருக்கும் இளந்தாரிகளுக்கு போட்டியாக சுற்றித் திரிபவர்.
தான் சார்ந்த சாதியிலேயே மலராக இருக்கும் அம்ரிதாவுடன் விஜய்க்கு மோதல் உண்டாகிறது. அம்ரிதாவை பெண் பார்க்க வந்தவர்கள் குறித்து விஜய் கமெண்ட் செய்து கேவலமாக கேலி செய்கிறார். இதனால் கோபமடையும் அம்ரிதா விஜய்யை காதலிப்பது போல் நடிக்கிறார். “வேலையில்லாமல் சும்மா இருப்பவனை கல்யாணம் செய்து கொள்ள முடியாது. ஏதாவது வேலைக்கு போ…” என்று தூண்டிவிடுகிறார் அம்ரிதா.
என்ன வேலை தனக்குத் தோதாகும் என்று விஜய் யோசித்த வேளையில், உடன் இருக்கும் தோழர்களின் போதனையால் ‘போலீஸ் வேலைக்கு போனால் இலவசமாக டாஸ்மாக் சரக்கு கிடைக்கும், வேளாவேளைக்கு நிறைய சாப்பிடலாம்’ என்கிற மாற்று சிந்தனை விஜய்க்குக் கிடைக்கிறது. இதனால் எப்பாடுபட்டாவது போலீஸ் வேலையில் சேர முயல்கிறார் விஜய். ஒரு லட்சம் ரூபாயை கிருஷ்ணன் மூலமாக லஞ்சமாக கொடுத்து போலீஸ் கான்ஸ்டபிள் வேலையில் சேர்கிறார் விஜய்.
போலீஸ் பயிற்சி கல்லூரியில் கொடுக்கப்படும் கடுமையான பயிற்சிகளும், கண்டிப்புகளும், தண்டனைகளும், நடத்தைகளும் ஊரில் நெஞ்சை நிமிர்த்தி நடந்து, திரிந்த விஜய்க்கு ஒப்புமையாக இல்லை. கல்லூரியில் இருந்து தப்பித்து ஓடி வருகிறார்.
ஆனால் போலீஸ் பின்னாலேயே வந்து தேடிப் பிடித்து சாத்தி மறுபடியும் அழைத்துச் செல்கிறது. இப்போது வேறு வழியில்லாமல் பயிற்சியை முடிக்கிறார். அதே நேரம் அவருடைய ஊரில் நீண்ட காலமாக புகைந்து கொண்டிருந்த சாதிப் பூசல், கலவரமாக வெடிக்கிறது.
இரு தரப்பிலும் திட்டமிட்டு கலவரத்தைத் தூண்டிவிட வெட்டுக் குத்து பெரிதாகி மாநிலமே அந்த ஊரை திரும்பிப் பார்க்கிறது. போலீஸ் குவிக்கப்பட்டாலும் நிலைமை கட்டுக்குள் அடங்காமல் இருக்கிறது. போலீஸ் பயிற்சியை முடித்த விஜய் உள்ளிட்டோரை அதே ஊருக்கு பாதுகாப்புக்காக போலீஸ் அழைத்து வருகிறது.
வந்த இடத்தில் தான் சார்ந்த சாதிக்கும் எதிர் சாதிக்குமான மோதல் உக்கிரத்தை அடைந்திருப்பதை நேரிலேயே பார்க்கிறார் விஜய். இப்போது கடமை தவறாத போலீஸ்காரனாக தனது கடமையை செய்தாரா..? அல்லது தன்னுடைய சாதிப் பாசத்தில் தடம் மாறினாரா..? அவரது காதல் என்ன ஆனது என்பதுதான் இந்தப் ‘படை வீரன்’ சொல்லும் கதை.
விஜய் யேசுதாஸ் நாயகனாக நடிக்கும் முதல் படம். அப்படி தெரியாத அளவுக்கு நடித்திருக்கிறார் அல்லது நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். சண்டியர் அளவுக்கான தனது கேரக்டர் ஸ்கெட்ச்சுக்காக இறங்கி ஆடியிருக்கிறார். அந்த தெனாவெட்டு நடிப்புக்கான முகத்தோற்றம் இவருக்கு இயல்பாகவே அமைந்திருப்பது, இவருடைய அதிர்ஷ்டம்தான்.
அப்பாவுக்கு வைத்த சோற்றை அவசரமாக கைப்பற்றி சாப்பிடும்போது அப்பனுக்கும், மகனுக்குமான மோதலும், அக்காவிடம் கறியை கூடுதலாக கேட்டு ரகளை செய்யும்போதும் ஒரு ரவுடித்தனத்தைக் காட்டியிருக்கிறார்.
இதேபோல் ‘கன்னியர் கடைக்கண்ணைக் காட்டிவிட்டால் காளையர்தாம் நெஞ்சம் உருகுமே’ என்பதற்கேற்றாற்போல் மலர் காட்டும் அந்த இரண்டு நிமிட மோனோ ஆக்ட்டிங்கில் மனதைப் பறிக் கொடுக்கும் காட்சியிலும் வெகு இயல்பாக நடித்திருக்கிறார்.
போலீஸ் பயிற்சியை முடித்துவிட்டு வந்த பின்பு எதிர்பாராமல் மலர் தன்னை ஏமாற்றியதை நினைத்து அந்த நொடியில் காட்டும் முகபாவனைகளும், அதிர்ச்சி நடிப்பும் மிகையில்லாதது..! பாடல் காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் அக்மார்க் கிராமத்து இளைஞனை கண் முன்னே காட்டியிருக்கிறார் விஜய். மலையாள வாடையே இல்லாத அளவுக்கான டப்பிங் வாய்ஸிலும் வெற்றி பெற்றிருக்கிறார். விஜய்க்குள் இயல்பாகவே ஒரு நடிகன் இருக்கிறான் என்பதை இத்திரைப்படம் அவருக்கே உணர்த்தியிருக்கும்..!
இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு இன்னொரு நடிப்பு படம். ஆனாலும் கொஞ்சம்தான் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். ‘போய் போட்டுட்டு வந்து பேசுறேன்’ என்று பாதி சைகையில் சொல்லிவிட்டுப் போகும்போது, மொத்த கைத்தட்டலையும் அள்ளிக் கொள்கிறார் பாரதிராஜா.
முன்னாள் ராணுவ வீரன் என்றாலும் சாதிப் பிடிப்பில்லாத ஒரு கேரக்டர். நிஜ வாழ்க்கைக்கு முற்றிலும் மாறான இந்தக் கேரக்டரில் பாரதிராஜா எப்படி நடிக்க ஒப்புக் கொண்டார் என்று தெரியவில்லை.
“ஆண்ட சாதி.. ஆண்ட சாதின்னு குதிக்காதீங்கடா.. 200 வருஷம் நம்மளை வெள்ளைக்காரன் ஆண்டுட்டு போனான். அப்போ அவனும் ஆண்ட சாதியா..?” என்று திருப்பிக் கேட்கும் தோரணையில் கிருஷ்ணன் என்ற அந்தக் கேரக்டரில் உயர்ந்து நிற்கிறார் பாரதிராஜா.
இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சின்படி சாதி வெறி இல்லாதவர் என்பதோடு இயல்பாகவே பேச்சுலர் என்பதாலும் பெண்கள் மீது கிரஷ் கொண்டவர் என்பதையும் பாசாங்கில்லாமல் காட்டியிருக்கிறார் இயக்குநர். இதனால் பெண்கள் பின்னாலேயே போய் ‘ஒரு ஷெல்பி எடுத்துக்கிறேன்’ என்று அலையும் கிருஷ்ணனனையும் நம்மால் ரசிக்க முடிகிறது.
சாதிய பற்றாளர்களை கேள்விக்குறியாக்கும்வகையில் பலவித கேள்விகளையும், பேச்சுக்களையும் அள்ளித் தெளிக்கும் கிருஷ்ணனின் கேரக்டரைத்தான் இப்படத்தின் இயக்குநராக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். வெல்டன் ஸார்..!
தமிழ்ச் சினிமாவுக்கு மற்றுமொரு தெற்றுப் பல் அழகியாக கிடைத்திருக்கிறார் மலர் என்னும் அம்ரிதா. கேமிராவுக்கேற்ற முகம். எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அழகு. இரண்டு நிமிடம் தன் முகத்தைக் காட்டி காதல் தூது விடும் அந்தக் காட்சியில், ஒட்டு மொத்த ரசிகர்களின் அபிமானத்தையும் பெற்றுவிட்டார் இந்த குல்குந்து ரோஸ்..! கூடவே நடிப்பும் தெறிக்கிறது. பொரிந்து தள்ளும் குணாதிசயமும், எரிச்சலாகும் முக பாவனைகளும் இவருடைய நடிப்புக்கு ‘ஜே’ போடுகின்றன.
விஜய்யின் அக்காவாக நடித்திருக்கும் நிஷா இன்னொரு அழகு முகம். மிக யதார்த்தாமான கிராமத்து முகத்தை நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். சட்டியைத் தூக்கி வாசலில் எறிந்துவிட்டு “கறிச் சோறா கேட்குற..?” என்று விஜய்யிடம் கோபப்படும் காட்சியிலும், மலரிடம் தனது தம்பியைப் பற்றி நல்லதாகச் சொல்லி திட்டும் காட்சியிலும் கவர்ந்திழுக்கிறார் இந்த அக்கா.
பாவப்பட்ட ஜீவனுக்கு ஒரு உதாரணமாய் கைக்குழந்தையுடன் கணவனை இழந்து தாய் வீ்டு திரும்பி அப்பாவுக்கும், அண்ணனுக்கும் ஆக்கிப் போட்டு தானும் அரவை மில்லில் வேலைக்கு போய் சம்பாதிக்கும் ஒரு அபலை கேரக்டரில் நடித்திருக்கும் சிந்துதான் படத்தின் மிக முக்கிய ஜீவனாய் நடித்திருக்கிறார்.
‘அபலை’ என்கிற தோற்றம் கடைசிவரையிலும் இருக்க வேண்டுமாய் இவருடைய தோற்றம் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. கடைசியாய் தன்னைக் காதலித்தவன், தன்னைக் காதலித்த ஒரேயொரு குற்றத்திற்காக கொலை செய்யப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்டவுடன் அவர் அழகும் அழுகையும், எழுப்பும் ஓலமும்தான் படத்தின் உயிர்நாடி. இந்தப் ‘படை வீரன்’ படத்தின் மீதான அழுத்தமான நம்பிக்கையும், ரசிகர்களின் பாராட்டுரையும் இந்த ஒரு காட்சியில்தான் படிந்திருக்கிறது. அற்புதமான நடிப்பு.. பாராட்டுக்கள் சிந்து.
சாதித் திமிரை எப்போதும் தனது முகத்திலேயே காட்டிக் கொண்டு அலையும் சாதி வெறி பிடித்த தலைவராக கவிதா பாரதி வாழ்ந்து காட்டியிருக்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் ஒரு வார்த்தையால் கோபப்பட்டு எழுபவர்.. ‘இதுவரையிலும் அடக்கியே வாசிக்கிறோம்’ என்பதைச் சொல்லாமலேயே அடுத்தடுத்த காட்சிகளில் நடித்திருக்கிறார்.
‘அய்யனாரை கும்பிட ஊருக்குள் வருபவர்கள் சப்தமில்லாமல் வந்துட்டு சப்தமில்லாமல் திரும்பிப் போயிரணும்’ என்ற கோப வெறியையும் ஊட்டி.. சிந்துவின் மரணத்திற்காக துளியும் கலங்காமல் அதைச் செய்யச் சொல்லும் பாங்கும் இப்படியொரு தலைவனெல்லாம் தமிழ்நாட்டில் இருக்கின்றவரையிலும் தமிழ்நாட்டில் ஜாதியை ஒழிக்கவே முடியாது என்பதை நினைவுபடுத்துகிறது.
தன் கழுத்தில் கை வைத்து இழுத்துச் சென்று போலீஸ் வேனில் ஏற்றியதையே அவமானமாகக் கருதி கவிதா பாரதி தான் வெட்கப்படும் காட்சியில், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் குற்றம் செய்ய எது தூண்டுகிறது என்பதை வெளிக்காட்டும்விதமாய் காட்சியை அமைத்திருக்கிறார் இயக்குநர்.
உச்சக்கட்டமாய் விஜய்க்கு ஏற்படும் கதியை பார்த்து பரிகாசமாய் தலையை சாய்த்து தனது முகத்திலேயே வில்லத்தனத்தைக் காட்டும் அந்த கணம், ‘அப்படியே ஓடிப் போய் அவனையும் கட்டிப் பிடிடா’ என்று படம் பார்க்கும் ரசிகனையும் கொந்தளிக்க வைத்திருக்கிறார் கவிதா. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள் கவிதாண்ணே..!
மகன் மீதான அக்கறை இருந்தாலும் பொறுப்பற்ற மகனை நல்வழிப்படுத்த தெரியாமல் திகைக்கும் அப்பனாக மனோஜ்குமார், கவிதா பாரதியின் உடனேயே இருந்து சாதித் தீயை அணைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளும் அவரது உறவுகள்.. விஜய்யின் லஞ்சப் பணத்திற்காக திருடிக்கூட பணத்தைச் சேர்த்துக் கொடுக்கும் அவரது நண்பர்கள் என்று படத்தில் இடம் பெற்ற அனைத்து கேரக்டர்களும் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
ராஜவேல் மோகனின் ஒளிப்பதிவும், கார்த்திக் ராஜாவின் பின்னணி இசையும்தான் படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பலம். படத்தின் முற்பாதியில் ஒளிப்பதிவாளரும், பிற்பாதியில் இசையமைப்பாளரும்தான் படத்தை ஆக்கிரமித்திருக்கிறார்கள்.
சின்ன பட்ஜெட் என்பதால் கலவரக் காட்சிகளில் சிக்கனத்துடன் படமாக்கியிருப்பதாலும் அந்த இம்பாக்ட் கிடைக்கவில்லை என்பது பெரிய குறையாய் தெரியவில்லை. அந்தக் குறையை ஒளிப்பதிவாளர் நிவர்த்தி செய்திருக்கிறார்.
‘ஐயைய்யோ மாட்டிக்கிட்டேன்’, ‘இதுவரை நான்’ இரு பாடல்களும் கேட்கவும், பார்க்கவும் சிறப்பு. எத்தனை, எத்தனை இசையமைப்பாளர்கள் புற்றீசல்போல வலம் வந்தாலும் இசைஞானியைத் தழுவாத இயக்குநர்களே இருக்க முடியாது என்பதற்கு இந்தப் படத்தின் இயக்குநரும் ஒரு சான்றாகிவிட்டார்.
சிந்துவை ஒரு தலைக்காதலாக காதலிக்கும் வாலிபர் ஏக்கத்துடன் அவளைப் பார்க்கையில் ‘என்னுள்ளே எங்கோ ஏங்கும் ஏக்கம்’ பாடல் மென்மையாய் ஒலிக்கிறது. மில் வேலைக்குச் செல்ல கிளம்புகையில், ‘ராசாவே உன்ன எண்ணி ஒரு ரோசாப்பூ இருக்குதுங்க..’ பாடல் மிளிர்கிறது.. காதலர்களுக்கும், காதலுக்கும் இன்னும் எத்தனையாண்டுகள் கடந்தாலும் ராசாவை விட்டால் வேறு யாருமில்லை..!
இயக்குநர் தனா மணிரத்னத்திடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவராம். மிகச் சிறப்பான இயக்கத்தை செய்திருக்கிறார். படத்தில் பல காட்சிகளும், பின்புலங்களும் ஒரு குறியீடாகவே தெரிகின்றன.
படத்தின் முற்பாதி முழுவதும் பகல் பொழுதுகளிலும், சாதி வெறியால் வன்முறையாட்டம் தொடர்ந்த பின்பு நடக்கும் காட்சிகள் அனைத்தும் இரவுப் பொழுதுமாக மாற்றியிருப்பதுகூட ஒரு குறியீடுதான்.. ‘இந்த இரவுக்கு எப்போதுதான் விடியல்?’ என்று இயக்குநர் கேட்காமல் கேட்பது போலத்தான் தோன்றுகிறது.
இதேபோல் விஜய், பெரியசாமியை பஸ்பம் செய்யும் காட்சி விடிந்த பொழுதில், கதிரவனின் உக்கிரத்தில், இதோ விடிந்துவிட்டது என்பதைச் சொல்லாமல் சொல்வது போன்ற சூழலில் படமாக்கியிருப்பது ரசனைக்குரியது..!
கவிதா பாரதி கைதாகி ஜாமீனில் விடுதலையாகி வந்தவுடன் இந்தச் செயலுக்கு பழிக்குப் பழி வாங்க மேல் சாதியினர் போடும் கூட்டத்தின் அமைப்பியல்கூட அற்புதமான குறியீடுதான்..! துவக்கத்திலேயே ஒரு கிணற்றுக்குள் இறங்கும் கேமிரா பின்பு அங்கிருந்து மேலேறி அதன் அருகில் இருக்கும் ஒரு வட்ட வடிவமான அறைக்குள் சுழல்கிறது. அனைவருமே அந்தப் பெரியசாமி என்னும் சாதீயத்தை சுற்றித்தான் அமர்ந்திருக்கிறார்கள்… இதைவிடப் பொருத்தமாக காட்சியமைத்திருக்கவே முடியாது..!
பூசாரியின் தட்டில் கவிதா பாரதி 500 ரூபாய் போட்டிருக்க எதிர் சாதியினர் 1000 ரூபாய் போட்டுவிட.. அதனை கண்களாலேயே உணர்த்தி கோபத்தைக் காட்டும் காட்சியும் ஒரு குறியீடுதான்.
பாரதிராஜா சாதிய நிலவரத்தைப் பற்றி விஜய்க்கு வகுப்பெடுக்கும் காட்சியின் கோணங்களே இன்னொரு குறியீட்டைச் சொல்கின்றன. சொல்கின்ற இடத்தில் கிருஷ்ணனும், கேட்கின்ற இடத்தில் விஜய்யும் இருப்பதை போன்ற காட்சி இயக்குநர் தனா வீரியம் மட்டுமல்ல.. விஷயமும் மிக்கவர் என்பதைக் காட்டுகிறது.
தப்படித்துக் கொண்டே ஊருக்குள் வருபவர்களை ‘அதோட நிறுத்திக்கணும்’ என்று சொல்லிவிட்டு அவர்கள் வணங்கி சென்ற பின்பு தீட்டுக் கழிவதை போல தள்ளி நின்று இவர்களும் அய்யனாரை வணங்குவதெல்லாம் இன்றைக்கும் தமிழகத்தில் ஏதோவொரு குக்கிராமத்தில் நடக்கின்ற கதைதான்.
பெண்களிடத்தில் இருந்துதான் இந்த சாதீயத்தை ஒழிக்க வேண்டும் என்பதையும் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர். சிந்துவின் கதையை முடிக்க “என்ன செய்யணும்னு உங்களுக்கே தெரியாதா..?” என்று கவிதா பாரதி கேட்டவுடன் ஒரு பெண் என்றும் பாராமல் சாதி வெறியேறி கிடக்கும் உற்றார், உறவினர் பெண்களே சிந்துவின் கதையை முடிப்பது அக்மார்க் உண்மைத்தனம்.
இதேபோல் கவிதா பாரதியை கைது செய்து அழைத்துப் போகும்போது தன் சொந்த சாதிக்காரனாகவும், ஊர்க்காரனாகவும் இருந்தாலும், விஜய் மீது செருப்பை வீசி கோபத்தைக் காட்டுவதும் பெண்கள்தான்..! இறுதியில் அவர் மீது மஞ்சத் தண்ணி தெளிப்பதை போல மண்ணெண்ணெய்யை ஊற்றுவதும்கூட பெண்கள்தான்.. சாதிய பிடிமானத்தை முதலில் நம் வீட்டில் இருந்து பெண்களிடத்தில் இருந்துதான் துவங்க வேண்டும் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது இத்திரைப்படம்.
ஆண்ட சாதிக்காரர்கள் தங்களது சாதிப் பெருமைகளை எடுத்துக் கூறுவதெல்லாம் அவர்கள் தரப்பு நியாயத்தைச் சொல்வதற்கு பதிலாக சுயசாதி பெருமையை பறைசாற்றுவது போலாகிவிட்டது. இருந்தாலும், ‘இந்த பெரியசாமி போன்றவர்கள் உயிருடன் இருக்கும்வரையிலும் சாதியை ஒழிக்க முடியாதுடா’ என்று பாரதிராஜா சொல்வது இவர்களைக் கொலை செய்வதை நியாயப்படுத்திவிட்டது.
மனித உயிரையெடுப்பது தவறுதான் என்றாலும் கேன்சர் கட்டியை ஆபரேஷன் செய்து அகற்றித்தான் ஆக வேண்டும் என்பதால் சாதியை ஒழிக்க சாதி வெறியர்களையும் ஒழிக்கத்தான் வேண்டும் என்பதாக இயக்குநர் தனது கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். இதைவிட நல்ல தீர்வை இதில் வேறென்ன சொல்ல முடியும்..?
சாதியக் கட்டுப்பாட்டுகளுடன் இன்றைக்கும் தமிழகத்தில் பல கிராமங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது சுய லாபத்துக்காக, ஓட்டு வங்கிக்காக சிறுபான்மையினரான தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் குறைகளை கேட்காமல் ஒதுங்கிப் போய் அவர்களை நிர்க்கதியாய் விட்டிருக்கிறார்கள்.
இதனால் சாதிய மோதல்களும், கவுரவக் கொலைகளும் தற்காலங்களில் மலிந்து போய்விட்டன. இரட்டை டம்ளர் முறையும், தீண்டாமை சுவர்களும் இந்த இருபத்தியொண்ணாம் நூற்றாண்டிலும் தமிழகத்தில் இருக்கிறது என்றால் இதைவிட கேவலம் நமக்கு வேறெதுவும் இருக்க முடியாது..
பெரியார் மண்.. பெரியார் மண் என்று வாய் கிழிய பேசிய திராவிட ஆட்சிகள்தான் இத்தனையாண்டு காலமும் தமிழகத்தை ஆண்டு வந்திருக்கின்றன. இவர்களுடைய ஆட்சியில்தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கெதிரான கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கவுரவக் கொலைகளும், ஆணவக் கொலைகளும், இரட்டை டம்ளர் முறையும் வளர்ந்து கொண்டே போகிறது.. இதற்கு என்னதான் முடிவு.?
இன்னொரு பக்கம் தனி மனிதர்களை ஒழிப்பதாலேயே சாதியை ஒழித்துவிட முடியாதுதான். ஆனால் ஒரு தவறான வழிகாட்டியால்தான் தவறான கருத்துக்கள் மக்களின் பொதுப்புத்தியில் புகுத்தப்படுகிறது. இதனால்தான் ஒரு சிலரின் தவறான கருத்துக்களால், வழிகாட்டுதல்களால் ஒட்டு மொத்தமான சமுதாயம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்கிற அக்கறை மக்களுக்கும் இருக்க வேண்டும்.
சாதியை சமூகத்தில் இருந்து வலுக்கட்டாயமாய் நீக்கினால் ஒழிய, தனி மனிதனிடத்தில் இருந்து நீக்கவே முடியாது என்கிற விஷயத்தை இயக்குநர் தனா இந்தப் படத்தில் அழுத்தமாய் பதிவு செய்திருக்கிறார்.
இன்றைக்கும் ‘நடுக்கல் தெய்வங்கள்’ என்று கிராமங்களில் இருக்கும் வழிபாட்டுக்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. அந்த நடுக்கல் தெய்வங்களில் ஒன்றாக முனீஸ்வரனும் இடம் பிடிப்பதுதான் படம் சொல்லும் நீதி. தெய்வங்கள்தான் இதனைச் செய்ய முடியும்.. முனீஸ்வரன் போன்ற ஆயிரம் தெய்வங்கள் தோன்றினால்தான் சாதீய நோயை நம் சமூகத்தில் இருந்து நீக்க முடியும்..!
சிற்சில லாஜிக் எல்லை மீறல்களும் படத்தில் இல்லாமல் இல்லை. அதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் முற்றிலும் எடுத்துக் கொண்ட கதைக் களனுக்கு பங்கம் விளைவிக்காமல் படத்தினை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் தனா.
இந்த அரும்பணிக்காக அவருக்கு நமது ஆயிரம் முத்தங்களுடன் கூடிய வாழ்த்துகளும், பாராட்டுக்களும்..!
இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நமது பாராட்டுக்கள்..!
|
Tweet |
0 comments:
Post a Comment