ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் - சினிமா விமர்சனம்

04-02-2018

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘7சி எண்டர்டெயின்மெண்ட்’ சார்பில் தயாரிப்பாளர் ஆறுமுக குமார் மற்றும் ‘அம்மே நாராயணா எண்ட்டெர்டெயின்மெண்ட்’ சார்பில் தயாரிப்பாளர்கள் கணேஷ் காளிமுத்து, ரமேஷ் காளிமுத்து ஆகியோர் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்திருத்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். காயத்ரி, நிகாரிகா கோனிடெல்லா இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும், விஜி சந்திரசேகர், டேனியல், ரமேஷ் திலக், கல்பானா, முத்து, ராஜ்குமார்  மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ஸ்ரீசரவணன், இசை – ஜஸ்டின் பிரபாகரன், படத் தொகுப்பு – கோவிந்தராஜ், பாடல்கள் – முத்தமிழ், கார்த்திக் நேத்தா, நடனம் – கல்யாண், சண்டை பயிற்சி – டான் அசோக், கலை இயக்கம் – ஏ.கே.முத்து, தயாரிப்பு – கணேஷ் காளிமுத்து, ரமேஷ் காளிமுத்து, பி.ஆறுமுககுமார், எழுத்து, இயக்கம் – பி.ஆறுமுககுமார்.

தமிழக-ஆந்திர எல்லையில் இருக்கும் ‘எமசிங்கபுரம்’ என்னும் கிராமம்தான் இந்தப் படத்தின் கதைக் களம். அக்கிராமவாசிகள் அனைவருமே திருடர்கள்தான். இவர்கள் மேற்கொண்ட திருட்டுத் தொழிலுக்காகவே தினம்தோறும் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போட வேண்டும் என்கிற கட்டாயச் சட்டமே இருக்கிறது.
அப்படியிருந்தும் கையெழுத்திடுவதற்காக தங்களது பெயரில் வேறு ஆட்களை நியமித்துவிட்டு, உண்மையாக இன்னமும் திருட்டுத் தொழிலை தொடர்ந்து வருகிறார்கள்.
இந்தத் திருட்டுத் தொழிலிலும் ஒரு குறைந்தபட்ச நேர்மையை கையாளுகிறார்கள். ‘குழந்தைகள், பெண்களை தாக்கக் கூடாது.. கொலை செய்யக் கூடாது’ என்று தங்களுக்குள்ளேயே ஒரு கட்டுப்பாட்டுகளை விதித்துக் கொண்டுதான் இந்த கொள்ளை வேட்டைக்குக் கிளம்புகிறார்கள். பல திருட்டு சமூகங்கள் செய்யும் அதே தெய்வ சிந்தனை மற்றும் நிந்தனையோடு, அத்தெய்வங்களின் துணையோடுதான் திருட்டுத் தொழிலுக்குக் கிளம்புவார்கள்.
இப்படிப்பட்ட ஒரு கொள்ளைக் கூட்டத்தின் இளவரசன் ‘எமன்’ என்னும் விஜய் சேதுபதி. இவருடைய அம்மா ‘எமரோசம்மா’ என்னும் விஜி சந்திரசேகர். விஜய் சேதுபதியின் உற்ற நண்பர்கள் ராஜ்குமார் மற்றும் ரமேஷ் திலக்.
இந்த மாதத் திருட்டுத் தொழிலை மேற்கொள்ள தமிழகத்திற்கு வருகிறார்கள் விஜய் சேதுபதி அண்ட் டீம். வந்த இடத்தில் கொழுத்த வேட்டை. கொள்ளையடித்த நகைகளையெல்லாம் பதுக்கி வைத்துவிட்டு, மீண்டும் அடுத்த வேட்டைக்குக் காத்திருந்த நேரத்தில்தான் ‘சவுமியா’ என்னும் நிகாரிகாவை சந்திக்கிறார்கள்.
நிகாரிகாவை பார்த்தவுடன் விஜய்சேதுபதியின் கொள்ளைத் திட்டம் வாபஸாகிறது. நிகாரிகாவை கடத்திச் செல்ல திட்டம் தீட்டுகிறார். இங்கே நிகாரிகாவின் கல்லூரியில் சீனியரான கெளதம் கார்த்திக் நிகாரிகாவின் தோழியை ராகிங் செய்யத் துவங்கி கடைசியில் நிகாரிகாவின் அழகில் மயங்கி அவரை மனதுக்குள் காதலிக்கவே துவங்கிவிடுகிறார்.
இந்த நேரத்தில் நிகாரிகாவை விஜய் சேதுபதி அண்ட் டீம் எமசிங்கபுரத்திற்கு கடத்திச் செல்கிறது. நிகாரிகாவை மீட்பதற்காக கெளதம் கார்த்திக்கும் அவரது இணை பிரியா நண்பரான டேனியலும் எமசிங்கபுரத்திற்கு வருகிறார்கள்.
விஜய் சேதுபதி நிகாரிகாவை ஏன் கடத்தினார்..? கெளதம் கார்த்திக் நிகாரிகாவை மீட்டாரா என்பதெல்லாம் படத்தின் பிற்பாதி திரைக்கதையில் சொல்லப்பட்டிருக்கிறது.
விஜய் சேதுபதிக்கு புதுமையாக ஏதாவது செய்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் எப்போதும் இருக்கிறது. அதற்கு முதல் பலி இந்தப் படம். தற்போதைய காலக்கட்டத்தில் எந்த மாதிரியான திரைப்படங்கள் தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கின்றன.. எந்த மாதிரியான திரைப்படங்கள் தியேட்டரைவிட்டு ஓடிக் கொண்டிருக்கின்றன என்பதெல்லாம் தியேட்டர் ஆபரேட்டர்களைவிடவும் ஹீரோக்களுக்கு நன்றாகவே தெரியும். அப்படியிருந்தும் இந்தக் கதையை எப்படி விஜய் சேதுபதி ஓகே செய்தார் என்று தெரியவில்லை.
இடையிடையே.. அவ்வப்போது சிரிக்க வைத்திருக்கிறார்கள். பல இடங்களில் புன்முறுவல் பூக்க வைக்கிறார்கள். அவ்வளவுதான். மற்றபடி இது விஜய் சேதுபதிக்கான படம் இல்லை என்பதுதான் உண்மை.
படத்தில் வித்தியாசமான லொகேஷன்.. கேரக்டர்களின் ஸ்கெட்ச்.. அவர்களின் உடைகள், வாழ்வியல் இருப்பிடங்கள்.. பழக்க வழக்கங்கள் என்று அனைத்திலுமே சீரியஸ்னெஸ் இல்லாமல் காமெடியாகவே இருப்பதால் படத்தின் கதையுடன் ஒன்ற முடியவில்லை.
இந்தக் கூட்டத்திலிருந்து பிரிந்து சென்று திருமணம் செய்து கொண்ட நிகாரிகாவின் அம்மா திரும்பி வரும்போது நிகாரிகாவை விஜய் சேதுபதிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தீர்ப்பு சொல்வது சொம்புடன் கூடிய மரத்தடி பஞ்சாயத்தை போல காமெடி திரைக்கதையைக் கொடுத்தாலும் சிரிப்பை வரவழைக்கவில்லை.
விஜய் சேதுபதியின் குண்டு உடம்புக்கு ஏற்ற கேரக்டர் என்றாலும், அவரையும் நிகாரிகாவையும் பொருத்தமாக பார்க்கவே முடியாது. விஜய்யின் அபரிமிதமான நடிப்புக்கு இந்தப் படம் கொஞ்சுண்டூ சோளப்பொரியைத்தான் கொடுத்திருக்கிறது. அதிலும் ராஜ்குமார், ரமேஷ் திலக்கின் மொன்னை பேச்சுக்களுக்கு கவுண்ட்டர் கொடுப்பதிலேயே, அவரது நடிப்புத் திறமை வீணாகிவிட்டது.
சில, பல காட்சிகளில் ராஜ்குமாருக்கும் அவருக்குமான காமெடி லைன் வொர்க் அவுட்டாகி தியேட்டரில் சிரிப்பலை எழுந்திருக்கிறது. மற்றபடி விஜய் சேதுபதி அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார் என்பதுதான் உண்மை.
லூசுத்தனமான கேரக்டர் என்பதற்கு மிகப் பெரிய உதாரணமாகத் திகழ்ந்திருக்கிறார் கெளதம் கார்த்திக். இவரும் டேனியலும் அடிக்கும் லூட்டி சவசவ என்பதால் ரசிப்பாக இல்லை. டேனியல்தான் அவ்வப்போது கவுண்ட்டர் டயலாக் அடித்து இவர்களது காட்சிகளை காப்பாற்றியிருக்கிறார்.
திரும்பத் திரும்ப கூட்டத்திற்குள் திரும்பி மாட்டிக் கொள்ள விரும்பும் கார்த்திக்கை நினைத்து புலம்பும் டேனியலின் நடிப்புதான், இடைவேளைக்கு பின்பு சரவெடியாக வெடித்திருக்கிறது.
காயத்ரிக்கு எப்போதும் போல அதே கேரக்டர் ஸ்கெட்ச். “விஜய்யை பற்றித் தப்பா சொல்லக் கூடாது…” என்று நிகாரிகாவின் கழுத்தைப் பிடிக்கும்போதே படத்தின் முடிவு தெரிந்துவிட்டது. இந்த ஒன் சைடு காதலை இறுதிவரையிலும் சஸ்பென்ஸ் போல கொண்டு போயிருக்கிறார்கள்.
நிகாரிகா தமிழ்ச் சினிமாவுக்கு புது வரவு. தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் அண்ணனான நாகேந்திர பாபுவின் ஒரே மகள். நடிகைகளுக்கே உரிய சிறப்பான தோற்றத்துடன் இருக்கிறார். புதுமுகம் என்பதெல்லாம் தோணாத அளவுக்கு சிறப்பாகவே நடித்திருக்கிறார். விஜய்க்கும், தனக்குமான கல்யாணத்தை தடுத்து நிறுத்த கேள்வி மேல் கேட்டு “என்னப்பா..?” என்று திரும்பத் திரும்ப கேட்டு பிரச்சினையைக் கிளப்பும்போது பாவமாகத்தான் தோன்றுகிறது..! பொருத்தமான தேர்வு..!
சலாமிய பாஷையை பேசி திருடர் கூட்டத்தின் தலைவியாக வலம் வந்திருக்கிறார் விஜி சந்திரசேகர். இவரது நடிப்புக்கேற்ற கேரக்டர் இது இல்லை என்பதால் ஏதோ இருக்கின்ற காட்சிகளில் வஞ்சகமில்லாமல் நடித்திருக்கிறார்.
ரமேஷ் திலக் மற்றும் ராஜ்குமார்தான் பாதி படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறார்கள். சொதப்பல் திலகங்களாக படம் முழுவதும் வலம் வரும் இவர்களால்தான் கொஞ்சமேனும் சிரிக்க முடிந்திருக்கிறது.
ஸ்ரீசரவணனின் ஒளிப்பதிவில் குறைவில்லை. இரவு நேரக் காட்சிகளையும், மலைப் பிரதேசங்களையும் குளுமையாகக் காட்டியிருக்கிறார். ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் ஒலிக்கின்றன. ‘லம்பா லம்பா’ அந்தக் கூட்டத்தின் அருமை, பெருமைகளை பேசுகிறது. ‘ஏய் எலும்பா எண்ணி எண்ணி’ கேட்க வைக்கிறது..! ஆனால் காதல் ரசனை இல்லவே இ்லலை..! டூயட்டுகளில் கெமிஸ்ட்டிரியை உண்டு செய்வார்கள் என்று பார்த்தால்..?
விஜய் சேதுபதியை இதுவரையிலும் நீங்கள் பார்க்காத வித்தியாசமான கேரக்டரில் பார்க்க விரும்பினால் இந்தப் படம் உங்களுக்கு ஓகேதான்..!

0 comments: