கலகலப்பு-2 - சினிமா விமர்சனம்

13-02-2018

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

2012-ம் ஆண்டு சுந்தர்.C. இயக்கத்தில் விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், அஞ்சலி, ஓவியா நடிப்பில் வெளிவந்த படம் ‘கலகலப்பு.’
முழுக்க, முழுக்க காமெடி கதையாக உருவான இந்தப் படம் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பேமிலி ஆடியன்ஸையும் கவர்ந்து சூப்பர் ஹிட் படமாக வசூல் சாதனை படைத்தது. 
இப்போது இந்த ‘கலகலப்பு’ படத்தின் இரண்டாம் பாகத்தை அவ்னி மூவி மேக்கர்ஸ் சார்பில் நடிகை குஷ்பு தயாரித்துள்ளார்.
இந்த ‘கலகலப்பு–2’ ஆம் பாகத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, கேத்தரின் தெரசா, நிக்கி கல்ராணி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன்  ராதாரவி, வி.டி.வி கணேஷ், யோகி பாபு, ரோபோ சங்கர், மனோபாலா, சிங்கம் புலி, வையாபுரி, சந்தான பாரதி, அனு மோகன் ஆகியோரும் நடித்துள்ளனர். 
எழுத்து – இயக்கம் – சுந்தர். C., திரைக்கதை – வேங்கட்ராகவன், தயாரிப்பாளர் – குஷ்பு சுந்தர், ஒளிப்பதிவு – U.K.செந்தில்குமார், வசனம் – பத்ரி, இசை – ஹிப் ஹாப் ஆதி, பாடல் – மோகன் ராஜ், படத் தொகுப்பு – ஸ்ரீகாந்த், கலை – பொன்ராஜ், சண்டை பயிற்சி – தினேஷ், நடனம் – ஷோபி, பிருந்தா, ஒப்பனை – செல்லத்துரை, ஆடை வடிவமைப்பு – ராஜேந்திரன், பாலு, ஸ்டில்ஸ் – V. ராஜன், தயாரிப்பு மேற்பார்வை -பால கோபி, நிர்வாக தயாரிப்பு – A.அன்பு ராஜா,
மூன்றுவித கதைகளை ஒரே களத்தில் நடப்பதாக வைத்து அந்த மூன்றையும் கடைசியான வேறு ஒரு கதையுடன் இணைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் காமெடி திரைக்கதையில் மன்னனான இயக்குநர் சுந்தர்.சி.

ஓடுகாலியாய் வீட்டைவிட்டு ஓடிப் போய் சன்னியாசியாகி குடும்பத்தை மறந்து தொலைந்து வாழும் தன் சாமியார் அப்பாவை கொலை செய்ய வருகிறார் ஜெய். அவரைத் தடுத்து நிறுத்தி ஆசுவாசப்படுத்தி அவரது வறுமையான வாழ்க்கையைக் கேட்டு பரிதாப்பபடும்போது, “நமக்குச் சொந்தமான பூர்வீக சொத்து காசியில் இருக்கிறது. அதனை என் அப்பா 100 வருட குத்தகைக்குக் கொடுத்திருந்தார். இப்போது குத்தகைக் காலம் முடிந்துபோய் இருக்கும். அதை மீட்டெடுத்தால் உன் பொருளாதார நிலைமை சரியாகும்…” என்கிறார் அப்பா. மகன் ஜெய் இதைக் கேட்டு சந்தோஷப்பட்டு காசிக்குக் கிளம்புகிறார்.
முன்னாள் அமைச்சரான மதுசூதனன்ராவ் வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தி வருகிறது. அந்த நேரத்தில் அந்த வீ்ட்டில் இருந்து லேப்டாப் அடங்கிய சூட்கேஸை வெளியில் தூக்கியெறிகிறார் மந்திரியின் மனைவி. அது மந்திரியின் ஆடிட்டர் கையில் சிக்க அவர் அதை எடு்த்துக் கொண்டு எஸ்கேப்பாகுகிறார்.
காசியில் பழமையான ஒரு வீட்டை லாட்ஜாக பாவித்து கடும் நஷ்டத்திற்கிடையில் அதனை நடத்தி வருகிறார் ஜீவா. இவருக்கு ஒரேயொரு தங்கை, மற்றும் ஒரு பாட்டி. உதவிக்கு சிங்கம் புலி. இவர்களுடன் இந்த லாட்ஜை வைத்து பொழப்பை ஓட்டி வருகிறார் ஜீவா.
இப்போது ஜெய் காசிக்கு வர அவரை ரயில் நிலையத்திலேயே மடக்குகிறார் ஜீவா. நைச்சியமாகப் பேசி அவரை தனது லாட்ஜூக்கு அழைத்து வருகிறார். லாட்ஜில் வசதிக் குறைவாக இருந்தாலும் வேறு வழியில்லாமல் இருக்க வேண்டியதாகிறது ஜெய்க்கு.
இன்னொரு பக்கம் மதுசூதனின் ஆடிட்டர் 600 கோடி ரூபாய் சொத்துக்கள் எங்கெங்கு இருக்கின்றன என்பது பற்றிய முழுத் தகவலும் அடங்கிய லேப்டாப் தன்னிடம் இருப்பதால் “எனக்கு 5 கோடி ரூபாய் கொடுத்தால்தான் லேப்டாப்பை தருவேன்…” என்று மதுசூதனன் ராவை மிரட்டுகிறார். இதற்காக காசிக்கு பணத்தைக் கொடுத்துவிடச் சொல்கிறார்.
லோக்கல் இன்ஸ்பெக்டரான ராதாரவியிடம் அந்தப் பணத்தைக் கொடுத்தனுப்பி உதவிக்கு கான்ஸ்டபிள் ஜார்ஜையும் அனுப்பி வைக்கிறார் மதுசூதனன். இவர்களும் காசிக்கு வந்து ஆடிட்டரை தேடுகிறார்கள்.
ஜீவாவின் தங்கையை பெண் பார்க்க வருகிறார்கள். வரும் மாப்பிள்ளை சதீஷ். இவருடைய தங்கை கேத்தரின் தெரசா. கேத்தரினை பார்த்தவுடன் கிளீன் போல்டாகும் ஜீவா அவரை காதலிக்கவே துவங்குகிறார். ஆனால் சதீஷ் தனக்கு ஆன்மீகத்தில்தான் நாட்டம் என்று சொல்லி தன்னைப் பிடிக்கவில்லை என்று பெண் வாயாலேயே சொல்ல வைத்து எஸ்கேப்பாகிறார்.
ஜெய் லோக்கல் தாசில்தார் ஆபீஸுக்கு போய் தனது சொத்துப் பத்திரம் பற்றிக் கேட்கப் போகிறார். அங்கே தாசில்தாராக இருப்பவர் நிக்கி கல்ரானி. இவரும் நிக்கியைப் பார்த்தவுடன் கிளீன் போல்டானாலும் வேலையில் குறியாக இருந்து தனது சொத்துப் பற்றிய பத்திரங்களை தரும்படி எழுதிக் கேட்கிறார். மூன்று நாட்கள் வாய்தா சொல்கிறார் நிக்கி.
“எனது அண்ணனுக்கு ஆன்மீகத்தில் முழு நாட்டமில்லை. ஏதோ ஆர்வக் கோளாறில்தான் சொல்கிறார். அவனை எப்படியாவது காதலித்து அவன் மனதை மாற்றி திருமணம் செய்து கொள்ளும்படி” கேத்தரின் ஜீவாவின் தங்கையைக் கேட்க அவளும் இதற்கு ஒத்துக் கொள்கிறார். இதற்கிடையில் கேத்தரின்-ஜீவா காதலும் ஓகேவாகிறது.
ஜெய்யின் சொத்துப் பத்திர டீடெயில்ஸை தேடிப் பார்த்த நிக்கி அது தான் பரத நாட்டிய வகுப்பு நடத்தும் ஜீவாவின் லாட்ஜ்தான் என்பதை தெரிந்து கொண்டு ஜெய்யிடம் கொடுக்க தயங்குகிறார். ஆனால் ஜீவாவிடம் இதனை சொல்லிவிடுகிறார்.
ஜீவா தனது தங்கையின் திருமணம் நடக்கும்வரையிலும் காத்திருக்கும்படி சொல்ல.. ஜெய்க்கு சாக்குப் போக்கிச் சொல்லி ஏமாற்றுகிறார் நிக்கி. ஆனால் ஜெய்யோ நிக்கியை காதலிக்கத் துவங்க.. இதுவும் நிக்கிக்கு தெரிய வருகிறது. அவரும் ஜெய்யை விரும்புகிறார். ஆனால் நிக்கியின் தந்தையான வி.டி.வி. கணேஷோ நிக்கிக்கு வேறு மாப்பிள்ளை பார்க்க தயாராகிறார்.
ராதாரவி ஆடிட்டரை பார்க்க இரண்டு முறை முயன்றும் முடியாமல் போகிறது. சொதப்பலில் அவருடைய லேப்டாப் அடங்கிய சூட்கேஸ் காணாமல் போகிறது. இதனால் சந்தேகப்படும் மதுசூதனன் தனது ஆட்களுடன் காசிக்கே வந்து டேரா போடுகிறார்.
இந்த சூட்கேஸ் எதிர்பாராதவிதமாக ஜீவா அண்ட் கோ-விடம் சிக்குகிறது. இதனை வைத்து அவர்கள் பத்து லட்சம் ரூபாய் பேரம் பேச.. மதுசூதனனோ 10 கோடி ரூபாயை கொடுத்தனுப்புகிறார். ஆனால் இந்தத் திட்டமும் தோல்வியைத் தழுவுகிறது.
இந்த நேரத்தில் தன்னை கடனாளியாக்கியவனும், ஜெய்யை ஏமாற்றியவனும் ஒருவன்தான் என்பதை தெரிந்து கொள்ளும் ஜீவா, ஜெய் இருவரும் அவனைத் தேடி காரைக்குடிக்கு வருகிறார்கள்.
அங்கே மிகப் பெரிய பணக்காரரான சந்தானபாரதி தனக்கு பிள்ளை இல்லாததால் சுவீகாரம் எடுக்க முனைந்திருக்கிறார். அந்த சுவீகார பிள்ளைதான் ஜெய், ஜீவா இருவரையும் ஏமாற்றி கடனாளியாக்கிய மிர்ச்சி சிவா. இந்த நிகழ்ச்சிக்கு வி.டி.வி.கணேஷ் தனது மகள் நிக்கியையும் அழைத்து வந்திருக்கிறார். இது தெரியாமல் ஜெய்யும், ஜீவாவும் காரைக்குடி வந்து சிவாவை மடக்குகிறார்கள்.
சிவாவோ “நான் இந்த வீட்டுக்கு மாப்பிள்ளையாகப் போகிறேன். என் வீட்டு ஆட்களாக நீங்களும் என்னுடன் இருங்கள். பீரோவின் சாவிக் கொத்து என் கைக்கு வந்ததும் உங்க பணத்தைத் திருப்பிக் கொடுக்கிறேன்…” என்கிறார். உடனே இவர்கள் அந்த வீட்டுக்கு சிவாவுடன் வர, அங்கே நிக்கியை ஜெய் பார்க்க மீண்டும் காதல் துளிர்கிறது.
ஆனால் வி.டி.வி.கணேஷ் நிக்கியை சிவாவுக்கு மணமுடிக்கத் திட்டமிடுகிறார். சிவாவோ அந்த வீட்டு பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு எஸ்கேப்பாக திட்டம் போடுகிறார். சுவீகாரத் திட்டத்தையே பிடிக்காத சந்தானபாரதியின் மனைவி சிவாவை எங்கயாவது துரத்திவிடும்படி தனது தம்பி ரோபா சங்கர் மூலமாக முயற்சிக்கிறார். சூட்கேஸ் கிடைக்காமல் காசியிலேயே அல்லாடிக் கொண்டிருக்கிறார் மதுசூதனன்ராவ்..
இவர்களில் யாருடைய பிரச்சினை.. எப்படி.. எங்கே முடிவடைகிறது.. யாருடைய காதல் ஜெயிக்கிறது.. சிவா கடைசியில் என்னவானார் என்பதெல்லாம் படத்தை பார்த்து கலகலப்பாக சிரித்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
சுந்தர்.சி.யின் படங்கள் எப்படியிருக்கும் என்பது தெரிந்ததுதான். அதன் தரம் குறையாமல் இந்தப் படத்தையும் சுவையாக இயக்கியிருக்கிறார். தனது திரைப்படங்களில் நகைச்சுவைதான் மையம் என்பதால் ஒரு ரீல்விட்டு அடுத்த ரீலில் காமெடி என்றுதான் எப்போதும் திரைக்கதையை அமைத்துக் கொள்வார். இதுதான் சுந்தர்.சி.யின் வெற்றி ரகசியம். இதிலும் அப்படியே..!
ஆர்.கே.நகரின் முதல்கட்டத் தேர்தல் நடைபெற்றபோது அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றபோது விஜய பாஸ்கரின் வீட்டில் இருந்து சிலர் சில முக்கிய ஆவணங்களை வெளியில் கொண்டு வந்து கொடுத்து தப்பிக்க வைத்தார்கள். மீடியாக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூத்தை இந்தியாவே பார்த்து தமிழகத்தின் அருமை, பெருமையை தெரிந்து கொண்டது. இந்தக் காட்சியை அப்படியே இந்தப் படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
அமாவாசை, அமாவாசைக்கு வெறி பிடிக்கும் குணமுடைய கான்ஸ்டபிள் ஜார்ஜ் அன்றைக்கு பார்த்து சிக்கும் ராதாரவியை ஒரு வழி பண்ணுவது முதல் காமெடி பீஸ். அடுத்து யோகி பாபு அண்ட் கோ லாட்ஜூக்குள் நுழைந்து அது தங்களுடைய இடம் என்று சொல்லி கலகலப்பைத் துவக்கி வைக்க.. அதன் பின்பு யோகி பாபுவும், சிங்கமுத்துவும் வருகின்ற காட்சிகளிலெல்லாம் காமெடிதான்..!
ஆனாலும் “உங்க மாமா ஒண்ணுமே பண்ணாமல்…” என்று ஒரு அக்காவே தனது தம்பியிடம் அடிக்கடி பேசும் வசனங்களெல்லாம் ரொம்பவே டூ மச்சு..! இரட்டை அர்த்த ஆபாச வசனங்களும் சிற்சில இடங்களில் இடம் பிடித்திருப்பது வருந்தத்தக்கது. மற்றபடி வசனகர்த்தா பத்ரியின் எழுத்துதான் பல காட்சிகளில் நகைச்சுவையைக் கூட்டியிருக்கிறது.
“பயப்படாத பொம்பளைக்கு உருப்படாத புருஷன்தான் கிடைப்பான்.
நீ பயப்பட மாட்ட. நான் உருப்பட மாட்டேன்..
டாப்புல எய்ம் பண்ணி தோத்தவனும் இருக்கான். பாட்டம்ல எய்ம் பண்ணி ஜெயிச்சவனும் இருக்கான்..” என்று சொல்லி மிர்ச்சி சிவா அடிக்கும் சில பன்ச் வசனங்களும் ரசிக்கும்படியாகவும், சிரிக்கும்படியாகவும்தான் இருந்தது.
‘கலகலப்பு’ முதல் பாகத்தில் அதிகமான காமெடியை கொண்டு வந்ததே கார் சேஸிங் காட்சிகள்தான். ஆனால் இதில் அதனை கிராபிக்ஸில் செய்து அரை சிரிப்பாக்கிவிட்டார்கள். இதையும் கொஞ்சம் வேறு மாதிரி யோசித்திருக்கலாம்.
ஜெய் எப்போதும் போலவே நடத்திருக்கிறார். உடம்பு சற்று பூசினாற்போன்று இருப்பது அவரது ரசிகைகளுக்குப் பிடித்திருக்கிறது போலும். ஜீவாதான் நடிப்பு என்ற வஸ்துவைத் தொட்டுப் பார்த்திருக்கிறார். வெறும் காமெடியான திரைக்கதையும், வேகமான காட்சியமைப்பையும் கொண்டிருப்பதால் அவர்கள் பேசுவதுதான் வசனமாகவும், காட்டுவதுதான் நடிப்பாகவும் போய்விட்டது.
ராதாரவியும், ஜார்ஜும் விளையாடும் கட்டிப் பிடி விளையாட்டு மூன்று நிமிடங்களுக்கு தியேட்டரில் சளைக்காமல் சிரிப்பலையை ஏற்படுத்தியது. ராதாரவி இந்தப் படத்தில் கொஞ்சம் அடக்கியே வாசித்திருக்கிறார். ஏனென்று தெரியவில்லை. இதே டெக்னிக்கை வேறொரு இடத்தில் ஜார்ஜிடம் சொல்லி சோதனைப்படுத்தும் காட்சியிலும் இதே மாதிரியான சிரிப்பலைதான்..!
வி.டி.வி.கணேஷ் ஆள் மாறாட்டம் செய்து கொலை செய்யச் சொல்வதும், அவர்கள் வாழை மரத்தைக் கட்டித் தொங்கவிட்டு அதற்கேற்றாற்போல் போனில் பதில் சொல்வதும் செம ரகளை. இதேபோல் ரோபோ சங்கரும் இன்னொரு பக்கம் சிவாவை கொலை செய்ய முயற்சி செய்து அதுவும் தோல்வியாகிவிடுவதும் காமெடி ரகளை..!
யோகிபாபுவையும், சிங்கமுத்துவையும் வைச்சு செய்திருக்கிறார்கள். மதுசூதனன்ராவிடம் மாட்டிக் கொண்டு யோகி பாபு படும் பாடும், அவருக்கு சிங்கமுத்து அவ்வப்போது ஆலோசனை சொல்லி அது சொதப்பலாகிவிடும் காமெடியும் படு ஜோர்..!
வி.டி.வி.கணேஷ் தனது மகளான நிக்கியும், ஜெய்யும் காதலிப்பதை அறிந்து கோபத்தில் குமுறுவதும்.. அதனை காருக்குள் அமர்ந்து கொண்டு தன்னைப் பார்த்து ஜொள்ளுவிடுகிறார் என்று தவறாக புரிந்து கொள்ளும் மதுசூதனன் ராவின் மனைவியான காஜல் பசுபதி அவரை வெளுத்து வாங்குவதும் அதிரடி காமெடி காட்சிகள்..!
நிக்கி கல்ரானி ஒரு பக்கம் அடக்கமாக வர.. கேத்தரின் தெரசா கவர்ச்சியில் சற்றுத் தூக்கலாகக் காட்டியிருக்கிறார். இருவருமே தங்களுக்குத் தெரிந்ததை நடித்திருக்கிறார்கள். இவர்களிடம் யார் நடிப்பை எதிர்பார்த்தது என்று தியேட்டரில் டிக்கெட் கிழிப்பவரே கேட்பதால் மேற்கொண்டு எதுவும் சொல்வதற்கில்லை.
பாடல் காட்சிகளிலும், சாதாரணமான காட்சிகளிலுமே இருவரின் வருகையும் அந்தக் காட்சியையே கலர்புல்லாக காட்டியிருக்கிறது. மேலும் கலர்புல்லுக்கு காசியின் நகரை அப்படியே அச்சு அசலாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில்குமார்.
பாடல் காட்சிகளில் காட்டும் பிரம்மாண்டமும், கலர்புல் காட்சியமைப்பும், நடனக் கலைஞர்களின் உடைகளின் தேர்வும், நடன இயக்கமும் இயக்குநர் சுந்தர்.சி. இன்னமும் தன் பார்மை இழக்கவில்லை என்பதையே காட்டுகிறது. வெல்டன் ஸார்..!
‘ஹிப்ஹாப்’ தமிழாவின் இசையில் ‘பிடிச்சிருக்கா பிடிக்கலையா’ பாடலும், ‘தாறு மாறு’ பாடலும், ‘காரைக்குடி இளவரசி’ பாடலும் கேட்க வைத்திருக்கின்றன. பாடல் காட்சிகளிலேயே திரைக்கதையையும் நகர்த்தியிருப்பதால் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கின்றன. காட்சிகளைக்கூட கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார்கள்.
திரைக்கதை அமைத்த கிராகிதர்களை மனதாரப் பாராட்ட வேண்டும். மூன்று கதைகளையும் ஒன்றுக்கொன்று இணைத்தவிதமும், இதையும் நகைச்சுவையான திரைக்கதையில் கொண்டு வந்தவிதமும் பாராட்டுக்குரியது. இத்தனை திறமைசாலிகளை இயக்குநர் சுந்தர்.சி தன் பக்கத்தில் வைத்திருப்பதுதான் அவரது வெற்றிக்கு முழு முதற் காரணமாகும்..!
லேப்டாப் அடங்கிய சூட்கேஸ் பயணிக்கும் வழியும், கடைசியாக அது போய்ச் சேரும் இடமும், வைரக் கற்கள் இருக்கும் தந்தம் இடையில் ரயிலிலேயே காணாமல் போய் கடைசியாக அதே ரயிலில் இவர்களாலேயே கண்டெடுக்கப்படும் காட்சியையும் திட்டமிட்டிருப்பது சிறப்பான திரைக்கதை என்று சொல்ல வைக்கிறது.
படத்தின் தொகுப்பாளர் ஸ்ரீகாந்த்தின் பணி மிகவும் மெச்சத்தகுந்தது. இத்தனை காட்சிகளையும் அழகுற, கொஞ்சமும் பிசிறில்லாமல் இணைத்திருக்கிறார். நகைச்சுவையும் இருக்க வேண்டும், காட்சியும் வேகமாக ஓட வேண்டும் என்கிற இலக்கணத்தோடு அந்த சைக்கிள் ரேஸ் காட்சியை அற்புதமாக தொகுத்தளித்திருக்கிறார். இதற்காகவே இவருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு..!
சீக்வென்ஸ் படங்களை எப்போதும் முந்தைய பாகத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பது உலக வழக்கம்தான். அந்த வகையில் இது ‘கலகலப்பின்’ முதல் பாகத்தை தோற்கடிக்கவில்லை என்றாலும் அதனோடு போட்டி போடும்வகையில்தான் இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்..!
டாடா சுமோ கார்கள், கத்தி, அரிவாள், வெட்டுக்குத்து, ஜாதிச் சண்டை.. இவைகளுக்கிடையில் ‘போனோமோ.. சிரிச்சோமோ.. வந்தோமோ’ என்று நினைப்பவர்களுக்கு இந்தப் படம் நிச்சயமாக ஒரு பொழுது போக்குச் சித்திரம்தான்..!

0 comments: