26-02-2018
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
ஜே.எஸ்.பி.பிலிம்ஸ் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் ஜே.எஸ்.பி.சதீஷ் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
இதில் விஷ்ணுபிரியன் ஹீரோவாக நடித்திருக்கிறார். அஸ்வினி ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார். நட்புக்காக ‘அட்டக்கத்தி’ தினேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தி்ல் நடித்துள்ளார்.
மேலும், ‘ஆடுகளம்’ முருகதாஸ், ‘லொல்லு சபா’ ஜீவா, சிங்கம் புலி, மனோபாலா, தங்கர்பச்சான், மு.களஞ்சியம், ரிஷா, ‘நான் மகான் அல்ல’ ராமச்சந்திரன், ஆதவன், ‘கயல்’ தேவராஜ், வினோத், ஆதித்யா, கம்பம் மீனா, வீர சந்தானம், வைசாலி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு- முத்துக்குமரன், படத் தொகுப்பு – சாமுவேல், இசை – கணேஷ் ராகவேந்திரா, கலை – ந.கருப்பையா, பாடல் – யுகபாரதி, சாவி, கு.கார்த்திக், வ.கீரா, பாடகர்கள் – மரண கானா ‘விஜி’, சைந்தவி, பிரியங்கா, கணேஷ் ராகவேந்திரா, குரு, முருகதாஸ், டிசைன் – இ.எல்.சிகா, ஒப்பனை – பழனி, சண்டை – ‘Fire ‘ கார்த்தி, நடனம்- சங்கர், உடை – வரதன், தயாரிப்பு நிர்வாகம் – சங்கர், மக்கள் தொடர்பு – இரா. குமரேசன், இணை தயாரிப்பு – J.பாலாஜி, தயாரிப்பு – J.சதீஷ்குமார், எழுத்து, இயக்கம் – வ.கீரா.
சென்னையின் ஒண்டுக் குடித்தனங்களில் வசிக்கும் கோடம்பாக்கத்தில் தானும் ஒரு மெகா இயக்குநராகலாம் என்கிற கனவில் இருக்கும் உதவி இயக்குநர்தான் வெற்றி என்னும் விஷ்ணுப்பிரியன்.
அவரது அறையில் எப்போதும் நண்பர்கள் கூட்டம் இருந்து கொண்டேயிருக்கும். படம் இயக்கும் முயற்சியில் இருக்கிற வெற்றிக்கு நடிகர் தினேஷிடம் கதை சொல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. கதையை கேட்ட தினேஷ் முழுக் கதையையும் ஒரு வாரத்திற்குள் சொல்ல வேண்டும் என நாள் குறித்துச் சொல்கிறார்.
ஒரு வாரத்திற்குள் கதை சொல்வதற்காக தன் அறையில் மும்முரமாக கதை எழுத ஆரம்பிக்கிறார் வெற்றி. ஆனால் அவரது அறைக்கு வந்து போகும் நண்பர்களின் தொந்தரவால், அவரால் கதையை எழுத முடியவில்லை. நண்பர்கள் வரவை குறைக்கவும், கதையை எழுதி முடிக்கவும் வெற்றி பல வகைகளிலும் முயன்று தோற்றுப் போகிறார்.
இதனால் தான் குடியிருக்கும் வீட்டில் ஒரு கன்னிப் பேய் இருப்பதாக பொய்யான கதையை தனது நண்பர்களிடத்தில் சொல்கிறார் இயக்குநர் வெற்றி. அதோடு அந்த பேய்க் கதையை வீட்டின் கீழே இருக்கும் வயதான பாட்டிதான் தன்னிடம் சொன்னதாகவும், பேய் பற்றிய உண்மையை சொல்லிவிட்டதால் எந்த நேரமும் தான் அந்த பேயால் கொல்லப்படலாம் எனவும் சொல்லி அவர்களை பயமுறுத்துகிறார்.
இந்த நிலையில் கீழ் வீட்டில் இருந்த பாட்டி திடீரென இறந்து போக பேய் கதையைக் கேட்ட நண்பர்கள் அதிர்ச்சியடைந்து வெற்றியின் வீட்டுப் பக்கம் வருவதையே நிறுத்தி விடுகிறார்கள். ஆனால், இதற்குப் பின்னர் திடீர் திருப்பமாக உண்மையிலேயே வெற்றியை ஒரு பெண் பேய் துரத்துகிறது. அவர் பொய்யாக புனைந்த கதையே உண்மையாக நடக்க துவங்குகிறது.
படத்தின் கதையைச் சொல்லி படத்திற்கு ஓகே வாங்கி அடுத்த வாரம் ஷூட்டிங் என்கிற நிலையில் அந்த வீட்டில் பேய் அவர் பின்னாலேயே வந்து தொந்தரவு செய்கிறது.. இதனால் வெற்றிக்கு திடீரென்று மனநலம் பாதிக்கிறது.
அவரது பெற்றோர் சென்னைக்கு வந்து வெற்றியை தங்களது ஊருக்கே அழைத்துப் போகிறார்கள். கிராமத்தில் வெற்றிக்குப் பிடித்த பேயை விரட்ட அனைத்து முயற்சிகளையும் அவர்களது குடும்பத்தினர் செய்கிறார்கள்..!
உண்மையிலேயே அந்த வீட்டில் பேய் இருக்கிறதா… அந்த பேய் யார்… வெற்றியின் இயக்குநர் கனவு என்னவானது.. என்பதுதான் இந்தப் படத்தின் விரிவான திரைக்கதை.
‘மை’ படத்தில் பிரமாதமாக நடித்திருந்த விஷ்ணுபிரியன்தான் இந்தப் படத்திலும் நாயகனாக நடித்திருக்கிறார். துணை இயக்குநர்.. வாய்ப்பு தேடும் இயக்குநர்.. தயாரிப்பாளரிடத்தில் பிடிப்பது போல் நடந்து கொள்ள வேண்டும் என்கிற பக்குவமாக அந்தக் கேரக்டரை செய்திருக்கிறார்.
தான் கதை எழுதிக் கொண்டிருக்கும்போது தொந்திரவு செய்யும் நண்பர்களை விரட்டுவதற்காக ஒரு பேய்க் கதையை பொய்யாக சொல்லப் போய்.. அது நிஜ பேயோ என்று படம் பார்க்கும் ரசிகர்களையும் நம்பும் அளவுக்கு நடித்திருக்கிறார். இவருக்கும் பேய் பிடித்தாற்போல் ஆகிவிட அந்த நிலைமையில் தனது நடிப்பில் குறைவில்லாமல் செய்திருக்கிறார்.
இவருடைய நண்பராக நடித்திருக்கும் லொள்ளு சபா ஜீவாவும், ஆடுகளம் முருகதாஸும்தான் படத்தின் முற்பாதியில் இருக்கும் காமெடிக்கு பொறுப்பாளர்கள். முருகதாஸை வெறுப்பேற்ற பெண் குரலில் பேசி அவரை நம்ப வைக்கும் ஜீவாவின் சேட்டை கொஞ்சம் ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.
படத்தின் பிற்பாதியில் வரும் அஸ்வினியின் காதல் கதைதான் படத்தின் அடிநாதம். இந்தக் காதலை படமாக்கியிருக்கும்விதமும் அருமை. உண்மையாக இந்தக் காதல் கதையேயே முழுமையான படமாக ஆக்கியிருக்கலாம். அத்தனை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். ஏன் இதற்குள் ஒரு பேய்க் கதையைத் திணித்தார்கள் என்று தெரியவில்லை..!
ரிஷாவின் கேரக்டர் ஸ்கெட்ச் என்ன மாதிரி என்றே தெரியவில்லை. கணவர் இல்லை என்பதால் கணவரின் நண்பர்களுடன் வந்து தங்கிக் கொள்வார் என்றெல்லாம் காட்சிகள் வைப்பதை எப்படி எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை.
படத்தின் துவக்கத்தில் ஒரு பேய்க் கதையின் உருவாக்கமாக வரும் நிலத்தில் தண்ணீர் இறைக்கும்போது வரும் முனி பேய்க் கதை மிக சுவாரசியம். அதையும் பேய்த்தனமாக, பயப்படும்படியாகத்தான் படமாக்கியிருக்கிறார். ஆனால் அதுவே எடுக்கப்படப் போகும் கதையாகிவிடவே சப்பென்றாகிவிட்டது.
பேய்க் கதையை யோசித்து, யோசித்து கொஞ்சம், கொஞ்மாக விஷ்ணு மனநலம் பாதிக்கப்படுவதைக் காட்டிவிட்டு சட்டென்று அதனை குணப்படுத்தும் பிரச்சினைகளுக்குள் போய்விட்டார்கள். பேய்க்கான தீர்வு கடைசிவரையிலும் கிடைக்காமல் போய் அதுவே பொய்யான பேய் என்பதும் கிளைமாக்ஸில் தெரிய வர.. படம் பார்க்கும் ஆடியன்ஸ்கள் தலையைப் பிய்த்துக் கொள்ளாத குறை.. குழப்பத்தில் ஒரு குழப்பமாய் படத்தின் பிற்பாதியில் வரும் பல காட்சிகள் அமைந்திருக்கின்றன. இதுவே படம் பற்றிய மவுத் டாக் வெளியில் பரவாததற்கு காரணம்..!
கணேஷ் ராகவேந்திராவின் இசையில் ‘வந்தனம், வந்தனம்’ பாடலும், ‘ஆகாய நிலவே’ பாடலும் கேட்கும் ரகம். படத்தின் பிற்பாதியில் கொஞ்சம் மூச்சுவிட வைத்தது பாடல் காட்சிகள்தான்..!
ஒளிப்பதிவாளர் முத்துக்குமரனின் கேமிராவுக்கு நிறைய வேலைகள் கொடுத்திருந்தாலும் பட்ஜெட் பற்றாக்குறையில் சிக்கனமாக படத்தை எடுத்திருப்பது தெரிகிறது. நிலத்தில் தண்ணீர் இறைக்கும்போது வரும் முனி பேய் சம்பந்தமான காட்சிகளை அழகாகக் பதிவாக்கியிருக்கிறார்கள்.
அதேபோல் வீட்டுக்குள் நடக்கும் காட்சிகளில் கேமிரா சுழன்றிருக்கிறது. கொஞ்சம், கொஞ்சம் அலுப்புத் தட்டினாலும் போரடிக்காமல் செல்ல காட்சியின் கோணங்கள்தான் உதவியிருக்கின்றன.
நூற்றுக்கணக்கான பேய் படங்கள் வந்து போய்க் கொண்டிருக்கின்றன. முந்தைய பேய்ப் படத்தைவிடவும் அதிகமான மிரட்டலையும், தரத்தையும் அளித்தால்தான் அடுத்த பேய்ப் படம் வெற்றி பெற முடியும்..!
இந்தப் படம் இதுவரையிலும் வந்த பேய்ப் படங்களில் 10-வது பேய்ப் படம் போலத்தான் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது வருத்தமான செய்தி..!
அடுத்து பேய்ப் படங்களை இயக்கவிருக்கும் இயக்குநர்கள் இந்தப் படத்தைப் பார்த்து சுதாரித்துக் கொள்வது நலம்..!
|
Tweet |
0 comments:
Post a Comment